==============
ஓர் குட்டிக் கதை
எல்லோரும் வேலைக்கார்கள் தான்!!
===============
பெரியவர்கள் (முதியவர்கள்) நமது வீட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள். ஏனெனில் அவர்களின் வழிநடத்துதல், அறிவுரைகள் சூழ்நிலைக்கேற்றாற்போல் செயல்படுதல் என்பன போன்ற அசாதாரண திறமைகள் படைத்தவர்கள். அவர்களின் குறைவு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகப்பெரிய பின்னடைவு என்பதுதான் உண்மை.
இன்றைய காலக்கட்டத்தில் பெரியவர்கள் ஒரு இடத்திலும் பிள்ளைகள் மற்றொரு இடத்திலும் வாழ பழகி விட்டதால் அவர்களின் அருமையை இந்த நூற்றாண்டு பிள்ளைகள் உணரவில்லை. அதனால் ஒவ்வொரு சூழ்நிலையையும் மிகுந்த வருத்தப்பட்டு தாண்டி வருகிறார்கள். அவ்வாறு தாண்டி வந்தாலும் அவர்களுக்கு மனநிறைவும் கிடைப்பதில்லை.
எக்காரணம் கொண்டும் அவர்கள் மனம் பாதிக்கப்படுகிற வகையில் எந்த காரியமும் செய்யக்கூடாது. எந்த சூழ்நிலையில் யாரிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்து அனுபவப்பட்டவர்கள் தான் முதியவர்கள்.
குடும்பத்தில் யாராலும் செய்யமுடியாத காரியத்தை மிக சுலபமாய் செய்யும் ஆற்றல் பெற்ற முதியவர்களின் முக்கியத்துவத்தை இக்கதை மூலம் காண்போம்.
ஆப்ரிக்கக் கண்டத்தில் “காமெரா’ என்ற ஒரு நாடு. அந்த நாட்டை ஆட்சி புரிந்து வந்த மன்னன் மிகவும் ஆணவம் பிடித்தவன். குடிமக்களை வாட்டி வதைத்து வந்தான். அவன் பெயரைக் கேட்டாலே அழுத பிள்ளையும் வாய் மூடும்.
ஒருநாள் வழக்கம் போல அரசவை கூடியது. அமைச்சர்கள் அச்சத்துடன் அமர்ந்திருந்தனர். பொதுமக்களும் கூடியிருந்தனர். அகந்தை மிக்க அந்த அரசன் அனைவர் மீதும் பார்வையைச் செலுத்தினான். அந்த மன்னன் லேசாகக் கனைத்தான். அனைவரும் பயந்து நடுங்கினர்.
மன்னன் பேச ஆரம்பித்தான். அனைவரும் அமைதியாகக் கேட்டனர்.
“நான் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்லப் போகிறேன்’ என்றான் மன்னன்.
யாருக்கு என்ன ஆபத்து வரப்போகிறதோ என்று அனைவரும் அஞ்சினர். அரசன் தன் தலையை உயர்த்தினான். மார்பை நிமிர்த்திக் கொண்டான். “இன்று முதல் நான்தான் உலகின் தலைவன்! உலகில் வாழும் அனைவரும் என்னுடைய அடிமைகள்’ என்று அதிகாரம் பொங்கக் கூறினான்.
அரசன் சொல்வது தவறு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் மனதிற்குள் சிரித்துக் கொண்டு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். எதிர்க் கருத்து சொல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை.
மன்னன் கூடியிருந்தோர் முகத்தைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் அச்சம் இருந்தது.
அப்போது அங்கே ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது!
பொதுமக்கள் மத்தியிலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
“நீங்கள் சொல்வது தவறு. எல்லா மனிதர்களும் ஒருவருக்கொருவர் பணி செய்யும் வேலைக்காரர்கள்தான்.’
இதைக் கேட்டதும் மன்னனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. மீசை துடித்தது. இடிபோன்ற குரலில் கேட்டான், “இப்படிச் சொன்னது யார்?’
அவையில் அமைதி நிலவியது. அவர்கள் மனதில் பேரச்சம் எழுந்தது. துணிந்து பேசியவனின் தலை தங்கள் கண்முன்னே சீவப்படுமே என்ற இரக்க உணர்வு அனைவருடைய நெஞ்சிலும் எழுந்தது.
மன்னனின் கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. மறுத்துப் பேசியவன் யார் என்று தெரியவில்லை. மன்னன் விருட்டென்று எழுந்தான்.
அவையோரைப் பார்த்து மீண்டும் உறுமினான்.
“என்னை வேலைக்காரன் என்று சொன்னவன் யார்?’
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு முதியவர் தடியை ஊன்றியபடி முன்னே வந்தார்.
நிதானமாக நடந்து வந்து மன்னன் முன்னால் நின்று வணங்கினார்.
“அப்படிச் சொன்னவன் நான்தான்!’ என்றார்.
கொடுங்கோலனாகிய மன்னனின் கரங்கள் வாளைத் தொட்டன. அந்த முதியவரின் தலை தரையில் விழப் போவதை எண்ணி அனைவரும் பயந்து கொண்டிருந்தனர்.
“இவர் ஏன் இப்படிச் சொன்னார்? தவறுதலாகக் கூறிவிட்டாலும் மன்னன் முன் ஏன் வந்தார்? நான்தான் சொன்னேன் என்று கூற என்ன துணிச்சல் இவருக்கு? இவருடைய உயிர் இப்போது போகப் போகிறதே?’ என்று அனைவரும் வேதனை அடைந்தனர்.
அரசன் ஒரு விநாடி யோசித்தான். வாளைத் தொட்ட கை பின் வாங்கியது. “யார் நீ?’ என்று உரத்த குரலில் கேட்டான்.
உடனே அந்த முதியவர், “அரசே, என் பெயர் பௌபக்கர். எங்கள் கிராமத்தில் குடிநீர் இல்லை. மன்னர் பெருமான் அங்கு கிணறு வெட்டித் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே வந்தேன்’ என்றார்.
மன்னன், “அப்படியா! நீ ஒரு பிச்சைக்காரன். அரசனான என்னை வேலைக்காரன் என்று கூறுவதற்கு உனக்கு எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்!’ என்று கடுங்கோபத்துடன் கேட்டான்.
அந்த முதியவர் நிதானத்துடன், “மன்னா! நான் உண்மையைத்தான் கூறினேன்’ என்றார்.
மன்னன் முகத்தில் வியப்பு பளிச்சிட்டது.
“சரி, நிரூபித்துக் காட்டு. என்னை உன் வேலைக்காரனாக மாற்றிக் காட்டு. அப்படி நீ செய்து விட்டால் நீ வேண்டுவது அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். நீ சொன்னதைச் செய்யத் தவறினால் உன் தலை இப்போதே துண்டிக்கப்படும்’ என்றான் அரசன்.
“நல்லது அரசே! எங்கள் ஊரில் ஒரு பழக்கம் உண்டு. இப்படி யாராவது சவால் விட்டால் அவரது பாதங்களைத் தொடுவோம். அதன்படி தங்கள் பாதங்களை நான் தொட அனுமதி கொடுங்கள்’ என்றார் முதியவர்.
பின்னர், “அதுவரை என் கையிலுள்ள இந்தக் கோலை ஒரு நொடி பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று வேண்டினார்.
பிறகு அரசனிடம் கோலை நீட்டினார். அவனும் அதை வாங்கித் தன் கையில் வைத்துக் கொண்டான்.
முதியவர் அரசனின் காலைத் தொட்டார். பின்னர் கோலை அரசனிடமிருந்து வாங்கிக் கொண்டார். அரசனைப் பார்த்தார்.
“நான் சொன்ன உண்மையை நிரூபித்துவிட்டேன் அரசே!’ என்றார்.
“என்ன சொல்கிறாய் நீ?’ என்று வியப்புடன் மன்னன் கேட்டான்.
“அரசே, நான் உங்கள் பாதங்களைத் தொடுவதற்கு முன் என் கையிலிருந்த கோலை வைத்திருக்கும்படி தங்களிடம் கொடுத்தேன் அல்லவா? நீங்களும் அப்படியே செய்தீர்கள். அதாவது நான் சொன்ன வேலையைச் செய்யும் வேலைக்காரனாக ஆனீர்கள். ஆகவே நான் சொன்ன உண்மையை நிரூபித்துவிட்டேன்’ என்றார் அந்த முதியவர்.
முதியவர் கூறியதிலிருந்த உண்மையை உணர்ந்த அரசன் மிகவும் வியந்து போனான். நுண்ணறிவு மிக்க அவரின் வேண்டுகோளை ஏற்றான். அவர் கேட்டதைவிட அதிக உதவிகளைச் செய்தான்.
To get daily story contact +918148663456
அதுமட்டுமன்றி, அந்த முதியவரைத் தன்னுடைய ஆலோசகராகவும் வைத்துக் கொண்டான்.
கொடுங்கோல் மன்னன் அன்று முதல் செங்கோல் மன்னனாக மாறினான்.
என் அன்பு வாசகர்களே,
முதியவர்களால் எந்த கடினமான சூழ்நிலையையும் இலகுவாக மாற்ற முடியும்.
ஆனால் இஸ்ரவேலில் நடந்த காரியத்தை இவ்வாறு புலம்புகிறார்
புலம்பல் 5:12
பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை
ஏறத்தூக்கினார்கள், முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
முதியவர்களுடைய முகம் எப்போதும் என்றென்றைக்கும் மதிக்கப்பட வேண்டும் ஏனெனில்
யோபு 12:12
முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
ஆகவே அவர்களிடம் இருக்கும் ஞானத்தையும் புத்தியையும் பெற அவர்களை நல்ல முறையில் பராமரித்து பாதுகாத்து தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.
============
ஓர் குட்டிக் கதை
சந்தன மரம்
============
ஒரு சமயம் காட்டில் வேட்டையாட ஒரு அரசன் தன் பரிவாரங்களுடன் சென்றான்; ஒரு புலியை வேட்டையாட அவன் துரத்திச் சென்றபோது, தனிமைப் பட்டு, வழி அறியாது திசை மாறி விட்டான். அங்கும் இங்கும் அலைந்ததில் பசி, தாகம், களைப்பு.
அப்போது காட்டின் இடையே ஒரு குடிசை கண்ணில் பட்டது. குடிசையில் இருந்த ஏழை, அரசனை அடையாளம் கண்டுகொண்டு, பசிக்குப் பழங்களும், தாகத்துக்கு நீரும் தந்து மிகுந்த மரியாதையுடன் உபசரித்தான்.
அவன் என்ன செய்து பிழைக்கிறான் என்று அரசன் கேட்ட போது, "மகா ராஜா! மிகவும் கஷ்ட ஜீவனம்தான் எனக்கு; காட்டில் காய்ந்த மரங்களை வெட்டி, அவற்றை எரித்துக் கரியாக்கி, கரியை வியாபாரம் செய்து பிழைக்கிறேன்; பரம்பரையாக இதுதான் எங்கள் தொழில்; குடும்பத்தில் பாதி நாள் அரை வயிற்றுக்குத்தான் உணவு கிடைக்கிறது" என்று புலம்பினான்.
பின் அரசனை அழைத்துக்கொண்டு காட்டின் ஊடே வழி காட்டிக் கொண்டு வந்து நெடுஞ்சாலையில் விட்டான். அவன் சேவையில் மகிழ்ந்த அரசன், அரசாங்கத்தின் பாதுகாப்பில் காட்டின் ஒரு பகுதியில் இருந்த சில சந்தன மரங்களைக் காட்டி, "நீ அவற்றை வெட்டி விற்க உனக்கு அனுமதி தந்து ஆணையிடுகிறேன்; நீ விற்று செல்வம் சேர்த்துக்கொள்" என்று சொல்லி விட்டு விடை பெற்றுச் சென்றான்.
ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் காட்டுக்கு வந்த அரசன், தன் பரிவாரங்களுடன் அந்த விறகுவெட்டி இருந்த குடிசையின் இடத்துக்குச் சென்றான். அங்கே, வறுமை மாறாமல், அதே ஏழ்மையுடன் அவன் இருப்பதைக் கண்ட மன்னன், ஆச்சரியமுற்று, "நீ ஏன் உன் பழைய நிலையிலேயே இருக்கிறாய்? நான் தந்த அந்தச் சந்தன மரங்கள் என்னவாயின?" என்று விசாரித்தான்.
"அந்த மரங்களால் எனக்கு என்ன பயன் மகாராஜா? அவைகளை நான் வெட்டி எரித்துக் கரியாக்கி விற்றபோதும் கரிக்கு யாரும் எந்தக் கூடுதல் விலையும் தரவில்லையே?" என்றான்.
அதிர்ச்சியுற்ற அரசன், அவனையும் கூட்டிக்கொண்டு போய் சந்தன மரங்கள் இருந்த பகுதிக்குப் போனான்; அங்கே ஒரு மரத்தைத் தவிர எல்லா மரங்களும் வெட்டப்பட்டு இருந்ததைக் கண்டு மன்னன், "அட முட்டாளே! இது சாதாரண விறகு மரமல்ல; சந்தன மரம்; மிக மிக விலை மதிப்புள்ளது;
போகட்டும்; ஒரு மரமாவது பிழைத்ததே! இதை வெட்டித் துண்டுகளாக விற்றாலேயே உனக்கு ஆயிரக் கணக்கில் பணம் கிடைக்கும்; போ; உள்ளதை வைத்தாவது இனி அறிவுடன் பிழைத்துக்கொள்!" என்றான்.
என் அன்பு வாசகர்களே,
தொழில் அறிவு அதிகம் இருந்தாலும் அல்லது ஊழியத்தில் தலைசிறந்தவர்களாயினும் இன்றைய உலகத்தின் நடப்பு அறிவு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு விதத்தில் இந்த உலகம் வளர்ச்சி அடைந்தது கொண்டுதான் இருக்கிறது. அந்த வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் நாமும் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் இக்கதையில் அந்த மனிதனை போல என்றும் கரியை வித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய வாய்ப்பை அந்த ராஜா ஏற்படுத்திக் கொடுத்தும் உலக அறிவு இல்லாமையால் அந்த சந்தன மரத்தின் மதிப்பையும் கெடுத்து தன் ஜீவனத்திற்கு தேவையானதையும் நஷ்டப்படுத்திக் கொண்டான்.
To Get Daily Story And Prayers Contact +917904957814
உலக ஞானம் வேண்டும் என்பதற்காக எந்நேரமும் அதையே ஆராயந்துக் கொண்டிருக்க கூடாது. ஏனெனில் இந்த உலகம் சீக்கிரத்தில் அடிமைப்படுத்தி விடும். இந்த உலக ஞானம் அழிந்து போகும் என்றாலும் இங்கு வாழ்கின்ற நாட்கள் வரை இன்றியமையாததே.
நம்முடைய ஞானம் பரத்திற்கேற்ற ஞானமாய் இந்த உலகத்திற்காக வேஷம் தரியாமல் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் அதனோடு ஒன்றாமல் நம்முடைய ஞானம் நமக்கும் பிறருக்கும் பிரயோஜனமுண்டாக தேவனுக்கு பிரியமான நன்மை செய்வோம் மறுரூபமாவோம்.
ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
===========
ஓர் குட்டிக் கதை
நான் சம்பாதிக்கும் பணம்
=============
ஒரு அழகிய நகரம், அந்த நகரத்தின் ஒரு பகுதியில் “அன்பு நகர்” என்னும் பத்திருபது வீடுகள் கொண்ட பகுதி. அங்கு தருமன், ராசம்மாள் என்பவர்களுக்கு யதுவன் என்னும் மகன் இருந்தான்.
தருமனின் குடும்பம், அவனது தந்தையார் சம்பாதித்து வைத்த செல்வத்தால் ஓரளவு நல்ல வசதியாக இருந்தது, என்றாலும் யதுவன் அந்த சிறு வயதிலேயே செலவாளியாக இருந்தான். அவனது தந்தை அடிக்கடி அவனிடம் சொல்லும் வார்த்தை ‘நாம் சம்பாதிக்கும் போதுதான் காசின் அருமை நமக்கு தெரியும்’ என்று சொல்வார். இதை பற்றி எல்லாம், யதுவன் எப்பொழுதும் கவலைப்படமாட்டான், கையில் கிடைக்கும் பணத்தை எடுத்து செலவு செய்து விடுவான்.
அந்த நகரின் பேருந்து நிலையத்தருகே பிச்சைசைக்காரன் ஒருவன் வசித்து வந்தான், அவன் யதுவன் பெற்றோருடன் அந்த பக்கம் செல்லும்போது பிச்சைசை கேட்பான், அதுவும் தருமனிடமோ, அவன் மனைவி ராசமாளிடமோ கேட்க மாட்டான். யதுவனிடமே வந்து கையேந்துவான். யதுவன் அம்மாவின் கைப்பையிலோ, அல்லது அவனது சட்டைப்பையிலோ இருப்பதை எடுத்து அப்படியே கொடுத்து விடுவான்இது பிச்சைசைக்காரனுக்கு சந்தோசத்தை கொடுத்தது. இப்படியாக இரண்டு மூன்று வருடங்கள் ஓடிக்கொண்டிருக்க, யதுவன் கொஞ்சம் பெரியவனாகியிருந்தான். வழக்கம் போல பேருந்து நிலையம் செல்லும்போது அவனிடம் கை நீட்டிய பிச்சைசைக்காரனிடம் ஒரு ‘பத்து ரூபாய்’ தாளை போட்டான். பிச்சைசைக்காரன் வித்தியாசமாய் அவனை பார்த்து விட்டுசென்றான்.
இன்னும் சில வருடங்கள் ஓடியிருக்க, வழக்கம்போல யதுவன் பேருந்து நிலையம் அருகில் சென்ற போது அதே பிச்சைசைக்காரன் அவனிடம் கையேந்தினான். யதுவன் ‘ஐந்து ரூபாய்’ தாள் ஒன்றை போட்டான். இன்றும் ஆச்சர்யமாக பார்த்தான் அந்த பிச்சைசைக்காரன். அடுத்து இரண்டு மூன்று வருடங்கள் ஓடியிருக்க அன்று பேருந்து நிலையம் அருகில் வந்த யதுவனிடம் பிச்சைசைக்காரன் கை நீட்டினான். யதுவம் தன் சட்டைப்பையினுள் தேடி ‘மூன்று ரூபாய்’ காசுகளாக போட்டான். பிச்சைசைக்காரன் எதுவும் பேசவில்லை.
அடுத்து வந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் பேருந்து நிலையம் அருகில் வந்த யதுவனிடம் பிச்சைசைக்காரன் கையை நீட்ட ஒரு ரூபாய் மட்டும் போட்டான். பிச்சைசைக்காரன் யதுவனிடம் “தம்பி இது என்ன அநியாயம்” உங்களை சிறுவயதில் இருந்து பார்த்து வருகிறேன். அப்பொழுதெல்லாம் கைக்கு கிடைத்த பணத்தை அள்ளி கையில் கொடுப்பீர்கள், அதன் பின் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இன்று வெறும் ‘ஒரு ரூபாய் காசை ’ மட்டும் கொடுக்கிறீர்கள் என்றான்.
யதுவன் அவரை பார்த்து “ஐயா அன்று ‘கை நிறைய பணம்’ அள்ளி கொடுத்தது என் தாத்தாவின் பணம், அதன் அருமை எனக்கு தெரியவில்லை, அடுத்து நான் ‘பத்துத் ரூபாய்’ போட்டபொழுது என் பெற்றோர் சம்பாதித்த பணம், கொஞ்சம் அதன் அருமை தெரிந்தது. அடுத்து ‘ஐந்து ரூபாய்’ போட்டது நான் சம்பாதித்த பணம், இதன் அருமை நன்றாக புரிந்தது. அடுத்த ‘மூன்று ரூபாய்’ போட்டது நான் அளவோடு செலவு செய்யும் பக்குவத்தை எட்டி உள்ளேன் என்பதை காட்டும் பணம், இந்த ‘ஒரு ரூபாய்’ என்பது ஒவ்வொரு ருபாயும் எனக்கு மிகவும் முக்கியம் என்பதை காட்டும் பணம் என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டான்.
To Get Daily Story and pray for Nation Contact +917904957814
எனதருமை வாசகரே,
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாம் நம்முடைய வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டு இருக்க வேண்டும். அந்த பிச்சைக்காரனை போல அல்ல மாறாக அந்த யதுவனைப்போல. ஏனெனில் ஒவ்வொரு முறை பிச்சைக்காரன் யதுவனை பார்க்க நேரிடும்போதும் ஏதாகிலும் ஒரு காரியத்தில் முன்னேறினவனாய், தேறினவனாய் காணலாம். ஆனால் அந்த பிச்சைக்காரனோ, அன்றும் இன்றும் என்றும் தன் வாழ்க்கையில் முன்னேறாமல் பிச்சைக்காரனாய் தன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறான்.
அநேகருடைய வாழ்க்கையும், இப்படித்தான் தங்கள் கைகளை ஏந்தியே தங்கள் நாட்களை மெல்ல மெல்ல நகர்த்துகின்றனர். தானும் தன்னுடைய குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற சிந்தை இருந்தாலும், நடக்கின்ற காரியங்களை நோக்கும்போது, நாம் இப்படி வாழ்வது தான் சிறந்தது என்ற மனப்பான்மை கொண்டவர்களாய் மாறிவிடுகின்றனர்.
முன்னேற வேண்டும் என்கிற சிந்தை மட்டுமல்ல அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கிற அனுபவங்களை கொண்டு, அதை நல்ல முறையில் பயன்படுத்தி, சிலர் அதை உதாசீனப்படுத்துகிறதுபோல, உதாசீனப்படுத்தாமல், அதை பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
வேதம் சொல்கிறது,
1 பேதுரு 3:9
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க அழைக்கப்பட்டவர்கள், எனவே, தேவன் நமக்கென்று வைத்திருக்கிற ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க முயற்சி செய்வோம், அநேகரை ஆசீர்வதிக்கிறவர்களாய் வாழ்வோம்.
Thanks for using my website. Post your comments on this