Type Here to Get Search Results !

Godson Vincent Bible Study | Tamil Christian Message | Jesus Sam

===================
'உலகம்' என்கிற வார்த்தை இன்று மிகவும் விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கிறதே? ஒரு கிறிஸ்தவர் உலகத்துக்குரியதாகப் பார்க்கிற ஒரு காரியத்தை, மற்றொரு கிறிஸ்தவர் ஆவிக்குரியதாகப் பார்க்கிறார்! இப்படியிருக்க, நாம் உலகத்துக்கும் தெய்வீகத்துக்கும் இடையில் கோடு வரைவது எப்படி?
===================
✍️ அவசியம் நிதானிக்கவேண்டியக் காரியம் இது.

ஒரு கிறிஸ்தவருக்கு தவறாகப்படுகிற ஒரு காரியம், மற்றொரு கிறிஸ்தவருக்கு சரியாகப்படுகிறது.

ஒரு கிறிஸ்தவருக்கு இயல்பானதாகத் தெரிகிற ஒரு காரியம், மற்றவர்களுக்கு சாதாரணமானதாகத் தெரிவதில்லை.

ஒரு கிறிஸ்தவரால் உலகமாகப் பார்க்கப்படுகிற ஒன்று, மற்றொரு கிறிஸ்தவரை பொருத்தவரை 'உலகம்' அல்ல!

இப்படியிருக்க, உலகம் மற்றும் ஆவிக்குரியக் காரியம் என்று எங்கே கோடுவரைவது என்று அறியவேண்டியது அவசியமாகிறது!

உலகக் காரியத்திற்கும் நமக்கும் இடையில் கோடுபோடுவது எப்படி?

எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, *ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.* 
        1கொரி.10:23

நம்மில் ஒவ்வொருவனும் *பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி* அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
               ரோமர் 15

மேற்காணும் வசனங்கள் நமக்கு வழிகாட்டக்கூட்டியவை.

*ஒரு கிறிஸ்தவர் தனக்கோ, பிறருக்கோ பக்திவிருத்தியை உண்டாக்காத எந்தக் காரியத்திற்கும் தனக்கும் இடையில் ஒரு கோடிட்டுக்கொள்ளவேண்டும்!*

உணவு, உடை, உறைவிடம், இவைகளை சாத்தியப்படுத்துகிற ஒரு வேலை அல்லது ஒரு தொழில் ஒரு கிறிஸ்தவனின் அடிப்படைத்தேவையாகும்.

இவைகளில் ஒன்றும் தனக்கும் பிறருக்கும் அவபக்தியை உண்டாக்காத வழியில் அமைத்துக்கொள்ள கிறிஸ்தவன் கடமைப்பட்டிருக்கிறான்.

உணவில் உலகத்துக்கும் நமக்கும் இடையில் கோடிடுவது எப்படி?

உணவை பொருத்தவரை, போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகர்ந்தவர்களாக்கமாட்டாது. என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு (ஆவிக்குரிய) மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு (ஆவிக்குரிய) குறைவுமில்லை. ஆகிலும் இதைக்குறித்து நமக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கல்லாகாதபடிக்குப் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்! (1கொரி. 8:8,9)

ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான், பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான். (ரோமர் 14:2)

மரக்கறிகளைத்தவிர மற்றதெல்லம் தீட்டு என்று எண்ணுகிற பலவீனமான கிறிஸ்தவர் முன்பு மாம்சத்தை புசித்து, அவரை இடறப்பண்ணுகிறதை முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் தவிர்க்கவேண்டும்! (ரோமர் 14:1-22)

எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான், ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவருக்கு அது தீமையாயிருக்கும். (ரோமர் 14:20)

மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், தன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், கிறிஸ்தவர் அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும். (ரோமர் 14:21)

இப்படியிருக்க, ஒருவரும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்று தீர்மானித்துக்கொள்ளவேண்டும். (ரோமர் 14:13)

போஜனத்தினாலே தன் சகோதரனுக்கு விசனமுண்டாக்குகிறவர் அன்பாய் நடக்கிறவரல்ல, அவனை தன் போஜனத்தினாலே கெடுக்கிறவர். போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அவனில் அழித்துப்போடுகிறவர்!
(ரோமர் 14:15,20)

*அப்படியே, விக்கிரமானது ஒன்றுமில்லை என்கிற அறிவை உடைய ஒரு கிறிஸ்தவர், விக்கிரகத்தை ஒரு பொருட்டாக எண்ணுகிற பலவீனமான கிறிஸ்தவருக்கு முன்பாக விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசித்து, அவரை இடறப்பண்ணுகிறதை தவிர்க்கவேண்டும்.* (1கொரி.8:1-13; 10:15-31)

தன் சகோதரனுக்கு இடறலுண்டாகப் புசிக்கிறவர் அவருக்காக மரித்த கிறிஸ்துவுக்கு விரோதமாக பாவஞ்செய்கிறார்! (1கொரி. 8:12; ரோமர் 14:15)

இப்படியிருக்க, கிறிஸ்தவர்
ஒவ்வொருவரும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறருடைய பிரயோஜனத்தைத் தேடவேண்டும். (1கொரி.10:24)

அவிசுவாசிகளுக்கும் தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருக்கும்படிக்கு: ஒருவரும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கவேண்டும். (1கொரி.10:32,33)

தேவனுடைய மகிமைக்கென்று மாத்திரமே
புசிக்கவும் குடிக்கவும் வேண்டும் என்பதில் கிறிஸ்தவர் உறுதியாய் இருக்வேண்டும். (1கொரி.10:31)

*பிறருக்கு இடறலுண்டாகப் புசிக்காவிட்டாலும், தேவன் தன்னை கெடுக்காதபடிக்கு, தேவனுடைய ஆலயமாகிய தன் சரீரத்தைக் கெடுக்கிற உணவுகளை புசியாதபடிக்கும் பாணங்களை குடியாதபடிக்கும் கிறிஸ்தவர் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டியது அவசியம்.* (1கொரி.3:16,17)

தனது பக்திவிருத்திக்கு எவ்விதத்திலும் தடையாக இராத ஒன்றை ஒரு கிறிஸ்தவர் புசித்தாலும் குடித்தாலும், உலகத்தாரோ மற்றொரு கிறிஸ்தவரோ அவை தகாதவை என்று பார்க்கிற சூழலில், முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் அவைகளை தவிர்க்கிறதற்கு ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்.

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றாலும் (மத்.15:11), தேவனுடைய ஆலயமாகிய தன் சரீரத்தைக் கெடுக்கிற உணவும் பாணமும் கிறிஸ்தவருக்கு உலகம். தனக்கும் அவைகளுக்கும் இடையில் ஒரு கிறிஸ்தவர் கோடிட்டுக்கொள்ளவேண்டும்!

தனக்கு எவ்விதத்திலும் இடறலாயிராத உணவும் பாணமுமானாலும், பிறர் இடறுவதற்கு ஏதுவாகப் புசிக்கிற சூழலில், அந்த உணவும் பாணமும் கிறிஸ்தவருக்கு உலகம். அச்சூழலில் தனக்கும் அவைகளுக்கும் இடையில் ஒரு கிறிஸ்தவர் கோடிட்டுக்கொள்ளவேண்டும்!

பக்திவிருத்தியை உண்டாக்காத போஜனத்தினால், பாவமுண்டாகாதபடிக்கு பார்த்துக்கொள்ளவதில் கிறிஸ்தவர் கவனமாயிருக்கவேண்டும்!!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920


======================
உடையில் உலகத்துக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் எங்கே கோடிடப்படவேண்டும்?
===================
சினிமாக்காரரைப்போல கவர்ச்சியாக ஆடை அணியும் ஒரு ஆராதனை வீரர் அல்லது ஒரு ஊழியருக்கு அது அவசியமான ஒன்றாகத் தெரிகிறது. அது அவருக்கு உலகமாகத் தெரியவில்லை! 

தங்கள் கால்கள் வெளியேத் தெரியும்படி ஆடை அணிவது வெளிநாட்டு கிறிஸ்தவப் பெண்மணிகளுக்கு 
சாதாரணமான விஷயம். அவர்களைப் பொறுத்தவரை அது உலகம் அல்ல! ஆனால், தென்னிந்தியர்களுக்கு அடக்கமான உடையாகத் தெரிகிற சேலை, வெளிநாட்டவருக்கு மிகவும் கவர்ச்சியான உடையாகத் தெரிகிறது!

இப்படியிருக்க, எந்நாட்டுக் கிறிஸ்தவரும் தங்கள் உடையில் உலகம் இருக்கிறதைக் கண்டுபிடிப்பது எப்படி?

"ஸ்திரீகளும் மயிரை பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, *விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது* தங்களை அலங்கரியாமல்,
 *தகுதியான வஸ்திரத்தினாலும்,* நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், *தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே* நற்கிரியைகளினாலும், *தங்களை அலங்கரிக்கவேண்டும்"* என்று தெளிந்தபுத்தியுள்ள ஆவியை உடைய ஊழியரான பவுல் சொல்லுகிற ஆலோசனை கவனிக்கத்தக்கது. (1தீமோ.2:9,10)

*அதிகநேரம் எடுத்து, பணம் செலவுசெய்து, மயிரை விதவிதமாக பிண்ணி, பொன் மற்றும் முத்துக்களினாலும், விலையேறப்பெற்ற (costly) வஸ்திரத்தினாலும் செய்யும் அலங்காரமே உலகம்!*

தேவபக்தியுள்ள கிறிஸ்தவ ஸ்திரீகள் தங்களுக்கும் இந்த உலகத்துக்கும் இடையில் கோடிட்டுக்கொள்ளவேண்டும். 

*தேவபக்தியுள்ள கிறிஸ்தவப் புருஷருக்கும் இது பொருந்தும்!*

தகுதியான (பாதம்வரை மறைக்கும்
அடக்கமான) வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், கிறிஸ்தவ ஸ்திரீகள் தங்களை அலங்கரிக்கப் பழகவேண்டும்.

தேவபக்தியுள்ள ஸ்தீரீகள் நிச்சயம் அதிகநேரம் எடுத்து, பணம் செலவுசெய்து, மயிரை விதவிதமாக பிண்ணி, பொன் மற்றும் முத்து போன்ற ஆபரணங்களினால் தங்களை அலங்கரிப்பதிலும், விலையேறப்பெற்ற (costly) வஸ்திரங்களை உடுத்துவதிலும் கவனம் செலுத்தமாட்டார்கள். தகுதியான (பாதம்வரை மறைக்கும்
அடக்கமான) வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரித்துக்கொள்வதிலேயே இவர்கள் நாட்டம் கொள்ளுவார்கள்! 

*தேவபக்தியுள்ள புருஷரும் புறம்பான அலங்காரத்தில் அல்ல, உள்ளான அலங்காரத்திலேயே நாட்டம் கொள்ளுவார்கள்!*

நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரித்துக்கொள்வதில் ஆர்வமில்லாத இன்றைய அநேகக் கிறிஸ்தவ ஸ்திரீகள்: அதிகநேரம் எடுத்து, பணம் செலவுசெய்து, மயிரை விதவிதமாக பிண்ணுவதிலும், பொன் மற்றும் முத்து போன்ற விலையேறப்பெற்ற ஆபரணங்களை அணிவதிலும், விலையேறப்பெற்ற (costly) வஸ்திரங்களை உடுத்துவதிலும் அதிக ஆர்வமாய் இருக்கிறார்கள்!

இன்றைய இந்தியக் கிறிஸ்தவர்கள் மேற்கத்தியக் கலாச்சார ஆடை அலங்காரங்களில் அதிக ஆர்வம் கொள்ளுகிறதைக் காணமுடிகிறது.

"நாங்கள் எவ்விதமான கவர்ச்சியான ஆடையணிந்தாலும், அலங்காரம் செய்துகொண்டாலும், *எங்கள் ஆண்களுக்கு பெண்கள்மீதும், பெண்களுக்கு ஆண்கள்மீதும்* தவறான ஈர்ப்பு உண்டாவதில்லை. நாங்கள் இதை சாதரணமாகவே எடுத்துக்கொள்ளுகிறோம்" என்று சொல்லுகிற மேலைநாட்டு ஆண்கள் மற்றும் பெண்களே அதிகப் பாவம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள்!

அவர்களில் எவரும் எவரோடும் வாழலாம், எத்தனைப்பேரையும் திருமணம் செய்யலாம்! உலகில் அதிக ஆபாசப்படங்கள் இப்படிப்பட்ட ஆடையலங்காரம் செய்யும் கலாச்சாரத்தைக்கொண்ட நாடுகளில்தான் தயாரிக்கப்படுகின்றன!  

*வெள்ளையரின் கலாச்சாரம் வேதக்கலாச்சாரம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்!*

வெளிநாட்டவரின் பணத்தோடு பாவத்தையும் கிறிஸ்தவ உலகத்திற்கு இறக்குமதி செய்தவர்கள் வெளிநாட்டவரின் பணத்தை வாங்கி ஊழியம் செய்த, செய்துகொண்டுவருகிற கனவான்களாகிய ஊழியர்களே!

அருவருவப்பான ஆடைகளுடன் குடும்பத்துடன் மேடையேறி, நவ(அ)நாகரீகத்தை கிறிஸ்தவர்களுக்கு கற்றுக்கொடுத்தப் பெருமை அதிகம் இவர்களுக்கே சேரும்!

இவர்கள் கொடுக்கும் ஆயிரம், இரண்டாயிரம் மாதாந்திர உதவித்தொகைக்காக, இவர்களின் அநாகரீகமான ஆடையலங்காரங்களைக் கண்டும் காணாமலும், கண்டிக்காமலும் விட்டுவிட்ட பரிசுத்தவான்களுக்கும் இதில் பங்கு உண்டு!

இன்று ஊழியர்களின் பெண்பிள்ளைகள் திருமணத்தில் வெள்ளைக்காரிகளைப்போல கை இல்லாத கவுன் மாட்டிக்கொள்ளும் அளவுக்கு (அ)நாகரீகத்தில் முன்னேறிவிட்டனர்!

*ஒருவரின் உடையே அவருடைய இருதயத்தின் நிலையை வெளிப்படுத்திவிடும்!* 

விழந்துபோன ஆதாம் ஏவாள் தங்களுக்கு இலைகளால் உடையை உண்டாக்கிக்கொண்டனர். தேவனோ, அவர்களுக்கு தோலினால் உடையை உண்டுபண்ணி கொடுத்தார். (ஆதி.3:7,21)

இலையினால் செய்யப்பட்ட உடையைவிட, தோலினால் செய்யப்பட்ட உடை தகுதியானதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

*யூத ஆண் / பெண்களின்* உடைகள் அவர்களை முழுயையாக மறைக்கக்கூடியவையாக இருந்தன. இன்று நமது முகமதிய சகோதர சகோதரிகள் அவ்விதமான உடையையே பின்பற்றுகின்றனர். 

இந்த நவீன காலத்தில் வழிபாட்டு தலங்களுக்கு செல்லுகையில் அவ்விதமான உடையை உடுத்துகிறதில் நம் மத்தியில் வாழும் இஸ்லாமிய சிறுவரும் வாலிபரும் வெட்கப்படுகிறதில்லை. உடையைப் பற்றிய காரியத்தில் அவர்களுக்கு இருக்கிற உணர்வு இன்றைய ஊழியர்கள் பலருக்கே இல்லை என்பது வேதனையான காரியம்!

*உடைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனால் எந்த நாட்டு கிறிஸ்தவனானாலும் அவனுடைய இருதயம் கிறிஸ்துவின் இதயம் போன்றே இருக்கவேண்டும்!*

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று" என்கிறார் ஆண்டவர். (மத்.5:28)

ஒரு ஸ்திரீ எவ்விதத்திலும் தன் இச்சையை தூண்டாத பட்சத்தில், அவளை இச்சையோடு பார்க்கிறவன், 
தான் மட்டுமே இருதயத்தில் விபச்சாரம் செய்கிறான்.

ஒருவன் தன்னை இச்சையோடு பார்க்கிற அளவுக்கு தன்னை கவர்சியாக அலங்கரித்துக்கொள்ளுகிற, கவர்ச்சியான ஆடையணிகிற *கிறிஸ்தவள்,* அவன் இருதயத்தில் நடைபெறும் விபச்சாரத்தில் தானும் பங்கெடுக்கிறாள். அப்படியே, ஒரு ஸ்திரீ தன்னை இச்சையோடு பார்க்கிற அளவுக்கு தன்னை கவர்சியாக அலங்கரித்துக்கொள்ளுகிற, கவர்ச்சியான ஆடையணிகிற *கிறிஸ்தவன்,* அவள் இருதயத்தில் நடைபெறும் விபச்சாரத்தில் தானும் பங்கெடுக்கிறான்.

*இடறுகிறவர்கள் மட்டுமல்ல, இடறப்பண்ணுகிறவர்களும் தண்டனைக்குரியவர்களே!* (மத்.18:6,7)

இன்று அநேக கிறிஸ்தவப் *புருஷர்கள், ஸ்திரீகள் மற்றும் ஊழியர்கள்* எதிர்பாலர்களின் இச்சையைத் தூண்டக்கூடிய விதத்தில் தங்களை கவர்ச்சியாகத் அலங்கரித்துக்கொள்ளுகிறதையும், கவர்ச்சியாக ஆடையணிகிறதையும் காணமுடிகிறது!

தங்களால் பிறர் மனது கறைப்படுகிறதை மனச்சாட்சியில் மழுங்கிய இவர்களால் உணரமுடிவதில்லை. இது உலகம் என்று இவர்களுக்கு விளங்குவதுமில்லை!

*"மற்றவரின் மரியாதைக்காகவே இந்த அதிக விலையுள்ள ஆடையை அணிகிறேன். அல்லது மற்றவரை கவர்ச்சிக்கவே இந்த ஆடையை அணிகிறேன்"* என்கிற எண்ணம் உண்டானால்; அந்த ஆடைக்கும் தனக்கும் இடையில் *கிறிஸ்தவன் / கிறிஸ்தவள் / ஊழியன்/ ஊழியக்காரி* கோடிட்டுக்கொள்ளவேண்டும். ஏனெனில், அந்த ஆடைதான் அவர்களுக்கு உலகம்!

மற்றவரைக் கவரவே தான் தன்னை கவர்ச்சியாக அலங்கரித்துக்கொள்ளுகிறதாக உணரும் பட்சத்தில், அந்த அலங்காரத்திற்கும் தனக்கும் இடையில் *கிறிஸ்தவன் / கிறிஸ்தவள் / ஊழியன்/ ஊழியக்காரி* கோடிட்டுக்கொள்ளவேண்டும். ஏனெனில், அந்த அலங்காரமே அவர்களுக்கு உலகம்!

*நாம் விரும்புகிற காரியங்கள் மூலமாகவே உலகத்தின் அதிபதி நமக்குள் உலகத்தைக் கொண்டுவருவான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்!* (யாக்.1:13-15)

"என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்". (யாக்.1:16)

அடிக்குறிப்பு:
    ஆடையலங்காரத்தில் கிறிஸ்தவப் புருஷர் மற்றும் ஸ்திரீகள் இருபாலரும் வேதாகமக் கோட்பாட்டைக் கடைபிடிக்கக் கடமைப்பட்டுள்ளோம்!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920


===================
[ஊழியத்தைக் குறித்த வேத அடிப்படையிலான புரிதல் இல்லாத ஒரு பாஸ்டர் முகநூலில் பகிர்ந்துள்ள கருத்துக்களும் , அவரைப் போன்ற மனநிலையில் உள்ள ஐந்துவிதமான ஊழியர்களுக்குமான அடியேனின் கேள்விகளும்]
==================
*பாஸ்டர்:* 
அப்பா ஊழியத்தை பிள்ளை செய்யலாம் என்பதற்கு கீழே உள்ள பதில் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.‌

*அடியேன்:* 
அப்பா ஊழியத்தை பிள்ளைகள் செய்யவேண்டும் என்றோ, செய்யலாம் என்றோ புதிய ஏற்பாட்டு சபைக்கு கொடுக்கப்பட்ட கட்டளை ஒன்றையாகிலும் உங்களால் காண்பிக்கமுடியுமா?

*பாஸ்டர்:* 
ஒரு பாஸ்டர் தனக்கு பிறகு தனது ஊழியத்தை தனது உடன் ஊழியருக்கோ, அல்லது தகுதி உள்ள ஒரு விசுவாசிக்கோ கொடுக்காமல், தனது மகனுக்கு கொடுப்பது கொஞ்சமும் நியாயமில்லை என்று சிலர் சொல்லுவதை (புலம்புவதை) கேட்டிருக்கிறேன்.

*அடியேன்:* 
ஒரு பாஸ்டர் தனது ஊழியத்தை தனது உடன் ஊழியருக்கோ, அல்லது தகுதி உள்ள ஒரு விசுவாசிகோ அல்லது தனது மகனுக்கோ கொடுக்கமுடியுமா? ஒரு பாஸ்டர் தனது ஊழியத்தை அடுத்தவரிடம் கொடுக்க புதிய ஏற்பாட்டில் கட்டளை ஏதாகிலும் உண்டா? தனது ஊழியத்தை தன் உடன் ஊழியருக்கும் தகுதியுள்ள விசுவாசிக்கும் கொடுத்த அல்லது தனது ஊழியத்தை தன் உடன் ஊழியருக்கும் தகுதியுள்ள விசுவாசிக்கும் கொடுக்காமல், தன் மகனுக்குக் கொடுத்த ஒரு பாஸ்டரையாவது உங்களால் ஆதிசபையில் காண்பிக்கமுடியுமா? ஒருவருக்கு ஊழியத்தை கொடுப்பவர் பாஸ்டரா? அல்லது கர்த்தரா?

*பாஸ்டர்:* 
தகப்பன் ஊழியத்தை பிள்ளைகள் செய்வது அல்லது பிள்ளைகளுக்கு கொடுப்பது தவறில்லை. அதற்கு வேதம் ஆதரவளிக்கிறது.

*அடியேன்:*
தகப்பனுடைய ஊழியத்தை செய்த பிள்ளைகள் வேதாகமத்தில் யார்? தங்கள் தகப்பனுடைய அதே அழைப்பைப் பெற்றிருந்த பிள்ளைகளை ஆதிசபையில் உங்களால் காண்பிக்கமுடியுமா? அப்போஸ்தலரின் பிள்ளைகள் அப்போஸ்தலராகவும்; தீர்க்கதரிசிகளின் பிள்ளைகள் 
தீர்க்கதரிசிகளாகவும்; சுவிசேஷகரின் பிள்ளைகள் சுவிசேஷகராகவும்; மேய்ப்பரின் பிள்ளகள் மேய்ப்பராகவும்; போதகரின் பிள்ளைகள் போதகராகவும் இருந்ததாக, ஆதிசபையில் உங்களால் ஒரு ஆதாரத்தையாகிலும் காண்பிக்ஙமுடியுமா?

*பாஸ்டர்:* 
இயேசுவே முதல் எடுத்துக்காட்டு!
இயேசுவே பிதாவின் ஊழியத்தைதான் செய்தார்.

*அடியேன்:*
இயேசுகிறிஸ்துவுக்கு முன்பு பிதா ஒருமுறை மனுஷனாக வந்து பூமியில் ஊழியத்தை செய்துவிட்டு, தமது ஊழியத்தை தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிடம் கொடுத்துவிட்டு சென்றாரா? பிதாவானவர் பரலோகத்தில் செய்வதாகக் கண்டு இயேசுகிறிஸ்து பூமியில் செய்ததுபோல, மரித்துப்போன ஊழியரான தன் தகப்பனார் பரலோகத்தில் செய்வதாகக் கண்டு, அவருடை மகன் அப்படிேயே பூமியில் செய்யமுடியுமா? இயேசுகிறிஸ்து பிதாவானவரின் ஊழியத்தை செய்தாரா? அல்லது பிதாவானவர் தமக்கு கொடுத்த ஊழியத்தை செய்தாரா? தேவனுடைய சபையை, அதன் வருமானத்தை, அதனால் வரும் ஆஸ்தியை ஒரு குடும்பம் மட்டுமே அனுபவிக்கும் சுயநலத்திற்கு பிதாவையும் குமாரனாகிய இயேசுவையும் வைத்து ஒரு பொய்யை புணைவது துணிக்கரமல்லவா?

*பாஸ்டர்:*
பழைய ஏற்பாட்டில் ஆசாரிய ஊழியம் லேவி கோத்திரத்திற்கு கொடுக்கபட்டதால், அங்கே ஆரோனுக்கு பிறகு அவன் வம்சம்தான் தலைமுறை தலைமுறையாக ஆசாரிய ஊழியம் செய்தனர். 

*அடியேன்:*
ஆரோனின் குமாரர் செய்தது அவர்களுக்கு ஆரோன் கொடுத்த ஊழியமா? அல்லது கர்த்தர் கொடுத்த ஊழியமா? லேவி கோத்திரத்தில் ஆரோனின் வம்சத்தார் மட்டுமே தலைமுறை தலைமுறையாக ஆசாரிய ஊழியம் செய்தனரா? லேவியரில் வேறு வம்சத்தார் எவரும் ஆசாரிய ஊழியத்திற்கு ஏற்படுத்தப்பட்டதில்லையா? அதைப்பற்றி நீங்கள் படித்ததே இல்லையா? பழைய உடன்படிக்கையின்படியான ஆசாரிய ஊழியமும், புது உடன்படிக்கையின்படியான ஐந்து விதமான ஊழியமும் (2கொரி.3:5-12; எபே.4:11-15) ஒன்றா? இன்றைய ஊழியர்கள் செய்கிறது பழைய ஏற்பாட்டு ஆசாரிய ஊழியம் என்றால், இவர்களின் மனைவி, மகள் மற்றும் மறுமகள் போன்ற ஸ்திரீகள் சபையில் எப்படி ஊழியஞ்செய்யமுடியும்? இவர்கள் எப்படி தங்கள் குடும்பத்துப் பெண்களை சபையில் ஊழியஞ்செய்ய அனுமதிக்கமுடியும்? எப்படி ஊழிய ஸ்தாபனங்களில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கமுடியும்?

*பாஸ்டர்:* 
புதிய ஏற்பாட்டில் முதல் தலைமுறையினர் மட்டும் பதிவாகி உள்ளனர். அவர்கள் பிள்ளைகள் ஊழியம் செய்ததாகக் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் உருவாக்கிய ஆவிக்குரிய பிள்ளைகள் அவர்களுக்கு பிறகு அந்த ஊழியத்தை செய்தார்கள் என்று பார்க்கமுடிகிறது.

*அடியேன்:*
பெரும்பாலான ஊழியர்கள் ஏன் இன்று ஆவிக்குரியப் பிள்ளைகளை ஊழியத்திற்கு உருவாக்குகிறதில்லை? சிலர் உருவாக்கினாலும் ஏன் தங்கள் குடும்பத்தாருக்கு இணையாக சபையில், ஸ்தாபனத்தில் ஊழியம் செய்ய அனுமதிக்கிறதில்லை? தங்கள் குடும்பத்தாருக்கு இணையாகவோ, மேலாகவோ தங்கள் ஆவிக்குரியப் பிள்ளைகளை தேவன் பயன்படுத்துகிறதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை?

*பாஸ்டர்:* 
ஆனாலும் அப்பாவுக்கு பிறகு பிள்ளைகள் (ஊழியம்) செய்வதில் தவறில்லை!

*அடியேன்:*
ஊழியர்களுடனோ அல்லது அவர்களுக்குப் பின்போ, அவர்களுடையப் பிள்ளைகள் ஊழியம் செய்கிறதற்கு எந்தத் தடையும் இல்லை. ஊழியக்காரர்களின் பிள்ளைகள் ஊழியம் செய்யக்கூடாது என்கிற கட்டளை எதுவும் வேதத்தில் இல்லை. ஆகிலும் ஊழியக்காரர்களின் பிள்ளைகள் மட்டுமே ஊழியம் செய்யவேண்டும் என்றும், அதுவும் தங்கள் தகப்பன்மார்கள் ஊழியம் செய்யும் / செய்த ஸ்தலத்தில், தங்கள் தகப்பன்மார்கள் இருந்த "சீனியர் பாஸ்டர்" அல்லது 'ஸ்தாபனத் தலைவர்" என்கிற அதே ஸ்தானத்தில் இருந்துதான் ஊழியம் செய்யவேண்டும் என்றும் வேதம் சொல்லுகிறதா? இதற்கு உங்களால் புதிய ஏற்பாட்டு ஆதிசபை ஊழியத்தில் ஒரு ஆதாரத்தையாகிலும் காண்பிக்கமுடியுமா?

*பாஸ்டர்:*
இயேசுகிறிஸ்து தனது பனிரெண்டு சீடர்களை தெரிந்து கொண்டபோது, இரண்டு குடும்பத்தில் இரண்டு இரண்டு பேரை அழைத்து இருக்கிறார். யாக்கோபு, யோவான்; பேதுரு, அந்திரேயா.

*அடியேன்:*
இயேசுகிறிஸ்து தம்முடன் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நான்குபேரை ஊழியத்திற்கு தெரிந்துகொண்டது மறுக்கமுடியாத உண்மைதான்! அதோடு தமது தாயாரின் சகோதரியின் மகன் (சின்ன) யாக்கோபையும் தம்முடன் ஊழியத்தில் சேர்த்துக்கொண்டார். (மத்.10:3; மாற்கு 15:40) இயேசுவின் சீஷர் கூட்டத்தில் எட்டுபேர் வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் அல்லவா? உங்களுடன் ஊழியம் செய்கிறவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்களா? அல்லது வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்களா? உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் / உறவினர்கள் அதிகம் இருக்கிறார்களா? அல்லது மற்றக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்களா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
அந்திரேயா - பேதுரு; யாக்கோபு யோவான் ஆகியோர், தங்களுக்குப் பின்பு ஊழியத்தை தங்கள் மனைவி அல்லது பிள்ளைகளிடம் ஒப்புக்கொடுத்தார்களா? இயேசுவின் உறவினர் சின்ன யாக்கோபு தனக்குப் பின்பு தன்னுடைய இடத்தில் தன் குடும்பத்தினரை ஊழியத்திற்கு ஏற்படுத்தினாரா? பவுல் பர்னபா தவிர்த்து, ஆதிசபையின் அத்தனை அப்போஸ்தலர்களும் திருமணம் ஆனவர்களே. (1கொரி.9:5) அவர்களில் ஒருவராவது தங்கள் ஊழியத்தை தங்கள் குடும்பத்தாரிடம் ஒப்புவித்ததாக உங்களால் நிரூபிக்கமுடியுமா? இப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் குடும்பத்தாரையே சபையில், ஸ்தாபனத்தில் பிரதானப்படுத்துகிறீர்கள்? சபையாரின் வருமானத்தில் அச்சிடும் காலண்டரில் உங்கள் பேரப்பிள்ளைகளின் புகைப்படம்வரை அச்சிட்டு ஏன் விளம்பரப்படுத்துகிறீர்கள்? இது, "எங்களுக்கு அடுத்து இவர்கள்தான் எங்கள் இடத்திற்கு" என்று சபையாரின் மனதில் பதிவிக்கும் தந்திரம் அல்லவா?

*பாஸ்டர்:*
இயேசுவின் ஊழியத்திற்கு பிறகு அவரது குடும்பத்திலிருந்து அவரது சகோதரர்கள் அதாவது மரியாளின் பிள்ளைகள் யாக்கோபு, யூதாவெல்லாம் ஊழியம் செய்திருக்கிறார்கள்.

*அடியேன்:*
யாக்கோபும் யூதாவும் மரியாளின் சகோதரி கிலெயோப்பா மரியாளின் (யோவான் 19:25) குமாரர்களாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் மரியாளின் மகன்களாகவே இருக்கட்டும். ஆதிசபையின் ஆரம்பகால 12 அப்போஸ்தலர் கூட்டத்தில் இயேசுவின் சகோதரர் யாக்கோபு ஒவருவர் மட்டுமே இருந்தார். (கலாத்.1:19) ஆதிசபையின் தூண்களாக எண்ணப்பட்ட மூவரில் ஒருவராகவும் அவர் இருந்தார். (கலா.2:9) யூதா அப்போஸ்தலரல்ல. (யூதா 1:1) இப்படியிருக்க, அப்போஸ்தலரில் / ஊழியரில் இயேசுவின் குடும்பத்தார் அதிகம்பேர் இருந்தார்களா? அல்லது மற்றவர்கள் அதிகமாய் இருந்தார்களா? சபையின் தூண்களில் மெஜாரிட்டியாக இருந்தவர்கள் இயேசுவின் குடும்பத்தினரா? அல்லது மற்றவரா? இன்று ஒரு சபையின் ஊழியத்தில் ஊழியரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களே அதிகம் இருப்பது எப்படி? ஊழியரின் குடும்பத்தினர் அல்லது உறவினர் மட்டுமே சபையின் / ஸ்தாபனத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பது எப்படி?

*பாஸ்டர்:*
மோசே குடும்பத்தில் அவன் சகோதரர் ஆரோன், சகோதரி மிரியாம் ஒரே காலக்கட்டத்தில் ஊழியம் செய்திருக்கிறார்கள்.

*அடியேன்:*
ஊழியரின் சகோதர சகோதரிகள் ஊழியம் செய்யக்கூடாது என்று வேதம் சொல்லவில்லை. ஆனால், ஊழியருடன் அவருடைய குடும்பத்தார் மட்டுமே ஊழியம் செய்யவேண்டும் என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? மோசே தனது பொறுப்பை தன் குடும்பத்தை சாராதா தன் உடன் ஊழியன் யோசுவாவுக்கு விட்டுக்கொடுத்ததுபோல (எண்.27:15-23) விட்டுக்கொடுக்க, இன்று எத்தனை ஊழியர்கள் ஆயத்தமாய் இருக்கிறார்கள்? ஆரோனின் குடும்பத்தார் ஆசாரியராக ஊழியம் செய்த அதே காலத்தில் ஆசரிப்புக்கூடாரத்தில் லேவிகோத்திரத்தை சேர்ந்த பல குடும்பத்தினர் ஊழியம் செய்ததுபோல, தங்கள் குடும்பத்தினருடன் சபையில் ஊழியம் செய்ய மற்றக்குடும்பங்களை அனுமதிக்க எத்தனை ஊழியர்கள் இன்று ஆயத்தமாய் இருக்கிறார்கள்?
மிரியாமுக்குப்பிறகு, மோசேயின் குடும்பத்தில் தீர்க்கதரிசியாக இருந்தப் பெண்மணி யார்?

*பாஸ்டர்:* 
அறுவடை மிகுதி ஆட்கள் குறைவு. அப்பா ஊழியத்தை பிள்ளைகள் செய்யட்டும்,! ஏன் பேரப்பிள்ளைகள் கூட செய்யட்டும்.

*அடியேன்:*
மிகுதியான அறுப்புக்கு எஜமான் வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ள (மத்.9:37,38)
ஆண்டவர் கட்டளையிட்டாரா? அல்லது "உங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளையே உங்களுடனும் உங்களுக்குப் பின்னும் அறுப்புக்கு நியமித்துக்கொள்ளுங்கள்" என்று கட்டளையிட்டாரா? இன்று பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தங்கள் குடும்பத்தினரை மட்டுமே ஊழியத்திற்கு பயிற்றுவிக்கிறார்கள்? பயன்படுத்துகிறார்கள்? எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை (வேறு குடும்பங்களிலிருப்தும்) அனுப்பும்போது ஏன் இவர்கள் தடைசெய்கிறார்கள்? அல்லது சபைக்கு வெளியே தள்ளிவிடுகிறார்கள்? ஒரு பக்கம் வேலையாட்களை அனுப்பும்படி ஜெபித்துக்கொண்டு, தேவன் அனுப்புகிற வேலையாட்களை தடைசெய்கிறது வேதத்திற்கு முரணான மோசடியல்லவா?

*பாஸ்டர்:*
தேசம் நமக்கு முன்பாக பரந்து விரிந்து கிடக்கிறது. ஆபிரகாம் லோத்துவுக்கு விட்டுக் கொடுத்தது போல நாம் விட்டுக்கொடுத்துவிட்டு,
கர்த்தர் நமக்கு கொடுப்பதை பார்த்து, அதை கால் மிதித்து, அதை சுதந்தரிப்போம்.

*அடியேன்:*
"எங்கள் குடும்பத்தினர் ஆயத்தமாகிறவரைக்கும் எங்களுடன் சேர்ந்து ஊழியத்திற்காய் ஜெபியுங்கள், எங்களுடன் ஊழியத்திற்கு வாருங்கள், எங்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடுங்கள், ஆராதனை நடத்துங்கள், இசைக்கருவிகளை வாசியுங்கள், ஊழியத்திற்கு தாராளமாய் அள்ளிக்கொடுங்கள், மேற்காணும் காரியங்களைச் செய்ய எங்கள் குடும்பத்துப் பிள்ளைகள் ஆயத்தமாகிவிட்டால், நீங்கள் சத்தமில்லாமல் ஒதுங்கிக்கொள்ளுங்கள். முழுநேர ஊழியம் செய்வதற்கு எங்கள் குடும்பத்தார் ஆயத்தமாகிவிட்டடப் பிறகு, உடன் ஊழியர்களும் ஊழிய அழைப்புள்ள விசுவாசிகளும் எங்களுக்கு அடிமைகளாய் இருந்ததுபோல எங்கள் குடும்பத்தாருக்கும் அடிமைகளாய் இருக்கக்கூடுமானால் தொடர்ந்து சபையில் / ஸ்தாபனத்தில் இருங்கள். இல்லையேல், எங்கள் குடும்பத்தாருக்கு தொந்தரவாயிராதபடிக்கு வேறு எங்காவது போய் ஊழியம் செய்யுங்கள்" என்று மறைமுகமாக சொல்லவருகிறீர்கள் அல்லவா? ஊழியம் வளர்ந்தப் பின்பு, இந்தனை காலம் சேர்ந்து ஜெபித்த, உழைத்த, தியாகமாய் கொடுத்தவர்களைத் தள்ளிவிட்டு 'தேவசித்தம்', "ஆவியானவரின் நடத்துதல்" என்றெல்லாம் அறியாமையில் உள்ள ஜனங்களை நம்பவைத்து, ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு முடிசூட்டுவது அநியாயமும் அயோக்கியத்தனமும் அல்லவா? அப்படியே, ஆபிரகாம் லோத்துவுக்கு விட்டுக்கொடுத்ததைப் போல விட்டுக்கொடுக்க வேண்டுமானால், தலைமை போதகர் / ஸ்தாபனத் தலைவர் அல்லவா தன் உடன் ஊழியருக்கு சபையை / ஸ்தாபனத்தை விட்டுக்கொடுத்துவிட்டு வெளியேறவேண்டும்? ஒரு வசனத்தக்கூட ஒழுங்காக வியாக்கியானம் பண்ணத்தெரியாத நீங்கள் எப்படி ஒரு சபையை நடத்துகிறீர்கள்? உங்கள் நிலை இப்படி என்றால் உங்களிடம் கற்றுக்கொண்ட உங்கள் பிள்ளைகளின் நிலை என்னவாக இருக்கும்? உங்களாலும் உங்கள் பிள்ளைகளாலும் நடத்தப்படும் சபையின் நிலை என்னவாக இருக்கும்?

*பாஸ்டர்:*
நமக்கு வாக்குவாதம் செய்யவோ, வீண்பேச்சு பேசவோ நேரமில்லை.

*அடியேன்:*
சத்திய ஆவியானவரால் கண் திறக்கப்பட்டு, சத்தியத்தின் அடிப்படையில்லாத ஊழியங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராகக் கேள்வி எழுப்புகிறவர்கள் வாக்குவாதம் செய்கிறவர்களா? வேத அடிப்படையற்ற ஊழியங்களை விமர்சிக்கிறவர்கள் வீண்பேச்சு பேசுகிறவர்களா? "நமது முகமூடியை விலக்கிக் காண்பித்துவிடுகிறார்களே" என்கிற எரிச்சலால்தான் 'வாக்குவாதம்', 'வீண்பேச்சு' என்று சாடுகிறீர்கள்?

*குறிப்பு:*
ஊழியரின் குடும்பத்தார் ஊழியம் செய்யககூடாது என்று வலியுறுத்துவது இந்தக் கட்டரையின் நோக்கமல்ல, மாறாக, மற்றவரையும் ஊழியம் செய்ய உற்சாகப்படுத்தவும், பயிற்றுவிக்கவும், பொறுப்புகளை பகிர்ந்தளிக்கவும் வலியுறுத்துவதாகும்!

இன்று நூற்றுக்கு 99 ஊழியர்கள் மேற்காணும் பாஸ்டரைப் போன்ற மனநிலையுள்ளவர்களாகவே இருக்கிறதை எவரும் மறுக்கமுடியாது!

இன்று மற்ற நான்கு விதமான அழைப்புள்ள ஊழியர்களும் தங்கள் சுயநலம் மற்றும் குடும்பநலன் சார்ந்த ஊழியர்களாக மாறிப்போனதற்கு வழிகாட்டினவர்கள் மேய்ப்பர் ஊழியத்தை செய்கிறவர்களே என்பதை மனச்சாட்சியும் தெய்வபயமும் உள்ள மேய்ப்பர்களால் மறுக்கமுடியாது! 

வேத அடிப்படையிலான ஊழியங்களையும், சத்திய அடிப்படையிலான சபைகளையும் இன்று காணமுடியாததற்கு, தங்கள் குடும்பத்தை மையமாக வைத்து, வேறு எரையும் ஊழியத்தில் வளரவிடாத, முக்கியப் பொறுப்புகளை தங்கள் குடும்பத்தாரைத் தாண்டி வேறு எவருடனும் பகிர்ந்துகொள்ளத இவர்களை போன்றவர்களே காரணம்!

[நீங்கள் குடும்ப நலனுக்காக ஊழியத்தை ஆதாயத் தொழிலாய் செய்யாதவரானால், நிச்சயம் இந்த செய்தியை மற்றவருக்கும் பகிருவீர்கள் என்று நம்புகிறேன்! இதை வாசிக்கும்போதே "இதை ஒருவரும் அறிந்துகொள்ளக்கூடாது" என்கிற எண்ணம் உங்களுக்கு உண்டாகுமானால், நீங்கள் தேவனுக்கு அல்ல, உங்கள் வயிற்றுக்கே ஊழியம் செய்கிறவர்கள் என்பதை நிச்சயித்துக்கொள்ளலாம்]
க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920


==================
[போர்ப்ஸ் பத்திரிகையில்... போதகரின் பணியை பற்றி வந்தாக பாஸ்டர்கள் தீவிரமாகப் பரப்பும் தகவலும், அதைக்குறித்து அடியேனின் வேத அடிப்படையிலான பார்வையும் கேள்விகளும்]
===============
*இந்த உலகத்தில் மிகவும் கடினமான ஐந்து வேலைகளில் போதகர் பணி (Pastors Jop) மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதற்காக ஒரு சபையின் போதகரை பேட்டி எடுத்த போது அந்த போதகர் சொன்ன பதில் இதோ....*

(தேவன் தமது சபைக்கு ஐந்துவிதமான ஊழியர்களை ஏற்படுத்தியிருக்கையில் (எபே.4:11-13), பாஸ்டர் பணி மட்டுமே மிகவும் கடினமானது என்று இந்த பாஸ்டர் எப்படி கண்டுபிடித்தார்? ஐந்துவிதமான அழைப்பிலும் இறுதிவரை ஊழியம் செய்துவிட்டு இவர் இந்த முடிவுக்கு வந்தாரா? புதிய ஏற்பாட்டு சபையில் அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர் மற்றும் போதகர் இவர்களைவிட கடினமாக ஊழியஞ்செய்த ஒரு பாஸ்டரையாகிலும் இவர் பார்த்திருக்கிறாரா? இறுதிவரை அப்போஸ்தலராகவோ, தீர்க்கதரிசியாகவோ, சுவிசேஷகராகவோ, போதகராகவோ இராத இவர், அவர்களின் ஊழியங்கள் மேய்ப்பர் ஊழியத்தைவிட லேசானவை என்கிற முடிவுக்கு எப்படி வந்தார்?)

*நான் ஒரு சபையின் போதகர். எனக்கு 24×7 அதாவது இருபத்தி நான்கு மணி நேரமும் வேலை உண்டு. ஒரு வீட்டில் மரணம் என்றால் நான் அங்கு இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, எந்த நல்ல காரியமோ கெட்ட காரியமோ அந்த வீட்டில் இருந்தாலும் முதல் ஆளாக நான் போய் நிற்க வேண்டும். கடைசி வரை அந்த குடும்பத்திற்கு துணை நிற்க வேண்டும்.*

(ஒருநாளின் 24 மணிநேரமும் ஊழியத்தைப்பற்றி மட்டுமே சிந்திக்கிற, ஊழியத்தை மட்டுமே செய்கிற ஒரு பாஸ்டரையாவது இந்த பாஸ்டரால் உலகத்தில் எங்காவது காண்பிக்கமுடியுமா? சரி, ஐந்துவிதமான ஊழியரும் சேர்ந்து செய்யவேண்டிய ஊழியத்தை (அப்.15:2,22) இந்த பாஸ்டர் மட்டுமே செய்ய விரும்புகிறதின் காரணம் என்ன? சபையாரின் பணமும் கனமும் தனக்கு மட்டுமே சேரவேண்டும் என்பதற்காகத்தானே? இல்லையேல், மற்ற அழைப்புள்ளவரை சேர்த்துக்கொண்டு அல்லது மற்ற அழைப்புள்ளவரோடு சேர்ந்து (அப்.13:1) இவர் சபையாருக்கு துணையாக நிற்கலாம் அல்லவா?)

*நான் நல்ல பிரசங்கம் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் மக்கள் வேறு சபைக்கு போய் விடுவார்கள்.*

(தான் நல்ல பிரசங்கம் செய்யாவிட்டாலும் மக்கள் தொடர்ந்து தன்கூடவே இருக்கவேண்டும் என்று இந்த பாஸ்டர் எதிர்பார்க்கிறாரா? நல்ல சம்பளம், நல்ல விசாரிப்பு இல்லாத ஸ்தாபனத்தில் எத்தனை பாஸ்டர்களால் கடைசிவரை நிலைத்திருக்கமுடியும்? சரி, நல்ல பிரசங்கம் பண்ணுகிறதில் இந்த பாஸ்டருக்கு என்ன பிரச்சனை? இது இவருடைய கடமைதானே? (2கொரி.2:17; 1தெச.2:3-5; 2தீமோ.2:15; தீத்து 2:1-8)
அதற்காகத்தானே சபையார் இவருக்கு காணிக்கைக் கொடுக்கிறார்கள்? (கலா.6:6; 1தீமோ.5:17,18) இதை ஏன் இவர் ஒரு பெரிய சாதனையாகக் காண்பித்துக்கொள்ளவேண்டும்? தன்னால்
நல்லப் பிரசங்கம் பண்ணமுடியவில்லையென்றால், "ஐந்துவிதமான ஊழியர்கள்" செய்யவேண்டிய பிரசங்கத்தை என் ஒருவனால் மட்டுமே செய்யமுடியாது" என்று இவர் சபையாரிடம் அறிக்கையிடுவதோடு, மற்ற அழைப்புள்ள ஊழியர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, அல்லது அவர்களை வரவழைத்து சபையாருக்கு பிரசங்கம்பண்ணவைக்கலாமே?)

*நல்ல உபதேசம் செய்ய வேண்டும். இல்லையென்றால் என்னை கள்ள பிரசங்கி என்று முத்திரை குத்திவிடுவார்கள்.*

(நல்ல உபதேசம் செய்யாவிட்டாலும் சபையார் தன்னை நல்ல பிரசங்கி என்று பாராட்டவேண்டுமென்று இந்த பாஸ்டர் எதிர்பார்க்கிறாரா? நல்ல உபதேசத்தை கொடுப்பதைப் பார்க்கிலும் இவருக்கு வேறு என்ன பெரியவேலை இருக்கிறது? (அப்.6:4) கள்ளப்பிரசங்கிகளிடம் இருந்து காக்கவும், நல்ல போதகத்தைக் கொடுக்கவுந்தானே கர்த்தர் இவரையும் தமது சபைக்கு ஐந்துவிதமான ஊழியரில் ஒருவராக ஏற்படுத்தியிருக்கிறார்? (எபே.4:14,15))

*பொருளாதாரம் அதாவது பணப்பிரச்சினை சபையில் எழும்பும் போது எனது தலைதான் உருளும்.*

(சபையாரின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்பட வழிகாட்டவேண்டிய இடத்தில் இருக்கிற இவர் (அப்.2:42,44,45; 4:32,34,35; ரோமர் 12:13; கலாத்.6:10; 1தீமோத்.6:17-19; யாக்.2:15,16; 1யோவான் 3:16-18),
சபையாரின் பொருளாத பிரச்சனைகளிலிருந்து ஏன் தப்பிச்செல்ல விரும்புகிறார்?
சபையாரிடம் பொருளாதார லாபம் அடைகிற இவர், சபையாரின் பொருளாதார பிரச்சனையை குறித்து கவலையற்றவராக இருக்கமுடியுமா?)

*எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் பாஸ்களுக்கு அதாவது விசுவாசிகளுக்கு தலைவனாக நான் இருக்கிறபடியால் எனது வார்த்தையிலும் நடக்கையிலும் மிகவும் கவனமாக நடக்கவேண்டும்.*

(வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்கவேண்டியது ஒரு ஊழியக்காரனின் கடமைதானே? (1தீமோ.4:12)
தன்னைக்குறித்தும் தன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிருந்து, தன்னையும் தன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளவேண்டியது ஒரு ஊழியக்காரனின் கடமைதானே? (1தீமோத்.4:16) இதை செய்யத்தவறினால் சபையார் குறைசொல்லத்தானே செய்வார்கள்? இப்படியிருக்க, தான் செய்ய அவசியமில்லாதக் காரியத்தை சபையார் தன்னிடம் எதிர்பார்க்கிறதாக இவர் ஏன் அலுத்துக்கொள்ளவேண்டும்?)

*என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பினவர்கள், எனக்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கும் நான் மரியாதையும் அன்பும் ஆதரவும் செலுத்தவேண்டும்.*

(ஆம், தான் விசுவாசிகளில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறாரோ அவ்வளவு குறைவாய் அவர்களால் அன்புகூரப்பட்டாலும், மிகவும் சந்தோஷமாய் தான் அவர்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் ஆயத்தமாய் இருக்கவேண்டியது ஒரு ஊழியரின் கடமைதானே?
(2கொரி.12:15) கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும், தன்னை தேவஊழியனாக விளங்கப்பண்ணவேண்டியது ஒரு ஊழியக்காரனின் கடமையல்லவா? (2கொரி.6:8-10) இப்படியிருக்க, தன்னிடம் எதிர்பாக்கக்கூடாதக் காரியத்தையெல்லாம் சபையார் எதிர்பார்க்கிறதாக இவர் எப்படி அலுத்துகொள்ளமுடியும்?

*பல நேரங்களில் நானே சபையின் பாத்ரூமை சுத்தம் செய்து சபையையும் பெருக்கி சேர் போட்டிருக்கிறேன்.*

(விசுவாசிகளுக்கு அவர்களுடைய கிருபை வரங்களுக்கேற்ற பொறுப்புகளை (ரோமர் 12:6-8) பகிர்ந்துகொடுக்க மனதில்லாத, ஆவியின் வரங்களைப்பற்றி சபையாருக்கு போதித்து, அவைகளைப் பெற்று சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்த (1கொரி.12:1-10) பயிற்றுவிக்காத பாஸ்டர்கள், இவரைப்போலவே பாத்ரூமை சுத்தம் செய்து, சபை கூடும் இடத்தையும் பெருக்கி, சேர் போடவேண்டியதுதான்! சபையில் தான் மட்டுமே எல்லாமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறவர் எல்லா வேலையையும் தான்தானே செய்யவேண்டும்?)

*ஒரு நாள் அப்படி வாஷ்ரூமை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு சகோதரி என்னிடம் டாய்லெட் கிளீன் பேப்பர் இல்லை என்றார்கள். இன்னொருவர் பக்கத்தில் உள்ள டாய்லெட்டில் தண்ணீர் போகவில்லை அடைத்திருக்கிறது என்று சொன்னார்கள் நான் மனம் கோனாமல் சுத்தம் செய்தேன். அந்த டாய்லெட் கிளீன் பேப்பரை எடுத்து கொடுத்தேன்.*

(ஒரு ஊழியன் சத்தியத்தின் அடிப்படையில் சபையாருக்கு ஊழியஞ்செய்தால், சபையாரும் அவருக்கு சத்தியத்தின் அடிப்படையிலான மரியாதையை கொடுப்பார்கள் அல்லவா? (அப்.2:42; 5:11-13; 16:14,15; 21:5) தங்களை எந்தவிதத்திலும் உருவாக்காத ஒரு ஊழியருக்கு விசுவாசிகள் எப்படி ஒத்துழைப்பார்கள்? ஆராதனை செய்யவைப்பது, அந்நியபாஷையில் பேசவைப்பது, கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கவைப்பது தவிர, தேவனுக்கு பயன்படத் தங்களை உருவாக்கும் (1கொரி.12:31; 14:1,12; 1பேதுரு 4:10,11) தரிசனமில்லாத ஒரு ஊழியனுக்கு எப்படி சபையார் சேவைசெய்வார்கள்?)

*எனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்தது ரொம்ப குறைவு. திருப்தி அடையாத விசுவாசிகளை திருப்திபடுத்தவே பல யுக்திகளை நான் கையாளுகிறேன்.*

(ஐந்துவிதமான அழைப்புள்ளவர்கள் செய்யவேண்டிய அத்தனை வேலைகளையும் (1கொரி.3:5-10) தான் ஒருவரே செய்யநினைக்கும் இந்த பாஸ்டருக்கு குடும்பத்துடன் செலவிட எப்படி நேரம் கிடைக்கும்? இது இவரது தவறல்லவா? தனது குடும்பத்தோடு நேரம் செலவழித்து, அவர்களை நடத்தத் தவறும் இவர் எப்படி தேவனுடைய சபையை சரியாக நடத்துகிறவராக இருப்பார்? (1தீமோ.3:6)
திருப்தி அடையாத விசுவாசிகளை திருப்திபடுத்த இவர் ஏன் பல யுக்திகளை கையாளவேண்டும்? மனுஷரை நாடி போதித்து, மனுஷரை பிரியப்படுத்தப்பார்க்கிற இவர், தான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல என்று ஒத்துக்கொள்வாரா? (கலாத்.1:10) ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களானவர்களின் சுய இச்சைகளுக்கேற்ற போதகராக தான் இருக்கிறதாக இவர் அறிக்கையிடுவாரா? (2தீமோத்.4:3,4) பொருளாசையுடையவராய் தந்திரமான வார்த்தைகளால் விசுவாசிகளைத் தனக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்வதாக ஏற்றுக்கொள்வாரா? (2பேதுரு 2:1,3))

*என்னிடம் மக்கள் சொல்லும் இரகசியங்களை பாதுகாக்க மிகவும் சிரமப்படுகிறேன்.*

(ஒரு நல்ல ஆலோசகராக மக்கள் சொல்லும் இரகசியங்களை பாதுகாக்கவேண்டியது ஒரு ஊழியனின் கடமையல்லவா? இரகசியங்களை பாதுகாக்க சிரமப்படுகிற இவர், இரகசியங்களைப் பாதுகாக்க வல்லவர்களான தன் உடன் ஊழியரை அல்லது நல்ல முதிர்ச்சியும் சாட்சியுமுள்ள விசுவாசிகளை ஆலோசனை கொடுக்கும் ஊழியத்தில் பயன்படுத்தலாமே? (ரோமர் 12:8; 15:14; 2கொரி.8:7) 
அதற்கு அவர்களுக்கு சிறப்பு பயிற்சியையும் ஏற்பாடு செய்யலாம் அல்லவா? எல்லாவற்றையும் தானே செய்யவேண்டும் என்கிற வேதத்திற்கு முரணான சிந்தயைுள்ள ஒரு பாஸ்டர் இப்படிப்பட்ட நெருக்கடிகளை சந்திப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?)

*சொந்த குடும்பத்தின் புரிதலுக்கு நான் அந்நியனாகிறேன்.*

(தன் மனைவி மற்றும் பிள்ளைகளால் புரிந்துகொள்ளமுடியாதவராக ஒரு பாஸ்டர் இருக்கவேண்டும் என்று இயேசுகிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறாரா? தன் குடும்பத்தாரையே எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கமுடியாத ஜென்மசுபாவத்தாராக வைத்திருக்கும் இவரால் (1கொரி.2:14,15), சபையாரை எப்படி ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு நேராக நடத்தமுடியும்? தன் குடும்பத்தாராலேயே புரிந்துகொள்ளமுடியாத இவரை, சபையார் எப்படி புரிந்துகொள்ளமுடியும்? ஒரு ஊழியனுடைய ஊழியமும் (பிலி.4:15; 1தெச.1:5; 2தெச.2:1,12; 2தீமோ.3:11), ஜீவியமும் (1தெச.2:10; 2தெச.3:7) பிறருக்கு திறந்த புத்தகமாக இருக்கவேண்டாமா? ஒரு ஊழியக்காரன் தன் குடும்பத்தாருக்கே எப்படி புரியாத புதிராக இருக்குடியும்? தன்னையே புரிந்துகொள்ளமுடியாத தன் குடும்பத்தாரிடம், ஒரு ஊழியர் தேவனுடைய சபையை எப்படி ஒப்படைக்கிறார்?)

*எந்த இடத்திற்கும் நான் நிம்மதியாக போயிட்டு வர முடியாது. எப்பவும் சபை சபை என்ற நினைப்புதான் என் மனது நிறைந்திருக்கும்.*

(எந்த இடத்திற்கும் ஏன் இவரால் நிம்மதியாகப் போய்வரமுடியவில்லை? எப்பவும் 'சபை', 'சபை' என்று ஏன் இவருக்கு மனது அடித்துக்கொள்கிறது? சபையார்மேல் இவருக்கு நம்பிக்கையில்லாததுதானே இதற்குக்காரணம்? தனக்கு இணையாகவோ, இடைஞ்சலாகவோ ஒருவர் சபையில் எழும்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறவர்களுக்கு இந்த பதற்றம் இருப்பது இயல்புதானே? உடன் ஊழியருக்கு போதுமான உரிமை கொடுக்காத, விசுவாசிகளுக்கு பொறுப்புகளை பகிர்ந்தளிக்காத ஒரு ஊழியரால் எப்படி எங்கும் நிம்மதியாகப் போய்வரமுடியும்?)

*யாராவது சபையை விட்டு போனால், அதை நினைத்து வேதனைப்பட்டு சாப்பிடாமல், வியாதிப்படுகிறேன்.*

(சபையைவிட்டு சிலர் ஏன் வெளியேறுகிறார்கள்? சபையார் வெளியேறுகிறதற்கு இவரோ, இவருடைய குடும்பத்தாரோ ஒருபோதும் காரணமாக இருந்ததில்லையா? வெளியேறுகிறவரைத் திரும்பக் சபைக்குள் கொண்டுவர இவர் எடுக்கிற முயற்சி என்ன? (மத்.18:12-14) அவர்களுடைய ஆத்துமாக்களைக்குறித்த கவலையுள்ளவராக சாப்பிடாமல் இவர் வியாதிப்படுகிறாரா? அல்லது அவர்களால் வரும் ஆதாயத்தை இழந்ததற்காக வேதனைப்பட்டு சாப்பிடாமல் வியாதிப்படுகிறாரா? தங்கள் ஆத்துமாவைக் குறித்து கவலைப்படுகிற இவரைவிட்டு சபையார் எப்படி வெளியேறமுடியும்? (எபிரே.13:17) இவர் தங்கள் ஆத்துமாவைகுறித்து அதிக பாரப்படுகிறவர் என்பதை அறிந்திருந்தும் இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து சபையைவிட்டு வெளியேறுகிறவர்களுக்காக (2தீமோ.4:10) இவர் ஏன் வேதனைப்பட்டு, சாப்பிடாமல் வியாதிப்படவேண்டும்?)

*கால்பந்து மைதானத்தில் உள்ள பந்தை போல நான் அநேக வேளைகளில் எல்லோராலும் உதைக்கப்படுகிறேன். அவர்கள் கோலுக்காக என்னை உதைக்கிறார்கள்.* 

தேவனுடைய கால்பந்து மைதானத்தில் பாஸ்டர் என்கிற ஒரே பந்துக்கு மட்டுமே வேலையில்லை. அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர், போதகர் என்கிற மற்ற நான்கு பந்துகளுக்கும் அங்கு வேலை உண்டு என்பதை இவர் அறியாதவரா? (அப்.1:26; 13:1; 15:2,22,32-34; 20:28; 21:8-10) கால்பந்து மைதானத்தில் தான் ஒருவரே, ஒரே பந்தாக இருக்கவேண்டும் என்று விரும்புகிற இவர் மட்டுமே உதைபடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?)

*எனது தேவைகளை உணர்வுகளை மற்றவர்களை போல வெளியே சொல்லமுடியாது அப்படி சொன்ன பின்னர் ஏன் இதை சொன்னோம் என்று மனது படபடக்கும்.*

(ஒரு ஊழியன் தனது உணர்வுகளையும் (1கொரி.4:9-14; 9:15; 2கொரி.11:16-31) தேவைகளையும் (1கொரி.9:6-12; 2கொரி.11:8; கலாத்.6:6; 1தீமோ.5:17,18) தன்னால் நடத்தப்படுகிற ஜனங்களிடம் ஏன் சொல்லக்கூடாது? சத்தியத்தின்படி அவர்கள் தனக்கு கொடுக்கவேண்டியதை போதிக்கிறது தவறாகுமா? சத்தியத்தின்படி ஊழியம் செய்யாமல், மக்களிடம் தேவைகளை தெரிவிப்பதனாலேயே இவருடைய மனம் படபடப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?)

*கடைசியாக நான் ஒன்று உங்களுக்கு சொல்கிறேன் இதெல்லாம் தெரிந்துதான் நான் இந்த பணியை செய்கிறேன். காரணம் என்னை அழைத்த எனது பாஸ் அதாவது தலைவர் ரொம்ப நல்லவர்.*

(கஷ்டங்கள் மற்றும் பாடுகள் இல்லாத ஒரு ஊழியத்தை செய்யவா தேவன் ஒரு ஊழியனை அழைத்திருக்கிறார்? (லூக்கா 9:23; மத்.10:16-19; யோவான் 15:18-21; 16:33) ஊழியத்திலுள்ள நெருக்கங்களையெல்லாம் அறிந்தே ஊழியத்திற்கு வந்த ஒரு பாஸ்டர், தான் உலகத்தில் மூன்றாவது கடினமான வேலையை செய்கிறதாக பெருமைப்பட்டுக்கொள்வதோ, அல்லது சுயபரிதாபங்கொள்வதோ அருவருப்பான செயல் அல்லவா? மற்ற அழைப்புள்ளவர்களைவிட பாஸ்டர்களுக்கே தேவனுடைய சபையில் பொறுப்பும் பாடுகளும் அதிகம் என்கிற வேத அடிப்படையற்ற ஒரு கற்பனைவாதத்தை கட்டமைக்க இவர் முயற்சிக்கிறார் அல்லவா? "தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும்,.... ஏற்படுத்தினார்" என்று சொல்லப்பட்டிருக்க (1கொரி.12:28), தேவனுடைய சபையின் முதன்மை நிர்வாகிகளான அப்போஸ்தலர், தீர்க்கதரிசி மற்றும் போதகரைவிட மேய்ப்பர்கள் அதிக கஷ்டப்படுகிறவர்களாக இருக்கக்கூடுமா? மற்ற அழைப்புள்ளவர்களைவிட அதிக கஷ்டப்பட்டு ஊழியஞ்செய்த ஒரு மேய்ப்பரையாகிலும் இவரால் ஆதிசபையில் காண்பிக்கமுடியுமா? மற்ற அழைப்புள்ளவர்களைவிட பாஸ்டரின் ஊழியம்தான் அதிக பொறுப்பும் பாடுகளும் நிறைந்தது என்பதற்கான ஆதாரத்தையும் இவரால் ஆதிசபையிலிருந்து காண்பிக்கமுடியுமா? மற்ற அழைப்புள்ளவர்கள் படுகிற பாடுகளைப்பற்றி இவருக்குத் தெரியுமா? ஒரு அப்போஸ்தலருக்கு இணையான ஊழியத்தை செய்யவும் (2தீமோத்.1:10,11; 
ரோமர் 15:18-21), ஒரு அப்போஸ்தலருக்கு இணையாய் பாடுபடவும் (1கொரி.4:9-14; 2கொரி.11:16-31) ஒரு பாஸ்டரால் கூடுமா?)

*நண்பர்களே இந்த பதிவை எழுதும்போது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. காரணம் நானும் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் இதை அனுபவித்து கொண்டு வருகிறேன். தயவுசெய்து ஒவ்வொரு போதகர்களையும் இரட்டிப்பான கனத்திற்கு பாத்திரராக எண்ணுங்கள். எந்த ஒரு போதகரையும் அற்பமாக, அவமானமாக எண்ணாதிருங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.*

(சுகபோகமாக வலம்வரும் சில அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர் மற்றும் போதகர்களைப் போலவே, சுகபோகமாய் வலம்வரும் சில பாஸ்டர்களும் உண்டல்லவா? அப்படியே, மேய்ப்பர்களுக்கு இணையாகவோ அல்லது கூடுதலாகவோ மற்ற அழைப்புள்ளவர்களில் பலர் தேவனுடைய ஜனங்களாகிய அவருடைய சபையை பக்திவிருத்தியடையப்பண்ணப் பிரயாசப்பட்டும், பாடுபட்டும் வருகிறார்கள் அல்லவா? மேய்ப்பர்கள் ஊழியத்திலும் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் மற்றும் போதகரின் ஊழியம் தேவனுடைய சபையில் முதன்மையானவையாக இருக்க, மேய்ப்பர் ஊழியமே முக்கியமானதென்றும், அதிக பொறுப்புள்ளதென்றும், தியாகமானதென்றும் ஒரு கற்பனையான கருத்தை மக்கள் மனங்களில் கட்டமைத்து, மற்ற அழைப்புள்ள ஊழியர்களைவிட தங்களை அதிகமாய் நேசிக்கவும், போஷிக்கவும், மதிக்கவும் அவர்களை திருப்புகிறதற்காய், ஆறுமாதத்திற்கு ஒருமுறை இப்படி பாஸ்டர்களைப் பற்றி பெருமையாய் பேசும் செய்திகளை வைரலாக்கி, "தேவமக்களே, பாஸ்டர்களாகிய எங்களுக்கே அதிக மரியாதை கொடுங்கள், பாஸ்டர்களாகிய எங்களையே அதிகம் கவனியுங்கள்" என்று மறைமுகமாகக் கெஞ்சுவது தங்களைத்தாங்களே பாஸ்டர்கள் சிறுமைப்படுத்திக்கொள்ளும் காரியம் அல்லவா? 
மக்களிடம் மரியாதையை இப்படி கெஞ்சிக்கேட்டா வாங்கவேண்டும்!
கர்த்தரால் புகழப்படாமல், தன்னைத்தான் புகழுகிறவனா உத்தமன்? (2கொரி.10:18) மனுஷரால் வரும் மகிமையை எதிர்பார்ப்பதா ஊழியம்? (மத்.23:7; யோவான் 5:41; 12:43) இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிற ஒருவர் பிதாவானவரிடத்தில் அல்லவா கனத்தை எதிர்பார்க்கவேண்டும்? (யோவான் 12:26)

இப்படி மலிவான விளம்பரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடிக்க போட்டிப்போடுகிறததை விட்டுவிட்டு, தேவனுடைய மனதில் இடம்பிடிக்க தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை அனைத்து அழைப்புள்ளவரும் உண்மையும் உத்தமுமாய் செய்ய முன்வரவேண்டும்!!(மத்.25:14-23)

*"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல. எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது"* என்று பவுல் சொல்லுகிறதை அனைத்து அழைப்புள்ள ஊழியரும் மனதில் பதித்துக்கொள்ளவேண்டும்!!
(2கொரி.3:5)

[வளர்ந்துவரும் இளம் பாஸ்டர்கள் தங்களைகுறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுவதற்குத் தூண்டும் இந்த வேத அடிப்படையற்ற செய்தி, தங்கள் அழைப்பையும் சபை நிர்வாகத்தைக் குறித்த வேத அடிப்படையிலான தெளிவில்லாத பாஸ்டர்களால் வெளியரங்கமாய் வைரலாக்கப்படுவதால், வளரும் அவர்களை இப்படிப்பட்ட மேட்டிமையான சிந்தையிலிருந்து தப்புவிக்கும் நோக்கில், இந்த செய்திக்கு வெளியரங்கமாய் பதிலளிக்கவேண்டிய நிர்பந்தம் அடியேனுக்கு உண்டாகிவிட்டது]

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920


========================
சமீபத்தில் பிரபலமான ஊழியர் ஒருவர் தன் மகளுக்கு இரண்டரை கோடி ரூபாய் செலவழித்து ஆடம்பரமாக திருமணம் செய்துவைத்ததாகவும், 200 பவுன் நகையையும், சென்னையில் ஒரு பெரிய வீட்டையும் வரதட்சணையாகக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறதே?
=================

✍️ சொல்லப்படுகிற எல்லாவற்றையும் தீர விசாரிக்காமல் அப்படியே நம்பிவிடக்கூடாது!

பிரபல ஊழியர் வரதட்சணை கொடுத்தும் இருக்கலாம், கொடுக்காமலும் இருக்கலாம்.

*நூற்றுக்கு 99 ஊழியக்காரர்கள் வரதட்சணை வாங்குகிறார்கள். ஆனால் வெளியே சொல்லுகிறதில்லை. சம்பந்தி வீட்டோடு பிரச்சனை வருகிறவரை வரதட்சணை கொடுக்கிறவர்களும் வாயை திறக்கிறதி்ல்லை!*

சம்பந்தப்பட்டவர் புகார் அளிக்காதவரை சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடிகிறதில்லை. 

ஜாதி மற்றும் வரதட்சணை என்பது பெரும்பாலான கிறிஸ்தவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சகஜமான ஒரு காரியமாகிவிட்டது! 

*"இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது" என்று பத்திரிக்கையில் போட்டுக்கொண்டு, சாத்தானுடைய அத்தனை வேலைகளையும் பார்க்கும் அயோக்கியத்தனத்தை கிறிஸ்தவர் செய்கிறது அருவருக்கத்தக்கது!*

ஊழியக்காரர் வீட்டில் பெண் எடுக்கிற ஊழியக்காரர்களே, 'வரதட்சணை' என்கிற பெயரில் பெண்வீட்டாரை கொள்ளையிட்டு, அவர்களை பல ஆண்டுகள் மீளமுடியாதக் கடனில் தள்ளிவிடும் அக்கிரமத்தை செய்கிறதையும் காணமுடிகிறது!

*இவர்கள் ஊழியம் செய்கிறதற்கு பதிலாக, நேரடியாகக் கொள்ளையடிக்கவும், வீடுபுகுந்துத் திருடவும் செல்லலாம்!*

ஆடம்பரமான திருமணம், அதிக வரதட்சணை என்பது இன்று பணக்கார ஊழியர்களின் பாணியாகிவிட்டது. ஏழை ஊழியர்களும் தங்கள் திராணிக்கு மிஞ்சி கடன்வாங்கியாகிலும் செலவுசெய்து, தங்கள் கௌரவத்தைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறதைக் காணமுடிகிறது!

இப்படியிருக்க, திருமணத்திற்கு ஆடம்பரமாக செலவுசெய்தார், அதிக வரதட்சணைக் கொடுத்தார் என்று ஒரு குறிப்பிட்ட ஊழியரை மட்டும் குற்றப்படுத்துவது நியாயமல்ல!
 
"ஆடம்பரமாக செலவுசெய்கிறார்" என்றோ அல்லது கஞ்சத்தனமாக செலவழிக்கிறார் என்றோ சொல்லக்கூடாதபடிக்கு, ஊழியக்காரர்கள் தேவன் தங்களுக்கு கொடுத்திருக்கும் வசதி வாய்ப்பிலிருந்து எந்தக் காரியத்திற்கும் நிதானமாய் செலவு செய்யவேண்டியது அவசியம். 

"நமது கல்வி தகுதியின் அடிப்படையில் நாம் ஒரு வேலைசெய்து, உழைத்து சம்பாதித்திருந்தால், இவ்வளவு ஆடம்பரமாக செலவழித்திருப்போமா?" என்று யோசிக்கவேண்டும்.

*மக்கள் கடினமாய் உழைத்து எவ்வளவு தேவைகளின் மத்தியில் தியாகமாய் கொடுக்கிறார்கள் என்பதை சிந்திக்கவேண்டும்!*

நமக்கு கொடுக்கிற மக்களில் பலர் நம்மிலும் மிகவும் வசதி குறைந்தவர்களாய், அனதின தேவைகளுக்காய் போராடுகிறவர்களாய் இருக்கிறதை மனச்சாட்சியுள்ள ஊழியக்காரர்கள் உணரவேண்டும்!

வரதட்சணை வாங்குகிறது நரகதண்டனைக்குரிய பொருளாசையாகியப் பாவம் என்பதையும், அந்தப் பாவத்தில் பெண்வீட்டாரை பங்கெடுக்கவைப்பது அதிலும் பாவம் என்பதை ஊழியர்கள் உணர்ந்து மனந்திரும்பவேண்டும்! (மாற்கு 7:21-23; லூக்கா 12:15; 1கொரி.5:11; 6:10; எபே.5:3,5; கொலோ.3:5)

*ஜாதி பாகுபாடற்ற, வரதட்சணையற்ற திருமணத்திற்கு ஊழியர்களே கிறிஸ்தவர்களுக்கு மாதிரியைக் காண்பிக்கவேண்டும்!* (1தீமோ.4:12; தீத்து 2:2,8)

வரதட்சணையிலும் தசமபாகத்தை வாங்கும் இழிவான இருதயமுள்ள இரக்கமற்ற ஊழியர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளவேண்டும்!

காணிக்கைக் கொடுப்போர் கவனத்திற்கு!
ஊழியக்காரர்களுக்கு காணிக்கைக் கொடுக்கிறவர்கள் கவனிக்கவேண்டியக் காரியமும் உண்டு.

அதிக வரதட்சணை கொடுக்கக்கூடிய / வாங்கக்கூடிய அளவுக்கும், ஆடம்பரமாய் செலவழிக்கக்கூடிய அளவுக்கும் ஊழியர்களாகிய எங்களை பணத்தில் கொழுக்கவைத்து, எங்களுக்கு பெரிய அந்தஸ்தை உண்டாக்கும் கிறிஸ்தவர்களுக்கு புத்தித்தெளிவு உண்டாகவேண்டியது அவசியம்! 

நீங்கள் கொடுக்கும் காணிக்கையில் ஆடம்பரமாய் வாழ்ந்துகொண்டு, "எங்கள் தியாகமான, உண்மையான ஊழியத்திற்காகத்தான் தேவன் எங்களை இந்த அளவுக்கு உயர்த்தி வைத்திருக்கிறார்" என்று எங்களில் பலர் பொய்யைப் பரப்பத்தான் செய்வோம்! விழிப்பாய் இருக்கவேண்டியது உங்கள் கடமையாகும்!!

*உண்மையும் தியாகமுமான ஊழியத்திற்காய் தேவன் இன்றைய ஊழியராகிய எங்களை பொருளாதாரத்தில் உயர்த்துவாரானால், பவுலை எங்களிலும் நூறுமடங்கு அதிகமாய் உயர்த்தியிருக்கவேண்டுமல்லவா?* 

பவுலோ பல ஆண்டுகள் ஊழியத்திற்கு பின்பு, "இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்" என்று தனது பொருளாதார அறிக்கையை வெளியிட்டிருக்கிறாரே? (1கொரி 4:11)

மேலும் அவர், "உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்" என்று சொன்னதோடு, ஐசுவரியவானாகும் விருப்பத்தையும்
பண ஆசையையும் விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடும்படி தன் உடன் ஊழியன் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை கொடுத்தார் அல்லவா? (1தீமோ.6:9-11)

*"ஐசுவரியவான்களாகவும், பெரும் பணக்காரர்களாகவும் இருப்பதுதான் ஆசீர்வாதமான ஊழியம்" என்று உங்களை ஊழியர்களாகிய எங்களில் சிலர் நம்பவைத்து, "ஐசுவரியவான்களாகவும் பெரும் பணக்காரர்களாகவும் இருக்கிற எங்களுக்கு காணிக்கை கொடுக்கிற நீங்கள், எங்களைப்போலவே மிகவும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்" என்று உங்களை ஏமாற்றத்தான் செய்வோம்!* (2பேதுரு 2:1-3)

"எரிகிறதை இழுத்தால் கொதிக்கிறது அடங்கும்" என்று சொல்லப்படுகிறபடி, எங்களுக்கு அளவுக்கு மீறி கொடுக்கிறவர்கள் விழித்துக்கொண்டால் மட்டுமே, நாங்கள் தேவனுடைய பணத்தை நிதானமாக செலவழிக்கப் பழகுவோம்!

*எங்கள் குடும்ப மற்றும் ஊழியத்தின் அத்தியாவசியமான தேவைகளுக்கு மிஞ்சி கொடுக்கிறதை கிறிஸ்தவர்கள் தவிர்க்கவேண்டும். இல்லையேல் நாங்கள் ஆடம்பரப் பிரியராகிறது தவிர்க்கமுடியாததாகிவிடும்!*

நீங்கள் அதிகமாகக் கொடுக்கும் பட்சத்தில், எங்களில் சிலர் ஆடம்பரமான வீடு, ஆடம்பரமான வாகனம், ஆடம்பரமான ஆடை, ஆடம்பரமான ஆகாரம் இவைகளைத் தவிர்த்து, ஊழியத்திற்கு செலவுபண்ணுகிறது உண்மைதான்! ஆகிலும் அந்த ஊழியம் பெரும்பாலும் அனைவரும் வளர்வதற்கான, பயனடைவதற்கான ஊழியமாக இருப்பதில்லை! பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே வளர்வதற்கும் பயனடைவதற்குமான ஊழியமாகவே அது இருக்கிறது!

எங்களில் பலர் "தேவஊழியர்" என்கிற போர்வையில், தங்கள் குடும்பத்தினரை மட்டுமே அறங்காவலர்களாகக் கொண்ட குடும்ப அறக்கட்டளையை நிறுவி, பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து, தங்கள் குடும்பத்தாரின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே தேவனுடைய சபையை, ஊழிய ஸ்தாபனத்தை வைத்திருக்கிறது உண்மைதான்!

ஊழியத்தைக் குறித்த சத்தியங்களுக்கு நேரெதிராய் செயல்படுகிற சுயநலவாதிகளாகிய இவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்தி, தேவையுள்ள ஏழை ஊழியர்களையும், மிஷனரி ஊழியங்களையும், சத்தியத்தை சரியாய் போதித்தும், அநுதினத் தேவைக்காய் போராடுகிற ஊழியர்களையும் போதுமான அளவுக்கு தாங்கக் கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்! 

இந்திய மக்களின் பணம் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நேராகத் திருப்பிவிடப்படுகிறதுபோல, கிறிஸ்தவர்களின் பணம் சில குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மட்டுமே போய்சேராமல், ஏழை ஊழியர்கள், ஏழை கிறிஸ்தவர்கள், விதவைகள், திக்கற்றப் பிள்ளைகள், அநாதைகள், அந்நியர், முதியோர் என்று பலருக்கு பரவலாக்கப்படவேண்டும்! (ரோமர் 1:13; கலா.6:10; யாக்.1:27; 1தீமோ.5:9,10)

*பொதுவாக, ஆடம்பரமான அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், பாஸ்டர்கள் மற்றும் போதகர்களுக்குப் பின்னால் நிற்கும் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் ஆடம்பரப் பிரியராயும், வரதட்சணை வெறியராயும் இருக்கிறார்கள்!* (2தீமோ.4:3,4; 2பேதுரு 2:1,2)

தற்பிரியர், பணப்பிரியர், வீம்புக்காரர், அகந்தையுள்ளவர், தூஷிக்கிறவர், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர், நன்றியறியாதவர், பரிசுத்தமில்லாதவர், சுபாவ அன்பில்லாதவர், இணங்காதவர், அவதூறு செய்கிறவர், இச்சையடக்கமில்லாதவர், கொடுமையுள்ளவர், நல்லோரைப் பகைக்கிறவர், துரோகிகள், துணிகரமுள்ளவர், இறுமாப்புள்ளவர், தேவப்பிரியராயிராத சுகபோகப்பிரியர், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர் ஆகியோரைவிட்டு ஊழியக்காரன் தீமோத்தேயு விலகவேண்டும் என்று உத்தம ஊழியர் பவுல் ஆலோசனை சொல்லுகிறார்!
(2தீமோ.3:3-5)

ஆனால், மேற்காணும் பட்டியலில் பவுல் குறிப்பிடும் மோசமான குணங்களை உடைய கிறிஸ்தவர்களையும், அதே குணங்களையுடைய உலகப்பிரியரான ஊழியர்களையும் பிரிக்கமுடிவதில்லை!

*ஒருவர் பின்னால் ஒருவர் ஆதாயத்திற்காக சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!*

ஆடம்பரப் பிரியர்களை "ஆண்டவரின் அடியார்கள்" என்று நம்பி, எந்தக் கபடமும் இல்லாமல் அவர்களைப் பின்பற்றும் மக்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது!!

க. காட்சன் வின்சென்ட்
            8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.