Type Here to Get Search Results !

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா | மதமும் மனிதமும் Alwin Johnson Bible Study | Daily Motivation Sermon | தின தியான குறிப்புகள் | Jesus Sam

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா | எருமை மாட்டின் மீது மழை | நாம் அறியாததும் நமக்கு எட்டாததும் | உங்க கண் பத்திரம்! | மதமும் மனிதமும்

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா

*யார் இந்த ஆக்கில்லா, பிரிஸ்கில்லா?* இணைபிரியா நண்பர்களா? அண்ணன் தம்பியா? அக்கா தங்கையா? இல்லை இல்லை. இவர்கள் கணவன்-மனைவி ஆவார்கள். ரோமாபுரியில் வசித்த யூத தம்பதியினர். கூடாரம் செய்யும் தொழிலை செய்து கொண்டே, பவுலோடு இணைந்து ரோமாபுரி, கொரிந்து, எபேசு போன்ற 3 பட்டணங்களில் சபையை ஸ்தாபித்து, ஊழியம் செய்தவர்கள்.




வேதத்தில் ஆறுமுறை இவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் *கணவன் மனைவி இருவருடைய பெயர்களையும் சேர்த்து தான் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.* புதிய ஏற்பாட்டில் பலர் ஊழியம் செய்திருக்கின்றார்கள். பேதுரு, யோவான், யாக்கோபு, பர்னபாஸ், தீத்து, தீமோத்தேயு... *இப்படி மற்ற எவருடைய பெயர்களோடும், அவர்கள் மனைவியின் பெயர் சேர்த்து குறிப்பிடப்படவில்லை.*




ஆனால் ஆக்கில்லா பிரிஸ்கில்லாவின் பெயர் மட்டும் ஏன் மீண்டும் மீண்டும், சேர்த்து குறிப்பிடப்பட்டிருக்கின்றது? *அதற்கு காரணம், அவர்கள் அந்த அளவிற்கு இணைந்து ஊழியத்தில் பணியாற்றியிருக்கின்றார்கள். அவர்கள் குடும்பத்தில் காணப்பட்ட ஒருமனம்தான், அவர்களை ஊழியத்திலும் இணைந்து செயல்பட வைத்தது. அதன் விளைவாக அவர்களால் 3 சபைகள் உருவானது.*




ஆக்கில்லா பிரிஸ்கில்லா வீட்டில் தான் சபை ஆராதனையே நடந்திருக்கின்றது. வீட்டுக்குள் ஒருமனம் இல்லாமல் சபை ஆராதனையை வீட்டில் நடத்த முடியுமா?




இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; *தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.* (மத். 12:25)




*ஒருமனம் இல்லாத வீடு அழிந்து போகும்.* இன்று அநேக குடும்பத்திங்களில் கணவன் மனைவிக்குள் சண்டை, பிள்ளைகள் பெற்றோருக்கும் சண்டை, பிள்ளைகளுக்குள் சண்டை, பின்னர் இவர்கள் குடும்பத்திற்கும் ஊருக்குமே சண்டை என ஒரே சண்டை போட்ட பிழைப்பாயிருந்தால் குடும்பம் ஆசீர்வாதமாயிருக்காது.




*குடும்பத்தில் ஒருமனம் இல்லாமல் இருப்பது, சாத்தானுக்கு நீங்கள் திறக்கும் வாசல் ஆகும். அநேகருடைய வீடுகளில் ஆசீர்வாதமில்லாமலிருப்பதற்கான காரணம் இதுதான். பிசாசாகிய திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவுமே அன்றி வேறொன்றிற்கும் வரான் என்று வேதம் சொல்கின்றது. தனியாக இருந்த ஏவாளைத்தான் பிசாசு வஞ்சித்து அந்த குடும்பத்தை பாவத்தில் தள்ளினான்.*




*கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கை.* ஆனால் அந்த கருத்து வேறுபாடுகளை அமைதியாய் கையாண்டு தீர்வு காணாமல், நீ பெரியவனா நான் பெரியவளா என்று ஒருவருக்கொருவர் போராடிக் கொண்டு இருந்தால், குடும்பம் சிதைந்துவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள், மன்னித்துவிடுங்கள், ஒருவர் குறையை மற்றொருவர் மூடுங்கள். ஒருவர் பெலவீனத்தில் மற்றொருவர் உதவி செய்யுங்கள்.




*பொருந்தாத உறவு என்று சொல்லப்படும், மாமியார் மருமகள் உறவிலேயே, நகோமியும், ரூத்தும் இணைந்து செயல்பட்டதால், இடிந்து போயிருந்த அவர்கள் குடும்பம் மீண்டும் கட்டப்பட்டது. ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.*




*உங்கள் குடும்பம் எப்படி இருக்கின்றது? இணைந்து செயல்படுகின்றீர்களா? அல்லது ஆளுக்கு ஆள் ஒவ்வொருபக்கம் இழுத்துக் கொண்டிருக்கின்றீர்களா?*

சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!!*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


எருமை மாட்டின் மீது மழை
எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? சமீபத்தில் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், பாதசாரிகள் எல்லாம் அருகில் ஒதுங்க இடம் தேடி சென்றார்கள். சிலர் முழுவதும் நனைவதற்குள் வேகமாய் வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என பதறினார்கள்.




ஆனால் சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த சில எருமை மாடுகள் மட்டும் எதுவுமே நடக்காதது போல மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அந்த மழை அந்த மாடுகளை பதற்றப்படுத்தவுமில்லை, பாதிக்கவும் இல்லை. *அத்தனை களோபரங்களின் மத்தியிலும் அது ஒரு வகையான விடுதலையான வாழ்க்கை வாழ்வதை நான் கண்டறிந்தேன்.*




*எது விடுதலையான வாழ்க்கை? விடுதலையான வாழ்க்கை என்பது, நமக்கு எந்த பிரச்சனையுமே இல்லாமல், ஒரு போராட்டமும் இல்லாமல் வாழ்வது அல்ல. அத்தனையின் மத்தியிலும் ஒன்றும் நடக்காதது போல வாழ்வதே விடுதலையான வாழ்க்கை.*




தானியேல் 3ம் அதிகாரத்தில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று பேர் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, ராஜா ஏற்படுத்திய சிலையை வணங்கவில்லை. அதனால் ராஜா அவர்களை எரிகின்ற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான். இராணுவத்தின் பலசாலிகள் எப்படி அவர்களை கட்டியிருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். அவர்களை இறுக்கிக் கட்டி கடுமையாய் எரிகின்ற தீயின் நடுவே போட்டார்கள்.




அந்த அக்கினி சாதாரண அக்கினி அல்ல. அக்கினிச் சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி ராஜா உத்தரவுகொடுத்தான் என்று பார்க்கின்றோம். அவர்களை அந்த அக்கினியில் போட வந்தவர்களே எரிந்து சாம்பலானார்களாம். அந்த அளவு உக்கிரமான அக்கினி.




*பலசாலிகளால் கட்டப்பட்டிருக்கின்றார்கள், ஏழு மடங்கு எரியும் தீயிலே போடப்பட்டிருக்கின்றார்கள் ஆனால் தானியேல் 3:25ல் வாசிக்கின்றோம், அவர்கள் தேவனோடு விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவிக் கொண்டிருக்கின்றார்கள்.*




அக்கினியின் நடுவே விடுதலை எப்படி கிடைத்தது? இவ்வுலகத்தால் கட்டப்பட்டிருக்கின்றவர்களுக்கு ஏது விடுதலை?




அவர்கள் அத்தனை மரணப்போராட்டத்திலும் தேவனோடு உலாவிக் கொண்டிருந்தார்கள். *தேவனோடு இருப்பவர்களை எந்த சூழ்நிலையும் கட்டிப் போட முடியாது.* அக்கினிச் சூளை ஏழுமடங்கு சூடாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஒன்றும் நடக்காதது போலவே இருப்பார்கள். பலசாலிகளால் கட்டப்பட்டிருந்தாலும் விடுதலையாய் உலாவுவார்கள்.




பல நேரங்களில் நாம் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளை பார்த்து, ஐயோ, அம்மா என்று அலறுகின்றோம். புலம்பி தவிக்கின்றோம். உலகத்திலே யாருக்கும் வராத பிரச்சனையெல்லாம் நமக்கு மட்டும் வந்து விட்டதாக எண்ணி, சோர்ந்து போகின்றோம். வாழ்க்கையே நரகமாகிப் போகின்றது.




*நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன்; ஏனென்றால் தேவரீர் என்னோடு இருக்கின்றீர் என்று தாவீது சொல்வதை நினைவு கூறுங்கள். நம்முடைய அனைத்து போராட்டங்களிலும் கர்த்தர் நம்மோடு கூட உலாவுவதை நாம் உணர்ந்தோமென்றால், நாமும் அக்கினியின் நடுவிலும் விடுதலையாக, துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாயிருப்போம். யாருடைய கட்டும் நம்மை கட்ட முடியாது, எந்த அக்கினியும் நம்மை சுட்டெரிக்கவும் முடியாது.*




உங்களைச் சுற்றியிருக்கும் அத்தனை பிரச்சனைகளின் மத்தியிலும் எருமை மாடாய் சலனமில்லாமல், பதற்றமில்லாமல் நிம்மதியாய் வாழ வாழ்த்துகின்றேன்.
கர்த்தர் உங்களை விடுதலையாக்குவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


நாம் அறியாததும் நமக்கு எட்டாததும்

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, *நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான* பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். (எரே. 33:3)




என்னுடைய இரண்டாவது மகள் ஷம்மாவை சந்தோஷப்படுத்துவது மிகவும் எளிது. எத்தனை பெரிய கடைக்கு கூட்டி சென்றாலும், 10 ரூபாய் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தாலே மிகவும் திருப்தியாகிவிடுவாள். அவளுடைய ஆசை அவ்வளவுதான். நமக்கு செலவு மிச்சம் தான்! ஒருவேளை வளர்ந்தவுடன் பெரிய காரியங்களை கேட்பாள் போல…




*அநேக நேரங்களில் நம் அநேகருடைய எண்ணங்களும் ஆசைகளும் தேவனுக்கு முன்பாக 10 ரூபாய் ஐஸ்கிரீம் போலத்தான் உள்ளது. அதனால் தான் தேவன் சொல்கின்றார், நீ அறியாத, உனக்கு எட்டாத பெரிய காரியங்களை நான் செய்கின்றேன்.*




*நாம் அறிந்த அல்லது நம் மூளைக்கு எட்டின காரியங்களை தேவனிடம் கேட்டு போராடிக் கொண்டிருப்போம். ஆனால் தேவன் அந்த ஜெபங்களுக்கு சற்றும் செவி சாய்க்காமல் இருப்பது, நமக்கு அநேக நேரங்களில் ஏமாற்றங்களை உண்டாக்கும். இதனால் தேவனை விட்டு தூரம் போகின்றவர்களும் உண்டு.*




*“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல;* உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே *உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது”* என்று கர்த்தர் சொல்கின்றார். (ஏசா. 55:8-9)




*உங்கள் எதிர்கால வாழ்க்கையை உங்கள் சிறிய எண்ணங்களுக்குள் சுருக்கி விடாதீர்கள். உங்கள் பெலத்திற்கு எட்டின சிறிய வட்டத்திற்குள் குறுக்கிக் கொள்ளாதீர்கள். உங்களைப் பற்றிய தேவனுடைய நினைவு மிகவும் பெரியது. அவைகள் உங்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. உங்கள் வாழ்க்கை முழுவதும் எத்தனை பிரயாசப்பட்டாலும், உங்கள் சுய பெலத்தால் ஒருபோதும் அவைகளை நீங்கள் எட்ட முடியாது.*




எங்கள் சபைக்காக ஒரு இடத்தை நாங்கள் பார்த்து அதை சுதந்தரிக்க வேண்டுமென்று தேவனிடம் போராடிக்கொண்டிருந்தோம், ஆனால் அது எங்களுக்கு கிடைக்காமல் போனது. அது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. ஆனால் ஒரு வருடம் கழித்து அதை விட சிறந்த, விலையேறப்பெற்ற இடத்தை கர்த்தர் எங்களுக்கு வாய்க்கப்பண்ணினார். இப்போது நினைத்தாலும் அந்த காரியம் மிகுந்த ஆச்சரியமாயிருக்கின்றது.




அதே போல், ஒரு வாலிப சகோதரி ஒரு வாலிபனை உயிருக்கு உயிராய் நேசித்தார்கள். ஆனால் திருமணத்திற்கு முன்னே அந்த வாலிபன் அவர்களை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டான். இந்த பெண் மிகவும் கண்ணீரில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் கர்த்தர் அவர்களோடு இந்த சத்தியத்தைப் பேசினார். அதன் பின்னே அவர்கள் கர்த்தருக்கு தன்னை ஒப்புக்கொடுத்து தேவ சித்தத்திற்கு அர்ப்பணித்து ஜெபித்த போது, மிக உயர்ந்த வேலை செய்யும், நல்ல மணமகனை கர்த்தர் கொண்டுவந்தார். இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.




*பிள்ளைகளின் எதிர்காலம், வேலை, வியாபாரம், ஊழியம் போன்ற அத்தனை காரியங்களிலும் நாம் தேவனுடைய பார்வையில் சிறந்தவற்றை பெற வாஞ்சிப்போம். அவைகள் நீங்கள் உங்கள் சிந்தனையாய் அறிய முடியாதவைகள், உங்கள் சுய பெலத்தால் எட்ட முடியாதவைகள்.*




*10 ரூபாய் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிக்கும் சுவாபத்தை நிறுத்துவோம், கர்த்தர் நமக்காக மிகச்சிறந்தவற்றை வைத்திருக்கின்றார்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


உங்க கண் பத்திரம்!

சமீபத்தில், கண் தெரியாதவர்களைக் குறித்து எங்கள் வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம். மற்ற சரீரக் குறைவுகளைக் காட்டிலும், பிறப்பிலேயே கண் தெரியாமல் இருப்பது எத்தனைதான் கொடுமையானது! *அவர்களுடைய கண் இருளாயிருப்பதினால், இந்த உலகமே அவர்களுக்கு இருளாகக் காணப்படுகின்றது.*




*ஒரு சிறிய கண், இந்த உலகத்தையே நமக்கு வெளிச்சமாக்குகின்றதை எண்ணினால் மிகவும் ஆச்சரியமாயிருக்கின்றது.*




வேதமும் அதைத்தான் சொல்கின்றது, *“கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.”* (லூக். 11:34)




இதன் அர்த்தம், கண்கள் தான் நம் வாழ்க்கையின் பிரதான விளக்கு! *நம் கண்கள் நல்லவைகளையே பார்த்தால், நம் வாழ்க்கையே பிரகாசமாயிருக்கும். ஆனால் நம் கண்கள் தீயவைகளை பார்க்குமென்றால் நம் வாழ்க்கையே இருண்டுவிடும்.*




நமக்கு தெரிந்த மொத்த தகவல்களில் 80 – 90 சதவீத தகவல்களை நம் கண்கள் மூலம் தான் பெறுகின்றோம் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றது.




மேலும் நம் கண்களுக்காகத்தான் நம் 65 சதவீத மூளை பணியாற்றுகின்றதாம்.




ஒவ்வொரு வினாடியும் 50 பொருட்களை கண்கள் உற்று நோக்குகின்றதாம்.




நம் கண்களால் 1 கோடி கலர்களை வேறுபிரித்து பார்க்க முடியுமாம்.




*இத்தனை ஆற்றல் பெற்ற கண்களினால் நம் சிந்தைக்கு செல்லும் 80 சதவீத தகவல்கள் தான் நம் வாழ்க்கையே ஆக்கிரமிக்கின்றன. எதனை அதிகம் பார்க்கின்றோமோ, அவைகளாகவே நாம் மாற ஆரம்பிக்கின்றோம்.*




இன்றைய நாட்களில் ஸ்மார்ட் போன் அனைவரின் கரங்களிலும் இருக்கின்றது. *இந்தியாவில் சராசரியாக ஒரு மனிதன் 5 மணிநேரம் ஸ்மார்ட் போனில் செலவிடுகின்றான்* என்று 2021ம் ஆண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அப்படியென்றால் வாழ்நாளில் சுமார் *15 வருடங்களை போன் பார்ப்பதில் செலவிடுகின்றோம்.*




உலகத்தின் பல்வேறு காரியங்களை ஸ்மார்ட் போன் வழியாக அனைவரும் பார்க்கின்றோம். அதில் நல்லவைகளும் இருக்கின்றது, தீயவைகளும் இருக்கின்றது. *நாம் பார்க்கின்ற காரியங்களே நம் சிந்தையை ஆக்கிரமித்து, நம் செயல்பாடுகளை தீர்மானிக்கின்றது.*




*நீங்கள் எவைகளை அதிகம் பார்க்கின்றீர்கள்?*




ஒருமுறை நீங்கள் பார்த்த காரியங்கள் உங்கள் மூளையில் பதிவு செய்யப்படுகின்றன. அவைகளை நீங்கள் ஒருபோதும் நீங்கள் உங்கள் மூளையிலிருந்து Delete செய்ய முடியாது. நீங்கள் தற்காலிகமாக மறந்தாலும் அவைகள் சாகும்வரை உங்கள் ஆழ்மனதில் (Subconscious Mind) அவைகள் காட்சிகளாக நின்று கொண்டு, அங்கிருந்து உங்கள் சிந்தையை கட்டுப்படுத்தும்.




*கண்களால் பார்க்கப்படுவைகளை நீங்கள் கட்டுப்பாடு செய்யவில்லையென்றால், பலவிதமான தீய காரியங்கள் உங்கள் வாழக்கை முழுவதையும் நிரப்பி விடும். பின்னர் உங்கள் வாழ்க்கையே இருண்டுவிடும்.*




*என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு பெண்னை தவறான நோக்கத்தோடு உற்று நோக்குவதெப்படி?* என்று யோபு சொல்கின்றார். (யோபு 31:1)




*உங்கள் கண்கள் பார்ப்பவைகளைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்! உங்கள் கண்களோடு உடன்படிக்கை செய்யுங்கள்! உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள்! இச்சிக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தாலும், கண்கள் திருப்தியடையப்போலதில்லை. ஆனால் சிந்தனை கெட்டுவிடும்.*




*கண்களைக் கட்டுப்படுத்த தவறுகின்றவன் தன் வாழ்க்கையையே இழக்கின்றான்.

கர்த்தர் உங்களை காப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


மதமும் மனிதமும்

18 வருடங்களாய் கூனியாய் இருந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் ஓய்வு நாளில் ஆலயத்திற்கு வந்தாள். அவளுடைய வேதனையை பார்த்த இயேசு மனதுருகி, உடனே அவளை குணமாக்கினார். ஆனால் ஓய்வு நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று நியாயப்பிரமாணம் சொல்கின்றது. எனவே அந்த ஆலயத்தலைவன் டென்ஷனாகி விட்டான்.




அதற்கு இயேசு, *“மாயக்காரனே,* உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? இதோ, *சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா* என்றார்.” (லூக். 15-16)




*ஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது என்று சொன்னது தேவன் தான்! ஆனால் அதை பின்பற்றுகிறேன் என்று சொல்லி மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்வது தான் மதம் ஆகும்.*




*மனிதனை (மனிதத்தை) மறந்து கடவுளை தேடுதலே மதம் ஆகும்!*




*மதம் மனிதனை மிருகமாக்கிவிடும்.* இந்தியாவில் முற்காலங்களில் கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏறச் செய்து கொன்றனர். தேவ தாசி முறையினால் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தனர். இன்றும் வர்ணாசிரம சட்டத்தால் மனிதனை பிரித்து சிலரை உயர்வானவர்களாகவும், சிலரை தாழ்த்தப்பட்டவர்களாகவும் நடத்திக்கொண்டுள்ளனர். இதையெல்லாம் *கடவுளுக்கு தொண்டு செய்கின்றோம் என்று நினைத்து* செய்துகொண்டிருக்கின்றார்கள்.




இதே போல யூத மதத்திலும் இருந்தது. அதைத்தான் இயேசு இங்கு கடிந்து கொள்கின்றார். ஆனால் இப்போ கிறிஸ்தவத்தையும் மதமாக்கி அதிலும் வைராக்கியமான சடங்குகளை புகுத்திக்கொண்டுள்ளார்கள்.




*பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்* (மத். 9:13) என்று இயேசு ஓசியா தீர்க்கதரிசனத்தை (6:6) சுட்டிக் காட்டுவதைப் பாருங்கள்.




*மனிதனை நேசிக்காமல் கடவுளைத் தேட நாம் எடுக்கும் எந்த முயற்சியும் தேவன் அருவருக்கும் செயலே ஆகும்.*




*“மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்”* என்றார் இயேசு (மத். 25:40).




*“பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும்… அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்”* என்றார் தேவன். (ஏசா. 58:7)




*“திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும்… பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது”* என்கிறார் யாக்கோபு (யாக். 1:27).




மத வைராக்கியத்தினால் மனிதன் செய்யும் கொடுமையான செயல்களைக் கண்டு, *“கடவுளை மற, மனிதனை நினை”* என்றார் பெரியார். ஆனால் *மனிதனை நினைப்பதின் மூலம் கடவுளைத் தேடு* என்று வேதம் சொல்கின்றது.




*அடிபட்டு குற்றுயிராய் கிடந்த மனிதனுக்கு உதவி செய்யாமல் கடந்து சென்ற ஆசாரியனைக் (ஊழியக்காரனைக்) காட்டிலும், உதவி செய்த சமாரியனே (சாமானியனே) உண்மையாய் தேவனைத் தேடும் மனிதன்.*




இயேசு தம் ஊழியத்தின் எல்லா கட்டங்களிலும் மனிதர்கள் மனதுருக்கப்பட்டு அவர்களுக்கு உதவிக் கொண்டே இருந்தார். பாவிகள் மேல் மனதுருக்கப்பட்டு மன்னித்து ஏற்றுக் கொண்டார், வியாதியஸ்தர் மேல் மனதுருக்கப்பட்டு அவர்களை குணமாக்கினார், திரளான ஜனங்கள் பசியாயிருப்பதைக் கண்டு மனதுருகி உணவளித்தார். தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்தார்!




*மனிதத்தை மறந்த கடவுள் பக்தி போலியானது. அது தெய்வத்தை சென்றடையாது! நம் சுற்றத்தாருக்கு நாம் செய்யும் உதவிகள், தேவனுக்கு நாம் செய்யும் உதவி!*

சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.