Type Here to Get Search Results !

நீங்கள் ஒரு கடனாளி | I'm Crazy, How About You? | Alwin Johnson Gospel Sermon | தினதியான குறிப்புகள் | Jesus Sam

============
அதிசயங்களை செய்கின்றவர்
=============
நம் தேவனுக்கு சொல்லப்படும் பெயர்களில் ஒன்று, *அவர் அதிசயமானவர்* (ஏசா. 9:6). அவர் அதிசயமானவர் மட்டுமல்ல, அவர் அதிசயங்களைச் செய்கின்றவரும் ஆகும். சங்கீதக்காரன் சொல்கின்றான், *“ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.”* சங் 136:4.

அதிசயம் என்றால் என்ன? தாஜ்மஹாலை ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக சொல்கின்றார்கள். ஏனென்றால், அது இதுவரை எவரும் செய்திராத, மகத்துவமான ஒன்று. அதை அவ்வுளவு அழகாக நேர்த்தியாக, எப்படி கட்டினார்கள் என்று மனித மூளையால் கிரகிக்க முடியவில்லை. எனவே அதை உலக அதிசயம் என்று வர்ணிக்கின்றார்கள்.

தாஜ்மஹாலையே இப்படி சொல்வார்களென்றால், தேவன் படைத்த இந்த அண்ட சராசரங்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கோடி கோடியான சூரியன்களும், அவைகளைச் சுற்றி எண்ணி முடியாத கிரகங்களும் நம்முடைய மில்க்கிவே கேலக்ஸியில் உள்ளது என்கின்றார்களே, அவைகளை படைத்து ஆகாயத்தில் சுற்ற விட்ட அந்த தேவனின் அதிசயத்தை நினைத்துப் பாருங்கள். *மனித மூளையால் கிரகிக்க முடியாத எண்ணி முடியாத காரியங்களை நம் ஆண்டவராகிய தேவன் செய்திருக்கின்றார்.*

அந்த மகத்துவமான தேவன் சொல்கின்றார், “இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; *பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்;* உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.” யாத் 34:10

அன்று மாம்சத்தின்படி இஸ்ரவேலருக்கு சொன்ன அதே வார்த்தையை இன்று ஆவியின்படியான இஸ்ரவேலராகிய நமக்கு சொல்கின்றார்.


*நமது கற்பனைக்கு எட்டாத, நமது மூளையால் கிரகிக்க முடியாத பெரிய காரியங்களை தேவன் நம்முடைய வாழ்வில் செய்கின்றார். அவைகள் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.*

அதற்கு உதாரணம்தான், செங்கடல் அற்புதம். இஸ்ரவேலர் வாழ்வா, சாவா போராட்டத்தில் செங்கடலின் கரையில் கலக்கத்தோடு நின்றுகொண்டிருந்த போது, கர்த்தர் கடலை இரண்டாக பிளந்து அவர்களை அதிசயமாய் காப்பாற்றினார். மனிதன் கடல் மேல் கப்பலை விடுவான், கடல் மேல் பாலத்தை கட்டுவான், கடலுக்கடியில் சுரங்கப்பாதை கூட அமைப்பான். *ஆனால் கடலை இரண்டாக பிளக்கும் அதிசயத்தை கர்த்தர் மட்டுமே செய்ய முடியும்.*

*எனவே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கலாம், நம்பிக்கையில்லாத எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கலாம். பயப்படாதீர்கள்! உங்களோடிருக்கும் தேவன் அதிசயங்களைச் செய்கின்றவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். சூழ்நிலைகளை உங்களுக்கு சாதகமாக திருப்புவார். நீங்கள் நம்ப முடியாத காரியத்தை அவர் உங்கள் வாழ்க்கையில் செய்வார்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+919790002006


===============
நீங்கள் ஒரு கடனாளி
===============
கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் *நான் கடனாளியாயிருக்கிறேன்.* ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் *என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.* (ரோமர் 1:14,15)




அது என்ன கடனாளி? கிரேக்கர், அந்நியர், ஞானிகள், மூடர் அனைவரிடமும் பவுல் அப்போஸ்தலன் அதிக பணம் கடன் வாங்கி விட்டாரா? இல்லை, இல்லை... *அனைவருக்கும் சுவிசேஷமாகிய ஆவிக்குரிய சிகிச்சையளிக்க நான் கடனாளி அல்லது கடமைப்பட்டுள்ளேன்* என்கிறார்.




ஒரு மருத்துவமனையில் 30 பேர் கொரோனா தொற்று காரணமாக அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 10 பேருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்றும் 3 பேர் வென்டிலேட்டரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்கள். அத்தனை பேரையும் ஒரு டாக்டர்தான் கவனித்து சிகிச்சையளித்துக் கொண்டிருக்கின்றார் என்றால், *அவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அல்லது கடமை அந்த டாக்டருடையதுதானே.*




இந்த நிலையில் இந்த டாக்டர் மூன்று நாள் லீவு எடுத்துக் கொண்டு டூர் போய்விட்டு வர முடியுமா? நோயாளிகள் செத்தால் சாகட்டும் என்று வீட்டில் படுத்து துாங்க முடியுமா? முடியவே முடியாது! அத்தனை நோயாளிகளும் ஆபத்தான கட்டத்தை தாண்டும்வரை, அந்த டாக்டருக்கு நிம்மதியாய் துாங்க முடியாது.




*இதற்கு பெயர் தான் கடனாளி. இந்த பாரம் பவுலை ஆட்கொண்டபடியினால்தான் ஓய்வின்றி ஓடி அனைவருக்கும் சுவிசேஷம் சொல்கின்றவராய் காணப்பட்டார்.*




இன்று, இரட்சிக்கப்படாத நம் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டார் அனைவரும், ஆவிக்குரிய ரீதியில் ஆபத்தான நிலையில் தான் உள்ளார்கள். அவர்களை நரகத்திற்கு இழுத்துச் செல்ல பிசாசு ஆயத்தமாயிருக்கின்றான். *அவர்களுக்கு சுவிசேஷம் என்னும் மருந்து கொடுத்து, காப்பாற்றி பரலோகத்தின் குடிமக்களாய் மாற்ற வேண்டிய கடமை அல்லது கடன் நமக்கு உண்டு.*




ஆனால், நாமோ, நம் காரியங்களையே சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். நமக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆபத்தான கட்டத்தில் உள்ள அவர்களுக்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை. நோயாளி சாகும் நிலையில் இருக்கும் போது, அவருக்கு சிகிச்சையளிக்காமல், நிம்மதியாய் துாங்கும் பொறுப்பில்லாத, மனிதாபிமானமற்ற டாக்டர் போல நாம் காணப்படுகின்றோம்.




*நீங்கள் ஒரு கடனாளி என்ற உணர்வு உங்களை அழுத்தட்டும்! உங்கள் பொறுப்பில்தான் உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் உள்ளார்கள். அவர்களை கொடுமையான நரகத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய உன்னதமான பொறுப்பு உங்கள் மேல் உண்டு. அந்த பொறுப்பை உணர்ந்து, சுயநலமில்லாமல் செயல்படுங்கள்.*




*ஒரு நாளுக்கு ஒரு நபருக்காகிலும் சுவிசேஷம் சொல்லுவேன் என்று ஒரு தீர்மானத்தை எடுங்கள். காண்போருக்கெல்லாம் இரட்சிப்பின் நற்செய்தியை அறிவியுங்கள். அறுவடை மிகுதி, சுவிசேஷ வேலையாட்களோ கொஞ்சம்.*

*கர்த்தருக்காய் பயன்பட உங்களை வாழ்த்துகிறேன்.*

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


===================
நான் பைத்தியம் தான், நீங்க எப்படி?
=====================
ஒரு மாற்றுமத நபர் இயேசுவைக் குறித்து அவதுாறாய் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அரை குறை ஆடையோடு, அலங்கோலமாய் தோற்றமளிக்கும் அவரா உங்கள் கடவுள்? தன்னையே காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக சிலுவையில் தொங்கும் அந்த மனிதரா உங்களைக் காப்பாற்றப் போகின்றார்? பைத்தியக்காரர்கள்! எங்கள் கடவுள்களைப் பாருங்கள், வீரமாய் கம்பீரமாய் ஆயுதங்களோடு, நின்று கொண்டிருக்கின்றன என்று பெருமிதப்பட்டுக்கொண்டார்.




(1 கொரி. 1:23) *நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்* என்று பவுல் சொல்கின்றார். ஆம், சிலுவையிலறையப்பட்ட இயேசு இவ்வுலகத்திற்கு பைத்தியமாய்தான் தோற்றமளிக்கின்றார்.




ஆனால் அந்த பைத்தியமாய் தோற்றமளிக்கும் சிலுவையின் மாட்சிமை இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகளுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்படி, *தேவனுடைய பைத்தியம்* என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது. (1 கொரி. 1:25)




அது என்ன தேவனுடைய பைத்தியம்? *மனிதர்கள் சிந்தையில் இப்படி வாழ்ந்தால் தான் நாம் இந்த உலகில் பிழைக்க முடியும், உயர முடியும் என்று ஒரு கணக்கு போட்டிருப்பார்களே, அதற்கு நேர்மாறானது தான் தேவனுடைய பைத்தியம். ஒரு வகையில் பிழைக்கத்தெரியாதவன் என்று வைத்துக் கொள்ளலாம்.*




ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்ற கன்னத்தை திருப்பிக்காட்டுவது தேவனுடைய பைத்தியம். சத்துருக்களை சிநேகிப்பது தேவனுடைய பைத்தியம். பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்வது தான் தேவனுடைய பைத்தியம். தர்மம் செய்தாலும், வலதுகை செய்வதை இடது கைக்கு தெரியாமல் செய்து, பெயர் புகழ் நாடாமல் எளிமையாய் வாழ்வது பைத்தியம்தான்.




தங்கள் வீடு வாசல் வசதி எல்லாவற்றையும் விட்டு விட்டு, அந்நிய தேசங்களுக்கு மிஷனரியாகச் சென்று, காடு மேடாய் அலைந்து, கர்த்தரின் அன்பை வெளிப்படுத்தும் ஆயிரக்கணக்கான மிஷனரிகள் பைத்தியங்கள் தான். அல்பேனிய தேசத்தில் வசதியாய் வாழ்ந்த வாழ்க்கையை விட்டு விட்டு, இந்தியாவுக்கு வந்து தொழு நோயாளிகளின் புண்களை வெறும் கையால் கழுவி, மருந்து போட்டார்களே, அந்த அன்னை தெரசா பைத்தியம்தான்.




*இந்த பைத்தியக்கார வாழ்க்கையைத்தான் இயேசுவும் வாழ்ந்தார்.* தனக்கு துரோகம் செய்த மனுக்குலத்திற்காக தன்னுடைய உயிரையும் தந்தாரே! அந்த கொடிய வேதனையின் மத்தியிலும், தன்னை கோரமாய் சிலுவையிலறைந்த மனிதர்களையும் மன்னித்தாரே! இராஜாதி இராஜாவாய் இருந்தும், கொத்தடிமை போல் சீஷர்களின் கால்களையும் கழுவினாரே!




*அந்த பைத்தியக்காரத்தனம் தான், அத்தனை கோடி மனிதர்களை பாவத்திலிருந்து இரட்சித்தது. வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை இயேசுவுக்கு கொடுத்தது.* (பிலி. 2:10-11)




*இன்று இப்படி தேவனுக்கு பைத்தியமாய் தோற்றமளிக்கும் அனைவரும் ஒரு நாள் தேவனுடைய சமுகத்தில் இராஜாக்களாய் உயரந்திருப்பார்கள். இன்று தங்களை ஞானிகள் என்று எண்ணி, பிறர் வாழ்வை கெடுத்து, பொன் பொருள் குவித்து ஆடம்பரமாய் வாழும் சுயநலவாதிகள் அன்று, ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல், நரகத்தில் அழுது புலம்புவார்கள். அப்பொழுது தெரியும், யார் பைத்தியம் யார் ஞானி என்று!*




*இயேசுவைப் போல, நானும் இந்த உலகத்தில் பைத்தியமாய் வாழ தீர்மானித்து விட்டேன். பிழைக்கத் தெரியாதவன், பைத்தியக்காரன் என்று இந்த உலகம் என்னை என்ன துாற்றினாலும், எனக்கு கவலையில்லை. கிறிஸ்துவின் சுவாபங்களை அப்படியே என் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டப் போகின்றேன். கிறிஸ்துவின் அன்பின் சுவிசேஷத்தை ஆயிரங்களுக்கு தியாகமாய் கொண்டு செல்லப் போகின்றேன்.*

*நான் பைத்தியம் தான், நீங்க எப்படி?*

கர்த்தர் உங்களை உணர்த்துவாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


===========
தாய் தகப்பன்
==========
சமீபத்தில் ஒரு வயதான தாயாரை சந்தித்தேன். அவர்களுக்கு 7 பிள்ளைகள். 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள். பல வருடங்களுக்கு முன்பாகவே கணவரை இழந்து, கஷ்டப்பட்டு வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கி, அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கின்றார்கள்.


இன்று அவர்களுக்கு வயது 75. பெலவீனமான சரீரம். நடப்பது கூட சிரமமாயிருக்கின்றது. ஆனால் 7 பிள்ளைகளாலும் அவர்களுக்கு சமாதானமில்லை. மகள்கள் எல்லோரும் அவர்களை தங்கள் வீட்டில் வைத்து பராமரிக்க மறுத்த நிலையில், மகன்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தங்கள் தாயாரை சரிவர கவனிப்பதில்லை. 7 பிள்ளைகளை பெற்று வளர்த்தும், யார் வீட்டிலும் நிம்மதியாய் தங்க முடியாத நிலையில் அந்த தாயார் ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றார்கள்.




*சிறு வயதில் தங்கள் தாய் தகப்பனிடம் கொஞ்சி விளையாடும் பிள்ளைகள், தாங்கள் பெரியவர்களாகும் போது, அவர்களை புறக்கணிப்பது ஏனோ? இதுவே மனித குலத்தின் சுயநலத்தின் உச்சம்.*




*உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக* (உபா. 5:16) என்று பத்து கட்டளைகளிலேயே ஒன்றாய் கர்த்தர் சொல்லியுள்ளார்.




பத்துகட்டளைகளில் சொல்லப்பட்டுள்ள உறவு சார்ந்த கட்டளை இரண்டு. ஒன்று, என்னையன்றி வேறே தேவர்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம் என்ற முதல் கட்டளை. *அது தேவனிடம் நமக்கு உள்ள உறவைக் கட்டுவதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.* இரண்டாவது, ஐந்தாவது கட்டளை, தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக. *இது பெற்றோரிடம் உள்ள உறவை கட்டுவது குறித்து எழுதப்பட்டுள்ளது.*




*இதிலிருந்து தேவன் பெற்றோர்களை கனப்படுத்துவதை எந்த அளவுக்கு முக்கியப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.*




உலகில் நம்முடைய வளர்ச்சியை பார்த்து ஒரு நாளும் பொறாமைப்படாத ஒரே ஜீவன் பெற்றோர்தான். அதே போல நம்முடைய கஷ்டத்தைப் பார்த்து உண்மையாக பரிதபிப்பவர்களும் அவர்களே! தங்கள் பெற்றோரினால் செல்லமாய் வளர்க்கப்பட்ட அநேகருக்கு பெற்றோர்களின் அருமை புரியவில்லை. தாய் தகப்பனின் அன்பு இல்லாமல் வளர்ந்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை!




*நீ நன்றாயிருப்பதற்கு உன் தாய் தகப்பனை கனம் பண்ணுவாயாக! என்று சொல்லியிருப்பதை கவனியுங்கள். உங்கள் வாழ்வின் ஆசீர்வாதம், நீங்கள் உங்கள் பெற்றோரை நடத்தும் விதத்திலிருக்கின்றது. பெற்றோரை அநியாயமாய் கண்ணீர் சிந்த வைப்பது பிள்ளைகளுக்கு சாபத்தை கொண்டு வரும்.*




ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கு இடையே உள்ள வித்தியாசங்களால், பெற்றோர்கள் பழமைவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். *அவர்கள் பழமைவாதிகளல்ல, அவர்கள் முந்தின தலைமுறை.* அவர்களின் எண்ணங்களை மதியுங்கள். அவர்கள் பேசுவதை கேளுங்கள். அவர்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.




மேலும் சம்பாதித்து சம்பாதித்து பிள்ளைகளுக்கே அத்தனையும் கொட்டி படிக்க வைத்து, கடைசியில் தன் சொத்துக்களையும் விற்று பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பின்னர், அந்த பிள்ளைகள் யாரும் தங்களை சேர்த்துக் கொள்ளாததால் நடுத்தெருவில் நிற்கும் பெற்றோர்களை பார்த்திருக்கின்றேன். பணமிருந்தால் தான் பெற்றோருக்கு கூட மதிப்பு என்றாகி விட்டது.




*உங்கள் பெற்றோரை கனம் பண்ணுங்கள். வயதான காலத்தில் அவர்கள் மற்றவர்கள் மத்தியில் மரியாதையான வாழ்க்கை வாழச் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வின் ஆசீர்வாதத்திற்கு திறவுகோல்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


================
பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும்
=================
கிமு 10 - 9ம் நூற்றாண்டில் யூதாவில் ராஜாவாயிருந்த ஆசா, கர்த்தருக்கு மிகவும் பிரியமானவனாக வாழ்ந்து வந்தான். “கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது” என்று வாசிக்கின்றோம். அவனுடைய சமாதானமான நாட்களில் தேசத்தை கட்டியெழுப்பும் வேலையை செய்து தேசத்தை பலப்படுத்திக் கொண்டிருந்தான்.




ஆனால் அவனுக்கும் ஒரு பெரிய பிரச்சனை வந்தது. எத்தியோப்பியனாகிய சேரா 10 லட்சம் வீரர்களோடும், 300 இரதங்களோடும் யூதா ராஜா ஆசாவுக்கு விரோதமாக யுத்தம் செய்ய வந்தான். ஆசாவுக்கு இருப்பதோ 5 லட்சத்து 80000 வீரர்கள் தான். எதிரிகள் பாதிக்கு பாதி அதிகம் உள்ளார்கள். அந்த நாட்களின் யுத்தங்களில் அதிக வீரர்களைக் கொண்டவர்களே பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள்.




எனவே ஆசா ராஜா பயந்து தேவனை நோக்கி ஜெபித்தான். “ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: *கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.”* (2 நாளா. 14:11)




கர்த்தர் அவன் ஜெபத்தைக் கேட்டு பெரிய வெற்றியை தந்தார். எத்தியோப்பியர் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள் என்று வேதம் சொல்கின்றது.




ஆசா தன் ஜெபத்தில் அவன் பயன்படுத்திய வார்த்தைகளை கவனியுங்கள். *“பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்.”*




*ஆம், நம்முடைய பலத்தை கொண்டு நமக்கு வெற்றி தரும் தேவன் அல்ல அவர். நாம் பலம் இல்லாமல் இருக்கும் போதும் நமக்கு வெற்றி தரும் தேவன் அவர். நம்முடைய பெலமோ,, பலவீனமோ அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.* இதற்கு வேதத்தில் அநேக ஆதாரங்கள் உண்டு.




வெற்றியை தருவது தேவன் என்பதால் ஆசாவின் 5 லட்சம், எத்தியோப்பியனின் 10 லட்சத்தை வென்றது.




வெற்றி தருவது தேவன் என்பதால் சிறுவனான தாவீதும் கூழாங்கலும், பலமுள்ள கோலியாத்தை வென்றது..




வெற்றி தருவது கர்த்தர் என்பதால் கிதியோனின் 300 பேர் படை மீதியானியரின் லட்சக்கணக்கானோரை வென்றது.




*கர்த்தர் நமக்கு உதவி செய்யும் போது, அவருடைய பலத்தைக் கொண்டே நமக்கு உதவி செய்கின்றார். நம்முடைய பலமும், பலவீனமும் சர்வ வல்லவராகிய அவர் முன்பு எம்மாத்திரம். எனவே இன்றையத்தினம் உங்களுடைய பலவீனத்தைக் கண்டும், எதிராளியின் பலத்தைக் கண்டும் சோர்ந்து போகாதிருங்கள்.*




*இன்று கர்த்தரை சார்ந்து கொள்ளுங்கள். அவர் சர்வ வல்லவர், அவர் ஐசுவரிய சம்மன்னர், அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.*




கர்த்தர் உங்களுக்கு வெற்றியைத் தருவாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.