எவலின் கோர்டன் Evalyn Gordon | சி. எஸ். ட்யூராண்ட் C.S. Durand | எம்மா குஷ்மேன் Emma Cushman | சைலஸ் மீட் Silas Mead | வில்லியம் எல்ம்ஸ்லி William Elmslie |
எவலின் கோர்டன் Evalyn Gordon
விண்ணில் : 1908
ஊர் : கல்கத்தா
நாடு : இந்தியா
தரிசன பூமி : இந்தியா
எவலின். எம். கோர்டன் எனபவர் ஒரு மிஷனரி சேவை பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய்வழி பாட்டன் செராம்பூர் என்னும் ஊரில் வில்லியம் கேரி உடன் இணைந்து ஊழியம் செய்தார். சேரம்பூர் கல்லூரியில் கல்வியை முடித்த பிறகு, கோர்டன் 'பாம்பே கார்டியன்' செய்தித்தாளில் பணிபுரியத் தொடங்கினார். அங்கு அவர் 1892ஆம் ஆண்டு "டிஸைப்பில்ஸ் அஃப் க்ரைஸ்ட்" (கிறிஸ்துவின் சீடர்கள்) ஊழியத்தில் சேரத் தூண்டிய அமெரிக்க மிஷனரியான மோர்ட்டன் ஆடம்ஸ் என்பவரை சந்தித்தார்.
உடனடியாக, கார்டன் முங்கேலியில் பணியமர்த்தப்பட்டார். அங்கு அவர் அநேக கிராமங்களுக்குச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து வந்தார். அவர் சத்தீஸ்கர் கிளைமொழியில் கிறிஸ்துவின் வாழ்க்கையை சுருக்கமாக எழுதினார். இது, அதைப் படிக்கும் மக்களில் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணியது. மிகுந்த முயற்சிக்குப் பிறகு, அவர் இறுதியாய் ஹிரா லால் என்ற ஒரு புறமார்க்கத்தாரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தினார். ஹிரா லால் எப்படி குடும்பத் தடைகளைச் சமாளித்து, கிறிஸ்துவில் அவரது விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்று பார்த்தபோது, அநேகர் கிறிஸ்துவில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படையாக அறிக்கை செய்யத் துவங்கினர்.
இத்தகைய வளரும் ஊழியத்தின் மத்தியில், கார்டன் அவருக்கு பொருத்தமான உதவியாளரக ஆணா டன் என்பவரை கண்டடைந்து, 1896ஆம் ஆண்டு அவரையே மணமுடித்தார். மருத்துவ பயிற்சி பெற்ற ஆணா, மருத்துவ உதவிகளை வழங்கி, முங்கேலியில் கோர்டனுக்கு உதவி, ஊழியம் செய்தார். ஆணாவின் அன்பு, பொறுமை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதில் உள்ள திறமை கிறிஸ்துவண்டை அநேகரை ஈர்த்தது. ஒருமுறை, புற்றுநோய்க்கட்டியுடன் ஒரு இளம் பெண் அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அந்த இளம் பெண்ணின் தாயார் அவரது சேவையில் கிறிஸ்துவின் அன்பைக் கண்டார். அவளுடைய கவனிப்பால் மிகவும் ஈர்க்கப்பட்டு அவர் ஒரு கிறிஸ்தவராக மாறினார். அண்ணா பல இளம் பெண்களுக்கு செவிலியராக பணியாற்ற பயிற்சி அளித்தார். ஒவ்வொரு நாளும் காலையில் மருத்துவப் பணி தொடங்குவதற்கு முன்பு நற்செய்தி அறிவிக்கப்படுவதை அவர் உறுதி செய்தார்.
கொடூரமான பஞ்சத்தின் போது, கோர்டன் தம்பதியினர் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினர். அவர்களின் ஊழியத்தின் போது, அவர்கள் அனாதை இல்லங்கள், தொழுநோய் இல்லங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் ஞாயிறு பள்ளிகளை நிறுவினர். ஊழியம் வளர்ந்தது, ஊழியத்தின் எல்லைகள் விரிவடைந்தன. இந்தியாவில் ஒரு செழித்தோங்கிய ஊழியத்திற்குப் பிறகு, இந்த தம்பதியர் 1908ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு ஓய்வு பெற்று திரும்பினர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் திருச்சபையின் ஊழியத்தில் செலவிட்டனர்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
சி. எஸ். ட்யூராண்ட் C.S. Durand
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : இந்தியா
டாக்டர். சி. எஸ். ட்யூராண்ட் என்பவர், அவரது மருத்துவ படிப்பை படித்து முடிக்கும் முன்னமே மிஷனரி ஊழியத்திற்கென தன்னையே அர்ப்பணித்தார். நியூயார்க்கில் அவரது முதுகலை மருத்துவப் படிப்புக்குப் பிறகு, ட்யூராண்டும் அவருடைய மனைவியும் "டிஸைப்பில்ஸ் அஃப் க்ரைஸ்ட்" (கிறிஸ்துவின் சீடர்கள்) சார்பாக இந்தியாவில் ஊழியம் செய்ய புறப்பட்டனர். இத்தம்பதியினர் தங்களை முழுமையாக தங்கள் ஊழியத்திற்கென அர்ப்பணித்தனர். ஆயினும், பெரும்பாலான மருத்துவ மிஷனரிகள் போலவே தங்களை மருத்துவப் பணிகளில் மட்டுமின்றி, அனைத்து பணி நடவடிக்கைகளிலும் பங்கு கொண்டனர்.
மத்திய இந்தியாவின் ஹர்தா ஏன்னும் ஊரில் ட்யூராண்ட் பணியமர்த்தப்பட்டார். அவர் உள்ளூர் மொழியை அறியாதபோதிலும், ஒரு சிறிய மருந்தகத்தைத் துவக்கிவைத்தார். அவர் ஒரே நேரத்தில் இந்தி கற்றுக்கொண்டே மருத்துவ சேவையை வழங்கத் தொடங்கினார். மருத்துவ சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை வளர்ந்ததால், ட்யூராண்ட் ஒரு மருத்துவமனையை கட்ட திட்டமிட்டார். அவர் தனது எல்லா முயற்சிகளையும் ஒரு நிலத்தைக் கண்டடைவதில் செலவிட்டு அது சிறிதும் பலனளிக்கவில்லை. இறுதியாய், முயற்சிகளால் சோர்வடைந்த அவர், ஒரு மருத்துவமனை தேவைப்பட்டால் கர்த்தர் வழிவாசலை திறந்துகொடுப்பர் என்று ஜெபித்தார். அதிசயமாக, அடுத்த நாளே, ஒரு மனிதர் ஒரு நிலத்தை அவரிடம் வழங்க வந்தார். டாக்டர் ட்யூராண்ட் அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக தனது மருத்துவமனையை கட்டத் தொடங்கினார். இந்த மருத்துவமனை ஒரு சிறிய, முற்றிலும் சாதனங்கள் பொறுத்தப்படாத ஒரு கட்டிடம் ஆனால் பெரிய மிஷனரி பணி செய்யும் இடமாய் மாறியது.
ட்யூராண்ட் தொழுநோயாளிகளிடையே ஊழியம்செய்து, அவர்களின் குணப்படுத்துதலுக்கான தீர்வுகளைப் பற்றி சிறந்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அவருடன் பணிபுரிந்த மற்றொரு மிஷனரியான வார்டன் தொழுநோயாளிகளிடையே சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, ட்யூராண்ட் மருத்துவ சிகிச்சைகளை வழங்கினார். அவர் நகரத்தின் எல்லைப்புறங்களில் ஒரு தொழுநோயாளர் புகலிடத்தைத் நிறுவினார். அங்கு அவர் தொழுநோயாளிகளுக்கு ஒரு இல்லத்தைக் கொடுத்து, அவர்களின் துன்பத்தைத் தணிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். ட்யூராண்ட் எப்போதும் சுவிசேஷத்தை மருத்துவப் பணியுடன் இணைத்து நோயாளிகளை கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுமாறு நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.
மறுபுறம், ட்யூராண்டின் மனைவி ஆண் சிறுவர் பள்ளியின் பொறுப்பில் இருந்து, தினமும் பல மணிநேரம் கற்பித்தார். அவர் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான ஞாயிறு பள்ளி வகுப்புகளை நடத்தி, அதை அனுபவித்து மகிழ்ந்தார். அவர் பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் ஊழியம் செய்து, அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை சந்தித்தார். மருத்துவர் இல்லாதபோது அவர் சில சமயங்களில் மருந்தகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவில் நற்பயனளிக்கும் ஊழியத்திற்குப் பிறகு அமெரிக்கா திரும்பிய ட்யூராண்ட் தம்பதியர் இறுதிவரை ஊழியத்தில் நிலைத்தனர்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
எம்மா குஷ்மேன் Emma Cushman
மண்ணில் : 1863
விண்ணில் : 1931
ஊர் :
நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தரிசன பூமி : கொனியா, ஆசியா மைனர்
முதலாம் உலகப் போரின்போது ஆர்மீனிய இனப்படுகொலை உலக வரலாற்றின் கொடுமையான காலங்களில் ஒன்றாகும். துருக்கியர்கள் சுமார் ஒரு மில்லியன் (10 லட்சம்) ஆர்மீனியர்களைக் கொன்றனர். மேலும் பெண்களையும் குழந்தைகளையும் கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்கள். ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் நகரங்களை விட்டு பாலைவனத்தில் சாகும் வரை நடக்க பலவந்தம் படுத்தப்பட்டனர். தேவன் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மிஷனரிகள் மூலம் தனது பரலோக அன்பை இந்த வெறுப்பு மற்றும் கொடுமையால் நிரம்பிய மக்களுக்கு கூட வெளிப்படுத்துவதை செறியெனக் கண்டார். இப்படி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் ஒருவர் தான் எம்மா குஷ்மேன்.
எம்மா டார்லிங் குஷ்மேன், ஆசியா மைனரின் மிகப்பெரிய நகரமான கொனியாவில் (அப்போஸ்தலன் பவுல் காலத்தின் 'இக்கோனியா பட்டண') உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க செவிலியர். எம்மா அமெரிக்கர்கள் மற்றும் ஆர்மீனியர்களை வெறுக்கும் அதே காயமடைந்த துருக்கியர்களை பராமரித்தும், மருத்துவமனையின் தலைமை செவிலியராகவும் இருந்தார். ஒருமுறை காயமடைந்த துருக்கியர் ஒருவர் அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவற்றில் பொருத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் படத்தை அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குஷ்மேன் அதற்க்கு, "இல்லை, மக்களுக்கு தேவன் அன்பாய் இருக்கிறார் என்று போதித்த பரம வைத்தியராகிய இயேசுவின் படம் இது. அவர் அதைக் போதித்ததாலும், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற என்னை அழைத்ததாலும், நான் உன்னை குணமாக்க உதவ இங்கே நிற்கிறேன்." என்று உறுதியாகப் பதிலளித்தார். அந்த நபர் குணமடைந்த பிறகு இந்த விஷயத்தைக் குறித்து யோசிக்கலாம் என்று எண்ணினார். ஆனால் அவர் மருத்துவமனையில் செலவிட்ட நேரத்திலே, குஷ்மேன் மற்றும் பிற ஆர்மீனிய செவிலியர்களிடம் கிறிஸ்துவின் அன்பைக் கண்டார். அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்குள், அவர் முழுவதுமாய் மனமாறினார். எவ்வளவு தைரியமிக்க அன்பான பெண்மணியாய் திகழ்ந்தார் எம்மா!
முதல் உலகப் போரின்போது, கொடூரமான இனப்படுகொலையின் மத்தியில், குஷ்மேன் மற்றும் அவரது செவிலியர் குழு காயமடைந்த துருக்கியர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் சிகிச்சை வழங்கினர். அவரது வாழ்க்கையே ஒரு நூலிழையில் ஊசலாடுவதுபோல் இருந்தாலும், அவர் பல ஆர்மீனிய சிறுவர்களையும் சிறுமிகளையும் மரண தறுவாயிலிருந்து காப்பாற்றினார். போரினால் அனாதையான அநேக குழந்தைகளை பராமரித்தார். அவர் அவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக்கொடுத்து, தையல் மற்றும் தோல் வெட்டுதல் போன்ற வேறு சில திறன்களைக் கற்றுக்கொள்ளவும் உதவினார். தன் முடிவு பரியந்தம் தன் மிஷனரி அழைப்பிற்கு உண்மையாக இருந்தார் எம்மா குஷ்மேன்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
சைலஸ் மீட் Silas Mead
மண்ணில் : 16.08.1834
விண்ணில் : 13.09.1909
ஊர் : சோமர்செட்
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : ஆஸ்திரேலியா
சைலஸ் மீட் என்பவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றிய ஒரு ஆங்கில பாப்டிஸ்ட் மிஷனரியாவார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த மீட், தனது குடும்பத் தொழிலைத் தொடர்வதை விட பக்தியுள்ள தெய்வீக வாழ்க்கையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவர் 15 வயதில் ஞானஸ்நானம் பெற்றார். விரைவில் அவருடைய நகரத்திலும் திருச்சபையிலும் நற்செய்தி பிரசங்கிக்கத் துவங்கினார். இறையியலில் பட்டம் பெற ரீஜென்ட்ஸ் பார்க் காலேஜ்ஐ (ரீஜண்ட்ஸ் பார்க் கல்லூரி) சேர்ந்தார். அங்கு அவர் கல்லூரி தலைமை ஆசிரியர் ஜோசப் ஆங்கஸ் என்பவரை சந்தித்தார். அவர் மீட்ஸின் பார்வையை உண்மையாகவே விரிவுபடுத்தினார்.
பட்டம் பெற்ற பிறகு, மீட் பாப்டிஸ்ட் மிஷனரி சொசைட்டியில் சேர விண்ணப்பித்தார் ஆனால் நிராகரிக்கப்பட்டார். இருப்பினும், ஆஸ்திரேலிய விசுவாசிகள் அவர்களிடையே பணியாற்ற ஒரு போதகரை தேடிக்கொண்டிருந்ததால் மீட்டிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆங்கஸால் ஊக்கப்படுத்தப்பட்டு, மீட் உடனடியாக அழைப்பை ஏற்று 1861ஆம் ஆண்டு அடலெய்ட் என்ற ஊரை சென்றடைந்தார். மீட் மிகவும் ஈர்க்கதக்க போதகர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும், அவர் மிகுந்த சுவிசேஷ வைராக்யத்தால் நிரப்பப்பட்டிருந்தார். அவர் தனது மனைவியுடன் சேர்ந்து, அங்கிருந்த பழங்குடியினரை கிறிஸ்துவண்டை கூட்டி சேர்க்க கடுமையாக உழைத்தனர். விரைவில் அவர் ‘ஃப்ளிண்டர் ஸ்ட்ரீட் பாப்டிஸ்ட் சர்ச்'ஐ (ஃப்ளிண்டர் ஸ்ட்ரீட் பாப்டிஸ்ட் திருச்சபை) கட்டியெழுப்பினார். 5 ஆண்டுகளுக்குள், திருச்சபையில் 263 உறுப்பினர்கள் இருந்தனர்.
ஊழியம் செழித்து வளர்ந்ததால், மீட் தனிப்பட்ட வேதனைகளையும் எதிர்கொள்ள நேரிட்டது. டைபாய்டு காய்ச்சலால் தனது மனைவியை இழந்ததால் அவர் மனமுடைந்து போனார். அவர் தனது ஐந்து குழந்தைகளையும் வளர்த்து ஒரு செழிப்பான திருச்சபையையும் நடத்த வேண்டியிருந்தது. ஆனால், அவர் முன்வைத்தக் காலை பின்வாங்காமல் அடலெய்டையும் தாண்டி ஊழியத்தை தொடர்ந்து விரிவுபடுத்தினார். அவர் சவுத் ஆஸ்திரேலியா பாப்டிஸ்ட் அஸோஸியேஷன்ஐ (தெற்கு ஆஸ்திரேலியா பாப்டிஸ்ட் கழகம்) நிறுவி அதை தலைமைதாங்கினார். கிறிஸ்தவ ஒற்றுமையின்மை தான் நற்செய்தி பரவுவதற்கு ஒரு கடுமையான தடை என்று அவர் நம்பினார். ஆத்தும ரீதியாக வளர்ந்த விசுவாசிகள் தங்கள் திருச்சபைகளை விட்டுவிட்டு புதிய தேவாலயங்களை ஸ்தாபிக்க தொலைதூர பகுதிகளுக்கு செல்லும்படி அவர் ஊக்குவித்தார்.
தெற்கு ஆஸ்திரேலியா பாப்டிஸ்ட் மிஷனரி சொசைட்டியை நிறுவுவதற்கும், இந்தியாவில் ஃபரீட்போர் மிஷனை நியமிப்பதற்கும் மீட் உந்து சக்தியாக திகழ்ந்தார். பின்னர், அவரது சொந்த மகன், சிசில் மீட், அதே ஊழியத்தைச் செய்ய இந்தியா வந்தடைந்தார். முதுமையிலும், சோர்வடையாத மிஷனரி சைலஸ் மீட், 1909ஆம் ஆண்டு மகிமைக்குள் பிரவேசிக்கும் வரை அநேக அமைப்புகளை வழிநடத்தி அவற்றிற்கு ஆலோசனை வழங்கி வந்தார்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
வில்லியம் எல்ம்ஸ்லி William Elmslie
மண்ணில் : 29.06.1832
விண்ணில் : 18.11.1872
ஊர் : அபர்டீன்
நாடு : ஸ்காட்லாந்து
தரிசன பூமி : இந்தியா
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது காஷ்மீர் ஒரு சமஸ்தானமாக இருந்த ஒரு மாநிலம். அங்கு ஆண்ட மகாராஜாக்கள் எந்த மிஷனரி நடவடிக்கைகளையும் பொறுத்துக்கொள்ளாதவர்களாக இருந்தனர். ஆனால் மகாராஜா ரன்பீர் சிங் அரியணைக்கு வந்தபோது, அவர் தனது மக்களுக்கு நவீன மருத்துவம் அவசியம் என உணர்ந்து, கோடைகாலத்தில் மிஷனரிகளை மாநிலத்திற்குள் அனுமதித்தார். காஷ்மீரில் ஊழியம் செய்த முன்னோடி மருத்துவ மிஷனரிகளில் ஒருவர் வில்லியம் ஜாக்சன் எல்ம்ஸ்லி ஆவார்.
எல்ம்ஸ்லி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கற்று தெரிய ஒரு மருத்துவ பட்டதாரி. சர்ச் மிஷனரி சொசைட்டியின் (திருச்சபை மிஷனரி சங்கம்) வேண்டுகோளின் பேரில், அவர் உடனடியாக இந்தியாவில் ஊழியம் செய்யத் தொடங்கினார். அவர் 1864ஆம் ஆண்டு காஷ்மீரை வந்தடைந்தார். மற்றும் பாமர மக்களின் நிலைமையைக் கண்டு திகைத்துப்போனார். இயற்கை அழகுக்காக அறியப்பட்டாலும், காஷ்மீர் வறுமை மற்றும் பயங்கரமான நோய்களால் தத்தளித்துக் கொண்டிருந்தது. எல்ம்ஸ்லி உடனடியாக உள்ளூர் மக்களுக்கு ஒரு மருந்தகத்தைத் திறந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் துவங்கினார். மேற்கத்திய மருந்துகளை எடுக்க ஆரம்பத்தில் தயக்கம் இருந்தபோதிலும், விரைவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். எல்ம்ஸ்லி முக்கியமான மருத்துவ ஆராய்ச்சி பங்களிப்புகளையும் செய்தார் மற்றும் கொடிய காஷ்மீர்புற்றுநோயை அடையாளம் கண்டார்.
கோடைகாலத்தில் வேலை செய்ய எல்ம்ஸ்லிக்கு அனுமதி வழங்கப்பட்டதால், அவர் குளிர்காலத்தில் தனது தாய்நாட்டுக்குத் திரும்பினார். ஆனால் சளைக்காதமல் மருத்துவர் அடுத்த கோடையில் காஷ்மீரில் ஊழியம் செய்ய மீண்டும் வந்தார். 1872 வரை அவர் அதைத் தொடர்ந்தார். எல்ம்ஸ்லி மக்களிடம் அவர் காஷ்மீருக்கு வருவதற்கு காரணம் இயேசு என்று கூறினார். அவர் நற்செய்தியைப் பிரசங்கித்தார் மற்றும் கிறிஸ்துவுக்காக அநேக காஷ்மீரிகளை ஆதாயப்படுத்தினர். மதமாற்றங்களைப் பற்றி அறிந்த மகாராஜா, எல்ம்ஸ்லியை தனது வேலையை நிறுத்துமாறு எச்சரித்து மிரட்டல் விடுத்தார். ஒருமுறை எல்ம்ஸ்லி தனது மிஷனரி வேலையை நிறுத்தி மருத்துவப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினால் பணம் வழங்கப்படும் என்று கூறினார். இவை அனைத்தும் இருந்தபோதிலும், எல்ம்ஸ்லி மருத்துவப் பணியை நற்செய்தியிலிருந்து பிரிக்கவில்லை. அவர் உள்ளூர் மக்களால் "பாத்ரி டாக்டர் சாஹிப்" என்று அன்புடன் அழைக்கப்பட்டார். - 1872ஆம் ஆண்டு, எல்ம்ஸ்லி ஸ்ரீநகரை விட்டு வெளியேற தாமதமாகி, தனது மனைவியுடன் பனியில் சிக்கிக்கொண்டார். அவரைத் தக்கவைக்க அவரது மனைவி போராடினாலும், ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத அவரது உடலால் குளிரைத் தாங்க முடியவில்லை. அவர் நவம்பர் 1872இல் நித்திய சமாதானத்திற்குள் பிரவேசித்தார். அவருடைய மனைவி மார்கரெட் 1878 வரை அவருடைய ஊழியத்தை துவங்கினார்.
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்
Thanks for using my website. Post your comments on this