================
யோனத்தான் எட்வர்ட்ஸ் (1703 - 1758)
================
நியூ இங்கிலாந்தின் மிகப்பெரிய, வளம் கொழிக்கும், சமூக நலம் கொண்ட சபைகள் ஒன்றின் போதகராயிருந்த எட்வர்ட்ஸ், தனது மந்தையின் தேவைகளைக் குறித்து விசேஷித்த ஞானமுள்ளவராயிருந்தார். அவர்களின் ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் குறித்து மிக மென்மையான இருதயம் ஒன்றைக் கொண்டிருந்தார் அவர்.
தன் தேவனோடு தனிமையில் எட்வர்ட்ஸ் தரித்திருக்கும் கானகங்களுக்குச் செல்வோம் வாருங்கள்.. வளைந்து நெளிந்து கனத்துக் கிடக்கும் அந்தப் பழைய மரத்துக்குப் பின்னால் ஊர்ந்து சென்று அவரது உடைந்த இருதயத்தின் ஜெபத்தைக் கேட்போம்..
"ஓ! கிறிஸ்து மாத்திரமே நிறைந்து, பரிசுத்தமும் தூய்மையுமான அன்பினால் அவரையே நேசமாய் நேசித்து, அவரையே நம்பி, அவரையே சார்ந்து, அவரிலேயே வாழ்ந்து பரலோகப் பரிசுத்தத்தினாலே முற்றும் முழுவதுமாய்ப் பரிசுத்தமாக்கப்பட்டு, தன்னை உடைத்து வெறுமையாக்கி மண்ணோடு மண்ணாய்த் தன்னைத் தாழ்த்திய ஆத்துமா ஒன்றை தேவனே இப்பொழுது எனக்குத் தர மாட்டீரோ?"*
இதுவே அந்தக் கானகத்தில் அவரது ஜெபமாய் எதிரொலித்துப் பரலோகத்துக்கு ஏறிச்சென்றது.
தனது சம காலத்தில் வாழ்ந்த ஜார்ஜ் ஒயிட் ஃபீல்டின் ஆவியும் எட்வர்ட்ஸின் ஆத்துமாவும் பின்னிப் பிணைந்து ஒன்றாய் இணைந்திருந்தன. இந்த வல்லமையான அமெரிக்கர் யோனத்தான் எட்வர்ட்ஸின் வாழ்க்கை, ஆங்கிலேய அப்போஸ்தலர் ஒயிட் ஃபீல்டினால் அக்கினி மூட்டப்பட்டதோ? அந்நாட்களில் நியூ இங்கிலாந்தைக் கலக்கிக் கொண்டிருந்த ஒயிட் ஃபீல்டின் இடிமுழக்கப் பிரசங்கங்கள், எட்வர்ட்ஸின் சாதாரணமும் வழக்கமுமான பிரசங்க வாழ்வை உலுக்கியெடுத்ததோ? இதுவொன்றும் ஒரு சொல்லோவியக் கேள்வி அல்ல. இதற்கு முழுவதுமாக நம்மிடம் விடை இல்லாமல் போனாலும், இதில் விதையளவு உண்மையாவது இல்லாமல் இல்லை. ஆனால் ஜார்ஜ் ஒயிட் ஃபீல்டைச் சந்தித்த பிறகு யோனத்தான் எட்வர்ட்ஸின் பிரசங்கமே தலைகீழாய் மாறியது.
மாஸ் என்ற இடத்தின் ஸ்டாக் பிரிட்ஜிலுள்ள ஒரு சிறு சபையோடேயே எட்வர்டை வைத்துவிடுவது தேவனுக்குச் சித்தமாயிருந்தது. அது அவருக்கு ஒரு தனிமையின் சிறைவசத்தைப் போலிருந்தது. ஆனாலும் அப்படிப்பட்ட அனுபவத்திலும் எட்வர்ட்ஸின் புத்திக்கூர்மை சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது. அவர் தனக்குள்ளே அடைகாத்து வைத்திருந்த எண்ணங்கள் உருவெடுத்துப் பிறக்க ஆரம்பித்தன. அந்த நாட்களில் எட்வர்ட்ஸின் ஆத்துமா, தேவனிடம் அவரது "வார்த்தைகளின்" வல்லமையை அளவில்லாமல் பெற்றுக்கொண்டது. அதன் பின் அவரது பேனா முனையிலிருந்து புறப்பட்டவை எழுத்துக்களல்ல..அவ்வளவும் அக்கினிச் சரங்கள்.. எட்வர்ட்ஸ் மரித்தாலும் அவரது செய்திகளோ இன்னும் பேசிக்கொண்டே இருக்கின்றன.
கவிஞரும் எழுத்தாளருமான மில்ட்டனின் சத்தம் அவரது மரணத்தால் மௌனப்படுத்தப்பட்டு, நீண்டு நிசப்தமாகிப் போன போது உட்வொர்த் கதறியது..
"ஓ! மில்ட்டனே, நீர் இந்நேரம் உயிரோடிருக்க வேண்டாமோ? ஓடாது தேங்கி நாறி நிற்கும் ஓடையாய் இன்றிருக்கும் இங்கிலாந்துக்கு இன்று நீர் வேண்டாமோ?"*
இதே வரிகளை நாம் நிச்சயமாகவே இப்படி எழுதலாம்..
*"ஓ எட்வர்ட்ஸே ! நீர் இந்நேரம் உயிரோடிருக்க வேண்டாமோ? ஆவியிலே தேங்கி நாறி ஊறி நிற்கும் அமெரிக்காவுக்கு உயிர் கொடுக்க இன்று நீர் வேண்டாமோ?"*
பாலாடை போன்று மேலாக ஒட்டியிருக்கும் ஒழுக்கமென்ற மெல்லிய மேலாடை மட்டும் இல்லாதிருக்கும் பட்சத்தில் அமெரிக்கா என்றோ விழுந்து நொறுங்கிக் காற்றோடு காணாமல் போயிருக்கும். அழிவின் முனையிலுள்ள இந்த மணிநேரம் வேண்டி நிற்பது எட்வர்ட்ஸ் போன்றதொரு முழுத் தலைமுறை ஒன்றினையே!
"சேனைகளின் கர்த்தாவே, எங்களைத் திருப்பிக் கொண்டு வாரும். உமது முகத்தை எங்கள் மேல் பிரகாசிப்பியும். அப்பொழுது நாங்கள் இரட்சிக்கப்படுவோம்..(சங் 80:3, 7, 19).
இந்த மாபெரும் ஜாம்பவானான தேவ மனிதனின் சமகாலத்தில் வாழ்ந்த மேக்ஸ் ஜூக்ஸ் என்ற இன்னொரு மனிதனோடு இவரை ஒப்பிட்டு, "ஒழுக்கத்துக்கு நேர்ந்த இடுக்கம்" என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் அல் சாண்டர்ஸன் எழுதிய வரிகளில் சில இதோ!
"நாஸ்திகனான மேக்ஸ் ஜூக்ஸ் ஒரு தேவனற்ற வாழ்க்கை வாழ்ந்தான். பக்தியற்ற ஒரு பெண்ணோடு அவன் வாழ்ந்த குடும்ப வாழ்வின் சந்ததியில் 310 பேர் தரித்திரமாய்ச் செத்தனர். 150 பேர் கிரிமினல்களாகவும், 7 பேர் கொலையாளிகளாகவும், 100 பேர் குடி வெறியர்களாகவும், குடும்பப் பெண்களில் பாதிப்பேர் விலை மாதர்களாகவும் ஆகிப்போயினர். அவனது சந்ததியில் பிறந்த 540 பேரால் நாட்டுக்கு ஒன்றேகால் மில்லியன் டாலர் இழப்பும் நஷ்டமுமாய் விடிந்தது.
ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இதன் இன்னொரு பக்கத்தைத் திருப்பும்போது, இந்த மேக்ஸ் ஜுக்ஸ் வாழ்ந்த அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரிய அமெரிக்க தேவ மனிதனாகிய யோனத்தான் எட்வர்ட்ஸுக்கும் ஒரு ரெக்கார்டு உண்டு. இவரோ ஒரு தெய்வ பயமிக்க பெண்ணை மணந்தார்.
யோனத்தான் எட்வர்ட்ஸின் வழித்தோன்றல்களான, மிகவும் பிரசித்தி பெற்ற 1394 பேர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி அவர்களில் 13 பேர் பல்கலைக்கழக இயக்குனர்களாகவும், 65 பேர் கல்லூரிப் பேராசிரியர்களாகவும், 3 பேர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் செனட்டர்களாகவும், 30 பேர் நீதிபதிகளாகவும், 100 பேர் வக்கீல்களாகவும், 60 பேர் டாக்டர்களாகவும், 75 பேர் தரைப்படை, கப்பற்படை அதிகாரிகளாகவும், 100 பேர் தேவனின் ஊழியக்காரர்களாகவும் மிஷினரிகளாகவும், 60 பேர் புகழ்பெற்ற எழுத்தாளர்களாகவும், ஒருவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உதவி ஜனாதிபதியாகவும், 80 பேர் வெவ்வேறு அரசாங்க அதிகாரிகளாகவும், 295 பேர் கல்லூரிப் பட்டம் பெற்றவர்களாகவும், அவர்களில் சிலர் மாநில கவர்னர்களாகவும், வெளிநாட்டுத் தூதுவர்களாகவும் சிறந்து செயலாற்றியிருந்தனர். அவர்களால் நாட்டுக்கு ஒரு நயா பைசா கூட செலவிருந்ததில்லை.
"நீதிமானுடைய பேர் புகழ் பெற்று விளங்கும்" (நீதி 10:7).
நாம் கண்டுகொண்ட காரியத்தின் கடைத்தொகை இதுவே!*
அடைபட்ட அக்கினி
Bio-Sketches By
Rev. LEONARD RAVENHILL
தமிழில்
Pr. Romilton
9810646981
Thanks for using my website. Post your comments on this