ஓர் குட்டிக் கதை
குரங்கு வளர்த்த மரம்!!
=================
கோபம் என்பது மிகப்பெரிய வியாதி. எந்தெந்த காரியத்தை கோபத்தோடு செய்கிறோமோ அந்த காரியம் ஒருபோதும் நன்றாய் முடியாது.அதுமட்டுமல்லாது கோபத்தோடு பேசிய வார்த்தைகள் மற்றவர் மனதை அதிக காயப்படுத்தும்.
ஒரு மனிதனுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு காரணம் அவனுக்கு அந்த காரியத்தில் மனநிறைவு கிடைக்கவில்லை என்பதால் மட்டுமே. அப்படியென்றால் ஒரு காரியத்தில் மனநிறைவு எப்படி பெறுவது??. உண்மையோடும், உற்சாகத்தோடும், முழுமனதோடும் செய்யும் போது மனநிறைவு கிடைக்கும்.
மேலும் சந்தோஷமாக எதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என வைத்துக்கொள்வோம் அங்கே இந்த கோபம் தலையெடுக்குமானால் அந்த நிகழ்ச்சி யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் அல்லவா??.
எனவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தவில்லை என்றால் நமக்கும் பிறருக்கும் என்ன நடக்கும் என்பதை இக்கதை மூலம் காண்போம்.
குரங்கு ஒன்று காட்டிலிருந்த மாமரம் ஒன்றின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் தாவித் தாவி தனது குரங்குச் சேட்டைகளை ஒன்றுவிடாமல் செய்து கொண்டிருந்தது.
வெகுநேரம் விளையாடியதில் அதற்குக் களைப்பு ஏற்பட்டது. பசியும் எடுத்தது. அப்போது தற்செயலாகத் தானிருந்த மாமரத்தைக் கவனித்த குரங்கு அதில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் பழங்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டது. ஒரு பழத்தைப் பறித்துச் சுவைத்துப் பார்த்தது. மிகவும் இனிப்பாக இருந்தது. இன்னொன்றைச் சுவைத்தது. அது அதற்குமேல் இனிப்பாக இருந்தது.
இப்படியே ஒவ்வொன்றாகப் பல பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தது. இப்படியே சாப்பிட்டுக் கொண்டே போனதில் மரத்திலிருந்த பழங்கள் எல்லாம் காலியாகிப் போயின. குரங்குக்கு அந்தப் பழங்களின் சுவை நாக்கை விட்டு அகலவில்லை. அதற்கு ஆசை அடங்கவில்லை. மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. பச்சை நிறத்தில் காய்கள் மட்டுமே இருந்தன. பழங்களே இல்லை!
மாங்கனியின் ருசி பற்றியே நினைத்துக் கொண்டிருந்த குரங்குக்கு ஒரு யோசனை வந்தது. அது நல்ல யோசனைதான். தான் சாப்பிட்டுப் போட்ட பழங்களின் கொட்டைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு போய் தனது இருப்பிடத்துக்கு அருகிலே புதைத்து வைத்தால் என்ன? மரம் வளர்ந்து நிறையக் கனிகளைத் தருமே? தான் மட்டும் அக் கனிகளை உண்டு மகிழுவது மட்டுமல்லாமல் தனது கூட்டத்தாருக்கும் கொடுத்து மகிழலாமே. மாம்பழத்துக்காக இவ்வளவு தூரம் வரவேண்டிய தேவையும் நமக்கு இருக்காது.. இப்படியே அந்தக் குரங்கின் சிந்தனை நீண்டு கொண்டே போனது.
ஒரு கட்டத்தில் தனது நீண்ட யோசனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, உடனே செயலில் இறங்க வேண்டும் என்று தீர்மானித்தது. விழுந்ததிலேயே நல்லதாக ஒரு மாங்கொட்டையைத் தேர்வு செய்து எடுத்துக் கொண்டு தனது இருப்பிடத்தை நோக்கிக் கிளம்பியது குரங்கு. நீண்டதூரம் தாவித் தாவி வந்து இறுதியில் தனது இருப்பிடத்தை அடைந்தது. அந்தக் குரங்கும் அதன் கூட்டத்தாரும் வசித்த இடம் ஓர் அருவிக் கரை. அங்கு நிறைய மரங்கள் இருந்தாலும் மாமரங்கள் இல்லை.
இருப்பிடம் திரும்பிய குரங்கு, அங்கே ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்தது. ஒரு தேர்ந்த விவசாயியைப் போல, அழகாக ஒரு குழிதோண்டி அதில் அந்த மாங்கொட்டையைப் புதைத்தது. பின்னர் அந்த இடத்தில் அடையாளம் வைத்துவிட்டு தனது இருப்பிடத்துக்குச் சென்று நன்றாக உறங்கியது.
மறுநாள் காலையில் எழுந்தவுடன், மாங்கொட்டையைப் புதைத்த இடத்துக்கு வேக வேகமாக வந்தது. அங்கே மரம் ஒன்றும் வளராததைக் கண்டு மனம் பதைத்தது. உடனே புதைத்த இடத்தைத் தோண்டிப் பார்த்தது. அந்த மாங்கொட்டை அப்படியே இருந்தது. மாங்கொட்டையில் துளிர்கூட விடவில்லை. குரங்கு ஏமாற்றத்துடன், மீண்டும் அதே இடத்திலேயே அந்தக் கொட்டையைப் புதைத்து வைத்தது. பிறகு தனது இருப்பிடம் திரும்பியது.
மறுநாளும் விடிந்தும் விடியாமலும் இருக்கும்போதே அந்த இடத்துக்கு ஓடோடி வந்தது. மண்ணிலிருந்து மாங்கொட்டையை எடுத்துப் பார்த்தது. செடி முளைக்காததைக் கண்டு வருத்தத்துடன் மீண்டும் புதைத்து வைத்துவிட்டுச் சென்றது.
இப்படியே பல நாட்கள் சென்றன. அந்த மாங்கொட்டைக்கு முளைப்பதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் தினமும் தோண்டியெடுத்து மீண்டும் புதைத்து வைத்ததில் அந்தக் கொட்டை அழுகிப் போய் மக்கத் தொடங்கியது. சிலநாட்கள் இப்படியே சென்றன. கடைசியாக ஒருநாள் மனம் வெறுத்துப் போய் குரங்கு அந்த மாங்கொட்டையை மண்ணிலிருந்து பிடுங்கியெடுத்துத் தூர வீசியெறிந்தது. மண்ணில் புதைந்து இயல்பான வளர்ச்சியைப் பெற்று பெரிய மரமாகிக் கனி தரவேண்டிய அந்த மாங்கொட்டை, பொறுமையும் தெளிவான அறிவுமில்லாத குரங்குப் புத்தியால், வீணாக வாடி வதங்கிப் போனது!
To get daily story and prayer partners and to joint in daily Bible quiz contact +917904957814
என் அன்பு வாசகர்களே
நமது கோபம் மற்றவர்களுக்கு மிகவும் கசப்பான அனுபவங்கள் தான் தரும் என்பதே இக்கதையின் கருத்து.
வேதத்தில் இயேசு கிறிஸ்து காட்டி கொடுக்கப்பட்ட நேரத்தில் அவர் கோபப்பட்டிருந்தால் இவ்வளவு மகத்தான இரட்சிப்பு நமக்கு கிடைத்திருக்குமா??.
நாம் கோபப்படுவதால் தேவனுக்கு மகிமை கிடைக்குமெனில் கோபப்படலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நமது கோபத்தை மனிதன் அல்ல தேவன் அடக்குவார் என்று வேதம் சொல்கிறது
சங்கீதம் 76:10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும், மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
சாலெமோன் ஞானி இவ்வாறு கூறுகிறார்
நீதிமொழிகள் 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்: அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
எனவே தேவனுடைய கோபத்திற்கு ஆளாகாமல் அவருடைய தயையை பற்றி கொண்டு வாழ்வோம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!
ஓர் குட்டிக் கதை
=================
நீர்யானை வரைந்த ஓவியம்
=================
நாம் இந்த பூமியில் வாழ்கிற வாழ்க்கை மற்றவர்களுக்காக அல்ல நமக்காகத்தான் என்பதை அநேகர் புரிந்துகொள்கிறதில்லை. ஆகவேதான் யாராவது ஏதாவது கூறினால் அதை மெய்யென்று நம்பி தங்களை தாங்களே மட்டுப்படுத்தி கொள்கின்றனர்.
இந்த உலகம் நாம் நல்ல நிலையில் எட்டும் வரை மட்டுப்படுத்த தான் செய்யும் ஆனால் நாம் நல்ல நிலையில் உயர்ந்த பிறகோ நம்மை தலை மீது வைத்து கொண்டாடும். அப்படி உயர்ந்த அநேகரை நாம் நன்கு அறிவோம். ஆகவே, நாம் அன்றாடம் செய்கிற காரியங்களை முழுமையாக செய்தால் அதன் மூலம் உயரிய பதவிகளை அடையலாம்.
ஏதாவது ஒரு காரியத்தை தொடங்கி அதை இடையில் நிறுத்தாமல் செய்ய வேண்டும் எவரேனும் ஒருவர் நம்மை மட்டுப்படுத்த அவர்களின் வேலையை விட்டு நம்மை கண்காணித்து கொண்டிருப்பர். அவர்களை செட்டை செய்தால் என்ன நடக்கும் என்பதை இக்கதையின் மூலம் காண்போம்.
அன்று காலைப் பொழுது இனிமையாக மலர்ந்தது!
அப்போது ஆற்றில் ஒரு நீர்யானை நின்று கொண்டிருந்தது. ஆகாயம் வெளிர் நீல நிறத்தில் குளிர்ச்சியாக இருந்தது. சூரியன் தகதகவென்று வெளிர் மஞ்சள் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது!
அந்த நேரத்தில் திடீரென்று நீர்யானைக்கு ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே ஆற்றிலிருந்து வெளியேறி பக்கத்திலுள்ள ஊருக்குள் சென்றது. அங்கே ஒரு கடைக்குச் சென்று, ஓவியம் வரைவதற்காக தூரிகை ஒன்றும், பலகை, வெள்ளைத் தாள் மற்றும் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை என்று விதவிதமான வண்ணங்களையும் வாங்கிக் கொண்டது.
ஒரு தேர்ந்த ஓவியனைப் போல காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலைக்கு ஒரு தொப்பியையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியது. தனது வீட்டுக்கு வந்ததும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டது. பிறகு தனது தொப்பியை அணிந்து கொண்டு வீட்டுக்கு வெளியே உள்ள புல்தரைக்கு தனது உபகரணங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓவியம் வரையக் கிளம்பியது.
காலையிலிருந்தே ஓவியம் வரைய ஆரம்பித்தது. பகல் பொழுது முடிவதற்குள் புல்தரை, மரம், குன்று, வானம் மற்றும் சூரியன் என்று தனக்குத் தோன்றியவற்றையெல்லாம் வரைந்தது. மதிய உணவுக்குப் பிறகு, பூக்களை வரைவேன், அத்துடன் எனது ஓவியம் முற்றுப் பெறும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டு வீடு திரும்பியது.
அவசர அவசரமாக மதிய உணவை உண்டு முடித்தது. வேகமாகத் திரும்பவும் ஓவியப் பலகை இருந்த இடத்துக்கு வந்தது. பூக்களை வரைய ஆரம்பித்தது! பூக்களை வரைந்து முடித்தவுடன் தனது ஓவியத்தை தானே ரசித்துப் பார்த்து சிரித்து மகிழ்ந்தது. “எல்லாம் சிறப்பாக முடித்துவிட்டேன்’ என்று கூறிக் கொண்டது.
அப்போது அந்தப் பக்கமாக ஒரு பாம்பு வந்தது. அது சற்றே நின்று, நீர்யானை வரைந்த ஓவியத்தை உற்றுக் கவனித்தது. பிறகு நீர்யானையைப் பார்த்து, “இந்த ஓவியம் முழுமையாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.. ஏனெனில் இதில் மேகத்தைக் காணவில்லை’ என்று குறை கூறியது. “நான் ஓவியம் வரைய ஆரம்பிக்கும்போது வானில் மேகங்கள் எதுவும் இல்லையே!’ எனறது நீர்யானை.
“இப்போது இருக்கிறதே!’ என்றது பாம்பு. “அப்படியா, சரி மேகத்தை வரைந்து விடுகிறேன்…’ என்றபடியே, வெள்ளை நிறத்தைக் கொண்டு ஓவியத்தில் மேகத்தை வரைந்தது. “இப்போது ஓவியம் நிறைவு பெற்றுவிட்டதல்லவா?’ என்று பாம்பைப் பார்த்துக் கேட்டது நீர்யானை.
“ம்ஹூம்… இன்னும் முழுமை பெறவில்லை! அந்த மரத்தில் ஒரு அழகிய குருவி இருக்கிறதே, அதை உனது ஓவியத்தில் காணவில்லையே’ என்றது பாம்பு. “சரி… சரி… அதையும் வரைந்து விடுகிறேன்..’ என்று சொல்லிக் கொண்டே தனது ஓவியத்திலிருந்த மரத்தில் குருவி ஒன்று அமர்ந்திருப்பது போல வரைந்து முடித்தது.
“இப்போது எனது ஓவியம் நிறைவு பெற்றுவிட்டது அல்லவா?’ என்று பாம்பிடம் கேட்டது நீர்யானை. உடனே பாம்பு நீர்யானையிடம், “அது எப்படி நிறைவு பெறும். அந்த மரத்தில்தானே நானும் இருக்கிறேன். என்னை நீ வரையவே இல்லையே!’ என்று பாம்பு இப்போதும் குறை கூறியது.
நீர்யானைக்குக் கோபமாக வந்தது! “இங்கே வா..’ என்றது. பாம்பு கீழே இறங்கி வர மறுத்துவிட்டது. நீர்யானை எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பாம்பு மரத்தைவிட்டுக் கீழே இறங்க மறுத்துவிட்டது. அப்போது அந்தப் பக்கமாக ஒரு சிங்கம் வந்தது. சிங்கம் வந்த பிறகு இன்னும் நிறைய விலங்குகள் அங்கே வந்தன. எல்லாம் அந்த மரத்தினருகே கூடி நின்றன. “ஏதாவது உதவி வேண்டுமா?’ என்று நீர்யானையிடம் அந்த விலங்குகள் கேட்டன.
நீர்யானை எல்லா விலங்குகளையும் ஒருமுறை கவலையுடன் பார்த்தது. பிறகு தனது ஓவியத்தைப் பார்த்தது. இந்த விலங்குகளும் ஏதாவது குறை கண்டுபிடிக்க ஆரம்பித்துவிடப் போகின்றன என்ற எண்ணத்தில், “நான் ஓவியம் வரைவதை விட்டுவிடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டே தனது தூரிகையை வீசிவிட்டு, அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றது.
“நீர்யானை ஏன் ஓவியத்தைத் தொடராமல் விட்டுவிட்டுச் சென்றது?’ என்று சிங்கம் கேட்டது. அதற்கு அந்தப் பாம்பு,”அவனுக்கு ஓவியம் வரைந்ததில் திருப்தி இல்லை போலிருக்கிறது.. மேலும் அதிக நேரம் எடுத்துக் கொண்டான் அல்லவா, அதனால்தான் விட்டுவிட்டுப் போய்விட்டான்’ என்றது.
விலங்குள் கூட்டத்திலிருந்த யானை, “இந்த ஓவியத்தை நாம் பார்ப்போமே!’ என்றது. எல்லா விலங்குகளும் ஓவியத்தின் அருகில் சென்று அதை உற்றுப் பார்த்தன. ஓவியத்தில் இருந்த புல்வெளியையும் பூக்களையும் குன்றையும் ஆகாயத்தையும் மரத்தையும் பறவையையும் உற்று உற்றுப் பார்த்து ரசித்தன.
Daily story unga whats app venum vendral contact +917904957814
“நீர்யானை ஏன் இங்கிருந்து போய்விட்டது என்று எனக்குப் புரியவில்லை. ஓவியம் வரைவது அவ்வளவு எளிதான வேலையில்லையே!’ என்று ஆச்சரியப்பட்டது யானை. “இந்த ஓவியம் மிக அற்புதமாக இருக்கிறது. எல்லாம் மிகச் சரியாக வரையப்பட்டிருக்கிறது..’ என்று எல்லா விலங்குகளும் கூறின.
“இந்த ஓவியம் வரைந்ததில் நீர்யானைக்கு நிறைவு ஏற்பட்டிருக்கலாம்… ஆனால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில்தான் இதற்கு மேலும் வரையாமல் போய்விட்டது போலும். ஆனாலும் இந்த ஓவியம் என் பார்வையில் மிக அழகாக இருக்கின்றது. நீர்யானை மிகச் சிறந்த ஓவியன்தான்!’ என்று கூறியது சிங்கம்.
என் அன்பு வாசகர்களே,
என் வாழ்க்கை என் கையில் என்ற கருத்தை முன் வைத்து வாழ்ந்தால் மட்டுமே நம்மால் இந்த உலகத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது தேவனும் நீங்களும் மட்டுமே தானே தவிர வேறு மனிதர்கள் அல்ல.
இன்றைய நவீன உலகில் வாழ்கின்ற நாம் நமது வீடு செல்வம் எல்லாவற்றையும் வேறொரு மனிதனை நம்பி விட்டு செல்கின்றனர். ஏன் சிலர் தங்கள் பிள்ளைகளையும் விட்டு செல்கின்றனர். எதை விட்டு சென்றாலும் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்தால் அல்லது அவர்கள் ஆலோசனையை ஏற்றால் உங்கள் வாழ்க்கை வேறு விதமாய் மாறிவிடும்.
வேதத்தில் இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் அநேகம் சொல்லப்பட்டிருக்கிறது அதற்கு அடிஸ்தானம் அவர்கள் தேவனிடம் தங்கள் வாழ்க்கையை ஒப்புவித்ததே. அதில் ஒரு குருடன் உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று கூறினான். இதன் மூலம் தன்னை முழுவதுமாய் தேவனிடத்தில் ஒப்புவித்தான் எனவே தேவன் அவன் வாழ்க்கையை மாற்றியமைத்தார்.
அதுபோலவே நாமும் தேவனுடைய வார்த்தைக்கு மட்டும் செவி சாய்ப்போம் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.
நீதிமொழிகள் 8: 32
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்: என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
லூக்கா 9: 35
அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
ஓர் குட்டிக் கதை
===============
சோம்பன் விளைவு
===============
முன்னொரு காலத்தில் உபீர் என்ற பெயர் கொண்ட மனிதன் ஓர் ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் சோம்பேறி. சோம்பலுக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்றால் அவனைக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு சோம்பேறி. ஒரு கல்லைக்கூட தனது கையால் நகர்த்தி வைக்க மாட்டான்.
அவனுக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். அவனுடைய சோம்பேறித்தனத்தால் அவர்கள் வறுமையில் வாடினார்கள். பசிக் கொடுமை வேறு!
குழந்தைகள் பட்டினி கிடப்பதைத் தாள முடியாத அவனது மனைவி, அவனை வேலைக்குப் போய் சம்பாதித்து வரும்படி கெஞ்சிக் கொண்டே இருந்தாள். ஆனால், அவனோ நான் இப்படித்தான் இருப்பேன். நல்லது தானாக நடக்கும் என்று கூறிவிட்டு சும்மா இருப்பான்.
தனது விரலைக் கூட அசைக்காதவன், திடீர் பணக்காரன் ஆகிவிடுவோம் என்ற நினைப்பில் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான். இப்படியே பல நாட்கள், மாதங்கள் சென்றன. ஆனால் அவன் நினைத்தபடி பணக்காரனாக முடியவேயில்லை.
அதனால் ஒருநாள் அவன் ஒரு முடிவெடுத்தான். யாராவது ஒரு மகானைச் சந்தித்து, எப்படிப் பணக்காரனாவது என்று யோசனை கேட்கலாம் என்ற நினைப்பில் வீட்டை விட்டுக் கிளம்பினான்.
மூன்று நாட்கள் நடந்தான். வெகுதூரம் வந்துவிட்டான். அப்போது வழியில் ஓர் ஓநாயைச் சந்தித்தான். அதுவும் பசியால் வாடியதால் மிகவும் மெலிந்து காணப்பட்டது. அந்த ஓநாய் உபீரைப் பார்த்து, “”தம்பி, நீ எங்கே செல்கிறாய்?” என்று கேட்டது. அதற்கு உபீர், “”ஒரு மகானைச் சந்தித்து யோசனை கேட்கப் போகிறேன்…” என்று பதில் கூறினான்.
உடனே, “”அப்படியானால் எனக்கு ஓர் உதவி செய். நான் மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். இதற்கு என்ன நிவாரணம் என்று அந்த மகானிடம் எனக்காகக் கேட்டு வா…” என்று அந்த ஓநாய் அவனை மன்றாடிக் கேட்டுக் கொண்டது.
உபீரும், சரியென்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். இன்னும் சில நாட்கள் நடையிலேயே கழிந்தது. அப்போது ஓர் ஆப்பிள் மரத்தைச் சந்தித்தான். அவனைப் பார்த்ததும் அந்த மரம் பேசத் தொடங்கியது-
“”தம்பீ, நீ எங்கே போகிறாய்?” உபீர், தான் மகானைச் சந்திக்கப் போகும் விஷயத்தைக் கூறினான். உடனே ஆப்பிள் மரம், “”அப்படியானால் எனக்கு ஓர் உதவி செய். வசந்தம் பிறந்ததும் நான் மொட்டுக்கள் விடுகிறேன். ஆனால் மொட்டுக்கள் கருகி விடுகின்றன. அவை பூத்துக் காயாகி கனி தருவதே இல்லை. இதன் காரணம் என்ன? என்று அந்த மகானிடம் எனக்காகக் கேட்டு வா..” என்று கெஞ்சியது.
உபீரும் சரியென்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான். இன்னும் மூன்று நாட்கள் நடந்த பிறகு, ஓர் ஆற்றங்கரைக்கு வந்தான். அந்த ஆற்றிலிருந்து ஒரு மீன் துள்ளிக் குதித்து வந்து, அவனைப் பார்த்து, “”எங்கே போகிறாய்?” என்று கேட்டது. அதனிடமும் மகானைச் சந்திக்கப் போவது பற்றி விவரமாகக் கூறினான் உபீர்.
அதற்கு அந்த மீன், “”எனக்கு ஏழு ஆண்டுகளாகத் தொண்டை வலிக்கிறது. அதற்கு என்ன நிவாரணம் என்று கேட்டறிந்து வருவாயா?” என்று அவனிடம் கேட்டது. உபீர் அதற்கு ஒப்புக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். இன்னும் சில நாட்கள் சென்றன. அவனுடைய பயணத்துக்கு முடிவு வந்து விட்டது போலும்.
ஓரிடத்தில் ஒரு கிழவரைச் சந்தித்தான். அவனைப் பார்த்ததும், அந்தக் கிழவர், “”வா, உபீர்!” என்றார். என்ன ஆச்சரியம்! என்னுடைய பெயர் இவருக்கு எப்படித் தெரிந்தது? என்று நினைத்தான். ஒருவேளை இவர்தான் தான் தேடிக் கொண்டிருக்கும் மகானோ என்ற எண்ணமும் அவனுக்குத் தோன்றியது.
அவன் யோசிப்பதைப் பார்த்த அந்தக் கிழவர், “”நீ தேடிக் கொண்டிருக்கும் மகான் நான்தான்.. என்னிடம் உனக்கு என்ன வேண்டும் என்பதைச் சீக்கிரம் சொல்…” என்றார். ஓநாயும் ஆப்பிள் மரமும் மீனும் கேட்டுத் தெரிந்து கொண்டு வருமாறு சொல்லியவற்றை அந்த மகானிடம் கூறினான். பின்னர் தனது கோரிக்கையையும் அவரிடம் சொன்னான்.
அதற்கு அந்த மகான், “”அந்த மீனின் தொண்டையில் ஒரு ரத்தினக்கல் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதனை அகற்றிவிட்டால் அதன் வலி குணமடைந்து விடும்! அந்த ஆப்பிள் மரத்தின் அடியில் மண்ணில் தங்கக்காசுகள் கொண்ட ஒரு பானை இருக்கின்றது. அதை எடுத்துவிட்டால், அந்த மரம் காய் காய்க்க ஆரம்பித்துவிடும்! அந்த ஓநாய், தான் சந்திக்கின்ற முதல் சோம்பேறியை அடித்துச் சாப்பிட்டால் அதனுடைய தீராத வலி குணமாகிவிடும்…” என்று கூறினார்.
உபீர், “”என்னுடைய வேண்டுகோள் குறித்து ஒன்றும் நீங்கள் கூறவில்லையே?” என்று கேட்டான். அதற்கு அந்த மகான், “”உனக்கு வேண்டியது அனைத்தும் உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.. நீ போகலாம்…” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.
உபீருக்கு ஒரே சந்தோஷம். தான் நினைத்தபடி திடீர் பணக்காரனாகி விடுவோம் என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவனுடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மீனிடம் வந்து சேர்ந்தான் உபீர்.
மீன் மிகுந்த ஆவலுடன், “”என்ன நிவாரணம்?” என்று கேட்டது. “”உன்னுடைய தொண்டையில் ரத்தினக்கல் ஒன்று சிக்கியிருக்கிறது. அதை அகற்றிவிட்டால் உன் வலி குணமடைந்து விடும்…” என்றான். அதற்கு அந்த மீன், “”அப்படியானால், நீயே அதை அகற்றி எடு. உனக்கும் ரத்தினக்கல் கிடைக்கும். எனக்கும் வலி நீங்கிவிடும்” என்று கெஞ்சியது.
ஆனால் உபீர், “”நான் ஏன் இந்த வேலையைச் செய்ய வேண்டும். நான் விரலை அசைக்காமலேயே பணக்காரன் ஆகப் போகிறேன்” என்று பதில் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிச் சென்றான். சில நாட்கள் நடைப்பயணத்துக்குப் பிறகு, ஆப்பிள் மரம் இருந்த இடத்தை வந்தடைந்தான் உபீர்.
ஆவலுடன் அவனை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ஆப்பிள் மரம், அவனைப் பார்த்து தன்னுடைய நிவாரணம் பற்றிக் கேட்டது. அதற்கு உபீர், “”உனக்குக் கீழே மண்ணில் தங்கக் காசுகள் கொண்ட பானை ஒன்று இருக்கின்றது. அதனை அகற்றிவிட்டால் உனது மொட்டுக்கள் பூத்துக் காய்க்கத் தொடங்கிவிடும்..” என்று கூறினான்.
“”அப்படியானால், அந்தப் பானையை நீயே தோண்டி எடு. எனக்கும் பலன் கிடைக்கும். உனக்கும் தங்கக் காசுகள் கிடைக்கும்” என்றது ஆப்பிள் மரம். “”எனக்கு உன் தங்கம் வேண்டாம். நான் ஒன்றும் செய்யாமலேயே பணக்காரனாகப் போகிறேன்…” என்று திமிராகக் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நடையைக் கட்டினான்.
இன்னும் சில நாட்களுக்குப் பிறகு, அந்த ஓநாயைச் சந்தித்தான் உபீர்.
To get daily story in whats app contact +917904957814
அதனிடம், “”நீ முதலில் சந்திக்கின்ற சோம்பேறியை அடித்துச் சாப்பிட்டால் உனது வலி குணமடையும்…” என்று கூறினான் உபீர். அதற்கு, அந்த ஓநாய், “”உன்னுடைய கதையைக் கொஞ்சம் சொல்லேன்… நான் கேட்டு, உனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்…” என்றது.
உபீர், வீட்டிலிருந்து தான் கிளம்பியது முதல் அந்த நிமிடம் வரை அவனுக்கு நடந்தவற்றையெல்லாம் கூறிவிட்டு, தான் ஒன்றும் செய்யாமலேயே பணக்காரனாகப் போவதைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டுக் கிளம்ப முற்பட்டான்.
அவனைத் தடுத்து நிறுத்திய ஓநாய், “”உன்னைவிட ஒரு சோம்பேறி எங்கு தேடினாலும் எனக்குக் கிடைக்கப் போவதில்லை.. நான் ஏன் வீணாகத் தேடி அலைய வேண்டும்…” என்று கூறியபடியே அவனை அடித்துச் சாப்பிட ஆரம்பித்தது.
என் அன்பு வாசகர்களே,
சோம்பல் அதிகமானல் என்ன கிடைக்கும் என்பதை இக்கதையின் மூலம் கண்டோம்.
வேதத்தில் தாவீது தன்னுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது சிங்கமும் கரடியும் வந்து மந்தையிலுள்ள ஆடுகளை பட்சிக்க வந்த போது அவன் சோம்பேறியாய் இராமல் உடனே சென்று அந்த சிங்கத்தையும் கரடியையும் கொன்று போட்டான். அவன் அவ்வாறு சுறுசுறுப்புடன் செயல்படவில்லை என்றால் அவனுடைய ஆடுகளும் மாண்டு போயிருக்கும் அதே வேளையில் அவனுடைய உயிருக்கும் ஆபத்தாய் முடிந்திருக்கும்.
இவ்வாறு சோம்பலாய் இராமல் சுறுசுறுப்புடன் வேலை செய்ததால் இஸ்ரவேலரை ஆளும் ராஜாவாய் உயர்த்தப்பட்டான்.
நீதிமொழிகள் 20: 4
சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்: அறுப்பிலே பிச்சை கேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
எனவே எந்த குளிரையும் வெயிலையும் தாங்கிக்கொண்டு நம்முடைய கடைமைகளை (படிப்பு, வேலை, ஊழியம்) செய்வோம் தேவனுடைய நீயாயத்தீர்ப்பாகிய அறுவடை நாளில் நல்ல கோதுமை மணிகளாய் தேவனுடைய களஞ்சியத்தில் சேர்ந்து தேவனை முகமுகமாய் காண்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
ஓர் குட்டிக் கதை
===============
கற்பனைக் கோட்டை!
===============
ஒரு ஊரில் சுந்தரம் என்று ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் விஜயா. அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் ரங்கன். கணவன், மனைவி இருவரும் மிகுந்த ஏழை. ஆனாலும் வெட்டிக் கதை பேசுவதில் வல்லவர்கள். கனவுலகத்திலேயே சஞ்சரிப்பவர்கள். உடமை என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் சில சட்டிப் பானைகள் தானிருந்தன. ஆனாலும் தினசரி என்ன வியாபாரம் செய்யலாம். என்ன தொழில் செய்யலாமென்று கணவனும், மனைவியும் பேசிக் கொண்டே இருப்பர். ஏதாவது ஒரு தொழில் செய்யலாமென்று தீர்மானிப்பர். உடனே அந்த தொழில் எப்படி விருத்தியாகிறது. எவ்வளவு லாபம் கிடைக்கிறது. தாங்கள் என்னென்ன சுகம் அனுபவிப்பது என்றெல்லாம் வாய் கிழிய பேசி பொழுதை கழிப்பர்.
அதை எல்லாம் அடுத்த வீட்டு ரங்கன் கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு சிரிப்பு வரும். வெறும் கையால் முழம் போடுகிறார்களே பாவம் என்று எண்ணுவார். ஒரு நாள் கணவன், மனைவி இருவரும் பால் வியாபாரம் செய்வதைப் பற்றி பேச ஆரம்பித்தனர். “”என்னிடம் பணமிருந்தால் பசுக்கள் வாங்குவேன்?” என்றான் சுந்தரம். “”பசுக்களை மேய்ச்சல் தரைக்கு ஓட்டிப் போய் மேய விடுவேன். அங்கே அவைகள் போடும் சாணத்தை கூடையில் எடுத்து வந்து நம் வீட்டுச் சுவற்றில் வரட்டி தட்டுவேன். அவைகளை விற்று காசு சேர்ப்பேன்!” என்றாள் விஜயா.
“”நான் என்ன செய்வேன் தெரியுமா விஜயா? கறந்த பாலைக் கொண்டு போய் விற்று காசாக்குவேன்!” என்றான் சுந்தரம். “”விற்காது மீதமான பாலை காய்ச்சி அதை தயிராக்குவேன். தயிரை கடைவேன். வெண்ணை கிடைக்கும். வெண்ணையை காய்ச்சுவேன். நெய் கிடைக்கும், தயிர், மோர், வெண்ணை, நெய் எல்லாம் கூடையில் எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக போய் விற்பேன். விற்று காசாக்குவேன். காசை பணமாக்குவேன்…” எனக்கு அவ்வளவு திறமை இருக்கு தெரியுமா? என்றாள் விஜயா.
“”அப்படி செய்தும் பால், தயிர், வெண்ணை, நெய் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது?” என்று கவலைப்பட்டான் சுந்தரம். “”இதற்காக கவலைப்படுவார்களா என்ன? நாலு வீடு தள்ளித்தானே என் தங்கை குழந்தை குட்டிகளோடு இருக்கிறாள். அவளுக்கு கொடுத்து விடுவேன்!” என்றாள் விஜயா. அதைக் கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டது.
“”நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவைகளை உன் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுப்பாயா? அவைகளை நீ கொண்டு போய் கொடுக்காதபடி செய்து விடுகிறேன் பார்!” என்று கத்தியபடி வீட்டிலிருக்கிற நான்கு பானைகளை தயிர், மோர், வெண்ணை, நெய் இருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லாப் பானைகளையும் உடைத்து விட்டான் சுந்தரம்.
இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு ரங்கன் பகல் கனவு கண்டு கடைசியில் தம் கைப் பொருளை இழக்கும் இருவருக்கும் புத்தி வர ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணினார். சுந்தரம் வீட்டினுள் நுழைந்தார். அங்கு மூலையில் சார்த்தி வைத்திருந்த ஒரு கோலை எடுத்து வெறும் வெளியில் அப்படி இப்படி வீசி, “”ஹை… ஹை…” என்று விரட்டினார்.
“”ரங்கா…! எதை விரட்டுகிறீர்கள்?” என்றான் சுந்தரம். “”உன் பசு என் தோட்டத்தில் நுழைந்து செடிகளை எல்லாம் நாசமாக்கிவிட்டது. எனக்கு நஷ்டஈடு கொடு!” என்றான். “”யோவ்! என்னய்யா சொல்ற… இது என்ன புதுகதை… எங்ககிட்ட ஏது பசு?” என்று ஒரே நேரத்தில் சண்டைப் போட்டனர் கணவன், மனைவி இருவரும்.
“”இப்போ புரியுதா… இல்லாத பசுக்களை வைத்து சண்டைப் போட்டே இருவரும் இவ்வளவு நாட்கள் பொழைப்பை ஓட்டி விட்டீர்கள். இதனால் லாபம் என்ன? உங்க வீட்டுப் பொருட்கள் போனதுதான் மிச்சம். இனி இந்த கற்பனை கோட்டையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உழைக்கிற வழியை பாருங்க!” என்றார்.இருவரும் வெட் கத்தில் தலை குனிந்தனர்.
Ithu pola daily meassage venum endral contact +917904957814
என் அன்பு வாசகரே,
நம் அன்றாட வாழ்வில் இதுபோன்ற அநேகரை சந்தித்திருக்கக்கூடும். உதாரணமாக நமது வாகனத்தை சரி செய்வதற்காக மெக்கானிக்கிடம் கொடுத்துவிட்டு நாம் நம்முடைய வேலையை செய்ய கிளம்பி விடுவோம். ஆனால் அவரோ சரிசெய்து கொண்டிருக்கிறேன், செய்துவிட்டேன், முடித்துவிட்டேன் என்று வாயால் மட்டுமே வேலை செய்துவிட்டு செயலில் ஒன்று செய்வதில்லை. எக்காரணம் கொண்டும் நாமும் அவரைப் போல மாறிவிடக்கூடாது.
சாலெமோன் ஞானி இவ்வாறு கூறுகிறார்,
நீதிமொழிகள் 10: 4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்: சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
நீதிமொழிகள் 21:25
சோம்பேறியின் கைகள் வேலை செய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.
அருமையானவர்களே, நாம் இக்கதையில் வரும் கணவன் மனைவிப்போல் சோம்பேறிகளாய், ஆசை நிராசையாய் போகதபடிக்கு எப்பொழுதும் சுறுசுறுப்புடன் நமக்கு தேவன் கொடுத்த வேலையை ஜாக்கிரதையுடன் செய்வோம் நமது கண்களே ஆச்சரியப்படத்தக்க விதமாய் ஆவிக்குரிய பூமிக்குரிய ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்பி வழிநடத்துவார்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!
ஓர் குட்டிக் கதை
===========
ஒரு விஞ்ஞானியின் கதை
===========
நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார் ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெய்யிலில் காட்டினார்.
பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார், ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேளையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார்.
இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர் சி வி இராமன் ஆனார்.
என் அன்பு வாசகர்களே,
ஒரு மனம் ஒரு சிறந்த குணம். எந்தவொரு காரியத்தை செய்தாலும் அதில் ஒரு மனம் இருந்தால் தான் அந்த காரியத்தில் வெற்றி பெற முடியும். இதற்கு சிறந்த உதாரணமாக மனிதர்களாகிய நம்மையே எடுத்துக்கொள்ளலாம். ஆம் வேதம் வாசிக்கிற போது, ஜெபம் செய்கிற போது, ஊழியம் செய்கிற போது, வேலை செய்கிற போது என பல்வேறு சூழ்நிலைகளில் மனம் பல்வேறு காரியங்களை குறித்து சிந்தித்து அந்த சிந்தனைகளினால் வீணர்களாய் மாறிப்போகிறோம்
மற்ற மனிதர்களை குறித்து யாராகிலும் குறை கூறும்போது எந்தவித சலனமும் இல்லாமல் ஒருமனதோடு கேட்கின்றார்கள். வேதம் வாசிக்கும்போதோ ஒரு மனம் இல்லாததால் நம் வேத வாசிப்பு பயனற்றதாயும், வாசிக்க வேண்டும் என்று பெற்றோரும், மற்றோரும் சொல்வதால் வாசிப்பதாலும், ஜெபிப்பதாலும் அது பாரம்பரியமாய் செய்யப்படுவதால் பயனற்றதாகிறது. அதுவே நாம் ஒருமனதோடு ஏக சிந்தையாய் வேதத்தை வாசித்து, தியானித்து ஊக்கமாய் ஜெபிக்கிற போது எப்படி அந்த காகிதம் பற்றி எரிந்ததோ அதுபோல நமக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவரை தேவன் அனல் மூட்டும் போது நமக்குள் ஒரு அக்கினி பற்றியெரியும்.
To get daily message in whats app contact +917904957814
வேதத்தில் இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த பின்னர் இரண்டு சீஷர்கள் எருசலேமிற்கு செல்லுகின்ற பாதையில் மூன்றாம் நபராய் இயேசுவும் அவர்களோடு இணைந்து வேத வாக்கியங்கள்மூலம் அவர்கள் அக்கினியை மூட்டி அவர்கள் இருதயத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்தார். அதுபோலவே நாமும் வேதத்தில் உள்ள வார்த்தைகளை வாசித்து தியானிக்கும் போது நம்மை அறியாமல் நமக்குள்ளே ஒரு அக்கினி பற்றியெரிய ஆரம்பிக்கும் அதன் பின்னர் எவ்வித கஷ்டமோ, நஷ்டமோ வந்தாலும் நமக்குள் இருக்கிற அந்த அக்கினி எல்லாவித அசாதாரண காரியங்களை நிர்மூலமாக்கி விடும்.
இயேசு கிறிஸ்து இவ்வாறு மொழிகிறார்,
லூக்கா 12: 49
பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
ஆம் அன்பானவர்களே, பூமி என்றால் இந்த பூமியில் வாழ்கின்ற நாம் தான். நம்மீது பரிசுத்த ஆவியின் அக்கினியை போட்டு அதை பற்றியெறிய செய்து அதன்மூலம் தேவ இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க சித்தம் கொண்டிருக்கிறார். அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே நம்மை முழுவதுமாய் சமர்ப்பித்து தேவ அக்கினியாய் மாறுவோம் தேவனுக்காய் அனல் கொண்டு எரிவோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
Thanks for using my website. Post your comments on this