தீமைக்கு நன்மை செய்யும் சாகசம் | மேன்மை உங்களை தேடி வரும் | கடினமானதை செய்து காட்டுங்கள்! | மேன்மையடையும் போது...! |
தீமைக்கு நன்மை செய்யும் சாகசம்
கர்த்தர் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணிய பின்பு, சவுலுக்கு தாவீதின் மேல் எரிச்சல் உண்டாகியது. ஈவு இரக்கமில்லாமல் தாவீதை விரட்டி விரட்டி அடித்தான். தாவீது சவுலுக்கு பயந்து சுமார் 16 வருடங்கள், காடு, வனாந்திரம், மலை என ஓடிக்கொண்டே இருந்தான். அந்த ஒரு மனிதனை கொல்லுவதற்கு, ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களோடு அலைந்தான் சவுல்.
சவுல் கையிலே தாவீது கிடைத்திருந்தால், ஆயிரம் குத்து குத்தி அவனை கொன்றிருப்பான். அத்தனை வெறி சவுலுக்கு! ஆனால் தாவீது சவுலின் சால்வையின் ஓரத்தை அறுத்ததற்கே அவன் மனது குற்றமனச்சாட்சியில் அடித்துக் கொண்டதாம்!
*ஆனாலும் அது என்னவோ தெரியவில்லை, தாவீது சவுலுக்கு ஒரு சிறிய தீங்கும் நினைக்கவில்லை. சவுல் தன்னை கொல்லப் போகின்றான் என தெரிந்தும், தானும் அவனைக் கொல்லாமல், பிறரையும் கொல்லவிடாமல், சவுலைப் பாதுகாப்பதையே வழக்கமாக கொண்டிருந்தான் தாவீது.*
இறுதியாக, சவுல் யுத்தத்தில் இறந்து விட்டான் என்ற செய்தியறிந்த தாவீது, ஐயா! எதிரி ஒழிந்தான் என கொண்டாடவில்லை. அல்லது, அப்பாடா, இனி நிம்மதியாய் வாழலாம் என்று பெருமூச்சுவிடவில்லை. மாறாக, தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டு, அழுது புலம்பி சாப்பிடாமல் உபவாசமாயிருந்தான் என்று வேதம் சொல்கின்றது. (2 சாமு. 1:1112)
*தன்னை கொல்லத்துடிக்கும் எதிரியையும் இத்தனை அதிகமாய் நேசிக்கும் தாவீதின் செயல்கள் ஒரு சராசரி மனிதனாக எனக்கு புரியவில்லை.*
*ஆனால், ஒன்று மட்டும் அறிகின்றேன்! என் தேவன் அப்படிப்பட்ட தாவீதைத்தான் நேசித்தார். அந்த தாவீது தான் உயர்த்தப்பட்டான். அந்த தாவீதுக்குத்தான் உன் வீடு கட்டப்படும் என்று சொன்னார். அந்த தாவீதின் சந்ததிக்குதான் கர்த்தர் நிரந்தரமான சிங்காசனத்தை கொடுத்தார்.*
*தாவீது செய்தது சாதாரண செயல் அல்ல, அது ஒரு சாகசச் செயல்!*
*பழிவாங்குவதற்கும், பதில் செய்வதற்கும் ஒரு விநாடி போதும். ஆனால் பொறுமையாய் இருப்பதற்கு ஆண்டுகள் தேவை!*
*பழிவாங்குவது வீரமல்ல, அதை ஒரு நாய் கூட செய்து விடும், ஆனால் பொறுமையாயிருப்பது ஆயிரம் யானைகளை அடக்குவதற்கு சமானம். அது ஒரு சாகசச் செயல். அதற்கு நமக்கு தெய்வீக சுவாபமும், பெலனும் தேவை.*
*எத்தனை தீமைகள் செய்தாலும் பதிலுக்கு தீமைக்கு தீமை செய்யாமல், நன்மையே செய்யும் மனிதர்களை கர்த்தர் அதிகம் நேசிக்கின்றார். அவர்கள் கைகளில் கர்த்தர் இராஜ்யங்களை தருவார். அவர்கள் ஆளுவார்கள்.*
*தம் முகத்தில் துப்பி, தாடியை பிடுங்கினவனுக்கும் பதிற்செய்யாமல் அமைதிகாத்த அந்த சர்வ வல்லமையுள்ள இயேசுவின் பொறுமை நமக்கு தேவை!*
*தனக்கு துரோகம் செய்து காட்டிக்கொடுக்கும்படி முத்தமிட வந்தானே, அந்த யூதாஸை அரவணைத்து சிநேகிதனே என்றாரே அந்த இயேசுவின் அன்பு நமக்கு தேவை!*
பகைக்கின்றவர்களை நேசியுங்கள்!
*தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.* (1 பேதுரு 3:9)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
மேன்மை உங்களை தேடி வரும்
கர்த்தர் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணிய நாளிலிருந்து அவன் பட்ட பாடுகள் ஏராளம். சிங்காசனம் அவன் கைக்கு கிடைக்கவில்லை, மாறாக காடும் வனாந்திரமும் தான் கிடைத்தது. *ஆனாலும், அவன் ஒரு போதும் தான் ராஜாவாக மாறுவதற்கான எந்த ஒரு குறுக்கு வழியையும் தேடாமல் கர்த்தருடைய நேரத்திற்காக காத்திருந்தான். மேன்மை அவனை தேடி வந்தது.*
தாவீதின் எதிராளியாயிருந்த சவுல் மரித்த பின்பு கூட, ராஜ பதவியை தேடிச் செல்லாமல், கர்த்தரிடத்தில் விசாரித்து, அமைதியாக யூதாவின் எபிரோனுக்கு சென்று குடியிருந்தான்.
ஆனால் *கர்த்தர் தமது நேரத்தில் சரியாக கிரியை செய்கின்றவர்.* யூதாவின் மனுஷர் வந்து தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். (2 சாமு. 2:4) அதனைத் தொடர்ந்து 7.5 ஆண்டுகள் கழித்து, முழு இஸ்ரவேலுக்கும் ராஜாவானான். ஆனால் *எந்த சூழ்நிலையிலும் பதவியை இவன் தேடிச் செல்லவில்லை. பதவி இவனைத் தேடி வந்தது.*
*அநேக நேரங்களில் நாம் எப்படியாவது மேன்மையை அடைந்திட வேண்டும் என்று மேன்மைகளை தேடி ஓடுகின்றோம், அநேகருடன் போட்டி போடுகின்றோம். ஆனால் மேன்மைகள் நம்மை விட்டு தூரமாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.*
பதவியை தன் சந்ததிக்கு தக்க வைக்க வேண்டுமென்று அதற்காக எத்தனையோ பிரயாசங்களையும், குறுக்கு வழிகளையும் கையாண்ட சவுல் தன் ஜீவனையும் இழந்தான், தன் சந்ததியையும் இழந்தான். ஆனால் தான் அபிஷேகிக்கப்பட்டிருப்பதினால், பதவிக்கு தகுதியானவனாயிருந்தாலும், பதவிக்காக எந்த போட்டியும் போடாமல் அமைதியாய் இருந்த தாவீது பதவியில் உயர்த்தப்பட்டான்.
*தாவீதைப் போல கர்த்தருக்கு காத்திருங்கள். மேன்மை உங்களை தேடிவரும்.*
தாவீது கர்த்தரை துதிக்கும் போது, _*“ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்”*_ என்று சொல்வதைப் பார்க்கின்றோம். (2 நாளா. 29:12)
*கர்த்தருடைய கரத்தில் தான் உங்கள் மேன்மை இருக்கின்றது. அவரை உண்மையாய் தேடி, அவர் சித்தத்தை உங்கள் வாழ்வில் செய்யும் போது, அந்த மேன்மை தானாக உங்களை வந்தடைகின்றது.*
இந்த உலகம் மேன்மைக்காக போட்டி போடுகின்றது. ஒரு உயர் பதவிக்கு அல்லது உயர் வேலைக்கு ஆயிரம் பேர் போட்டி போடுகின்றார்கள். ஒருவரை அழித்து, மற்றொருவர் முன்னேறுகின்ற காலமிது.
*ஆனால் நீங்கள், உங்களுக்கு யார் போட்டிஎன்று பார்க்காதிருங்கள். உங்கள் போட்டியாளர்களை கசந்து கொள்ளாமலுமிருங்கள். உங்களுக்குரியது கர்த்தரால் கிடைக்கும்.*
*கர்த்தருடைய பிள்ளைகளுக்கான மேன்மை கர்த்தருடைய கரத்திலிருந்து வரும். அவர் எல்லாவற்றையும் ஆளுகின்றவர். எவரையும் மேன்மைப்படுத்த அவரால் கூடும். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்.*
*கர்த்தர் உங்களை மேன்மைப்படுத்துவாராக!*
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
கடினமானதை செய்து காட்டுங்கள்!
கானான் தேசம் முழுவதையும் கிமு. 1405ம் வருடம் இஸ்ரவேலர் பிடித்தார்கள். கிமு. 1399க்குள் அதை முழுவதும் பங்கிட்டு அதில் குடியிருக்கத்துவங்கினர். ஆனால் அதற்குள் பிடிக்கப்படாத ஏராளமான இடங்கள் இன்னும் இருந்தன. உதாரணத்திற்கு, *சீயோன் கோட்டை என்று அழைக்கப்பட்ட எருசலேம்* பட்டணம் எபூசியர் என்ற மக்கள் வாழும் கோட்டையாயிருந்தது.
இந்த *சீயோன் கோட்டை மலையின் மேல் கட்டப்பட்ட அரணிப்பான பட்டணமாயிருந்தது.* குருடரையும், நடக்க முடியாத சப்பாணிகளையும்தான் அந்த கோட்டையின் மதிற்சுவரின் மேல் காவலுக்கு என்று *பெயருக்காக* வைத்திருப்பார்களாம். ஏனென்றால் மலையின் மேல் ஏறுவதே கடினம், அதையும் மீறி அரணிப்பான கோட்டை சுவரின் மேல் ஏறுவது இன்னும் கடினம். இதையெல்லாம் மீறி யார் வரப் போகின்றார்கள் என்ற அசட்டு தைரியம் அவர்களுக்கு.
கானான் பிடிபட்டு *400 வருடம்* கழித்து, தாவீது அரசனாகும் வரைக்கும் அதை யாரும் பிடிக்க முடியாதபடி, கடினமான கோட்டையாயிருந்தது. இந்த 400 வருடங்களில் *12 நியாயாதிபதிகள், 2 தீர்க்கதரிசிகள், மற்றும் சவுல் ராஜா* ஆகியோர் இஸ்ரவேலை அரசாண்டிருக்கின்றார்கள். ஆனால் இவர்களில் எவரும், இந்த கடினமான கோட்டையை பிடிக்கும்படி யோசிக்கவும் இல்லை.
*ஆனால் தாவீது வித்தியாசமானவன். தான் அரசனான உடனே அந்த கடினமான கோட்டையை பிடிக்கச் சென்றான்.* அந்த கோட்டைக்குள்ளிருந்து வெளியியே வரும்படியான ஒரு சுரங்கப்பாதை ஒன்றை மலையை குடைந்து எபூசியர் வடிவமைத்திருந்தனர். அந்த சுரங்கப்பாதை வெளியே உள்ள கீகோன் ஊற்றுக்கு நேராய்ச் சென்றது. அந்த ஊற்றிலிருந்து பட்டணத்திற்கு தண்ணீர் பெறுவதற்காக அந்த சுரங்கத்தை எபூசியர் வடிவமைத்திருந்தார்கள். ஆனால் அந்த சுரங்கத்திற்குள் நுழைவது ஆபத்தானது.
தாவீதின் சொற்படி, அவன் படையிலிருந்த யோவாப் எழும்பி அந்த சுரங்கத்தின் வழியே சென்று, பட்டணத்தின் கோட்டைக் கதவை திறந்து விட்டான். *அதன்பின் அதன்வழியே முழு இஸ்ரவேல் இராணுவமும் சென்று சீயோன் கோட்டையாகிய எருசலேமை பிடித்தார்கள். அது தாவீதின் நகரமாயிற்று. அது முதல் அது இஸ்ரவேலின் தலைநகரமாகவும் மாறியது.* (2 சாமு. 5:7)
*கர்த்தர் முழு கானானையும் உங்களுக்கு கொடுத்தேன் என்று வாக்குப் பண்ணியிருந்தும், அந்த கானானுக்குள் இருந்த இந்த சீயோன் கோட்டையை கடினமானது என்று சொல்லி எவரும் பிடிக்க முயற்சிக்கவில்லை. கர்த்தர் தர விரும்புகின்ற காரியம் எத்தனை கடினமானது என்றாலும், அதை சுதந்தரிக்க முயற்சி எடுங்கள். அதை அவர் நிச்சயம் தருவார்.*
*சிலருக்கு, இது வரை எவரும் முயற்சித்துக்கூட பார்த்திராத சில காரியங்களைச் செய்ய, கர்த்தர் தரிசனங்களை கொடுத்திருக்கலாம். கடினமானது என்று அதைப் பார்த்து மலைத்துப் போய் நிற்காதீர்கள்.*
*கர்த்தர் தரிசனம் கொடுத்த போது, தனிமனிதனாய் கடினமானதை முயற்சித்து வெற்றி கண்ட ஏராளமானோர் நம்மோடு வாழ்ந்திருக்கின்றார்கள். வில்லியம் கேரி, அதோனிராம் ஜட்சன், டேவிட் லிவிங்ஸ்டன், ஜார்ஜ் முல்லர், ஹட்சன் டெய்லர், ஜோனத்தான் கோபோர்த், ஏமி கார்மேக்கேல், நேட் செயின்ட், ஜிம் எலியட், எரிக் லிட்டல் போன்றவர்களின் வாழ்க்கை சரிதைகளை வாசித்துப் பாருங்கள். இப்போதும் நம்மோடு வாழும் அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணன் போன்றோர் வாழ்க்கையையும் பாருங்கள். முடிந்தால் ஒருமுறையாகிலும் அவர்களை நேரில் சந்தித்து பேசுங்கள்.*
*கர்த்தர் எதையும் செய்யத் துணிந்த தாவீதுக்களை தேடிக்கொண்டிருக்கின்றார்.*
*கடினமானது என்று ஒன்றுமில்லை. எத்தனை கடினமானதையும் செய்ய ஏதாகிலும் ஒரு வழியில்லாமலா போகும். முயற்சி செய்து பாருங்கள். எருசலேமைப் பிடிக்க ஒரு சுரங்கப்பாதை உதவி செய்தது போல, உங்களுக்கு உதவி செய்ய ஒரு வழிநிச்சயம் இருக்கும். இது வரை எவராலும் செய்ய முடியாத காரியத்தை நீங்கள் நினைத்தால், உங்களாலும் நிச்சயம் செய்ய முடியும். கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார்.*
*உங்கள் வாழ்க்கையின் கடினமான சீயோன் கோட்டை எது?
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
மேன்மையடையும் போது...!
தாவீது 15 வயதில் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டு, 30 வயதில் யூதாவுக்கு ராஜாவானான். 37.5 வயதில் முழு இஸ்ரவேலுக்கும் ராஜாவானான். அவன் வாழ்க்கையில் அவன் மிக உயரத்தை தொட்டது அந்த நாளில் தான்! இதுக்கப்புறம் வாழ்க்கையில் என்ன வேண்டும்? ஜாலியா வாழ்க்கைய வாழ்ந்து கழிக்க வேண்டியது தான், என்று அவன் இருக்கவில்லை. *ராஜாவான உடன் அவன் தேடியது கர்த்தருடைய சமுகம் வாசம் பண்ணும் உடன்படிக்கைப் பெட்டியைத்தான்!*
தேவனுடைய பெட்டி, பெலிஸ்தியரால் பிடிபட்டு பின் திரும்ப இஸ்ரவேலரிடம் ஒப்படைக்கப்பட்டபின், கிபியாவிலிருக்கின்ற அபியா என்பவனின் வீட்டில் *சுமார் 70 ஆண்டுகள்* இருந்தது. *எவரும் அதை கண்டு கொள்ளவில்லை.*
*ஆனால் தாவீது முழு இஸ்ரவேலுக்கு அரசனான உடனே தேடியது தேவ பிரசன்னம் வாசம் பண்ணும் உடன்படிக்கைப் பெட்டியைத்தான். அதற்காக பிரமாண்டமாய் 30000 பேரைக் கூட்டிக் கொண்டு போய், பெட்டியை ராஜ மரியாதையொடு கொண்டுவந்தார்கள்.* (2 சாமு. 6:1-5)
*வாழ்க்கையில் மிக உயரத்தை அடைந்து, மேன்மைகளை அனுபவித்து, விரும்பினதெல்லாம் கிடைத்து திருப்தியாயிருக்கும் வேளையிலும், தாவீது கர்த்தரைத் தேடினான். நாம் ஆசீர்வதிக்கப்படும் போது கர்த்தரை தேடுகின்றோமா?*
சவுல் 40 வருடம் அரசனாக இருந்து, ராஜ மேன்மையை அனுபவித்த போதிலும், பெட்டியை கொண்டு வந்து, கர்த்தரை கனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு துளியும் உண்டாகவில்லை.
இன்று ஒன்றும் இல்லாத நிலையில் அநேகர் கடவுளைத் தேடுவார்கள். ஆனால் எல்லாம் உண்டாயிருக்கும் நிலையில் அவர்களுக்கு கடவுள் தேவைப்பட மாட்டார். நம் தேவைக்கு மட்டும் கூப்பிட்டு பயன்படுத்திக் கொள்வதற்கு அவர் நமக்கு வேலைக்காரன் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர் சகலத்தையும் ஆளுகை செய்யும், சர்வ வல்லமையுள்ள தேவன்.
*“... நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும்,... கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு”* (உபா. 6:11-12) என்று கர்த்தர் நம்மை எச்சரிக்கின்றார்.
*தாவீது தன் ராஜ பதவியையும் அதிகாரத்தையும், தேவனைத்தேடுவதற்கு பயன்படுத்தினது போல, உங்கள் மேன்மைகளை தேவனைத் தேடுவதற்கு பயன்படுத்துங்கள்.*
👉 உங்களைக் கர்த்தர் பொருளாதாரத்தில் ஆசீர்வதித்திருந்தால், கர்த்தருடைய ராஜ்யத்திற்காக அதிகம் செலவு செய்யுங்கள். ஊழியங்களை தாங்குங்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.
👉 உங்களைக் கர்த்தர் மனிதர்களுக்கு மேல் அதிகாரியாக உயர்த்தியிருந்தால், அவர்களிடம் அன்பு செலுத்தி, அவர்களை கர்த்தருக்கு நேராக நடத்துங்கள்.
👉 உங்களுக்கு கர்த்தர் அதிகாரங்களை கொடுத்திருந்தால், அதைக் கொண்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிசெய்யுங்கள்.
👉 உங்களுக்கு கர்த்தர் திறமைகளையும் தாலந்துகளையும் கொடுத்திருந்தால், திறமையற்ற பலரை பயிற்றுவித்து, வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டுவாருங்கள்.
*தேவனைத்தேடுங்கள், தேவ ராஜ்யத்திற்காக வாழுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையில் அழிந்து போகாத சொத்து.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
Thanks for using my website. Post your comments on this