நீங்கள் பரிசுத்தஆவியைப் பெற்று, அந்நியபாஷையில் பேசும் அனுபவமுள்ளவரா?
✍️ 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் அடியேன் இரட்சகரை அறிந்துகொண்டேன்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சின்னமலையில் உள்ள புதுவாழ்வு AG சபையில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன்.
1997ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் நாள் எங்கள் கல்லூரி (CPT - தரமணி) மாணவர் ஜெபக்குழுவினருக்காய் புருஷோத்தமன் என்னப்பட்ட அன்பு அண்ணன் அவர்கள், மகாபலிபுரம் SU Campsiteல் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் திரு. ஆல்பர்ட் தேவதாசன் ஐயா அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்வதைக்குறித்தும், பரிசுத்தஆவியில் நடத்தப்படுவதைக் குறித்தும் செய்தியளித்து எங்களுக்காக ஜெபித்தபோது, என்மேல் அக்கினி கொட்டப்படுவதைப் போன்று உணர்ந்தேன். அப்போது முழங்காலில் நிற்கமுடியாமல் கீழே விழுந்தேன்.
*சிறிதுநேரம் அங்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை, நான் வேறு ஏதோ ஒரு பாஷையில் பேசிக்கொண்டிருந்தேன்.*
அதன் அர்த்தம் எனக்கு தெரியாவிட்டாலும் எனக்கு பேசும்படித் தோன்றிய புதிய வார்த்தைகளைப் பேசி, சற்றுநேரத்தில் ஓய்ந்தேன்.
வேறு சில வாலிபர்களுக்கும் இந்த அனுபவம் உண்டானது.
*நாங்கள் அந்நியபாஷை அடையாளத்தோடு பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டதாக சொன்னார்கள்.*
[பின்னாளில் அந்நியபாஷை அடையாளத்தோடு அல்ல, அந்நியபாஷையில் பேசும் வரத்தோடு ஆவியைப் பெற்றுக்கொண்டதை வசனவெளிச்சத்தில் (அப்.2:4) அறிந்துகொண்டேன்]
அடியேன் பரிசுத்தஆவியைப் பெற்ற நாள்முதல் என் தனிப்பட்ட ஜெபத்திலும், சபை கூடுகையிலும், ஜெபக்கூட்டங்களிலும் அந்நியபாஷையில் பேசுகிறவர்களுடன் சேர்ந்து சத்தமாய், உற்சாகமாய் அந்நியபாஷையில் பேசுகிறதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
*அந்நியபாஷையில் பேசுகிறதை பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கிறதின் அடையாளமாகவும், ஆவிக்குரிய கௌரவமாகவும் கருதிய அடியேன், எங்கும் எவர்முன்பும் அந்நியபாஷையில் பேச ஆவலாயிருந்தேன்.*
நாம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை பெற்றிருப்பதற்கு அடையாளம் அந்நியபாஷையில் பேசுகிறதுதான் என்று அடியேன் கேள்விபட்டிருந்தபடியால், என்னை பிற கிறிஸ்தவர் மத்தியில் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை பெற்றவனாகக் காண்பித்துக்கொள்ளும்படி, அவர்களுக்கு முன்பாக ஒரு நான்கு வார்த்தைகளாவது அந்நியபாஷையில் பேசிவிடுவேன். என்னை சுற்றியிருந்தவர்களும் இப்படிப்பட்ட சிந்தையையுடையவர்களாக இருந்ததை காணமுடிந்தது.
அந்நியபாஷையில் பேசாதவர்களை அபிஷேகம் பெறாதவர்களாகவும் அற்பமாகவும் பார்க்கும் சூழல் இருந்தபடியால், அந்த அவமானத்திற்குத் தப்புவதற்கு சபைகூடுகையில் அந்நியபாஷையில் பேசியே ஆகவேண்டிய நெருக்கடி இருக்கிறதை எவரும் மறுக்கமுடியாது!
*கிறிஸ்தவக் கூடுகைகளில் பேசுகிறதைப் பார்க்கிலும் என் தனிப்பட்ட ஜெபவேளையில் முழுமனதுடனும், உணர்வுடனும் என்னால் அந்நியபாஷையில் பேசமுடிந்தது.*
எல்லா கிறிஸ்தவரும் ஆவியின் ஆபிஷேகத்தைப் பெறுவதையும், அந்நியபாஷையில் பேசுகிறதையும் அடியேன் உண்மையாய் வாஞ்சித்தேன்.
என்னை முழுமையாக ஊழியத்திற்கு அர்ப்பணித்த
1998ஆம் ஆண்டுமுதல் நூற்றுக்கணக்கான சபைகளில் அடியேன் பிரசங்கித்துவருகிறேன்.
*முதல் மூன்று ஆண்டுகள் அந்நியபாஷை அடையாளத்துடன் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்வதுதான் எனது பிரதானமான பிரசங்கமாக இருந்தது.*
பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அடியேன் கைகளைவைத்து ஜெபித்தபோது, பல சபைகளில் சிலர் அந்நியபாஷையில் பேசும் வரத்தோடு பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்!
தேவன் அடியேனுக்கு குணமாக்கும் வரத்தையும் கொடுத்து அநேகரை வியாதியிலிருந்து சுகமாக்கினார். இயேசுவின் நாமத்தினால் அடியேன் கட்டளையிட எப்பேர்பட்ட ஆவிகளும்
ஜனங்களைவிட்டு புறப்பட்டுப்போயின!
*இதனால் எனது பிரசங்கத்தில் அற்புத அடையாளங்களும் இடம்பிடித்தன.*
[தேவனுடைய ராஜ்யத்தை பிரசங்கிப்பதும், அற்புதங்களை செய்கிறதும்தான் வேதாகம முறை என்பதை (மத்.4:23; 9:35; லூக்கா 9:6) பின்னாட்களில் அறிந்துகொண்டேன்]
காலங்கள் செல்ல, அடியேன் வேதத்தை நிதானமாய் பகுத்துபார்க்க ஆரம்பித்தபோது, நான் அந்நியபாஷையில் பேசும் முறை வேதம் சார்ந்ததல்ல என்பதை அறிந்துகொண்டேன்.
*பரிசுத்த ஆவியையும் அந்நியபாஷையில் பேசும் வரத்தையும் பெற்றிருப்பதில் எவ்வித ஐயமும் எனக்கில்லை. இந்தக் காரியத்தில் ஆவியானவருடைய சான்றைத் தவிர மனுஷர் எவருடைய சான்றும் எனக்கு அவசியம் இல்லை.*
அந்நியபாஷையை குறித்தும், அந்நியபாஷையில் பேசுகிறதை குறித்தும், அந்நியபாஷையை பெற்றுக்கொள்வதைக் குறித்தும் அடியேன் கேள்விப்பட்டபடியே பிறருக்கு சொல்லிக்கொடுக்கும் காரியங்களுக்கும் வேதத்திற்கும் பெரும்பாலும் தொடர்பில்லை என்பதை பரிசுத்தஆவியானவர் என் மனக்கண்களுக்குக் காண்பித்தார்.
🫵 பெந்தெகொஸ்தேநாளில் அந்நியபாஷை பேசப்பட்ட விதத்திற்கும், "பெந்தெகொஸ்தேக்காரன்" என்று சொல்லிக்கொண்ட நான் அந்நியபாஷையில் பேசின விதத்திற்கும் தொடர்பில்லை என்பதை முதலாவது அடியேன் வசன அடிப்படையில் அறிந்துகொண்டேன்.
பெந்தெகொஸ்தேநாளில் எருசலேமில் பலதேசத்து யூதர்கள் கூடியிருந்த சூழலில் அவர்களுடைய பாஷைகளில் அன்று எருசலேம் சபையார் பேசினார்கள். (அப்.2:4-11)
*என்னை சுற்றி இந்திக்காரரோ, தெலுங்கரோ, கன்னடரோ அல்லது மலையாளியோ இருக்கும் பட்சத்தில்கூட நான் ஒருபோதும் அவர்கள் மொழியில் (அந்நியபாஷையில்) பேசினதில்லை.*
🫵 செசரியா பட்டணத்தில் கொர்நேலியுவின் குடும்பத்தார், அவருடைய உறவின்முறையார் மற்றும் சிநேதிதர் பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்டபோது,
அவர்கள் பல பாஷைகளில் பேசி, தேவனைப் புகழந்தது பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகளுக்கு புரிந்ததால், அவர்கள் பிரமித்தார்கள்.
(அப்.10:24,45,46)
நான் அந்நியபாஷையில் என்ன பேசுகிறேன் என்று எனக்கு அருகில் இருந்த விசுவாசிகளுக்கு ஒருபோதும் ஒன்றும் விளங்கினதில்லை.
ஆகிலும், நான் ஆதிசபையார் பேசியதுபோலவே அந்நியபாஷையில் பேசுகிறதாக, என் அறியாமையால் பல ஆண்டுகள் சாதித்துவந்தேன்!
🫵 அருகிலுள்ளவர் பக்திவிருத்தியடையும்படிக்கு, அந்நியபாஷையில் பேசுகிறவர் அர்த்தத்தையும் சொல்லவேண்டும் என்றும் (1கொரி. 14:12-17), அந்நியபாஷைக்கு அர்த்தஞ்சொல்லுகிறவர் இருக்கும் பட்டத்தில் இரண்டு அல்லது மூன்றுபேர்மட்டில்
அந்நியபாஷையிலே பேசவேண்டும் என்றும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவர் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும் என்றும்,
அர்த்தஞ்சொல்லுகிறவரில்லாவிட்டால் சபையில் பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசவேண்டும் என்றும் (1கொரி.14:26,27), தான் எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று ஒத்துக்கொள்ளவேண்டும் என்றும்
(1கொரி.14:37) பவுல் சொல்லியிருக்க, இவைகளை
கர்த்தருடைய கற்பனைகளென்று ஒத்துக்கொள்ளாமலும், இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமலும்; அந்நியபாஷையில் பேசுகிறது நமது கட்டுப்பாட்டில் இல்லை, ஆகையால் அந்நியபாஷையின் அர்த்தத்தை எவருக்கும் சொல்லவேண்டிய அவசியமில்லை என்றும், சபையில் உள்ள எல்லாரும் ஆவியில் நிறைந்து ஒரேநேரத்தில் அந்நியபாஷையில் பேசலாம் என்றும் வேதத்திற்கு முரணாக அடியேன் விசுவாசிகளை தூண்டிவருகிறதை பரிசுத்த ஆவியானவர் வசனவெளிச்சத்தில் காண்பித்தார்!
🫵
"சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?" என்று பவுல் கேட்கிறது (1கொரிந். 14:23) பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொண்ட எனக்கு பல ஆண்டுகள் உறைக்கவேயில்லை!
ஆண்டவருக்காக பைத்தியமாக மனதற்ற, ஆனால் அந்நியபாஷைக்காக பைத்தியங்கள் என்று பேரெடுக்க ஆயத்தமாயிருந்த முரட்டுபக்தர் கூட்டத்தில் அடியேனும் ஒருவனாக இருந்தேன்!
🫵 "தேவனானவர் சபையிலே..... பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார். ....
எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா?"
(1கொரிந்.12:28,30)
என்று பவுல் கேட்கிறதிலிருந்து, சபையில் உள்ள அனைவரும் அந்நியபாஷையில் பேசமுடியாது, அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றவர்கள் மட்டுமே அந்நியபாஷையில் பேசமுடியும் என்பது விளங்குகிறதல்லவா?
அடியேனோ, என்னிலும் மூத்த ஊழியர்கள் சொல்லுகிறபடியே, "எல்லரும் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று போகிற இடமெல்லாம் வேதத்திற்கு முரணாக விசுவாசிகளைத் தூண்டிக்கொண்டிருந்தேன்!
🫵 "...... ஞானவரங்களையும் விரும்புங்கள். *விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.*
நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். *ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்"*
(1கொரிந்.14:1,5) என்று பரிசுத்தஆவியானவரால் தெளிவாய் நடத்தப்பட்ட உத்தம ஊழியர் பவுல் சபைக்கு ஆலோசனை சொல்லியிருக்க, தேவஜனங்களுக்கு தீர்க்கதரிசன வரத்தை மறைத்து, அனைவரையும் அந்நியபாஷைக்கு நேராக நடத்தும் அடியேனின் முரண்பாட்டை ஆவியானவர் காண்பித்தார்.
*அந்நியபாஷையை குறித்து வேதத்தில் சொல்லப்பட்டுள்ள காரியங்கள் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அது உபதேசமாக்கப்பட்டும்; அந்நியபாஷையை குறித்து வேதத்தில் காணப்படாத பல நூதனமானக் காரியங்கள் போதிக்கப்பட்டு, கிறிஸ்தவர்களால் அவை சரியென்று நம்பப்பட்டும் வருகிறதை அறிந்துகொள்ள அடியேனுக்கு இருபது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது!*
🤔 சிலருக்கு இன்னும் அதிக ஆண்டுகள் தேவைப்படுமோ!
அடியேனை குறித்து யார் என்ன நினைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், அந்நியபாஷையில் பேசுகிறதில் வேத ஒழுங்கை கடைபிடிக்க நான் உறுதியாய் தீர்மானித்தேன்.
*"அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்"* என்கிற வசனத்தின்படி
(1கொரிந்.14:13),
அந்நியபாஷைக்கு அர்த்தம் சொல்லும் வரத்திற்காக அடியேன் ஜெபம்பண்ணினேன். அந்த வரத்தை எனக்கு ஆவியினவர் இதுவரை கொடுக்கவில்லை.
எனவே, *"அர்த்தஞ்சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்"*
(1கொரிந்.14:28) என்கிற வசனத்தின்படி தற்பொழுது தனிமையில் மட்டும் அந்நியபாஷையில் பேசிவருகிறேன்.
😊 பொதுவான ஆராதனையில் அடியேன் தங்கள் காதுகள் கேட்க சத்தமாய் அந்நியபாஷையில் பேசாததைக் கண்ட ஊழியரான சில நண்பர்கள், அடியேன் அபிஷேகத்தை இழந்துவிட்டதாக எண்ணினர்.
சிலர் அடியேன் இன்னும் ஆவியின் அபிஷேகத்தை பெறவில்லை என்று சாதித்தனர்.
*அடியேன் ஆர்ப்பாட்டமாக அந்நியபாஷையில் பேசும்போது, அழைத்து ஆர்வமாய் தங்கள் சபைகளில் பயன்படுத்திக்கொண்டிருந்த தேவஊழியர்கள் பலர், அமைதியாக அந்நியபாஷையில் பேச ஆரம்பித்தவுடன், அழைப்பதைத் தவிர்த்துவிட்டனர்!*
அந்நியபாஷையில் பேசாத என்னை தங்கள் சபையில் ஏற்றுவதில்லை என்று ஒருவர் என்னிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார்!
அடியேன் வேதத்தை உள்ளபடியே பேச ஆரம்பித்ததிலிருந்து, வேதவசனங்களை தவறாக வியாக்கியானம் செய்துகொண்டு, அதை சரியென்று சாதிக்கிற பலர் அடியேனை ஊழியத்திற்கு அழைப்பதை அடியோடு விட்டுவிட்டனர்!
அறியாமல் சத்தியத்தை தவறாக போதித்துவந்த சிலர் தங்கள் தவறைத் திருத்திக்கொண்டனர். சத்தியத்தை உள்ளபடியே போதிக்கும் உறுதியுள்ள சிலர் அடியேனுடன் நட்பில் உறுதியாக இருக்கின்றனர்.
*தவறுதலாகக் கற்றுக்கொண்டு, அதை சரியென்று நிச்சயித்துக்கொண்டு, அதில் நிலைத்திருக்கிற பலர் அடியேனை சத்துருவாகக் கருதுகின்றனர்!*
ஆண்டவரிலும் அந்நியபாஷையில் அதிகப் பிரியப்படுகிறவர்கள், இன்று தாங்கள் வேதவழக்கத்திற்கு முரணாக அந்நியபாஷையில் பேசுகிறது வசனவெளிச்சத்தில் சுட்டிக்காட்டப்படுவதை சகிக்கக்கூடாமல், அடியேன் ஆவியின் அபிஷேகத்தைப் பெறவில்லை என்றும், ஆவிக்குரிய அனுபவங்கள் ஒன்றும் அடியேனுக்கு இல்லை என்றும் தூஷணம் செய்கின்றனர்!
சத்தியத்தை உள்ளபடியே போதிக்கிறதிலும், அதை அனுபவமாக்குகிறதிலும் எத்தனை நிந்தனைகள் வந்தாலும், எவ்வளவு நஷ்டத்தை சந்தித்தாலும், கஷ்டத்தை அனுபவித்தாலும் மகிழ்வுடன் தொடரவே அடியேன் விரும்புகிறேன்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்.
- யோவான் 6:66
*சீஷர்கள் ஏன் இயேசுவினிடத்தில் வந்தனர்?*
பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். *அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும்,* யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய *திரளான ஜனங்களும் இருந்தார்கள்.*
லூக்கா 6:17
இயேசுவின் அநேக சீஷர்கள் உட்பட திரளான ஜனங்கள் அவரிடம் இரண்டு காரணங்களுக்காக வந்தனர்.
ஒன்று அவருடைய உபதேசத்தைக் கேட்பது. அடுத்து, தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படுவது.
சீஷரல்லாத பொதுஜனங்கள்
அற்புதங்களுக்காகவும் ஆகாரத்துக்காகவும் இயேசுவிடம் வருவதும் போவதும் வழக்கமான ஒன்றுதான்.
(யோவான் 6:2; 24-27; மத்தேயு 4:25; 8:1; 12:15; 13:2; 19:2; 20:29; மாற்கு 3:8; 5:21; 5:24; லூக்கா 4:42; 7:11; 5:15; 8:42)
ஆனால்,
அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனது ஆச்சரியம் அளிக்கிறது.
(யோவான் 6:66)
*சீஷரில் அநேகர் ஏன் பின்வாங்கிப்போனார்கள்?*
"நான் வானத்திலிருந்து வந்த அப்பம்" என்று இயேசு கப்பர்நகூம் ஜெபஆலயத்திலே உபதேசித்ததினிமித்தம் யூதர்கள் முறுமுறுத்து: "இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே, அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான்" என்றார்கள். (யோவான் 6:41,42,59)
"நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம், இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான், நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே" என்று அவர் சொன்னபோது,
யூதர்கள்: "இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான்" என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். (யோவான் 6:52)
அவருடைய சீஷரில் அநேகர் அவருடைய உபதேசத்தைக் கேட்டபொழுது, *"இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்?"* என்றார்கள். (யோவான் 6:60)
ஜனங்கள் முறுமுறுக்கிறதற்கும் வாக்குவாதம்பண்ணுகிறதற்கும் ஏற்றப் பிரசங்கத்தை இயேசுகிறிஸ்து செய்கிறதை அவருடைய அநேக சீடர்கள் விரும்பவில்லை.
ஜனங்கள் கேட்பதற்கு கடினமாக இராத, எவ்விதத்திலும் அவர்களுடைய விருப்பங்களுக்கு மாறுபடாத வகையில் இயேசுகிறிஸ்து உபதேசிக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்!
ஜனங்கள் முறுமுறுக்கிறதற்கேதுவாக கடினமாக உபதேசிக்கிற ஒருவரின் சீடர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள அவர்கள் தயங்கினர்!
எல்லாவிதத்திலும் ஜனங்களுக்கு பிடித்தமாதிரியும், எவ்விதத்திலும் ஜனங்களின் பகையை சம்பாதித்துக்கொள்ளாத வகையிலும் உபதேசிக்கிற இயேசுவின் மக்கள் ஆதரவைப் பெற்ற சீடராக இருக்க அவர்கள் வாஞ்சித்தனர்!
இயேசுகிறிஸ்துவின் உபதேசமோ அவர்களுக்கு இடறலாயிருந்ததினிமித்தம் அவர்கள்
அதைக்குறித்து முறுமுறுத்தார்கள். (யோவான் 6:61)
"உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு" என்று சொல்லி, அவர்கள் உண்மையில் யார் என்று அவர்களுக்கு அடையாளம் காட்டியதோடு,
"ஒருவன் என் பிதாவின் அருளைப்பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்" என்று அவர்கள்
தம்மை அனுப்பின பிதாவினால் இழுத்துக்கொள்ளப்படாதவர்கள் என்பதை சொல்லிவிட்டார் ஆண்டவர். (யோவான் 6:44,64,65)
*அதுமுதல்* அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்.
(யோவான் 6:66)
அதாவது, தாங்கள் அவிசுவாசிகளான போலி சீடர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டதுமுதல் அநேகர் ஆண்டவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்!
'சீஷர்கள்' (கிறிஸ்தவர்கள்) என்கிற பெயரில் போலி சீஷர்கள் (கிறிஸ்தவர்கள்) அநேகர் இன்றும் இருக்கிறார்கள்!
அற்புதங்களை செய்கிற மற்றும் ஜனங்களின் சுய இச்சைகளுக்கேற்ப போதிக்கிற ஊழியர்களின் பின்னால் இவர்கள் சுற்றித்திரிவார்கள். (மத்.7:22; 2தீமோ.4:3,4; 2பேதுரு 2:1,2)
அநேகரைப்போல, தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிற
(2 கொரி.2:17),
சத்தியத்திற்கு விரோதமாக ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே எதையும் செய்கிற
(2 கொரி.13:8) உத்தம ஊழியர்களைவிட்டு இவர்கள் ஓடி ஔிவார்கள்!
*இவர்களை குறித்து இயேசுகிறிஸ்து கவலைப்படுகிறதில்லை!*
இயேசு பன்னிருவரையும் நோக்கி: *"நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?"* என்றார்.
(யோவான் 6:67)
மீதமுள்ள 12 சீஷரும் தம்மைவிட்டுப் போக மனதானால் போய்விடலாம் என்று ஆண்டவர் மறைமுகமாகச் சொல்லுகிறார்.
கட்டாயமாய் ஒருவர் தம்மை பின்பற்றவேண்டிய அவசியம் அவருக்கில்லை. (லூக்கா 9:23) ஒருவரும் அவருடன் இல்லாமல் போவதினால் அவருக்கு ஒரு நஷ்டமுமில்லை.
*சத்தியத்தை உள்ளபடியே பேசுகிற ஊழியர்கள், திரளான ஜனங்கள் தங்களுக்கு பின்னால் இல்லாததைக்குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை!*
சீமோன் பேதுரு ஆண்டவருக்குப் பிரதியுத்தரமாக: "ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே" என்று சொன்னதுபோல (யோவான் 6:68), சத்தியத்தைத் தேடுகிற ஒரு சிறு கூட்டம் நமக்கு பின்னால் இருப்பதில் மகிழ்ச்சியடையலாம்!
நீங்கள் சத்தியத்தை சரியாகப் பேசாதவரை உங்களுக்குப்பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும் கூட்டம்: நீங்கள் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கும்போது (2 தீமோ.2:15), உங்களைவிட்டு ஓடிவிடுவார்கள்!
நீங்கள் மனுஷரை நாடி, அவர்களைப் பிரியப்படுத்த போதித்த நாட்களில் உங்களை ஆர்வமாய் அழைத்துப் பயன்படுத்திக்கொண்ட போலி ஊழியர்கள்: நீங்கள் தேவனை நாடி, அவரை பிரியப்படுத்தும்படி போதிக்கிற ஊழியராகிவிட்டால் (கலா.1:10), உங்களை அழைக்க அஞ்சுவார்கள்!
அற்புதங்களுக்காய் உலகமே ஆண்டவருக்குப் பின்சென்றது.
(யோவான் 12:17-19) பிறகு அந்தக்கூட்டம் எங்கேப்போனது என்று தெரியவில்லை.
அற்புதங்களுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும், ஐசுவரியத்திற்காகவும் ஒரு கூட்டம் நமக்கு பின்னால் வருகிறதென்றால், அந்தக்கூட்டத்திடம் ஊழியக்காரர்கள் கவனமாக இருக்கவேண்டும்! (1கொரி.15:19)
அற்புதம், ஆசீர்வாதம், ஐசுவரியம் இவைகளை வாக்குப்பண்ணி, தங்களுக்குப் பின்னால் திரளான கூட்டத்தை சேர்க்கிற ஊழியர்களிடம் கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
ஊழியத்திற்கு காணிக்கைக் கொடுப்பதுதான் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவது என்றும், ஊழியத்திற்கு கொடுக்கும்பொழுது நமக்கு தேவையானவைகளெல்லாம் நமக்குக் கூடக் கொடுக்கப்படும் என்றும் ஒரு ஊழியக்காரர் போதிக்கிறாரே?*
✍️ பணம் சம்பாதிப்பதையே தங்கள் ஊழிய தரிசனமாகக் கொண்டிருக்கிற ஊழியக்காரர்கள், தங்கள் பண ஆசையை வெளிப்படுத்தும் ஊடகமாக வேதவசனங்களை பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமாகும்!
மத்தேயு 5,6,7 ஆகிய அதிகாரங்கள் இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு மலையில் வைத்து போதித்த சீஷத்துவத்திற்கான அடிப்படை உபதேசமாகும். (மத்.5:1-7:29)
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், *பரலோகராஜ்யம் அவர்களுடையது.*
மத்தேயு 5:3
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், *பரலோகராஜ்யம் அவர்களுடையது.*
மத்தேயு 5:10
ஆண்டவர் சொல்லுகிற மேற்காணும் வசனங்களை கவனியுங்கள்.
ஆவியில் எளிமை மற்றும் நீதியினிமித்தம் துன்பப்படுதல் உட்பட மத்தேயு 5:3 முதல் 10 வரை சொல்லப்பட்டுள்ள 8 குணங்களும் இயேசுகிறிஸ்துவின் சொந்த குணங்களாகும்.
தமது சீஷர்கள் தம்முடைய குணங்களை உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இயேசுகிறிஸ்து இவைகளை போதித்திருக்கிறார்.
*"இந்தக் கற்பனைகள் (மத்.5:3-10) எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன்* பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான், *இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ,* பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்" என்றும் (மத்.5:19), *"நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் (மத்.5:3-10) கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ,* அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். *நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ,* அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்" என்றும் (மத்.7:24-27) ஆண்டவர் சொல்லுகிறது இங்கு கவனிக்கத்தக்கது.
*இயேசுகிறிஸ்துவின் குணங்களை உடையவர்களாகும்படி பிரயாசப்படுகிறதே முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதாகும்!*
தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் குணங்களில் வளர வாஞ்சிக்கிறவர்களுக்கு, பரமபிதா அக்குணங்களோடு, உண்ணவும், குடிக்கவும், உடுக்கவும் வேண்டியவைகளை நிச்சயம் தருவார் என்பதே மத்தேயு 6:33 இன் சரியான பொருளாகும். (மத்.6:25-33)
காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
Coimbatore.
வருடத்திற்கு 200 முறை வெளிநாட்டு ஊழியத்திற்கு செல்கிற ஒரு ஊழியருக்கு பொது விமானத்தில் செல்வது அசௌகரியமாக இருப்பதாகவும், தேவன் தனக்கு தனி விமானமும் தனி ஏர்போர்ட்டும் கொடுக்க ஜெபிக்குமாறும் அவர் முகநூலில் வேண்டுகோள் விடுக்கிறாரே?*
✍️ இன்றைய ஊழியரில் சிலர் தாங்கள் பில்கேட்ஸ், அம்பானி, அதானியாகும் கனவில் மிதப்பதாகவே தெரிகிறது.
உலகத்து ராஜாக்கள் குதிரைகள் பூட்டிய இரதங்களில் வலம்வந்த நாட்களில்: நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவருமான நமது ராஜாவாகிய இயேசுகிறிஸ்து கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிற அளவுக்கு
தாழ்மையுள்ளவராய் இருந்திருக்கையில்
(சகரியா 9:9), அவரது ஊழியர்கள் ஆடம்பரப்பிரியரும், ஐசுவரிய வெறியரும், பணப்பித்தர்களுமாய் திரிகிறது (1தீமோத்.6:9,10) ஆச்சரியமாய் இருக்கிறது.
தனி விமானம் மற்றும் ஏர்போர்ட் கேட்கிறவர் எப்படி தலைசாய்க்க இடமில்லாதவரின் ஊழியராக இருக்கமுடியும்?
மனுஷருபமாய் காணப்படுகையில் இயேசுகிறிஸ்துவுக்கு வராத ஆசைகள் இவர்களுக்கு வருகிறதென்றால், இவர்கள் யாருடைய ஊழியர் என்று புரிகிறதா? (2கொரி.11:4,12-15)
தேவன் தங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணுவதையும், தாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையாகவும், கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரராகவும், பலவீனராகவும், கனவீனராகவும் மனதுள்ளவர்களும்; பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்க விரும்புகிறவர்களும்; தங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடவும், வையப்படவும், துன்பப்படவும்,
தூஷிக்கப்படவும், உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆகும் மனதுள்ளவர்களுமே
இயேசுகிறிஸ்துவின் ஊழியராக இருக்கமுடியும்! (1கொரிந்.4:9-13)
எத்தரென்னப்படவும், அறியப்படாதவர்களென்னப்படவும், சாகிறவர்கள் என்னப்படவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்படவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்படவும், தரித்திரர் என்னப்படவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்படவும் ஆயத்தமாயிருக்கிறவர்களே ஆண்டவரின் பணியாளராக இருக்கமுடியும்! (2கொரிந்.6:8-10)
தான் தேவஜனங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறாரோ அவ்வளவு குறைவாய் அவர்களால் அன்புகூரப்பட்டாலும், மிகவும் சந்தோஷமாய் அவர்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறவரே உண்மையான ஊழியராக இருக்கமுடியும்! (2கொரி.12:15)
தேவஜனங்களில் கொஞ்சமும் அன்பில்லாவிட்டாலும் தங்களுக்காய் அவர்களை செலவுபண்ணவைக்கிறவர் எப்படி உண்மையான ஊழியராக இருக்கமுடியும்?
தேவஜனங்களுடையதையல்ல, அவர்களையே தேடுகிறவரே உண்மையான ஊழியராக இருக்கமுடியும்?(2கொரிந்.12:14)
தேவஜனங்களைத் தேடாமல் அவர்களுடையதைத் தேடி, தங்கள் சுகபோகமான வாழ்வுக்காய் அதிகக் காணிக்கைக் கொடுக்கும்படி அவர்களை வருத்தப்படுத்துகிறவர் எப்படி உண்மையான ஊழியராக இருக்கமுடியும்?
தேவஜனங்கள் சுகமாய் வாழ வழிகாட்டுகிறவர் உண்மையான ஊழியரா? அல்லது அவர்களை வஞ்சித்து, கொள்ளையிட்டு சுகபோகமாய் வாழ்கிறவர் உண்மையான ஊழியரா?
இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளை குறித்து தேவன் கொடுத்த சாட்சியை கேளுங்கள்:
*"அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்,* கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள், *திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்* , அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்" (எசேக்.22:25)
இன்றைய பெரும்பாலான ஊழியர்களுக்கும் இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கும் ஏதாகிலும் வித்தியாசம் இருக்கிறதா?
திரவியத்திற்காகவும் விலையுயர்ந்த பொருள்களுக்காகவுமே பலர் இன்று ஊழியம் செய்கிறதை குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை.
*தங்கள் சுகபோக ஜீவியத்தை 'ஆசீர்வாதம்' என்றும், தங்கள் பேராசையை 'விசுவாசம்' என்றும் ஜனங்களின் மூளையை மழுங்கடித்து, அவர்களையும் பேராசைக்காரர்களாக்கி, அவர்களை கொள்ளையிட்டு, நன்றாய் கல்லாக்கட்டுகிறார்கள் இந்த கள்ளப்போதகர்கள்!* (2பேதுரு 2:1-3)
"இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து, உங்களோடே விருந்துண்கையில் *தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்"* என்று பேதுரு அடையாளம் காட்டுகிறார்.
(2பேதுரு 2:13)
உல்லாச வாழ்வை வாஞ்சிக்கிற ஒருவன் தேவனுடைய ஊழியனாக இருக்கமுடியாது. அவன் ஓர் கள்ளப்போதகன்!
பொருளாசையுடையவர்களாகிய
கள்ளப்போதகர்கள், தந்திரமான வார்த்தைகளால் தேவஜனங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள் என்று எச்சரிக்கிறார் பேதுரு. (2பேதுரு 2:3,14)
இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அங்கிகரியாமலும்,
சத்தியத்தை விசுவாசியாமலும் அநீதியில் பிரியப்படுகிறதினால் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்திற்கு தேவனால் ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே (2தெச.2:10-12), இந்தக் கள்ளப்போதகர்களின் பின்னால் அலைவதோடு, அவர்கள் கேட்கிற அத்தனை வசதியையும் செய்துகொடுப்பார்கள். உண்மை கிறிஸ்தவர்களைவிட இவர்களின் எண்ணிக்கையே அதிகமாய் இருக்கும்! (2பேதுரு 2:1,2)
பொதுவாக இவர்களைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. இவர்கள் அழிவுக்கு நியமிக்கப்பட்டவர்கள்!! (2பேதுரு 2:1-3)
காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
எவ்வளவு கொடுப்பார்கள் ஆவியானவரே?
தான் ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட இடத்தில் எவ்வளவு காணிக்கைக் கொடுப்பார்கள் என்று ஊழியர் ஒருவர் பரிசுத்த ஆவியானவரிடம் கேட்டதாகவும், "ஒன்றரை இலட்சம் ரூபாய் கொடுப்பார்கள்" என்று பரிசுத்த ஆவியானவர் அவரிடம் சொன்னதாகவும்; "இவ்வளவுதானா ஆவியானவரே?" என்று அவர் கேட்டபோது, "மூன்று இலட்சம் தருவார்கள்" என்று ஆவியானவர் சொன்னதாகவும்; "இவ்வளவுதானா ஆவியானவரே?" என்று அவர் மீண்டும் கேட்டபோது, "ஆறு இலட்சம் தருவார்கள்" என்று ஆவியானவர் சொன்னதாகவும்; "இவ்வளவுதானா ஆவியானவரே?" என்று அவர் மீண்டும் கேட்டபோது, "ஒன்பது இலட்சம் தருவார்கள்" என்று ஆவியானவர் சொன்னதாகவும்; "இவ்வளவுதானா ஆவியானவரே?" என்று அவர் மேலும் கேட்டபோது, "பன்னிரண்டு இலட்சம் தருவார்கள்" என்று ஆவியானவர் சொன்னதாகவும்; அப்பொழுது அவருடைய வீட்டு கதவு தட்டப்பட்டதாகவும், அவரை ஊழியத்திற்கு அழைத்தவர்கள் வந்து, "ஆவியானவர் உங்களுக்கு பன்னிரண்டு இலட்சம் ரூபாய் காணிக்கைக் கொடுக்கச் சொன்னார்" என்று சொல்லி, தன்னிடம் பன்னிரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தந்ததாகவும் அவர் சாட்சிசொன்னதாக, ஒரு ஊழியக்காரர் சொல்ல சமீபத்தில் கேள்விப்பட்டேன்.
ஊழியத்திற்கு அழைக்கிறவர்கள் தங்கள் உழைப்புக்கேற்றக் கனத்தை (பணத்தை) (1தீமோத்.5:17,18) கொடுக்காமல், வஞ்சித்து தங்கள் வயிற்றில் அடிப்பதால், ஊழியத்திற்கு போவதற்கு முன்னால் எவ்வளவு காணிக்கைக் கொடுப்பார்கள் என்பதை ஆவியானவரிடம் அறிந்துகொள்ளும் நெருக்கடிக்கு சில ஊழியர்கள் ஆளாகிறார்களோ என்னவோ தெரியவில்லை!
மேலே அடியேன் குறிப்பிட்ட ஊழியர் எத்தனை நாட்கள் பிரசங்கிக்க அழைக்கப்பட்டார்? அவரை அழைத்தவர்கள் அவருக்கு பன்னிரண்டு இலட்சம் கொடுக்குமளவுக்கு வசதியானவர்களா? அழைக்கப்பட்ட ஊழியரின் பிரபலத்தைப் பயன்படுத்தி அவர்கள் சபைக்குள்ளும் சபைக்கு வெளியிலும் உள்ள கிறிஸ்தவர்களிடம் எத்தனை இலட்சம் அல்லது எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்தார்கள்? பன்னிரண்டு இலட்சம் ரூபாய் காணிக்கை வாங்குமளவிற்கு அழைக்கப்பட்ட ஊழியர் அப்படி என்ன பிரயாசப்பட்டார்? என்கிற கேள்விகள் நிதானிப்புக்குட்பட்டவை.
*"ஒரு கூட்டத்திற்கு வருகிற மக்களின் சரீர ஆகாரத்திற்கு செலவழிக்கப்படுகிற பணத்திற்கு சமமாக ஆவிக்குரிய ஆகாரத்திற்கு செலவழிக்கப்படவேண்டும்"* என்று ஒரு மூத்தப்போதகர் சொல்வதுண்டு.
தசமபாகத்தை விசுவாசிகள் வஞ்சிக்கக்கூடாது என்று கண்டிப்பாய் போதிக்கிற பரிசுத்தவான்களில் பலர், ஒரு கூட்டத்திற்காக மக்களிடம் சேகரித்த பணத்தில் தசமபாகத்தை எடுத்து அழைக்கப்படுகிற ஊழியருக்குக் கொடுத்தாலே, அவருக்கு போதுமானதாக இருக்கும்.
கொடுக்கிற காரியத்தில் தேவஜனங்களிடம் உண்மையை எதிர்பார்க்கிற ஊழியர்களில் பலர், தாங்கள் அழைத்த செய்தியாளருக்கு கொடுக்கும் காரியத்தில் உண்மையுள்ளவர்களாக இருப்பதில்லை.
பல ஊழியர்களுக்கு இருதயம் என்கிற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை! சில ஏழை ஊழியர்களுக்கு இருக்கிற தாராள சிந்தை, பல பணக்கார ஊழியர்களுக்கு இருப்பதில்லை!
அடியேனின் ஊழியத்திற்கேற்ற பலனை கொடுப்பதில் வசதியான பல ஊழியர்கள் நேர்மையாய் நடந்துகொண்டிருப்பார்களானால், இன்று அடியேன் அநுதின தேவைக்கே போராடுகிற ஒரு ஊழியக்காரனாக இருக்க வாய்ப்பிராது.
*பலர் பிரசங்கம்பண்ணுகிற நேரத்தை மட்டுமே கணக்கில் வைத்து காணிக்கக் கொடுப்பதுண்டு. பிரசங்க ஆயத்திற்கான நேரம், ஜெபநேரம், பிரயாண நேரம், பிரயாணதூரம், பிரயாணச்செலவு மற்றும் அலைச்சல் இவைகளை கணக்கில் வைப்பதில்லை.*
இப்படி வஞ்சிக்கப்பட்டு மன உளைச்சலுடன் பலமுறை வீட்டுக்கு திரும்புகிற ஊழியர்களில் சிலர், ஊழியத்திற்கு அழைக்கும்போதே பயணசீட்டு முன்பதிவுமுதல், உணவு, தங்குமிடம் மற்றும் காணிக்கைப்பற்றி தெளிவாகக் பேசி முடிவுசெய்துவிட்டே ஒப்புக்கொள்கிறார்கள்.
இவர்கள் இப்படி செய்கிறது தவறு என்றாலும், இப்படிச் செய்ய காரணமாகிறவர்களும் இவர்களுடைய குற்றத்தில் பங்குள்ளவர்களாக இருக்கிறார்கள் அல்லவா?
சிலர் சத்தியத்தை உள்ளபடியே பேசுகிற ஊழியர்களை அற்பமாய் நடத்துவதோடு, சத்தியமில்லாத வெற்று பந்தாபேர்வழிகளுக்கு அதிக கனத்தையும் பணத்தையும் கொடுக்கும் அக்கிரமத்தை செய்கிறார்கள்!
*"நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை,* விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, *இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்"* என்கிற பவுலின் ஆலோசனையை (1தீமோத்.5:17) இவர்கள் கண்டுகொள்வதில்லை.
தேவனுடைய பணத்தை சத்தியமில்லாதவர்களுக்கு வாரியிறைக்கிற இவர்கள் ஒருநாள் தேவனுக்கு பதில்சொல்லியாகவேண்டும். இவர்கள் தங்கள் அக்கிரமத்தை நிச்சயம் சுமப்பார்கள்!
பொதுவாக, தன்னை ஊழியத்திற்கு அழைக்கிறவர்கள் நியாயமான காணிக்கை கொடுக்கிறார்களோ, அல்லது பிரயாசத்திற்கேற்றப் பலனை கொடாமல் அநியாயம் செய்கிறார்களோ, அல்லது வெறுமையாக அனுப்புகிறார்களோ, எதுவானாலும்: இவ்வளவு காணிக்கைக் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறதும், இவ்வளவு கொடுத்தால்தான் ஊழியத்திற்கு வருவேன் என்று பேரம்பேசுகிறதும் ஒரு ஊழியக்காருக்கு தகுதியான காரியம் அல்ல!
*தன்னை பிரசங்கிக்க அழைக்கிறவர்கள் பிரயாசத்திற்கேற்றப் பலனை கொடாவிட்டாலும், தன்னை ஊழியத்திற்கு அழைத்த உண்மையுள்ள எஜமான் இயேசுகிறிஸ்து எப்படியும், யாரைக்கொண்டும் தன் வேலைக்கான கூலியை கொடுப்பார் என்று ஊழியர் விசுவாசிக்கவேண்டும்!* (2கொரிந்.3:8)
பூமியிலே போதுமான பலன் கிடைக்காவிட்டாலும் பரலோகத்தில் பலன் நிச்சயம் என்பதை தேவஊழியர்கள் மறந்துவிடக்கூடாது. (2தீமோத்.4:7,8)
*மேலும், ஊழியத்திற்கு அழைக்கிறவர்களிடம் தனது வேலைக்கு மிஞ்சினக் கூலியை ஒரு ஊழியக்காரர் எதிர்பார்க்கிறதும் அநியாயமாகும்!*
மேலும், போதுமான காணிக்கைக் கொடுக்க இயலாத ஏழை ஊழியர்கள் தங்கள் சபைகளில் பிரசங்கிக்க அழைத்தால், பணப்பிரியரான பல ஊழியர்கள் வருவதற்கு ஒப்புக்கொள்வதில்லை!
*"போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்"* என்கிற ஆலோசனையை பவுல் ஊழியருக்கே கொடுத்துள்ளார்.
(1தீமோத்.6:8)
ஜசுவரியவான்களாகவேண்டுமென்கிற விருப்பமும் பண ஆசையுமுள்ள ஊழியர்கள் (1தீமோத்.6:9,10) தாங்கள் அதிகமான காணிக்கைக்கு தகுதியானவர்கள் என்றும், தங்களை அழைக்கிறவர்கள் தாங்கள் எதிர்பார்க்கிறதற்கும் அதிகமானக் காணிக்கையை தங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றும் மறைமுகமாக உணர்த்த, சில உபாயத்தந்திரங்களைக் கையாள்வதுண்டு.
இதற்கு 'சாட்சி' என்கிறப் பெயரில் இவர்கள் சில கட்டுக்கதைகளை ஆவியானவரின் பெயரால் அவிழ்த்துவிடுவார்கள்!
பூமிக்குரியவைகளை சிந்திக்கிற சிலுவையின் பகைஞரான இவர்களிடம் (பிலிப்.3:18,19) தேவஜனங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்!!
காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this