டான் ரிச்சர்ட்சன் Don Richardson
மண்ணில் : 23.06.1935
விண்ணில் : 23.12.2018
ஊர் : சார்லோட் டவுன்
நாடு : கனடா
தரிசன பூமி : நியூ கினியா தீவுகள், இந்தோனேசியா
இந்தோனேசியாவில் உள்ள சாவி பழங்குடியினர் அவர்களின் துரோகம் மற்றும் வஞ்சகத்திற்காக பெயர் பெற்றனர். அவர்கள் எதிரி பழங்குடியினருடன் நட்பு போல் நடித்து அவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். அங்கு வந்த விருந்தினர்களின் நம்பிக்கையை வென்ற பிறகு அவர்களை கொன்று அவர்களின் இறைச்சியை சாப்பிடுவார்கள். டான் ரிச்சர்ட்சன் சேவை செய்யத் தேர்ந்தெடுத்த பழங்குடி இதுவே.
தனது பதினேழு வயதில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த டான், அன்றையிலிருந்து தான் ஒரு மிஷனரியாக வேண்டும் என்று முழு இதயத்துடன் முடிவு செய்தார். எனவே, ஆல்பர்ட்டாவில் உள்ள ப்ரேரி பைபிள் நிறுவனத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் சாவி பழங்குடியினரிடையே சேவை செய்வதற்காக இந்தோனேசியாவில் கமூர் என்ற கிராமத்திற்கு சென்றார்.
அங்கு அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முயன்றபோது, யூதாஸ்காரியோத்துவின் துரோகத் தன்மை காரணமாக அப்பழங்குடியினர் இயேசு கிறிஸ்துவை விட யூதாஸை விரும்பினார்கள். அவர்கள் சுவிசேஷத்தைச் சரியாக புரிந்துகொள்ளும் விதமாக விளக்குவது டான்க்கு கடினமாகிவிட்டது. பல வருட ஊழியத்திற்குப் பிறகும் அங்கு கிறிஸ்துவராக மாறியவர்கள் ஒருவரும் இல்லாததால், கிறிஸ்துவுக்காக அந்த காட்டுமிராண்டிகளை சம்பாதிக்கும் நம்பிக்கையை டான் கிட்டத்தட்ட இழந்தார். அவரது துயரங்களைச் சேர்த்து ஒரு பயங்கரமான பழங்குடிப் போர் தொடங்கியது.
அந்தப் போரின் போது ஒரு அம்பு டானின் மகன் ஸ்டீபனை கிட்டத்தட்ட கொன்றது. அங்குள்ள சூழ்நிலையால் சோர்வடைந்த டான், நன்மைக்காக அந்த இடத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். சாவி மக்கள் நற்செய்தியை புரிந்துக் கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் வழங்கிய மருத்துவ சேவைகளுக்காக டான் குடும்பத்தை விரும்பிய அப்பழங்குடியினர் அவர்கள் வெளியேற விரும்பவி ல்லை. அப்பழங்குடியினர் அடுத்து என்ன செய்தார்கள் என்று பார்த்து டான் ஆச்சரியப்பட்டார். அந்த பழங்குடியின தலைவர் தனது மகனை எதிரி பழங்குடிக்கு கொடுத்தார். சமாதானத்தை நிலைநாட்ட அவர்கள் பின்பற்றும் முறை இது. இதன் பொருள் என்னவென்றால் பழங்குடித் தலைவரின் மகன் எதிரியின் நிலத்தில் பாதுகாப்பாக இருக்கும் வரை அவர்களுக்கு இடையே போர் இருக்காது. உடனடியாக டான் அந்த சூழ்நிலையை தனக்காக பயனுள்ளதாக மாற்றி, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த பரலோக பிதா தனது ஒரேபேறான மகன் இயேசு கிறிஸ்துவை எவ்வாறு இவ்வுலகிற்கு அனுப்பினார் என்பது குறித்து சூழ்நிலைப்படுத்தி அவர்களுக்கு விளக்கினார்.
அன்று அவர் கொடுத்த செய்தி அங்குள்ள சூழ்நிலையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அப்போதிருந்து நூற்றுக்கணக்கான சாவி மக்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். டான் புதிய ஏற்பாட்டை உள்ளூர் மொழியில் மொழிபெயர்த்தார். அவரது முயற்சியால், சாவி மட்டுமல்ல, அந்த பழங்குடியினரின் சுற்றுப்புறத்தில் வாழும் மற்ற ஐந்து பழங்குடியினரும் இப்பொழுது பெரும்பாலும் கிறிஸ்தவர்களே!
1977ஆம் ஆண்டில், தனது குடும்பத்துடன் கனடாவுக்குத் திரும்பிய டான் ரிச்சர்ட்சன், 2018ஆம் ஆண்டில் தான் மரணமடையும் வரை பிரசங்கித்துக்கொண்டு மற்றும் உலகின் பல இடங்களிலும் மிஷனரி நடவடிக்கைகளை வழிநடத்துக்கொண்டு கர்த்தரின் சேவையை தொடர்ந்து செய்தார்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
நெல்சன் பெல் Nelson Bell
மண்ணில் : 30.07.1894
விண்ணில் : 02.08.1973
ஊர் : வர்ஜீனியா
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : சீனா
லெமுவேல் நெல்சன் பெல் ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு பதினோராவது வயதில் கிறிஸ்துவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் சட்ட படிப்பு படிக்க விரும்பினார். ஆனால், ஒரு நண்பர் எப்போதாவது ஒரு மருத்துவ மிஷனரியாக மாற அவர் நினைத்தாரா என்று அவரிடம் கேட்டபோது, கர்த்தரின் குரலைக் கேட்ட நெல்சன், தான் என்ன செய்ய தேவன் விரும்புகிறாரோ என்பதை உணர்ந்தார். அதனால், அவர் சட்ட படிப்பை விட்டு விட்டு மருத்துவ படிப்பை பயின்றார்.
1916ஆம் ஆண்டில் அவரது மனைவி வர்ஜீனியாவுடன் சீனாவுக்குப் புறப்பட்டார் நெல்சன். அங்கு அவர் "லவ் அண்ட் மெர்சி" (அன்பு மற்றும் கருணை) என்ற மருத்துவமனையில் வேலை செய்யத் தொடங்கினார். அவர் கிராமப்புறங்களிலும் சிறிய மருத்துவ மையங்களைத் (கிளினிக்குகள்) திறந்தார் மற்றும் உள்ளூர் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளுக்கும் மருத்துவச் சேவைகளை வழங்கினார். போர்க்காலங்களில் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் சீன மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் பின்வாங்காமல் அங்கே தங்கியிருந்தார். தயவுடன் இரக்கமுடன் அவர் கவனமாக வழங்கும் சேவைகளுக்காக மக்கள் அவருக்கு "ஐஹுவா" என்ற பெயரை வழங்கினர். இதன் பொருள் "சீனா மக்களை நேசிக்கிறவர்".
அவர் ஒரு திறமையான மருத்துவர், கடின உழைப்பாளி மற்றும் வெற்றிகரமான அறுவை சிகிச்சை நிபுணராக புகழ்பெற்றவர். அவர் எப்போதும் தனது மருத்துவத் திறன்களை மேம்படுத்த உழைத்தார். இருப்பினும், ஒரு மிஷனரியாக அவரது வெற்றிபெறக் காரணம், ஆத்துமாக்கள் மீதான அவரது அன்பும் அவருடைய பணியில் அவர் காட்டிய இரக்கமும்தான். அவர் ஒரு காகிதத்தில் "அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" என்று ஆவியின் கனியை எழுதி, அவரது மேஜையின் கண்ணாடி மேல் தலைத்தின் அடியில் வைத்திருந்தார். மற்ற திறமைகளை விட இது மிகவும் முக்கியமானது என்று நம்பிய அவர், தான் பணியாற்றிய மக்களிடம் அந்த குணாதிசயங்களை தினமும் காட்ட முயன்றார். அவருடைய முக்கிய குறிக்கோள் எப்போதும் சுவிசேஷத்தைப் பரப்புவதும் கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதும் ஆகும். குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நோயாளிகளின் பட்டியலை அவர் தயார் செய்து, சீன சுவிசேஷகாரர்கள் அவர்களை சந்தித்து ஆவிக்குரிய பாதையில் வழிநடத்தும்படி பார்த்துக்கொண்டார். - 1941ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குத் திரும்பிய நெல்சன், அங்கேயும் தொடர்ந்து மருத்துவ சேவைகளை வழங்கினார். தெற்கு பிரஸ்பிடேரியன் திருச்சபையின் வரல்ட் மிஷன்ஸ் போர்டின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதினேழு வருடங்கள் சேவை வழங்கினார். அந்த சமயத்தில் அவர் உலகெங்கிலும் உள்ள மிஷனரிகளை சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் மற்றும் யோசனைகளை போர்டுக்கு தெரிவித்தார். 'தி சதரன் பிரஸ்பிடேரியன் ஜர்னல்' மற்றும் 'கிறிஸ்டியானிட்டி டுடே' என்ற அவரது பத்திரிகைகளின் மூலம் தமது விருப்பத்தின் படி சுதந்திரமாக வாழ கிறிஸ்துவர்களுக்கு ஊக்கமளிக்கும் தாராளவாத இறையியலை எதிர்த்தார் மற்றும் வேதாகமத்தை மையமாக கொண்ட இறையியலைக்கு திரும்புமாறு அவர் கிறிஸ்தவ உலகத்திற்கு அழைப்பு விடுத்தார். நான்கு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தாலும், எம்மட்டும் ஓய்வெடுக்காமல் தனது கடைசி மூச்சு வரை கர்த்தரின் சேவையில் தொடர்ந்து முன்சென்றார் நெல்சன் பெல்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
பர்னபாஸ் ஷா Barnabas Shaw
மண்ணில் : 12.04.1788
விண்ணில் : 21.06.1857
ஊர் : எல்லாக்டன்
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : நமக்வாலாண்ட், தென்னாப்பிரிக்கா
பர்னபாஸ் ஷா தென்னாப்பிரிக்காவில் பணியாற்றிய ஒரு முன்னோடி மிஷனரி. அவர் நமக்வா பழங்குடியினரிடையே செய்த ஊழியத்திற்காக அறியப்பட்டவர். அவர் தனது தந்தையின் பண்ணையில் ஆடுகளை மேய்த்துகொண்டு வளர்ந்தார். ஒரு ஞாயிறு பள்ளியில் கிறிஸ்துவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்ட அவர், இருபது வயதில் பகிரங்கமாக பிரசங்கிக்கத் தொடங்கினார். 1814ஆம் ஆண்டில் நடந்த ஒரு மெதடிஸ்ட் மாநாட்டில், மிஷனரி சேவைக்கான கர்த்தரின் திட்டவட்டமான அழைப்பிற்கு பர்னபாஸ் கீழ்ப்படிந்தார். இந்தியாவில் சேவை செய்யத் அவர் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனாலும், வெஸ்லியன் மிஷனரி சொசைட்டி அவரை தென்னாப்பிரிக்காவில் சேவை செய்ய அனுப்பியது.
மிகுந்த உற்சாகத்துடன் கேப் டவுனுக்கு வந்தார் பர்னபாஸ். ஆனால், ஆ நகர ஆளுநர் அவருக்கு அழைப்பு இல்லாவிட்டால் அங்கு ஊழியம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அவரை அனுமதிக்க மறுத்துவிட்டார். இப்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் பர்னாபாஸ் தற்காலிகமாக இரண்டு ஆங்கில இராணுவ தளங்களில் பணியாற்றினார். ஆனாலும் அவர் திருப்தியடையவில்லை. ஏனென்றால், உள்ளூர் புறஜாதி பழங்குடியினருக்கு சேவை செய்ய அவர் அழைக்கப்பட்டார் என்பதை அவர் தனது இதயத்தில் நன்கு அறிந்திருந்தார். அங்குள்ள இனப் பழங்குடியினரைச் சந்திக்க அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. அந்த சூழ்நிலையில் கர்த்தர் அவருக்கு மிகவும் சுவாரஸ்யமான வழியில் வாசலைத் திறந்தார்.
ஒரு நாள் அவர் கேப் டவுனை நோக்கி ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் அவர் சோர்வாக இருந்த ஒரு கூட்டத்தைக் கண்டார். அவர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள நமக்வா என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்களின் தலைவர், "நாங்கள் 'தேவனின் வார்த்தை'யைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, அதை எங்களுக்கு விளக்கக்கூடிய நபரை நாங்கள் தேடுகிறோம்." என்று சொன்னார். ஆஹா! பர்னபாஸ் மகிழ்ச்சியுடன் வண்டியிலிருந்து குதித்து, உடனடியாக இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவர்களுக்கு போதிக்க முன்வந்தார். வெவ்வேறு மக்களின் ஆசைகளை தேவன் எவ்வளவு அற்புதமாக திருப்திப்படுத்துகிறார்! -நாமக்வா பழங்குடியினர் நாகரிகமற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் அப்பாவி மக்கள். பர்னபாஸ் 'தேவனின் வார்த்தையை' அவர்களுக்கு போதிக்க மகிழ்ச்சியுடன் முயன்றார், மேலும் நாகரிகத்தையும் அவர்களுக்கு கற்பித்தார். அவர் விதைத்த அந்த நல்ல விதை ஏராளமான கனிகளைக் கொடுத்தது. அவரது வேண்டுகோளின் பேரில் இங்கிலாந்திலிருந்து அதிகமான மிஷனரிகள் அங்கு வந்தனர், மேலும் இந்த ஊழியம் தென்னாப்பிரிக்காவின் அனைத்து திசைகளிலும் பரவியது.
நாமக்வா பழங்குடியினரிடையே 10 வருட தீவிர ஊழியத்திற்குப் பிறகு, கடுமையாக சோர்வடைந்த பர்னாபாஸ், அந்த தீவிர சோர்விலிருந்து மீள இங்கிலாந்து திரும்பினார். அவர் மீண்டும் நமக்வாலாந்துக்குத் திரும்ப விரும்பினாலும், உடல்நலக்குறைவு காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. ஆனாலும், 1857ஆம் ஆண்டில் தான் மரணமடையும் வரை இங்கிலாந்தில் சேவை செய்துகொண்டு கர்த்தரின் ஊழியத்தில் தொடர்ந்து முன்சென்றார் பர்னபாஸ் ஷா.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
மார்ட்டின் பர்ன்ஹாம் மற்றும் கிரேசியா Martin Burnham and Gracians
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : பிலிப்பைன்ஸ்
மார்ட்டின் மற்றும் கிரேசியா பர்ன்ஹாம் ஆகியோர் பிலிப்பைன்ஸில் 17 ஆண்டுகள் பணியாற்றிய மிஷனரிகள். அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் காடு இடங்களில் சேவை செய்ய தங்களைத் தயார்படுத்திக் கொள்ள காடுகளில் கடுமையான பயிற்சியைப் பெற்றனர். ஒரு விமான ஓட்டி மிஷனரியான (பைலட் மிஷனரி) மார்ட்டின், காடுகளில் பழங்குடியினர் மத்தியில் பணிபுரியும் மற்ற மிஷனரிகளுக்கு உதவியாளராக பணியாற்றினார். அவர் மிஷனரிகள் மற்றும் பழங்குடியினருக்கு பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்கினார், மேலும் நோய்வாய்ப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவ வசதிகளுக்கு அழைத்துச் சென்றார். பழங்குடியினர் மற்றும் மிஷனரிகளுக்காக அவர் ஒரு பெரிய இதயத்தைக் கொண்டிருந்தார். கிரேசியா அவருக்கு வேலையில் நல்ல உதவியாக இருந்தார்.
மே 29, 2001 அன்று, மார்ட்டினின் ஒரு வெளிநாட்டு பயணத்திற்குப் பிறகு அவர்கள் ஒரு ரிசார்ட்டில் ஓய்வெடுக்கிறார்கள். அப்பொழுது அபு சயாஃப் குழு என்ற ஒரு முஸ்லீம் தீவிரவாதக் குழு அந்த ரிசார்ட்டைத் தாக்கி, மிஷனரி தம்பதியினரையும் மற்ற சிலரையும் பணத்திற்காக கடத்திச் சென்றது. அவர்களிடம் மிஷனரிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டனர்.
அந்த ஒரு வருடத்தில், மிஷனரி தம்பதியினர் பயங்கரமான அனுபவங்களை அனுபவித்தனர். அவர்கள் பசி, தூக்கமின்மை மற்றும் நோயால் அவதிப்பட்டனர், தீவிரவாதிகளின் கொடூரங்களைக் கண்டனர் மற்றும் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில் மரண பயத்தில் வாழ்ந்தனர். அத்தகைய துன்பங்களுக்கு மத்தியில் ஆண்டவரே அவர்களின் நம்பிக்கையும் பெலனும். ஒரு கட்டத்தில் கிரேசியா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார், கிறிஸ்து அவருக்காக மரித்தார் என்று அவர் நம்புகின்றாலும், கர்த்தர் அவரை இனி நேசிக்கிறதில்லை என்று கருத தொடங்கினார். அப்பொழுது மார்ட்டின் "விசுவாசித்தால் நீ எல்லாவற்றையும் விசுவாசிக்கனும், இல்லையென்றால் எதையும் நம்பாதிரு." என்று அவரிடம் சொன்னார். அத்தகைய சூழ்நிலைகளில் விசுவாசத்தில் உறுதியாக நிற்க அவர்கள் ஒருவருக்கொருவர் ஊக்குவித்தனர்.
இறுதியாக, ஜூன் 7, 2002 அன்று, பிலிப்பைன்ஸ் இராணுவம் அவர்களை மீட்கும் முயற்சியில் காயமடைந்த கிரேசியா மீட்கப்பட்டார். ஆனால் 42 வயதான மார்ட்டின் மீட்பின் நடவடிக்கையின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தார். பின்னர், கிரேசியா திரும்பி அமெரிக்கா சென்று தனது குழந்தைகளுடன் சேர்ந்தார்.
கிரேசியா தனது வலிமிகுந்த அனுபவங்கள் தன்னை மனச்சோர்வடையச் செய்து கர்த்தரிடமிருந்து விலகிச் செல்லும்படி செய்ய விடவில்லை. அவர் அந்த அனுபவங்களை கஷ்டங்கள், துன்பங்களின் வழியாக செல்லுகின்ற மற்றவர்களை ஊக்குவிக்கப் பயன்படுத்தினார். அவர் “மார்ட்டின் அண்ட் கிரேசியா பர்ன்ஹாம் ஃபௌண்டேஷன்”ஐ நிறுவினார். அது உலகெங்கிலும் உள்ள விமான மிஷனரி சேவைகள் மற்றும் பழங்குடி ஊழியத்திற்கு ஆதரவளிக்கிறது. மேலும், முஸ்லிம்களுக்கிடையிலான ஊழியங்களிலும் அந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. க்ரேசியா தங்களை கடத்திச் சென்றவர்களை மன்னித்தார். அவர் சிறையில் அவர்களைச் சந்தித்து கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொண்டார். அவர்களில் சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர் கூட. இது தங்களின் துன்பத்திற்குப் பின்னால் கர்த்தர் வைத்த பெரிய நோக்கமாக இருக்கலாம் என்று கிரேசியா நம்புகிறார்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
=============
ஆலிஸ் மார்வால் - Alice Marval
============
மண்ணில் : 26.01.1865
விண்ணில் : 05.01.1904
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : கான்பூர், இந்தியா
1857ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நன்கு அறியப்பட்ட நிகழ்வு. இருபுறமும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் தங்கள் உயிர்களை இழந்தார்கள். பேஷ்வா நானா சாகேப் நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் பெண்களை கான்பூரில் உள்ள பிபிகர் என்ற ஒரு பெரிய வளாகத்தில் கைது செய்து, அவர்களைக் கொல்லும்படி தனது சிப்பாய்களுக்கு இரக்கமின்றி உத்தரவிட்டார். படுகொலைக்குப் பிறகு அங்கு அடைந்த பிரிட்டிஷ் இராணுவம் செய்ய முடிந்தது அந்த வளாகத்தில் முழங்கால் வரை இருந்த இரத்தத்தில் மிதக்கும் உடல்களைப் பார்ப்பதுதான்!
பிரிட்டிஷர்கள் பின்னர் பழிவாங்கினாலும், "சொசைட்டி ஃபர் ப்ரோபகேடின் ஆஃப் காஸ்பெல் இன் ஃபாரின் பார்ட்ஸ்" (வெளிநாட்டுப் பகுதிகளில் நற்செய்தியைப் பரப்புவதற்கான சங்கம்) கூட மரணமடைந்தவர்களுக்காக பழிவாங்க முயன்றது. ஆனால் அது ஹிம்சை பாதையில் அல்ல. அதற்காக அந்த அமைப்பு நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் பெண்கள் கொல்லப்பட்ட அதே பகுதியில் பெண்களுக்கான மருத்துவமனை நிறுவ ஆலிஸ் மார்வால் அவர்களை அனுப்பியது.
ஆலிஸ் தனது சிறு வயதிலிருந்தே ஒரு ஆர்வமுள்ள கிறிஸ்தவராக இருந்தார். அவரது கல்வி சார்ந்த முயற்சிகள் அவருடைய ஆவிக்குரிய அனுபவங்களை மங்கச் செய்ய அவர் விடவில்லை. முழுமையான புத்திசாலித்தனத்துடன், அவர் தன் சகாக்களுக்கு கல்வியில் உதவி செய்து, கிறிஸ்துவின் அன்பை மெதுவாக அவர்களிடம் பகிர்ந்து கொள்ள அந்த வாய்ப்புகளாக பயன்படுத்தினார். அவருடைய கல்வி அறிவு தனக்காக பயன்படுத்தாமல், கிறிஸ்துவின் சேவைக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் எப்பொழுதும் மனதில் வைத்திருந்தார். எனவே, பட்டம் பெற்ற பிறகு, அவர் ஒரு மிஷனரியாக பணியாற்ற எஸ்.பி.ஜி. அமைப்பில் சேர்ந்தார், பின்னர் அது அவரை கான்பூருக்கு அனுப்பியது.
கான்பூரின் நிலைமை மற்றும் ஒரு பிரிட்டிஷ் மிஷனரியாக அவருக்கு ஏற்படும் ஆபத்தை நன்கு அறிந்த ஆலிஸ் 1899ஆம் ஆண்டில் தைரியமாக அப்பகுதிக்கு வந்தார். அங்கு அவர் உள்ளூர் பெண்களுக்கு மருத்துவ சேவை வழங்க செயிண்ட் கேத்தரின்ஸ் மருத்துவமனையை நிறுவினார். ஆரம்பத்தில் அவர் மருத்துவமனை கட்டுவதிலும் உள்ளூர் மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதிலும் முழுமையாக ஈடுபட்டார். இருப்பினும், விரைவில் கான்பூரில் நோய் வெடித்தது.
நோயின் காரணமாக நோயாளிகள் நிறைந்த மருத்துவமனையில் பகலில் இடைவெளி இல்லாமல் உழைத்தாலும், பொது இடங்களில் வர அனுமதிக்கப்படாத பெண்களுக்கு சேவை வழங்க அவர் இரவில் வீடு வீடாகச் சென்றார். அவர் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்து அந்த கொடிய நோயிலிருந்து மீள அநேக பேருக்கு உதவினார். எனினும், அவருடைய மென்மையான உடல் அதிகப்படியான அழுத்தத்தை தாங்க முடியவில்லை. மேலும் அந்த நோய் அவரையும் தாக்கியது.
1904 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி தனது முடிவு வந்ததென்று உணர்ந்த ஆலிஸ் மார்வால், மிகுந்த வலியின் மத்தியிலும், "நான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்" என்று கூறி இவ்வுலகில் தனது ஓட்டத்தை முடித்தார்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
Thanks for using my website. Post your comments on this