Type Here to Get Search Results !

உண்மையான இராட்சஷன் | உங்களின் சக்தி என்ன தெரியுமா? | Alwin Johnson Daily Short Message Tamil | Jesus Sam

துன்பத்தின் மத்தியில் மகிழ்ச்சி | இயேசுவோடு இருங்கள்! அது போதும்! | உண்மையான இராட்சஷன் | உங்களின் சக்தி என்ன தெரியுமா? | 

துன்பத்தின் மத்தியில் மகிழ்ச்சி

    ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுடைய மதத்தை அடையாளப்படுத்த அநேக அடையாளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தினர் பொட்டு அணிவது போன்ற ஏராளமான வெளிப்புற அடையாளங்கள் மூலம் தாங்கள் இந்துக்கள் என வெளிப்படுத்துகின்றனர். இஸ்லாமியர்களும் தங்கள் உடைகள் மூலம் தங்களை வேறுபிரித்துக் காட்டுகின்றனர். இன்னும் சீக்கியர்கள், ஜைனர்கள் போன்றோர் ஏராளமான அடையாங்கள் வைத்துள்ளனர்.




ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து தம் சீஷர்களுக்கான அடையாளமாக ஒன்றையுமே தெரிவிக்கவில்லையே! எந்த வெளிப்புற அடையாளங்களையும், வேதம் நமக்கு கற்பிக்கவேயில்லை. பின்னர் எப்படி நாம் நம்மை அடையாளப்படுத்தி காட்டுவது?




இவ்விதமாய், *மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி,* உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத். 5:16)




இரட்சிக்கப்படாத மனிதர்கள், நம்முடைய நற்கிரியைகளைக் கண்டு, அதினிமித்தம் நம்மை தேவனுடைய பிள்ளைகள் என்று கண்டறிந்து, நமது நிமித்தம் நம் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்துவார்களாம்.




*நற்கிரியை என்பது தீமையான உலகிலே நாம் வெளிப்படுத்தும் நன்மைகளை காட்டுகின்றது. அதில் முக்கியமானது சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி.* “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால்… *சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்”* என்கின்றார் இயேசு!




*துன்பத்தின் மத்தியில் மகிழ்ச்சி* என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான உபதேசங்களில் ஒன்று! *இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகளுக்கு, தங்களுக்கு தேவன் கொடுத்துள்ள இரட்சிப்பிலிருந்து ஒரு கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.* இது உலகப் பொருள், உறவு, சிற்றின்பங்களினால் கிடைக்கும் மகிழ்ச்சி அல்ல.தேவனிடத்திலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சி! பரிசுத்த வாழ்விலிருந்து உண்டாகும் மகிழ்ச்சி!




*என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக் கூடாதே!*

*மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்துவிட்டாரே!*




இந்த பாடலின் வரிகளில் *இரட்சிப்பிலிருந்து பொங்கிவரும் மகிழ்ச்சியை கவனித்துப் பாருங்கள்!*




30 ஆண்டுக்கு முன்புள்ள கிறிஸ்தவத்தையும், இப்போதுள்ள கிறிஸ்தவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வேதனையாயுள்ளது. அன்று பணமில்லாமல், பொருளில்லாமல், உலகத்தால் நிந்திக்கப்பட்டு, எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், விசுவாசிகளின் இதயத்தில் நிறைவு காணப்படும், முகத்தில் மகிழ்ச்சி காணப்படும். அது அவர்களின் இரட்சிப்பிலிருந்து உண்டாகும் மகிழ்ச்சி! பாவம் மன்னிக்கப்பட்டதினால் உண்டாகும் மகிழ்ச்சி!




*ஆனால், இந்த அடையாளத்தை இன்றைய கிறிஸ்தவம் இழந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.*




இன்று கிறிஸ்தவர்கள் ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் சிறந்து காணப்படுகின்றார்கள், சமுதாயத்தில் மற்றவர்களால் நல்ல அங்கிகாரம் பெற்று உள்ளார்கள். ஆனால் உண்மையான இரட்சிப்பின் மகிழ்ச்சி இல்லை. சந்தோஷத்திற்காக மேலும் மேலும் உலகத்தையே தேடி ஓட வேண்டிய நிலை சபைக்கும் ஏற்பட்டுள்ளது வேதனைக்குரிய காரியம்.




*வேதம் சொல்லும் மகிழ்ச்சி துன்பத்தின் மத்தியிலும் குறையாத மகிழ்ச்சி! எந்த சூழ்நிலையிலும் மாறாத மகிழ்ச்சி!*



அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், *நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.* (ஆபகூக் 3:17-18)




*உலகத்தில் எது நடந்தாலும், எது நடக்காவிட்டாலும், நான் இரட்சிக்கப்பட்டவன், என் தேவன் எனக்குள் இருக்கின்றார் என்று மகிழ்ச்சியாய் வாழ்வது தான் கிறிஸ்தவர்களின் அடையாளம்.*




*நம் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் எப்பொழுதும் காணப்பட வேண்டும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் மற்றும் உங்கள் வசிக்கும் பகுதியில், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாயிருப்பதைப் பார்த்து உங்களை தேவனுடைய பிள்ளை என மற்றவர்கள் அறிக்கையிட வேண்டும்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


இயேசுவோடு இருங்கள்! அது போதும்!

எப்படியாவது ஆசீர்வாதமாய் வாழ வேண்டும் என்று வாழ்வில் ஏராளமான காரியங்களை முயற்சித்து தோல்வியுற்று, ஏமாற்றமுள்ள வாழ்க்கையோடு ஒரு வாலிபன் என்னை சந்தித்தான். நான் வேதத்தின் ஒரு காரியத்தை அவனுக்கு எடுத்து காண்பித்தேன். *அதுவே ஆசீர்வாதமான வாழ்க்கைக்கான எளிய இரகசியம்.*




*என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்;* (யோவான் 14:4)




கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ சரீரத்தை ஒடுக்கி, தவமிருந்து, சாகசமொன்றும் செய்ய தேவையில்லை. இயேசு சொல்கின்றார், ஒரு கொடி எப்படி செடியில் நிலைத்திருக்கின்றதோ, ஒரு கிளை எப்படி மரத்தோடு ஒட்டியுள்ளதோ, அது போல *நீங்களும் தேவனோடு ஒட்டி நிலைத்திருங்கள். அது போதும், நீங்கள் மிகுதியான கனி கொடுக்கும் மரம் போலாவீர்கள்.*




*நிலைத்திருங்கள்* என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் *μένω (menó)* என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் *தேவனோடேயே எப்போதும் நிரந்தரமாக தங்கியிருப்பதாகும்.*




தேவனோடு இருப்பதற்கு நாம் மரித்து அவரிடம் போக வேண்டியதில்லை. இங்கேயே நாம் அவரோடிருந்தால் அவர் நம்மோடிருப்பார். நாம் அவரோடில்லையென்றால், அவர் நம்மோடிருக்க மாட்டார். அப்படி செய்யவும் முடியாது. இது ரொம்ப சிம்பிள்!




அநேகர் தங்கள் கஷ்ட காலங்களில் ஆண்டவரைப் பார்த்து, *ஆண்டவரே என்னோடு இருக்கின்றீரா?* என்று கேள்வி எழுப்புகின்றார்கள். ஆனால் கர்த்தர் சொல்கின்றார், *மகனே, மகளே நீ என்னோடு இருந்தால், நான் நிச்சயம் உன்னோடு இருப்பேன்.* இதில் எந்த சந்தேகமும் உனக்கு தேவையேயில்லை!




*என்னோடு இரு! அது போதும்!! நான் உன்னோடு இருந்து உன் காரியங்களை வாய்க்கச் செய்து வெற்றியுள்ளவர்களாய் வாழச் செய்வேன் என்று கர்த்தர் சொல்கின்றார். “கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்… கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்”* (ஆதி. 39:2,5)




பிரச்சனை என்னவென்றால் *நாம் இயேசுவோடு இருக்கின்றோமா* என்று நம்மை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.




இயேசுவோடிருத்தல் என்றால் என்ன? அப்படியென்றால் இயேசுவும் நாமும் ஒரே வீட்டில் தங்குவது போல! ஒரே வீட்டில் இருந்தால் என்ன செய்வோம்? அனுதினம் அவரோடு பேசுவோம், அவருடைய வார்த்தைகளை கேட்போம், அவருக்கு கீழ்ப்படிந்து நடப்போம், உலகத்தில் அவருடைய பணியைச் செய்வோம். பின்னர் அவருடைய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அனுபவிப்போம்.




*இப்படி தகப்பனுடன் ஒரே வீட்டில் இருக்க முடியாமல்தான் இளைய குமாரன், வீட்டைவிட்டு வெளியேறி, பின்னர் பன்றி மேய்த்தான் என்பதை மறந்து விடாதீர்கள்!*




*தகப்பனுடன் தகப்பன் வீட்டில் இருக்கும் வரை நமது அனைத்து தேவைகளும் பூர்த்தியாய் சந்திக்கப்படும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். ஆனால் உலக சிற்றின்பத்திற்காக தகப்பனை விட்டு வெளியேறுகின்றவர்கள் ……………. மேய்க்கும் நிலைக்கு கூட ஆளாவார்கள்.*




*இன்று கர்த்தர் உங்களைப் பார்த்து அழைக்கிறார், மகனே! மகளே!! என்னோடு இருக்கும் படியாக வருவாயா? உலகத்தைவிட்டு பிரிந்து என்னுடன் தங்கும்படி வருவாயா? நிரந்தரமாக தேவனுடைய உறவில் நிலைத்திருக்க ஒரு தீர்க்கமான தீர்மானத்தை இன்று எடுப்பாயா?*




*உலகத்திற்கும் அதன் ஆசை இச்சைகளுக்கும் ஒரு டாடா சொல்லிவிட்டு, தேவனை உறுதியாய் பிடித்துக் கொள்ளுங்கள்!*
*ஆசீர்வாதமுள்ள, கனியுள்ள வாழ்க்கை வாழ்வது மிக எளிது!

*இயேசுவோடு இருங்கள்! அது போதும்!!*
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


உண்மையான இராட்சஷன்

*கோலியாத் ஒரு 9 அடி 6 இன்ஞ்ச் உயரமுள்ள ஒரு இராட்சஷ மனிதன்.* அவன் தலையில் போட்டிருக்கும் *ஹெல்மெட் 14 கிலோ* எடையுள்ளதாம். அவன் தரித்திருக்கும் *மார்க்கவசம் (சட்டை) 57 கிலோ* எடையுள்ளதாம். அவன் கொண்டு வந்திருக்கும் *ஈட்டி மட்டும் 17 கிலோ.* இன்னும் அவன் தரித்திருக்கும் பல ஆயுதங்களை சேர்த்து, *சுமார் 123 கிலோ எடையுள்ள கவசங்களை அணிந்து வந்திருக்கின்றானென்றால் அவன் எத்தனை பலமுள்ளவனாயிருப்பான்?*




*இவனை எதிர்த்து யுத்தம் பண்ண இவனுக்கு எதிரே ஒருவன் நிற்கின்றான். அவன் தாவீது. அவன் எளிய உருவம் கொண்ட ஒரு அழகிய வாலிபன்.* இதற்கு முன்னே எந்த யுத்தத்தையும் சந்தித்திராத ஒரு அனுபவமில்லாத மனிதன். எந்த ஆயுதங்களையும் தூக்கி கூட பழகியிருக்கவில்லை. ஆனால் துணிவுடன் அந்த யுத்த வீரனை எதிர்த்து யுத்தம் பண்ண களம் இறங்கி விட்டான்.




கோலியாத் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், *அவனை அசட்டை பண்ணினான்* (1 சாமு. 17:42) என்று வேதம் கூறுகின்றது.




*வெளிப்புறத் தோற்றத்தை வைத்து தாவீது அசட்டை பண்ணப்பட்டான். உலகம் கோலியாத்தை இராட்சஷனாகவும், தாவீதை சாதாரண மனிதனாகவும் பார்த்தது. ஆனால் உள்ளுக்குள் தாவீதுக்கு ஒரு பலம் இருக்கின்றது என்பதை எவரும் அறியவில்லை. தாவீதுக்குள் இயற்கைக்கு அப்பாற்பட்ட பேராற்றல், சக்தி ஒன்று இருக்கின்றது. அது ஒரு கோலியாத் அல்ல, ஆயிரம் கோலியாத் வந்தாலும் அடித்து வீழ்த்தும் சக்தி. அதுதான் கர்த்தர் கொடுத்திருக்கும் அபிஷேகத்தின் பலம்.*




அன்று உண்மையான இராட்சஷன் தாவீது தான். அந்த அசூர பலத்தினால் அன்று கோலியாத்தை இமைப்பொழுதில் வீழ்த்தி விட்டான். அனைவருக்கும் ஆச்சர்யம். ஏதோ, தாவீது தற்செயலாய், அதிஷ்டவசமாய் கோலியாத்தை வீழ்த்தி விட்டான் என நினைத்தார்கள். ஆனால் *இது எப்போதாவது நடக்கும் அதிஷ்டம் அல்ல. அவன் மீது எப்பொழுதும் இருக்கும் அபிஷேகம்* என்பதை பின்னர்தான் அறிந்து கொண்டார்கள்.




இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் வாழ்வில், *உங்கள் வெளிப்புற தோற்றத்திற்கும், உங்கள் திறனுக்கும் சம்பந்தமில்லாத, கோலியாத் போன்ற சவால்களை* சந்தித்துக் கொண்டிருக்கலாம். அனுதினமும் அந்த சவால்கள், போராட்டங்களை எண்ணி பயந்து கொண்டிருக்கலாம். இன்று உங்களுக்குள் உள்ள உள்ளான பலமான அபிஷேகத்தின் வல்லமையை நம்பி உணருங்கள்.




*நீங்கள் சந்திக்கும் சவால்களை விட கோடி மடங்கு வல்லமை உங்களுக்குள் இருக்கின்றது.* இதை உணர்ந்தபடியினால் தான் தாவீது அன்று கோலியாத் முன் தைரியமாய் சவால் விட்டான். அவன் ஒன்றும் விளையாட்டுத்தனமாய் பேசிக் கொண்டிருக்கவில்லை. *அவனுக்குள் இருந்த சக்தியின் மகத்துவத்தை அவன் அறிந்திருந்தான்.*




*தங்களுக்குள் உள்ள அபிஷேகத்தின் பலத்தை உணராத தேவ பிள்ளைகள் இன்று சர்க்கஸ் சிங்கம் போல அடிமைப்பட்டுக்கிடக்கின்றார்கள். தங்கள் பிரச்சனைகளுக்கு முன் மன்டியிட்டுக் கிடக்கின்றார்கள். ஊழியத்தில் தோல்வி, தொழில் வியாபாரத்தில் தோல்வி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி, குடும்ப வாழ்வில் தோல்வி என எல்லாவற்றிலும் முடங்கி கிடக்கின்றார்கள்.*




*உங்கள் உண்மையான பலம் கர்த்தர் உங்களுக்குள் வைத்திருக்கும் அபிஷேகத்தில் உள்ளது. உங்களை இந்த உலகம் அற்பமாய் எண்ணலாம். ஆனால் நீங்கள் தான் உண்மையான பலசாலிகள், இராட்சஷர்கள். கோடி அணுகுண்டிற்கான சக்தி உங்களுக்குள் இருக்கின்றது. தைரியமாய் எழுந்து போராடுங்கள். நீங்கள் நிச்சயம் வெற்றி பெருவீர்கள்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


உங்களின் சக்தி என்ன தெரியுமா?

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்! வேதத்தில் கடுகு என்பது சிறிய விதைக்கு ஒப்பாய் சொல்லப்படுகின்றது. *விதைகள் சிறியதாக இருப்பினும், அந்த சிறிய விதைகளுக்குள் இருப்பது ஒரு பெரிய மரம்!*



லூக்கா 13ம் அதிகாரம் 18-21 வசனங்களில், தேவனுடைய ராஜ்யத்திற்கு இயேசு இரண்டு உதாரணங்களை சொல்கின்றார்.




*தேவனுடைய ராஜ்யம் ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது;* அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார் இயேசு. (லூக். 13:19) *கடுகு விதையென்றால் உண்மையான கடுகு விதையல்ல, கடுகு போன்ற சிறிய விதை என்று பொருள்.* இஸ்ரவேலில் சிறிய பொருட்களை உருவகப்படுத்துவதற்கு கடுகை பயன்படுத்துவார்கள்.




அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார். (லூக். 13:21) சிறிதளவு புளித்த மாவு எப்படி முழு மாவையும் புளிக்க வைக்கின்றது பாருங்கள்!




*தேவனுடைய மக்களாகிய நாம்தான் தேவனுடைய ராஜ்யம். நமக்குள்ளே தேவனுடைய ராஜ்யத்தின் ராஜாவாகிய இயேசு இருக்கின்றார்.*




நாம் கடுகு போன்ற சிறிய விதைக்கும், புளித்த மாவுக்கும் ஒப்பாயிருக்கின்றோம். *இரண்டும் பார்வைக்கு அற்பமாய் தோன்றினாலும், பெரிய விளைவுகளை கொடுக்கின்றது.* நாம் இந்த உலகத்தில் பார்க்க அற்பமாய் தோன்றலாம், எளிமையாய் தெரியலாம். ஆனால் நம்மால் இந்த உலகத்தில் உண்டாகும் விளைவுகள் அதிகம்!




இயேசுவின் சீஷர்கள் எளிமையானவர்கள், சாமானியர்கள். முதலில் இவர்கள் என்ன செய்து விடப் போகின்றார்கள் என்று ரோம சாம்ராஜ்யம் அற்பமாய் எண்ணியது. ஆனால் அவர்களினால் ரோம சாம்ராஜ்யத்தில் உண்டான விளைவுகள் நாம் அறியாதது அல்ல. இவர்களின் ஊழியத்தால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் இயேசுவின் சீஷர்களாய் மாறிப் போனார்கள். உலகமெங்கும் மிஷனரிகளாய் சென்று கனி கொடுத்தார்கள்.




*உங்களுக்குள்ளும் அதே சக்தி இருக்கின்றது. உங்களால் உங்கள் பகுதியை மட்டுமல்ல, இந்த தேசத்தையே மாற்றிவிட முடியும். அதை உணரும் வரை நீங்கள் சிறிய கடுகுதான். ஆனால் உணர்ந்து நிலத்திலே விழுந்து முளைத்தால், பெரிய மரம். உங்கள் மூலமாய் அனேகருக்கு நிழல், சமாதானம், சந்தோஷம் உண்டாகும்.*




உங்கள் குடும்பத்தினரின் மத்தியில், நீங்கள் பணிபுரியும் இடத்தில், நீங்கள் படிக்கும் பள்ளி கல்லூரியில், உங்கள் தெருவில் மற்றும் உங்கள் சமுதாயத்தில் உங்கள் மூலமாய் பெரிய மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதை நம்புங்கள், பின்னர் கிரியை செய்யுங்கள்.




குழப்பமும், சண்டையும் நிறைந்த உங்கள் சொந்த பந்தங்கள் மத்தியில் உங்களைக் கொண்டு சமாதானத்தை தேவன் கொண்டுவருவார். சமூக சீர்கேடும், பாவங்களும் நிறைந்த உங்கள் சமூகத்தில் உங்களைக் கொண்டு தேவன் பரிசுத்தத்தை கொண்டு வருவார். உங்களுடைய வாழ்க்கையினால் நிச்சயம் உங்கள் பட்டணம் ஆசீர்வதிக்கப்படும்.




*இதற்கு சில காலங்கள் ஆகலாம். ஆனால் நிச்சயம் நடக்கும். இதுவே தேவ நோக்கம். இதுவே தேவ ராஜ்யத்தின் குணாதிசயம்.*

உங்கள் சக்தி பெரியது!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.