ஆவியின் அபிஷேகம் பெறுகிறபோது கொடுக்கப்படுகிற அந்நியபாஷை வேறு, ஆவியின் வரத்தினால் பேசுகிற அந்நியபாஷை வேறு. பரிசுத்த ஆவியைப் பெறும்போது கொடுக்கப்படும் அந்நியபஷை அனைவருக்குமானது. ஆவியின் வரத்தினால் கொடுக்கப்படுகிற அந்நியபாஷை சிலருக்கு மட்டுமே உரியது. ஆவியைப் பெறும்போது கொடுக்கப்பட்ட அந்நியபாஷையில் பேசும்போது அர்த்தம் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆவியின் வரத்தினால் பேசப்படுகிற அந்நியபாஷைக்குத்தான் அர்த்தம் சொல்லவேண்டும்" என்று கூறுகிறது சரியா?
✍️ சத்தியத்தைப் பேசுகிறார்களோ இல்லையோ, இந்தமாதிரி நூதனமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் நம்ம ஊழியர்களை அடித்துக்கொள்ள ஆட்கள் இல்லை!
🫵 *ஆவியின் அபிஷேகம் பெறுகிறபோது கொடுக்கப்படுகிற அந்நியபாஷை வேறா?*
ஆவியின் அபிஷேகம் பெறுகிறபோது கொடுக்கப்படுகிற அந்நியபாஷை வேறு, ஆவியின் வரத்தினால் பேசுகிற அந்நியபாஷை வேறு என்று சொல்லுகிறது ஒருவரின் சொந்த கற்பனையேயல்லாமல், அதற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை.
தாங்கள், தங்கள் தங்கள் ஜென்ம பாஷையில் பேசுகிறதைக் கேட்டு வியப்படைந்த பலநாட்டு யூதரை நோக்கி பேதுரு; "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது *பரிசுத்தஆவியின் வரத்தைப்* பெறுவீர்கள்" என்று சொன்னது இங்கு கவனிக்கத்தக்கது. (அப்.2:38)
அதோடு, "அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, *ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே* வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்" என்று சொல்லப்பட்டிருப்பதையும் கவனிக்கவேண்டும். (அப்.2:4)
அயல்நாட்டு யூதர்கள் பிரமிக்கும்படி தாங்கள், அவர்களுடைய ஜென்ம பாஷையில் பேசினது ஆவியானவர் தங்களுக்கு தந்தருளின வரத்தினாலேயே என்றும், தாங்களும் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டால், அவ்விதமான அனுபவத்தைப் பெறலாம் என்றும் பேதுரு அவர்களுக்கு வாக்களிக்கிறார்.
பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள், ஆவியின் வரத்தினாலேயே வெவ்வேறு பாஷைகளில் பேசினார்கள் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
அப்படியாயின், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் தருணத்தில் கொடுக்கப்படுகிற அந்நியபாஷைகள் வேறு, பரிசுத்த ஆவியின் வரத்தினால் பேசுகிற அந்நியபாஷைகள் வேறு அல்ல என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
🫵 *பரிசுத்த ஆவியைப் பெறும்போது கொடுக்கப்படுகிற அந்நியபஷை அனைவருக்குமானதா?*
ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, பரிசுத்த ஆவியானவர் தனக்கு தந்தருளும் வரத்தினாலேயே அந்நியபாஷையில் பேசுகிறார் என்பதையும்,
ஆவியின் அபிஷேகம் பெறுகிறபோது கொடுக்கப்படுகிற அந்நியபாஷைளும், ஆவியின் வரத்தினால் பேசுகிற அந்நியபாஷைகளும் வேறு வேறு அல்ல என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.
இப்படியிருக்க, பரிசுத்த ஆவியைப் பெறும்போது கொடுக்கப்படுகிற அந்நியபாஷைகள் அனைவருக்குமானது என்பதும், ஆவியின் வரத்தினால் பேசும் அந்நியபாஷைகள் சிலருக்கானது என்பதும் முற்றிலும் தவறாகும்.
பரிசுத்தஆவியைப் பெற்றிருக்கிற அனைவருக்கும் அந்நியபாஷைகளில் பேசும் வரத்தை ஆவியானவர் தரக்கூடும்.
*அவர்களெல்லாரும்* பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே *வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.*
அப்.2:4
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் *வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும்* பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
அப்.10:44
*அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும்,* தேவனைப் புகழுகிறதையும்,
அப்.10:45
பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, *பரிசுத்தஆவியின் வரம்* புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
அப்.10:46
அப்படியே, பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களில், தமக்குச் சித்தமான சிலருக்கு மட்டுமே அந்நியபாஷைகளில் பேசும் வரத்தை ஆவியானவரால் கொடுக்கமுடியும்.
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், *பலவித பாஷைகளையும்* ஏற்படுத்தினார்.
1கொரி.12:28
எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
1கொரி.12:29
எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? *எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா?* எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?
1கொரி.12:30
என்று பவுல் சொல்லுகிறதையும் கேட்கிறதையும் கவனியுங்கள்.
தேவனானவர் சபையிலே பலவித பாஷைகளை ஏற்படுத்தியிருந்தாலும், எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறதில்லை, அதாவது, சபையில் உள்ள எல்லாருக்கும் அந்நியபாஷையில் பேசும் வரத்தை தேவன் கொடுப்பதில்லை என்பதை இங்கு அறிகிறோம்.
ஆரம்பகாலத்தில் அனைவரும் அந்நியபாஷைகளில் பேசும் வரத்தை அளித்த ஆவியானவர், சபைக்கு பல வரங்களை பகிர்ந்துகொடுக்க ஆரம்பித்தநாளிலிருந்து, தமது சித்தத்தின்படி சபையிலுள்ள சிலருக்கு மட்டும் அந்நியபாஷைகளில் பேசும் வரத்தை கொடுத்துவருகிறார். மற்றவருக்கு மற்ற வரங்களைக் கொடுக்கிறார் என்று அறிகிறோம். (1கொரி.12:8-11)
*ஒருவர் பரிசுத்த ஆவியை பெறுகிற தருணத்திலிருந்து எந்தத் தருணத்திலும் ஆவியின் வரத்தை பெறக்கூடும்.*
இப்படியிருக்க, பரிசுத்த ஆவியைப் பெறும் தருணத்தில் பேசுகிற அந்நியபாஷைகள் வேறு, சில நாட்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கழித்து ஆவியானவர் தருகிற வரத்தினால் பேசுகிற அந்நியபாஷைகள் வேறு என்றும், ஆவியின் அபிஷேகம் பெறும்போது பேசும் அந்நியபாஷைகள் அனைவருக்கும் பொதுவானது என்றும், சிலகாலத்திற்குப் பிறகு ஆவியானவர் தருகிற வரத்தினால் பேசுகிற அந்நியபாஷைகள் குறிப்பிட்ட சிலருக்குமட்டுமானது என்றும் கற்பிக்கிறது தவறாகும்.
🫵 *ஆவியைப் பெறும்போது கொடுக்கப்படும் அந்நியபாஷையில் பேசும்போது அர்த்தம் சொல்லவேண்டியதில்லையா?*
பரிசுத்த ஆவியைப்பெற்ற நொடியிலிருந்து அந்நியபாஷையில் எப்போது பேசினாலும், ஆவியானவர் தந்தருளும் வரத்தினாலேயே பேசுகிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
ஒரு வாதத்திற்கு சிலர் நினைக்கிறபடி, ஆவியைப்பெறும்போது அனைவருக்கும் பொதுவாய் கொடுக்கப்படுகிற அந்நியபாஷைகளுக்கு அர்த்தத்தை சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றே வைத்துக்கொள்வோம்.
அர்த்தத்தை சொல்லவேண்டிய அவசியமே இராதபடிக்கு, ஆதிசபையார் பேசியதுபோல, தங்களுக்குத் தெரியாத, ஆனால் கேட்கிறவர்களுக்கு தெரிந்த மொழிகளில் பேசவேண்டும் அல்லவா?
பெந்தெகொஸ்தே நாளில் ஆவியைப்பெற்றவர்கள் அந்நியபாஷைகளில் பேசியபோது எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; *இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?* அப்படியிருக்க, *நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே,* இதெப்படி?" என்றார்களால்லவா? (அப்.2:8)
இன்று நாம் அந்நியபாஷைகளில் பேசுகிறதைக் கேட்போர், தாங்கள் அறிந்திருக்கிற மொழிகளில் நாம் பேசுகிறதாக என்றாவது சாட்சிகொடுத்ததுண்டா?
கொர்நேலியு வீட்டில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினபோது,
*அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், (தங்களுக்கு தெரிந்த மொழியில்) தேவனைப் புகழுகிறதையும்,* பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள் அல்லவா?
(அப்.10:46)
கொர்நேலியுவின் வீட்டார் பல பாஷைகளைப் பேசி, தேவனைப் புகழுகிறது புரிந்ததினால் அல்லவா பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் பிரமித்தார்கள்? அவர்களுக்குப் புரியாத மொழியில் பேசியிருந்தால் எப்படி பிரமித்திருப்பார்கள்?
பவுல் தங்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி தங்கள்மேல் வந்தவேளையில் எபேசு சீஷர்கள் பேசின அந்நியபாஷைகளின் அர்த்தம், பேசின அவர்களுக்கு புரிந்திராவிட்டாலும், பலநாடுகளை சுற்றிவருகிற பவுலுக்கும் சீலாவுக்கும் நிச்சயம் புரிந்திருக்கவேண்டும். (அப்.19:1-6)
அந்நியபாஷைகளில் பேசுகிறவர்களுக்கு தாங்கள் பேசுகிறது இன்னதென்று விளங்காவிட்டாலும் அவர்கள் பக்திவிருந்தி யடைந்துவிடுவார்கள். (1கொரி.14:4) ஆனால், அர்த்தம் சொன்னால் மட்டுமே அருகிலிருந்து கேட்கிறவர் பக்திவிருத்தியடையமுடியும்.
பரிசுத்த ஆவியைப்பெற்றுக்கொண்ட நொடிமுதல் எப்பொழுது ஒருவர் அந்நியபாஷையில் பேசினாலும், அவர் ஆவியின் வரத்தினால் பேசுகிறார் என்பதே உண்மை. இப்படியிருக்க, ஒருவர் மற்றவர் முன்னிலையில் எப்போது அந்நியபாஷையில் பேசினாலும் கேட்கிறவர்களில் சிலராவது அறிந்த பாஷைகளில் பேசவேண்டும். அல்லது தான் பேசுகிற பாஷையின் அர்த்தத்தை சொல்லவேண்டும்.
"நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், *சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக* அவைகளில் தேறும்படி நாடுங்கள். அந்தப்படி *அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக* விண்ணப்பம்பண்ணக்கடவன்.
*இல்லாவிட்டால்,* நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, *கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்?* நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே. நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், *ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே"* என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (1கொரி. 14:12,13,17)
சபையில் அந்நியபாஷையில் பேசுகிறவர் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அதின் அர்த்தத்தை சொல்லவேண்டும். அல்லது வியாக்கியானம்பண்ணுகிறவர் இருந்தால் மட்டும் சபையில் அந்நியபாஷையில் பேசவேண்டும்.
*"யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால்,* அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், *அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும்,* ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். *அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால்,* சபையிலே பேசாமல், *தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்"* என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
(1கொரி.14:27,28)
இது பவுலின் சொந்த ஆலோசனை அல்ல, தேவனுடைய கற்பனைகளாகும்.
*"ஒருவன் தன்னைத்* தீர்க்கதரிசியென்றாவது, *ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால்,* நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் *கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்"* என்று பவுல் சொல்லுகிறதையும் கவனியுங்கள்.
(1கொரி.14:37)
*"அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்* என்று பவுல் சொல்லியிருக்கிறார். (1கொரி.14:39) ஆகவே, அர்த்தம் சொல்லாவிட்டாலும், அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாவிட்டாலும், சபையில் அந்நியபாஷையில் பேசத் தடையில்லை" என்று சாதிக்கிறார்கள்.
"சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது" என்று பவுல் சொல்லியிருக்கிறதை சபையாருக்கு மறைத்துவிடுகிறார்கள்! (1கொரி.14:40)
சகலத்தையும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்வது எப்படி?
பவுல் 1கொரிந்தியர் 14 ஆம் அதிகாரம் 27 முதல் 33 ஆம் வசனம் வரை சொல்லியிருக்கிற தேவனுடைய கற்பனைகளின்படி செய்வதுதான் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்வதாகும்.
உண்மையிலேயே பரிசுத்த ஆவியைப்பெற்று, மெய்யாகவே அந்நியபாஷைகளில் பேசுகிறவர்களால் நிச்சயம் அப்படிச் செய்யமுடியும்!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
ஆதியாகமம் 11:5
மனுபுத்திரர் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டினார்கள்.
*எதற்கு கட்டினார்கள்?*
பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
ஆதியா.11:4
தாங்கள் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, தங்களுக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டினார்கள்
தங்களுக்குப் பேர் உண்டாகப் பண்ணுவதற்காக கட்டினார்கள்!
*அவர்களால் எப்படி கட்டமுடிந்தது?*
அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
ஆதியா.11:3
நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதற்கு அவர்களுக்கு செங்கல்லும், நிலக்கீலும் இருந்தது.
*மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்கு இறங்கின கர்த்தர் என்னசெய்தார்?*
அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள்செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
ஆதியா.11:6
நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
ஆதியா.11:7
அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
ஆதியா.11:8
பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
ஆதியா.11:9
*கர்த்தர் அவர்களை சிதறடிக்கக் காரணம் என்ன?*
தாங்கள் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகக்கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள்.
தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் என்றும்
"நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள்" என்றும் கட்டளையிட்டிருந்தார். (ஆதி.9:1,7)
இவர்களோ, தேவனுடைய கட்டளைக்கு மாறாக, தாங்கள் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, தங்களுக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டத்தொடங்கினார்கள்!
அடுத்து, தங்களுக்குப் பேர் உண்டாகப் பண்ணுவதற்காக இப்படிச்செய்தார்கள்!
தாங்கள் ஒரே கூட்டமாகவும் தங்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருந்ததினால் தாங்கள் இதைச் செய்யத்தொடங்கினதோடு, தாங்கள்செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று அவர்கள் நினைத்தார்கள்
(ஆதியா.11:6)
இதினிமித்தமே கர்த்தர் இறங்கிவந்து, ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கி, அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். (ஆதியா.11:7,8)
நமது குடும்பத்தார் வேறு எங்கும் சிதறிப்போய்விடாமல், ஒரே இடத்தில் குழுமியிருக்கும்படி சபைகளை, ஊழிய ஸ்தாபனங்களை கட்டி: நமது தாய் - தகப்பன், சகோதர சகோதரிகள், நமது மனைவி - பிள்ளைகள், மறுமக்கள், மைத்துணர்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோரை மட்டுமே சபையின், நமது ஊழிய ஸ்தாபனத்தின் முக்கியப் பொறுப்புகளில் நிரப்பி, நமது குடும்பத்திற்கு மட்டுமே பேர் உண்டாகப்பண்ணுவோமாகில், இங்கு நமக்கு ஓர் எச்சரிக்கை உண்டு!
பாபேலைக் கட்டியவர்களுக்கு ஆள்பலமும் செங்கல்லும் நிலக்கீலும் இருந்ததுபோல, நமக்கு ஆள்பலமும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் ஏராளமாய் இருக்கலாம்.
ஆனால், தேவன் ஒருநாள் நமக்குப் பேர் உண்டாக நாம் கட்டுகிற சபையை, ஊழிய ஸ்தாபனத்தை பார்க்கவருவார் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்!
நாம் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்கிற இறுமாப்பில் நாம் இருக்கக்கூடும்! ஆகிலும், தேவன் நிச்சயம் ஒருநாள் நம்மை சிதறடிப்பார் என்பதை மறந்துவிடவேண்டாம்!
நமது சொந்த ராஜ்யத்தை கட்டுகிறதை நாம் விட்டுவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை!
ஆண்டவரின் வருகைவரை சபை, ஸ்தாபனம் நிலைநிற்கவேண்டுமானால், சபையில், ஸ்தாபனத்தில் ஊழிய அழைப்புள்ள (எபேசி.4:11-13) மற்றும் கிருபை வரங்களை உடைய அனைவருக்கும் (ரோமர் 12:6-8; 1கொரி.12;7-11) நமது குடும்பத்தினருக்கு சமமான இடத்தை, கனத்தை, சம்பளத்தை சபையில், ஊழிய ஸ்தாபனத்தில் கொடுப்போம்!
நமது குடும்ப லாபத்திற்காகவும், நமது சொந்த மகிமைக்காகவும் கட்டப்படாமல்; அனைவரின் பிரயோஜனத்திற்காகவும், அனைவரும் பயன்படும் வகையிலும் தேவனுடைய மகிமைக்காகவும் கட்டப்படுகிற சபை, ஸ்தாபனம் நீடித்து நிலைத்திருக்கும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
மனந்திறந்து பேசுங்கள்!
அன்பை நாடுங்கள். ஞானவரங்களையும் விரும்புங்கள். *விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.*
1கொரிந்.14:1
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். *தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.*
!1கொரிந்.14:4 நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். *ஆகிலும்,* அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், *தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்.* ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று *அதிகமாய் விரும்புகிறேன்.*
1கொரிந்.14:5
மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், *அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?*
1கொரி.14:6
மேற்காணும் வசனங்களின் அடிப்படையில் சில கேள்விகள்:
1. வரங்களை நாடுவதற்கு முன்பு அன்பை நாடும்படி சபையாருக்கு பவுல் ஆலோசனைச் சொல்லுகிறாரே? நமது சபையார் கிறிஸ்துவின் அன்பில் (1கொரி.13:4-8) பூரணராக நாம் என்ன ஆலோசனை சொல்லியிருக்கிறோம்?
2. "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்" என்று உத்தம ஊழியர் பவுல் சொல்லியிருக்க
(1கொரி.13:1), அந்நியபாஷைகளில் பேச சபையார் அனைவரையும் உற்சாகப்படுத்துகிற, பயிற்றுவிக்கிற நாம்: இயேசுவைப்போன்ற அன்புள்ளவர்களாக எத்தனைப்பேரை மாற்றியிருக்கிறோம்?
3. இயேசுவைப் போன்ற அன்புள்ளோர் நமது சபைகளில் எத்தனைப்பேர் இருக்கிறார்கள்? நாமாவது அப்படியிருக்கிறோமா?
4. பவுல் சபையாரை ஞானவரங்களை விரும்பச் சொல்லியிருக்க, ஞானவரங்களைக்குறித்து நாம் சபையாருக்கு எப்போதாவது போதித்ததுண்டா? அந்நியபாஷையில் பேசுவதைத் தவிர்த்து, ஞானவரங்களை பெற்றவர்கள் எத்தனைப்பேர் நமது சபைகளில் இருக்கிறார்கள்?
5. ஞானவரங்களைப்பற்றி நமது சபைகளிலுள்ள ஒருவருக்காகிலும் தெரியுமா?நமக்காகிலும் முழுமையாகத் தெரியுமா?
6. சபையார் விசேஷமாக விரும்பவேண்டியது அந்நியபாஷையில் பேசும் வரமா? அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும் வரமா?
7. சபையார் விசேஷமாக விரும்பவேண்டியது தீர்க்கதரிசன வரமானால், "எல்லாரும் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று சபையாரை உற்சாகப்படுத்துகிற நாம்: ஏன் "எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லுங்கள்" என்று உற்சாகப்படுத்துகிறதில்லை?
8. (அர்த்தம் சொல்லாமல்) அந்நியபாஷையில் பேசுகிறவனால் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகிறதா? அல்லது சபையாருக்குப் புரியும் மொழியில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனால் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகிறதா?
9. அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், அவன் மேன்மையுள்ளவனா? அல்லது சபையாருக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அவர்களுக்கு புரியும் மொழியில்
தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவனா?
10. சபையாருக்கு புரியும் மொழியில்
தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அந்நியபாஷைகளில் பேசுகிறவனிலும் மேன்மையுள்ளவனானால், சபையார் எல்லாரையும் அந்நியபாஷைகளில் பேச உற்சாகப்படுத்துகிற நாம்: அவர்களில் எத்தனைப்பேரை தீர்க்கதரிசனம் சொல்ல உற்சாகப்படுத்துகிறோம்?
11. சபையார் எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேச பவுல் அதிகம் விரும்பினாரா? அல்லது தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்பினாரா?
12. சபையார் எல்லாரும் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று பவுல் அதிகமாய் விரும்பியிருக்கையில், சபையார் எல்லாரும் அந்நியபாஷைகளில் பேசவேண்டும் என்று விரும்புகிற நாம்: சிலராகிலும் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்று ஏன் விரும்புகிறதில்லை?
13. சபையில் ஒருவர் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், ஒருவருக்கும் புரியாத வகையில் அந்நியபாஷைகளில் பேசினால் அவராலே சபையாருக்கு என்ன பிரயோஜனம்?
14. ஒருவருக்கும் புரியாத வகையில் அந்நியபாஷைகளில் பேசுகிறவரால் சபையாருக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லாதிருக்க: பிரயோஜனமில்லாத வகையில் (அர்த்தம் சொல்லாமல், அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாமல்) சபையில் எல்லாரும் அந்நியபாஷைகளில் பேச நாம் சபையாரை உற்சாகப்படுத்துவதின் நோக்கம் என்ன?
15. தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர் மனுஷருக்குப் பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாக்குகிறவராயிருக்க (1கொரி14:3): சபையில் எலலாரையும் அந்நியபாஷைகளில் பேச அனுமதிக்கிற நாம், ஒருவரையும் தீர்க்கதரிசனம் சொல்ல ஏன் அனுமதிக்கிறதில்லை?
16. தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் சபைக்கு பத்திவிருத்தியை உண்டாக்குகையில்: சபையார் அனைவரும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாகிறதில் ஊழியராகிய நமக்கு என்ன பிரச்சனை?
17. விசுவாசிகளை தீர்க்கதரிசனம் சொல்லவிட்டால், சபையில் குழப்பம் உண்டாகும் என்று பலர் சொல்லுகிறோமே? தீர்க்கதரிசன வரத்தை ஆவியானவர் சபையில் குழப்பத்தை உண்டாக்கக் கொடுக்கிறாரா? அல்லது சபையின் பக்திவிருத்திக்காகக் கொடுக்கிறாரா?
18. சபையில் குழப்பத்தை உண்டாக்காமல், தங்களை மறைத்து தேவனுடைய மகிமைக்காகவும் சபையின் பக்திவிருத்திக்காகவும் வரங்களைப் பயன்படுத்த ஆதிசபை ஊழியரைப்போலவே, விசுவாசிகளை பயிற்றுவிக்க (1பேதுரு 4:10,11) நம்மால் முடியாதா? அல்லது நமக்கு பயிற்றுவிக்கத் தெரியாதா?
19. ஊழியராகிய நம்மையல்லாமல், வேறு எவர்மூலமும் சபையில் பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகிறதை வேதம் தடைசெய்கிறதா? வரம்பெற்ற சபையாரால் மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகாதா?
20. சபையார் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்துவிட்டால், தங்களை நமக்கு சமமாக எண்ணத்துவங்கிவிடுவார்கள் அல்லது நமக்கு போட்டியாக எழும்பிவிடுவார்கள் என்கிற அச்சத்தினால், "சபையில் குழப்பம் உண்டாகும்" என்று சொல்லி, சபையார் தீர்க்கதரிசன வரத்தைப் பெற்றுக்கொள்ளாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுகிறோமா?
😊 என் அன்புகுரிய சக பெந்தெகொஸ்தே தேவஊழியர்களே!
ஏதோ சமாளிக்காமல், சாக்குப்போக்கு சொல்லாமல், மேற்காணும் கேள்விகளுக்கு நேர்மையுடனும் திறந்தமனதுடன் தெளிவாய் வசன அடிப்படையில் பதில் சொல்லுங்கள்!
இந்தக் கேள்விகளுக்கு சரியான பதில்களை கண்டுபிடித்து, அவைகளை அனுபவமாக்கிக்கொள்வோமானால், நமது சபைகள் மெய்யான ஆவிக்குரிய அனுபவமுள்ள சபைகளாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
அன்புள்ளவர் இப்படிப் பேசுவாரா?
இயேசுகிறிஸ்து சொன்ன கீழ்காணும் வசனங்களை வாசித்துப்பாருங்கள்!
லூக்கா 9:23,24
லூக்கா 14:26,33
மத்தேயு 19:21
லூக்கா 12:33
மத்தேயு 6:19
யோவான் 16:33
மத்தேயு 5:4,10,11
மத்தேயு 10:16-18
யோவான் 21:18
மத்தேயு 5:39-41
மத்தேயு 7:13
லூக்கா 6:20-22
யோவான் 15:19,20
யோவான் 16:2
லூக்கா 12:49,51-53
மத்தேயு 16:23
யோவான் 6:44,65
மத்தேயு 15:13
மத்தேயு 7:22,23
லூக்கா 13:2-5
யோவான் 2:4
மாற்கு 10:44
மாற்கு 13:2
இயேசுகிறிஸ்துவை ஜனங்களுக்கு அன்புள்ளவராகக் காண்பிக்க விரும்புகிற பிரசங்கிகள் இந்த வசனங்களைப் பிரசங்கிக்கிறதில்லை.
இந்த வசனங்களைக் காண்பித்தால், ஜனங்கள் ஆண்டவரை அன்பற்றவராக நினைப்பார்கள், அவரிடம் வரமாட்டார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்!
ஆண்டவரின் ஆழமான அன்பை வெளிப்படுத்துகிற வசனங்கள் இவை என்பது அந்தகர்களுக்கு விளங்குகிறதில்லை!!
தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், மனுகுல மீட்புக்காய்
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலாகி, மனுஷரூபமாய்க் காணப்பட்டு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தின
(பிலிப்.2:6-8) அன்பர் இயேசுகிறிஸ்து ஒருவரால் மட்டுமே மேற்காணும் வசனங்களை பேசமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this