எந்த தகுதியும் இல்லாமல் கிருபையால் கிடைக்கப்பெற்ற இரட்சிப்பை, தகுதியாக வாழாததினால் ஒருவர் இழந்துவிடுவார் என்பது ஏற்புடையதா?*
✍️ எந்தத் தகுதியும் இல்லாமல் நாம் இரட்சிக்கப்படுவது உண்மைதான். ஆகிலும், இரட்சிக்கப்பட்டவர்கள் அதற்கு தகுதியாக வாழவேண்டியது கட்டாயம்.
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் தேவன் நம்மை இரட்சிக்கவில்லை.
(தீத்து 3:5) ஆனால், இரட்சிக்கப்பட்டவர் நீதியுள்ள கிரியைகளை செய்யவேண்டியது அவசியமாகும். (ரோமர் 6:13
🫵 *இரட்சிக்கப்பட்டவர்களுக்கேற்ற ஜீவியம் அவசியம்!*
".... எனக்குப் பிரியமானவர்களே, *நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே,* நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், *அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்"* என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (பிலிப்.2:12)
*"அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்"* என்கிற வாக்கியம்: ஆங்கில மொழிபெயர்ப்பு KJV & RSVயில், *"work out your own salvation with fear and trembling"* (பயத்துடனும் நடுக்கத்துடனும் உங்கள் சொந்த இரட்சிப்பைச் செய்யுங்கள்) என்றும்; BBEயில், *"give yourselves to working out your salvation with fear in your hearts"* (உங்கள் இதயங்களில் பயத்துடன் உங்கள் இரட்சிப்பைச் செயலாற்ற உங்களைக் கொடுங்கள்) என்றும்; ISVயில், *continue to work out your salvation with fear and trembling"* (பயத்துடனும் நடுக்கத்துடனும் உங்கள் இரட்சிப்பைத் தொடருங்கள்) என்றும்; T4Tயில், *"each of you should very reverentially try to do those things that are proper for people whom God has saved."* (நீங்கள் ஒவ்வொருவரும் மிகவும் பயபக்தியுடன் தேவன் இரட்சித்த மக்களுக்குத் தகுந்தவற்றைச் செய்ய முயற்சிக்கவேண்டும்) என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
இரட்சிப்பில் தொடர்வதும், தனது இரட்சிப்பு முழுமையடைய இரட்சிக்கப்பட்டவர்களுக்கேற்ற கிரியைகளை செய்ய பிரயாசப்படுவதும் இரட்சிக்கப்பட்டவரின் கடமையாகும்.
"எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு *அதிகாரமுண்டு,* ஆகிலும் எல்லாம் *தகுதியாயிராது.* எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு *அதிகாரமுண்டு,* ஆகிலும் நான் ஒன்றிற்கும் *அடிமைப்படமாட்டேன்.* (1கொரி.6:12)
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு *அதிகாரமுண்டு,* ஆகிலும் எல்லாம் *தகுதியாயிராது.* எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு *அதிகாரமுண்டு,* ஆகிலும் எல்லாம் *பக்திவிருத்தியை உண்டாக்காது"* (1கொரி.10:23) என்று பவுல் சொல்லுகிறது அதிகம் கவனிக்கத்தக்கது.
இரட்சிக்கப்பட்ட ஒருவருக்கு எல்லாவற்றையும் அனுபவிக்க அதிகாரம் (சட்டப்படி) இருந்தாலும், தனக்கு பக்திவிருத்தியை உண்டாக்காத ஒன்றுக்கும் அடிமையாகாதபடிக்கு அவர் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
இரட்சிக்கப்பட்டவர் உடுத்தும் வஸ்திரத்திரம்கூட தகுதியானதாக இருக்கவேண்டும் என்கிறார் பவுல் (1தீமோ.2:10) அதாவது, இரட்சிக்கப்பட்ட பெண்கள் தங்கள் உடலை அதிகமாகக் காண்பியாத ஆடைகளை அணிய வேண்டும். அதாவது தன்னைப் பற்றி மற்றவர்கள் வெட்கப்படும் வகையில் ஆடைகளை அணியக்கூடாது என்கிறார்.
தான் விரும்புகிறபடியெல்லாம் ஆடையணிய ஒரு கிறிஸ்தவ சகோதரிக்கு (சட்டப்படி) உரிமையிருந்தாலும், அவருடைய உடை அடக்கமாகவும் விவேகமாகவும் சரியானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கவேண்டியது அவசியம். இது இரட்சிக்கப்பட்ட சகோதரருக்கும் பொருந்தும்.
🫵 *இரட்சிப்பு நிறைவேற இரட்சிக்கப்பட்டவர் செய்யவேண்டியது என்ன?*
தனது இரட்சிப்பு உறுதியாக இரட்சிக்கப்பட்டவர் என்னசெய்யவேண்டும் என்று பவுல் காண்பிக்கிறார்.
ஏனெனில் *தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.*
பிலிப்.2:13
தமக்கு பிரியமானதைச் செய்யும் ஆசையையும் திறமையையும் தேவன் உங்களில் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார். அதாவது, தமக்கு பிரியமானதையும் தமக்கு மகிழ்ச்சியளிக்கும் காரியத்தையும் நீங்கள் செய்ய தேவன் உங்களில் செயல்படுகிறார் என்று இதற்கு பொருள்.
தனது இரட்சிப்பு நிறைவேற ஒரு கிறிஸ்தவன் தேவனுக்கு மகிழ்ச்சியளிக்கும் அவருடைய சித்தத்தை செய்யவேண்டியது அவசியம்.
இரட்சிப்பு இலவசமானாலும் அது சாதாரணமானதல்ல. நம்மால் அதற்கு விலை கொடுக்கமுடியாது என்பதால் தேவன் அதை நமக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார். ஆகிலும், நமக்கு பதிலாக நமது இரட்சகர் அதற்கு தம்மையே விலைகிரயமாக செலுத்தியிருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. (1கொரி.6:20; 7:23)
முதலாவது தம்மையே கிரயமாகக் கொடுத்த நமது கர்த்தர் இயேசு மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்ட அப்போஸ்தலர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்தஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற மிகப்பெரிதான இரட்சிப்பை புறக்கணிக்கிறவர் தண்டனைக்கு தப்பமுடியாது. (எபிரே.2:1-4)
🫵 *தனது இரட்சிப்பை ஒருவரால் புறக்கணிக்கக்கூடுமா?*
இரட்சிக்கப்பட்ட ஒருவர் உபத்திரவக் காலத்தில் தைரியத்தைவிட்டு பின்வாங்கி, கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது என்பதை எபிரேயர் 10:32-39 வரை வாசிப்பீர்களானால் அறிந்துகொள்ளலாம்.
மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து,
எபிரேயர் 10:24
*சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்,* ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
எபிரேயர் 10:25
மேற்காணும் வசனங்கள் சிலர் விசுவாசத்தைவிட்டு பின்வாங்கி, சபை கூடிவருதலைச் விட்டுவிட்டதைக் காண்பிக்கின்றன.
இரட்சிக்கப்பட்ட ஒருவர் விசுவாசத்தில் பின்வாங்கி, சபை கூடிவருதலை விட்டுவிடக்கூடும் என்பதையும்; தான் இரட்சிக்கப்படும்படிக்கு தன்னைப் பரிசத்தஞ்செய்யும் உடன்படிக்கையின் இரத்தத்தை சிந்தின தேவனுடைய குமாரனை அவமதித்து, தனக்குள் விசுவாசத்தைத் தூண்டின கிருபையின் ஆவியை நிந்திக்கிற அவர், கொடிதான ஆக்கினையடையக்கூடும் என்பதையும் எபிரேயர் 10:26-29 வரை உள்ள வசனங்கள் வழியாக அறியலாம்.
இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற ஒருவர், தன்னை இரட்சிக்க தேவன் பாராட்டின சகல கிருபைகளையும் மறந்து, கிறிஸ்துவை மறுதலித்து அழிவுக்கு செல்லக்கூடும் என்பதை எபிரேயர் 6:4-8 வரை உள்ள வசனங்கள் வழியாக அறியலாம்.
இப்படியிருக்க, கிருபையாய் நம்மை இரட்சித்த தேவன், நாம் எப்படி வாழ்ந்தாலும் நம்மேல் கிருபையாகவே இருப்பார். நாம் இரட்சிப்பை இழக்கமுடியாது என்று நினைப்பது ஏற்புடையதல்ல.
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, *கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.*
ரோமர் 5:9
நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், *ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.*
ரோமர் 5:10
என்று சொல்லுகிற பவுல்:
*மாம்சசிந்தை மரணம்:* ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
ரோமர் 8:6
*மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்,* ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
ரோமர் 8:13
என்றும் சொல்லியிருக்கிறதை கவனிக்கவேண்டும்.
🫵 *'கிருபை' எப்படியும் வாழ்வதற்கான அனுமதிச்சீட்டா?*
...., மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது: அப்படியிருந்தும், *பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.*
ரோமர் 5:20
ஆகையால் என்னசொல்லுவோம்? *கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமோ? கூடாதே.*
ரோமர் 6:1
கிருபையானது பாவம் செய்வதற்கான அனுமதிச்சீட்டு அல்ல என்கிறார் பவுல்.
தேவகிருபை நாம் அவபக்தியுள்ளவர்களாயும் லௌகிக இச்சையுள்ளவர்களாயும் இருக்க ஒருபோதும் நமக்கு போதியாது. தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் ஜீவனம்பண்ணி, இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படிக்கே நமக்கு போதிக்கும். (தீத்து 2:11-13)
இப்படியிருக்க, எந்தத்தகுதியும் இல்லாமல் கிருபையினால் இரட்சிக்கப்பட்டவர்கள், தகுதியற்ற ஜீவியம்பண்ணினாலும் இரட்சிப்பை இழக்கமுடியாது என்பது சரியான போதனை அல்ல என்பதை நாம் அறியவேண்டும்!!
க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வந்தபோது, கலிலேயராகிய 12 அப்போஸ்தலர் மட்டுமே அங்கு இருந்தார்கள் என்று இவர் சொல்லுகிறார். அங்கே 120 பேர் இருந்தார்கள் என்று எவ்வாறு நிரூபிப்பது?*
✍️ பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் 12 அப்போஸ்தலர் மட்டுமே என்கிற கருத்தை நிறுவ அந்த போதகர் முயற்சிக்கிறார்.
அதற்கு ஆதாரமாக,
அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் *அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி,* தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
அப்போ.1:3
அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, *அவர்களை நோக்கி;* யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான். *நீங்கள்* சில நாளுக்குள்ளே *பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.*
அப்போ.1:4
ஆகையால் *நீங்கள்* எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் *காத்திருங்கள்* என்று கட்டளையிட்டார்.
அப்போ.1:5
என்கிற வசனங்களை அவர் காண்பிக்கிறார்.
"இயேசுகிறிஸ்து அப்போஸ்தலர்களையே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள எருசலேமில் காத்திருக்க சொன்னார். ஆகவே, பெந்தெகொஸ்தே நாளில் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தவர்கள் (அப்.2:1) அப்போஸ்தலர் மட்டுமே" என்று நினைக்கிற அவர், அன்று 12 அப்போஸ்தலர் மட்டுமே பரிசுத்த ஆவியை பெற்றார்கள் (அப்.2:2-4) என்கிற முடிவுக்கு வருகிறார்.
பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு ஆண்டவர் யாரை எருசலேமில் காத்திருக்கச் சொன்னாரோ, அவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியை பெற்றார்கள் என்றால்: ஆண்டவர் சொல்லும்போது அங்கேயிராத புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அப்போஸ்தலர் மத்தியா (அப்.1:15-26) எப்படி பரிசுத்த ஆவியை பெற்றிருக்கமுடியும்?
இயேசுகிறிஸ்து காத்திருக்க சொல்லும்போது அங்கேயிராத மத்தியா பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளக்கூடுமானால், 120 சீஷர்களில் மற்றவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு அல்லவா?
*"கலிலேயராகிய மனுஷரே,* நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்" என்று தூதர்கள் சொன்னதை வைத்தும்
(அப்.1:10,11), பல தேசங்களிலிருந்து எருசலேமில் கூடியிருந்த யூதர்கள் எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; "இதோ, *பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?* அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?"
(அப்.2:7,8) என்று சொன்னதை வைத்தும், பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் கலிலேயராகிய 12 அப்போஸ்தலர் மட்டுமே என்று அந்த பிரசங்கியார் சாதிக்கிறார்.
அப்போஸ்தலரோடே ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தவர்கள்: ஸ்திரீகளும் இயேசுவின் தாயாகிய மரியாளும், அவருடைய சகோதரரும் ஆவர். (அப்.1:13,14)
அப்போஸ்தலரோடே ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்த ஸ்திரீகள், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்தவர்களாக இருக்கவேண்டும். (மத்.27:55; லூக்கா 23:49,55)
யூதேயாவை சேர்ந்த யூதர்கள்
இயேசுகிறிஸ்துவை கலிலேயராகவே பார்த்தார்கள். (மத்.21:11; லூக்கா 23:5; யோவான் 7:41) அவர்கள்
இயேசுகிறிஸ்துவை கலிலேயராகப் பார்த்திருப்பார்களானால், அவருடைய தாயாரையும் சகோதரரையும் நிச்சயம் அவர்கள் கலிலேயராகவே பார்த்திருப்பார்கள்.
பெந்தெகொஸ் தே நாளில் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசினவர்கள் கலிலேயரானால் (அப். 2:1-7), அவர்களில் இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த ஸ்திரீகளும், இயேசுவின் தாயாரும், அவருடைய சகோதரரும் நிச்சயம் இருந்திருக்கவேண்டும்.
அப்படியானால், பெந்தெகொஸ்தே நாளில் அங்கே நூற்றிருபது சீஷரும் கூடிவந்திருக்கவேண்டும். (அப்.1:15; 2:1)
அப்பொழுது *பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று,* அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்; "யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்" என்று இருப்பதை வைத்து, அங்கே 12 அப்போஸ்தலர் மட்டுமே இருந்திருப்பார்கள் என்பது அந்த பிரசங்கியாருடைய சொந்த கற்பனையாகும்.
பேதுரு பிரசங்கிக்கும்போது பதினொருவரும் அவரோடுகூட நின்றிருக்கிறார்கள். அப்போஸ்தலரல்லாத சீஷர்கள் அமர்ந்து பேதுரு பேசுகிறதை கவனித்திருந்திருக்கக்கூடும்.
அவர்கள் எழுந்து நிற்காததால், அவர்கள் அங்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்கிற முடிவுக்கு வருவது சரியல்ல.
சில நாட்களுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவதற்காக
எருசலேமில் காத்திருக்க ஆண்டவரால் கட்டளை பெற்ற அப்போஸ்தலர்
(அப்.1:4,5), எவரோடும் சேராமல் தனித்து ஜெபித்துக்கொண்டிருக்கவில்லை.
இயேசுகிறிஸ்து பரமேறின அன்றே அவர்கள் எருசலேமுக்கு திரும்பிப்போய்,
மேல்வீட்டில், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தது கவனிக்கத்தக்கது. (அப்.1:12-14)
பரிசுத்த ஆவியைப்பெற எருசலேமில் காத்திருக்கும்படி ஆண்டவர் கொடுத்த கட்டளை தங்களுக்கு மட்டுமே உரியதாக அப்போஸ்தலர்கள் எடுத்துக்கொண்டிருந்தால், அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்திருக்க வாய்ப்பில்லை.
"அந்நாட்களிலே, சீஷர்களில் *ஏறக்குறைய நூற்றிருபதுபேர்* கூடியிருந்தபோது", .... (அப்.1:15) என்கிற வசனத்தையும், "பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, *அவர்களெல்லாரும்* ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்" என்கிற வசனத்தையும்
(அப்.2:1) இப்பொழுது இணைத்துப்பாருங்கள், புரியும்!
மேலும், "கடைசிநாட்களில் நான் *மாம்சமான யாவர்மேலும்* என் ஆவியை ஊற்றுவேன், *அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும்* தீர்கதரிசனஞ்சொல்லுவார்கள். *உங்கள் வாலிபர்* தரிசனங்களை அடைவார்கள். *உங்கள் மூப்பர்* சொப்பனங்களைக் காண்பார்கள்.
என்னுடைய *ஊழியக்காரர்மேலும்,* என்னுடைய *ஊழியக்காரிகள் மேலும்* அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்கதரிசனஞ் சொல்லுவார்கள்" என்று தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது என்று பேதுரு சாட்சியிடுகிறது கவனிக்கத்தக்கது. (அப் 2:16-18)
பெந்தெகொஸ்தே நாளில் நடந்தேறியது யோவேலின்மூலம் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமானால், அன்று பரிசுத்த ஆவியைப்பெற்றது ஊழியக்காரர் மட்டுமல்ல, யூதரின் குமாரரும் குமாரத்திகளும் வாலிபரும் மூப்பரும் அதாவது மாம்சமான யாவரும் ஆவர்.
அப்படியானால், பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியைப் பெற்று வெவ்வேறு பாஷைகளில் பேசினவர்கள் அப்போஸ்தலரும், ஸ்திரீகளும், இயேசுவின் தாயாகிய மரியாளும், அவருடைய சகோதரருமாகிய ஏறக்குறைய
நூற்றிருபது சீஷர்கள் என்பது நிச்சயமல்லவா?
(அப்.1:13-15)
எவர் என்ன போதித்தாலும், அதை கேட்கிறவர்கள், அது வேத அடிப்படையிலானதுதானா என்று ஆராய்ந்துபார்த்து ஏற்றுக்கொள்வது சிறந்தது!!
க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
உலக எழுப்புதல் திட்டத்திற்கு ஆட்களை சேர்த்துவரும் ஒரு பிரபல ஊழியர், எழுப்புதல் திட்டத்தில் சேருகிறவர்களுக்கு அந்நியபாஷை பேசும் பயிற்சியளிக்கிறாரே?
✍️ அந்நியபாஷை பேசுகிறவர்களால் மட்டுமே எழுப்புதல் வரும் என்று அந்த பிரபல ஊழியர் நம்புகிறார் என்று நினைக்கிறேன்.
திருச்சபையார் முதன்முதலில் வெவ்வேறு (அந்நிய) பாஷையில் பேசின பெந்தொகொஸ்தே நாளில் (அப்.2:1-4), பேதுருவினுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு
ஏறக்குறைய மூவாயிரம்பேர்
ஞானஸ்நானம் பெற்று, சபையில் சேர்ந்த சம்பவத்தை (அப்.2:41) அவர் இதற்கு மாதிரியாக எடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.
🫵 *இன்று பேசப்படுகிற அந்நியபாஷைகளால் எழுப்புதல் சாத்தியமா?*
பெந்தெகொஸ்தே நாளில் ஊழியரும் சபையாரும் பேசின அயல்மொழி, அயல்நாடுகள் பலவற்றிலிருந்து வந்திருந்த யூதர்களுக்கு என்ன பேசுகிறார்கள் என்று புரிந்தது. (அப்.2:5-11)
இன்று பல சபைகளின் ஊழியர்களும் விசுவாசிகளும் பேசுகிற அந்நியபாஷை என்னவென்று எவருக்காவது என்றைக்காவது விளங்கியிருக்கிறதா?
நாம் இன்று பேசுகிற அந்நியபாஷையை கேட்கிற எவராவது தாங்கள் பக்திவிருத்தி (எழுப்புதல்) அடைந்ததாக சாட்சிகொடுத்ததுண்டா?
இன்று சபையாரெல்லாரும் ஏகமாய் பேசுகிற அந்நியபாஷைகளை கேட்கிற கல்லாதவர்களும் அவிசுவாசிகளும் நம்மை பைத்தியம் பிடித்தவர்களென்றல்லவா சொல்லுகிறார்கள். (1கொரி.14:23)
நான் இரட்சிக்கப்படாத காலத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பெந்தெகொஸ்தே சபையினர் புரியாத (அந்நிய) பாஷையில் பேசும்போதெல்லாம், "இவர்கள் திடீரென்று பைத்தியம் பிடித்து உளறுகிறார்கள்” என்று எங்களுக்குள் சொல்லிக்கொள்ளுவோம்.
அவர்கள் பேசின அந்நிய பாஷையினால் சபைக்கு அருகிலிருந்த குடும்பங்களில் ஒருவர்கூட தொடப்பட்டதில்லை!
அந்நியபாஷையில் பேசுகிறவர் அர்த்தம் சொல்லாதவரை
(1கொரி.14:13-17)
அல்லது அர்த்தம் சொல்லுகிறவர் இருக்கையில் அந்நியபாஷைகளில் பேசாதவரை (1கொரி.14:27), அருகிலிருப்பவர் எப்படி பக்திவிருத்தியடைவார்?
ஒருவருக்கும் புரியாத வகையில் அந்நிய பாஷைகளைப் பேசி எழுப்புதலைக்கொண்டுவருவோம் என்று சொல்லுகிறவர்களும், அதை நம்புகிறவர்களும் பைத்தியங்களல்லாமல், வேறு யார்?
*சில பைத்தியங்களின் பின்னால் பல பைத்தியங்கள் அலைகிறதுதான் இன்றைய கிறிஸ்தவம் அல்லவா?*
ஆதிசபையாரைப்போல நாம் இன்று அந்நியபாஷை பேசினால் அருகிலிருப்பவர் அசைக்கப்படுவார் என்பதில் துளியும் ஐயமில்லை!
🫵 *அந்நியபாஷையில் பேச பயிற்சியளிக்கிறது சரியா?*
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, *ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.*
அப்போ. 2:4
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் *வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.*
அப்போ.10:44
*அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,*
அப்போ.10:45
பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, *பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.*
அப்போ.10:46
அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, *பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசி,* தீர்கதரிசனஞ் சொன்னார்கள்.
அப்போ.19:6
பரிசுத்த ஆவியைபெற்றபோது ஆதிசபையார் அந்நியபாஷைகளில் பேசிய நிகழ்வுகள் சிலவற்றை மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.
சமாரியாவில் பேதுருவும் யோவானும் செசரியாவில் பேதுருவும், எபேசுவில் பவுலும் அந்நியபாஷையில் பேசுகிறதற்கு விசுவாசிகளுக்கு பயிற்சியளித்ததாகப் பார்க்கமுடிகிறதா?
தயங்காதே.... வாயைத்திற..., மனசுல தோன்றுகிற ஏதோ ஒன்ன பேசு...., ராக்கா மாக்கா லாக்கா ஷக்கா...., ரீபாலா ராபாலா ஷாபாலா...., "ஓகே, நீ அந்நியபாஷை பேசிட்ட, இப்படியே மெயிண்டெய்ன்பண்ணிக்கோ" என்று அவர்கள் சொல்லிகொடுத்தார்களா?
*உண்மையாய் பரிசுத்த ஆவியைப்பெற்ற ஒருவருக்கு அந்நியபாஷைப்பேச எவரும் கற்றுத்தரத் தேவையில்லை.*
அந்நியபாஷை பேசும் வரத்தை ஆவியானவர் எவருக்குத் தருகிறாரோ, அவர் எவரும் சொல்லித்தராமலேயே அந்நியபாஷைகளில் பேசுவார். (அப்.2:4; 1கொரி.12:10,11)
🫵 *போலி ஊழியராலும் கிறிஸ்தவராலும் எழுப்புதல் ஏற்படுமா?*
உண்மையாய் பரிசுத்த ஆவியைப் பெறாதவர்கள்,
வேறொரு ஆவியை பெற்றிருக்கிற (2கொரி.11:4) போலி பிரசங்கிகளால் பயிற்றுவிக்கப்பட்டுப் பேசுகிற பாஷை, உண்மையான அந்நியபாஷை அல்ல.
இந்த போலி அந்நியபாஷையை பேசுகிறவர்களுக்கே பக்திவிருத்தி உண்டாகாதபோது, அவர்களால் எப்படி பிறருக்கு எழுப்புதல் உண்டாகும்?
*தேவனுடைய ஜனங்களில் வேத அடிப்படையில் உண்டாகும் மாற்றமே உண்மையான எழுப்புதல்!*
பரிசுத்த ஆவியைப் பெறவோ, அந்நியபாஷையில் பேசவோ பயிற்சியளிக்கத் தேவையில்லை என்கிற வேதவெளிச்சமற்ற பிரசங்கிகளும், அவர்களால் பயிற்சியளிக்கப்பட்டு, செயற்கையாக வாயில் வந்ததை உளறிக்கொண்டு, அதை அந்நியபாஷை என்று நம்பிக்கொண்டிருக்கிற வேத அறிவற்ற கிறிஸ்தவர்களும் எப்படி எழுப்புதலைக் கொண்டுவரமுடியும்?
*உண்மையாய் ஆவியைப்பெற்று, ஆவியின் வரங்களை நல்லொழுக்கமாயும் கிரமமாயும் பயன்படுத்துகிற கிறிஸ்தவர்களாலேயே சத்திய அடிப்படையிலான எழுப்புதலை (உயிர்மீட்சியை) கொண்டுவரமுடியும்!*
(1கொரி.14:27-33,39,40)
இப்படியிருக்க, அபிஷேக மற்றும் அந்நியபாஷை பயிற்சியாளர்களிடம் கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியமாகும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
சாதாரணமாக ஜெபிக்க இவ்வளவு ரூபாய், அந்நியபாஷையில் ஜெபிக்க இவ்வளவு ரூபாய் என்று எங்க ஊரில் ஒரு ஊழியர் விளம்பர பலகை வைத்திருக்கிறார். அந்நியபாஷை ஜெபத்தில் அப்படியென்ன விசேஷம்?*
✍️ "நம் தாய்மொழியில் ஜெபித்தால் அது சாத்தானுக்கு புரிந்துவிடும், நம் ஜெபம் தேவனிடத்தில் சேராதபடிக்கு அவன் தடுத்துவிடுவான். ஆனால், அந்நியபாஷையில் ஜெபித்தால் அது சாத்தானுக்கு புரியாது. அவனால் அதை தடுக்கமுடியாது. நம் ஜெபம் பத்திரமாய் தேவனிடம் போய் சேரும்" என்று இவர்கள் நினைக்கின்றனர்.
🤔 *அந்நியபாஷை சாத்தானுக்கு தெரியாதா?*
அந்நியபாஷை என்பது உலகம் முழுவதிலும் நமது தாய்மொழியை அறியாதவர் (அந்நியர்) பேசும் மொழியாகும். அதாவது, அந்நியபாஷை என்பது மனுஷர் பேசும் நாம் அறியாத பாஷையாகும். (1கொரி.13:1)
பூமியில் மனுஷர் பேசும் பதினாயிரம் பாஷைகளுக்குமேல் உண்டு. (1கொரி.14:19)
தமிழர்களிடம் சாத்தான் கன்னட மொழியிலா பேசுகிறான்? தமிழில்தானே பேசுகிறான்!
அப்படியே, எல்லா மனுஷரிடமும் அவர்களுடைய தாய்மொழியில், அல்லது அவர்களுக்கு தெரிந்த மொழியில்தானே சாத்தான் பேசுகிறான்!
இப்படியிருக்க, நமக்கு தெரியாத (அந்நிய) பாஷை சாத்தானுக்கும் தெரியாது என்று நினைப்பது அறியாமையல்லவா?
🤔 *தூதர் பாஷை சாத்தானுக்கு புரியாதா?*
"அந்நியபாஷையானது தூதர்பாஷை, அது சாத்தானுக்கு புரியாது. இப்படியிருக்க, தூதர் பாஷையில் ஜெபிக்கும்போது, நாம் ஜெபிக்கிறது அவனுக்கு விளங்காதபடியால், அவனால் நமது ஜெபத்தை தடுக்கமுடியது" என்று சிலர் நினைக்கின்றனர்.
சாத்தான், சாத்தானாகிறதற்கு முன்பு தேவனுடைய தூதனாக இருந்தவனல்லவா? (யூதா 1:6; 2பேதுரு 2:4) அவனுக்கு எப்படி தூதர்பாஷை தெரியாமலிருக்கும்?
ஒருவர் ஒரு பொறுப்பிலிருந்து தள்ளப்பட்டதும், அவர் தனது பாஷையை மறந்துவிடுவாரா?
சாத்தான் தூதனாக இருந்தபோது தான் பேசின வார்த்தையை, தான் தள்ளப்பட்டப்பின்பு மறந்துவிட்டான் என்றோ, அல்லது தேவன் அவன் பாஷையை மறக்கடித்துவிட்டார் என்றோ, அல்லது பரலோகத்தில் உள்ள தூதர்கள் அனைவருக்கும் அவனுக்கு புரியாத ஒரு புதியபாஷையை கொடுத்துவிட்டார் என்றோ வேதம் சொல்லுகிறதா?
தூதர்களின் பாஷை சாத்தானுக்கு மறந்துவிட்டது, இப்பொழுது அவனுக்கு அது தெரியாது என்பதற்கு வேதாகமத்தில் ஒரு ஆதாரமும் இல்லை.
எந்த ஆதாரமும் இல்லாமல் வேதத்தை தங்கள் இஷ்டத்திற்கு புரட்டுகிறவர்களே, தூதர்பாஷையில் ஜெபித்தால் அது சாத்தானுக்கு புரியாது என்றும், தூதர் பாஷையில் ஜெபிக்கும் ஜெபத்தை அவனால் தடுக்கமுடியாது என்றும், தங்கள் பின்னால் திரியும் வேத அறிவற்றக் கூட்டத்திற்கு துணிகரமாய் போதிக்கிறார்கள்!
பிரபல ஊழியர்கள் என்கிற பெயரில் இப்படி வேத அடிப்படையற்ற காரியங்களை பேசுகிறவர்களை பின்பற்றி, அநேகமாயிரம் கபடற்ற போதகர்கள், இவர்களின் வேதப்புரட்டை 'சத்தியம்' என்று நம்பி, தங்களிடம் உள்ள பேதைகளுக்கு அப்படியே போதிக்கிறதையும் காணமுடிகிறது.
எவ்வளவு பிரபலமான பிரசங்கியானாலும், அவரை எத்தனை கோடி கிறிஸ்தவர் பின்பற்றினாலும், வேத அடிப்படையற்றக் காரியங்களை போதிக்கிற மற்றும் செய்கிறவரைவிட்டு விலகுகிற ஒருவர், தனது ஆத்துமாவை காத்துக்கொள்ளமுடியும்!
வேதப்புரட்டரை பின்பற்றுகிறவர்கள் அவர்களோடு அழிவை அறுவடைசெய்யவேண்டியிருக்கும்! (2பேதுரு 2:1-3; 2தெச.2:9-11)
இப்படியிருக்க, "அந்நியபாஷையில் ஜெபித்தால் மட்டுமே சாத்தான் தடைசெய்யமுடியாது" என்று போதிக்கிறவர்களிடமும்; "உங்களுக்காக அந்நியபாஷையில் சிறப்பு ஜெபம் ஏறெடுக்கிறோம், வாருங்கள்" என்று அழைக்கிறவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள்!!
க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
தேவனால் சாத்தான் அறியாத ஒரு பாஷையை தரமுடியாதா? அல்லது தர தேவனிடம் வல்லமை கிடையாதா? சாத்தானுக்கு எல்லா பாஷையும் தெரியும் என்கிற உங்கள் கருத்து தேவனை மட்டுப்படுத்துவதுபோல் உள்ளது. விசுவாசித்து தேவனால் தரப்பட்ட பாஷையை பேசுகிறவர்களை இடறச்செய்யும் கருத்துக்களை தவிர்ப்பது நல்லது அல்லவா?
✍️ தேவனாலே எல்லாம் கூடும்.
(மாற்கு 10:27)
தேவனால் கூடாதக் காரியம் ஒன்றும் இல்லை. (லூக்கா 1:37) அவர் சகலத்தையும் செய்யவல்லவர். அவர் செய்ய நினைத்தது தடைபடாது. (யோபு 42:2)
இப்படியிருக்க, "என் மொழியில் ஜெபித்தால் சாத்தான் என் ஜெபத்தை தடுத்துவிடுவான்" என்பது சாத்தானை தேவனைவிட பெரியவனாக்கி, தேவனை மட்டுப்படுத்தும் பொல்லாப்பு அல்லவா?
*தேவன் ஒருவரின் ஜெபத்தில் பிரியப்பட்டால், அவரை மீறி சாத்தான் அந்த ஜெபத்தை தடுத்துவிடமுடியுமா?*
"உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" என்று வேதம் ஆணிதரமாக சொல்லியிருக்க
(1யோவான் 4:4), அவரை மீறி தன் சொந்தமொழி ஜெபத்தை சாத்தான் தடுத்துவிடுவான் என்று ஒரு கிறிஸ்தவர் சொல்லுகிறது அற்ப விசுவாசமல்லவா?
"சாத்தானுக்கு புரியாத ஒரு பாஷையை உங்களுக்குத் தருவேன். அந்த பாஷையில் ஜெபியுங்கள். தடையில்லாமல் உங்கள் ஜெபம் என்னிடம் வந்துசேரும்" என்று தேவன் வாக்குப்பண்ணினதுண்டா?
சாத்தானுக்கு புரியாத பாஷையை சபைகளுக்கு கொடுத்திருப்பதாக அவர் சொன்னதற்கு வேதத்தில் ஆதாரம் உண்டா?
*தனக்கு புரிந்த பாஷையில் ஜெபித்த ஒருவருடைய ஜெபத்தையாவது சாத்தான் தடுத்ததாக வேதத்தில் காணப்படுகிறதா?*
தானியேலின் ஜெபத்தை சாத்தான் தடுத்துவிட்டதாக சிலர் நினைக்கின்றனர்.
அப்பொழுது அவன் (தூதன்) என்னை நோக்கி: "தானியேலே, பயப்படாதே. நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி *உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது. உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்"* என்று இருக்கிறதை கவனியுங்கள்.
(தானி.10:12)
தானியேலுக்கு தேவனிடத்திலிருந்து பதிலை கொண்டுவந்த தேவதூதனை தடுக்க பிசாசு போராடினானேயல்லாமல், தானியேலின் ஜெபம் தேவனிடத்தில் சேராதபடிக்கு சாத்தான் தடைசெய்யவில்லை. மேலும், பதிலை கொண்டுவந்த தூதனை தடுத்து பிசாசு திருப்பி அனுப்பிவிடவில்லை. மிகாவேலின் உதவியோடு பிசாசை மேற்கொண்டு, தானியேலிடம் பதிலை கொண்டுவந்து சேர்த்தான் தேவதூதன். (தானி.10:12-14)
தானியேலுக்கு பதிலை கொண்டுவந்த தேவதூதனை பிசாசு தடுக்க முயன்றதற்கு, அவர் தனது சொந்தமொழியில் ஜெபித்ததுதான் காரணம் என்று எங்கும் சொல்லப்படவில்லை.
*ஜெபிக்கிறவரின் மொழியல்ல, ஜெபிக்கிறவரே தன் ஜெபம் தேவனிடத்தில் சேராததற்கு காரணமாக இருக்கிறார்!*
வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய *ஜெபமும் அருவருப்பானது.*
நீதி.28:9
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், *ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.*
சங்கீதம் 66:18
இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் *கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை,* கேட்கக்கூடாதபடிக்கு *அவருடைய செவி மந்தமாகவுமில்லை.*
ஏசாயா 59:1
*உங்கள் அக்கிரமங்களே* உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது, *உங்கள் பாவங்களே* அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஏசாயா 59:2
தகுதியில்லாமல் ஜெபிக்கிற ஒருவனே தன் ஜெபம் தேவனிடம் சேராதபடிக்கு தடையாய் இருக்கிறான் என்பதை மேற்காணும் வசனங்கள் வழியாக அறியலாம்.
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். *நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.*
யாக்.5:16
*எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும்,* மழைபெய்யாதபடிக்குக் *கருத்தாய் ஜெபம்பண்ணினான்,* அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
யாக்.5:17
*மறுபடியும் ஜெபம்பண்ணினான்,* அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
யாக்.5:18
எளிய மனிதரானாலும் நீதிமான்கள் செய்யும் ஊக்கமான வேண்டுதல் தேவனிடத்திற்கு ஏறிசெல்லுமளவுக்கு மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்பதை மேற்காணும் வசனங்களின் வழியாய் அறியலாம்.
இப்படியிருக்க, "நமது ஜெபம் தம்மிடத்திற்கு தடையில்லாமல் வந்துசேர, தேவன் சாத்தானுக்கு புரியாத ஒரு மொழியை நமக்கு கொடுத்திருக்கிறார்" என்று புது கதையை சொல்லுகிறவர்களிடம் கவனமாக இருங்கள்!
.... அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், *அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே,* அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
1கொரி.14:2
ஒருவர் அந்நியபாஷையில் ஆவியினாலே தேவனிடத்தில் இரகசியங்களைப் பேசுகிறதை மனுஷரில் ஒருவரும் அறியமுடியாது என்று பவுல் மேற்காணும் வசனத்தில் சொல்லுகிறாரேயல்லாமல், அது சாத்தானுக்கு புரியாது என்று சொல்லவில்லை என்பதை நாம் அறியவேண்டும்.
வசனத்தை அவசரமாய் வாசித்து, அறைகுறையாய் புரிந்துகொண்டு, "ஆவியானவர் வெளிப்படுத்தினார்" என்று தங்கள் புத்தியில் தோன்றுகிறபடியெல்லாம் பிதற்றுகிற வேதப்புரட்டர்களிடம் தேவஊழியரும் தேவபிள்ளைகளும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!
சத்திய ஆவியானவர் சத்தியத்தில் நடத்துவாரேயல்லாமல், சத்திய அடிப்படையற்றக் காரியங்களில் ஒருபோதும் நடத்தவேமாட்டார்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this