========================
நீங்கள் கிரயத்துக்குகொள்ளப்பட்டீர்கள். மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்
1கொரிந்.7:23
========================
நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டீர்கள். மனுஷர்களுக்கு அடிமையாகி விடாதீர்கள்.
தேவன் உங்களை விலைக்கு வாங்கினார். எனவே, வேறு யாரும் உங்களை தங்களுக்கு அடிமையாக்க விடாதீர்கள்.
நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள். மனுஷர்களின் அடிமைகளாக மாறுவதை நிறுத்துங்கள்.
நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டீர்கள். மனுஷர்களின் கொத்தடிமைகளாக மாறாதீர்கள்.
அதாவது, தேவனுடைய வார்த்தைக்கு முரணான தாய், தகப்பன், கணவன், மனைவி, பிள்ளை, சகோதரர், சகோதரிகள், உறவினர், நண்பர், ஆசிரியர், முதலாளி, ஊழியக்காரர் ஆகியோரின் வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களாகிவிடாதீர்கள்!
தொகுப்பு:
க. காட்சன் வின்சென்ட்.
8946050920
======================
ஊழியர்கள் எடுக்கவேண்டியத் தீர்மானங்கள்!
=======================
1️⃣ *இயேசுகிறிஸ்துவின் சீஷனாக அவருடைய குணங்களை உடையவனாயிருந்து, சகலஜாதிகளையும் அவருடைய குணங்களை பிரதிபலிக்கும் சீஷராக்குவேன்!* (மத்.5:3-10,19; 28:18-20; கொலோ.1:28,29; 2தீமோ.3:16,17)
2️⃣ *என் விரலினாலும் தொடாத பாரமான சுமைகளை தேவஜனங்களின் தோள்களின்மேல் சுமத்தமாட்டேன். அதாவது, நான் செய்யாத எதையும் செய்யும்படி விசுவாசிகளை கட்டாயப்படுத்தமாட்டேன்!* (மத்.23:4; ரோமர் 2:19-24; 1தீமோ.1:7; 2பேதுரு 2:19)
3️⃣ *நான் செய்கிறவைகளையே செய்யும்படி பிறருக்கு உபதேசிப்பேன்!* (அப்.1:2; 1கொரி.10:32,33; 11:1,2; பிலி.4:8,9; 1தெச.2:10-12; 1தீமோ.4:16)
4️⃣ *வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு நான் மாதிரியாயிருப்பேன்!* (1தீமோத்.4:12; 1கொரி.10:32; 1தெச.2:10; தீத்து 2:7,8; 1பேதுரு 5:3)
5️⃣ *ஊழியத்தை ஆதாயத்தொழிலாக்கி, இழிவான ஆதாயத்தை இச்சித்து, மனுஷரை நாடி, அவர்களை பிரியப்படுத்த போதிக்கும் சுய இச்சைகளுக்கேற்ற போதகனாய், என் வயிற்றுக்கு ஊழியம் செய்யமாட்டேன்!* (1தீமோ.3:3; 6:3-5; கலா.1:10; 2தீமோ.4:3,4; ரோமர் 16:17,18; பிலி.3:18,19)
6️⃣ *என் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகாது. அது கபடமுள்ளதாயிராது. இனி ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவும், பொருளாசையுள்ளவனாய் மாயம்பண்ணவுமாட்டேன்!* (1தெச.2:3,5; 2பேதுரு 2:1-3,13-18; யூதா 1:11-13)
7️⃣ *சுவிசேஷத்தை என்னிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் என்னை உத்தமனென்றெண்ணினபடியே, நான் மனுஷருக்கு அல்ல, என் இருதயத்தைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுவேன்!* (1தெச.2:4; 1தீமோ.1:11,12)
8️⃣ *அநேகரைப்போல, நான் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுவேன். நான் வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் என்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிருப்பேன்!* (2கொரி.2:17; 2தீமோ.2:15)
9️⃣ *எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக (கிறிஸ்துவைப் போன்றவனாக) நிறுத்தும்படிக்கு, அவரையே நான் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுவேன். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுவேன்!* (கொலோ.1:29; எபேசி.4:11-15; 2தீமோ.3:16,17)
1️⃣0️⃣ *சரியான போதகரிடத்தில் சத்தியத்தை கற்று, "சரியாகத்தான் கற்றுக்கொண்டிருக்கிறேனா?" என்று நிச்சயித்துக்கொண்டு, சரியென்று நிச்சயித்துக்கொண்ட சத்தியத்தில் இறுதிவரை நிலைத்திருப்பேன். தவறான போதகரிடம் தவறாகக் கற்றுக்கொண்டு, சரியென்று நம்பிக்கொண்டிருக்கிற உபதேசங்களை திருத்திக்கொள்ள எப்பொழுதும் ஆயத்தமாயிருப்பேன்!* (2தீமோ.1:13,14; 3:14,15; 1தீமோ.4:13-15)
1️⃣2️⃣ *உண்மையுள்ள ஊழியரிடத்தில் நான் கேட்ட சத்தியங்களை, மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவிப்பேன்!* (2தீமோ.2:2; 1:13,14; 3:14; அப்.15:22-31)
1️⃣3️⃣ *தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் என் சுயலாபத்துக்காக மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் தேவஜனங்களுக்கு அறிவித்து, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி, சுத்தமாயிருப்பேன்!* (அப்.20:20,21,26,27)
1️⃣4️⃣ *என் சுயமகிமையைத் தேடி, மனுஷரால் வரும் மகிமைக்காக, என்னை குறித்தும், என் குடும்பத்தைக் குறித்தும் மிகுதியாய் பேசாமல், இயேசுகிறிஸ்துவையே உயர்த்தி பேசுவேன்!* (யோவான் 7:18; 1தெச.2:6; 2கொரி.4:5)
1️⃣5️⃣ *விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரெவரண்ட், டாக்டர், ரைட் ரெவரண்ட் & டாக்டர், கர்டினால் என்று அழைக்கப்படுவதையும் விரும்பமாட்டேன். மற்றவரிலும் பெரியவனாயிருக்கவும், என்னை உயர்த்தவும் முயற்சிக்கமாட்டேன்!* (மத்.23:6-12; லூக்கா 14:7-11; 2பேதுரு 2:13; யூதா 1:11-13)
1️⃣6️⃣ *எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உரியவைகளையே தேடாமல், கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடுவேன்!* (பிலி.2:21; அப்.20:33-35)
1️⃣7️⃣ *சபையின், ஸ்தாபனத்தின் அனைத்து பொறுப்புகளையும் நானே இழுத்துப்போட்டுச் செய்யாமல், பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிறவர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்துவிட்டு, ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்பேன்!* (அப்.6:2-4; ரோமர் 12:7,8)
1️⃣8️⃣ *என் குடும்பத்தாரை மட்டும் விசேஷமாய் ஊழியத்திற்கு பயிற்றுவித்து, சபையில், ஸ்தாபனத்தில் என்னுடன் அவர்களையே பிரதானமாய் பயன்படுத்திக்கொண்டு, எனக்குப் பின்பு என் குடும்பத்தாருக்கே முடிசூட்டும் நோக்கில் சபையாரை மழுங்கடிக்காமல், ஆதிசபை ஊழியரைப்போல, எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இணையாக ஊழியஞ்செய்யவும், கிரியை நடப்பிக்கவும் கிருபையுள்ள அனைவரையும் பயிற்றுவிப்பேன், பயன்பட அனுமதிப்பேன்!* (அப்.6:3-8; 8:4-13; 26-40; 9:10-18; 22:14-16; 10:23,45-48; 11:19-26; 18:24-26)
1️⃣9️⃣ *விசுவாசிகள் அவரவர் பெற்ற வரத்தின்படியே தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யவும், போதிக்கிறவர் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கவும், உதவிசெய்கிறவர் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யவும், எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்யவும் உற்சாகப்படுத்துவேன்!* (1பேதுரு 4:10,11; கொலோ.3:17)
2️⃣0️⃣ *தேவசித்தம்", "ஆவியானவரின் நடத்துதல்" என்றெல்லாம் மோசடிசெய்து, தேவஜனங்களின் உடன் உழைப்பால், காணிக்கைகளால் மற்றும் உடன் ஊழியரின் உடன் உழைப்பால் வளர்ந்த தேவனுடைய சபையில், ஊழிய ஸ்தாபனத்தில், என்னையும் என் குடும்பத்தாரையும் முன்னிலைப்படுத்தாமல்; அழைப்பும் கிருபைவரங்களும் உள்ள எவருக்கும், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இணையான ஊழியத்தையும், பொறுப்புகளையும், ஊதியத்தையும், சுதந்திரத்தையும், கனத்தையும் பகிர்ந்தளிப்பேன்!* (எபே.4:11-16; கலா.2:9; அப்.20:28; 1தீமோ.3:1-13; ரோமர் 12:6-8; 1கொரி.12:1-13,31; 14:1,12)
2️⃣1️⃣ *பிற்காலத்தில் சபையை, ஸ்தாபனத்தை என் குடும்பத்தாருக்கு சொந்தமாக்கும் நோக்கில் தேவனுடைய சபையை "என் சபை" என்றும், தேவனுடைய மந்தையை "என் விசுவாசிகள்" என்றும் மக்கள் மனதில் தந்திரமாய் பதியப்பண்ணமாட்டேன்! ஆதிசபை ஊழியர் ஒருவரும் செய்யாத இந்த அருவருப்பை செய்யவோ, அதற்கு என் அழைப்போடு சம்பந்தமில்லாத வசனங்களையெல்லாம் ஆதரவுக்கு அழைக்கவோ மாட்டேன்!* (1கொரி.9:5; அப்.20:28; ரோமர் 16:16; 1கொரி.10:33; 1தீமோ.3:15; 1பேதுரு 5:2)
2️⃣2️⃣ *தேவஜனங்களை இன, மொழி, வர்க்க பேதங்களற்றவர்களாய், அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் மூலம் கொடுக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவைப் பற்றிய உபதேசங்களாகிய அஸ்திபாரத்தின்மேல், கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாகவும், தேவனுடைய வாசஸ்தலமாகவும் கட்டியெழுப்ப பரிசுத்தஆவியானவருடன் இணைந்து செயல்படுவேன்!* (எபே.2:20-22; கலா.3:27-29; கொலோ.3:9-15; 1பேதுரு 2:4,5,9)
2️⃣3️⃣ *தேவஜனங்களின் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதற்கு அவர்களை ஜக்கிரதைப்படுத்துவேன்!* (1தெச.5:23; ரோமர் 13:11-14; 1கொரி.3:16,17; 6:9-20; கலா.5:16-25; எபே.5:1-21; கொலோ.3:1-5; பிலி.3:17-21; 2தீமோ.4:1-4; தீத்து 2:9-15; எபி.6:4-8; 10:24-39; 11:9-16; 12:1-29; யாக்.2:1-13; 4:1-10; 1பேதுரு 4:1-6; 2பேதுரு 1:3-11; 3:3-14; 1யோவான் 3:1-9; யூதா 1:1-25)
2️⃣4️⃣ *உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால் அது போதுமென்றிருப்பேன். ஐசுவரியவானாகும் விருப்பத்தையும், பண ஆசையையும் விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடுவேன். விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுவேன், நித்தியஜீவனைப் பற்றிக்கொள்வேன்!* (1தீமோ.6:6-12; 2தீமோ.2:22; 4:7,8)
ஊழியக்காரர்கள் மேற்காணும் தீர்மானங்களை எடுத்து, அவைகளை நடைமுறைப்படுத்துவோமானால், கிறிஸ்தவமார்க்கம் அதன் அசல் தன்மைக்குத் திரும்பிவிடும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=======================
தேவன் நமக்கு உபத்திரவங்களை அனுமதிக்கக் காரணம்?
======================
ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாக!
எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாக்கவே, தேவன் தமது ஊழியர்களுக்கு உபத்திரவத்தை அனுமதிக்கிறார்.
"தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, *எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி,* எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்" என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள். (2கொரி.1:4)
தமது ஊழியக்காரர்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் தேவனே அவர்களுக்கு ஆறுதல்செய்கிறார்.
"எப்படியெனில், கிறிஸ்துவினுடைய *பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல,* கிறிஸ்துவினாலே எங்களுக்கு *ஆறுதலும் பெருகுகிறது"* என்று பவுல் சொல்லுகிறது இங்கு கவனிக்கத்தக்கது. (2கொரி.1:5)
கிறிஸ்துவினுடைய பாடுகள் பெருகுகிற ஊழியர்களிடத்தில் கிறிஸ்துவினாலே ஆறுதலும் பெருகுகிறது.
உபத்திரவங்களை அனுபவிக்கிற ஊழியர்களால் மட்டுமே தேவனுடைய ஆறுதலை அனுபவிக்கமுடியும். தேவனுடைய ஆறுதலை அனுபவிக்கிற ஊழியர்களால் மட்டுமே எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களை ஆறுதல்படுத்தமுடியும்.
"ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் *அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்;* நாங்கள் ஆறுதலடைந்தாலும் *அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்;* நாங்கள் பாடுபடுகிறதுபோல *நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே* அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது" என்று பவுல் சொல்லுகிறதையும் கவனியுங்கள். (2கொரி.1:6)
ஊழியக்காரர்கள் உபத்திரவப்பட்டாலும், ஆறுதலடைந்தாலும் அது விசுவாசிகளின் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகிறது.
ஊழியர்களுக்கு வரும் பாடுகள் விசுவாசிகளுக்கு பலனாக மாறுகிறது!
முதன்மையானவர்களாக்கவே, தேவன் கடைசியானவர்களாக்குகிறார்!
தமது ஜனங்களை கிறிஸ்துவுக்குள் முதன்மையானவர்களாக்கவே, தேவன் தமது ஊழியர்களை உலகத்தில் கடைசியானவர்களாக்குகிறார்!
தேவன் அப்போஸ்தலர்களாகிய தமது ஊழியர்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய் (அடிமைகளாய்க்) காணப்படப்பண்ணுவதற்கும், ஊழியர்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையாவதற்கும் (1கொரி.4:9); பல ஆண்டுகள் ஊழியம் செய்தபின்னும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருப்பதற்கும் (1கொரி.4:11); உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமாவதற்கும் (1கொரி.4:13)
காரணம் என்ன?
"நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள். நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள். நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர். எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம். வையப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுகிறோம். துன்பப்பட்டு, சகிக்கிறோம். தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம். இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்" என்று பவுல் சொல்லுகிறதையும் கவனியுங்கள். (1கொரி.4:10-13)
தமது ஜனங்களை கிறிஸ்துவில் புத்திசாலிகளாக்கவே, தேவன் தமது ஊழியர்களை கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரராக்குகிறார். தமது ஜனங்களை கிறிஸ்துவில் பலவான்களாக்கவே, தேவன் தமது ஊழியர்களை கிறிஸ்துவினிமித்தம் பலவீனராக்குகிறார். தமது ஜனங்களை கிறிஸ்துவில் கனவான்களாக்கவே, தேவன் தமது ஊழியர்களை கிறிஸ்துவினிமித்தம் கனவீனராக்குகிறார்.
கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரராக, பலவீனராக, கனவீனராக விரும்பாத ஊழியர்களால், ஒருபோதும் கிறிஸ்துவுக்குள் புத்திசாலிகளை, பலவான்களை, கனவான்களை உருவாக்கமுடியாது.
தமது ஜனங்களை பாடுபடுகிறவர்களாக்க!
தமது ஜனங்களை பாடுபடுகிறவர்களாய் உருவாக்கவே, தேவன் தமது ஊழியர்களுக்கு பாடுகளை அனுமதிக்கிறார்.
"..... *நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே* அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது. *நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல,* எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்" என்று பவுல் சொல்லுகிறது இங்கு கவனிக்கத்தக்கது. (2கொரி.1:6,7)
ஆதிசபை ஊழியர்கள் தாங்கள் பாடுபடுகிறதுபோல, விசுவாசிகளையும் பாடுபட்டுச் சகிக்கிறவர்களாக்கினார்கள். தங்களோடேகூட பாடுபடவும்
தங்களோடேகூட ஆறுதலடையவும் அவர்கள் சபையை பழக்குவித்தனர்.
பாடுபட ஆயத்தமாயுள்ள ஊழியர்களே, கிறிஸ்துவுக்காக பாடுபடும் கூட்டத்தை ஆயத்தப்படுத்தமுடியும்!
ஊழியர்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது!
தங்களுக்கு வரும் பாடுகளையும் பலவீனத்தையும் குறைவுகளையும் ஊழியர்கள் குறைவாய் மதிப்பிட்டுவிடக்கூடாது.
"அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் *நன்றாய் அறியப்பட்டவர்களாகவும்,* சாகிறவர்கள் என்னப்பட்டாலும் *உயிரோடிருக்கிறவர்களாகவும்,* தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் *கொல்லப்படாதவர்களாகவும்,* துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் *எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்,* தரித்திரர் என்னப்பட்டாலும் *அநேகரை ஜசுவரியவான்களாக்குகிறவர்களாகவும்,* ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும், *சகலத்தையுமுடையவர்களாகவும்* எங்களை விளங்கப்பண்ணுகிறோம்" என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள். (2கொரிந்.6:9,10)
நன்றாய் அறியப்பட்டவர்களாக்கவே, தேவன் தமது ஊழியரை
அறியப்படாதவர்களென்னப்பட்டவைக்கிறார். உயிரோடிருக்கிறவர்களாகக் காண்பிக்கவே, தேவன் தமது ஊழியரை
சாகிறவர்கள் என்னப்பட்டவைக்கிறார். கொல்லப்படாதவர்களாகக் காண்பிக்கவே, தேவன் தமது ஊழியரை தண்டிக்கப்படுகிறவர்களென்னப்படவைக்கிறார்.
எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாக்கவே, தேவன் தமது ஊழியரை துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டவைக்கிறார். அநேகரை விசுவாசத்தில் ஜசுவரியவான்களாக்குகிறவர்களாக்கவே, தேவன் தமது ஊழியரை தரித்திரர் என்னப்பட்டவைக்கிறார். சகலத்தையுமுடையவர்களாக்கவே, தேவன் தமது ஊழியரை ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டவைக்கிறார்.
உலகத்தாரின் பார்வையில் நாம் அற்பமானவர்களானாலும், தேவனுடைய பார்வையில் எவ்வளவு விசேஷித்தவர்கள் என்பதை ஊழியர்கள் உணரவேண்டும்!
விசுவாசிகளிடம் வெளிப்படையாய் அறிக்கையிடலாம்!
ஊழியக்காரர்கள் தங்கள் சரீர பலவீனத்தையும் (1கொரி.2:3; 2கொரி.12:5-9; கலா.4:13), பொருளாதாரக் குறைவுகளையும் (1கொரி.4:11-13; 2கொரி.6:10) விசுவாசிகளிடம் வெளிப்படையாய் கூறவேண்டும்.
வெளிப்படையாய் கூறினால், விசுவாசிகள் விசுவாசத்தை இழந்துவிடுவார்கள் என்றோ, தங்கள் வியாதி, பலவீனம் மற்றும் பொருளாதாரத் தேவைக்காய் நம்மிடத்தில் ஜெபித்துக்கொள்ளமாட்டார்கள் என்றோ அச்சப்பட்டு, நம்மை அவர்களுக்கு முன்பாக ஒரு குறைவும், ஒரு பலவீனமும் அற்றவர்களாகவும், சுகமாகவும் பொருளாதாரத்தில் செழிப்பாகவும் இருப்பதாகவும் காண்பித்துக்கொள்ளவேண்டியக் கட்டாயம் இல்லை.
நாம் பலவீனராக இருக்கும்போதுதான் கிறிஸ்துவின் வல்லமை நம்மேல் தங்குகிறது என்பதையும், நாம் பலவீனமாயிருக்கும்போதுதான் பலமுள்ளவர்களாயிருக்கிறோம் என்பதையும் விசுவாசிகளுக்கு ஊழியர்கள் விளக்கிக் காண்பிக்கவேண்டும். (2கொரி.12:9,10)
ஊழியர்கள் தயங்காமல் சொல்லவேண்டும்!
"கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, *அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும்* உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது" என்று பவுல் சொல்லுகிறது போல, விசுவாசிகளிடம் ஊழியர்கள் இன்று தயங்காமல் சொல்லவேண்டும்! (பிலிப்.1:29)
"நீங்கள் என்னிடத்தில் கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான *போராட்டமே உங்களுக்கும் உண்டு"* என்று பவுலைப்போலச் சொல்லும் நேர்மையும், தைரியமும் இன்று ஊழியர்களுக்கு அவசியம். (பிலிப்.1:30)
கிறிஸ்துவினிமித்தம் நமக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நாம் பிரியப்படுகிறதுபோல (2கொரி.12:10), விசுவாசிகளும் பிரியப்பட ஊழியக்காரர்கள் உற்சாகப்படுத்தவேண்டும். (1பேதுரு 4:1,2,12-14,16; 2:20-21)
பலவீனமான விசுவாசிகளை பலமுள்ளவர்களாகவும், தேவனுடைய வல்லமையை உடையவர்களாகவும் மாற்றுவதற்கு இதுவே சிறந்த வழி!
பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறவர்கள்: கிறிஸ்துவினிமித்தம் துன்பப்படவும், பைத்தியமாகவும், பலவீனப்படவும், கனவீனமடையவும், குறைவுபடவும் ஆயத்தமாயிருக்கவேண்டியது அவசியம்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
======================
நடத்துகிறவர்களும் நடத்தப்படுகிறவர்களும்!
=====================
ஜனத்திற்கு ஏற்ற பிரசங்கிகள்!
மனம்போகிற போக்கின்படி போய், அபத்தமானதை உரைக்கிற ஒருவன், திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து நான் உங்களுக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த ஜனத்திற்கு ஏற்ற பிரசங்கியாயிருப்பான்.
மீகா 2:11
"நீங்கள் திராட்சரசம் (wine) மற்றும் மதுபானம் (alcoholic drinks) நிறைய சாப்பிடுவீர்கள்" என்று தங்களுக்குப் பிடித்தமாதிரி பேசுகிறவர்களையே இஸ்ரவேலர் விரும்பினார்கள்!
அன்று இஸ்ரவேலரை குறித்து தேவன் சொன்னக் காரியம், இன்றைய கிறிஸ்தவர்களுக்கு அப்படியே பொருந்துகிறது அல்லவா?
*கிறிஸ்தவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்* என்று பவுல் துள்ளியமாகச் சொன்னது இன்று நிரூபனமாகிவிட்டதல்லவா! (2தீமோத்.4:3,4)
தங்கள் சுய இச்சையின்படியான வாழ்க்கையை உற்சாகப்படுத்துகிற ஊழியர்களைத்தானே இன்று அநேகக் கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்கள்!
மனம்போகிற போக்கின்படி போகிற இன்றைய மிகுதியான கிறிஸ்தவர்களுக்கு, மனம்போகிற போக்கின்படி போகிற மற்றும் ஊழியம் செய்கிறவர்களே அதிகத் தேவையாய் இருக்கிறார்கள் அல்லவா!
*"உங்கள் முக்கால பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிட்டன. இனி நீங்கள் செய்கிற பாவங்களை தேவன் பாவமாகவே கருதமாட்டார். மாறாக, நீங்கள் எவ்வளவு பாவம் செய்கிறீர்களோ, அவ்வளவு கிருபை பெருகும்; கிறிஸ்தவனுக்கு சரீர பலவீனமோ மரணமோ இல்லை; நீ உண்மை கிறிஸ்தவனானால் ஐசுவரியவானாக மட்டுமே இருப்பாய்"* போன்ற போதகங்களை விரும்புகிற கிறிஸ்தவர்கள் இன்று அதிகமல்லவா!
மோசம்போகிறவர்களும் மோசம்போக்குகிறவர்களும்!
என் ஜனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள். ஏசாயா 3:12
தமது ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தனை மோசக்காரர்களும், தமது ஜனங்கள் எவ்வளவு சுலபமாய் மோசம்போகிறவர்களுமாய் இருக்கிறார்கள் என்று தேவன் இங்கு எவ்வளவு வேதனையுடன் கூறுகிறார்!
*"அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்"* என்று பேதுரு கள்ளப்போதகர்களையும், அவர்களைப் பின்பற்றும் பேதைகளான கிறிஸ்தவர்களையும் குறித்து பெருமூச்சிவிடுகிறாரே! (2பேதுரு 2:2)
தங்களை சத்தியத்தை விட்டு விலகப்பண்ணி, பொய்யை 'சத்தியம்' என்று நம்பப்பண்ணி, தங்கள் ஆத்துமாக்களை அழிவுக்கு நேராக நடத்துகிறவர்களை இன்றைய கிறிஸ்தவர்கள் ஆவலாய் பின்பற்றுகிறது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது!
பொருளாசையுடைய கள்ளப்போதகர்கள், தங்களை ஆண்டவருக்கல்ல, தந்திரமான வார்த்தைகளால் தங்களுக்கே ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள் (2பேதுரு 2:3) என்பதை இவர்கள் உணராதிருக்கிறார்களே!
தாங்கள் பரலோகம் போகத்தக்கதாக இயேசுவின் சீஷராகத்தக்கப் போதனைகளை கொடுக்காமல் (மத்.5:3-7:27; 28:18-20); பாதாளம் போகத்தக்கதாக உலகத்தில் ஐசுவரியவான்களாகவும், பெரும் பணக்காரர்களாகவும் ஆகும் ஆவலைத் தூண்டுகிற (1தீமோ.6:9,10); பரிசுத்தமில்லாதவர்களாக்குகிற (யூதா 1:4); பாடுகளற்ற வாழ்வை வாக்குப்பண்ணுகிற (பிலிப்.3:18,19); சாத்தானின் ஊழியர்கள் பலரின் பின்னால், "நல்ல ஊழியர்கள்" என்கிற நம்பிக்கையில் திரளானக் கிறிஸ்தவர்கள் இன்று திரிந்துகொண்டிருக்கிறார்களே! (2கொரி.11:3,4,12-15)
சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, இவர்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்பட்டிருக்கிறதே!* (2கொரி.11:3)
வேறொரு ஆவியினால் வழிநடத்தப்படுகிறவர்களால் பிரசங்கிக்கப்படுகிற வேறொரு கிறிஸ்துவை அறிந்திருக்கிற கிறிஸ்தவரல்லவா இன்றைய கிறிஸ்தவ உலகில் அதிகம்!
இன்றைய பெரும்பாலான ஊழியர்கள் கிறிஸ்துவைக்குறித்து பிரசங்கிக்கிறக் காரியங்களுக்கும், கிறிஸ்து தம்மைப்பற்றி பிரசங்கித்தக் காரியங்களுக்கும், ஆதிஅப்போஸ்தலர் கிறிஸ்துவைப்பற்றி பிரசங்கித்திருக்கிற காரியங்களுக்கும் பெரும்பாலும் தொடர்பில்லையே!
மோசக்காரர்களை அடையாளம் காணக்கூடிய அளவுக்கு வேத அறிவில்லாதக் கிறிஸ்தவர்கள் நாசமடைவது நிச்சயம்!
எத்தர்களான ஊழியர்களும் நாசமடையும் கிறிஸ்தவர்களும்!
இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள். (ஏசாயா 9:16)
யூதாவின் ஆவிக்குரியத் தலைவர்களையும் ஜனங்களையும் குறித்து தேவன் சொன்னது
இன்றைய பெரும்பாலான ஊழியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அப்படியே பொருந்துகிறது அல்லவா?
தன்னை "தேவனுடைய ஊழியர்" என்று அடையாளப்படுத்திக்கொள்ளுகிற ஒருவர் உண்மையில் தேவனுடைய ஊழியரா? அல்லது தேவனுடைய ஊழியரின் வேஷத்தில் திரியும் கள்ள ஊழியரா என்பதை கண்டுபிடிக்கவேண்டியக் கடமை தேவஜனங்களுக்கு இருக்கிறது.
இதை செய்யத்தவறுகிறவர்கள், 'ஊழியர்கள்" என்கிற முகமூடிக்குள் ஔிந்திருக்கும் ஏமாற்றுக்காரர்களால் நாசமடைவது நிச்சயம்!
இன்றைய கிறிஸ்தவ உலகம் கொடிய நாசத்துக்கும் மோசத்துக்கும் ஏதுவாய் இருக்கிறது. காரணம், இன்றைய கிறிஸ்தவர்கள் பெரும் எத்தர்களை பெரிய ஊழியர்களாகக் கொண்டாடுகிறதுதான்!*
அவர்கள் வேதத்துக்கு முரணாகப் போதிக்கிறக் காரியங்களையும், செய்கிறக் காரியங்களையும் அப்படியே இவர்கள் ஏற்றுக்கொள்ளுகிறார்கள்!
இன்று தங்களை சபைத்தலைவர்களாகவும், கிறிஸ்தவ உலகின் வழிகாட்டிகளாகவும் காண்பித்துக்கொள்கிற அத்தனை பிரபல ஊழியர்களுக்கும் மொத்தமாக பைத்தியம் பிடித்துவிட்டதோ, அல்லது இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பின்மாற்றமடைந்துவிட்டனரோ என்கிற சந்தேகம் உண்டாகிறது!
இவர்களுடைய போதனைகளும் செய்கைகளும் பெரும்பாலும் இயேசுகிறிஸ்து மற்றும் ஆதிஅப்போஸ்தஸ்தலரின் போதனைகளுக்கும் செய்கைகளுக்கும் நேர் எதிராக இருக்கின்றன!
இதைப் பகுத்தறிய இயலாதபடிக்கு மிகுதியான கிறிஸ்தவரின் கண்கள் குருடாகிவிட்டன!
வேதத்தை போதிக்கிற அத்தனைப்பேரும் தேவனுடைய ஊழியர்கள் என்றும், அவர்கள் பேசுகிற அத்தனையும் சத்தியம் என்றும் நம்புகிறதுபோன்ற கொடிய வஞ்சகம் எதுவுமில்லை!
"கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்"* என்று ஆண்டவர் சொல்வதைக்குறித்ததோ (மத்.7:15), *"எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்"* என்று பவுல் சொல்வதைக்குறித்தோ (1தெச.5:21,22), இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.
"ஒருவர் கள்ள ஊழியரா? அல்லது நல்ல ஊழியரா? என்று ஆராய்ச்சி செய்வது எங்கள் வேலையுமல்ல; எல்லாவற்றையும் சோதித்துப்பார்க்க எங்களுக்கு நேரமும் இல்லை" என்கிற போக்கில் கிறிஸ்தவர்கள் போய்க்கொண்டிருப்பது ஆபத்தானது!
"ஊழியக்காரர்கள் தவறு செய்தால் அதை தேவன் பார்த்துக்கொள்வார். தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின்மேல் கையைப்போட நான் யார்?" என்று அநேகக் கிறிஸ்தவர்கள் அமைதியாய் இருப்பதினாலயே இன்று அநேகக் கள்ளப்போதகர்கள், நல்லப்போதகர்களாக வலம்வரமுடிகிறது!
*"தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?* தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். *ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?* கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர், அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே"* (ரோமர் 8:33,34) என்கிற வசனத்தைக் காண்பித்து, தங்களுக்கு எதிராகப் பேசாதபடிக்கும், எந்த நடவடிக்கையும் எடுத்துவிடாதபடிக்கும் கள்ளப்போதகர்கள் தேவஜனங்களை அச்சுறுத்துகிறதைக்காணமுடிகிறது!
"தேவன் தெரிந்துகொண்டவர்கள்"* என்று பவுல், மகிமைக்கு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற அனைத்து கிறிஸ்தவர்களையும் குறிப்பிடுகிறாரேயல்லாமல், ஊழியத்திற்கு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற ஊழியர்களை மட்டும் குறிப்பிடவில்லை என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்ளும்வரை கள்ளப்போதகர்களை விட்டு விலகவோ, அல்லது அவர்களை தேவஜனங்களுக்கு அடையாளம் காட்டவோ முடியாது!
தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல, வேதத்தை தூக்கினவனெல்லாம் ஊழியக்காரன் என்று குருட்டுத்தனமாய் நம்பும் கிறிஸ்தவர்களின் கண்கள் திறக்கப்படாவிட்டால், அவர்கள் எத்தர்களான கள்ள ஊழியர்களால் பட்சிக்கப்படுவதும் நாசமடைவதும் நிச்சயம்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this