Type Here to Get Search Results !

Godson Vincent | லெந்து நாட்கள் என்பது என்ன? | What is Lent Days | Tamil Bible Study | ஆவிக்குரிய வாழ்வு என்றால் என்ன? | Jesus Sam

=====================
"பணமே வா" என்கிற தலைப்பில் சிலநாட்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கை நடத்தின செழிப்பின் உபதேசி ஒருவர், அதற்கு 500 ரூபாய் கட்டணமாக வசூலித்திருப்பது முரண்பாடு இல்லையா?
===============
✍️ ""பணமே வா" என்று அவர் கூப்பிட்டு பணம் வந்திருந்தால், கருந்தரங்கிற்கு கட்டணம் வசூலிக்கவேண்டியிருந்திராது" என்பதை அவரைப் பின்பற்றுகிறவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்!

அவருடைய போதனை தவறானது என்பதில் ஐயமில்லை. ஆகிலும், அவரை விமர்சிக்க நமக்கு தகுதியிருக்கிறதா என்பதை நாம் யோசிக்கவேண்டியது அவசியம்!

வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்த வசனங்களை, ஊழியர்கள் ஜெபித்து, வாரத்திற்கு ஒன்று, மாதத்திற்கு ஒன்று, வருடத்திற்கு ஒன்று என்று எடுத்துக்கொடுத்தால்தான் அவை நமக்கு பலிக்கும் என்று நம்பும் அளவுக்கு மக்களை மங்குனிகளாக்கிவைத்திருக்கும் நமக்கு.....

ஊழியக்காரரின் முழு குடும்பமும் தேவனுடைய சபையை ஆக்கிரமித்துக்கொண்டதாக ஆதிசபையில் ஒரு ஆதாரம் கூட இல்லாதபோது,

அநேகருடைய ஜெபத்தினாலும், தியாகமான காணிக்கைகளினாலும், உடன் உழைப்பினாலும் வளர்ந்த ஒரு சபையை, "அழைப்பு", "ஆண்டவரின் சித்தம்", "ஆவியானவரின் நடத்துதல்" என்றெல்லாம் மக்களை நம்பவைத்து, நமது மனைவி - பிள்ளைகள், மறுமகன் - மறுமகள், பேரன் - பேர்த்தி என்று குடும்பமே ஆக்கிமித்து, சபையின் வருமானத்தை, ஆஸ்திகளை குடும்பமாய் அனுபவித்து, அதிகாரம் செலுத்திவருகிற நமக்கு.....

ஊழியருக்குக் கொடுப்பதைக் குறித்து புதிய ஏற்பாட்டில் பல உபதேசங்கள் இருக்கையில், அவைகளை போதியாமல், புதிய ஏற்பாட்டு சபைக்கு தசமபாகம் கொடுக்கவேண்டும் என்கிற பிரமாணம் இல்லாதபோதும், ஆதிசபையில் ஒரு ஊழியராவது "தசமபாகம் கொடுக்கவேண்டும்" என்று சபையாருக்கு போதித்ததாகவோ, ஒரு ஊழியராவது தசமபாகம் வாங்கியதாகவோ, ஒரு விசுவாசியாவது தசமபாகம் கொடுத்ததாகவோ ஆதாரம் இல்லாதபோதும், "தசமபாகம் கட்டாயம் கொடுக்கவேண்டும்" என்றும் "தசமபாகம் கொடுக்காவிட்டால் சாபம்" என்றும் மக்களை அச்சுறுத்தி தசமபாகத்தை வாங்கி, தசமபாகத்தை செலவழிப்பதைக்குறித்த பிரமாணத்தையும் மீறிவருகிற நமக்கு....

ஆரம்ப காலத்தில் ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற அனைவரும் அந்நியபாஷைகளில் பேசிய சில நிகழ்வுகள் காணப்பட்டபோதிலும் (அப்.2:1-4, 10:44-46; 19:1-6), ஆவியானவர் தமது சித்தத்தின்படியே அவனவனுக்கு வரங்களை பகிர்ந்து கொடுக்க ஆரம்பித்தப் பின்பு (1கொரி.12:7-11), எல்லருக்கும் அந்நியபாஷையில் பேசும் வரம் கொடுப்பதில்லை என்று வேதத்தில் தெளிவாய் சொல்லப்பட்டுள்ளபோதிலும் (1கொரி.12:28-30), அந்நியபாஷையில் பேசும் வரத்தை உடையவர்கள் அர்த்தம் சொல்லுகிறவர்கள் இருந்தால் மட்டுமே, அதுவும் இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டில், அதுவும் ஒவ்வொருவராக பேசவேண்டும் என்றும், அர்த்தஞ்சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசவேண்டும் என்றும் வேதம் நல்லொழுக்கத்தையும் கிரமத்தையும் வேதம் கற்பித்துள்ளபோதிலும் (1கொரி.14:13-33,40), அதையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு, வியாக்கியானம்பண்ண ஒருவரும் இல்லாதபோதும், "எல்லாரும் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று கட்டாயப்படுத்தி, அந்நியபாஷையில் பேசும் வரமற்றவர்கள் கூட உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒன்றை பேசும்படிசெய்து, உலகத்து மக்களிடம் சபையாருக்கு "பைத்தியங்கள்" என்கிற பட்டத்தைப் பெற்றுத்தரும் (1கொரி.14:23) நமக்கு.....

ஆதிசபை ஊழியர்கள் தங்களுக்கு இணையாக அற்புதங்களை செய்யவும் (அப்.2:43; 6:8: 8:5-7) சுவிசேஷம் சொல்லி, ஆத்தும ஆதாயம் செய்யவும் (அப்.6:9-7:53; 8:4-6,26-35; 11:19,20; 18:24-26), ஞானஸ்நானம் கொடுக்கவும் (அப்.8:12,13,34-38; 10:45-48; 22:12-16) பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குள் நடத்தவும் (அப்.9:10,17), சபையை நடத்தவும் (அப்.11:22-26) விசுவாசிகளை அனுமதித்திருக்கிறதை இன்றைய விசுவாசிகளுக்கு மறைத்துவிட்டு, நமக்கும் நமது குடும்பத்தாருக்கும் சபையிலும் ஊழியத்திலும் போட்டியாக எழும்பிவிடுவார்களோ என்கிற அச்சத்தில், நமக்கும் நமது குடும்பத்தாருக்கும் இணையாகவோ மேலாகவோ அவர்கள் கிருபைவரங்களில், ஊழியங்களில் வளர்ந்துவிடாதபடி பார்த்துக்கொள்வதில் விழிப்பாய் இருக்கிற நமக்கு....

ஐந்துவிதமான ஊழியரையும் தேவன் தமது சபைக்குத்தான் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதும் (எபேசி.4:11-15) ஐந்துவிதமான ஊழியரும் சபையை நடத்தியிருக்கிறார்கள் என்பதும் (யோவான் 21:15-17; அப்.1:26; 2:42; 13:1; 15:2,23,32-34; 20:17,28; 21:8-12; 1தீமோ.1:3,4), தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும் (சுவிசேஷகர், மேய்ப்பர், போதகரையும்), .... ஏற்படுத்தினார் என்பதும்
(1கொரி12:28)

வேதத்தில் தெளிவாகக் காணப்பட்டபோதும்; "மேய்ப்பராகிய எங்களைத்தான் தேவன் சபை ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார், மேய்ப்பராகிய நாங்கள் செய்வதுதான் சபை ஊழியம், மேய்ப்பராகிய எங்களுக்குத்தான் சபையில் முதன்மையான இடம்" என்றெல்லாம் வேதத்தைப் புரட்டி, தேவஜனங்கள் வேறு அழைப்புள்ளவரையும், வேறு அழைப்புள்ளவர் தேவஜனங்களையும் நெருங்கிவிடாதபடிக்கு அணைபோட்டு வருகிற நமக்கு....

உலகிலுள்ள அத்தனைப்பேர்களும் ஆதாம் - ஏவாள் வழிவந்தவர்கள் என்பதையும் (ஆதி.5:1-4, மல்கியா 2:15), மனுஷஜாதியான சகல ஜனங்களையும் தேவன் ஓரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்தார் என்பதையும்

(அப்.17:26), அந்தகாரத்தினின்று தேவனுடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிற கிறிஸ்தவர் அனைவரும் பரிசுத்த ஜாதியாயும், தேவனுக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறோம் என்பதையும்

(1பேதுரு 2:9) நன்கு அறிந்திருந்தும், ஜாதிப்பெருமைப் பேசுகிற, ஜாதிவித்தியாசம் பார்க்கிற, ஜாதிப்பார்த்து பிள்ளைகளுக்கு திருமணம் முடித்துவைக்கிற நமக்கு....

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்றும்
(1தீமோ.6:10),

பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி பொருளாசையின் போமுதலாய் நமக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது என்றும்

(எபேசி.5:3), விக்கிரகாராதனையான பொருளாசையை உண்டுபண்ணுகிற நமது அவயவங்களை அழித்துப்போடவேண்டும் என்றும்

(கொலோ.3:5), விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரன் தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை என்றும்

(எபேசி.5:5) வேதம் நம்மை எச்சரித்திருக்கையில், 'வரதட்சணை' என்கிற பெயரில் பெண்வீட்டாரின் பணம் மற்றும் பொருளை கொள்ளையிடுகிற நமக்கு....

இப்படி இன்னும் அநேகக்காரியங்களில் மனதார சத்தியத்தை மாற்றிப் பேசுகிற, சத்தியத்திற்கு முரணானக் காரியங்களை துணிக்கரமாய் செய்துகொண்டு , "வசனத்தின்படிதான் நாங்கள் போதிக்கிறோம், செய்கிறோம்" என்று சாதிக்கிற நமக்கு, மற்றவரின் வேத அடிப்படையற்ற போதனையையும்,

வேதத்திற்கு முரணானக் காரியங்களையும் விமர்சிக்கும் தகுதியிருக்கிறதா?

நமது போதகத்திலும் செய்கையிலும் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ள நாம் என்றைக்காவது முயற்சித்திருக்கிறோமா?

*"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்."* என்று ஆண்டவர் சொல்லுகிறது (மத்தேயு 7:5) நமது செவிகளில் என்றைக்காவது ஏறியிருக்கிறதா?

அன்புக்குரிய ஆவிக்குரிய சபைகளின் ஊழியர்களே, முன்பு நாம் நம் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட்டுவிட்டு, பின்பு நம் சகோதரர் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்க்கலாமே!!

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920


=========================
லெந்து நாட்கள் வேத அடிப்படையிலானதுதானா? அல்லது கலாச்சாரம் சார்ந்ததா? ஆதிசபையார் இதைப் பின்பற்றியதாக ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?
=======================
லெந்து நாட்கள் என்றால் என்ன என்று புரிந்துகொண்டால், அது வேத அடிப்படையிலானதுதானா? இல்லையா? என்பது புரிந்துவிடும்.

லெந்து நாட்கள் என்பது என்ன?
லெந்து நாட்கள் என்பது சாம்பல் புதன்கிழமையிலிருந்து உயிர்த்தெழுதலுக்கு முந்தைய நாள் வரை மொத்தம் 46 நாட்களை கொண்டது. இதில் 6 ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 40 நாட்கள் நோம்பு நாட்களாக அநுசரிக்கப்படுகின்றன. முதல் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்தவர்களினால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த பண்டிகை நாளுக்கு முன்பு மூன்று நாட்கள் மட்டும் லெந்து நாட்களாக அனுசரிக்கப்பட்டு வந்தது. பிற்பாடு இந்த லெந்து நாட்கள் “நைசீன்” என்று அழைக்கப்பட்ட மன்ற உறுப்பினரால் கி.மு.325ஆம் ஆண்டளவில் நாற்பது நாட்களாக அதிகரிக்கப்பட்டது.

இந்நாட்கள் உபவாசம் மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டவையாகக் கடைபிடிக்கப்படுகின்றன. இந்நாட்கள் மனமாற்றத்திற்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம் என்றும்; நமது பலவீனங்களை தேவனுடைய பலத்தின்மூலம் நிவர்த்திசெய்யும் காலம் என்றும் கருதப்படுகிறது.

இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், ஆடம்பர உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து, அதன்மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலர் கடைபிடிக்கின்றனர். சிலர் வெள்ளிக்கிழமைதோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

லெந்து நாட்கள் ஒரு குறிப்பிட்ட தேசத்தாரின் கலாச்சாரத்தை சார்ந்ததா?
கி.பி. 125 இல் கூடிய நிசேயா பெருமன்றத்தின் தீர்மானத்தின்படி *ஈஸ்டர் ஞாயிறு* கணிப்பு அறிவிக்கப்பட்டது. அதாவது இரவும் பகலும் சமமாயுள்ள மார்ச் 21 ஆம் தேதிக்குப் பின்வரும் முழு நிலவுக்கு அடுத்த ஞாயிறுதான் ஈஸ்டர் ஞாயிறு என்று அறிவிக்கப்பட்டது

குளிர்காலம் மரித்து சூரியமுகம் தோன்றும் நாளில் 'யூஸ்தர்’ அல்லது ‘அஸ்தரா’ என்கிற (சீதோனியரின்) வசந்தத்தின் தேவதைக்கு (நியா.2:13; 10:6) கொண்டாடப்படும் பெருமகிழ்ச்சிப் பண்டிகையை தழுவி, கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பண்டிகை, சீதோனியரின் விக்கிரகத்தின் பெயரிலேயே, அதன் பண்டிகையின் நாளிலேயே உண்டாக்கப்பட்டிருக்கிறது!

யூதர்கள் ‘அஸ்தரா’ என்னப்படுகிற சீதோனியரின் அஸ்தரோத்தை சேவித்ததற்காக அவர்களை தேவன் கடுமையாக தண்டித்திருக்கையில் (நியா.2:13,14; 10:6-9; 1சாமு.7:1-3; 1இரா.11:5,31,33); அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் தங்கள் நடுவிலிருந்து விலக்கி, தங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்ய இஸ்ரவேலர் அறிவுறுத்தப்பட்டிருக்கையில் (1சாமு.7:3); கிறிஸ்தவர்கள் அந்நிய தேவதையின் பெயரிலேயே, அவர்களின் பண்டிகை நாளிலேயே கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடுவதில் தேவன் பிரியப்படுவாரா என்று யோசிக்கவேண்டும்!

கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? .....

தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது?
(2கொரி. 6:15,16)

கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்வதும் கொண்டாடுவதும் தவறல்ல, ஆகிலும், அதற்கு விக்கிரகத்தின் பெயரையும், விக்கிரகப் பண்டிகையின் நாளையும் தெரிந்துகொண்டது சரியல்ல!

மேலும், தமது மரணத்தை நினைவுகூர இராபோஜனத்தை கடைபிடிக்கக் கட்டளையிட்ட ஆண்டவர் (லூக்கா 22:17-20; 1கொரி.11:24-26), தமது உயிர்த்தெழுதலை கொண்டாட நியமம் எதையும் தமது சபைக்கு கொடுக்கவில்லை. ஆகிலும், வருஷத்திற்கு ஒருநாள் அல்ல, ஒவ்வொருநாளும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கு நாம் சாட்சியாய் இருக்கவேண்டியது அவசியமாகும்! (அப்.1:8; 2:32; 3:14,15; 4:33)

லெந்துநாட்களின் துவக்கமாக *சாம்பல் புதனை* அநுசரிக்கும் முறை கி.பி.900ல் கத்தோலிக்க திருச்சபையில் தோன்றியது.

சாம்பல் இவர்களால் எளிமை, துக்கம், மனமாற்றம், நிலையற்ற வாழ்வு மற்றும் நல்வாழ்வுக்கு அடையாளமாகப் பார்க்கப்படுறது.

குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்திய குருத்தோலைகளை சேகரித்து, அவைகளை எரித்து சாம்பலாக்கி, திருச்சபையாரின் நெற்றியில், " நீ மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டாய், மண்ணுக்கே திரும்புவாய்" என்று சொல்லி பாதிரியார் பூசுவார்.

யோபு காலத்தில் பாலஸ்தீனத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியை (ஊத்ஸ்) சேர்ந்த மக்கள் தங்கள் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்த சாம்பலில் உடாகார்ந்து மன்றாடும் வழக்கத்தையும் (யோபு 1:1; 2:8)

யூதர்கள் தங்கள் ஆபத்துக் காலத்தில் மகா துக்கத்தோடும், உபவாசத்தோடும், அழுகையோடும் புலம்பலோடும் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடக்கும் (எஸ்தர் 4:3) வழக்கத்தையும் பின்பற்றி கத்தோலிக்கர் சாம்பல் புதனை அநுசரிக்க துவங்கியிருக்கலாம்!

லெந்துகாலம் வேத அடிப்படையிலானதுதானா?
உபவாசம் செய்யவோ, இச்சையடக்கத்துடன் வாழவோ வருஷத்தில் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கிக்கொள்ள புதிய ஏற்பாட்டு சபைக்கு எந்த கட்டளையும் இல்லை.

தேவனுடைய பிள்ளைகள் தங்களுக்கு வசதியான எந்தநாளிலும் உபவாசிக்கலாம். உபவாசத்திற்கென்று சில நாட்களை விசேஷித்துக்கொள்கிறதும் தவறில்லை. (அப்.27:9; 1கொரி.7:5; ரோமர் 14:5,6)

ஆகிலும் இது கட்டளையல்ல!

கிறிஸ்தவர்கள் உபவாசிப்பதும்;

மனந்திரும்புவதும்; தங்கள் இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறிவதும்; தங்கள் பலவீனங்களை தேவனுடைய பலத்தின்மூலம் நிவர்த்திசெய்வதும்; ஆடம்பர அணிகலன்கள், ஆடம்பர உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுப்பதும்; ஏழைகளை ஆதரிப்பதும் வருஷத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் செய்யவேண்டியக் காரியங்கள் அல்ல. இவை அநுதினமும் கடைபிடிக்கவேண்டியவையாகும். (லூக்கா 18:1-8; 21:36; யோவான் 12:8; அப்.10:2; 24:16; 1கொரி.15:58; 2கொரி.2:14; 4:10,11; 9:8; கலா.4:18; பிலி.2:12; கொலோ.4:12; 1தெச.5:15; 2பேதுரு 1:1-12)

"ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, *தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு,* என்னைப் பின்பற்றக்கடவன்" என்று ஆண்டவர் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (லூக்கா 9:23)

இப்படியிருக்க, லெந்து நாட்களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அது வேத அடிப்படையற்றது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்!

ஆதிசபையார் லெந்து நாட்களை கடைபிடித்தார்களா?
ஆதிசபையார் கிறிஸ்துவின் பிறப்பு, கிறிஸ்துவின் பவணி, கிறிஸ்துவின் இறப்பு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இவைகளை பண்டிகைகளாக அநுசரித்ததாக வேதாகமத்தில் தகவல் இல்லை. அநுசரிக்கும்படி அவர்கள் கட்டளையிடப்படவும் இல்லை. இவைகளை கொண்டாடத் தவறினால் ஆண்டவர் வருத்தப்படுவார் என்று அவர்கள் அச்சப்படவும் இல்லை.

ஆதிசபைகளின் ஊழியர்கள் சடங்குகளின் வழியாக அல்ல, சத்தியத்தின் வழியாகவே மக்களின் மனம் மறுரூபமாகப் பிரயாசப்பட்டனர்!

தேவஜனங்கள் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் (கிறிஸ்துவின் எல்லா குணங்களிலும்) வளருகிறவர்களாயிருக்கும்படி அவர்கள் வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் அல்ல, அநுதினமும் பிரயாசப்பட்டனர். (எபே.4:13-15)

தங்களுக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்பட்டு,

எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக (கிறிஸ்துவின் சாயலை உடையவனாக) நிறத்தும்படிக்கு, அவரையே அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணினர். (கொலோ.1:28,29)

தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிற

வேதவாக்கியங்களைக்கொண்டு, உபதேசித்து, கடிந்துகொண்டு, சீர்திருத்தி, நீதியைப் படிப்பித்து,

தேவஜனங்களை (கிறிஸ்துவின் குணங்களில்) தேறினவர்களாக்கவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாக்கவும் ஊக்கமாய் உழைத்தனர்.
(2தீமோ.3:16,17)

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் (எக்காலத்திலும்) ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணி, எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொன்னார்கள். (2தீமோ.4:2)

ஆனால், இன்று வேத அடிப்படையற்றப் பண்டிகைகள், பாரம்பரியங்கள் மற்றும் சடங்காச்சாரங்கள் வழியாக பிரயாசப்படுகிறவர்கள், திருச்சபையாரை உணவற்ற சவங்களாகவே வைத்திருக்கின்றனர்!

லெந்துகாலத்தால் கிறிஸ்தவரில் ஜீவியமாற்றம் உண்டாகிறதா?
லெந்துகால அநுசரிப்பால் கிறிஸ்தவரில் ஜீவியமாற்றம் உண்கிறதென்றால்,

எத்தனையோ ஆண்டுகள் லெந்துகால நோம்பை அநுசரிக்கிறவர்கள் எப்படி இன்னும் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருக்கமுடியும்?
(2தீமோ.3:1-5)

லெந்துகாலத்துக்கு முன்பு உலகத்திலும் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமான உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்ததுபோலவே, லெந்துகாலத்துக்கு பின்பும் எப்படி அன்புகூரமுடியும்?
(1யோவான் 2:15,16)

லெந்துகாலத்துக்கு முன்பு மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றிக்கொண்டதுபோலவே, லெந்துகாலத்துக்கு பின்பும் எப்படி நிறைவேற்றிக்கொள்ளமுடியும்? (கலா.5:16-21)

லெந்துகாலத்துக்கு முன்பு விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகியவைகளை உண்டுபண்ணினது போலவே, லெந்துகாலத்துக்கு பின்பும் நமது அவயவங்கள் அவைகளை எப்படி உண்டுபண்ணமுடியும்? (கொலோ. 3:5)

லெந்துகாலத்துக்கு முன்பு ஐவரியவான்களாகவேண்டும் என்கிற விருப்பமுள்ளவர்களாகவும், பண ஆசையுள்ளவர்களாகவும் இருந்ததுபோலவே, லெந்துகாலத்துக்கு பின்பும் எப்படி இருக்கமுடியும்? (1தீமோ.6:9,10)

லெந்துகாலத்துக்கு முன்பு ஜாதிவெறியராயும், பொருளாசையான வரதட்சணைப் பிரியராயும் இருந்ததுபோலவே, லெந்துகாலத்துக்கு பின்பும் எப்படி இருக்கமுடியும்?
(கலா.5:20; எபே.5:3,5; கொலோ.3:5)

லெந்துகாலத்துக்கு முன்பு திருச்சபைக்குள்ளே பதவிக்காக யுத்தங்களும் சண்டைகளும் வரத்தக்கதாய்,

சபையாரின் அவயவங்களில்

இச்சைகள் போர்செய்ததுபோலவே, லெந்துகாலத்துக்கு பின்பும் எப்படி செய்யமுடியும்?
(யாக்.4:1-4)

லெந்துகாலத்துக்கு முன்பு ஜெப பாரமற்றவராய், வேத வாஞ்சையற்றவராய், ஆத்தும தாகமற்றவராய், தேவ வைராக்கியமற்றவராய் இருந்ததுபோலவே, லெந்துகாலத்துக்கு பின்பும் எப்படி இருக்கமுடியும்?

கங்கையில் மூழ்குவதற்கு முன்பு காஞ்சப் பாவியாகவும், மூழ்கி எழுந்தப் பின்பு ஈரப்பாவியாகவும் இருப்பது போலவே, லெந்துகாலத்துக்கு முன்பும் பின்பும் ஜீவியத்தில் எந்த மாற்றமும் தென்படாத கிறிஸ்தவரே ஏராளம்!

லெந்துகாலத்தில் இருப்பதுபோலவே எந்தக்காலத்திலும் கிறிஸ்தவர் அன்பாய், எளிமையாய், தாழ்மையாய், தூய்மையாய், வாய்மையாய் இருக்கவேண்டும் என்பதுதான் தேவசித்தமாக இருக்கிறது! (மத்.7:21-27; 5:3-10)

[லெந்து நாட்கள் குறித்த சரித்திர தகவல்களைப் பெற உதவியாக இருந்த ஊடகங்களுக்கு மிக்க நன்றி!]

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920


=============================
ஒருவர் ஒருவிசை இரட்சிக்கப்பட்டுவிட்டால், அவர் என்ன பாவம் செய்தாலும் இனி இரட்சிப்பை இழக்கவே முடியாதா? அல்லது இழக்கக்கூடுமா?
===========================
✍️ "ஒருவர் ஒருவிசை இரட்சிக்கப்பட்டுவிட்டால், அவர் என்ன பாவம் செய்தாலும் இனி இரட்சிப்பை இழக்கமுடியாது" என்று சாதிக்கிற ஒரு கூட்டமும், "இரட்சிக்கப்பட்டவர் மறுபடியும் பாவத்தில் ஜீவித்தால் இரட்சிப்பை நிச்சயம் இழக்கநேரிடும்" என்று போதிக்கிற ஒரு கூட்டமும் கிறிஸ்தவ உலகில் உண்டு!

இவர்களில் யார் சொல்லுவது சரி என்பதை வேத வெளிச்சத்தில் காண்போம்.

*கீழ்காணும் வசனங்கள், இரட்சிக்கப்பட்டவர்கள் அதற்கு பாத்திரவான்களாய் நடந்துகொள்ளவில்லையென்றால், இரட்சிப்பை இழக்கநேரிடும் என்பதற்கான ஆதாரங்கள்!*
மத்தேயு 3:8,10,12
மத்தேயு 7:15-23
மத்தேயு 24:11-13; 44,45,48-51
மத்தேயு 25:1-3,8,10-13; 14,15,18,24-30; 31-33,41-46
யோவான் 15:2,6
ரோமர் 6:1-22; 8:12,13
1கொரிந்தியர் 6:9-13
கலாத்தியர் 5:15-21
எபேசியர் 5:3-7
கொலோசெயர் 2:16-23; 3:5,6
1தீமோத்தேயு 5:6; 6:9,10
எபிரேயர் 2:1-4; 3:12-19; 4:1-11; 6:4-6,8; 10:24-31,38,39; 12:14-17
யாக்கோபு 1:13-16; 2:8-13; 4:1-4
1பேதுரு 4:17,18
2பேதுரு 2:9,10,20-22; 3:10-18
1யோவான் 1:8; 2:9,11,15-17,28; 3:7-15;
2யோவான் 1:7-11
வெளிப்.2:5,16,20-23,25; 3:3,11,15,16.

கீழ்காணும் வசனங்கள் நமது இரட்சிப்பை காத்துக்கொள்ளும் கடமை நமக்கு இருக்கிறது என்பதை வலியுறுத்துகின்றன!*
பிலிப்பியர் 2:12
மத்தேயு 3:8; 5:20; 7:21,24,25; 24:13,44-47; 25:1-3,6,7,10; 14-17,19-23; 31-40
யோவான் 15:1-3,5,7
ரோமர் 8:1,13,17,18; 12:1,2; 13:11-14
1கொரிந்தியர் 1:7,8; 3:16,17; 5:1-11; 6:12-20; 7:2-6; 9:24-27; 10:1-14; 13:1-10; 15:1,2,29-34
2கொரிந்தியர் 5:1-11; 6:14-7:1
கலாத்தியர் 5:14,22-24
எபேசியர் 4:17-32; 5:1-21; 6:10-18
பிலிப்பியர் 1:10,11; 2:12-16; 3:1-21; 4:8,9
கொலோசெயர் 1:3-5; 2:6-8; 3:1-5,22-25; 4:1
1தெசலோனிக்கேயர் 1:2-4,9,10; 2:7-13; 3:1-7; 4:1-8; 5:1-24
2தெசலோனிக்கேயர் 1:4-12; 2:1-3,13-17; 3:4-6,14
1தீமோத்தேயு 1:18-20; 3:1-7; 4:16; 5:11-15, 24,25; 6:9,10,20,21
2தீமோத்தேயு 1:16-18; 2:10-12; 3:1-5,10-17; 4:7,8
தீத்து 1:3,4; 2:1-14; 3:1-8
எபிரேயர் 6:1,2; 10:19-22; 11:1-12:4; 13:4-7,13-17
யாக்கோபு 1:18-27; 2:12-26; 3:1-14,18; 4:4-12
1பேதுரு 1:5-9,13-22; 2:1-12,24,25; 4:1-8; 5:8-10
2பேதுரு 1:3-11; 2:9; 3:10-18
1யோவான் 3:1-7; 5:16-21
யூதா 1:3,4,17,20-25
வெளிப்.2:4,5,7,11,12,16,17,24-29; 3:2-5,8-12,18-22; 14:1-5; 21:2,6,7,9-27; 22:1-5,7,11-14.

"ஒருமுறை இரட்சிக்கப்பட்டுவிட்டால், இனி நாம் எப்படி ஜீவித்தாலும் இரட்சிப்பை இழப்பதில்லை" என்பது தவறான உபதேசமாகும்!!

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920


======================
நடிகர் நடிகையர், பொழுது போக்கு துறையினர் ஆவிக்குரிய வாழ்வு வாழமுடியுமா?
=======================
✍️ இந்தக் கேள்வியை நியாயமாக அவர்களிடம்தான் கேட்கவேண்டும்!

ஆவிக்குரிய வாழ்க்கை என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரிந்தால்தான், சினிமா துறையில் இருந்துகொண்டு, தங்களால் ஆவிக்குரிய ஜீவியம் செய்யமுடியுமா? முடியாதா? என்பதை அவர்களால் தீர்மானிக்கமுடியும்.

ஆவிக்குரிய வாழ்வு என்றால் என்ன?
"நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்" என்கிறார் பவுல். (கலா.5:25)

ஆவிக்குரிய வாழ்வு என்பது ஆவிக்கேற்றபடி நடப்பது என்பது விளங்குகிறதல்லவா?

"பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்" என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள். (கலா.5:16)

ஆவிக்கேற்படி நடந்துகொண்டு, மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பதே ஆவிக்குரிய வாழ்வு ஆகும்!

கிறிஸ்துவினுடையவர்களாய் தங்கள் மாம்சத்தையும் (ஜென்ம சுபாவத்தையும்) அதின் ஆசை இச்சைகளாகிய

விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் ஆகியவைகளையும் சிலுவையில் அறைந்துவிட்டு, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

சாந்தம், இச்சையடக்கம் ஆகிய ஆவியின் கனியுடையோராய் ஜீவிப்பதே ஆவிக்குரிய வாழ்வாகும்!
(கலா.5:19-24)

கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடப்பதே ஆவிக்குரிய வாழ்வாகும். (ரோமர் 8:1)

மாம்சத்தின்படி பிழைக்காமல், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்து,

தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறதே ஆவிக்குரிய ஜீவியமாகும்!
(ரோமர் 8:13,14)

ஆவிக்குரிய ஜீவியம்பண்ணுகிறவர்கள் தேவனுடைய ஆவியைப்பெற்று, மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருந்து, ஆவிக்குரியவைகளைச் சிந்தித்து, ஆவியின்படி நடக்கிறார்கள்.
(ரோமர் 8:5,9)

மாம்சத்தின் கிரியைகள் இல்லாத சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறை சாத்தியமானவையா?
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் போன்ற மாம்சத்தின் கிரியைகள் (கலா.5:19-21) இல்லாத சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறை சாத்தியமானவையா?

மாம்சீகமானக் காரியங்களை பேசாமலும், மாம்சீகமான காரியங்களைச் செய்யாமலும் சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையினரால் இருக்கமுடியுமா?

ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுகிறவர்களால், மாம்ச இச்சையை எப்படி நிறைவேற்றமுடியும்? (கலா.5:16)

தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறையாதவர்களால், எப்படி ஆவியினாலே பிழைத்திருந்து, ஆவிக்கேற்றபடி நடக்கமுடியும்?
(கலா.5:24,25)

ஒருவர் ஒரே நேரத்தில் மாம்சத்துக்குரியவராகவும், ஆவிக்குரியவராகவும் எப்படியிருக்கமுடியும்?

"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்" என்கிறாரே ஆண்டவர்! (வெளி.3:15,16)

"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற *ஜீவனுள்ள கல்லாகிய* அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், *ஜீவனுள்ள கற்களைப்போல* (அவரைப்போல{வே) *ஆவிக்கேற்ற மாளிகையாகவும்,* இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான *ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப்* பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்" என்று பேதுரு சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (1பேதுரு 2:4,5)

இயேசுகிறிஸ்துவின்மேல் அவருடைய சாயலாகவே கட்டப்படுகிற ஆவிக்குரியோரே ஆவியானவர் தங்குவதற்கு தகுதியான மாளிகையாக, ஆதாவது பரிசுத்தமான ஆலயமாக இருக்கிறார்கள். (1கொரி.3:6,17; 6:19,20)

இவர்கள் ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் இருக்கிறார்கள்.

பரிசுத்த ஆசாரியக்கூட்டமாய் இருக்கிற இவர்கள், தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, புத்தியுள்ள ஆராதனை செய்கிறார்கள்.\
(ரோமர் 12:1)

தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்திருக்கிற இவர்கள், இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகிறார்கள். (ரோமர் 12:2)

சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் இருக்கிற கிறிஸ்தவர்களால் இப்படி இருக்கமுடிகிறதா இல்லையா என்பதை அவர்கள்தான் அறிக்கையிடவேண்டும்.

சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையை மட்டுமல்ல, ஆவிக்குரிய ஜீவியம் செய்வதற்கு தடையாயிருங்கிற மாம்சத்தின் கிரியைகள் நிறைந்த எந்தத் தொழிலையும் ஆவிக்குரிய கிறிஸ்தவர் தவிர்க்கவே செய்வார்!

*ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்.* அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். *ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்.* ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். (1கொரி.2:14,15)

ஜென்மசுபாவம் செழிப்படைகிறதற்கு அதிக வாய்ப்புள்ள இடங்களில் இருந்துகொண்டு, தன்னால் ஆவிக்குரிய ஜீவியம் நன்றாக செய்யமுடிகிறது என்று ஒருவர் கூறுவாரானால், அது ஆய்வுக்குரியது!!

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920


======================
ஒருவர் தான் இரட்சிக்கப்படுவதற்கு எந்தக் கிரியையும் செய்ய அவசியமில்லாதபோது, தனது இரட்சிப்பைக் காத்துக்கொள்வதற்கு அவர் கிரியை செய்யவேண்டியது அவசியமா?
======================
✍️ வேதமே இதைக்குறித்த வெளிச்சத்தை நமக்கு தரவல்லது!

இரட்சிக்கப்படுவதற்கு கிரியை அவசியமா?

*"ஒருவன் கிரியை செய்யாமல்* பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் *விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால்,* அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்" என்கிறார் பவுல்.
(ரோமர் 4:5)

"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். *இது உங்களால் உண்டானதல்ல,* இது தேவனுடைய ஈவு" (எபே.2:8)

ஒருவர் தான் இரட்சிக்கப்படுவதற்கு இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைப்பதைத் தவிர, வேறு எந்த கிரியையும் செய்யவேண்டியதில்லை.

*அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சியாமல்,* தம்முடைய தீர்மானத்தின்படியும், *ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து,* பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். (2தீமோ.1:9)

*நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல்,* தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
(தீத்து 3:5)

"எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

*இலவசமாய் அவருடைய கிருபையினாலே* கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்" என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (ரோமர் 3:23,24)

இரட்சிப்பு முற்றிலும் இலவசம்! இது மனுஷனுடைய முயற்சியால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு!

கிரியை இல்லாமல் விசுவாசத்தை நிரூபிக்கமுடியுமா?
ஒருவர் இரட்சிக்கப்படுவதற்கு கிரியைசெய்யவேண்டிய அவசியமில்லை, ஆண்டவர்மேல் வைக்கும் விசுவாசமே போதுமானது. ஆனால், தான் ஆண்டவர்மேல் விசுவாசமுள்ளவர் என்பதை அவர் கிரியைகளின் மூலமாகக் காண்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்!

கிரியைகளில்லாமல் ஒருவர் தன் விசுவாசத்தை காண்பிக்கமுடியாது, விசுவாசத்தை கிரியைகளினால் மட்டுமே நிரூபிக்கமுடியும்! (யாக்.2:18,15,16,21-25)

தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவர் உண்மையாய் இரட்சிக்கப்பட்டவராக இருக்கமுடியாது!
(யாக்.2:14,17,20,26)

பிசாசுகளும் தேவனை விசுவாசித்து, நடுங்குகின்றன. ஆனால், அவை தேவனுக்கேற்ற கிரியை செய்வதில்லை! அவை இரட்சிப்பின் அனுபவம் இல்லாதவை. தனக்கு தேவன்மேல் விசுவாசம் உண்டென்று சொல்லியும், தனது விசுவாசத்தை கிரியைகளினால் வெளிப்படுத்தாத கிறிஸ்தவருக்கும் பிசாசுக்கும் பெரிய வித்தியாசமில்லை! (யாக்.2:19)

இரட்சிக்கப்பட்டவர் கட்டாயம் கிரியை செய்யவேண்டுமா?

"அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் *உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.* ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி *விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்"* என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.(பிலிப்.2:12,13)

கிருபையினால் இரட்சிக்கப்பட்டவர் கிரியையினால் அதை செயல்படுத்தவேண்டியது அவசியம்! அதாவது இரட்சிக்கப்பட்டவருக்கு தகுதியான கிரியைகளை செய்து, அவர் இரட்சிப்பில் நிலைத்திருக்கவேண்டும்.

நமது இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுவதற்கான விருப்பத்தையும் செய்கையையும் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி நம்மில் உண்டாக்குகிறார். தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி தேவன் நம்மில் உண்டாக்கும் அவருடைய விருப்பத்தின்படி செய்வதே இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுவதாகும்!

*"நற்கிரியைகளைச் செய்கிறதற்கு* நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, *தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்.* அவைகளில் நாம் நடக்கும்படி அவர் *முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்"* என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
(எபே.2:10)

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டவர்கள் (எபே.2:8), வாழ்க்கை முழுவதற்கும் செய்யவேண்டிய

நற்கிரியைகளை நம்மை இரட்சிப்பதற்கு முன்னதாகவே தேவன் ஆயத்தம்பண்ணியிருக்கிறார். தாங்கள் செய்யும்படிக்கு தேவன் ஆயத்தம்பண்ணியிருக்கிற

நற்கிரியைகளை செய்யவேண்டியது இரட்சிக்கப்பட்டவர்களின் கடமையாகும்!

"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்" என்று எச்சரித்த யோவான்ஸ்நானனை நோக்கி:

"நாங்கள் என்ன செய்யவேண்டும்" என்று ஜனங்கள் கேட்டதற்கு:

"இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன், ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்" என்றும்;

ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: "போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்" என்று கேட்டதற்கு: "உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள்" என்றும்; போர்ச்சேவகரும் அவனை நோக்கி: "நாங்கள் என்னசெய்யவேண்டும்" என்று கேட்டதற்கு: "நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்" என்றும் கனிகொடுப்பதற்கான வழியைக் காண்பித்தான்!
(லூக்கா 3:8-14)

உண்மையான மனந்திரும்புதல் கனிகளால் நிரூபிக்கப்படவேண்டும்!

*சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு* நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். (2கொரி. 5:10)

"அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் *இன்னும் நீதிசெய்யட்டும்,* பரிசுத்தமுள்ளவன் *இன்னும் பரிசுத்தமாகட்டும்.* இதோ, சீக்கிரமாய் வருகிறேன், *அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன்* என்னோடேகூட வருகிறது" என்று எச்சரிக்கிறார் வரப்போகிற நியாயாதிபதி!
(வெளிப்.22:11,12)

"பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், *அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்,* ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று.
வெளிப்.14:13

மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே *மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக* நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
வெளிப்.20:12

சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. *யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே* நியாயத்தீர்ப்படைந்தார்கள்
வெளிப்.20:13

மேற்காணும் வெளிப்பாடுகள் நமது கிரியைகளின்படியே நமக்கு தீர்ப்பு இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன!

அப்.9:36; 26:20; ரோமர் 2:6,7; 13:3; 1கொரி.15:58; 2கொரி.9:8; 10:11; கலா.5:6; எபே.4:16; பிலிப்.1:5; கொலோ.1:10; 3:17; 1தெச.1:2; 2தெச.1:12; 2:17; 1தீமோ.2:10; 5:10,25; 6:18; 2தீமோ.2:22; 3:16,17; தீத்து 2:7,14; 3:1,8,14; எபி.6:10; 10:24,25; 13:21; யாக்.1:25; 2:17,18,20,21,22,24-26; 3:13; 1பேதுரு 1:17; 2:12; 1யோவான் 3:18

👆மேற்காணும் குறிப்புகளுக்குரிய வசனங்கள் இரட்சிக்கப்பட்டவர், அதற்கேற்ற கிரியை நடப்பிக்கவேண்டியிருப்பதை வலியுறுத்துகிறவை.

ஆசியாவின் ஏழு சபைகளின் கிரியைகளை தீவிரமாய் ஆய்வுசெய்தார் ஆண்டவர். (வெளிப்.2:2,5,9,13,19,26, 3:1,2,8,15)

"நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, *மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக,* இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்" என்று எபேசு சபையையும்

(வெளிப்.2:5); "நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து, *உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை"* என்று சர்தை சபையையும்

(வெளிப். 3:2); *"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்,* நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.

*இப்படி நீ* குளிருமின்றி அனலுமின்றி *வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால்* உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்" என்று லவோதிக்கேயா சபையையும் (வெளிப்.3:15,16) ஆண்டவர் எச்சரித்தார்!

இப்படியிருக்க, "நமது இரட்சிப்புக்கான அனைத்தையும் ஆண்டவர் சிலுவையில் செய்து முடித்துவிட்டபடியால், இரட்சிக்கப்பட்டப் பின்பும் நாம் எந்த நற்கிரியையும் செய்யாவிட்டாலும், எப்படி வாழ்ந்தாலும், விசுவாசத்தால் மட்டுமே பரலோகம் போய்விடலாம்" என்கிற கொடிய வஞ்சகரிடம் கவனமாக இருக்கவேண்டும்!

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்தஜனங்களாகவும், *நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி,* நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். (தீத்து 2:14)

ஊழியக்காரர்கள் இவைகளை பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள்ளவேண்டும். (தீத்து 2:15)

தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் *நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி* ஊழியர்கள் திட்டமாய்ப் போதிக்கவேண்டும். (தீத்து 3:8)

தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், *எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,* உபதேசிக்கவும், கடிந்துகொள்ளவும், சீர்திருத்தவும், நீதியைப் படிப்பிக்கவுமே

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்!! (2தீமோத். 3:16,17)

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.