Type Here to Get Search Results !

புத்திசாலி ராணுவவீரர் | இதயத்தை சுட்டது | இட்லியைத் துரத்திய பாட்டி | கிறிஸ்தவ குட்டிக் கதைகள் | christian short stories tamil | jesus sam

=============
புத்திசாலி ராணுவவீரர்
=============

    அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுõற்றாண்டு.அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர்.      


    அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார். “இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா…? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?” என்றார். 


    இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார்.      


    “அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?” என்று சீண்டினார். “நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும்.      


    “ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!”      


    “ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,” என்று குமுறினார் ஆங்கில அதிகாரி. “சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.    


    “இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன். இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு. “இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?’ என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம். 


    “சரி’ என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி. பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட “ப்யூஸ்’ வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார். நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார். “இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!’ என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. “இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.’ 


    இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது. இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்…? நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது. அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.


    பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை. ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். “கோழை யார் என்பது புரிந்ததா?’ என்று சப்தமாகக் கேட்டார். அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது. பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம்.

   

    “இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!’ என்று அமைதியாகக் கூறினார். ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார். 


என் அன்பு வாசகர்களே,

    புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதே இக்கதையின் கருத்து. புத்தி மாத்திரமல்ல நம்பிக்கை, தைரியம் ஆகிய இவையும் இருந்தால் எதையும் சுலபமாய் வெல்லலாம்.


    இக்கதையில் அமெரிக்க ராணுவ வீரர் தான் இருக்கிற பீப்பாய் தன்னை சிதறடிக்காது என்ற நம்பிக்கையில் தான் தைரியமாக இருந்தார் ஆனால் ஆங்கிலேய அதிகாரியோ நம்பிக்கையற்றவராய் காணப்பட்டதால் அந்த போட்டியில் தோல்வியை தழுவுகிறார்.


    அதுபோலவே நாமும் நிற்கின்ற இடம் எப்படிப்பட்டது என்பதை அறிந்தால் தான் நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியும். நாம் கற்பாறையில் நிற்கின்றோமா?? அல்லது மண்ணில் நிற்கின்றோமா?? என்பதை நாம் தான் நிதானித்து அறிய வேண்டும். இதை பிரதிபலிக்கும் ஒரு காரியத்தை இயேசுவும் கூறுகிறார் இவ்விதமாக


லூக்கா 6: 47

    என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குச் காண்பிப்பேன்.


To get daily story contact +917904957814



லூக்கா 6: 48

    48. ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான், பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று, ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

    49. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான், நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.


    ஆம் அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தையை அநேக விதமாய் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் ஆனால் அவைகளின்படி செய்ய வேண்டும் என்றால் தான் கடினமாக தோன்றுகிறது. தேவனுடைய வார்த்தையின்படி செய்யும் போது எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலை வந்தாலும் அந்த அமெரிக்க வீரனைப்போல இருந்த இடத்தில் இருந்தே சமாளிக்கும் திறனை தேவன் தருவார்.


    மழை, புயல், பூகம்பம் என எப்பேற்பட்ட சூழ்நிலை வந்தாலும் கற்பாறை அசையாமல் இருப்பது போல நாமும் நம் வாழ்க்கையில் தேவ வார்த்தையை கைக்கொண்டு நம் அஸ்திவாரத்தை கற்பாறையாகிய இயேசுவின் மேல் போடுவோம் அசையாமல் என்றும் நிலைத்திருப்போம்.


நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!



ஓர் குட்டிக் கதை 
===========
இதயத்தை சுட்டது
================

    அதிகாலை ஐந்து மணியிருக்கும். இராமாயி தன்னோட புருஷன் வேலனைத்தட்டி எழுப்பினாள். " ஏய்... ஏய்... எந்திரியா... இன்னும் தூங்கிட்டிருக்கிற. சட்டுபுட்டுன்னு எந்திரிச்சோம், காலவாசப் பக்கம் போயி, மண்ண கொலச்சுப் போட்டோமுன்னு இல்லாம... எந்திரியா" வேலன் முந்திய நாள் செஞ்ச வேலையினால உடம்பு கலச்சுப் போயிருந்தான். அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவன், இராமாயி போட்ட சத்தத்துல உடலை முறுக்கிக்கொண்டே மெதுவாக எழுந்தான். பக்கத்துல உள்ள கொடத்துல தண்ணிய அள்ளி மூஞ்சியக் கழுவிக்கொண்டான். மண்வெட்டியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு காலவாசலுக்குப் புறப்பட்டான்.


    வேலன் மாங்கு மாங்குனு மண்ணை வெட்டி போட்டான். காலையில லேசாக குளிர் இருந்தாலும், அவனோட உடல் பூராவும் வியர்த்திருந்தது. அன்றைக்கு எவ்வளவு செங்கல் அறுக்க முடியுமோ அந்த அளவுக்கு மண்ணை வெட்டி, தண்ணி ஊற்றி கொலச்சுப் போட்டான். கிழக்கே சூரியன் உதித்துக் கொண்டிருந்தான். ஆனால் வேலவனுடைய வாழ்வில் புதிய உதயமே இல்லாததால், தினந்தோறும் உதிக்கும் சூரியன் அவனுக்கு எந்த அர்த்தத்தையும் தரவில்லை.


    இராமாயி வேகவேகமாய் சமயல் வேலையை முடித்துக்கொண்டிருந்தாள். அம்மியில் தொட்டுக் கொள்வதற்கு தொவயல் அரைத்துக் கொண்டே "டேய்... டேய்... முத்து சீக்கிரம் கிளம்பு. பள்ளிக்கூடம் போக நேரமாச்சுள்ள" அக்கறையோடு தன்னுடைய ஒரே மகனைக் கூப்பிட்டாள். முத்துவுக்கு படிப்பில் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. இந்த வருடம் ஏழாம் வகுப்பு முடித்து எட்டாவதுக்குச் செல்கிறான். "அம்மா ஸ்கூல் தொடங்கி இரண்டு வாரம் ஆவுது. இன்னும் யூனிபார்ம், புஸ்தகமெல்லாம் வாங்கல... அப்பாக்கிட்ட சொல்லுமா" முத்து நச்சரித்தான். " சரி... சரி... இப்போ நீ பள்ளிக்கூடத்துக்கு போ, நான் கொப்பன்கிட்ட சொல்லி வழக்கம்போல் காலவாசல் முதலாளி கிட்ட கொஞ்சம் கடன் கேட்கச் சொல்றேன்" இராமாயி அவனை அனுப்பிவிட்டு, புருசனுக்கு கஞ்சி எடுத்துகிட்டு காலவாசலுக்கு புறப்பட்டாள்.


    மண்ணை கொலச்சுப் போட்டவுடன், வேலன் செங்கல் அறுக்க வேண்டிய இடத்தை சுத்தம் செய்தான். ஓர் இடத்துல கொலச்சுப் போட்டுக்கிடக்கிற மண்ணை, செங்கல் அறுக்கத் தோதுவா பக்கத்துல அள்ளிப்போட்டான். கட்டையை எடுத்து இரண்டு செங்கலா, வரிசையா அறுக்க ஆரம்பித்தான். ஒரு நாளைக்கு ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு செங்கல்தான் இரண்டு பேரும் சேர்ந்து அறுக்க முடியும். ஆயிரம் செங்கலுக்கு நூறு ரூபா கூலி.


    இராமாயி கஞ்சியைக் கொண்டுவந்து இறக்கி வைத்தாள். சூரியன் உஷ்ணத்தைக் கக்கிக் கொண்டிருந்தான். " இந்தாய்யா... வந்து கஞ்சியக் குடிச்சிட்டுப் போயி வேலையைச் செய் " அவள் அக்கறையோடு புருசனைக் கூப்பிட்டாள். " கொஞ்சம் பொறுடி இன்னும் இரண்டு வரிசைக்கல் அறுத்துட்டு கஞ்சிக் குடிக்கிறேன் ", குனிந்துகொண்டே பேசினான்.


    இராமாயி, உடனே கஞ்சியை காக்கா வந்து கொத்தாம நல்லா மூடிவச்சுட்டு புருசனுக்கு இணையா அவளும் மண்ணை அள்ளி செங்கல் அறுக்க ஆரம்பித்தாள். இரண்டு வரிசை வேகவேகமாக கல்லு அறுத்த பிறகு". சரி வாடி, கஞ்சியக் குடிச்சிட்டு வரலாம்." வேலன் கூப்பிட்டான். கையை நல்லா கழுவிட்டு இரண்டுபேரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.


    "வெயிலு ஏறிக்கிட்டிருக்கு வா... வா... கல்ல அறுத்துப் போட்டுட்டு அப்புறம் சாவகாசமா உட்காரலாம்" என்றவாறே வேகமாகச் சாப்பிட்டு வேலன் கையைக் கழுவினான். மீண்டும் இருவரும் வேலை செய்ய ஆரம்பித்தனர். கடும் வெயில் அவர்களை வாட்டியது. வேலனின் உடம்பை வியர்வைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.


    "ஏய்யா", "நம்ம முத்து புதுசா எட்டாவதுக்குப் போயி இரண்டு வாரம் ஆவுது. ஒரு புதுச்சட்டை வாங்கல... புஸ்தகம் வாங்கல...". புலம்பினாள். இராமாயி "ம்... புரியுது... புரியுது, இன்னைக்கு சாயந்தரம் முதலாளியப் பார்த்து ஐநூறு ரூபாய் கடன் கேட்கிறேன்" என்றான் வேலன். கொலச்சிப் போட்ட மண்ணையெல்லாம் செங்கல்லா அறுத்துப்போட மணி ஒன்னாகிவிட்டது, சரியா ஆயிரத்து ஐநூறு கல்லு அறுத்து முடித்தனர். கைகால் முகம் கழுவிக்கொண்டு புளியமரத்தடிக்கு வந்தனர். " பசிக்குதடி... சீக்கிரம் கஞ்சியிருந்தா ஊத்து " வேலன் பசியோடு பேசினான். இருவரும் அமர்ந்து கஞ்சி குடித்தார்கள்.


    புளியமரத்தடி நிழல் ரொம்ப அருமையாக இருந்தது. வேலை செய்து களைப்பில், அங்கேயே அசந்து தூங்கினர். வெயில் மூஞ்சியில் அடித்தவுடன் கண்விழித்துக் கொண்ட இராமாயி, "இந்தாய்யா பொழுது சாயப்போவுது எந்திரிய்யா... வேலனைத் தட்டி எழுப்பினாள்.


    அவசராமாக எழுந்து கண்ணைத் துடைத்தான். "சரி நான் முதலாளிகிட்ட போயி கடன் கேட்டுட்டு வாறேன், நீ போயி குடிசையில கஞ்சியக் காச்சு" சொல்லிக் கொண்டே அவன் நடக்க ஆரம்பித்தான்.


    "வாடா... வேலா என்னா விசயம்? இன்னைக்கு கல்லு அறுத்தாச்சா"? முதலாளி வேலனை விசாரித்தார். முதலாளியைப் பார்த்தவுடன் துண்டை எடுத்து கையில் போட்ட வேலன், "ஆமாயா காலவாசலேர்ந்துதான் வர்றேன்", பணிவுடன் பேசினான்.


    "ஐயா என்னுடைய பையனுக்கு புஸ்தகம், சட்டை துணிமணியெல்லாம் வாங்குறதுக்கு ஐநூறு ரூபா பணம் வேணும். "... வேலன் தயவுடன் கேட்டான். பணம் என்றவுடன் தன்னுடைய தொனியை மாற்றிக் கொண்ட முதலாளி, " இந்தா பாரு ஏற்கனவே நீ கட்ட வேண்டிய நாலாயிரத்துக்கு வட்டி ஏறிக்கிட்டே போவுது. அதவேற கட்டி முடிக்கல. அதுக்கு முன்னால இன்னும் கடனா கேக்குற, போயிட்டு நாளைக்கு வா பேசிக்கலாம்" என்று எரிச்சலுடன் பேசினார். மனதில் கோபத்துடனும் தன் வாடிய முகத்தோடும் வேலன் குடிசைக்குத் திரும்பி வந்தான்.


    சாயந்திரநேரம். வெளியே லேசாக இருட்டி இருந்தது. பிள்ளைகள் குடிசை ஓரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வேலன் மெதுவாகக் குனிந்து குடிசையில் நுழைந்தான். இராமாயி சமயல் வேலையை முடித்து விட்டு சாப்பிட தயாராய் இருந்தாள். அப்பா வந்ததைப் பார்த்து முத்து ஓடிவந்தான். கைகால் முகம் கழுவிக் கொண்டு அவனும் சாப்பிடத் தயாரானான். மூவரும் சாப்பிடும்போது, "நாளைக்கு புஸ்தகமெல்லாம் வாங்கித் தருவீங்களா"? முத்து ஏக்கத்தோடு கேட்டான். "டேய், முதல்ல சாப்பிட்டுப் போயி படு. எல்லாம் பிறகு பாத்துக்கலாம், " வேலன் அதட்டினான்.


    சாப்பிட்டு முடித்தவுடன் மூவரும் பாயை விரித்துப் படுத்தனர். வழக்கத்துக்கு மாறாக, வேலன் ஒன்றும் பேசாதிருந்தான். முதலாளி சொன்ன பதில் அவனை அமைதியாக்கிவிட்டது. இராமாயி வேலனுடைய முகத்தைப் பார்த்து பணம் கிடைக்கவில்லையென்று தெரிந்துகொண்டாள். 'அப்பா, நாம வருசம், முழுவதும் செங்கல் அறுக்கிறோம். எத்தனையோ பேரு செங்கல் வாங்கிட்டுப்போயி வீடு கட்றாங்க. நம்ம வீடு மட்டும் ஏம்ப்பா வெறும் மண் குடிசையா நிக்குது?"


    பதில் சொல்லத் தெரியாத வேலன், "டேய் பேசாமப் படுத்துத் தூங்குடா, பெரிய மனுசன் மாதிரி பேசுற" முத்துவை அதட்டினான். கொஞ்ச நேரம் கழித்து முத்துவும் இராமாயியும் தூங்கி விட்டனர். வேலனால், தூங்க முடியவில்லை. முத்து கேட்ட கேள்வி அவனுடைய இதயத்தைக் குத்திக் கொண்டிருந்தது.


    வேலனுக்கு அடுத்த நாள் வழக்கமான செங்கல் அறுக்கும் வேலை கிடையாது. அறுத்த செங்கலை சூளையில் வைத்து தீப்போடுகிற வேலை. செங்கலுக்கு இடையே கட்டைகளை அடுக்கி விட்டு, தீப்போட ஆரம்பித்தான். அங்கே எரிந்த நெருப்பு செங்கலை மட்டுமல்ல, வேலனுடைய இதயத்தையும் சுட்டது.


என் அன்பு வாசகர்களே,

    ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் காரியத்தை பிரதிபலிக்கும் கதை இது. அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்தலைவனும், குடும்பத்தலைவியும் எதிர்க்கொள்ளும் மிகக் கடினமான சூழ்நிலை. தன் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை தேவையான நேரத்தில் வாங்கி கொடுக்க முடியவில்லையே என ஏங்கி ஏங்கி தன் மனதிற்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருக்கின்ற நேரம்.


    பள்ளிக்கூடம் திறக்கும் நேரத்தில் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை அவர்கள் கேட்பதற்கு முன்பே வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற தீராத ஆசையில் கடினமாக உழைத்து அலுத்து, தற்போதைய கொள்ளை நோயினால் சேமித்த பணமெல்லாம் கரைந்து போய் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்று கலங்குகிறீர்களா???.


    நாம் ஆராதிக்கிற தேவன் யேகோவாயீரே என்ற நாமத்தில் நம்மோடு இருந்து நம் தேவைகள் யாவற்றையும் சந்திப்பார். வேதாகமத்தில் தன் சொந்த குமாரனும், தன் வயோதிப காலத்தில் தேவனால் அருளப்பட்ட ஈவாகிய ஈசாக்கை பலியிட சொன்னபோது ஆபிரகாம் எதைக்குறித்தும் கவலைக்கொள்ளாமல் தன் தேவனை மட்டும் நம்பி அந்த காரியத்தை உண்மையாய் செய்தான்.


    அவனுக்கு தேவையான ஆட்டை தேவன் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் தேவன் சொன்னதை செய்ய முற்பட்டான். என்ன நடக்க போகிறது?? என்ன செய்ய போகிறோம்??? என்று ஒன்றும் அறியாமல் விழிபிதுங்கி நின்ற நேரத்தில் தேவன் அவனுக்கு ஒரு ஆட்டை நியமித்திருந்தது போல இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் எப்படி?? என்ன செய்ய போகிறோம்?? என்று கலங்கி நிற்கிற உங்களுக்கும் தேவன் ஏற்கனவே ஒரு வழியை ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறார். 


To get daily story and prayer requests contact +918148663456



    நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் சொன்னது போல


ஆதியாகமம் 22:14

    ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. 


    என் தேவைகள் எல்லாம் கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளபடும் என்ற விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும் நிச்சயம் எப்பேர்ப்பட்ட சுழ்நிலையையும் எதிர்க்கொள்ளும் தைரியம் வரும் மாத்திரமல்ல நம் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படும். தேவ பிள்ளைகளாகிய நாம் அனைவரும் எதைக் குறித்தும் கவலை இல்லாமல் சுகமாய் வாழ்வோம்.


நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!



ஓர் குட்டிக் கதை 
==============
இட்லியைத் துரத்திய பாட்டி
==============

    ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு பாட்டி.  அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால் ரொம்பப் பிடிக்கும்.  இட்லி சாப்பிடுவதுமட்டுமல்ல, இட்லி சமைப்பதும் அவளுக்குப் பிடிக்கும், அதை மற்றவர்களுக்குத் தருவது இன்னும் பிடிக்கும்.  பாட்டி தினமும் மாவை அரைத்துச் சுடச்சுட இட்லி செய்து எல்லாருக்கும் தருவார். அவர்கள் ருசித்துச் சாப்பிட்டுப் பாராட்டுவார்கள், ‘உன்னைமாதிரி இட்லி செய்ய இன்னொருத்தர் பொறந்துதான் வரணும்!’


    அந்தப் பாராட்டுகளைக் கேட்டுப் பாட்டி மனம் திறந்து சிரிப்பார். அவர்கள் தருகிற காசுகூட ரெண்டாம்பட்சம்தான்.  ஒருநாள், பாட்டி இட்லிகளைத் தட்டில் போட்டபோது, ஒரே ஒரு இட்லிமட்டும் கீழே விழுந்துவிட்டது. மறுகணம், அங்கிருந்து அது உருண்டு ஓடத் தொடங்கியது.


    ‘ஏய், நில்லு, நில்லு’ என்று கத்தியபடி அந்த இட்லியைத் துரத்தினார் பாட்டி.  அப்போது, திடீரென பூமி பிளந்தது, இட்லியோடு பாட்டியும் அதற்குள் விழுந்துவிட்டார்.  பூமிக்குக் கீழே, இட்லி தொடர்ந்து ஓடியது, பாட்டியும் துரத்தினார்.  சற்றுத் தொலைவில், சில சாமி சிலைகள் நின்றிருந்தன. பாட்டி முதல் சிலையிடம் கேட்டார், ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’


    ‘ஆமா, பார்த்தேன்’ என்றார் முதல் கடவுள், ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’  ‘ஏன்?’  ‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’ என்றது. ‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.  சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’


    ‘ஆமா, பார்த்தேன்’ என்றார் இரண்டாவது கடவுள். ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’  ‘ஏன்?’  ‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’ என்றது. ‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.  சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’


    ‘ஆமா, பார்த்தேன்’ என்றார் மூன்றாவது கடவுள். ‘நீ சட்டுன்னு எனக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கோ.’  ‘ஏன்?’ ‘இதோ, அரக்கி வர்றா.’ என்றது.  இதைக் கேட்ட பாட்டி அந்தச் சாமிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்.  சில நிமிடங்களில், அந்த அரக்கி வந்தாள். அவள் பெரிய, பயமுறுத்தும் உருவத்தில் இருந்தாள். சாமி முன் வந்து கும்பிட்டாள். பிறகு, மூக்கை உறிஞ்சி, ‘மனுஷ வாசனை அடிக்குதே’ என்றாள்.


    ‘அதெல்லாம் இல்லை’ என்றார் கடவுள். ‘நீ கிளம்பு!’  ‘கண்டிப்பா மனுஷ வாசனை அடிக்குது’ என்ற அரக்கி, பாட்டியைப் பார்த்துவிட்டாள், ‘அட, நீயா?’ என்றாள்.  ‘என்னை உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டாள் பாட்டி  ‘உன் இட்லியைப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்’ என்றாள் அரக்கி. ‘என்னோட வா!’ கடவுள் கேட்டார், ‘நீ அவளைத் தின்னப்போறியா?’


    ‘ம்ஹூம், என்னோட சமையல்காரியா வெச்சுக்கப்போறேன்’ என்ற அரக்கி பாட்டியை ஒரு படகில் ஏற்றினாள். ஆற்றில் படகு சென்றது.  ‘இந்தச் சின்ன ஆத்தைக் கடக்கறதுக்குப் படகு எதுக்கு?’ என்று கேட்டார் பாட்டி. ‘நீதான் அரக்கியாச்சே, என்னைத் தூக்கிட்டுத் தண்ணியில நடக்கமாட்டியா?’  ‘அச்சச்சோ, எனக்குத் தண்ணின்னா பயம், நீச்சலடிக்கவும் தெரியாது’ என்றாள் அரக்கி.  சிறிது நேரத்தில் அவர்கள் அரக்கி மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கே இவளைப்போலவே இன்னும் பல அரக்கிகள் இருந்தார்கள்.


    ‘இனிமே எங்களுக்கு நீதான் தினமும் சமைக்கணும்’ என்றாள் அரக்கி.  ‘சமைக்கறேன், ஆனா இவ்ளோ பேருக்குச் சமைக்க அரிசிக்கு எங்கே போறது?’  ‘இதோ’ என்று ஒரே ஒரு அரிசியை எடுத்துக் கொடுத்தாள் அரக்கி.  ‘இந்த ஒரு அரிசி எப்படிப் போதும்?’  ‘இதைப் பாத்திரத்துல போட்டு இந்த மந்திரக் கரண்டியால ஒருமுறை கலக்கினாப் போதும், அது பாத்திரம்முழுக்க நிறைஞ்சுடும்’ என்றாள் அரக்கி.


    பாட்டி ஆச்சர்யத்துடன் சமையலறை சென்று ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டுக் கலக்கினார். மறுகணம் அந்தப் பாத்திரம்முழுக்க அரிசி நிறைந்திருந்தது. அதை வைத்து ருசியாகச் சமைத்தார். அதை அரக்கிகள் தின்று தீர்த்தார்கள்.  சிலநாள் கழித்து, பாட்டிக்கு வீடு திரும்பும் ஆசை வந்தது. ஆனால் அரக்கியை மீறி எப்படிச் செல்வது என்று தெரியவில்லை.


    மறுநாள், அரக்கி இல்லாத நேரத்தில் படகில் ஏறிப் புறப்பட்டார் பாட்டி. ஞாபகமாக அந்த மந்திரக் கரண்டியைத் தன் மடியில் செருகிக்கொண்டார்.  சிறிது நேரத்தில் அவர் நதியைக் கிட்டத்தட்ட கடந்துவிட்டார். அப்போது, அரக்கி வந்துவிட்டாள். பாட்டி திகைத்தார். அரக்கி சத்தம் போட்டு எல்லாரையும் அழைத்தாள்.  இப்போது ஆற்றின் இருபுறமும் அரக்கிகள். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாது. அவர்களால் பாட்டியை நெருங்க இயலாது. பாட்டியாலும் கரையேற இயலாது.


    அரக்கிகள் சட்டென்று குனிந்து ஆற்று நீரைக் குடிக்க ஆரம்பித்தார்கள்.  சில நிமிடங்களில் ஆற்று நீரை அவர்கள் முழுக்கக் குடித்துவிட்டார்கள். பாட்டியின் படகு சேற்றில் சிக்கிக்கொண்டது. அரக்கிகள் கோபத்தோடு பாட்டியை நெருங்கினார்கள். பாட்டி இறங்கி ஓடத் தொடங்கினார்.  சேற்றில் பாட்டியின் கால் சிக்கிக்கொண்டது, தடுமாறி விழுந்தார்.


    இதைப் பார்த்த அரக்கிகளுக்குச் சிரிப்பு தாங்கவில்லை. ‘ஹாஹாஹா’ என்று அவர்கள் வாய்விட்டுச் சிரிக்க, அவர்கள் குடித்த தண்ணீரெல்லாம் வெளியே வந்துவிட்டது. ஆறு மறுபடி ஓடத் தொடங்கியது.  சட்டென்று படகில் ஏறிக்கொண்டார் பாட்டி, அரக்கிகள் நீரில் சிக்கித் தவிக்க, அவர்களுக்கு நடுவே படகைச் செலுத்தி மறுகரைக்கு வந்துவிட்டார். மளமளவென்று ஓடித் தன் வீட்டுக்குள் நுழைந்தார். அதே கணம், அந்தப் பள்ளமும் மூடிக்கொண்டது.


    பாட்டியைப் பார்த்தவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ‘இவ்ளோ நாளா எங்கே போனீங்க பாட்டி? உங்க இட்லி சாப்பிடாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்’ என்றார்கள். ‘இதோ, வந்துட்டேன்’ என்றார் பாட்டி. ‘இனிமே உங்களுக்குமட்டுமில்லை, இந்த ஊருக்கே நான் இட்லி செஞ்சு போடுவேன்’ என்றார் தன் இடுப்பிலிருந்த மந்திரக் கரண்டியைத் தொட்டுக்கொண்டு.


    அன்றுமுதல், பாட்டியின் வீட்டில் அரிசியும் மற்ற பொருள்களும் நிறைந்து வழிந்தன. தினமும் ஆயிரக்கணக்கானோர் அவர் தந்த இட்லியைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்!

என் அன்பு வாசகர்களே,

    இக்கதையில் அந்த பாட்டியை போலத்தான் நம் மனம்போன போக்கில் வாழ்கின்றோம். எத்தனையோ முறை தேவன் நம்மை எச்சரித்தும் அவர் வார்த்தைக்கு செவி கொடுக்காமல் சொந்த இஷ்டப்படி வாழ தேவையில்லாதை பின்தொடர்ந்து செல்கின்றோம்.


To get daily message and pray for u contact +917904957814



    இதற்கு சிறந்த உதாரணமாக அநேகர் இந்நாளில் பயன்படுத்தும் Google Maps ஐ சொல்லலாம். நாம் இதுவரை சென்றிராத இடத்திற்கு முதன்முறையாக செல்லும் போது அதற்கான வழியை காட்டும் நாமும் அதை தொடர்ந்து செல்வோம். சில நேரங்களில் செல்கின்ற பாதை தவறாக இருக்கும் பட்சத்தில் அங்குள்ள மனிதர்களிடம் விசாரித்து சரியான பாதையில் செல்வர். ஆனால் பலரோ தன்மான பிரச்சினை காரணமாக எவ்வளவு எச்சரித்தும் தவறான வழியிலேயே செல்கின்றனர் முடிவோ இந்த பாட்டியை போல எங்காவது மாட்டிக் கொள்கிறார்கள்.


    தேவன் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு வழியை ஏற்படுத்தி அதில் நடக்க நம்மை போதிக்கிறார் ஆனால் நாமோ வழி தவறிப்போன ஆட்டைப்போல நம் தேவனுடைய வார்த்தைக்கு செவிசாய்க்காமல் மனம்போன போக்கில் வாழ்கின்றோம். வேதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறுகிறார்,


ரோமர் 1: 21

    அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.


    ஆம் அன்பானவர்களே, தங்கள் சிந்தனையால் உயர்ந்தவர்கள் சிலர் இருந்தாலும், வீணரானவர்கள் அநேகன். இன்றைய கதையிலும் கூட பாட்டி அந்த கடவுள்கள் சொன்ன வார்த்தையை உணராமல் தன் சிந்தனையினால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று எண்ணி தானாக வலிய சென்று அங்கு சிக்கிக் கொள்கிறார்.


    எனவே நமது வாழ்க்கை இருளடைந்து எங்காவது சிக்கிக்கொள்ளாதபடிக்கு நம் இருதயம் தேவனை குறித்து உணர்வடைந்து, சிந்தனைகளை நேராக்கி ஒளியாகிய இயேசுவை ஏற்றுக்கொள்வோம் அநேகரை ஒளியினிடத்திற்கு வரவழைப்போம்.


நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.