Type Here to Get Search Results !

நான் ஏன் பிறந்தேன்? | புத்தியுள்ள ஆராதனை | Meaningful Worship | எது உண்மையான வீரம்? | Bible Study in Tamil | Jesus Sam

===========
நான் ஏன் பிறந்தேன்?
==========

உங்களில் எத்தனை பேருக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியும்? *நாம் எந்த நோக்கத்திற்காக இந்த உலகத்தில் பிறந்திருக்கிறோம் என்பதை நாம் அறியவில்லை என்றால் நாமும் நாய்க்குட்டியும் ஒன்றுதான்.* மிருகங்கள் அனைத்தும் தன்னுடைய உணவிற்காக உழைக்கிறது, பின்னர் உண்கிறது. அதே போல மனிதர் எல்லாரும் உழைக்கிறார்கள், உண்கிறார்கள். மிருகங்கள் கூடுகட்டி வாழ்கிறது. மனிதன் வீடுகட்டி வாழ்கிறான். மிருகங்கள் இனப்பெருக்கம் செய்து பெருகுகிறது. மனிதனும் திருமணம் செய்கிறான், பிள்ளைகளை பெறுகிறான், பெருகுகிறான்.




இதில் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? மிருகங்கள் பிறக்கிறது, வாழ்கின்றது, மடிகின்றது. *அந்த மிருகங்களுக்காக கடவுள் எந்த நோக்கமும் வைக்கவில்லை.* இந்த சிங்கத்தை கொண்டு நான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நோக்கத்தோடும் எந்த சிங்கத்தையும் கடவுள் பிறக்கச்செய்யவில்லை. ஆனால் *மனிதன் ஒவ்வொருவரையும் இந்த பூமிக்கு அனுப்பும் போது, ஒரு பெரிய நோக்கத்தோடுதான் ஆண்டவர் இந்த உலகிற்கு அனுப்புகிறார்.* நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்த உலகில் செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது.




நம்மை குறித்த தேவ நோக்கம் என்ன? *நாம் இந்த பூமியில் செய்ய வேண்டிய வேலை என்ன என்பதை அறிந்து கொள்ள நமக்கு வெளிப்பாடு அவசியம்.* அந்த பரம தரிசனம் நமக்கு வெளிப்படும் வரை நாமும் மிருகங்களும் ஒன்றுதான். நோக்கமில்லாத வாழ்க்கை வாழ்வோம். என்று உங்களுக்கு தேவ நோக்கத்தின் வெளிப்பாடு கிடைக்கின்றதோ, அன்றிலிருந்து உங்கள் சிந்தை மாறும். உங்கள் வாழ்க்கை மறுரூபமடையும்.




75 வயதில் ஆபிரகாமுக்கு கர்த்தர் தரிசனமாகி நான் உன்னை ஆசீர்வதிப்பேன், நீ ஆசீர்வாதமாயிருப்பாய் என்று ஒரு பெரிய இரட்சண்ய திட்டத்தின் துவக்கத்தை வெளிப்படுத்தி அழைத்தார். *அது வரை சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருந்த அவன் வித்தியாசமான வாழ்க்கை வாழ ஆரம்பித்தான்.* தன்மேல் தேவன் வைத்திருக்கிற உன்னத நோக்கத்தையும் திட்டத்தையும் அறிந்த அவன் தன் இன ஜன பந்துக்களை எல்லாம் விட்டு விட்டு அறியாத தேசத்திற்கு பிரயாணம் பண்ண ஆரம்பித்தான். அவனிடத்தில் துவங்கின இரட்சிப்பின் திட்டம், இயேசு மூலமாய் இந்த உலகத்தில் நிறைவேறினது.




*நீங்கள் இந்த உலகத்தில் ஏன் பிறந்திருக்கிறீர்கள்? உங்களை குறித்த தேவ நோக்கம் என்ன?*




*இதை நீங்கள் அறியாத வரை நிச்சயமற்று அலைகிறவர்களாயிருப்பீர்கள்.* 10ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனிடத்தில் படித்து என்ன செய்ய போகிறாய் என்று கேட்டேன். 10 ம் வகுப்பு தேர்வில் நல்ல மார்க் வந்துச்சுனா சயின்ஸ் குரூப் எடுத்து டாக்டராகவோ, அல்லது இன்ஞ்னியராகவோ ஆவேன். நல்ல மார்க் கிடைக்கலேனா, ஆர்ட்ஸ் குரூப் எடுத்து, பின் பி.ஏ, பி.காம், படித்து பின் எங்காவது வேலைக்கு செல்ல வேண்டியது தான் என்றான். இன்று இது போலத்தான் அநேக தேவ பிள்ளைகளின் நிலையும் இருக்கிறது.




*எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்று தெரியாமல் பஸ் ஸ்டான்டில் நிற்கிறவர்கள் போல இருக்கிறோம்.* மதுரை பஸ்ல சீட் கிடைச்சா மதுரைக்கு போவோம், திருநெல்வேலி பஸ்ல சீட் கிடைச்சா திருநெல்வேலிக்கு போவோம், எதிலையும் சீட் கிடைக்கலேனா சும்மா உட்கார்ந்திருப்போம் என்று நோக்கமில்லாமல் வாழ்கிறோம்.




*நோக்கமில்லாமல் கர்த்தர் உங்களை இந்த உலகில் பிறக்கச் செய்யவில்லை. பெரிய தேவ திட்டமில்லாமல் உங்களை இரட்சிக்கவும் இல்லை.* உங்களை குறித்த பரம தரிசன வெளிப்பாட்டை பெற்றுக் கொள்ள வாஞ்சியுங்கள், ஜெபியுங்கள். அன்றிலிருந்து உங்கள் வாழ்க்கை தலைகீழாய் மாறும். வாழ்க்கையின் அர்த்தம் உங்களுக்கு புரியும். ஒரு பிடிப்போடு வாழ ஆரம்பிப்பீர்கள். மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்.




*கர்த்தர் தாமே உங்களுக்கு தமது நோக்கத்தை வெளிப்படுத்துவாராக!*

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


============
என் பகைஞனே, என்னை கண்டுபிடித்தாயா?
===========
இன்று உலகம் முழுவதும் ஜனங்கள் விரும்புகிற ஒரு காரியம், *தனியுரிமை (Privacy).* வசதியுள்ள வீடுகளில் சிறு பிள்ளைகள் கூட அவர்கள் அறையில் சென்று பூட்டிக் கொள்கின்றார்கள். அவர்கள் என்ன செய்தாலும் யாருக்கும் தெரியாது. பெற்றோர்கள் வந்தால் கூட கதவைத் தட்டி நிற்க வேண்டும். தாங்கள் செய்யும் அனைத்தும் மறைவிடத்தில் செய்யப்பட வேண்டும். யாருக்கும் அதை அறியும் உரிமை இல்லை என்பது அவர்கள் கருத்து.




தனியுரிமை (Privacy) நல்லதா கெட்டதா என்பதை பற்றி இங்கு விவாதிக்க விரும்பவில்லை. காரணம் அது ஒரு மிகப்பெரிய விவாதம். ஆனால் *மிதமிஞ்சிய தனியுரிமை (Privacy) ஆபத்தானது* என்பதை வேதத்திலிருந்து சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.




1 இராஜாக்கள் 21ம் அதிகாரத்தில் ஆகாப் என்ற இஸ்ரவேலின் ராஜா, நாபோத் என்ற மனிதனின் திராட்சைத் தோட்டத்தின் மீது ஆசைப்பட்டான். ஆனால் நாபோத் அதை விற்க விரும்ப வில்லை. எனவே ஆகாப் தன் மனைவி யேசபேலோடு சேர்ந்து, நாபோத்தை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, அந்த திராட்சை தோட்டத்தை அபகரிக்கச் சென்றான். யாருக்கும் தெரியாமல், இந்த காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டோம் என்று அவன் நினைத்தான்.




ஆனால் அவன் அந்த தோட்டத்திற்குள் நுழையும் முன், கர்த்தருடைய ஊழியக்காரன் எலியா அவனை சந்திக்க அங்கு வந்துவிட்டான். ஊழியக்காரனை சந்தித்ததும், ஆகாப் ராஜாவுக்கு ஒரே ஷாக்! யாருக்கும் தெரியாமல் நாபோத்தை கொலை செய்து, அவன் தோட்டத்தை அபகரித்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் *இந்த ஊழியக்காரன் நம்மை கண்டுபிடித்துவிட்டானே, என்று நினைத்து எரிச்சலடைந்தவனாய், "என் பகைஞனே, என்னை கண்டுபிடித்தாயா?" என்றான்* (1 இராஜ 21:20).




*நாம் மறைந்திருந்து தவறுசெய்யும் போது, அதை கண்டுபிடிப்பவர்களை நாமும் பகைஞர்களாகத்தானே எண்ணுகின்றோம்!* நமக்கு அவர்கள் மேல் எரிச்சல் வருகின்றது. அவர்களை வெறுக்கின்றோம். இன்னும் பணம் பலம், அரசியல் பலம் படைத்தவர்களென்றால், அவர்கள் தவறுகளை கண்டுபிடிக்கின்றவர்களை கொன்றே போடுவார்கள்.




*ஆனால் உண்மையில் நம் தவறுகளை கண்டுபிடிக்கிறவர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் நாம் மேலும் தவறு செய்யாதபடிக்கு நம்மை தடுக்கின்றார்கள். பெரிய ஆபத்துகளிலிருந்து நம்மை பாதுகாக்கின்றார்கள்.*




ஒரு மிகப்பெரிய ஊழியக்காரர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு வேதனையடைந்தேன். அவர் நீண்ட காலமாய் சில பாவங்களில் இருந்ததாக சொல்லப்படுகின்றது. அவர் அந்த பாவத்தில் ஈடுபட்ட ஆரம்பத்திலேயே, அவரை யாராவது கையும் களவுமாக பிடித்திருந்தால், அன்றோடு அவர் அதை நிறுத்தியிருப்பார். அன்று வீட்டிலே அவர் அவமானப்பட்டதோடு அந்த கதை முடிந்து போயிருக்கும். ஆனால் இன்று உலகம் முழுவதும் அவமானமாகிப் போய்விட்டது.




*தவறாத மனிதனில்லை! ஆனால் அந்த தவறிலிருந்து எழும்பாதவன் தேவ மனிதனில்லை.*




*நம் தவறுகளை நாம் ஒரு முறை வெற்றிகரமாய் மறைத்துவிட்டால், அந்த தவறுகளுக்கு அதிகாரப்பூர்வ அடிமையாகிப் போகின்றோம். தொடர்ந்து மறைக்க மறைக்க, பாவம் நம் பழக்கமாய் மாறிப் போகின்றது. பாவ பழக்கம் நம்மை நம்மை அவமானத்திற்குள்ளாகவும், இறுதியில் மரணத்திற்குள்ளாகவும் எடுத்துச் செல்கின்றது. எனவே உங்கள் தனியுரிமையை (Privacy) தவறுகளை மறைப்பதற்காக பயன்படுத்தாதிருங்கள்.*




*உங்களை கேள்வி கேட்பவர்களை பகைஞர்களாக அல்ல, நண்பர்களாக எண்ணுங்கள். உங்கள் தவறுகளை கண்டுபிடித்து, சுட்டிக்காட்டுபவர்களுக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். அவர்கள் உங்களை அழிவிலிருந்து தப்புவிக்கின்றார்கள்.*




கர்த்தர் உங்களை உணர்த்துவாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


==========
புத்தியுள்ள ஆராதனை
==========
பல ஆராதனைகள் ஆங்காங்கே நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். எழுப்புதல் ஆராதனை, அபிஷேக ஆராதனை, அக்கினி ஆராதனை, தீர்க்கதரிசன ஆராதனை என்ற பெயர்களில் பல கூட்டங்கள் சபைகளில் நடைபெறுகின்றது. ஆனால் *வேதத்தில் கர்த்தர் ஒரு ஆராதனையை நாம் செய்யும் படியாய் நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். அதுவே புத்தியுள்ள ஆராதனை!*




அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் *தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று,* தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; *இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.* (ரோமர் 12:1)




நாம் செய்யவேண்டிய புத்தியுள்ள ஆராதனை எது? நம்மையே தேவனுக்கு உயிருள்ள பலியாக ஒப்புக் கொடுப்பதே புத்தியுள்ள ஆராதனை. *அப்போ, நம்மை தேவனுக்கு ஒப்புக் கொடுக்காமல் நாம் வெறும் பாடல்களை மட்டும் உணர்ச்சிவசப்பட்டு பாடிக்கொண்டிருந்தால் அது புத்தியில்லாத ஆராதனை தானே?* தன்னை ஜீவ பலியாக அர்ப்பணிக்காத எந்த மனிதன் செய்யும் ஆராதனையும் வீணாகவே கருதப்படும்.




ஒரு ஆட்டை எப்படி கட்டி பலிபீடத்தில் பலி செலுத்தும்படியாக வைக்கின்றார்களோ, அது போல நம்மையும் தேவனுக்கு முன்பாக பூரணமாய் ஒப்புக் கொடுப்பதே ஜீவ பலியாக அர்ப்பணிப்பதாகும். நாம் அர்ப்பணிக்கின்றேன், அர்ப்பணிக்கின்றேன் என்று பாடல் பாடுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. நம்முடைய வாழ்வில் வாழ்ந்து காட்டுவதாலேயே நாம் ஜீவ பலியாக அர்ப்பணிக்க முடியும்.




ஆபிரகாமுக்கு 100 வயதில் ஒரு மகனை கர்த்தர் கொடுத்தார். ஆபிரகாமுக்கு தன் மகன், ஈசாக்கு என்றால் உயிர், உலகம் எல்லாமே! ஆனால் அந்த மகன் சுமார் 8 வயதாயிருக்கும் போது, கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி "உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு" என்றார். (ஆதி 22:2)




எப்படிங்க முடியும்? ஆபிரகாமுக்கு தன் குடும்பம், சந்தோஷம், எதிர்காலம் எல்லாமே ஈசாக்கு தானே! அவன் மேல எப்படி பாசத்தை கொட்டி வளர்த்துக் கொண்டிருப்பான். கர்த்தர் அவனைப் போய் பலியிடச்சொல்கின்றாரே? ஆயிரம் ஆடுகளை பலியிடச்சொன்னால், ஆபிரகாமால் எளிதாக செய்ய முடியும். ஆனால் தன்னுடைய பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய ஒரே மகனை பலியிடச்சொன்னால் எப்படி முடியும்?




ஆனால் இங்குதான் ஜீவ பலியாக அர்ப்பணிப்பதென்றால் என்ன என்று ஆபிரகாம் நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். *நமக்கு பிரியமானவைகளையும், நம்முடைய சுய சித்தத்தையும் தேவனுக்கு முன்பாக ஒப்புக் கொடுப்பதே ஜீவ பலியாக அர்ப்பணிப்பதாகும்.* ஆபிரகாம் தேவன் சொன்னபடியே, தன் குமாரன் ஈசாக்கை பலிசெலுத்தும்படியாக "தேவன் தனக்கு குறித்த இடத்திற்கு புறப்பட்டுப் போனான்" என்று அடுத்த வசனத்திலேயே பார்க்கிறோம் (ஆதி. 22:3). ஆனாலும் கர்த்தர் ஈசாக்கை கொல்லும்படி விடவில்லை.




கர்த்தர் ஆபிரகாமை சோதிக்கும்படி இப்படி சொன்னார். உண்மையில் கர்த்தர் மனித உயிர்களை பலி கேட்கும் தெய்வமல்ல. அது கர்த்தருக்கு அருவருப்பானது. (உபா. 12:31)




*இன்று நம்முடைய அர்ப்பணிப்புகள் பாடல்களோடு நின்றுவிடுகின்றது. பாடல்கள் நல்லது தான். நம்மை உணர்த்துகின்றது. ஆனால் வெறுமனே பாடல்களை பாடுவதால் மட்டுமே நாம் நம்மை ஜீவ பலி அர்ப்பணித்துவிட முடியாது. நடைமுறையில் நாம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.*




👉🏼 உங்களால் அதிகாலை தூக்கத்தை தியாகம் செய்து ஜெபிக்க முடிகின்றதா?




👉🏼 உங்களால் ஒரு நேர உணவை தியாகம் செய்து உபவாசத்தோடு ஜெபிக்க முடிகின்றதா?




👉🏼 உங்களை தேவனை விட்டு பிரிக்கின்ற பாவ காரியத்தினின்று பிரிந்து வர உங்களால் முடியுமா?




👉🏼 உங்களை தவறான பாதையில் நடத்துகின்ற அந்த நட்பிலிருந்து பிரிய முடியுமா?




👉🏼 கர்த்தருக்கு ஊழியம் செய்ய உங்கள் நேரம், பணம், திறமைகளை கொடுக்க மனம் வருகின்றதா?




*இப்படி அனுதின வாழ்வில் நாம் கர்த்தருக்காய் செய்யும் அத்தனை கிரியைகளும்தான் நாம் தேவனுக்கு செலுத்தும் ஜீவ பலி. அதுவே தேவனுக்கு முன்பாக புத்தியுள்ள ஆராதனை! அதைத்தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.*




*இன்றே செய்யுங்கள் புத்தியுள்ள ஆராதனையை!*




*கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக!*

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


===========
கன்பார்ம் டிக்கெட் இருக்கா?
============
நான் என் குடும்பத்தாருடன் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தோம். எங்களுடைய அனைத்து லக்கேஜ்களையும் எடுத்துக் கொண்டு ரயிலில் ஏறி எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த சீட்டிற்கு சென்றோம். ஆனால் அந்த சீட்களில் மற்ற அநேகர் அமர்ந்திருந்தனர்.




அவர்களுக்கு (வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட் கன்பார்ம் ஆகாததினால், ஏதாவது சீட் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தனர். நாங்கள் சென்று எங்கள் டிக்கட்டை காட்டியதும், அவர்கள் எழுந்து சென்று விட்டனர். நாங்கள் மிக உரிமையோடு எங்களது சீட்களை ஆக்கிரமித்தோம்.




ஆனால் ஒருவர் மாத்திரம், “எனக்கு சீட் கிடைக்கும் வரை கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்துகொள்கிறேன்” என்று கெஞ்சும் தொனியில் கேட்டார். சரியென்று அவரை சற்று நேரம் உட்கார அனுமதித்தோம். அந்த நேரத்தில் அந்த நபரின் செயல்பாடுகளை நான் கவனிக்க ஆரம்பித்தேன். நல்ல வசதியான மனிதர் தான். அவசரமாக டிரெயினில் பயணம் செய்ய நேர்ந்ததால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்தான் கிடைத்திருக்கின்றது. எனவே உட்கார அல்லது படுக்க சீட் இல்லை.




நான் எப்பொழுது எழும்ப சொன்னாலும் எழும்பி போய்தான் ஆக வேண்டும். பொதுவான பெட்டிகளிலும் பயங்கர கூட்டம். *எனவே ஒரு பரபரப்பு, நிச்சயமற்ற தன்மை அவர் முகத்தில் காணப்பட்டது. மிகவும் களைப்பாய் உள்ளார். ஆனால் அவரால் படுத்து தூங்க முடியவில்லை.* மணி இரவு 11 ஆகிவிட்டது. அவருக்காக நானும் தூங்காமல் அமர்ந்திருந்தேன். பின் வந்த டிக்கெட் பரிசோதகரும் எந்த சீட்டும் இல்லை என அவரிடம் கைவிரித்துவிட்டார். அவர் முகம் கருத்துவிட்டது.




நன்றாக படித்தவர் போலுள்ளது. பார்க்க நல்ல வசதியானவராவும் தெரிகின்றது. சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்லும் டிக்கெட்டும் வைத்துள்ளார். ஆனால் *பல ஏழைகள், படிக்காதவர்களெல்லாம் நிம்மதியாக தூங்கிக்கொண்டு வரும் அந்த ரயிலில் பயணம் செய்ய அவருக்கு ஒரு கன்பார்ம் டிக்கெட் இல்லாததினால் பரிதாபமான சூழ்நிலையில் உட்கார்ந்து முழித்துக்கொண்டுள்ளார்.*




அவரது பரிதாப நிலையைப் பார்த்து நாங்கள் என் இளைய மகளின் சீட்டை அவருக்கு கொடுத்துவிட்டு, நாங்கள் எங்கள் சீட்டில் அட்ஜஸ்ட் செய்து படுத்துக் கொண்டோம்.




*இன்று பலர் தங்கள் வாழ்க்கையையே கன்பார்ம் டிக்கெட் இல்லாத அந்த நபரைப் போல பரபரப்புடனும், நிச்சயமற்ற தன்மையுடனும்தான் வாழ்கின்றனர். பணம் உள்ளது, படிப்பு உள்ளது, அந்தஸ்து உள்ளது. ஆனால் நிம்மதியும் சமாதானமும் இல்லாமல், எதிர்கால வாழ்க்கையைக் குறித்த எந்த நம்பிக்கையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். படுத்தாலும் நிம்மதியான உறக்கம் இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு நரகமாய் இருக்கின்றது.*

வேதத்தில் சங்கீதக்காரன் இவ்விதமாய் சொல்கின்றார், *“சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே நீர் ஒருவரே என்னை சுகமாய் தங்கப்பண்ணுகிறீர்.”* (சங். 4:8)




*கர்த்தர் நமக்கு வாழ்க்கைக்கான கன்பார்ம் டிக்கெட் கொடுத்துள்ளார். நாம் ஒரு நாளும் வாழ்க்கையாகிய ரயிலில் இருந்து இறக்கிவிடப்படுவது இல்லை. நம்முடைய தற்கால மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்து காரியங்களையும் அவர் நமக்கு கொடுப்பதற்கு ஏற்கனவே ஆயத்தம் செய்து வைத்துள்ளார். நாம் உரிமையோடு அவைகளைப் பெற்றுக் கொண்டு, நிம்மதியாய் வாழவே நம்மை கர்த்தர் அழைத்திருக்கின்றார்.*




எத்தனை செய்திகள் கேட்டாலும், வேதத்திலிருந்து கர்த்தர் பேசினாலும், கவலைப்படுவதை அநேகர் நிறுத்துவதே இல்லை. பரபரப்புடனும், பதட்டத்துடனுமே தங்கள் வாழ்க்கையை வாழுகின்றார்கள். வாழ்வைக் குறித்த நிச்சமற்றதன்மை அவர்களை ஒவ்வொரு நிமிடமும் கொல்லுகின்றது.




*கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் என்று தாவீது திடநம்பிக்கையோடு சொல்வதை கவனியுங்கள். “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்... இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.”* (மத். 6:31,32)




*தைரியமாய் வாழுங்கள்! நிம்மதியாய் உறங்குங்கள்! கர்த்தர் உங்களோடிருக்கின்றார்.*




கர்த்தர் உங்களை தைரியப்படுத்துவாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


==============
எது உண்மையான வீரம்?
===============
ஒரு தொழிற்சாலையில் அநேகர் பணி செய்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அந்த இரண்டு பேரும் நேருக்கு மாறான சுவாபம் உள்ளவர்கள். *ஒருவன் எதற்கெடுத்தாலும் அதிகமாய் கோபப்பட்டு கத்தும் சுவாபம் உள்ளவர். மற்றொருவன் எந்த சூழ்நிலையிலும் பொறுமையாய் சாந்தமாய் இருப்பவர்.*




*கோபப்பட்டு கத்துபவரைப் பார்த்து பணியாளர்கள் பயப்படுவதால், அவரிடம் உண்மையை சொல்ல அஞ்சுவார்கள்.* அவருக்கு பயந்து அவரை போலியாய் முகஸ்துதி செய்வார்கள். இதனால் அவன் தொழிற்சாலை உற்பத்தியில் காணப்படும் குறைகளை அறியாமல் இருந்து வந்தான். ஒரு நாள் அவனுடைய மேற்பார்வையில் நடைபெற்ற உற்பத்தி பொருட்கள் அனைத்தும் சேதமாகி, அந்த தொழிற்சாலைக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் வேலையை விட்டு தூக்கப்பட்டார்.




*ஆனால் சாந்தமாய் எதையும் அணுகும் சுவாபம் உடைய அதிகாரி எல்லோரையும் நேசிப்பவர்.> அவரிடடம், பணியாளர்கள் நெருங்கி பழகுவார்கள். அவர் யார்மேலும் எரிச்சல் அடைவதில்லை. அதனால் ஏதாகிலும் தவறுகள் நடந்திருந்தாலும், பணியாட்கள் பயப்படாமல் அவரிடம் உண்மையை ஒத்துக் கொள்வார்கள். இதனால் தவறுகளை உடனுக்குடன் சரி செய்து, தரமான பொருட்களை உற்பத்தி செய்தார்கள். *இதனால் அவர் அந்த தொழிற்சாலைக்கு மேலதிகாரியாக பணி உயர்வு பெற்று ஆசீர்வதிக்கப்பட்டார்.*




*இந்த இரண்டில் நீங்கள் எந்த ரகம்?*




இயேசு சொல்கின்றார்: *“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்;* என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத். 11:29)




*உலகம் பயமுறுத்துவதையும், கோபப்படுவதையும் வீரமாக கருதுகின்றது.* அப்படிப்பட்டவர்களை மேன்மையாக பேசுகின்றது. சாந்த குணம் உள்ளவர்களையோ அப்பாவி என்றும், கோழை என்றும், ஏமாளி என்றும் கருதுகின்றது. *ஆனால் கிறிஸ்து கற்றுக் கொடுத்த சிலுவையின் உபதேசம், சாந்த குணத்தையே மிகச்சிறந்த வீரமாக போதிக்கின்றது.* கிறிஸ்து சாந்த குணமுள்ளவராய் இவ்வுலகத்தை மேற்கொண்டதே அதற்கு காரணம்.




சர்வ வல்லமையுள்ள கடவுளே மனித அவதாரம் எடுத்து வந்த போது, அவர் சர்வாதிகாரியாய் அனைவரிடமும் கடூரமாய் நடந்து கொள்ளவில்லை. *சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருந்தார்* என்றுதான் நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். அவரிடமிருந்து நாமும் அதே சாந்த குணத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.




*சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். (மத். 5:5) சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். (சங். 37:11)*




சாந்தகுணத்திற்கான ஆசீர்வாதம் என்னவென்று பாருங்கள். *இந்த பூமியையே சுதந்தரிக்கும் வ்ல்லமை சாந்த குணத்தில் உள்ளது. பூமியை போர்க்குணத்தினால் சுதந்தரிப்பதைக் குறித்து கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். ஆனால் சாந்த குணத்தினால் சுதந்தரிப்பதுதான் சிலுவையின் வழி.* நம் இந்திய தேசத்து தந்தை என்று அழைக்கப்படும் காந்தியடிகள், இந்த வசனத்திலிருந்து தான் தன்னுடைய அகிம்சை வழி போராட்டத்தை கண்டுபிடித்து, பின்னர் அதன் மூலம் இந்திய தேசத்தையே அந்நியருடைய ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்தார்கள்.




*நீங்கள் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்க உங்களை அர்ப்பணியுங்கள். அந்த சுவாபத்திற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய வல்லமையுண்டு.*




*எந்த சூழ்நிலைக்கும் உடனே ரியாக்ட் செய்து கத்துவது வீரமாகாது. எந்த சூழ்நிலையிலும் அமைதியாய் சாந்தமாய் இருப்பதே உண்மையான வீரம். அந்த வீரம் பெரிய காரியங்களை சாதிக்க உங்களுக்கு உதவி செய்யும்.*




கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.