Type Here to Get Search Results !

Thomas Bible Study in Tamil | நீர் என்னைக் காண்கின்றீர் | பூமியில் பரதேசிகள் | Jesus Sam

======================
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு, அவர்களுக்கு இடறலில்லை
சங் 119:165
======================
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராட்சத பரிசுத்தவான் ஜியார்ஜ் முல்லர் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை 100 தடவைகள் வாசித்து முடித்திருந்தார்.
"தேவனுடைய வார்த்தைகளோடு நான் வேண்டிய நேரத்தை செலவிடாதபட்சத்தில் அந்த நாளை நஷ்டப்பட்ட ஒரு நாளாகவே நான் துயரத்தோடு கருதுகின்றேன்" என்று அவர் கூறினார். "நான் அநேக காரியங்களை செய்ய வேண்டும். எனக்கு மிகுந்த அலுவல்கள் உண்டு. பலரையும் நான் சந்தித்துப் பேசவேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து தியானிக்க எனக்கு நேரம் எங்கே?" என்று எனது நண்பர்கள் பலர் அடிக்கடி என்னிடம் சொல்லுவதை நான் துக்கத்தோடு கேட்டிருக்கின்றேன். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில்:-
"50 ஆண்டுகளுக்கும் கூடுதலான எனது வாழ் நாட் காலத்தில் ஒரு நாளை கூட நான் தேவனுடைய வார்த்தைகளோடு போதுமான நேரம் செலவிடாமல் கை நழுவ விடவில்லை. ஆண்டுக்கு 30000 கடிதங்கள் உலகத்தின் நானா தேசங்களிலிருந்தும் எனது கரங்களுக்கு வருகின்றன. அவைகளை நான் வாசித்து அவைகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டும். 10000 (பத்தாயிரம்)அநாதை குழந்தைகளை பசி பட்டினியின்றி போஷித்து பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இருக்கின்றது. அத்துடன் 1200 விசுவாசிகளைக் கொண்ட ஒரு தேவனுடைய சபைக்கு நான் மேய்ப்பனாக இருந்து அந்த விசுவாச மக்களின் ஆவிக்குரிய ஆகாரத்தை நான் அவர்களுக்கு கொடுத்து அவர்களை ஜீவ பாதையில் வழிநடத்த வேண்டிய பரிசுத்த கடமை எனக்கு இருக்கின்றது. இத்தனை கடினமான அலுவல்களின் மத்தியிலும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளோடு தினமும் சில மணி நேரங்கள் செலவிட்ட பின்னரே அந்த நாளை நான் ஆரம்பிக்கின்றேன்." (ஜியார்ஜ் முல்லர்)

வாசிக்கும் அன்பான தேவப்பிள்ளையே, நமது வாழ் நாட்காலம் மிகவும் குறுகியது. அந்த குறுகிய நாட்களை தேவனுடைய வார்த்தைகளை நம்மால் முடிந்தவரை அதிகமாக வாசித்து தியானிக்க, அவைகளை மனப்பாடம் செய்ய விழிப்பாக இருப்போம். இராக்காலங்களில் நமது படுக்கையில் நித்திரை நமது கண்களுக்கு விலகி, சத்துருவாம் பிசாசானவன் பற்பலவிதமான நினைவுகளைக் கொண்டு வந்து நமது இருதயத்தை கலங்கப்பண்ண முயற்சிக்கையில் நாம் மனப்பாடாக படித்து பொக்கிஷ வைப்பாக வைத்திருக்கும் தேவனுடைய வசனங்களை நாம் நமது நினைவுக்கு கொண்டு வந்து அவைகளை நாம் நமது நெஞ்சத்துக்குள்ளே சொல்ல ஆரம்பிப்போமானால் நமது இருதயம் தேவ சமாதானத்தால் நிரம்பும். அன்பின் ஆண்டவருடைய சிலுவைப்பாடுகளைக் குறித்த வேத பகுதிகள், குறிப்பாக ஏசாயா 53 ஆம் அதிகாரம், அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அடிகளார் தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பட்ட பாடுகள் குறித்த பட்டியல் 2 கொரி 11 : 23 - 33. தேவனுடைய படைப்பின் மாட்சிமையை தனக்கே உரிய பரலோக நடையில் வர்ணித்திருக்கும் சங்கீதக்காரரின் 104 ஆம் சங்கீதம். இன்னும் எத்தனை எத்தனையோ அருமையான வேத பகுதிகளை எல்லாம் நாம் மனப்பாடம் செய்து அவைகளை நாம் நமது இராக்கால இளைப்பாறுதல்களில் நமது நினைவுக்கு கொண்டு வருவோமானால் நிச்சயமாக பேரின்பம் காண்போம். அதற்கான கிருபைகளை தேவன்தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக.

காலத்தின் இந்தக் கடைசி நாட்களில் தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தின் Internet மூலமாக வெகு திரள் திரளான தேவனுடைய செய்திகளும், உலகச் செய்திகளும் சமுத்திரத்தில் கடல் அலைகள் அடுத்தடுத்து மலைபோல புரண்டு வருவது போல வந்தவண்ணமாக இருக்கின்றன. இணையதளத்தில் முகநூல் FACE BOOK என்ற அமைப்பு கரை காணா சமுத்திரமாக உள்ளது. அவைகளை நாம் வாசிக்கவும், அறிந்து கொள்ளவும் நமது சிறிய வாழ்நாட்காலம் போதாது. இப்படிப்பட்ட அமைப்புகள் வெளியிடும் செய்திகளையும், குறும் படங்களையும் Videos இரவும் பகலும் மாந்தர் பார்த்து பார்த்தே தங்கள் பொன்னான காலங்களை விரயமாக்கிக் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகளும், கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டியவைகளும் இவைகளில் எவ்வளவோ இருந்தபோதினும் ஒரு மனிதனை பாவப்படுகுழிக்குள் வீழ்த்தி அழிக்கும் கொடிய கண்ணிகளையும் நமது ஆத்தும அழிம்பன் பிசாசானவன் இந்த வலைத்தளங்களுக்குள் மனம்போல அள்ளி வீசியிருக்கின்றான் என்பதை நாம் மறக்கலாகாது. அது உங்களுக்குத் தெரியாததல்ல. 

தேவன் நமக்கு ஈவாக கொடுத்த நமது சிறிய ஆயுட்காலத்தை அவரோடு சஞ்சரிப்பதிலும், அவருடைய மாட்சிமையான வேதாகமத்தை வாசித்து தியானிப்பதிலும், அவைகளை மனப்பாடம் செய்வதிலும் மிகுந்த விழிப்போடு செலவிடுவோம். "தேவனோடு செலவிட்ட நேரமே, சிறப்பாக செலவிடப்பட்ட நேரம்" Time spent with God, time well spent என்று ஒரு தேவ பக்தன் கூறினார். எத்தனை உண்மையும், சத்தியமான வார்த்தைகள்!
மற்ற உலக மக்களைப்போல உலக மாயைகளுக்கு நமது வாழ்நாட் காலத்தை கையளித்து பகல் முழுவதும் தொலைக்காட்சிகள், செய்தி தாட்கள் வாசித்து முடித்து, இனஜனத்தார், நண்பர்கள், அண்டை அயலகத்தாருடன் உலகக் கதைகள் பேசி இறுதியில் நஷ்டப் பட்டவர்களாக நமது மாட்சிமையான வாழ்நாட்காலத்தை ஓடி முடிக்காமல் இந்த கிருபையின் நாட்களில் நமது இரட்சண்ய கன்மலையை அண்டிக்கொள்வோம். நமது ஆத்தும நேசருக்கும் நமக்கும் உள்ள நமது பரலோக உறவை துண்டிக்கும் எந்த ஒரு உலக மாயாபுரி சந்தை சரக்கையும் சாமுவேல் தீர்க்கன் ஆகாகை கில்காலிலே தேவனுக்கு முன்பாக துண்டித்துப்போட்டது (1 சாமு 15:33) போல நாமும் துண்டித்துப் போடுவோம். அதற்கான தேவகிருபைகளை தேவன் தாமே நமக்குத் தந்தருள்வாராக. ஆமென்.

நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன் - ஓசியா 4:6


======================
நீர் என்னைக் காண்கின்றீர்
(ஏரே 12:3)
======================
ஒரு முகமதிய தளகர்த்தர் ஒரு சமயம் அரபி தேசத்து பாலைவனத்தின் வழியாக சென்று கொண்டிருந்த போது ஒரு வாலிபன் ஒரு பெரிய ஆட்டு மந்தை ஆடுகளை மேய்த்து கொண்டிருப்பதைக் கவனித்தார். அவர் அந்த வாலிபனண்டை சென்று "தம்பி உனது ஆடுகளில் ஒன்று எனக்கு வேண்டும். நான் அதற்கான விலைக்கிரயத்தை உனக்கு தந்திடுவேன்" என்று கூறினார். அதற்கு அந்த வாலிபன் "ஜயா நான் இந்த ஆடுகளுக்கு சொந்தகாரன் அல்லன். நான் கூலிக்காக ஆடுகளை மேய்ப்பன். எனது எஜமானியின் அனுமதியின்றி இந்த ஆடுகளில் எதனையும் நான் தர இயலாது" என்று பணிவோடும் சாந்தத்தோடும் கூறினான்.

 அந்த ஆட்டிடையனின் உண்மையை சோதிப்பதற்காக அந்த தளகர்த்தர் "தம்பி உனது எஜமானர் இங்கே இந்த வனாந்தரத்தில் இப்பொழுது இல்லை. அவர் எங்கேயோ கண் காணாத தொலை தூரத்தில் இருக்கின்றார். நீ எனக்கு ஒரு கொழுமையான ஆட்டை அதற்கான விலை விலைக்கிரயத்துக்கு தா. உனது எஜமானர் அந்த ஆட்டைக் குறித்துக் கேட்டால் அதை ஒரு ஓநாய் வந்து பட்சித்து போட்டது என்று பொய்யை சொல்லி விடு என்றார். இந்த வார்த்தையை கேட்டதும் அந்த ஆட்டிடையன் சற்று நேரம் மெளனம் ஆனான். சற்று நேர அமைதிக்குப் பின்னர் அவன் தனது வாயை திறந்து "நல்லது ஐயா, உங்கள் வார்த்தைகளின்படி நான் எனது எஜமானரை எளிதாக ஏமாற்றிவிடலாம். ஆனால் நான் வழிபடும் எனது அல்லாவை (கடவுளை) நீங்கள் சொன்ன வார்த்தைகளால் ஏமாற்ற முடியாதே, அவருடைய கண்கள் என்னை பார்த்து கொண்டிருக்கின்றனவே" என்று சொன்னான். அந்த உண்மையுள்ள ஆட்டிடையனின் வார்த்தைகளை கேட்டு மனமகிழ்ந்த அந்த தளபதி அவனுக்கு தக்க சன்மானம் கொடுத்து விட்டு சென்றான்.

ஒரு படிப்பறிவற்ற ஆட்டிடையனின் உண்மையை வார்த்தைகளை
 கவனித்தீர்களா ? இந்த எளிய ஞானம் இன்று கிறிஸ்தவர்களிடம் சுத்தமாக காணப்படவில்லை.

தேவ ஜனமே விழிப்பாகி ஞானமடைந்து கொள். உனது ஆண்டவருடைய கண்களுக்கு மறைவாக நீ எதையும் செய்ய இயலாது, அவர் உன்னை எப்பொழுதும் சூழ்ந்து இருக்கிறார் (சங் 139:3) அவருடைய பரிசுத்தமான கண்கள் பூமியெங்கும் உலாவி கொண்டே இருக்கின்றது (2 நாளா 16:9)

அன்று ஆகார் சொன்ன "நீர் என்னை காண்கின்ற தேவன்" (ஆதி 16:13) என்ற வார்த்தையை தேவ பிள்ளைகள் ஒரு போதும் மறக்க கூடாது.


=======================
புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்
=======================
தினமும் அதிகாலை எழுந்து ஓரிரு மணி நேர தனி ஜெபத்துடன் உங்களின் அன்றாட பணிகளை ஆரம்பியுங்கள். அந்த நாளில் உங்களை சந்திக்ககூடிய பாவச் சோதனைகளையும், நீங்கள் எதிர் கொள்ளக்கூடிய காரியங்களையும், பணிகளையும் ஆண்டவரிடம் மனம் திறந்து சொல்லுங்கள். இதில் விசுவாச வீரர் யெப்தா நமக்கு சிறந்த முன்மாதிரி "யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் சொன்னான்" (நியா 11:11) என்று பார்க்கின்றோம்.

ஒரு மனிதனை ஆண்டவரின் இருதயத்திற்கு உகந்தவானாக்கிய கூடிய மாபெரும் வலிமை ஜெபத்திற்குண்டு. அதிகமாக ஜெபிக்கும் ஒரு ஆத்துமா அத்தனை எளிதில் பாவத்தில் ஒருக்காலும் விழவே விழாது. அந்த ஆத்துமா எந்த சிக்கலான சூழ்நிலைகளின் மத்தியிலும் ஆண்டவர் இயேசுவுக்குள் மிகுந்த சமாதானத்துடன் கடந்து செல்லும்.

உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உடன் வேலை செய்பவர்கள், வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள், சபையில் உள்ளவர்கள் பெயரை சொல்லி ஜெபியுங்கள். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்
(யோபு 42:10). 

உங்களால் கூடுமானால் ஒரு நாட் குறிப்பு புத்தகத்தை கையாளுங்கள். அதில் ஒவ்வொரு நாளும் நீங்கள் அதிகாலை எழும்பி ஆண்டவருடன் தனித்து உறவாடி மகிழ்ந்த மணி நேரங்களையும், ஆண்டவர் உங்களுடன் விசேஷமாக இடைப்பட்ட தேவ வசனங்களையும், நீங்கள் உபவாசித்த நாட்களையும் கருத்தாய் அதில் குறித்து வாருங்கள். உங்கள் வாழ்வின் தேவைகளை அதில் ஜெபமாக எழுதி அதற்கான விடை கிடைத்த நாளையும் அதற்கு கீழே குறிப்பிடுங்கள். மாத்திரமல்ல நீங்கள் சந்தித்து இயேசுவை பற்றிக் கூறின ஆத்துமாக்களின் பெயர்களையும் அதில் பதிவு பண்ணுங்கள். அவர்களின் மீட்புக்காக ஜெபிக்க அது அனுகூலமாயிருக்கும். நாளுக்கு நாள் ஆவிக்குள் வளர இவ்வித ஏதுக்கள் மிகவும் உதவியாயிருக்கும்.

தேவ பிள்ளைகள் அனுதினமும் கர்த்தரை நன்கு ஸ்தோத்தரியுங்கள். துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.சங் 147:1.

இந்த புதிய ஆண்டில் அநேக நாட்களை உபவாசத்தில் செலவிடுங்கள். உபவாசம் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வின் கண்களில் ஒன்றாகும். அந்த கண் இருளடைந்து விடாதபடி பாதுகாத்து கொள்ளுங்கள்.

ஆண்டவரின் வேதம் உங்களின் மனமகிழ்ச்சியாயிருக்கட்டும். வேத வசனங்களை இருதயத்தில் அதிகமாக சேர்த்து வையுங்கள். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். (சங் 119:11). வேததிலுள்ள வாக்குத்தத்தங்களை எல்லாம் உங்களின் சொந்தமாக்குங்கள்.

தினமும் குறைந்தது 2 பாடல் சத்தமாக பாடுங்கள். குடும்ப ஜெபங்களில் கண்டிப்பாக பாடல் இடம் பெற வேண்டும். உங்கள் பிள்ளைகளை பாடல் பாட உற்சாகபடுத்துங்கள். உங்கள் இருதயத்தில் தேவனை எப்பொழுதும் பாடிக் கொண்டே இருங்கள் (கொலோ 3:16) நீதிமானோ பாடி மகிழுகிறான் (நீதி 29:6)

நல்ல ஆவிக்குரிய சபைக்கு செல்லுங்கள். நல்ல சபை = சத்தியத்தை சத்தியமாக போதிக்கிற சபை. நாம் நமது பிள்ளைகளை எது நல்ல பள்ளி என்று பார்த்து சேர்ப்போம் (எங்கு coaching நன்றாக உள்ளது). பிள்ளைகள் படிக்கிற பள்ளியில் கற்றுக் கொடுப்பது சரியில்லை என்றால் உடனே பள்ளியை மாற்றுவோம். அது போல எந்த சபையில் சத்தியத்தை சத்தியமாக போதிக்கிறார்கள் என்று பார்த்து அந்த சபைக்கு செல்ல வேண்டும்.அப்போதுதான் ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் வளர முடியும். நாம் வளரும்படி சபையில் வைத்தார். வளராவிட்டால் நஷ்டப்படுவோம். வருஷத்தை கடந்து போகிறோம், வளர்ந்து இருக்கிறோமா ? சபை பரிசுத்தவான்கள் சீர் பொருந்தும் இடம் சபை (எபேசு 4:12) சீர் பொருந்துதல் = பரிசுத்தம் அடைதல். இன்றைக்கு அநேக சபைகளில் வருடத்தின் 365 நாட்களும் ஆசிர்வாத பிரசங்கம்தான். ஊழியர்களே உங்கள் சபை மக்களை வருகைக்கு ஆயத்தபடுத்துங்கள். உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு (ஆமோஸ் 4:12)

நமக்கு முன்பாக உள்ள இன்றைய மக்கட் சமுதாயத்திற்கு தேவையானதெல்லாம் நம்முடைய பரிசுத்தமான வாழ்க்கை மாத்திரமே என்பதை மறந்து விட வேண்டாம். நம்முடைய வாயின் வார்த்தைகளக் கொண்டல்ல, நம்முடைய பரிசுத்தமும், பழுதற்றுதுமான வாழ்க்கையைக் கொண்டே மக்கள் நம்மை கணக்கிடுகின்றனர். கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளில் அவருடைய ஆலய ஆராதனையில் ஆவியில் நிறைந்து அனல் பறக்க பாடல்களை பாடி, அன்னிய பாஷைகளில் பேசி மகிழ்ந்து, தீர்க்க தரிசனங்களை அள்ளி வழங்கி விட்டு வாரத்தின் மற்ற ஆறு நாட்களிலும் நம்மை சுற்றியுள்ள உலக மக்களைப் போல சூதும், வாதும், கபடமும் நிறைந்தவர்களாய் பேசி சிரித்து மாய்மாலம் பண்ணி நமது நாட்களை நாம் செலவிட்டால் அதின் பயன் ஒன்றுமில்லை. "உன் வாய் பேசும் வாயின் வார்த்தைகளை விட, உன் வாழ்க்கை அதிகமாக பேசுகின்றது (You talk more with your life than with your lips) என்ற ஒரு பழமொழி உண்டு.

நம்முடைய தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை பரிசுத்தமுடையதாயிருக்கட்டும். நம்முடைய பரிசுத்தமுள்ள வாழ்க்கை மாத்திரமே அநேகருக்கு ஆசிர்வாதத்தை கொண்டு வரும்.


======================
ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்
ரோ 15:7
=======================
கிறிஸ்து நம்மை ஏற்று கொண்டது போல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்று கொள்ளுங்கள்.

அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்தி விருத்தியை உண்டாக்கும் 1கொரி1:8

இறுமாப்பு பிரிவினையை உண்டாக்கும்,
பிசாசு மனிதர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கிறான். தேவ அன்போ மனிதர்களை இணைத்து பிணைத்து விடுகிறது

எந்த விதத்திலும் தகுதியில்லாத நம்மை அவரோடு இருக்கும்படி இயேசு நம்மை ஏற்றுக் கொண்டார். அதே போல் நாமும் பிறரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு அநேகர் நான் எதையும் மன்னிப்பேன் ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மன்னிக்கவே மாட்டேன் என்று வீர வசனம் பேசுகிறார்கள்.

மனித உறவுகள் சரியில்லாத நேரங்களில் நாம் பிசாசுக்கு இடம் கொடுக்கிறோம்.பதிலாக அவன் நமக்கு சகல தீமைகளையும் கொடுக்கிறான் .

நாம் பிறரை மன்னிக்காவிட்டால் அந்த பாவம் என்னும் பாம்பு வாசலில் படுத்துக்கிடக்கும்.

மன்னிக்கும் போதெல்லாலாம் சாத்தானை நம் கால்களால் மிதிக்கிறோம்.

 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். (ரோ 16:20)

பகை விரோதங்களை எழுப்பும். அன்போ சகல பாவங்களை மூடும் (நீதி 10:12)

உன் சகோதரனோடே ஒப்பரவாகி வந்து காணிக்கை செலுத்து (மத் 5:24)

நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
 மாற் 11 :25

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான் 4:20

மேற்கண்ட வசனங்கள் எல்லாம் நமக்கு நன்கு தெரியும். அனேக முறை படித்திருக்கிறோம், பிரசங்கம் கூட செய்வோம்,
ஆனால் நமது ஜீவயத்தில் கடைபிடிக்கிறோமா என்பது மிக மிக முக்கியம்.

குறைகளை பேசிக் கொண்டு திரியாதபடி தேவ அன்பினால் நிறைந்து பிறர் குற்றங்களை மன்னிப்போம்.

மற்றவர்களை ஏற்றுக்கொள்ளவும் , மன்னிக்கவும் தேவ கிருபை நமக்கு அவசியம். அப்படிப்பட்ட கிருபைகளை தேவன் வருகிற புதிய ஆண்டில் உங்களுக்கும் எனக்கும் தருவாராக

இயேசு சிலுவையில் கூட மற்றவர்களை மன்னித்தார். "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்றார். 

உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தபடு (ஆமோஸ் 4:12)


========================
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்
புலம்பல் 3:40
=========================

வருடத்தின் கடைசி நாட்களில் வந்து இருக்கிற நாம் நமது ஆவிக்குரிய வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம். 

1) இந்த வருடம் முழுவதும் ஒழுங்காக வேதம் வாசித்தீர்களா ? வேலைக்கு செல்கிறவர்கள்/படிக்கிறவர்கள் தினசரி 5 அதிகாரம் குறைந்தது வாசிக்க வேண்டும். மற்றவர்கள் அதிகம் வாசிக்க வேண்டும். இரவும் பகலும் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1:2)

2) தினசரி 1 மணி நேரம் ஜெபித்தீர்களா ? ஜெப ஜீவியம் இந்த வருடத்தில் எவ்வாறு இருந்தது ? Facebook, whatsapp பார்க்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறிர்கள். ஆனால் ஜெபிக்க நேரமில்லை. ஆகையால் இனிச் சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் 
(லூக்கா 21:36)

3) கர்த்தரை ஒழுங்காக துதித்தீர்களா ? கர்த்தரை துதிப்பதில் குறைவு படக்கூடாது. சோர்ந்து போக கூடாது. துதிக்கிற மனுஷன், குடும்பம் வளரும் (யாத் 12:24-27,31)

4) எல்லா Sundays ஒழுங்காக ஆராதனைக்கு சென்றீர்களா ? உடல் நலமில்லாமல் படுக்கையில் இருந்தால் பரவாயில்லை. மற்றபடி எக்காரணத்தை கொண்டும் சபைகூடி வருவதை விட்டு விடக்கூடாது (எபி 10:25)

5) கர்த்தருக்கு தசமபாகம்/காணிக்கை ஒழுங்காக கொடுத்தீர்களா ? கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் (லூக் 6:38) 

6) மற்ற எல்லாரை (கணவன்/மனைவி/பிள்ளைகள்) காட்டிலும் இயேசுவை அதிகம் நேசித்திர்களா ? 
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல - (மத்தேயு 10:37)

7) உங்கள் வேலை/தொழில் எல்லாவற்றிலும் உண்மை காணபட்டதா ? பேச்சிலும் கூட உண்மை காணப்பட வேண்டும். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதங்களை பெறுவான் (நீதி 28:20)

8) உங்கள் ஜீவயத்தில் கனி காணப்பட்டதா ? கனி = நல்ல சுபாவங்கள். நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்னியிலே போடப்படும் (மத் 7-19) லூக் 13:6-9 ல் 3 வருடம் கனி கொடுக்கவில்லை என்று வாசிக்கிறோம்

9) யார் மேலும் கசப்பு காணப்பட கூடாது. மற்றவர்கள் குற்றத்தை மன்னித்து அதை மறக்க வேண்டும். கர்த்தருடைய பிள்ளையே, தேவனுடைய வசனத்தின்படி (எபேசி 4-31) நமது வாழ்வில் எவரைக் குறித்தும் எந்த ஒரு மனக்கசப்பும் நமக்கு இருக்க கூடாது. அந்த மக்கள் நமக்கு எப்படிபட்ட துரோகம் செய்து நமது குடும்பத்தை பாழாக்கியிருந்த போதிலும், அதை நாம் மனதில் கொள்ளாமல் தேவனுடைய ஜீவனுள்ள வசனத்துக்கு கீழ்படிந்து, அவர்களை மன்னித்து அவர்களோடு நல்மனம் பொருந்தி கொள்ள வேண்டும்.

10) 2021 விட 2022 ல் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து காணப்படுகிறிர்களா ? பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளி 22-11 )

11) 2022 ல் எத்தனை ஆத்துமாக்கள் ஆதாயம் செய்தீர்கள் ? எத்தனை பேருக்கு சுவிஷேம் கூறினிர்கள் ?

ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன் (வெளி 2:5)


==========================
அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து புஷ்டியும் பசுமையுமாய் இருப்பார்கள்
சங் 92:15
===========================
ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத முதிர்வயதான மக்களின் நிலை மிகவும் துயரமான தாகும். அதிலும் கணவனோ அல்லது மனைவியோ மரித்து அவர்கள் தனிமையாகிவிட்டால் அவர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும். சில மணி நேரம் செய்தி நாட்களை வாசிப்பார்கள். பின்னர் அப்படியே பார்பர் ஷாப்பிற்கு சென்று பார்பரிடம் ஓரிரு மணி நேரங்களை செலவிட்டு, லாண்டரி கடைக்கு சென்று அங்கு நேரம் செலவிடுவார்கள். பின்னர் தங்கள் விருத்தாப்பிய (வயதான) நண்பர்கள் சிலரை சேர்த்து கொண்டு பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையம் போய் அங்கு அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள். பின்னர் கண்கள் எரிக்கும் வரை இரவில் டி.வி பார்த்து விட்டு இரவின் பிந்திய நேரம் படுக்கைக்கு செல்வார்கள். அவர்கள் நித்திரையும் இன்பமாக இருக்காது. கெட்ட சொப்பனங்களை கண்டு அலறுவார்கள். தங்களுடைய ஒவ்வொரு நாளையும் எப்படி முடித்துக்கட்டலாம் என்று அவர்கள் வகை தேடி சுற்றி அலைவார்கள். அவர்களிடம் பேச்சிலே விழுந்தவர்கள் கரை ஏற வெகுபாடுபடுவார்கள். "மாதம்தோறும் நான் உனக்கு பணம் தருகிறேன் நீ தினமும் என்னன்டை வந்து ஒரு மணி நேரம் என்னுடன் பேசிவிட்டு செல் என்று ஒரு விருத்தாப்பிய மனிதர் தனக்கு இனத்தவரான ஒரு சகோதரனை அழைத்ததாக நான் கேள்விப்பட்டேன்". விருத்தாப்பியத்தில் நம்மிடம் பேசக்கூட ஆட்கள் வரமாட்டார்கள். தேவனற்ற விருத்தாப்பியர்களின் நிலை கொடுமையாகும்.

ஆனால் ஆண்டவரை தங்கள் வாழ்வின் நாயகனாக ஏற்றுக் கொண்ட தேவப்பிள்ளைகளின் விருத்தாப்பியம் மிகுந்த ஆசிர்வாதமாகும். தங்களது பரம அழைப்பு எப்பொழுது வரும் என்று ஆசை ஆவலோடு தினமும் காத்திருப்பார்கள். அவரை (இயேசுவை) முகமுகமாக தரிசிக்க போவதை நினைத்து உள்ளம் பூரிப்பார்கள். தங்களது நேரத்தின் ஒரு வினாடியைக்கூட அவர்கள் தேவையற்ற விதத்தில் செலவிடமாட்டார்கள். தங்களது விலையேறப் பெற்ற காலத்தை பாழ்க்கடிக்கப்பண்ணக்கூடிய மக்களை கண்டால் விலகியோடுவார்கள். அவர்கள் வீண் வார்த்தைகள் பேசி தங்கள் காலத்தை விணாக்கமாட்டார்கள். டி.வி பெட்டிக்கு முன்பாக நீங்கள் அவர்களை காண இயலாது. ரயில், பேருந்து நிலையங்களில் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வீண் வார்த்தைகள் பேசி கொண்டு இருக்க மாட்டார்கள். ஆண்டவர் இயேசுவுக்கடுத்த ஊழிய காரியங்களிலும், ஜெப தியானங்களிலும், கர்த்தரை பாடி துதிப்பதிலுமே நீங்கள் அவர்களை காண இயலும்.

எனக்கு ஒரு வயதான ஜயாவை தெரியும். அவர்கள் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்கள். அவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்ட போது "சகோதரனே எனது மனைவியின் மரணத்திற்கு பின்னர் எனது பிள்ளைகள் தங்களோடு வந்து இருக்கும்படியாக என்னை நிர்ப்பந்தம் செய்கின்றனர். எனக்கோ பிள்ளைகள் இடம் போய் இருக்க மனதில்லை, காரணம் பிள்ளைகள் இடம் போனால் ஆண்டவர் இயேசுவோடு வாழக்கூடிய தனிமை எனக்கு கிடைக்காது. பேரப்பிள்ளைகளின் அன்பு தொல்லைகளால் எனது இரட்சகரின் சமுக பிரசன்னத்தை நான் இழந்து போவேன். ஆகவே வீட்டோடு இருந்து என் பரம தகப்பனோடு உறவாடி மகிழ்ந்து வருகின்றேன் என்றார்." ஆ எவ்வளவு மேன்மையான ஜிவியம்.

உலகத்தாரால் உக்கிரபகையாக வெறுத்து தள்ளும் கொடிய விருத்தாப்பியத்தை (Senior citizion) மிகுந்த களிகூருதலோடு சந்திக்க இரட்சகர் இயேசுவை இன்றே அண்டிக்கொள்ளுங்கள் (சங் 2:12, 73:28).

எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை - பிரசங்கி 12:1-7


====================
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
(எபி 10:38)
=====================
கிறிஸ்தவ ஜீவியத்தின் இரகசியம் விசுவாசத்தில்தான் உள்ளது. விசுவாசம் என்பது எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவை சார்ந்து ஜீவிப்பது. விசுவாசத்தை பற்றி தேவன் அடிக்கடி தன்னை பின்பற்றி வந்த மக்களுக்கு கூறினார். சிஷர்களிடம் விசுவாசம் காணப்பட்டது. ஆனால் பல வேளைகளில் அது தடுமாற்றம் அடைந்தது. தேவனையும் அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும். விசுவாசம் இல்லை என்றால் சந்தோஷம் இல்லை. விசுவாசம் இல்லாமல் தேவனிடம் இருந்து ஒன்றையும் பெற முடியாது (எபி 11:6)  விசுவாசம் குறையத் தொடங்கும் போது பின்மாற்றம் ஏற்படும்.

கவலை, போராட்டங்களில் நமது விசுவாசத்தை காண்பிக்க வேண்டும். கடல் கொந்தளித்த போது இயேசு சிஷர்களை பார்த்து கேட்ட கேள்வி "ஏன் பயப்பட்டிர்கள், ஏன் விசுவாசம் இல்லாமல் போயிற்று" (மாற் 4:40)

எல்லாம் இழந்தாலும், போராட்டம், உபத்திரவம் வந்தாலும் விசுவாசத்தை விடக்கூடாது. நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக் குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மை பாராட்டுகிறோம் (2 தெச 1:4)

விசுவாசம் நமக்கு கேடகம் (எபேசி 6:16) பிசாசு நம்மேல் எய்கிற கவலை, சோர்வு, சந்தேகம், பயத்தை விசுவாசமாகிய கேடகத்தால் தடுக்க வேண்டும். விசுவாசத்தை கெடுப்பது பிசாசின் வேலை. நெருக்கங்கள், போராட்டங்கள், பாடுகளில் விசுவாசம் நஷ்டபடக்கூடாது. நமது பெயர் விசுவாசி. ஆபிரகாம் விசுவாசிகள் தகப்பன். ஆபிரகாம் விசுவாசத்தில் பலவினமாக இருக்கவில்லை (ரோ 4:19) விசுவாசத்தில் வல்லவன் ஆனான் (ரோ 4:21)

விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் (கொலோ 2:7). விசுவாசம் நமக்கு பெலன் (எபி 11:11) அற்பவிசுவாசியே (மத் 14:31) என்று பேதுருவை இயேசுவை கடிந்து கொண்டார். விசுவாசம் நாளுக்கு நாள் நம்மில் பெருக வேண்டும் (2 தெச 1-3) நமது பிள்ளைகளுக்கு விசுவாசத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். குடும்பமாக விசுவாசத்தில் வளர வேண்டும். தானியேல் இடம் காணப்பட்ட விசுவாசம் அவனை சிங்கங்கள் வாயில் இருந்து காப்பாற்றியது (தானி 6:23)

நமது விசுவாசத்தை வாயினால் அறிக்கை செய்ய வேண்டும். ஆபிரகாம்→கர்த்தர் பார்த்து கொள்வார் (ஆதி 22:8)
சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ →நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். (தானி 3:17)

உலக வேலையால், வருமானத்தால் நாம் பிழைக்கவில்லை. விசுவாசத்தால் நாம் பிழைக்க வேண்டும். வசனத்தை விசுவாசித்து குடும்பத்தை நடத்த வேண்டும்.

கஷ்டங்கள், பாடுகளில் உனது விசுவாசம் எவ்வாறு காணப்படுகிறது. உண்மையான விசுவாசி எல்லா சூழ்நிலைகளிலும் சந்தோஷமாக இருப்பான் (ஆபகூக் 3:17,18) விசுவாசி பதறான் (ஏசா 28:16) விசுவாசம் இருந்தால் தைரியம் இருக்கும் -
(2 பேது 1:5) விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற் 9:23) நமது விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் - (1 யோ 5:4) விசுவாசத்தில் நிலைத்திருங்கள் (1 கொரி 16:13)

நமது விசுவாசத்திற்கு சோதனை உண்டு (1 பேது 1:7) கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறது போலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்
கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன் 
(லூக்கா 22:31,32). யோபு "அவர் என்னை சோதித்த பின் பொன்னாக விளங்குவேன் (யோபு 23:10) பேதுருவை போன்ற விசுவாசம் எனக்கு வேண்டாம் யோபுவை போன்ற விசுவாசத்தை எனக்கு தாரும் என்று ஜெபி.

விசுவாசம் பொன்னை பார்க்கிலும் விலையேறப் பெற்றது  (1 பேது 1:7) உலக மனிதன் 10 பவுன் நகை  இருந்தால் கஷ்டம், துன்பம் வரும் போது அதை எடுத்து பயன்படுத்துகிறான்.   ஆவிக்குரிய வாழ்கையில் வரக்கூடிய உபத்திரம், பாடுகள் போன்ற நேரத்தில் பொன்னிலும் விலையேற பெற்ற விசுவாசத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

உலக காரியங்களுக்காக தேவனை விசுவாசிப்பதிலும் இயேசுவோடு நித்திய காலமாக வாழ போகிறேன் என்று மேலான காரியங்களுக்காக விசுவாசிப்பது மேன்மையானது.

இதை வாசிக்கும் தேவ ஜனமே விசுவாசத்திற்காக தைரியமாக போராடு (யுதா:3). அதுமட்டுமல்ல விசுவாசத்தோடு மரித்தார்கள் என்று (எபி 11:13) ல் வாசிக்கிறோம். நீயும் விசுவாசத்தோடு மரிக்க ஆயத்தமா ?


========================
உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம் பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர்
உபா 20:4
==========================
கர்த்தருடைய ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் கானான் தேசம் முழுமையையும் அவர்கள் சுதந்திரத்த நாள் வரையும் சிறிதும் பெரிதுமான பல யுத்தங்களை அவர்கள் செய்ய வேண்டியதாக இருந்தது. அந்த அனைத்து யுத்தங்களையும் தேவனே முன் நின்று நடத்தி வைத்ததாக வேதாகமம் நமக்கு சொல்லுகின்றது.

அன்று மாம்சபிரகாரமான இஸ்ரவேலருக்கு தேவன் எவ்வளவாக ஆதரவாக இருந்து அவர்களுக்காக யுத்தம் செய்து அவர்களை சத்துருக்களின் கரங்களிலிருந்து மீட்டு இரட்சித்தாரோ அதே வண்ணமாக ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கு எதிராக மனுஷ கொலைபாதகன் ஏறெடுக்கும் எல்லா யுத்தங்களையும் தேவனே நடத்தி செல்கின்றார். மாம்சபிரகாரமான இஸ்ரவேலருடைய போரைக் காட்டிலும் நமது போர் மிகவும் கடுமையானது. அதைதான் எபேசியர் 6:12 ல் "அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டமுண்டு". "வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள்" என்ற வார்த்தையை நன்றாக கவனியுங்கள்.

நாம் ஆண்டவர் இயேசுவை நமது சொந்த இரட்சகராக ஏற்று நமது பாவரோகங்கள் அவரது இரத்தத்தால் கழுவப்பட்டது முதல் பூவுலக கிறிஸ்தவ யாத்திரை முடிவு பெறும் நாள் மட்டாக நமக்கும் நமது ஆத்தும பகைஞன் சாத்தானுக்கும் இடைப்பட்ட தொடர்ச்சியான போரை நடத்தி நம்மை ஜெயகம்பிரமாக தேவனுடைய சந்நிதானத்துக்குள் நம்மை பிரவேசிக்க பண்ணுகிறவர் அவர் ஒருவர்தான். "வழுவாதபடி உங்களை காக்கவும் மகிமையுள்ள சந்நிதானத்தில் நிறுத்தவும் வல்லமையுள்ளவர் என்று யுதா:24 ல் பார்க்கிறோம்.

கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார் என்று சொல்லி கொண்டு சும்மா இருந்துவிட இயலாது. ஜெபித்து விட்டேன், எனவே நான் தேர்வுக்கு இனி படித்து ஆயத்தப்பட அவசியமில்லை, தேவன் எனக்கு நல்ல மதிப்பெண்களை தருவார் என்று ஒரு மாணவன் நினைப்பானானால் அவனது ஆசை கல்லின் மேல் இட்ட கலமாக நொறுங்கி போய்விடும். தேர்வுக்கு தன்னாலியன்ற அளவு ஆயத்தம் செய்யும் அதே நேரத்தில் கர்த்தரது உதவியையும் ஒத்தாசையையும் அவன் கருத்தோடு தேட வேண்டும். நாமும் நமக்கான பங்கை செய்து நமக்கான போரில் தேவன் வெற்றி பெற பாடுபட வேண்டும். "நீங்கள் சோதனைக்குட்படாதபடி படிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்" என்று கெத்செமனேயில் தமது அன்பான சீடர்களிடம் இரட்சகர் கூறுகின்றார். அந்த வார்த்தைகளுக்கு கீழ்படியாத பேதுரு அதின் காரணமாக தன் அன்பின் இரட்சாபெருமானை மறுதலிக்கவும், சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கினான். "நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று கூறிய அதே பேதுரு, மருரூப மலையில் தன் இரட்சகரின் மகிமையை தனது கண்குளிர கண்டானந்தித்த அதே பேதுரு, தனது அன்பின் தேவனை மண்ணான மாந்தனின் நிலைக்கு தாழ்த்தி "அந்த மனுஷனை அறியேன்" (மத் 26:74) என்று சொல்லும்படியான நிலைக்கு வழிவகுத்து கொடுத்தது. விழித்திருந்து ஜெபித்திருந்தால் பேதுருவுக்கு இப்படியானதொரு வீழ்ச்சி கிடைத்திருக்காது.

அதிகமான தனி ஜெபம், கர்த்தரை இடைவிடாது ஆராதித்தல், ஒழுங்கான உபவாச ஜெபம், தேவனுடைய வசனங்களை கருத்தோடு வாசித்து தியானித்தல், சுயத்துக்கு முற்றுமாக மரித்தல், மிகுந்த மனத்தாழ்மை, பரிசுத்தமான ஜீவியம் போன்றவை எல்லாம் நம்மை திட்டமாக பரலோகத்தின் பாதையில் வழி நடத்திச் செல்லும். அத்துடன் தேவனும் நமக்கு அனுகூலமான துணையாக இருந்து நம்மை தமது பரிசுத்த பாதையில் வழி நடத்துவார். 

நமது ஆத்தும அழிம்பனாகிய சாத்தான் நமது அருமையான ஆத்துமாவை வேட்டையாடி அதை நித்திய நரகத்திலே தள்ளுவதற்காக இரவும் பகலும் போராடி கொண்டே இருக்கின்றான். ஆனால் நமது அன்பின் தேவன் தமது வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடக்கும் அருமை மக்களாகிய நம்மை அவனது வல்லடிக்கு மீட்டு காப்பார். அவர் நம்மை மரணபரியந்தம் பாதுகாப்பாக நடத்துவார் (சங் 48:14).





======================
அந்த ஆடல் பாடல் ஊடாக வந்த அழிவு
======================
1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் நாள் பூனே பட்டணத்தில் உள்ள சிவாஜி நகரில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் 2 பஸ்களில் ஏறி ராம்தாரா என்ற இடத்தில் உள்ள பிக்னிக் சென்டருக்கு சென்றனர்

ராம்தாராவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலண்டி புரசுங்கி ரயில் நிலையத்திற்கு இடையே வளைவு ரயில் பாதையில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில் பள்ளி குழந்தைகள் 2 பஸ்களில் வந்து கொண்டிருந்த பொழுது எப்படியோ தெய்வாதீனமாக ஒரு பஸ் ரயில் பாதையை துரிதமாய் கடந்து சென்று விட்டது. ஆனால் அடுத்த பஸ் மீது அப்பொழுது அங்கு வந்து கொண்டிருந்த பம்பாய் - சாயத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 37 பள்ளிக் குழந்தைகளும் 5 ஆசிரியைகளும் அதே இடத்தில் கோரமாக மாண்டு போனார்கள். ரயில்வே தண்டுவாளம் எங்கும் இரத்த வெள்ளமாக காணப்பட்டது. 7 வயது முதல் 8 வயதுக்கு உட்பட்ட அந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் உடல்கள் எங்கும் சிதறி கிடந்தன.

ரயில்வே பாதை வழியாக அருகிலேயே மோட்டார் ரஸ்தா சென்றபோதிலும் இந்த அழிவு எப்படி ஏற்பட்டது? அதற்கு ஒரே காரணம், பஸ்ஸில் வந்த அந்த பள்ளி குழந்தைகள் போட்ட பாட்டும், ஆனந்த ஆடல் பாடலும்தான். அந்த ஆடல் பாடல் சத்தத்தின் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் எழுப்பிய அபாய விசில் ஒலி எதுவும் பஸ் டிரைவருக்கு கேட்காமல் போய்விட்டது. ஆம் அந்த ஆடல் பாடலின் ஊடாக அழிவு வந்து கொண்டிருந்தது.

வாசிக்கும் ஆத்மாவே, தேவனை மறந்து உலக உல்லாசத்தில் நீ மூழ்கி திழைத்து இன்பம் கொண்டாடும் சமயத்தில்தானே அந்த அழிவு சடுதியாய் உன் மேல் வந்து சேரும். நோவாவின் நாட்களிலேயும் அதுதான் நடந்தது. ஏழை தேவ மனிதன் எச்சரிப்பின் குரல் ஒலி பலமாக எழுப்பின போதினும் புசித்து குடித்து, பெண் கொண்டு பெண் கொடுத்துக் கொண்டிருந்த அந்த முரட்டாட்டமுள்ள மாந்தரின் காதுகளில் விழவில்லை. இறுதியில் அந்த பொல்லாதோரை ஜலப்பிரளயம் வந்து வாரிக் கொண்டு சென்றது. தேவஜனமே இந்த கிருபையின் காலத்தில் மனந்திரும்பி இயேசுவை அண்டிக் கொள்.


==================
பூமியில் பரதேசிகள்
====================
"நான் பரதேசி" (ஆதி 47: 9) என்று நமது முற்பிதா யாக்கோபு பார்வோனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்திக் கூறுவதை நாம் காண்கின்றோம். "பூமியிலே நான் பரதேசி" (சங் 119 : 19) என்றார் தாவீது ராஜா. இந்த உலகத்தை அரசாண்ட ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகிய அந்த மா மன்னர் தன்னை பரதேசி என்று அடையாளம் கண்டு வைத்திருந்தார். "நான் உமக்கு முன்பான அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்" (சங் 39 : 12) என்று தனது தேவனுக்கு முன்பாக தன்னை அவர் வெறுமையாக்குவதை நாம் பார்க்கின்றோம். அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுரு தன்னுடைய நிருபத்தில் தேவ ஜனத்தை "தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகள்" (1 பேது 1 : 2) என்று குறிப்பிட்டு எழுதுவதை நாம் கவனிக்கின்றோம்.

மெய்யாகவே, மனந்திரும்பி இரட்சிக்கப்பட்ட மறுபடியும் பிறந்த ஒரு தேவ பிள்ளை தன்னை இந்த உலகத்தில் "அந்நியனும், பரதேசியுமாக" அடையாளம் காண்கின்றது. தாங்கள் இந்த உலகத்துக்குரியவர்கள் அல்ல என்பதை நிச்சயமாக கண்டு கொள்ளுகின்றது. "நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல" (யோ17:16) என்று அன்பின் ஆண்டவர் தமது அடியார்களைப் பார்த்துச் சொன்னார். "இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோ 14 : 30) என்று உலகத்துக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமுமில்லை என்பதை ஆண்டவர் திட்டமாகத் தெளிவுபடுத்துவதை நாம் பார்க்கின்றோம்.

நான்கு நாட்களுக்குப் பின்னர் உயிரோடு எழுப்பப்பட்ட லாசரு அதற்கப்பால் தனது உலக வாழ்வில் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிரிக்கவே இல்லை என்று வேத பண்டிதர்கள் கூறுகின்றனர். மோட்சானந்த பாக்கியங்களை தன் கண்களால் கண்டு அதை நான்கு நாட்கள் மனங்குளிர அனுபவித்துவிட்டு பூலோகத்திற்கு திரும்பியிருந்த அவர் இந்தப் பாழுலகில் சிரிப்பதற்கு ஒன்றுமேயில்லை என்பதை திட்டமாக அடையாளம் கண்டு கொண்டு விட்டார். நமது அருமை இரட்சகரும் தமது உலக வாழ்வில் அழுததை தவிர அவர் சிரித்ததை எவருமே கண்டதில்லை என்று வேத சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

இந்த உலகத்தின் மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் (சங் 119 : 37) என்று தாவீது ராஜா தனது ஆண்டவரை நோக்கிக் கெஞ்சுவதையும் "மாயையை எனக்குத் தூரப்படுத்தும்" (நீதி 30 : 8) என்று ஞானி சாலொமோன் கர்த்தரிடம் கேட்பதையும் நாம் வாசிக்கின்றோம். "உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை" (1 யோ 2 : 15) என்று அப்போஸ்தலனாகிய யோவான் தமது நிருபத்தில் எழுதுவதை நாம் பார்க்கின்றோம்.

"மோட்ச பிரயாணம்" புத்தகத்தில் கிறிஸ்தியானும், உண்மையும் மாயாபுரி சந்தை வழியாக உச்சிதப்பட்டணம் செல்லும்போது அந்த மாயாபுரிச் சந்தை சரக்குகள் எதையும் வாங்கவுமில்லை அதைக் கண்ணேறிட்டுக் கூட பார்க்கவுமில்லை என்று நாம் வாசிக்கின்றோம். மறுபடியும் பிறந்த ஒரு தேவ பிள்ளை இந்த உலக மாயாபரிச் சந்தை சரக்குகள் எதிலும் நாட்டம் செலுத்துவதில்லை. இந்த உலகத்தில் அவர்கள் வாழ்ந்தாலும் உலகத்தால் அவர்கள் தங்களை கறைப்படுத்திக் கொள்ளாமல் தண்ணீரில் கிடக்கும் அன்னப்பட்சி பகல் முழுவதும் தண்ணீரில் கிடந்தாலும் தான் பறந்து செல்ல வேண்டிய மாலைப் பொழுது வரும்போது தனது இறக்கைகளை ஓங்கி அடித்து தன் மேலுள்ள தண்ணீரை முற்றுமாக உதறிவிட்டு தண்ணீரின் அடிச்சுவடே தெரியாமல் வான வீதியில் பறந்து செல்லுவது போல மறுபடியும் பிறந்த மெய் தேவ மக்களும் உலக மாய்கையிலே காலமெல்லாம் வாழ்ந்தாலும் தங்களது பரம அழைப்பின் நேரம் வரும்போது உலகத்தின் எந்த ஒரு பற்று பாசம் இல்லாமல் பூரண பக்தர்களாக இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லுகின்றனர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.