கர்த்தர் சிலரை அடிப்பது ஏன்? | கர்த்தர் சிலரை மட்டும் ஆசீர்வதிப்பது ஏன்? | தாவீதைப் போல் நடனம் ஆடுங்கள்! | கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் | தெய்வீகச் சொத்து! | நீ பேதுருவாய் இருக்கிறாய்!
கர்த்தர் சிலரை அடிப்பது ஏன்?
*பழைய ஏற்பாட்டில் தேவனுடைய பெட்டி அல்லது உடன்படிக்கை பெட்டி என்பது, தேவன் வாசம் செய்யும் இடமாக இருந்து வந்தது.* ஒரு இடத்தில் தேவனுடைய பெட்டி இருந்தால் தேவன் அங்கு இருக்கின்றார் என்று அர்த்தம்.
ஆனால் அந்த தேவனுடைய பெட்டி, நேர்மறையாக, எதிர்மறையாக அல்லது நடுநிலையாகவென்று வெவ்வேறு விளைவுகளை வெவ்வெறு மனிதர்களுக்கு கொடுத்திருக்கின்றதை நாம் வேதத்தில் காண முடியும்.
*சிலருக்கு அந்த பெட்டியின் மூலம் தேவன் எதிர்மறையாய் செயல்பட்டு, கடுமையான தண்டனையை கொடுத்து, அவர்களை வாதித்துள்ளார்.*
50 வருடமாய் தேவனுடைய பெட்டியை தன் வீட்டில் வைத்திருந்தான் அபினதாப். ஆனால் பெட்டியை அவன் வீட்டிலிருந்து கொண்டு செல்கையில், மாட்டு வண்டி தடுமாறி பெட்டி கீழே விழப் போன போது, அபினதாபின் மகன் ஊசா தேவனுடைய பெட்டியை தாங்கி பிடிக்க கையை நீட்டினான். *“அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்”* என்று பார்க்கின்றோம் (2 சாமு. 6:6-7) அவன் அங்கே செத்தான்.
*ஏன் கர்த்தர் சிலரை அடிக்கின்றார்?*
கவனியுங்கள்! *கர்த்தர் ஒரு மனிதனின் இருதயத்தின் நோக்கம் முதலாய் அனைத்தையும் அறிந்தவர்.* மனிதர்களாகிய நாம் முகத்தை மட்டுமே பார்த்து, ஒருவரை நல்லவன் என்றும், கெட்டவன் என்றும் முடிவு செய்து விடுவோம். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கின்றார்.
*ஊசாவை தேவன் அடித்தது பெட்டியை பிடிக்க கையை நீட்டியதால் மாத்திரம் அல்ல என்று நான் நம்புகின்றேன்.* 50 வருட காலமாய் பெட்டி அவன் வீட்டில் இருந்த போது, அவன் தேவ பிரசன்னத்திற்கு முன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தான் என்பதை நாம் அறியோம். *“அவனுடைய துணிவினிமித்தம்” என்ற வார்த்தையை தேவன் பயன்படுத்துவதால், அவன் சில பாவ காரியங்களை துணிகரமாக தொடர்ந்து செய்து கொண்டு வந்திருக்கலாம்.*
துணிகரமான பாவங்கள் தேவனுடைய அடியை கொண்டுவரும் என்பதற்கு வேதத்தில் அநேக ஆதாரங்கள் உள்ளன.
*அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.* (நீதி. 29:1)
*நம் ஆண்டவர் இரக்கத்தின் தேவன், அடுக்கடுக்கான மறு வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டே வருவார். ஆனால் அந்த இரக்கங்களை பயன்படுத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் துணிகரமாய் செயல்படுவோர் மீது தேவனுடைய அடி விழுகின்றது.*
👉 ஏலியும், ஏலியின் குமாரர்களும் (உடன்படிக்கைப் பெட்டியை கையிலே வைத்திருந்தும்) முற்றிலும் தேவனால் கைவிடப்பட்டார்கள்.
👉 ஆரோனின் குமாரர்கள் நாதாபும் அபியூவும் தேவ சமுகத்து அக்கினியால் சுட்டரிக்கப்பட்டார்கள்.
👉 சவுல் ராஜா அப்படிப்பட்ட ஒரு கேஸ் தான். கடைசியில் தேவனால் முழுமையாய் கைவிடப்பட்டான்.
👉 ஏசா, பிற்பாடு மனம் மாறுதலை தேடியும் காணவில்லை.
👉 யூதாஸ் கூட வாய்ப்புகளை தவறவிட்டு அழிந்து போனவன்தான்!
திருவிருந்தை தகுதியில்லாமல் எடுப்பவர்களைக்குறித்து பவுல் எழுதும் போது,* “அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்”* என்று சொல்கின்றார். (1 கொரி 11: 29-30)
*எனவே துணிகரமாய் தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருக்கின்றவர்கள் மேல் தேவனுடைய அடி விழுகின்றது.*
*உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள்! எத்தனையோ முறை கர்த்தர் உங்களை உணர்த்தியிருந்தும், தொடர்ந்து சில பாவ பழக்க வழக்கங்களை உங்கள் தொடர்கதையாய் வைத்திருந்தீர்களென்றால் ஒரு நாள் அடி நிச்சயம். அது பயங்கரமானதாக இருக்கும்.*
*“தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து,… முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” (எபி. 6:7,8)*
கர்த்தர் உங்களை உணர்த்துவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
கர்த்தர் சிலரை மட்டும் ஆசீர்வதிப்பது ஏன்?
உடன்படிக்கைப் பெட்டியை தாவீது ஓபேத் ஏதோம் என்பவனின் வீட்டில் தற்காலிகமாக மூன்று மாதம் வைத்திருந்தான். “கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் *கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்…”* (2 சாமு. 6:11, 12).
*இதற்கு முந்தைய சுமார் 70 ஆண்டு காலம், அபினதாப் என்பவனின் வீட்டில் தேவனுடைய பெட்டி இருந்த போது, அவன் வீட்டில் கர்த்தர் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் இங்கு ஓபேத் ஏதோமின் வீட்டில் 3 மாதம் தான் தேவனுடைய பெட்டி இருந்தது, அந்த மூன்று மாத காலத்தில் அவன் திரளாக ஆசீர்வதிக்கப்பட்டான்.*
*கர்த்தர் யாரை ஆசீர்வதிக்கின்றார்?*
*யார் தேவனுக்கு பயந்து, அவருக்கு முக்கியத்துவமும் கனமும் கொடுத்து வாழ்கின்றார்களோ அவர்களையே தேவன் ஆசீர்வதிக்கின்றார். என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.* (1 சாமு. 2:30)
ஓபேத் ஏதோம் தேவனுக்கு பயந்து வாழ்ந்திருக்க வேண்டும். *கர்த்தருக்கு பயப்படும் பயம் என்பது, தேவன் நம்மோடு இருக்கின்றார் என்ற உணர்வோடு நம் அன்றாட காரியங்களை செய்வதாகும்.* தேவன் இருக்கின்றார் என்ற உணர்வு இருந்தால், அவருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்ய முடியாது.
*தேவனுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுத்துப் பாருங்கள்! கர்த்தர் உங்களை தமது நன்மைகளால் நிரப்பி விடுவார்.*
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத். 6:33)
*உங்கள் அன்றாட செயல்பாடுகளில், உங்கள் வாழ்வின் தீர்மானங்களில், உங்கள் குடும்பத்தில் கர்த்தருக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுத்து, அவரை மையமாய் கொண்டு உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். அவருக்கு பிரியமில்லாதவைகளை உங்கள் தனிப்பட்ட வாழ்விலும், உங்கள் இல்லத்திலுமிருந்து அகற்றுங்கள். கர்த்தருடைய பிரசன்னம் இருக்கும் இடத்தில் அசுத்தத்திற்கு இடமில்லை.*
👉 வீட்டில் அசுத்தமான பொழுது போக்குகள் வேண்டாம்
👉 குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகள் வேண்டாம்
👉 எரிச்சலின் வார்த்தைகளை ஒருவருக்கொருவர் பயன்படுத்த வேண்டாம்
*சர்வ வல்லமையுள்ள தேவனை உங்கள் வீட்டில் வைத்துக் கொண்டே, அவரை துக்கப்படுத்தும் காரியத்தை செய்வது நமக்கு ஆசீர்வாதமாக இருக்காதே!*
*மாறாக ஜெபமும், துதியும், ஸ்தோத்திரமும் உங்கள் வீட்டில் தொனிக்கட்டும். அன்பும், அரவணைப்பும், மன்னிப்பும் மலரட்டும். இதுவே தேவன் பிரியப்படுகின்ற வீடு. இந்த வீடு ஆசீர்வதிக்கப்படும்.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
தாவீதைப் போல் நடனம் ஆடுங்கள்!
தாவீது ஒரு பேரரசன். ஆனாலும் உடன்படிக்கைப் பெட்டியை கொண்டு செல்லும் போது, அதன் முன், *”தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.”* (2 சாமு. 6:14) என்று பார்க்கின்றோம்.
இந்த வசனத்திலிருந்து, தாவீது போல நடனம் ஆடவேண்டுமென்று சொல்லி, மைக்கேல் ஜேக்சன் போல ஆட ஆரம்பித்துவிட்டார்கள். தாவீது ஆடியது, அவனை மகிமைப்படுத்தும் நடனம் அல்ல! அவனை அற்பனும் நீசனுமாய் காட்டிய நடனம்!
அதாவது தாவீது தன் மகிமை பொருந்திய, விலையேறப்பெற்ற *இராஜ வஸ்திரத்தை கழட்டி வைத்துவிட்டு,* ஒரு சணல் நூல் ஏபோத் எனப்படும், *ஆலய பணிவிடைக்கார ஆடையை தரித்துக் கொண்டு,* தேவனுக்கு முன்பாக நடனமாடி, அவரை ஆராதித்தான்.
இந்த *சணல் நூல் ஏபோத்* என்னும் ஆடை ஆசாரியனுடைய ஆடையுமல்ல, ஆசாரியனுடைய ஆடையாகிய ஏபோத் “பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்” செய்யப்பட்டது (யாத். 28:6). ஆனால் இந்த ஆலய பணிவிடைக்கார ஆடையாகிய ஏபோத், சாதாரணமான சணல் போன்றவற்றால் செய்யபட்டது. ஓடியாடி வேலை செய்வதற்கும், அழுக்காகமலிருப்பதற்கும், சீக்கிரத்தில் கிழியாமல் இருப்பதற்கும் ஏற்றவிதத்தில் செய்யப்பட்டது.
*தாவீது தேவனுக்கு முன்பாக வந்ததும், தன் இராஜ மகிமை எல்லவற்றையும் துறந்து, ஒரு சாதாரண பணிவிடைக்காரனாய் தன்னைத் தாழ்த்தியதைத்தான் இந்த வசனத்தில் பார்க்கின்றோம்.*
*கர்த்தருக்கு முன்பாக நாம் வரும்போதெல்லாம், நம்முடைய சமுக, பொருளாதார, கல்வி, பதவி, வயது, அனுபவம் போன்ற எல்லா அந்தஸ்துகளையும் கழட்டி வைத்துவிட்டுதான் வரவேண்டும்.*
சமுகத்தில் நாம் மதிக்கத்தக்கவர்களாயிருக்கலாம், பொருளாதாரத்தில் நாம் ஐசுவரிவான்களாயிருக்கலாம், பதவியில் நாம் உயர்ந்தவர்களாயிருக்கலாம், வயதில் கூட நாம் மூத்தவர்களாயிருக்கலாம். ஆனால் இந்த அண்ட சராசரங்களை தம் வார்த்தையால் படைத்த தேவனுக்கு முன்பாக, அவையெல்லாம் தூசி போன்றவை.
*உலகத்தில் ஆயிரம் அதிகார அந்தஸ்து உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ஆலயத்திற்கு செல்லும்போது, வாசல்படியிலேயே அவையெல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டு, ஒரு கர்த்தருடைய பிள்ளையாய், ஒரு கர்த்தருடைய பணிவிடைக்காரனாய் உள்ளே செல்லுங்கள்.*
இதைத்தான் தாவீது தன் மனைவியாகிய மீகாளிடத்தில் சொல்கின்றான், *“என்னை... தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்”* என்றான். (2 சாமு. 6:21,22)
*தாவீது போல தேவ சமுகத்தில் உங்களை தரைமட்டும் தாழ்த்துங்கள். உங்கள் அந்தஸ்தாகிய வஸ்திரங்களோடு விறைப்பாய் நிற்காமல், தேவ சமுகத்தில் ஒரு குழந்தையாய் மாறிவிடுங்கள். ஆராதனை வேளைகளில் மகிழ்ச்சியாக அசைந்து கொடுத்து, ஆராதியுங்கள். முழு பெலத்தோடு கைகளைத் தட்டி பாடல்களை பாடுங்கள். கைகளை அசைத்து தேவனை ஆராதியுங்கள்.*
*ஆவியானவர் போதகர் மூலம் பேசும் வார்த்தைகளுக்கு, உங்கள் உணர்வுப்பூர்வமான பதிலை வெளிப்படுத்துங்கள். ஆமேன்! அல்லேலூயா!! என்று சொல்லி தேவனுடைய வார்த்தையை ஆமோதியுங்கள்.*
*இப்படி நம்மை தாழ்த்துவதுதான் தாவீதின் நடனத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம்.*
*“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” (மத். 5:3)*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார்
இப்போதும் *கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார்* என்பதை உனக்கு அறிவிக்கிறேன். (1 நாளா. 17.10)
ஒவ்வொரு ஊரிலும் பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ள குடும்பங்கள் இருப்பார்கள். எங்கள் ஊரில் என். ஆர். கே இராஜரத்தினம் குடும்பம் (ஸ்டான்டார்டு பயர் ஒர்க்ஸ்), அரசன் குடும்பம், அய்ய நாடார் குடும்பம் என்று பல பெயர்பெற்ற குடும்பங்கள் உள்ளனர். நம் தேசிய அளவில் பார்த்தால் அம்பானி குடும்பம், அதானி குடும்பம், டாடா குடும்பம் என்று பலர் உள்ளனர்.
அனைத்து குடும்பங்களும், ஏதோ ஒரு காலத்தில் ஒரு தனி நபரின் உழைப்பிற்கு பின்னரே இவ்வாறு புகழ் பெற்று விளங்கத் துவங்கியிருப்பார்கள். ஒரு மனிதன் உழைத்து செல்வந்தனான பின்னர் அவருடைய குடும்பமே அந்த பட்டணத்தின் செல்வாக்கான குடும்பமாய் மாறிப் போகும்.
தாவீது மிக எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவன். ஆனால் அவன் தேவனுடைய இருதயத்திற்கு பிரியமாய் இருந்ததினால், தேவன் அவனை ராஜாவாக உயர்த்தினார். அதன்பின்னர் கர்த்தர் அவனுடைய குடும்பத்தை இஸ்ரவேலிலேயே உயர்ந்த குடும்பமாய் மாற்றினார். வெறும் பணக்காரனாக அதிகாரமுள்ளவனாக மாறியதை நான் பேசவில்லை. பணம் இன்று இருக்கும் நாளை அழிந்து போகும். அதிகாரமும் கைமாறும்.
*உன்னதமான தேவ திட்டத்தை உலகில் நிறைவேற்றும் உன்னத குடும்பமாக தாவீதின் குடும்பத்தை கர்த்தர் மாற்றினார். தேவ குமாரன் இயேசுவையே தாவீதின் சந்ததி, தாவீதின் குமாரன் என்று அழைக்கும் அளவிற்கு, தாவீதின் குடும்பத்தை உயர்ந்த குடும்பமாய் மாற்றினார்.*
*நாம் எல்லாருமே நம்முடைய வீடு அல்லது குடும்பம் கட்டப்படவேண்டுமென்றே விரும்புகின்றோம், பிரயாசப்படுகின்றோம், அதற்காக அரும்பாடுபட்டு உழைக்கிறோம். ஆனால் பல நேரத்தில் நமக்கு தோல்வியே மிஞ்சுகின்றது. நம் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?*
*தேவனுடைய சமுகத்தை (உடன்படிக்கைப் பெட்டியை) தாவீது தேடின விதம் தான் கர்த்தர் தாவீதை ஆசீர்வதிக்க காரணமாயிற்று.* அந்நாட்களில் தேவனுடைய பெட்டி எனப்படும் உடன்படிக்கைப் பெட்டி கர்த்தருடைய சமுகத்தை குறித்தது.
👉 கீரியாத் யாரீமில் கேட்பாரற்று கிடந்த உடன்படிக்கைப் பெட்டியை திரும்ப கொண்டு வர தாவீது விரும்பினான். அதற்கு முந்தின சவுலின் நாட்களில் சவுல் அதைக்குறித்து சற்றும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. (1 நாளா 13.3)
👉 தேவனுடைய பெட்டி கொண்டுவரப்படுகையில் அதன் முன்பு ஒரு சிறுபிள்ளையைப் போல் தன்னைத்தாழ்த்தி ஆடிப்பாடி ஆராதித்தான். (1 நாளா. 15.29)
👉 தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே இருந்தபோது, அவனால் நிம்மதியாக மரவீட்டிலே குடியிருக்க முடியவில்லை. (1 நாளா. 17.1). கர்த்தருக்கு எப்படியாகிலும் ஆலயம் கட்டவேண்டுமென்று கடல் மணலத்தனையாய் செல்வங்களை குவித்து சேர்த்து வைத்தான். (1 நாளா.22.14)
தன்னுடைய பிள்ளை அடுத்த ராஜாவாக வேண்டுமென்று திட்டம் தீட்டி தீவிரமாக செயல்படவில்லை. , தனக்கு செல்வங்களை குவித்து தன் பெயரை நிலைநாட்ட வேண்டுமென்று எள்ளளவும் நினைக்கவில்லை. தன் குடும்பத்திற்கு பெருமளவு சொத்துக்களை சேர்ப்பதைக்குறித்து யோசிக்கவும் இல்லை.
தாவீது தன் குமாரனான சாலொமோனிடம், ஆலயத்தைக்கட்டுவதற்குத்தான் ஏராளமான சொத்துக்களை ஒப்புவிக்கின்றான். ஆனால் கர்த்தர் தாவீதுக்கு நிலையான வீட்டை கட்டுவித்தார். அவனுடைய சந்ததியில் இராஜாக்கள் தோன்றி கடைசி வரை இஸ்ரவேலை அரசாண்டார்கள். கடைசியாக இராஜாதி இராஜா இயேசு தாவீதின் சந்ததியில் உதித்தார்.
*உங்கள் குடும்பம் கட்டப்படவேண்டுமா? உங்கள் பிள்ளைகள் கர்த்தருக்காய் பயன்பட வேண்டுமா? உங்கள் சந்ததி ஆசீர்வதிக்கப்பட வேண்டுமா? நீங்கள் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். கர்த்தருடைய சமுகத்தை நாடுங்கள், கர்த்தருடைய சமுகத்தில் நேரம் செலவழியுங்கள், கர்த்தருடைய சுவிசேஷ ஊழியத்திற்காக செலவழியுங்கள்.*
*விசேஷமாக உங்கள் பிள்ளைகளை மிஷனரியாக அனுப்ப ஒப்புக் கொடுங்கள். மிஷனரி தரிசனத்தை விதைத்து பிள்ளைகளை வளருங்கள். உங்கள் குடும்பம் இவ்வுலகத்திற்கே ஆசீர்வாதமான குடும்பமாய் மாறும்.*
உங்கள் குடும்பம் கட்டப்படும்.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
தெய்வீகச் சொத்து!
இரு நண்பர்கள் ஒன்றாய் படித்தனர். ஒருவன் பணக்கார வீட்டுப்பிள்ளை, மற்றொருவன் ஏழையின் பிள்ளை. படித்து முடித்த தும், அந்த ஏழையின் பிள்ளை ஒரு வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். மிகுந்த பிரயாசம், கடின உழைப்பு, வேர்வை சிந்தி உழைத்தான். பல அவமானங்கள், நிந்தைகள், ஏமாற்றங்கள் வழியாக வாழப் போராடினான்.
ஆனால் அந்த பணக்கார வீட்டுப்பிள்ளை, படித்து முடித்த உடன் தன் தகப்பனுடைய வியாபாரத்தில் உயர் பொறுப்பில் வைக்கப்பட்டான். வீடு, கார், தொழிற்சாலை என செல்வ செழிப்பில் வாழ்ந்தான்.
சொந்த உழைப்பில் முன்னேறுகின்றவர்கள் வாழ்க்கையில் எத்தனை கஷ்டப்படுகின்றார்கள். ஆனால் தகப்பன் சம்பாதித்துத் தந்த சொத்தில் அல்லது வியாபாரத்தில் வாழுகின்றவர்கள் நிம்மதியாய் வாழுகின்றார்கள்.
எனவே தான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டுமென்று போராடுகின்றார்கள். வீடு, நிலம், தங்கம், பணம் என்று எதையாகிலும் சேர்த்து அவர்கள் பெயரில் வைத்துவிட்டு செல்கின்றார்கள்.
ஆனால், *இவையெல்லாவற்றையும் விட பிள்ளைகளுக்கு சம்பாதிக்க, ஒரு மிகப்பெரிய தெய்வீக சொத்து ஒன்று இருக்கின்றது. அது உங்கள் சந்ததியை தலைமுறை தலை முறையாய் ஆசீர்வதிக்கும்.*
தாவீக்கு கர்த்தர் சொன்னார்: “உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு *உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.* அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; *அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.”* (2 சாமு. 7:12-13)
*தாவீது தேவ பக்தியோடு வாழ்ந்ததினாலும், தேவனுக்கு ஆலயத்தை கட்ட முயற்சித்ததினாலும் கர்த்தர் அவன் சந்ததி முழுவதையும், ஆசீர்வதித்தார்.* அவன் சந்ததியினருக்கு நிரந்தர சிங்காசனத்தைத் தருவேன் என்றார். தாவீதுக்குப் பின் வந்த 18 சந்ததியிலிருந்து 20 அரசர்கள் எழும்பி யூதேயாவை ஆண்டனர். யூதா பாபிலோனுக்கு சிறைப்பட்டு போகும் வரை தாவீதின் வம்சம் தான் அரச பதவியிலிருந்தது.
*பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்க, இதைவிட பெரிய சொத்து வேறு என்ன இருக்கின்றது?*
*ஒரு மனிதனின் பக்தி வாழ்க்கை அடுத்த 18 தலைமுறையை அரச பதவியில் நிலைக்கச் செய்யுமென்றால், நம்முடைய பக்தி வாழ்க்கை எத்தனை முக்கியமானது என்பதை யோசித்துப் பாருங்கள்.*
பெற்றோர்கள், தேவ பக்தியோடு வாழ்வதே, பிள்ளைகளுக்கு சேர்க்கும் மிகப்பெரிய சொத்தாகும். தாவீது கர்த்தருக்கு பயந்து, தீமையை விட்டு விலகி வாழ்ந்தான். அவன் பாவம் செய்த போது, தீர்க்கதரிசி கண்டித்த போதும், தன்னைத் தாழ்த்தி மனந்திரும்பினான். கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட தீவிர தன் சம்பாத்தியம் எல்லாவற்றையும் கொடுத்தான். இப்படிப்பட்ட குணங்கள் அவன் பிள்ளைகளை ஆசீர்வதித்தது.
தாவீதின் மகன் சாலொமோன், ஒன்றும் பரிசுத்தவான் அல்ல. கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்கள் அநேகம் செய்தான். ஆனாலும், 40 வருடம் எந்த யுத்தமும் இல்லாமல், எந்த வேதனையும் இல்லாமல், திரளான ஐசுவரியத்தைக் கொண்டு செழிப்பாக அரசாட்சி செய்து வாழ்ந்தான். அவனைப் போல் ஐசுவரியமுள்ளவனும் ஞானமுள்ளவனும் பூமியிலேயே இல்லையாம். *இவையெல்லாம் அவனுடைய பக்தியினால் வந்தது அல்ல!*
*அவையெல்லாம், அவன் தகப்பன் தாவீது சேர்த்து வைத்த தெய்வீக சொத்து!*
*உங்கள் பிள்ளைகளுக்கு தெய்வீக சொத்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றீர்களா?*
👉 தேவ பக்தியோடு வாழுங்கள்
👉 பாவத்திற்கு விலகி வாழுங்கள்
👉 முதலாவது தேவ ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள்
👉 ஊழியங்களுக்காக அதிகம் கொடுங்கள், பிரயாசப்படுங்கள்.
*உங்கள் பிள்ளைகள் நிச்சயம் ஆசீர்வாதமாயிருப்பார்கள்.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
நீ பேதுருவாய் இருக்கிறாய்!
இயேசு தம்முடைய சீஷர்களைப்பார்த்து, நீங்கள் என்னை யாரென்று சொல்கின்றீர்கள் என்று கேட்டார். அனைவரும் அமைதியாயிருந்தார்கள். ஆனால் சீமோன் பேதுருவோ, நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கையிட்டான். அதற்கு இயேசு *“யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்”* என்றார்.
இயேசு பேதுருவை *யோனாவின் குமாரனாகிய சீமோனே* என்று அழைத்துவிட்டு, அடுத்த வசனத்தில் “மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், *நீ பேதுருவாயிருக்கிறாய்,* இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார். (மத். 16:18)
பழைய பெயராகிய *சீமோன்* என்பதையும், புது பெயர் *பேதுரு* என்பதையும் கூறி அடுத்தடுத்து அழைப்பதில் இயேசுவுக்கு ஒரு நோக்கமுண்டு.
பழைய பெயர் பழைய வாழ்க்கையைக் குறிக்கின்றது. மீனவன், கல்வியறிவில்லாதவன், ஞானமாய் பேச தெரியாதவன், கோழைத்தனமானவன், சமுதாயத்தில் நசுக்கப்பட்டவன், தொழிலிலும் ஆசீர்வாதமில்லை... *இப்படி பேதுருவுக்கென்று ஒரு பழைய வாழ்க்கை உண்டு. அப்படிப்பட்ட வாழ்க்கையிலிருந்து தான் இயேசு அவனை அழைத்து, பேதுரு என்ற புது பெயரை சூட்டினார்* (யோவான் 1:42).
*புது பெயர் அவனுடைய புதிய வாழ்க்கையைக் குறிக்கின்றது,* தேவனால் முன்குறிக்கப்பட்டவன், அழைக்கப்பட்டவன், தலைவன், அப்போஸ்தலன், கர்த்தருடைய சபையின் அஸ்திபாரம், ஆத்தும ஆதாய வீரன், அற்புத அடையாளங்கள் செய்பவன், யூதன் புறஜாதி சமுதாயப் பிரிவினைச்சுவரை உடைப்பவன்... இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அநேக வேளைகளில் பேதுரு, பழைய சீமோனாக தன்னை நினைத்துக் கொள்வதால் அவனுக்கு ஆர்வமிருந்தும், ஆவிக்குரிய காரியங்களில் அவனால் வளர முடியவில்லை. தண்ணீரில் நடந்தால் மூழ்கிப் போகின்றான், இயேசுவே கடிந்து கொள்ளும் அளவிற்கு மாம்சீகமாய் பேசுகின்றான், கடைசியில் இயேசுவையே மறுதலிக்கும் அளவிற்கு போய்விட்டான். அதனால் தான் இயேசு, *நீ பேதுருவாய் இருக்கின்றாய்* என்று அவனுக்கு நினைப்பூட்டுகின்றார்.
நாமும் பல நேரங்களில் கர்த்தர் நமக்கு வைத்திருக்கும் புது வாழ்க்கையின் ஆசீர்வாதங்களையும் மேன்மைகளையும் மறந்து, பழைய மனிதனாகவே நம்மை நினைத்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய பழைய வாழ்க்கையின் பாவங்கள், பெலவீனங்கள், குறைகளையெண்ணி அதுவாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தால் நாம் ஆசீர்வாதமாயிருக்க முடியாது.
கர்த்தர் உங்களுக்கு சூட்டியுள்ள உங்கள் புதுப் பெயர் என்ன? உங்களுக்கு தேவன் கொடுத்துள்ள புது வாழ்க்கை என்ன? புது அடையாளம் என்ன? கர்த்தர் உங்களை அழைத்திருக்கும் மேன்மையான அழைப்பு என்ன? இரட்சிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் மேன்மையான புது வாழ்க்கையைத் தருகின்றார். அந்த புது வாழ்க்கையை மறந்து விடாதீர்கள். அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
*நீங்கள் பழைய சீமோன் அல்ல! புதிய பேதுரு! உங்கள் மீதுதான் தேவ ராஜ்யம் கட்டப்பட இருக்கின்றது.*
இதை நன்கு உணர்ந்த பேதுரு பின்நாட்களில் கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்டான். மேலும் தனது நிருபங்களில் இதை விசுவாசிகளுக்கும் நினைப்பூட்டும்படி எழுதுகிறான், *“நீங்களோ,... தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”* (1 பேதுரு 2:9)
*அநேக நேரத்தில் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற புதிய வாழ்க்கையை மறந்து, நாம் பாவ காரியங்களில் ஈடுபடுகின்றோம், துன்மார்க்கரோடு பழகுகின்றோம், கோபமும் எரிச்சலும் வைராக்கிமும் கொண்டு செயல்படுகின்றோம், தேவனை பிரதிபலிக்கத்தவறுகின்றோம். அது நம் ஆசீர்வாதத்தை தடுக்கின்றது.*
*உங்கள் புதிய பெயரை மறந்து விடாதீர்கள். உங்கள் புதிய அடையாளத்தை தொலைத்துவிடாதீர்கள். உங்கள் மேன்மையை இழந்துவிடாதீர்கள்.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
Thanks for using my website. Post your comments on this