Type Here to Get Search Results !

Ahn Ei Sook | பால்லியோ | ஜஸ்டின் | ஹெரலன் பாப்போவ் | பிலிப்பைன்ஸ் | Tom White | ஸாட்பெர்ரி | இபாராகி குன் | Jesus Sam

==============
இங்கே அரங்கேறப்போகும் காட்சிகள்
==============
காட்சி 1 = Ahn Ei Sook
================
1939..
இரண்டாம் உலகப் போர் ஒரு புறம் மும்முரமாய் நடந்து கொண்டிருக்க, சந்தடி சாக்கில் கொரியாவை ஜப்பான் கபளீகரம் செய்திருந்தது. கொரியா முழுவதும் வியாபித்திருந்தனர் ஜப்பானியர்கள்.. கொரிய அரசாங்கம் முதல், இராணுவம், காவல்துறை, வணிகம், தொழிற்சாலைகள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என்று சகலமும் அவர்கள் பிடியில்.. வீடுவீடாய்ப் புகுந்து இராணுவத்துக்கு ஆண்களையும் இளைஞர்களையும் இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்த நாட்கள்..

அங்கே நம்ஸான் மலையடிவாரத்தில் ஒரு கிறிஸ்தவப்பள்ளி. மாதத்தின் முதல் நாள்.. பள்ளியின் சிறுபிள்ளைகளிலிருந்து ஆசிரியர், தலைமை ஆசிரியர் வரை ஒருவர் விடாமல் மலை உச்சிக்கு ஏறிச்சென்று அங்குள்ள விக்கிரக மலைக்கோவிலில் நடக்கும் பூஜையில் பங்கேற்கக் கல்வித்துறையிலிருந்து அரசாணையொன்று பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது..

அன்று நடந்ததைத் தானே விவரிக்கிறாள் Ahn Ei Sook..(ஆன் இ சூக்) அவள் ஒரு வாலிப மகள்.. தன் ஆண்டவரை உளமாற நேசிப்பவள்..ஒரு கொரிய கிறிஸ்தவப் பள்ளியில் மியூசிக் டீச்சராக வேலை செய்பவள்..

"நான் மியூசிக் டீச்சராக வேலை செய்த அந்தக் கிறிஸ்தவ ஸ்கூலில் இருந்த அத்தனை பிள்ளைகளும் விளையாட்டு மைதானத்துக்கு வரும்படி உத்தரவிடப்பட்டனர்..

விக்கிரகத்துக்கு முன் விழுவதினால் உண்டாகும் பாவத்துக்கும் வெட்கத்துக்கும் நிந்தைக்கும் தப்பித்துக்கொள்ள பள்ளியின் வகுப்பறைக்குள்ளும் பாத்ரூம் டாய்லட்களிலும் யாராவது ஔிந்திருக்கலாம் என்று ஆசிரியர்களை அனுப்பி ஒவ்வொருவரையும் கட்டாயப்படுத்தி அழைத்துவரச் செய்தார் பிரின்ஸிப்பல்..

கூச்சலையும் குழப்பத்தையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அழுகை முட்டியது. நான் இருந்த அறையில் முகங்குப்புற விழுந்து.."ஆண்டவரே" என்று அழ ஆரம்பித்தேன்..

திடீரென வகுப்பின் வெளியே ஹாலில் ஏறி வந்த ஒரு காலடி சத்தம் நின்று, ஏற்கனவே நன்கு பரிச்சயமான குரல் ஒன்று கேட்டது..

"மிஸ் ஆன்..நீ இன்னும் இங்கே தான் இருக்கிறாயா ?" - அது பிரின்ஸிப்பலின் சத்தம்..என்னைத் தேடி தானே வந்திருந்தாள்..

அமைதியாக வகுப்பறையின் கதவைத் திறந்தேன். என்னைக் கூர்ந்து பார்த்த அவளது கண்களில் கோபம் தெரிந்தது..

எனக்கு எதுவுமே தெரியாதது போல, "இன்று ஒண்ணாம் தேதி..ஞாபகம் இருக்கா? பிள்ளைகளை மலையிலுள்ள கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகணும்.."

எங்கள் இருவரது கண்களும் ஒன்றோடு ஒன்றை சந்திக்க மறுத்தும் மறுக்காமலும் மோதிக் கொண்டிருந்தன..

"நீ மட்டும் தான் இங்க விசுவாசி இல்ல..இது ஒரு கிறிஸ்தவ ஸ்கூல்..இங்கே இருக்கிற நிறைய பிள்ளைங்க மட்டுமில்ல, டீச்சர்களும் கிறிஸ்தவங்க தான்.. நானும் ஒரு பிலீவர் தான்.." என்று பொரிந்து தள்ளினாள்..

கேட்டுக் கொண்டு அமைதியாக நின்றேன்..

"மிஸ் ஆன்..எந்த விசுவாசியாவது விக்கிரகத்துக்கு முன்னால விழ விரும்புவார்களா ? நாம் வெறுக்கும் ஒரு காரியம் அது..ஆனால் நம்மால் தாங்க முடியாத கொடிய சித்ரவதைகள் நடப்பது உனக்குத் தெரியாமல் இல்லை..இன்று நாம் அந்த ஜப்பானிய தெய்வங்களுக்கு முன் வணங்கலன்னா நம்ம ஸ்கூலையே மூடிருவாங்க.. !"

இது எதுவுமே எனக்குத் தெரியாமல் இல்லை. ஒவ்வொன்றும் என்னை ஆழமாய் பாதித்திருந்தது. எங்களை ஆக்கிரமித்திருந்த ஜப்பானியர்கள் கிறிஸ்துவை அவமரியாதை செய்து ஜீவனுள்ள தேவனை நிந்தித்துத் தூஷித்துக் கொண்டிருந்தனர்..

ஜப்பானிய கோயில்களில் குனியாத யாராயிருந்தாலும் சரி, அது பாஸ்டரோ, மிஷினரியோ, மூப்பரோ, விசுவாசியோ யாரானாலும் துரோகி பட்டம் கட்டப்பட்டு அவருக்கு ஈவிரக்கமில்லா முடிவு தான்..

ஸ்கூல் பிரின்ஸிப்பலானதால், பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் ஒவ்வொருவரது காரியத்துக்கும் அவரே பொறுப்பு என்பதால் அவரது இக்கட்டான நிலை புரிய முடிந்தது..

ஆனால் "நானே வழியும் சத்தியமும் ஜீவனும்.." என்ற இயேசுவின் வார்த்தையை இவர் மறந்து விட்டாரா ?

உபத்திரவம் இன்று தொடங்கவில்லை. கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை மறுதலிக்காததால் ஏற்கனவே கொரியா எங்கும் அநேகர் இரத்தசாட்சிகளாகி விட்டிருந்தனர்..

அதே கொடுமையும் உபத்திரவமும் எங்கள் ஊரின் எல்லையிலும் இந்தப் பள்ளியின் வாசலிலும் இன்று வந்து கதவைத் தட்டி நிற்கிறது.. அவ்வளவு தான் !

தான், அவர்களுக்குப் பயந்து விக்கிரகத்துக்கு முன் விழுந்து வணங்கும் அளவு ஒரு கிறிஸ்தவ டீச்சர் ஏன் தன் விசுவாசத்தில் பெலவீனப்பட்டுப் போய் இப்படி சமரசம் செய்து கொள்ளவேண்டும் என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..

இந்தக்காரியத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அவள், "நீ எங்களுக்கு ஒத்துழைத்து எங்களோடு வராவிட்டால், இந்த ஸ்கூலுக்கு உன் ஒருத்தியால் எவ்வளவு பிரச்சனை வரும் தெரியுமா ? உனக்கு உன்னைப் பற்றி மட்டுமே கவலை..வேறு எதையும் பற்றி உனக்குக் கவலையே இல்லை.." என்ற அந்த பிரின்ஸிப்பலின் குரலில் முதல் தடவையாக வெறுப்பையும் எரிச்சலையும் உணர முடிந்தது..

"சரி வருகிறேன்.." என்று சொல்லிவிட்டு அமைதி நிறைந்த என் மியூசிக் ரூமை விட்டு வெளியே வந்து அவளது முன்னே படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தேன்..

அங்கே மலை மேலே பல கிறிஸ்தவப் பள்ளிகளிலிருந்தும் பெருங்கூட்டமான மாணவர்களும் ஆசிரியர்களும் மலையேறி அந்த ஜப்பானிய விக்கிரகக் கோவிலிலே கூடியிருந்தனர். பூஜை ஆரம்பமாகிறது. ஒருவர் விடாமல் எல்லாரும் தெண்டனிட்டு வணங்கி ஆராதிக்க வேண்டுமென்பது கட்டளை. கூட்டத்தை வளைத்து நிற்கும் ஜப்பானியப் போலீஸ் ஒவ்வொருவரையும் கண்கொத்திப் பாம்பாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

எல்லாக் கிறிஸ்தவ ஆசிரியர்களும், பிள்ளைகளும் வளைந்து குனிந்து வணங்கிக்கொண்டிருக்க, ஒரே ஒரு உருவம் மட்டும் தலைவணங்காமல், முகத்தைக் கற்பாறையாக்கி நிமிர்ந்து நேரே நிற்கிறது.

தனது ஸ்கூல் பிரின்சிப்பலின் அழுத்தத்தையோ, தனக்கு நேரிடப்போகும் காரியங்களையோ குறித்துக் கவலைப்படாமல், அன்றைய நேபுகாத்நேச்சார் நிறுத்திய பொற்சிலையை வணங்காமல் நின்ற மூன்று எபிரேய வாலிபரைப் போன்று வணங்காமல் நின்றாள் அவள். அதின் பலனாக அவள் அடைந்த ஆறு ஆண்டு சிறைவாசக் கொடுமைகளை "செத்தாலும் சாகிறேன்" (If I perish) என்ற தன் புத்தகத்தில் பதிவு செய்கிறாள் Ann Ei Sook...

[இதோ இப்படிப்பட்ட காட்சிகள் இங்கேயும் அரங்கேறப்போகின்றன!]


=========
காட்சி - 2
பால்லியோ
==========
ரோம சாம்ராஜ்யத்தில் ஆதிசபையின் நாட்கள்.. ரோம் நகரின் கொலோசியம் என்ற கொலைக்களத்தில் கொல்லப்படும் கிறிஸ்தவர்களின் உடல்களை சக விசுவாசிகள் இரவிலே திருட்டளவாய் வந்து எடுத்துக் கொண்டுபோய், பூமிக்கடியில் நிலத்தடியில் கேட்டகோம்ஸ் என்று சொல்லப்படும் மண்ணறைகளின் சுவர்களுக்குள்ளே புதைத்து, அந்தச் சடலங்களோடே சகமனிதர்களாய்க் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் அந்தக் கேட்டகோம்ஸின் மண்ணறைகளில் ஆதிசபையினர் வாழ்ந்து கொண்டிருந்த காலம்...

பல மைல் நீள அந்த நிலவறைகளின் எண்ணிக்கையில்லா வாசல்கள் ஒன்றிலிருந்து பூமிக்கு மேலே நகருக்குள் போஜன பதார்த்தங்கள் வாங்க வந்த 13 வயது சிறுவன் பால்லியோ.. அன்று ரோம சிப்பாய் ஒருவனின் கைகளில் சிக்கிக்கொள்ள, கோர்ட்டுக்கு இழுத்துச் செல்லப்படுகிறான் பால்லியோ..

"கோர்ட்டில்... பால்லியோ"
அது ஒரு பெரிய கோர்ட் ரூம் பில்டிங்..
இம்ப்பீரியல் அரண்மனையிலிருந்து அதிக தூரமில்லை..

உயர்ந்த ஆசனங்களில் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் அமர்ந்திருக்கின்றனர்..

அவர்களுக்கு முன் காவலர்கள் நடுவில் பால்லியோ..

முகம் சற்று வெளுத்துப் போயிருந்தாலும்..நிமிர்ந்து நிற்கும் உடல்..

தன் மேல் கூறப்படப் போகும் தீர்ப்பை நன்கு அறிந்திருந்தும்..இந்த இளங்கன்றின் முகத்தில் பயத்தின் அறிகுறியோ தீர்மானத்தில் திருப்பமோ காணப்படவில்லை..

அவனுக்குத் தெரியும்..இந்த உலகத்தோடு தன்னை ஒட்டி வைத்திருந்த ஒரே உயிரான தன் தாயின் உயிரும் அன்று காலை பிரிந்து விட்டதென்று..

மிக அன்பாய்த் தான் நேசித்த தன் தாயோடு தானும் சீக்கிரம் இணைவேன் என்ற நம்பிக்கையோடு..
விசாரணைக்குத் தன்னை தயார் படுத்திக் கொள்கிறான் அவன்..

விசாரணை துவங்குகிறது..

"நீ யார்?"
"மார்க்குஸ் செர்வில்லஸ் பால்லியோ.."

"உன் வயதென்ன?"
"பதிமூன்று.."

"நீ ஒரு கிறிஸ்தவன் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளாய்..
நீ சொல்ல விரும்புவது என்ன?"

"நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை..நான் ஒரு கிறிஸ்தவன் என்பதை எல்லோர் முன்பாகவும் அறிக்கை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.."

"உன் குற்றத்தின் தீவிரத்தை நீ அறிவாயோ?"

"எனக்குத் தெரிந்து நான் ஒரு குற்றமும் செய்யவில்லை..
கடவுளுக்குப் பயந்து தேசாதிபதிகளைக் கனம் பண்ணும்படி என் வேதம் எனக்குப் போதிக்கிறது.."

"தேசத்தின் ஒவ்வொரு சட்டத்தையும் மனப்பூர்வமாய் மதிக்கும் ஒரு உண்மைப் பிரஜை நான்.."

"கிறிஸ்தவம் இந்தத் தேசத்தின் சட்டத்துக்குப் புறம்பானது..
நீ கிறிஸ்தவனானால் உனக்கு மரணம் நிச்சயம்.."

"ஆம் நான் ஒரு கிறிஸ்தவன் தான்.."
திட்டவட்டமாகச் சொன்னான் பால்லியோ..

"அப்போ நீ சாகத்தான் வேண்டும்.."

"அப்படியே ஆகட்டும்!"

"சித்ரவதை மரணம் என்றால் என்னவென்று தெரியுமா?"

"கடந்த சில மாதங்களில் எங்களில் அநேகர் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவன் நான்..என்னுடைய முறை வரும் போது என்னை மகிழ்ச்சியாய் அர்ப்பணிக்க ஆயத்தமாகவே இருந்தேன்.."

"உன் வயதையும் அனுபவமின்மையும் கண்டு நாங்கள் உனக்காகப் பரிதபிக்கிறோம்..
நீ ஒரு சிறுவன்..உன் முட்டாள்தனமான மூட நம்பிக்கையை விட்டுவிட்டு ரோம மதத்துக்குத் திரும்பி விடு.."

"என்னால் முடியாது"

"தம்பி..நீ மிக உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்..உன் மூதாதையர்கள் இந்த நாட்டுக்காக பெரிய காரியங்களையும் தியாகங்களையும் செய்தவர்கள்..

உன் தகப்பன் நேர்மையும் உண்மையுமான இராணுவ அதிகாரியாய் பணியாற்றி யுத்தத்தில் நமது தேசத்துக்காக மரித்தவர்..உன் தகப்பனாருக்காகவும் உன் குடும்ப கௌரவத்தைக் காக்கவும் உன் மனதை மாற்றிக் கொள்.."

"கனம் கோர்ட்டார் அவர்களே !
நான் என் குடும்பத்தையும் கௌரவத்தையும் மதிக்கிறேன்..ஆனால் என் நம்பிக்கையும் விசுவாசமும், சுத்தமும் பரிசுத்தமுமானது..
என்னால் என் இரட்சகருக்குத் துரோகம் பண்ண முடியாது.."

"தொலைந்து போ!
மன்னரின் கோபம் பயங்கரமானது..அதற்கு ஆளாகாதே!"

"ஆனால் ஆட்டுக்குட்டியானவரின் கோபம் அதைவிட பயங்கரமானதே!"

"பிதற்றுகிறாய் நீ..
கொலோசியத்தின் பயங்கரங்களை அறிவாயோ? சிங்கம் புலிகளின் சீற்றத்துக்கு இரையாவாயோ?
எரியும் அக்கினியின் அகோரத்தை அறிவாயோ?"

"ஐயா! நீங்கள் சொல்லும் எதுவும் என்னை ஒன்றும் செய்ய இயலாது..
என் இரட்சகர் என்னைக் காப்பார்..மரணமே நேரிட்டாலும் அவரோடு நான் யுகாயுகமாய் வாழுவேன்..
அவர் மேல் நான் வைத்த நம்பிக்கை ஒருநாளும் வீண்போகாது.."

"எனக்காகத் தன்னையே தந்தவரல்லவா அவர்?
அவருக்காக என் ஜீவனைத் தருவது பெரிய காரியமல்ல.."

"சரி..இதோ கடைசியாய் உனக்கு ஒரு வாய்ப்பு!
முட்டாள் சிறுவனே!
ஒரு நிமிடம் சிந்தி..உனக்கு முன் ஒரு பெரிய வாழ்க்கை..
சந்தோஷமும் மகிழ்ச்சியுமாய்..
அதிகாரமும் கனமும்
செல்வமும் புகழும்
உன்னுடையதாய்..
ஒரு குறைவும் இல்லாத வாழ்க்கை.."

"நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்..
இந்த தெய்வங்களுக்கு முன் வணங்கி..பலி செலுத்திவிடு..

சீக்கிரம்..உன்னையே காப்பாற்றிக் கொள்.."

கோர்ட்டில் இருந்த அனைவரின் கண்களும் அவன் மேலேயே பதிந்திருக்க..அவனது அசைக்க முடியாத தீர்மானத்தைக் கண்டு எல்லார் கண்களிலும் ஆச்சரியம்..

ஆனால் அந்தக் கடைசி வேண்டுகோளையும் நிராகரிக்கிறான் பால்லியோ..

தன் முன்னிருந்த பூஜைப் பொருட்களைக் கையால் ஒதுக்கி விடுகிறான்..தீர்க்கமான முடிவோடு..

"நான் என் இரட்சகருக்கு ஒரு போதும் துரோகம் செய்வதில்லை.."

சற்று நேரம் கோர்ட் நிசப்தமாகிறது..

நீதிபதி தன் தீர்ப்பை வாசிக்கிறார்..

"உன் முடிவை உன் வாயே சொல்லிற்று..
சிங்கங்களுக்கு இரையாக்குங்கள்
இவனை..!"

காவலர்களால் இழுத்துச் செல்லப்படுகிறான் இளம் பால்லியோ..

[இதோ, இப்படிப்பட்ட காட்சிகள் இங்கேயும் அரங்கேறப் போகின்றன!]


========
காட்சி - 3
ஜஸ்டின்
========
"தத்துவ ஞானி"
நாளுக்கு நாள் ரோம ராஜ்யத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்..

இந்த முறை ஒரு ரோமப் பெண்- வரலாற்றில் அவள் பெயர் இல்லை..

பாவத்திலும் குடியிலும் இருந்து சமீபத்தில் தான் கிறிஸ்துவிடம் மனம் திரும்பியிருந்தாள்..

தன்னைப் போலவே பாவத்தில் ஊறிக்கிடந்த தன் கணவனையும் கிறிஸ்துவிடம் நடத்த முயற்சிக்கிறாள்..

அவளது அன்பும் சாட்சியின் வாழ்வும் எதுவும் அவனை அசைப்பதாக இல்லை..நாளுக்கு நாள் பாவத்தைத் தண்ணீராய்க் குடிக்கிறான்..

கடைசியாக வேறு வழியின்றி அவனிடத்திலிருந்து விவாகரத்து கேட்கிறாள்..

அவளது கிறிஸ்தவ சகோதரர்கள் அதை ஆதரிக்க மறுத்து அவளை சமாதானப் படுத்த முயற்சிக்கிறார்கள்..
"அவன் திருந்தி விடுவான்" என்று..

இதற்குள் சிறிது காலம் வெளிநாடு சென்று திரும்பினவன் இன்னும் மோசமாகிறான்..

வேறு வழியின்றி விவாகரத்து கோருகிறாள்..
கேஸ் கோர்ட்டுக்கு வர..

அவன் சொல்கிறான்..
"இவள் ஒரு கிறிஸ்தவள்..
கொல்லுங்கள் இவளை.."

கோர்ட் ஜனங்களால் நிரம்பியிருக்கிறது..

"இதோ! இந்த ப்டோலியுமிஸ்..இவன் தான் இவளைக் கிறிஸ்தவளாய் மாற்றினான்..பிடியுங்கள் இவனை.." கத்துகிறான்..

இதற்குள் ப்டோலியுமிஸின் நண்பன் லூசியுஸ் அவனுக்கு ஆதரவாகக் கோர்ட்டில் வாதாட..அவனும் கைது செய்யப் படுகிறான்..

இப்போது உள்ளே நுழைகிறார்..
ஜஸ்டின் என்ற தத்துவ ஞானி..ரோம் நகரில் எல்லோராலும் அறியப்பட்டவர்..

கோர்ட்டுக்கு சவால் விடுகிறார்..

நான் படித்த எல்லா மதங்களுக்கும் நான் அறிந்த எல்லாத் தத்துவ ஞானங்களுக்கும் மேலான ஒன்று உண்டென்றால்..
அது கிறிஸ்தவம்.. அதைப் போதித்த இயேசு கிறிஸ்து..

என்னோடு வாதிட உங்களுக்கு நியாயமிருந்தால் முன் வையுங்கள் உங்கள் நியாயத்தை.. வாதத்தை..

மனிதனின் முகத்துக்குக் கலங்காத ஜஸ்டினை எதிர்க்கத் தைரியமில்லாத ஜட்ஜ்.. ஜஸ்டினையும் கைது செய்கிறான்..

"நீங்கள் எங்கள் தலைகளை வெட்டலாம்..நித்திய நியாயத்தீர்ப்பில் எங்கே நிற்பீர்கள்?
இராஜாதி ராஜாவான அந்த நியாயாதிபதிக்கு முன்பாக உங்கள் நியாயம் நிலை நிற்குமோ..?"

உயிரைப் பொருட்படுத்தாமல் தைரியமாய் முழங்கின நால்வருடைய தலைகளும் சீவப்படுகிறது..

[இதோ, இப்படிப்பட்ட காட்சிகள் இங்கேயும் அரங்கேறப் போகின்றன!]


============
காட்சி - 4
ஹெரலன் பாப்போவ்
============
1948..
பல்கேரியா கம்யூனிஸ்ட்டுகளின் கைகளின் விழுந்த நாட்கள்..ஒயிட் ஹவுஸ் என்ற இரகசியப் போலீஸின் தலைமைச் செயலகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார் பாப்போவ்...

அங்கே அவருக்கு சம்பவித்த நிகழ்வுகளில் ஒன்று அவரது வார்த்தைகளிலே..

[இங்கேயும் அரங்கேறப்போகும் காட்சிகளுக்கு முன்னான ஒரு சிறிய முன்னோட்டம்]
ஹெரலன் பாப்போவ்
============
1948 செப்டம்பர் துவக்கம்..

நான் ஒரு உளவாளி என்று ஒப்புக்கொள்ளும் வரை எப்படிப்பட்ட விசாரணைக்கும் உள்ளாக்கும்படி
பீட்டர் மனாஃப் என்ற வக்கீல் ஒருவன் கைக்கு நான் மாற்றப்பட்டேன்..

நான் என்னைப்பற்றியும்
என் ஊழியம்,
என் நண்பர்கள்,
என் நண்பர்களின் நண்பர்கள்..

இது வரை நான் செய்து வந்த வேலைகள்,
எனக்குத் தெரிந்த தகவல்கள்.. ஒவ்வொன்றையும் ஒன்றுவிடாமல் உட்கார்ந்து எழுதித்தர உத்தரவிட்டான் பீட்டர் மனாஃப்..

இது எனக்கு ஒரு மாறுதலாகவும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகவும் எண்ணி எழுத ஆரம்பித்தேன்...

எங்கெல்லாம் வாய்ப்பு உண்டோ அங்கெல்லாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பின்னிப் பிணைத்து, கலந்து எழுத முடிவு செய்துகொண்டேன்..

என் வாழ்க்கையில் இது வரை நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எழுதித்தர அந்தக் கம்யூனிஸ்ட்டுகள் சொன்னது எனக்கு ரொம்பவே வசதியாய் இருந்தது...

என் வாழ்க்கையில் கிறிஸ்து எனக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்பதை என் விசாரணை அதிகாரிகளுக்குச் சொல்ல எனக்கு ஏகப்பட்ட வாய்ப்பு கிடைத்தது..

நான் எழுதப் போவதையெல்லாம் அவர்கள் இம்மி பிசகாமல் படிக்கத்தான் போகிறார்கள் என்பதை அறிந்து கர்த்தருடைய வாா்த்தையையும் என் சாட்சியையும் கலந்து நிரப்பி ஒன்று விடாமல் எழுதிவைத்தேன்..

மனாஃப் வக்கீலாய் இருந்தபடியால் பகலில் கோர்ட்டில் பிஸியாக இருப்பான்..

இரவில் வருவான்..
புதிதாக எனக்கு ஒரு அசைன்மன்ட் தந்துவிட்டுப் புது செக்யூரிட்டியை மாற்றி வைத்துவிட்டுப் போவான்..

அந்த ஒரு மாதத்தில் எனக்குக் கிடைத்ததெல்லாம் அவ்வப்போது கண்மூடித்திறக்க ஒரு குட்டித்தூக்கம்...

இரவு பகலாய் உட்கார்ந்து எழுத வேண்டும்..
காலை மதியம் மாலை என்று மூன்று நேரமும் செல்லில் கொண்டு வந்து போடப்படும் 15 நிமிட இடைவெளி தான் எனக்குக் கிடைத்த ரெஸ்ட்.

தினமும் எனக்குக் கிடைத்ததெல்லாம் நாலு துண்டு ப்ரெட்டும் கொஞ்சம்
"பச்சத் தண்ணி" சூப்பும் தான்..

கிடைத்த இந்தக் கொஞ்ச நேரத்தில் லேசாகக் கண்மூடிக் கொள்வேன்..
ஆகாரமும் தூக்கமும் இல்லாததால் அளவுக்கு அதிகமாகவே பெலவீனமாய் இருந்தேன்..

இரவெல்லாம் நான் எழுதியதைப் படிக்க எனக்கே இன்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது..

ஒரு இரவில் 40 பக்கங்கள் வீதம் கிட்டத்தட்ட 2000 பக்கங்கள் எழுதித் தீ்ர்த்திருந்தேன்..

ஒவ்வொரு இரவும் ஒரு புது சப்ஜெக்ட் கொடுக்கப்படும்.. இதில் அவர்கள் எதிர்பார்த்தது, என்னையும் என் சபையைப் பற்றிய விபரங்களையும். என் சபையின் அங்கத்தினர்கள், அவர்கள் பெயர், விலாசம், அவர்களைக் குறித்த நுணுக்கமான விபரங்களையும் அவர்கள் எதிர்பார்த்தது வெளிப்படையாகவே தெரிந்தது.

புதுப்புது சப்ஜெக்ட்டை வைத்து எப்படி சுவிசேஷத்தை அதில் பின்னிப்பிணைத்து எழுதலாம் என்பதே எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாய் இருந்தது...

அவர்கள் என்ன சப்ஜெக்ட் கொடுத்தாலும் அதிலே சுவிசேஷத்தையும் என் சாட்சியையும் எப்படியாவது கலந்துவிடுவேன்..

அவர்கள் அதை எந்த வகையிலும் மெச்சிக் கொள்ளப்போவதில்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும்..

ஆனாலும் அது அந்த சப்ஜெக்ட்டோடு சம்பந்தப் படுத்தப்பட்டு மிக ஜாக்கிரதையாக நுழைக்கப்பட்டு எழுதி இருந்ததால் அவர்களால் அதைப் படிக்காமல் இருக்கவே முடியாது...

அது அவர்களுக்கு எரிச்சலை மூட்டியது உண்மை தான்..

ஆனாலும் நான் மனந்திரும்பிய நாள் முதல் கிறிஸ்து என் வாழ்வில் ஒன்றாகக் கலந்து என் வாழ்க்கையின் அங்கமாகவே மாறி விட்டிருந்தபடியால் நான் எப்படி அதைப் பிரிக்க முடியும் ?

அதை அவர்கள் வெறுத்தாலும் அது தேவனுடைய வார்த்தை அல்லவா?

அது அவர்களுக்கும் மிகவும் அவசியமல்லவா ?
அதனால் விடவே இல்லை. விடாமல் எழுதினேன்..

சரியான ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது..
Danzig என்ற இடத்தில் நான் படித்த Bible Training பற்றி எழுதச் சொன்னார்கள்..

அங்கிருந்த
என் ஆசிரியர்கள்,
என் நண்பர்கள்,அங்கு நான் படித்த subjects - எல்லாம் - ஒன்று விடாமல்!

அங்கு படித்த பாடங்கள் ஒவ்வொன்றையும் பற்றி விலாவாரியாக எழுத எனக்கு ஒரு மிக அருமையான வாய்ப்பு அது..

இவர்கள் தான்
"பைபிள் காலேஜ்" படிக்கும் முதல் கம்யூனிஸ்ட் விசாரணைக்காரர்கள் என்று நான் நினைத்தபோது எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன்...

அதன்பின் நான் லண்டனில் பைபிள் ஸ்கூல் படித்த நாட்களைப்பற்றி எழுதச் சொன்னார்கள்..

அகல ஆழமாய்த் தோண்டித் தோண்டி எழுதினேன்..

நான் இங்கே..
அவர்களது கம்யூனிஸ்ட் ஜெயிலிலேயே...

அவர்களது சொந்த கம்யூனிஸ்ட் பேப்பரையும்
கம்யூனிஸ்ட் இங்க்கையும்
செலவழித்து..

அந்தக் கம்யூனிஸ்ட்டுகளுக்கே கர்த்தருடைய வார்த்தையை மறைமுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்..

அவர்கள் சொன்னார்கள்..
"ஏய் பாப்போவ் !
எங்களுக்கு எல்லா விவரமும் வேணும்!!"

நானும் புள்ளி, கமா விடாமல் சகலத்தையும் எழுதிக் கொடுத்தேன்..

ஜெயிலில் மறக்க முடியாத நாட்கள் அவை..அது மட்டுமல்ல..
நான் எழுத எழுத..
என் பழைய பைபிள் காலேஜ் ஞாபகங்கள் வரவர அது ஒரு தனி அனுபவமாக இருந்தது..

ஒரு நாள் சொன்னார்கள்..
"ஏய் பாப்போவ் !
போதும் உன் கதையும் உன் கற்பனைக் கடவுளும்..

இதோட நிறுத்திக்க..
இதுக்கு மேல எங்களுக்குத் தேவையில்லை.."

ஆனால்..அதற்குள்ளே நான் சொல்ல வேண்டியவைகளையெல்லாம் சொல்லி முடித்து விட்டிருந்தேன்..

அவர்கள் விரும்பினார்களோ இல்லையோ..
மொத்தத்தில் எத்தனையோ கம்யூனிஸ்ட்டுகளுக்கு மறைமுகமாக சுவிசேஷம் இதற்குள் போய் சேர்ந்து விட்டிருந்தது..

ஆனால் நான் எவ்வளவு உஷாரா, ஸ்மார்ட்டா இந்த வேலையெல்லாம் செய்தேனோ அவர்களும் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை..

அவங்களும் அதே அளவு ஸ்மார்ட்டாவே இருந்தார்கள்!!!

[நம் போதகர்கள், சபை மற்றும் சபையின் சகவிசுவாசிகளைக் குறித்த ஒவ்வொரு நுணுக்கமான விபரங்களையும் நம் வாயிலிருந்தே வரவழைக்கும் நாட்கள் இதோ இங்கே வருகிறது!]


குப்பைத் தொட்டியில் வேதாகமங்கள்
ஹெரலன் பாப்போவ் தொடருகிறார்...

இரகசிய சபையின் ஊழியங்களில் வேதபுத்தகம் இல்லாததால் கிறிஸ்தவர்கள் படும் பாட்டை என் கண்களால் கண்டேன்..

கர்த்தருடைய வார்த்தை இல்லாத ஒரே காரணத்தினால் அவர்கள் வாழ்க்கையிலும் இருதயத்திலுமுள்ள வெறுமையை யாரால் விவரிக்க முடியும்?

தேவனுடைய வார்த்தை இல்லாமல் அவர்கள் தண்ணீரில்லாத மீன் தத்தளிப்பது போலவும், காற்றில்லாத வானத்தில் பறவை பறக்கத் திக்குமுக்காடுவது போலவும் தவித்துக் கொண்டிருந்தார்கள்..

ஒரு நாள் தெருவில் அழுக்கான ஆடையுடன் வயதான ஒரு மனிதன் என்னிடம் வந்து "பாஸ்டர், என்னை உங்களுக்குத் தெரியாது..ஆனால் உங்களை எனக்குத் தெரியும்.."

"என்னிடம் ஒன்று இருக்கிறது. நான் அதை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன்.." என்றான்..

ஒருவேளை இரகசிய போலீசாக இருப்பானோ என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் இவ்வளவு அழுக்காக நிச்சயம் இருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் அருகில் சென்றேன்..

தன் கிழிந்த கோட்டுக்குள் இருந்து பாதி கிழிந்து எரிந்திருந்த ஒரு புத்தகத்தை வெளியில் எடுத்தான். அழுக்காக இருந்த அந்தப் புத்தகத்தின் பக்கங்களை அவன் திறந்து காட்டியபோது தான் அது ஒரு வேதாகமம் என்று தெரிந்தது. அவ்வளவு மோசமான நிலையிலிருந்தது அது..

அவனைத் தனியே ஒதுக்குப்புறமாய் அழைத்துச் சென்று கேட்டேன்.." இது உனக்கு எங்கே கிடைத்தது ?" "அதோ அந்தக் குப்பைத் தொட்டியில்.."

மேற்கொண்டு நான் கேட்குமுன் அவனே பேச்சைத் தொடர்ந்தான்..

"நான் ஒரு குப்பை பொறுக்கும் தொழிலாளி..குப்பைத் தொட்டிகளில் கிடைக்கும் பொருட்களை விற்று காலம் தள்ளுகிறவன்..

ஒரு நாள் மலை போல் குவிந்து கிடந்த குப்பைகளுக்கு நடுவே தோண்டிக் கொண்டிருக்கும் போது இது கிடைத்தது..

கிறிஸ்தவர்களிடமிருந்து பிடுங்கி எரித்துக் குப்பையில் போடும் பைபிள்களில் ஒன்று என்று அறிந்து கொண்ட நான், அவர்கள் வழக்கமாக எங்கே எரிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அங்கேயே போய் அவர்கள் கண்களுக்கு மறைவாக பாதி எரிந்த பைபிள்களை குப்பையோடு குப்பையாக
அள்ளிக் கொண்டு வருகிறேன்..

அவர்கள் கிறிஸ்தவர்களிடமிருந்து பிடுங்கி எரிக்கிறார்கள்..
நான் அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் கையிலிருந்து பறித்து மறுபடியும் கிறிஸ்தர்களுக்கு இரகசியமாய் விநியோகித்து வருகிறேன்..

இப்போதெல்லாம் நான் குப்பை பொறுக்கி சம்பாதிப்பதில்லை.
என் வேலையே குப்பைத் தொட்டிகளிலிருந்து பைபிள்களைப் பொறுக்கி எடுத்து மறுபடியும் கிறிஸ்தவர்களிடம் சேர்ப்பது தான்.." என்று சொன்னான்

அதைக் கேட்ட எனக்கு, இரகசிய சபைகளில் சிலர் கைகளில் அழுக்குக் கந்தையான, பாதி எரிந்த பைபிள்களைப் பார்த்தது அப்போது தான் ஞாபகம் வந்தது.

வேதத்தின் ஒரு பிரதி கூட காணக் கிடைக்காதோ?
ஒரு நாள் இரகசிய சபையின் நள்ளிரவுக் கூட்டம் முடிந்து 16 வயது வாலிப சிறுமி என்னிடம் வந்தாள்..

அவள் ஒரு புதிதாக இரட்சிக்கப்பட்ட மகள் என்று அறிந்து கொண்டேன்.

என் கையிலிருந்த பாதி எரிந்து போன பைபிளைப் பார்த்து என்னிடம் கேட்டாள்..
"பாஸ்டர் நாளை காலை வரை இதை எனக்கு இரவலாகத் தருவீர்களா ?"

"நிச்சயமாகத் தருவேன்" என்று சொல்லி அதைக் கொடுத்தேன். அவள் சொன்னது போலவே அடு்த்த நாள் காலை வந்து தந்து விட்டாள்.

எனக்கு நன்றி சொல்லிவிட்டு "பாஸ்டர், இன்று இரவு கூட்டம் முடிந்து எனக்கு இதைத் தருவீர்களா ?" என்று கேட்டாள்.அன்று இரவும் கொடுத்தேன்.

மறுநாள் காலை பைபிளைத் திருப்பிக் கொடுக்க வந்தவள்.. "இன்று இரவு கூட்டம் எங்கு நடக்கும் பாஸ்டர் ? அங்கு நான் வந்தால் நாளை காலை வரை தருவீர்களா" என்று கேட்டாள்.

"ஒவ்வொரு நாளும் வாங்கிட்டு போறியே? என்னம்மா செய்வ? இராத்திரியெல்லாம் உட்கார்ந்து படிப்பியா?" என்று என் ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டேன்..

"இல்ல பாஸ்டர்..நடு இரவிலிருந்து விடியற்காலம் வரை உட்கார்ந்து ஒவ்வொரு அதிகாரமாக கையால் எழுதுவேன்..

தூங்காம எழுதினா ஒரு ராத்திரியில நிறைய அதிகாரங்கள் எழுதிருவேன்..இப்படியே செய்தால் ஒரு நாள் எனக்குன்னு சொந்தமா ஒரு பைபிள் கிடைச்சிரும்ல?" என்று சொன்னாள்..

அவள் வார்த்தைகள் என்னை உடைத்தது..
"நீ எடுத்துக்கம்மா..
பகல்ல கூட நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதிக்க..முழுதும் எழுதி முடிக்கிற வரை வச்சுக்க.."என்று சொல்லி அந்த பாதி எரிந்து போன பைபிளை அந்த மகளிடம் கொடுத்தேன்..

அவளுக்கிருந்த சந்தோஷத்தால் குதிக்காத குறையாக "நன்றி பாஸ்டர்.." என்று சொன்னாள்..

அவள் போனபின் என் இருதயம் எனக்குள்ளே சுக்குநூறாக உடைந்திருந்தது.

தனக்கென்று ஒரு சொந்த பைபிள் பிரதிக்காக இரவு பகலாக உட்கார்ந்து நாள் கணக்காக எழுதும் ஓர் ஆத்துமா !

கர்த்தருடைய வார்த்தைக்காக எவ்வளவு தவித்துக் கிடக்கும் ஒரு கூட்டம் இங்கே !

பாதி எரிந்து போன பைபிள் கூட கிடைக்காதா என்று அங்கலாய்க்கும் என் ஜனமே ! உனக்காக நான் என்ன செய்வேன்?

என் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிய ஆரம்பித்தது..

இரகசிய பைபிள்
தொழிற்சாலை
சோஃபியா நகருக்கு வெளியே ஒரு கிறிஸ்தவ வீட்டின் பின்பக்கம் "பைபிள் ஃபேக்டரி ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு அதைப் பார்க்கச் சென்றேன்.

பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்து பேஸ்மென்ட் மாதிரி இருந்த ஒரு நீண்ட அறைக்கு அழைத்துச் செலலப்பட்டேன். லைட் போடப்பட்டிருந்தாலும் முழுவதும் திரைகளால் மூடப்பட்டிருந்தது..

அந்த அறையில் நீளமான ஒரு மேஜை..
அதை சுற்றிலும் 7 பேர் உட்கார்ந்து நான் வந்ததில் கூட கவனம் செலுத்தாமல் மிகத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்..

ஏறக்குறைய அனைவருமே இளம் வயதுள்ளவர்களாகவும் ஒருவர் மட்டும் வயதானவராகவும் இருந்தனர்..

அவர்களை உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்த போது தான் தெரிந்தது..அவர்கள் வேதாகமத்தைக் கையெழுத்து நகல் எடுத்துக் கொண்டிருந்தனர்..அப்படியானால் நான் ஒரு இரகசிய பைபிள் தொழிற்சாலைக்குள் வந்திருக்கிறேன்..

எப்படியோ அவர்களுக்கு ஒரு பைபிள் கிடைத்திருக்கிறது.
வேதத்தின் ஒவ்வொரு புத்தகமும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அவரவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட புத்தகத்தை மிகத்தெளிவாக அழகாக நேரம் எடுத்துத் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாளுக்கு தொடர்ந்து 12 மணி நேரம் வேலை நடந்து கொண்டிருந்தது.ஒருவர் சோர்ந்து போகும்போது அடுத்தவர் தொடர்ந்தார்..

இப்படி ரிலே ரேஸ் போல இந்தக்குழு இடைவிடாமல் வேலை செய்து கொண்டிருந்தது.

வேதாகமத்தின் எல்லா புத்தகங்களும் எழுதப்பட்டு முடிந்ததும் பைண்ட் செய்யப்பட்டு பல்கேரியாவில் ஆங்காங்கே உள்ள இரகசிய கிறிஸ்தவ சபைகளுக்கு மிகக் கவனமாகக் கடத்தப்பட்டு அனுப்பப்படுகிறது.

ஒரு வருஷத்துக்கு 25 வேதாகமங்கள் இப்படி கையால் எழுதப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது..

உடல் ஊனத்தால் வெளியே வர முடியாமல், தன் சிறிய வீட்டிலே முடங்கிக் கிடந்தாலும் தன் பழைய டைப்ரைட்டரைக் கொண்டு அந்த மனிதன் செய்து வந்த புத்தக ஊழியத்தின் மூலம் சோஃபியா நகர் மட்டுமல்லாது பல்கேரியா முழுவதும் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் எத்தனையோ ஆயிரங்கள்!!

இரகசிய சபையின் இப்படிப்பட்ட தீவிர வேலைகள் என்னை உலுக்கி விட்டன..

உயிரைப் பணயம் வைத்து செய்யப்படும் இந்தத் தியாகங்களைக் குறிப்பிட வார்த்தைகளில்லை..

இவை போன்ற வேலைகள் ஆங்காங்கே நடந்தாலும் ஜனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு வேத புத்தகமோ பாடல் புத்தகங்களோ ஆவிக்குரிய புத்தகங்களோ வெளியிடும் அளவுக்கு இந்த முயற்சிகள் போதுமானதாக இல்லை
என்பதே வெளிப்படையாகத் தெரிந்தது.

"பைபிள் தொழிற்சாலைகள்" வருடத்துக்கு 25, 30 பைபிள் மட்டுமே வெளியிட முடிந்தது.

திரும்பத் திரும்ப ஜனங்கள் என்னிடம் கேட்டதெல்லாம் " பாஸ்டர்,எனக்கு ஒரு பைபிள் கிடைக்குமா?" என்பதே.


இரகசிய பைபிள்
ஸ்டோர்
ஒரு நாள் இரகசிய சபையில் ஒரு சகோதரன் என் கையில் பைண்ட் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தைத் தந்தார்..

திறந்து பார்த்த போது அது ஒரு டைப் செய்யப்பட்ட புத்தகம்..
ராய் ஹெஸ்ஸன் என்பவரின் "கல்வாரிப் பாதை" என்ற புத்தகம்..

"எங்கே கிடைத்தது " என்று கேட்டேன்.

அந்த சகோதரன் சொன்னார்.." பாஸ்டர், இந்த ஊரின் அந்தப்பக்கம் ஒரு உடல் ஊனமான மனிதர் இருக்கிறார்..
கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தவர்.

அவரிடம் பழைய உடைந்த ஒரு டைப் ரைட்டர் இருக்கிறது. உடல் ஊனத்தால் வேறு எங்கும் வெளியே செல்ல முடியாததால் வீட்டிலேயே இருந்து, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்திலிருந்து இதை பல்கேரிய மொழியில் மொழிபெயர்த்து டைப் செய்து பைண்ட் செய்து விநியோகித்து வருகிறார்.

ஒரு முறை டைப் செய்யும் போது 4,5 கார்பன் காப்பி கிடைக்கும்.முடித்ததும் அதே போல் முழுவதும் திரும்ப டைப் செய்வார்.

அவரைத் தேடிப் போன எனக்கு ஆச்சரியம்!
அந்த மனிதன் வசித்து வந்த சிறிய அப்பார்ட்மென்ட்டில் வீடு முழுவதும் ஒரு பக்கம் அடுக்கடுக்காக வெள்ளைப் பேப்பர்கள்..

இன்னொரு பக்கம் டைப் செய்யப்பட்டு் தயாராக வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்..

அவர் சொன்னார்..
"பாஸ்டர், போலீஸ் கண்களுக்கு மறைத்து எப்படி இவ்வளவு பேப்பர்களையும் சேர்க்க முடிந்தது என்று யோசிக்கிறீர்களா ?

எனக்குத் தெரிந்த கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஒயிட் பேப்பர் தங்கள் தனிப்பட்ட உபயோகத்துக்கு வாங்குவது போல சந்தேகம் வராமல் வாங்கி வருவார்கள்..
அப்படியே சேர்ந்தது தான் இவ்வளவும்.."

நான் அந்த வீட்டைப் பார்த்த போது அது ஒரு இரகசிய புத்தக நிலையம் போலிருந்தது..

[இதைப் போலவே, நமது கைகளில் வேதத்தின் ஒரு பிரதியோ, ஒரு பக்கமோ, ஒரு பேப்பரோ கூடப் பார்க்கக் கிடைக்காமல், நமது சபைகளிலிருந்தும், வீடுகளிலிருந்தும் பெட்டி பெட்டியாய் வேத புத்தகங்களும், புதிய ஏற்பாடுகளும், ஆவிக்குரிய புத்தகங்களும் பிடுங்கி எடுத்துச் செல்லப்பட்டு, நாற்சந்திகளில் குவித்து எரிக்கப்படும் நாட்கள் இதோ, இங்கே வருகிறது !]


==============
காட்சி - 5
பிலிப்பைன்ஸ் - ஒரு சிறு பெண்
==============
"என் ஒயிட் ட்ரெஸ்ஸை எனக்குக் குடுங்க.." அந்த சிறு பெண்ணின் வீங்கிய உதடுகளிலிருந்து வார்த்தைகள் தட்டுத் தடுமாறி முணுமுணுப்பாய் வெளிவந்தது ..

அந்தப் பிள்ளையின் படுக்கையைச் சுற்றி நின்று கொண்டிருந்த விசுவாசிகளின் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அவளது அளவுக்கதிகமான உள் காயங்களினால் மருத்துவர்களும் அவளுக்கு ஒன்றும் செய்ய இயலாத நிலையிலிருந்தனர். சில வாரங்கள் முன்பு தான் கிறிஸ்து இயேசுவுக்குள் அவளது புதுப் பிறப்பையும் பரிசுத்தமான உள்ளத்தையும் கொண்டாடும் விதமாக அந்த சபையின் விசுவாசிகள், அவளுக்கு ஒயிட் கவுன் ஒன்றைப் பரிசாக அளித்திருந்தனர்.

ஆனால் அவளது தகப்பனோ, கிறிஸ்துவுக்குப் பின் செல்லத் தீர்மானித்துவிட்ட தனது மகளின் தீர்மானத்தை சற்றும் விரும்பவில்லை. ஒரு நாள் இரவு பயங்கர குடி போதையில் வந்த அவன், தன் மகளை அடித்து உதைத்து "செத்துப்போ" என்று சேற்றில் தூக்கியெறிந்துவிட்டுப் போய் விட்டான்.

சபைக்கு அவள் வராததைக் கண்ட அவளது கிறிஸ்தவ நண்பர்கள், அவளைத் தேடிச்சென்றபோது, ஒரு சேற்றுக் குவியலுக்குள்ளே, அவளது அழகான வெள்ளை உடை, சேறும் சகதியுமாய் இரத்தத்தில் கசங்கிக் கிடக்க, அவளோ அங்கே குற்றுயிரும் குலையுயிருமாய் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாள்..மருத்துவரிடம் அவளைக் கொண்டு வந்த போது அவளது காயங்கள் மிகவும் அதிகமாயிருந்தது.

அவளோ இப்போது "என் ஒயிட் ட்ரெஸ்ஸைக் குடுங்க..என் ஒயிட் ட்ரெஸ்ஸைக் குடுங்க.." என்றே அரற்றிக் கொண்டிருந்தாள். "ட்ரெஸ் ரொம்ப நாசமாயிடுச்சும்மா" என்று அவளது சிநேகிதிகள் சிலர் சொன்னார்கள். அழுக்கும் கந்தலுமாகிப் போன உடுப்பையே பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் அவள் சோர்ந்து விடுவாள் என்று நினைத்து சிலர் அவளது கவனத்தை மாற்றும் எண்ணத்துடன் பேச்சைத் திசை திருப்ப முயன்றனர்.

"என் ட்ரெஸ்ஸை மட்டும் எனக்குக் குடுங்க..என் இயேசப்பா கிட்ட காட்டணும்..அவர் எனக்காக இரத்தம் சிந்தினாரே! நானும் கூட அவருக்காக இரத்தம் சிந்தத் தயாரா இருக்கேன்னு மட்டும் அவருக்குச் சொல்லணும். கொஞ்சம் குடுங்களேன்.." என்று பத்தே வயது நிரம்பிய ஒரு சிறுபிள்ளையின் விசுவாசத்தோடு திரும்பத் திரும்ப விசும்பிக் கொண்டேயிருந்த அந்தப் பத்து வயது சிறுமியிடமிருந்து சிறிது நேரத்தில் அவளது உயிர் பிரிந்தது.


==========
காட்சி 6
க்யூபா - Tom White
===========
தலை முதல் கழுத்து வரை முழுவதும் மறைக்கும் அந்தக் கறுப்பு முகமூடி கொண்டு டாம் ஒயிட்டின் தலையிலிருந்து முகம் முழுவதும் இழுத்து மூடப்பட்டபோது, தான் திரும்பவும் தன் கண் கொண்டு வெளிச்சத்தைப் பார்ப்பேனா என்று நினைத்தார் டாம் ஒயிட். அந்தக் கியூபக் காவலர்களிடம், "என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்? என்று கேட்க, அவர்கள் பதில் ஏதும் பேசவில்லை.

கடந்த ஏழு வருடங்களாக கியூபாவுக்குள் கிறிஸ்தவ இலக்கியங்களையும் பிரசுரங்களையும் புதிய ஏற்பாட்டுப் பகுதிகளையும் இரகசியமாகக் கடத்திக்கொண்டிருந்தார் Tom. அவரும் அவருடனிருந்தவர்களும் அந்தக் கம்யூனிஸ்ட் தீவைச் சுற்றியுள்ள கடலில் மேலிருந்து ஏரோப்ளேன் மூலம் சுவிசேஷக் கைப்பிரதிகளை போட்டு வந்தனர். ஆனால் ஒரு நாளும் க்யூபாவிலுள்ள ஒரு கிறிஸ்தவர் மூலமாவாவது தங்களது கிறிஸ்தவப் பிரதிகள் வந்து சேர்ந்தன என்று அவர் ஒரு போதும் கேள்விப்பட்டதேயில்லை.

"தேவனே, எங்கள் பிரயாசங்கள் நிச்சயமாகவே கிரியை செய்கிறதென்கிற உறுதியைத் தயவு செய்து எங்களுக்குத்தாரும்" என்று ஜெபித்துக் கொண்டேயிருந்தார் டாம்.

இப்போது ஆறு வாரங்களுக்குப் பிறகு கேப்டன் ஸேன்ட்டோஸ் என்ற இன்ட்டெலிஜன்ஸ் ஆபீசருக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படக் கொண்டு போகப்படுகிறார் டாம். இப்போது நடந்தது இது தான். க்யூபாவிலே இவர்கள் சென்ற ப்ளேன் விபத்துக்குள்ளாக, டாமும் பைலட் மெல் பெய்லியும் பிடிக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டனர் இருவரும்.

"பல வருடங்களுக்கு முன் ஃப்ளைட்டிலிருந்து கியூபாவின் எல்லைகளுக்குள் போடப்பட்ட சுவிசேஷப் பாக்கெட்டுகளில் ஒன்றைத் தன் கையில் பிடித்தவனாக,"இதைப்போன்று ஆயிரக்கணக்கான பாக்கெட்டுகள் எங்கள் கடற்கரைகளிலும் வெளி நிலங்களிலும் எங்கள் ஜனங்கள் கைகளில் கிடைத்தது. யார் அதைப் போட்டது?" என்று கத்தினான் கேப்டன் ஸேன்ட்டோஸ்.

Tom சிரிப்பை அடக்கிக்கொண்டார். "நன்றி,ஆண்டவரே! என் ஜெபத்தைக் கேட்டீரே! எங்கள் பிரயாசங்கள் வீணாய்ப் போக நீர் விடவில்லையே.." என்று உள்ளூரத் துதித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் டாமின் ஜெபத்துக்கான பதிலுக்கு அவர் செலுத்திய விலை, கியூபாவின் சிறைச்சாலைகளில் அவர் செலவழித்த 21 மாதங்கள். ஆனால் அங்கே ஃபிடல் காஸ்ட்ரோவின் சிறைகளில் இரகசிய சபையின் அநேக விசுவாசிகளை அவர் சந்தித்தபோது, கேஸ்ட்ரோவின் இரும்புக்கரத்தின் கீழும் கூட கிறிஸ்துவின் சரீரமாகிய சபை வளர்ந்து பெருகிக்கொண்டிருந்ததைக் கண்டார் அவர். தேவன் அவரது ஜெபங்களுக்கு பதிலைத் தந்ததோடு அதை அவரது சொந்தக் கண்களாலும் காணும்படி செய்தார்.


=============
காட்சி 7
ஸாட்பெர்ரி : ஒரு தேவ பக்தியுள்ள பெண்
==============
கிறிஸ்துவுக்காகவும் சத்தியத்துக்காகவும் பாடு அனுபவித்து மரித்த பலரில்..

மிக மேன்மையாகக் கருதப்பட்டு அவருக்காக ஜீவனைக் கொடுத்த தேவ பக்தியான ஒரு பெண் உண்டு..

ஸாட்பரி என்ற இடத்தைச் சேர்ந்தவர்..

முக்கியமாக..விட்டிங்ட்டன் என்ற நகர சான்ஸ்லருக்கு முன்னால் கர்த்தருக்காக அந்தப் பெண் காட்டின வைராக்கியம் மகிமையானது..

அவள் ஒரு தேச துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு ஊருக்கு வெளியே தண்டனைக்கு கொண்டு செல்லப்படுகிறாள்..

பெரிய கூட்டம் கூடுகிறது..

கடைசியாகக் கேட்கப்படுகிறது..
"உன் விசுவாசத்தை விட்டுவிட்டு ரோம சபையின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறாயா?"

அவளோ தன் சாட்சியில் உறுதியாய் நிற்கிறாள்..
தண்டனை நிறைவேற்றப்பட..அவள் ஜீவன் பிரிகிறது..

பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் மெதுவாய்க் கலைகிறது..

நகருக்கு வெளியே..
சபை இப்படி ஒரு குற்றமில்லாத ஆட்டுக்குட்டியை பலியிட்டுக் கொண்டிருக்க..

அங்கே நகருக்கு உள்ளே..

ஆடு மாடு வெட்டுகிற ஒருவன் ஒரு காளை மாட்டை வெட்ட தயாராகிக் கொண்டிருந்தான்..

அதை வெட்டுமுன் அதின் தலையில் அடித்து சாகடித்து..பிறகு வெட்டலாம் என்று நினைத்து அதைத் தலையில் அடித்தவன்..

எப்படியோ குறிதவறி..மாடு தன் கட்டுகளை அறுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது..

இதற்குள் தேவ பக்தியுள்ள அந்தப் பெண்ணின் மரணக்காட்சியைக் கண்டு முடித்த கூட்டம் ஊருக்குள் வந்து கொண்டிருக்க..

காட்டுத்தனமாய் ஓடி கூட்டத்துக்குள் புகுந்த காளை..கூட்டத்தில் யாரையும் சேதப்படுத்தாமல்..

ஒரே ஒருவனை மட்டும் நோக்கிப் பாய்ந்து குத்திக் கொன்று போட்டது..

அவன்..அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை எழுதி நிறைவேற்றிய நகர சான்ஸ்லர் விட்டிங்ட்டன்..

கூட்டம் ஸ்தம்பித்து நின்றது..


=============
காட்சி 8
ஜப்பான்: இபாராகி குன்
=============
அந்த 26 கிறிஸ்தவர்களும் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு சிலுவை மரம் போன்ற மரக்கட்டைகள் அடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த இடம் நோக்கி வரிசையாக நடத்திச் செல்லப்பட்டனர். ஏறக்குறைய 3 மாதங்களுக்கு முன்னர் ஜப்பானிலுள்ள க்யோட்டோ என்ற இடத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றியதற்காகக் கைது செய்யப்பட்டிருந்தனர் அவர்கள். அவர்களில் ஒரு குற்றவாளி தான் 12 வயதே நிரம்பிய இபாராகி குன்.

மிகவும் சிறு பையனாகிய குனைக் கண்ட அதிகாரி, அவனைத் தனியாக அழைத்துச் சென்று உயிர் தப்பும்படியாய், தன் விசுவாசத்தை விட்டு விடச் சொன்னான். அந்த அதிகாரியை நேருக்கு நேர் பார்த்து," சார், நீங்களே ஒரு கிறிஸ்தவராகி விட்டால் உங்களுக்கு எவ்வளவு நல்லது, என்னோடு கூட நீங்களும் பரலோகம் செல்லலாமே" என்று தைரியமாகச் சொன்னான் குன்.

அந்த அதிகாரி அந்த சிறுவனின் விசுவாசத்தைக் கண்டு மலைத்துப் போய் விக்கித்து நின்றான்.. கடைசியாக இபாராகி கேட்டான்," சார், என் சிலுவை எங்கே இருக்கிறது சொல்லுங்கள்..?"

அங்கே நடப்பட்டிருந்த 26 சிலுவைகளிலேயே மிகச்சிறியதைக் காட்டினான் அந்த அதிகாரி. சிலுவையை நோக்கி ஓடிச்சென்ற சிறுவன் குன், அதற்கு முன் முழங்கால்படியிட்டு அதை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டான். இராணுவ வீரர்கள் அவனது கைகளையும் கால்களையும் ஆணிகளால் அறைந்த போது, வலியினால் அவன் துடிக்கவில்லை. தேவன் அவனுக்கென்று வகுத்திருந்த பாதையை தைரியத்தோடு ஏற்றுக் கொண்டான் அவன். 26 கிறிஸ்தவர்களும் சிலுவையில் அறையப்பட்ட அந்த நவம்பர் 23, 1596 தான் ஜப்பானில் கிறிஸ்தவர்களின் கொடும் உபத்திரவத்தின் துவக்கம். அடுத்து வந்த 70 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 இலட்சம் ஜப்பானியக் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டனர்.

12 வயதிலேயே மிகவும் முதிர்ச்சியான இபாராகி குன்னின் மாதிரியைப் பின்பற்றி அதன் பின் அநேகர் தங்கள் தங்கள் பாடுகளின் சிலுவையை அணைத்து முத்தமிடத் தொடங்கினர்.

[இப்படிப்பட்ட காட்சிகளும் கூட இங்கே அரங்கேறக் காத்திருக்கின்றன]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.