Type Here to Get Search Results !

நியாயத்தீர்ப்பின் நடுக்கம் நமக்கு தேவை | When you see sin, you should run away | தின தியான குறிப்புகள் | Jesus Sam

மவுனமாய் இருக்க ஒரு காலம் உண்டு, பேச ஒரு காலம் உண்டு - பிரச 3:1,7

ஆனால் நம்மில் அனேகர் பேசிக்கொண்டே இருக்கின்றோம். பிரயோஜனமற்றதும், முக்கியத்துமவற்றதுமான காரியங்களை குறித்து முடிவின்றிப் பேசிக் கொண்டே இருக்கின்றோம். தாவீது ராஜா "கர்த்தாவே என் வாய்க்கு காவல் வையும் என் உதடுகளின் வாசலை காத்துக் கொள்ளும்" (சங்கீதம் 141:3) என்று பெருமூச்செறிந்து ஜெபிக்கின்றான். எதற்கும் ஒரு காவல்காரன் அல்லது ஒரு காவல் இருக்கும் பட்சத்தில் தாரளமான நடமாட்டங்கள் (Free movements) தடை செய்யப்பட்டு விடும். காவல்காரன் தான் காவல் செய்யும் நுழைவாயிலண்டை நின்று கொண்டு தேவையற்றப் வாகனப் போக்குவரத்தை தடை செய்து விடுகிறான். அப்படித்தானே ? தாவீது ராஜா ஏறெடுத்த ஜெபத்தை "கர்த்தாவே என் வாயானது பேசும்படி திறக்க அவசியமற்ற வேளைகளில் அதனை மூடி காத்துக்கொள்ளும். அது திறக்கும்படி அவசியம் ஏற்படுகையில் தேவையான வார்த்தைகளை நீரே எனக்கு தெரிந்தெடுத்து என் வாயில் தாரும்" என்ற கருத்திலும் நாம் கொள்ளலாம். இந்த அருமையான ஜெபத்திற்கு உங்களில் எத்தனை பேர் "ஆமென்" என்று சொல்வீர்களோ நான் ஆச்சரியமடைகிறேன்.

"இதற்குமேல் பேசாமல் அமைதியாக இருப்பது முற்றும் கூடாத காரியம் என்ற நிலை எழும்வரை பேசாமல் அமைதியாக இரு" என்றதொரு பழஞ்சொல் குவேக்கர்களிடம் உண்டு. "உங்களின் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தி உள்ளவன் என்று எண்ணினால் அவனது தேவபக்தி வீணாயிக்கும் (யாக்கோபு 1:26) என்று அப்போஸ்தலன் கூறுகிறார்.


"நீதிமானுடைய மனம் பிரதீயுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளை கொப்பளிக்கும் (நீதி 15:28) ஆகையால் என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும், கோபிக்கிறதற்கு தாமதமாயும் இருக்கக்கடவர்கள் (யாக்கோபு 1:19)


நமது நாவு சிறிய அவயங்களாக இருந்த போதிலும் பெரிய நன்மையையோ அல்லது கொடிய தீமையையோ செய்ய ஏதுகரமானதோர் கருவியாக இருக்கின்றது. அவற்றை நாம் கர்த்தருக்கு தியாகப் பலியாக அர்ப்பணிக்க தவறும் பட்சத்தில் சத்ருவாகிய பிசாசின் உபயோகத்துக்கு நாம் அதனை கையளிக்க நேரிடும். சாத்தான் அதனை பயன்படுத்துவதில் மிகவும் காரிய சமர்த்தன். எனவே நாம் நமது நாவுகளை ஆண்டவரின் ஆளுகைக்கும் அவரை துதிப்பதற்கும் கொடுப்போமாக.


மிகுதியாக பேசுவதை பரிசுத்த வேதாகமம் மதீயீனம் (நீதி 15:14), என்று அழைப்பது மட்டுமல்ல, அது பாவம் என்றும் அழைக்கின்றது (நீதி 10:19) நீ தேவபக்தியுள்ளவனாயிருந்தால் பயனற்ற வீண் வார்த்தைகளுக்கு விலகியிரு.


மூடர் பாவத்தை குறித்து பரியாசம் பண்ணுகிறார்கள் (நீதி 14:9)*
*தீவினை செய்வது மூடனுக்கு விளையாட்டு (நீதி 10:23)*
20 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்தல குருவானவர் ஒருவர் இரண்டாவது நள்ளிரவு சினிமா காட்சியை பார்த்துவிட்டு வீட்டிற்கு போய் கொண்டு இருந்தார். (அந்த நாட்களில் டிவி, செல்போன் கிடையாது) தன்னை ஒருவரும் காணக்கூடாது என்பதற்காக குளிரான அந்த இரவில் லுங்கி ஒன்றால் தன்னை மூடிக்கொண்டு சென்றார். கர்த்தர் அந்த குருவானவை காண என் கண்களை திறந்தார். அந்த வேளையில் நான் இரவில் ஊருக்கு போய் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.


சினிமா பார்த்துவிட்டு அத்தனை துணிகரமாகச் செல்லும் குருவானவரைக் கண்டு நான் மிகவும் வேதனை அடைந்து சில நாட்கள் சென்ற பின்னர் அவரை தனித்து அணுகி குறிப்பிட்ட நாளில் அவர் சினிமா பார்த்துவிட்டு சென்ற சம்பவத்தை நினைப்பூட்டினேன். அதை குறித்து அவர் ஒன்றும் பதட்டம் அடையாமல் மிகவும் நிர்விசாரமாக எனக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறினார் "நீங்கள் நினைப்பது போல சினிமா பார்ப்பது பாவமல்ல. அதில் அனேக கருத்துக்களும், நீதி போதனைகளும், வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களும் உள்ளன. இயேசுவானவரின் நாட்களில் அதிர்ஷ்டவசமாக சினிமா இல்லாமல் போயிற்று. சினிமா அவருடைய நாட்களில் இருந்திருந்தால் கட்டாயம் அவர் சினிமா பார்த்து இருப்பார்" என்றார். அதுமட்டுமல்ல சினிமாவை புகழ்ந்தார் "சினிமா பாடல்களை நன்றாக கவனியுங்கள், எத்தனை ஆழமான கருத்துக்கள் அதில் அடங்கியுள்ளன" என்றார்.


இப்படிப்பட்ட குருவானவர்களை நாம் என்ன சொல்வது ? பூர்வ நாட்களில் சபையின் குருவானவர்கள் மக்களின் பாவங்களை நினைத்து கதறி ஓலமிட்டு அழுது சபையில் உயிர்மீட்சியை கொண்டு வந்தனர். பரிசுத்தத்தையும், பக்தியையும் பேரின்ப வாழ்வின் தாகத்தையும் அவர்கள் தங்கள் மக்களுக்கு ஊட்டினார்கள். ஆனால் சில நவநாகரீக குருவானவர்கள் தங்கள் துர் போதனைகளால் தங்கள் கரத்தின் கீழ் உள்ள மக்களை ஒட்டு மொத்தமாக நரக பாதாளத்திற்கு சாத்தானுடன் சேர்ந்து இழுத்துச் சென்று நித்திய அக்னி கடலில் தள்ளிக் கொண்டு இருக்கின்றனர். திருச்சபைகளில் வாலிப ஆயர்கள் மாத்திரமல்ல கிழவர்களான ஆயர்களும் டிவிக்கு முன்பாக தேவபயமில்லாமல் அமர்ந்து தேவன் அருவருக்கிற சினிமா, நாடகம், சிரியல், ஆபாசமான விளம்பரங்களை பார்த்து ஆனந்தித்து தங்கள் நேரங்களை பாழாக்குகின்றனர். சபையிலுள்ள வீடுகளை சந்தித்து கஷ்டம், கண்ணீர், வியாதி போன்ற பாடு வியாகுலங்களில் சிக்கி உள்ள மக்களுக்காக ஜெபிக்க இவர்கள் செல்வதில்லை.


குருவானவர்கள் கதை இப்படி என்றால் பாஸ்டர் நிலைமை இதைவிட மோசம். சில நாட்களுக்கு முன்பு ஒரு பாஸ்டரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்று இருந்தேன். வீட்டில் பாஸ்டர் வீட்டில் இல்லை. அவருடைய மகள் (+1 படிக்கிறாள்) தன் முன்னால் உள்ள டிவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். டிவியில் என்ன பார்க்கிறாள் என்று பார்த்தேன். ஏதோ ஒரு சினிமா படம் ஓடிக் கொண்டிருந்தது. உடனே நான் அவளிடம் நீ பாஸ்டர் மகள் அல்லவா சினிமா பார்க்கலாமா ? உனது அப்பாவிடம் சொல்லட்டுமா ? என்று கேட்டேன். உடனே அவள் எனது அப்பாவும் (பாஸ்டர்) சினிமா பார்ப்பார் என்று பதில் கூறினாள். அந்த பாஸ்டர் முழு நேர ஊழியர். வேதாகம கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படித்தவர். வேதாகம கல்லூரியில் என்ன கற்றுக் கொடுத்தார்களோ ? இப்படிப்பட்ட பாஸ்டர்கள் குருவானவர்கள் சபை மக்களுக்கு என்ன செய்தியை கொடுப்பார்கள் என்று யோசித்தேன்.


எனக்கு ஒரு ஏழை சகோதரியை தெரியும். ஆவிக்குரிய சபைக்கு செல்கிறார்கள். யாரை பார்த்தாலும் சுவிசேஷம் கூறுவார்கள். நகை அணிவது இல்லை. அவர்கள் இடம் பேசினால் விசுவாச வார்த்தைகள், தைரியமான வார்த்தைகள் பேசுவார்கள். அவர்கள் இடம் 10 நிமிடம் பேசினால் நமக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும். கடந்த மாதம் அவர்கள் வீட்டிற்கு மதியம் சென்றேன். அவர்கள் தனது 15 வயது மகளுடன் TV யில் சினிமா பார்த்து கொண்டு இருந்தார்கள். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள் (2 தீமோ 3:5) என்பது எவ்வளவு உண்மை. அவருடைய வார்த்தையின்படியே இன்று மனுமக்கள் அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்கள் அவ்வண்ணமாகவே ஜீவிப்பதை நாம் துலாம்பரமாகக் காணலாம். பாவத்திலே அவர்கள் துணிகரம் கொண்டு வாழ்வதுடன் பாவத்தை குறித்து பரியாசம் பண்ணவும் அவர்கள் செய்கிறார்கள்.


சில வருடங்களுக்கு முன்பு ஜெயபிரகாஷ் என்ற ஒரு சகோதரன் தனது வீட்டில் உள்ள ஒன்பது பேரை கொலை செய்து அரிசி மூட்டையை அடுக்கி வைத்திருப்பது போல பிணத்தை வீட்டில் அடுக்கி வைத்திருந்தான். போலீசார் அவனை கைது செய்து விசாரித்த போது (எப்படி இந்த கொலையை செய்தாய் ?) சினிமாவில் இந்த மாதிரி வில்லன் கொலை செய்தான் அதை பார்த்து நானும் செய்தேன் என்றான். ஆ எவ்வளவு பயங்கரம்.


முதலாம் வகுப்பு படிக்கும் ஒரு கிறிஸ்தவ சின்ன பையன் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு கிறிஸ்தவ சிறுமி வீட்டிற்கு சென்றிருந்தான். சிறுமி வீட்டில் டிவி இருப்பதை கண்டதும் அதை போடும்படியாக சிறுவன் கூறவே அந்தப் பெண் குழந்தை டிவியில் கார்ட்டூன் தொடரை போட்டு இருக்கின்றாள். உடனே அவன் "எனக்கு சினிமா மட்டும்தான் பிடிக்கும், சினிமா போடு. எங்க மம்மி டாடி எல்லாரும் வீட்டிலே சினிமாதான் பார்ப்போம்" என்றானாம். இந்த சிறுவன் வளர்ந்து பெரியவனாகும் போது இவனது காரியம் எப்படி இருக்கும் என்பதை நாம் நமக்குள்ளாகவே நன்கு நிதானித்துக் கொள்ளலாம். கிறிஸ்தவ பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை டிவிக்கும் செல்போனுக்கும் விலக்கிக் காத்துக் கொள்ளுங்கள்.


நியாயத்தீர்ப்பின் நடுக்கம் நமக்கு தேவை
பாவத்துடன் விளையாடுவோரும் அதாவது சினிமா பார்ப்பது பாவமல்ல, மது அருந்துவது பாவம் அல்ல, புகையிலை பிடிப்பது பாவம் அல்ல, லாட்டரி சீட்டு வாங்குவது பாவமல்ல, மற்றவர்களை கொள்ளை இடுவது பாவமல்ல, விபச்சாரம் வேசித்தனம் பண்ணுவது பாவமல்ல, பெற்றோரை கனம் பண்ணாமல் இருப்பது பாவமல்ல, பரிதானம் (லஞ்சம்) வாங்குவது பாவமல்ல என்போரும், துணிகரமாய் பாவ ஜீவித்திலிருப்போரும் தங்களுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு சர்வ லோக நியாதிபதியால் நடத்தப்பட இருக்கிறது என்பதை திட்டமாக உணர்தல் வேண்டும். "சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ (ஆதி 18:25) "சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு நாம் எல்லாரும் கிறிஸ்துவின் சிங்காசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்" (2 கொரி 5:10). "உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட, ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று அறி" (பிரசங்கி 11:9) சகல எண்ணங்களையும், சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங் காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் (பிரசங்கி 3:17)


ஒரு வாலிபன் ராஜ துரோகத்திற்காக சிறைச்சேதம் பண்ணும்படியாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தான். தான் அடையப் போகும் ஆக்கினியை எண்ணி எண்ணி அந்த வாலிபன் இரவெல்லாம் பரலாபித்து, அங்கலாய்த்து, ஓலமிட்டு அழுது புரண்டு தனது சொல்லொண்ணா மனக்கிலேசத்தால் ஒரே நாள் இரவோடு இரவாக அவனது கரிய தலை மயிர்கள் எல்லாம் வெண்மையாகி கிழவனைப் போலாகிவிட்டான். மறுநாள் சிரச்சேதத்திற்காக அவன் அழைத்து வரப்பட்ட போது அவனுடைய பரிதாபகரமான நிலையைக் கண்டு மன்னன் அவன் மேல் மனமிறங்கி அவளை விடுதலை செய்தான் என்று ஒரு சரித்திரம் கூறுகின்றது.


மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள் (வெளி 20:12)


பாவத்துடன் விளையாடுபவனே ! தேவனின் பயங்கரமான நியாயத்தீர்ப்பு தப்பாமல் உனது தலைக்கு மேல் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது என்பதை மறக்க வேண்டாம்


பாவத்தை கண்ட மாத்திரத்தில் விலகி ஓட வேண்டும்
பொல்லாங்காய் தோன்றுகிற யாவற்றையும் விட்டு விலகுங்கள் (1 தெச 5:22) என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது.


நீங்கள் எப்பொழுதாவது ஒரு காகமோ அல்லது இரண்டு காகங்களோ ஒரு பருந்தை அல்லது ஒரு பைரியை அல்லது ஒரு வல்லூறை வான வீதியிலே மாறி மாறி கொத்தித் துரத்தி விரட்டிக்கொண்டு செல்வதை கவனத்திருரக்கின்றீர்களா? ஏன் அந்த காகங்கள் அப்படி அவற்றை கொத்தி துரத்தி செல்கின்றன தெரியுமா ?


அந்த எல்லையில் எங்கோ ஒரு மரத்தில் அந்த காகத்தின் கூடும் அதன் குஞ்சுகளும் இருப்பதாலேயேதான் அவ்விதமாகச் செய்கின்றன. காகத்தின் கூடும் அதன் குஞ்சுகளும் இருந்தால் அந்தக் கூட்டிற்கான காகங்கள் தங்கள் கண்களில் படும் பறவைகள் முதல் மனிதர்வரைக்குமான அனைத்தையும் தங்கள் எல்லையில் இருந்து கொத்தி தாக்கி துரத்தி ஓட்டும்.


சமீபத்தில் நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள மரம் ஒன்றில் ஒரு பெரிய குரங்கை இரண்டு காகங்கள் ஒன்று சேர்ந்து மிகுந்த வீராவேசத்துடன் கொத்தி துரத்துவதை நான் கண்டு ஆச்சரியமுத்து அக்கம் பக்கத்தில் பார்த்தபோது சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்தில் ஒரு காக்கை கூடும் குஞ்சுகளும் இருப்பதை கவனித்தேன். அந்த கூட்டின் காகங்கள்தான் மேற்கண்ட குரங்கை தாக்கியவைகளாகும். இதன் மூலம் நான் ஒரு பெரிய ஆவிக்குரிய பாடத்தை கற்றுக் கொண்டேன். எவ்விதமாக காகங்கள் தங்கள் குஞ்சுகள் இருக்கக்கூடிய எல்லையிலிருந்து அவற்றை கொத்திக் கொண்டு செல்லக்கூடிய மற்ற பறவைகளையும், குஞ்சுகளுக்கு தீங்கிழைக்க கூடிய விலங்குகளையும், மனிதரையும் கொத்தி துரத்தி விரட்டி விடுமோ அதைப் போன்று விலையேறப் பெற்ற நம் ஆத்மாவை தாக்கிக் கறைப்படுத்தக்கூடிய சத்துருவின் நடமாட்டங்களையும், சலனங்களையும் ஆவிக்குள் நாம் உணர்ந்த மாத்திரத்தில் நம் ஆத்மாவின் எல்லையிலிருந்தே அவனை துரத்தி அடித்து ஒட்டி விட வேண்டும் என்பதுதான் அது.


அதிகமாக நாம் ஜெபித்து ஒவ்வொரு நாளையும் நாம் ஆரம்பிப்போனால் பிசாசு பாவச் சோதனைகளை அத்தனை எளிதாக நமக்கு முன்பாக போட்டு வெற்றி கொள்ளுதல் இயலாத காரியம் ஆகும்.


"தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி ?" (ஆதி 39:9) என்று கூறினவாரே தன் வஸ்திரத்தை போத்திபாரின் மனைவியின் கரங்களில் விட்டு விட்டு தலை தெறிக்க ஓடிய நீதிமான் யோசேப்பை போன்று நாமும் பாவத்தை கண்டதும் விலகி ஓடி நம்முடைய விலையேற்றப் பெற்ற ஆத்மாவையும், கர்த்தருடைய பரிசுத்த நாம மகிமையையும் காத்துக் கொள்வோமாக.


நாம் மண்ணென்று தேவன் நினைவு கூருகின்றார் (சங் 103-14)
அநேகருக்கு தங்கள் பார்வையில் அவர்கள் ஏதோ மிகவும் பெரியவர்கள் என்ற நினைவு உள்ளது. இது மிகவும் மதியீனமான காரியமாகும். தங்களை அவர்கள் உயர்வாக எண்ணிக் கொள்ளுகின்றனர். தங்களையும் தங்களுக்குரிய காரியங்களையும் பெரிதாக பேசிக் கொள்ளுகின்னனர்.


பண்டைய ஈசாப்பு கதைகளில் ஒரு எருதையும், ஒரு ஈயையும் குறித்த ஒர கதை உண்டு. ஒரு ஈ ஒரு எருதின் கொம்பிலே நெடுநேரம் உட்கார்ந்திருந்தது. அந்த கொம்பில் இருந்து ஈ பறந்து செல்ல ஆயத்தமான போது அந்த எருதைப் பார்த்து பேசிற்றாம், "எருதே நான் பறந்து செல்லப் போகிறேன். அதையிட்டு உனக்கு எந்த துக்கமும் இல்லைதானே ? என்றதாம். எருது ஈயைப் பார்த்து சிரித்துக் கொண்டே தனது கண்களை மேலே உயர்த்தி " ஓ சிறிய அற்பமான ஈயே நீ இருந்தால் என்ன அல்லது போனால் என்ன, இரண்டும் எனக்கு ஒன்றுதான். நீ எனது கொம்பில் வந்து உட்கார்ந்ததே எனக்கு தெரியாதே. அப்படியிருக்க நான் போகட்டுமா ? என்கிறாயே என்றதாம்.


மேற்கண்ட ஈயின் கதையைப் போலத்தான் அநேகருடைய எண்ணமும் உள்ளது. உலகம் என்ற எருதின் கொம்பில் அமர்ந்திருக்கும் அவர்கள் தங்களை குறித்து வீண் பெருமை கொண்டு தங்களை சுற்றியுள்ள உலகம் அவர்களை தங்கள் தலைக்குமேல் தூக்கி வைத்துதிரிக்கின்றது, தங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கின்றது என்று மாயையான மனக்கோட்டை கட்டிகொண்டிருக்கின்றார்கள்.


தேவன் நம்மை குறித்து சொல்லும் வார்த்தைகளை கவனித்தீர்களா. நாம் மண் என்கிறார் (சங் 103-14)


தாவீது ராஜா இஸ்ரவேலின் அரசனாக இருந்த போதிலும் தனது பகைஞனாகிய சவுலுக்கு முன்பாக தன்னை "இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியை தேடி வந்தாரோ ?(1 சாமு 26-20) தெள்ளுப்பூச்சிக்கு தன்னை ஒப்பிடும் தாவீது ராஜாவின் மனத்தாழ்மையை பாருங்கள்


தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் (ஆதி 18-27) ஆண்டவரோடு முகமுகமாய் பேசும் கிருபை பெற்ற நம் விசுவாசிகளின் தகப்பன் ஆபிரகாம் தன்னை தன் ஆண்டவருக்கு முன்பாக தாழ்த்தும் விதம் கண்டீர்களா ?


"இதோ நான் நீசன்" (யோபு 40-4) என்று தன் உயிரோடிருக்கும் மீட்பருக்கு முன்பாக கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்த யோபு பக்தன் தன்னை தாழ்த்துகிறார்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.