Type Here to Get Search Results !

Thomas Sermon Bible Study | மண்ணாசை | ஜீவனத்தின் பெருமை | சரீர முயற்சி அற்பபிரயோஜனம் | Jesus Sam

=======================
நீங்கள் கர்த்தரோடிருந்தால் அவர் உங்களோடிருப்பார்
2 நாளா 15:2
நாம் கர்த்தரோடு இருந்தால் நமது வாழ்க்கையில் காணப்படும் காரியங்கள்
==============================
*1) நாம் கர்த்தரோடிருந்தால் நமது வாழ்க்கை ஒரு ஜெப வாழ்க்கையாக இருக்கும்* நாம் படுத்திருக்கும் அறையை இரா ஜாமங்களிலும், நள்ளிரவு, விடிபகல் நேரங்களிலும் யாராவது பார்த்தால் நாம் முழங்காலூன்றி பரத்துக்கு நேராக நமது கரங்களை தளராது விரித்து ஜெபத்தில் போராடிக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பார்கள். நமது படுக்கை அறையின் விளக்குகள் இராக்காலங்களில் ஜெபத்திற்காக அவ்வப்போது எரிவதை மற்றவர்கள் எளிதாக காணலாம். தானியேல் தினமும் 3 வேளை ஜெபிப்பததை பிரதானிகளும், தேசாதிபதிகளும் கண்டார்கள் என்று தானி 6:11 ல் காணலாம். தேவ ஜனமே நீ ஜெபிப்பதை உனது கணவன்/மனைவி பிள்ளைகள் பார்க்க முடிகிறதா ? தானியேலை போல நீயும் தினமும் 3 வேளை ஜெபி.

*2) நாம் கர்த்தரோடிருந்தால் நமது கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு உபவாச ஜெப வாழ்க்கையாக இருக்கும்* ஜெபமும் உபவாசமுமே ஒரு சாதாரண மனிதனை தேவ மனிதனாக உருவாக்குகின்றது.  
எத்தனையோ தேவ மக்களுக்கு ஒரு வேளை உணவை விட்டுவிடுவது என்பது எட்டிக்காயின் மகா கசப்பான அனுபவமாகும். சரியாக அந்தந்த நேரத்துக்கு ஆகாரம் அவர்களுடைய வயிற்றுக்குள் சென்றாக வேண்டும். அநேகரை சாத்தான் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் உபவாசம் என்ற வார்த்தையையே அவர்களது ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வின் அகராதியிலிருந்து கிறுக்கிப் போடுகின்றான். நீ உபவாசம் எடுத்த காலம் எல்லாம் முடிந்து விட்டது விட்டது. இனி உனது உடல் நிலையானது உபவாசத்துக்கு ஒத்து வராது. இப்படி எல்லாம் சாத்தான் வஞ்சனையான போதனை கொடுத்து உபவாசத்தை முறித்து போடுவான். நமக்கு எத்தனை வயதாகிவிட்டது ?அன்னாள் தீர்க்கதரிசி 84 வயதில் கூட உபவாசம் இருந்ததாக (லூக் 2:37) வேதாகமத்தில் நாம் பார்க்கின்றோம். மனித வாழ்நாட் காலத்தின் கடைசி எல்லைக் கோடான 80 வயதையும் (சங் 90:10) தாண்டி நின்ற அந்த பரிசுத்த வாட்டிக்கு உபவாசம் அத்தனை தேவை என்றால் நமக்கு எத்தனை அதிகமான உபவாசம் அவசியம்! தேவ சமுகத்தில் உபவாசமிருந்து அதின் காரணமாக மடிந்து போனதாக எந்த ஒரு பரிசுத்தவானை குறித்தும் திருச்சபையின் சரித்திரத்தில் எழுதப்பட்டதற்கு ஆதாரமே கிடையாது.

*3) நாம் கர்த்தரோடிருந்தால் நமது வாழ்க்கை தேவன் நமக்கு அருளிய பரிசுத்த வேதாகமத்தை நாள் முழுவதும் தியானிக்கும் ஒரு தியான வாழ்க்கையாகவே இருக்கும்* "உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன் ! நாள் முழுவதும் அது என் தியானம் (சங் 119:97) என்றார் தாவீது ராஜா. ஆண்டவரை அதிகமாக நேசிக்கிற ஒரு தேவ பிள்ளைக்கு தேவனுடைய வசனம் தேனிலும் தேன் கூட்டில் இருந்து ஒழுகும் தெளி நேரிலும் மதுரமாக இருக்கின்றது (சங் 19:10) அந்த தேவ வசனம் அளிக்கும் மிகுந்த சமாதானத்தில் (சங் 119:165) அது ஆறுதலோடும், அமைதலோடும் வாழ்கின்றது. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 
சங்கீதம் 1:2

*4) நாம் கர்த்தரோடிருந்தால் நாம் நம் ஆண்டவரை இயேசுவைப் போல மாற பெரிதும் வாஞ்சிப்போம்* முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவ மார்க்கம் ஆண்டவருடைய சீடர்களில் ஒருவரான தோமாவால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டும் அது அத்தனையான பலன் தரவில்லை. 2019 ஆனபோதிலும் அதின் வளர்ச்சி 2.5% வீதத்தில்தான் உள்ளது. காரணம் தேசத்தந்தை காந்தியடிகள் சொன்னது போல நாம் ஒவ்வொருவரும் ஒரு சின்ன இயேசுவாக புறமதஸ்தர்க்கு முன்பாக வாழ்ந்து காட்டத் தவறிவிட்டோம். கிறிஸ்து இயேசுவை போல் நாம் வாழும் வாழ்வே இன்று உலகுக்கு தேவை. 

லித்தாவிலும், சாரோனிலும் குடியிருந்தார்கள் எல்லாரும் அவனை (பேதுருவை) கண்டு கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் (அப்போ 9:35) என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. பேதுருவின் பிரசங்கத்தை கேட்டு கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் என்று எழுதப்படாமல் பேதுருவை பார்த்து கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் என்று கர்த்தருடைய வசனம் பேசுகின்றது. நாம் நமது வாழ்வில் இரட்சகர் இயேசுவை பிரதிபலித்தது காட்ட வேண்டும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள். 
ஏசாயா 60:3

"கிறிஸ்து இரட்சகரைப் போல வாழ்வதே கிறிஸ்துவைப் பிரசங்கிப்பதாகும்" (Live Christ is to preach Christ) என்றார் ஒரு தேவ பக்தன்.

நாம் பிரவேசிக்க போகிற இந்த 2023 ஆம் ஆண்டில் நாம் வெறுமனே பேச்சிலும், எழுத்திலும் நம் இயேசுவை மற்ற புறமதஸ்தருக்கு காண்பிப்பதைவிட நமது பரிசுத்தமான வாழ்வின் மூலமாக இரட்சகரை காணச் செய்வோம். நம்மை சுற்றியுள்ள மக்கள் நம்மில் எதிர் நோக்குவது இயேசுவை போன்று நாம் வாழும் வாழ்க்கையேயல்லாமல் வேறொன்றும் இல்லை.


============
மண்ணாசை
=============
ரஷ்ய எழுத்தாளரான டால்ஸ்டாய் தனது கதைகள் ஒன்றில் "ஒரு தனி மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை" என்பதை குறித்து ஒரு கதை எழுதுகிறார். ஒரு அரசன் தன் நாட்டில் மக்களுக்கு முற்றும் இலவசமாக நிலம் கொடுப்பதாகவும், ஒரு மனிதன் எவ்வளவு வேண்டுமானாலும் தன் நாட்டில் நிலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அரசன் பறை சாற்றினான். தனக்கு நிலம் பெற ஒரு மனிதன் அந்த அரசனிடம் சென்றான். "உன்னால் எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடி நீ ஓடிய நிலத்தை எல்லாம் உனக்கு சொந்தமாக எடுத்துக் கொள்ளலாம்" என்று அரசன் கூறினான். பேராசை கொண்ட கொண்ட மனிதன் விடியற்காலை கோழி கூவும் நேரத்திலிருந்து தனது ஓட்டத்தை ஆரம்பித்து சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வரை ஒய்வு எடுக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான். சூரியன் அஸ்தமிப்பதற்குள் அவன் தன் ஓட்டத்தை முடித்துவிட வேண்டும் என்பது ராஜ கட்டளை. அவன் சூரியன் மேல் வானில் மறையும் முன்னர் தன்னால் முடிந்த அளவில் விரைந்து ஓடினான். ஆனால் அவன் தனது கடுமையான களைப்பில் காரணமாக தீடிரென்று சுருண்டு கீழே விழுந்து மாண்டு போனான். உடனே அரசன் 6 அடி நீளமுள்ள குழி வெட்டச் சொல்லி அதில் அவனை புதைக்க கட்டளையிட்டு " ஒரு மனிதனுக்கு தேவையான நிலம் ஆறு அடி மாத்திரமே தான்" என்று கூறினான். அந்த மனிதன் காலை முதல் மாலை வரை நிலத்துக்காக ஓடிய ஓட்டம் எல்லாம் விருதா. அந்த மனிதனுக்கு தேவையான 6 அடி நிலம் மரணத்துக்குப் பின் எப்படியாவது கிடைத்தே தீரும். அதற்காக அவன் கஷ்டப்பட்டு பாடுபட வேண்டிய அவசியமே கிடையாது. ஒரு மனிதன் அகண்ட உலகம் முழுவதையும் தனக்கு சொந்தமாக ஆதாயப்படுத்தி வைத்திருந்தாலும், இறுதியில் அவன் அடங்கி போவது 6 அடி நீளமுள்ள புதை குழி மாத்திரமேதான் என்று டால்ஸ்டாய் கதையில் குறிப்பிடுகிறார்.

ஆகாப் இஸ்ரவேலை அரசாண்ட ஒரு பெரிய அரசன். அவனுக்கு எவ்வளவோ நிலங்கள் தேசத்திலே இருந்தன. ஆனால் தனது அரண்மனை அருகில் இருந்த ஏழை மனிதன் நாபோத்தின் சிறிய திராட்சை தோட்டத்தின் மேல் அவன் ஆசை விழுந்தது. நாபோத் தனது நிலத்தை ஆகாப் அரசனுடைய விருப்பபடி அவனுக்கு கொடாதபடியால் நாபோத் கொலை செய்யப்பட்டு அவனது நிலம் ஆகாப் அரசனுக்கு போய் சேர்ந்தது. ஆனால் ஆகாப் அரசன் தான் கொலை செய்து எடுத்த நாபோத்தின் நிலத்தை பண்படுத்தி அதிலே தனது மனவிருப்பப்படி கீரை பயிரிடுவதற்கு முன்பாகவே தேவன் ஆகாப் அரசனின் உயிரை அவனிலிருந்து வாங்கி போடுவதை 1 இராஜா 21ம் அதிகாரத்தில் நாம் காணலாம். மண்ணாசை மனிதனை மாய்த்து விடும்.

மண்ணாசை கொண்ட மனிதன் தனக்காக நிலபுலன்களை அங்கும் இங்குமாக வாங்கிச் சேர்க்கின்றான். இறுதியில் அவைகள் எல்லாம் அதற்காக பிரயாசப்படாத வேறு மனிதர்களுக்கு இலவசமாகப் போய் சேருகின்றது. ஒரு மனிதனுக்கு தேவை ஒரு வீடு. ஆனால் ஆசை கொண்ட மனிதன் தனக்கு பல வீடுகளைக் கட்டுகின்றான்.

மகா அலெக்சாண்டர் உலகம் முழுவதையும் வெற்றி கொண்டு தான் ஜெயிப்பதற்கு வேறு நாடுகள் இல்லையே என்று புலம்பியதாக கூறப்படுகிறது. அப்படி உலகம் முழுவதையும் அவன் ஜெயித்தபோதிலும் அவன் தன்னோடு கொண்டு சென்றது ஒன்றுமில்லை. சவப்பெட்டியில் தனது கரங்கள் இரண்டையும் மக்களுக்கு தெரியும்படியாக வெளியே வைக்க வேண்டும் என்று அவன் கேட்டு கொண்டான். அதின் காரணத்தை அலெக்சாண்டரிடம் கேட்ட போது "அலெக்சாண்டர் வெறுங்கையனாக வந்து வெறுங்கையனாகவே மரிப்பதாகவும், அவன் தனது கரங்களில் ஒன்றையும் எடுத்து செல்லவில்லை என்பதை மக்கள் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்" என்று கூறினான்.

மண்ணிலிருந்து மனிதன் எடுக்கப்பட்டபடியால் அவன் மண்ணை பெரிதும் விரும்புவதில் வியப்பு ஒன்றுமில்லை.

சாத்தானுடைய தந்திரங்களில் பிரதானமான ஒன்று மனிதனுக்கு திருப்தியை கொடாதிருப்பது. அத்துடன் தேவன் கொடுத்த திருப்தியையும் கூட எப்படியாவது பறித்துக் கொள்வதே அவனது குறிக்கோள் ஆகும்.


===============
ஜீவனத்தின் பெருமை
1 யோ 2:16
===============
ஜீவனத்தின் பெருமை இந்நாட்களில் தேவபிள்ளைகளிடம், ஊழியர்களிடம் தலைவிரித்து ஆடுவதை காணலாம்.

ஜிவனத்தின் பெருமை வந்து விட்டால் மனிதன் தனது சக மனிதனை அடையாளம் கண்டு கொள்வதே இல்லை. 
எல்லா கிறித்தவ செல்வந்தர்களையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. எவ்வளவோ செல்வமிருந்த போதிலும் மிகுந்த தாழ்மையும், அன்புள்ளம் கொண்டவர்களுமான தேவ மக்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். கர்த்தருக்கே மகிமை.

ஜிவனத்தின் பெருமையும் தலைவிரித்து ஆடக்கூடிய ஒரு கொடிய பேய்தான். ஜிவனத்தின் பெருமை உள்ளவன் ஏழை, எளிய மக்களை அற்பமாக எண்ணுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் பெருமையும் அகங்காரமும் கொண்டதாக இருக்கிறது. அவன் தனது வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டால் ரஸ்தாவில் செல்லும் எந்த ஒருவரையும் அடையாளம் காண இயலாமல் அவரது கண்கள் மங்கலாகி விடுகின்றன. அவனது பெருமை தேவாலயத்துக்கும் நீண்டு செல்கின்றது ஆலயத்திலும் கூட அவன் தன் வசமுள்ள செல்போனில் பேசுகின்றான். வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் படைத்த மகத்துவம் பயங்கரமான தேவனுக்கு முன்பாக நாம் அமர்ந்திருக்கிறோம் என்ற பயபக்தி அவனுக்கு கிடையாது. தனது ஜீவசுவாசத்தை தனது கரத்தில் வைத்திருக்கும் (தானி 5:23) சர்வ வல்லவர்க்கு முன்னால் அமர்ந்திருக்கின்றோம் என்ற உணர்வு அவனுக்கு கொஞ்சமும் கிடையாது. அருகில் இருக்கும் மக்களோடு தேவாலயத்தில் சத்தமாக வாய் திறந்து பேசிக் கொண்டிருக்கிறான். இந்த தைரியம் அவனுக்கு எப்படி கிடைத்தது ? அவனது செல்வ செருக்கு அதை அவனுக்கு கொடுத்தது.

கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள் ஆராதனைக்கு பின்னர் ஆலய வளாகத்துக்குள் ஆங்காங்கு சிறு சிறு குடும்ப கூட்டமாக கூடிப் பேசும் மக்களின் வார்த்தைகளையும், நடபடிகளையும் கவனித்து பாருங்கள். ஆ எத்தனை பெருமையான வார்த்தைகள், எத்தனை மன மேட்டிமையான பேச்சுக்கள் ! அவர்களுடைய பேச்சு வார்த்தைகளில் பக்தி, பரிசுத்தத்திற்குரிய எந்த ஒரு வார்த்தையுமே இருக்காது. அந்த வாரம் முழுவதும் கர்த்தர் தங்களுக்கு பாராட்டிய இரக்கம், கிருபை பாதுகாவல், வழிநடத்துதல்கள் போன்றவற்றை பற்றி பேசி அவரை புகழ வேண்டிய அவர்கள் உலக காரியங்களே பேசிக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய குடும்ப அந்தஸ்துக்கும், கௌரவத்துக்கும் சரிசமமான குடும்பத்தோடும், மக்களுடனுமேயே தான் அவர்கள் பேசி உறவாடிக் கொண்டிருப்பார்கள். ஏழை குடும்பங்கள், வசதியற்ற மக்களை அவர்கள் கண்ணேறிட்டுப்
 பார்க்ககூட மாட்டார்கள்.

பெருமைக்கு அவர் முழுமையான எதிரியாவார். யாரிடத்தில் பெருமை காணப்படுகின்றதோ அந்த மக்களுக்கு அவர் பகைஞனாக இருந்து அவர்களை எதிர்த்து நின்று போராடுகின்றார் (யாக் 4:6). அந்த பெருமைக்காரனை வெகு தொலைவில் இருந்தே அவர் அடையாளம் கண்டு கொண்டு விடுகின்றார் (சங் 138:6)

ராஜஸ்தான் மாநிலத்தில் பிக்கானீர் என்ற பட்டிணத்தின் அரச அரண்மனையில் ராஜ குமாரர்கள் தாலாட்டப்பட்ட தங்க தொட்டில்களை நீங்கள் அங்கு சென்றால் இன்றும் பார்க்கலாம். மண்ணான மாந்தர்கள் தங்கத் தொட்டில்களிலே தாலாட்டப்பட்டிருக்க வானம், பூமி படைத்த கர்த்தர் தாழ்மையின் கோலமாக மாட்டுத் தொழுவத்தில் அவதரித்து சிலுவையின் மரண பரியந்தம் தன்னை தாழ்த்திக் கொண்டே சென்றார் (பிலி 2:8) மண்ணான மானிடரின் பாவக்கால்களை பற்றிப் பிடித்து அவைகளை கழுவி துடைத்து நாமும் இந்த உலகத்தில் எத்தனை தாழ்மையோடு ஜீவிக்க வேண்டும் (யோ 13:14,15) என்ற முன்மாதிரியை நமக்கு வைத்து சென்றுள்ளார்.

தேவ மக்களே, எந்த ஒரு காரியத்தை குறித்தும் பெருமை பாராட்டாதேயுங்கள். தேவனுடைய பார்வையில் நாம் மண்ணாகவும் (சங் 103:14) களிமண்ணாகவும் (ஏரே 18:6) தூளும் சாம்பலுமாகவும் (ஆதி 18:27) புழுவாகவும், பூச்சியாகவும் (யோபு 25:6, சங் 22:6) இருக்கும் போது பெருமை நமக்கு எதற்காக ?


=======================
காலம் செல்லச் செல்ல பூலோக பிடிப்புகளை தளர்த்தி கொள்ளுங்கள்
========================
ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக, மனிதன் பறவைகளைப் போல வான வீதியிலே பறக்க பெரிதும் ஆசைப்பட்டான். தனது கரங்கள் இரண்டிலும் இரு முறங்களை அழுத்தமாக கட்டிக் கொண்டு ஒரு உயரமான மலை உச்சியிலிருந்து குதித்து பிறந்ததிலிருந்து அவனது பறக்கும் ஆசை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கியது. வாயுக்கள் நிரப்பப்பட்ட பெரிய பலூன்களின் அடியில் கட்டப்பட்டிருந்த கூடையில் அமர்ந்து வான வீதியில் மிதப்பதும் அவனுக்கு பரவச அனுபவமாக இருந்தது. தான் அமர்ந்திருந்த கூடையில் உள்ளபல பொருட்களை கீழே போட்டு போட்டு வானில் அவன் மேலே, மேலே செல்லத் தொடங்கினான். அப்படியே பரிசுத்த வாழ்வில் முன்னேறிச் செல்லவும் பரம வாழ்வுக்கு நம்மை பங்காளிகளாக்கவும் அனுகூலமாக நமது பூலோக வாழ்வில் நம்மை கிடுக்கி பிடி போட்டு மட்டுப்படுத்தி வைத்திருக்கும் குறிப்பிட்ட சில காரியங்களின் பிடிப்பை தளர்த்த தேவ பெலத்தோடு நாம் பிரயாசப் பட வேண்டும்.

பரலோக நித்திய இளைப்பாறுதலை வாஞ்சித்து கதறும் நாம், பாரமான யாவற்றையும் தள்ளி, நமது விசுவாச ஓட்டத்தை ஓட வேண்டும். உலக மக்களைப் போன்று விசுவாச மக்களாகிய நாம் உலகத்தை முழுக்க முழுக்க அனுபவித்து அதின் மயக்கத்தில் உழன்று கொண்டு இருக்கக் கூடாது. ஆரம்ப காலத்தில் அந்த மயக்கங்களில் நாம் இருந்திருந்தாலும் காலப்போக்கில் அதன் மேல் உள்ள பிடிப்புகளை நாம் கட்டாயம் தளர்த்தியே ஆகவேண்டும்.

ஆகாரங்களை நாள் முழுவதும் ஆசை ஆவலோடு ஆரம்ப காலத்தில் புசித்து அதற்கு அடிமைப்பட்டுக் கிடந்தால் இனி கிரமமாக பெலன் கொடுக்க மாத்திரம் ஏற்ற வேளைகளில் உண்டு அதன் மேலுள்ள பிடிப்பை தளர்த்த வேண்டும். கணவன், மனைவி குடும்ப வாழ்விலும் இருவரின் முழுமையான மனம் நிறைந்த ஒத்துழைப்போடு அந்த இல்லற இன்ப பற்றுகளின் பிடிப்பைத் தளர்த்தி பரிசுத்தத்தில் வளர இடம் கொடுக்க வேண்டும். அப்படியே பிள்ளைகளை அதிகமாக நேசித்தல், கர்த்தரை நேசிக்க வேண்டிய இடங்களில் இதர உலக விக்கிரங்களை வைத்து வணங்கிக் கொண்டிருக்கும் காரியங்களில் எல்லாம் நமது பிடிப்புகள் தளர்த்தப்பட்டே ஆக வேண்டும்.

கர்த்தரை முகமுகமாய் தரிசித்த மோசேயை குறித்து வேதத்தில் நான் வாசித்த போது ஓரிடத்தில் பெரிதும் ஆச்சரியமடைந்தேன். 430 ஆண்டுகள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலரை அவன் அழைத்துக் கொண்டு பாலும் தேனும் ஓடுகின்ற கானான் தேசத்திற்கு புறப்பட்டு செல்கின்றான். தனக்கு மனைவி மக்கள் இருப்பதால் மாமனார் வீடு சென்று அவர்களையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நினைவு கூட அவருக்கு இல்லாமற் போயிற்று. எத்தனை ஆண்டுகள் மனைவி மக்களைப் விட்டுபிரிந்து தனித்து இருந்தாரோ நமக்குத் தெரியவில்லை. திரும்பவும் குடும்பத்தோடு ஒன்று சேர வேண்டும். குடும்பத்தோடு இணைந்து சந்தோசம் அனுபவிக்க வேண்டும். இல்லற இன்பத்தில் திளைக்க வேண்டும் என்ற உலக வாஞ்சைகள் எல்லாம் சற்றும் அவருக்கு இருந்தது போல தென்படவில்லை. நாமாக இருந்தால் முதல் காரியமாக மனைவி மக்களை தேடி ஓடுவோம். நமது காரியம் அப்படித்தான். ஆனால் தேவ மனிதருக்கு அந்த ஆசை, ஏக்கம், தவிப்பு எல்லாம் எப்பொழுதோ அவரிடமிருந்து விடைபெற்று சென்று விட்டது. தனது மருமகன் மோசே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துக்கொண்டு கானான் தேசத்திற்கு புறப்பட்டு செல்கின்றார் என்பதை மாமனாகிய எத்திரோ கேள்விபட்டு பெற்ற மகளையும், பேரக் குழந்தைகள் இருவரையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு அவர்களை மோசேயிடம் ஒப்படைக்க அழைத்துச் செலுகின்றார் (யாத் 18:1-3). கிறிஸ்தவ பரிசுத்த ஜீவியத்தில் வளர வளர இவ்விதமான லோகத்தின் பாசப் பிணைப்புகள் எல்லாம் தானாகத் தளர தொடங்கிவிடும்.

தனது கண்களுக்கு கவர்ச்சியான பெண்களை எல்லாம் ஆரம்பத்தில் தனக்கு சொந்தமாக தெரிந்து கொண்டு அந்த சிற்றின்ப மயக்கத்தில் மூழ்கித் திளைத்த தாவீது ராஜா இறுதியில் தனக்கு அளிக்கப்பட்ட இஸ்ரவேல் முழுமைக்குமான அழகு சௌந்ததர்யவதியாம் அபிஷாக்கை மனத்தளவிலும் கூட விரும்பவில்லையே! காரணம் அவரது பரிசுத்த வளர்ச்சி உலக மாய்கையின் பிடிப்புகளை தெறிபட்டுப் போகச் செய்து விட்டது (1 இராஜ 1:1-4).

அப்படியே நாமும், நம்மை பூமியோடு உருவ குத்தி நசுக்கி வைத்திருக்கும் உலக மாயையின் காரியங்களை உதறித் தள்ளி பவுலைப் போல கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டு, குப்பையுமாக எண்ண தேவ பெலத்தை கட்டாயம் நாட வேண்டும்.


============================
தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய் தூஷிக்கபடுகிறதே
ரோ 2:24
=============================
நெல்லை மாவட்டத்தின் தென் பகுதிகளில் கிறிஸ்தவ மக்கள் சுவிசேஷ ஊழியங்களுக்காக இந்து மக்கள் நிறைந்த கிராமங்களுக்குச் சென்றால் "மிகவும் சீர்கெட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் கிறிஸ்தவர்களிடத்தில் நீங்கள் போய் பிரசங்கம் பண்ணி அவர்களை முதலில் நல்வழிப்படுத்துங்கள். அவர்களைவிட நாங்கள் எவ்வளவோ மேலான, முன் மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்" என்று சொல்லி அவர்களை தடுத்து நிறுத்தி அனுப்புகின்றார்களாம். எத்தனை துயரமான காரியம் பாருங்கள்!

ஜீவனுள்ள தேவனாம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவண்டை புற மதஸ்தர் வருவதற்கு இன்று அஞ்சி நடுநடுங்குகின்றனர். அதின் ஒரே காரணம், கிறிஸ்தவ மக்களின் சாட்சியற்ற சீர்கெட்ட வாழ்க்கையாகும். 

ஒரு கிறிஸ்தவ மிஷன் ஆஸ்பத்திரியில் பணி செய்து கொண்டிருந்த ஒரு இந்து டாக்டரிடம் ஒரு சுவிசேஷகர் வந்து ஆண்டவர் இயேசுவைப் பற்றிச் சொன்னபோது அந்த பெண் மருத்துவர் சொன்ன வார்த்தை இதுதான் "நீங்கள் சொல்லுகின்ற இயேசுவை நான் நேசிக்கின்றேன். அவருடைய நல்ல போதனைகள், பாவிகளை இரட்சிக்க அவர் மானிட அவதாரம் எடுத்து தன்னுடைய ஜீவனையே சிலுவையில் கொடுத்து அவர்களில் அன்புகூர்ந்த செயல் எல்லாம் என் உள்ளத்தை அதிகமாகத் தொட்டிருக்கின்றது. ஆனால், எனது வீட்டிற்கு அருகில் என்னுடன் வேலை பார்க்கும் கிறிஸ்தவ டாக்டர் ஒருத்தி இருக்கின்றாள். அவளும் ஒரு இயேசுவை கும்பிடுவதாகச் சொல்லுகின்றாள், கோவிலுக்கு எல்லாம் போகின்றாள். ஆனால், அவள் வணங்கும் இயேசு மட்டும் எனக்கு வேண்டவே வேண்டாம்" என்று சொன்னார்களாம். அந்த கிறிஸ்தவ பெண் டாக்டரின் வாழ்க்கையைக் கவனித்த அந்த இந்து மருத்துவர் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்ற அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டது. கிறிஸ்தவ மக்களின் சாட்சியற்ற வாழ்வைப் பாருங்கள்!

ஒரு இடத்தில் உயர் பட்டாதாரி ஆசிரியர்களின் மேல் படிப்புக்கான ஒரு அரசாங்க தேர்வு நடந்து கொண்டிருந்திருக்கின்றது. அவர்களை மேற்பார்வையிட வந்த அரசு மேலாளர் அவர்களை கண்காணிக்க கவனம் செலுத்தாததால் தேர்வு எழுதியவர்கள் எல்லாரும் தங்கள் புத்தகங்களைத் திறந்து வைத்து ஒட்டு மொத்தமாக காப்பி அடித்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லாரும் புறமதஸ்தர். அவர்கள் நடுவே ஒரு கிறிஸ்தவரும் மற்றவர்களைப் போல தன்னுடைய புத்தகத்தை திறந்து வைத்து பார்த்து எழுதியிருக்கின்றார். அவர் ஒரு கிறிஸ்தவ மிஷன் பாடசாலையின் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். ஒவ்வொரு நாளும் காலையில் தனது பள்ளியின் அசெம்பளியில் மாணவ மாணவியருக்கு கிறிஸ்தவ போதனை கொடுக்கும் ஆசான் அவர். அவருடைய வாழ்வின் முன் மாதிரியைக் கவனித்தீர்களா? அரசாங்கம் அளிக்கும் சம்பள உயர்வுக்காக இந்தவித சாட்சியற்ற காரியத்தை அவர் செய்திருக்கின்றார். அவருடன் தேர்வு எழுதிய புறமதஸ்தரான மற்ற ஆசிரியர்கள் அவர் வழிபடும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஸ்தானத்தைக் கொடுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

மேற்கண்ட காரியத்தைவிட மிகவும் கொடிய காரியத்தை மற்றொரு கிறிஸ்தவ மிஷன் பாடசாலையின் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செய்திருக்கின்றார். தனது கரத்தின் கீழ் கல்வி பயிலும் ஒரு மாணவியுடன் தவறாக நடந்து அவளைக் களங்கப்படுத்திய காரணத்திற்காக அந்த கிறிஸ்தவ தலைமை ஆசிரியரை பொது மக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றார்கள். அத்துடன் அவரைக் குறித்து அருவருப்பாக நோட்டீஸ்கள் அச்சிட்டு யாவரும் வாசிக்கும் வண்ணமாக பட்டணத்துச் சுவர்களில் ஒட்டியிருக்கின்றார்கள். இவையெல்லாம் உண்மைச் சம்பவங்கள். இந்தக் காரியங்களை எல்லாம் பார்க்கின்ற புறமதஸ்தர் கிறிஸ்தவ மக்களையும் அவர்கள் வழிபடுகின்ற ஜீவனுள்ள தேவனையும் எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்கின்றீர்கள்! எத்தனை கொடிய வேதனையான காரியம் பாருங்கள்.

ஒரு கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் ஏராளமான மக்கள் கூடியிருக்கின்றனர். அவர்களில் அநேக புறமதஸ்தர்களும் உண்டு. அந்த நாளில் அங்கு அடக்கம் செய்யப்பட்ட ஒரு கிறிஸ்தவ ஸ்திரீயைக் குறித்து அவர்களில் பலர் பேசிக்கொண்ட ஒரு காரியம் அந்த ஸ்திரீ தான் உயிரோடிருந்து அரசாங்க வேலையிலிருந்த நாட்களில் பொது மக்களிடம் தாராளம், ஏராளமாக வாங்கிக் குவித்த லஞ்சத்தைக் குறித்துத்தான். அந்த ஸ்திரீ கொடிய நோயால் பாதிக்கப்பட்டு மரணக் கட்டிலில் இருந்த நாட்களில் தன்னை வந்து பார்க்க வந்த தன்னுடன் வேலை பார்த்த அரசு ஊழியர்களிடம் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்கள் மக்களிடம் இலஞ்சம் வாங்க வேண்டாம் என்றும், தனக்கு நேர்ந்த கதி அவர்களில் ஒருவருக்கும் வரக்கூடாது என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாகவும் கல்லறைத் தோட்டத்தில் பேசிக் கொள்ளப்பட்டது. ஆ, இன்று கிறிஸ்தவ அரசு அதிகாரிகள் தங்களுடைய பணி காலங்களில் எத்தனையாக மக்களிடம் லஞ்சம் வாங்கிக் குவித்து நிலபுலங்களை வாங்கி, பல அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி சாட்சியற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மக்களின் வாழ்க்கையைப் பார்க்கின்றவர்கள் எப்படி கிறிஸ்தவர்களாகத் துணிவார்கள்?

ஒரு நாள் மாலை நேரம் வீட்டிலிருந்து புறப்பட்டு நான் கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஆண்டவருடைய தேவாலயம். அதை ஒட்டி அமைந்திருந்த தேவாலயத்தின் சபா மண்டபத்தில் அன்று ஒரு ஆவிக்குரிய கூட்டம் அங்கு நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் எழுப்பப்பட்ட ஸ்தோத்திர தொனிகள் மற்றும் அல்லேலூயா ஆர்ப்பரிப்புகள் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. எனக்கு எதிரே ரஸ்தாவில் இரண்டு மனிதர்கள் வந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அந்த மனிதர்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து "மேலே பார், குதிப்பான், கூத்தாடுவான், சத்தம் போடுவான். பின்னர் இல்லாத அக்கிரமங்களை எல்லாம் செய்வான். அக்கிரமங்களைச் செய்துவிட்டு அவனுடைய ஆண்டவனிடத்தில் போய் ஒரு மன்னிப்பும் கேட்டுவிடுவான். அவன் ஆண்டவனும் அதை உடனே மன்னித்துவிடுவான். திரும்பவும் அக்கிரமம் செய்வான். மறுபடியும் ஆண்டவனிடத்தில் வந்து மன்னிப்பு கேட்பான். இவன்களும், இவன்களுடைய ஆண்டவனும்" என்று பரிகாசம் செய்து கொண்டு செல்லும் வார்த்தைகள் என் காதுகளில் தெளிவாக விழுந்தன. கிறிஸ்தவர்களையும், அவர்கள் வழிபடும் ஜீவனுள்ள தேவனையும் புறமதஸ்தர் எந்தக் கண்ணோட்டத்தில் வைத்துப் பார்க்கின்றார்கள், எந்த ஸ்தானத்தில் அவர்களை வைத்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா?

கிறிஸ்தவ குடும்பத்தில் மாமனுக்கு விரோதமான கசப்புணர்ச்சியின் காரணமாக அவருக்கான ஆகாரங்களை அடுத்த வீட்டில் வசிக்கும் மாமனாருக்கு கிறிஸ்தவ மறுமகள் இரு வீடுகளுக்கும் இடையே நிற்கும் கோட்டைச் சுவரில் வைக்கின்றாள். மனைவி இல்லாத அந்த மனிதர் அந்தச் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு காலிச் சாப்பாட்டுத் தட்டை கோட்டைச் சுவரில் வைத்துவிடுகின்றார். காலை, மாலை, இரவுச் சாப்பாடுகள் எல்லாம் கோட்டைச் சுவருக்கே வந்துவிடும். அந்தந்த நேரத்தில் அந்த மனிதர் அவைகளை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு காலித் தட்டை கழுவி கோட்டைச் சுவரில் வைத்துவிட வேண்டும். கல்லை, மண்ணைக் கும்பிடுகின்றார்கள் என்று நாம் சொல்லும் மக்கள் மத்தியில் கூட இப்படிப்பட்ட அநியாயங்களை நாம் காணவியலாது! மகா பயங்கரம்!!

ஆ, எத்தனை எத்தனையான கொடிய காரியங்கள் எல்லாம் இன்று கிறிஸ்தவ மக்கள் மத்தியில் தாராளமாக நடந்து கொண்டிருக்கின்றன. கடலில் காயம் உரசுவது போன்று ஓரிரு நிகழ்வுகளை நான் உங்களுக்குத் தந்திருக்கின்றேன். கிறிஸ்தவ மக்களின் இப்படிப்பட்ட நடபடிகளைக் கவனிக்கும் புறமதஸ்தர் அன்பின் ஆண்டவர் இயேசுவையும், அவருடைய அன்பின் மார்க்கத்தையும் வெறுத்து தூஷிக்கின்றனர். அந்த ஆண்டவர் இயேசு தங்களுக்குத் தேவையே இல்லை என்ற அளவுக்கு அவர்களுடைய வெறுப்பு வளர்ந்திருக்கின்றது.


===========================
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது
(புலம்பல் 3:26)
===========================
செங்குத்தான மலை உச்சியின் விளிம்பில் அங்கு முளைத்திருந்த மிக சொற்பமான செடி கொடிகளை ஒரு வெள்ளாடு மேய்ந்து கொண்டிருந்ததை ஒரு ஓநாய் கண்டது. உயரத்திலுள்ள மலை விளிம்பிற்கு தாவி சென்று அந்த ஆட்டை இரையாக்க முடியாததை கண்ட அந்த ஓநாய் மிகவும் தந்திரமாக பேச தொடங்கியது. "பெருமாட்டியே உங்கள் ஜீவனையே பணையம் வைத்து மேலே அந்த இடத்திலுள்ள சொற்பமான இலைதழைகளை ஏன் மேய வேண்டும். கிழே பாருங்கள், உங்களுக்கு தேவையான அளவிற்கு மதுரமான தீவனம் உண்டு" என்று பட்சமான வார்த்தைகளை கூறி ஆட்டை கிழே அழைத்தது. அதை கேட்ட ஆடு ஓநாயை பார்த்து "எனது நலத்தை நாடும் எனது நல்ல நண்பரே உமது அறிவுரைக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். நான் உண்ணும் புல்லின் அளவைக் குறித்தும், என்னைக் குறித்தும் நீர் உண்மையில் கவலை கொள்வீர் என்று நான் நினைக்கவில்லை. உமது கவலை எல்லாம் என்னை எப்படியாவது உமக்கு இரையாக்கி ஏப்பமிட வேண்டும் என்பது மாத்திரமே" என்பதனை நான் நன்கறிவேன் என்று சட்டெனக் கூறிற்று.

மேற்கண்ட சிறிய உதாரணம் நமது கிறிஸ்தவ வாழ்வுக்கும் கூட மிகவும் பொருத்தமான ஒன்றாக உள்ளது. ஓநாய் அந்த ஆட்டை அதின் நிலையிலிருந்து கிழே இறங்கி வரச் சொன்னது. உண்மையில் கீழே புற்கள் அதிகமாகத்தான் இருந்தன. ஆனால் அங்கு ஆட்டின் ஜீவனுக்கு பாதுகாப்பு கிடையாது. ஆடு கிழே இறங்கி அந்த புல்லின் நுனிப்பகுதியை தின்பதற்கு முன்னரே அந்த ஓநாய் அதை பட்சித்து போடும்.

நமது ஆவிக்குரிய பரிசுத்த வாழ்விலும் சத்துருவாகிய பிசாசானவன் பல தடைவைகளிலும் நமது நிலையிலிருந்து நம்மை விலகிச் செல்ல கடினமாக முயற்சிக்கின்றான். ஒரிரு உதாரணங்களை கவனியுங்கள்.

தாங்கள் பெற்ற தங்கள் பக்தியுள்ள மகளை நகை, ரொக்கம் நிரம்ப அள்ளிக் கொடுத்து ஒரு டாக்டருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். வீட்டிற்கு பக்கத்திலேயே ஆஸ்பத்திரி வைத்து அந்த டாக்டர் நல்லவிதமாக தனது மருத்துவ தொழிலை கவனித்து வந்தார். வாழ்வில் முன்னேற்றம் அடைந்து கொண்டு அவர் சென்றார். அதை பொறுக்காத சாத்தான் அந்த டாக்டருக்கு ஒரு பாவ சோதனையை கொடுத்தான். தனது ஆஸ்பத்திரியில் பணி செய்யும் ஒரு நர்ஸ்க்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அது திடமாக வளர்ந்தது. நாட்கள் செல்ல செல்ல ஆஸ்பத்திரியே டாக்டருக்கும் நர்ஸ்க்கும் வீடானது. ஆஸ்பத்திரிக்கு பக்கத்தில் வீட்டில் இருந்த மனைவி பிள்ளைகளிடம் செல்லாமல் ஆஸ்பத்திரியிலேயே தங்கி கொள்ளுவார். இதை எல்லாம் கவனித்த டாக்டரின் மனைவியான அந்த பெண்ணின் தலை பம்பரமாக சுழன்றது. இந்த இக்கட்டான நேரம் ஒநாயாம் சாத்தான் அந்த பெண்ணிடம் வந்து "உலகில் உனக்கு என்ன வாழ்வு இருக்கின்றது. உனது கணவனான டாக்டர் வேறெரு பெண்ணை தனக்கு மனைவியாக்கி கொண்டு விட்டானே! இனி நீ செய்யக் கூடியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் உண்டு. துரிதமாக எழுந்து சென்று தற்கொலை செய்து உனது வாழ்வை இத்துடன் முடித்துக் கொள்". என்று கூறினானாம். தனது காதிற்குள் கேட்ட சாத்தானின் அந்த தொனியை இயேசுவின் நாமத்தில் சபித்து விட்டு நேராக ஜெப அறைக்கு சென்று தனது கண்ணிரை தேவ சமுகத்தில் ஊற்றி விட்டு மன ஆறுதலோடு கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருந்தாள். சாத்தானாம் ஓநாய்க்கு அந்த பெண் இடம் கொடுக்கவில்லை. தனது வாழ்வு எட்டியாக கசந்திருந்தாலும் அந்த துயரமான நிலையை விட்டு இறங்கி "தற்கொலை" என்ற பசும் புற்களை மேய அவள் சற்றும் கீழே இறங்கவில்லை. மிகவும் ஞானமாக அவள் நடந்து கொண்டாள்.

ஒரு நாள் ஒரு அருமையான தம்பி என்னிடம் கூற ஒரு சோகமான செய்தி கொண்டு வந்தார்கள். வைராக்கியமான இந்து குடும்பத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக் கொண்ட அந்த தேவபிள்ளை தன்னைப் போலவே வைராக்கியமான இந்து குடும்பத்திலிருந்து கர்த்தரை தெய்வமாக கொண்ட ஒரு மகளை தனக்கு வாழ்க்கை துணையாக கொண்டார்கள். அவர்களது வாழ்க்கை எல்லா நிலைகளிலும் சந்தோஷம் நிறைந்ததாக சில ஆண்டுகளுக்கு மாத்திரம்தான் நீடித்தது. கர்த்தர் ஒரு கர்ப்பத்தின் கனியை அவர்களுக்கு கொடுத்தார். இந்த சூழ்நிலையில் சாத்தானாம் ஓநாய் தனது காரியத்தை செயல்படுத்த தொடங்கினான். கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதம் செய்து கொண்டனர். தனது சரீரத்தால் அந்த பெண் தனது கணவனை கனம் பண்ண தவறினாள். அதின் விளைவாக இருவரின் வாழ்வும் கசந்தது. அந்த சகோதரன் என்னிடம் மேற்கொண்டு என்னிடம் இப்படி சொன்னார்கள் "எனது பிழைப்பின் வேலையும், உத்தியோகமும் முழுக்க முழுக்க உலக மக்களோடு பின்னி பிணைந்த ஒன்றாகும். நான் சொற்ப வயதினன். எனது மனைவி தேவ சமுகத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி என்னுடன் ஒத்துழைக்க மறுப்பதால் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தைக் கூட சாத்தான் எனக்குள் கொண்டு வந்தான். அது எனக்கு ஆரம்பத்தில் நலமானதாகவே தோன்றியது. ஆனால் அதை கர்த்தருக்குள் ஆழ்ந்து சிந்தித்த போது அது கொடிய பாவம் என்பதை நான் உணர்ந்து என் ஆண்டவரிடம் "கர்த்தாவே நாங்கள் இருவரும் இந்த காரியத்தில் கூடி வாழ்வது உமக்கு சித்தமில்லை எனில் எனது மாம்சத்தின் ஆசை இச்சைகளை என்னிலிருந்து அப்படியே கிள்ளி எறிந்து போடும். அந்த மாம்ச ஆசையே என் மனதில் தோன்றாதபடி என்னை மறைத்து காத்துக் கொள்ளும்" என்று கண்ணிரோடு ஜெபித்து வருகிறேன் என்று சொன்னார்கள்.

சத்துருவாகிய பிசாசுக்கு இடம் கொடாமல் அவன் அளித்த "மற்றெரு திருமணம்" என்ற செழிப்பான புல்பூண்டுகளை மேய்வதற்காக தனது இடத்தை விட்டு கீழே இறங்கி வராமல் அப்படியே தனது தற்போதைய நிலையில் தன்னைக் காத்துக் கொண்ட அந்த கர்த்தருடைய பிள்ளைக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

இதை வாசிக்கும் தேவ பிள்ளையே இப்படி நான் உதாரணங்களை எழுதி கொண்டே போகலாம். உனது வாழ்க்கையின் காரியங்கள் எப்படியோ எனக்கு தெரியாது. ஆனால் வேறு வேறு கோணங்களில் ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் உள்ளன. எந்த ஒரு நிலையிலும் நாம் சாத்தானுக்கு இடம் கொடுத்து நமது நிலைகளிலிருந்து இறங்கி தேவ சித்தத்துக்கு விரோதமான காரியங்களை செய்து விடக்கூடாது.

நீ எந்த ஒரு நிலையிலிருந்தாலும் கர்த்தர் இயேசுவுக்குள் அந்த நிலையிலேயே பொறுமையாக இருந்து ஏற்ற காலத்தில் தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவரது பலத்த கரத்துக்குள் அடங்கியிருப்பது (1 பேதுரு 5:6) உனக்கு மிகுந்த பரலோக நன்மையைத் தரும்.

தேவன் நம்மை எந்தெந்த இடத்தில் வைத்திருக்கின்றாரோ அந்தந்த இடத்தில் முறுமுறுக்காமல், தேவன் மேல் மனத்தாங்கல் கொள்ளாமல் அவருடைய இரட்சிப்புக்கு பொறுமையாகவும், நம்பிக்கையோடு காத்திருப்போம்.


====================
சரீர முயற்சி அற்பபிரயோஜனம்
(1 நீயோ 4:8)
========================
20 வருஷத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இது. கோவையில் நாங்கள் தங்கியிருந்த வீடு ஒரே ஒரு அறையாக இருந்த காரணத்தினால் அடியேன் ஜெபிக்க எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்தையும், விளையாட்டு மைதானத்தையும் நாடுவது வழக்கம். தினமும் அதிகாலையில் (5.30) எனது வீட்டிற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு (VOC ground) சென்று கர்த்தரை 1/2 மணி நேரம் சத்தமாக துதிப்பது எனது பழக்கம்..

அப்போது ஒரு கிறிஸ்தவ சகோதரன் அருகில் உள்ள ground ல் தினமும் shuttle விளையாட வருவார். அவரை பார்க்கும் போது good morning சொல்லுவேன் . அவர் கடையில்தான் எங்கள் விட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை மாதம் மாதம் வாங்குவேன்.

நான் தினமும் காலையில் அவரை பார்க்கும் போது காலையில் இவர் கர்த்தரை தேடாமல் இப்படி விளையாட வருகிறாரே என்று நினைப்பேன். அவர் தினமும் காலையில் 5 மணிக்கு அங்கு வந்து விடுவார். வீட்டிற்கு போகும் போது பனியன் எல்லாம் ஈரமாக இருக்கும் அந்த குளிர் நேரத்தில்.

சில நாட்களாக அந்த சகோதரரை பார்க்க முடியவில்லை. வெளியூர் சென்று இருப்பார் என்று நினைத்தேன். மளிகை சாமான்கள் வாங்க அவர் கடைக்கு சென்ற போது கல்லா பெட்டியில் அவர் மனைவி அமர்ந்து இருந்தார்கள். மேலே அந்த சகோதரர் படம் மாலையால் அலங்கரிக்கபட்டு தொங்க விடப்படு இருந்தது. அந்த சகோதரியிடம் விசாரித்த போது ஆர்ட் அட்டாக் வந்து மரித்து போனதாக கூறினார்கள். அந்த சகோதரர்க்கு வயது 35. உடனே எனக்கு கீழ்கண்ட வசனம் ஞாபகம் வந்தது.

சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது (1 தீமோ 4:8).

நான் தினமும் shuttle விளையாடுவதால் எந்த நோயும் எனக்கு வராது, நீண்ட நாட்கள் இந்த உலகத்தில் வாழுவேன் அந்த சகோதரன் நினைத்து இருக்கலாம். 

நான் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது தவறு என்று கூறவில்லை. அடியேனும் தினசரி நடைபயிற்சி செய்வதுண்டு. காலையில் எழும்பிய உடன் தனி ஐெபம், வேத வாசிப்பு, குடும்ப ஜெபம் செய்து, கர்த்தருடைய கிருபையை பெற்று மற்ற உலக காரியங்களை செய்ய வேண்டும். ஜெபிக்காமல் வேதம் வாசிக்காமல் காபி/டீ கூட குடிக்க கூடாது.

முதலாவது தேவனுடை இராஜ்யத்தை தேட வேண்டும் (மத் 6:33)

காலையிலே என் சத்தத்தை கேட்டருளுவிர். காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி காத்திருப்பேன் (சங் 5:3) என்கிறான் பக்தன் தாவீது.

சரிர முயற்சி ( சரிரத்தால் செய்கிற காரியங்கள், சரிரத்திற்கு செய்கிற காரியங்கள், உலக காரியங்கள்) கொஞ்சம் பிரயோஜனம். தேவபக்தி (ஜெபம், வேத வாசிப்பு, துதிப்பது, ஆலயம் செல்வது) இம்மைக்கும் பிரயோஜனம், மறுமைக்கும் பிரயோஜனம் என்பதை தேவ பிள்ளைகள் ஒரு போதும் மறக்க கூடாது.

காலைதோறும் கர்த்தர்
1) நம்மை எழுப்புகிறார் - ஏசா 50:4
2) மனுஷனை விசாரிக்கிறார் - யோபு 7:18
3) நமது சத்தத்தை கேட்கிறார் - சங் 5:3
4) கரத்தருடைய இரக்கங்கள் புதியவைகள் - புலம் 3:22,23
5) கிருபையால் நம்மை திருப்தியாக்குகிறார் - சங் 90:14

தேவ பிள்ளைகளே அதிகாலையில் கர்த்தர் சமுகத்தை நாடி, தேவ கிருபையை பெற்று இந்த உலகத்தில் வாழ எனக்கும், உங்களுக்கும் கர்த்தர் உதவி செய்வாராக. ஆமென்.


========================
நாம் மண்ணென்று தேவன் நினைவு கூருகின்றார்
(சங் 103-14)
=========================
அநேகருக்கு தங்கள் பார்வையில் அவர்கள் ஏதோ மிகவும் பெரியவர்கள் என்ற நினைவு உள்ளது. இது மிகவும் மதியீனமான காரியமாகும். தங்களை அவர்கள் உயர்வாக எண்ணிக் கொள்ளுகின்றனர். தங்களையும் தங்களுக்குரிய காரியங்களையும் பெரிதாக பேசிக் கொள்ளுகின்னனர்.

பண்டைய ஈசாப்பு கதைகளில் ஒரு எருதையும், ஒரு ஈயையும் குறித்த ஒர கதை உண்டு. ஒரு ஈ ஒரு எருதின் கொம்பிலே நெடுநேரம் உட்கார்ந்திருந்தது. அந்த கொம்பில் இருந்து ஈ பறந்து செல்ல ஆயத்தமான போது அந்த எருதைப் பார்த்து பேசிற்றாம், "எருதே நான் பறந்து செல்லப் போகிறேன். அதையிட்டு உனக்கு எந்த துக்கமும் இல்லைதானே ? என்றதாம். எருது ஈயைப் பார்த்து சிரித்துக் கொண்டே தனது கண்களை மேலே உயர்த்தி " ஓ சிறிய அற்பமான ஈயே நீ இருந்தால் என்ன அல்லது போனால் என்ன, இரண்டும் எனக்கு ஒன்றுதான். நீ எனது கொம்பில் வந்து உட்கார்ந்ததே எனக்கு தெரியாதே. அப்படியிருக்க நான் போகட்டுமா ? என்கிறாயே என்றதாம்.

மேற்கண்ட ஈயின் கதையைப் போலத்தான் அநேகருடைய எண்ணமும் உள்ளது. உலகம் என்ற எருதின் கொம்பில் அமர்ந்திருக்கும் அவர்கள் தங்களை குறித்து வீண் பெருமை கொண்டு தங்களை சுற்றியுள்ள உலகம் அவர்களை தங்கள் தலைக்குமேல் தூக்கி வைத்துதிரிக்கின்றது, தங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கின்றது என்று மாயையான மனக்கோட்டை கட்டிகொண்டிருக்கின்றார்கள்.

தேவன் நம்மை குறித்து சொல்லும் வார்த்தைகளை கவனித்தீர்களா. நாம் மண் என்கிறார் (சங் 103-14)

தாவீது ராஜா இஸ்ரவேலின் அரசனாக இருந்த போதிலும் தனது பகைஞனாகிய சவுலுக்கு முன்பாக தன்னை "இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியை தேடி வந்தாரோ ?(1 சாமு 26-20) தெள்ளுப்பூச்சிக்கு தன்னை ஒப்பிடும் தாவீது ராஜாவின் மனத்தாழ்மையை பாருங்கள்

தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் (ஆதி 18-27) ஆண்டவரோடு முகமுகமாய் பேசும் கிருபை பெற்ற நம் விசுவாசிகளின் தகப்பன் ஆபிரகாம் தன்னை தன் ஆண்டவருக்கு முன்பாக தாழ்த்தும் விதம் கண்டீர்களா ?

"இதோ நான் நீசன்" (யோபு 40-4) என்று தன் உயிரோடிருக்கும் மீட்பருக்கு முன்பாக கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்த யோபு பக்தன் தன்னை தாழ்த்துகிறார்


==========================
பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்கு போராட்டம் உண்டு
எபேசி 6:12
========================
இந்த உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கின்றது. இந்த உலகம் தீய பொல்லாங்கனுக்குள் கிடப்பதால் அந்த பொல்லாங்கனால் ஏவி விடப்பட்ட பலதரப்பட்ட கொடிய பொல்லாத ஆவிகளால் இந்த பிரபஞ்சம் நிரம்பிக் கிடக்கின்றது. அவைகள் மனிதரை எந்த நேரத்திலும் நினையாத நேரம் பிடித்து அலைக்கழித்து விடுகின்றது.

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான பில் கிளிண்டனைப் பற்றிய ஒரு செய்தியை தினசரி செய்தி தாளில் பார்த்தேன். அவர் லிட்டில் ராக் நகரத்திலுள்ள எக்சல்சியர் ஓட்டலுக்கு சென்றிருந்த போது அந்த ஓட்டலின் வரவேற்பாளரான அழகிய இளம் பெண் பாலா ஜோன்ஸ் மீது ஆசைப்பட்டு அவளை வேசித்தனம் செய்ய முயன்ற போது அந்த பெண் அதை விரும்பாமல் ஓடிப் போனதாக செய்தி கூறுகின்றது. உலக நாடுகளில் மிகவும் பணக்கார நாடான அமெரிக்க தேசத்தை ஆளும் ஜனாதிபதியை நொடிப் பொழுதில் வான மண்டலங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் வேசித்தனத்தின் ஆவி பற்றிப் பிடித்து அவரது புகழை நாசப்படுத்தி விட்டது.

கர்த்தருடைய தாசனாகிய தாவீது ராஜா ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த பத்சேபாளைக் கண்டதும் விபச்சாரத்தின் ஆவி அவரை ஆட்கொள்வதையும், எரிகோ பட்டணத்தின் பொற்பாளத்தைக் கண்டதும் பொருளாசையின் ஆவி ஆகானை மேற்கொள்ளுவதையும், சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியம் பண்ணத்தக்கதான போஜன மயக்கத்தின் ஆவி ஏசாவை மேற்கொள்ளுவதையும், தங்களுடைய சொத்துக்களை விற்காமல் மறைத்து வைத்து அப்போஸ்தலருக்கு முன்பாக பொய் சொல்லத்தக்கதான பொய்யின் ஆவி அனனியா, சப்பிராளை பிடித்துக் கொள்வதையும், இந்த மாய பிரபஞ்சத்தின் மயக்கத்தைக் கண்டதும் கர்த்தரையும் அவரது பரம இராஜ்யத்தையும் புறம்பே தள்ளிப் போடத்தக்கதான லோக தேசத்தின் ஆவி தோமாவை ஆட்கொள்வதையும் காண்கிறோம். எத்தனையோ உதாரணங்களை வேத புத்தகத்திலிருந்தும், நம்மை சுற்றி நடக்கும் உலக நிகழ்ச்சிகளிலிருந்தும் எழுதிக் கொண்டே போகலாம்.

தேவ ஜனமே, இந்த கொடிய பொல்லாத ஆவிகள் உன்னை மேற்கொள்ளாதிருக்க இரவும் பகலும் விழித்திருந்து ஜெபித்து தேவ பெலத்தால் உன்னை பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள். சற்று நீ ஏமாந்திருந்தால் உனது ஆத்துமா பகைஞன் உன்னை அதோகதியாக்கி விடுவான்

உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். (1 பேதுரு 5:8)

சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து. 
நாகூம் 2:1


=====================
மரணம் அல்லது விருத்தாப்பியம் வருமுன் உன் பரலோக காரியங்களை ஒழுங்கு படுத்திக் கொள்
====================
மரணத்தை மனிதன் மிகவும் இலகுவாக எடுத்துக் கொள்கின்றான். தனக்கு மரணமே வரப்போவதில்லை என்ற நினைப்பு அவன் உள்ளத்தில் வேரூன்றி கிடக்கின்றது. தனக்கு அருமையானவர்களின் ஜீவனற்ற சடலத்தை காண்கின்ற சற்று நேரத்திற்குதான் அவன் உலகத்தின் அநித்தியத்தையும், அதன் நிலையாமையும் ஆழ்ந்து யோசிக்கிறான். ஆனால் அந்த சடலம் புதை குழியில் இறக்கப்பட்டு மண் போடப்பட்டதும் அவன் தனக்கு முன்பாக உள்ள மரணத்தை சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. தன்னோடு வாழ்ந்த பலரும் தன்னை விட்டு போய்விட்டதையும், தான் மட்டும் தனித்து விடப்பட்டிருப்பதையும் அவன் கண்டிருந்தும் இன்னும் அந்த மனிதன் மரணத்தை குறித்து நிர்விசாரமாய் இருப்பது மிகவும் வேடிக்கையான காரியம் ஆகும்

"எனக்கு பிரியமானவைகள் அல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும்" (பிரசங்கி 12:1) என்று ஞானி சாலமோன் விருத்தாப்பியத்தை குறித்து ஒரு நடுநடுங்கத்தக்கதான வரியை எழுதி வைத்தார். தனக்கு முன்னால் உள்ள விருத்தாப்பியத்தை மனிதன் கவலையோடு கவனிப்பது இல்லை. 
நிலைக்கண்ணாடி முன் நின்று தனது முகத்தை பார்க்கும் மனிதன் தனது தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் நரை மயிர்கள் அவனை சந்திக்க துரிதமாக வந்து கொண்டிருக்கும் கிழப்பருவத்தை குறித்து குரல் கொடுத்தாலும் அவன் அந்த குரலுக்கு செவி சாய்ப்பது இல்லை.

ஒரு சமயம் நீலகிரி எக்ஸ்பிரசில் நான் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தேன். விடியற்காலம் நான் கண் விழித்த போது இருவர் பேசும் குரல் கேட்டேன். அந்த சமயம் ஒரு மனிதர் பேசிக்கொண்டே ரயிலின் கழிப்பறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த மனிதனுடைய நண்பருடன்தான் அவர் பேசிக் கொண்டு சென்றிருப்பார் என்ற எண்ணத்தில் நான் சுற்று முற்றும் பார்த்த போது நான் ஒருவரையும் காணவில்லை. பாவம் அந்த மனிதர் தனக்குள்ளேயேதான் அவ்வளவு சத்தமாக பேசிக்கொண்டு சென்றிருக்கிறார். பெட்டியில் எல்லாரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். தேவனற்ற விருத்தாப்பியங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும். 

கிரேக்க நாட்டின் பூர்வீக புராண விடுகதை புதிர் ஒன்று மனிதனின் கிழப்பருவத்தை "நான்கு கால்களில் நடந்து பின்னர் இரண்டு கால்களில் நடந்து அதன் பின்னர் மூன்று கால்களில் அதற்கு மேற்பட்ட கால்களில் நடக்கும் விருதாப்பியம்" என்று மனிதனின் சரீர மாற்றத்தை குறிப்பிடுகின்றது.

இதை கருத்தோடு வாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாவே, எதிர்பாராத விதமாக மரணமோ அல்லது காலப்போக்கில் ஒருவரும் விரும்பாத கிழப்பருவமோ உன்னை சந்திக்கும் முன்னர் இன்றே உன் ஆண்டவர் இயேசுவை அண்டிக் கொள். உன் கடந்த கால பாவ தவறுகளை தேவ சமூகத்தில் கண்ணீரோடு அறிக்கை செய்து மெய்யான பாவ மன்னிப்பு நிச்சயத்தையும், தேவ சமாதானத்தையும் கர்த்தர் இயேசுவிடமிருந்து 
பெற்றுக் கொள். இராப்பகலாக உனது பரிசுத்த வாழ்வின் காரியமாக பாடுபட்டு உனக்கும் உன் கர்த்தருக்குமுள்ள பரிசுத்த உறவை பிரகாசமாக வைத்துக் கொள். பரிசுத்தமும் மோட்சமும் நீ நினைப்பது போல அத்தனை எளிதாக எந்த ஒரு பிரயாசமும் இன்றி கிடைத்துக் கொள்ளக்கூடியவைகள் அல்ல. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே தேவனுடைய பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியுமாதலால் அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும் உனது இரட்சிப்பு நிறைவேற கண்ணீரோடு போராடி பிரயாசப்படு. அதற்கான தேவ கிருபைகளை தேவன்தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக. ஆமென்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.