பயத்தோடும் நடுக்கத்தோடும் பாதுகாக்கப்பட வேண்டிய இரட்சிப்பு
இரட்சிப்பு மிகவும் விலையேறப் பெற்றது. கடந்த கால பாவங்களுக்காக மனம் கசந்து அழுது, கண்ணீர் சிந்தி, பாவ மன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்ளும் ஆத்துமா அந்த மகத்தான இரட்சிப்பின் தீபத்தைக் கடைசிவரை அணையாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பயத்தோடும், நடுக்கத்தோடும் அதை பாதுகாத்துக் கொள்ளும்படியாக கர்த்தருடைய வார்த்தை நமக்கு ஆலோசனை கூறுகின்றது (பிலி 2:12) இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம் (எபிரேயர் 2:4)
பாவமும் அசுத்தமும் நிரம்பி வழியும் இந்த உலகத்தில் நாம் பரிசுத்தமாக வாழவும், மரணத்தை மிகுந்த மகிழ்ச்சியோடும், எதிர்பார்ப்போடும் சந்திக்கவும், முடிவற்ற நித்தியத்தை ஆண்டவர் இயேசுவுடன் மோட்சத்தில் நாம் களிக்கவும், இரட்சிப்பு நமக்கு மிகவும் அவசியமாகின்றது. அந்த மாட்சிமையான இரட்சிப்பை நாம் விழிப்புடன் காத்துக் கொள்ள இந்த உலகில் போரிட வேண்டும்.
எந்த ஒரு வெற்றிக்கும் கடினமான உழைப்பும், முயற்சியும், தியாகமும், அர்ப்பணிப்பும் கட்டாயம் வேண்டும். உலகப்பிரகாரமான காரியங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பள்ளியில் அல்லது கல்லூரியில் பயிலும் மாணவன் தன் வெற்றிக்காக அல்லும் பகலும் பாடங்களை படிக்க வேண்டியதாயிருக்கின்றது. வீட்டிலுள்ளோர் இரவிலும், விடியற்காலை நேரமும் அயர்ந்து தூங்கும்போது அவன் தன் தூக்கத்தையும், சோர்வின் மயக்கத்தையும் மூட்டை கட்டி அப்பால் வைத்துவிட்டு பாடங்களைக் கண்ணும் கருத்துமாகப் படித்து வெற்றி அடைகின்றான். பட்டணத்து வீடுகளுக்கு பால் கொண்டு வந்து கொடுக்கும் பால்காரன் வெகு அதிகாலமே கண் விழித்து எழுந்து தன் மாடுகளுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்து, பாலை கறந்து எடுத்துக் கொண்டு வந்து காலையிலே சரியான நேரத்திற்கு தந்து விட்டு போய் விடுகின்றான். மற்றவர்களைப் போல அவனும் தூங்கினால் அவன் எப்படி வாழ முடியும்! மற்றவர்களைப் போல நாங்களும் அயர்ந்து தூங்குவோம் என்று அவர்கள் கூறுவார்களானால் கிராமத்து பழமொழி படி அவர்கள் "அடுப்பை கோழி கிண்டி விடும்". அதாவது வறுமை வந்துவிடும் அல்லவா !
வேத புத்தகத்திலிருந்து ஓரிரு உதாரணங்களை கொடுக்க விரும்புகிறேன். லாபானின் அழகிய குமாரத்திகள் ராகேலையும், லேயாளையும் தன் மனைவிகளாக கொள்ளுவதற்கு யாக்கோபு 14 நீண்ட ஆண்டுகள் பகலின் வெயிலிலும், இரவின் பனியிலும் அல்லற்று ஆடுகளை மேய்த்து மிகுந்த பாடுகளை பட வேண்டியதாய் இருந்தது. 40 ஆண்டுகள் மிகவும் வருத்தமும், சஞ்சலமும் கண்ணீரும் நிறைந்த வனாந்திர கால்நடை பயணத்திற்கு பின்னர்தான் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம் இஸ்ரவேலருக்கு கிடைத்தது.
அழிந்து போகும் உலக காரியங்களுக்கும் இத்தனை பிரயாசங்களும், கண் விழிப்புகளும், தியாகங்களும் தேவை என்றால் நித்திய நித்திய காலமாக நிலைத்திருக்க கூடிய இரட்சிப்பின் காரியத்தில் எத்தனை எத்தனையோ கவலையும் கரிசனையும் நமக்கு வேண்டும்.
கொஞ்சம் நாம் அசதியாக இருப்போமானால் சத்ருவாகிய பிசாசு நம்முடைய விலையேற பெற்ற பந்தய பொருளான நித்திய ஜீவனை நம்மிடமிருந்து தட்டிப்பறித்துக் கொண்டு ஓடி விடுவான். அதின் பொருட்டுதான் அவன் உலகம் எங்கும் கண்ணீயை விரித்து வைத்திருக்கிறான். வீட்டை விட்டு நாம் வெளியே செல்வோமானால் நம்மை நாமே கரைபடுத்தாமல் ஒருக்காலும் வீட்டிற்கு திரும்பி வருவது மிகவும் அரிது. நாம் பயணப்பட்டு செல்லும் வாகனங்களிலே கண்ணிகள். பட்டணத்து அனைத்து சுவர்களிலும் கண்ணிகள். மக்களின் வார்த்தைகளிலே கண்ணிகள். நாம் காணும் மக்களின் ஆடை அலங்காரத்திலே கண்ணிகள். எங்கும் எதிலும் சத்துருவின் கண்ணீகளே.
சற்றே அதிகமான தேவையற்ற வீண் வார்த்தைகள், கவலையினமான பார்வைகள், விரும்பத்தகாத போக்குவரத்துகள், மனம் விட்டு பேசும் ஞானமற்ற சம்பாஷணைகள், எதிர்பாலுனர்களுடன் கர்த்தருக்கு பிரியமற்ற நீண்ட தனிமைகள், அவர்களுடன் இராத்தங்கல்கள் போன்றவை நொடி பொழுதில் விலையேறப் பெற்ற நம் ஆத்மாவின் நித்திய இரட்சிப்பை தவிடு பொடியாக நொறுக்கி தள்ளிவிடும். எத்தனை எத்தனையோ உண்மை நிகழ்ச்சிகளை நான் இங்கே எழுத முடியும்.
வாசிக்கும் தேவ பிள்ளையே, நீ எச்சரிக்கப்படுகின்றாய். நீ கண்ணீர் சிந்தி கதறி அழுது அருமையாய் பெற்ற இரட்சிப்பை தேவனுக்கு பிரியமற்ற அருவருப்பான கொடிய பாவங்களை செய்து என்றைக்கு இழந்தாயோ அன்றைக்கே உன் ஆத்மாவையும் இழந்தாய். அன்றே நடைபிணமாவாய்.
உனது இரட்சிப்பை பயத்தோடும் நடுக்கத்தோடும் முடிவுவரை விழிப்புடன் பாதுகாத்துக் கொள்ள நீ அதிகமாக ஜெபிக்க வேண்டும், அதிகமாக தேவ சமூகத்தில் உன்னை தாழ்த்த வேண்டும். அதிக பரிசுத்தம் உன் வாழ்க்கையில் காணப்பட வேண்டும். களங்கம் இல்லாத ஞானப்பாலாகிய தேவ வசனங்களை அதிகமாய் தினமும் அள்ளிப் பருக வேண்டும். கட்டுக்குள் அடங்க மறுக்கும் உன் பொல்லாத சரீர பாண்டத்தை தேவ பெலத்தால் அடக்கி ஒடுக்கி கீழ்ப்படுத்த வேண்டும். அதற்கான கிருபையை அன்பின் கண்மணி இயேசு அப்பா தாமே உங்களுக்கு தந்தருள்வாராக. ஆமென்.
என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள் - லூக்கா 11:7
தகப்பனும், தாயும் தாங்கள் படுத்திருந்த இடத்தில் தங்கள் பிள்ளைகளை படுக்க வைத்திருந்தார்கள் என்று மேலே உள்ள வசனம் தெளிவாக கூறுகிறது. சில பெற்றோர் வீடு கட்டும் போது வீட்டில் ஆளுக்கொரு அறை இருக்க வேண்டும் என்று வீடு கட்டுகிறார்கள். சிறு வயதிலேயே பிள்ளைகளை பிரித்து தனி அறையில் படுக்க வைத்து விடுகிறார்கள். தனி அறை கொடுத்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் பெற்றோர் இருக்கிறார்களே, தவிர அதனால் வருகிற விளைவுகளை கொஞ்சம் கூட சிந்திப்பது இல்லை.
இரவில் தேவையில்லாத படங்களை TV யில், Cell Phone ல் பார்க்க வாய்ப்பு உள்ளது. இரவு தேவை இல்லாமல் மற்றவர்களோடு Cell phone ல் பேச வாய்ப்பு உள்ளது. இரவு தேவையில்லாமல் இணைய தளத்தை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. மது வகைகள், புகையிலை, போதை வஸ்துகளை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இரவு பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே போய் சமுக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
சில பெற்றோர்கள் தங்களுடைய சுய லாபத்திற்காக பிள்ளைகளை பிரித்து தனி அறையில் படுக்க வைப்பார்கள். இது தவறான காரியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சமீபத்தில் நடந்த நடிகர் விஜய் ஆண்டனி மகள் மரணம் நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளி 22:12)
இன்றும் கூட மாந்தர் தேவனை ஏமாற்றி விடலாம் என்று துணிச்சலிலேயே செயல்படுகின்றனர். நாம் எதை வேண்டுமானாலும் செய்து கொண்டே போகலாம், தேவனுக்கு அதைப் பற்றி அறிவு கிடையாது, அவர் நம்மை தண்டிக்க மாட்டார் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி உள்ளது. எத்தனை மதியீனம்.
கர்த்தரை எவரும் எக்காலத்தும் ஏமாற்ற முடியாது. ஆனால் இன்று மக்கள் அவரை ஏமாற்றுவதாக எண்ணித் தங்களையே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். வியாபாரங்களைச் செய்யும் கிறிஸ்தவ வியாபாரிகள் (எல்லோருமல்ல) தவறான வழிகளில் பணங்களை ஈட்டுகிறார்கள். தங்கள் பொருட்களின் தாங்கள் கலப்படம் செய்வது மாத்திரமல்ல மற்றவர்களுக்கு கலப்படம் செய்யும் முறைகளை கற்றுக் கொடுக்கிறார்கள். முக்கியமான அரசு அலுவலகத்தில் இருக்கும் கிறிஸ்தவ அதிகாரிகள் (எல்லோருமல்ல) பலர் கண்மூடித்தனமாக லஞ்சங்களை வாங்கி அப்பணத்தால் நவ நாகரிகமான வீடு வாசல்களை கட்டி மனைவி மக்களை விலையேற பெற்ற ஆபரணங்களால் பழுவேற்றுகின்றனர். நான் அறிந்த பல கிறிஸ்தவர்களை இதன் காரணமாக எச்சரித்திருக்கிறேன். "கிழவன் சொல் கின்னரத்துக்கு ஏறுமா ?" என்ற பழமொழிப்படி அந்த மக்கள் செவி கொடுக்காமல் தங்கள் மட்டில்தான் சென்று கொண்டிருக்கின்றார்கள். "சீனிக்கிழங்கை தின்ற பன்றியின் செவியை அறுத்தாலும் போகாது" என்ற பட்டிக்காட்டு முதுமொழிப்படி அம்மக்கள் பரிதானம் என்ற சீனிக்கிழங்கை உண்டு ருசித்தவர்கள். சீனிகிழங்கு மூட்டையிலிருந்து அவர்களை துரத்தி விடுவது என்பது அத்தனை இலகுவானது அல்லவே! கர்த்தர் தான் அவருக்கு இரங்க வேண்டும். மிக மிகவும் வேதனையோடு இந்த வரிகளை இங்கு எழுதுகின்றேன்.
உலக பிரகாரமான வியாபாரம், தொழில்துறைகள், உத்தியோகம், போன்றவற்றில் மாத்திரமல்ல கர்த்தருடைய ஊழியத்தின் பாதையிலும் தேவப் பிள்ளைகள் கண்ணீருடன் ஊழியர்களுக்கு அளிக்கும் பணங்களை வீண் ஆடம்பரங்களில் கர்த்தருக்கு பிரியமற்ற வழிகளில் செலவிட்டு நிலபுலன்களை வாங்கி தங்கள் பின் சந்ததிக்கு அவற்றை ரகசியமாக பின் வைத்த செல்ல கருத்தோடு இருக்கும் தேவ ஊழியர்களும் தேவன் நீதியை சரிகட்டுகின்றவவராய் இருக்கின்றார். எந்த துறையிலும் தேவனை நாம் ஏமாற்ற முடியாது. அப்படிப்பட்ட மக்களின் மேல் தம்முடைய நியாயமான தண்டனையை வழங்க அவரின் முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது. "அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது (நீதி 10:2) என்பது தேவனின் எச்சரிப்பு. ஜீவனுள்ள தேவனை ஏமாற்றி அவருக்கு பிரியமற்ற பொய் வழிகளிலும், அநியாயமாய் சம்பாதிக்கும் ஆஸ்தியும் ஐஸ்வரியமும் ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். "அநியாயமாய் ஐஸ்வரியத்தை சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயவங் காத்தும் குஞ்சு பொரிக்காமல் போகிற கவுதாரிக்கு சமானமாய் இருக்கிறான். அவன் தன் பாதி வயதிலேயே அதை விட்டு, தன் முடிவிலே மூடனாய் இருப்பான்" (ஏரே 17:11) என்கிறார் தேவன்.
இதை வாசிக்கும் அன்பான தேவப்பிள்ளையே, உன்னை பற்றிய காரியம் என்ன ? உன்னுடைய வாழ்வில் நீ தேவனை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாயா ? உன்னுடைய வியாபாரம், உன்னுடைய உத்தியோகம், குடும்ப வாழ்க்கை, கர்த்தருடைய ஊழியத்தின் பாதை, ஆவிக்குரிய பரிசுத்த வாழ்க்கை, போன்றவற்றில் உண்மையற்றவனாய் நடந்து கர்த்தரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாயா ? அந்த ஏமாற்று வித்தை நீண்ட காலத்திற்கு செல்லாது என்பதை மறக்க வேண்டாம். வேத புத்தகத்தில் நம்மை நடுங்க வைக்கும் ஒரு வசனம் உண்டு உங்களில் எத்தனை பேர் அதனை கருத்தாய் தியானித்தீர்களோ என்பது எனக்கு தெரியாது. அது என்னவெனில் "இதோ நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசா 30:3) இந்த பயபக்திக்குரிய வார்த்தை இன்னும் சில இடங்களில் காணக் கிடைக்கின்றது. "நாட்கள் வரும்" "எதற்கு நாட்கள் வரும் ?" தேவனுடைய நீதி, நியாயத்தீர்ப்பு வெளிப்பட நாட்கள் வரும் ? தேவன் தம்முடைய வெஞ் சினத்தை பாவிகள் மேல் கொட்டித் தீர்த்துக் கொள்ள நாட்கள் வரும். அந்த நாட்கள் கட்டாயம் வந்தே தீரும். அந்த நாட்களை வராமல் தடுக்க ஒருவனாலும் கூடாது. அது மனுஷன் மேல் ஒரு கண்ணியை போல் வரும்.
கிறிஸ்தவ மக்களின் சாட்சியற்ற வாழ்க்கை
இந்திய வேதாகம சங்கத்தினர் வெளியிடுகின்ற "சோயிங் சர்க்கிள்" என்ற ஆங்கில பத்திரிக்கையில் கிறிஸ்துவ மக்களின் சாட்சியான வாழ்க்கை இந்நாட்களில் எப்படி இருக்கின்றது என்பதை குறித்து சமீபத்தில் ஒரு செய்தி எழுதி இருந்தார்கள் அதில் ஒரு பகுதியை நான் உங்களுக்கு எழுதுகின்றேன்.
ஒரு காலத்தில் மகாராஜாக்களும், அரசாங்கங்களும் மிகவும் பொறுப்பானதும் உண்மையும், நேர்மையுமான காரியங்களை கவனிக்க கிறிஸ்தவ அதிகாரிகளை நியமனம் செய்தனர். நல்ல தரமும் நீடித்து உழைக்கக்கூடிய பொருட்களை வாங்க விரும்பிய வாடிக்கையாளர்கள் கிறிஸ்தவர்களால் நடத்தப்படுகின்ற வியாபார ஸ்தலங்களை மொய்த்து நின்றனர். சிறந்த சிகிச்சை, குறைந்த செலவில் அளிக்கக்கூடிய கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனைகளை மக்கள் கூட்டம் நாடி தேடி ஓடிய நாட்கள் கடந்த காலத்தில் உண்டு. கிறிஸ்தவர் அல்லாத புறமதஸ்தர்கள் தங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி கல்வி பெற செய்த நாட்கள் இருந்தன. இந்த எனது பட்டியலுடன் நீங்களும் கடந்த கால கிறிஸ்தவ மக்களின் நல்ல சாட்சியின் வாழ்க்கை காரியங்களை பட்டியலிட்டு கூற கட்டாயம் நினைப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
எனது கிறிஸ்தவ நண்பர் ஒருவர் சமீபத்தில் தான் வாங்கிய வீட்டை பழுது பார்க்க நம்பகமான ஒரு நல்ல கட்டிட கான்ட்ராக்டரை கண்டுபிடிப்பதற்காக வெகுவாக தேடி அலைந்தார். கடைசியாக அவர் ஒரு பக்திமான் போல காட்சியளித்த ஒரு மனிதர் மேல் எப்படியோ தடுமாறி விழுந்தார். அந்த கிறிஸ்துவ காண்ட்ராக்டர் எப்பொழுதும் தனது வேதாகமம் கையுமாகவே இருந்தார். அந்த வேதாகமத்தை அவர் எனது நண்பனுக்கு வாசித்துக் காட்டி அதன் சில பகுதிகளை வியாக்கியானப்படுத்திய காட்டிய நாட்களும் உண்டு. அவருடைய இந்த பரிசுத்த நடபடிகள் எனது நண்பனை மிகவும் கவர்ந்து விட்டது. அந்த மனிதர் தான் செல்லும் சபையை குறித்தும், அதன் பரிசுத்தமான ஆராதனை நிகழ்ச்சி நிரல்களை குறித்தும் எனது நண்பரிடம் மிகவும் புகழ்ந்து பேசினார்.
ஆனால் எப்பொழுது அந்த மனிதருக்கு எனது நண்பன் வீட்டு வேலையும் முன்பணத்துக்காக காசோலையும் (செக்) கரங்களில் கிடைத்ததோ அப்பொழுதே அவர் தனது கிறிஸ்துவத்திலிருந்து நழுவ தொடங்கினார். தான் எடுத்துக் கொண்ட வேலையை துடி துடிப்புடன் செய்வது போல் அவர் தன்னை ஆரம்பத்தில் காட்டிக் கொண்டார். ஆனால் வெகு தரிதுமாகவே தனது வேலையை செய்யாதபடி அதை இழுத்தடிக்க ஆரம்பித்தார். கொஞ்ச நாட்களாக அவர் காணாமல் போய்விட்டார். அவரை தேடி கண்டுபிடிக்க எனது நண்பன் மிகவும் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதானது. எனது நண்பனின் குடும்பத்தை ஏமாற்றி இன்னும் நிறைய பணத்தை அபகரிக்க அவர் ஏராளமான பொய்களை சொன்னார். அத்துடன் வீட்டு வேலைக்கும் தரம் குறைந்த மட்டமான பொருட்களை அந்த கிறிஸ்துவ காண்ட்ராக்டர் பயன்படுத்தினார். எனது நண்பனின் கவலையை சொல்லித் தீராது.
இதற்கிடையில், தாங்கள் வாங்கிய வீட்டின் வேலைகள் குறிப்பிட்ட நாட்களில் முடிந்து விடும் என்ற நிச்சயமான எதிர்பார்ப்போடு தாங்கள் குடியிருந்த வாடகை வீட்டை காலி பண்ணும் உறுதி மொழியையும் எனது நண்பனின் குடும்பத்தினர் தங்கள் வாடகை வீட்டினருக்கு கொடுத்திருந்தனர். இந்த நேரம், அவர்கள் பணம் கடனாக வாங்கி இருந்த வங்கியானது அவர்களுடைய சம்பளங்களில் இருந்து கணிசமான தொகையை மாதமாக பிடிக்க ஆரம்பித்தது. எனது சினேகிதன் குடும்பம் பட்ட பாடுகளுக்கு அளவே இல்லை. உயிர் பிழைப்பே அரிதாகிவிடும் என்ற அத்தனை நெருக்கத்திற்குள் அவர்கள் தள்ளப்பட்டனர். இத்தனைக்கும் காரணம் தன்னை கிறிஸ்தவனாக நடித்து காண்பித்த ஒரு கிறிஸ்து அற்ற கிறிஸ்தவ காண்ட்ராக்டர் நிமித்தமாக இந்த பரிதாபம் எனது நண்பனுக்கு நேரிட்டது தங்களை கிறிஸ்தவர்கள் என்று அடையாள அட்டையுடன் வெளி உலகத்திற்கு காண்பிக்கும் கிறிஸ்தவர்களையே நாம் நம்ப முடியவில்லை.
இன்று கோடி கோடியாக கிறிஸ்தவ மக்கள் எண்ணிக்கை இருக்கும் இந்த நாட்களை காட்டிலும் கிறிஸ்துவ திருச்சபையின் எண்ணிக்கை சில லட்சங்கள் மாத்திரமே இருந்த ஒரு காலத்தில் அதன் செல்வாக்கும், நாணயமும், பக்தி வாழ்வும், பரிசுத்தமும் கொடி கட்டி பறந்தது. இன்று புறமதஸ்தர் நம்மை பார்த்து "என்னை சுற்றி நான் ஒரே ஒரு உண்மை கிறிஸ்தவனை பார்க்கும் பட்சத்தில் நான் உடனே கிறிஸ்தவனாகி விடுவேன்" என்று சவால் விடுகின்றனர்.
("Sowing circle" Separate to December 2002)
3 மாதங்களுக்கு முன்பு எனது மனைவிக்கு வர வேண்டிய PF பணத்திற்காக அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். ஒரு வருடமாக PF பணம் வரவில்லை. Treasury office க்கு சென்று விசாரித்தேன். அந்த அலுவலகத்தில் உள்ள ஒரு ஊழியர் சொன்னது நீங்கள் லஞ்சம் கொடுக்காமல் இங்கு உங்கள் பணத்தை பெற முடியாது. இங்கு இரண்டு அதிகாரிகள் இருக்கிறார்கள். ஒருவர் கிறிஸ்தவர், ஒருவர் இந்து. இந்து சகோதரர் லஞ்சம் வாங்க மாட்டார், ஆனால் அந்த கிறிஸ்தவ சகோதரர் லஞ்சம் வாங்காமல் எதையும் செய்ய மாட்டார். அந்த கிறிஸ்தவ அதிகாரி பெயரை கேட்டேன். அந்தப் பெயர் வேதத்தில் உள்ள ஒரு பெயர். "தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.
(ரோமர் 2:24)"
இதை வாசிக்கும் கிறிஸ்தவனே உனது ஜீவியம் எவ்வாறு உள்ளது ? குடும்பத்தில், வேலை பார்க்கும் இடத்தில், வசிக்கும் இடத்தில் தேவன் உனது மூலம் மகிமைப்படுகிறாரா அல்லது தூஷிக்கப்படுகிறாரா ?
Thanks for using my website. Post your comments on this