Type Here to Get Search Results !

நீங்க நல்லாயிருப்பீங்க! | நமக்காய் பேசும் தேவன் | Fear not, be Faithful Message | தினசரி வேத தியானக் குறிப்புகள் | Jesus Sam

==============
பின் செல்கின்றவர்களுக்கு முன்செல்கின்றார்
===============
நம் நாட்டில் ஆடு மேய்ப்பவர்கள் *ஆடுகளை முன் விட்டு பின்னால் அவைகளை துரத்திக் கொண்டே செல்வார்கள்.* ஆனால் இஸ்ரவேல் தேசத்தில் ஆடு *மேய்ப்பவர்கள் முன் செல்வார்கள், ஆடுகள் அவர்கள் சத்தத்தை கேட்டு பின் செல்லும்.* இதனைத்தான் ஆண்டவராகிய இயேசு நமக்கு உவமையாக சொல்லியிருக்கிறார்.




யோவான் 10:4; *அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்து போகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்கு பின் செல்கிறது.*




கர்த்தர் எப்பொழுதும் நமக்கு முன் செல்கிற தேவனாயிருக்கிறார். நாம் எந்த பாதையில் அல்லது சூழ்நிலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாலும் நமக்கு ஒரு தைரியம் உண்டு, சர்வ வல்லமையுள்ள நம்முடைய தெய்வம் நமக்கு முன்னே அதே பாதையில் நம்மை நடத்திக் கொண்டு செல்கின்றார். நாம் அவரை பின்பற்றி மட்டும்தான் செல்கிறோம். எந்த பிரச்சனை வந்தாலும், அவரை தாண்டியே நமக்கு வருகின்றது. நம்மை அழிக்கும் எந்த காரியத்தையும் அவர் நமக்கு நேராய் வர அவர் விடுவதில்லை.




*யாருக்கு கர்த்தர் முன்செல்கின்றார்?*




*என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்* என்று கர்த்தர் சொல்கின்ற கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை எல்லோரும் தங்கள் வாகனங்களில் ஒட்டிக் கொள்வார்கள். உண்மைதான், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு முன்பாக கர்த்தருடைய சமூகம் சென்று அவர்களை வழிநடத்துகின்றது. ஆனால் *அந்த வசனம் யாருக்கு பொருந்தும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.*




*கர்த்தருக்கு பின் செல்கின்றவர்களுக்கு மட்டும் தான் அவர் முன் செல்கின்றார்.*




*இன்று அநேக ஊழியர்கள் கர்த்தர் உங்களுக்கு முன் செல்கின்றார் என்று விசுவாசிகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் நாம் அவருக்கு பின் செல்ல வேண்டுமென்பதை கற்று கொடுக்க மறுக்கிறார்கள்.* கேட்டால் நியாயப்பிரமாணம் என்கிறார்கள். கர்த்தர் நமக்கு செய்கின்றதை சொல்லும்போதே, நாம் செய்ய வேண்டிய காரித்தையும் சொல்ல மறுப்பவர்கள் கள்ள ஊழியர்கள். அவர்களை பின்பற்றாதீர்கள்.




கர்த்தருடைய வழிகளில் நாம் நடவாமல், நமக்கு முன் கர்த்தர் செல்கின்றார் என்று நம்பிக் கொண்டிருப்பது பரிதாபத்திற்குரியது. அதனால்தான் இயேசு மேய்ப்பனுடைய உவமையை இங்கு சொல்கின்றார். மேய்ப்பன் சத்தம் கொடுத்துக் கொண்டே *முன்னால் செல்கின்றார்.* மேய்ப்பனுடைய சத்தத்தை கவனமாய் கேட்டு அவரை பின் சென்று கொண்டிருந்தோமென்றால் மட்டுமே, நாம் தைரியமாக சொல்லலாம், கர்த்தருடைய சமூகம் எனக்கு முன்பாக செல்கின்றது.




*நாம் செல்லுகின்ற இடத்திற்கெல்லாம் மேய்ப்பன் வருவதில்லை. நம்முடைய விருப்பத்திற்கெல்லாம் நாம் அவரை இழுக்கவும் முடியாது.* நமக்கு பசுமையாய் தோன்றும் இடங்கள் ஆயிரம் உண்டு. வாருமையா, வாருமையா என்று கதறி ஜெபித்தாலும், அங்கெல்லாம் நாம் ஆண்டவரை வர வைக்கமுடியாது. இன்று நம்முடைய ஜெபத்தால் கர்த்தரை நம்முடைய வழிக்கு இழுத்து விடலாம் என்ற தவறான புரிந்து கொள்ளுதல் தேவ பிள்ளைகளினிடத்தில் இருக்கின்றது.




*மேய்ப்பனாகிய தெய்வம் எந்த வழியில் செல்கின்றாரோ, அந்த வழியில்தான் நாம் அவரை பின் செல்ல வேண்டும்.* சில நேரங்களில் நமக்கு பிடிக்காத வழியில் கூட நம்மை நடத்திச் செல்லலாம். அந்த நேரங்களில் கர்த்தருடைய நடத்துதல் நமக்கு புரியாது. ஆனால் கீழ்ப்படிந்து அவர் பின் சென்றால் நிச்சயம் நல்ல மேய்ச்சல், அமர்ந்த தண்ணீர் நமக்கு உண்டு. சங்கீதம் 23ஐ வாசித்துப் பாருங்கள்.




நல்ல மேய்ப்பன் இயேசு ஓநாய் வரும்போது, நம்மை விட்டு ஓடுகின்ற மேய்ப்பன் இல்லை. நமக்காய் உயிரை கொடுத்து நம்மை காக்கின்றவர். *இப்படி ஒரு நல்ல மேய்ப்பனை விட்டு விட்டு நாம் வேறெங்கும் செல்லலாமா?*




*அன்றாடம் ஜெபத்தில் அவர் சத்தம் கேட்டு, அவருக்கு பின் செல்லுங்கள். உங்களை சுற்றி நடக்கின்ற காரியங்களை குறித்து பயப்படாதிருங்கள். கர்த்தர் உங்களை ஆச்சரியமாக நடத்துவார்.*




கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


=============
நீங்க நல்லாயிருப்பீங்க!
=============
நீங்க நல்லாயிருப்பீங்க, நல்ல சுகத்தோடும் பெலத்தோடும் நூறு வருஷம் வாழ்வீங்க, உங்க குடும்பம் ஆசீர்வதிக்கப்படும், பணமும் செல்வமும் உங்களுக்கு கோடி கோடியாய் கொட்டும், நீங்க செய்யும் எல்லா வேலையும் ரொம்ப ஆசீர்வாதமாயிருக்கும், உங்க வியாபாரம் தொழில் பெருகும், ரொம்ப மேன்மை படுத்தப்படுவீங்க, உங்களுக்கு ஒருத்தரும் தீங்கு செய்ய முடியாது. இப்படின்னு யாராவது நம்மள பார்த்து சொன்னா எவ்வுளவு சந்தோஷமாயிருக்கும்.




இப்படிப்பட்ட ஆசீர்வாத வார்த்தைகளை காதுகுளிர கேட்க ஆசைப்படுகிறோம். எந்த ஊழிக்காரராவது, இப்படி நாலு நல்ல வார்த்தை எனக்கு சொல்ல மாட்டாங்களா என்று செய்திக்கு மேல் செய்திகளை கேட்கின்றோம். *வெறுமனே இப்படி வார்த்தைகளை கேட்பதினால் அந்த நேரம் உங்கள் மனம் குளிரலாம். ஆனால் அது உங்கள் வாழ்வில் நடக்கப்போவதில்லை. உண்மையாகவே நாம் நம் வாழ்வில் ஆசீர்வதிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?*




இஸ்ரவேலே, *நீ நன்றாயிருப்பதற்கும்,* உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் *நீ மிகவும் விருத்தியடைவதற்கும்,* அவைகளுக்கு *(கர்த்தருடைய வார்த்தைகளுக்கு) செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு.* (உபா. 6:3)




இஸ்ரவேலரிடம் கர்த்தர், *நீ நல்லாயிருக்கனும்னா, நான் உனக்கு போதித்த என் கட்டளைகளின் படி நடக்க கவனமாயிரு. அப்புறம் ஆசீர்வாதம் தானாக வரும் என்றார்.*




பின்வரும் வசனங்களை வேதத்தைத் திறந்து வாசித்துப் பாருங்கள். (யாத். 23:22; லேவி. 26:3-10; உபா. 4:40; உபா. 5:16; 5;29; உபா. 6:3. 18, 24; உபா. 12:28; உபா. 28:1,2; உபா. 30: 9-10; யோசு. 1:7,8; சங். 1:2,3; ஏசா. 48:18; யோவான் 15:7-10, 14; யோவான் 14:15, 23; லூக். 11:28;)




இன்னும் எத்தனையோ வசனங்கள் *கர்த்தருடைய வார்த்தையின் படி கீழ்ப்படிந்து நடப்பதால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கின்றது.* ஆசீர்வாதம் என்னும் போது, வேதம் உலக ஆசீர்வாதங்களை மட்டும் சொல்லவில்லை, அதை விட கோடி கோடி மடங்கு உயர்ந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் முக்கியப்படுத்தி பேசுகின்றது.




பிரசங்கங்களில், கர்த்தர் உன்னை உயர்த்தப் போகின்றார், நீ ஆசீர்வதிக்கப்படுவாய் என்று பிரசங்கியார் முழங்கும் போது, ஜனங்களெல்லாம் தங்களுக்கு அந்த விநாடியே அது நடந்து விட்டது போல, கைதட்டி ஆரவாரித்து மகிழுகின்றார்கள். ஆனால் *அதில் எத்தனை பேர் தேவனுடைய ஆசீர்வாதத்தை உண்மையில் அனுபவிக்கின்றார்கள்?*




*நம் மனதை குளிர வைக்கும் உற்சாக வார்த்தைகளை கேட்பதோடு நிறுத்தி விடாமல், தேவனுடைய மனதை குளிர வைக்கும் கீழ்ப்படிதலுள்ள செயல்களை நம்மில் அதிகப்படுத்துவோம்.*




கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய *வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.* அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; *அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.* (சங். 1:2-3)




*கர்த்தருடைய வார்த்தையை விரும்பி வாசிப்போம், அதன்படி செய்ய மிகவும் கவனமாயிருப்போம். பின்னர் ஆசீர்வாதங்கள் நம்மைத் தேடி வரும்.*




கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


==========
மாறாத உறவு
==========
நாம் பிறந்த நாளிலிருந்து அநேக உறவுகள் நம்முடைய வாழ்வை சுற்றிலும் வந்து செல்கின்றன. தாய் தந்தை உறவிலிருந்து, கூட பிறந்தவர்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள் என ஏராளமானோர் நம் வாழ்வில் வருகின்றனர். *நாமும் இந்த உறவுகளை அண்டியே இந்த உலகத்தில் வாழ்கின்றோம்.* ஒரு குழந்தை இந்த உலகில் பிறக்கும் போது, தன்னுடைய ஆகாரத்திலிருந்து எல்லாவற்றிற்கும் தன் தாயையே அண்டி உள்ளது. இது போல அடுத்தடுத்து வாழ்வில் ஒவ்வொரு காரியங்களுக்கும் நாம் யாரோ ஒருவரை அண்டியே வாழ்ந்து வருகின்றோம். எந்த மனிதனும் தனியே ஒன்றும் செய்துவிட முடியாது.




இப்படி அண்டி வாழ்கின்ற சூழ்நிலையில் நமக்கு வேதனையளிக்கின்ற விஷயம் என்னவென்றால், *நாம் அண்டியுள்ள எந்த உறவும் நிலையானது அல்ல. நாம் எதிர்பார்க்கின்றபடி அவைகள் எப்போதுமே நம்மோடு இருப்பதில்லை.* எல்லா உறவுகளுமே குறிப்பிட்ட காலத்திற்குத்தான் நம்மோடு இருக்கவும், நமக்கு உதவி செய்யவும், நம்மை ஆதரிக்கவும் செய்கின்றன. இது இயற்கையின் நியதி. இந்த நிலையில் ஒவ்வொரு உறவின் பிரிவிலும் நாம் சோர்ந்து போகின்றோம். மனமுடைந்து போகின்றோம்.




ஆனால் இவைகளெல்லாவற்றின் மத்தியிலும் ஒரே ஒரு மாறாத உறவு நமக்கு இருக்கின்றது. அது யாருடைய உறவு? மத். 3:17ல் வாசிக்கின்றோம், *இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையேறினவுடனே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசக் குமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.*




இதை பிதாவானவர் சொல்லும் போது, இரண்டு பேருக்கு புரியும்படியாய் சொல்கின்றார்: முதலில் அதை கேட்கின்ற உலகத்து மக்களுக்கு சொல்கின்றார், இரண்டாவது இயேசு கிறிஸ்துவுக்கு சொல்கின்றார். *உலகத்து மக்களை பார்த்து இவர் சாதாரண மனிதர் அல்ல என்னுடைய பிள்ளை என்று உரிமையோடு சாட்சி பகருகின்றார்.*

அதே நேரத்தில் *இயேசுவைப் பார்த்து நீ என்னுடைய நேசக் குமாரன். உன் மேல் நான் மிகவும் பிரியம் வைத்துள்ளேன்.* உலகத்தில் அநேக உறவுகள் உன்னை சுற்றியிருக்கலாம். ஒரு கூட்டமே உன்னை பின்பற்றலாம். உனக்காக உயிர் கொடுப்பேன் என்கின்ற பேதுருக்கள் கூட உன்னோடு இருக்கலாம். *ஆனால் எல்லோரும் உன்னை விட்டு கடந்து போகும் சூழ்நிலையும் ஒரு நாள் வரும். அந்த நேரத்தில் நீ மனதில் கொள்ள வேண்டியது மாறாத உறவு பிதாவாகிய என்னுடைய உறவு மட்டுமே. நீ என்னுடைய நேசக் குமாரன்.*




இதனை நன்கு புரிந்து கொண்ட இயேசு, பிதாவினுடைய உறவையே மிக அதிகமாய் அண்டியிருந்தார். யோவான் 6:57 "ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறது போலவும்..." யோவான் 16:28ல் நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.




இயேசுவின் வார்த்தைகளை கவனியுங்கள் *"நான் பிதாவினால் அனுப்பப்பட்டு வந்தேன், பிதாவினால் இந்த உலகத்தில் பிழைத்திருக்கின்றேன், மறுபடியும் பிதாவினிடத்திற்கே போகின்றேன்" என்கிறார். முற்றிலும் பிதாவினுடைய உறவையே அண்டி வாழ்கின்ற ஒரு வாழ்க்கை.*




இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற உங்களோடு கர்த்தர் பேசுவாராக! *நீங்கள் கர்த்தரிடமிருந்து வந்தீர்கள், கர்த்தரால் இந்த உலகத்தில் வாழ்கின்றீர்கள், மறுபடியும் என்றாவது ஒரு நாள் கர்த்தரிடமே செல்லப் போகின்றீர்கள். கர்த்தருடைய உறவு மட்டுமே நாம் பிறப்பதற்கு முன்பே தொடங்கி, நாம் மரித்தபின்னும் நம்மோடு தொடருகின்ற நிலையான மாறாத உறவு. மற்ற எல்லாம் அவ்வப்போது நம்மோடு இருக்கும்படியாய் கர்த்தர் அனுமதித்த நிலையில்லாத உறவுகள்.*




*இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையை பற்றின உங்கள் கண்ணோட்டம் மாறும். வாழும் நாளளவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து பிதாவின் உறவில் வளர்வீர்கள்.*




கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்


==========
நமக்காய் பேசும் தேவன்
============
மோசே மீதியான் தேசத்தில் நிம்மதியாய் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஆனால் இஸ்ரவேல் மக்களை கானானுக்குள் வழிநடத்துமாறு கர்த்தர் அவனை அழைத்தார். அந்நேரம் முதல் அவன் மனிதர்கள் மூலம் வரும் பிரச்சனைகளை நாள்தோறும் சந்தித்துக் கொண்டே தான் இருந்தான்.


மோசேக்கு எகிப்து தேச மன்னன் பார்வோன் ஒரு பெரிய பிரச்சனையே இல்லை. அவனை வெகு எளிதாக கையாண்டான். ஆனால் சொந்த இஸ்ரவேல் தேசத்து மக்கள்தான் அவனுக்கு தலைவலியே! நாள் தோறும் ஏதாவது கலகம் பண்ணிக் கொண்டே இருப்பார்கள். நன்றியில்லாமல் நடந்து கொள்வார்கள்.




*எண்ணாகமம் 12ம் அதிகாரத்தில் பிரச்சனை மோசேயின் வீடு வரை வந்து விட்டது.* மோசேயின் மனைவிக்கும், நாத்தனார் மிரியாமுக்கும் இடையே வந்த சண்டை, மோசேக்கு நேராய் திரும்பியது. “கர்த்தர் உன்னைக் கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்று மற்ற மக்கள் போல குடும்பத்தாரும் கலகம் பண்ணினார்கள்.




வெளி உலகம் கலகம் பண்ணினால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் சொந்த குடும்பத்தாரே விரோதமாய் எழும்பினால் மனிதன் எங்கு செல்வார்? மிக மிக வேதனையடையச் செய்யும் சூழ்நிலை.




இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையை கையாள்வது எப்படி என்று மோசேயிடம் தான் நாம் கற்க வேண்டும். *மோசே தன்னை நியாயப்படுத்தி, எந்த பதிலும் யாருக்கும் பேசினதாக வேதம் சொல்லவில்லை.* “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் *மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்”* என்றே வேதம் சொல்கின்றது.” மோசே அமைதியாயிருந்தான்.




ஏனென்றால், 2ம் வசனத்தில் *“கர்த்தர் அதைக் கேட்டார்”* என்று எழுதியிருக்கின்றது. கேட்டது மட்டுமல்ல, மோசேயின் சார்பில் நின்று அவர்களோடு வாதாடினார். மோசேயின் நியாயத்தை எடுத்துரைத்தார். மேலும் மோசேயை அவதூறாய்ப் பேசின மிரியாம் தன் தவறை உணரும்படியாக அவளை, வெண்குஷ்டத்தால் வாதித்தார்.




*உங்களைப் பற்றி மனிதர்கள் அவதூறாய் பேசும் போது, கர்த்தர் அவைகளைக் கேட்கின்றார். உங்களை படைத்த தேவன் உங்கள் நியாயத்தை நன்கு அறிவார். நான் நல்லவன்நல்லவள் என்று எத்தனை பேரிடம் சென்று உங்கள் நியாயத்தை எடுத்துரைக்கப் போகின்றீர்கள்? எவ்வளவு அழுதாலும் புலம்பினாலும் நம் நியாயத்தை கேட்க மறுக்கும் உலகமிது.*




*நீங்கள் அமைதியாயிருங்கள்! காத்திருங்கள்!! உங்களுக்காக கர்த்தர் பேசுவார்!!!*

*நீங்கள் பதில் பேசினால் அசட்டை செய்யப்படுவீர்கள். ஆனால் கர்த்தர் பேசும் போது, அது எதிரிகளுக்குப் பயங்கரமாயிருக்கும். உங்களை எதிர்க்கின்றவர்கள் பயந்து நடுங்கிப் போவார்கள். மோசேயை எதிர்த்த ஆரோன், “ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்” என்று மோசேயிடம் கெஞ்சுவதை 11ம் வசனத்தில் பார்க்கலாம்.*




*இன்று கலங்காதீர்கள். உங்கள் மன பாரத்தையெல்லாம் கர்த்தருடைய சமுகத்தில் இறக்கி வையுங்கள். கர்த்தர் உங்களுக்காக பேசுவார். அவர் நீதியுள்ள நியாயதிபதி. உங்கள் நியாயம் சீக்கிரத்தில் வெளிப்படும்.*




கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


===================
பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு
===================
யவீரு என்ற மனிதன் தன் மகன் வியாதியினால் சாகின்ற நிலைமையிலிருந்த போது, எப்படியாவது அவளை குணமாக்க வேண்டுமென்று இயேசுவை அழைக்கச் சென்றான். இயேசு வருவதற்கு தாமதமாகிக் கொண்டிருந்த வேளையில், அவன் வீட்டிலிருந்து சிலர் வந்து, உங்கள் மகள் மரித்துப் போனாள் என்றார்கள். இந்த வார்த்தையைக் கேட்டு *அவன் பதில் பேசுவதற்கு முன், இயேசு அவனைப் பார்த்து பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்றார்.* (மாற்கு 5:36)




ஒரு கெட்ட செய்தியைக் கேட்டவுடன் எந்த மனிதனும் ஐயோ என்று புலம்ப ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் இந்த யவீருவும் செய்வதற்கு தன் வாயைத் திறக்கும் முன், *இயேசு பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று, தம் வார்த்தையால் அவன் வாயை அடைத்தார்.* அதன்பின் அவன் வீட்டிற்கு சென்று அவனுடைய மகளை எழுப்பினார்.




*எந்த சூழ்நிலையிலும் நாம் விசுவாசமில்லாமல் புலம்புவதைக் கர்த்தர் விரும்பவில்லை.* கடலில் இயேசுவும் சீஷர்களும் சென்று கொண்டிருந்த போது, கடும் புயல் வந்தது. அங்கு சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், *மடிந்துபோகிறோம்* என்றார்கள். அதற்கு அவர்: *அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள்* என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று.




*நான் சாகப் போகின்றேன், நான் தோற்க போகின்றேன், என் வாழ்க்கை அவ்வளவு தான், எல்லாம் எனக்கு எதிர்மறையாகவே இருக்கின்றது, யாரும் எனக்கு ஆதரவாக இல்லை... இப்படி ஒரே புலப்பமாய் புலம்பிக்கொண்டிருக்கின்றவர்களா நீங்கள்?*




*கர்த்தர் வெறுப்பது இப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான். 30 லட்சம் இஸ்ரவேலர் வனாந்திரத்தில் அழிக்கப்பட்டதும் இதற்காகத்தான்.* எதற்கெடுத்தாலும், நாங்கள் சாகப் போகின்றோம், இதற்காகவா எங்களை வனாந்திரத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தீர்கள், எகிப்திலேயே எங்களுக்கு கல்லறை இருந்தது, இந்த மன்னாவைத்தவிர ஒன்றுமில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்று ஒரே புலம்பல்.




*இன்று எதைக் கண்டு பயந்து புலம்பிக் கொண்டிருக்கின்றீர்ளோ, அந்த காரியத்திற்காக கர்த்தர் உங்களிடத்தில் சொல்கின்றார்: பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு! பயந்து அவிசுவாசமான வார்த்தைகளை கொட்டி விடாதே! முறுமுறுத்து கர்த்தருக்கு எரிச்சலுட்டிவிடாதே!*




*கர்த்தரை நம்புங்கள். அவர் முகத்தை நோக்குங்கள். பதற்றப்படாதிருங்கள். அவசரப்பட்டு வார்த்தையை விடாதிருங்கள்.*




*கர்த்தர் உங்களை அற்புதமாய் நடத்துவார்!*

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.