Type Here to Get Search Results !

ஆத்திர அறை - RAGE ROOM | உங்கள் ஜாதகம் | Bible Short Message Tamil | தினம் ஒரு குட்டி குறிப்புகள் | Jesus Sam

தன் பிழைகளை உணருகிறவன் யார்? | ஆத்திர அறை - RAGE ROOM | கடந்ததை மறந்துவிடு! | தாக்குப்பிடி திறன் | உங்கள் ஜாதகம்

தன் பிழைகளை உணருகிறவன் யார்?


தாவீது, உரியா என்பவனின் மனைவி, பத்சேபாளோடு தவறான உறவு கொண்டு, பின்னர் அதை மறைப்பதற்காக அந்த உரியாவையே ஆள் வைத்து கொன்றான். பின்னர் அந்த பத்சேபாளுக்கு வாழ்க்கை கொடுப்பது போல காட்டிக் கொண்டு, அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்.




*இத்தனை அக்கிரமத்தை செய்தும் தாவீது தான் செய்ததை ஒரு பாவமாகவே உணரவில்லை. எனவே கர்த்தர் அவன் பாவத்தை உணர வைப்பதற்காக ஒரு குட்டிக் கதையை அவனிடம் சொன்னார்.*




ஒரு ஐசுவரியவானிடத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் இருந்தன. ஆனால் அவன் வீட்டெதிரே இருந்த ஒரு ஏழை ஒரே ஒரு ஆட்டுக் குட்டியை செல்லமாய் பிள்ளைபோல் வளர்த்து வந்தான். ஒரு நாள் அந்த ஐசுவரியவானிடத்தில் விருந்தாளி ஒருவன் வந்தான். அவனுக்கு சமைப்பதற்காக, தன்னுடைய ஆயிரக்கணக்கான ஆடுகளில் ஒன்றை எடுக்காமல், அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை பிடுங்கி கொன்று சமைத்தான்.




இந்த கதையை கேட்ட தாவீது, *அந்த மனுஷன் (ஐசுவரியவான்) மேல் மிகவும் கோபமூண்டவனாகி,* நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். *அவன் இரக்கமற்றவனாயிருந்து,* இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான். (2 சாமு. 12:5-6)




*தாவீதுக்கு, தான் ஒருவனுடைய மனைவியை அபகரித்தது, அவளுடைய கணவனை கொன்றது பாவமாக தெரியவில்லை. ஆனால் அடுத்தவன் ஒரு ஆட்டுக் குட்டியை அபகரித்தது கொடுமையான பாவமாக தெரிகின்றது.*




*தன் பிழைகளை உணருகிறவன் யார்?* மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். (சங். 19:12) என்று இதே தாவீது தான் சொல்கின்றான்.




*மனிதர்களாகிய நாம் தவறு செய்யும் போது, அது நமக்குத் தவறாகவே தெரியாது.* அப்படியே சிறிய உணர்வு ஏற்பட்டாலும், சூழ்நிலையினால் அப்படி செய்தேன் என்று நமக்கு நாமே காரணம் சொல்லி மனச்சாட்சியை மழுக்குவோம். ஆனால் *மற்றவன் அதே தவறை செய்யும் போது, அது நமக்கு கொடுமையான பாவமாக தெரியும்.* அவனை தண்டிக்க வேண்டும் என்போம்.




*இப்படிப்பட்ட நேரங்களில் தான் நம்மை உணர்த்த ஒரு கர்த்தருடைய மனிதன் நமக்குத் தேவை.* தாவீதின் தவறை உணர்த்த கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார். நாத்தான் தாவீதை நோக்கி: “நீயே அந்த மனுஷன்” என்று அவன் தவறை உணர்த்தினார்.




*நம்முடைய தவறுகளை விரல் நீட்டி உணர்த்தும் போதகர் நமக்கு இருப்பது, நமக்கு ஆசீர்வாதம். அப்படிப்பட்ட போதகர்களை மிகவும் கனம் பண்ணுங்கள். ஏனென்றால் அவர்கள் நம்மை அழிவுக்கு தப்புவிக்கின்றார்கள்.*




*தடவிக் கொடுக்கும் போதகர்களை விட, தட்டிக் கேட்கும் போதகர்கள்தான் ஆசீர்வாதமானவர்கள்.*




*அப்படி தட்டிக் கேட்கும் போதகர் கையில் அடங்கியிருக்க, உங்களை அர்ப்பணியுங்கள். டிவியிலேயும், யூடியூபிலேயும் வரும் போதகருக்கு உங்களைப் பற்றி தெரியாது. அவர் ஆசீர்வாத வசனங்களை மட்டுமே சொல்லி உங்கள் மனதை வருடுவார். ஆனால் உங்கள் சொந்த போதகருக்குத்தான் உங்களைப் பற்றி தெரியும், அவர்தான் உங்களை கண்டிக்க முடியும். அவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.*

*பிழைகளை உணருங்கள்!*

*ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!*

சகோ. ஆல்வின் ஜான்சன்

+91 97 9000 2006


ஆத்திர அறை - RAGE ROOM

சென்னை, பெங்களூர் போன்ற பட்டணங்களில் *ஆத்திர அறை (RAGE ROOM)* என்ற ஒன்று இப்போது தொடங்கப்பட்டிருக்கின்றது. அந்த RAGE ROOMக்கு செல்ல அதிகபட்ச தொகை, 2999 ரூபாய் ஆகும். இந்த தொகையைக் கட்டினால், உங்களுக்கு வாஷிங்மெஷின், டிவி, பிரிட்ஜ், ஏசி, அவன், இவைகளில் ஏதாவது ஒன்றும், 10 கண்ணாடி பாட்டில்களும், 6 செங்கல்களும், ஒரு சேர் அல்லது டேபிள், ஒரு டியூப் லைட், 2 பிளைவுட் பெட்டிகள், 1 அட்டை பெட்டி, 2 பிளாஸ்டிக் பொருட்கள், 4 தெர்மோகோல் ஷீட், மற்றும் சில தகர பொருட்களும் கொடுப்பார்கள்.




*இந்த பொருட்களை வைத்து நீங்கள் என்ன செய்ய என்று கேட்கின்றீர்கள் அல்லவா?*




வீட்டில் உள்ள பிரச்சனைகள், வேலை ஸ்தலத்தில் உள்ள பிரச்சனைகளால், ஆத்திரத்தோடு காணப்படுபவர்கள் அங்கு சென்றால், உங்கள் கையில் ஒரு சுத்தியல், பேஸ்பால் பேட் போன்றவற்றை கொடுத்து விடுவார்கள். *நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொருட்களை கண்டபடி அடித்து உடைத்து, உங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.*




கொஞ்ச வருடங்களுக்கு முன் மனிதனுக்கு ஆத்திரம் வரும்போது, மனிதனை மனிதன் அடித்தான். அப்படி மனிதனை அடிக்கமுடியாத சந்தர்ப்பங்களில், வீட்டிலிருக்கும் பாத்திரங்களை, பொருட்களைப் போட்டு உடைப்பதுண்டு. நீங்கள் கூட இது போன்று வாட்ச், செல் போன், டிவி என்று பல பொருட்களை ஆத்திரத்தில் உடைத்து நஷ்டப்பட்டிருப்பீர்கள். இந்த நஷ்டம் வரக்கூடாது என்பதற்காகத்தான், இந்த ஏற்பாடு. இங்கு போய் நன்கு பொருட்களை உடைத்து உங்கள் ஆத்திரங்களை தீர்த்துக் கொள்ளலாம்.




*ஆனால் மறுபடியும் மறுபடியும் ஆத்திரம் வந்தால் என்ன செய்வது? தினமும் பொருட்களை உடைத்துக் கொண்டே இருக்க முடியுமா?*




*பிறரை அடித்து காயப்படுத்தியோ, அல்லது சில பொருட்களை உடைத்து நொறுக்கியோதான் நம் ஆத்திரத்தை தீர்க்கமுடியுமா?*




வேதம் சொல்கின்றது, *“நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.”* (சங். 4:4)




இங்கு பாவம் என்பது, அழிவுக்குரிய காரியங்களை செய்வதைக் குறிக்கின்றது. இருதயத்தில் பேசுவது என்பது ஜெபத்தைக் குறிக்கின்றது.




*உங்கள் ஆத்திரத்தை தீர்க்கும் அறை, பொருட்களை உடைக்கும் அறையல்ல, உங்கள் ஜெப அறைதான்.*



நம் பாவ சரீரத்தில், கோபம் ஆத்திரம் வருவது இயற்கையான காரியம் தான். ஆனால் அந்த கோபம் அழிவுக்குரிய காரியங்களுக்கு நேராக செலுத்தப்படாமல், ஆக்கப்பூர்வமான சக்தியாய் மாற்றப்பட வேண்டும். அது ஜெப அறையில் தான் நடக்கின்றது.




*கோபத்தை அடக்கி வைக்காதீர்கள், அடக்கப்பட்ட கோபம் ஒரு நாள் எரிமலை போல வெடிக்கும். கோபத்தை அழிக்குரிய விதத்தில் அடிக்கடி வெளிப்படுத்தவும் செய்யாதீர்கள். அது அநேகரை காயப்படுத்தும்.*




*மாறாக உங்கள் இருதயத்தில் பேசிக் ஜெபித்துக் கொண்டு அமர்ந்திருங்கள். ஜெபம் செய்து உங்கள் ஆத்திரங்களை கர்த்தரிடம் சொல்லுங்கள். தேவ சமுகத்தில் காரியங்கள் சொல்லப்படும் போது, வார்த்தையினால் விபரிக்கமுடியாத தேவ சமாதானம் உங்களை ஆட்கொள்ளும். அந்த சமாதானத்திலிருந்து ஒரு ஆக்கப் பூர்வமான சக்தி பிறக்கும். அந்த சக்தி உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை உங்களுக்கு வெளிப்படுத்தும்.*




*உங்கள் ஆத்திரத்தை தீர்க்கும் அறை, பொருட்களை உடைக்கும் அறையல்ல, உங்கள் ஜெப அறைதான்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்

+91 97 9000 2006



கடந்ததை மறந்துவிடு!

*தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்ளுகிறதைக்கண்டு, பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, ... தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய்பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களைமாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்குவந்து, போஜனம் கேட்டான்; அவன்முன்னே அதை வைத்தபோது புசித்தான்.* (2 சாமு. 12:19-20)




தாவீதின் பாவத்தினால் தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பின்படி, தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த குழந்தை வியாதிப்பட்டு மரணத்திற்கேதுவாயிருந்தது. தாவீது ஏழு நாட்கள் அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து ஜெபித்தான்.




*ஆனால் பிள்ளை இறந்து போயிற்று என்ற செய்தியை அறிந்த உடன், தாவீது தன் உபவாசத்தை விட்டு எழுந்து, குளித்து எண்ணெய் பூசிக் கொண்டு, ஆலயத்திற்கு சென்று ஜெபித்துவிட்டு வந்து, சாப்பிட்டான்.*




அதைக்குறித்து அவனுடைய ஊழியக்காரர் அவனிடத்தில் வந்து, நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து சாப்பிடுகின்றீரே என்றார்கள்.




அதற்கு தாவீது: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். *அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.* (2 சாமு. 12:21-23)




*மரணத்தைக் குறித்த இந்த தெளிவான சிந்தை நமக்கும் வேண்டும்!*




ஒருவர் வியாதிப்பட்டிருக்கும் போது, அவரை கர்த்தர் குணப்படுத்தும்படி ஜெபிக்கலாம். அப்படி ஜெபித்து ஏராளமானோர் சுகமாகியிருக்கின்றார்கள். ஆனாலும் *தேவன் தம் சித்தப்படி அவரை நம்மிடமிருந்து எடுத்துக் கொள்வாரென்றால், அதன் பிறகு, அவருக்காக வருத்தப்பட்டு நம் வாழ்நாள் முழுவதையும் வேதனையில் கழிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை* என்பதை தான் தாவீது வாழ்ந்து காட்டினார்.




கடந்த நாட்களில் நீங்கள் நேசித்த சிலர் உங்களை விட்டு கர்த்தரிடத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம். அதினிமித்தம், நீங்கள் இன்னும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றீர்களோ? *நீங்கள் உங்களை கர்த்தருடைய சித்தத்திற்கு விட்டுக் கொடுத்து, வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு கடந்து செல்ல வேண்டுமென்று கர்த்தர் விரும்புகின்றார்.*




*உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். ஆனால் கர்த்தரால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஒன்றுமேயில்லை.*

தாவீது கடந்ததை மறந்து எழுந்து சென்றபடியினால், கர்த்தர் சாலொமோனை அவனுக்குத்தந்தார். அந்த சாலொமோன்தான் அடுத்த அரசனாய் மாறினான். அவனைப் போல் ஞானமுள்ளவன் பூமியில் எவருமில்லை.




யோபு சொன்னதைப் போல, *கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்று கடந்து செல்லும் போது, கர்த்தர் புதிய ஆசீர்வாதங்களை நம் வாழ்க்கையில் தருகின்றவராயிருக்கின்றார். அது நம் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.*




*கடந்ததை நினைத்து கலங்காதே,*

*நடந்ததை மறந்துவிடு!*

*கர்த்தர் புதியன செய்திடுவார்,*

*இன்றே நீ காண்பாய்!*

*இன்றே நீ காண்பாய்!!*

சகோ. ஆல்வின் ஜான்சன்

+91 97 9000 2006




தாக்குப்பிடி திறன்

VG சித்தார்த்தா என்ற Cafe Coffee Day என்ற கடைகளின் ஸ்தாபகர் தன் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதினால், 7200 கோடி ரூபாய் கடன் பிரச்சனையில் சிக்கினார். காலம் செல்ல செல்ல, கடன் வட்டிக்கு மேல் வட்டி என்று பெருக ஆரம்பித்தது. எனவே அழுத்தம் தாக்குப்பிடிக்காமல், 2019ம் ஆண்டு தற்கொலை செய்து மரித்துப் போனார்.




ஆனால் அவரது மனைவி மாளவிகா, துணிச்சலாக செயல்பட்டு அதே கம்பெனியை கடனிலிருந்து கொஞ்ச கொஞ்சமாய் மீட்டார். 2023 ஜுலை தகவலின் படி அந்த கம்பெனியின் கடன் 7200 கோடியிலிருந்து வெறும் 440 கோடியாக குறைந்தது.




*பிரச்சனைகள் பெருகும் போது, அழுத்தம் அதிகமாக ஏற்படும்.* அதிக அழுத்தத்தினால் சிலர் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்கள், சிலர் தங்கள் கடமைகளை விட்டு ஓடிப் போகின்றார்கள், சிலர் தங்கள் வியாபாரம், ஊழியம், இலக்கு ஆகியவற்றை விட்டு விட்டு அமைதியாகிவிடுகின்றார்கள். வேறு சிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாக எல்லாவற்றையும் தொலைத்து விடுகின்றார்கள்.




*பிரச்சனைகளின் போது ஏற்படும் அழுத்தத்தை தாக்குப்பிடிக்கும் திறனைத்தான் தாக்குப்பிடி திறன் எனலாம். ஆங்கிலத்தில் RESILIENCE என்பார்கள்.*




*இந்த தாக்குப்பிடி திறன் பலருக்கு இல்லாததினால், உடனுக்குடன் அழுகின்றார்கள், மனம் சோர்ந்து போகின்றார்கள், வாழ்வில் விரக்தியோடு வாழ்கின்றார்கள். கர்த்தர் உங்களை பெலப்படுத்த விரும்புகின்றார்.*




பவுல் எபேசியருக்கு எழுதுகையில், *“நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,... வேண்டிக் கொள்கின்றேன்”* (எபே. 3:16) என்று எழுதுகின்றார்.




*ஆவியினாலே உள்ளான மனிதனில் வல்லமையாய் பலப்படும் போது, உங்கள் தாக்குப்பிடி திறன் அதிகமாகும். தைரியமடைவீர்கள்.*



ஆதி அப்போஸ்தலர்கள் கோழைகளாய் பூட்டிய அறைக்குள் பயந்து இருந்த போது, ஆவியானவர் அவர்களை நிரப்பினார். *அவர்கள் ஆவியானவராலே உள்ளான மனிதனில் பெலப்பட்டார்கள்.* அதற்குப்பின், தைரியமாய் வெளியே வந்து, இயேசுவுக்கு சாட்சி பகர்ந்தார்கள். கழுத்துக்கு கத்தி வந்த போதும், பயப்படாமல், நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவைத்தான் நாங்கள் பிரசங்கிக்கின்றோம் என்று சூளுரைத்தார்கள்.




யூத அரசியல்வாதிகளின் அழுத்தம், ரோம படைகளினால் உண்டான அழுத்தம், குடும்ப அழுத்தம், பொருளாதார அழுத்தம், சித்திரவதை அழுத்தம், மரண பய அழுத்தம், எதிர்கால பய அழுத்தம் இப்படி பல அழுத்தங்கள் அவர்களுக்கும் இருந்திருக்கும். ஆனால் தைரியமாக அத்தனை அழுத்தங்களையும் தாக்குப்பிடித்து, சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள். காரணம் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் உள்ளான மனிதனை தம் வல்லமையால் பலப்படுத்தியிருந்தார்.




*உங்கள் உள்ளான மனிதன் பலப்படும்படியாய், ஆவியில் நிரம்பி ஜெபியுங்கள். சோர்ந்து போகும் வேளைகளில் ஆவியில் நிரம்பி ஜெபிக்கும் பழக்கம் கொள்ளுங்கள். ஆவியானவர் உங்கள் இருதயங்களை பலப்படுத்தி நிமிர்ந்து நிற்கச் செய்வார்.*




👉 குடும்பத்தாரை இழந்து தனிமையில் வாழ்பவர்களுக்கு தேவை ஆவியின் பலம்




👉 பொருளாதாரத்தில் குறைவில் வாழ்பவர்களுக்கு தேவை ஆவியின் பலம்




👉 மனிதரால் ஒடுக்கப்படும்போது தேவை ஆவியின் பலம்




👉 குடிகார கணவனோடு வாழ தேவை ஆவியின் பலம்




👉 சண்டைக்காரியான மனைவியோடு வாழத் தேவை ஆவியின் பலம்




👉 ஊழியத்தில் பல வித போராட்டங்களை சந்திக்கும் போது தேவை ஆவியின் பலம்...




*இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எந்த சூழ்நிலையிலும் மன திடத்தோடு, அழுத்தங்களைத் தாக்குப்பிடியுங்கள். போராடுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்

+91 97 9000 2006


உங்கள் ஜாதகம்

இயேசுதான் மேசியா என்று கண்டு கொண்ட அந்திரேயா தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனை முதன் முறை பார்த்த மாத்திரத்தில், அவனை நோக்கி, *“நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய்”* என்றார்.




*கேபா* என்ற அரமேயு பாஷையின் வார்த்தைக்கு *கற்பாறை* என்று அர்த்தம். கற்பாறை கிரேக்க மொழியில் *Πέτρος (Petros)* என்று அழைக்கப்படும். அதைத்தான் ஆங்கிலத்தில் *பீட்டர்* என்றும் தமிழில் *பேதுரு* என்றும் அழைக்கின்றோம். *சீமோன் இயேசுவை சந்தித்த பின்னர் பேதுரு என்று அழைக்கப்பட்டான்.*




*முதன் முதல் சந்திப்பிலேயே இயேசு சீமோனின் ஜாதகத்தை கணித்துவிட்டார். நீ ஒரு கற்பாறை என்றார்.* அதன் விளக்கத்தை மத்தேயு 16:18ல் இயேசு கூறியுள்ளார். “மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” *நீ கற்பாறையாயிருக்கிறாய், உன் மேல் என் சபையை கட்டுவேன் என்றார் இயேசு. இதற்கு அர்த்தம், பேதுருவின் மூலமாக இயேசு தம் சபையை கட்டப்போகின்றார்.*




அதே போல பின் நாட்களில் சீமோன் பேதுரு மூலமாய் முதன் முதல் புதிய ஏற்பாட்டு சபை உருவானது. மிக ஆச்சரியமாயிருக்கின்றது. *ஆண்டவராகிய இயேசு ஒரு மனிதனை பார்த்த மாத்திரத்தில் அவன் மூலமாய் தாம் செய்யப்போகும் காரியங்களை சொல்லிவிட்டார்.* அவனோடு பழகவில்லை. அவன் நல்லவனா கெட்டவனா, திறமையானவனா இல்லையா, கடின உழைப்பாளியா சோம்பேறியா, நம்பத்தகுந்தவனா இல்லையா என்று அறிவதற்கு முன்னமே கர்த்தர் அவன் மூலமாய் தம் சபையை கட்டப்போவதாக அறிவித்து விட்டார்.




இது எப்படி நடந்தது? கவனியுங்கள், *சீமோன் கர்த்தரை சந்திக்கும் முன்னமே, கர்த்தர் சீமோனை நன்கு அறிந்துள்ளார். அவனைக் கொண்டு இந்த உலகத்தில் தேவன் செய்ய விரும்பும் காரியங்களுக்கான ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார். சீமோன் என்று கர்த்தரை சந்தித்தானோ, அன்று கர்த்தர் அத்திட்டத்தை அவனுக்கு வெளிப்படுத்தினார்.*




*சீமோனுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு திட்டம் வைத்துள்ளார். அந்த திட்டத்தின்படிதான் நம்மை அவர் நடத்துகின்றார். அவரை நீங்கள் சந்திக்கும் வேளையில், உங்களைக்குறித்த தேவ திட்டத்தை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.*




இன்று உலகத்தார் தங்கள் பிறந்த நேரத்தைக் கொண்டு தங்களுக்கான ஜாதகத்தை கணிக்கின்றார்கள். அந்த நேரத்தில் கிரகங்களின் நிலையைக் கொண்டு தங்கள் வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கின்றார்கள். தங்கள் குழந்தைகளை பெற்றெடுக்க தாங்கள் விரும்பும் நேரத்தையும் அவர்களே தீர்மானித்து, அந்த நேரத்தில் ஆப்ரேசன் மூலம் குழந்தையை பெற்றெடுத்து, அந்த நேரத்தைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை கணிக்கின்றார்கள். அது எப்படி உண்மையாயிருக்க முடியும்?




*கர்த்தர் உங்கள் வாழ்க்கைக்கான ஜாதகத்தை தன் கையில் வைத்துள்ளார். அவரை சந்திக்கிறவர்களுக்கு கர்த்தர் அதை வெளிப்படுத்துகின்றார். மேலும் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து வாழ அர்ப்பணிக்கின்றவர்கள் வாழ்க்கையில் கர்த்தர் தம் திட்டத்தை நிறைவேற்றுகின்றார். கிரகங்களின் நிலையைக் கொண்டு நம் வாழ்க்கையை அவர் நடத்தவில்லை. நம் வாழ்க்கையை நடத்த, கிரகங்களை கூட மாற்றி அமைக்கும் சர்வ வல்லவர் அவர்.*




*என்ன செய்ய போகின்றோம்? ஏது செய்ய போகின்றோம்? என்று குழம்பி கொண்டிருக்கும் தேவ பிள்ளையே, கர்த்தரிடம் சென்று உங்கள் ஜாதகத்தை அறிந்து கொள்ளுங்கள். அவர் உங்களைக் கொண்டு என்ன செய்ய விரும்புகின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவருக்கு கீழ்ப்படிந்து அந்த பாதையில் பயணியுங்கள். உங்கள் வாழ்க்கை மிகுந்த ஆசீர்வாதமாயிருக்கும்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்

+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.