Type Here to Get Search Results !

Godson Vincent Bible Study | வேதாகம ஊழியம் | Part 11-16 | The Biblical Ministry | Jesus Sam

==================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 11)
=================
ஊழியம் செய் - உதவியாக இரு!

ஊழியம் செய் (Serve) என்பதற்கு உதவியாக இரு (Be of service) என்கிற ஓர் அர்த்தமுண்டு.

ஊழியக்காரர்கள் பிறருக்கு உதவுகிறவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.

👉🏿 *ஊழியர்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், பலவீனர் மற்றும் கனவீனராகி, பிறர் கிறிஸ்துவில் புத்திசாலிகளாக, பலவான்களாக, கனவான்களாக உதவிசெய்யவேண்டும்!* (1கொரி.4:10)

தாங்கள் மட்டுமே புத்திசாலிகளாக, பலவான்களாக, கனவான்களாக, பிறரை

பைத்தியக்காரர், பலவீனர் மற்றும் கனவீனராக்குகிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

👉🏿 *தாங்கள் வையப்பட்டாலும், பிறரை ஆசீர்வதிக்கவேண்டும்!*
(1கொரி.4:12)

தங்கள் ஆசீர்வாதத்திற்காக தேவஜனங்களை வசனங்களைக் கொண்டு வைகிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

👉🏿 *தாங்கள் (தனிப்பட்ட முறையில்) தூஷிக்கப்பட்டாலும், வேண்டிக்கொள்ளவேண்டும் (அன்பான வார்த்தைகளால் பதிலளிக்கவேண்டும்!)* (1கொரி.4:13)

(தனிப்பட்ட முறையில்) தங்களை

தூஷிக்கிறவர்களுக்கு நட்பான முறையில் பதிலளிக்க இயலாதவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

👉🏿 *தாங்கள் தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை (ஆவிக்குரிய) ஐசுவரியவான்களாக்கவேண்டும்!* (2கொரி.6:10. இ.வ - 8:9; 1கொரி.4:11,12; யாக்.2:5)

தாங்கள் பூமிக்குரிய ஐசுவரியவான்களாக விரும்புகிறதோடு, தேவஜனங்கள் அனைவரும் பூமிக்குரிய ஐசுவரியவான்களாகவேண்டும் என்கிற ஆசையைத் தூண்டுகிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

👉🏿 *தேவஜனங்களின் விசுவாசத்திற்கு அதிகாரிகளாயிராமல், அவர்களின் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கவேண்டும்!*
(2கொரி.1:24)

தங்களை தேவஜனங்களின் விசுவாசத்திற்கு அதிகாரிகளாக நினைத்துக்கொண்டு, அவர்களை இம்சிக்கிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

👉🏿 *ஜீவனானது தேவஜனங்களிடத்தில் பெலன்செய்யும்படிக்கு, மரணமானது தங்களிடத்தில் பெலன்செய்ய ஒப்புவிக்கவேண்டும். அதாவது, இயேசுவினிமித்தம் மரிக்க எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும்!* (2கொரி.4:8-12)

ஜீவனானது தேவஜனங்களிடத்தில் பெலன்செய்யும்படிக்கு: எப்பக்கத்திலும் நெருக்கப்படவும், கலக்கமடையவும், துன்பப்படவும், கீழே தள்ளப்படவும் (2கொரி.4:8,9) விரும்பாதவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

👉🏿 *தேவஜனங்களின் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் வார்க்கப்படுகிறதில் மகிழ்ச்சியடையவேண்டும்!* (பிலி.2:17)

தங்கள் சந்தோஷத்திற்காய் தேவஜனங்களின் விசுவாசத்தையும் ஊழியத்தையும் பலிபீடத்தில் ஏற்றுகிறவர்கள் (அழிக்கிறவர்கள்) செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

👉🏿 *ஜனங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை அவர்களுக்குக் கொடுப்பதோடு, தேவபிள்ளைகளில் பிரியம் வைத்து, தங்கள் ஜீவனையும் அவர்களுக்குக் கொடுக்க மனதாயிருக்கவேண்டும்!* (1தெச.2:8)

ஜனங்களின்மேல் வாஞ்சையில்லாதவர், ஜீவனையும் கொடுக்கத்தக்கதாக

தேவஜனங்களில் பிரியமாய் இராதவர் (சுபாவ அன்பில்லாதவர்) செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

👉🏿 *தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சுவிசேஷத்தினிமித்தம் பாதகன்போலக் கட்டப்படவும், சகல துன்பத்தையும் சகிக்கவும் ஆயத்தமாய் இருக்கவேண்டும்!* (2தீமோ.2:9,10)

சுவிசேஷத்தினிமித்தமாகவோ, தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காகவோ எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்க விரும்பாதவர் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

👉🏿 *தேவஜனங்களை பிரியமான பிள்ளைகளாகப் பாவித்து புத்திசொல்லவேண்டும்!* (1கொரி.4:14-16. இ.வ - 1தெச.2:11,12)

தேவஜனங்களை அடிமைகளைப்போல பாவித்து, ஆட்டிப்படைக்கிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

க. காட்சன் வின்சென்ட்
    (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
            8946050920




==================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 12)
==================
ஊழியம் செய் - உணவு பரிமாறு!
    ஊழியம் செய் (Serve) என்பதற்கு உணவு பரிமாறு என்கிற ஓர் அர்த்தமும் உண்டு.

ஊழியக்காரர்கள் தேவஜனங்களுக்கு ஆவிக்குரிய மற்றும் சரீர ஆகாரம், ஆவிக்குரிய வரங்கள், பொறுப்புகள், ஊழியம் ஆகியவைகளை பகிர்ந்துகொடுக்கக் கடமைப்பட்டவர்கள்.

👉🏿 *ஆவிக்குரிய ஆகாரத்தை பகிர்ந்துகொடுக்கவேண்டும்!*

தாங்கள் சீஷராயிருக்கும்படி தங்களுக்கு இயேசுகிறிஸ்து கட்டளையிட்ட யாவையும், தாங்களால் இயேசுகிறிஸ்துவுக்கு சீஷராக்கப்பட்டவர்கள் கைக்கொள்ளும்படி, அவர்களுக்கு உபதேசம்பண்ணவேண்டும்.
(மத்.28:19,20)

தேவஜனங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரும்படி, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலைக் கொடுக்கவேண்டும். (1பேதுரு 2:3)

தேவஜனங்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகாதபடிக்கு: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணி, எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லவேண்டும். (2தீமோ.4:2-4)

தேவஜனங்கள் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,

அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளருகிறவர்களாயிருக்கும்படி செய்யவேண்டும். (எபே.4:13-15)

எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணவேண்டும்.
(கொலோ. 1:28,29)

👉🏿 *சரீர ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கவேண்டும்!
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, தேவைக்கு மிஞ்சின

காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, சபையில் கொண்டுவந்து

ஒவ்வொருவருக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்து, சகலத்தையும்

பொதுவாய் அநுபவிக்க ஊழியர்கள் உபதேசிக்கவேண்டும். (அப்.2:42,44,45; 4:34-37)

விசுவாசிகள் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருக்கவும், ஒருவராகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லாமல், சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருக்கவும் போதிக்கவேண்டும். (அப்.4:32)

தங்களுக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்ய சபையாருக்கு போதிக்கவேண்டும். (கலா.6:8-10)

ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கிறதைப் பார்க்கிற சகவிசவாசி, அவர்களுடைய சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்க உபதேசிக்கவேண்டும். (யாக்.2:15-17)

இவ்வுலக ஆஸ்தியை உடைய விசுவாசி, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று காணும்போது, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொள்ளாமல், கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூர ஆலோசனை கொடுக்கவேண்டும்.
(1யோவான் 3:16-18)

சபையார் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருக்க நினைப்பூட்டவேண்டும். (எபி.13:16)

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்க உற்சாகப்படுத்தவேண்டும்.
(யாக்.1:27)

பரிசுத்தவான்களுடைய (ஏழை ஊழியர் & விசுவாசிகளுடைய) குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யத் தூண்டவேண்டும். (ரோமர் 12:13; இ.வ - 15:26-28; 2கொரி.8:1-9:14; பிலே.1:4-7; 3யோவான் 1:5-8; எபி.6:10)

அந்நியரை உபசரிக்க நாடும்படி ஏவவேண்டும். (ரோமர் 12:13)
தன் சத்துருபசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடுக்கவும், அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடுக்கவும் புத்திசொல்லவேண்டும்.

(ரோமர் 12:20)


குறிப்பு:
    ஏழ்மையில் உள்ள சகவிசுவாசிகளுக்கு, ஏழை ஊழியர்களுக்கு,

திக்கற்ற பிள்ளைகள் மற்றும் விதவைகளுக்கு, அந்நியர் மற்றும் சத்துருக்களுக்கு கொடுப்பதைக் குறித்து தேவஜனங்களுக்கு போதியாமல்; தங்கள் குடும்ப மற்றும் ஊழியத்தேவைகளுக்காக மட்டுமே கொடுக்க போதிக்கிறவர் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *ஆவிக்குரிய வரங்களை பகிர்ந்துகொடுக்கவேண்டும்!*
தேவஜனங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை அவர்களுக்கு ஊழியர்கள் கொடுக்கவேண்டும். (ரோமர் 1:10)

சபையார் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்க ஆயத்தப்படுத்தவேண்டும்.
(1கொரி.1:7)

ஆவிக்குரிய வரங்களைக்குறித்து தேவஜனங்கள் அறியாதிருக்கும்படி மறைத்துவைக்காமல், அனைத்து வரங்களைப் பற்றியும் அவர்களுக்கு போதிக்கவேண்டும். (1கொரி. 12:1-11)

போதிக்கிறதோடு நிறுத்திவிடாமல், வரங்களைப் பெற்று, சபையின் பக்திவிருத்திக்காகவும் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாகவும் பயன்படுத்தக் கற்றுத்தரவேண்டும். (1கொரி.12:31; 14:1-33; 1பேதுரு 4:10,11)

குறிப்பு:    
    அந்நியபாஷை வரம் ஒன்றைத் தவிர, வேறு வரங்களைப்பற்றி தேவஜனங்களுக்கு போதிக்கவோ, மற்ற வரங்களையும் பெற்றுக்கொள்ளும்படி அவர்களை உற்சாகப்படுத்தவோ மறுக்கிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

    தங்களுக்கு அருளப்பட்ட கிருபையின் படியே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லவும், ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கவும், பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கவும், முதலாளியானவன் (நிர்வாகி) ஜாக்கிரதையாயிருக்கவும், இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யவும், சபையாருக்கு இடங்கொடுக்கவேண்டும்.
    (ரோமர் 12:6-8)

    பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிறவர்களையே சபையின் பொறுப்புகளில் ஏற்படுத்தவேண்டும். (அப்.6:1-6)


குறிப்பு
கிருபை வரங்களை உடையவர்களை ஒதுக்கிவிட்டு: தங்கள் குடும்பத்தாருக்கு, உறவினருக்கு, தங்கள் ஜாதிக்காரருக்கு, அதிகக் காணிக்கைக் கொடுக்கிறவர்களுக்கு மட்டுமே சபையில் பொறுப்புக் கொடுக்கிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

👉🏿 *சபையாரை ஊழியஞ்செய்ய உற்சாகப்படுத்தவேண்டும்!*
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருக்கவும், ஆவியிலே அனலாயிருக்கவும், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யவும் சபையாரை ஊழியர்கள் உற்சாகப்படுத்தவேண்டும்.
(ரோமர் 12:11)

விசுவாசிகள் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவர்களாய் ஜனங்களுக்குள்ளே தங்களுக்கு இணையாய் பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்ய அனுமதிக்கவேண்டும்.
    (அப்.2:43; 6:8; 8:6,7,13)

சுவிசேஷத்தை அறிவிக்கவும், புதிய சபைகளை நிறுவவும் சபையாரை பயிற்றுவிக்கவேண்டும். (அப்.6:9-7:53; 8:4-13,26-40; யாக்.5:19,20; யூதா 1:22; அப். 11:19-21)

நல்ல சாட்சியும் முதிர்ச்சியும் உள்ள விசுவாசிகள் ஞாஸ்நானம் கொடுக்கவும், புதியசபைகளை நடத்தவும் அனுமதிக்கவேண்டும். (அப்.8:5,12,13,36-38; 9:10-18; 22:12-16; 10:45-48; 11:22-26)

குறிப்பு
சபையாரை ஊழியம் செய்ய உற்சாகப்படுத்தாமல், பயிற்றுவிக்காமல்; தங்கள் குடும்பத்தாரை மட்டுமே ஊழியம் செய்ய உற்சாகப்படுத்துகிறவர்கள், சபையின் வருமானத்தில் தங்கள் குடும்பத்தார் மட்டுமே ஊழியப்பயிற்சிப் பெற செலவழிக்கிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920



==================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 13)
===================
ஊழியம் செய் - சட்டப்படி குறிப்பிட்டவரிடம் சேர்ப்பி!
    ஊழியம் செய் (Serve) என்பதற்கு சட்டப்படி குறிப்பிட்டவரிடம் சேர்ப்பி (Make a delivery of a legal notice) என்கிற ஓர் அர்த்தமும் உண்டு.

    ஊழியக்காரர்கள் தாங்கள் தேவனிடத்தில் பெற்றதை மனுஷரிடத்தில் கொண்டுபோய் சேர்க்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இப்படியிருக்க ஊழியர்கள்:

 *பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் ஜனங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக பிரசங்கித்து உபதேசம்பண்ணவேண்டும்!* (அப்.20:20,21)

தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் தேவஜனங்களுக்கு அறிவிக்கவேண்டும். (அப்.20:26,27)

குறிப்பு:
    தங்கள் சுய பிரயோஜனத்திற்காக தேவஜனங்களுக்கு சில சத்தியங்களை மறைத்துவைக்கிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *காணாமல்போன ஆடுகளிடம் மேய்ப்பரின் பரலோகராஜ்யத்தைக் குறித்த செய்தியைக் கொண்டுசெல்லவேண்டும்!* (மத்10:5-7. இ.வ - யோவான் 10:16)

குறிப்பு:
தங்கள் சொந்தக் குடும்ப ராஜ்யத்திற்கேற்ற செய்தியை ஜனங்களிடம் கொண்டுசெல்லுகிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்லவேண்டும்!* (மாற்கு 16:15; இ.வ - மத்.28:19,20; அப்.1:8; 10:15,47; எபே.3:2-7)

பிறவினத்தாருக்கும் மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் தங்களால்

இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவேண்டும்! (ரோமர் 1:14,15; இ.வ - கொலோ.1:28,29)

குறிப்பு:
குறிப்பிட்ட ஜாதிகளுக்கு மட்டுமே சுவிசேஷத்தை அறிவிக்க விரும்புகிறவர்கள், குறிப்பிட்ட ஜாதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க விரும்பாதவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *தாங்கள் அடைந்த கிறிஸ்துவானவரின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றிய செய்தியை பிறரிடம் ஒப்புவிக்கவேண்டும்!* (1கொரி.15:3-11)

குறிப்பு:
கிறிஸ்துவானவரின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றிய செய்தியைப் பிரசங்கியாமல், 'சுவிசேஷம்' என்கிற பெயரில்: அற்புதம், பூமிக்குரிய ஆசீர்வதம், ஐசுவரியம் இவைகளைப்பற்றி பிரசங்கிக்கிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *ஆரோக்கியமான உபதேசகர்களான ஊழியர்கள்மூலம் தேவன் கற்றுக்கொடுத்த சத்தியங்களை, எந்தக் கலப்படமும் செய்யாமல் மற்றவர்களுக்கு அப்படியே போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவிக்கவேண்டும்!*
(2தீமோ.2:2; 1:13; 3:14)

குறிப்பு:
வேதத்ததை உள்ளபடியே போதிக்கிறவர்களிடம் கற்றுக்கொள்ளாமல், கலப்பாய் போதிக்கிறவர்களிடம் கற்றுக்கொண்டு, கலப்பாய் போதிக்கத்தக்க உண்மையற்றவர்களுக்குக் கடத்துகிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920




=================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 14)
======================
ஊழியம் செய் - போர்வீரனாகப் பணிபுரி!
ஊழியம் செய் (Serve) என்பதற்கு போர்வீரனாகப் பணிபுரி (Act as a soldier) என்கிற ஓர் அர்த்தமும் உண்டு.

இப்படியிருக்க, ஊழியக்காரர்கள்:

👉🏿 *பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளாமல் [சராசரி பனுஷரைப் போல பிழைக்காமல்], இயேசு கிறிஸ்துவுக்குள் நல்ல போர்ச்சேவகராய்த் தீங்கநுபவிக்கவேண்டும்!*
(2தீமோ.2:3,4)

சராசரி குடிமக்களைப்போல பாதுகாப்பான மண்டலத்தில் (Comfort Zone) இருக்க விரும்புகிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *தேவஜனங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தங்கள் ஜெபங்களில் அவர்களுக்காக எப்பொழுதும் போராடவேண்டும்!* (கொலோ.4:12)

தேவஜனங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறவும், பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவும் ஜெபிக்காமல், அவர்களுடைய உலக ஆசீர்வாதங்களுக்காகவே பிரதானமாய் ஜெபத்தில் போராடுகிறவர்கள்

செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *சுவிசேஷ ஊழியத்தில் துஷ்டமிருகங்களைப் போன்ற மனுஷருடனான போராட்டத்தை சந்திக்கவேண்டும்!*
(1கொரி.15:32. இ.வ - 1தெச.2:2)
    ஊழியப்பாதையில் எந்தப் போராட்டத்தையும் எதிர்பாராதவர் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *மாம்சத்துக்கேற்ற போராயுதங்களைக்கொண்டு மாம்சத்தின்படி போர் செய்யாமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிற தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களால்: தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கவேண்டும்!* (2கொரி.10:35)

    கொடி, கோஷம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று மாம்சத்துக்குரிய போராயுதங்களைக்கொண்டு, மாம்சத்தின்படி போராடுகிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *மனுஷரோடு போராடமல், தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொண்டு: துரைத்தனங்களையும், அதிகாரங்களையும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளையும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளையும் எதிர்த்து போராடவேண்டும்!* (எபே.6:10-18)

மனுஷரை தங்கள் எதிரிகளாக நினைத்து, அவர்களை எதிர்த்துப் போராடுகிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவர்களாயிருந்து, , தங்களைக்குறித்து உண்டான தீர்க்கதரிசனங்களை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணவேண்டும்!* (1தீமோ.1:18-20)

நல்மனச்சாட்சியைத் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தி, எந்த தரிசனமும் இல்லாதவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்ளவேண்டும்!
(1தீமோ. 6:12. இ.வ - 2தீமோ.4:7,8)

இம்மைக்காக மாத்திரம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்து (1கொரி. 15:19), பூமிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக அற்பமான போராட்டத்தை போராடுகிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920




=======================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 15)
======================
ஊழியம் செய் - தண்டனை அனுபவிக்க சிறையில் இரு!
    ஊழியம் செய் (Serve) என்பதற்கு தண்டனை அனுபவிக்க சிறையில் இரு (Be in Jail as a punishment) என்கிற ஓர் அர்த்தமும் உண்டு.

இப்படியிருக்க, ஊழியக்காரர்கள்:

👉🏿 *ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சிறைவைக்கப்படலாம்!* (அப்.4:2,3)

தமது ஊழியர்கள் விடுதலையாகும்படி ஜனங்களின் ஆதரவை தேவன் கட்டளையிடுவார்! (அப்.10:21)

👉🏿 *சில மனுஷரைப் பிரியப்படுத்த அதிகாரிகளால் அநியாயமாய் சிறைவைக்கப்படலாம்!* (அப்.12:1-6)

தேவன் தமது தூதனை அனுப்பி தமது ஊழியரை விடுவிக்க வல்லவராக இருக்கிறார்! (அப்.12:7-11)

👉🏿 *தங்கள் ஆதாயம் பாதிக்கிறதாக அச்சப்படுகிற புறமதத்தலைவர்களால் புகார் அளிக்கப்பட்டு, சிறைவைக்கப்படலாம்!*

சிறைச்சாலையை அதிரப்பண்ணி, தமது ஊழியர்களை விடுதலையாக்கி, சிறைச்சாலை அதிகாரியையே குடும்பத்தோடு கிறிஸ்துவினிடத்தில் நடத்த தமது ஊழியரை பயன்படுத்த தேவன் வல்லவராக இருக்கிறார்!
(அப்.16:26-34)

👉🏿 *சுவிசேஷ எதிரிகளிடமிருந்து பாதுகாகக்கப்படக்கூட சிறைவைக்கப்படலாம்!* (அப்.21:27-24:27; 28:16)

தேவன் அங்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும் வாசலைத் திறந்தருளுவார்! (அப்.9:15,16; 22:1-21; 24:10-21,24; 26:1-29; 28:16-24; 2தீமோ.2:9)

👉🏿 *கட்டுக்களையும் உபத்திரவங்களையும் எப்போதும் எதிர்நோக்கியிருக்கவேண்டும்!* (அப்.20:23; பிலி.1:7,13-16; கொலோ.4:3,18; எபி.10:34)

கட்டுகள் உபத்திரவம்
ஒன்றையுங்குறித்துக் கவலைப்படாமல், தங்கள் பிராணனையும் அருமையாக எண்ணாமல், தங்கள் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவும் தேவன் தமது ஊழியர்களை பலப்படுத்துவார்! (அப்.20:24; பிலி.1:20,21; எபே.6:19,20; கொலோ.4:3,4; 2தீமோ.2:9)

👉🏿 *அடிகளிலும், காவல்களிலும்.... தங்களை தேவஊழியராக விளங்கப்பண்ணவேண்டும்!* (2கொரி6:3,5)

தமது ஊழியருக்கு சம்பவிக்கிறவைகள் சுவிசேஷம் பிரபலமாவதற்கு ஏதுவாயிருக்கும்படி தேவன் ஆசீர்வாதமாக்கிவிடுவார்! (பிலி.1:12)

குறிப்பு:
    ஊழியத்தினிமித்தம் சிறைக்கு செல்லுகிறதைத் தவிர்க்க கொடிபிடிக்கிற, கோஷமிடுகிற, உண்ணாவிரதமிருந்து ஆர்ப்பாட்டம் செய்கிற, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசை நாடுகிற ஊழியர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920




===================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 16)
=================
ஊழியம் செய் - ஆசையை நிறைவேற்று!
ஊழியம் செய் (Serve) என்பதற்கு ஆசையை நிறைவேற்று (Fulfill the desire) என்கிற ஓர் அர்த்தமும் உண்டு.

இப்படியிருக்க, ஊழியர்கள் தேவனுடைய ஆசையை நிறைவேற்றுகிறவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.

தேவனுடைய ஆசை!
    எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவது, சத்தியத்தை அறிகிற அறிவை அடையவது. (1தீமோ.2:4)

கிறிஸ்துவானவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளுவது. (கொலோ.1:20)

தமது ஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தம்மை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிப்பது. (1கொரி.1:21)

தமது ராஜ்யத்தையே தேடுகிற சிறுமந்தைக்கு ராஜ்யத்தைக் கொடுப்பது. (லூக்கா 12:32)

இதுவே தேவனுடைய ஆசையாகும்.

தேவனுடைய ஆசையை நிறைவேற்ற ஊழியக்காரர்கள்:
பிதாவுக்குப் பிரியமானவைகளை எப்பொழுதும் செய்யவேண்டும்! (யோவான் 8:29)

கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற கவனமாயிருக்கவேண்டும்!
(கொலோ.4:17)

தங்களுக்குரியவைகளையே தேடாமல், கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடவேண்டும்!
(பிலி.2:21)

எத்தனைப் பாடுகள் உண்டானாலும் தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு தாங்கள் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவேண்டும்! (அப்.20:23,24. இ.வ - 2கொரி.6:3-10)

இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தை உலகமெங்கும் பிரசங்கிக்கவேண்டும்! (எபே.1:13; மாற்கு 16:15)

கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து: இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தையும்,

ஒப்புரவாக்குதலின் உபதேசத்தையும் கொடுத்த தேவனோடே ஒப்புரவாக ஜனங்களை வேண்டிக்கொள்ளவேண்டும்! (2கொரி.5:20)

யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருந்தாலும், யூதரானாலும் கிரேக்கரானாலும் அழைக்கப்பட்டிருக்கிறவர்களுக்கு தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிற

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே பிரசங்கிக்கவேண்டும்! (1கொரி.1:22-24; 2:2. இ.வ - கலா.3:1)

தேவனுடைய ராஜ்யத்தின் வேலையை செய்யவேண்டும்! (லூக்கா 9:60; இ.வ - கொலோ.4:11

அப்.8:12; 14:22; ரோமர் 14:17; 1கொரி.4:20; 6:9,10; 15:50; கலா.5:19-21; எபே.5:5; 2தெச.1:5)


குறிப்பு:
    தேவனுக்குப்பிரியமானவைகளை செய்யாமல், ஊழியத்தில் தங்களுக்குப் பிரியமானவைகளையே எப்பொழுதும் செய்கிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.