=====================
நீர் என்னைக் காண்கின்ற தேவன்
(ஆதி 16-13)
=====================
யோசேப்பின் மேல் கைபோட்டு அவனை பலவந்தம் செய்த போத்திப்பாரின் மனைவி வீட்டில் நடந்த சம்பவம் உங்களில் பலருக்கும் தெரியாது. முகமதியர்களின் குரானில் இந்த காரியம் எழுதபட்டிருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பிட்ட அந்த நாளில் போத்திபாரின் மனைவி தனது வீட்டிற்குள் இருந்த கையினால் செய்யப்பட்ட தெய்வங்களை எல்லாம் துணியினால் மூடினாளாம். அதை பார்த்த யோசேப்பு அதற்கான காரணத்தை போத்திபார் மனைவி இடம் கேட்டபோது "அவள் அந்த நாளில் ஒரு பெரிய பாவம் செய்யப் போவதாகவும், அந்த பாவ செயலை தனது வணக்கத்திற்குரிய தெய்வங்கள் பார்க்ககூடாதென்றும் அதின் காரணமாகவே அந்த தெய்வங்களின் கண்கள் துணியினால் மறைக்கப்படுகிறதென்றும் விடை பகர்ந்தாள்". அதை கேட்ட யோசேப்பு "நீ வழிபடும் கடவுள்களை உனது பாவ செய்கைகளை காணவொட்டாமல் அவைகளின் கண்களை துணிகளால் மூடி மறைத்து போடலாம். ஆனால் நான் ஆராதிக்கும் என் தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர். பூமி எங்கும் உலாவி நோக்கும் அந்த சர்வ வல்லவரின் கண்களை (2 நாளா 16-9) எந்த ஒரு மனிதனாலும் மூடி மறைக்க இயலாது" என்று சொன்னான். இதை வாசிக்கும் தேவ ஜனமே இப்படிப்பட்ட தேவபயம் உனக்கு உண்டா ? கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள் (நீதி 16:6) என்று ஞானி சொன்னது எவ்வளவு உண்மை.தான் ஆராதிக்கும் கர்த்தரின் வல்லமையையும், மகிமையையும், பரிசுத்தத்தையும் நன்கு அறிந்து கொண்டிருந்த யோசேப்பு மிக எளிதாக தனக்கு நேரிட்ட பாவ சோதனையிலிருந்து தன்னை காத்து கொள்ள முடிந்தது.
மனிதர் பாவத்தில் வீழ்ச்சியடைவதன் முக்கியமான காரணங்களில் ஒன்று அவர்கள் தங்கள் ஆண்டவரை அறியாதிருப்பது ஆகும். ஒரு கிறிஸ்தவன் தன்னை ஆட்கொண்ட கர்த்தர் எப்படிபட்ட பரிசுத்தர், எப்படியான சர்வ வல்ல தேவன் என்று அறிந்து கொண்டால் அவன் ஒருபோதும் பாவம் செய்யவே இயலாது.
உனது ஆண்டவருடைய கண்களுக்கு மறைவாக நீ எதையும் செய்ய இயலாது. அவர் உன்னை எப்பொழுதும் சூழ்ந்து இருக்கிறார் (சங் 139-3) என்ற தேவபயத்தோடு உனது இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படு (பிலி 2:12)
========================
எங்கள் வீட்டிலும் டி.வி (Television) பிசாசு இருக்கின்றது
=========================
மேற்கண்ட வார்த்தையை ஒரு சகோதரி (கர்த்தருடைய பிள்ளை) என்னோடு பேசும் போது கூறினார்கள். உலகத்தின் எந்த ஒரு மூலையில் நடக்கும் காட்சியையும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் கொண்டு வந்து காண்பிக்கக் கூடிய அத்தனை சிறப்பு வாய்ந்த டெலிவிஷன் பெட்டி அந்த தேவ பிள்ளையின் கண்களுக்கு பிசாசாக தெரிந்ததில் ஆச்சரியம் கொள்ள எதுவுமே இல்லை. மெய் பக்தர்கள் யாவரின் கண்களுக்கு அது பிசாசாகத்தான் தெரியும்! மெய்தான். இரட்சகர் இயேசு பிசாசின் செயல்களை பற்றி கூறிப்பிடும் போது "திருடன் (பிசாசு) திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறான்" (யோ 10:10) என்று கூறிப்பிடுவதை நாம் காணலாம்.தேவபிள்ளையே டி.வி பெட்டி உன் வீட்டில் இருப்பதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அது முதல்தரமான திருடன் என்பதை மறந்து விட வேண்டாம். சற்று ஏமாந்தால் போதும் உனது பொன்னான நேரத்தை அப்படியே அவன் திருடி விடுவான். அதில் வரும் காட்சிகள் எல்லாம் மானிட வாழ்வுக்கும், அறிவிற்கும் பயன் உள்ளவைகளாகவேதான் காணப்படும். அதினைப் பார்ப்பதில் ஒரு தவறும் இல்லை என்பது போல அது உனக்கு தோன்றும். மற்றவர்களும் கூட அதை உன் வசம் வைத்துக் கொள்வதில் எந்த ஒரு பாவமும் இல்லை என்பதாக உனக்கு ஆலோசனையும் சொல்லலாம். இருப்பினும் ஒட்டு மொத்தத்தில் ஒரு மெய்யான தேவ பிள்ளைக்கு டி.வி பெட்டியானது ஆத்துமாவுக்கு எதிரான கண்ணியாகும். ஒரு ஆங்கில திருச்சபையின் குருவானவர் "ஒரு மெய்யான விசுவாசியின் வீட்டில் டெலிவிஷன் பெட்டி இருக்கவே இருக்காது. அது அங்கு இருப்பதற்கு எந்த ஒரு அவசியமும் கிடையாது" என்று தனது பிரசங்கத்தில் குறிப்பிட்டார். எத்தனை சத்தியமான வார்த்தைகள் அவைகள்.
அநேக வீடுகளிலே டி.வி இருப்பதன் காரணமாக பிள்ளைகளின் படிப்பு பாழாகி போயிருக்கின்றது. தற்சமயம் 10,12 வது வகுப்பு பரிச்சை நடப்பதால் அநேக வீடுகளில் கேபிள் connection யை கட் பண்ணி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக அதில் கிரிக்கெட் என்ற விளையாட்டு வந்து சேர்ந்தபடியால் அதைப் பார்த்து படிப்புகளை கோட்டை விட்டோரின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. சில வருடங்களுக்கு முன்பு சூரத் பட்டணத்தைச் சேர்ந்த பிரவின் ரேவாபாய் பட்டேல் என்ற 25 வயது திருமணமான வாலிபன் ஒருவன் டி.வி பார்த்து முடிந்ததும் வீட்டின் அறைக்குச் சென்று நைலான் கயிற்றில் அங்கு தூக்கு போட்டு நான்று கொண்டு செத்ததான செய்தியை "டைம்ஸ் ஆப் இந்தியா" தினசரி பத்திரிகையில் எழுதி இருப்பதை நான் பார்த்தேன். அப்படி அவன் சாக காரணம் என்ன ? தனது இந்திய நாடு கிரிக்கெட் விளையாட்டில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா நாட்டிடம் தோல்வியடைந்து விட்டதே அவனது சாவுக்கு வழி வகுத்தது. அந்த விளையாட்டை டி.வியில் பார்த்ததாலேயே அவனுக்கு அந்த சாவு நேரிட்டது. அந்த கிரிக்கெட் விளையாட்டை விளையாடியவன் சாகவில்லை. ஆனால் அதைப் பார்த்தவன் சாகிறான். இதுவும் கொடிய மாயைதானே!
சமீபத்திய ஒரு ஆய்வின்படி நமது தலைமுறையினரின் புத்தகம் படிக்கும் பழக்கம், செய்திதாள் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து போய் விட்டதாகவும் அதின் இடத்தை டி.வி பிடித்துக் கொண்டதாகவும் சொல்லுகின்றனர். கிராமங்களில் ஆண்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விளையாட்டுகள் வரும். கிராமங்களில் குழந்தைகள், வாலிபர் அவற்றை விளையாடி தங்கள் உடல் நலத்தை வலுப்படுத்திக் கொள்வதுடன் மனதிலும் மகிழ்ச்சி அடைவார்கள். அப்படிப்பட்ட நல்ல விளையாட்டுகளின் இடத்தை இப்பொழுது டி.வி பிடித்து விட்டது. மாலைப்பொழுது ஆகிவிட்டால் போதும் கிராமக் குழந்தைகள், வாலிபர், வயோதிபர் அனைவரும் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கு தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து தங்கள் பொன்னான காலத்தை போக்கடிக்கின்றனர்.
வாசிக்கும் அன்பான ஆத்துமாவே, உன் வாழ்நாட்காலம் மிகவும் விலையேறபெற்றது. அதின் ஒரு வினாடி நேரத்தைக் கூட நீ விணடிக்க கூடாது. உன்னை இந்த உலகுக்கு கரம் பிடித்து அழைத்து வந்த உன் நல்ல கர்த்தருக்கு உன் ஜீவ காலத்தை நல்ல விதத்தில் செலவு செய்வாயாக. ஆமேன்
========================
திடீர் ராஜாவின் பெருமை
(1சாமு 9:10–21)
========================
“அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக, நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்” (1சாமு 9:21).சவுல் ராஜாவின் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம், திடீரென்று ராஜாவாக தெரிந்து கொள்ளப்பட்டான். அந்த நேரத்தில் சவுல் கண்பிக்கும் தாழ்மையைப் பாருங்கள். தேவனுடைய உன்னத மனிதனாகிய சாமுவேலோடு விசேஷித்த அழைப்பைப் பெற்று சாப்பிட்டான். அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்து சாப்பிடு, நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்தது முதல் இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்.’ (1சாமுவேல் 9 : 24)
காணாமற்போன கழுதைகளைத் தேடிக் கொண்டு வந்த மனிதனுக்கு கிடைத்த மேலான உயர்வைப் பாருங்கள். திடீரென்று இவ்விதமான உயர்வின் வேளையில் சவுல் தன் தாழ்மையை வெளிப்படுத்தினான்.
ஆனால் சவுல் கடைசி மட்டும் இந்த தாழ்மையைக் காத்துக்கொண்டானா? இல்லை. அவன் ராஜாவானபின்பு அந்த தாழ்மையை இழந்துபோனான். சாமுவேல் வருவதற்கு முன்பாக தானே பலி செலுத்தவும் செய்தான். தேவ மனிதனுக்காக காத்திராமல் துணிகரமாக இதைச் செய்தான். இதை நாம் 1 சாமுவேலின் புத்தகம் 15ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
அநேகர் இரட்சிப்பின் ஆரம்ப நாட்களில், ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் அதிகமான தாழ்மையை கொண்டிருப்பார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்தத் தாழ்மையை இழந்து விடுவார்கள். பெருமைக்கு இடம் கொடுத்து விடுவார்கள் இது மிகவும் ஆபத்தனது. தாழ்மையில் எப்போதும் போல நாம் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். இருதயத்தின் பெருமை கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தாழ்மையை விலக்கிக் கொண்டே இருப்பதை உணர்ந்து, சரி செய்யத் தவறிவிட்டால் பெருமை அதிகமான பகுதியை ஆட் கொண்டு விடும். தாழ்மையில் ஆரம்பித்த சவுலின் முடிவைப் பாருங்கள். ஜீவனுள்ள தேவனோடு கொண்டிருந்த தொடர்பை இழந்து செத்த ஆவிகளோடு தொடர்பு கொண்டான். கடைசியில் அவன் மரணம் கொடியதாகக் காணப்பட்டது.
=======================
இந்த நியாய பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டு பிரியாதிருப்பதாக
யோசுவா 1:8
=======================
உம்முடைய வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன், நாள் முழுவதும் அது என் தியானம் - சங் 119-97 என்ற தேவவார்த்தையின்படி நாமும் ஆண்டவருடைய வேதத்தை அதிகமாக நேசித்து வாசித்து அதை நாள் முழுவதும் தியானிக்க வேண்டும். வேத வசனங்களை நாம் மனப்பாடமாக படித்து அவைகளை நமது இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்து கொள்ளல் வேண்டும். நாம் படித்த வசனங்களை அடிக்கடி நமது நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் அந்த தேவ வசனங்கள் ஒருக்காலும் நமது மனதைவிட்டு நீங்கவே நீங்காது. தேவன் அந்த வசனங்களின் மூலமாக அவ்வப்போது நம்மோடு பேசுவார். நமது படுக்கையிலும் தேவனுடைய வசனங்கள்தான் நமது இருதயத்தை நிரப்பியிருக்க வேண்டும். நமது இராக்கால இளைப்பாறுதலில் வேறு எந்த ஒரு உலக கவலைகளுக்கும், மன பாரங்களுக்கும் இடம் கொடாமல் நாம் மனப்பாடமாக படித்த பல்வேறு வேத வசனங்களை நமது உள்ளத்தில் நினைவு படுத்திக் கொண்டேயிருந்தால் நமது இளைப்பாறுதல் இன்பமாக இருக்கும். நாம் வழியில் நடந்து போகும் போதும், நமது யாத்திரைகளிலும் ஆண்டவருடைய வார்த்தைகளை நமது உள்ளத்தில் சொல்லிக் கொண்டே போவது ஒரு தனிப்பெரும் ஆனந்தமாகும்.
மறுபடியும் பிறந்த ஒரு தேவ பிள்ளைக்கு ஆண்டவர் அருளிய வேத புத்தகம் மாத்திரம்தான் இந்த பாழுலகத்தில் ஆறுதலும், ஆனந்தமுமாகும். நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின - சங் 119 :54
==========================
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக் கொண்டிருக்கிறேன்
(அப்போ 2:25)
=========================
சிலர் செல்போனில் தங்களது போட்டோவை வைத்து அதையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள். சிலர் தங்களுடைய குடும்ப போட்டோ, மனைவி, பிள்ளைகளுடைய போட்டோவை வைத்து அதையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவைகளை தவிர்ப்பது நல்லது. நமது மனக்கண் முன்னால் இயேசு இருக்க வேண்டும், வசனம் இருக்க வேண்டும். உலகம், உலக ஆடம்பரம், உலக வேஷம் உலக ஆசீர்வாதங்கள், உலக மனிதர்கள் நம் கண் முன்னால் இருக்க கூடாது. பூரண பரிசுத்தம் அடைய விரும்புகிறவர்கள் யார் போட்டைவையும் செல்போனில், வீட்டில் வைக்க மாட்டார்கள்.தாவீது ஆடு மேய்ப்பவன், பழைய ஏற்பாடு பரிசுத்தவான், பல பாடுகள் பட்டவன். அவன் கர்த்தரை முன் வைத்தான். அவன் கர்த்தரை முன் வைத்தபடியால் அசைக்கப்படவில்லை (தேவனை விட்டு நஷ்டபட்டு போக மாட்டோம்), இருதயம் மகிழ்ந்தது, நாவு களி கூர்ந்தது, நம்பிக்கை வளர்ந்து வளர்ந்து விசுவாசம் பெருகியது (அப்போ 2;:25,2
வீட்டில் கூட தாத்தா பாட்டி போட்டோ, அப்பா அம்மா போட்டோ, பிள்ளைகள் போட்டோ, குடும்ப போட்டோவை மாட்டக்கூடாது. நாளடைவில் அது விக்கிரமாகிவிடும்
செல்போனில் கூட குடும்ப போட்டோ, மனைவி கணவன் போட்டோ, பிள்ளைகள் போட்டோ வைக்க கூடாது. இயேசு போட்டோவை கூட வைக்க கூடாது. இரட்சிக்கபட்டவர்கள், அபிஷேகம் பெற்றவர்களால் இது முடியும். தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல என்றார் இயேசு (மத்தேயு 10:37
ஏதேன் தோட்டத்தில் நன்மை தீமை அறியத்தக்க கனியை ஆதாம் ஏவாள் பார்க்காமலா இருந்திருப்பார்கள். சாத்தான் சொன்ன பிறகு அது இன்பமாக தெரிந்தது. பிசாசுக்கு தெரியும் உனது உள்ளத்தில் இருக்கும் ஆசைகள் விருப்பங்கள் எது என்று. அதைக் கொண்டு வந்து காட்டுவது பிசாசுசின் வேலை. நம்மை கெடுக்க, நமது மனதை தேவனை விட்டு பிரிக்க பிசாசு பல முயற்சிகள் செய்வான். மனிதர்கள் கண் முன்னால் இருதயத்தின் ஆசை இருக்கும். இயேசுவுக்கே பிசாசு உலகத்தை காட்டியவன் அல்லவா (மத் 4:8). உலகம் அநேகரை மயக்கி கொண்டிருக்கும் காலம் இது. தங்களுக்கு உள்ளதை வெளிப்படுத்தி மேன்மை பாராட்டும் காலம் இது
கடைசி நாட்களில் மனுஷர் தற்பிரியராக (தங்களை பிரியப்படுத்துகிறவர்கள்) இருப்பார்கள் (2 தீமோ 3:2) என்று வேதம் கூறுவது எவ்வளவு உண்மை. நமது செய்கைகள் எல்லாம் தேவனை பிரியப்படுத்த வேண்டும் (எபேசு 5:
பெயர் புகழ், பணத்தை வாஞ்சித்து கதறும் ஊழியர்களின் Whatsapp, status, face book யை பாருங்கள். அவர்களின் படங்கள், மனைவி படங்கள், பிள்ளைகள் படங்கள் அழகான தோற்றத்துடன் அழகாக பிரசுரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களுடைய பத்திரிகை, காலண்டரிலும் அவர்கள் படங்கள் பக்கத்திற்கு பக்கம் பெரிய அளவில் பார்க்கலா
நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் (லேவி 26:1)ம்10).). 6) "(லேவி 26:1)
========================
உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்
(சங் 35:13)
=======================
இந்த இறுதி காலத்தில் பெரும்பாலான கிறிஸ்த மக்கள் தங்கள் சரீரத்துக்கு எந்த ஒரு குறைவும் வைக்காமல் அதனை சீராட்டி வருகின்றனர். கண் விழித்ததும் குடிக்கும் காலை காப்பியுடன் அவர்களுடைய ஆகாரங்கள் அவர்களை தொடருகின்றன. அவர்கள் பற்கள் பகல் முழுவதும் இரவின் பிந்திய நேரம் வரை அரவையாடிக் கொண்டே இருக்கின்றன. இப்படி எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நாம் நமது சரீரங்களை ஆளுவதற்கு ஆகாரங்களுக்கு அதிகாரம் கொடுத்தால் நாம் எந்த ஒரு பரிசுத்த வாழ்வையும் நம் கர்த்தருக்காக ஒருக்காலும் செய்யவே இயலாது. இதை "ஆகாரத் திரட்சி" என்று எசேக்கியேல் 16:49 லும் "பெருந்திண்டி" என்று லூக்கா 21:34 லும் வாசிக்கிறோம்.நாம் நம்முடைய மாம்சத்தின் கிரியைகளின் மேல் வெற்றி பெறாமல் இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் நம்முடைய மிதமிஞ்சிய ஆகார மோகமாகும். ஒரு கிறிஸ்தவ சகோதரி ஒரு தடவை "ஜயா இறைச்சி வாசனை குழம்பில் இல்லாவிட்டால் எனது கணவர் ஆகாரமே சாப்பிடமாட்டார்கள். அதற்காக இறைச்சியை வாங்கி காயபோட்டு (உலர வைத்து) எப்பொழுதும் ரெடியாக வைத்திருப்பேன்" என்றார்கள். இப்படிப்பட்ட போஜன பிரியம் நம்மை ஒரு போதும் பரிசுத்தமாக ஜீவிக்க அனுமதி அளிக்காது.
ஒரு மெய்யான கிறிஸ்தவன் அடிக்கடி உபவாசிக்கிற கிறிஸ்தவனாக இருப்பான். ஜெப ஜீவியம் ஒரு கிறிஸ்தவனின் உயிர் மூச்சாக இருப்பது போல் உபவாசமும் அவனது மூச்சாக இருக்கும். கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு பரிசுத்த தேவ மனிதனின் வாழ்க்கை சரித்திர புத்தகத்தை எடுத்து படியுங்கள். முதலாவது அந்த தேவ மனிதன் அதிகமாக தனது முழங்கால்களை பூமியில் தன் கர்த்தருக்கு முன்பாக ஜெபத்தில் தேய்த்து தேய்த்து பெரியதோர் தழும்பை தன்னில் உடையவனாக இருப்பதை நாம் காணலாம். அடுத்தபடியாக தனது ஆத்துமா வாடும்படி அதிகமாக உபவாசித்து ஜெபித்தவராக அவர் இருப்பார். "அநேக முறை உபவாசங்களிலும்" - 2 கொரி 11:27 என்று பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் எழுதி இருப்பதை பார்த்தீர்களா ? அந்த வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் "அடிக்கடி உவவாசங்களிலும்" என்று எழுதபட்டிருப்பதை நாம் காணலாம்.
இந்த நாட்களில் உபவாசங்களை பற்றியும், சரீர ஒடுக்கங்களைக் குறித்தும் அதிகமான பிரசங்கங்கள் கிடையாது. காரணம் நமது பிரசங்கிமார்களே (எல்லாரும் அல்ல) போஜனத்திற்கு அடிமைபட்டு கிடப்பதுதான். அவர்களால் அதைக் குறித்து ஆழமான தேவ செய்தி கொடுக்க இயலாது.
சரீரத்தை மீனுக்கு குறையாமல் வைத்திருந்து, பிரசங்கி சொன்னது போல ஆகாரங்களால் அதை நாம் சீராட்டிக் கொண்டிருப்போமானால் ஒரு ஆசிர்வாதத்தையும் கர்த்தரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள முடியாது. தினமும் 5 வேளை உணவு உட்கொண்டு பரிசுத்த வாழ்க்கை நடத்தி ஜீவ கிரிடம் பெற்றுக் கொள்ளுவேன் என்று எந்த ஒரு விசுவாசியும் கூற முடியாது. பரிசுத்த வாழ்வு அமைவதெல்லாம் சரீர ஒடுக்கத்தில் மாத்திரமே தான். மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறையாமல் (கலா 5:24) ஒருவரும் உன்னத நாட்டிற்குள் செல்ல முடியாது.
சரீரத்தை உபவாசத்தினால் சிறுமைபடுத்தி பெரிய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக. ஆமென்.
======================
உலக வேலை செய்பவர்கள் / ஊழியம் செய்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்
=======================
*உலக வேலை செய்வோரே,* உலகப்பிரகாரமான பணி இடங்களில் துப்புரவுள்ளவர்களாக இருங்கள். பணி செய்யும் காலங்களில் பரிதானம், லஞ்சங்களை வாங்கிக் குவித்து பணி ஓய்வு காலங்களில் அதைக் கொண்டு நிம்மதி, சமாதானத்தோடு வாழலாம் என்று கனவில் கூட நினைத்து விடாதீர்கள். அது உங்களுக்கு சமாதானத்துக்குப் பதிலாக வேதனைகளையும், சாபத்தையும், கொடிய நோய் பிணிகளையும் கொண்டு வரும். வெறும் கஞ்சை மாதத்திரம் குடிக்கும் வறுமையில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை, பரிதானத்துக்கு உங்கள் கரங்களை நீட்டி விடாதீர்கள். தேசாதிபதிகளும், பிரதானிகளும் தானியேல் தீர்க்கனிடத்தில் எந்த ஒரு முகாந்தரத்தையும், குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதோ அதேவிதமாக தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாயிருங்கள். தேவன் அருளிய வேத வசனங்களின் வெளிச்சத்தில் நடந்து ஆண்டவருடைய வசனங்களுக்கு கீழ்ப்படிந்து நடவுங்கள். மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால் தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாக இருந்த பெரேயா பட்டணவாசிகளைப் போல தினந்தோறும் வேதவாக்கியங்களை முழங்கால்களில் நின்று ஆராய்ந்து தியானித்து வாருங்கள். கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். "இந்த நியாயப் பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாயிருப்பாயாக, அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய்" (யோசுவா 1 : 8)"நீங்களே என் சாட்சிகள்" (ஏசாயா 44 : 8) என்று நம்மைத் தமக்கு சாட்சிகளாக வைத்த ஆண்டவருக்கு பரிசுத்த அப்போஸ்தலரைப் போல "நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம்" (அப் 5 : 27) என்று குரல் கொடுப்போம். நமது பரிசுத்தமான வாழ்வின் மூலமாக அதை நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களுக்கு உறுதிப்படுத்திக் காண்பிப்போம்.
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் - 1 பேதுரு 1:15
*கர்த்தருக்கு ஊழியம் செய்வோரே*, ஆத்தும பாரத்தோடும், கண்ணீரோடும் உங்களைத் தம்முடைய பரிசுத்தமான ஊழியத்திற்குத் தகுதியுள்ளவர்கள், உண்மையுள்ளவர்கள் (1 தீமா 1 : 12) என்று எண்ணி அழைத்த கர்த்தருக்கு உண்மையோடும், உத்தமத்தோடும் ஊழியம் செய்யுங்கள். "வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும் கர்த்தரைச் சேவித்தேன்" (அப் 20 : 19) என்ற பரிசுத்த பவுல் அடிகளாரின் வார்த்தைகளே உங்கள் ஊழியத்தின் நிலைக்கால் சட்டமாயிருப்பதாக. மிகுதியான ஜெபம், உபவாசம் உங்கள் ஊழியங்களுக்கு அலங்காரமாயிருப்பதாக. எந்த ஒரு சூழ்நிலையிலும் மனுஷ புகழ்ச்சிக்காக மாம்சத்தின்படி ஊழியம் செய்யாமல், மற்ற தேவ ஊழியர்கள் எப்படி ஊழியஞ் செய்கின்றார்களோ அப்படியே நானும் ஊழியம் செய்வேன், அவர்கள் எப்படி கோடிகளைக் குவிக்கின்றார்களோ அப்படியே நானும் கோடிகளைக் குவிப்பேன் என்று எண்ணி அவர்களைப் பின்பற்றாமல் "ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? " (அப் 9 : 6) என்ற பரிசுத்த பவுல் அப்போஸ்தனைப் போல ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கும் ஊழியத்தை அவரிடம் கேட்டு அடையாளம் கண்டு அதையே செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையும், உங்கள் ஊழியமும் உங்களை தமது இரத்தக் கிரயத்துக்காகக் கொண்ட உங்கள் அருமை இரட்சகர் இயேசுவை கனப்படுத்தி, மகிமைப்படுத்துவதாக இருப்பதாக.
பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் தேவ ஜனத்தைக் கண்டித்து உணர்த்துங்கள். உங்கள் ஆண்டவரும், போதகருமாகிய கர்த்தரைப் போல உங்களுடைய பிரசங்கங்களில் எல்லாம் எரி நரகத்தைப் பிரசங்கியுங்கள். நித்திய எரி நரகத்துக்குச் செல்லும் ஆத்துமாக்களை எப்படியாவது தேவன் கிருபையாகச் சந்திக்கும்படியாக உபவாசித்து ஜெபியுங்கள். ஆத்தும பாரத்தோடும், வியாகுலப் புலம்பலோடும் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். "தினந்தோறும் சில லட்சம் பேர் ஒருபோதும் வெளியேற முடியாத நித்திய நரக அக்கினியில் விழுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீ அழாதிருப்பாயானால் உன் மனச்சாட்சி எப்பேர்ப்பட்டது?" என்று ஒரு தேவ பக்தன் நம்மைப் பார்த்துக் கேட்கின்றார். உங்களுடைய உண்மையும், உத்தமமுமான தேவ ஊழியத்தின் மூலமாக கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமம் மகிமைப்படட்டும். "இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்" (அப் 16 : 17) என்று மக்கள் நம்மை அடையாளம் கண்டு கொள்ளட்டும். "லித்தாவிலும், சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் பேதுருவைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்" (அப் 9 : 35) என்ற தேவனுடைய வசனத்தின்படி நம்முடைய பரிசுத்தமான வாழ்க்கை, நமது ஆத்தும பாரம் நிறைந்த தேவ ஊழியத்தினைக் கண்டு மக்கள் ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் திரும்பட்டும்.
"வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்" (மத்தேயு 25 : 34) என்ற நம் அருமை ஆண்டவரின் குரல் கேட்கும் ஆனந்த நாளை எதிர் நோக்கியவர்களாக நமது அழைப்பின் பாதையிலே பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக நாம் உண்மையோடும், உத்தமத்தோடும் ஓடுவோம். அதற்கான கிருபைகளை ஆண்டவர்தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக. ஆமென்
======================
ஆண்டவரே என்னை இரட்சியும்
(மத் 14-30)
=======================
வேதத்தில் உள்ள ஜெபங்களில் சிறிய ஜெபம் இது. பெரிய ஜெபத்தை செய்ய பேதுருக்கு நேரமில்லை. காரணம் அவன் கடலில் மூழ்கி கொண்டு இருந்தான். இயேசு கடலில் நடப்பதை கண்ட பேதுரு தானும் கடலில் நடக்க ஆசை பட்டான். ஆனால் கடலில் நடந்த போது அலைகள கண்டு பயந்து மூழ்க தொடங்கினான். இந்த நேரத்தில் தான் மேற்கண்ட ஜெபத்தை ஏறெடுத்தான.
ஜெபத்தை கேட்ட இயேசு தம்முடைய கரத்தை நீட்டி அவனை தூக்கி விட்டார் (நமது தேவன் எவ்வளவு நல்ல தேவன்). உடனே அவனும் இயேசுவோடு படகில் ஏறினான்.
இன்று நீயும் பேதுருவை போல கடல் அலைகளாகிய துன்பங்களாலும், கஷ்டங்களாலும் சூழப்பட்டு அமிழ்ந்து போகும் நிலையில் இருக்கிறாயா ? ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பேதுரு கூப்பிட்டது போல நீயும் இயேசுவை நோக்கி கூப்பிடு. கர்த்தர் நிச்சயம் உனக்கு உதவி செய்யவார்.
பேதுரு அமிழ்ந்து போவதை மற்ற சிஷர்கள் பார்த்தும் அவனுக்கு உதவி செய்யவோ, அவனை தூக்கி எடுக்கவோ முன்வரவில்லை. ஆனால் இயேசு அப்படியல்ல.
பேதுரு ஆபத்து நேரத்தில் படகில் இருந்த சிஷர்களை கூப்பிடவில்லை. ஆண்டவரே என்று கர்த்தரை கூப்பிட்டான்
தேவ ஜனமே உன் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இயேசுவை நோக்கி கூப்பிடு. பேதுருக்கு உதவி செய்த கர்த்தர் உனக்கும் உதவி செய்வார்
ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன் சங் (50-15)
=========================
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்திர்க்கப்படோம்
(1 கொரி 11:31)
=======================
நம்மை நாமே நிதானித்தல் = (காலை முதல் இரவு வரை பேசிய வார்த்தைகள் எல்லாம் கர்த்தருக்கு பிரியமானதா ? கண்களின் பார்வை, சிந்தனை எல்லாம் இந்த நாளில் பரிசுத்தமாக காணப்பட்டதா ? Cell Phone ல் நான் பார்ப்பது எல்லாம் கர்த்தருக்கு பிரியமானதுதானா ? மரித்தால் வருகையில் பிரவேசிப்போமா ?அல்லது கைவிடப்படுவோமா ? என்று நம்மை தினமும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள். (செப்பனியா 2:2)
சிலர் மற்றவர்களுக்கு புத்தி சொல்வார்கள், போதிப்பார்கள், பிரசங்கம் கூட செய்வார்கள், ஆனால் தங்களை நிதானிக்க மாட்டார்கள் (தங்கள் குற்றம், குறை என்ன என்பதை பார்க்க மாட்டார்கள்) மற்றவர்கள் குறைகள்தான் நமக்கு தெரியும். தங்கள் குறை தெரியாது. இது மனுஷ இயல்பு.
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே *ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு* (1 கொரி 9:27) என்று பவுல் கூறுகிறார். தங்களை நிதானிக்கிற அறிவு குறைந்து வருகிற காலம் இது. "உத்தம நிதானிப்பை எனக்கு போதித்தருளும்" (சங் 119:66) என்கிறான் தாவீது.
நம்மை நாமே நிதானித்தல் அவசியம். மற்றவர்களை அல்ல, இல்லாவிட்டால் நஷ்டப்படுவோம், நியாயத்தீர்ப்புக்கு போவோம். நான் எப்படி இருக்கிறேன், பரிசுத்தத்தின் அளவு என்ன ? என்பதை தினமும் சோதித்து பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட நிதானிப்பு நமக்கு தேவை. தன் பிழைகளை உணருகிறவன் யார் ? (சங் 19:12) என்கிறான் சங்கீதக்காரன்
லூக் 18:14 ல் ஜெபம் பண்ண ஆலயம் சென்ற பரிசேயன் கண்களில் மற்றவர்கள் குறை தெரிந்தது, தன் குறை தெரியவில்லை. தன்னை நீதிமானாக நினைத்தான், மற்றவர்களை அற்பமாக எண்ணினான். "நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன" (மத் 7:3) என்றார் இயேசு. எவ்வளவு உண்மை. நமது குறைகளை பார்க்க வேண்டும். மற்றவர்கள் காரியங்களை கர்த்தர் உன்னிடம் கேட்க மாட்டார். இந்த உலகத்தில் யாரையும் திருத்த முடியாது, மாற்ற முடியாது. அநியாயஞ் செய்கிறவன் இன்னும் அநியாயஞ் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; (வெளி 22:11) என்றார் இயேசு.
அவர்களை விட நன்றாக நான் இருக்கிறேன் என்று நினைக்காதே. பரிசுத்தமுள்ளன் இன்னும் பரிசுத்தம் ஆகட்டும் (வெளி 22:11) என்று வேதம் கூறுகிறது. அநேக சபைகளில் இன்றைய நாட்களில் பரிசுத்தத்தை போதிப்பது இல்லை. எந்த மனுஷனும் *தன்னைத்தானே சோதித்தறிந்து*, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் (கர்த்தருடைய பந்தியில்) பானம் பண்ணக்கடவன் (1 கொரி 11:28)
ஆடு மேய்த்த தாவீது ராஜாவாக காரணம் இப்படிப்பட்ட சுத்திகரிப்பு அவன் வாழ்வில் காணப்பட்டது. "கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து பாரும்" (சங் 139:1) "நீர் என்னை கழுவும் " (சங் 51:7) "மறைவான குற்றங்களுக்கு நீங்கலாக்கும் (சங் 19:12) என்று தன்னை ஆராய்ந்து பார்க்கிறான். நிதானிக்கிறான்.
முதலாவது *களைகளைப் பிடுங்கி* அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; (மத்தேயு 13:30) என்றார் இயேசு. செடி வளரும் போது களைகளும் வளர்ந்து வரும். ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரும் போது களைகளை (பேச்சில், பார்வையில், சிந்தனையில், நடக்கையில் காணப்படும் ஒழுங்கினங்கள்) பிடுங்க வேண்டும். முதலாவது உட்புறத்தை சுத்தமாக்கு. (மத்தேயு 23:26) என்றார் இயேசு. வழியை செவ்வைபடுத்துங்கள், *"கற்களை பொறுக்கி போடுங்கள்"* (ஏசா 62:10) *உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு* எச்சரிக்கையாயிரு.
(லூக்கா 11:35) என்றார் இயேசு. கொஞ்சம் புளித்தமா (கொஞ்சம் பாவம்) பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? (1 கொரி 5:6)
பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, *நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு*, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்(2 கொரிந்தியர் 7:1)
அவர் மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல, *தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்* (1 யோவான் 3:3)
சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர வேண்டும் (1பேதுரு 2:2) இப்படிப்பட்ட சுபாவங்கள் நமக்குள் இருக்க கூடாது
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
(புலம்பல் 3:40)
=======================
உங்கள் ஆத்துமாவை உலக மாயைக்கு கை அளித்து விடாதீர்கள்
======================
கவுதாரி பறவைகளை வேட்டையாடும் நரிக் குறவன் அவைகள் வசிக்கின்ற இடங்களில் பூமியில் தனது சுறுக்கு கண்ணிகளை வைத்து அவைகளை மண்ணால் நன்கு மூடி மறைத்து, மண்ணின் மேல் அவைகள் விரும்பி உண்கின்ற தானியங்களை நன்றாகத் தூவிவிடுவான். தானியங்களை ஆசை ஆவலாக கொத்தி உண்கின்ற அந்தப் பறவைகள் பின்னர் தங்கள் கால்களால் பூமியைக் கிளறி தானியங்களை உண்ண முயற்சிக்கையில் நரிக் குறவனின் மறைவான கண்ணியில் அவைகளின் கால்கள் நன்கு சிக்கிக் கொள்ளுகின்றன. அவைகளை அவன் இலகுவாகப் பிடித்துக் கொள்ளுகின்றான்.நரிகளை வேட்டையாடும் அந்த நரிக் குறவன் ஆட்டுக் கொழுப்பால் நன்கு மூடப்பட்ட பயங்கரமான கல்வெடிகளை நரிகளுள்ள கானகப் பகுதியில் போட்டு தனது தந்திரமான நரித்தோல் உடையாலும் நரிக் குரலாலும் அவைகளை தன்னண்டை வரவழைத்து அந்த கல்வெடிகளை அந்த நரிகளை கடிக்க வைத்துக் கொன்று தனக்கு உணவாக்கிக் கொள்ளுகின்றான்.
மீன் பிடிப்போர் தூண்டில் முள்ளைப் புழுவால் நன்கு மறைத்து மீனைப் பிடிக்கின்றனர். மணமான தேங்காய்த் துண்டு அல்லது மணமான கருவாட்டுத் தலையை எலிப்பத்தயத்தில் வைத்து மக்கள் எலிகளைப் பிடிக்கின்றனர்.
பராக்கிரமசாலியான சிம்சோனைப் பிடிக்க அவனது சத்துருக்களான பெலிஸ்தர் தெலீலாள் என்ற வேசியை பொறியாகப் பயன்படுத்தி அவனைப் பிடித்துக் கொள்ளுவதை நாம் பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கின்றோம்.
அதைப் போன்று தேவ ஜனத்தின் விலையேறப்பெற்ற ஆத்துமாவை தனக்கென்று தந்திரமாகப் பிடித்து அவர்களை அவியாத நித்திய அக்கினிச் சூழைக்கு கொண்டு செல்ல மனுஷ கொலைபாதகனான தந்திர சாத்தான் உலக மாயைகளை பொறியாகப் பயன்படுத்துகின்றான். உலகத்தின் ஆஸ்தி ஐசுவரியம், வீடு வாசல்கள், நகை நட்டுகள், பட்டுகள் பீதாம்பரங்கள், பட்டம் பதவிகள், லோகத்தின் மேன்மைகள், உலகப் புகழ்ச்சிகள், மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை போன்றவற்றை மாந்தருக்கு காண்பித்து அந்த மாயாபுரி சந்தைச் சரக்குகளின் மேல் மயக்கம் கொள்ள வைத்து அவர்கள் கர்த்தரை மறந்து அவைகளை முழுமையாக ருசித்துப் புசித்து அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே மரணம் என்ற தனது சங்கார தூதனை அனுப்பி அவர்களின் உயிரை வாங்கி அவர்களை நரக பாதாளத்துக்கே அனுப்பி வைத்து விடுகின்றான்.
உலக மக்களைக் கவனித்துப் பாருங்கள், சாத்தானுடைய மேற்கண்ட மாயாபுரிச் சந்தைச் சரக்குகளின்மேல் எத்தனை பைத்தியம் கொண்டவர்களாக, பித்துப் பிடித்தவர்களாக அலைவதை நாம் காணலாம். பணத்தைச் சம்பாதிப்பவன் எத்தனை கோடி தனக்கு இருப்பினும் தனக்குள்ளதில் திருப்தியின்றி இன்னும் கோடிகளை குவிக்க துடி துடித்து வெறிபிடித்து நிற்கின்றான். தொழிற்செய்யும் வியாபாரிகளை (கிறிஸ்தவ வியாபாரிகளையும் சேர்த்துத்தான்) கவனியுங்கள். அவர்களுடைய வாயின் வார்த்தைகளைக் கவனித்துக் கேளுங்கள். தனது தொழிலில் தன்னையே மறந்து பந்தயத்தில் ஓட ஆயத்தமாக முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்கும் பந்தயக் குதிரைகளைப் போல தங்கள் தொழிலில் மூழ்கி, மயக்க நிலையிலிருப்பதை நாம் பரிதாபத்துடன் காணக்கூடும். தங்கள் ஆகாரங்களை நேரத்திற்கு நேரம் புசியாமல், குடும்பத்தின் பிள்ளைகளோடு போதிய நேரம் செலவிட்டு மகிழ முடியாமல், போதிய இளைப்பாறுதலில்லாமல் அவர்கள் அலசடிப்படுவதை நாம் துயரத்தோடு பார்க்கலாம். அப்படியே உலகப்பிரகாரமான அனைத்து அலுவல்களில் இருப்போர் யாவரும் அதே யந்திரமயமான நிலையில் தான் போராடிக் கொண்டு இருக்கின்றனர். எல்லாம் தந்திர சாத்தானின் கைவண்ண வேலைதான்!
தேவ ஜனமே, உலகத்தில் நாம் காண்கின்ற யாவும், நமக்கென்று நாம் சொந்தம் கொண்டாடும் அனைத்தும், நாம் அனுபவித்துக் கொண்டிருப்பவைகள் எல்லாம் ஷணப் பொழுதில் தங்களுக்கு செட்டைகளை உண்டுபண்ணிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து மறையும் காரியங்களாகும். அதுமட்டுமல்ல, அவைகள் நாம் நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளவிடாதபடி நம்முடைய மனக்கண்களை குருடாக்கி கடைசிவரை நம்மை இருளிலே தடவித்திரியப்பண்ணி இறுதியில் என்றைக்குமுள்ள காரிருளுக்குள் நம்மை தலை கீழாகத் தள்ளிவிடும் தந்திர சாத்தானின் முதல்தரமான பொறிகளாகும்.
நாம் உலகத்தில் இருப்பதால் உலகக் காரியங்களோடு நாம் வாழ வேண்டியது கட்டாயமான அவசியமாகவிருப்பினும் அவைகள் மேலேயே நாம் நமது முழுப்பற்றையும், பாசத்தையும் வைத்து நமது நித்திய பேரின்ப வாழ்வை எந்த ஒரு நிலையிலும் கை நழுவ விட்டுவிடக்கூடாது. "பூமியிலே நான் பரதேசி" (சங் 119 : 19) என்ற திட்டமான உணர்வும் "நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது" (பிலி 3 : 20) என்ற பரலோக நாட்டமும் நம்மை முழுமையாக ஆட்கொண்டு நம்முடைய நெருக்கமான உலக அலுவல்களின் மத்தியில் நேரம் கண்டு பிடித்து கர்த்தரோடு இடைபடவும், நித்திய ஜீவன் வரை நிலை நிற்கிற போஜனத்துக்காக கிரியை நடப்பிக்கவும் (யோவான் 6 : 27) மிகுந்த ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். "சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது, தேவ பக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது" (1 தீமோ 4 : 8) என்ற தேவ வார்த்தையை நம் கண்களை விட்டு ஒருக்காலும் விலக்கிவிடக்கூடாது.
தேவ ஜனமே, உங்கள் மனதில் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உலகத்தின் அனைத்து மாயாபுரி கண் காட்சிகளும், காரியங்களும் சாத்தான் நம்மை நரகத்துக்கு கொண்டு செல்ல நம் ஆதித்தாய் தந்தையரை தனது தந்திரத்தால் வீழ்த்திய அதே ஏதேன் தோட்டத்தில் வடிவமைத்துள்ள ஆட்டுக் கொழுப்பால் நன்கு மூடப்பட்ட அதிபயங்கரமான கல்வெடிகளேதான்.
உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
யோசுவா 23:11
"நீங்கள் கிறிஸ்துவுடனே கூட எழுந்ததுண்டானால் கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள், பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவை களையே நாடுங்கள்" (கொலோசேயர் 3 : 1 - 2)
Thanks for using my website. Post your comments on this