Type Here to Get Search Results !

தன் சகோதரனை பகைக்கிறவன் | Alwin Johnson Short Message | Motivation Speech | Jesus Sam

தன் சகோதரனை பகைக்கிறவன் | இச்சையின் கோர முகம்! | 

தன் சகோதரனை பகைக்கிறவன்

ஒரு வரம் பெற்ற தேவ ஊழியர் என்று அழைக்கப்படும் ஒரு நபர் தன் உடன் பிறந்தோரிடமே பேசுவதில்லை என்று கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டேன். இயேசுவை ஏற்றுக்கொண்ட அனுபவமுள்ளவர்கள் பலர் இப்படிப்பட்ட கசப்புகளுடன் வாழ்வதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. சபைகளுக்குள்ளும் முகத்தை சுளிக்க வைக்கும் பல சண்டைகள் சச்சரவுகள்.

வரங்களை பெறுவது எப்படி? அற்புதங்களை செய்வது எப்படி? மேலான அனுபவங்களை பெறுவது எப்படி? என்று *ஆவிக்குரிய வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை பெற்று செழிப்புள்ள வாழ்க்கையை வாழ இன்றைய கிறிஸ்தவத்தில் அதிகம் போதிக்கப்படுகின்றது. ஆனால் கிறிஸ்தவத்தின் அடிப்படையான சகோதர சிநேகம் புறக்கணிக்கப்படுகின்றது.*

வேதம் சொல்கின்றது, *தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.* (1 யோவான் 2:11)

சகோதரனை பகைக்கின்றவன் எத்தனை வருட விசுவாசியாக இருந்தாலும், எத்தனை பெரிய ஊழியராக இருந்தாலும் அவர் இருளிலே தான் இருக்கின்றான், இருளில் தான் நடக்கின்றார். மேலும் கண்கள் குருடாக்கப்பட்டு தண்டனைக்கு நேராக செல்கின்றான் என்று வேதம் தெளிவாகச் சொல்கின்றது. *“ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்”* (1 யோவான் 2:9) அவன் இரட்சிக்கப்படவே இல்லை.

*செழிப்பு, எழுப்புதல், வல்லமை என்று அதிகம் பேசும் இன்றைய கிறிஸ்தவம், சகோதர சிநேகத்தையும், ஐக்கியத்தையும் ஒரு பொருட்டாய் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியம்.* 

இயேசு கிறிஸ்து இதைக் குறித்த தமது பாரத்தை யோவான் 17ம் அதிகாரத்தில் உரைத்திருப்பதை வாசித்துப்பாருங்கள். *“பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.”* என்று இயேசு ஜெபிக்கின்றார் (யோவான் 17:11)

*பிதாவும் குமாரனும் ஒன்றாயிருப்பது போல சபையில் ஒவ்வொருவரும் ஒன்றாயிருக்கும் படி இயேசு ஜெபிக்கின்றார். இது சபையில் நடக்கின்றதா?*

*உடன் பிறந்தோரிடமே அன்பு செலுத்த முடியாத “கிறிஸ்தவர்கள்” எப்படி சபையில் உள்ள சகோதர சகோதரிகளிடம் அன்பு செலுத்துவார்கள்?*

சகோதர சிநேகம், அன்பு, பிறரை மன்னித்தல், விட்டுக் கொடுத்தல், சகித்துக் கொள்ளுதல் போன்ற தெய்வீக சுவாபங்கள் சபைகளில் அதிகம் பிரசங்கிக்கப்பட வேண்டும். கிறிஸ்தவர்கள் முதலில் கிறிஸ்துவைப் போல் மாறிட வேண்டும். வரங்கள், வல்லமை, எழுப்புதல் எல்லாம் பிற்பாடுதான். *அடிப்படையே (அஸ்திபாரமே) இல்லாமல் கோபுரம் கட்டின கதைதான் இன்றைய எழுப்புதல் ஜெபங்கள்.*

*“நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.”* (1 கொரி. 13:2)

கர்த்தர் நம்மை உணர்த்துவாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

இச்சையின் கோர முகம்!
அவர் ஒரு உலக பிரசத்தி பெற்ற சுவிசேஷகர். அவருடைய பிரசங்கங்கள் அத்தனை அற்புதமாயிருக்கும். ஞானமாய் சுவிசேஷத்தை போதிக்கக்கூடிய கிருபை பெற்றவர். அவருடைய ஆங்கில புலமையை சொல்ல வார்த்தையே இல்லை. அத்தனை திறமை நமக்கு இருக்கக்கூடாதா? என்று நான் ஏங்கின நாட்கள் உண்டு. ஆனால் அவர் ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவருடைய மரணத்திற்கு பின் குற்றம் சாட்டப்பட்டு, நிருபிக்கப்பட்டது.

*எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும், அவர்களை வீழ்த்தும் சக்தி பெற்ற சாத்தானின் மிகப்பெரிய ஆயுதம் இச்சை.*

தாவீது ஒரு உன்னதமான தேவ மனிதன். அவனுடைய குணத்தின் மாண்பை விவரிக்க வார்த்தையே இல்லை. தன்னை கொல்ல வந்த சவுலையும் நேசித்த அற்புதமான மனிதன். ஆனால் இச்சையினாலே ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி, அதன் பின்னர் அதை மறைக்க, அவளுடைய புருஷனை, துணிகரமாய் கொன்றான்.

*இச்சை எத்தனை நல்லவனையும், ஒரு நொடியில் கொடூரமானவனாக்கி விடுகின்றது பாருங்கள்.* 

தன்னை கொல்ல வந்த சவுலின் சால்லையை அறுக்கும் போதே தாவீதின் இருதயம் அடித்துக் கொண்டது. (1 சாமு. 24:5) ஆனால் தனக்கு ஊழியம் செய்யும் ஒரு சேவகனின் மனைவியை அபகரித்து, அவளோடு விபச்சாரம் செய்யும் போது, அவனுடைய மனது அடித்துக் கொள்ளவில்லை. ஒன்றுமறியாத அந்த சேவகனை அநியாயமாய் கொல்லும் போதும் கூட அவனுடைய மனது கொஞ்சமும் அடித்துக் கொள்ளவேயில்லை. (2 சாமு. 11)

*இச்சையின் கோர முகத்தை புரிந்து கொள்ளுங்கள்.* 

“தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது” என்று வேதம் சொல்கின்றது (2 சாமு. 11:27)

மனிதன் பாவ மாம்சத்தில் இருக்கின்றபடியினால், இச்சை என்பது எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும் ஒன்றுதான். *அதை அடக்கி ஆளத் தெரிந்தவன் நல்லவன். அதனை அடக்காமல், தன் இச்சையின்படியெல்லாம் செய்பவன் கெட்டவன்.*

*இச்சை உங்களை ஆளும் முன், நீங்கள் அதை ஆளக்கற்றுக் கொள்ளுங்கள்.* திருமண உறவுக்குள் இருக்க வேண்டிய உணர்ச்சிகளை, வெளியே கசியவிடத் தொடங்குவீர்களென்றால், ஆரம்பத்திலேயே அதை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அது உங்களை அவமானப்படுத்தி, நடு வீதியில் நிறுத்திவிடும்.

*நீங்கள் எத்தனை நல்லவர், வல்லவர், திறமையானவர், தியாகச் செம்மல், ஜெபவீரர், வரம் பெற்றவராயிருந்தாலும், உங்கள் கடந்த கால வாழ்க்கையில், பல வருடங்களாய் கடினமாய் உழைத்து நீங்கள் சம்பாதித்த நற்பெயரை ஒரு நொடியில் அசிங்கப்படுத்தி, உங்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடும்.*

*உங்கள் வாழ்க்கையைப்பற்றி உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது! எனவே உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். இச்சை என்னும் விஷச் செடி உங்களுக்குள் வேரூன்ற விடாதிருங்கள். அது மரமாகி, உங்களை அழிக்கும் முன், அதை பிடுங்கி எடுங்கள். இச்சையை தூண்டுகின்ற, எந்த ஒரு பொழுது போக்கிற்கும், நட்புக்கும் ஒரு நாளும் இடம் கொடாதிருங்கள்.* 

*கவனம்!*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.