Type Here to Get Search Results !

Godson Vincent | வேதாகம சபை! Part 36-46 | The Biblical Church | பொன் குத்துவிளக்குகள்! | Tamil Christian Bible Study | Jesus Sam

====================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 36)
====================
சபை இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தேவனை மகிமைப்படுத்துவது! (ஒரு பார்வை)

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, *சபையிலே* கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் *மகிமை உண்டாவதாக"* என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (எபே.3:20,21)

கிறிஸ்து இயேசுவின் மூலமாய் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் தம்மை மகிமைப்படுத்துவதற்காகவே தேவன் சபையை ஏற்படுத்தியிருக்கிறார்.

தேவனை மகிமைப்படுத்துவது சபையின் தலையாயக் கடமை!

"ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே" என்று பிதாவாகிய தேவனை போற்றுகிறதற்கு தேவனுடைய அசல்சபை தேவகுமாரனால் போதிக்கப்பட்டிருக்கிறது. (மத்.6:13)

மனுஷர் தமது சபையாகிய நம்முடைய நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, தமது எட்டு விசேஷித்த குணங்களாகிய வெளிச்சத்தை அவர்கள் முன்பாக நம்மூலம் பிரகாசிப்பிக்க இயேசுகிறிஸ்து நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். (மத்.5:16,3-10)

தங்கள் சரீரமானது தாங்கள் தேவனாலே பெற்றும் தங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், தாங்கள் தங்களுடையவர்களல்லவென்றும், கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர்கள் என்றும் அறிந்திருக்கிற அசல் சபையாகிய தேவஜனங்கள், தேவனுக்கு உடையவைகளாகிய தங்கள் சரீரத்தினாலும் தங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள். (1கொரி6:19,20)

இவர்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்கிறார்கள்.
(1கொரி.10:31)

கிறிஸ்துவின் வசனம் இவர்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதால், சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, தங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடி, வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, தாங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரிக்கிறார்கள். (கொலோ.3:15-17)

அவரவர் பெற்ற வரத்தின்படியே இவர்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்கிறார்கள். போதிக்கிறவர் தேவனுடைய வாக்கியங்களின்படி போதித்து, உதவிசெய்கிறவர் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்து, எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்கிறார்கள். (1பேதுரு 4:10,11)

இயேசுகிறிஸ்துவை மகிமைப்படுத்துவதன்மூலம் தேவனை மகிமைப்படுத்தும் சபை!

பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று இவர்கள் அறிக்கைபண்ணுகிறார்கள். (பிலி.2:11)

நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் சபையாகிய நம்மிடத்திலும், சபையாகிய நாம் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக, நம்முடைய தேவன் நம்மைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கி, தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் நம்மிடத்தில் நிறைவேற்றுகிறார். (2தெச.1:11,12)

கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும் நாளிலே, தம்முடைய பரிசுத்தவான்களில் (சபையினிடத்தில்) மகிமைப்படத்தக்கவராயும், ஆச்சரியப்படத்தக்கவராயும் வருவார். (2தெச.1:8,9)

தம்மை மகிமைப்படுத்தும் சபையை தேவன் மகிமைப்படுதுவார்!

தங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளாகி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் கிறிஸ்துவுக்குள் முத்திரைபோடப்பட்டு அவருக்குச் சொந்தமானவர்கள், அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள். (எபே.1:13,14)

தேவனுடைய அசல் சபையார் தங்கள் ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவார்கள். (கொலோ.3:4)

கிறிஸ்துவுடனேகூட மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபடும் அவருடைய சபைக்கு ஈடு இணையில்லா மகிமை
வெளிப்படவிருக்கிறது. (ரோமர் 8:17,18)

காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகைள நோக்கியிருக்கிற சபைக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்கவிருக்கிறது. (2கொரி.4:17)

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
     (கோயம்பத்தூர்)
           8946050920


====================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 37)
====================
சபை இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தேவனை மகிமைப்படுத்துவது!* (ஒரு பார்வை)

தேவனை மகிமைப்படுத்தாத ஒன்று அசல் சபையாக இருக்கமுடியாது!

தேவனுடைய மகிமையைத் தேடாமல், சுயமாய்ப் பேசி, தன் சுயமகிமையைத் தேடுகிற ஊழியர் அல்லது கிறிஸ்தவர், தேவனுடைய உண்மையான சபைக்கு உட்பட்டவராக இருக்கமுடியாது. (யோவான் 7:18)

நலமானக் காரியமானாலும், பலவீனமான தங்கள் ஆவிக்குரிய சகோதரர் தங்களை தூஷிக்கத்தக்கதாக, அவர்கள் இடறுவதற்கேதுவானக் காரியங்களை செய்கிறவர்கள், தேவனுடைய உண்மையான சபைக்கு உட்பட்டவர்களாக இருக்கமுடியாது. (ரோமர் 14:1-16)

தங்கள் புருஷரிடத்திலும்,
தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்பில்லாமல்,
தெளிந்த புத்தியில்லாமல், கற்பில்லாமல், வீட்டில் தரித்திராமல், நல்லகுணமில்லாமல், தங்கள் புருஷருக்குக் கீழ்படியாமல் தேவவசனம் தூஷிக்கப்படக் காரணமாயிருக்கிற பாலிய ஸ்திரீகள், தேவனுடைய உண்மையான சபைக்கு உட்பட்டவர்களாக இருக்கமுடியாது. (தீத்து 2:4,5)

சபையில் உள்ள ஏழைகளை ஒருவிதமாகவும், பணக்காரரை ஒருவிதமாகவும் நடத்தத்தக்கதாக, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொண்டிருக்கிறவர்கள், தேவனுடைய உண்மையான சபைக்கு உட்பட்டவர்களாக இருக்கமுடியாது. (யாக்.2:1-13)

கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி,
பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் தேவஜனங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுகிற கள்ளப்போதகர்களும், அவர்களுடைய கெட்ட நடக்கைகளை பின்பற்றி, சத்தியமார்க்கம் தூஷிக்கப்படக் காரணமாயிருக்கிற கிறிஸ்தவர்களும், தேவனுடைய உண்மையான சபைக்கு உட்பட்டவர்களாக இருக்கமுடியாது. (2பேதுரு 2:1-3)

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
     (கோயம்பத்தூர்)
          8946050920


=================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 38)
=================
சபை - இயேசுவின் அருகில் இருக்கும் பொன் குத்துவிளக்கு!

அப்பொழுது என்னுடனே பேசினசத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன், திரும்பினபோது, *ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,* 
         வெளிப்.1:12
*அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே,* நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த *மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.* 
         வெளிப்.1:13

என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், *ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது,* அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம், நீ கண்ட *ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.* 
         வெளிப்.1:20

மேற்காணும் வசனங்களை கவனியுங்கள்.

ஆசியாவின் எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு ஸ்தல சபைகளையும்  
(வெளிப்.1:11) இயேசுகிறிஸ்துவின் அருகில் உள்ள ஏழு பொன் குத்துவிளக்குகளாகக் காண்கிறார் யோவான்.

பொன் குத்துவிளக்குகள்!

பொன் தெய்வீகத்தை (Godliness) குறிக்கிறது.

தேவனுடைய அசல் சபையாகிய அவருடைய ஜனங்கள், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தங்களைக் காத்துக்கொண்டு, பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (யாக்.1:27)

எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ண வாஞ்சிக்கிறார்கள். (1தீமோ.2:1,2)

சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, தங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடி, வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, தாங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரிக்கிறார்கள். 
(கொலோ.3:16,17)

அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய இவர்கள் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளுகிறார்கள். (எபி.12:28)

உபத்திரவக்காலத்திலும் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகுகிறார்கள். (அப். 9:29-31)

சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடுகிறார்கள். (ரோமர் 14:19)

தங்களில் ஒவ்வொருவரும் பிறருடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவருக்குப் பிரியமாய் நடக்கக்கிறார்கள். (ரோமர் 15:2)

ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்கிறார்கள். (1தெச. 5:11)

கிருபை வரங்களை பக்திவிருத்திக்கேதுவாகவே பயன்படுத்துகிறார்கள். (1கொரி. 14:26)

விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவலாறுகளையும் கவனியார்கள். (1தீமோ.1:3)

குறிப்பு:
தேவபக்தியுள்ள, பிறருடைய பக்திவிருத்திக்காய் பிரயாசப்படுகிற மற்றும் பக்திவிருத்திக்கு ஏதுவான சத்தியங்களை வாஞ்சிக்கிற ஒரு ஸ்தலசபையே தேவனுடைய அசல் சபையாக இருக்கமுடியும்!!

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
     (கோயம்பத்தூர்)
            8946050920


====================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 39)
===================
சபை - இயேசுவின் அருகில் இருக்கும் பொன் குத்துவிளக்கு!

பொன் குத்துவிளக்குகள் நடுவில் உலாவும் இயேசுகிறிஸ்து!

சபையை கட்டுகிறவராகிய இயேசுகிறிஸ்து, தமது சபையாகிய பொன் குத்துவிளக்குகள் (தெய்வீகபக்தியுள்ளவர்கள்) நடுவில் உலவுகிறவராக இருக்கிறார். (வெளிப்.1:11-13,20)

"நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்" என்று அவர் வாக்குப்பண்ணினார். (யோவான் 14:18)

ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கட்டப்பட்டுவருகிற தமது சபையாகிய தமது ஜனங்களுக்குள் அவர் வாசம்பண்ணுகிறார். (எபே.2:22)

இரண்டுபேராவது மூன்றுபேராவது தமது நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறார். (மத்.18:18-20; அப்.4:23-31)

உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் தமது சபையுடனேகூட ஆண்டவர் இருக்கிறார். (மத்.28:20)

என்றென்றைக்கும் தம்முடைய சபையுடன் இருக்கப்போதிறார். (1தெச.14:16,17; வெளிப்.21:3)

எப்பொழுதும் எரியவேண்டிய குத்துவிளக்கு!

ஆசரிப்புக்கூடாரத்தில் குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை தன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுட, தேவன் மோசேக்கு உத்தரவிட்டார்.
(யாத்.27:20: லேவி.24:1,2)

ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் குத்துவிளக்கை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் தம்முடைய சந்நிதியில் எரியவைக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். (லேவி.24:2-4)

புத்தியுள்ள கன்னிகைகள் (சபைகள்) தீவட்டிகளோடு (சாட்சியின் ஜீவியத்தோடு) மணவாளனை (கிறிஸ்துவை) எதிர்கொண்டுபோகிறார்கள். (மத்.25:1,4,9,10,13)

தேவனுடைய அசல் சபையினர் தங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருக்கிறார்கள்.
(லூக்கா 12:34-36)
அதாவது, சாட்சியுள்ள வாழ்வுடன் ஆண்டவரை சந்திக்க எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறார்கள்.

உலகத்துக்கு வெளிச்சமாக (வழிகாட்டிகளாக), 
இயேசுகிறிஸ்துவின் எட்டு குணங்களாகிய (மத்.5:3-10) நற்கிரியைகளை, மனுஷருக்கு முன்பு வெளிச்சமாகப் பிரகாசிப்பித்து (மனுஷருக்கு வழிகாட்டி), பரலோகத்திலிருக்கிற தங்கள் பிதாவுக்கு மகிமை சேர்க்கிறார்கள். (மத்.5:14-16)

ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற இவர்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்கிறார்கள். (பிலி.2:14-16)

குறிப்பு:
    தேவனுடைய அசல் சபையினர் இயேசுகிறிஸ்துவின் குணங்களை எப்பொழுதும் வெளிப்படுத்தி, அவருக்காய் எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கிறதைக் காணமுடியும்!!

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920


====================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 40)
=================
ஆசியா சபைகளின் ஆவிக்குரிய நிலை.

1. எபேசு சபை.
 (வெளிப்.2:1-7)

கிரியை:
(வெளிப்.2:2,3,6)
இயேசுவின் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டது.

பொறுமையாயிருந்தது.

பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாதிருந்தது.
 அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்து, சகித்துக்கொண்டிருந்தது.

ஆண்டவர் வெறுக்கிற (விபச்சாரம் மற்றும் விக்கிரகாராதனைக்கு அடிமைப்படுத்துகிற) நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை தானும் வெறுத்தது. 

குறை:
ஆண்டவரின்மேல் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டது. (வெளிப்.2:4)

ஆதியில் செய்தக் கிரியைக்கு இணையாய் இப்பொழுது கிரியை செய்யவில்லை. (வெளிப்.2:5)

ஆண்டவரின்மேல் உள்ள அன்பு குறைந்துவிட்டதால், அவருக்காக செய்யும் கிரியையும் குறைந்துவிட்டது.

ஆண்டவருக்காய் நாம் செய்யும் கிரியையின் அளவு, அவர்மேல் நாம் வைத்திருக்கும் அன்பின் அளவை பொருத்தே இருக்கும்.

அழைப்பு:
"நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக" என்று ஆண்டவர் எபேசு சபைக்கு அழைப்பு விடுத்தார். (வெளிப்.2:5)

ஆதி அன்பை, விசுவாசத்தை, வைராக்கியத்தை, வாஞ்சையை, ஆத்தும பாரத்தை, கொடுத்தலை விட்டு, எபேசு சபையை போன்ற அனுபவத்திற்குள்ளான இன்றைய சபைகளும் மனந்திரும்பவேண்டியது அவசியம்!

மனந்திரும்பாவிட்டால்?
"நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்" என்று எபேசு சபையை எச்சரித்தார் ஆண்டவர். (வெளிப்.2:5)

தம்மில் ஆரம்பத்தில் அன்புகூர்ந்ததுபோல மறுபடியும் அன்புகூர்ந்து, தமக்காக ஆதியில் செய்ததுபோலவே கிரியைசெய்யத் தவறினால், தமது அருகில் இருக்கும் ஏழு பொன் குத்துவிளக்குகளில் ஒன்றான எபேசு சபையை தமது அருகிலிருந்து அகற்றிவிடுவதாக எச்சரிக்கிறார் ஏழு பொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிற ஆண்டவர். (வெளிப்.2:1, 1:12-13,20)

"குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள் (அவரில் அன்புகூருங்கள்) கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும், அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்" என்று எச்சரிக்கிறார் தேவன். (சங்.2:12)

"ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்" என்கிறார் பவுல். (1கொரி.16:22)

ஆண்டவரில் ஆதியில் கொண்டிருந்த அன்புக்கும் கிரியைக்கும் திரும்பாத இன்றைய சபைகள் ஆண்டவரின் சமூகத்திலிருந்து தள்ளுபடியாகும் என்பதில் ஐயமில்லை.

இயேசுகிறிஸ்துவினால் புறக்கணிக்கப்பட்டும், தாங்கள் இன்னும் இயேசுவின் அருகில் இருப்பதாக தங்களை ஏமாற்றிக்கொள்ளும் சபைகள் பல இன்று உண்டு! 

ஜெயங்கொண்டால்?
"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்" என்கிறார் ஆண்டவர். (வெளிப்.2:7)

தன்னுடன் பேசுகிற ஆவியானவருக்கு செவிகொடுத்து, ஆதி அன்பின் வீழ்ச்சியிலிருந்து மறுபடியும் எழுந்திருக்கிற சபைக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியை (வெளிப்.22:1,2,14) புசிக்கக்கொடுக்கிறார் தேவகுமாரன்.

தேவன்மேல் கொண்டிருந்த ஆதி அன்பை விட்டதினாலேயே ஆதாம் ஏவாள் ஜீவவிருட்சத்தின் கனியை இழந்தனர். (ஆதி.2:9, 3:1-7,22-24)

மனுஷன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்கு அவனை தோட்டத்திலிருந்து துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார் தேவன். (ஆதி. 3:22,24)

இயேசுகிறிஸ்துவில் அன்புகூருகிறவர்கள் ஜீவமார்க்கத்தின் வழியாய் பரலோகமாகிய ஏதேனுக்குள் பிரவேசித்து, தேவசமுகத்தின் பரிபூரண ஆனந்தத்தையும், அவருடைய வலதுபாரிசத்தின் நித்தியபேரின்பத்தையும் அனுபவிக்கமுடியும். (சங்.16:11)

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920


====================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 41)
====================
ஆசியா சபைகளின் ஆவிக்குரிய நிலை.

2. சிமிர்னா சபை
(வெளிப்.2:8-11)

கிரியை:
(வெளிப்.2:9)

கிரியைசெய்தது.

உபத்திரவப்பட்டது. 

ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் தரித்திரமடைந்தது.

தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருந்தவர்களால் தூஷிக்கப்பட்டது. 

ஆலோசனை:
(வெளிப்.2:10)

நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே,

இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்,

பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு,

[பத்துநாள் = கொஞ்சங்காலம் (1பேதுரு 1:6; 2கொரி.4:17)]

அப்பொழுது,
ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். 

குறிப்பு:
சிமிர்னா சபைக்கு முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவராகக் தம்மை காண்பிக்கிறதின்மூலம் (வெளிப்.2:8), மரணபரியந்தம் உண்மையாயிருக்கிற சிமிர்னா சபைக்கு ஜீவகிரீடத்தை தருவதற்கு தாம் வல்லவர் என்று காண்பிக்கிறார் ஆண்டவர்!

ஜெயங்கொண்டால்?
"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது" என்கிறார் ஆண்டவர். (வெளிப்.2:11)

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் கேட்டு, தான் படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாமல், தாங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் தங்களில் சிலரைக் காவலில் போட்டு சிலகாலம் உபத்திரவப்படுத்தினாலும், மரணபரியந்தம் உண்மையாயிருக்கிற சபை இரண்டாம் மரணத்தினால் [அக்கினி கடலினால் (வெளிப்.20:14,15)] சேதப்படுவதில்லை. ஆண்டவர் அவர்களுக்கு ஜீவகிரீடத்தை தருவார். (வெளிப்.2:10)

சிமிர்னா சபையை போன்று பாடுகள் மற்றும் உபத்திரவங்கள் வழியாய் செல்லும் இன்றைய சபைகள் ஜீவகிரீடத்தை பெற்றுக்கொள்ளத்தக்கதாக, மரணபரியந்தம் உண்மையாயிருக்கவேண்டியது அவசியம்!!

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920


===================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 42)
==================
ஆசியா சபைகளின் ஆவிக்குரிய நிலை.

3. பெர்கமு சபை
(வெளிப்.2:12-17)

கிரியை:
வெளிப்.2:13

சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் குடியிருந்தும், ஆண்டவரின் நாமத்தைப் பற்றிக்கொண்டிருந்தது.

சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே தங்களுக்குள்ளே இயேசுகிறிஸ்துவுக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் அவரைப் பற்றும் விசுவாசத்தை மறுதலியாமலிருந்தது.

பெர்கமு சபையை போன்று நற்கிரியைகள் மற்றும் உண்மையுள்ள சாட்சிகளுள்ள சபைகள் இன்றும் இருக்கிறதைக் காணமுடியும்!

குறை:
(வெளிப்.2:14,15)

விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் சபையில் இருந்தனர்.

அப்படியே ஆண்டவர் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் [விக்கிரக ஆராதனை மற்றும் வேசித்தனத்தில் பிரியப்படுகிறவர்களும்] இங்கு இருந்தனர்.

நற்கிரியை செய்கிற, உண்மையுள்ள சாட்சிகளுள்ள சபைகளில் சிலை வழிபாடாகிய விக்கிரகாராதனையிலும், பொருளாசையாகிய விக்கிரகாராதனையிலும் (எபே.5:5; கொலோ.3:5) முறையற்ற பாலியல் உறவிலும் ஆர்வமுள்ளவர்கள் இருக்கிறதைக் காணமுடியும்!

மனந்திரும்ப அழைப்பு:

"நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்" என்று ஆண்டவர் பெர்கமு சபையை எச்சரித்தார். (வெளிப்.2:16)

சிலை வழிபாடாகிய விக்கிரகாராதனையிலும், பொருளாசையாகிய விக்கிரகாராதனையிலும், முறையற்ற பாலியல் உறவிலும் ஆர்வமுள்ள பெர்கமு சபையினரை மனந்திரும்பும்படி ஆண்டவர் அழைக்கிறார்.

இன்றைய சபைகளில் இப்படிப்பட்டப் பாவங்களில் சிக்கியிருக்கிறவர்களும் மனந்திரும்ப தேவன் எதிர்பார்க்கிறார்.

மனந்திரும்பாவிட்டால்?
"நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்" என்று எச்சரிக்கிறார் (வெளிப்.2:16) இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவராகிய
(வெளிப்.2:12; 1:16) இயேசுகிறிஸ்து.

விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமை (வெளிப்.2:14) உருவினப் பட்டயத்துடனேயே கர்த்தருடைய தூதனானவர் (இயேசுகிறிஸ்து) எதிர்கொண்டார். (எண்.22:24-35)

பெர்கமு சபையில்
சிலை வழிபாடாகிய விக்கிரகாராதனையிலும், பொருளாசையாகிய விக்கிரகாராதனையிலும், முறையற்ற பாலியல் தொடர்புகளிலும் ஆர்வமுள்ளவர்களுடன் தமது வாயின் பட்டயமாகிய தமது வல்லமைான வார்த்தையை கொண்டு யுத்தம்பண்ணப்போவதாக எச்சரிக்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் தமது வார்த்தையாகிய பட்டயத்தை அவர்கள் மனந்திரும்பத்தக்கதாக கண்டிக்கவோ (எபி.4:12), அல்லது மனந்திரும்பாத அவர்களை தண்டிக்கவோ (யோவான் 12:48) பயன்படுத்தப்போவதாக அறிவித்திருக்கக்கூடும்.

ஜெயங்கொண்டால்?
"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது" என்கிறார் அண்டவர்.. (வெளிப்.2:17)

ஆவியானவர் சொல்லுகிறதைக் கேட்டு, விக்கிரகாராதனையிலிருந்தும், வேசித்தனத்திலிருந்தும் மனந்திரும்புகிறவர்களின் ஆத்துமாவை போஷிக்கும் தமது வசனத்தையும், தமது அத்தனை நித்திய ஆசீர்வாதங்களுக்கும் உரியவர்கள் என்கிற உத்தரவாதத்தையும் அளிப்பதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார்.

இழிவான இம்மைக்குரிய காரிங்களுக்காய் அழியாத நித்திய ஆசீர்வாதங்களை இழந்துவிடாதபடிக்கு, பெர்கமு சபையின் அனுபவத்திலுள்ள நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்!!

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920


=====================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 43)
======================
ஆசியா சபைகளின் ஆவிக்குரிய நிலை.

4. தியத்தீரா சபை
(வெளி.2:18-29)

தியத்தீரா என்பதற்கு துன்பத்தின் வாசனை (odour of affliction) என்று அர்த்தம்.

கிரியை:
(வெளி.2:19)

ஆண்டவருக்காய் கிரியைசெய்தது.

ஆண்டவரில்
அன்புகூர்ந்தது.

ஆண்டவருக்கு ஊழியம் செய்தது.
 
ஆண்டவரில் விசுவாசம் வைத்தது.

உபத்திரவத்தில் பொறுமையாய் இருந்தது.

ஆண்டவருக்காய் முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருந்தது.

குறை: 
(வெளி.2:20,21)

தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் ஆண்டவருடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி அவளுக்கு இடங்கொடுத்தது.

குறிப்பு:
ஆண்டவருக்காய் கிரியைசெய்கிற, அவரில்
அன்புகூருகிற,
அவருக்கு ஊழியம் செய்கிற, அவரில் விசுவாசம் வைக்கிற, உபத்திரவத்தில் அவருக்காய் பொறுமையாய் இருக்கிற, ஆண்டவருக்காய் முன்பு செய்த கிரியைகளிலும் அதிகமாய் கிரியைசெய்கிற சில சபைகள்: 'ஊழியக்காரர்' என்கிற பெயரில் தங்களிடம் வரும் பிலேயாம்களையும், அல்லது 'ஊழியக்காரி' என்கிற பெயரில் தங்களிடம் வரும் யேசபேல்களையும் எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, அவர்கள் சொல்லும் அத்தனைக்காரியங்களையும் ஆர்வமாய் செய்கிறதைக் காணமுடிகிறது!

இன்று பல சபைகள் பிலேயாம்களாலும் யேசபேல்களாலும் நடத்தப்படுகிறதைக் கண்கூடாகக் காணமுடியும்!

பல சபைகளின் "சீனியர் பாஸ்டர்" என்கிற இடத்தை பிலேயாம்களும் யேசபேல்களும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். இவர்களால் உடன் ஊழியர்களும் விசுவாசிகளும் பக்திவிருத்தியடைவதற்கு பதிலாக, பக்தியிழந்து பாழாய்போய்கொண்டிருக்கிறார்கள்.

ஊழியக்காரரின் தாயார், துணைவியார், மகள் அல்லது மருமகள் என்கிற உருவில் உள்ள யேசபேல்களால் பல சபைகள் கட்டுப்படுத்தப்படுகிறதையும் காணமுடிகிறது!

"தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை" என்று சொல்லப்படுகிறதுபோல (1இரா.21:25); யேசபேலின் ஆவியை உடைய தங்கள் மனைவிகள் தூண்டிவிடுகிறபடியெல்லாம் தேவஜனங்களாகிய சபையை நடத்தத் தங்களை விற்றுப்போட்டிருக்கிற பல ஊழியர்களினால் [ஐந்துவித ஊழியரும் அடக்கம்] தேவஜனங்களாகிய சபைகள் பரிசுத்தத்தை இழந்துவருகின்றனர்!

தசமபாகம் காணிக்கை சரியாகக் கொடுத்தும், ஊழியக்காரருக்கு தாராளமாய் பணம் மற்றும் பொருளுதவி செய்தும், அவர்களை கட்டுப்படுத்துகிறதின் மூலம் சபையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யேசபேலின் ஆவியை உடைய சில விசுவாச ஸ்திரீகளும் உண்டு!

யேசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை கொன்றுபோட்டதுபோல, இவர்களின் கரம் உண்மையான ஊழியர்களுக்கு எதிராகவே இருக்கும்! உண்மையுள்ள ஊழியர்கள் சபையின் பக்கம் வராதபடிக்குப் பார்த்துக்கொள்வதில் இவர்கள் கவனமாய் இருப்பார்கள்!

சபையில் இருக்கும் ஊழியர்களையே இவர்கள் தங்கள் வஞ்சகத்தினால் 
வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் தூண்டிவிடுவார்கள்!

தியத்தீரா சபையில் தன்னை 'தீர்க்கதரிசி' என்று சொல்லிக்கொண்ட அந்த ஸ்திரீயின் அசல் பெயர் யேசபேல் அல்ல. அவளுடைய கிரியைகளின் அடிப்படையில் ஆண்டவர் அவளை அவ்வாறு குறிப்பிடுகிறார்.

மனந்திரும்ப மறுத்தவள்!
"அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன், தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை" என்கிறார் ஆண்டவர். (வெளி.2:21)

தேவனுடைய சபையை பாழாக்கும் போலி ஊழியர்கள், ஊழியக்காரிகள் மனந்திரும்ப ஆண்டவர் தவணைகொடுக்கிறார். இவர்கள் மனந்திரும்பி, சபையில் விசுவாசிகளாக இருந்தாலே போதும், தேவனுடைய கோபத்துக்குத் தப்பலாம்!

பல ஆண்டுகள் ஊழியர், ஊழியக்காரிகள் என்று சொல்லி பழக்கப்பட்டுவிட்டதாலும்; சபையார் இவர்களை ஊழியக்காரர்களாக ஏற்றுக்கொண்டு கனப்படுத்திவருகிறதினாலும்; சபையாரின் செல்வத்தை அனுபவித்து சுகபோகமாய் வாழப் பழகிவிட்டதாலும்; சமூகத்தில் இவர்களுக்கு கிடைத்திருக்கிற அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறதினாலும் இவர்கள் மனந்திரும்பி குணப்பட்டு, தேவகோபத்திற்கு தங்களை மறைத்துக்கொள்ள மறுக்கிறார்கள்!

மனந்திரும்பாவிட்டால்?
"இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன், அப்பொழுது நானே உள்ளந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும், அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்" என்று எச்சரிக்கிறார் ஆண்டவர்.
(வெளி.2:22,23)

தம்மோடு இராமலும், தம்முடைய உபதேசத்தின்படி சபையை நடத்தாமலும், தமது வார்த்தைக்கு விரோதமாக வாழ்கிற, போதிக்கிற போலி ஊழியக்காரியை விபச்சாரியாகவும்; அவளுடைய அருவருப்பான வாழ்வுக்கும் போதனைக்கும் இசைவாயிருக்கிற ஊழியர்களை அவளோடு விபச்சாரம்பண்ணுகிறவர்களாகவும்; அவளுடைய முறையற்ற வாழ்வையும், தவறான போதனைகளையும் ஏற்றுக்கொண்ட சபையாரை அவளுடையப் பிள்ளைகளாகவும் பார்க்கிறார் ஆண்டவர்.

போலி ஊழியக்காரியான அவளை கட்டில்கிடையாக்குவதோடு, அவளுக்கு ஒத்துழைத்த ஊழியர்களை மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, அவளை ஏற்றுக்கொண்ட சபையாராகிய அவளுடைய பிள்ளைகளை நிச்சயமாய் கொல்லப்போவதாக அறிவிக்கிறார் ஆண்டவர்.

இன்றும் தியத்தீரா அனுபவமுள்ள சபைகளை காணமுடிகிறது. செல்வசெருக்குள்ள சில ஸ்திரீகளால் சில சபைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர்களுடைய செல்வத்தினிமித்தமும் அவர்களுடன் உள்ள கள்ள உறவினிமித்தமும் அவர்களுடைய சொல்படியெல்லாம் கேட்கிற சில ஊழியர்கள் உண்டு!

ஊழியக்காரருடன் தவறான உறவில் உள்ள ஸ்திரீகள் சிலரால் சபைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன! சில சபைகளில் இவர்களே முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர், ஜெபக்குழுக்களுக்கு தலைமைதாங்குகின்றனர், கிளைசபைகளை நடத்துகின்றனர். சபையில் உள்ள பெரும்பாலான விசுவாசிகள் இவர்களைக் கண்டுகொள்ளாததோடு, இவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் செய்கின்றனர்!

இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவர் அக்கினிஜூவாலைபோன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரனாக (தண்டனையளிக்கிற நியாயாதிபதியாக) காட்சியளிக்கிறார். (வெளி.2:18)

மேற்கண்ட போலி ஊழியக்காரிகளையும், போலி ஊழியர்களையும், போலி விசுவாசிகளையும் ஆதரிக்கிற; அவர்களை ஊழியக்காரி மற்றும் ஊழியக்காரராக அங்கீகரிக்கிற; அவர்களால் நடத்தப்படுகிறவர்களை சபையாக ஏற்றுக்கொள்கிற; அவர்களை குறித்து மற்றவர்களை எச்சரிக்கிறவர்களுக்கு எதிராக அறிக்கைவிடுகிற ஊழியர்களும் ஆண்டவரின் தண்டனைக்குத் தப்பமுடியாது!

இவர்களுக்கு விலகுகிறவர்களின் ஆசீர்வாதம்!
"தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்" என்கிறார் ஆண்டவர். (வெளி.2:24)

வேசித்தனம்பண்ணுவது மற்றும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பது குறித்த யேசபேலின் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும்; "தேவனைபற்றிய ஆழமானக் காரியங்கள்" என்று அவள் கூட்டத்தார் கூறிக்கொண்டாலும், நிஜத்தில் சாத்தானுடைய ஆழங்களாயிருக்கிற, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற தியத்தீரா சபையில் உள்ள மற்றவர்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்துவதில்லை என்கிறார் ஆண்டவர்.

"ஆழமான ஆவிக்குரிய இரகசியங்கள்" என்று சொல்லிக்கொண்டு, வேதத்துக்கு எதிராக போதிக்கிறவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கிறவர்கள் ஆண்டவரின் தண்டனைக்குத் தப்பலாம்.

பற்றிக்கொண்டிருக்க ஆலோசனை!
உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
              வெளிப்.2:25

யேசபேலின் போதனைகளை பற்றிக்கொள்ளமலும், சாத்தானின் ஆழங்களையும் அறிந்துகொள்ளாமலும் இருக்கிற உத்தம விசுவாசிகள், தாம் வருமளவும் தங்களுக்கு அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் வழியாக தாம் அளித்துள்ள ஆரோக்கியமான உபதேசத்தை (எபே.2:20; 3:1-7) பற்றிக்கொண்டிருக்கவேண்டும் என்கிறார் ஆண்டவர்.

ஜெயங்கொள்ளுகிறவனுக்கு?
"ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்" என்று வாக்குப்பண்ணுகிறார் ஆண்டவர். (வெளி.2:26-28)

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் கேட்டு (வெளி.2:29),
ஜெயங்கொண்டு, முடிவுபரியந்தம் தமது கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு: தம்முடன் உலகத்தை ஆளுகைசெய்யவும் (2தீமோ.2:12); உலகத்தை நியாயந்தீர்க்கவும் (1கொரி.6:2); தமது உடன் சுதந்தரராய் தம்முடனேகூட மகிமைப்படவும் (ரோமர் 8:17) அருளப்போவதாக வாக்குப்பண்ணுகிறார் ஆண்டவர்!

பரிசுத்தம் அதிகாரம், ஆளுகை மற்றும் மகிமைக்கு நேராகவே ஒருவரை வழிநடத்தும்!

இன்றைய யேசபேலின் கூட்டத்தாருக்கும், சாத்தானின் ஆழங்களாகிய அவர்களுடைய போதனைகளுக்கும் விலகி தங்களைக் காத்துக்கொள்ள தேவஜனங்கள் விழிப்பாய் இருக்கவேண்டியது அவசியம்!!

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920


=====================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 44)
=======================
ஆசியா சபைகளின் ஆவிக்குரிய நிலை.

5. சர்தை சபை
(வெளி.3:1-6)

சர்தை என்பதற்கு 'உயிருள்ளவன்' என்று பொருள்.

கிரியை:
சர்தை சபையின் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக காணப்படவில்லை. (வெளி.3:2)

ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் இருந்தார்கள். (வெளி.3:4)

'உயிருள்ளவன்' என்று பெயர் பெற்றிருந்தாலும் சர்தை சபை ஆவிக்குரிய நிலையில் மரித்ததாகவே இருந்தது.

சர்தையின் அநேக ஆவிக்குரிய குணங்கள் சாகிறதற்கேதுவாயிருந்தன. (வெளி.3:2)

"பரிசுத்தப் பவுல் ஆலயம்" என்று பெயர்கொண்டிருக்கிற
பல சபைகளில் இன்று பரிசுத்தவான்களையோ, பவுல்களையோ பார்ப்பது அரிதாயிருக்கிறதல்லவா?

"தூய பேதுரு ஆலயம்" என்று பெயர்கொண்டிருக்கிற பல சபைகளில் தூய்மையானவர்களையோ, பேதுருக்களையோ காண்பது அரிதாயிருக்கிறதல்லவா?

இன்று அநேக சபைகளின் திவ்விய சுபாவங்களான விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதரசிநேகம், அன்பு ஆகியவை (2பேதுரு 1:4-7) சாகிறதற்கேதுவாக இருக்கின்றனவல்லவா? 

மனிதர்கள் முன்பாக நாம் புனிதர்களாகக் காணப்பட்டாலும் 
தேவனுடைய ஏழு ஆவிகளையும் உடையவராகிய [ஆவியில் பூரணராகிய (வெளி.3:1)] ஆண்டவரின் கண்களுக்கு தப்பமுடியாது! 

விழித்துக்கொள்ள ஆலோசனை:

"நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து" என்று சர்தை சபைக்கு ஆலோசனை சொல்லுகிறார் ஆண்டவர். (வெளி.3:2)

சர்தை சபையின் கிரியைகள் குறைந்துகொண்டிருந்தது.
அதன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக இல்லை. தேவனுக்கான தனது கிரியைகள் முற்றிலும் ஒழிந்துப்போவதற்குமுன், விழித்துக்கொண்டு சாகிறதற்கேதுவாயிருக்கிற ஆவிக்குரியக் காரியங்களை ஸ்திரப்படுத்தும்படி அதற்கு ஆலோசனை சொல்லுகிறார் ஆண்டவர்.

சர்தை சபையின் அனுபவத்திலுள்ள இன்றைய சபைகள் விழித்துக்கொள்ளவேண்டியது அவசியம்!

மனந்திரும்ப அழைப்பு:
"நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு" என்று சர்தை சபைக்கு மனந்திரும்ப அழைப்புவிடுக்கிறார் ஆண்டவர். (வெளி.3:3)

கிறிஸ்துவின் சுவிசேஷம் முதன்முதலில் தனக்குப் பிரசங்கிக்கப்பட்டபோது மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் கேட்டு, அதை ஏற்றுக்கொண்டு, 
பரம ஈவை ருசிபார்த்து, பரிசுத்த ஆவியைப் பெற்று, தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்ததை நினைவுகூர்ந்து, தனது மரித்த நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பெற்றுக்கொண்ட சத்தியத்தை காத்துநடந்து மனந்திரும்ப சர்தை சபையை அழைக்கிறார் ஆண்டவர்.

சர்தை சபையின் அனுபவத்திலுள்ள இன்றைய சபைகளுக்கும் இந்த அழைப்பு பொருந்தும்!

விழித்திராவிட்டால்?
"நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன், நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்" என்று சர்தை சபையை எச்சரிக்கிறார் ஆண்டவர். (வெளி.3:3)

தான் கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்புவதற்கு விழித்துக்கொள்ளாவிட்டால், சர்தை சபை நினையாதவேளையில் வந்து அதற்கு நியாயத்தீர்ப்பு செய்வதாக எச்சரிக்கிறார் வரப்போகிற நியாயாதிபதி இயேசுகிறிஸ்து.

ஆண்டவர் நியாயந்தீர்க்க வரும் வேளையை அறியாதபடியினாலே சர்தை சபையின் அனுபவத்திலுள்ள இன்றைய சபைகளும் விழித்துக்கொள்ளவேண்டியது அவசியம்!

தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாதவர்கள்!
"ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு, அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்" என்று வாக்குப்பண்ணுகிறார் ஆண்டவர். (வெளி.3:4)

கிரியையில் குறைவுள்ளதாய் ஆவிக்குரிய ஜீவியத்தில் மரித்தநிலையில் இருந்த சர்தை சபையில், ஆத்துமாவில் கறைபடாத, ஜீவியத்தில் பரிசுத்தமுள்ள சிலர் இருந்தனர்.

பரலோகவாழ்வுக்கு தகுதியுள்ள அவர்கள் தம்முடன் நித்திய மகிமையில் பங்கடைவார்கள் என்கிற நிச்சயத்தை அளிக்கிறார் ஆண்டவர் இயேசுகிறிஸ்து.

இன்றைய சர்தை சபைகளிவ் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறதை மறுக்கமுடியாது!

ஜெயங்கொண்டால்?
"ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது" என்கிறார் இயேசுகிறிஸ்து. (வெளி.3:5,6)

ஆவியானவர் சொல்லுகிறதைக் கேட்டு, தான் கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பி, விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்தி, தங்கள் கிரியைகளை தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக்குகிற சர்தை சபையாருக்கு பரலோக மகிமையை நிச்சயப்படுத்தி, தேவனுக்கும் தேவதூதருக்கும் முன்பாக அவர்களை கௌரவப்படுத்துவதாக வாக்குப்பண்ணுகிறார் இரட்சகர்.

ஆவிக்குரிய ஜீவியத்தில் மரிக்கவும் குறைவுபடவும் நேர்ந்தாலும், விழித்து மனந்திரும்பி, பழையபடி கிரியைசெய்து பரலோகமகிமையை சுதந்தரிக்க நாம் பாத்திரவான்களாகிவிடவேண்டும் என்றே நமது அன்பின் இரட்சகர் விரும்புகிறார்!

சர்தை சபை அனுபவத்திலுள்ளவர்கள் சிந்திக்கவும்!!

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920


=========================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 45)
========================
ஆசியா சபைகளின் ஆவிக்குரிய நிலை.

6. பிலதெல்பியா சபை
(வெளி.3:7-13)
பிலதெல்பியா என்பதற்கு "சகோதர அன்பு" என்று பொருள் 

கிரியை:
தனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், ஆண்டவரின் நாமத்தை மறுதலியாமல், அவருடைய வசனத்தைக் கைக்கொண்டது. (வெளி.3:8)

ஆண்டவரின் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை காத்துக்கொண்டது. (வெளி3:10)

அதாவது தனக்கு கொஞ்சம் கிருபையே கொடுக்கப்பட்டிருந்தபோதும், தனக்கு நேரிட்டப் பாடுகளில் ஆண்டவரின் நாமத்தை ஆழமாய் நேசித்து, விசுவாசித்து, அவருடைய வசனத்தைக் கைக்கொண்டு, அவரது பொறுமையின் மாதிரியைப் பின்பற்றினது.

வாக்குத்தத்தம்:
"இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்".
                    வெளி.3:8

"இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன், இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்". 
                    வெளி.3:9

"பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்".
                  வெளி.3:10

என்று ஆண்டவர் பிலதெல்பியா சபைக்கு வாக்குப்பண்ணுகிறார்.

கொஞ்சத்தில் உண்மையாயிருந்த பிலதெல்பியா சபைக்கு தடையற்ற அதிக பெலனை, கிருபைகளை, வாய்ப்புகளை, மேன்மைகளை கொடுக்கப்போவதாக பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமான [தடைசெய்யப்படமுடியாதவருமான (வெளி.3:7)] ஆண்டவர் சொல்லுகிறார்.

தங்களை யூதரென்று (தேவனுடைய ஜனங்களென்று) சொல்லிக்கொண்டாலும், உண்மையில்
சாத்தானுடைய கூட்டத்தாராயிருந்து, 'தேவனற்றவர்கள்' என்று தாங்கள் ஏளனமாய் பார்க்கிற புறஜாதியாரில் உண்டாயிருக்கிற பிலதெல்பியா சபையை அற்பமாய் நினைத்து, அதற்கு எதிராக செயல்படுகிற யூதர்களை, அந்த சபைக்கு முன்பாகத் தாழ்த்துகிறதின்மூலம்: பெயரளவில் யூதாராகிய தங்கள்மேல் அல்ல, தமது வசனத்தைக் காத்துக்கொள்ளுகிற புறஜாதியாரின்மேல் தாம் அன்பாய் இருக்கிறதை அவர்களுக்கு புரியவைக்கப்போவதாகவும் வாக்குப்பண்ணுகிறார் ஆண்டவர்.

தனக்கு நேரிட்ட சோதனைகளில் தமது அடிச்சுவடுகளில் பொறுமையாய் நடந்த பிலதெல்பியா சபையை, பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்புவித்து காப்பதாகவும் வாக்குப்பண்ணுகிறார்.

பிலதெல்பியா சபையைபோன்று கிரியைசெய்கிற இன்றைய சபைகளுக்கு பிலதெல்பியா சபையைபோன்று அதிகக் கிருபைகளை அளிக்க ஆண்டவர் ஆயத்தமாய் இருக்கிறார்.

ஆலோசனை:
"இதோ, சீக்கிரமாய் வருகிறேன், ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு" என்று பிலதெல்பியா சபைக்கு ஆலோசனை கொடுக்கிறார் ஆண்டவர். (வெளி.3:11)

தனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், சோதனைகாலத்தில் ஆண்டவரின் நாமத்தை மறுதலியாமல், அவருடைய பொறுமையை பின்பற்றி, அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிற சபையானாலும்; தொடர்ந்து இந்தக் காரியத்தில் உறுதியாக இருந்தால் மாத்திரமே, பிலதெல்பியா சபை தனது நித்திய மகிமையை சுதந்தரித்துக்கொள்ளமுடியும் என்று எச்சரிக்கிறார் ஆண்டவர்.

பிலதெல்பியா சபையின் அனுபவத்திலுள்ள இன்றைய சபைகள் நித்திய மகிமைக்கு பாத்திரராய் தங்களை தொடர்ந்து காத்துக்கொள்ளுகிறதில் விழிப்பாய் இருக்கவேண்டியது அவசியம்!

ஜெயங்கொண்டால்?
 "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை, என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்" என்று வாக்குப்பண்ணுகிறார் ஆண்டவர். (வெளி.3:12)

ஆவியானவர் தனக்குச் சொல்லுகிறதைக் கேட்டு (வெளி.3:13), சோதனைகாலத்தில் ஆண்டவரின் நாமத்தை மறுதலியாமல், அவருடைய பொறுமையை பின்பற்றி, அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறதில் பிலதெல்பியா சபை உறுதியாயிருந்தால்: தமது இலவசமான மற்றும் வல்லமையான கிருபையை நினைவுபடுத்தும் தூணாக அதை நிலைநிறுத்துவதாகவும்; தேவனுக்கும், பரலோகத்துக்கும், தமக்கும் உரியதாக அதை உறுதிப்படுத்துவதாகவும் வாக்குப்பண்ணுகிறார் ஆண்டவர்!

பிலதெல்பியா சபையின் அனுபவத்தை உடைய இன்றைய சபைகள், ஆவியானவர் தங்களுக்குச் சொல்லுகிறதைக் கேட்டு,  
சோதனை காலத்தில் ஆண்டவரின் நாமத்தை மறுதலியாமல், அவருடைய பொறுமையை பின்பற்றி, அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறதில் உறுதியாயிருக்கவேண்டியது அவசியம்!!

 க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920

==================
வேதாகம சபை (The Biblical Church) (பகுதி - 46)
=====================
ஆசியா சபைகளின் ஆவிக்குரிய நிலை.

7. லவோதிக்கேயா சபை
(வெளி.3:14-22)

கிரியைகள்:
குளிருமல்லாமல் அனலுமல்லாமல், வெதுவெதுப்பாயிருந்தது. (வெளி.3:15,16)

உலகத்துக்கும் தேவனுக்கும் ஊழியம்! (மத்.6:24)

உலகத்தோடும் தேவனோடும் சிநேகம்! (யாக்.4:4)

ஆண்டவர் தமது வாயினின்று வாந்திபண்ணிப்போடத்தக்கதாய் உலகத்தால் கறைபட்ட ஆவிக்குரிய ஜீவியம்! (வெளி. 3:16)

வெதுவெதுப்பானதற்கு காரணம்:
உலகத்தை உள்ளே இழுத்துக்கொண்டு, கிறிஸ்துவை வெளியேற்றிவிட்டு கதவை அடைத்துக்கொண்டது!

இயேசுகிறிஸ்து வாசற்படியிலே நின்று கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்! (வெளி.3:20)

இன்றைக்கும் அநேக சபைகளில் கிறிஸ்துவை கணமுடியவில்லை. 

பல சபைகளின் ஊழியர் மற்றும் விசுவாசிகளின் பணஆசை, பொருளாசை, ஐசுவரியவான்களாகும் விருப்பம், உலகப்பிரகாரமான செழிப்பில் ஆர்வம், வரதட்சனை மோகம், ஜாதிவெறி, வர்க்கபேதம், ஆடம்பரம், உல்லாசவாழ்வு, மனமேட்டிமை இவைகள் அவர்களுக்குள் கிறிஸ்து இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது! 

இயேசுகிறிஸ்து வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறது உலகமயக்கத்தில் இருக்கிற இவர்களுக்கு கேட்பதில்லை.

அறியாமை:
தான் நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், தான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், தனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொன்னது லவோதிக்கேயா சபை. (வெளி.3:17)

லவோதிக்கேயா சபை நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனுமாயிருந்தது.

ஆவிக்குரிய எந்த நல்ல குணங்களும், கிருபைகளும் இல்லாத ஆவிக்குரிய
தரித்திரனும், நிர்வாணியுமாயிருந்தது.

தன்னுடைய உண்மையான ஆவிக்குரிய நிலையை, தனது குறையைக் காணமுடியாத ஆவிக்குரிய குருடனாயிருந்தது.

தன்னிடத்தில் இல்லாத கிருபைகளும், வரங்களும், திவ்விய சுபாவங்களும் தனக்கு அதிகமாகவே இருப்பதாக கற்பனைசெய்துகொண்டிருந்தது!

உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் அதன் உண்மையான நிலையை அதற்கு எடுத்துசொல்லுகிறார். (வெளி.3:14)

ஆண்டவர் உண்மையை மட்டுமே பேசுகிறவர், சகலமும் அறிந்தவர், அவர் சொல்லுகிறது அப்படியே இருக்கும். லவோதிக்கேயா சபையைப் பற்றிய அவருடைய பார்வை மிகவும் தெளிவானது.

அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமும் வெளியரங்கமுமாயிருக்கிறது. (எபி.4:13)

மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை (மனோபாவங்களை) நிறுத்துப்பார்க்கிறார். (நீதி.16:2)

இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும், அவர் நம்புகிறதில்லை. வானங்களும் அவர் பார்வைக்கு சுத்தமானவைகள் அல்ல. (யோபு 15:15)

லவோதிக்கேயா சபையின் அனுபவமுள்ள பல சபைகள் இன்றும் காணப்படுகின்றன. ஆனால், இவர்கள் தங்கள் குறைகளை ஒத்துக்கொள்ளுகிறதில்லை.

தாங்கள் அழுக்கற கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு. (நீதி.30:12)

தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ! (ஏசாயா 5:20)

தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ! (ஏசாயா 5:21)

ஆண்டவரின் ஆலோசனை:
லவோதிக்கேயா சபை ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், தன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு தான் உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் தம்மிடத்திலே வாங்கிக்கொள்ளவும், தான் பார்வையடையும்படிக்கு தன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று அதற்கு ஆலோசனை சொன்னார் ஆண்டவர். (வெளி.3:18)

லவோதிக்கேயா சபை உண்மையிலே ஆவிக்குரிய ஐசுவரியவானாகும்படி தன்னை சுத்திகரிக்கும் தமது வசனத்தையும், சுத்த இருதயம் மற்றும் வாழ்வையும், தன் நிலையை உள்ளபடியே அறியத்தக்கதாக பரிசுத்த ஆவியானவரின் அகஔியையும் தம்மிடத்தில் பெற்றுக்கொள்ள ஆண்டவர் ஆலோசனை சொல்லுகிறார்.

ஆவிக்குரிய அனுபவங்கள் ஒன்றுமில்லாமலேயே எல்லாம் உடையவர்களாக இருப்பதாகக் கற்பனை உலகில் வாழும் இன்றைய லவோதிக்கேயா சபைகள், உண்மையான ஆவிக்குரிய அனுபவங்களை அடைய ஆண்டவரிடம் திரும்பவேண்டும்!

மனந்திரும்ப அழைப்பு!
"நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு" என்று லவோதிக்கேயா சபையை மனந்திரும்ப அழைக்கிறார் ஆண்டவர். (வெளி.3:19)

தம்முடைய கடிந்துகொள்ளுதலையும் சிட்சையையும் தம்முடைய அன்பின் அடையாளமாக புரிந்துகொள்ளவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

ஆவியில் ஏவப்பட்ட ஆண்டரின் ஊழியரோ அல்லது விசுவாசியோ இன்றைய சபைகளின் நிலைமையை சுட்டிக்காட்டும்போது: "சபையை நடத்தாதவர் எப்படி சபைகளின் குறைகளை சுட்டிக்காட்டலாம்" என்று இன்றைய லவோதிக்கேயா சபைகளின் தூதர்கள் (ஊழியர்கள்) சிறுபிள்ளைத்தனமாய் கேட்கிறதைக் காணமுடிகிறது!

"ஒரு சபையை ஆரம்பித்து நடத்திபார்த்துவிட்டுவந்து அறிவுரை சொல்லுங்கள்" என்று சொல்லுகிறவர்களும் உண்டு. 

தேவன் தங்களை நேசிப்பதினாலயே தங்கள் தவறுகளை மற்றவர் மூலமாக சுட்டிக்காடுகிறார், மனந்திரும்பும்படி கண்டிக்கிறார் என்பது இவர்களுக்கு விளங்கவில்லை!

தாம் தள்ளவிடத்தக்கதாய் வெதுவெதுப்பான நிலையில் இருந்தபோதும், லவோதிக்கேயா சபையை ஆண்டவர் வெறுத்துவிடவில்லை. இன்னும் ஆண்டவர் அதில் அன்புகூர்ந்து, அதை புதுப்பிக்க விரும்பினார்.

லவோதிக்கேயா அனுபவத்திலுள்ள சபைகள் தங்களில் இன்னும் அன்புகூர்ந்து, தங்களை உயிர்ப்பிக்க விரும்பி, வாசற்படியிலே நின்று தட்டுகிற ஆண்டவருடைய சத்தத்தைக்கேட்டு, மனக்கதவைத் திறந்தால், அவர்களிடத்தில் அவர் பிரவேசித்து, பூமியில் அவர்களுடன் வாசம்பண்ணுவார். அவர்கள் அவரோடே பரலோகத்தில் வாசம்பண்ணுவார்கள். (வெளி.3:20) 

ஜெயங்கொண்டால்?
"நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்" என்று வாக்குப்பண்ணுகிறார் ஆண்டவர். (வெளி.3:21)

இயேசுகிறிஸ்து முழுமையான அனலுள்ள ஜீவியம் செய்தவர். தமக்கு உண்டான சோதனைகளிலெல்லாம் அவர் ஜெயமெடுத்தவர்!

எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிறார். (எபி.4:15)

"என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" என்று சவால்விட்டவரும்
(யோவான் 8:46), 
"இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" என்று அறிக்கையிட்டவரும் அவரே!
(யோவான் 14:30)

உலகத்தின்மீது அவர் எடுத்த ஜெயமே உன்னதத்தில் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்காரும் பாத்திரராக்கியது! (பிலி.2:6-11)

ஆவியானவர் சொல்லுகிறதைக் கேட்டு குளிரான ஜீவியத்தின்மேல் ஜெயமெடுத்து, அனலுள்ள ஜீவியம் செய்கிறவர்களுடன் அவர் தமது மகிமையை, கனத்தை, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதாக வாக்குப்பண்ணுகிறார்!

வெதுவெதுப்பான சபைகள் விழித்துக்கொண்டு வெற்றியுள்ள ஜீவிவியம்பண்ண முன்வரவேண்டியது அவசியம்!!

க. காட்சன் வின்சென்ட்
 (Biblical Teaching Ministry)
        (கோயம்பத்தூர்)
              8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.