====================
நமது பிரபல பாஸ்டர்களும் சுவிசேஷகர்களும் போதகர்களும் தீர்க்கதரிசிகளும் இந்திய வரைபடத்தை தரையில் வரைந்து, ஒவ்வொரு மாநிலத்தின் எல்லைக்குள்ளும் தீபந்தத்தை வைத்து தீ மூட்டுகிறார்களே? இதனால் தேசத்தில் எழுப்புதல் அக்கினி பரவிவிடுமா?
====================
அந்தக் காணொளியை அடியேனும் காணநேர்ந்தது!
எழுப்புதல் என்றால் என்ன? எழுப்புதல் எப்படி உண்டாகும்? என்பதை வசன வெளிச்சத்தில் அறிந்துகொண்டால், எழுப்புதலைக்குறித்த வேத வெளிச்சமற்றவர்கள் செய்கிற நூதனமானக் காரியங்களை குறித்து நாம் கவலைப்படவேண்டியிராது.
எழுப்புதல் - பொதுவான பார்வையில்!
எழுப்புதல் என்பது *புத்துயிர் பெறுதல்* (reviven); *மீண்டும் உயிர் பெறுதல்* (come back to life); *உணர்வு பெறுதல்* (regain consciousness); *மீண்டும் செயல்பாடு மற்றும் முக்கியத்துவத்திற்கு கொண்டுவருதல்* (bringing again into activity and prominence); *புத்துயிர் பெறும் செயல், அல்லது புத்துயிர் பெறும் நிலை.* (The act of reviving, or the state of being revived); *உயிர், நினைவு, வீரியம், வலிமை போன்றவற்றை மீட்டமைத்தல்* (restoration to life, consciousness, vigor, strength) என்று பலவாறு வரையறுக்கப்படுகிறது.
எழுப்புதல் - கிறிஸ்தவச் சூழலில்!
கிறிஸ்தவச் சூழலில் எழுப்புதல் என்பது, *தேவஜனங்களின் வாழ்க்கையில் அதிகரித்த ஆவிக்குரிய ஆர்வம் அல்லது புதுப்பித்தல்* (increased spiritual interest or renewal in the life of God's people); *தேவஜனங்களை அவர்களின் உண்மையான இயல்பு மற்றும் நோக்கத்திற்கு விழிக்கச்செய்தல் அல்லது துரிதப்படுத்துதல்* (the awakening or quickening of God's people to their true nature and purpose); *ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் செயலற்ற நிலை அல்லது தேக்க நிலையிலிருந்து ஆவிக்குரிய மறுமலர்ச்சி* (a spiritual reawakening from a state of dormancy or stagnation in the life of a believer)
என்றெல்லாம் வரையறுக்கப்படுகிறது.
எழுப்புதல் - வசன அடிப்படையில்!
தேவனுடைய வேலையை செய்ய அவருடைய ஜனங்கள் பலமான உள்ளுணர்வைப் பெறுதல் (யாத்.35:26; 36:2) பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற கிறிஸ்தவர்கள், மறுபடியும் மயக்கந்தெளிந்து, அவன் கண்ணிக்கு நீங்குதல். (2தீமோத்.2:26); தேவன்மேல் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டவர்கள், மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்தல் (வெளிப்.2:4,5); திருச்சபையார் விக்கிரகாராதனை, வேசித்தனம், கள்ளப்போதனை இவைகளைவிட்டு வெளியேறுதல் (வெளிப்.2:15-16);
ஆவிக்குரிய ஜீவியத்தில் செத்தநிலையிலிருந்து விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிற காரியங்களை ஸ்திரப்படுத்தி, தன் கிரியைகளை தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக்குதல் (வெளிப்.3:1-3); ஆவிக்குரிய ஜீவியத்தில் குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிற நிலையிலிருந்து, ஆவியில் அனலுள்ளவர்களாகுதல் (வெளிப்.3:16), இதுவே வேத வசனத்தின்படியான எழுப்புதலாகும்!
சுருங்கச் சொன்னால், தேவனுடைய ஜனங்கள் அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் (கிறிஸ்துவின் எல்லா குணங்களிலும்) வளருகிறதற்கு தங்களை உண்மையாய் அர்ப்பணிப்பதே மெய்யான எழுப்புதலாகும்!
(எபேசி.4:15)
எது எழுப்புதல் அல்ல?
ஜீவியத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், கிறிஸ்தவர் பலமணிநேரம் ஜெபிக்கிறவர்களாய், துதிக்கிறவர்களாய், ஊழியத்திற்கு அதிகமாய் கொடுக்கிறவர்களாய், ஆத்துமா ஆதாயம் செய்கிறவர்களாய் எழும்புகிறதற்கு பெயர் எழுப்புதல் அல்ல.
🤔 இதைத்தானே நம்ம ஆட்கள் எழுப்புதல் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!
நமது கூட்டங்களுக்கு திரளான ஜனங்கள் கூடிவருகிறதற்கு பெயர் எழுப்புதல் அல்ல.
🤔 தங்களிடம் திரளான ஜனங்கள் கூடிவந்ததை "பெரிய எழுப்புதல்" என்று ஆதிஅப்போஸ்தலர் விளம்பரப்படுத்தவில்லையே! (அப்.10:27; 13:44)
திரள் திரளாய் ஜனங்கள் புதிதாக ஆண்டவரை ஏற்றுக்கொள்வதற்கு பெயர் எழுப்புதல் அல்ல. அது ஆவியில் முதன்முதலாக உயிர்ப்பிக்கப்படும் அனுபவமாகும். (எபேசி.2:1,5; கொலோ.2:13) ஆவிக்குரிய ஜீவியத்தில் மறுபடியும் உயிர்பிக்கப்படும் அனுபவமே உயிர்மீட்சி (revival) ஆகும்.
🤔 தங்கள் காலத்தில் திரள் திரளாய் ஜனங்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டபோது, அதை எழுப்புதல் என்று ஆதிஅப்போஸ்தலரில் எவரும் சொன்னதில்லையே! (அப்.2:41; 4:4; 5:14; 6:7; 9:42; 11:21,24; 13:43,44,49; 14:1; 17:4,12; 18:8; 19:18-19)
பெரிய அற்புத அடையாளங்கள் நடைபெறுவதற்கு பெயர் எழுப்புதல் அல்ல.
🤔 தங்கள்மூலம் தேவன் செய்த பெரிய அற்புத அடையாளங்களை ஆதிசபையார் எழுப்புதல் என்று குறிப்பிடவில்லையே! (அப்.5:15,16; 6:8; 8:5-8; 14:8-12; 19:11,12; 28:4-9)
தேவவசனம் விருத்தியடைவது. (அப்.6:7); கர்த்தருடைய வசனம் தேசமெங்கும் பிரசித்தமாவது
(அப்.13:49); மிகுந்த பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொள்வது
(அப்.19:20) எழுப்புதல் அல்ல
🤔 இதற்கெல்லாம் ஆதி அப்போஸ்தலர் 'எழுப்புதல்' என்று பெயரிடவில்லையே!
குறிப்பு:
தேவனுடைய ஜனங்களின் இருதயம் அவர்களை எழுப்பி, அவர்களுடைய ஆவி அவர்களை உற்சாகப்படுத்தி தேவனுக்காக கிரியை செய்யவைப்பதே எழுப்புதல்.
(யாத்.35:21)
ஆவியை அவித்துப்போட்ட, தேவ அன்பில் தனிந்துவிட்ட, தேவனுக்காய் செய்யும் கிரியைகளில் மரித்திருக்கிற கிறிஸ்தவர்கள்: ஆவியில் அனலடைவதும், ஆதி அன்புக்கு திரும்புவதும், தேவனுக்கேற்ற கிரியைகளை செய்வதுமே எழுப்புதல் ஆகும்!
எழுப்புதல் உண்டாகும் வழிகள் எவை?
தமது வேலையை செய்கிறதற்கு தமது ஜனங்களின் இருதயத்தையும் ஆவியையும் தேவனே எழுப்பிவிடுகிறார். (யாத்.35:26; 36:2; ஆகாய் 1:14; ஏசாயா 57:15; ஓசியா 6:2)
தேவனுடைய கட்டளைகளாலும் (சங்.119:93,107),
சாந்தமான உபதேசத்தினாலும் (2தீமோ.2:26), ஆவியானவரின் எச்சரிப்பினாலும் (வெளிப்.2:4-7,14-17; 3:2,3,6,18-22), மன்றாட்டு ஜெபத்தினாலும் (சங்.51:1-12; 80:18; 85:6; 119:37,88), தேவகிருபையினாலும் (சங்.119:159) தேவஜனங்களின் உள்ளத்தில் எழுப்புதல் உண்டாகிறது!
தீ மூட்டுவதால் எழுப்புதல் தீயா?
தேசப்படத்தை தரையில் வரைந்து அதன் எல்லைகளுக்குள் தீ மூட்டுவதால், தேசத்தில் எழுப்புதல் தீ பரவிவிடும் என்று நம்புகிறது எத்தனை முட்டாள்தனம்!
தேசம் முழுவதும் இரட்சிக்கப்படுவதையே நமது எழுப்புதல் வீரர்கள் 'எழுப்புதல்" என்று நினைக்கிறார்கள். எழுப்புதல் என்பது இரட்சிக்கப்படாதவர்களுக்குள் அல்ல, இரட்சிக்கப்பட்டவர்களுக்குள் மறுபடியும் நிகழும் மனமாற்றமாகும்.
இவர்கள் தேசப்படத்தை வரைந்து தீமூட்டும்போது, *"அனலாய் இருப்போம், அக்கினியை பரப்புவோம்"* என்று இவர்களுடன் இருக்கிறவர்களை முழங்கவைக்கிறார்கள். இவர்களுக்கு மூளை குழம்பிவிட்டதோ என்னவோ தெரியவில்லை!
இத்தனைக் காலம் தங்களை பெரிய தீர்க்கதரிசிகளாக, சுவிசேஷகர்களாக, பாஸ்டர்களாக, போதகர்களாகக் கொண்டாடி, பல தலைமுறைகளுக்கு ஆஸ்திகளைக் குவிக்கதக்கதாய் ஏளாரமான காணிக்கைகளைக் கொடுத்து தாங்குவதோடு, உடன் சேர்ந்து உழைக்கும் அப்பாவி கிறிஸ்தவர்களை சரியான சத்தியத்தில் நடத்த இயலாத அல்லது நடத்தத் தவறிவிட்ட பிரபல ஊழியர்கள், அந்த வெற்றிடத்தை நிரப்ப, அவர்களை மூடநம்பிக்கைகளில் மூழ்கடிப்பது மிகப்பெரும் மோசடியாகும்!
ஆவியில் அனலாயிருக்கிறவர்கள் தேசப்படத்தை தரையில் வரைந்து, அதில் தீமூட்டுவதினால் தேசத்தில் (திருச்சபையில்) எழுப்புதல் அக்கினியை ஒருபோதும் பரப்பிவிடமுடியாது.
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்,* ஆவியிலே அனலாயிருங்கள், *கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.*
ரோமர் 12:11
மேற்காணும் வசனத்தில் எழுப்புதலுக்காய் பிரயாசப்படும் ஆவியில் அனலுள்ள கிறிஸ்தவர்கள் என்ன செய்யவேண்டும் என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
ஆவியிலே அனலாயிருக்கிறவர்கள் அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருந்து, தங்கள் கிருபை வரங்களின் அடிப்படையில் (ரோமர் 12:6-8; (1கொரி.12:7-10; 1பேதுரு 4:10,11) கர்த்தருக்கு ஊழியஞ்செய்வதால் மட்டுமே, ஆவியில் மரித்த சகக்கிறிஸ்தவரில் உயிர்மீட்சியை கொண்டுவரமுடியும்!
இப்படியிருக்க, தங்களை எழுப்புதல் வீரர்களாகவும், எழுப்புதலுக்கான வழிகாட்டிகளாகவும் காண்பித்துக்கொள்ளும் பிரபல ஊழியர்களிடம் கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்! இவர்கள் உண்மையான எழுப்புதலின் அரிச்சுவடை அறியாதவர்கள்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
========================
சீஷர்களுக்கு இயேசுவின் பிரதான கட்டளை!
(மத்.28:18-20)
========================
* நீங்கள் புரப்பட்டுப் போங்கள்.
* சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்.
* பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள்.
* நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் .... அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.
குறிப்பு:
இயேசு சீஷர்களை (தம்முடைய குணங்களை உடையவர்களை) அனுப்புகிறார்.
சகல ஜாதிகளையும் சீஷர்களாக்க (தம்முடைய குணங்களை உடையவர்களாக்க) அனுப்புகிறார்.
தம்முடைய சீஷர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று தாம் கட்டளையிட்டாரோ, அப்படியே சீஷராக்கப்படுகிறவர்களும் இருக்கும்படி உபதேசம்பண்ணச் சொல்லுகிறார்.
*இயேசுவைப்போல இருக்கவே அப்போஸ்தலர்கள் உபதேசித்தார்கள்.*
கிறிஸ்துவைப்போல ஏற்றுக்கொள்ள உபதேசித்தார்கள்
(ரோமர் 15:7)
தம்மிடத்தில் வருகிறவனை அவர் புறம்பே தள்ளுவதில்லை. (யோவான் 6:37)
தம்முடைய வசனங்களைக் கேட்கும்படி தம்மிடத்தில் வந்த சகல ஆயக்காரரையும் பாவிகளையும் அவர் ஏற்றுக்கொண்டடார். (லூக்கா 15:1,2)
நம்மை ஏற்றுக்கொள்ள அவர் நம்மிடம் எந்தத் தகுதியையும் எதிர்பார்க்கவில்லை. நாமும் இயேசுகிறிஸ்துவைப்போல எந்தத் தகுதியையும் எதிர்பாராமல் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
கிறிஸ்துவைபோல அன்புகூர உபதேசித்தார்கள்
(எபேசி.5:1,2)
அவர் நம்மில் அன்புகூர்ந்து நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். (கலாத்.2:20)
நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரராகிய நமக்காக மரித்தார்.
(ரோமர் 5:6-8)
கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்து,
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
(எபேசி.5:25-27)
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார். (வெளிப்.1:6)
அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 3:16)
இவ்வுலக ஆஸ்தியுள்ள தேவபிள்ளைகள் குறைச்சலுள்ள
தங்கள் சகோதரரில் வசனத்தினாலும் நாவினாலும் மட்டும் அன்புகூராமல், கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரவேண்டும். (1யோவான் 3:17,18)
குறைச்சலுள்ள
தங்கள் சகோதரருக்கு
தங்கள் இருதயத்தை திறக்கிறவர்களுக்கே தேவன் தம்முடைய இருதயத்தைத் திறப்பார். (1யோவான் 3:19-23)
கிறிஸ்துவைப்போல மன்னிக்க உபதேசித்தார்கள்
(கொலோ.3:13)
பாவத்தினிமித்தம் படுக்கையில் கிடந்த திமிர்வாதக்காரனின் பாவத்தை மன்னித்து, அவனை எழுந்து நடக்கப்பண்ணினார் இயேசு. (மத்.9:2,6,7)
பாவியான ஸ்திரீயை மன்னித்து சமாதானத்துடன் அனுப்பினார்.
(லூக்கா 7:36-47,48)
விபச்சாரத்தில் பிடிபட்டு கொலைசெய்யப்பட கொண்டுவரப்பட்ட ஸ்திரீயை யூதரிடமிருந்து தப்புவித்து, மன்னித்து மனந்திரும்புதலுக்குள் நடத்தினார்.
(யோவான் 8:2-11)
கிறிஸ்துவைப்போலவே நாமும் பிறரை மன்னித்து, மனந்திரும்புதலுக்கும் மறுவாழ்வுக்கும் வழிநடத்தவேண்டும்.
கிறிஸ்துவைப்போல சுத்தமாயிருக்க உபதேசித்தார்கள்.
(1யோவான் 3:3)
"என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" என்று சவால்விட்டார் நமது ஆண்டவர். (யோவான் 8:46)
அவரை விசாரணைசெய்த பிலாத்துவின் மனைவி நியாயாசனத்தில் உட்கார்ந்திருந்த அவனிடத்தில் ஆளனுப்பி: "நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம், அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன்" என்று சொல்லச் சொன்னாள். (மத்.27:19)
அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், "குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்" என்றான். (மத்.27:3,4)
அவரை விசாரித்த பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: "இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை" என்றான். (லூக்கா 23:4)
அவருக்கு மரணதண்டனை விதித்த அவன் தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: "இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன்" என்றான். (மத்.27:24)
அவருடன் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன் அவரை "இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லை" என்றான்.
(லூக்கா 23:39-41)
நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூடப் இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: "மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்" என்றார்கள்.
(மத்.27:54)
அசுத்த ஆவியே அவரை, "நீர் தேவனுடைய பரிசுத்தர்' என்று அறிக்கையிட்டது! (மாற்கு 1:23,24)
இப்படி அவருக்கு எதிரானவர்களிடமிருந்தும் அவர் நற்சாட்சி பெற்றார்.
அவர் பாவம் அறியாதவர். (2கொரி.5:21)
அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.
(1பேதுரு 2:22)
இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது தன்னை அவருடைய மகிமையின் சாயலுக்கு ஒப்பாக்குவார் என்கிற நம்பிக்கையுள்ளவர், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளவேண்டும்.
(1யோவான் 3:2,3)
இயேசுவைப்போல நீதியுள்ளவர்களாயிருக்க உபதேசித்தார்கள்
(1யோவான் 3:7)
நீதி இயேசுகிறிஸ்துவுக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருந்தது. (ஏசாயா 11:5)
அவர் பரிசுத்தமும் நீதியுமுள்ளவர். (அப்.3:14)
ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டவர் அவர். (1தீமோ.3:16)
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருந்தார்.
(ஏசாயா 11:2)
இயேசுகிறிஸ்துவைப்போலவே அவருடையவர்களும் நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாய் (மத்.5:6) இருக்கவேண்டும்!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this