Type Here to Get Search Results !

பாவத்தோடு விளையாடுவோரின் கதி | A wonderful conscience that prepares us for a blissful life | தின தியான குறிப்புகள் | Jesus Sam

பாவத்தோடு விளையாடுவோரின் கதி

சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் காலையில் பூணியல் குருவிகள் சில ஒரு தாழ்வான முள் கிளையிலிருந்து கத்தி குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. இந்த பூணியல் குருவிகள் நான்கு அல்லது ஐந்து அல்லது ஆறு என்ற எண்ணிக்கையில் சிறு கூட்டமாகவே இருக்கும் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். புணியல் குருவிகளின் குரல் கேட்டு பூனையார் ஒருவர் எங்கிருந்தோ ஏதும் தெரியாத அப்பாவி போல் மெல்ல நடந்து அவைகளின் அண்டைக்கு சென்று கொண்டிருந்தார். கொஞ்ச தூரம் செல்வார் பின்னர் சற்று நேரம் தாமதித்து வயது முதிர்ந்த கிழவரை போன்று களைப்பினால் ஓய்வெடுப்பார். பூனையாரை கண்டு பூணியல்கள் அவர் தந்திரக் குணம் அறியாமல் அங்கும் இங்கும் அவரை சுற்றி பறந்து அவருடன் விளையாடிக் கொண்டிருந்தன. சில சமயங்களில் அவைகள் தன்னை கொத்தவும் அவர் தாராளமாக அனுமதி அளித்தார். தான் அவர்களின் உண்மை நண்பன் என்பது போல பாசாங்கு செய்து மண்ணில் புரண்டு எழுந்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார். அந்த விளையாட்டு நல்ல முறையில் கொஞ்ச நேரம் நீடிக்கவும் செய்தது. அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பூணியல் பறவையை சட்டென்று கவ்வி பிடித்துக் கொண்டார் பூணையார். மற்ற பூணியல் பறவைகள் துயர குரல் எழுப்பி அங்கும் எங்கும் பறந்து பூனையை கொத்த தொடங்கின. அனைத்தும் ஒன்று சேர்ந்து தன்னை தாக்க வருவதை கண்ட பூனையார் தான் வாயில் உள்ள பூணியில் பறவையை நன்கு கடித்து பற்களில் பத்திரமாக வைத்துக் கொண்டு விரைவாக ஓடத் தொடங்கி விட்டார். அப்பாவி பூணியல்கள் சற்று தூரம் அதை பின் தொடர்ந்து ஓடி தங்கள் ஆருயிர் நண்பரை விடுவிக்க பெரும் பிரயத்தனம் பண்ணின. ஆனால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. அந்த காட்சியை முதலில் இருந்து கடைசி வரை பார்த்த எனக்கு பாவத்துடன் விளையாடி இறுதியில் அதற்கே இரையாகும் நிர்ப்பந்தமான மனிதனின் துயரமான படத்தைதான் அங்கு காண முடிகிறது.




பாவத்தோடு விளையாடுவோரின் கதி:-

(1) தெலீலாளின் மடியில் படுத்திருந்து பாவத்தோடு விளையாடிய சிம்சோன் இறுதியில் தன் கண்களை சத்துருக்களிடம் இழந்ததுடன் அவர்கள் சாப்பிட்டு மகிழ அவர்களுக்கு மாவு அரைக்கவும், அவர்களின் இருதயத்தை களிப்பாக்கும் கோமாளியாகவும் இருந்து இறுதியில் நிர்பந்தமாக மாண்டான்.




(2) அரண்மனை உப்பரிக்கையின் மேல் கூடாரம் போட்டு தன் தகப்பனின் மறுமனையாட்டிகளுடன் பாவரோகத்தில் அந்தரத்தில் விளையாடி மகிழ்ந்த அப்சலோமை எரிச்சலுள்ள தேவன் வானத்திலிருந்து கரம் நீட்டி அவனுடைய மயிருள்ள நீண்ட உச்சந்தலையை பிடித்து வானத்திற்கும் பூமிக்கும் நடுவாக அந்தரத்தில் தூக்கிக் கொள்ள, பூமியில் உள்ளோர் ஈட்டியால் அவனுடைய நெஞ்சை பிளந்து கொல்ல அனுமதியளித்தார்.




(3) தாமாரின் கற்பைச் சூறையாடி சிற்றின்ப ஆசை வெறியில் மிகுந்த அம்னோன் முடிவில் ரத்த வெள்ளத்தில் மிதந்தான்




(4) உரியாவை கொன்று அவனுடைய மனைவியான பத்சேபாளுடன் பாவக்களி நடனம் புரிந்த தாவீதின் பெருமையைத் தேவன் அடக்கி, அவன் எலும்புகளை நொறுக்கி (சங் 51:8) இஸ்ரவேலருக்கு முன்பாக அவன் பெயரை நாறப் பண்ணி (2 சாமு 12:10) பட்டயம் என்றைக்கும் அவன் வீட்டை விட்டு நீங்காதிருக்கும் படி செய்தார் (2 சாமு 12:10)




(5) நீதிமொழிகள் ஏழாம் அதிகாரத்தில் பாவத்தின் விழும்பில் மெத்தனமாக நடந்து சென்ற புத்தியீன வாலிபனின் ஈரலை முடிவில் கூர்மையான அம்பு

கொன்றது (நீதி 7:23) என்று நாம் பார்க்கிறோம்.




பாவத்தோடு விளையாடுவோனே நீ சரியான தருணத்தில் மனந்திரும்பவில்லை என்றால் உனக்குக் காத்திருப்பதும் மேற்கண்டோரின் கதியேதான்.




உங்களுக்கு இருக்கிறவைகள் (உலக ஆசிர்வாதங்கள்) போதுமென்று எண்ணங்கள் (எபி்ரேயர் 13:5)
தேவ ஜனமே உனக்குள்ள வேலை, வீடு, பணம், சொத்து, படிப்பு, உலக ஆசிர்வாதத்தை வைத்து சந்தோஷமாக இருக்கிறாயா ? நாம் இருக்கிற நிலையில் சந்தோஷமாக இருக்க வேண்டும்.




உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் (லூக்கா 3:14)




நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாய் (இருக்கிற நிலையில் சந்தோஷம்) இருக்க கற்றுக் கொண்டேன். (பிலிப்பியர் 4:11)




போதும் என்கிற மனது இல்லாவிட்டால் பின்மாற்றம் வரும். ஆவிக்குரிய ஜிவியத்தில் வளர முடியாது. கர்த்தர் வைத்திருக்கிற நிலையில் சந்தோஷமாக இருக்க வேண்டும்.




போதும் என்கிற மனது உடையவனை கர்த்தர் ஆசிர்வாதிக்கிறார்




போதாது போதாது, இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு வருவது பிசாசின் வேலை. போதும் என்கிற மனது இல்லாவிட்டால் உலககவலை வந்து விடும்.




நாம் கர்த்தரால் ஆசிர்வதிக்க பட வேண்டும் என்றால் இருக்கிறவைகள் போதும் என்று எண்ண வேண்டும்.




போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (1 தீமோத்தேயு 6:6)


நம்மை பேரின்ப வாழ்வுக்கு ஆயத்தப்படுத்தும் அற்புத மனசாட்சி
மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாய் இருக்கிறது அது உள்ளத்தில் உள்ளவைகளை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும் (நீதி 20:27)




பொதுவாக வயது சென்ற விருத்திப்பியர்கள் இரா முழுவதும் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். இரவில் கொஞ்ச நேரம் தூங்குவார்கள், பின்னர் கண் விழித்தேதான் இருப்பார்கள். படுக்கையில் இருந்தாலும் விழிப்பு நிலையிலே காணப்படுவார்கள். அதற்கான காரணம் இவ்விதமாய் சொல்லப்படுகின்றது. அவர்கள் தங்களின் நித்திய வீட்டிற்கு போவதற்கு ஆயத்தமாக தங்கள் இருதங்களை தங்களுடைய மனசாட்சி என்ற தீபத்தைக் கொண்டு துருவி ஆராய்ந்து, செலுத்த வேண்டிய தங்களுடைய கடன்களை செலுத்தி, ஒப்புரவாக வேண்டியவர்களுடன் ஒப்பரவாகி, நல்மனம் பொருந்தி, ஆண்டவருக்கும் தங்களுக்குள்ள பரிசுத்த ஐக்கியத்தை பிரகாசமுள்ளதாக்கி மிகுந்த ஆயத்தத்தோடு மோட்சம் சொல்லவும், தங்களுடைய மாட்சிமையான கரை காண முடியாத நீண்ட நித்தியத்தை இயேசு இரட்சகருடன் செலவிட வசதியாகவே சர்வ ஞானியாக தேவன் அவ்விதமாக அவர்களைத் தூக்கத்திற்கு விலக்கி காத்து வருகின்றார் என்று கூறப்படுகிறது




தன்னுடைய இகலோக வாழ்வில் ஓட்டம் முடித்து பரம வாழ்வை எதிர்நோக்கி கொண்டிருக்கும் சாமுவேல் தீர்க்கன் செய்யும் காரியத்தை பாருங்கள். தன்னுடைய இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் தன்னண்டை அழைத்து "நான் யாருடைய எருதை எடுத்துக் கொண்டேன் ? யாருடைய கழுதையை எடுத்துக் கொண்டேன்? யாருக்கு அநியாயம் செய்தேன் ? யாருக்கு இடுக்கண் செய்தேன் ? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண் சாடையாய் இருந்தேன் ? சொல்லுங்கள், அப்படியுண்டானால் அதை உங்களுக்கு திரும்பக் கொடுப்பேன்" (1 சாமு 12:3) என்று கூறும் வார்த்தைகளை நம்மை பிரமிக்க செய்வதாக இருக்கின்றன. "ஓ தேவன் சிறுபிராயம் தொடங்கி என்னுடன் பேசி வந்திருக்கிறார். தாண் முதல் பெயர்செபா வரைக்கும் பெயர் பெற்று விளங்கும் பெரிய தீர்க்கதரிசி நான். எனக்கில்லாத பரலோகம் உலகில் வேறு எவருக்கு உண்டு ?" என்று இருமாப்பின் சிந்தை அவருக்கு இல்லை. நேர்த்தியாகத் தனக்கும் தன் ஆண்டவருக்கும், தனக்கும் தன்னுடைய இஸ்ரவேல் ஜனங்களுக்கும் உள்ள காரியங்களை நேர் செய்து பரம கானானுக்கு ஆயத்தமாகின்றார். இதுதான் மெய் தேவ பக்தர்களின் மோட்ச பாதை.




ஒரு மனிதன் நல்ல மனச்சாட்சிக்கு நேராக தனது வாழ்க்கையை கொண்டு செல்லும் போது அவன் நல்ல கிறிஸ்தவாகின்றான். அது மாத்திரமல்ல, அவன் தனது ஆண்டவருக்கு ஒரு நல்ல சாட்சியாகவும் வாழ்கின்றான். தேவனால் முன்குறிக்கபட்ட ஆசிர்வாதங்களை அவன் சுதந்தரித்தும் கொள்கின்றான்.


தேவ ஜனமே கரும்பெட்டிக்கு (டி.விக்கு) விலகி ஓடுங்கள்
"பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" (1 தெச 5 : 22) " படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க" என்று தமிழிலே ஒரு முதுமொழி உண்டு என்பது நமக்குத் தெரியும். நமது திருச்சபை ஞானோபதேச வினா விடைகளில் மானிட வாழ்வின் பிரதான நோக்கம் என்ன என்பதற்கு "கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கும், அவரில் சதா நிலைத்திருந்து மகிழ்ந்து களிகூருவதற்குமே" (Man's chief end is to glorify God and enjoy him forever) என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.




முடிவில்லாத யுகா யுகங்களை, காலம் காட்டும் கடிகாரமில்லாத முடிவில்லா நித்தியத்தை நம் அன்பின் ஆண்டவர் இயேசுவோடு பரலோகில் செலவிட நாம் நம்மை நன்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளுவதற்காக மாத்திரமே நமது பூலோக வாழ் நாட்காலம் நமக்குக் கிருபையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கிருபையின் காலம் சிலருக்கு சற்று கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் அளிக்கப்பட்டுள்ளது. சிலர் இந்த உலகில் நல்ல பூரண தீர்க்காயுளோடு சுகமாக நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். ஆனால், சிலர் நல்ல வாலிப அல்லது நடுத்தர வயதிலேயே தங்களுக்கு அன்பான மனைவி, பாசமுள்ள மக்களை விட்டு மரணத்தின் மூலமாக சடுதியாகக் கடந்து சென்று விடுகின்றனர்.




நாம் எந்த ஒரு விதத்திலும் ஆண்டவர் இயேசுவோடு பரலோகில் வாழச்சென்று விடக் கூடாது என்பதற்காக மனுஷ கொலை பாதகனான தந்திர சாத்தான் இந்த உலகத்தில் நமது கவனத்தை திசை திருப்ப பற்பலவிதமான ஏதுக்களை நமது ஆத்துமாவுக்கு எதிரான கண்ணியாக வைத்திருக்கின்றான். நமக்கும் நம் ஆண்டவருக்கும் நேரடியாக எந்த ஒரு பரலோக ஐக்கியமும் இல்லாத விதத்தில் அவன் நம்மை பிரித்து வைத்துக் கொண்டிருக்கின்றான். அதைத்தான் அவன் ஏதேன் பூங்காவில் செய்து நமது ஆதி தாய் தந்தையரை தேவனை விட்டுப் பிரித்து வைத்திருந்தான். அந்தக் காரியத்தில் பொல்லாங்கனுக்கு இந்தக் கடைசி நாட்களில் மிகவும் கை கொடுத்து உதவும் ஒரு அற்புத சாதனம் கரும் பெட்டியாகும். ஆம், அதுதான் டி.வி. என்ற தொலைக்காட்சி பெட்டியாகும்.




இந்தக் கொடிய சாதனத்தின் மூலமாக சத்துரு இன்று முழு உலகத்தையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து வைத்திருக்கின்றான். எல்லா ஏழை எளிய மக்களின் வீடுகளிலும் கூட கரும் பெட்டி நுழைந்து விட்டது. முற்றும் இலவசமாக அவைகளை சத்துரு வாரி வழங்கி விட்டான். காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை மக்கள் அதையே பார்க்க வீடுகளில் முடங்கிவிட்டனர். அவைகளில் வரும் அசுத்தமான படங்களைப் பார்த்து பெண் பிள்ளைகளும், பையன்களும் எவ்வளவாக தங்களை கெடுத்துக் கொண்டார்கள் என்பதை நான் உங்களுக்கு இங்கு விவரிக்க வேண்டிய அவசியமில்லை. பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் ஆண், பெண் இரு பாலரின் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளை நீங்களே கவனித்து அறிந்து கொள்ளலாம். ஒரு சமயம் ஒரு பெண்கள் மேல் நிலை பள்ளி ஆசிரியை ஒருவர் என்னிடம் "எங்கள் பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் எங்கள் மாணவிகளுக்கு எந்த ஒரு நடனப் பயிற்சி போன்றவைகளை இந்த நாட்களில் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. பிள்ளைகளுக்கு சொல்லிவிட்டால் போதும் அவர்கள் தங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியில் தாங்கள் பார்த்ததின்படி சினிமா நடிகை என்ன என்ன கலர் வளையல்கள் தனது கரங்களில் போட்டிருந்தாளோ அவைகளை எல்லாம் அப்படியே கடைகளில் சென்று தங்கள் கரங்களில் வாங்கிப் போட்டு நடிகையின் நடிப்பையும், பாட்டையும் அப்படியே சற்றும் பிசகில்லாமல் எங்கள் பள்ளி மேடையில் ஆடித் தீர்த்துவிடுவாள். அதற்கு, மேல் வகுப்புகளில் படிக்கும் பெரிய பெண் பிள்ளைகள் தேவை இல்லை. வெறும் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுபெண் பிள்ளையே போதுமானவள்" என்று கூறினார்கள். ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சின்னஞ்சிறார்கள் கூட எத்தனை உன்னிப்பாக கவனித்து சினிமாப் பாட்டுகளையும், நடனங்களையும் எவ்வளவாக கற்றுக் கொண்டார்கள் பாருங்கள். இவைகளுக்குப் பின்னணியத்தில் ஆத்தும அழிம்பன் சாத்தான் நின்று கொண்டு புன்முறுவல் செய்வதை உங்களால் காண முடிகின்றதா? தங்கள் வீடுகளிலுள்ள கரும் பெட்டிகளில் வரும் கொலை வெறி படங்களைப் பார்த்து சென்னையிலுள்ள ஒரு மாணவன் தனக்கு பாடம் கற்பித்த தனது வகுப்பு ஆசிரியையே கத்தியால் குத்தி கொலை செய்ததை நாம் கேள்விப்பட்டோம். பேரதிர்ச்சியடைந்தோம். சிறு பாலகர்களுக்கு வீடியோ விளையாட்டுகள் முதல் வாலிபர், நடுத்தர வயதினர், கிழவர்கள் வரை சுவை சுவையான நிகழ்ச்சிகள் என்று வகை வகையான தொடர்களை சத்துரு தனது பண்டகசாலையிலிருந்து இரவும் பகலும் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றான். இந்தக் காரியத்தில் அவன் கஜானா என்றுமே காலியாவதில்லை. சாறிபாத் ஊர் விதவையின் பானையின் மாவும், கலசத்தின் எண்ணெயும் எடுக்க எடுக்க வந்து கொண்டிருந்தது போல பொல்லாங்கனின் பானையும், கலசமும் பொங்கி வழிந்து கொண்டே இருக்கின்றது.




இதில் கிறிஸ்தவ மக்களையும் சத்துரு தனது வலையில் நன்கு சிக்க வைத்திருக்கின்றான். கரும்பெட்டியில் வரும் சீரியல் தொடர்களைப் பார்க்க வசதியாக கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளின் காலை வேளைகளில் முதலாவது ஆலய ஆராதனைகளிலேயே துரிதம் துரிதமாகப் பங்கெடுத்து விட்டு வீடு திரும்பி சீரியலுக்குப் பாதிப்பில்லாமல் கரும்பெட்டியைச் சுற்றி குந்தி உட்கார்ந்து விடுகின்றனர். சபையினரை பரலோகத்துக்கு வழிநடத்துகின்ற பரிசுத்த குருவானவர் ஞாயிறு ஆராதனைகளை துரிதம் துரிதமாக யந்திர வேகமாக, எந்த ஒரு ஜெப தபமுமில்லாமல், ஆத்தும பாரமில்லாமல் கடமைக்காக நடத்தி முடித்து வந்து குடும்பத்தினருடன் மணிக்கணக்காக ஓடும் நீண்ட சினிமாக்களை கரும்பெட்டியில் சாவதானமாக உட்கார்ந்து பார்த்து ஆனந்திக்கின்றார்.




கிறிஸ்தவ மக்களை கூண்டோடு நரக அக்கினிக்கு வழிநடத்த மனுஷ கொலை பாதகன் இரவும் பகலும் 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கக்கூடிய கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை இந்த நாட்களில் ஒளி பரப்பச் செய்து அதில் தனது ஊழியர்களை நடிக்க விட்டிருக்கின்றான். எந்த நேரம் கரும்பெட்டியைத் திறந்தாலும் ஆடல்கள், பாடல்கள், ஜெபங்கள், உருக்கமான மன்றாட்டுக்கள், தீர்க்கத்தரிசனங்கள், ஆவியில் நிறைந்த அனலான தேவச் செய்திகள், ஆராதனை வேளைகள், குறு நாடகங்கள், கோலாட்டங்கள், வாலிபர் கொண்டாட்டங்கள், என்று "உனக்கும் வார்ப்பேன், உன் ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன்" (ஆதி 24 : 14) என்ற வாக்கின்படி கிறிஸ்தவ மக்களுக்கு மனங்கொண்ட மட்டும் சத்துரு தனது குடத்திலிருந்து வார்த்துக் கொண்டே இருக்கின்றான். இவைகளை எல்லாம் பகல் இரவாக உட்கார்ந்து கண் வலிக்கப் பார்த்து தேவ ஜனம் தங்கள் மரணத்திற்குப் பின்னர் மோட்சம் செல்ல வேண்டுமென்ற தாகம் எல்லாம் சத்துருவுக்குக் கிடையாது. எந்த ஒரு நிலையிலும் தேவ ஜனம் கெட்ட குமாரனைப்போல எழுந்து, புறப்பட்டு, பரலோக தகப்பன் வீடு நாடிச் சென்று தகப்பனின் பாதங்களில் வீழ்ந்து அவருடைய மன்னிப்பைப் பெற்று நித்திய இளைப்பாறுதலை (எபிரேயர் 4 : 9) சுதந்தரிக்க ஒட்டாமல் காலமெல்லாம் பன்றிக் குழியில் பன்றிகளோடு வாழ்ந்து இறுதியில் நரகம் செல்ல வேண்டுமென்பதே தந்திர பேயின் ஒரே குறிக்கோளாகும். தேவ மக்கள் எந்த ஒரு நிலையிலும் ஆண்டவருடைய பாதங்களுக்கு எழுந்து வந்து அவருடைய பொன் முகம் நோக்கி தங்கள் இருதயத்தை அவர் சமூகத்தில் கண்ணீரோடு உடைத்து ஊற்றி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக்கொள்ள விடாதபடி கரும் பெட்டியைக் கொண்டே மனுஷ கொலை பாதகன் அவர்களின் முழு வாழ்நாட் காலத்தையும் துண்டாடிப் போடுகின்றான்.

இந்த அன்பான கிறிஸ்தவ மக்களிடம் நாளொன்றுக்கு எவ்வளவு நேரம் தங்கள் ஆண்டவரோடு ஜெபத்தில் தனிமையில் செலவிட்டீர்கள் என்று நீங்கள் கேட்டுப் பாருங்கள். 10 நிமிஷம், அல்லது 15 நிமிஷம் ஜெபித்தாக சொல்லுவார்கள். ஆனால், கரும்பெட்டியில் பல மணி நேரங்களை கண் வலிக்கப் பார்த்திருப்பார்கள். எத்தனை பயங்கரம் பாருங்கள்! நிலையற்ற உலக வாழ்க்கை, கண் மூடி கண் திறந்தால் முடிவில்லாத நித்தியம், நித்திய அக்கினி கடல் வாசம் என்பதை சற்றும் உணராமல் எத்தனை துணிச்சலாக மக்களை சத்துரு வாழ வைத்திருக்கின்றான் பாருங்கள்.


இந்த உலக வாழ்க்கை முழுவதிலும் ஆண்டவருடைய பாதங்கள் எட்டிக்காயாக கசந்து கிடந்த , அவருடைய பாதங்களை வாஞ்சித்து கதற முடியாத இந்த அன்பான கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களின் மரணத்திற்கு பின்னர் கர்த்தாவின் பாதங்கள் திடீரென தேனிலும் இனிமையாகி, பரிசுத்த பக்தர்கள், தங்கள் அங்கிகளை ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்த தேவ மக்களுடன் ஒன்று சேர்ந்து தேவ ஆட்டுக்குட்டியை அல்லும் பகலும் அனுவரதமும் பரலோகில் எப்படி போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்க முடியும்? அது ஒருக்காலும் முடியாத காரியம். உலக வாழ்க்கையில் கரும்பெட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த இந்த மக்களுக்கு மரணத்திற்கு பின்னரும் கரும்பெட்டிதான் நிச்சயமாக தேவைப்படும். அது இல்லாமல் அவர்களுக்கு வாழ்வே இல்லை. ஆம், அது இருக்கக் கூடிய இடம் நரக அக்கினி கடல் மட்டுமே. அங்குதான் அவர்கள் அதை நாடிச் செல்ல வேண்டும். கர்த்தர்தான் தமது ஜனத்துக்கு கிருபையாக இரங்க வேண்டும்.




தேவ ஜனமே, நீங்கள் எச்சரிக்கப்படுகின்றீர்கள். உங்களுடைய மனந்திரும்புதல், உங்களுடைய இரட்சிப்பு மெய்யான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீடுகளில் கரும் பெட்டிக்கு இடமே இருக்காது. ஒரு தேவப் பிள்ளையின் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இருக்கும் பட்சத்தில் அந்த தேவ பிள்ளையின் இரட்சிப்பின் காரியம் உண்மையாக இருக்க முடியாது, அது நிச்சயமாக மறுபடியும் பிறக்கவில்லை என்று மேல் நாட்டு தேவ பக்தன் ஒருவர் திட்டமாக எழுதி இருக்கின்றார். உண்மையான வரிகள்.




உங்கள் வீட்டு கரும் பெட்டியை உங்களை விட்டு உடனே அப்புறப்படுத்துங்கள். அதற்காக நீங்கள் ஒரு நாள் கர்த்தரில் களிகூருவீர்கள். நீர் மேல் குமிழியாம் நமது வாழ்வில் நமது காலங்கள் ஆண்டவரின் பாதங்களில் மட்டும் செலவிடப்படுவதாக. இந்த உலகத்திலேயே மோட்சம் நமது முழங்கால்களில் ஆரம்பமாகட்டும். அது ஒன்றே ஒன்றுதான் நமது இகலோக வாழ்வின் தேவை என்று தேவனே திட்டமாகச் சொல்லியிருக்கின்றார் (லூக்கா 10 : 42) சங்கீதக்காரரும் "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" (சங் 73 : 25) என்று தமது வாழ்வின் அனுபவத்தின் மூலம் அதை நமக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றார். தேவன் நமக்கு கிருபையாக கொடுத்திருக்கும் இந்த பொற் காலங்களை மிகுந்த ஞானத்துடன் பயன்படுத்தி நமக்கு முன்னாலுள்ள நித்திய பேரின்ப வாழ்வுக்கு நம்மை நன்கு ஆயத்தம் செய்து கொள்ளுவோம்.




தேவ ஜனமே, உங்கள் இருதய பலகையில் இரும்பு எழுத்தாணியால் இன்றே எழுதிக் கொள்ளுங்கள். கரும்பெட்டி, அது உங்கள்ஆத்துமாவின் சவப்பெட்டி!


தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக் கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக் கொண்டிருந்தது (1 சாமுவேல் 24:5)*
சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் படித்த செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. நீங்களும் அதை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 40 வயது நிரம்பிய ஒரு மனிதன் காவல் நிலையம் சென்று "என்னை கைது செய்யுங்கள், 10 வருடங்களுக்கு முன்பு அந்த கொலையை நான்தான் செய்தேன். எனது மனசாட்சி தினமும் என்னை வாதிக்கிறது, என்னால் நிம்மதியாய் இரவில் தூங்க முடியவில்லை. என்னை கைது செய்து அந்த கொலை குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையை எனக்கு கொடுங்கள் " என்று அழுதான். அந்த கொலைகார மனிதனை மனது எப்படியாக தனக்குள் அடித்து வாதித்துக் கொண்டிருக்கும் என்பதே நாம் நன்கு யோசித்துக் கொள்ளலாம். அந்த மனிதனின் தலை துண்டிக்கப்படும் பொழுது அவன் எழுப்பின அங்கலாய்ப்பின் துயரக் குரல் அந்த கொலைகாரனின் உள்ளத்தில் ஒவ்வொரு நாளும் தொனித்துக் கொண்டே இருந்திருக்கலாம். உலகில் நீ உயிர் வாழ்வதை விட சாவது நல்லது என்று அவனுடைய மனசாட்சி தினமும் அவனை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை.




மனசாட்சி ஒருவரையும் சும்மா விடாது. அது பயங்கரமானது. மனிதனை மனசாட்சி என்பது சாதாரண ஒன்று அல்ல. அது குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டால் அதை அமைதிபடுத்துவது என்பது மனுஷ பெலத்தால் இயலாத ஒரு காரியமாகும். அதை ஒருவன் காயப்படுத்தி விட்டால், அந்த காயத்தை ஆற்ற பூலோகத்தில் தேவ ஆட்டுக்குட்டியின் பரிசுத்த ரத்தம் ஒன்று தவிர வேறு எந்த பரிகாரமும் கிடையாது (1 யோ 1:7)




துர் மனசாட்சி ஒருவனை கட்டாயம் கொன்று விடும். முன்றரை ஆண்டுகாலம் எல்லையற்ற அன்பின் சொருபியாம் உலக இரட்சா பெருமானின் பரம அன்பினால் சீஷராக்கப்பட்ட யூதாஸ் அவரை காட்டிக் கொடுத்த துரோகத்தை தாங்க அவனுடைய மனசாட்சி அவனுக்கு இடம் கொடுக்கவே இல்லை. 4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்று தன் நண்பர்களுடன் புலம்பினான் (மத்தேயு 27:4) அந்தக் காயப்பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்த அந்த துயர மனசாட்சி தூக்குக் கயிற்றை அந்த சீஷனுடைய கரங்களில் எடுத்து கொடுத்தது. அவனுடைய இகலோக வாழ்க்கையை வானத்திற்கு பூமிக்கும் நடுவாக கயிற்றில் தொங்கி மாளும் நிர்பந்தமான நிலைக்கு தள்ளிவிட்டது அவனது மனசாட்சி. ஆம் யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான்.




மனசாட்சி எப்பொழுதும் கூப்பிட்டுக் கொண்டே செல்லும். மனசாட்சி கூப்பிடும் காரியத்தை நாம் ஆதியாகமம் 42 ஆம் அதிகாரத்தில் காணலாம். மூன்று நாட்கள் சிறை வாழ்வுக்கு பின்னர் வெளியே வந்த யோசேப்பின் சகோதரர்கள் தங்களுக்குள் "நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம் மேல் சுமந்தது. அவன் நம்மை கெஞ்சி வேண்டிக் கொண்ட போது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும் அவனுக்கு செவி கொடாமற் போனோமே, ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது" (ஆதி 42:21) என்ற வார்த்தைகளிலிருந்து யோசேப்பின் சகோதரருடைய காயப்பட்ட மனசாட்சி எப்பொழுதும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தது என்பதை நமக்கு நன்கு புலப்படுத்தும். ஆ தங்களுடைய மனசாட்சியின் குரலை மாந்தர் கேட்பார்களானால் எத்தனை எத்தனை பேர் பூமியில் நல்மாந்தர்களாக இருப்பார்கள்.




தேவ மக்களே! இந்த கிருபையின் காலத்தில் தேவ சமூகம் சென்று உங்களுடைய மனசாட்சி எங்கெல்லாம் கறைபடுத்தப்பட்டிருக்கின்றது. எங்கெல்லாம் எதிர்த்து நின்று அது அடக்கப்பட்டிருக்கின்றது, எங்கெல்லாம் அது களங்கப்படுத்தப்பட்டு கடினப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையால் கண்டுபிடித்து அவைகளை எல்லாம் தேவனுக்கு முன்பாக சரி செய்து கொள்ளுங்கள். காலங் கடத்த வேண்டாம். நமது தேவன் பட்சிக்கிற அக்கினாய் இருக்கிறாரே (எபி 12:29) அதற்கான தேவ கிருபைகளை கர்த்தர் உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக ஆமென்.



உண்மை சம்பவம்
*டாக்டர் மாற்கு* என்கின்ற மிகவும் பிரபலமான புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் தனது மருத்துவ கண்டுபிடிப்பிற்கான விருது ஒன்றினைப் பெறுவதற்காக நடைபெறும் மிகவும் முக்கியமான கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவதற்க்கு அருகில் உள்ள மாநிலத்திற்க்கு செல்ல விமான நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார்.

அவர் மிகவும் பதட்டத்தோடு இருந்தார். எப்படியாவது அந்த இடத்திற்கு விரைவாக சென்று விடவேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு இருந்தார். அந்த கண்டு பிடிப்பிற்க்காக அவர் வெகுநாட்களாக மிகவும் கடினப்பட்டு உழைத்தவர் அவரது கடின உழைப்பின் பயன்தான் அந்த விருதை பெற்ற புதிய மருந்து. எனவே அவர் அந்த விருதினைப் பெற மிகவும் ஆவலாக இருந்தார். விமானம் புறப்பட்டது புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் அவசரத்தின் காரனமாக விமானம் பக்கத்து விமானநிலையத்தில் தரை இறங்கியது. தான் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் டாக்டர் மாற்கு வரவேற்பு அறைக்கு சென்று வேறு எதாவது விமானம் உள்ளதா என விசாரித்தார். அங்குள்ளவர்கள் அடுத்த பத்து மனிநேரம் சென்றால்தான் அடுத்த விமானம் உள்ளது என்று கூறினார்கள். விரைவாகச் செல்ல வேண்டும் என்றால் ஒரு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து நீங்களே ஓட்டிக் கொண்டு போகலாம் என்றும் அப்படி நீங்கள் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம் என்றும் அவர்கள் ஒரு ஆலோசனையை கூறினார்கள். வேறு வழி இல்லாததால் அவ்வாறு செல்ல முடிவெடுத்தார். வண்டி ஓட்டுவது அவருக்கு பிடிக்காத ஒன்று எனவே வெறுப்போடு

வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவர் பயணத்தைத் தொடங்கியதும் திடீர் என்று காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு புயல் உண்டானது.




மழை மிகவும் கனமாக பெய்ததால் அவரால் காரை ஓட்ட இயலவில்லை. அவர் தான் செல்ல வேண்டிய பாதையை மறந்து வேறு வழியில் சென்றுவிட்டார்.

இரண்டு மணி நேரம் காரை ஓட்டிய பின்புதான் வழி மாறியதை உணர்ந்தார். அவருக்கோ பசி, கலைப்பு, இளைப்பாறுவதற்கு எங்கேயாவது இடம் இருக்குமா என்று சுற்றிலும் தேடினார் ஒன்றும் காணவில்லை. பிறகு ஒரு இடத்தில் ஒரு வீட்டைக் கண்டார். அந்த வீட்டன் முன்பு சென்று காரை விட்டு இறங்கி கதவை தட்டினார்.




அங்கு ஒரு ஏழை பெண் கதவை திறந்தாள், அவளிடம் தன் நிலையைக் கூறி அவளது தொலைப்பேசியை பயன்படுத்துவற்காக உதவிக் கேட்டார். அவளோ தன்னிடம் தொலைப்பேசி இல்லை என்று கூறினாள். மழை நிற்கும் வரை வேண்டுமானல் தன் வீட்டில் இருந்து விட்டு போகுமாறு கேட்டுக் கொண்டாள். பசி மற்றும் பதட்டத்தில் இருந்த டாக்டர் சரி என்று அந்த ஏழை பெண்ணின் வீட்டிற்குள் சென்று சேரில் அமர்ந்து கொண்டார்.

அவளோ அவருக்கு குடிப்பதற்கு டீயும் பிஸ்கட்டும் கொடுத்தாள். பின்பு அவள் தான் ஜெபம் செய்ய போவதாகவும் விரும்பினால் நீங்களும் ஜெபத்தில் கலந்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டாள். ஆனால் அந்த டாக்டர் மாற்கு சிரித்துக் கொண்டே கூறினார் எனக்கு என்னுடைய கடின உழைப்பின் மீது தான் நம்பிக்கை உண்டு எனவே நீ உன்னுடைய ஜெபத்தை செய் நான் வரவில்லை என்றார்.

டாக்டர் மாற்கு அவள் ஜெபிப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவள் ஜெபத்தை முடித்ததும் அதைப் கவனித்த டாக்டருக்கு அவளுக்கு ஏதோ தேவைபடுகிறது என்று மட்டும் உணர்ந்தார். ஜெபத்தை முடித்த அவளிடம் எதற்க்காக இப்படி அழுது ஜெபிக்கிறாய்? உனக்கு கடவுளிடம் இருந்து என்ன வேண்டும் நீ என்ன ஜெபித்தாய் ?என்று கேட்டார். அதற்கு அவள் என் குழந்தைக்காக வேண்டினேன் என்றாள். பின்பு அந்த சிறு குழந்தையைப் பற்றி டாக்டர் மாற்கு விசாரித்தார்.




அவள் சோகமாக கூறினாள் தொட்டிலில் இருப்பது என் மகன் அவனுக்கு ஒரு புது விதமான புற்று நோய் இருக்கிறது. இதற்கு மருந்து டாக்டர் மாற்கு என்பவரிடம் மட்டும்தான் உள்ளதாம். அவரால் தான் சிகிச்சையும் அளிக்க முடியமாம். ஆனால் என்னிடம் அதற்கான பணம் இல்லை. அவரும் வேறு ஊரில் இருக்கிறார் என்று கூறினாள். மேலும் என் தேவன் என் வேண்டுதலை இதுவரைக் கேட்கவில்லை. ஆனால் தேவன் கைவிடமாட்டார். ஏதாவது ஒரு வழி காட்டுவார், நான் அவர் மீது உள்ள நம்பிக்கையை விட மாட்டேன் என்றாள்.




அப்படியே டாக்டர் மாற்கு அதிர்சியில் நின்று விட்டார். அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. தேவன் எவ்வளவு பெரியவர் என்று அவர் மனதில் சொல்லிக் கொண்டே பின்பு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தார். விமானம் பழுதடைந்தது, இடியுடன்கூடிய மழை, பாதை தவறியது, இந்த பெண்னை சந்தித்தது இவை அனைத்தும் தேவனின் சித்தப்படிதான் நடந்திருக்கிறது என்று அவளிடம் தன் விபரத்தை கூறி அந்த குழந்தைக்கு இலவசமாக சிகிச்சை கொடுத்தார். தேவன் இந்த பெண்ணின் ஜெபத்தை மட்டுமல்லாது டாக்டருக்கும் அவரின் உலக வாழக்கையில் இருந்து விடுபட்டு

தன் மருத்துவ பணியை ஏழை எளியவர்களுக்கு உற்ச்சாகமாய் செய்ய வழிகாட்டினார்.




தேவன் சரியான நேரத்தில் உதவுவதில் தவறுவதில்லை.

தேவனால் முடியாதது ஒன்றுமில்லை.




தேவன் நம்முடைய ஜெபத்திற்க்கும் அற்புதமாய் பதில் அளிக்கவல்லவர்.

தொடர்ந்து மனம் தளராமல் ஜெபிப்போம் சகோதர சகோதரிகளே.




அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? (லூக்கா 18:7)




சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ் செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்

(லூக்கா 18:8)


தேவனுடைய திருச்சபையில் நடக்கும் அக்கிரம அநியாயங்கள்
பேராயர் (Bishop) ஒருவர் தேவாலயத்தில் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு, தனக்கு முன்பாக அமர்ந்துள்ள சபை மக்களை பார்த்து "யூதாஸ் காரியோத்து தனது கடைசி நேரத்தில் தனக்குள்ளாக அழுது கண்ணீர் சிந்தி பாவ மன்னிப்பை பெற்று பரலோகம் சென்றிருந்தாலும் சென்றிருக்கலாம்" என்று பிரசங்கின்றார். அதிகமான வேத சாஸ்திரம் கற்று தேர்ந்த இந்த மனிதர் அவனை மோட்சத்துக்கு அனுப்ப பிரயாசம் எடுக்கின்றார். எத்தனை மாறுபாடான உபதேசம் "உங்களுக்குள் ஒருவன் பிசாசாய் இருக்கின்றான்" (யோவான் 6:70) என்று யூதாஸை ஆண்டவர் தீர்ப்பளித்து "யூதாஸ் தனக்குரிய இடத்துக்கு (நரகத்துக்கு) போனான் (அப்போ 1:24) என்று தேவனுடைய வார்த்தை அதை திட்டவும் தெளிவாக உறுதிப்படுத்தி அவனை எரி நரகத்திற்கு அனுப்பி இருக்கும்போது அதிகமாய் வேத சாஸ்திரம் (B.D, M Th) கற்றுத் தேர்ந்த இந்த மனிதர் அவனை மோட்சத்துக்கு அனுப்ப பிரயாசம் எடுக்கின்றார். எத்தனை மாறுபாடான உபதேசம் பாருங்கள்.




தங்கள் கரத்தின் கீழுள்ள தங்கள் மந்தையின் ஆடுகளை ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும், தேவனுடைய பரம ராஜ்யத்திற்கு வழிநடத்த வேண்டிய இந்தக் குழுவானவர்கள் தங்கள் விலையேறப்பெற்ற நேரத்தையும், காலத்தையும் தங்களது மனதும் மாம்சமும் விரும்புகிற காரியங்களுக்கு வாரம் முழுவதும் செலவிட்டுவிட்டு கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளில் எந்த ஒரு ஜெப ஆயத்தமில்லாமல் 30 நிமிடம் அல்லது அதற்கும் குறைவான நேரமுள்ள ஒரு பிரசங்கத்தை கடமைக்காக செய்துவிட்டு மற்ற ஆறு நாட்கள் தங்கள் டிவி பெட்டிக்கு முன்பாக அமர்ந்து நிம்மதியான ஓய்வு எடுக்க சென்று விடுகின்றனர். தங்கள் சபையில் உள்ள ஏழை எளிய மக்களின் வீடுகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி, அவர்களுக்காக ஜெபித்தது இந்த குருவானவர்களின் சரித்திரத்திலேயே கிடையாது. ஆனால் தங்கள் சபையில் உள்ள ஐசுவரியவான்களின் வீடுகளை தவறாமல் சந்தித்து, அந்த வீடுகளில் நடக்கும் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் விழாக்களுக்கு இவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுவார்கள்.




அடியேன் உயர்நிலை பள்ளியில் படிக்கும் போது எனது நெருங்கிய நண்பன் ஒருவன் அவனது தகப்பனார் செய்து வருகின்ற செயலை என்னிடம் சொல்லி வேதனை படுவதுண்டு. அவனது தகப்பனார் ஒரு சபையின் உபதேசியார். அவர் தினசரி ஆலயத்துக்கு செல்லும் போது (இரவு) சிகரெட் பிடித்து கொண்டேதான் போவாராம். சிகரெட்டை ஆலயத்தின் சுவரில் தேய்த்து அணைத்து விட்டு உள்ளே சென்று இரவு ஜெபம் நடத்துவாராம். ஆ எவ்வளவு துணிகரம். மனந்திரும்பாத ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத, பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போடாத இப்படிப்பட்ட ஜென்ம சுபாவமுள்ள மக்களிடமிருந்து நாம் இதைவிட எதையும் எதிர்பார்ப்பது நமது தவறும் குற்றமுமாகும். இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ஊழியத்தை முழுக்க முழுக்க ஒரு உலகப் பிரகாரமான வேலையாகவே கடமைக்காகச் செய்து மாதம் முடிந்ததும் கைநிறைய சம்பளம் பெற்று செல்கின்றனர்.




அனேகமாக ஒவ்வொரு ஆலயத்திலும் இரண்டு கட்சிகள் இருக்கின்றன. பி.சி., டி.சி., இ.சி., போன்ற திருச்சபை அமைப்புகள் அங்கத்தினர்களை தெரிவு செய்வதை இந்தியா - பாகிஸ்தான் கார்கில் யுத்தம் போல அத்தனை வெறி பிடித்து நடத்துகின்றனர். ஓட்டெடுப்பு நாளன்று ஆட்களை கடத்தி, ஒரு பிரிவு மற்ற பிரிவை அவதூறாக பேசி, அடிதடி, போலீஸ் கேஸ் வரை செல்லுகின்றன.

தேவனுடைய பரிசுத்த நாமம் புறமதஸ்தரால் தூஷிக்கப்படும் வண்ணமாக அவர்கள் காரியங்களை துணிந்து செய்கின்றனர். கர்த்தர்தான் திருச்சபைக்கு இரங்க வேண்டும்.




"தேவாலயத்தில் ஜயர் அவர்கள் பிரசங்கிக்கும் பிரசங்கத்தை கேட்டு நான் மனந்திரும்பி பரலோகத்திற்கு செல்லப் போகின்றேன் என்ற நம்பிக்கை எனக்கு ஒருக்காலும் இல்லை" என்று ஒரு சகோதரன் பேசும் போது என்னிடம் கூறினார்கள். திருச்சபையில் உள்ள அநேகர் அந்த சகோதரனுடைய அனுபவத்தைதான் இன்று தங்கள் வசம் கொண்டிருக்கின்றார்கள்.




அடுத்த கோணத்தில் ஆவிக்குரிய சபைகள் என்று தங்களை கூறிக் கொள்ளும் சபைகள் தேவன் அடியோடு பகைத்து வெறுக்கின்ற பெருமை, மேட்டிமை, ஆவிக்குரிய அகந்தை மற்றும் கர்வத்தில் சிக்கி நிற்கின்றது. "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன் (மத் 11:29) என்று திருவுளம் பற்றிய அன்பின் ஆண்டவர் இயேசுவை தெய்வமாக கொண்ட அவர்களிடம் காணும் பெருமையை உலகில் நாம் எங்கும் காணவியலாது. அந்த சபையின் தேவ ஊழியர்கள் தங்களது சபையல்லாத மற்ற சபை மக்களை அற்பமாக எண்ணுவதுடன், அந்த மக்களுடன் பேசுவது, ஏன் அவர்களுடைய காற்று முதலாக தங்கள் மேல் பட்டால்கூட அதைப் பாவம் என்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர். ஆவியின் அபிஷேகம் பெற்றதற்காக அடையாளமான தேவ அன்பு அவர்களிடம் கொஞ்சம் கூட இருக்காது. "அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கின்றார்" (1 யோவான் 4:8) என்ற தேவ வார்த்தையும் "பிறப்பித்தவரிடத்தில் அன்பு கூறுகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்தில் அன்பு கூறுகிறான்" (1 யோ 5:1) என்ற வேத வசனமும் அவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல.




இந்த ஊழியர்களுடைய முகத்தில் பற்கள் எல்லாம் வெளித் தெரியக்கூடிய அளவில் ஒரு அழகான சிரிப்பு காணப்பட்டாலும், இவர்களின் உள்ளம் முழுமையான கபடத்தால் நிறைந்து பொங்குகின்றது. பரலோகத்தில் ஆண்டவர் இயேசுவோடு இருக்கும் மக்கள் கபடமற்றவர்களாக இருப்பார்கள் (வெளி 14:5) என்று தேவனுடைய வார்த்தை திட்டமாக கூறுகின்றது. "எங்கள் பாஸ்டர் பணம் கொடுப்பவர்களிடம் மட்டும்தான் சிரித்து சிரித்து பேசுவார்" என்று ஒரு சகோதரி என்னிடம் கூறினார்கள்.




"களவு செய்யாதிருப்பாயாக" என்று பிரசங்கிக்கும் இந்த ஊழியர்களின் மந்தையிலுள்ள ஆடுகள் பலவும் பக்கத்து மந்தைகளிலிருந்து (சபைகளிலிருந்து) திருடப்பட்ட ஆடுகள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.




கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள் வந்துவிட்டால் போதும் இந்த ஊழியர்கள் தங்கள் பிரசங்க பீடத்தை ஓங்கி அறைந்தும், தங்கள் சபை மக்களுக்கு முன்பாக மேடையில் அங்கும் இங்கும் பாட்டு பாடி நடனமாடி பிரசங்கிக்கும் பிரசங்கத்தை பார்த்தால் உண்மையில் தேவதூதன் ஒருவர்தான் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்து இன்று பிரசங்க பீடத்தை பொறுப்பெடுத்து பிரசங்கித்துக் கொண்டிருக்கிறாரோ என்று எண்ணுகிற அளவிற்கு அவர்களுடைய பிரசங்கங்கள் அத்தனை கவர்ச்சியாக இருக்கும். ஆனால் வாரத்தின் மீதியான நாட்களில் முழுமையிலும் அவர்கள் முழுமையான உலகங்களாக, உலக மக்களுடன் பேசி சிரித்து பழகி, எந்த ஒரு ஜெபதபமும், உபவாசமும் இல்லாமல் நன்கு புசித்து குடித்து, ஊர் சுற்றி வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து தாங்கள் வைத்திருக்கின்ற டிவி பெட்டியில் வருகின்ற கிரிக்கெட், சினிமா, நாடகம் போன்றவைகளை நாள் முழுவதும் பார்த்து உலகத்து மனிதர்களாகவே இருப்பார்கள். நம் அருமை இரட்சகர் சொன்னது போல "அவருடைய கனிகளினாலே நாம் அவர்களை நிச்சயமாக அடையாளம் கண்டு கொள்ளலாம்" (மத் 7:20)




இப்படிப்பட்ட மேய்ப்பர்களுக்கான (குருவானவர் & பாஸ்டர்) தண்டனை தப்பாமல் உண்டு என்பதை "இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டீர்கள், இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள் மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 23:2) என்ற வசனத்தில் தேவன் திட்டமாக கோடிட்டுக் காண்பித்திருக்கின்றார். அந்த தண்டனையிலிருந்து எவரும் தப்பித்துச் செல்லவியலாது.

குறிப்பு: தங்கள் அன்பின் ஆண்டவருக்கு உண்மையும் உத்தமுமாய் தங்களை பலிபிடத்தில் தகனித்து ஊழியம் செய்கின்ற பரிசுத்த குருவானவர்களையும், பாஸ்டர்களையும் நான் இங்கு குறிப்பிட்டு எழுதவில்லை என்பதை நீங்கள் நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். "உங்களுக்குள் ஒருவன்' (யோ 6:70) என்று அன்பின் ஆண்டவர் சொன்னவர்களைதான் நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.