================
ஓர் குட்டிக் கதை
திருந்திய திருடன்
=================
முன்னொரு காலத்தில் திருடன் ஒருவன் இருந்தான். தன் மகன் ராசப்பாவையும் திருட்டுத் தொழிலில் வல்லவனாக வளர்த்தான். திருடன் இறக்கும் நேரம் வந்தது.
தன்னுடைய மகனை அழைத்து, ”மகனே! நீ திருட்டுத் தொழிலில் மேலும் மேலும் வல்லவனாக வேண்டும். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள். எங்கேனும் பக்திச் சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகள் நடந்தால் அங்கு போகாதே. நீ அங்கே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் ஏதும் காதில் விழாதபடி உன் காதுகளைப் பஞ்சுகளால் அடைத்துக் கொள். இல்லையெனில் அந்த நல்ல வார்த்தைகள் உன் மனதை மாற்றமடையச் செய்துவிடும்,” என்றான்.
“”அப்படியே செய்கிறேன்,” என்றான் மகன்.
தந்தையின் அறியுரைப்படியே நடந்து வந்தான் ராசப்பா.
ஒரு முறை திருடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தான். ஓரிடத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதைக் கண்டான். என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக அருகில் சென்றான்.
அங்கே குரு ஒருவர், ஒரு மேடையில் அமர்ந்து மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். தன் தந்தை சொன்னது உடனே நினைவுக்கு வந்தது. தன் இரு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டு அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.
அப்பொழுது முள் ஒன்று அவன் காலில் தைத்தது. குனிந்த அவன் தன் ஒரு கையால் முள்ளைப் பிடுங்கிவிட்டு மீண்டும் காதைப் பொத்திக் கொண்டான்.
முள்ளை பிடுங்க காதிலிருந்து கையை எடுத்த நேரத்தில், “தேவர்களுக்கு நிழல் விழாது. அவர்கள் கால்கள் நிலத்தில் படியாது,” என்று குரு பேசியது அவன் செவியில் விழுந்தது. பின் வழக்கம்போல் தன்னுடைய திருட்டுத் தொழிலை தொடர்ந்தான்.
சில நாட்களில் முக்கிய திருட்டு ஒன்றைச் செய்த போது வீரர்களிடம் சிக்கிக் கொண்டான். அவன் செய்த திருட்டை எல்லாம் அறிய வீரர்கள் அவனை அடித்துத் துன்புறுத்தினர். கல்லுளி மங்கனான அவனோ வாய் திறக்கவே இல்லை. அவனிடம் இருந்து உண்மையை அறிய அதிகாரிகள் அநேக சூழ்ச்சி செய்தனர்.
கடைசியில் மயக்க மருந்து தந்து அவர்கள் அவனை ஓர் அழகான பூஞ்சோலையில் கிடத்தினர். பல அழகான பெண்கள் அவனைச் சூழ்ந்து நின்றனர். மயக்கம் தெளிந்த ராசப்பா தான் இருந்த இனிய சூழலைப் பார்த்து வியப்பு அடைந்தான்.
“”நான் எங்கே இருக்கிறேன்?” என்று தன்னை சுற்றி நின்ற பெண்களைக் கேட்டான்.
அவர்களில் ஒருத்தி, “”நீங்கள் இப்பொழுது தேவலோகத்தில் இருக்கிறீர்கள். இங்கே நீங்கள் என்ன நினைத்தாலும் உடனே நிறைவேறும். நீங்கள் எங்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம். நாங்கள் தேவலோக பெண்கள். இங்கே யாரும் பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால் உடனே இந்த உலகத்தை விட்டுப் போய் விடுவர். நீங்கள் யார்? பூவுலகில் என்னென்ன செய்தீர்கள்? சொல்லுங்கள்,” என்று இனிமையாகக் கேட்டாள்.
உடனே ராசப்பா அந்தப் பெண்களைப் பார்த்தான். அவர்கள் கால்கள் தரையில் இருப்பதையும், நிழல் விழுவதையும் பார்த்தான்.
குரு அன்று சொன்னதைக் கேட்டது அவன் நினைவுக்கு வந்தது. “இவர்கள் தேவர்கள் அல்லர்; மனிதப் பெண்கள் தான். என்னை ஏமாற்ற முயற்சி செய்கின்றனர்’ என்ற உண்மை அவனுக்குப் தெளிவாகப் புரிந்தது.
“ஆ! குரு பேசியதைச் சிறிது நேரம் கேட்டதாலேயே இவர்கள் என்னை ஏமாற்றுவதைக் கண்டுபிடிக்க முடிந்ததே… அவர் பேசுவதை நான் முழுமையாகக் கேட்டிருந்தால் எத்தனை நன்மைகள் உண்டாகி இருக்கும்’ என்று நினைத்து உள்ளம் கலங்கினான்.
அவர்களைப் பார்த்து, “”நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள். இது சொர்க்கம் அல்ல; நீங்களும் தேவர் உலகப் பெண்கள் அல்ல. எனக்கு மட்டும் விடுதலை கிடைத்தால் நான் திருட்டுத் தொழிலையே செய்யமாட்டேன். குருவின் சீடனாகி அவர் அருளுரைகளை எப்பொழுதும் கேட்டுக் கொண்டு அவர் திருவடிகளில் விழுந்து கிடப்பேன்,” என்று உணர்ச்சியுடன் சொன்னான்.
இவனது பேச்சு அரசனின் காதுகளில் விழுந்தது. ராசப்பாவை அழைத்து விசாரித்தான் அரசன். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த அரசன் அவனை விடுதலை செய்தான். அவனும் திருட்டுத் தொழிலை விட்டு விட்டு குருவின் சீடர்களில் ஒருவன் ஆனான்.
என் அன்பு வாசகரே,
எந்தவொரு மனுஷனையும், கற்பாறையான இருதயத்தையும் மாற்றும் வல்லமை வேத வசனத்திற்கு உண்டு. மனுஷனுடைய வார்த்தைகளோ மற்றவர்களுடைய இருதயத்திற்குள் தைக்கும்.
இதுபோல தினம் ஒரு குட்டிக்கதை வேண்டும் என்றால் தொடர்புக்கு +917904957814
நாம் கூட அநேக இடங்களில் ஏன் நம்முடைய சுற்றுப்புறங்களிலும் கூட இக்கதையில் வருவது போலவே எதிர்பாராத விதமாய் தேவனுடைய வார்த்தை அவர்கள் செவிகளில் ஏறி அதன் மூலம் மனந்திரும்பியவர்கள், அற்புதங்கள், அதிசயங்கள் பெற்றுக்கொண்டவர்கள் ஏராளம். எனவே தேவனுடைய வார்த்தையை ஒருபோதும் உதாசீனப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளுவோம்.
இயேசுவும் மக்கள் தேவ வார்த்தையை எளிதாய் கற்றுக்கொடுக்க அவர்களுக்கு உவமைகளால் போதித்தார். ஏனெனில் தேவ வசனத்தைக் குறித்து வேதம் இவ்வாறு கூறுகிறது,
கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
சங்கீதம் 12:6
புடமிடப்பட்ட வார்த்தைகளை அத்தனை எளிமையாய் ஏற்றுக்கொள்ள முடியாது எனவே தான் உவமைகளால் போதித்தார். அவ்வாறு புடமிடப்படுகிற வார்த்தைகள் நிச்சயமாய் எந்தவொரு மனிதனையும் மாற்றிவிடும் வல்லமைக் கொண்டது. எனவே தேவனுடைய வார்த்தை சுத்தமான வார்த்தையாக இருக்கிறபடியால் நாமும் அவ்வார்த்தைகளால் புடமிடப்பட அனுதினமும் தேவ வசனத்தை வாசிப்போம் அவர் நம்மோடு பேசுவதை தியானிப்போம், அப்பொழுது ஆண்டவர் நம்மையும் அவரைப்போலவே நம்முடைய வார்த்தைகளால் அநேகர் ஆசீர்வதிக்கப்பட ஒரு நல்ல கருவியாய் மாற்றுவார்.
#நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
=================
ஓர் குட்டிக் கதை
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை
==================
சிம்மபுரத்து மன்னன் பிறைசூடன் மாபெரும் பராக்கிரமசாலி; நியாயம் தவறாதவன். அவன் மனைவி எழில்கொடி. அவர்களுக்குப் பிறந்தது ஒரே ஒரு பெண் குழந்தை. அவளுக்கு பவழா என்று பெயரிட்டு செல்லமாகவும் ஆண்பிள்ளையைப் போலவும் வளர்த்து வந்தனர்.
பவழா கல்வியோடு அரசகுமாரர்களுக்கான வில், வாட் போர் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றாள். அவள் வளர்ந்து திருமண வயதை அடைந்த போது அவளது பெற்றோர் அவளுக்கு விவாகம் செய்து வைக்க நினைத்தனர்.
அவர்கள் அதுபற்றி மகளிடம் கூறவே, “”நான் விவாகம் செய்து கொள்வதானால் என்னை எந்த அரசகுமாரன் வாட்போரில் தோற்கடிக்கிறானோ அவனைத் தான் மணப்பேன்,” என்றாள்.
அந்த அறிவிப்பைக் கேட்டதும் பல அரசகுமாரர்கள் அவளை மணக்க வந்தனர். அவள் அந்நாட்டு மன்னனின் ஒரே மகளாதலால் அவளை மணந்து கொண்டால் அந்த நாட்டிற்கும் தாம் அரசராகிவிடலாமே என்ற ஆசையில்தான் வந்தனர். மேலும் அவள் பெண்தானே மிக எளிதில் வாட்போரில் அவளைத் தோற்கடித்துவிடலாம் எனவும் நினைத்து விட்டனர்.
வாட்போர் புரிய அவர்கள் களத்தில் இறங்கியபோது தான் பவழாவை வெல்வது எளிதல்ல என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.
தினமும் ஒரு அரசகுமாரனுடன் வாட்போர் என அவள் ஏற்பாடு செய்திருந்தாள். அவளுடன் வாட்போர் புரிந்த அரசகுமாரர்கள் எல்லாருமே தோற்றுப் போயினர்.
இந்தப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது சந்தனபுரி இளவரசன் சுவரூபன் மாறுவேடம் பூண்டு வேடிக்கை பார்க்கும் மக்களோடு சேர்ந்து பவழாவின் சுற்றும் முறைகளையும் தாக்குதல்களுக்குக் கையாளும் வழி முறைகளையும் கூர்ந்து கவனிக்கலானான்.
சில சமயங்களில் பவழாவின் அபார வாள்வீச்சைக் கண்டு சபாஷ் என்று கத்தினான். அப்போதெல்லாம் பவழா திரும்பிப் பார்த்து அப்படிக் கத்திய ரசிகன் யார் எனவும் பார்த்தாள்.
பவழாவின் வாட்போர் முறைகளை எல்லாம் நன்கு பார்த்த பிறகு அரசகுமாரனாக அவளுடன் போட்டியிட வந்தான். இருவருக்கும் வாட்போர் நடக்க நாளும் குறிப்பிடப்பட்டது.
போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது. அப்போது தன்னை எதிர்ப்பவன் மிகவும் திறமை மிக்கவன் எனத் தெரிந்து கொண்டாள் பவழா.
அவனைத் தோற்கடிக்கத் தான் அதுவரை பயன்படுத்தாத ஒரு முறையை அவள் கையாள நினைத்த போது, வேறொரு முறையைக் கையாண்டு அவளது வாளைத் தட்டிவிட்டான் சுவரூபன். அது அவளது பிடியிலிருந்து நழுவி சற்று தூரத்தில் போய் விழுந்தது. பவழா தோற்றுப் போனாள்.
To Get Daily Story In What's App contact +917904957814
அப்போது அவள் அவனை கூர்ந்து கவனித்து, “”நீ இதற்கு முன் நான் மற்ற அரசகுமாரர்களோடு வாட்போர் புரிந்த போது மக்களிடையே மாறுவேடத்தில் பார்வையாளனாக அமர்ந்து வேடிக்கை பார்த்தவன்தானே. அப்போது சில சமயங்கள் சபாஷ் என்று கத்தி எனக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்தவனும் நீதானே,” என்றாள்.
“”ஆமாம்!” என்றான். அதைக் கேட்டதும் பவழா அவன் வெற்றி பெற்றதன் காரணம் தெரிந்து விட்டது.
“”நான் உன்னை மணப்பது முறையல்ல. அதற்குக் காரணம் என்ன என்று நீயே யூகித்துக் கொள்,” என்றாள்.
“”நீ கூறுவது சரியே. நான் உன்னை மணப்பதும் முறையல்லதான்,” என்று கூறி அவளை அவன் வணங்கிவிட்டு தன் நாட்டிற்கு திரும்பிச் சென்று விட்டான்.
உங்களுக்கான கேள்வி? ஏன் பவழா அவனை மணக்கவில்லை? காரணம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?
எனதருமை வாசகரே,
எப்பேர்பட்ட சூழ்நிலை வந்தாலும் துணிந்து நின்று நேருக்கு நேர் போராட வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து. இக்கதையில் இளவரசனோ, தந்திரமான உபாயங்களை கையாண்டு இளவரசியை தோற்கடித்தான். இளவரசி வைத்த பந்தயத்தில் இளவரசன் வெற்றி பெற்றான் என்றாலும் அவன் நேர் வழியாய் வெற்றி பெறாததினால் அவன் இலக்கை அடைய முடியவில்லை. ஒருவேளை இளவரசன் தான் இளவரசியின் வாட் போர் நுட்பங்களை கண்டபோது அமைதலாயிருந்திருந்தால் அவன் அவளை தோற்கடித்ததினால் அவளை திருமணம் செய்திருக்கலாம்.
அதுபோலவே நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் குறுக்கு வழியிலோ அல்லது பணம் கொடுத்தோ சென்றால் எந்த காரியத்தையும் சாதித்து விடலாம் என்று பலர் எண்ணுகின்றனர். ஒரு வேளை அந்த நேரம் வேண்டுமென்றால் அது மகிழ்ச்சியைக் கொடுக்கலாம் ஆனால் அது நிரந்தரமல்லவே.
வேத வசனம் கூறுகிறது,
வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்
யோவான் 10:1
நம்முடைய ஆண்டவர் நம்மை குறுக்கு வழியிலல்ல நேர் வழியாய் மட்டுமே நம்மை நடத்துகிறவர். அதற்கு எடுத்துக்காட்டாக வேதத்தில் ஈசாக்கிற்கு பெண் கொள்ள ஆபிரகாமின் வேலைக்காரன் சென்ற போது அவன் ரெபேக்காளை கண்டுபிடித்ததும் இவ்வாறு கூறுகிறார்,
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
ஆதியாகமம் 24:48
எனவே நாமும் நம்முடைய வாழ்க்கை, ஊழியம், தொழில், வேலை என எல்லாவற்றையும் அவரிடத்தில் ஒப்புவிக்கும் போது கிருபைக்குள்ளாய் இருக்கிற நமக்கு ஆபிரகாமின் வேலைக்காரனை போல மட்டுமல்ல அதற்கும் மேலாய் நம்மை நேர்வழியாய் நடத்த தேவன் போதுமானவராயிருக்கிறார்.
#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
பின்குறிப்பு:
மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு முதலாவது சரியான பதிலை அனுப்பும் ஒரு நபருக்கு தக்க சன்மானம் உண்டு.
Thanks for using my website. Post your comments on this