Type Here to Get Search Results !

Thomas Bible Study in Tamil | ஜீவனத்தின் பெருமை | TV (தொலைக்காட்சி) | கடன் | Jesus Sam

========================
ஜீவனத்தின் பெருமை
(1 யோவான் 2:16)
======================
ஜீவனத்தின் பெருமை இந்நாட்களில் தேவபிள்ளைகளிடம், ஊழியர்களிடம் தலைவிரித்து ஆடுவதை காணலாம்.

ஜிவனத்தின் பெருமை வந்து விட்டால் மனிதன் தனது சக மனிதனை அடையாளம் கண்டு கொள்வதே இல்லை. எல்லா கிறித்தவ செல்வந்தர்களையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. எவ்வளவோ செல்வமிருந்த போதிலும் மிகுந்த தாழ்மையும், அன்புள்ளம் கொண்டவர்களுமான தேவ மக்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். கர்த்தருக்கே மகிமை.

ஜிவனத்தின் பெருமையும் தலைவிரித்து ஆடக்கூடிய ஒரு கொடிய பேய்தான். ஜிவனத்தின் பெருமை உள்ளவன் ஏழை, எளிய மக்களை அற்பமாக எண்ணுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் பெருமையும், அகங்காரமும் கொண்டதாக இருக்கிறது. அவன் தனது வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டால் ரஸ்தாவில் செல்லும் எந்த ஒருவரையும் அடையாளம் காண இயலாமல் அவரது கண்கள் மங்கலாகி விடுகின்றன. அவனது பெருமை தேவாலயத்துக்கும் நீண்டு செல்கின்றது ஆலயத்திலும் கூட அவன் தன் வசமுள்ள செல்போனில் பேசுகின்றான். வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் படைத்த மகத்துவம் பயங்கரமான தேவனுக்கு முன்பாக நாம் அமர்ந்திருக்கிறோம் என்ற பயபக்தி அவனுக்கு கிடையாது. தனது ஜீவசுவாசத்தை தனது கரத்தில் வைத்திருக்கும் (தானி 5:23) சர்வ வல்லவர்க்கு முன்னால் அமர்ந்திருக்கின்றோம் என்ற உணர்வு அவனுக்கு கொஞ்சமும் கிடையாது. அருகில் இருக்கும் மக்களோடு தேவாலயத்தில் சத்தமாக வாய் திறந்து பேசிக் கொண்டிருக்கிறான். இந்த தைரியம் அவனுக்கு எப்படி கிடைத்தது ? அவனது செல்வ செருக்கு அதை அவனுக்கு கொடுத்தது.

கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள் ஆராதனைக்கு பின்னர் ஆலய வளாகத்துக்குள் ஆங்காங்கு சிறு சிறு குடும்ப கூட்டமாக கூடிப் பேசும் மக்களின் வார்த்தைகளையும், நடபடிகளையும் கவனித்து பாருங்கள். ஆ எத்தனை பெருமையான வார்த்தைகள், எத்தனை மன மேட்டிமையான பேச்சுக்கள் ! அவர்களுடைய பேச்சு வார்த்தைகளில் பக்தி, பரிசுத்தத்திற்குரிய எந்த ஒரு வார்த்தையுமே இருக்காது. அந்த வாரம் முழுவதும் கர்த்தர் தங்களுக்கு பாராட்டிய இரக்கம், கிருபை பாதுகாவல், வழிநடத்துதல்கள் போன்றவற்றை பற்றி பேசி அவரை புகழ வேண்டிய அவர்கள் உலக காரியங்களே பேசிக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய குடும்ப அந்தஸ்துக்கும், கௌரவத்துக்கும் சரிசமமான குடும்பத்தோடும், மக்களுடனுமேயே தான் அவர்கள் பேசி உறவாடிக் கொண்டிருப்பார்கள். ஏழை குடும்பங்கள், வசதியற்ற மக்களை அவர்கள் கண்ணேறிட்டுப் பார்க்ககூட மாட்டார்கள்.

பெருமைக்கு அவர் முழுமையான எதிரியாவார். யாரிடத்தில் பெருமை காணப்படுகின்றதோ அந்த மக்களுக்கு அவர் பகைஞனாக இருந்து அவர்களை எதிர்த்து நின்று போராடுகின்றார் (யாக் 4:6). அந்த பெருமைக்காரனை வெகு தொலைவில் இருந்தே அவர் அடையாளம் கண்டு கொண்டு விடுகின்றார் (சங் 138:6)

ராஜஸ்தான் மாநிலத்தில் பிக்கானீர் என்ற பட்டிணத்தின் அரச அரண்மனையில் ராஜ குமாரர்கள் தாலாட்டப்பட்ட தங்க தொட்டில்களை நீங்கள் அங்கு சென்றால் இன்றும் பார்க்கலாம். மண்ணான மாந்தர்கள் தங்கத் தொட்டில்களிலே தாலாட்டப்பட்டிருக்க வானம், பூமி படைத்த கர்த்தர் தாழ்மையின் கோலமாக மாட்டுத் தொழுவத்தில் அவதரித்து சிலுவையின் மரண பரியந்தம் தன்னை தாழ்த்திக் கொண்டே சென்றார் (பிலி 2:8) மண்ணான மானிடரின் பாவக்கால்களை பற்றிப் பிடித்து அவைகளை கழுவி துடைத்து நாமும் இந்த உலகத்தில் எத்தனை தாழ்மையோடு ஜீவிக்க வேண்டும் (யோ 13:14,15) என்ற முன்மாதிரியை நமக்கு வைத்து சென்றுள்ளார்.

தேவ மக்களே, எந்த ஒரு காரியத்தை குறித்தும் பெருமை பாராட்டாதேயுங்கள். தேவனுடைய பார்வையில் நாம் மண்ணாகவும் (சங் 103:14) களிமண்ணாகவும் (ஏரே 18:6) தூளும் சாம்பலுமாகவும் (ஆதி 18:27) புழுவாகவும், பூச்சியாகவும் (யோபு 25:6, சங் 22:6) இருக்கும் போது பெருமை நமக்கு எதற்காக ?



=====================
துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்
நீதி 15:28
======================
வாட்ச்மென் நீ என்ற சீன தேசத்து பரிசுத்தவான் தனது புத்தகம் ஒன்றில் "நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதனை நமது வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளின் தன்மை எடையிட்டுக் காண்பிப்பதாயிருக்கின்றது" என்று கூறியுள்ளார்.

வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்தில் இருந்து புறப்பட்டு வரும். அவைகளே மனுஷனை தீட்டுப்படுத்தும் (மத் 15:18) என்று அருமை இரட்சகர் கூறினார். நமது வாயின் வார்த்தைகள் முதலில் இருதயத்தில்தான் தோன்றுகின்றன. அக்கிரமத்தின் நினைவுகள் இருதயத்தின் ஆழத்தில் பதுங்கி மறைந்து கிடக்கின்றன. பின்னர் அவை வாயின் வார்த்தைகள் மூலம் வெளிப்படுகின்றன.

இதை வாசிக்கும் நீ ஒரு கிறிஸ்தவ விசுவாசியா ? நீ இயேசுவின் பிள்ளையாயிருக்கும் பட்சத்தில் நீ கண்டிப்பாக மற்றவர்களைப் பற்றி ஒருக்காலும் பாவமான காரியங்களை பேசவே மாட்டாய்.

இயேசு இரட்சகர் தனது மானிட அவதார நாட்களில் ஒருபோதும் அவதூறான வார்த்தைகளோ, வசைச்சொற்களோ, வம்பு பேச்சுகளோ, வீண் வார்த்தைகளோ பேசியதே கிடையாது என்பது உனக்கு தெரியுமா ? காரணம் அவர் பரிசுத்தர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நமது தேவனாக அங்கீகரித்து நமது இதய நாயகராக கொண்டிருக்கும் பட்சத்தில் அவர் நடந்தபடியே நாமும் நடக்க வேண்டும் (1 யோ 2:6). தனி மனிதரின் பாவக்குற்றங்களை ஒருபோதும் அவர் கூறித் திரியவில்லை. ஜனங்களின் பாவங்களை அவர் மொத்தத்தில் சுட்டிக் காண்பித்து எச்சரித்து பேசினதை நாம் காண்கின்றோமே தவிர தனி நபர்களின் குற்றங்குறைகள் அவர் எடுத்து விவரித்தார் எங்கும் என்று நாம் பார்ப்பதில்லை. ஆனால் நாம் மற்றவர்களை பற்றி இழிவாக எவ்வளவு துணிச்சலுடன் வெட்கமின்றி பேசுகிறோம். மற்றவர்களைப் பற்றிய தப்பிதங்களையும், குற்றங்களையும், பாவங்களையும் பற்றி பேச பூவுலகில் ஒரே ஒருவருக்கு உரிமையுண்டானால் அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று நான் நினைக்கிறேன். ஆனால் அந்த அன்பின் கர்த்தர் கூட அவ்விதமாக செய்ய துணியவில்லை. விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட ஸ்திரியை அவருக்கு முன் நிறுத்துகின்றனர். உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன் (யோ 8:7) என்று அந்த ஸ்திரியை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கும்படி கொண்டு வந்த மக்களை பார்த்து ஆண்டவர் கூறுகின்றார். அவர் பாவமற்ற பரிசுத்தராயிருந்தும் அவள் மேல் கல்லெறியவில்லை. அந்த அன்பின் ஆண்டவர் நம்மை பார்த்து "உங்களில் பாவமில்லாதவன் எவனோ அவன் மற்றவர்களின் பாவங்களைக் குறித்து முதலில் பேசக்கடவன்" என்று கூறுகின்றார்.

கிறிஸ்தவர்களாகிய நமது பணி யாதெனில், தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை மற்றவர்களுக்கு கூறுவதை தவிர, மற்றவர்களின் பாவங்களையும், குற்றங்களையும் எடுத்துக்கூற நமக்கு தகுதியே கிடையாது. மற்றவர்களை நியாயந்திர்ப்பது நமது வேலையல்ல.

நீ யார் ? நீ எப்படிப்பட்ட நிலையிலிருக்கின்றாய் என்பதனை உனது சம்பாஷணை திட்டமாக காண்பித்து விடும். புறங்கூறுதல்களும், வீண் வம்பு வார்த்தைகளும் உன் வாழ்க்கையில் இடம் பெற்றிருக்கின்றனவா ? ஒரு கிறிஸ்தவனின் வாழ்வில் இவை ஒருக்காலும் இருத்தல் கூடாது. உன் வாழ்க்கையில் அவைகள் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் ஆவிக்குரிய ஒரு பெரிய ஆபத்தில் விளிம்பில் நீ இருக்கின்றாய் என்பதே அதின் பொருளாகும். கர்த்தர் தன்னுடன் வாசம் செய்ய வேண்டும் என்று வாஞ்சிக்கும் ஒரு மனிதனின் ஜீவியத்திலிருந்து இந்த விதமான தீய காரியங்கள் விரட்டியடிக்கப்படல் அவசியமாகும். நாம் நமது நாவுகளை கர்த்தருக்கு தியாக பலியாக அர்ப்பணம் செய்வோமாக.

கர்த்தாவே, யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? 
அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், *தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.* 
சங்கீதம் 15:1-3

சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். 
யாக்கோபு 4:11


======================
தேவ பிள்ளையே உன் கண்ணிரைத் துடைத்து கொள். கர்த்தர் உனக்கு நன்மையேயன்றி தீமை ஒரு போதும் செய்யார்
=======================
*தேவனே, எங்களைச் சோதித்தீர், வெள்ளியைப் புடமிடுகிறது போல எங்களைப் புடமிட்டீர்.*
*எங்களை வலையில் அகப்படுதி, எங்கள் இடுப்புகளின் மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். மனுஷரை எங்கள் தலையின் மேல் ஏறிப்போகப் பண்ணினீர், தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம், செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டு வந்து விட்டீர். சங்கீதம் 66:10-12*

மேலே உள்ள வசனங்களை பார்த்தால் ஒரு பெரிய சத்தியம் உங்களுக்கு புலப்படும். பரம கானானுக்குள் தம்முடைய அன்பின் பிள்ளையை கொண்டு வந்து சேர்ப்பதற்கு முன்னால் அவர் அந்த பிள்ளைக்கு செய்யக் கூடிய காரியங்களை கவனித்தீர்களா ? இவை யாவும் அந்த தேவ பிள்ளைகளுக்கு சம்பவித்த பின்னர்தான் செழிப்பான பரம கானான் தேசத்தில் அந்த அன்பு பிள்ளையை அந்த நல்ல தேவன் கொண்டு வந்து விடுகிறார்.

அன்னாளுடைய இருதயம் கர்த்தருக்குள் களிகூருவதற்கு முன்பு, அவளுடைய கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்து நிற்பதற்கு முன்னர் அவளுடைய சக்களத்தி அவளை துக்கப்படும்படியாக விசனப்படுத்துவதும், அவளை மனமடிவாக்க வேண்டியதும் கர்த்தருடைய பார்வையில் ஏற்றதாக காணப்பட்டது.

எகிப்தின் அரசனான பார்வோனுக்கு சரிசமமான சிங்காசனத்தில் யோசேப்பு அமர்வதற்கு முன்னர் அவனுடைய கால்களை விலங்கு போட்டு ஒடுக்குவதும், அவனுடைய பிராணனை இரும்பிலே அடையுண்டு கிடக்கபண்ணுவதும் அத்தியந்த அவசியம் என்பது அந்த சர்வ வல்லோனுக்கு தெரிந்திருந்தது அல்லவா ? (சங் 105:18)

430 ஆண்டு காலம் எகிப்து தேசத்திலே அடிமைகளாயிருந்த தம்முடைய சொந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரரை பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்துக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு முன்னர் தேவன் எகிப்தியரின் உள்ளத்தில் பேசி தம்முடைய ஜனத்தை உக்கிரமாக பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாக நடத்தவும் எகிப்தியரின் இருதயத்தை தேவனே மாற்றினார் என்று வேதத்தில் வாசிப்பதில்லையா ? (சங் 105:25)

இப்படித்தான் நம்முடைய வாழ்வில் நாம் இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும் சகல துன்ப துயரங்களும் ஓர் நாள் நமக்கு இன்பமாக மாறும்.

கண் பார்வையற்ற பிள்ளைகளின் பள்ளி ஒனறினுக்கு ஒரு மனிதர் ஒரு முறை சென்றிருந்தாராம். அந்த மனிதர் அந்த பிள்ளைகளின் வகுப்பு ஒன்றினுக்குள் சென்று "என் அருமை பிள்ளைகளே நீங்கள் எல்லாரும் கண் பார்வை இழந்த கபோதிகளாக இருக்கின்றிர்கள், உங்களை போன்ற வயதுடைய பிள்ளைகள் வெளி உலகில் நல்ல அழகான கண்களுடன் நல்ல காட்சிகளை கண்டு களிகூர்ந்து கொண்டிருக்கின்றார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்டார். உடனே அந்த வகுப்பு முழுவதும் மிகுந்த துயரத்தின் அமைதி நிலைவியது. கொஞ்ச நேரம் அந்த துயரம் தோய்ந்த பிள்ளைகள் என்ன பதில் கூறலாம் என்று யோசிக்கலாயினர். அந்த நேரம் அந்த வகுப்பிலுள்ள ஒரு பிள்ளை எழும்பி வந்து மேஜை அண்டை சென்று அதிலிருந்து ஒரு எழுதும் சாக் பீசை எடுத்து கரும் பலகையண்டை சென்று "ஆம் பிதாவே இப்படி செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது"(லூக் 10:21) என்று ஆரம்பத்தில் கேள்வி கேட்டவர் பிரமிப்படையும் விதத்தில் தன் பிஞ்சுக் கரத்தால் எழுதினாள். 

*வாசிக்கும் அன்பார்ந்த தேவ பிள்ளையே, நீ இப்பொழுது உன் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் சகல துன்ப துயரங்களும் உன்னை வெகு அன்பாக நேசித்த இரட்சா பெருமானின் கரங்களிலிருந்து உனக்கு அருளப்பட்டவையாகும்.**அந்த கண்ணற்ற கபபோதியான தேவ ஞானம் நிறைந்த சிறுமி கரும் பலகையில் எழுதினது போல நீயும் லூக் 10:21 ஆம் தேவ வசனத்தை உன் துயரங்களுடன் ஒன்று சேர்த்து அந்த தேவ வார்த்தையை அடிக்கடி உன் இருதயத்திற்குள் வாசித்து மட்டற்ற ஆறுதலையும், சமாதானத்தையும் நிச்சயமாக கண்டடையலாம்.

தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு சிறிய தீங்கை கூட ஒரு போதும் செய்யவே மாட்டார். தம்முடைய தாசனாகிய யாக்கோபுக்கு தீங்கு செய்யும் நோக்கத்தோடு தன் சகோதரர்களுடன் சென்ற லாபானிடத்தில் முந்திய இரவில் தேவன் "நீ யாக்கோபோடே நன்மையேயன்றி தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு (ஆதி 31:24) என்று சொன்ன நல்ல தேவன் உனக்கு எப்படி தீங்கு செய்வார் ? ஆனால் இன்று அவருடைய செயல்கள் தீங்கானவைகளைப் போலவும், நமக்கு எதிரிடையானவைகளைப் போலவும் நம் பாவக் கண்களுக்கு தெரியும் ‌ ஆனால் அதின் முடிவோ நித்திய ஜீவன்.

அவர் கர்த்தர். அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான். 
1 சாமுவேல் 3:18

பாடு அனுபவிக்கும் பரிசுத்த பிள்ளையே, நீ பாக்கியவான், பாக்கியவதி. உன் இக்காலத்துப் பாடுகளே உன்னை பத்திரமாக உன் இயேசு அப்பாவுடன் ஓர் நாள் வீண் வீடு கொண்டு சேர்க்கும். எனவே உனது சகல துன்ப துயரங்களுக்காகவும் உன் ஆண்டவனை ஆரவாரித்து ஸ்தோத்திரி. அவற்றை உனக்கு அளித்த ஆணி கடாவுண்ட அன்பின் கரங்களை உன் ஆசை தீர முத்தமிட்டு அவற்றை உன் மார்போடு அணைத்துக் கொள்.

======================
காற்று பலமாயிருப்பதை கண்டு பயந்தான்
(மத்தேயு 14-30)
=====================
பேதுரு இயேசுவை நோக்கி கடலில் நடந்த போது காற்று பலமாக இல்லை. ஆனால் இயேசுவை நோக்கி நடக்க நடக்க காற்று பலமாக வீசியது.

தேவ ஜனமே இயேசுவை நோக்கி ஆவிக்குரிய வாழ்க்கையில் நீ செல்லும் போது காற்று (உபத்திரவங்கள், பாடுகள்) வேகமாக வீசும். 

பேதுரு இயேசுவை நேசித்தான். அவன் விசுவாசத்தில் உறுதியாக இருக்க வில்லை. இயேசுவின் மேல் இருந்த அவனுடைய விசுவாசம் தடுமாறியது

இந்த காற்றை அனுப்பியவர் இயேசு. அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே (சங் 148-8) காற்றை தமது பண்டகசாலையில் இருந்து ஏவி விடுகிறார் (ஏரே 51-16). பேதுரு கடலில் நடந்த போது காற்றை (உபத்திரவம், பாடுகள்) பலமாக விச செய்தவர் கர்த்தர். இயேசு பேதுருவின் விசுவாசத்தை சோதித்தார்.

தேவபிள்ளையே கர்த்தர் அனுமதியாமல் எந்த உபத்திரவமும் உனக்கு வராது (யோபு). அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது கிருபையின்படி இரங்குவார் - புலம் 3-32

=======================
ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டிருப்பதை இன்றே நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்
========================
இப்பொழுது நம்முடைய இந்திய நாட்டின் ஜனத்தொகை சுமார் 120 கோடி ஆகும். எங்கும் ஜனத்திரள். கிராமங்களிலும், பட்டணங்களிலும் ஜனப்பெருக்கம் கணிசமாக உயர்ந்து விட்டது. பேருந்து ரயில் நிலையங்களில், மருத்துவமனைகள், கடைவீதிகள், சந்தைகள், அரசு அலுவலகங்களில் மக்கள் திருவிழா கூட்டமாக காணப்படுகின்றனர். பட்டணங்களின் வீதிகளையும், நடுத்தர சிறிய பட்டணங்களின் ரஸ்தாக்களையும் கூடக் கடப்பது என்பது இன்று அத்தனை இலகுவான காரியமல்ல. அத்தனை போக்குவரத்து நெரிசல்கள். எங்கும் ஜனசமுத்திரமாக மக்கள் வெள்ளம் அலை மோதுகின்றது.

அந்த ஜனத்திரளான மக்களின் வார்த்தைகளை கவனித்துக் கேளுங்கள். அந்த மக்களின் பேச்சுகளும், சம்பாஷனைகளும் எதை பற்றியதாக இருக்கிறது என்பதை நன்கு உற்று கவனியுங்கள். நீங்கள் மெய்யான தேவபிள்ளையானால் அவர்களின் பேச்சுகளால் சம்பாஷனைகளால் துயரமடைவீர்கள். காரணம் அவர்களின் அனைவரின் பேச்சும் அழிந்து போகும் மாய உலகதத்திற்கான பேச்சுகள் ஆகும். பணம் காசுகள் சம்பாதிப்பதை குறித்தும், வீடு வாசல்கள், நில புலன்களை குறித்தும், தங்கள் பிள்ளைகளின் கல்வி உத்தியோகங்களை குறித்தும், தங்கள் பெயர் புகழை குறித்தும், தங்கள் பிள்ளைகளுக்கு பெண் கொண்டு கொடுப்பதை குறித்தும், கதை கதையாக பெருமையோடு பேசிக் கொண்டு செல்வார்கள். சிலர் தங்கள் புதிய தங்க ஆபரணங்களை குறித்தும், மற்றும் சிலர் தங்கள் வஸ்திரங்களை குறித்தும் புகழ் பாடி சென்று கொண்டிருப்பர். அந்த மக்களுக்காக நாம் பரிதாபம் கொள்வதை தவிர வேறொன்றுமில்லை.

ஒருவருடைய வாயிலாவது தங்கள் அருமை இரட்சகரை பற்றிய வார்த்தை இருக்காது. தங்களுடைய இகலோக வாழ்வுக்கு பின்னர் தங்களுக்குள்ள மோச்சானந்த பாக்கியத்தை குறித்து பேச்சு இருக்காது. ஆண்டவர் இயேசு தங்களை ஒருநாள் சந்தித்து ஆட்கொண்ட அற்புத வரலாற்றின் களிகூறுதலின் நினைவு கூறுதல் இருக்காது.

ஓ அந்த முழு ஜனத்திரளும் எங்கே செல்கின்றது ? அந்தோ அவர்கள் யாவரும் ஒட்டு மொத்தமாக நரக பாதாளத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள். காரணம் ஜீவன் உள்ள தேவன் அவர்களின் ஒருவரையும் தம்முடைய பரம ராஜ்யத்திற்கு என்று தெரிந்து கொள்ளவில்லை தங்களுடைய மரணத்திற்கு பின்னர் பரிசுத்த கர்த்தராகிய தம்முடன் மோட்ச இன்ப வீட்டில் அவர்கள் வாழ்வதை அந்த அன்பின் இரட்சகர் விரும்பவில்லை. ஆ எத்தனை துயரமான காரியம்.

சர்வ வல்ல கர்த்தர் தமக்கு என்று உலகத் தோற்றத்திற்கு முன்பே மக்களை தெரிவு செய்து கொண்டு விடுகின்றார். எத்தனை ஆச்சரியம். வேதம் இப்படியாக சொல்லுகிறது "தேவன் எவர்களை முன்அறித்தாரோ அவர்களை நமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார். எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார் (ரோ 8:29,30)

இதை கருத்தோடு வாசிக்கும் எனக்கு அன்பான சகோதரனே, சகோதரியே நீ கர்த்தரால் முன்னறிந்த, முன்குறிக்கப்பட்ட, அழைக்கப்பட்ட தேவ பிள்ளைதானா ? உன் பெயர் ஆண்டவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்ற நிச்சயமான நம்பிக்கை உனக்கு உண்டா ? உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்
(லூக்கா 10:20) இந்த சந்தோஷம் உண்டா ?

ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டால் மட்டும் போதாது அது தேவனால் கிறுக்கி போடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் பாவம் செய்தால் நமது பெயர் ஜீவ புஸ்தகத்தில் இருந்து கிறுக்கி போடப்படும் - யாத்திராகமம் 32:30-33. ஜெய ஜீவியம் செய்யாவிட்டாலும் நமது பெயர் ஜீவ புஸ்தகத்தில் இருந்து கிருக்கி போடப்படும் (வெளி 3:5). ஆ எவ்வளவு பயங்கரம்.

உன் வாழ்க்கையில் கடந்த நாட்களில் நடைபெற்றிருந்த கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்கள் எல்லாவற்றையும் சரி செய்து, மனிதருக்கும் கர்த்தருக்கு முன்பாக உன் மனசாட்சியை சமாதானத்துடன் காத்துக் கொள். உன் பாவங்களில் இருந்து மனந்திரும்பு. மறுபடியும் பிறந்த நிச்சயமான பரிசுத்த அனுபவத்தை உடையவனாய் இரு. பரிசுத்த ஜீவியம் ஒன்றே உன் வாழ்வின் கதறலாக இருக்கட்டும். ஏனெனில் பரிசுத்தம் இல்லாமல் ஒருவரும் கர்த்தரை தரிசிப்பதில்லையே.


======================
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்
(கலாத்தியர் 6:7)
========================
கடந்த மாதம் ஒரு ஆவிக்குரிய தாய் துக்கத்தோடு ஒரு காரியத்தை பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுடைய மருமகள் அவர்களை மிகவும் கொடுமை படுத்துவதாகவும், எனது மகன் வீட்டிற்குகூட செல்ல முடியவில்லை எனக்காக ஜெபியுங்கள் சகோதரரே என்றார்கள். கடைசியில் ஒரு வார்த்தை சொன்னார்கள் "நான் எனது மாமியாருக்கு செய்ததை எனது மருமகள் எனக்கு செய்கிறாள்" என்றார்கள். ஆ எவ்வளவு உண்மை. 

ஆதி 27:15-29 ல் யாக்கோபு ஏசாவின் வஸ்திரங்களை உடுத்தி தன் தகப்பன் ஈசாக்கிடம் சென்று தான் ஏசா என்று கூறி ஆசிர்வாதங்களை பெற்று சென்ற சம்பவம் நம் அனைவருக்கும் தெரியும். சில வருடங்கள் கழித்து யாக்கோபு தன் மாமன் லாபான் இடம் ராகேலுக்காக 7 வருடம் ஆடு மேய்க்கிறான். 7 வருடம் முடிந்தவுடன் தன் மாமன் இடம் சென்று ராகேலை எனக்கு தர வேண்டும் என்று கேட்டான். லாபான் அனைவரையும் கூடி வரச்செய்து விருந்து பண்ணி இரவில் தன் குமாரத்தியாகிய லேயாளை அவனிடத்தில் விட்டான். அவன் அவளை சேர்ந்தான். காலையில் அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு லாபானை நோக்கி ஏன் எனக்கு வஞ்சகம் பண்ணினீர் ? ஏன் எனக்கு இப்படி செய்தீர் என்று கேட்டான். அந்த வேளையில் தகப்பனிடம் ஏசா என்று சொல்லி எமாற்றி ஆசிர்வாதங்களை பெற்ற சம்பவம் இவன் நினைவுக்கு கண்டிப்பாக வந்து இருக்கும். இவன் தகப்பனை ஏமாற்றினான். இவனை மாமன் ஏமாற்றினான். விதைத்தை அறுத்தான்.

யாக்கோபு வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவத்தையும் நாம் வேதத்தில் காணலாம். ஆதி 37:31-34 ல் யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை இஸ்மவேலருக்கு விற்ற பின்பு யோசேப்பின் அங்கியை ஒரு வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்தில் தோய்த்து யாக்கோபிடம் கொண்டு வந்து இது உமது குமாரன் யோசேப்பின் அங்கியா ? பாரும் என்றார்கள். அதைக் கண்ட யாக்கோபு தன் வஸ்திரங்களை கிழித்து கொண்டு புலம்பினான். யாக்கோபு தன் தகப்பனை ஏமாற்றினான். யாக்கோபை அவன் பிள்ளைகள் ஏமாற்றுகிறார்கள். ஆ எவ்வளவு பயங்கரம். எத்தனை வருடங்கள் சென்றாலும் இந்த உலகில் நாம் செய்த தீமைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

அமலேக்கின் ராஜா ஆகாகின் பட்டயம் ஸ்திரிகளை பிள்ளையற்றவர்களாக்கியது. தன் பட்டயத்தால் அவன் வாலிபரையும், பிள்ளைகளையும் ஒரு காலம் சங்காரம் பண்ணி வந்தான். அந்த ஆகாகு மற்றவர்களுக்கு என்ன செய்தானோ அதை சாமுவேல் தீர்க்கதரிசி அவனுக்கு செய்தான். சாமுவேல் தீர்க்கதரிசி அவனை கில்காலிலே துண்டித்து போட்டார் (1 சாமு 15:33)

கானின் ராஜாவாகிய அதோனிபேசேக்குக்கு யுத்தத்தில் ஜெயிக்கிற அரசர்களின் கை கால்களின் பெரு விரல்களை தறித்து விடுவான். அவன் 70 ராஜாக்களின் கை, கால்களின் பெரு விரல்களை தரித்து இருந்தான். இந்த அரசர்கள் அதோனிபேசேக் அரசனின் மேஜைக்கு கீழ் நாய்களை போல இருந்து மேஜையின் கீழ் விழுந்ததை பொறுக்கி தின்றார்கள். அதோனிபேசேக் ராஜாவை யோசுவாவின் சேனைகள் பிடித்த போது அவனுடைய கை, கால்களின் பெருவிரல்களை தறித்து போட்டார்கள். அந்த நேரம் அதோனிபேசேக் கூறிய வார்த்தைகள கவனியுங்கள் " நான் எப்படி செய்தேனோ அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார்" ( நியா 1-7)

ஆமானின் சம்பவம் நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். அவன் மொர்தெகாய் செய்த தூக்கு மரத்தில் அவனே தூக்கிலடபட்டான். ( எஸ்தர் 5-14, 6-4, 7-16)

சவுல் தாவீதை கொல்ல 2 முறை ஈட்டியை அவன் மேல் எறிந்தான் (1 சாமு 18-11). தாவீதை கொல்ல ஈட்டி அவன் தலைமாட்டில் இருந்த்தாக 1 சாமு 26-7 ல் வாசிக்கிறோம. ஆனால் அந்த சவுலின் முடிவு பட்டயத்தை நட்டி அதின் மேல் வீழுந்து தற்கொலை செய்கிறான் (1 சாமு 31-4).

பிரதானிகள், தேசாதிபதிகள் தானியேலை சிங்கங்கள் கெபியில் போட முயற்சி செய்தார்கள் (தானி 6-7) முடிவு அவர்களும், மனைவிகளும், பிள்ளைகளும் சிங்க கெபியில் போடபட்டார்கள் (தானி 6-24)

அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்
நீதி 22:8

தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர் 
சங்கீதம் 62:12

அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள் யோபு 4:8

இப்படிபட்ட தீமைகள் மற்றவர்களுக்கு செய்ய காரணம்:- 
1) தேவபயம் இல்லாமை. 
கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள் (நீதி் 16-6)

2) செய்கிற கெட்ட கிரியைக்கு தக்க தண்டனை உடனே கிடைக்காமை

துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது (பிரசங்கி 8:11)

தேவ ஜனமே உன் வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு இப்படிபட்ட அநியாயங்கள் நீ செய்திருந்தால் தேவ சமுகத்தில் அதை அறிக்கை செய்து இயேசுவின் இரத்தத்தால் கழுவபடு.


========================
மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையை கண்டேன் 
பிரசங்கி 3:10
=========================
ஒருவன் இரட்சிக்கபட்டால் உபத்திரவம் இல்லை, பாடுகள் இல்லை, செழிப்பு, ஆசிர்வாதம், ஆட்டம், பாட்டம்தான் என்று போதிக்கிறார்கள். செழிப்பின் உபதேசம் பெருகி இருக்கிற காலம் இது.

இயேசு சொன்னார் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, திடன்கொள்ளுங்கள் -
யோ 16:33

இந்த இறுதி நாட்களில் கர்த்தருடைய பிள்ளைகள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் அனுபவிக்கும் பாடுகளுக்கு கணக்கு கிடையாது. உபத்திரவங்கள் என்ற சுளகினால் இன்று கிறிஸ்தவ பரிசுத்த குடும்பங்களை சத்துருவாகிய பிசாசு புடைத்து கொண்டிருக்கின்றான் (லூக் 22-31)

கஷ்டபட்டு படித்து பட்டம் பெற்றும் பிள்ளைகள் வேலைகள் கிடைக்காமல் பல்லாண்டு காலமாக கண்ணிரோடு காத்திருக்கின்றனர். திருமணமாகி ஆண்டுகள் பல கடந்து சென்று விட்ட போதினும் கர்ப்பத்தின் கனிகள் இல்லாமல் கண்ணிரோடு துயரத்தில் முழ்கியிருக்கும் தேவ மக்கள் கணக்கில் அடங்கார்கள். குடும்பங்களில் திருமண வாழ்வு இல்லாமல் எத்தனை எத்தனையோ பிள்ளைகள் கர்த்தரின் முகம் நோக்கி காத்திருக்கின்றனர். எல்லா சீரும், சிறப்பும், வசதிகளும் வாய்ப்புகளும் இருந்த போதிலும் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் வீண் சந்தேகங்கள் காரணமாக அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் பேச்சு வார்த்தைகள் இல்லாமல் சாவு வீடு போல ஆண்டுக்கணக்காக அமைதியில் மூழ்கி கிடக்கின்றன. பெற்றோர் சொல்லுக்கு கீழ்படியாத, மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போதை பொருட்களுக்கு அடிமையான பிள்ளைகள் எத்தனையோ குடும்பங்களில் இருக்கின்றனர். பெற்ற பிள்ளைகளால் கைவிடபட்டு தனித்து வாடும் பெற்றோர் கணக்கில் அடங்கார்கள். எதிர்பாராத மரணங்களின் மூலமாகவும், கணவனால் கைவிடப்பட்ட நிலையிலும், மனைவியால் தள்ளப்பட்ட நிலையிலும் கண்ணிரோடு தனித்து வாழும் எத்தனையோ மக்கள் உண்டு. வேலை பார்க்கும் பிள்ளைகள் மேல் அதிகாரிகளாலும் உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களாலும் துன்பபடுத்தபடுகிறார்கள்.

பொரும்பாலான குடும்பங்களில் வியாதி மக்களை வாட்டி வதைக்கின்றன. கர்த்தருடைய பிள்ளைகள் பல வியாதிகளால் தாக்குண்டு வேதனை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர. கிறிஸ்தவ குடும்பங்களில் சரியான வருமானங்கள் இல்லாததால் பசி, பட்டினி, வறுமை, கடன் தொல்லைகள் போன்றவற்றால் வாடி தவிக்கின்றனர். எல்லா வசதிகளையும் பெற்ற ஜசுவரியமுள்ள குடும்பங்களில் சாத்தான் வேறு கண்ணிரின் பிரச்சனைகளை கொண்டு வந்து வைத்திருக்கின்றான்.

எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது
(சங் 40-12) என்று பக்தனாகிய தாவீது சொல்கிறான்.

சாத்தானுடைய ஆதிக்கத்திலுள்ள பூமியில் நாம் நிம்மதியாக இளைப்பாற இயலாது. அதின் காரணமாகத்தான் நமது அருமை இரட்சகரும் துக்கம் நிறைந்தவரும், பாடுகள் அனுபவித்தவருமாக இந்த உலகத்தை கடந்து செல்ல வேண்டியதானது (ஏசா 53:2) அப்போஸ்தலர்கள் எல்லாரும் பாடுகள் வழியாக பரலோகம் சென்றவர்கள் (அப்போ 14:22). தேவ மக்களுக்கு பூலோகத்திலும் இளைப்பாறுதல், பரலோகத்திலும் இளைப்பாறுதலுக்கு சத்துருவாம் பிசாசு அத்தனை இலகுவாக சம்மதிப்பானா ? தன்னால் முடிந்த அளவு கர்த்தருடைய பிள்ளைகள கசக்கி பிழிந்து விடுகின்றான். இந்த பாழுலகில் நாம் நிம்மதியாக இளைப்பாற இயலாது காரணம் இந்த பிரபஞ்சம் (உலகம்) சாத்தானுக்குரியது. "உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது" (1 யோ 5:19) என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது.

கர்த்தாவின் கல்வாரி இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட பரிசுத்த தேவ ஜனத்திற்கு இந்த உலகத்தில் இளைப்பாறுதல் கிடையாது. அவர்களுடைய இளைப்பாறுதல் பரலோகத்தில் மாத்திரமே உள்ளது. எனவேதான் எபிரேயர் நிருப ஆக்கியோன் "தேவனுடைய ஜனத்திற்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது (எபி 4:9) என்று எழுதி வைத்தார்.


=====================
TV (தொலைக்காட்சி)
=======================
“உனது பரிசுத்தத்திற்கு தக்கதாக உனது வெற்றி வாழ்வு அமையும்” “According to your holiness so shall be your success” என்றார் ஸ்காட்லாந்து தேச பரிசுத்த பக்தன் மர்ரே மச்செயின் (Murray McCheyne) என்பவர். உண்மையும், சத்தியமுமான வார்த்தைகள். நமது கிறிஸ்தவ பக்தி வாழ்வில் தேவனுடைய பரிசுத்த ஐக்கியத்திலிருந்து நம்மை பிரிக்கக்கூடிய எந்த ஒரு காரியத்திற்கும் நம்மை தேவ பெலத்தால் விலக்கிக் காத்துக் கொள்ளும் போது தேவன் நம்மை அநேகருக்கு ஆசீர்வாதமாக எடுத்து பயன்படுத்துவார். அன்பின் ஆண்டவருடைய உறவிலிருந்து நம்மை துண்டாடிப் போட சத்துருவாகிய பிசாசானவன் இந்த கடைசி நாட்களில் தனது கரத்தில் எடுத்திருக்கும் மகா பயங்கரமான ஆயுதம் தொலைக்காட்சி ஆகும். இந்த தொலைக்காட்சி என்ற சாதனத்தின் மூலமாக சாத்தானாம் பிசாசு கோடிக்கணக்கான மக்களை எரி நரகத்திற்கு மிகவும் எளிதாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றான். இந்தக் கடைசி நாட்களில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடுகளே கிடையாது. சத்துருவானவன் ஒவ்வொரு வீட்டிற்கும் காசு பணம் இல்லாமலே தொலைக்காட்சி பெட்டிகளை முற்றும் இலவசமாக பலவந்தமாகக் கொடுத்து அவர்களை அழிவுக்கு நேராக வழிகாட்டி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றான். இதில் முற்றும் அடிமைப்பட்டிருக்கும் மக்கள் கிறிஸ்தவர்களே. வசதியான கிறிஸ்தவ மக்கள் தொலைக்காட்சி பெட்டிக்கு மாற்றாக படங்களை மிகவும் பெரிதாக காண்பிக்கும் கருந்திரை போர்ட்டுகளை தங்கள் வீட்டின் உட்காரும் அறையின் சுவரில் மாட்டி வைத்திருக்கின்றார்கள். அதின் காரணமாக அந்த வீடே ஒரு குட்டி திரை அரங்கமாக மாறியிருக்கின்றது. கரும் பெட்டிக்குத் தேவையான கேபிள் கனெக்க்ஷன் கொடுத்துவிட்டால் முழு உலகமே வீட்டுக்குள் வந்து விடும். விருத்தாப்பியர்கள் முதல் பாலகர் வரை யாவரும் அந்த திரைக்கு முன் ஆசை ஆவலாக அமர்ந்திருக்கின்றனர். சிறுவர், சிறுமியர், இளம் வயதுள்ளோர் வருடத்தின் குறிப்பிட்ட மாதங்களில் தெருக்களில் ஆனந்த களிப்போடு விளையாடும் கடந்த கால நாட்களின் அழகான விளையாட்டுகள் கோலாட்டம், கும்மி, சடுகுடு, கிளித்தட்டு, போன்றவைகள்எல்லாம் எப்பொழுதோ மாயமாய் மறைந்துவிட்டன. அந்த இடத்தை இப்பொழுது கம்பியூட்டர் விளையாட்டுகள் (Computer Games) ஆக்கிரமித்து விட்டன.

தங்கள் உலகப்பிரகாரமான வேலைகளிலிருந்து ஓய்வு பெற்ற பெரும்பாலான கிறிஸ்தவ விருத்தாப்பிய மக்களுக்கு மீதமுள்ள தங்கள் சொற்பமான விலையேறப்பெற்ற காலத்தை இரவும், பகலும் மிகவும் இலகுவாக வீணடித்து பாழாக்குவதற்கு தொலைக்காட்சியைவிட வேறு எந்த சாதனங்களும் கிடையாது. இரவில் நீண்ட மணி நேரம் வரை அவர்கள் தொலைக்காட்சி முன்னர் தங்கள் நேரத்தை செலவிடுகின்றார்கள். நாம் கேட்டால் “நாங்கள் சினிமா எல்லாம் பார்க்கமாட்டோம், உலகச் செய்திகள் நமக்கு அவசியம் தானே, ஆகையால் செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு உடனே பெட்டியை மூடிவிடுவோம்” என்கின்றார்கள். எத்தனை ஜாலமான வார்த்தைகளை ஆத்தும அழிம்பனாம் பிசாசு அவர்கள் வாயிலிருந்து பேசுகின்றான் பாருங்கள்! அந்தச் செய்திகளை பார்த்து முடிப்பதற்குள் எத்தனை விளம்பரங்கள்? எத்தனை தேவையில்லாத நமது இருதயத்தை கறைப்படுத்தும் காட்சிகளை எல்லாம் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கின்றது? நமது ஆத்துமாக்களை தேவ அன்பிலிருந்து துண்டாடிப் போட அவைகளே போதுமானதாக உள்ளதே!

ஓய்வு நாட்களில் சபையார் ஆலயத்தின் முதல் காலை ஆராதனையில் கடமைக்காக துரிதம் துரிமாக கலந்து கொண்டு விட்டு எத்தனை ஜாக்கிரதையாக தொலைக்காட்சியில் வரும் சினிமா தொடர்களைப் பார்ப்பதற்கு தொலைக்காட்சி முன் வந்து அமருகின்றார்கள். 

கடந்த 16/4/23 அன்று ஒரு ஊழியர் (முழு நேர ஊழியர்) வீட்டிற்கு சென்று இருந்தேன். அவர் குடும்பத்தோடு உட்கார்ந்து IPL match பார்த்து கொண்டு இருந்தார். கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரரின் பெயரையும் சொல்லி அந்த போட்டியில் இவர் சிறப்பாக ஆடினார் என்று பாஸ்டர் கிரிக்கெட் வீரர்களை புகழ்ந்து பேசினார். அடியேன் விரைவாக அந்த இடத்தை விட்டு கடந்து சென்றேன். எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. எல்லாம் தகுதியாய் இராது (1 கொரி 6:12) எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாம் பக்தி விருத்தியை உண்டாக்காது (1 கொரி 10:23) என்பதை தேவ பிள்ளைகள் மறக்க கூடாது. கிரிக்கெட் பார்ப்பது நமக்கு தேவபக்தியை உண்டாக்காது.

புற்று நோயால் பீடிக்கப்பட்டு மரணத்தின் விழிம்பில் இருந்த ஒரு வயதான கிறிஸ்தவ மனிதரை நான் காணச் சென்றிருந்தேன். தனது இறுதி மணி நேரத்தில் அவர் முழங்கால்களில் நின்று தன்னை தேவனுடைய நித்திய இளைப்பாறுதலுக்கு பயத்தோடும், நடுக்கத்தோடும், கண்ணீரோடும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பார் என்று நான் அதிகமாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், நான் அவரது வீட்டிற்குச் சென்று அவரது அறைக்குள் பிரவேசித்தபோது நான் கண்ட காட்சி என்னை நடு நடுங்கப்பண்ணுவதாக இருந்தது. ஆம், அவர் படுக்கையில் இருந்தவாறே நல்ல பூரண மன நிலையோடு அந்த நாட்களில் நடந்து கொண்டிருந்த உலகக் கால் பந்துப் போட்டியை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வந்ததைக் குறித்து அவருக்கு அத்தனை மகிழ்ச்சி ஏற்படவில்லை. காரணம், தனது சுவையான நிகழ்ச்சியை கவனிப்பதற்கு நான் இடையூறாக இருக்கின்றேன் என்பதை அவர் அதிகமாக உணர்வதாக எனக்குத் தெரிந்தது. நான் அதிக கால தாமதம் பண்ணாமல் அந்த மனிதருக்கு அன்பின் ஆண்டவரை கண்ணீரோடு உடனே நோக்கிப் பார்க்கவும், அவரை அண்டிக்கொள்ளவும் ஆலோசனை கூறி ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்துவிட்டு விரைவாக வெளியே வந்து விட்டேன். அவர்களுடைய மனைவி, பிள்ளைகள் கிறிஸ்தவ தேவாலய கல்லறைத் தோட்டத்தில் அந்த மனிதருடைய சடலத்தை மரித்த பின் எந்த இடத்தில் அடக்கம் செய்யலாம் என்று இடம் தேடிக் கொண்டிருப்பதாக என்னிடம் சொன்னார்கள். எத்தனை துயரம் பாருங்கள்! ஆ, சாத்தான் தேவ ஜனத்தை எத்தனையாக தொலைக்காட்சி மூலமாக தன் வசமாக்கிக் கொண்டான்!

தேவ ஜனமே, தொலைக்காட்சிக்கு முன்பாக நீங்கள் செலவிடும் நேரத்தை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடுங்கள். திரண்ட தேவ ஆசீர்வாதம் காண்பீர்கள். அநேக கிறிஸ்தவர்கள் “நாங்கள் தொலைக்காட்சியில் வரும் அருமையான கிறிஸ்தவ பாடல்கள், பிரசங்கங்கள், சாட்சிகள், ஜெபங்கள், ஆண்டவரைத் துதித்துப்பாடி ஆர்ப்பரிக்கும் ஆடல், பாடல் பரவசக்காட்சிகளை எல்லாம் கண்டு ஆனந்திக்கின்றோம்” என்கின்றார்கள். நன்றாகப் பார்த்து ஆனந்தித்து மகிழுங்கள். ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பொன்னான காலத்தை ஆண்டவருடைய பாதங்களில் அல்ல தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் மட்டும் செலவிடுகின்றீர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுடைய ஆத்துமாவுக்கு எந்த ஒரு ஆசீர்வாதத்தையும் கொண்டு வராது. ஒரு பரிசுத்தவான் இப்படிச் சொன்னார் Time spent with God, Time well spent. “தேவனோடு செலவிடப்பட்ட நேரம் பயனுள்ளவிதமாக கர்த்தருடைய நாம மகிமைக்காக செலவிடப்பட்ட நேரமாகும்”. தொலைக்காட்சியில் வரும் உலக செய்திகளையோ அல்லது கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையோ பார்த்துவிட்டு ஜெபத்திற்காக உங்கள் முழங்கால்களை தேவ சமூகத்தில் முடக்குங்கள். உங்களால் ஜெபிக்க முடியாமல் தேவனுடைய பிரசன்னம் உங்களை விட்டு விலகியிருப்பதை நீங்கள் நிச்சமயமாக உணருவீர்கள். நீங்களே உங்கள் மட்டாக இதை சோதித்துப் பார்த்து நலமானதை தெரிந்து கொள்ளுங்கள்.



==========
கடன்
============
*நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் - உபா 28:12*

மெய்யான கர்த்தருடைய பிள்ளைகள் கூடுமானவரை கடன் வாங்குவதைத் தவிர்ப்பார்கள். உண்மையான ஒரு தேவ பிள்ளைக்கு கடன் வாங்குவது என்பது உடம்பை எல்லாம் நடுங்க வைக்கும் கண்ணீரின் காரியமாகும். ஒரு தேவபிள்ளை வீட்டில் வறுமை பயங்கரமாயிருந்தது. அன்று விறகு வாங்க பணம் இல்லை. எவரிடத்திலும் கடன் வாங்க மனமற்று விறகுக்குப் பதிலாக தங்கள் வீட்டிலுள்ள தையல் மிஷினின் மர முடியையும், பிள்ளைகளின் தொட்டில் கட்டும் வர்ணங்கள் பூசப்பட்ட அழகான தொட்டில் கம்பையும் உடைத்து அடுப்பு எரித்ததாக நான் பத்திரிகையில் வாசித்தேன்.

கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை (நீதி 22:7) அடிமைக்கு நிம்மதியும், சமாதானமும் இருக்காது. மெய்தான். கடன்பட்டவர்கள் சமாதானமற்றவர்கள். தங்களுக்கு கடன் கொடுத்தவர்களை பற்றிய பயமும், திகிலும் அவர்களை எப்பொழுதும் ஆட்கொண்டிருக்கும். வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் கடன்காரர்களின் தொல்லை தாங்காமல் பூண்டோடு தற்கொலை செய்து மடிந்த குடும்பங்கள், மற்றும் தனி நபர்களின் எண்ணிக்கையை நாம் கணக்கிட முடியுமோ ?

கடன் மிகவும் ஆபத்தானது. "கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கி கொள்ள வந்தான் (2 இராஜ 4:1)" என்று ஏழை விதவை ஒருத்தி எலிசா தீர்க்கனிடன் அபயக்குரல் எழுப்புவதை நாம் காணலாம். பழைய ஏற்பாடு காலத்தில் கடன்பட்டவர்கள் தங்கள் கடனை செலுத்தாத பட்சத்தில் அவர்களின் பிள்ளைகளை கூட கடன் கொடுத்தவர்கள் அடிமைகளாக பிடித்து செல்லும் மகா கொடுரமான வழக்கம் இருந்ததாக நாம் காண்கிறோம். கடன் கொடுத்தவன் கடன் வாங்கினவனை அடித்து உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக் கொடுத்து சித்திரவதை செய்து கடனை வசூலிக்கும் வழக்கம் புதிய ஏற்பாடு காலத்தில் இருந்திருப்பதை நாம் காணலாம் (மத் 18:34)

இந்த உலகத்தில் நீ கடன் பட்டிருந்தால் ஆண்டவரின் இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளபட முடியாது என்று ஒரு போதகர் எங்கள் சபையில் செய்தி கொடுத்தார். அந்த கடன் உன்னை கீழே இழுக்கும் என்று கூறினார். உண்மைதான்.

அருமையான தேவபிள்ளையே , ஆட்டுக்குட்டியானவரின் மாசற்ற தூய இரத்தத்தால் உங்கள் பாவங்கள் கழுவி சுத்திகரிக்கப்பட்ட காரியம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் அனைத்து கடன்களையும் கட்டாயம் கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது மொத்ததமாகவோ உங்கள் திராணிக்கேற்றபடி செலுத்தி விட வேண்டும். அந்த கடன்களை அடைக்க ஆண்டவருடைய ஒத்தாசையை நொறுங்குண்ட இருதயத்தோடு தேடுங்கள். அவர் உங்களுக்கு தப்பாமல் உதவி செய்வார். கூடுமானவரை ஒருவருக்கும் கடன் படாதிருங்கள்.

முட்டையிடும் கோழி தன் முதல் முட்டையை எங்கே இடுகின்றதோ அங்கேதான் தனது அடுத்த முட்டையை இடுவதற்கு மிகவும் ஆவல் கொள்ளும். ஒரு முறை கடன் வாங்கிய மனிதன் திரும்பவும் திரும்பவும் கடன் வாங்கவே பெரிதும் ஆவல் கொள்ளுவான். ஆரம்பத்திலிருந்தே கடன் வாங்காதிருப்பதே நல்லது.

முடிவுரையாக ஞானமுள்ள பிள்ளைகளுக்கு நான் கடனை பற்றி எழுதும் காரியம் என்னவெனில் "எப்பொழுதும் உன் வரவுக்கு மிகவும் உட்பட்டே செலவு செய்"

*ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் - ரோ 13:8*


=========================
நீர் உமது வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்க மாட்டீர், மரித்து போவீர்
(ஏசா 38:1)
==========================
ஏசாயா தீர்க்கன் மூலமாக ஆண்டவர் எசேக்கியா ராஜாவுக்கு சொன்ன வார்த்தைகளை நாம் மேலே பார்க்கின்றோம். மேற்கண்ட வார்த்தைகள் எசேக்கியா ராஜாவுக்கு மாத்திரமேதான், அவைகள் எனக்கல்ல என்று நாம் நினைத்து விடக்கூடாது. அவைகள் நம் ஒவ்வொருவருக்காகவும் கூறப்பட்டவைகளாகும்

"உமது வீட்டு காரியத்தை ஒழுங்குபடுத்தும்" என்று தீர்க்கதரிசி ராஜாவுக்கு சொன்னாரே, அந்த வீட்டுக்காரியம் யாது ? தனக்குள்ள சொத்து சுகங்களை தனது பிள்ளைகளைக்கு பாகப்பிரிவினை செய்து கொடுப்பதும், தனது மரணத்திற்கு பின்னர் தனது மக்களும், குடும்பத்தினரும் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? எந்தெந்த ஸ்தானங்களில் நின்று காரியங்களை கவனிக்க வேண்டும் என்ற ஒழுங்கு பிரமாணங்களை குடும்பத்தினருக்கு கொடுப்பது எல்லாம் வீட்டுக் காரியம் ஆகிவிடாது. இங்கே ஆண்டவர் குறிப்பிடுவது பிரசங்கி 12:5 ஆம் வசனத்தில் காணப்படும் "நித்திய வீட்டை" குறித்த காரியமாகும். தேவனால் ஆயத்தம் செய்யப்பட்டுள்ள கைவேலையில்லாத பரம வாசஸ்தலத்துக்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்ய வேண்டும். மரித்தால் அந்த நித்திய வீட்டில் குடியேற வசதியாக தனது தனிப்பட்ட வாழ்வில் உள்ள காரியங்களை தேவனுக்கு முன்பாக பூமியிலே சரி செய்து கொள்ள வேண்டும்.

நாம் ஒழுங்கு செய்ய வேண்டிய காரியங்கள்:- வாங்கின கடன்களை எல்லாம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் (சங் 37:21). யாரைக் குறித்தாவது மனக்கசப்பு, பகைமை, பழிவாங்க வேண்டுமென்கிற எண்ணம், வெறுப்பு இருந்தால் அவர்களுடன் நல்மனம் பொருந்தியாக வேண்டும். ஒப்புரவாக வேண்டியவர்களுடன் ஒப்பரவாக வேண்டும் (மத் 5:24) யாருக்காவது எதையாவது செய்வேன் என்று வாக்களித்திருந்தால் அதை நிறைவேற்றியாக வேண்டும் (சங் 15:4) யாரிடமிருந்தாவது அநியாயமாக அவர்களது பொருளை நம் வசப்படுத்தியிருந்தால் அல்லது மற்றவர்களுடைய பொருட்கள் அவர்களுக்கு கொடுக்கப்படாமல் நம் வீட்டிலேயே நீண்ட நாட்கள் இருக்குமானால் அவைகளை உடனடியாக அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். அப்பொழுதுதான் நம் அருமை இயேசு தகப்பனோடு ஒரே வீட்டில் தங்கும் ஆனந்த பாக்கியம் பெறுவோம் (லூக் 19:8)

அரசாங்கத்திடமிருந்து கை நிறைய சம்பளம் பெற்றும் நல்மனச்சாட்சியோடு தேவனுக்கு பயந்து வேலை செய்யாமல் சக பணியாளர்களோடு சேர்ந்து வீண் அரட்டை அடிப்பவர்கள் தங்கள் காரியங்களை தேவனுக்கு முன்பாக சரி செய்து கொள்ள வேண்டும். தேவ ஊழியம் என்ற போர்வையில் மிஷனரிகள் தங்களது இரத்தத்தை சிந்தி தோற்றுவித்த திருச்சபைகளை தங்களுக்கு ஆதாயம் தரும் வியாபார ஸ்தலங்களாக மாற்றி, அதை கள்ளர் குகையாக்கி தங்களது வாழ்க்கையை ஒட்டி செல்லும் பாஸ்டர்களும், ஆயர்களும், பேராயர்களும் முதற் காரியமாக மனந்திரும்ப வேண்டும் (யோவான் 3:3)

தங்கள் உள்ளம் முழுமையும் கபடமும், சூதும், நரித்தந்திரங்களும், பண ஆசையும், விபச்சார மயக்கமும் மற்ற சபை மக்களை தீண்டத்தகாதவர்களை போல அற்பமாக எண்ணி நடத்தும் கொடிய பரிசேய ஆவியும், அகந்தையிலும், ஆவிக்குரிய பெருமையிலும் ஜீவிக்கின்ற பாஸ்டர்கள் தங்கள் நிலையிலிருந்து மனந்திரும்பி தங்கள் பரலோக வீட்டுக் காரியங்களை ஒழுங்கு படுத்த வேண்டும்.

ஏன் இவ்விதமாக நாம் காரியங்களை ஒழுங்கு படுத்த வேண்டும் ? தேவனுக்கு பிரியமில்லாத வழிகளிலே நாம் தொடர்ந்து வாழ்ந்தால் என்ன ? அதற்கான விடையும் தேவனுடைய வார்த்தை உடனே நமக்கு கொடுக்கின்றது. "நீர் பிழைக்கமாட்டீர்" என்பதே அந்த பதில். மரணம் நமக்கு தப்பாமல் உள்ளது. மரணத்திற்கு நாம் தப்ப இயலாது. மரணத்திற்கு பின்னால் இந்த காரியங்களை ஒழுங்கு செய்ய இயலாது
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.