Type Here to Get Search Results !

Thomas Bible Study Tamil | கஞ்சத்தனம் | இந்த ஜாதி பிசாசு | உபவாசம் | Jesus Sam

======================
பூலோகத்தில் உம்மை தவிர எனக்கு வேறே விருப்பமில்லை
(சங் 73:25)
=======================
ஒரு கிறிஸ்தவன் தனது விலை மதிப்பிட முடியாத நேரத்தையும், தேவன் தந்த கிருபையின் காலத்தையும் தொலைக்காட்சியை பார்ப்பதில் (கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையும் சேர்த்துத்தான் நான் இங்கு எழுதுகின்றேன்) செலவிடுகின்றான் என்றால் அவன் மறுபடியும் பிறக்கவில்லை என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டு கொள்ளலாம். எந்த ஒரு கிறிஸ்தவனுக்கு ஆண்டவருடைய பரிசுத்த பாதங்களில் அமர்ந்து அவருடைய குரல் கேட்க மனமில்லையோ, எந்த ஒரு கிறிஸ்தவனால் தன் அன்பின் ஆண்டவர் சமூகத்தை வாஞ்சித்துக் கதற முடியவில்லையோ அவன் மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவன் அல்லன். தங்களை ஆண்டவருடைய பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ளும் அநேகக் கிறிஸ்தவ மக்களுக்குக் கர்த்தருடைய பாதங்களில் சில நிமிடங்கள் கூட ஜெபத்தில் செலவிட முடிவதில்லை. சில மணி நேரங்களை தனி ஜெபத்தில் செலவிடுவது என்பது அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காரியமாகும். அதின் திட்டமான ஒரே காரணம் அந்த மக்களின் மறுபிறப்பு உண்மையானதல்ல, அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும் தங்கள் இருதயத்தில் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக கர்த்தர் அவர்கள் இருதயத்தில் பிரவேசித்து தமது ஆளுகையை இன்னும் அவர்கள் உள்ளத்தில் ஸ்தாபிக்கவில்லை என்பதை எந்த ஒரு சந்தேகத்திற்கு இடமின்றி நாம் கண்டு கொள்ள முடியும்.

ஒரு கிறிஸ்தவ சகோதரி பல்லாண்டு காலம் ஆசிரியை பணி செய்து ஓய்வுபெற்ற தனது பழைய பள்ளிக்குத் திரும்பவும் வேலை செய்யச் செல்லுவதை நான் கவனித்தேன். மாதம் ஒன்றுக்கு ரூபாய் 70000 சம்பளம் பெற்று வந்த அவர்கள் மாதம் வெறும் ரூபாய் 5000 க்கு இப்பொழுது வேலை செய்யச் செல்லுவதாகச் சொன்னார்கள். அதின் காரணத்தை நான் அவர்களிடம் கேட்ட போது வீட்டிலே சும்மா இருந்து நேரம் களிக்க தன்னால் முடியவில்லை என்றும், எப்படியாவது தனது நேரத்தை செலவிட்டு நாளை முடிப்பதற்காகச் செல்லுவதாகவும் சொன்னார்கள். எத்தனை பயங்கரம் பாருங்கள்! முடிவில்லாத நித்தியத்தை மோட்சத்தில் ஆண்டவருடன் செலவிடுவதற்கு தனது கடந்த கால பாவத் தவறுகளுக்காக மார்பில் அடித்துப் புலம்பி கண்ணீருடன் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய பாதங்களில் விழுந்து கிடக்க வேண்டிய ஆத்துமாவை தந்திர சாத்தான் எங்கே இழுத்துக் கொண்டு செல்லுகின்றான் பாருங்கள். காரணம், அவர்கள் இன்னும் மறுபடியும் பிறக்கவில்லை. ஆண்டவருடைய இரட்சிப்பின் சந்தோசத்தை அவர்கள் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.

ஒரு அருமையான கிறிஸ்தவ தாயார் தனது விருத்தாப்பிய நாட்களில் நேரம் போகாமல் தனது வீட்டில் தான் துவைத்து சுத்தம் செய்து போட்ட துணிகளை திரும்பவும் துவைத்து சுத்தம் செய்வதை தான் பார்த்தாக ஒரு சகோதரன் ஒரு சமயம் என்னிடம் சொன்னார்கள்.

மனைவியை இழந்த ஓய்வுபெற்ற கிறிஸ்தவ ஆசிரியர் ஒருவர் தனது ஒவ்வொரு முழு நாளையும் தொலைக்காட்சியில், உலகச் செய்திகள் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள், உலகச் செய்திகள் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் என்று மாற்றி மாற்றி போட்டுப் பார்த்து பார்த்து தனது வாழ்நாளை தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாகத் துயரத்துடன் கடத்துவதை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண் பார்த்து வந்து மற்றவர்களிடம் சொன்னார்களாம்.

விருத்தாப்பிய கிறிஸ்தவ மக்கள் தங்கள் வாழ்வின் அஸ்தமன நாட்களை பேருந்து நிலையங்கள், இரயில்வே ஸ்டேஷன்கள், பொழுது போக்கு பூங்காக்கள், பொது வாசக சாலைகள் போன்ற இடங்களில் நாள் முழுவதும் அமர்ந்து வீண் பேச்சுகள் பேசி, தங்களுக்கு முன் நடக்கும் உலக நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து பாழாக்குவது மிகவும் சர்வ சாதாரண நிகழ்ச்சிகளாகிப் போய்விட்டது.

"உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (சங் 16 : 11) என்று சங்கீதக்காரர் சொல்லுகின்றார். தேவ சமூகத்தில் உள்ள பரிபூரண ஆனந்தத்தையும், நித்திய பேரின்பத்தையும் விட்டுவிட்டு கிறிஸ்தவன் உலக மாயையில் தனது விலையேறப்பெற்ற நேரத்தையும், காலத்தையும் நாசப்படுத்துவதன் ஒரே காரணம் அந்த கிறிஸ்தவன் இன்னும் மறுபிறப்பின் பரலோக அனுபவத்தை தனது வாழ்வில் பெற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.


=============================
இதோ, இப்பொழுதே அனுக்கிரக காலம், இப்பொழுது இரட்சணிய நாள்
=============================
சாமுவேல் தீர்க்கன் அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக துண்டித்து போட்டது போல (1 சாமு 15:33) நாமும் தேவனுக்கும் நமக்கும் உள்ள பரலோக ஐக்கிய உறவுக்கு இடறல் உண்டு பண்ணக்கூடிய எதுவாயினும் அதை தேவ பெலத்தால் போராடி ஜெபித்து அல்லது உபவாசம் இருந்து அதை தேவ சமூகத்தில் துண்டித்து போட வேண்டும்.

ஒருக்கால் அது நமது கட்டுக்கடங்கா ஆகார மோகமாக இருக்கலாம் அல்லது நமது சுகமான நித்திரை பிரியமாக அது இருக்கக்கூடும், இல்லை எனில் அது ஒருக்கால் நமது கஞ்சத்தனமாக இருக்கலாம், அல்லது நமது பரதரப்பட்ட பெருமைகளாக இருக்கும். மற்றவர்கள் மேல் மனக்கசப்பு ,கோபம், வைராக்கியம் மன்னிக்க மனமற்ற சாத்தானின் ஆவியாக அது இருக்கலாம். நான் வாங்கிய கடன்களை செலுத்த மனமற்ற நமது இருதய கடினமாக அது ஒரு வேளை இருக்கலாம். நம்மை நாமே திருப்தி பண்ணி வாழக்கூடிய தேவன் அருவருக்கின்ற பாலுறவின் காரியங்களாக (1 கொரி 6:9) அது இருக்கலாம். நமது பொன் போன்ற காலத்தை கொல்லும் டிவியாக அது இருக்கலாம். அரசியலாகவோ, நாம் அதிகமாக விரும்பும் அரசியல் தலைவராகவோ, நமக்கு போதையூட்டும் செய்தித்தாள்களாகவோ அது இருக்கலாம். ஒருக்கால் அது வரம்புக்கு மீறிய தாம்பத்திய உறவுகளாக அது முகம் காட்டலாம். அது எதுவாக இருப்பினும் அது எத்தனையாக பாலூட்டி, சீராட்டி நம்மால் வளர்க்கப்பட்டு கொண்டு வருவதாயினும் பழைய ஏற்பாட்டின் பலத்த பராக்கிரமசாலி யெப்தாவைப் போல நாம் அந்த காரியங்களில் துண்டித்து போட கூர்மையான கத்தியை வைத்து அவைகளை கர்த்தருக்கு முன்பாக துண்டாடியே போட வேண்டும்.

தவறும் பட்சத்தில் ஊரும் உலகமும் நம்மை வெறுத்து, பெற்ற பிள்ளைகள், இனஜன பெந்துக்கள் நம்மை முழுமையாக மறந்து நம்மை கைவிட்டு, எனது சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டு இருக்கிறது என்ற நிலை நமக்கு வந்து, முற்றும் தனிமைக்கு நாம் ஓரம் கட்டப்படும் நமது விருத்தாப்பியத்தில் கர்த்தரும் நம்மை வெறுத்து தள்ளிவிடுவார். சவுல் அரசனைப் போல கர்த்தரும் என்னை கைவிட்டார் என்று நமது வாழ்வின் இறுதி காலத்தில் கதறும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்


========================
கிறிஸ்த வாழ்வில் கஞ்சத்தனம்
==========================
இந்த உலக வாழ்வில் ஐசுவரியவான்களாக விரும்புகிற மக்கள் பொதுவாக யாருக்கும் இட்டு ஈயாமல், கல் நெஞ்சினர்களாக இருந்து பணம் சம்பாதிப்பதை நாம் காணலாம். வயிறார உண்ணாமல், உடுத்தாமல், தங்களுடைய நியாயமான தேவைகளுக்கு கூட பணத்தை செலவிடாமல் மிகுந்த கஞ்சத்தனம் செய்து பணங்களை ரகசியமாக சேர்த்து குவிப்பதை நமது கண்கள் காண்கின்றன. எல்லாரையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆண்டவருடைய ஊழியங்களுக்கும், ஏழை எளியோருக்கும் வாரி வழங்கி ஐசுவரியவான்களாக இருக்கும் பரிசுத்த தேவ மக்கள் நம் மத்தியில் உள்ளனர்.

அநேக கிறிஸ்த மக்கள் முதிர் வயதான தங்கள் பெற்ற தாய் தந்தையர்க்கு கொடுக்க வேண்டிய ஆதரவுகளை கொடுக்காமல், கர்த்தருடைய சபைக்கு கொடாமல், தேவ ஊழியங்களுக்கு கொடாமல், கிறிஸ்த பத்திரிக்கைகளுக்கு சந்தா கொடாமல், ஏழை, எளிய மக்கள், கைம் பெண்கள், விதவைகள், ஆதரவற்றோருக்கு தங்கள் கைகளை நீட்டாமல் கஞ்சத்தனம் பண்ணி பணங்களை சேர்த்து குவிக்கும் இந்த மக்கள் தேவ பக்தியை கவனித்திருக்கின்றீர்களா ? வேத வசனங்கள் பலவும் மனப்பாடமாக இவர்களுக்கு தெரியும். முதல் மணி அடித்ததும் இவர்களின் கால்கள் ஆலய வாசல்படியில் இருக்கும். இவர்கள் வாழ்வே ஜெப வாழ்வாகத்தான் இருக்கும். பக்தி பரிசுத்தத்துக்கெல்லாம் இவர்களிடம் ஒரு குறைவும் இராது. நமக்கு வேதபாடமே எடுக்கும் சமர்த்து இவர்களுக்கு உண்டு

ஆனால் அந்தோ! அவர்களுடைய எல்லை மீறிய கஞ்சத்தனம் அவர்களுடைய வாழ்வை எல்லாம் விழுங்கி ஏப்பமிட்டு விடும். அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழுகும் புஷ்டியுமான ஏழு பசுக்களை எப்படி பட்சித்ததோ அவ்வண்ணமே கஞ்சத்தனமுள்ள கிறிஸ்தவர்களின் பக்தி பரிசுத்தத்தை எல்லாம் தேவன் அருவருக்கும் அவர்களின் கஞ்சத்தனம் பட்சித்து விடும்.

ஒரு கிறிஸ்தவனுடைய எல்லா கிறித்தவ பண்புகளையும் அவனுடைய கஞ்சத்தனம் அப்படியே அழித்துப் போடும். தம்முடைய தாசனாகிய தாவீதுக்கு தயை காண்பிக்காத பெருங்கஞ்சன் நாபாலை தேவன் வாதித்து கொன்றதாக (1 சாமு 25:38) தேவனுடைய வசனம் நமக்கு கூறுகின்றது. "நீதிமான் பிசினித்தனம் இல்லாமல் கொடுப்பான்" (நீதி 21:26) என்று கர்த்தருடைய வசனம் பேசுவதால் பிசினித்தனம் அதாவது கஞ்சத்தனம் என்பது துன்மார்க்கனுக்குரியது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

கஞ்சன் இரக்கமற்றவனாக இருப்பான். கஞ்சத்தனமும் இரக்கமும் பரம விரோதிகள். இரக்க சுபாவம் இருந்தால் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். இரக்கமற்ற கஞ்சன் கொடுக்க மாட்டான். அதினால்தான் 10 மாதம் சுமந்து பெற்ற தனது தாய்க்கும், போஷித்து, படிக்க வைத்து ஆளாக்கி விட்ட தனது தகப்பனுக்கும் கருணை காட்டாமல் அவர்களை புறக்கணித்து தள்ளி விடுகின்றான். இரக்கமற்ற அவனுக்கு தேவனிடமிருந்து இரக்கம் கிடையாது (மத் 5:7). ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் (லூக் 6:36).

வாசிக்கும் அன்பான ஆத்துமாவே, உனது கிறிஸ்தவ வாழ்வை கஞ்சத்தனம் என்ற கொடிய ஆகாயத் தாமரை சூழ்ந்திருக்கின்றதா ? உனது அருமையான வாழ்வை அது அப்படியே ஒன்று சேர மூடி எந்த ஒரு மனிதனுக்கும் ஆசிர்வாதமும், நன்மையும், பயனுமில்லாமல் முற்றும் அழித்து போடும் என்பதை நீ மறக்க வேண்டாம். நீ மனந்திரும்பும் பட்சத்தில் தேவன் உனக்கு "சதையான இரக்கமுள்ள இருதயத்தை உனக்கு தருவார்" (எசேக் 11:19)

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே (நீதிமொழிகள் 3:27)

உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம் (1 தீமோத்தேயு 6:7)


===========================
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்
மத் 7:13
==========================
எந்த ஒரு தேவ ஊழியன் உங்களை இந்த உலகத்தில் எந்த ஒரு கஷ்டமும், பாடுகளும், துயரங்களும், கண்ணீரும், சிலுவையும் இல்லாத சொகுசு வாழ்விற்கு நேராக வழி நடத்துகிறவனானால் அவனைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி அவன் விசாலமான நித்திய நாச வழிக்கு அதிபதியான சாத்தானின் ஊழியக்காரன். அந்த மனுஷ கொலை பாதகன் ஏதேன் பூங்காவில் நமது ஆதி தாய் தந்தையரிடத்தில் அவர்களை தேவ சமூகத்திலிருந்து என்றுமாக நிர்மூலமாகப் போகப்பண்ண அவர்கள் முன்னிலையில் அன்று பாடிய அதே ஆசீர்வாதப் பாடல் பல்லவியைத்தான் (ஆதி 3 : 4 - 5) இன்றும் தேவ ஜனத்திடம் பாடி அவர்களை மகிழ்வித்து வருகின்றான். அவனுடைய தந்திரம் அறியாத தேவ ஜனங்களும் கழுத்தை அறுத்துக் கொல்லும்படியாக தனது கசாப்புக் கடைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் கசாப்புக் கடைக்காரனை நம்பி அவன் பின்னால் அங்குமிங்குமாக துள்ளிக் குதித்துச் சென்று கொண்டிருக்கும் அப்பாவி ஆட்டுக் குட்டியைப் போல பேதை மாந்தர் மந்தை மந்தையாக மிகுந்த ஆரவாரத்துடன் தங்களுடைய விலையேறப்பெற்ற ஆத்துமாவில் நித்தியமாக விழப்போகும் சத்துருவின் கூரான கத்தியை சற்றும் நினைத்துப் பார்க்காமல் நித்திய அக்கினிக்கடல் என்ற கசாப்புக்கடையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். கர்த்தர்தான் கிருபையாக இந்த மக்களுக்கு மனதிரங்கி இவர்களை அழிவினின்று பாதுகாக்க வேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ள பெயர்க் கிறிஸ்தவர்கள், புற மதஸ்தர், அஞ்ஞானிகளைப் போன்று பட்டுத்தி பகட்டாக வாழ வேண்டுமென்று ஒருக்காலும் நினையாதேயுங்கள். அவர்களைப் போன்று வாழ உங்களுக்கு எல்லா பண வசதிகளும், வாய்ப்புகளும் இருந்தாலும் அப்போஸ்தலனைப் போல "இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்கு தகுதியாகும்படிக்கும் அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன்" (பிலி 3 : 10 - 11) என்று ஆண்டவர் இயேசுவுக்காக எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையுமாக எண்ணுங்கள்.

உங்கள் நினைவில் என்றும் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் பாதுகாப்பாக மோட்சம் போய்ச் சேர நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதை சிலுவைப் பாதை மட்டுமே. உண்மைதான், அது பாடுகளின் பாதை, அது கண்ணீரின் பாதை, அது நெருக்கத்தின் பாதை, அது உபத்திரவங்களின் பாதை, அது வேதனையின் பாதைதான். எனினும், அதுவே பரலோகத்தின் பாதை. நம்மைப் பாதுகாப்பாக உச்சிதப்பட்டணம் வரை வழிநடத்திச் செல்லும் ராஜ பாதை அந்த சிலுவைப் பாதை மட்டுமே. "இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள், இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்" (வெளி 7:14) என்று பரலோகில் காணப்படும் தேவ ஜனத்தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. சிலுவையே மோட்சம். 

இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவ பிள்ளையே, உங்கள் கிறிஸ்தவ வாழ்வில் சிலுவைப் பாதையைத் தெரிந்து கொள்ளுங்கள். "ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக் 9:23) என்று ஆண்டவர் சொன்னதுடன் "இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்" (மத்தேயு 7 : 13 - 14) என்று கூறினார்.

ஒரு மெய் கிறிஸ்தவனுக்கு, அன்பின் ஆண்டவரை தன் முழு இருதயத்தோடு பின்பற்றிச் செல்லுகிற ஒரு தேவப்பிள்ளைக்கு இந்த உலகத்தில் துன்பமும், துயரமும், பாடுகளும், கண்ணீர்களும்தான் பங்காகும். அதை மனதில் கொண்டுதான் அப்போஸ்தலனாகிய பவுல் "நாம் அநேக உபத்திரவங்களின் வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்" (அப் 14 : 22) என்று சொன்னார். நமது அருமை ஆண்டவரும் அதை மனதில் வைத்துத்தான் "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" (யோவான் 16 : 33) என்று சொன்னதுடன் அந்த ஆண்டவரே, தமது வாழ்வில் "அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாக....." (ஏசாயா 53 : 3) இந்த உலகத்தைக் கடந்து சென்றார் என்று நாம் பார்க்கின்றோம். தேவ மைந்தன் உலகில் இருந்த நாட்களில் அவர் அழுததை மக்கள் பார்த்தார்களே தவிர அவர் சிரித்ததை எவரும் எக்காலத்தும் பார்க்கவில்லை என்று திருச்சபை சரித்திரம் சொல்லுகின்றது.

இந்த உலகம் அளிக்கக்கூடிய ஆஸ்தி, ஐசுவரியம், உலக சுகபோகங்களை நாம் நமது மனங்கொண்ட மட்டும் இந்த உலகத்தில் அனுபவித்து இறுதியில் மிருகங்களைப் போல செத்து அழிந்து போகும்படியாக தேவன் நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வரவில்லை. "இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்" (1 கொரி 15 : 19) என்று அப்போஸ்தலன் தமது நிருபத்தில் எழுதினார்.

இந்த உலக வாழ்க்கையில் நாம் அனுபவிப்பதற்கு எல்லா பாக்கியங்களையும் ஆண்டவர் நமக்குத் தந்திருந்தாலும் அவைகளை நாம் அளவோடு அனுபவித்து தேவ நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். அதைத்தான் அப்போஸ்தலன் தமது நிருபத்தில் "எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது, எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது" (1 கொரி 10 : 23) என்று சொன்னதுடன் "இனி வரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போலவும், அழுகிறவர்கள் அழாதவர்களைப் போலவும், சந்தோசப்படுகிறவர்கள் சந்தோசப் படாதவர்கள் போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள் போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாக அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும்" (1 கொரி 7 : 29 - 30) என்று சொன்னார்.

"கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாணிகளில் தொங்குகின்ற" (கலா 2 : 20) ஒரு மெய்யான தேவப் பிள்ளைக்கு இந்த உலகத்தில் அனுபவித்து மகிழ என்ன உண்டு? சிலுவையில் துடி துடித்து வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அதினால் உலகத்தை எப்படி அனுபவித்து ஆனந்திக்க முடியும்? ஒரு பரிசுத்த பக்தன் கீழ்க்கண்டவாறு பாடினார்:-

வெறுத்திடுவேன் எந்தன் ஜீவனை லோகத்தில் செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில் மாயை, மாயையே லோகத்தின் இன்பமே வாடா முடி சூட ஏகுவேன்.


=========================
தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான் 
நீதிமொழிகள் 29:15
=======================
பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தாமல், அவர்களுடைய இரட்சிப்பின் காரியத்தில் நீங்கள் நிர்விசாரம் காண்பித்து, அவர்களுக்கு உயர்வான உலகக் கல்வி அளித்து, அவர்கள் நல்ல சம்பளங்களில் உத்தியோகங்களில் அமருவதை நீங்கள் காணத் துடி துடிப்பீர்களானால் அதின் எதிர் விளைவுகள் காலப்போக்கில் உங்களை இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துவிடும். "உனக்கு 12 ஆண் மக்கள் இருக்கின்றனர் என்று பெருமைப்படாதே. நினைவில் வைத்துக்கொள், தின்பதற்கு பின் நாட்களில் தவிடு கூட உனக்கு கிடையாமற் போகலாம்" என்று காஷ்மீரி பண்டிதர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருப்பதாக நான் வாசித்தேன். உண்மையான வரிகள்.

சமீபத்தில் ஒரு தேவப்பிள்ளை தான் பெற்ற தனது மகனின் மனைவி வீட்டில் வளர்க்கும் நாய்க்கு இட்லி கொடுக்கும் அதே வேளையில் தனக்கு இட்லி கொடுக்க மறுப்பதால் ஹோட்டலில் விலைக்கு இட்லி வாங்கி சாப்பிடுவதாக வேதனையுடன் எழுதியிருந்தார்கள். எத்தனை துயரமான காரியம் பாருங்கள்! அந்த மகனைப் பெற்ற பொழுது அந்த தாயார் எவ்வளவாய் சந்தோசப்பட்டிருப்பார்கள்! எத்தனையான வருங்கால மனக்கோட்டைகளை எல்லாம் கட்டியிருப்பார்கள்! ஆனால், இப்பொழுது அந்த தாயாருக்கு அதே மகன் வீட்டில் இருக்கும் ஒரு நாய்க்கு கொடுக்கப்படும் கனம், மரியாதை கிடையாது. 

அநேக குடும்பங்களில் ஆண் மக்களைப் பெற்ற பெற்றோர் மருமகள்கள் மூலமாக அனுபவிக்கும் கொடுமைகளை சொல்லி மாளாது. இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதின் ஒரே காரணம், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இரட்சிப்பு, மறுபிறப்பு, பரிசுத்த ஜீவியத்தில் இளம் பருவ நாட்களில் கவனம் செலுத்தாமல் அவர்களின் உலகக் கல்வி, உத்தியோகம் போன்றவைகளில் முழுக்கவனம் செலுத்தி பிள்ளைகளை அவர்களின் சிருஷ்டிகரின் உறவிலிருந்து துண்டித்து விட்டதுதான். பிள்ளைகள் ஜெபிக்கின்றார்களா? தேவனுடைய வார்த்தைகளை வாசித்து தியானிக்கின்றார்களா? கர்த்தருடைய அன்பில் வளருகின்றார்களா? என்பதைக் குறித்தெல்லாம் அவர்களுக்கு அக்கறையே கிடையாது. அரசு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பட்டம் பதவிகளை அடைந்து, உலகத்தரம் வாய்ந்த கம்பியூட்டர் கம்பெனிகளில் திரண்ட சம்பளங்களில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்று இந்த உலக வாழ்வில் அவர்கள் எல்லா சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்ற ஒரே ஏக்கமும், தாகமும்தான். அதின் ஒரே எதிர்விளைவுதான் வீட்டுக்கு வரும் மருமகள் அவர்களை வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுக்கும் கனத்தைக் கூட கொடுக்காமல் அவர்களை அற்பமாக எண்ணி நடத்துகின்றாள். அதுமட்டுமல்ல, அவர்களின் துரிதமான சாவுக்காக ஆசை ஆவலாக அவள் காத்துக் கொண்டிருக்கின்றாள். எத்தனை பயங்கரம் பாருங்கள்!

இதை கருத்தோடு வாசிக்கும் அன்பான தேவபிள்ளையே, உங்கள் அருமைப் பிள்ளைகளை கர்த்தருக்குப் பயப்படும் பயத்திலும், நித்திய ஜீவப்பாதையிலும் மிகுந்த ஜெபத்தோடு வழிநடத்துங்கள். பிள்ளைகளின் ஓய்வு நேரங்கள் கர்த்தருடைய வேத வசன தியானத்திலும், ஜெபத்திலும், கர்த்தரைப் பாடித் துதிப்பதிலும் செலவிடப்படுகின்றதா என்பதை கவனியுங்கள். உங்கள் வீட்டில் கரும் பெட்டி இருந்தால் அதில் பிள்ளைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளை கவனியுங்கள். அதில் செலவிடும் நேரத்தை ஆண்டவரின் பாதங்களில் ஜெபத்தில் செலவிட அவர்களுக்கு தேவ ஆலோசனை கொடுங்கள். மிகவும் சுருக்கமான வாழ்நாட் காலம். அதுவும் சீக்கிரமாக பறந்தே மறைந்துவிடும் (சங்கீதம் 90 : 10 ) பிள்ளைகளின் இரட்சிப்பின் காரியத்தில் தீவிர கவனம் செலுத்துங்கள். *அவர்களின் இரட்சிப்புக்காக கண்ணீர் சிந்தி அழுது ஜெபியுங்கள்.* 
நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
லூக் 23-28 என்று இயேசு சிலுவையை சுமந்து கொண்டு சொன்ன வார்த்தை எவ்வளவு உண்மை. ஒரு குறிப்பிட்ட வயதை பிள்ளைகள் கடந்துவிடும்போது இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுவது கடினமாகிவிடும். கிருபையின் காலத்தில் பிள்ளைகளை உன்னதமானவரின் செட்டைகளின் மறைவில் அடைக்கலம் புகுந்து கொள்ளச் சொல்லுங்கள். பிள்ளைகள் இரட்சிப்பின் பாத்திரங்களாகி ஆண்டவருடைய அடியார்களாக மாறும்போது அவர்களுக்கு வரும் வாழ்க்கைத் துணைகள் உங்களைப் பெற்ற தாய் தந்தையர்களைப் போல நேசித்துக் கனப்படுத்தும் அன்பின் இருதயத்தை தேவன் அவர்களுக்கு கொடுப்பார். உண்மைதான், "என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்" (1 சாமுவேல் 2 : 30) என்ற தேவ வாக்கு உங்களில் பலிக்கும். அதற்கான கிருபைகளை தேவன் தாமே உங்களுக்குத் தந்தருள்வாராக.

==========================
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தை பிரயோஐனப் படுத்திக் கொள்ளுங்கள்
எபேசி 5:16
==========================
இந்த உலக வாழ்வில் நாம் எப்பொழுதும் ஏனோக்கைப் போல தேவனோடு சஞ்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் (ஆதி 5 : 24) அந்த தேவாதி தேவனும் நம்மைப் பார்த்துக் களிகூர்ந்தவராக "மகனே நீ எப்போதும் என்னோடிருக்கிறாய்" (லூக்கா 15 : 31) என்று கூறுவார். கர்த்தர் நமது சுதந்திரமும், நமது பாத்திரத்தின் பங்குமாக இருக்கும் போது இந்த உலகத்தில் நமக்கு அவரைத் தவிர வேறு எந்த விருப்பமும், வாஞ்சையும் இருக்காது. அதைத்தான் தாவீது ராஜாவும் "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங் 73 : 25) என்று சொன்னார்.

உங்கள் வீட்டில் கரும் பெட்டி (தொலைக்காட்சி) இருந்து நீங்கள் அந்த தொலைக்காட்சியின் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளின் மகுடியில் மயங்கி அந்த ஆடல்கள், பாடல்கள், ஆனந்த கூத்துகளின் அரவணைப்பிலேயே உங்கள் நாளை செலவிட்டு இரவு உங்கள் இளைப்பாறுதலுக்குச் செல்லும் வரை அதின் ஆரவாரக் குரல்கள் உங்கள் காதுகளுக்குத் தேவைப்படும் பட்சத்தில் ஒன்றை நிச்சயமாக உங்கள் இருதயப் பலகையில் எழுதிக் கொள்ளுங்கள். "நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்" (தானி 5 : 27) இது உங்கள் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வின் ஆபத்தான அறிகுறியாகும். உங்களுடைய இருதயம் கர்த்தரோடு செம்மையாக இருக்கவில்லை என்பதே அதின் பொருளாகும். உங்கள் இரட்சிப்பு, மறுபிறப்பின் காரியங்களில் நிச்சயமாக தவறுகள் இருக்கின்றது. அதின் காரணமாகவேதான் நீங்கள் தொலைக்காட்சியை நாள் முழுவதும் பார்த்து உங்கள் விலையேறப்பெற்ற காலத்தைப் பாழாக்குவதுடன் தினசரி செய்தித் தாட்களையும் வாங்கி ஆவலோடு வாசிக்கின்றீர்கள். அநேக கிறிஸ்தவர்களுக்கு செய்தித்தாட்கள்தான் தேவனுடைய பரிசுத்த வேதாகமம். ஒரு தடவை அதிக நேரம் செலவிட்டு அவைகளை வாசிப்பதுடன் நின்றுவிடாமல் மேஜை மீது கிடக்கும் அவைகளை அவ்வப்போது திரும்பவும் எடுத்து வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

அந்த பொன்னான மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடுவது என்பது அவர்களுக்கு எட்டியாக கசக்கும். பகற்கால மணி நேரங்கள் முழுவதையும் தொலைக்காட்சி, செய்தித்தாட்கள் வாசிப்பு, நண்பர்கள், உற்றார் உறவினருடன் அரட்டை, பேரக் குழந்தைகளை பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு சென்று விட்டு விட்டு பின்னர் அவர்களை திரும்ப அழைத்து வருதல், மீன், இறைச்சி, காய்கறி கடைக்குச் சென்று மத்தியான ஆகாரத்திற்கான பொருட்களை வாங்கிக் கொடுத்தல், உள்ளூர் வாசகசாலைக்கு சென்று அங்கு வரும் உலக சஞ்சிகளை அப்படியே ஒரு கண்ணோட்டம் போடுதல், மாலையில் உள்ளூர் ரயில் நிலையம் சென்று சாவதானமாக அமர்ந்து அங்கு வரும் மக்களையும், மேற்கேயும் கிழக்கேயும் இருந்து வரும் இரண்டு ரயில்களின் சந்திப்பையும் பார்த்து வீடு வந்து சற்று நேரத்திற்கெல்லாம் உணவருந்தி இரவு நேர கடைசி பி.பி.சி. உலகச் செய்திகளைக் கேட்ட வண்ணமாகவே படுக்கைக்குச் செல்லுவதை ஒரு நடைமுறை பழக்கமாகக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மக்கள் அநேகருண்டு.

இந்த மக்கள் தங்கள் ஆண்டவருடைய பாதங்களுக்கு நாளின் ஒரு முறை தானும் சென்று அவருடன் அளவளாவி ஆனந்திப்பது, ஆண்டவருடைய பரிசுத்த வார்த்தைகளை வாசித்து தியானிப்பது என்பது எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத காரியங்களாகும். சடுதியாக மரணம் வருகின்றது. ஆயத்தமில்லாத நிலையில் மகா துயரத்தோடு நிர்ப்பந்தமாக மரித்து என்றென்றைக்குமுள்ள காரிருளுக்குள் இந்த மக்கள் கடந்து செல்லுகின்றனர். எத்தனை பயங்கரம் பாருங்கள்!

தேவ ஜனமே, இந்தக் கிருபையின் காலத்தில் நன்கு கண் விழித்துக் கொள்ளுங்கள்


================
இந்த ஜாதி பிசாசு
(மத் 17:21)
================
சில வருடங்களுக்கு முன்பு வேலையின் நிமித்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை என்ற ஊரில் வாடகை வீடு எடுத்து குடும்பமாக தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு வீடு வாடகைக்கு இருப்பதாக கேள்விப்பட்டோம். அந்த வீட்டின் உரிமையாளரை பார்க்க சென்றேன். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி "நீங்கள் எந்த ஜாதி" (தேவனுடைய இரத்த புண்ணியத்தால் நான் ராஜ குடும்பத்தை சேர்ந்தவன் என்பது அவருக்கு தெரியாது (வெளி 1-6). ஜாதியை கூறினேன். வீட்டை வாடகைக்கு கொடுத்தார். என்னுடன் வந்த சகோதரனிடன் இதை குறித்து கேட்ட பொழுது சில ஜாதிக்காரர்களுக்கு இங்கு வீடு வாடகைக்கு கொடுப்பதில்லை என்றார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த ஜாதி வெறியை இன்றும் காணலாம். 

தென் ஆப்பிரிக்காவில், நமது தேச தந்தை காந்தியடிகள் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் ஆராதனையில் தனது வாழ்விலேயே முதன் முறையாக கலந்து கொள்ள சென்றிருந்த போது அங்கு தேவாலயத்திலிருந்த கிறிஸ்தவ வெள்ளையர்கள் அந்த தேவாலய ஆராதனை முழுமையாக வெள்ளையர்களுக்கு மாத்திரமேதான் என்றும், கருப்பு இனத்தவர்கள் கலந்து கொள்ள கூடாது என்று அவரை வெளியே அனுப்பி விட்டனர். மிகுந்த துக்கத்தோடு ஆலயத்திலிருந்து வெளியேறிய காந்தியடிகள் திரும்பவும் எந்த ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தினுள் காலடி எடுத்து வைக்கவே இல்லை. தங்கள் ஜாதி பெருமையை வெள்ளையர்கள் காந்தியிடம் அங்கு காண்பிக்காமல் இருந்திருந்தால் அவர் கிறிஸ்தவனாகி ஒரு பெரிய தேவ ஊழியக்காரனாக கூட மாற்றமடைந்திருப்பார்.

இந்த ஜாதி பெருமை சபைகளில் தலைவிரித்து ஆடுகின்றது. எத்தனைதான் தேவ அன்பு இருந்தாலும் அவன் இந்த ஜாதிக்காரன் என்று மனதில் வைத்து அந்த வட்டத்திற்குள்ளேயே செயல்படுகின்றனர்.

கோவை பட்டணத்தில் மேல் ஜாதியினர்க்கு என்று ஒரு ஆலயமும், கீழ் ஜாதியினருக்கு என்று ஒரு ஆலயமும் இருப்பதாக கேள்விபட்டேன். சமிபத்தில் ஒரு ஊழியக்காரர் சொன்னார் ஒரு சபையில் போதகர் கீழ் ஜாதியை சேர்ந்தவர் என்ற காரணத்தினால் சபை மக்கள் (மேல் ஜாதி மக்கள்) அவரிடம் திருவிருந்து வாங்குவதுமில்லை. அது மட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் அநேக ஊர்களில் மேல் ஜாதியினர்க்கு தனி ஆலயமும், கீழ் ஜாதியினர்க்கு தனி ஆலயமும் இருப்பதாக சொன்னார்கள்.

சில பேருடைய ஜாதி மரித்த பின்பும் அவர்களை தொடர்வதை காணலாம். ஆம் அவர்களின் ஜாதி பெயர் கல்லறையில் கொட்டை எழுத்துக்களில் அவர்கள் பெயர் பின்னால் எழுதபட்டிருப்பதை காணலாம்.

இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அனைவரும் பரிசுத்த ஜாதி என்று வேதம் கூறுகிறது. "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், *பரிசுத்த ஜாதியாயும்* அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். 1 பேதுரு 2:9"

இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். மத்தேயு 17 :21


=====================
அவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்
(சங் 2-12)
=======================
இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் செய்த பாவம் தாவீது ராஜா செய்த பாவங்களைவிட குறைவானதுதான். சவுலிடம் (1) கீழ்படியாமை காணப்பட்டது - 1 சாமு 15:8,9 (2) துணிகரம் காணப்பட்டது - 1 சாமு 13-12. ஆனால் தாவீது உரியாவை கொன்று அவனது அன்பு மனைவியை தனக்கென்று எடுத்த கொண்டார் - 2 சாமு 11:3,15.

இருவரும் தேவனுக்கு விரோதமாக கொடிய பாவங்களை செய்தார்கள். எனினும் சவுலோ ஜெப உதவிக்கு சாமுவேலை அண்டினான் (1 சாமு 15:25,30). ஆனால் தாவீதோ 51 ஆம் சங்கிதத்தின்படி அவனோ ஜெபத்தில் கர்த்தரை அண்டி கொண்டான். கர்த்தரை அண்டிக் கொண்ட பெரிய பாவியாகிய தாவீதோ இன்று பரலோகத்தில் வாழ்கின்றான். கர்த்தரை அண்டிக்கொள்ளத் தெரியாத சவுலோ இன்று நரக பாதாளத்தில் இருக்கிறான் (சவுல் தன்னைத்தானே கொலை செய்து கொண்டான் - 1 சாமு 31-4)

தானியேல் 6 ம் அதிகாரத்தில் தானியேலுக்கு விரோதமாக சத்துருக்கள் எழும்பினார்கள். தானியேல் தன் உயிர் காக்கப்பட ஒரு வேளை ராஜாவாகிய தரியுவை அண்டி தன் ஜீவனுக்காக மன்றாடியிருக்கலாம் (or) தனக்கு விரோதமாக எழும்பின 120 தேசாதிபதிகளையும், 3 பிரதானிகளையும் அண்டிக் கொண்டு தன் பிராணன் காக்கப்பட மன்றாடியிருக்கலாம். ஆனால் தானியேலோ தன் அன்பின் ஆண்டவரையே அண்டிக் கொண்டார். வெகு பத்திரமாக பாதுகாக்கப்பட்டார்.

தேவ மக்களே! இந்த கிருபையின் காலத்தில் அன்பின் ஆண்டவர் இயேசுவை அண்டிக் கொள்ளுங்கள். தாவீதுக்கு தானியேலுக்கு உதவி செய்த ஆண்டவர் நிச்சயம் உங்களுக்கும் உதவி செய்வார்.

எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம் (சங் 73-28)


==============================
தேவ ஜனமே, நீங்கள் களையா அல்லது தானியக்கதிரா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்
===============================
எக்காலத்தும் இல்லாத அளவில் இன்று தேவனுடைய திருச்சபை சாத்தானாம் பிசாசினால் புடைத்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நம்மைச் சுற்றியுள்ள புறமதஸ்தர்கள் நமது சாட்சியற்ற, கிறிஸ்தவ மகிமைக் குலைச்சலான வாழ்க்கையைக் கண்டு அன்பின் ஆண்டவரை தைரியமாக தூஷிக்கின்றனர். கிறிஸ்தவர்களின் சாட்சியற்ற வாழ்க்கையையும், அவர்கள் செய்கின்ற அட்டூழியங்களையும் செய்தித் தாட்களும், இதர உலகப்பிரகாரமான சஞ்சிகைகளும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகின்றன. நானாவித தொலைக்காட்சி சானல்கள் அந்தச் செய்திகளை தங்கள் சின்னத்திரையில் இராப் பகலாக மக்களுக்கு திரையிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றது. கழுத்தில் பெரிய சிலுவையை தொங்கவிட்ட நிலையில் திருச்சபை தலைவர் ஒருவரை போலீஸ் காவலர்கள் பல கோடி ஊழல் விசாரணைக்காக காவல் நிலையம் கூட்டிச்செல்லுவதை தினசரி செய்தித்தாட்கள் பெரிய முகப்புப் படம் போட்டு கேவலப்படுத்தி சித்தரிப்பதை நாம் துயரத்துடன் காண்கின்றோம். தன்னுடைய பள்ளி நிறுவனத்தின் சின்னஞ் சிறிய சிறுமிகளுடன் தவறான பாலியல் உறவு கொண்ட காரணத்திற்காக பெரிய பள்ளி நிறுவனங்களின் கிறிஸ்தவ உரிமையாளரான கிழவர் ஒருவரை கையில் விலங்கிட்டு பட்டணத்தின் வீதி வழியாக காவலர்கள் காவல் நிலையம் அழைத்துச் செல்லும் தலை குனிவுக் காட்சிகளை செய்தித்தாட்கள் வெளியிட்டு கிறிஸ்தவ மார்க்கம் எத்தனை வெறுக்கத்தக்கதான மார்க்கம் என்பதை வெளி உலகுக்குக் கோடிட்டுக் காண்பிக்கின்றது.

அன்பின் ஆண்டவர் இயேசுவை தன் சொந்த இரட்சகராக தனது குழந்தைப் பருவத்தில் ஏற்று தன்னுடன் படிக்கும் தனது சிறிய சக மாணவத் தோழிகளுக்கும் தான் தனது இருதயத்தில் பெற்ற தன் இரட்சிப்பின் ஆனந்த சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள முயன்றபோது அந்த சின்னத் தோழிகளில் ஒருத்தி சுருக்கென்று கொடுத்த பதில் இதுவேதான் "உன்னுடைய கிறிஸ்தவ பிஷப்பை செய்தி தாளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்தாயா? உன்னுடைய இயேசு எங்களுக்கு வேண்டாம்" என்பதே.

ஜீவனுள்ள தேவனுடைய மாட்சிமையான பரிசுத்த நாமம் இந்த அளவிற்கு மக்களால் தூஷிக்கப்பட ஒரே காரணம் பொல்லாங்கனாம் பிசாசு அதைச் செய்தான் என்பதுதான். தேவனுடைய ஜனத்துக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், பரிசுத்தத்தையும் ஆண்டவருடைய கட்டளையின்படி கண்ணீரோடும், ஆத்தும பாரத்தோடும் பிரசங்கித்து ஒரு கூட்டம் பரிசுத்த ஜனத்தை ஆண்டவருக்கு ஆயத்தப்படுத்த வேண்டிய தேவ ஊழியன் சாத்தானாம் பிசாசின் தந்திர ஆலோசனையின்படி நிலையில்லா சரீர சுகத்தையும், தங்களுக்குச் செட்டைகளை உண்டு பண்ணிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து செல்லும் நிலையில்லா உலக ஐசுவரியத்தின் கவர்ச்சியையும், மாயாபுரி சந்தை சரக்குகளையும் தாரை, தப்பட்டை அடித்து பிரசங்கிப்பதுதான்.

"ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு சின்ன இயேசுவாக மாறிவிட்டால் இந்தியாவை துரிதமாக ஆண்டவர் இயேசுவுக்குக் கொண்டு வந்து விடலாம்" என்று கூறிய நம் தேசத் தந்தை காந்தி அடிகளுக்கு இருந்த அந்த தரிசனம் அடிக்கடி பரலோகம் சென்று ஆண்டவர் இயேசுவையும் அவரது அடியார்களையும் முகமுகமாக சந்தித்து, தரிசித்து, அவர்களுடன் அளவளாவி வருவதாகக் கூறிக் கொள்ளும் நம்மிடையே உள்ள ஆசீர்வாதப் பிரசங்கிகளுக்கு இல்லாமல் போனதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது.

பாவத்தைக் கண்டித்து உணர்த்திப் பிரசங்கிக்க வேண்டிய தேவ ஊழியன் உலக வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும் இரகசியத்தை தேவ ஜனத்துக்குக் காண்பிக்க விரும்புகின்றான். ஆண்டவர் இயேசுவை உண்மையாகவே இந்த உலகத்தில் பின்பற்றிச் செல்லும் அவரது அடியார்கள் அனைவர்களுக்குள்ள சிலுவைப்பாதையையும், பாடுகளையும், கண்ணீர்களையும் பிரசங்கிக்க வேண்டிய தேவ ஊழியன் கர்த்தருடைய ஜனம் இந்த உலகத்தில் செல்வ செழிப்பில் மிதந்து வாழ்ந்து, நூறாண்டு காலம் நோய் நொடியின்றி இருக்கப் போவதான சுகபோக வாழ்வுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்குகளாக திகழ்கின்றனர்.

தரித்திரராக (2 கொரி 6 : 10) இருந்து தரித்திரருக்கு (மத் 11 : 5) சுவிசேஷத்தை பிரசிங்கிக்க வேண்டிய தேவ ஊழியன் யாரும் அருகில் நெருங்க முடியாத கோடீஸ்வரர்களாக இருந்து கர்த்தருடைய ஜனத்துக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் பிரசங்கிப்பதற்குப் பதிலாக சரீர சுகம், செல்வம், செழிப்பு குறித்துப் பேசுகின்றான். "மிகவும் சந்தோசமாய் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவு பண்ணவும், செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன்"(2 கொரி 12 : 15) என்றார் பரிசுத்த பவுல் அப்போஸ்தலன். ஆனால், இன்றைய கோடீஸ்வர ஊழியர் ஒரு கிறிஸ்தவனின் குழந்தைப் பருவத்திலிருந்து அதாவது "இளம் பாலகர்" திட்டத்திலிருந்து அவன் விருத்தாப்பியனாகி சாகும் காலம் வரை அதாவது "கிழவர் மரண கால ஆசீர்வாத திட்டம்" வரை பற்பலவிதமான பண வசூல் திட்டங்களை தந்திரமாக வடிவமைத்து தேவ ஜனத்தின் பணத்தை பசு மாட்டின் பால் மடுக்களில் வெண்ணெயைத் தடவி அதின் கன்று குட்டி குடிக்கக் கூட பாலின்றி ஒட்டறக் கறந்து விடுவது போல அவர்களின் பணங்களை கறந்து எடுத்து தங்களுடைய உலக வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுகின்றனர். பாவம், இந்த தேவப் பகைஞர் மற்றவர்களைவிட தங்களைப் புத்திசாலிகளென்று எண்ணிக் கொள்ளுகின்றனர். "கண்ணை உருவாக்கினவர் காணாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ" (சங் 94 : 9 - 10) என்று வேதம் இவர்களைப் பார்த்துக் கேட்கின்றது.

இந்த புத்திசாலித்தனமான தேவ ஊழியர்களுக்காக நாம் உள்ளம் உருகி பரிதபிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தை, ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உறுப்பாகிலும் மாறாத தேவ வார்த்தை அவர்களை இப்படியாக எச்சரித்துச் சொல்லுகின்றது "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான், ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்" (கலா 6 : 8) "நீ கொள்ளையிட்டு முடிந்த பின்பு கொள்ளையிடப்படுவாய், நீ துரோகம் பண்ணித் தீர்ந்த பின்பு உனக்குத் துரோகம் பண்ணுவார்கள்" (ஏசாயா 33 : 1) "கர்த்தர் பார்க்க மாட்டார் என்று சொல்லுகிறார்கள். ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கம் செய்வதுமில்லை, அவர்களுடைய வழியில் பலனை அவர்கள் சிரசின் மேல் இரங்கப்பண்ணுவேன்" (எசே 9 : 9 - 10) இந்த தேவ வார்த்தைகள் எல்லாம் சற்று கால தாமதம் ஆனாலும் நிச்சயமாக அப்படியே நிறைவேறியே தீரும்.


================
உபவாசம்
=================
தேவனுடைய சமூகத்தில் உபவாசம் செய்து அதின் பரலோக ருசி கண்ட தேவ மக்கள் உபவாசத்தை கைவிடவே மாட்டார்கள். நம்முடைய சரீரத்தில் காணப்படும் மாம்ச, சிற்றின்ப ஆசைகளை எல்லாம் நமது காலின் கீழ் மிதித்து, தேவனுக்கு முன்பாக நல்லதொரு பரிசுத்த ஜீவியம் செய்ய உபவாசம் நமக்கு கைகொடுத்து உதவுகின்றது. கோபம், பழிவாங்கும் எண்ணம், சகலவிதமான கசப்புகள், சூது வாது, கபடங்கள் எல்லாம் தேவ சமூகத்தில் நாம் எடுக்கும் ஊக்கமான உபவாச ஜெபங்களின் மூலமாக பறந்தோடிப் போகும். மாம்ச பெருந்தீனி, கண்ட நேரமெல்லாம் சாப்பிடும் நொறுக்கு தீனி போன்ற கொடிய ஆகார மோகம் நமது உபவாச ஜெபித்தால் செட்டைகளை உண்டு பண்ணிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து போகும்.

ஒழுங்காக உறுதியான உபவாசம் ஜெபங்கள் நமது கிறிஸ்தவ வாழ்க்கையை பிரகாசிக்க செய்வதுடன், சாத்தானாம் பிசாசு நம்மை கட்டி வைத்திருக்கக் கூடிய பாவக்கட்டுகளை (நீதி 5:22, லூக் 13:16) அறுக்க கூடிய வல்லமை உள்ளது என்பதை நீங்கள் திட்டமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உபவாச ஜெப நாட்களில் தேவன் தமது திருவுளத்தை நமக்கு வெளிப்படுத்தி அவருக்கு முன்பாக நாம் எந்தவிதமான பரிசுத்தத்தோடு ஜீவிக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதுடன் நமது பாவ அழுக்குகள், கீழ்ப்படியாமைகள், முரட்டாட்டங்கள் போன்ற காரியங்களை நமக்கு சுட்டிக் காண்பித்து நம்மை சீர்படுத்துவார். 

உபவாசித்து நாம் ஜெபிக்கும் ஜெபங்கள் தேவனுடைய சந்நிதானத்திலிருந்து உடனடியாக பலனை நமக்கு பெற்றுத் தரும். "உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாக சிறுமைப்படுத்துகிறதறகு உன் மனதை செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது" (தானி 10:12) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது.

நமது உபவாச ஜெப நாட்கள் நமது திருக்குள்ள நெஞ்சத்தை ஆராய்ந்து அறிந்து நமது பரிசுத்த தேவனுக்கு முன்பாக நமது காரியங்களை சீர்செய்து ஆண்டவர் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள பரலோக உறவை செம்மைபடுத்துவதற்கு உதவியாக இருக்கும். உங்கள் உபவாச ஜெபங்களில் தாவீது ராஜாவைப் போல (சங் 139:23,24) நீங்களும் உங்கள் உள்ளங்களை ஆராய்ந்து பாருங்கள். ஒப்புரவாக வேண்டிய மக்களோடு ஒப்புரவாகி, நம்மால் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு அதற்குரிய நஷ்ட ஈடு கொடுத்து, நம்மை கஷ்டங்கள், கண்ணீருக்குள் மூழ்க வைத்த மக்களை அன்பாக மன்னித்து, பிறர் மேல் கொண்டுள்ள மனக்கசப்புகள், கோபங்கள், வைராக்கியங்கள் யாவையும் கர்த்தருக்குள் மன்னித்து மறந்து இவ்விதமாக உங்களது மனசாட்சியை நம் தேவனுக்கு முன்பாக களங்கமில்லாமல் காத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்களுடைய தனி ஜெப வேளை எத்தனை ஆனந்தமாக இருக்கிறது என்று நீங்களே சோதித்துப் பாருங்கள். ஒரு சிறிய மறைவான பாவம் கூட தேவனுடைய பரிசுத்த பிரசன்னத்தை நமக்கு மறைத்து நமது ஆனந்த ஜெப வேளையை இருட்டடிப்பு செய்து விடும்.

இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவ பிள்ளையே, நீ உபவாசித்து ஜெபித்து வருகின்றாயா ? "இவ்வகையான பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும்புறப்பட்டு போகாது (மாற் 9:29) என்று நம் அருமை இரட்சகர் கூறினார். நமது கிறிஸ்தவ வாழ்விலும் பெருமை, அன்பற்ற ஜீவியம், கோபம், எரிச்சல், கபடம், பெருந்தீனி, மாம்ச சிற்றின்ப ஆசை இச்சைகள் போன்ற பொல்லாத பிசாசுகள் குடிகொண்டிருக்கின்றன. இவைகள் விரட்டியடிக்கப்பட்ட நமக்கு உபவாசம் தேவை. இவ்வித பிசாசுகள் உபவாசம் ஒன்றுக்கு மாத்திரமே நடுநடுங்க கூடியவைகளாகும். உபவாசத்தின் மூலமாக சரீரம் ஒடுக்கப்படும் போது இந்த கொடிய சர்ப்பங்களின் விஷப் பற்களை நாம் சுலபமாக பிடுங்கி வீசலாம். புசியாமலும் குடியாமலும் தேவ சமுகத்தில் உபவாசம் இருந்து பாருங்கள்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.