=================
பரிசுத்தமான பாத்திரம்
================
எங்கள் சபையில் திருவிருந்து கொடுப்பதற்கென்று சில பாத்திரங்களை வைத்துள்ளோம். அவைகள் மிக நேர்த்தியாக கழுவி துடைக்கப்பட்டு, பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும். திருவிருந்து நேரத்தில் மட்டும் அவைகளை பயன்படுத்துவோம். வேறு எந்த காரியத்திற்காகவும் அதை உபயோகப்படுத்துவோம். *காரணம் அவைகள் பரிசுத்தமான திருவிருந்திற்காக பயன்படுபவை.*
வசனம் சொல்கின்றது, *“உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும்,* நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” (1 கொரி. 6:19)
*திருவிருந்திற்காக பயன்படுத்தப்படும் அந்த பாத்திரத்தையே அவ்வுளவு சுத்தமாய் கையாள வேண்டுமென்றால், பரிசுத்த ஆவியானவர் 24 மணிநேரமும் தங்கியிருக்கும் அவருடைய ஆலயமாகிய நம் சரீரத்தை எவ்வுளவு சுத்தமாய் கையாளவேண்டும். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!*
“தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் *அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து...”* (1 தெச. 4:4-5). நம் சரீரமாகிய பாத்திரம் பரிசுத்தமானது என்றும், மிகுந்த கனத்துக்குரியது என்பதையும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
*என்றாவது பரிசுத்தமாய் கருதும் திருவிருந்து பாத்திரத்தை சாக்கடை அள்ளுவதற்கு பயன்படுத்துவீர்களா? ஆனால், உங்கள் சரீரத்தை அசுத்தமாக இச்சைகளுக்கு விட்டுக் கொடுப்பீர்களென்றால், நீங்கள் அப்படித்தான் செய்கிறீர்கள். கர்த்தர் வாசம் பண்ணும் நம் பரிசுத்த சரீரத்தில் சாக்கடை போன்ற இச்சைகளுக்கு இடம் கொடுக்கிறோம்.*
*கர்த்தர் நம்மை உணர்த்துவராக! “தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்” (1 தெச. 4:7). உங்கள் சரீரமான பாத்திரம் பரிசுத்தமாயிருக்கின்றதா?*
கர்த்தர் நம்மை பரிசுத்தப்படுத்துவாராக!
காரணமில்லாத பாடுகள்
ஒரு நல்ல கர்த்தருக்கு பயந்த வாலிப சகோதரிக்கு பெற்றோர்களால் திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டு சபையிலே நடத்தப்பட்டது. ஒரு சந்தோஷமான எதிர்காலத்தை எதிர்பார்த்து திருமண வாழ்விலே நுழைந்த அந்த பெண்ணிற்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சகோதரியை திருமணம் செய்த அந்த வாலிபன் பயங்கர குடிகாரன், கஞ்சா அடிப்பவன்.
திருமணமான அடுத்த நாளிலில் இருந்து தினமும் குடித்து விட்டு வந்து தன் மனைவியை சித்தரவதை செய்தான். இந்த ஏமாற்றம் வேதனையை அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை. பிள்ளைகள் பிறந்தனர். இப்படியே சில வருடங்களை துன்பத்திலும் துயரத்திலும் கழித்து வந்தாள். குடித்து குடித்து தன் சரீரத்தை கெடுத்துப்போட்ட அந்த மனிதன் வியாதி வந்து மரித்து போனான். அதன் பின்னர் வாழ்க்கை முழுவதும் தனியாக இருந்து பாடுபட்டு தன் பிள்ளைகளை வளர்த்தாள் அந்த பெண்.
*இந்த பெண் தன் வாழ்க்கை முழுவதும் வேதனை படுவதற்கு அவள் என்ன பாவம் செய்தாள்? அநேகர் தங்கள் வாழ்வில் திருமணம் செய்து மகிழ்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இவளைப் போன்ற சிலர் மட்டும் துன்பம் துயரத்திலேயே வாழ்க்கை முழுவதும் வாழ வேண்டும்?*
தாங்கள் செய்யும் தவறினால் வரும் விளைவுகளினிமித்தம் பாடுபடுபவர்கள் சிலர். ஆனால் மற்றவர்கள் செய்யும் தவறினால் பாடுபடுபவர்கள் பலர். அநியாயமாய் வறுமையிலும், வியாதியிலும், மனிதர்களுடைய தீமையினாலும், சமூக கொடுமைகளினாலும் காலம் முழுவதும் வேதனைப்பட்டு கண்ணீரில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பார்க்கும் போது மனம் வேதனைப்படுகின்றது.
*அநேக பாடுகள் வேதனைகளிலிருந்து கர்த்தர் நம்மை விடுவித்து மீட்டுக் கொண்டாலும் சில பாடுகள் நம் வாழ்வைவிட்டு நீங்கவே இல்லையே.* பவுலுக்கு தேவன் அனுமதித்த முள் போல, சில மாறாத பெலவீனங்கள், சில வேதனை தரும் சூழ்நிலைகள், மனிதர்களால் தொடர்ச்சியாய் வரும் சில தீமைகள் கடைசிவரை நம்மோடு இருந்து கொண்டே இருக்கின்றது.
ஏன் இப்படிப்பட்ட தீமைகள் நடக்கின்றது? *மனிதனின் பாவத்தால் உண்டான சாபமே இதற்கு காரணம்.* என்று மனிதனுக்குள் பாவம் நுழைந்ததோ, அன்றே தீமைகள் நடக்க ஆரம்பித்தன. முதல் மனிதன் ஆதாமின் மகன் ஆபேல், காயீனால் அடித்து கொல்லப்பட்டான். தீயவனின் தீங்கிற்கு அப்பாவி ஆபேல் பலியாகிறதை பார்க்கிறோம். அது தான் இன்று வரை நடக்கின்றது.
*இந்த பாடுகள் பிரயாசங்கள் நான் எதற்காக படவேண்டும்?* இதனால் எனக்கு என்ன பலன் என்ற கேள்வி உங்களுக்குள் வரக்கூடும். கர்த்தரை தன் சொந்த தெய்வமாய் ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்படாதவர்கள் படும் பாடுகள், வடிக்கும் கண்ணீர்கள், வேதனைகள் வீணாகத்தான் போகும். அதனால் அவர்களுக்கு எந்த பலனுமில்லை. ஆனால் *இயேசுவை ஏற்றுக் கொண்டு, கர்த்தருடைய பிள்ளையாய் வாழும் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பாடுகள் மிகுந்த ஆசீர்வாதத்தை கொண்டுவரக்கூடியதாயிருக்கிறது.*
வெளிப்படுத்தின விஷேசத்தில் சபைகளுக்கு கர்த்தர் பேசும் போது ஒரு காரியத்தை எல்லா சபைகளுக்கும் திரும்ப திரும்ப பேசுகிறார். *உன் கிரியைகளையும் உன் பிரயாசங்களையும் நான் அறிந்திருக்கின்றேன்.* (வெளி 2:2,9,19: 3:1,8,15). நம்முடைய பாடுகளும் உபத்திரவங்களும் யாரும் காணாத வகையில் இருக்கலாம். வெளியிலே சிரித்தாலும் உள்ளுக்குள்ளே அனுதினமும் வேதனையால் துடித்துக் கொண்டிருக்கலாம். உங்கள் பாடுகளையும் பிரயாசங்களையும் யார் அறிந்தாலும் அறியாவிட்டாலும் நம் கர்த்தர் நன்கு அறிந்திருக்கிறார்.
அவர் நம் பாடுகளை அறிந்தது மட்டுமல்ல, நமக்கு நிறைவான பலனை அளிக்கும்படியாய் வாக்குப்பண்ணியுமிருக்கிறார். ஆவியில் எளிமையுள்ளவர்கள், துயரப்படுகிறவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், நீதியின் மேல் வாஞ்சையுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள், நீதிக்காக துன்பப்படுகிறவர்கள் போன்றோரை இந்த உலகம் பரிதாபமாக பார்க்கிறது. ஆனால் நம் ஆண்டவரோ இவர்களைத்தான் ஹீரோவாக பார்க்கிறார்.
*அவரோடே கூட பாடுகளை சகித்தோமானால் அவரோடே கூட ஆளுகையும் செய்வோம்.* (2 தீமோ 2:12). (அநீதியான உலகத்தில்) *நீதிக்காக துன்பத்தை சகிக்கிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யமே அவர்களுடையது* (மத் 5:10) *அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த லேசான உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.* (2 கொரி 4:17).
இயேசு தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையை சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு, தமக்கு விரோதமாய் பாவிகளால் செய்யப்பட்ட இப்படிப்பட்ட விபரீதங்களை சகித்த அவரையே நினைத்துக் கொள்ளுங்கள். (எபி 12:2,3)
இயேசு எப்படி உலகத்தின் சகல பாடுகளையும் சகித்தார்? *இந்த பாடுகளுக்கு பின் தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதத்தின் சந்தோஷத்தை கண்முன் வைத்ததினால் அவரால் அத்தனை கொடுமையான சிலுவையை சகிக்க முடிந்தது.* ஆகையால் நீங்களும் பாடுகளினால் சோர்ந்து போகாமல், நம்மை விட கோடி மடங்கு கொடுமையான பாடுகளை சகித்து மேற்கொண்ட அவரை நினைத்து உற்சாகம் கொள்வோம். இந்த பாடுகளுக்கு பின் உள்ள நித்திய பரிசை உங்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள்.
*இந்த பாடுகளின் மத்தியில் ஆண்டவராகிய இயேசுவை நீங்கள் அண்டிக் கொள்ளும் போது, தெய்வீக சமாதானம் உங்களை ஆட்கொள்ளும்.* ஒரு பிள்ளை கீழே விழுந்ததினால் அடிபட்டு வலிக்கும் போது, அழுது கொண்டே தன் தாயினிடத்தில் ஓடி வருவதை போல, உங்கள் மனது வலிக்கும் போதெல்லாம் தாயினும் மேலான நம் ஆண்டவரிடம் ஓடுங்கள். அவர் தம்முடைய அன்பினால் உங்களை அணைத்துக் கொள்ளுவார். பேரமைதி உங்கள் இதயத்தை நிரப்பும். *வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்* என்று நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறாரே!
*எப்பொழுதல்லாம் பாடுகளினால் உங்கள் மனம் சோர்ந்து போகிறதோ அப்பொழுதெல்லாம், தேவ சமுகத்திற்கு செல்லுங்கள்.* அங்கே கர்த்தர் உங்களை பெலப்படுத்துவார். மோசே பெரிய தேவ மனிதன் தான். ஆனால் அவனுக்கு அனுதினமும் போராட்டம். அவனுடைய சொந்த ஜனங்களே அடிக்கடி அவனுக்கு விரோதமாய் பேசி முறு முறுத்து அவனை வேதனை படுத்தினார்கள். ஆனால் எப்பொழுதெல்லாம் பிரச்சனை வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவன் தேவ சமுகத்திற்கு சென்று கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்பான். கர்த்தரும் அவனோடு பேசி அவனை திடப்படுத்துவார்.
*பாடுகள் நிரந்தரம் அல்ல. எல்லாம் சில காலம். கர்த்தருடைய வருகை மிகவும் சமீபம். இதோ சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னுடைனே கூட வருகிறது. (வெளி 22:12). அனைவருக்கும் பலனளிக்கும் கர்த்தர் சீக்கிரம் வருகிறார்.*
*உங்கள் துக்கம் சந்தோஷமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. சிலுவையை சுமந்த நீங்கள் சிங்காசனத்தில் அமரும் நேரம் வந்து கொண்டிருக்கிறது. காத்திருங்கள், பொறுத்திருங்கள். கர்த்தர் உங்கள் பெலவீனத்தில், பாடுகளில், போராட்டங்களில் தம்முடைய கிருபையை பொழிவாராக.*
*கர்த்தருடைய கிருபை உங்களுக்கு போதும், உங்கள் பெலவீனத்தில், பாடுகளில், வேதனையில் அவர் பெலன் பூரணமாய் விளங்கும்.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
Thanks for using my website. Post your comments on this