Type Here to Get Search Results !

Job 27-30 Hope in Despair | ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம் | Tamil Gospel Sermon | யோபு 27-30 | Jesus Sam

யோபு 27 - 30

🌟 *ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்* 🌟

☄️ *மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.* (யோபு 28:28).

🔸 யோபின் நண்பர்கள் தாங்கள் ஞானவான்கள் என்று நம்பியதால், யோபு ஏன் எல்லாவற்றையும் இழந்து கொடிய நோய்வாய்ப்பட்டான் என்பதற்குப் பல தவறான விளக்கங்களை அவனுக்கு அளித்தனர். இருப்பினும், யோபின் விசுவாசத்தை மட்டுப்படுத்த தேவன் அவர்களை அனுமதிக்கவில்லை. *ஞானத்தின் மதிப்பு மற்றும் அதன் ஆதாரத்தைப் பற்றி நம் அனைவருக்கும் கற்பிக்கும் ஞானத்தைத் தேவன் யோபுக்குக் கொடுத்தார்.* யோபு தனது பெரும் துன்பநேரத்திலும் கூட, தேவனுடைய கிருபையால் மட்டுமே தனது நண்பர்களுக்கு ஞானமாக பதிலளிக்க முடிந்தது.




🔸 மிகவும் புத்திசாலிகளாக இருந்தாலும்கூட, மக்களால் எல்லா உலக நிகழ்வுகளின் காரணங்களையோ, முடிவுகளையோ புரிந்து கொள்ள முடியாது. யாரும் ஞானத்தை வாங்க முடியாது. ஞானத்தை நாம் மலைகளிலோ கடல்களிலோ தேட முடியாது. *உண்மையான ஞானத்தின் ஆதாரம் கர்த்தர் ஒருவரே, அவரால் மட்டுமே நமக்கு மெய்ஞானத்தை வழங்க முடியும்.* தேவன் கொடுக்கும் ஞானம் *நம் வாழ்க்கைக்கான ஞானம்*.




🔸 தேவனுடைய ஞானம், *நாம் யார் என்பதையும், நம்முடைய பாவத்தின் அளவு எவ்வளவு என்பதையும், தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பதையும், அவர் நம்மோடு ஏற்படுத்தியுள்ள உடன்படிக்கை என்ன என்பதையும்* குறித்து நமக்கு வெளிப்படுத்துகிறது. *தேவனுடைய ஞானம் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் மூலமாக நாம் பெறும் இரட்சிப்பைப் பற்றியும் நமக்குக் கற்பிக்கிறது.* இந்த ஞானம்தான், இம்மைக்குரியதும், மற்றும் மறுமைக்குரியதுமான நம்முடைய வாழ்க்கைக்குத் தேவை.




🔸 சங்கீதக்காரன் கூறுகிறான்: *"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்."* (சங்கீதம் 111:10). நாம் தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற வேண்டுமானால், முதலில் அவருடன் சரியான உறவை ஏற்படுத்த வேண்டும். கர்த்தருக்குப் பயப்படும் பயமே நமக்கு ஞானத்தைக் கொண்டுவரும். ஞானிகளின் வார்த்தைகள் இதை உறுதிப்படுத்துகின்றன: *"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு."* (நீதிமொழிகள் 9:10). *“கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்.”* (நீதிமொழிகள் 15:33).




🔸 தான் படும் துன்பங்களுக்குக் காரணம் என்ன என்பது யோபுவுக்குப் புரியவில்லை, ஆனால் கர்த்தர் தாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்திருக்கிறார் என்று அவன் உறுதியாக நம்பினான். *கர்த்தரிடம் பயபக்தியோடிருந்து, பொல்லாப்பை விட்டு விலகுவதே தனது கடமை* என்பதை அவன் உணர்ந்துகொண்டிருந்தான்.




🔸 வேதம் கூறுகிறது: *“நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.”* (நீதிமொழிகள் 3:7). நம்முடைய சுயபுத்தியை சாராமல், கர்த்தரிடம் பயபக்தியோடிருந்து, அவரில் நம்பிக்கையாயிருந்து, தீமையை விட்டு விலகுவதே நமக்கு நன்மை பயக்கும். *மூடர்கள் மட்டுமே தீமையை விட்டு விலக மாட்டார்கள்* (நீதிமொழிகள் 13:19).




🔸 நாம் தேவன் தெரிந்தெடுத்த அவருடைய பிள்ளைகளாக இருப்பதால், அவருடைய வழிகளில் நாம் ஞானமுள்ளவர்களாக நடக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதன் காரணமாக, *தேவனுடைய ஞானமுள்ள வார்த்தைகள் அடங்கிய வேதத்தை அவர் நமக்கு கொடுத்துள்ளார்.* வேதம் தேவனைப் பற்றியும் தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைப் பற்றியும் நமக்குக் கற்பிக்கிறது. இப்போதும் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதற்கு, நாம் *வேதத்தில் கவனம் செலுத்தி, வேதம் கூறுவதைக் கைக்கொள்ள வேண்டும்*.




🔹 *இயேசுவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும், நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு அடிபணியவும் வழிவகுக்கும் விதத்தில் நாம் தேவனுக்குப் பயப்படுகிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *ஞானத்தின் மதிப்பு மற்றும் அதன் ஆதாரத்தைப் பற்றி நம் அனைவருக்கும் கற்பிக்கும் ஞானத்தை தேவன் யோபுக்குக் கொடுத்தார்.*

2️⃣ *உண்மையான ஞானத்தின் ஆதாரம் கர்த்தர் ஒருவரே, அவரால் மட்டுமே நமக்கு மெய்ஞானத்தை வழங்க முடியும்.*

3️⃣ *இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் மூலமாக நாம் பெறும் இரட்சிப்பைப் பற்றியும் தேவனுடைய ஞானம் நமக்குக் கற்பிக்கிறது.*

4️⃣ *கர்த்தருக்குப் பயப்படும் பயமே நமக்கு ஞானத்தைத் தரும்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை



யோபுவின் தீர்மானம். என் உதடுகள், என் நாக்கு

யோபு 27: 2, 3.

1. இங்கு யோபு ஒரு தீர்மானம் எடுக்கிறார். அந்த தீர்மானத்தை குறித்து *என் சுவாசம் என்னில் இருக்கும் வரை, தேவன் தந்த ஆவி என் நாசியில் இருக்குமட்டும்* என்கிறார்.

அப்படியானால் *எனக்குள் தேவன் தந்த ஆவி இருக்கிறது. அது நாம் மரணம் அடையும் போது, ஆவி, தன்னை தந்த தேவனிடத்தில் போகும் என்ற உண்மையை யோபு அறிந்திருந்தார்.* அப்படியானால் நாம் கர்த்தர் தந்த ஆவி, ஆத்துமாவை பரிசுத்தமாய் காக்க வேண்டும் என்பதை அறிந்து வாழ்கிறோமா? இந்த எண்ணத்தோடு ஒவ்வொரு நாளும் நம்மை பரிசுத்தமாக காத்துக் கொள்வோமாக.

2. *யோபு எந்த சூழ்நிலையில் இப்படி ஒரு தீர்மானத்தை எடுக்கிறார்?*




மரணங்கள், நஷ்டங்கள், பரிகாசங்கள், தவறாய் குறை கூறுதல் ஆகிய நொறுங்கி போன, உடைந்து போன உள்ளத்திலிருந்து இப்படி ஒரு தீர்மானம் எடுக்கிறார். அப்படியானால் யோபு ஒரு உத்தமனும், கர்த்தருக்கு பயப்படுகிறவனுமாயிருந்தான் அல்லவா?




3 . யோபுவின் தீர்மானங்கள் என்ன?




1. *என் உதடுகள் தீமையை சொல்வதுமில்லை*.




2. *என் நாவு கபடம் பேசுவதுமில்லை*. அதாவது, உண்மைக்கு மாறானவைகளை பேசுவதுமில்லை என கூறுகிறார்




ஆம், நம்முடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு தீர்மானத்தோடு வாழ, பயத்தோடும், பக்தியோடும் வாழ ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக. துதித்தலும்,சபித்தலும் ஒரே வாயிலிருந்து வராதிருப்பதாக.




4.மட்டுமல்ல, நம் கடந்த கால வாழ்க்கையில் எத்தனையோ தீர்மானங்களை எடுத்திருக்கிறோம். அவைகள் நமக்கு ஞாபகம் இருக்கின்றனவா? ஆம், *நம்முடைய தீர்மானங்களில் நம் கடைசி மூச்சு மட்டும் நம் தீர்மானங்களில் உண்மையாயிருக்க* கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென் , அல்லேலூயா.

*Dr. Padmini Selvyn*



*யோபு 27- 30*




*கர்த்தருக்குப் பயப்படுவதே*

*ஞானம்*..




யோபு, தனது உடைமைகள், உறவுகள், உடல்நலம்..

அனைத்தையும் இழந்து.. துன்பத்தில் சிக்கியிருந்ததைக் காட்டிலும், தங்களின் மாற்றமுடியாத கருத்துக்களால் சிறைப்பட்டிருந்த யோபுவின் நண்பர்கள்

பரிதாபத்திற்குரியவர்களே.!

அதனால்தான் யோபு.. தனது நண்பர்களுக்கு ஞானமில்லை என்று கூறினான்.




ஞானத்தைக் குறித்த யோபுவின்

அழகிய கவிதையை..

யோபு 28ம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம்.




பூமியின் ஆழத்திற்குச் சென்று.. பல்வேறு இன்னல்களுக்கும், இருளுக்கும் மத்தியில் விலையேறப்பெற்ற உலோகங்களைத் தோண்டி எடுக்கும் மனிதர்கள்..

அவற்றைக் காட்டிலும் உயர்ந்ததாகக் கருதப்படும் ஞானத்தின் மதிப்பை உணராமல் வாழ்கின்றார்கள்.




ஞானத்தைச் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்க முடியாது

(யோபு 28:12 -19).

ஞானமானது அனைத்து உயிரினங்களுக்கும்.. ஏன் மரணத்திற்கும் கூட அது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.. (யோபு 28:22) .




ஞானம், பிற

மனிதர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பரிசு அல்ல..

ஞானத்தை அனுபங்களிலிருந்தோ,

பல்கலைக்கழகங்களிலிருந்தோ பெறமுடியாது..

அதை விலைகொடுத்து வாங்கவும் முடியாது..

மனிதனால் அதை இந்த உலகத்திலே கண்டுபிடிக்கவும் முடியாது,




அப்படியானால் ஞானத்தைப் பெற்றுக்கொள்ள

என்ன வழி..?




பவுல் அப்போஸ்தலன்..

கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானம் அறிவு ஆகிய பொக்கிஷங்கள்

அடங்கியிருக்கிறது..என்று கூறினார்..( கொலோ. 2 : 3 )




இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு..

ஒவ்வொரு நாளும் அவரோடுகூட நெருங்கிய உறவுகொண்டு..

கல்வாரி சிலுவையை நோக்கினவர்களாக நாம் வாழும்போது..

அவர் நமக்குத் தேவ பெலனும்.. தேவ ஞானமுமாக மாறுவார்..

பாவத்தை வெறுக்க உதவிசெய்வார்..




நம்முடைய துன்பங்களுக்குக்

காரணம் என்ன என்பதை ஒருவேளை நாம் தெளிவாகப்

புரிந்துகொள்ளாவிட்டாலும்..

கர்த்தர் நம்மைக் கைவிடமாட்டார் என்ற நிச்சயம் நமக்கு உண்டாகும்..

பாடுகளின் வேளையிலே நமக்குத்

தடுமாற்றங்கள் உண்டாகாது..




*யோபு,துன்பம் என்ற நெருப்பில்* *எரிக்கப்பட்டபோதும்*, *தேவனுக்குப் பயப்படுதல்*, *பொல்லாப்புக்கு விலகுதல்* *ஆகிய இரண்டு* *நற்பண்புகளையும் இழக்காமல்* *வாழ்ந்தான்*.




*இன்று நீங்களும் நானும்*,

*பொல்லாங்கனுக்குள் கிடக்கும்* *இந்த உலகிலே*..

*ஒவ்வொரு நாளும் கர்த்தருக்குப்*

*பயந்து வாழுவோம்*..

*தீமையைவிட்டு விலகுவோம்*..

*அதுவே நம்முடைய அழைப்பு*

*என்பதைப்* *புரிந்துகொள்வோம்*..

ஆமென்.🙏

மாலா டேவிட்

தலைப்பு:

ஞானம் & புத்தி.

யோபு 28:1-28.

தியானம்,
யோபுவின் கேள்விகளும் பதிலும்:
கேள்விகள்:

1. ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே❓(வச 12)

2. புத்தி விளைகிற இடம் எங்கே❓(வச 12)

3. ஞானம் எங்கேயிருந்து வரும்❓(வச 20)

4. புத்தி தங்கும் இடம் எங்கே❓(வச 20)

பதில்:

1. ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம் (வச 28)

2. பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி. (வச 28)



📗 *சிறிய குறிப்பு* 📗




🍂 *ஏழைகள்* 🍂




ஏழைகளுக்கு உதவுவது ஒன்று ஆனால் *அவர்களுக்கு தகப்பனாக இருப்பதற்கு அர்ப்பணிப்பு தேவை.* யோபு ஏழைகளுக்கு தந்தையாக இருந்ததாக பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. * “நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.” (யோபு‬ ‭29‬:‭16‬)* அவர்களுக்கு உதவ யோபு வழிகளைத் தேடினார்.




துன்பத்தில் தன்னை அழைத்த ஏழைகளை யோபு விடுவித்தார். *அவரது காதுகள், கைகள் மற்றும் கண்கள் எப்போதும் அவர்களுக்குத் திறந்திருக்கும்.* இவ்வாறு ஆதரவற்றவர்களுக்கு உதவினார். மேலும் அவர்களின் கடினமான பிரச்சினைகளை தீர்க்க முயற்சி எடுத்தார். அவர் உண்மையில் அவர்களின் *வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து, கஷ்டங்களை சமாளிக்க அவர்களுக்கு உதவினார்.*




யோபு அவர்களின் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான வழியில் ஈடுபட்டார். நாம் பரிசுத்த வேதாகமத்தைப் படிக்கும்போது, ​​* தேவனாகிய கர்த்தர் எப்பொழுதும் தேசத்தில் இருந்த ஏழைகள் மீது ஒரு தனி அக்கறை கொண்டிருந்தார்.* ஒரு மிஷனரி கர்த்தரை *ஏழைகளின் தேவன்* என்று அழைத்தார். தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் நீங்கள் என்ன பங்கு வகிக்கிறீர்கள்? *நீங்கள் அவர்களை மரியாதையுடன் நடத்துகிறீர்களா?*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻


💖Hope in Despair💖*

*💖விரக்தியில் நம்பிக்கை💖*




[நாள் - 157] யோபு - 27-30




☄️யோபு தனது நண்பர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதைத் தொடர்கிறார், மிகுந்த வேதனையிலும் தேவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.




1️⃣ *நீதிக்காக யோபுவின் ஆற்றொணா வேண்டுகோள்* (யோபு 27:1-12)




🔹யோபு தன் குற்றமற்றவன் என்று கடுமையாக அறிவித்து, தன் நண்பர்களின் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுக்கிறான்.

🔹அவருடைய இக்கட்டான சூழ்நிலையிலும், நீதியை நிலைநிறுத்துவதற்கும், தனது உத்தமத்தைப் பேணுவதற்கும் அவர் தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறார்.

🔹தேவனிடமிருந்து நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, தான் உணரும் அநீதியை ஒப்புக்கொள்ளும்படி தன் நண்பர்களிடம் கெஞ்சிக் கேட்பதில் யோபுவின் விரக்தி வெளிப்படுகிறது.




2️⃣ *யோபுவின் புலம்பல்களும் பிரதிபலிப்புகளும்* (யோபு 29)




🔸கடந்த காலத்தில் யோபு அனுபவித்த செழிப்பு, மரியாதை மற்றும் ஆசீர்வாதங்களை குறித்த ஏக்கமான நினைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

🔸அவர் தனது முந்தைய வாழ்க்கையை இழந்துவிட்டதற்காக துக்கப்படுகிறார், அவர் அனைவராலும் கனப்படுத்தப்பட்ட மற்றும் மதிக்கப்பட்ட நாட்களுக்காக தனது ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்.

🔸தற்போதைய இன்னல்களின் மத்திலும், யோபு தனது முந்தைய நிலையின் நினைவுகளை பற்றிக்கொண்டு, அவர் அனுபவித்த நன்மைகளை நினைவுகூறுகிறார்.




3️⃣ *யோபுவின் வேதனையும் விரக்தியும்* (யோபு 30)




🔺யோபுவின் வலியும் விரக்தியும் உச்சத்தை அடைகின்றன.

🔺அவரது தற்போதைய நிலையை வெளியேற்றப்பட்டவர்கள், காட்டு விலங்குகள் மற்றும் இறந்தவர்களுடன் ஒப்பிட்டு, அவர் தனது துன்பத்தின் ஆழத்தை விவரிக்கிறார்.

🔺தேவனால் கைவிடப்பட்டதாக யோபு உணர்கிறார், அவர் ஏன் இப்படிப்பட்ட வேதனைக்கு உள்ளாக்கப்படுகிறார் என்று கேள்வி எழுப்புகிறார். அவருடைய வார்த்தைகள் அவருடைய வேதனையின் ஆழத்தையும், அவருடைய துன்பங்களுக்குப் பொருள் தேடுவதற்கான அவருடைய போராட்டத்தையும் வெளிப்படுத்துகின்றன.




♥️ *வாழ்க்கை பாடங்கள்*




💥வேதனைகள் இருந்தபோதிலும், யோபு அது நழுவிப்போவதாக தோன்றினாலும் கூட, தேவனுடைய நீதியின் மீதான நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார்.

💥அவரது ஆற்றொணா வேண்டுகோள்கள், புலம்பல்கள் மற்றும் அவரது முன்னாள் செழிப்பு பற்றிய சிந்தனைகள் அவரது உணர்ச்சிகளின் கசப்பான தன்மையையும் அவரது ஆற்றொணா தன்மையின் ஆழத்தையும் வெளிப்படுத்துகின்றன.

💥ஆயினும், அனைத்திற்கும் மத்தியில், தேவனுடைய இறுதித் திட்டத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தி, யோபு நம்பிக்கையை பற்றிக்கொள்கிறார்.
*‼️தேவன் மீதான நமது நம்பிக்கை நம்மைத் தாங்கவும், மிகவும் சவாலான சோதனைகளை கடந்துவரவும் உதவும்‼️*

பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை



*💥சிப்பிக்குள் முத்து💥*




இன்றைய வேத வாசிப்பு பகுதி - *யோபு : 27 - 30*




*🎊முத்துச்சிதறல் : 157*




🍏🌸🫛🌸🍏

ஆண்டவருக்கு பயப்படுவதே *ஞானம்.*

*(28:28)*

🍏🌷🍀🌷🍏




*🌈யோபு ஒரு சிறந்த பிரசங்கி என்பதை அறிவோமா❓* தினந்தோறும் பட்டணவீதியின் வாசலுக்கு சென்று அங்கு ஆசனம் போட்டு உட்கார்ந்து மக்களுக்கு அறிவுரை கூறி வந்துக் கொண்டிருந்த ஒரு உத்தம பக்தன். இப்பொழுது தனக்கு உண்டான எல்லாவற்றையும் இழந்து, நிர்கதியாக, ஆறுதல் தேடியவராக தன்னந்தனியே விடப்பட்டிருக்கிறார். *மனைவி மற்றும் நண்பர்களின் குற்றச்சாட்டுகளால் நொந்து இருப்பினும்,*

இங்கு.....

*"ஞானத்தை குறித்து"*

ஒரு அழகான போதனையை கொடுத்துள்ளார்.




*🍄கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று சாலமோன் ஞானி கூறினார்.*

(நீதி - 1 : 7)

ஆனால் அதற்கு முன்னமே வாழ்ந்து சென்ற யோபு பக்தனோ இன்னும் ஒரு படி மேலே சென்று, *"ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம்"*

என்று, அங்குதானே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.




கர்த்தருக்கு பயப்பட்டால் அங்கு ஞானம் துவக்கம் கண்டுவிட்டது என்றார் சாலமோன் அரசர்.

ஆனால் யோபோ, *ஆரம்பம் அல்ல, ஆண்டவருக்கு பயப்பட்டாலே அங்கு ஞானம் தங்கி இருப்பதாக கூறுகிறார்.*

தேவ பயமுள்ளோராக வாழ்ந்த யாவரும் அக்காலம் தொடங்கி இக்காலம் வரையும், இனியும் கூட....

*சிறந்த ஞானிகளாக செயல்பட இயலும் என்று சத்தியம் கூறுகிறது.*

ஆனால் என்று தெய்வ பயத்திலே அவர்களுக்கு தோய்வு நிலை ஏற்பட்டதோ அங்கு *"ஞான குறைவு"* வெளிப்பட ஆரம்பித்து விட்டதை நாம் சாலமோன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்.

*ஒருவர் ஞானியாக மாற வேண்டுமெனில் உலகத்தார் சில ஆலோசனைகள் வழங்குவது இயற்கை.*

அவை என்ன ஆலோசனை❓🤔




*1.*

அநேக புஸ்தகங்கள் வாசித்தால் நிறைய அறிவு பெருகும். *அறிவு பெறுகினால் நீ தான் ஞானி.*




*2.*

ஞானிகளோடு தங்கி... அவர்கள் திருவாய் மொழிகளை கேட்டுக் கொண்டே வந்துக் கொண்டிருப்போமாகில்.....

*நமக்கும் ஞானம் உண்டாகிவிடும்.*




*3.*

நிறைய மணி வேளைகளை.....

*ஆள் மன தியானத்திற்கு ஒப்புவித்து,*

அதை கடைபிடித்து வந்தார்களேயாகில் *ஞானோதயம் பிறக்கும்.*




*4.*

அவரவருக்கு தம் தம் வாழ்வில் ஏற்பட கூடிய அனுபவங்கள் வாயிலாக கூட ஞானம் உண்டாகும்.

என....

*இன்னும் பல... பல.....சொல்லப்படுகிறது.*




🌿மனிதர்கள் ஒருவருக்கொருவர் என்னத்தான் ஆலோசனைகள் கூறி வழிநடத்திடினும், *ஞானத்தின் ஊற்று தேவன் மட்டுமே.*

தேவனில் மட்டுமே இந்த அனந்த ஞானம் தங்கி இருக்கிறது. *ஆகையால் கர்த்தருக்கு பயந்து நடப்போர் மட்டுமே ஞானிகள் என்றழைக்க தகுதியுடையோராக இருக்கின்றனர். அந்த வகையில் யோபும் ஒரு ஞானிதான்.*




🌻🌻📌🌻🌻




ஆதி மனிதர்களாகிய *ஆதாமும் ஏவளும்* கர்த்தரின் வார்த்தையை மீறியபின் *அவர்களுக்கும் கர்த்தரை குறித்து ஒரு விதமான "பயம்" ஏற்பட்டது.* (ஆதி - 3 : 10)

ஆனால் அது *கீப்படிதலாகிய தேவ பயம்*

என்னும் பட்டியலில் இடம்பெற தகுதி இழந்துவிட்டது.




*🪶ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏற்பட்ட பயமானது, அவர்கள் இறைவனையும், அவரது சமூகத்தையும் விட்டோட வைத்து.... சாதாரண ஒரு மரத்தின் பின்னே அவர்கள் தங்களை ஒளித்துக் கொள்ளும்படி வழிநடத்தியது.*




*🍉ஆனால் யோசேப்பு போன்ற பக்தன், கர்த்தருக்கு பயந்து நடந்ததால் எகிப்துக்கே அதிபதியாக, பார்வோனுக்கு அடுத்தபடியாக இராஜ அரியணை போன்றதொரு அரியணையில் வீற்றிருந்து எகிப்தையே ஆளுகை செய்ய நேர்ந்தது.*

( ஆதி - 42 : 18 )




*🎊தேவ பயமுள்ளோர் தங்களது பணிக்கான நேர்மை வாழ்வினின்று, பிசகாமல், விலகாமல் நின்று கிரியை செய்வார்கள் என்பதற்க்கு அந்த எபிரேய மருத்துவச்சிகளான் சிப்பிராள், பூவாள் நடந்த நடக்கை உறுதி செய்கிறது.*

(யாத் - 1 : 17,21)




*💠சாமுவேல் போன்றோர், தேவ மக்கள் கர்த்தருக்கு பயந்து நடக்க ஜனங்களுக்கு அறிவுரை வழங்கி வழிநடத்தினர்.* (1சாமு - 12: 24)

மேற்கண்டவைகள் எல்லாம் ஏன் வலியுறுத்த பட்டதென்றால், *ஜனங்கள் ஞானத்தோடு நடந்துக் கொண்டார்களேயாகில்.....*

அங்கு.....

*தீமை ஒழிக்கப்பட்டு விடும்.*




ஆகையால் தான் யோபு தனது பிரசங்கத்தில், *"பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி"*

என்றார்.

*புத்தி எம்மில் தங்கி இருக்குமானால் நாம் எவருக்கும் பொல்லாப்பு செய்ய துணிவு கொள்ள மாட்டோமே !*




*🍁கர்த்தருக்கு பயப்படுதலே "ஞானத்தின் ஆரம்பம்"*

என்று வேதாகமத்தில் 3 இடங்களில் குறிப்பிட பட்டுள்ளது. *(சங்கீ - 111: 10 :, நீதி - 1 : 7 :, 9 : 10)*

ஆனால் யோபோ கர்த்தருக்கு பயப்படுதலே ஞானம் என்று கூறி, கர்த்தருக்கு பயப்படுதல் உகந்த வாசனையாக இயேசுவுக்கு இருந்தது போல அது எமக்கும் உகந்த வாசனையாக இருக்கும் பட்சத்தில் (ஏசா - 11 : 3) இயேசுவானவர் எவ்விதம் ஞானத்தில் வளர்ந்திருந்தாரோ, *(லூக்கா - 2 : 52)* அவ்விதமே நாமும் வளர்ச்சியினை காணலாம்.

அது மட்டுமா ? *இயேசுவே ஞானமாக இருப்பதால்,* (1கொரி - 1 : 31) நம்முள் அவர் வந்து தங்கி இருப்பதால், அவருக்கு ஒப்பான சிந்தையில் நாம் வளர்ந்தோமானால், வளரும் படியான பாக்கியத்தினுள் நாம் நடத்த பட்டோமானால்....

*நாமே ஞானிகள் என்றும், தேவ பயமுள்ளோர் என்றும் சாட்சி பெறுவோருமாக திகழலாம்.* கர்த்தருக்கு பயப்பட்டு, ஞானத்தில் நிலைத்து இருக்க இறை ஆசி உண்டாகட்டும்.

கர்த்தருக்கு பயப்படும் பயம் என்பது, கர்த்தரைமற்றும் அவர் வார்த்தையை கனம் செய்வதில் தான் அடங்கி இருக்கிறது.

ஏதோ ஓர் பூச்சாண்டிக்கு பயப்படுகிற பயம் கர்த்தருக்கு பயப்படும் பயமல்ல. மாறாக, அவர் மீதுள்ள அன்பினால் அவருக்கு அடிபணிந்து வாழ்தலையே *கர்த்தருக்கு பயப்படும் பயம்* என புரிந்து கொள்ளுகிறோம். அப்படி ஓர் நிலை எம்மில் இருக்கும் பட்சத்தில்... நாம் நன்மைக்கு ஞானிகளாகவும், தீமைக்கோ பேதைகளாகவும் திகழும் நிலை எம்மில் உருவாகி இருக்கும். நன்மையை நாடி, தீமையை வெறுப்பதே கர்த்தருக்கு பயப்படும் பயமாக இருக்கிறது. அப்படி நடப்போர் யாவரும் ஞானவான்கள். நன்மை செய்தல் என்பது, பிறர் மீதுள்ள அன்பு, கரிசனையினால் ஏற்படும் ஓர் நிலைப்பாடாக்கும்.

*சக மனிதனை குறித்து நல் எண்ணங்களும் நன்மை செய்தல் என்னும் பட்டியலில் இடம் பெறுகிறதாக இருக்கிறது.*

அப்படிப்பட்டோருக்கு..*இறைவனால் கனமும், மகிமையும், சமாதானமும்* உண்டாகுமாம்.

(ரோ - 2 : 10)

மற்றபடி.... ஓர் மனிதனுக்கு, அல்லது ஓர் கூட்டதாருக்கு நன்மை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு....

*(காசு, பணம், உதவி செய்து விட்டு)*

இன்னொரு கூட்டதாருக்கு விரோதமாக அவர்களை தூற்றி திரிந்து, ஏசி, பேசி, எழுதி பரப்புரை செய்பவர்கள் யாவரும் தீயவர்கள்.

நன்மைக்கும், தீமைக்கும் உரிய வேறுபாட்டினை சரியாக புரிந்து கொள்வோம் தெய்வ பயமிக்கோராக, ஞானவான்களாக / ஞானவதிகளாக திகழ்வோம்.

*கர்த்தருக்கு பயந்து, தீமையை / தீயவர்களை விட்டு விலகுவோம்.* அதுவே எமக்குரிய *ஞானம்* என்பதை புரிந்து வாழ்வோம்.

*🥮Sis. Martha Lazar*
NJC, Kodairoad
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.