=========================
இரு ஊழியர்கள் பேசிக்கொள்கிறார்கள்
=========================
[ஊழிய அழைப்பு, ஊழியம், சபை, சபை நிர்வாகம் பற்றி சத்தியத்தின்படி அறிந்துகொள்ளும் விருப்பமுள்ளவர்கள் மட்டும் இதை வாசிக்கவும்]
📞 ப்ரெய்ஸ் த லார்ட் ஐயா!
📞 ப்ரெய்ஸ் த லார்ட்.... நீங்க?
📞 *நான் தஞ்சாவூரிலிருந்து பாஸ்டர் கென்னடி பேசறேன், நல்லா இருக்கீங்களா?*
(ஊரும் பேரும் மாற்றப்பட்டுள்ளது)
📞 தேவகிருபையால நல்லாருக்கிறேன் ஐயா, நீங்க எப்படி இருக்கீங்க?
📞 *தேவகிருபையால நானும் நல்லா இருக்கேன் ஐயா.*
📞 என்ன விஷயமா கூப்பிட்டீங்க ஐயா?
📞 *வாட்ஸ்ஆப்பில் உங்க பதிவு ஒன்ன பார்த்தேன். ரொம்ப பிரயோஜனமா இருந்துச்சி. அதான் பேசலாம்ன்னு கூப்பிட்டேன்.*
📞 நன்றி ஐயா, தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்!
📞 *நீங்க என்ன ஊழியம் செய்றீங்க ஐயா?*
📞 நான் போதகரா இருக்கிறேன் ஐயா.
📞 *சபை ஊழியம் இல்லையா?*
📞 நான் சபை ஊழியம்தான் செய்றேன் ஐயா.
📞 *பாஸ்டரா இருக்கீங்களா?*
📞 பாஸ்டரா இல்ல, போதகாரா இருக்கேன்.
📞 *பாஸ்டரா இல்ல போதகாரா இருக்கேங்கிறீங்க, சபை ஊழியம் செய்றேன்னும் சொல்றீங்க, ஒன்னுமே புரியலியே?*
📞 போதகர் செய்யறது சபை ஊழியம் இல்லீங்களா ஐயா?
📞 *பாஸ்டர் செய்யறதுதானே சபை ஊழியம்?*
📞 தேவன் சபைக்கு எத்தனைவிதமான ஊழியர்களை ஏற்படுத்தியிருக்கிறதா எபேசியர் 4:13 சொல்லுது ஐயா?
📞 *தேவன் சபைக்கு சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தியிருக்கிறதா சொல்லுது ஐயா.*
📞 பைபிள்படி அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர், போதகர் செய்கிறதும் சபை ஊழியம்தான்னு ஒத்துக்குறீங்களா ஐயா?
📞 *அவங்க பைபிள்படி ஊழியஞ்செஞ்சா ஒத்துக்கலாம் ஐயா.*
📞 பொதுவா இன்னைக்கு இருக்கிற பாஸ்டர், அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர், போதகருங்க செய்யற ஊழியங்களுக்கும் பைபிளுக்கும் பெரும்பாலும் தொடர்பு இல்லீங்களே ஐயா?
📞 *அப்பிடியா சொல்றீங்க?*
📞 ஆதிசபை ஊழியர்களையும் ஊழியங்களையும் பத்தி நீங்களே பைபிள்ல படிச்சிபாத்தா உங்களுக்கு உண்ம புரியவரும்!
📞 *நான் சுவிசேஷகரா இருந்தப, நான் செய்யறது சபை ஊழியம் இல்லன்னு பாஸ்டருங்க சொன்னாங்க, அத நானும் நம்பிக்கிட்டிருந்தேன் ஐயா?*
📞 பாஸ்டருங்க அப்படி சொன்னது தப்பு, அத நம்பனது உங்கதப்பு ஐயா.
📞 *சுவிசேஷ ஊழியமும் சபை ஊழியந்தாங்கிறத கொஞ்சம் வௌக்கமா சொல்லுங்க ஐயா.*
📞 சுவிசேஷம் அறிவிக்காவிட்டால் சபை உருவாகுமா?
📞 *உருவாகாது.*
📞 சபையை உருவாக்குற ஊழியத்தையே சபை ஊழியம் இல்லங்கிறது அநியாயம் இல்லையா?
📞 *அநியாயத்துலும் அநியாயங்கய்யா!*
📞 ஒரு பாஸ்டரா இருக்கிற நீங்க இத அநியாயம்ன்னு ஒத்துகிட்டதுல ரொம்ப சந்தோஷம் ஐயா!
📞 *ஆமாம், சபை ஊழியம் செய்றேன்ங்குறீங்க? உங்களுக்கு சொந்தமா சபை இருக்குங்குளா?*
📞 உங்களுக்கு சொந்தமா சபை இருக்குங்குளா?
📞 *ஆமாம், நான் சொந்தமா சபை வச்சிருக்கேன்.*
📞 சபை உங்களுக்கு சொந்தமானதா? இல்ல தேவனுக்கு சொந்தமானதா?
📞 *சபை தேவனுக்குத்தான் சொந்தமானது ஐயா.*
📞 அப்படினா, அஞ்சிவிதமான ஊழியர்ல எவரும், தேவனோட சபையை தங்கள் சபையின்னு உரிமபாராட்டமுடியாது இல்லீங்களா?
📞 *உரிமபாராட்டமுடியாது ஐயா.*
📞 ஆதிசபை ஊழியர்ல ஒருத்தராவது சபை தங்களுக்கும், தங்க குடும்பத்துக்கும் மட்டுமே சொந்தமானதுன்னு உரிமபாராட்டினதுண்டா?
📞 *ஒருத்தரும் உரிமபாராட்டினதில்ல ஐயா.*
📞 ஊழியத்த லாபகரமான தொழிலா நெனச்சிருந்தாங்கனா, ஆதிசபை ஊழியரும் தேவனுடைய சபையை, ஊழிய ஸ்தாபனத்தை தங்கள் குடும்பசொத்தா உரிமபாராட்டியிருப்பாங்கய்யா.
📞 *உண்மதாங்கய்யா! இன்னிக்கு கணவன், மனைவி, பிள்ளைங்க, பேரபிள்ளைங்க, கொள்ளுபேரப்பிள்ளைங்க, எள்ளுபேரபிள்ளைங்கன்னு, தேவனுடைய சபையை ஊழியக்காரருடைய குடும்பம் மட்டுமே தொடர்ந்து ஆளுக செய்யறதும், ஆஸ்திகளில் பெரும்பகுதியை அவங்களே அனுபவிக்கிறதும், புதிய ஏற்பாட்டு சபையில எங்குமே காணப்படாத அநியாயமா இருக்குதே?*
📞 இத தேவசித்தம், ஆவியானவரின் நடத்துதல் என்றெல்லாம் பூசி மொழுகி, விசுவாசிகளை நம்பவைக்கிறதுதான் வேதனையா இருக்கு ஐயா. ஆதிசபை ஊழியர்ல ஒருத்தராவது இப்படி செஞ்ச வரலாறு உண்டா?
📞 *இன்னிக்கி எல்லா அழைப்புள்ள ஊழியரும் அவங்க ஆரம்பிக்கிற சபையை, ஸ்தாபனத்தை, ஊழியத்தை அவங்க குடுப்பத்தாருகிட்டத்தானே கொடுக்கிறாங்க? இதுல பாஸ்டருங்கள மட்டும் எப்படி குத்தஞ்சொல்லமுடியும்?*
📞 சபை நிர்வாகத்தை, ஊழியத்தை, ஊழிய அழைப்பை குறித்து சத்திய அடிப்படையிலான அறிவுள்ள எந்த அழைப்புள்ள ஊழியரும் நிச்சயம் அப்படிச் செய்யமாட்டாங்கய்யா.
📞 *ஊழியக்காரருங்க குடும்பத்தார் ஊழியஞ்செய்யக்கூடாதா?*
📞 அப்போஸ்தலர் 21:9; 1கொரிந்தியர் 9:5ன்படி, ஊழியக்காரரின் குடும்பத்தாரும் ஊழியத்தில் பங்குபெறலாம். ஆனால் ஊழியரின் குடும்பத்தார் மட்டுமே சபையில், ஸ்தாபனத்தில் முக்கியமான இடத்தில் இருந்து ஊழியம் செய்யறது வேதஅடிப்படையற்றக் காரியமாகும்.
📞 *அப்படினா அப்போஸ்தலரின் மனைவி பிள்ளைகள் அப்போஸ்தலராகவும், தீர்க்கதரிசியின் மனைவி பிள்ளைகள் தீர்க்கதரிசிகளாகவும், சுவிசேஷகரின் மனைவி பிள்ளைகள் சுவிசேஷகர்களாகவும், பாஸ்டரின் மனைவி பிள்ளைகள் பாஸ்டர்களாகவும், போதகரின் மனைவி பிள்ளைகள் போதகர்களாகவும், அவர்களுடைய ஊழியத்தைத் தொடருவது வேதத்துக்கு எதிரானதுங்கறீங்களா?*
📞 அப்படி ஒரு மாதிரிய நீங்க புதிய ஏற்பாட்டு சபையில காட்டிட்டீங்கன்னா, இது வேதத்தின்படியான ஊழியம்ன்னு நான் ஒத்துக்குறேன் ஐயா.
📞 *ஊழியக்காரங்க குடும்பத்தார் ஊழியம் செய்யாவிட்டால் அவருடைய ஊழியத்த தொடர்ந்து யார் செய்வது ஐயா?*
📞 தங்கள் குடும்பத்தார் உட்பட, 1கொரிந்தியர் 12:7-10-ன்படி ஆவியின் வரங்களையும், ரோமர் 12:6-8-ன்படி கிருபைவரங்களையும் உடைய விசுவாசிகளிடம் பொறுப்புகளை ஊழியக்காரங்க பாரபட்சமில்லாம பகிர்ந்துகொடுக்கனும். அடுத்தத் தலைமுறை ஊழியர்களாக அவர்களில் தேவன் தமக்கு சித்தமானவர்களை தெரிஞ்சிக்குவார். நமக்கு பின்னால ஊழியத்த யாரு பாப்பாங்கன்னு ஊழியக்காரங்க கவலப்படவேண்டியதில்ல.
📞 *என்ன இருந்தாலும் ஊழியக்காரங்களோட குடும்பத்தாரப் போல அவரோட ஊழியத்த வேறயாரும் தரிசனத்தோட, பாரத்தோட செய்யமுடியாது இல்லீங்களா?*
📞 என் குடும்பத்தார விட்டா, இந்த ஊழியத்த தொடர்ந்து செய்ய தேவனுக்கு வேற ஆளே கெடையாதுன்னு நெனைக்கிறது, ஊழியக்காரர் தன்னை ஊழியத்துக்கு அழைச்ச தேவனை கேவளப்படுத்தறதா தெரியலீங்களா ஐயா.
📞 *ஊழியக்காரங்க தங்களுக்கு வேண்டிய ஊழியக்காரங்க சிலர அழைச்சி, தங்கள் குடும்பத்தார ஊழியர்களா பிரதிஷ்டைப்பண்ணி, அவங்ககிட்ட தங்கள் ஊழியத்தையும், ஊழியத்தினால் வந்த ஆஸ்திகளையும் ஒப்புவிக்கிறத தப்புங்கிறீங்களா?*
📞 ஊழியத்தையும் ஆஸ்தியையும் தேவனிடத்திலிருந்து பெறாமல், ஊழியரான தங்கள் பெற்றோரிடமிருந்து பெற்றவர்கள், அவைகளை தங்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கிறது தவறில்ல. ஆனா தேவனிடத்திலிருந்து பெற்றதா பெருமிதங்கொள்றவங்க, அதை தேவனுக்கு சித்தமான எவருகிட்டயும் ஒப்புவிக்க ஆயத்தமா இருக்கனும் ஐயா.
📞 *நீங்க சொல்றது சரியானாலும் நடைமுறையில் இது சாத்தியமாகுமா?*
📞 சத்தியதை நடைமுறைப்படுத்த அழைக்கப்பட்டிருக்கி நாம், இது சாத்தியமில்லைங்கறது நியாயமாகுமா?
📞 *ஆசாரியனும் அவனுடைய பிள்ளைகளும் தேவாலயத்தில் ஊழியம் செய்யனும்ன்னு கட்டளை இருக்குதுங்களேய்யா?*
📞 நாம செய்கிறது பழைய ஏற்பாட்டு ஆசாரிய ஊழியம் இல்ல, நம்முடைய புது உடன்படிக்கையின் ஊழியத்துக்கும், ஆசாரியர்களின் பழைய உடன்படிக்கையின் ஊழியத்திற்கும் கொஞ்சமும் தொடர்பில்லங்கிறத 2கொரிந்தியர் மூனாம் அதிகாரத்த முழுசா படிச்சா புரிஞ்சிக்கலாம். மேலும் நாம லேவிகோத்திரத்து ஆசாரியரல்ல. இன்றைய சபை ஊழியமும் பழைய ஏற்பாட்டு ஆசாரிய ஊழியமும் ஒன்னுனா, ஆசாரிய ஊழிய முறைமையின்படி ஊழியக்காரரின் மனைவி, மகள், மறுமகள், பேர்த்தி, சபையில ஊழியம் செய்யமுடியாது.
இஸ்ரவேலரான ஆதி அப்போஸ்தலரில் ஒருவரும் ஆசாரிய ஊழிய முறையை பின்பற்றி, தேவனுடைய சபையை குடும்பமாய் ஆக்கிரமித்துக்கொண்டதாகக் காணமுடியாது. மேலும் ஊழியக்காரரின் மனைவி பிள்ளைங்க இங்கற ஒரே காரணத்தால அவங்களும் ஊழியக்காரங்களாகிடறதா நாம புதிய ஏற்பாட்டு சபையில ஒரு எடத்துலயும் பாக்கமுடியாது ஐயா.
📞 *ஒரு ஊழியக்காரருக்கு பின்னால, அவரு குடும்பம் நடுத்தெருவுல நிக்கனும்ங்கிறீங்களா?*
📞 ஊழியக்காரருடைய குடும்பதுக்கான உணவு, உடை, உறைவிடம், மருத்துவம், பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற நியாயமானத் தேவைகளை சபை சந்திக்கவேண்டும். ஊழியரின் குடும்பத்தில் ஊழிய அழைப்புள்ள யாராகிலும் இருந்தா, அவங்களையும் ஊழியத்துல சேத்துக்கனும். ஊழிய அழைப்பில்லாத ஊழியக்காரரின் மனைவி பிள்ளைகள் வேலைசெஞ்சி பிழைச்சிக்கனும். பிள்ளைகள் இல்லாத ஊழியரையும் அவருடைய துணைவியாரையும், கணவன் மற்றும் பிள்ளைகள் இல்லாத ஊழியரின் துணைவியாரையும் இறுதிவரை சபையார் பராமரிக்வேண்டும். பிள்ளைகளற்ற விதவையான ஊழியரின் துணைவியாரை, அவங்களுக்குள்ள கிருபையின்படியான ஊழியத்த செய்ய அனுமதிக்கலாம். ஆனா சபை அல்லது ஸ்தாபனம் அவங்க தலைமைல இயங்க ஒப்புவிக்கக்கூடாது. அது சபைக்கும் ஸ்தாபனத்துக்கும் சத்தியத்தின்படியான ஆசீர்வாதமாயிராது. இதுக்கு வேதத்திலயும் மாதிரி கிடையாது!
📞 *ஊழியம், சபை எல்லாம் தேவனுக்கு சொந்தமானதுனா, அஞ்சிவிதமான ஊழியரும் சபைக்கு என்னவா இருக்கோம் ஐயா?*
📞 நாம எல்லாரும் தேவனுடைய சபைக்கு அவரோட வேலக்காரங்களா இருக்கோம் ஐயா.
📞 *பாஸ்டருங்க செய்யறது மட்டுமே சபை ஊழியம் இல்லங்கிறதுல உறுதியா இருக்கீங்களே ஐயா?*
📞 1 கொரிந்தியர் 3:5-9-ல சபையார் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாய் இருப்பதாகவும், அஞ்சிவிதமான ஊழியரும் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருப்பதாகவும் வேதம் சொல்லும்போது: "நாங்க செய்யறது மட்டும்தான் சபை ஊழியம்" என்று பாஸ்டருங்க சொல்றது தப்புதானே ஐயா?
📞 *நான் சுவிசேஷகரா இருந்தப்ப, சுவிசேஷகர் பாஸ்டருக்கு கீழ அடங்கியிருக்கனும்னு சொல்லி, ஏறக்கொறைய எங்க பாஸ்டர் என்ன ஒரு அடிமையாவே வச்சிருந்தார் ஐயா. அவர் வாய்ப்பு கொடுத்தா மட்டுமே சபைல செய்திகொடுக்கனும், அவர் அனுமதிச்சா மட்டுமே விசுவாசிகளின் வீடுகளுக்கு போகனும், அவர் அனுமதிச்சா மட்டுமே எவருக்கும் ஜெபிக்கனும், அவர் சொல்ற எடத்துல மட்டுமே ஒக்காரனும், அவர் சொல்ல வேலைகளையெல்லாம் செய்யனும், அவரு போட்ற சோத்ததான் சாப்பிடனும், அவர் கொடுக்குற காணிக்கைய சத்தமில்லாம வாங்கிக்கனும். சொந்தமா ஒன்னையும் யோசிக்கமுடியாது, செய்யவும் முடியாது ஐயா.*
📞 புதிய ஏற்பாட்ட எத்தனமுற வாசிச்சிருக்கீங்க ஐயா?
📞 *நாளஞ்சிமுற வாசிச்சிருக்கேன் ஐயா.*
📞 ஆதிசபையில எங்கேயாச்சியும் ஒரு சுவிசேஷகர், ஒரு பாஸ்டரின் கீழ அடங்கியிருந்ததா புதிய ஏற்பாட்டுல படிச்சிருக்கீங்களா?
📞 *புதிய ஏற்பாட்டுல ஒரு எடத்திலயும் அப்படி இல்லீங்கையா.*
📞 இப்படியிருக்க, சுவிசேஷகருங்க தங்களுக்குக் கீழ அடங்கியிருக்கனும்னு இப்ப பாஸ்டருங்க எதிர்பாக்கறது சரியா?
📞 *பைபிள்படி சரியில்லீங்க ஐயா. நான் சுவிசேஷகரா இருந்தப்போ எங்கோ இருந்து இன்னொரு பாஸ்டர கூப்ட்டு எங்க பாஸ்டர் ஞானஸ்நானம் கொடுப்பார். அவரோடு சேர்ந்து திருவிருந்து கொடுப்பார். இரண்டிலும் என்ன ஒதுக்கிவச்சிடுவார்!*
📞 பாஸ்டருங்க மட்டும்தான் ஞானஸ்நானம் கொடுக்கனும், திருவிருந்து கொடுக்கனும்னு பைபிள் சொல்லுதுங்களா ஐயா?
📞 *அப்படித்தானே சொல்லிகிட்டிருக்காங்கய்யா?*
📞 புதிய ஏற்பாட்டு சபையில பிலிப்பு, அனனியா, யோப்பா சபை சகோதரர் ஆகிய விசுவாசிகள் ஞானஸ்நானம் கொடுத்ததா அப்போஸ்தலர் 8:12,13; 9:10,17,18; 22:12-16; 10:46-48-ல சொல்லப்பட்டிருக்குதே ஐயா?
📞 *உண்மையாவா சொல்றீங்க?*
📞 பைபிள் பொய் சொல்லாது ஐயா.
📞 *ஆச்சரியமா இருக்கே! இத யாரும் நமக்கு சொல்லிக்குடுக்கலியே ஐயா?*
📞 நம்ம பாஸ்டருங்க அத சரியா கவனிக்கல, கவனிச்சிருந்தா நிச்சயம் சொல்லிக்குடுத்திருப்பாங்க.
📞 *இதையெல்லாம் படிச்சே இருக்கமாட்டாங்களா ஐயா?*
📞 விசுவாசிகளால் ஊழியர்களுக்கு இணையாக அற்புதங்களை செய்யமுடியும், சுவிசேஷம் அறிவிக்கமுடியும், சபை ஸ்தாபிக்கமுடியும், சபையை நடத்தமுடியும் என்று அப்போஸ்தலர் 6:8; 8:5-7; 8:4; 11:19-21; 11:22-26-ல சொல்லப்பட்டிருக்கிறத, நம்ம பாஸ்டர்களில் பலபேர் படிச்சிருப்பதா தெரியலியே ஐயா?
📞 *இத்தன காலம் இத பலர் தெரியாமலேயே இருந்துட்டோம் ஐயா?*
📞 இப்ப தெரிஞ்சிடுச்சில்ல, இனிமே சரியா ஊழியம் செய்ங்க.
📞 *எல்லா ஊழியமும் சபைக்குள்ள இருக்கிறதுதானே சரி. அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் சபைக்கு வெளியே ஊழியஞ்செய்யறது சரிங்களாய்யா?*
📞 உங்க கேள்வி நியாயமானதுதான் ஐயா. உங்கள் வேண்டுகோளை ஏற்று, மற்ற அழைப்புள்ள ஊழியருங்க சபைக்குள்ள வந்துட்டா, பாஸ்டருங்க எந்த எடத்துல இருப்பீங்க?
📞 *நீங்க கேக்கறது புரியலங்கய்யா!*
📞 அஞ்சிவிதமான ஊழியரும் சேர்ந்து ஒரு சபையை நடத்தும் சூழல் வந்தா, எபேசியர் 4:13ன்படியும், 1கொரிந்தியர் 12:28ன்படியும் சபை நிர்வாகத்துல பாஸ்டருங்க நான்காவது எடத்துக்கு போய்டனும். அது பரவாயில்லையா?
📞 *அப்படினா, இனிமே பாஸ்டருங்க சபைல மொத எடத்துல இருக்கமுடியாதா? சபை நிர்வாகத்துல அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், போதகர்களுக்கு அடுத்துதான் பாஸ்டருங்க வருவாங்களா?*
📞 பைபிள்ல அப்படித்தான் இருக்குது ஐயா.
📞 *அப்படினா, பாஸ்டருங்க மத்த ஊழிய அழைப்புள்ளவங்கள அடக்கியாளமுடியாது, பாஸ்டருங்க மட்டுமே காணிக்கை தசமபாகத்த வாங்கமுடியாது, பாஸ்டருங்க மட்டுமே விசுவாசிகளுக்கு ஜெபிக்கமுடியாது, பாஸ்டருங்க மட்டுமே அதிகமாய் பிரசங்கம்பண்ணமுடியாது, பாஸ்டருங்க மட்டுமே ஞானஸ்நானம் திருவிருந்து கொடுக்கமுடியாது, பாஸ்டருங்க தங்க இஷ்டப்படி தங்க குடும்பத்தார சபை ஊழியத்துல வைக்கமுடியாது, சபையையும் சபையினால வந்த ஆஸ்தியையும் தங்கள் குடும்பத்தார்கிட்ட ஒப்படைசிட்டுப் போகமுடியாது! அப்படித்தானே?*
📞 அப்படித்தான் ஆகும் ஐயா. அஞ்சிவித ஊழியர்கள் ஒரு சபையை நடத்தும்போது, பாஸ்டர் மட்டுமே எப்படி சபையை தனக்கும் தன் குடும்பத்துக்கும் சொந்தமானதா உரிமகொண்டாடமுடியும்? நாளாவது எடத்துல இருக்கிற பாஸ்டர் சபையை தன்னுடையதா உரிமகொண்டாடினா, மொதல் எடத்துல இருக்கிற அப்போஸ்தலரு அவரவிட அதிகமா உரிமகொண்டாடலாம் இல்லீங்களா?
📞 *இன்னிக்கி சபையில் மொதல் எடத்தப் பிடிச்சிக்கிட்டிருக்கிற பாஸ்டருங்க, அத விட்டுவிட்டு வசனத்தின்படி நாளாவது எடத்துக்கு போவது சாத்தியமா?*
📞 அதுக்கு சாத்தியமில்லனா, மீதி நாளுவிதமான ஊழியரும் பாஸ்டருங்களோட சேர்ந்து சபையை நடத்தறதுக்கு இன்னிக்கி சாத்தியமே இல்ல ஐயா.
📞 *பாஸ்டருங்க சபையில் மொதல் எடத்துல இருக்கிறதால மற்ற அழைப்புள்ளவங்களுக்கு என்ன பிரச்சனை ஐயா?*
📞 "சபைக்கு வெளியியில இருக்கிற மத்த அழைப்புள்ளவங்க எல்லாரும் சபைக்குள்ள வாங்க. ஆனா நாங்கள் உங்க எடத்த உங்களுக்கு தரமாட்டோம். உங்கள் அழைப்புக்கேற்ற கனத்தையும் பணத்தையும் தரமாட்டோம்" என்பது எந்தவிதத்தில் நியாயம் ஐயா?
📞 *அஞ்சிவிதமான ஊழியரும் ஒரே குடும்பத்த சேர்ந்தவங்களா இந்துட்டா பிரச்சனையே இல்லை?*
📞 ஒரே குடும்பத்த சேர்ந்தவங்க மட்டுமே அஞ்சிவிதமான ஊழியராக இருந்த ஒரு சபையை உங்களால வேதத்துல காட்டமுடியுமா? அல்லது
ஒரு சபையில் இருந்த ஒரே குடும்பத்த சேர்ந்த அஞ்சிவிதமான ஊழியரை உங்களால வேதத்துல காட்டமுடியுமா?
📞 *முடியாது ஐயா!*
📞 "எங்கள் குடும்பத்தாரே அஞ்சிவிதமான ஊழியத்தையும் செய்வோம்" என்று ஒரு ஊழியக்காரர் சொல்லுவாரானால், சபையாரின் காணிக்கையும் அதனால வரும் ஆஸ்தியும் தனது குடும்பதுக்கு மட்டுமே சேரனும்ங்கிற பேராசையைவிட உன்னதமான ஆவிக்குரிய நோக்கம் ஒன்னும் இருக்க வாய்ப்பு இல்ல ஐயா!
📞 *பாஸ்டர்களே அப்போஸ்தலராகவும், தீர்க்கதரிசியாகவும், சுவிசேஷகராகவும், போதகராகவும் இருக்கிறோம்ங்கிறது உங்களுக்குத் தெரியுமா?*
📞 அப்படியிருந்த ஒரு பாஸ்டரை புதிய ஏற்பாட்டு சபையில உங்களால காட்டமுடியுமா? சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தின தேவனைவிட பாஸ்டர்மாருங்க பெரிய ஞானிகளா? இது தேவனுக்கு எதிரான துணிக்கரம் ஐயா!
📞 *பாஸ்டருங்கத்தானே சபையை ஆரம்பிக்கிறோம், நடத்துறோம், விசுவாசிகளை கூடவே இருந்து விசாரிக்கிறோம். மத்த அழைப்புள்ளவங்களவிட நாங்கதானே அதிகமா பிரயாசப்படறோம்?*
📞 அஞ்சிபேரு சேர்ந்து சுமக்கவேண்டிய பாரத்த நீங்கமட்டுமே சுமந்துகிட்டு, நாங்கமட்டுமே அதிகமா கஷ்டப்படறோம்ங்கிறது எந்தவிதத்தில நியாயம் ஐயா? சபையாரின் பாரத்த சுமக்கிறது நீங்கமட்டும்னா, அவங்க காணிக்கை தசமபாகத்த அனுபவிக்கிறதும் நீங்கமட்டும்தானே?
📞 *ஒரு சபையை ஆரம்பிச்சி நடத்திப்பாருங்க அப்பத்தெரியும்!*
📞 பாஸ்டருங்கள சபையை ஆரம்பிக்கச் சொன்னது யாருங்க ஐயா? 1தீமோத்தேயு 3:1-7; அப்போஸ்தலர் 20:28; தீத்து 1:5-ன்படி, அப்போஸ்தலர் மற்றும் சுவிசேஷகருங்க ஆரம்பிச்சிக் கொடுக்கிற சபையை பாஸ்டருங்க நடத்தினா போதுங்க. அப்போஸ்தலர் மற்றும் சுவிசேஷகருக்கும் பங்கு பிரிச்சிக் கொடுக்கவேண்டியிருக்குங்கிறதுக்காக அவங்கள பக்கத்துல வரவிடாதது யாருகுத்தம் ஐயா?
விசுவாசிகளே சபையை ஆரம்பிக்கமுடியும்னு அப்போஸ்தலர் 11:19-21-ல பாக்கலாம். இப்படியிருக்க, சபையை ஆரம்பிக்கிறது பாஸ்டர்களின் அரும்பெரும் சாதனைன்னு நெனச்சிகிட்டு, மத்த அழைப்புள்ளவங்கள பாத்து, "சபையை ஆரம்பிச்சி நடத்திப்பாருங்க" என்று பாஸ்டருங்க சவால்விடுறத பாத்தா சிரிப்புதான் வருது ஐயா. எல்லா அழைப்புள்ளவங்களுக்கும் சபையை ஆரம்பிவும் நடத்தவும் தேவன் கிருபையளிச்சிருக்காருங்கிறத பாஸ்டருங்க எப்பத்தான் புரிஞ்சிக்குவீங்களோன்னு தெரியல ஐயா!
📞 *அப்படினா, ஒவ்வொரு சபையிலும் கட்டாயம் அஞ்சிவிதமான ஊழியர்களும் இருக்கனுமா ஐயா?*
📞 அஞ்சிவிதமான ஊழியர்களில் ரண்டு அல்லது மூனுவித அழைப்புள்ள ஊழியருங்க சேர்ந்து ஒரு சபையை நடத்தலாம். மற்ற அழைப்புள்ளவங்கள அவ்வப்போது அழைச்சி பயன்படுத்திக்கலாம். சாத்தியமானால் அஞ்சிவிதமான ஊழியரும் ஒரே சபையை நடத்தலாம் ஐயா.
📞 *இதுக்கு வேதத்துல ஆதாரம் இருக்கா ஐயா?*
📞 எருசலேம் சபையை அஞ்சிவிதமான ஊழியர்களும் நடத்தியதாக அப்போஸ்தலர் 1:26; 11:27; 15:2,32,33-ன் அடிப்படையில் சொல்லப்படுகிறது. அந்தியோகியா சபையை முதலில் விசுவாசிகளாக இருந்து பர்னபாவும் பவுலும் நடத்தியதையும், பின்பு பர்னபா, சிமியோன், லுகி, மனாயீன், சவுல் (பவுல்) ஆகியோர் தீர்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்து நடத்தியதையும்
அப்போஸ்தலர் 11:22-26 மற்றும் 13:1-ல பார்க்கலாம். அகபு, யூதா, சீலா போன்ற தீர்க்கதரிசிகள் எருசலேம் சபையிலிருந்து சென்று அந்தியோகியா சபையை ஸ்திரப்படுத்தியதை
அப்போஸ்தலர் 11:27 மற்றும் 15:32-34-ல பார்க்கலாம். அப்பொல்லோ என்னும் போதகன் பல சபைகளை விசிட்பண்ணி சத்தியநீர்பாய்ச்சி, சபை வளரப் பிரயாசப்பட்டதை 1கொரிந்தியர் 3:5-9; 16:12 மற்றும் தீத்து 3:13-ல பார்க்கலாம்.
📞 *சுவிசேஷகர்கள் சபையை நடத்தலாமா?*
📞 பேதுரு ஸ்தாபித்த செசரியா சபையை பிலிப்பு என்கிற சுவிசேஷகன் கண்காணித்ததை அப்போஸ்தலர் 21:8-12-ல பார்க்கமுடியும். பொதுவாக ஐந்துவித ஊழியரில் எந்த அழைப்புள்ள ஊழியரும் ஒரு சபையை நடத்தலாம், ஆனால் மற்ற அழைப்புள்ளவர்களையும் அழைத்து சபையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அப்போஸ்தலரும் சுவிசேஷகரும் நிரந்தரமாய் ஒரு சபையை நடத்த ஆரம்பித்துவிட்டால் சுவிசேஷப்பணியும், புதிய சபைகளை ஸ்தாபிக்கிறதும் பாதிக்கப்படும்.
📞 *பல ஊழிய ஸ்தாபனங்கள்ல பாஸ்டர்களை மட்டும்தானே ஊழியத்திற்கு எடுத்துக்குறாங்க? பாஸ்டரா போய்தானே பலர் சுவிசேஷம் அறிவிச்சி சபையை உருவாக்குறாங்க?*
📞 பாஸ்டர்களால மட்டுமே சுவிசேஷத்த அறிவிச்சி சபையை ஸ்தாபிக்கமுடியுமுன்னு பல ஊழிய ஸ்தாபன தலைவருங்க நம்பராங்க ஐயா. பல பாஸ்டருங்களும் அப்படித்தான் நெனைச்சிகிட்டிருக்கிறாங்க! அதனாலதான் தங்கள கொறசொல்றவங்கள, "நீங்க சுவிசேஷம் அறிவிச்சி, ஆத்துமா ஆதாயம்பண்ணி, ஒரு சபையை நடத்திப்பாருங்க" என்று சவால் விடறாங்க! அப்போஸ்தலர் 8:4-ன்படி விசுவாசிகளாலும் சுவிசேஷத்தை அறிவிக்கமுடியும், 11:19-21-ன்படி சபையை ஸ்தாபிக்கமுடியும், 11:22-26-ன்படி சபையை சிறப்பாக நடத்தமுடியும்ங்கறது இவங்களுக்கு வௌங்கல ஐயா! இன்னைய கிறிஸ்தவர்களில் பாஸ்டருங்களால ஆதாயம்பண்ணப்பட்டவங்களவிட, விசுவாசிகளாலும் மற்ற அழைப்புள்ளவர்களாலும் ஆதாயம்பண்ணப்பட்டவர்களே அதிகங்கிறத பாஸ்டர்மாருங்களால மறுக்கமுடியுமா?
📞 *இந்த விஷயம் விசுவாசிகளுக்கு தெரிஞ்சிட்டா நமக்கு வேல இல்லாம போய்டும் இல்லையா ஐயா?*
📞 அப்போஸ்தலர் 2:43; 6:8; 8:5-7-ல அப்போஸ்தலருக்கு இணையா விசுவாசிகள் அற்புதங்களை நடப்பிச்சதையும், அப்போஸ்தலர் 6:9-7:53; 8:4,5,12; 11:19,20-ல அப்போஸ்தலருக்கு இணையாக சுவிசேஷம் அறிவிச்சதையும், அப்போஸ்தலர் 8:12,13; 9:10-18; 22:12-16-ல விசுவாசிகள் ஞானஸ்நானம் கொடுத்ததையும், அப்போஸ்தலர் 11:22-26-ல அப்போஸ்தலருக்கு இணையாக சிறப்பாய் சபையை நடத்தினதையும் பாக்குறோம். ஆனா அவங்க ஊழியத்தால தங்களோட ஊழியம் போய்டும்னு பயந்து, ஊழியஞ்செய்யாதபடிக்கு அப்போஸ்தலர் விசுவாசிகளை தடுக்கலியே. கிருபை வரங்கள் மற்றும் ஆவியின் வரங்களைபத்தி அவங்களுக்கு போதிக்காம மறச்சிவைக்கலியே! அப்போஸ்தலர் 10:23,24,45-48-ல பாக்கறபடி
பேதுரு தன்னோட வந்த விசுவாசிகள வச்சி கொர்நேலியு வீட்டாருக்கும் உறவின்முறையாருக்கும், விசேஷித்த சிநேதிதருக்கும் ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறாரே! விசுவாசிகளுக்குரிய ஊழியத்த செய்ய அவங்கள தாராளமா அனுமதிச்சி, அவங்கள சரியா பயன்படுத்திக்கிட்டா அவங்க ஊழியக்காரங்களுக்கு தொணையா இருப்பாங்களேயல்லாம, வெனையா இருக்கமாட்டாங்க ஐயா. தேவன் கொடுத்த ஊழியத்த எந்த விசுவாசியாலயும் ஊழியக்காரங்கக்கிட்டருந்து பிடுங்கிடமுடியாது!
📞 *எனக்கு தெரிஞ்ச ஒரு ஊழியக்காரரு விசுவாசிகள கம்யூனியன் பாத்தரத்தக்கூட தொட விடமாட்ராரய்யா?*
📞 வேதமாதிரியான ஊழியத்த செய்யறவங்க அப்படி செய்யமாடாங்க, வேறமாதிரியான ஊழியத்த செய்யறவங்க அப்படித்தான் செய்வாங்க ஐயா.
📞 *சிலநாட்கள் சுவிசேஷகராக சுத்திகிட்டிருந்தவங்க திடீர்னு பாஸ்டர்னு சொல்லிக்கிட்டு சபை நடத்தறாங்களே?*
📞 சுவிசேஷகர்னு சொல்லிகிட்டே அவங்க சபையை நடத்தறதுல எந்தத் தவறும் இல்லை. அதேநேரத்தில் சில சுவிசேஷகர்களை தேவன் பாஸ்டராக்கறதையும் மறுக்கமுடியாது. போதகரும் தீர்க்கதரிகளுமாயிருந்த பர்னபாவையும் பவுலையும் தேவன் அப்போஸ்தலராக ப்ரமோட்பண்ணத அப்போஸ்தலர் 13:1-4-ல பாக்குறோம். இதை செய்த தேவனுக்கு, ஒரு சுவிசேஷகரை பாஸ்டராகவோ, போதகராகவோ, தீர்க்கதரிசியாகவோ, அப்போஸ்தலராகவோ ப்ரமோட்பண்ணுவது கூடாதக் காரியம் அல்ல!
📞 *சுவிசேஷகர்கள் மற்ற சபைகளிலிருந்து ஆத்துமாக்களை கொள்ளையிட்டு, சபை நடத்துவது நியாயமா?*
📞 அநியாயம்! தாங்கள் ஆதாயம்பண்ணின மக்களை சபையாக நடத்தலாம், அல்லது பிலிப்புவைப்போல முறையாக ஒரு சபைக்கு கண்காணியாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த சபையை நடத்தலாம். தனியாக ஒரு சபையை நடத்துகிற சுவிசேஷகர் மற்ற அழைப்புள்ளவர்களையும் அழைத்து சபையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்!
📞 *குறிப்பிட்ட அழைப்புள்ள ஒரு ஊழியரின் ஊழியத்தால மட்டும் ஒரு சபை முழுசா வளர்ச்சியடையாதா?*
📞 அப்போஸ்தலரால் மட்டுமே ஒரு சபை முழுமையான வளர்ச்சியடைஞ்சிடும்னா, தேவன் தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர், மேய்ப்பர் மற்றும் போதகரை சபைக்கு ஏற்படுத்தவேண்டிய அவசியமே இருந்திருக்காதே! ஆவியின் வரங்களையும் கிருபை வரங்களையும் உடைய விசுவாசிகளின் ஊழியமும், உதவிக்காரரின் ஊழியமும் தேவைப்படாதே!
பாஸ்டர் உட்பட எந்த ஒரு குறிப்பிட்ட அழைப்புள்ள ஒரு ஊழியரின் ஊழியத்தினால் மட்டுமே சபை முழுமையான வளர்ச்சியை அடையமுடியாது ஐயா.
📞 *சரி விஷயத்துக்கு வருவோம், உங்கள போதகர் ன்னு சொன்னீங்க, போதகரும் சபை நடத்தலாம்னு சொன்னீங்க, அப்படினா நீங்க தனியா ஒரு சபையை நடத்தறீங்களா?*
📞 ஒரு போதகன் தனியாகவும் ஒரு சபையை நடத்தலாம், வேறு அழைப்புள்ளவங்கக்கூட சேர்ந்தும் சபையை நடத்தலாம், ஒரு சபையில ஐக்கியமாக இருந்துகிட்டு, அழைக்கப்படுகிற அல்லது அனுப்பப்படுகிற சபைகளுக்கு சென்று சத்தியத்தை போதிக்கலாம். அப்போஸ்தலர் 17:14,15; 18:5; 19:22; 1கொரிந்தியர் 4:17; 16:10; பிலிப்பியர் 2:19; 1தெசலோனிக்கேயர் 3:2,6,7; 1தீமோத்தேயு 1:3,4-ல பாக்கறபடி தீமோத்தேயுவும்; 2கொரிந்தியர் 8:6,16,23; 12:18-ல பாக்கறபடி தீத்துவும்; பிலிப்பியர் 2:25; 4:18-ல பாக்கறபடி எப்பாப்பிரோதீத்துவும்; அப்போஸ்தலர் 19:1; 16:12; தீத்து 3:13-ல பாக்கறபடி அப்பொல்லோவும் ஒரு குறிப்பிட்ட சபையை மட்டும் நடத்தாம, பல சபைகளுக்கு சென்று அவைகளை தங்கள் போதகத்தால் பலப்படுத்துகிற வேலையை செஞ்சாங்க, அடியேனும் ஒரு சபையில அங்கமா இருந்துகிட்டு, அந்த சபைக்கும் பிரயோஜனமா இருப்தோட, பல சபைகளுக்கு சென்று சத்தியத்தை உள்ளபடியே போதித்து, தேவனுடைய சபையாகிய அவருடைய ஜனங்கள் கிறிஸ்துவுக்குள் வளர, எனது அழைப்பின்படியான பங்களிப்ப கொடுத்துகிட்டு இருக்கேன். சபையை நடத்தும் ஊழியர்களுக்கும் உபதேசிக்கிற ஊழியத்தையும் செஞ்சிகிட்டு வரேன்.
📞 *சபைய நடத்தரவங்களுக்கு போதிக்கிற அளவுக்கு நீங்க அனுபவசாலியா?*
📞 தேவனுடைய சபையை நடத்த அவரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற அஞ்சிவிதமான ஊழியர்கள்ல எவரும் மற்ற அழைப்புள்ளவங்களுக்கு தாராளமா சத்தியத்தை போதிக்கலாம். தேவனுடைய சபையாகிய அவருடைய ஜனங்கள சத்தியத்தில நடத்தற அனுபவம் இருந்தா போதும். அப்படி பாத்தா நூற்றுக்கணக்கான ஊழியர்களையும், ஆயிரங்கணக்கான தேவஜனங்களையும் சரியான சத்தியத்தில நடத்துற அடியேனுக்கு, சபையை நடத்தறவங்களுக்கு போதிக்கிற கிருபை உண்டுன்னு விசுவாசிக்கிறேன். அதனாலதான் அடியேன் சபை ஊழியம் செய்யறதா சொன்னேன் ஐயா.
📞 *எந்தக் கேள்வியக் கேட்டாலும் வசனத்தக் கொண்டுவந்து காட்டீர்றீங்க, மறுத்துப்பேசமுடியல ஐயா!*
📞 தேவவசனத்தவிட வேற எது ஆதாரமா இருக்கமுடியும் ஐயா?
📞 *நிச்சயம் ஐயா! உங்களோடப் பேசனதுல ரொம்ப சந்தோஷம்! ஊழியத்தபத்தி பல புது விஷயங்கள தெரிஞ்சிக்கமுடிஞ்சிது. ஒரு பாஸ்டரா தேவனுடைய சபையில என்னோட எடம் எதுன்னும் புரிஞ்சிக்கமுடிஞ்சிது!*
📞 தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஐயா. மறுபடியும் பேசுவோம்!
📞 *நன்றி ஐயா!*
ஊழியர்களின் சிந்தனைக்கு.....
க. காட்சன் வின்சென்ட்.
8946050920
=====================
ஜெர்மனியின் விட்டின்பெர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் Bless U-2 என்கிற பெயரில் ரோபோ பாதிரியார் ஒன்று நிறுவப்பட்டு, சபையாருக்கு ஆசீர்வாதம் வழங்கிவருகிறதே?
=====================
✍️ இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
எலும்பும் தசையும் நரம்பும் இரத்த ஓட்டமும் உயிரும் உள்ள பல ரோபோ பாதிரியார்களை, பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ உலகம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது!
தங்கள் திருச்சபை பிரிவு அல்லது தங்கள் ஸ்தாபனம் அல்லது தங்களை நடத்தின மூத்த ஊழியர் தங்களில் பதிவுசெய்துள்ள Programme (நிகழ்ச்சி நிரல்) தவிர்த்து, வேதத்தை சரியாய் வாசித்து (1தீமோ.4:13,14), சத்தியத்தை நிதானமாய் பகுத்து (2தீமோ.2:15) கலப்பில்லாமல் தேவனால் அருளப்பட்டப்பிரகாரம் (2கொரி.2:17) பேசத்தெரியாத, சரியான சத்தியங்களில் சபையை நடத்தத்தெரியாத (எபே.4:15; கலாத்.4:16; 1தீமோ.3:15; 2கொரி.13:8; 3யோவான் 1:3,4) பல ரோபோ பாதிரியார்கள் (ஊழியர்கள்) மனித உருவில் நம் மத்தியில் உலாவிக்கொண்டுதானே இருக்கிறார்கள்!
மேலும் திருச்சபையார் ரோபோக்களாய் மாறிவரும் இக்காலத்தில், அவர்களை ரோபோ பாதிரியார்கள் வழிநடத்துவது ஆச்சரியப்படவேண்டிய காரியம் அல்லவே.
ஜெபிப்பது, துதிப்பது, காணிக்கை தசமபாகம் கொடுப்பது ஆகிய நான்கு Programme (நிகழ்ச்சி நிரல்) தவிர, இந்த ரோபோ விசுவாசிகளில், சத்தியத்தின்படி அவர்கள் செய்யவேண்டிய வேறு எந்தக் காரியத்தையும் ரோபோ பாதிரியார்கள் அவர்களில் பதிவுசெய்வதில்லையே!
விசுவாசிகள் செய்யவேண்டிய வேறு காரியங்கள் ஏதாகிலும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளனவா? இன்னும் நாம் எவ்விதம் ஜீவிக்கவேண்டும் என்பதைப்பற்றி வேறு காரியங்கள் வேதத்தில் காணப்படுகின்றனவா? என்று ஆராய இந்த ரோபோ விசுவாசிகள் முயற்சிப்பதில்லையே!
ஊழியக்காரர்கள் தங்களுக்கு போதிக்கிற காரியங்கள் வேத அடிப்படையிலானவையா? அவர்கள் செய்கிற காரியங்களுக்கு வேதத்தில் ஆதாரங்கள் உள்ளனவா? என்றெல்லாம் சோதித்துப்பார்க்கத் தெரியாத (1தெச.5:21,22; அப்.17:10,11) ரோபோ கிறிஸ்தவர்களை, ரோபோ (பாதிரியார்கள்) ஊழியர்கள் நடத்துகிறது சாதாரணமான ஒரு நிகழ்வே!
ரோபோக்களாய் அல்லாத கிறிஸ்தவர்கள் ரோபோ பாதிரியார்களின் ஆசீர்வாதத்திற்காய் வரிசைகட்டி நிற்கமாட்டார்கள்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this