Type Here to Get Search Results !

Godson Vincent Bible Study | வேதாகம ஊழியம்! Part 5-10 | The Biblical Ministry | கர்த்தர் கொடுத்த ஊழியம்! | Jesus Sam

====================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry)  (பகுதி- 5)
ஊழியம் - ஆராதனை!
===================
ஊழியம் என்பதற்கு ஆராதனை என்கிற ஒரு பொருளும் உண்டு.
பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவாலயத்தில் ஆராதனையை நடத்துவதற்கு ஆசாரியர் நியமிக்கப்பட்டிருந்தனர். (2நாளா.35:2; எஸ்ரா 6:18)
புதிய ஏற்பாட்டு சபையில் ஐந்துவிதமான ஊழியர்களை தேவன் ஏற்படுத்தியிருக்கிறார். (எபே.4:11-13)
ஆசாரியர் பஸ்காவாகிய ஆராதனையை நடத்தப் பணிக்கப்பட்டிருந்தனர். (யாத்.12:25,26) 
புதிய ஏற்பாட்டு ஊழியர்கள் இராபோஜனமாகிய பஸ்காவை ஆசரிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். (மத்.26:26-28; அப்.2:42,46; 20:7; 1கொரி.11:23-31)
பழைய ஏற்பாட்டு சபையார் அந்திய தேவர்களை விலக்கிவிட்டு ஆராதனை செய்ய அழைக்கப்பட்டனர். (நியா.10:16; 1இரா.11:1; நீதி.5:20; எரே.3:13)
புதிய ஏற்பாட்டு சபையார் அந்நிய நுகத்துக்கு விலகி ஆராதனைசெய்ய அழைக்கப்பட்டிருக்கிறார்கள். (2கொரி.6:14-18; யோவான் 10:5)
இப்படியிருக்க, 
தேவஜனங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகி, தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனைசெய்யும்படி வழிநடத்துவது....
(ரோமர் 12:1,2; 6:12-19; 1கொரி.6:12-20; பிலி.1:20-24; 1தீமோத்.1:9,10; 1பேதுரு 3:3; வெளி.16:15)
மாம்சத்தின்மேல் (சடங்காச்சாரத்தின்மேல்) நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்யவைப்பது.... (பிலி.3:3; யோவான் 4:23,24; ரோமர் 1:9; 1கொரி.14:15; எபே.5:18-21)
மகிழ்ச்சியோடு ஆராதனைசெய்யவைப்பது.... (சங்.100:2; ரோமர் 15:9; 1தெச.5:18; யாக்.5:13)
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார் என்பதை நினைப்பூட்டி, அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களை பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ள வழிநடத்துவது.... (எபி.12:28,29)
இதுவே வேத அடிப்படையிலான ஊழியம் ஆகும்!

குறிப்பு:
    பரிசுத்தமாய் வாழவும், பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யவும் ஜனங்களை வழிநடத்தாதவர் செய்கிற ஆராதனை வேதாகம ஊழியமாக இருக்கமுடியாது!!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920


===================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 6)
கர்த்தர் கொடுத்த ஊழியம்!
===============
மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்க நம்மை
இயேசுகிறிஸ்து அழைத்த ஊழியம்! (மத்.4:18-22)
தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் நம்மை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி நாம் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், ஆண்டவர் நம்மை ஏற்படுத்தின ஊழியம். (மாற்கு 3:13-15)
நம்மைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மை உண்மையுள்ளவரென்றெண்ணி, ஏற்படுத்தின ஊழியம். (1தீமோ. 1:12; எபே.4:11-15)
சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 
தாம் நமக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ண ஆண்டவர் நம்மை அனுப்பின ஊழியம். (மத்.28:18-20)
சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் நம்மை விடுதலையாக்கி, அவர்கள் தம்மைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நாம் அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, ஆண்டவர் நம்மை அவர்களிடத்திற்கு அனுப்பின ஊழியம். (அப்.26:17,18)
தம்மில் அதிகமாய் அன்பாயிருக்கிறவர்களுக்கு: தமது ஆட்டுக்குட்டிகளையும் ஆடுகளையும் மேய்க்க ஆண்டவர் கட்டளையிட்ட ஊழியம். (யோவான் 21:15-17)
தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நாம் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியம். (அப்.20:24)
தாம் அழைத்த ஊழியத்துக்காக பிரித்தெடுத்து, பரிசுத்தஆவியானவர் நம்மை அனுப்பின ஊழியம். (அப்.13:4)

குறிப்பு:
    கர்த்தரால் அழைக்கப்படுகிற, ஏற்படுத்தப்படுகிற, அனுப்பப்படுகிற ஊழியமே வேதஅடிப்படையிலான ஊழியம் ஆகும்!
சபை மற்றும் ஸ்தாபனத்தின் வருமானம், ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம் அடுத்தவர் கைகளுக்கு போய்விடக்கூடாது என்பதற்காக, தேவனுடைய அழைப்பே இல்லாதச் சூழலில், "தேவனுடைய சித்தம்", "ஆவியானவரின் நடத்துதல்" என்றெல்லாம் மக்கள் நம்பவைக்கப்பட்டு, ஊழியக்காரரான தங்கள் கணவரால், ஊழியர்களான தங்கள் பெற்றோரால், அவர்களுடைய இடத்திற்கு ஏற்படுத்தப்பட்ட ஊழியரின் மனைவி, பிள்ளைகள் அல்லது அழைப்பில்லாத ஊழியரின் குடும்பத்தார் செய்கிற ஊழியம் வேதாகம ஊழியம் அல்ல!
தாங்கள் தேவனால் ஏற்படுத்தப்படாமல், ஊழியக்காரரான தங்கள் கணவரால், ஊழியர்களான தங்கள் பெற்றோரால், அவர்களுடைய இடத்திற்கு திணிக்கப்பட்டிருப்பதாக மனச்சாட்சியில் உணர்த்துவிக்கப்படுகிற ஊழியக்காரர்களின் துணைவியார் மற்றும் பிள்ளைகள்: உண்மையிலேயே தேவனால் அழைக்கப்பட்டவர்களிடம் சபை மற்றும் ஸ்தாபனத்தின் நிர்வாகத்தை ஒப்படைப்பதே உத்தமமும், சபை மற்றும் ஊழிய ஸ்தாபனங்களுக்கு நன்மையானக் காரியமும் ஆகும்!
"நான் ஆரம்பித்த ஊழியம், ஊழியத்தில் என்னோடு பாடுபட்ட, என்னோடு உழைத்த என் மனைவி பிள்ளைகளிடம்தான் என் ஊழியத்தை ஒப்புவிப்பேன். நாங்கள் பிரயாசப்பட்டு உருவாக்கின சபை, ஸ்தாபனம் எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தம். தலைமுறை தலைமுறையாக என் குடும்பத்தாரே சபையின், ஸ்தாபனத்தின் தலைமையிடத்தில் இருப்பார்கள். என் குடும்பத்தாரைப்போல என் தரிசனத்தை வேறு எவரும் பாரத்தோடு நிறைவேற்றமுடியாது" என்று சொல்ல ஐந்துவிதமான ஊழியரில் எவருக்கும் வேதத்தின்படி அதிகாரமோ உரிமையோ இல்லை! இதற்கு புதிய ஏற்பாட்டு ஊழியத்தில் மாதிரியும் இல்லை!!
நாம் செய்கிறது பழைய ஏற்பாட்டு ஆசாரிய ஊழியம் அல்ல. (2கொரி.3:5-18) பழைய ஏற்பாட்டு ஆசாரிய ஊழியத்தின்படி ஆசாரியனின் மனைவியோ, பெண்பிள்ளைகளோ தேவாலயத்தில் ஊழியம் செய்ய அனுமதியில்லை. மேலும், புதிய ஏற்பாட்டு ஊழியத்தை, சபையை தேவன் எந்த ஒரு ஊழியரின் குடும்பத்தையும் நம்பி ஒப்படைக்கவில்லை.
ஊழியரின் குடும்பத்தாருக்கும் புதிய ஏற்பாட்டு சபையில் ஊழியம் உண்டு. ஆனால், ஊழியக்காரரின் குடும்பத்தார் மட்டுமே, குறிப்பாக அவர்கள் மட்டுமே சபையின், ஸ்தாபனத்தின்
தலைமையிடத்தை தலைமுறை தலைமுறையாக அலங்கரிக்கவேண்டும் என்கிற அவசியமோ, கட்டளையோ நிச்சயம் இல்லை!
தாங்கள் செய்த ஊழியத்திற்கான கூலியைப் பெற்றுக்கொண்ட ஊழியர்கள், தேவனுடைய சபையை, தேவனுடைய தயவினால் வளர்ந்த ஊழிய ஸ்தாபனத்தை தங்கள் குடும்பச்சொத்தாகக் கருதுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை! (1கொரி.3:4-9)
அநேக தேவபிள்ளைகளின் உடன் உழைப்பினாலும், உற்சாகமான காணிக்கையினாலும், உடன் ஊழியர்களின் அயராத உழைப்பினாலும் வளர்ந்த சபையை, ஸ்தாபனத்தை தங்கள் குடும்பத்தாருக்கு பாத்தியப்பட்ட சொத்தாகக் கருதுவதும், இதை சபையாரும், உடன் ஊழியர்களும் அமைதியாக அங்கீகரித்துக்கொள்வது அறியாமையும் அநியாயமும் ஆகும்!
இப்படிப்பட்ட ஊழியர்களையும், உடன் ஊழியர்களையும், விசுவாசிகளையும் ஆதிசபையில் காணவேமுடியாது! இதற்கு இவர்களால் வேத ஆதாரத்தைக் காண்பிக்கமுடியாது!
இப்படி சொல்லுகிறதை தங்கள் குடும்ப ஊழியத்திற்கு எதிராக பேசுகிறதாக குற்றப்படுத்தும் குறுகிய இருதயமுடைய ஊழியர்கள் இன்று அநேகர் உண்டு. அவர்கள் உண்மையிலேயே சத்தியத்தின்படி ஊழியம் செய்ய வாஞ்சிக்கிறவர்களானால், இதை திறந்த மனதோடு நிதானிக்கவேண்டும்.
ஊழியரின் குடும்பத்தாரோ, மற்றவரோ, உண்மையாகவே அழைக்கப்பட்டவர்கள், தங்களுக்குரிய இடத்திலிருந்து, தங்கள் அழைப்புக்குரிய ஊழியத்தை நிறைவேற்றினால் மட்டுமே இந்நாட்களில் சபைகளில் வேத அடிப்படையிலான ஆரோக்கியம் உண்டாக வாய்ப்பிருக்கிறது!!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920


===================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 7)
கனமான ஊழியம்!
==================
நிலத்தில் விழுந்து சாகும் கோதுமை மணியாக இயேசு எங்கே இருக்கிறாரோ அங்கே இருந்து, அவரைப் பின்பற்றி அவருக்கு ஊழியம் செய்து, மிகுந்த பலனைக்கொடுக்கும் ஊழியராகிய நம்மை
பிதாவானவர் கனம்பண்ணுவார்! (யோவான் 12:24-26; மத்.25:21-23; 2தீமோ.4:7,8)
இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டான புது உடன்படிக்கையின் ஊழியராக தேவனே நம்மை தகுதியுள்ளவர்களாக்கியிருக்கிறார்! (2கொரி.3:5,6; மத்.26:28)
கொல்லுகிற எழுத்திற்குரியதாயிராமல், உயிர்ப்பிக்கிற ஆவிக்குரியதாயிருக்கிற புது உடன்படிக்கையின் ஊழியராக நாம் இருக்கிறோம்!
(2கொரி.3:6,7; எசே.11:19; 36:26; கலா.3:2,3; 5:16:22-25; எபே.2:18; 3:16; 4:22-24; பிலி.3:3; 2தெச.2:13; எபி.10:29; யாக்.4:5; 1பேதுரு 1:2; 1யோவான் 3:24)
எழுத்துகளினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே, இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப் பார்க்கக்கூடாதபடிக்கு உண்டான ஒழிந்துபோகிற மகிமையின் பிரகாசத்திலும் அதிக மகிமையுள்ளதாயிருக்கிற, ஒழிந்துபோகாத மகிமையுள்ள ஆவிக்குரிய ஊழியத்தையே நாம் செய்கிறோம்! (யாத்.34:29-35; 2கொரி.3:7,8)
ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் மோசேயின் ஊழியத்திலும் சிறந்த மகிமையுள்ளதாயிருக்கிற நீதியைக்கொடுக்கும் ஊழியத்தையே நாம் செய்கிறோம்!
(2கொரி.3:9,10; ஏசாயா 16:5; 32:1; 53:11; யோவான் 16:8,10; ரோமர் 3:21-24; 4:5; 5:15-19,21; 1கொரி.1:31; 2கொரி.5:21; பிலி.3:9; 1தெச.1:6; 1பேதுரு 2:24; 2பேதுரு 1:1; 1யோவான் 1:8,9)
அதிக மகிமையுள்ளதான நிலைத்திருக்கும் ஊழியத்தையே நாம் செய்கிறோம்!
(2கொரி.3:11,12; ரோமர் 6:4; 8:17,18,30; 1கொரி.15:41-44; 2கொரி.3:18; 4:6,17; எபே.1:14,18; கொலோ.1:27; 3:4; 2தீமோ.2:10; 1பேதுரு 1:7; 4:14; 5:10; யூதா 1:24)
முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொள்ளும் மோசேயின் ஊழியத்தை போல் அல்லாமல், கிறிஸ்துவினால் இருதயத்தின் முக்காடு நீக்கப்பட்ட ஊழியத்தை நாம் செய்கிறோம்! (2கொரி.3:13-15; ரோமர் 2:28,29; 8:1,13,15,23)
 *குறிப்பு:*
நிலையற்ற ஒழிந்துப்போகிற மகிமையை உடைய ஊழியத்தை செய்த மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராயிருந்தாரென்றால் (எண்.12:7); ஒழிந்துபோகாமல் நிலைத்திருக்கிற அதிக மகிமையுள்ள ஊழியத்தை செய்கிற நாம் ஊழியத்தில் எவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதை ஊழியக்காரர்கள் சிந்திக்கவேண்டும்!!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920


===================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 8)
ஊழியம் செய்! (Serve)
==================
ஊழியம் செய் என்பதற்கு:
1. பணியாளனாய் இரு. (Act as a servant)
2. வேலை செய். (Help
3. பிறருக்காக வேலை செய் (Work for someone) 
4. உதவியாக இரு (Be of service)
5. உணவு பரிமாறு. (Distribute food) 
6.சட்டப்படி குறிப்பிட்டவரிடம் சேர்ப்பி. (Make a delivery of a legal notice)
7. போர்வீரனாகப் பணிபுரி. (Act as a soldier)
8. தண்டனை அனுபவிக்க சிறையில் இரு.(Be in Jail as a punishment)
9. ஆசையை நிறைவேற்று (Fulfil the desire, purpose) என்று பல அர்த்தங்கள் உண்டு.

பணியாளனாய் இரு. (Act as a servant)
    எந்த அழைப்புள்ள ஊழியராயினும் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு எஜமானர்கள் அல்ல, அவர்களுக்கு சேவைசெய்யும் பணியாளரே!
புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறதுபோலவும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறதுபோலவும் இராமல், பெரியவனாயிருக்க விரும்புகிற எவனும் மற்றவருக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கவும்; முதன்மையானவனாயிருக்க விரும்புகிற எவனும், மற்றவருக்கு ஊழியக்காரனாயிருக்கவும் ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறார். (மத்.20:25-27)
தங்களை எஜமானர்களாகவும், தேவஜனங்களின் அதிகாரிகளாகவும் நினைத்துக்கொண்டு: அவர்களை இருமாப்பாய் ஆளுகிற, கடினமாய் நடத்துகிற ஊழியர்களை இந்நாட்களில் அதிகம் காணமுடிகிறது!
இவர்கள் தேவஜனங்களை ஒரு பொருட்டாக எண்ணுகிறதில்லை. தங்களிலும் வயதில் மூத்தவர்களையும் தங்கள் முன்னால் உட்கார்ந்துப் பேச இவர்கள் அனுமதிக்கிறதில்லை. மாறாக, தங்களிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு முன்பாக கால்மேல் கால்போட்டு அமர்ந்து தங்கள் இறுமாப்பை வெளிப்படுத்துகிறார்கள்!

உண்மையில் இவர்கள் ஊழியத்தில் தேறினவர்கள் அல்ல, ஊழியத்தின் அடிச்சுவடை அறியாதவர்கள்!
    தங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்த்து, மனப்பூர்வமாயும், உற்சாக மனதோடும், 
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்லாமல், மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்காணிப்புச் செய்கிற மூப்பருக்குக் (ஊழியருக்கு) கீழ்ப்படியவே வேதம் இளைஞருக்கு கட்டளையிடுகிறது. (1பேதுரு 5:2,3,5)
தேவனுடைய மந்தையாகிய தங்களை, "தங்கள் மந்தை" என்கிற நினைப்பில் மேய்த்து, கட்டாயமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காவும் கண்காணிப்பு செய்து, இறுமாப்பாய் ஆளுகிற எந்த அழைப்புள்ள ஊழியருக்கும் தேவஜனங்கள் கீழ்ப்படியவேண்டிய அவசியம் இல்லை!
*"விசுவாசிகள் எங்கள் ஆவிக்குரியப் பிள்ளைகள், ஆவிக்குரிய தகப்பன்மார்களாகிய எங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து அடங்கியாகவேண்டும்"* என்று சொல்லுகிற ஒருபக்கப் பார்வையுள்ள ஊழியர் பலரை இன்று காணமுடிகிறது. 
விசுவாசிகள் ஊழியருக்கு ஆவிக்குரியப் பிள்ளைகளாய் இருக்கிற அதேவேளையில், ஊழியர் முதிர்வயதுள்ள விசுவாசிகளான புருஷர் மற்றும் ஸ்திரீகளுக்கு ஆவிக்குரிய பிள்ளையாகவும், பாலிய புருஷர் மற்றும் ஸ்திரிகளுக்கு ஆவிக்குரிய சகோதரராகவும் இருக்கிறதை அறியும்படி இவர்களுடையக் கண்கள் முழுவதும் திறக்கப்படவேண்டியது அவசியம்! (1தீமோ.5:1,2)
*தங்கள் ஆவிக்குரிய தாய் தகப்பன் மற்றும் சகோதர சகோதரிகளான விசுவாசிகளுக்குக் கொடுக்கவேண்டிய கனத்தை, மரியாதையை கொடுத்து, அவர்களிடமிருந்து கனத்தையும் மரியாதையையும் ஊழியர்கள் பெறவேண்டியது அவசியம்!*
தங்களை மதியாத பிள்ளையை பெற்றோரும், சகோதரனை சகோதர சகோதரிகளும் மனப்பூர்வமாக மதிக்கக்கூடாதே!

இப்படியிருக்க,
    தாங்கள் தேவஜனங்களின் விசுவாசத்திற்கு அதிகாரிகளாயிராமல், அவர்களின் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறதை ஊழியர்கள் உணரவேண்டும். தேவஜனங்கள் தங்களால் அல்ல, அவர்களுடைய விசுவாசத்தினாலேயே நிலைநிற்கிறார்கள் என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ளவேண்டும். (2கொரி.1:24)
ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்த தங்கள் குருவானவரை பின்பற்ற அவருடைய ஊழியர்கள் முன்வரவேண்டும். (மத்.20:28)
தேவனுடைய ரூபமாகவும், தேவனுக்குச் சமமாகவும் இருந்த அவர், மனிதனின் சாயலாகவும், மனுஷனுக்கு சமமாகவும் தம்மைத்தாமே தாழ்த்தினதை மனதில் நிறுத்தவேண்டும். (பிலி.2:6-8)
மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படவும், உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையாகவும், தேவஜனங்களை கிறிஸ்துவில் புத்திசாலிகளாக்க கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரராகவும், தேவஜனங்களை கிறிஸ்துவில் பலவான்களாக்க பலவீனராகவும், 
தேவஜனங்களை கிறிஸ்துவில் கனவான்களாக்க கனவீனராகவும்,
உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலாகவும் ஆயத்தமாயிருக்கவேண்டும்.
(1கொரி.4:9,10,13)
தேவஜனங்கள் உயர்த்தப்படும்படி ஊழியர் தன்னைத்தானே தாழ்த்தவேண்டும். (2கொரி.11:7)
ஒருவருக்கும் அடிமைப்படாதவராயினும், அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, தன்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கவேண்டும். (1கொரி.9:19-22)
தங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், தங்களையோ இயேசுவினிமித்தம் தேவஜனங்களின் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கவேண்டும். (2கொரி.4:5)
தங்கள் மூலமாக ஆண்டவர் அற்புதங்களை செய்யும்போது, 
தங்கள் சுயசக்தியினாலும், தங்கள் சுயபக்தியினாலும் அற்புதம் நடந்ததுபோல ஒரு தோற்றத்தை உண்டாக்கி,
ஜனங்கள் தங்களை நோக்கிப்பார்க்கும்படி செய்யாமல், இயேசுகிறிஸ்துவையே நோக்கிப்பார்க்கசெய்யவேண்டும். (அப்.3:1-16)
தங்கள் மூலம் தேவன் பெரிய அற்புதங்களை செய்யும்போது ஜனங்கள் தங்களை தெய்வங்களாகப் பாவித்து வணங்கவரும் சூழலில், ஊழியர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, *"மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே"* என்று அறிக்கையிட்டு, ஜீவனுள்ள தேவனிடத்திற்கு அவர்களை திருப்பவேண்டும். (அப்.14:8-15)

குறிப்பு:
    தங்களை எவ்விதத்திலும் பெரியவர்களாகவும், பெரிய சக்தியாகவும் கற்பனைசெய்துகொண்டு, தேவஜனங்கள் தங்கள் அடிமைகள் என்கிற நினைப்பில், எஜமான் தோரணையுடன் நடந்துகொள்ளும் இறுமாப்புள்ள ஊழியர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியமாக இருக்கமுடியாது!
தங்களைக் காண்கிறவர்களுக்கு ஒரு பணியாளனை நினைவுபடுத்தும் ஊழியர்கள் செய்கிறதே வேதாகம ஊழியமாக இருக்கமுடியும்!!

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920


===================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 9)
ஊழியம் செய் - வேலை செய்! (Help)
=================== 
"ஊழியம் செய்" என்பதற்கு "வேலை செய்" என்கிற ஒரு அர்த்தமும் உண்டு.
வேலை வாங்குகிறவர்களாக அல்ல, வேலை செய்கிறவர்களாக இருக்கிறோம் என்பதை ஊழியக்காரர்கள் அறியவேண்டும்.
நமது குருவானவர் ஊழியங்கொண்டவர் அல்ல, ஊழியஞ்செய்தவர் என்பதை நாம் மறந்திடக்கூடாது! (மத்.20:28)
அவர் தம்மை ஓர் அடிமையிலும் அடிமையாகக் கருதி, தமது சீஷர்களின் கால்களைக் கழுவி, அவர்கள் ஒருவருடையக் கால்களை ஒருவர் கழுவக் கட்டளையிட்டிருக்கிறார். (யோவான் 13:3-17) 
கிறிஸ்து இயேசுவிலிருந்த இதே சிந்தை அவருடைய ஊழியரிலும் இருக்கவேண்டியது அவசியம்.
இப்படியிருக்க, ஊழியஞ்செய்கிறவர்கள்:
ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருக்கவேண்டும். (அப்.6:4; இ.வ - ரோமர் 12:7,8)
உன்னதமான தேவனுடைய ஊழியக்காரராய், இரட்சிப்பின் வழியை ஜனங்களுக்கு அறிவிக்கவேண்டும். (அப்.16:17)
தங்கள் சுயஜனத்தாரும் அந்நிய ஜனத்தாரும் 
இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு அவர்களுடைய கண்களைத் திறக்கவேண்டும். (அப்.26:17,18)
தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருந்து, தேவனுடைய பண்ணையில் நடுகிற (சுவிசேஷம் அறிவிக்கிற) மற்றும் நீர்ப்பாய்ச்சுகிற (உபதேசிக்கிற) வேலையை செய்யவேண்டும். (1கொரி.3:6-9)
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவின்மேல் தேவனுடைய ஜனங்களாகிய ஆலயத்தை நிலைக்கத்தக்கதாகக் கட்டவேண்டும். (1கொரி.3:11-16)
ஆண்டவரின் அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் மூலமாய் கொடுக்கப்பட்டுள்ள இயேசுகிறிஸ்துவைப் பற்றிய உபதேசமாகிய அஸ்திபாரத்தின்மேல் தேவனுடைய ஜனங்களாகிய மாளிகையை இசைவாய் (எந்த வேற்றுமையும் இல்லாமல்) இணைத்து, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாகவும், தேவனுடைய வாசஸ்தலமாகவும் கூட்டிக்கட்டுகிறதில் பரிசுத்தஆவியானவருடன் இசைந்து செயல்படவேண்டும். (எபே.2:20-22)
ஜீவனுள்ள கல்லாகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தவர்களாகிய தேவஜனங்களை. ஜீவனுள்ள கற்களைப்போல (இயேசுகிறிஸ்துவைப்போலவே) ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டியெழுப்பவேண்டும். (1பேதுரு 2:5)
வெட்கமான அந்தரங்க காரியங்களை வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்தவேண்டும். (2கொரி.4:1,2; இ.வ - 2:17; 1தெச.2:3-5)
பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் தேவஜனங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக உபதேசம்பண்ணவேண்டும். (அப்.20:20,21)
 
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் தேவஜனங்களுக்கு அறிவிக்கவேண்டும். (அப்.20:26,27; இ.வ - 1கொரி.15:51)
தேவஜனங்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்று விரும்பவும் பிரயாசப்படவும் வேண்டும்.
(கொலோ.2:1,2; இ.வ - எபே.1:3-10; 3:1-6; 6:20)
தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை தங்களிடத்தில் ஓப்புவித்திருக்கிறபடியினாலே, தேவனானவர் தங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, தாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் ஜனங்களை வேண்டிக்கொள்ளவேண்டும். (2கொரி.5:18-20)
எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவர்களாயிருந்து, தீங்கநுபவித்து, சுவிசேஷகனுடைய வேலையைச் செய்து, தங்கள் ஊழியத்தை நிறைவேற்றவேண்டும். (2தீமோ.4:5. இ.வ - மாற்கு 16:15; 2கொரி.8:18; எபே.3:1-7; கொலோ.1:19-23)
சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கவேண்டும். (2தீமோ.2:15; இ.வ - 1தீமோ.4:1-6; 2தீமோ.4:1-4)

குறிப்பு:
    தேவன் தங்களுக்குக் கட்டளையிட்ட மேற்காணும் யாவற்றையும் செய்த பின்பு: "நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்" என்று சொல்லுகிற வேலையாள் சிந்தையுள்ள ஊழியர்கள் செய்கிறதே, வேதாகம அடிப்படையிலான ஊழியம் ஆகும்!! (லூக்கா 17:7-10)

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920


=====================
வேதாகம ஊழியம்! (The Biblical Ministry) (பகுதி- 10)
ஊழியம் செய் - பிறருக்காக வேலை செய்!
====================
"ஊழியம் செய்" (Serve) என்பதற்கு "பிறருக்காக வேலை செய்" (Work for someone) என்கிற அர்த்தம் உண்டு.
ஊழியக்காரர்கள் தேவனுடைய வேலையை செய்கிறவர்களாக இருக்கிறார்கள்.

👉🏿 *அவர்கள் பரிசுத்தஆவியின் பெலத்தினால் எங்கும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாயிருக்கிறார்கள்.* (அப்.1:8; இ.வ- 2:32; 3:15)
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறித்து தைரியமாய் சாட்சிகொடுக்க பயப்படுகிறவர்கள் (மத்.10:33) செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *இயேசுகிறிஸ்துவுக்காக மனுஷரைப் பிடிக்கிறார்கள்.* (மத்.4:19-22)
ஆத்துமாக்களை இயேசுவுக்காக ஆதாயம் செய்யாமல், தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுகிறவர்கள் (2பேதுரு 2:1-3; அப்.20:30) செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் இயேசுகிறிஸ்துவின் சீஷராக்குகிறார்கள்.* (மத்.28:19,20)
இயேசுவின் குணங்களை உடைய சீஷராயிருந்து, மற்றவர்களை இயேசுவின் குணங்களையுடைய சீஷராக்க (மத்.5:3-10,19) தவறுகிறவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஜனங்கள் ஒப்புரவாகும்படி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை போதிக்கிறார்கள்.* (2கொரி.5:19,20)
மனந்திரும்பி தேவனோடு ஒப்புரவாகிறதைக் குறித்துப் பிரசங்கியாமல்: இவ்வுலக ஆசீர்வாதம், ஐசுவரியம் இவைகளில் அதிக ஆர்வமூட்டுகிற மனுஷரின் சுய இச்சைகளுக்கேற்ற போதர்கள் (2தீமோ.4:3,4; கலா.1:10) செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *இயேசுகிறிஸ்துவின் ஆடுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் மேய்க்கிறார்கள்.* (யோவான் 21:15-17. இ.வ - அப்.20:28; 1பேதுரு 5:2-5)
தங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்த்து,
மனப்பூர்வமாயும், உற்சாக மனதோடும், மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்காணிப்புச் செய்யாமல்,
கட்டாயமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காகவும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாயும் கண்காணிக்கிறவர்கள் (1பேதுரு 5:2,3)
செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *ஆவியானவர் அழைத்த ஊழியத்தை செய்கிறார்கள்.* (அப்.13:2-4; இ.வ - 8:29-40; 11:12; 16:6,7; 19:21) 
பரிசுத்தஆவியைப் பெறாதமலும், பரிசுத்த ஆவியால் நடத்தப்படாமலும், தங்கள் சொந்த ஆவியைப் பின்பற்றி நடக்கிறவர்கள் (2பேதுரு 2:10-22; யூதா 1:4,8-16) செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *பிறரை கிறிஸ்துவில் புத்திசாலிகளாகவும், பலவான்களாகவும், கனவான்களாகவும் மாற்ற: கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரராகவும், பலவீனராகவும், கனவீனராகவும் ஆகிறார்கள்.* (1கொரி. 4:10-13. இ.வ - 2கொரி.5:13)
உலகத்தில் தாங்கள் புத்திசாலிகளாகவும், பலவான்களாகவும், கனவான்களாகவும் மாற: தேவஜனங்களை பைத்தியக்காரராகவும், பலவீனராகவும், கனவீனராகவும் மாற்றுகிறவர்கள் (மத்.7:15; அப்.20:29) செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *நிலத்தில் விழுந்து மரிக்கும் கோதுமை மணியாக இயேசு இருக்கும் இடத்தில் இருந்து, அவரைப் பின்பற்றி, அவருக்கு ஊழியஞ்செய்கிறார்கள்.*
(யோவான் 12:24-26)
எந்தத் தியாகமும் செய்ய ஆயத்தமாயிராமல், பூமியில் ஐசுவரியவான்களாகவும், பெரும்பணக்காரர்களாகவும் ஆகும் ஆவலுள்ளவர்கள் (1தீமோ.6:5,9,10) செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *கிறிஸ்துவுக்காக தங்கள் ஜாதி, இன, மத மற்றும் தேசப் பெருமைகளை நஷ்டமென்று விட்டுவிடுகிறார்கள், குப்பையுமாக எண்ணுகிறார்கள்.* (பிலி.3:5-11)
தங்கள் ஜாதி, இன, மத மற்றும் தேசப் பெருமையுள்ளவர்கள் செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல!

👉🏿 *கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கும் மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறார்கள்.* (அப்.21:13)
இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கும் மரிப்பதற்கும் ஆயத்தமாயிராத தங்கள் வயிற்றை தெய்வமாகக் கொண்டவர்களும், பூமிக்குரியவைகளை சிந்திக்கிறவர்களும், கிறிஸ்துவின் சிலுவைக்கு (பாடுகளுக்கு) பகைஞருமான சுகபோகிகள் (பிலி.3:18,19) செய்கிறது வேத அடிப்படையிலான ஊழியம் அல்ல.

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.