Type Here to Get Search Results !

பீர்-லகாய்-ரோயீ | ஒரே நாளில் கோடீஸ்வரன் | Money or Mind? | வாழ்வே ஆராதனை | Alwin Johnson Bible Message | Jesus Sam

==========
வாழ்வே ஆராதனை
===========
இரண்டு விசுவாசிகளுக்கிடையே சபைக்கு உள்ளேயே சண்டை வந்து விட்டது. அப்பொழுது அவர்களில் ஒருவர் மிகுந்த கோபத்தோடு சொன்னார்: _இது சர்ச்ன்னு பார்க்கிறேன் இல்லன்னா என் வார்த்தை வேறமாதிரி போகும். நீ வெளிய வா உன்னைய வைச்சிக்கிறேன்._

இது தான் சபையில் அநேகருடைய இன்றைய நிலைமை. எப்படி என்று கேட்கிறீர்களா? *இரட்டை வாழ்க்கை. சபைக்குள் ஒரு வாழ்க்கை, சபைக்கு வெளியே ஒரு வாழ்க்கை.* சபைக்குள் அமைதியாக பரிசுத்தவானாக ஆண்டவரை புகழ்ந்து ஆராதிப்பதும், வெளியே அதே வாயைக் கொண்டு சண்டை போட்டு மற்றவரை இகழ்ந்து பேசுவதும் கெட்ட வார்த்தை பேசுவதும் கூட இன்று மலிந்து காணப்படுகின்றது.

ஆனால் தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது என்ன? *நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.* (1 கொரி 10:31)

*வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாக பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள்.* (கொலோ 3:17)

*ஆராதனை என்பது நாம் சபைக்கு சென்று ஆண்டவரை புகழ்ந்து சொல்லும் சில வார்த்தைகளும், கரங்களை தட்டியும் அசைத்தும் செய்யும் சில கிரியைகளும் மட்டுமல்ல, வெளி வாழ்க்கையில் நம்முடைய வாயைத்திறந்து நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நம் கரங்களால் நாம் செய்யும் ஒவ்வொரு கிரியைகளும்தான்*

நம்முடைய தவறான நம்பிக்கை என்னவென்றால், பாடல் பாடும் போதும், தேவனை புகழும்போதும் மட்டும் அவைகள் தேவனுக்கு முன்பாக தூபமாய் எழும்பிச் செல்கின்றது. *மற்ற நேரங்களில் தேவன் நம்மை கவனிப்பதில்லை,* நம்முடைய வார்த்தைகளும் கிரியைகளும் தேவனுக்கு முன்பாக செல்வதில்லை என்று நினைக்கின்றோம். இது முழுக்க தவறு.

*நம் வாழ்வே ஆராதனைதான். நம்முடைய வாழ்க்கையின் அத்தனை வார்த்தைகளும் செயல்களும் தேவனுக்கு முன்பாக ஆராதனையாகத்தான் செல்கின்றது.* ஆராதனையின் போது நீங்கள் பேசும் துதிவார்த்தைகளும், ஆராதனை முடிந்து வீட்டுக்கு வந்து நீங்கள் பேசும் இழி வார்த்தைகளும் இரண்டுமே தேவனுக்கு நீங்கள் செலுத்தும் ஆராதனையே. ஆராதனையின் போது நீங்கள் கைகளை அசைப்பதும், வீட்டிலே மனைவியை அல்லது கணவனை அடிக்க கையை ஓங்குவதும், இரண்டுமே நீங்கள் தேவனுக்கு செலுத்தும் துதிபலியே…

*தலைவர்கள் வரும்போது மலர் தூவி வரவேற்பார்கள், அப்படி மலர் தூவும் போது இடையிடையே கொஞ்சம் சாக்கடையையும் தூவினால் அந்த தலைவர் என்ன செய்வார் என்று யோசித்துப்பாருங்கள். இதைத்தான் பல நேரங்களில் நாமும் நம் ஆண்டவருக்கு செய்கின்றோம்.*

சபையிலே கர்த்தரை துதிக்கும் போது இடையிடையே கெட்ட வார்த்தை பேசுவீர்களா? அதை எவ்வுளவு தவறாக எண்ணுகிறோம். ஆனால் அதே கெட்ட வார்த்தையை அல்லது கெட்ட செயலை வீட்டிலே, வெளியிலே தைரியமாய் பேசுகிறோம், செய்கிறோம்.

*சபையிலோ, வீட்டிலோ, வெளியிலோ…. நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை முழுவதும் தேவனுக்கு செலுத்தும் ஆராதனைதான். உங்களுடைய ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும் செயலும் ஒன்று நம் ஆண்டவரை மகிமைப்படுத்தும் அல்லது இழிவு படுத்தும்.*

*இரட்டை வாழ்வை களைவோம். நம்முடைய வாழ்வை தேவன் விரும்பும் ஆராதனையாக்குவோம்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


==========
பீர்-லகாய்-ரோயீ
========
எனக்கு தெரிந்த ஒரு தாயார் தன் மகனுடன் வசித்து வருகின்றார். ஒரு கால் ஊனமுற்ற அந்த தாயார் நொண்டி நொண்டி நடந்து வீட்டு வேலைக்குப் போய் சிறிது சிறிதாக சம்பாதிக்கின்றார். ஆனால் அவருடைய மகனோ கஞ்சா போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கும் செல்லாமல் தன் தாயாரை அனுதினமும் அடித்து துன்புறுத்தி வருகின்றான்.

தன் தாயார் சம்பாதிக்கும் கொஞ்ச பணத்தையும் பிடிங்கி கொண்டு போய் மது குடித்து காலி செய்வான். எத்தனை வேதனை நிறைந்த வாழ்க்கை .அது. சொந்த வீட்டிற்குள் சொந்த பிள்ளையால் அநியாயம், அக்கிரமம். *இந்த அக்கிரமத்தையெல்லாம் யார் காண்கின்றார்?*

வேதத்தில், ஆகார் என்ற பெண்மணி ஆபிரகாமின் குடும்பத்தில் தனக்கு ஏற்பட்ட காயத்தால் வீட்டைவிட்ட வெளியேறி ஓடிக்கொண்டிருந்தாள். *சாராள் அவளை கடினமாய் நடத்தினாள்* என்று எழுதப்பட்டுள்ளது. அந்த வீட்டில் ஆகாரின் நியாயத்தை பேச ஒருவருமில்லை. வேதனை தாங்காமல் வீட்டை விட்டு ஓடினாள்.

எங்கு ஓடுகிறாள்? தான் வந்த எகிப்தை நோக்கி ஓடுகிறாள். இதற்கு முன்னர் எகிப்திலும் அவள் அடிமையாகத்தான் இருந்தாள். *கர்ப்பினிப் பெண்ணான இவள் வனாந்திரத்திலே அலைந்து திரிந்து அங்கு செல்வது ஆபத்தானது. சாவைத் தேடி ஓடும் ஓட்டம்தான் அது.*

*தனக்கென்று யாருமில்லை. தன்னை விசாரிக்க யாருமில்லை என்ற தனிமை உணர்வோடு அலைந்து கொண்டிருந்த ஆகாரை தேடி கர்த்தர் வந்தார். “நீ எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” என்று அவளை விசாரித்தார். அவள் ஓடிப்போகிறேன் என்ற உடன், அவளுக்கு “நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு” என்று ஆலோசனை வழங்கினார்.*

*மேலும் அவளுக்கு, “உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும்” என்று ஒரு வாக்குத்தத்தத்தை கொடுத்து, எதிர்கால நம்பிக்கையையும் விதைத்தார்.*

*இதைக் கேட்ட ஆகார் வியந்து போனாள். தன்னை யாரும் காணவில்லை, தன்னை யாரும் விசாரிக்க வில்லை என்று உடைந்து போயிருந்த அவளுக்கு, தன்னைக் காண்பவர் ஒருவர் இருக்கின்றார் என்ற வெளிப்பாடு அன்று தான் கிடைத்தது.*

“அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு *நீர் என்னைக் காண்கிற தேவன்* என்று பேரிட்டாள். ஆகையால், அந்தத் துரவு பெயர் *லகாய்-ரோயீ* என்னப்பட்டது.” (ஆதி. 16:13-14) *எபிரெயத்தில் பீர்-லகாய்-ரோயீ* என்று எழுதப்பட்டுள்ளது. அப்படி என்றால் *என்னை காண்கின்ற ஜீவனுள்ள தேவனின் கிணறு* என்று அர்த்தம்.

நாமும் கூட பல நேரங்களில், நம்மைக் கண்டு விசாரிக்க யாருமில்லை என்ற தனிமை உணர்வோடு இருக்கக்கூடும். நமக்கு நடக்கும் துன்பங்கள், அநியாயங்கள், துரோகங்கள்... ஆகியவற்றின் மத்தியில் நம் நியாயத்தை எடுத்துரைக்க, நம்மை உற்சாகப்படுத்த எவருமில்லை என்று நினைத்திருக்கலாம். கவலைப்படாதிருங்கள், *லகாய் ரோயீ வெளிப்பாடு இன்று உங்களுக்கு கிடைப்பதாக.*

*பீர்-லகாய்-ரோயீ வெளிப்பாடு கிடைத்தவர்கள் வீணாக கவலைப்பட மாட்டார்கள். நான் தனிமையிலில்லை, என் அங்கலாய்ப்பு, கண்ணீர், கஷ்டமெல்லாம் சர்வ வல்லமையுள்ள தேவன் கவனித்துக் கொண்டிருக்கின்றார். நான் அழிந்து போக விடமாட்டார். அவர் என்னை கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வார். என்னைக் கொண்டு செய்ய வேண்டிய காரியத்தை நிச்சயம் செய்து முடிப்பார் என்று தைரியமாக இருப்பார்கள்.*

*லகாய்-ரோயீ வெளிப்பாட்டிற்கு முன் வீட்டைவிட்டு ஓடின ஆகார், வெளிப்பாட்டிற்கு பின்னர் எந்த வீட்டில் தான் இருக்க முடியாது என்று நினைத்தாளோ, அதே வீட்டிற்கு திரும்ப சென்றாள். அத்தனை கொடுமைகளையும் தாங்கி இஸ்மவேலைப் பெற்றெடுத்தாள். இஸ்மவேல் பின்நாட்களில் பலத்த ஜாதியானான்.*

*காண்கின்ற தேவன் இருக்கும் போது, நாம் சிங்க கெபிக்கும் செல்லலாம், அக்கினிச் சூளைக்கும் செல்லாம், செங்கடலின் ஆழத்திலும் செல்லலாம், வறண்ட பாலைவனத்தையும் கடக்கலாம். எதையும் துணிந்து செய்யலாம்!*

சில குடும்பங்களில் குடிகாரக்கணவனால் மனைவிமார்கள் படும் சித்திரவதைகள் சகிக்க முடியாதவைகளாக இருக்கும். சில வீடுகளில் சண்டைக்கார மனைவிகளால் சில அப்பாவி கணவன்மார்கள் படாத பாடு படுவார்கள். சில வீடுகளில் பிள்ளைகளின் அக்கிரமத்தால் பெற்றோர்கள் கண்ணீர்வடிப்பார்கள். சில இடங்களில் ஆதரவு தேடி வந்த பிள்ளைகளை உறவினர்கள் சித்திரவதைப்படுத்தும் காட்சியையும் நாம் காண்கின்றோம்.

*இவைகளையெல்லாம் கடவுள் பார்க்கின்றாரா? எத்தனை காலம் நான் இப்படிப்பட்ட பாடுகளை சகித்திருக்க வேண்டும் என்று அங்கலாய்ப்போடு இருந்தீர்களென்றால், பீர்லகாய்ரோயீ வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை 24 மணிநேரமும் காண்கின்ற தேவனாயிருக்கின்றார். அவர் உங்களை மறந்து விடவில்லை. அவர் உங்களுக்காக நன்மையான திட்டங்களை வைத்துள்ளார். சீக்கிரத்தில் நியாயம் செய்வார்.*

பீர்-லகாய்-ரோயீ வெளிப்பாடு உங்களுக்கு கிடைப்பதாக!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


===============
ஒரே நாளில் கோடீஸ்வரன்
==============
இயேசு உபவாசித்து முடித்தபின்பு, பிசாசு அவரை சோதிக்கும்படி வந்தான். மூன்று விதத்தில் அவன் இயேசுவை சோதித்தான். அதில் மூன்றாவதாக அவன் செய்த காரியம் மிகவும் ஆச்சரியமானது.




*பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையில் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளை எல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.* (மத். 4:8-9)




பிசாசு தன்னுடைய ஆளுகைக்குட்பட்டிருக்கும் இந்த உலகத்தின் ராஜ்யங்கள், அதன் செல்வம் அனைத்தையும், முழுவதுமாய் இயேசுவிடம் கொடுக்க டீல் பேசுகிறதை பார்க்கிறோம். எல்லாவற்றையும் உமக்கு தந்துவிடுகிறேன். ஒரே ஒரு முறை என்னை பணிந்து கொள்ளும் அது போதும் என்கிறான்.




இந்த டீல் ரொம்ப நல்ல டீலாகத்தான் இருக்கிறது. *ஒரு முறை பணிந்தால் ஓகோன்னு வாழ்க்கை. உலகத்தின் அனைத்து செல்வங்களும், ஆஸ்தியும், ஆட்சி அதிகாரங்களும் மொத்தமாக நமக்கு கிடைத்தால் எப்படியிருக்கும்?*




இயேசு உலக மேன்மையை எதிர்பார்த்து வாழும் சாதாரண மனிதனாக இருந்தால், இந்த சோதனையில் விழுந்திருப்பார். ஆனால் அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய குமாரன். உலக மேன்மை, ஆஸ்திகள் அவருக்கு குப்பையை போன்றது. பிசாசை கடிந்து கொண்டு, வசனத்தால் விரட்டினார்.




சிறுவயதிலிருந்தே அனைவரும் நமக்கு சொல்லி கொடுக்கும் காரியம். நீ பெரிய ஆளா வரனும், நிறைய சம்பாதிக்கனும், நிறைய சாதிக்கனும். உயர்ந்த நிலைக்கு வரனும். பெரிய பணக்காரனா ஆகனும். பெரிய வீடு கட்டனும். பெரிய கார் வாங்கனும். *இப்படி உலக மேன்மையை குறித்தே நமக்கு போதித்து போதித்து, அது தான் வாழ்வின் இலட்சியம் என்பது போல் நம்முடைய மனதில் பதித்து விட்டார்கள்.*




ஊழியத்தில் கூட, அந்த பெரிய ஊழியக்காரன் போல பெரிய ஊழியக்காரனாகனும். அவர் போல பெரிய சர்ச் கட்டனும். அவர் மாதிரி உலகமெல்லாம் விமானத்தில போகனும், அவர் மாதிரி நிறைய ரசிகர் கூட்டம் நமக்கு வேண்டும், அவர் மாதிரி லட்சக்கணக்கான பேர் மத்தியில் பேசனும்… *இப்படியாக உலக மேன்மையையே பெரிய சாதனையாக பேசப்படுகின்றது.*




*மனுஷனுக்கு முன்பாக மேன்மையாக எண்ணப்படுகிறது, தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது* (லூக் 16:15). என்று பொருளாசைக்காரராகிய பரிசேயர்களிடம் இயேசு சொன்னதை வாசித்துப் பாருங்கள்.




*கர்த்தருடைய பிள்ளைகள் யாருக்கும், உலக மேன்மை, உலக செல்வம், உலக உயர்வு ஒரு இலட்சியமாக இருக்கக்கூடாது. அது நீங்கள் செய்ய வேண்டிய சாதனை அல்ல. இவைகள் இடையே உங்களுக்கு கொடுக்கப்படலாம், உங்களை விட்டு எடுக்கவும் படலாம். ஆனால் அது நீங்கள் அடைய வேண்டிய இலக்கு அல்ல.*




*நம்முடைய இலக்கு கர்த்தர் நம்மேல் வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமே.* அதை மட்டுமே நம் கண்முன் வைத்து ஓட வேண்டும். இயேசு பிதாவின் சித்தத்தை தன் கண்முன் வைத்ததினால் பிசாசின் சோதனைக்கு அடிபணிய வில்லை.




*உலக மேன்மையை நம்முடைய நோக்கமாக வைத்திருந்தால், பிசாசு மிக எளிதாக நம்மை வீழ்த்தி, அவன் காலில் விழ வைத்துவிடுவான்.* உங்களுக்கு கோடிகளை கொடுப்பது பிசாசுக்கு ரொம்ப எளிதான காரியம். ஒரே நாளில் உங்களை கோடீஸ்வரானாக மாற்ற பிசாசினால் முடியும். உங்களை உலகமனைத்திற்கும் அதிகாரியாக்கவும் முடியும். ஆனால் அது நம் நோக்கமல்ல.




இயேசு இந்த உலகில் 33.5 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தார், தனக்கென்று எந்த சொத்தையும் சேர்க்கவில்லை, மிகவும் அவமானமாக எண்ணப்பட்ட சிலுவை மரணத்தின் மூலமாக கொல்லப்பட்டார். அவருடைய ஊழியத்தின் விளைவு கூட வெறும் 120 பேர்தான் (அப் 1:15). *ஆனாலும் பிதா தனக்கு வைத்திருந்த பணியை சரியாக செய்து முடித்தார். தன் வாழ்க்கையை குறித்த பிதாவின் நோக்கத்தை நிறைவேற்றினார். பிதா அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார்* (பிலி 2:9).




*அழிந்து போகின்ற இந்த உலகத்தின் மேன்மையை ஒரு பொருட்டாக கருதாமல், கர்த்தர் நமக்கு வைத்திருக்கிற வழியில் சந்தோஷமாக ஓடி, கர்த்தருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் நம் வாழ்வில் நிறைவேற்றுவோம். அழியாத மறு உலக மேன்மையை கர்த்தர் நமக்கு தருவார். இக்காலத்து பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


============
பணமா, மனமா?
==============
ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன். எனக்கு பக்கத்து டேபிளில் சாதாரண உடையணிந்த ஒரு நபர், தன் மனைவி பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தார். ஆனால் அவர்கள் அதிக நேரம் காத்திருந்தும் உணவு பரிமாறும் நபர் (சர்வர்) அவர்களை கண்டுகொள்ளவேயில்லை. அவர்கள் பல முறை அழைத்த பின்னும் தான் பிஸியாக இருப்பது போலவே தன்னைக் காட்டிக் கொண்டார் அந்த சர்வர். பின்னர் வேண்டா வெறுப்போடு வந்து ஆர்டர் எடுத்துச் சென்றார்.




ஆனால் எனக்கு எதிர்த்த டேபிளில் பகட்டான ஆடை ஆபரணங்களோடு ஒரு குடும்பம் வந்து அமர்ந்தது. அவர்கள் வந்த மாத்திரத்தில் அவர்களிடம் போய், சார் என்ன சாப்பிடுறீங்க என்று மிக தாழ்மையான குரலில் கேட்டார் அந்த பிஸியான சர்வர். கடைசிவரை கவனித்தேன், அந்த பணக்கார நபர்கள் அந்த சர்வரை, அதிகாரத் தொனியில் கூப்பிடுவதும், திட்டுவதுமாக இருந்தார்கள். ஆனாலும் இந்த சர்வர் அவர்களிடம் பணிந்து பணிந்துதான் பேசிக் கொண்டிருந்தார்.




*இந்த பொல்லாத உலகில் பணம் தான் ஒரு மனிதனின் மதிப்பை தீர்மானிக்கின்றது. ஒரு மனிதன், தன்னுடைய சொந்த குடும்பத்திலிருந்து, அவன் சமுதாயம், மற்றும் திருச்சபையில் கூட அவனுடைய பண அளவைக் கொண்டே மதிக்கப்படுகின்றான். பணமில்லாத போது அற்பமாய் எண்ணப்பட்டவர்கள் கூட, பணம் பெருத்தவர்களாய் மாறும் போது கொண்டாடப்படுகின்றார்கள்.*




ஒரு ஏழை நம்மை நிந்தித்தால் கோபப்பட்டு, பதிலுக்கு நிந்திப்போம். அதே நேரம் ஒரு பணக்காரர் நிந்தித்தால், தலைகுனிந்து அத்தனையையும் பொறுத்துக் கொள்வோம். பணத்திற்கு அத்தனை வல்லமை இருக்கின்றது.




*இது இந்த பிரபஞ்சத்தின் அதிபதியான பிசாசின் நடைமுறை.* மனிதனின் வெளிப்புறத் தோற்றத்தையும், அவன் உடைமைகளையும் வைத்து அவனை எடை போடுகின்றது. இந்த நடைமுறைக்கு அனைவரும் அடிமையாகி விட்டார்கள். ஆனால் தேவ பிள்ளைகள் இந்த நடைமுறையை பின்பற்றக் கூடாது. *பணத்தோடு மனிதனை இணைத்துப் பார்க்க்க் கூடாது. மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும்.*




வேதம் சொல்கின்றது, *மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்* (1 சாமு. 16:7). நடைமுறை வழக்கில் சொல்ல வேண்டுமானால், *மனுஷன் பணத்தை பார்ப்பான்; கர்த்தரோ மனதைப் பார்க்கிறார் அல்லது குணத்தைப் பார்க்கிறார்.*




கர்த்தர் பார்க்கும் வண்ணமாக அவருடைய பிள்ளைகளாகிய நாமும் பிறரை பார்க்க பழக வேண்டும். *ஒருவருடைய பணத்தை பார்க்கும் அந்த நேரத்தில் நாம் அந்த மனிதனின் மனதைப் பார்க்கத் தவறுகின்றோம். இதன் விளைவாக அநேக நல்ல மனங்களை நம் வாழ்வில் இழக்கின்றோம்.* பணத்தின் அடிப்படையில் ஒருவர் உங்களோடு பழகுவாரென்றால், அந்த உறவு போலியான உறவாகவே இருக்கும்.




நான் ஏழைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், பணக்காரர்களை அசட்டை செய்யுங்கள் என்று சொல்லவில்லை. பணமோ, பணமின்மையோ ஒரு பொருட்டல்ல. *ஏழையோ, பணக்காரனோ யாராயிருந்தாலும் பாரபட்சமில்லாமல் அவர்களை அணுகவும், அவர்களை மதிக்கவும் வேண்டும் என்றே சொல்கிறேன்.*




யாக்கோபு 2:2-4 “பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: *நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும்* என்றும்; தரித்திரனைப் பார்த்து: *நீ அங்கே நில்லு,* அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?”

*இப்படிப்பட்ட பாரபட்சங்களை மாற்றி, மனிதனை மனிதனாக மதிப்போம்.*

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


============
அமைதலுள்ள வாழ்க்கை
==============
தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடுள்ள ஒரு நபரை நான் சந்தித்தேன். ஏன் இவ்வாறு நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். வாழ்க்கையில் ஏராளமான தோல்விகள், நினைத்தபடி வாழ்வில் முன்னேற முடியவில்லை. எல்லோரும் என்னை விட வாழ்வில் முன்னேறி விட்டார்கள், நான் மட்டும் தேங்கிப் போய் நிற்கின்றேன் என்றார். அவருக்கு வேதத்திலிருந்து சில காரியங்களை அவருக்கு கற்றுக் கொடுத்து உற்சாகப்படுத்தி அனுப்பினேன்.




*நம்மில் பலரும் இதுபோல் நாம் வாழும் வாழ்க்கையின் மீது அதிர்ப்தியாக இருக்கின்றோம். பலரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் மாதிரி நான் இல்லையே என்று வேதனைப் படுகின்றோம். இந்த விரக்தியின் உச்சம் தான் தற்கொலை எண்ணம்.*




*பூமியிலே நாம் வாழ்கின்ற வாழ்க்கை மிகவும் எளிதானது. அதை நாம் தான் அநேக நேரங்களில் அதை சிக்கலாக்கிக் கொள்கின்றோம்.* ஆதியிலே தேவன் ஆதாமையும் ஏவாளையும் உருவாக்கி, அவர்கள் வாழ ஒரு அழகான ஏதேன் தோட்டத்தையும் கொடுத்தார். அந்த தோட்டத்தை பராமரித்து, அதன் கனிகளை உண்டு வாழ வேண்டும். மிக எளிய வாழ்க்கை. இதில் ஏதேனும் சிக்கல் இருக்கின்றதா?




ஆனால் ஒரு நாள் பிசாசு மனிதனிடம் வந்து, “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” (ஆதி. 3:5) என்று தேவன் புசிக்காதே என்ற கனியை புசிக்கச் சொன்னான். *மனிதன் தான் மனிதனாய் இருப்பதில் திருப்தியில்லாமல் தேவனாய் மாற வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த விலக்கப்பட்ட கனியை புசித்த அன்றிலிருந்து பிரச்சனை ஆரம்பித்தது.*




*இன்னும் உயர வேண்டும்! இன்னும் உயர வேண்டும்!! என்ற பேராசை தான் மனிதனை பல சிக்கல்களில் சிக்க வைத்து வாழ்க்கையை சீரழிக்கின்றது.* மனிதன் விவசாயம் மட்டும் பார்த்து, உண்டு உறங்கியிருக்கும் வரை சிக்கலில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஆனால் *முன்னேற்றம் என்ற பெயரில் பல காரியங்களை செய்து நாமே பல சிக்கல்களை நம் வாழ்க்கையில் கொண்டு வந்து விட்டோம்.*




அப்போஸ்தலனாகிய பவுல், *“அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும்... உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்”* (1 தெச. 4:12) என்று அறிவுறுத்துகின்றார். இதை NIV ஆங்கில வேதாகமத்தில், *“Make it your ambition to lead a quiet life”* என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு அமைதலுள்ள வாழக்கை வாழ வேண்டும் என்பதையே நோக்கமாய் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.




நாம் முன்னேற வேண்டும், பணக்காரனாக வேண்டும், முந்த வேண்டும் என்பதை இரவு பகலாய் வாஞ்சித்து, அதையே நாம் நோக்கமாய் கொண்டிருக்கும் போது, நம் வாழ்க்கையை நாமே சிக்கலில் அகப்படுத்திக் கொள்வோம். பின்னர் மனச்சமாதானம் இல்லாமல் தவித்து, போலி சிரிப்பு சிரித்து, வருத்தத்துடன் வாழ்ந்து முடிக்கின்றோம். இதனால் இந்த காலத்தில் எத்தனை வியாதிகள், எத்தனை இயற்கை சீரழிவுகள், எத்தனை செயற்கை பேரழிவுகள்...




*வாழ்வில் கடின உழைப்பும், சம்பாத்தியமும் மிக அவசியம். ஆனால் பேராசையும், ஒருவரையொருவர் முந்த வேண்டும் என்ற வெறியும்தான் ஆபத்தானது.*




*திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவ பிள்ளைகளே, அமைதலுள்ள வாழ்க்கை வாழ நாடுங்கள். கடினமாய் உழையுங்கள். ஆனால் யாரோமும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதிருங்கள். கவலையின்றி, மகிழ்ச்சியாய் வாழுங்கள். கர்த்தர் உங்களுக்கு எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் கொடுத்து நடத்துவார்.*




நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, *உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;* நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. (13:5)




*போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.* உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். *ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.* (1 தீமோ. 6:6-9).

*கர்த்தர் உங்களை அமைதலான வாழ்க்கையில் நடத்துவாராக!*

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.