ஒரு ஊழியக்காரர் ஜெபித்தால் தண்ணீர் திராட்சைரச சுவையுள்ளதாகிவிடுகிறதாம்? மணிபர்ஸில் பணம் வருகிறதாம், வங்கி கணக்கில் பணம் ஏறிவிடுகிறதாம்? இது சாத்தியமா?
✍️ ஏன் சாத்தியமில்லை? அதிக சாத்தியமிருக்கிறது.
"கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, *கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப்* பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்" என்று நிஜகிறிஸ்துவே சொல்லியிருக்க (மத்.24:24), எப்படி சாத்தியமில்லாமல் போகும்?
*கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எதற்கு பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறார்கள்?*
கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பதற்கு! அப்படியானால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அல்லவா?
கானாவூர் கலியாணத்தில் திராட்சரங்குறைவுபட்டபோது, தாம் கேட்டுக்கொள்ளப்பட்டதால் இயேசு தண்ணீரை திராட்சரசமாக்கினார். (யோவான் 2:1-10)
இவர்களோ, அவசியமில்லாதபோதும் சபை நடுவில் மக்களுக்கு முன்பாக மேஜிக் ஷோ நடத்துகிறார்கள்.
*தம்முடைய சீஷர்கள் தம்மில் விசுவாசம் வைப்பதற்காக, தண்ணீரை திராட்சரசமாக்கும் முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார் இயேசுகிறிஸ்து.*
(யோவான் 2:11)
இவர்களோ, தாங்கள் செய்கிற அற்புதங்களினாலே தங்களுக்கு மகிமையை உண்டாக்கிக்கொள்கிறார்கள்.
சுயவிளம்பரப் பிரியர்களான கள்ளப்போதகர்களை தங்கள் சபைக்கு அழைக்கிற (கள்ள) ஊழியர்கள், அவர்களிடம் தேவையான அளவுக்கு தண்ணீரைக் கொடுத்து, தங்கள் சபையில் நடைபெறும் திருவிருந்துக்கான திராட்சரசமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லவா? அவர்கள் ஏன் அப்படி செய்வதில்லை?
ஒருவர் ஜெபிப்பதினால் மணிபர்ஸில் பணம் நிரம்புகிறது, வங்கிக் கணக்கில் பணம் ஏறுகிறதென்றால், சபையிலுள்ள அத்தனைப்பேரின் மணிபர்ஸையும் வங்கிக் கணக்கு எண்களையும் அவரிடம் கொடுத்து, வேண்டிய அளவு பர்ஸை நிரப்பிக்கொள்வதோடு, வங்கிக்கணக்கில் பலகோடிரூபாயை ஏற்றிக்கொண்டு, விசுவாசிகள் அனைவரையும் வீட்டில் உட்கார்ந்துகொண்டு சாப்பிடச்சொல்லலாமே?
அப்படியே ஊழியக்காரரும் ஜெபவீரரிடம் ஆயிரம் மணிபர்ஸ் வாங்கிகொடுத்து, அதையெல்லாம் நிரப்பச்சொல்லி, பல வங்கிகளில் தான் வைத்துள்ள கணக்குகளில் பல மில்லியன்கள் ஏற்றச்சொல்லிவிட்டால், விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகத்திற்காகப் போராடவேண்டியிருக்காதே?
வேலைசெய்ய மனதில்லாதவன் சாப்பிடவும் கூடாதென்று ஆதிசபை ஊழியர்கள் விசுவாசிகளுக்குக் கட்டளையிட்டிருக்க
(2தெச.3:10), ஜெபத்தினால் பர்ஸை நிரப்பி, அவர்களை வேலைசெய்ய மனதற்றவர்களாக்குகிறவர் எப்படி தேவஊழியராக இருக்கமுடியும்?
"திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்" என்று பவுல் ஆலோசனை சொல்லியிருக்க (எபே.4:28), உழைக்காமலேயே தனது ஜெபத்தினால் தங்கள் பர்ஸையும், வங்கி கணக்கையும் நிரப்பிக்கொள்ளும் திருட்டுக்கூட்டமாக விசுவாசிகளை மாற்றும் ஒருவன் எப்படி உண்மையான ஊழியனாக இருக்கமுடியும்?
*ஒருவர் செய்கிற அற்புதங்கள் வேதவசனங்களுக்கு முரண்பட்டதாக இருக்குமானால் அவரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!*
"ஆண்டவரின் பணியாளர்கள் மட்டுமே அற்புதங்களை செய்முடியும்" என்று இவர்களிடம் கிறிஸ்தவர்கள் ஏமார்ந்துவிடக்கூடாது.
ஆண்டவரின் நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைக்கிறதினாலும், பிசாசுகளைத் துரத்துகிறதினாலும், அநேக அற்புதங்களைச் செய்கிறதினாலும் ஒருவரை அவருடைய ஊழியக்காரர் என்று முடிவுசெய்துவிடக்கூடாது. (மத்.7:22,23)
அவர்களுடைய கனிகளினாலேயே அவர்கள் யார் என்று அடையாளம் காணவேண்டும். (மத்.7:16-20)
*இயேசுவின் நாமத்தினால் எவ்வளவு பெரிய அற்புதங்களைச் செய்தாலும்: ஆவியில் எளிமை, துயரப்படுதல், சாந்தகுணம், நீதியின்மேல் பசிதாகம், இரக்கம், இருதயத்தில் சுத்தம், சமாதானம்பண்ணுதல், நீதியினிமித்தம் துன்பப்படுதல் ஆகிய இயேசுகிறிஸ்துவின் குணங்களாகிய (மத்.5:3-10) கனிகளைக் கொடாதவர்களை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கவேண்டும்!*
ஏனெனில், கடைசிநாளில், "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்" என்று ஆண்டவரே அவர்களை புறக்கணிக்கப்போகிறார்! (மத்.7:23)
காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
கள்ளப்போதகர்களிடம் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புள்ள கிறிஸ்தவர்கள்!
பேதுரு எழுதியுள்ள இரண்டாம் நிருபத்தின் இரண்டாம் அதிகாரத்தில் கிறிஸ்தவர்களில் யார் கள்ளப்போதகர்களிடம் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
🫵 *உலகப்பொருளில் நாட்டமுள்ள கிறிஸ்தவர்கள்!*
கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே *உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்.* அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2 பேதுரு 2:1
*பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்.* பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
2 பேதுரு 2:3
பொருளாசைக்காரரான கள்ளப்போதகர்கள், தந்திரமான வார்த்தைகளால் பொருளாதார ஆசீர்வாதத்தை காண்பித்தே கிறிஸ்தவர்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்.
"எங்களுக்கு எவ்வளவு பணம் மற்றும் பொருள் கொடுக்கிறீர்களோ, அவ்வளவாய் கர்த்தர் உங்களுக்கும் பணம் மற்றும் பொருள் ஏராளமாய் கொடுப்பார் என்று வேதத்தை புரட்டிப் பேசுவார்கள்.
பூமியில் ஐசுவரியவான்களாகவும் பெரும்பணக்காரர்களாகவும் ஆகவேண்டும் என்பதற்காகவே இயேசுவுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளாசைக்காரரான கிறிஸ்தவர்கள் (1தீமோத்.6:9,10; 1கொரி.6:10) இவர்களிடம் சிக்கிக்கொள்வார்கள்.
🫵 *உறுதியில்லாதக் கிறிஸ்தவர்கள்!*
இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து, உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்.
2 பேதுரு 2:13
விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள், *உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய் பிடித்து,* பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.
2 பேதுரு 2:14
ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணுகிற, கறைகளும் இலச்சைகளுமாயிருக்கிற, தேவஜனங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிற, விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடைய கள்ளப்போதகர்கள்,
இயேசுகிறிஸ்துவை உறுதியாக நம்பாத, சத்தியத்தில் உறுதியாக நிற்காத கிறிஸ்தவர்களை வேத அடிப்படையற்றக் காரியங்களை நம்பவும், செய்யவும் நடத்திவிடுவார்கள்!
🫵 *மாம்ச இச்சையுள்ள கிறிஸ்தவர்கள்!*
வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்தைகளைப் பேசி, *மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும்* அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.
2 பேதுரு 2:18
துன்மார்க்கர் செய்யும் தவறான செயல்களிலிருந்து விடுபட்டபோதும், வீண்வார்த்தைகளுக்கு இடங்கொடுக்கிற,
மாம்ச இச்சையுள்ள, காமவிகாரங்கொள்ளுகிற கிறிஸ்தவர்கள்
கள்ளப்போதகர்களிடம் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
கள்ளப்போதகர்கள் கிறிஸ்தவர்களுக்கு ஒன்றுமில்லாதவைகளை மிகமுக்கியமானவைகளாகக் காண்பித்தும்; தங்கள் சுய-இச்சைகளின்படி பாவச்செயல்களைச் செய்ய ஊக்குவித்தும் அவர்களை கவர்ந்திழுக்கிறார்கள்.
🫵 *வாக்குத்தத்தத்தில் வாஞ்சையுள்ள கிறிஸ்தவர்கள்!*
தாங்களோ கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், *அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்.* எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.
2 பேதுரு 2:19
பல பாவங்களுக்கு அடிமைகளாயிருக்கிற கள்ளப்போதகர்கள், ஜனங்களுக்கு பாவத்திலிலிருந்து விடுதலையை வாக்குப்பண்ணுவார்கள்.
அதாவது, தங்கள் வாழ்க்கையில் நடைபெறாதக் காரியங்களெல்லாம், தங்கள் பிரசங்கத்தைக் கேட்கிறவர்களின் வாழ்வில் நடக்கும் என்று வாக்குப்பண்ணுவார்கள்.
தங்கள் வாழ்வில் நிறைவேறாத வாக்குத்தத்தங்களெல்லாம் ஜனங்களின் வாழ்வில் நிறைவேறும் என்று நம்பவைப்பார்கள்.
*இவர்கள் ஜனங்களுக்கு எடுத்துக்கொடுக்கிற வாக்குத்தத்த வசனங்களெல்லாம் இவர்கள் வாழ்வில் நிறைவேறியிருந்தால், இவர்கள் தங்கள் ஊழியங்களுக்கு ஜனங்களிடம் காணிக்கைக் கேட்கவேண்டிய அவசியமே இராதே!*
அப்படியே, இவர்கள் எடுத்துக்கொடுத்த வாக்குத்தத்த வசனங்களெல்லாம் தேவஜனங்களின் வாழ்வில் நிறைவேறியிருந்தால், அவர்கள் இன்றைக்கு மில்லியனர்களாகவும் பில்லியனர்களாகவும் இருந்திருக்கவேண்டுமே! அவர்கள் இவர்களிடம் வந்து தங்கள் ஆசீர்வாதத்திற்காக ஜெபித்துக்கொள்ளவேண்டிய அவசியமிராதே!
வாக்குத்தத்தத்திற்குரிய சந்ததியில் பிறந்து அப்போஸ்தலரான ஆதிசபை ஊழியர்களே, பழைய ஏற்பாட்டிலிருந்து ஆசீர்வாதமான வசனங்களையெல்லாம் எடுத்து, வாக்குத்தத்தத்திற்குரிய சந்ததியிலிருந்து இரட்சிக்கப்பட்ட யூத கிறிஸ்தவர்களுக்கு: வாராந்திர வாக்குத்தத்தம், மாதாந்திர வாக்குத்தத்தம், வருடாந்திர வாக்குத்தத்தம் என்று கொடுத்ததில்லை என்பதை கவனிக்கவேண்டும்.
அப்படியே, புறஜாதியிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களை நடத்தின ஊழியர்கள் இன்றைய ஊழியர்களைப்போல வாராந்திர வாக்குத்தத்தம், மாதாந்திர வாக்குத்தத்தம், வருடாந்திர வாக்குத்தத்தம் கொடுத்ததில்லை.
*அவர்கள் சபையை இயேசுகிறிஸ்துவின் சாயலாக்கவே ஊழியக்காலம் முழுவதும் பிரயாசப்பட்டனர்.* (எபேசி.4:15; கொலோ.1:28,29; 2தீமோ.3:16,17)
இயேசுகிறிஸ்துவின் சாயலாகும் வாஞ்சையில்லாமல்,
வாராந்திர வாக்குத்தத்தம், மாதாந்திர வாக்குத்தத்தம், வருடாந்திர
வாக்குத்தத்தங்களில் ஆவலாயிருக்கும் பூமிக்குரியக் கிறிஸ்தவர்கள், வாக்குத்தத்த வசன வியாபாரிகளான கள்ளப்போதகர்களிடம் சிக்கிக்கொள்வது நிச்சயம்!!
காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
கிறிஸ்தவர்கள் துக்கப்படவேண்டிய அவசியம் இல்லையா?
✍️ அவசியமா? அவசியம் இல்லையா? என்பதை வசன வெளிச்சத்தில் ஆராய்வோம்.
"நீ கிறிஸ்தவனாகிவிட்டாயல்லவா? இனி உனக்கு துக்கமே இல்லை. மெய்யாகவே இயேசு நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்துவிட்டார். உன் துக்கநாட்கள் முடிந்துபோம்" என்று நம்ம பிரசங்கிமார்கள் கிறிஸ்தவர்களுக்கு வாக்குத்தத்தங்களை அள்ளிவிடுகிறதைக் காணமுடிகிறது.
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, *நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்.*
ஏசாயா 53:4
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; *உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.*
ஏசாயா 60:20
கிறிஸ்தவர்கள் துக்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு
மேற்காணும் வசனங்களையே நம்ம பிரசங்கிமார்கள் ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள்.
மேற்காணும் வசனங்கள் கிறிஸ்தவர்கள் துக்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றனவென்றால்:
"கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள். *என்றாலும் துன்பப்படவேண்டியது அவசியமானதால்,* இப்பொழுது கொஞ்சகாலம் பலவிதமான சோதனைகளினாலே *துக்கப்படுகிறீர்கள்"* என்று பேதுரு எப்படிச் சொல்லக்கூடும்? (1 பேதுரு 1:5,6)
துக்கப்படுகிறவர்கள் என்று உலகத்தார் எண்ணக்கூடிய அளவுக்கு இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் எப்படி இருந்திருக்கக்கூடும்? (2கொரி.6:10)
பழைய ஏற்பாட்டு வசனங்கள் சொல்லப்பட்ட சூழலைப் புரிந்துகொள்ளாமல், சொல்லப்பட்ட வசனங்களின் சரியான பொருள் என்ன என்பதை தெரிந்துகொள்ளாமல், தாங்கள் புரிந்துகொண்டபடியெல்லாம் இன்று பல ஊழியர்கள் வியாக்கியானம் செய்கிறது சரியல்ல.
*இவர்கள் கிறிஸ்தவர்களை யூதர்களாகப் பார்ப்பதோடு, இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைக்குறித்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் கிறிஸ்தவர்களுக்கும் உரியது என்று நம்பப்பண்ணுகிறார்கள்.*
பழைய ஏற்பாட்டு வசனங்களை எடுத்து அதை கிறிஸ்தவர்களுக்கு வாக்குத்தத்தமாகக் கொடுக்கும்போது, அவை கிறிஸ்தவர்களுக்கான புதிய ஏற்பாட்டு உபதேசங்களுக்கு ஒத்துப்போகிறதா? அல்லது முரண்படுகிறதா? என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம்!
புதிய ஏற்பாட்டு சபைக்கான உபதேசங்களுக்கு முரண்படுகிற பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களை கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கிறதை தவிர்க்கிறது நல்லது!!
காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
ஒரு சகோதரர் மத்தேயு 19:29, மாற்கு 10:30, லூக்கா 18:30 ஆகிய வசனங்களை மேற்கோள்காட்டி, இயேசுவுக்காக இழக்கிறவர்கள் 100 மடங்கு ஆசீர்வதிக்கப்படுவதோடு, 100 வீடுகளையும் நித்தியஜீவனையும் பெறுவோம் என்று போதிக்கிறார். இதை தயவுசெய்து எனக்கு விளக்கிக்காண்பியுங்கள்.*
✍️ "நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும்?" என்று தம்மிடம் கேட்ட ஐசுவரியவானான வாலிபனிடம்: "உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா" என்றார் இயேசு. (மாற்கு 10:17,21)
அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். (மாற்கு 10:22)
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். (மாற்கு 10:28)
தனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடுக்கிறவனுக்கு, பரலோகத்திலே பொக்கிஷம் உண்டாயிருக்குமானால், எல்லாவற்றையும்விட்டு, ஆண்டவரைப் பின்பற்றுகிற தங்களுக்கு என்னக் கிடைக்கும் என்பதை அறிய விரும்பின பேதுரு ஆண்டவரிடம் அவ்வாறு வினவினான்.
அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: "என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், *இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக,* வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், *மறுமையிலே நித்தியஜீவனையும்* அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். (மாற்கு 10:29,30)
*"இயேசு முக்கியமா? அவரோட ஊழியம் முக்கியமா? நாங்க முக்கியமா? இயேசுவும் அவரோட ஊழியமும் உனக்கு முக்கியமானால், உனக்கும் எங்களுக்கும் இனி எந்த ஒட்டும் உறவும் கிடையாது. வீடு நிலத்துல உனக்கு எந்தப் பங்கும் கிடையாது"* என்று தன் சகோதரர், சகோதரிகள், தகப்பன், தாய், மனைவி, பிள்ளைகள் தன்னை நிர்பந்திக்கும்போது: தனக்கு இயேசுவும் அவருடைய ஊழியமும்தான் முக்கியம் என்று தீர்மானித்து, தன் குடும்பத்தாரையும், வீட்டையும் நிலங்களையும் விட்டுவிடுகிற தமது சீஷன் இப்பொழுது இம்மையிலே, *மனைவியைத்தவிர,* மற்ற யாவரையும், வீடுகளையும், நிலங்களையும் நூறத்தனையாகப் பெறுவதோடு, மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று ஆண்டவர் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
இயேசுவின் சீஷன் ஒருவன் அவருக்காக தன் மனைவியை விட்டுவிட்டபோதும், அவள் உயிரோடிருக்கும் வரை வேறொரு பெண்ணை திருமணம் செய்யமுடியாது. அவனுடைய மனைவி மரித்துப்போனாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்திரீகளை அவன் விவாகம் செய்ய அனுமதியில்லை. (1தீமோ.3:2; தீத்து 1:6) இப்படியிருக்க, 'நூறத்தனை' என்பது மனைவிக்குப் பொருந்தாது.
இயேசுவுக்காகவும் அவருடைய வேலைக்காகவும்: சகோதரர் அல்லது சகோதரிகள் அல்லது தகப்பன் அல்லது தாய் அல்லது பிள்ளைகளைகளை விட்டுவிடுகிற சீஷனுக்கு, நூறுமடங்கு அசல் சகோதரர் அல்லது அசல் சகோதரிகள் அல்லது அசல் தகப்பன் அல்லது அசல் தாய் அல்லது அசல் பிள்ளைகளைக் கொடுப்பதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறாரா?
இல்லை. நூறத்தனையான ஆவிக்குரிய சகோதரர் அல்லது சகோதரிகள் அல்லது தகப்பன் அல்லது தாய் அல்லது பிள்ளைகளைக் கொடுப்பதைப்பற்றியே ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். ஏனெனில், தன் குடும்பத்தாரை விட்டுவிட்ட ஆதி அப்போஸ்தலரில் ஒருவரும் அவர்களை அசலாக நூறத்தனை பெற்றுக்கொண்டதில்லை.
இப்படியிருக்க, வீடு மற்றும் நிலங்களை நூறத்தனை அசலாகக் கொடுப்பதாக ஆண்டவர் வாக்குப்பண்ணியிருப்பாரா?
இயேசுவின் சீஷன் அவருக்காக ஒரு வீட்டை விட்டுவிட்டு, அவரிடம் நூறு வீட்டை எதிர்பார்க்கிறதும்; ஒரு ஏக்கர் நிலத்தை விட்டுவிட்டு, நூறு ஏக்கர் நிலத்தை எதிர்பார்க்கிறதும் ஐசுவரியவானாக விரும்புகிறதாகாதா?
இயேசுவுக்காக ஒருகோடி ரூபாயை விட்டுவிட்டு அவரிடம் நூறுகோடி ரூபாயை எதிர்பார்க்கிறது பண ஆசைக்கு இடங்கொடுக்கிறதாகாதா?
தேவனுடைய மனுஷன் ஐசுவரியவானாகவேண்டும் என்கிற விருப்பத்தையும் பண ஆசையையும் விட்டு ஓடவேண்டும் என்று பவுல் ஆலோசனைக் கொடுக்கிறாரே? (1தீமோ.6:9-11) விக்கிரகாராதனையான பொருளாசையை உண்டுபண்ணுகிற அவயவங்களை அவர் அழித்துப்போடச் சொல்லுகிறாரே?
(கொலோ.3:5)
*தன்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும் வீட்டை மற்றும் நிலங்களை விட்ட ஆதிஅப்போஸ்தலரில் எவருக்காவது ஆண்டவர் நூறத்தைனையாக அசல் வீடுகள் அல்லது நிலங்களைக் கொடுத்ததுண்டா?*
எழுத்தின்படி நூறத்தனையான வீடுகள் மற்றும் நிலங்கள் என்று வைத்துக்கொள்வோமானால்: இயேசுகிறிஸ்து தங்களை அழைத்தவுடனே வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்ற அந்திரேயாவும் பேதுருவும் (மத்.4:18-20) நூறத்தனையான வலைகளைப் பெற்றுக்கொண்டார்களா? ஆண்டவர் அவர்களுக்கு நூறத்தனையாக வலைகளை கொடுத்திருந்தால் பேதுருவும் அந்திரேயாவும் மனுஷரைப்பிடிக்கச் சென்றிருப்பார்களா? அல்லது மறுபடியும் மீன்பிடிக்கச் சென்றிருப்பார்களா?
இயேசுகிறிஸ்து தங்களை அழைத்தவுடனே படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்ற யாக்கோபு மற்றும் யோவானுக்கு (மத்.4:22) தேவன் நூறத்தனையான படகைக் கொடுத்திருந்தால், அவர்கள் மனுஷரைப் பிடித்திருக்கச்சென்றிருப்பார்களா? அல்லது மறுபடியும் மீன்பிடிக்கச் சென்றிருப்பார்களா?
இயேசுவின் அழைப்பைக்கேட்டு, ரோம அரசாங்கத்துக்கு வரி வசூல் செய்யும் தன் பணியை விட்டு அவருக்குப் பின்சென்ற மத்தேயுவுக்கு (மத்.9:9) ஓய்வுகாலம் வரைக்கும் அவன் வாங்கியிருக்கவேண்டிய சம்பளத்தொகையை ஆண்டவர் அவனுக்கு நூறு மடங்காகக் கொடுத்ததாக வேதத்தில் தகவல் உண்டா?
அப்படியானால், ஆண்டவருக்காக வீட்டையாவது நிலங்களையாவது விட்டவர்களுக்கு அவைகள் நூறத்தனையாக உண்டாயிருக்கும் என்பதின் பொருள் என்ன?
*அவர்களை ஏற்றுக்கொள்ள நூறத்தனையான வீடுகளும் அவர்கள் ஊழியம் செய்ய நூறத்தனையான இடங்களும் உண்டாயிருக்கும் என்பதே அதன் சரியான அர்த்தமாக இருக்கவேண்டும்!* (மத்.10:9-13,40-42; அப்.10:48; 16:13-15; 17:6,7; 18:1-3,6-8; 19:9,10; 20:6-8; 21:3,4,15,16; 28:7-10,30,31; 2தீமோ.4:13)
ஆண்டவருக்காகவும் அவருடைய ஊழியத்திற்காகவும் ஒருவர் எதை இழக்கிறாரோ, அதை அவர் நூறுமடங்காய் நிச்சயம் பெற்றுக்கொள்வாரானால், ஊழியப்பாதையில் பல ஆண்டுகளுக்குப் பின்னும், பவுலும் அவருடைய உடன் ஊழியர்களும் எப்படி பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருந்திருக்கமுடியும்? (1கொரிந்.4:11) அவர்கள் தங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடவேண்டிய அவசியம் என்ன?
(1கொரி.4:12) உலகத்தாரால் அவர்கள் 'தரித்திரர்' மற்றும் 'ஒன்றுமில்லாதவர்கள்' என்று எப்படி என்னப்படக்கூடும்?
(2கொரி.6:10)
ஆண்டவருக்காக தாங்கள் இழந்ததை ஊழியக்காரர்கள் நூறத்தனையாய் பெற்றுக்கொள்ளவேண்டுமானால், *"போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.*
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். *உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்"* என்று ஒரு மூத்த ஊழியர் ஓர் இளம் ஊழியருக்கு எப்படி ஆலோசனைச் சொல்லமுடியும்? (1தீமோ.6:6-8)
ஆண்டவருக்காக தாங்கள் இழந்ததை விசுவாசிகள் நூறத்தனையாய் பெற்றுக்கொள்ளவேண்டுமானால், *"நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்.* நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே" என்று ஊழியர் எப்படி அவர்களுக்கு ஆலோசனை சொல்லக்கூடும்?
(எபிரே.13:5)
ஆதிசபை மக்கள் தாங்கள் ஆண்டவருக்காக இழந்ததை நூறத்தனையாய் பெற்றுக்கொண்டிருந்தார்களானால்: மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமிருந்த சபைகளிடம் சில பொருள்சகாயம் பெறும் நிலையில் எருசலேமின் பரிசுத்தவான்களுக்குள்ளே எப்படி தரித்திர் இருந்திருக்கக்கூடும்? (ரோமர் 15:26) மக்கெதோனியா சபைகள் எப்படி கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்திருக்கக்கூடும்? (2கொரி.8:1,2) சிதறியிருந்த பன்னிரண்டு கோத்திரங்களின் சபைகளில் எப்படி தரித்திரர் இருந்திருக்கக்கூடும்? (யாக்.1:1; 2:2,3,5,6)
இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: *"தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது"* என்று சொன்னாரே? (லூக்கா 6:20)
அவருக்காக இழந்த பணத்தை, பொருளை, வீட்டை, நிலத்தை நூறத்தனையாய் பெறுகிறவர்கள் எப்படி தரித்திரராக இருக்கமுடியும்?
தான் போராடின நல்ல போராட்டத்துக்காகவும், ஓடின நல்ல ஓட்டத்திற்காகவும், காத்துக்கொண்ட விசுவாசத்திற்காகவும், பவுல் பலனை பூமியில் அல்ல, பரலோகத்தில் அல்லவா எதிர்பார்த்தார்!
(2தீமோ.4:7)
*ஆதிசபை ஊழியர்களும் விசுவாசிகளும் புரிந்துகொண்டக் காரியங்களை இன்றைய ஊழியர்களாலும் விசுவாசிகளாலும் ஏன் விளங்கிக்கொள்ளமுடியவில்லை?*
இன்றைய ஆச்சரியம் என்னவென்றால், குடும்பத்தாரில் ஒவரையும் வீட்டையும் நிலங்களையும் இழக்காமல், குடும்பத்தாரோடு வீடு மற்றும் நிலங்களை அநுபவித்துக்கொண்டிருக்கும் அநேக ஊழியர்கள் இன்று பலகோடி மதிப்புள்ள வீடு மற்றும் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாய் மாறியிருப்பது எப்படி என்பதுதான்!
ஆண்டவருக்காக ஆயிரம் ரூபாய்கூட இழக்காத அவருடைய பணியாளர்கள் பலருடைய வங்கிக்கணக்கில் பல லட்சங்கள், கோடிகள் இருப்பது எப்படி? 25 பைசாவோடு ஊழியத்தை ஆரம்பித்த தனது வீட்டில், இந்தியாவின் பணக்காரர்களின் வீட்டில் நிற்கும் கார் நிற்பதாக ஒரு ஊழியரால் எப்படி சாட்சியிடமுடிகிறது? இயேசுவுக்காய் எதையும் இழக்காத குறிப்பிட்ட ஊழியரின் குடும்பத்தினரை மட்டுமே அறங்காவலர்களாகக் கொண்டிருக்கிற அறக்கட்டளையில் பலநூறு கோடி, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆஸ்திகள் குவிந்திருப்பது எப்படி?
*தாங்கள் ஆண்டவருக்காய் இழந்ததைவிட 200, 500, 1000 மடங்கு ஆஸ்திகளை சில ஊழியர்கள் குவித்திருப்பது எப்படி?*
ஊழியத்திற்கு என்று தேவஜனங்களிடம் பல லட்சம், கோடிகள் காணிக்கை வாங்கி, தங்கள் பெயரிலும், தங்கள் குடும்பத்தினரை மட்டுமே அறங்காவலராகக் கொண்டத் தங்கள் குடும்ப அறக்கட்டளையிலும் குவித்துவைத்துக்கொண்டு, "கர்த்தர் எங்களை பலமடங்கு ஆசீர்வதித்திருக்கிறார்" என்று சொல்லுகிறது மோசடியல்லவா?
வேதத்தைப் புரட்டுகிற பொருளாசைக்காரரான கள்ளத்தீர்க்கதரிசிகளும் (2பேதுரு 2:1-3) தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிற சத்தியமில்லாதவர்களும் (1தீமோ.6:5); கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களும்
(ரோமர் 16:17,18); வேறுவிதமாய் நடக்கிற, கிறிஸ்துவின் சிலுவைக்கு (பாடுகளுக்குப்) பகைஞரும், தங்கள் வயிற்றை தேவனாகக் கொண்டவர்களுமாகிய பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறவர்களும்
(பிலிப்.3:19): இயேசுவின் பெயரால் பல திட்டங்களை தேவஜனங்களிடம் கூறி, அதை நிறைவேற்ற தங்கள் பணம் மற்றும் பொருளை உற்சாகமாய் கொடுக்கிறவர்களை தேவன் பலமடங்காய் ஆசீர்வதிப்பார் என்று வாக்குப்பண்ணி, வஞ்சித்து, அவர்களைக் கொள்ளையிட்டு, தங்கள் பெயரிலும் தங்கள் குடும்ப அறக்கட்டளையின் பெயரிலும் ஆஸ்திகளைக் குவித்து, தேவன் தங்களை நூறுமடங்காக ஆசீர்வதித்திருப்பதாக அளந்துவிடுகிறவர்களுக்கு எச்சரிக்கை!
ஆண்டவருக்காய் தாங்கள் இழந்ததற்காக தேவன் இவர்களை நூறுமடங்கு ஆசீர்வதித்திருப்பது உண்மையானால், இவர்கள் ஜனங்களிடத்தில் ஏன் தங்கள் ஊழியத்தேவைகளுக்காகப் பணத்தையும் பொருளையும் கேட்கவேண்டும்? ஜனங்களிடத்தில் கேட்டு வாங்கி தங்கள் ஆஸ்தியைப் பெருக்கிக்கொண்டவர்கள், "தேவன் எங்கள் தியாகத்திற்காய் எங்களை நூறுமடங்கு ஆசீர்வதித்திருக்கிறார்" என்று ஏன் பொய்சொல்லவேண்டும்?
*ஆதிசபையின் உத்தம ஊழியரில் ஒருவராவது இப்படிச்செய்ததுண்டா?*
"ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை" என்று சொல்லுகிற பவுல் உத்தம ஊழியரானால்
(அப்.20:33), தேவஜனங்களின் வெள்ளியையும் பொன்னையும் (பணத்தையும்) வஸ்திரத்தையும் (பொருளையும்) இச்சிக்கிறவர்கள் யார் என்று புரிகிறதல்லவா?
வெட்கமான அந்தரங்க காரியங்களை வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் தங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணின
(2கொரிந்.4:2); வஞ்சகத்தோடும் துராசையோடும் கபடத்தோடும் போதியாமல், ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லாமல், பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணாமல், சுவிசேஷத்தை தங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் தங்களை உத்தமரென்றெண்ணினபடியே, மனுஷருக்கு அல்ல, தங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசின (1தெச.2:3-5) ஆதிசபை ஊழியரில் எவராகிலும், ஆண்டவரினிமித்தம் இழந்த தங்கள் நிலம் வீடு மற்றும் பொருளை அப்படியே நூறுமடங்காகப் பெற்றுக்கொண்டதாக வேதாகமத்தில் ஏதாகிலும் தகவல் உண்டா?
அப்படியானால், "என்னிமித்தமாகவும்,சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும் ..... அடைவான்" என்று இயேசுகிறிஸ்து சொன்னதின் பொருள்: ஒருவர் ஆண்டவருக்காகவும் அவருடைய வேலைக்காகவும் இழந்தவைகளை அப்படியே அசலாக நூறத்தனையாய் பூமியில் பெறுவதல்ல என்பது விளங்குகிறதல்லவா?
ஐசுவரியவானான வாலிபன் தன் ஆஸ்தி முழுவதையும் விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்போது அவனுக்கு பூமியில் அல்ல, பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாயிருக்கும் என்றார் ஆண்டவர். ஒருவேளை அவன் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, தன் ஆஸ்தி முழுவதையும் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு, அவரை பின்பற்றிவரும் சூழலில், ஆண்டவர் அவனுடைய ஆஸ்தியை அவனுக்கு பூமியில் நூறுமடங்கு திரும்பக் கொடுத்திருப்பாரானால், அவன் தொடர்ந்து அவருக்கு பின்சென்றிருப்பானா?
ஆண்டவர் கொடுப்பதையெல்லாம் அவன் அவருடைய ஊழியத்திற்கே செலவுசெய்திருப்பான் என்று சிலர் சொல்லக்கூடும்?
ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்ததாக சொல்லிக்கொள்ளும் நூறுமடங்கு ஆசீர்வாதங்களில் இன்றைய செல்வசீமான்களான ஊழியர்கள் எத்தனை மடங்கு சபையாருக்கும், ஏழைகளுக்கும், சகஊழியர்களுக்கும் செலவுசெய்கிறார்கள்? இயேசுவின் பெயரால் இவர்கள் குவித்திருக்கிற ஆஸ்திகள், கட்டியுள்ள கட்டிடங்கள், வாங்கியுள்ள வாகனங்கள், இவர்கள் மற்றும் இவர்களின் குடும்ப அறக்கட்டளையின் பெயரில் உள்ளனவா? அல்லது அனைவரையும் உள்ளடக்கிய பொதுவான சங்கத்தின் பெயரில் இருக்கின்றனவா? ஊழியத்தில் வரும் வருமானத்தில் பெரும்பகுதியை இவர்கள் தங்கள் குடும்பத்திற்கு செலவுசெய்கிறார்களா? அல்லது பிறருடன் பகிர்ந்துகொள்கிறார்களா?
*"இம்மையில் துன்பங்களோடே நூறத்தனையாக அடைவான்"* என்று ஆண்டவர் சொல்லியிருக்க, இவர்கள் இம்மையில் சுகபோகமாக வாழ்வதோடு, இம்மையில் பாடுகளற்ற செழிப்பான ஒரு வாழ்வை எப்படி கிறிஸ்தவர்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்கள்?
இதை வாசிக்கிறவர்கள் சிந்திக்கக்கடவீர்கள்!!
காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this