Type Here to Get Search Results !

ஞாயிறு பள்ளி சிறுவர் பாடல்கள் | Sunday School Short Stories Tamil | வேலையில் மட்டுமல்ல | அழகில் வீழ்ந்த மீன் | செய்த உதவி | Jesus Sam

===========
ஓர் குட்டிக் கதை
வேலையில் மட்டுமல்ல
===========
ராமசாமியும், மாடசாமியும் நண்பர்கள்...

அருகருகே இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள்... ராமசாமி பி.இ முடித்தவுடன் வளாக நேர்காணலில் வருடம் நான்கு லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது ...
அவரின் பெற்றோரும், சுற்றத்தாரும், நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள். ராமசாமியின் முகம் மகிழ்ச்சியில் பூரித்து பளபளக்க.... இனிமேல் தனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான் என்று நினைத்துக்கொள்கிறார்...

ஆனால் மாடசாமியோ.. டிகிரியில் தோல்வியடைந்து விடுகிறார்... வீட்டில் வசவுகள் தாங்க முடியவில்லை... வீட்டில் மட்டுமா?... சுற்றத்தார். நண்பர்கள் என்று அனைவரும் கரித்துக் கொட்டுகிறார்கள்...

அதுமட்டுமா?... ஆலோசனைகள் அள்ளி வழங்குகிறார்கள்... இட்லிகடை வை, காய்கறி விற்கப்போ, பெட்டிக்கடை வை, பால் வியாபாரம் செய், மளிகைக்கடை வை என்று.....

மாடசாமியின் அப்பாவுக்கோ சொல்லவொண்ணா வேதனை... மகன் இப்படி செய்து விட்டானே என்று... மாடசாமியோ இடிந்து போய் விட்டான்...

கடைசியில் ஒரு வழியாய் மனதை தேற்றிக்கொண்டு.. அம்மாவின் நகைகளை வங்கியில் வைத்து இரண்டு லட்சமும், அப்பாவிடம் இரண்டு லட்சமும் கடன் வாங்கி, நான்கு எருமைகள் வாங்கி பால் வியாபாரத்தை ஆரம்பிக்கிறான்...

ஆனால் ராமசாமி க்ரடிட் கார்டுமூலம் பைக் வாங்குகிறார்... மகிழ்ச்சியாய் அலுவலகம் செல்ல ஆரம்பிக்கிறார்...

மாடசாமியோ டி.வி.எஸ் 50 வாங்குகிறார்... அதில் பால் கேன்களை கட்டிக் கொண்டு பால் வியாபாரத்தை கவனித்துக்கொள்கிறார்... இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள்...

ராமசாமி மகிழ்ச்சி பொங்க ‘ஹாய்’ என்று சொல்லி கையசைக்கிறார்... மாடசாமியோ அவமானத்துடன் தலையைக் குனிந்துகொண்டு ‘ஹாய்’ சொல்லிவிட்டு தப்பித்து வீட்டுக்கு வேகமாக சென்று விடுகிறார்...

ஆறு மாதங்களுக்குப் பிறகு.......
ராமசாமி தான் வாங்கிய பைக் லோனில் 20 சதவீதத்தை கட்டியிருக்கிறார்.... மாடசாமி தன் அப்பாவிடம் வாங்கிய 2 லட்சம் கடனில் 1 லட்சத்தை எப்படியோ கட்டி விடுகிறார்...

அதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிவிடுகிறார்... இப்போது மறுபடியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்... இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்...

ராமசாமிக்கோ தான் கட்டவேண்டிய லோன் பாக்கி நினைவுக்கு வருகிறது... மாடசாமிக்கோ... தான் இன்னும் கட்டவேண்டிய ஒரு லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது...

ஒரு வருடத்திற்குப் பிறகு.........
ராமசாமி சம்பள உயர்வை எதிர்பார்க்கிறார்... பொருளாதார மந்த நிலை காரணமாக சம்பள உயர்வு இல்லை....

இப்போது
அரை லிட்டர் பாலின் விலை 10 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகிறது... மாடசாமிக்கு 30% லாபம் கூடுகிறது...

அப்பாவிடம் வாங்கின கடனை அடைத்து... அம்மாவின் நகைகளை வங்கியில் இருந்து மீட்டு விடுகிறார்...

ராமசாமி தன் பைக் லோனை அடைத்துவிட்டு, சொந்த லோனாக 2 லட்சம் 16% வட்டியில் வெளிநாட்டு வங்கியில் வாங்குகிறார்...

அதைக்கொண்டு வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர்கள், எல்.சி.டி டிவி, லேப்டாப் என்று வாங்கி மகிழ்கிறார்... சுற்றத்தாரும் நண்பர்களும் வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே நன்றாக சம்பாதிக்கிறார் என்று மகிழ்ச்சியோடு பேசிக்கொள்கிறார்கள்...

மாடசாமியோ... மேற்கொண்டு 12 எருமைகள் வாங்குகிறார்....

இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்... ராமசாமிக்கோ தான் வாங்கிய 2 லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது... மாடசாமியோ கம்பீரமாக புன்னகைக்கிறார்... காரணம் அவருக்கு எந்த கடனும் இல்லை....

இரண்டு வருடங்களுக்குப் பிறகு...
ராமசாமிக்கு 10% சம்பள உயர்வு வருகிறது... அதைக் கொண்டாட குறைந்த வட்டியில் கார் லோனில் கார் வாங்குகிறார்...

அந்த சமயத்தில் மாடசாமி... எருமைகள் மேய இடம் போதாமையால் 2 ஏக்கர் நிலம் வாங்குகிறார்...

மேலும் அதில் மேய இரண்டு டஜன் எருமைகளும் வாங்குகிறார்... இப்போது பாலின் விலை 30% அதிகரிக்கிறது...

இப்போது மாடசாமியின் வருமானம் 200% அதிகரிக்கிறது... மாடசாமி ஒரு ஆட்டோ வாங்கி... பால் வியாபாரத்தை கவனிக்கிறார்... இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்...

ராமசாமி கடன்வாங்கி வாங்கிய காரிலும், மாடசாமி சொந்த ஆட்டோவிலும் இருக்க..... இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்.....

நான்கு வருடங்களுக்குப் பிறகு..........
ராமசாமி 40 லட்சம் கடனில் அடுக்குமாடியில் ஒரு ப்ளாட் வாங்குகிறார்...

மாடசாமியின் எருமைகளின் எண்ணிக்கை நூறைத் தொடுகிறது....மாடசாமி சொந்தமாய் ஒரு வீடு கட்டிக் கொள்கிறார்.....

இப்போது மீண்டும் பாலின் விலை உயர்கிறது.... லிட்டர் விலை 40 ரூபாய்... மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 500% உயர்ந்திருக்கிறது...

வேறு வழி இல்லாமல் மாடசாமி ஒரு ஸ்கோடா காரும், ஒரு இன்னவோ காரும் வாங்குகிறார்.... இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்....

ராமசாமிக்கோ 40 லட்சம் கடனை நினைத்து பயங்கர டென்சன்... அதேமாதிரி மாடசாமிக்கோ சொந்தமாய் பால் பவுடர் தொழிற்சாலை ஆரம்பித்த டென்சன்... இப்போது அவரிடம் 25 பேர் தொழிலாளிகளாய் வேலை செய்கிறார்கள்....

ஐந்து வருடங்களுக்குப் பிறகு.....
ராமசாமியின் வருட வருமானம் 30 லட்சமாய் உயர்ந்திருக்கிறது... ஆனால் மாடசாமிக்கோ சொத்தின் மதிப்பு நான்கு கோடியாகவும், மாத வருமானம் 5 லட்சமாய் இருக்கிறது...

என் அன்புக்குாியவா்களே,
சம்பாத்தியம் எதுவானாலும் நம்மை இந்த எருமைபண்ணை காரனை விட ஆசீா்வதிக்கும் தேவன் நம்மோடு இருக்கிறாா்.

பைபிள் சொல்கிறது...
உபாகமம் 8:17,18
17. என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்மபாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக,
18. அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப் படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

ஐஸ்வாியத்தை சம்பாதிக்கும் பெலன் என்பது சரீர பெலன் மாத்திரமல்ல ஞானம், அறிவு, புத்தி, விவேகம், தெளிந்தபுத்தி ,சாமாா்த்தியம், திறமை, சமா்த்தியம், மகிழ்ச்சி,மனபெலம் ஆகிய பதினொரு விஷயங்கள் உள்ளடங்கியதே பெலன் எனப்படும்.

To Get Daily Story In What's App Contact +917904957814

தேவன் ஐஸ்வா்யத்தை சம்பாதிப்பதற்கு இந்த பதினொரு காாியங்களைத் தான் தேவன் பெலனாகக் கொடுக்கிறாா்.

எனவே தான் தொழில், வேலை, வியாபாரம், பிஸ்னஸ், ஊழியம் ஆகிய எதுவானாலும் நீங்கள் எருமைபண்ணை காரனை விட ஆசீாவாதங்களை நீங்கள் பெற்று கொள்வீா்கள்.

கர்த்தர் உங்கள் களஞ்சியங்களிலும், நீங்கள் கையிடும் எல்லா வேலையிலும் உங்களுக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே உங்களை ஆசீர்வதிப்பார்.

ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்திலே மழை பெய்யவும், நீங்கள் கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உங்களுக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்,

நீங்கள் அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பீா்கள் நீங்கள கடன் வாங்காதிருப்பீா்கள். கர்த்தர் உங்களை வாலாக்காமல் தலையாக்குவார், நீங்கள் கீழாகாமல் மேலாவீா்கள்.
(உபாகமம் 28:8-14)

மேற்கண்ட வசனத்தின்படி தேவன் உங்களை மேன்மைப் படுத்துவாா். இன்று முதல் தேவனையும், அவரது வல்லமையையும் மையமாக வைத்து வாழுங்கள்.


===========
ஓர் குட்டிக் கதை 
அழகில் வீழ்ந்த மீன்
============
ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு, சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது

ஏய் சிண்டு... என்னைப் பிடி பார்க்கலாம் என்றான், என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது. அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து "ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கறுப்பாக இருக்கிறான்." அவன் குரலை நீ கேட்டிருகிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன.

அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்ற போது "பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு ? அதான்...

ஓ....! காகமா, அதால நமக்கு எந்த ஆபத்தும் இல்லே. உருவத்தை மட்டுமே வெச்சு ஒருத்தரைப் பற்றி தப்பா நினைக்கக் கூடாது என்று அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் " இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம்." என கூறி சென்றது அடுத்த நாள் வந்தது; குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது; அதை பார்த்த மீன் குஞ்சுகள், " ஏய் அங்கே பாரு வெள்ளையா... " அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா கச்சிதமா இருக்கு.

அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு. உடனே மீன் குஞ்சுகள்; அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம்; ஓ! தொட்டுப் பாரேன்.

ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டினியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது. மற்ற மீன் குஞ்சுகள் ; அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோசமாக வாழ்ந்தன.

என் அன்பு வாசகர்களே,
அழகை மட்டும் நம்பாமல் அவர்களின் செயல்களையும் உய்த்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து.

இக்கதையில் காகம் கருப்பாய் இருந்தாலும் அது தான் சுத்தம் செய்கிற (Scavenger)பறவை. சுத்தமில்லாமல் இருக்கின்ற இடங்களை சுத்தம் செய்யும் மட்டுமல்லாது தனக்கு இணை கிடைத்தால் அது மாத்திரம் உண்ணாமல் தன் சக காகங்களையும் கூப்பிட்டு பகிரந்துண்ணும்.

Ithu pola daily message whats app la venum endral contact and help +917904957814

ஆனால் கொக்கு இதற்கு எதிர்மறையானது. வெள்ளை நிறத்தில் இருந்தாலும் அதன் இருதயம் வெண்மையானது‌ அல்ல. தன்னை நாடி வருபவர்களை கூட விட்டு வைப்பதில்லை.

மனிதனுடைய அழகு அவன் தோலின் நிறத்தை மாத்திரம் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக அவனின் கிரியைகள், நற்பண்புகள் என எல்லாவற்றையும் வைத்து தான் அவன் அழகு தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த கருப்பின படுகொலை மிகச்சிறந்த உதாரணம். வெள்ளையாய் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, கருப்பாய் இருக்கிற அனைவரும் கெட்டவர்களும் அல்ல.

கிறிஸ்தவர்களின் அழகு குறையாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி மிக அழகாக இவ்வாறு எடுத்துரைக்கிறார்,

எசேக்கியேல் 16:14
உன் அழகினாலே உன் கீர்த்தி புறஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று, நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஆம் அன்பானவர்களே, மோசே எப்படி இருந்தார் என்பது வேதத்தில் குறிப்பிடப்படவில்லை ஆனால் எப்போது தேவனுடைய மகிமையை அனுபவித்தாரோ அது முதல் அவருடைய முகம் பிரகாசமாய் ஜனங்கள் பார்க்கக்கூடாத வண்ணம் இருந்தது என்று வேதம் தெளிவாய் கூறுகிறது. எனவே நாமும் தேவ மகிமையை நிழல்போல எப்போதும் நம்மோடு வைத்துக்கொள்வோம், அழகாக மாறுவோம் நம் கீர்த்தி புறஜாதிகள் மாத்திரமல்ல இந்த உலகம் முழுவதும் பிரசித்தமாகும்.


===========
ஓர் குட்டிக் கதை
செய்த உதவி
===========
ராசு குட்டிபையன் தான், ஐந்தாம் வகுப்புத்தான் படிக்கிறான், என்றாலும் அம்மாவுக்கு அவன் எப்பொழுதுமே புத்திசாலி பையன் தான். ஒரு நாள் அம்மா ராசுவிடம், பக்கத்திலிருக்கும் கடைக்கு போய் சாமான்கள் வாங்கி வர சொல்லுகிறாள். ராசு அம்மாவிடம், வெளியே போனாலே போலீஸ்காரங்க பிடிச்சுக்குவாங்க அம்மா, கொரானோ டைமுல ஏன் இப்படி ஊர் சுத்துறேன்னு மிரட்டுவாங்க.

தெரியும் ராசு, பெரிய பசங்க, வண்டியில போறாங்கா இல்லையா, அவங்களைத்தான், கூப்பிட்டு விசாரிப்பாங்க, அங்கயும் இங்கயும் போறதை தான் பிடிச்சு மிரட்டுட் வாங்க. நீ சின்ன பையந்தானே, அதுவும் இரண்டு தெரு தள்ளி இருக்கற மளிகை கடைதான். நீ சூதானமா போயிட்டு வாங்கி வந்துடு. நீ வாங்கிட்டு வந்தாத்தான் உனக்கும், அப்பாவுக்கும், தங்கச்சிக்கும் இட்லி சுட்டு சட்னி செஞ்சு தர முடியும்.

ஏம்மா இனிமேல் நான் சாமான் வாங்கி இட்லி சுடுவியா? மகனின் கிண்டலான கேள்விக்கு அதில்லைடா, இட்லிக்கு மாவு ஆட்டி வச்சுடேன், சட்னிக்குத்தான் சாமான் வேணும்.

சரிம்மா போய் வாங்கிட்டு வர்றேன், அம்மாவிடம் சொல்லிவிட்டு, வீட்டில் தனியாக வைத்திருந்த முக கவசத்தை எடுத்து முகத்தில் அணிந்து கொண்டு வெளியே வந்து காலில் செருப்பை மாட்டிக்கொண்டவன் சைக்கிளில் போகலாமா என்று நினைத்தான். வேண்டாம் நடந்து போனாத்தான் நல்லது, போலீஸ்காரங்களும் நடப்பவர்கர்ளை அதிகமாக கேள்விகள் கேட்கமாட்டார்கள், முடிவு செய்தவன் நடக்க ஆரம்பித்தான்.

தெரு அமைதியாக இருந்தது. நிறைய வீடுகளில் கதவு அடைத்தே வைக்கப்படிருந்தது. கொரோனா பயம் ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது. அங்கங்கு நடந்து கொண்டிருந்த ஒரு சிலரும் பொறுப்பாய் முக கவசம் அணிந்து பயத்துடன் அவனை கடந்து நடந்து கொண்டிருந்தனர்.

சந்தின் முடிவில் வளைவு திரும்பி அடுத்த தெருவுக்குள் நுழைந்தவன், சற்று நிதானித்தான். வலது புற வரிசையில் இரண்டாவது வீட்டு வாசலில் ஒரு வயதான பாட்டி வெளியே நின்று கொண்டிருந்தார். அவர் முகம் பயத்தில் இருப்பதாக இவனுக்கு தோன்றியது. என்னெவென்று

கேட்கலாமா? இல்லை அவர்கர்ளை தாண்டி போய் விடலாமா? இப்படி அவன் எண்ணிக்கொண்டிருந்தாலும் கால்கள் என்னவோ அந்த அம்மையார் முன்பு நின்று விட்டன.

ஏன் பாட்டி இங்க நிக்கறீங்க? அன்புடன் கேட்டான். யாராவது கேட்பார்களா என்னும் நிலையில் இருந்த அம்மையார், தம்பி வீட்டுல நான் மட்டும்தான் இருக்கேன். எல்லா சாமாங்களும் தீர்ந்து போச்சு, வாங்கிட்டு வரலாமுன்னு நினைச்சு வெளியே போலாமுன்னா, கண்ணு கொஞ்சம் தடுமாற்றமா இருக்கு, இதுல வேற வயசானவங்க எல்லாம் வெளிய நடமாடக்கூடாதுன்னு பயமுறுத்திகிட்டு இருக்காங்க. சரி கடைக்கு போன் பண்ணலாமுன்னா என் போன்ல சார்ஜ் இல்லை.. என்ன பண்ணறதுன்னு தெரியலை.

யாராவது எனக்கு தெரிஞ்சவங்க வருவாங்களான்னு காத்துகிட்டிருக்கேன். பாட்டி உங்களுக்கு என்ன வேணும்னு ஒரு பேப்பர்ல எழுதி கொடுத்தீங்கன்னா நான் போய் வாங்கிட்டு வந்து தர்றேன், அப்படியே உங்க செல்போன் நம்பர் கொடுங்க, நான் ரீசார்ஜ் போட்டு கொடுக்கிறேன். ரொம்ப நன்றி தம்பி, கொஞ்சம் நில்லு, நான் உள்ளே போயி ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்தாறேன், உள்ளே சென்றவர் பத்து நிமிடத்தில் ஒரு காகிதத்தில் வாங்க வேண்டிய சாமான்களை எழுதி கொண்டு வந்து கொடுத்தவர் கையில் பணமும், கைப்பை இரண்டும் கொடுத்தார்.

பாட்டியை உள்ளே போக சொல்லி விட்டு வேகமாக கடையை நோக்கி நடந்தான். கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் இடைவெளி விட்டு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். முக்கால் மணி நேரம் ஆனது, பாட்டி கொடுத்த சாமான்கள் வாங்குவதற்கு, அத்தனையும் வாங்கி, பாட்டி கொடுத்த பையில் எல்லாவற்றையும் வைத்து தூக்க முடியாமல் பாட்டியின் வீட்டுக்கு வந்தான். இவன் வாசலில் நின்று கூப்பிட்டவுடன் பாட்டி வெளியே வந்தவர்கள், இவன் தூக்க முடியாமல் சாமான்களுடன் வெளியே நிற்பதை பார்த்து வேகமாக வந்து பெற்றுக் கொண்டவர்கள், வா தம்பி உள்ளே, அன்புடன் கூப்பிட்டார்கள்.

வேணாம் பாட்டி, இந்த கரோனா காலத்துல யாரையும் உள்ளே கூப்பிடாதீங்க, நான் இப்ப கடையில முக்கால் மணி நேரம் நின்னுட்டு வந்திருக்கேன். நிறைய பேரு அங்க இருந்தாங்க. அப்படி இருக்கறப்ப, நான் உள்ளே வர்றதும், உங்க கூட இப்படி நின்னு பேசறதும் கூட உங்க உடம்புக்கு ஆபத்தாயிடும். உங்க செல் நம்பர் கொடுத்து எவ்வளவு பணம் ரீ-சார்ஜ் பண்ணனும்னு சொல்லுங்க போதும், இப்ப சாமான் எல்லாம் உள்ளே கொண்டு போகாம வாசல் முன்னாடி வச்சுட்டு கை கால் முகம் சோப்பு போட்டு கழுவிட்டு அரை மணி நேரம் கழிச்சு எடுத்துட்டு போங்க. சரியா.

பாட்டி வியப்பாய் அவனை பார்த்து பரவாயில்லை தம்பி, இந்த சின்ன வயசுல இவ்வளவு விவரமா இருக்கே, இரு என் செல் நம்பர் தர்றேன், பணமும் தர்றேன். உள்ளே சென்றவர்கள், இரண்டு நிமிடத்தில் எண்கள் எழுதிய காகிதத்தையும், ரீ சார்ஜ் செய்யவேண்டிய பணத்தையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆமா தம்பி கடையே இல்லையே, எப்படி ரீ சார்ஜ் பண்ணுவே? எனக்கு தெரிஞ்ச அக்கா பக்கத்துல இருக்காங்க, அவங்க கிட்டே கொடுத்தா அவங்க செல்லுலயே ரீ சார்ஜ் பண்ணி தருவாங்க.

உன் பேர் என்ன தம்பி? உங்கப்பா என்ன பண்ணறாரு? அப்பா வேலை செய்யும் கம்பெனி பேரை சொன்னான். கம்பெனி லாக்டவுன் செய்துள்ளதால் அடைத்து வைத்துள்ளதாகவும், அப்பா வீட்டில் இருப்பதாகவும் சொன்னான். அம்மா வீட்டில் இருப்பதாகவும் குட்டி தங்கை இருக்கிறாள் என்றும் சொன்னான்.

வீட்டுக்கு போகும்போது அம்மாவும், அப்பாவும் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள், பயத்துடன் இருந்தார்கள். ஏண்டா எங்க போனே, உங்கப்பா கடைக்கு போய் பார்த்தா, அங்க உன்னைய காணோம். அக்கம்பக்க விசாரிச்சாலும் யாரும் உன்னை பார்த்ததா சொல்லலை. எங்களுக்கு பயம் வந்துடுச்சு, சொல்லிக்கொண்டே அவனை அணைக்க போனார்கள்.

நோ..நோ..என்னை தொடாதே, முதல்ல சோப்பு கொடு, நான் நல்லா சோப்பு போட்டு கை கால் எல்லாம் கழுவுன, பின்னாடி என்னை தொடணும், சரியா? அம்மா வியப்புடன் உள்ளே சென்று சோப்பை கொண்டு வந்து கொடுக்க, அவன் முகம் கை கால் எல்லாம் கழுவி வீட்டுக்குள் வந்து அதன் பின் நடந்ததை எல்லாம் சொன்னான்.

நல்ல பையண்டா நீ ,அம்மா அவனை பாராட்டிவிட்டு , சரிடா அம்மா வாங்கிட்டு வர சொன்ன சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்திட்டியா? அதெல்லாம் எங்கே? அச்சச்சோ.. அம்மா எதற்காக தன்னை கடைக்கு அனுப்பினாள் என்பது அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. சாரிம்மா, மறந்துட்டேன், இப்ப வேணா போயி வாங்கிட்டு வந்துடட்டுமா?ஒண்ணும் வேண்டாம், சாப்பிட வா, உங்கப்பா ரொம்ப நேரமா காணாம உன்னைய பார்க்க கடைக்கு வந்தப்ப அவரே வாங்கிட்டு வந்துட்டாட்ரு.

நல்ல வேளை நீயும் வாங்கிட்டு வந்துட்டா என்ன பண்ணறதுன்னு நினைச்சுகிட்டிட்ருந்தேன். நீ மறந்ததுனால எனக்கு லாபம்தான். ராசுவை அணைத்தபடி சொன்னாள் அம்மா. மீண்டும் அவனுக்கு பாட்டி செல்போன் ரீசார்ஜ் சொன்னது ஞாபகம் வர அம்மாவிடம் சொல்லி பக்கத்து வீட்டு அக்காவை பார்க்க போனான்.

ஒரு வாரம் ஓடியிருந்தது. அப்பாவுக்கு இன்னும் கம்பெனி திறக்கவில்லை.ஒரு நாள் வீட்டு கதவு தட்டுவதை கேட்டு ராசுவின் அம்மா கதவை திறந்து பார்த்தாள். அதற்குள் ராசுவும், அவன் அப்பாவும் அம்மாவுடன் வந்து நின்று கொண்டனர். வெளியே ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். ராசு உங்க பையனா? ஆமா வாங்க உள்ளே.

வேணாம் வேணாம் இது கரோனா காலம், அதுனால இங்கேயே நின்னுக்கறேன். இந்தாங்க இதுல ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை சாமான் எல்லாம் இருக்கு, இதை உங்க கிட்டேட் கொடுக்க சொன்னாங்க. யாரு சொன்னாங்க? அதோ அவங்கதான், திரும்பி கையை காட்ட ஒரு காரில் இவன் அன்று உதவி செய்த பாட்டி உட்கார்ந்து இவர்கர்ளுக்கு கையை காட்டி கொண்டிருந்தார்.

நான் அவங்க பையன், அம்மாவை என்னோட டெல்லிக்கு கூட்டிட்டு போறேன். அதுக்கு முன்னாடி ராசு வீட்டுக்கு ஏதாவது செய்ய சொல்லி இதோ இந்த சாமான் எல்லாத்தையும் வாங்கி உங்க கிட்டே கொடுக்க சொன்னாங்க. சின்ன பையனா இருந்தாலும் தக்க சமயத்துல எனக்கு உதவுனான்னு அவனுக்கு நன்றி சொல்ல சொன்னாங்க. நானும் ராசுவுக்கு நன்றி சொல்லிக்கறேன்.வரட்டுமா, ராசுவின் கன்னத்தில் தட்டி விடை பெற்று காருக்கு சென்றான் அந்த இளைஞன். இவர்கள் குடும்பத்துடன் வெளியே வந்து அந்த பாட்டிக்கு கை ஆட்டி வழி அனுப்பி வைத்தார்கள்.

என் அன்பு வாசகர்களே,
கொரோனா காலக்கட்டம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அழியா காரியத்தை கற்பித்திருக்கிறது. இதுவரை கேள்விப்பட்டிராத அநேக புதிய பெயர்கள், வார்த்தைகள், செயல்கள் என பலதரப்பட்ட புதிய காரியங்களும் அடங்கும்.

என்ன வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன், என்னால் எல்லாம் செய்ய இயலும் என்று மார்தட்டின மனிதர்கள், தங்கள் ஜீவனை தப்புவித்துக்கொள்ள மற்றவர்களின் கால்களை பிடிக்கவும் தயங்கவில்லை. என்னால் அநேகருடைய வாழ்வாதாரம் உயர்ந்திருக்கிறது, நான் தான் என் குடும்பத்திற்கு எல்லாம் என எல்லா நான் நான் நான் என்று சூளுரைத்த நாவுகள், மற்றவர்களால் தான் நான் இருக்கிறேன் என்று சூளுரைக்க செய்தது. பல கல்லான இருதயங்களும் கரைந்தது. இப்படி பல்வேறு புதிய நிகழ்வுகள் துவங்கியது.

To Get Daily Story and pray Contact +917904957814

வேதாகமத்தில் இஸ்ரவேல் கோத்திரத்தார், எகிப்தில் அடிமையாய் இருந்தபோது, தாங்கள் விடுவிக்கப்படுவோம், கானானை சுதந்தரிப்போம் என்ற எந்த நம்பிக்கையும் இல்லாத சமயத்தில், தேவன் மோசேயைக் கொண்டு யாரும் எதிர்பார்த்திராத அற்புதங்களை செய்து, தேவ பெலத்தினால் அவர்களை கானானின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, அவர்களை புறப்படப் பண்ணினான். ஆனால் இஸ்ரவேல் கோத்திரத்தாரோ, அந்த நன்றியை, அந்த அற்புதங்களை எண்ணாமல் தேவனை விட்டு தூரம் சென்றனர்.

ஆனால் புதிய உடன்படிக்கையை கைக்கொண்டுள்ள நாம் இன்றைய கதையில் அந்த வயதான தாயார், தன் இக்கட்டு நேரத்தில் உதவிய அந்த சிறுவனின் உதவியை மறவாமல், அதற்கான பிரதிபலனை அந்த சிறுவனும், அவனது குடும்பமும் அடைய வழிவகைசெய்தார். அதுபோல நாமும், ஆண்டவர் நமக்கு செய்த உதவியையும், மனுஷர் செய்த உதவியையும் மறவாமல், நம்மால் இயலும்போது அதற்கான பிரதிபலனை அவர்கள் அடையத் தக்க வண்ணம் வழிவகை செய்வோம், ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வோம்.

வேதம் சொல்கிறது,
சங்கீதம் 78:7
தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;

சங்கீதம் 78:8
இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.