Type Here to Get Search Results !

William Buck Bagbyis | Peter Johnson Gulick | Missionaries Life History Tamil | கிறிஸ்தவ மிஷனெரிகளின் வாழ்க்கை சரித்திரம் | Jesus Sam

வில்லியம் பக் பாக்பி William Buck Bagbyis | ஐசக் மேசன் Isaac Mason | ஹண்டர் கோர்பெட் Hunter Corbett | பீட்டர் ஜான்சன் குலிக் Peter Johnson Gulick | ப்ளினி பிஸ்க் Pliny Fisk

வில்லியம் பக் பாக்பி William Buck Bagbyis

மண்ணில் : 05.01.1855

விண்ணில் : 05.08.1939

ஊர் : கோர்யேல் கவுன்ட்டி

நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்

தரிசன பூமி : பிரேசில்







1884 ஆம் ஆண்டு, ஒரு மிஷனரி தம்பதியினர் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கத்தோலிக்கர்களின் எதிர்ப்பின் மத்தியில் கர்த்தருடைய ஊழியத்தைத் துவங்கினர். ஆராதனைக் கூட்டங்களுக்கு யாரும் வராததால் ஊழியத்திற்கு இது ஒரு ஏமாற்றமளிக்கும் தொடக்கமாக இருந்தது. எனவே, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கூடுகை இடத்திற்கு வெளியே எடுத்து சென்று பாட ஆரம்பித்தனர். சில ஆர்வமுள்ள மக்கள் அங்கு திரளத் தொடங்கியபோது, சில கும்பல்காரர்கள் வந்து தளபாடங்களை சேதப்படுத்தின. அப்போது பிரசங்கி மீது ஒருவர் கல் எறிந்தார். அது அவரது தலையில் பட்டு, அவர் மயங்கி விழுந்தார். ஆனால் சில நிமிடங்கள் கழித்து, அவர் எழுந்து நின்று பிரசங்கத்தைத் தொடர்ந்தார். அந்த பிரசங்கி தான் பிரேசிலின் பாப்டிஸ்ட் மிஷனரியின் முன்னோடியான வில்லியம் பக் பாக்பி.







வில்லியம் வாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அவரது இளமை பருவத்தில், அவர் தென் அமெரிக்காவில் மிஷனரிகளின் அவசியத்தைப் பற்றி கேள்விப்பட்டார், அதற்காக அவர் பாரம் கொண்டவராய் விளங்கினார். அவர் ஆனி லூதரை மணந்தபோது அவரது ஆர்வம் உணரப்பட்டது. ஆனி ஏற்கனவே மிஷனரி பணிக்கென தன்னையே அர்பணித்து வில்லியமை போலவே தென் அமெரிக்காவில் ஆர்வம் கொண்டிருந்தார். மற்ற சிலரால் ஊக்கப்படுத்தப்பட்டு, பாக்பி தம்பதியினர் 1880ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவை வந்தடைந்தனர். பின்னர், கத்தோலிக்க தேவாலயம் அரசாங்கத்தை நடத்துவதில் ஈடுபட்டது, மேலும் அவர்கள் புராட்டஸ்டன்டினரை சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊழியத்தின் ஆரம்ப கட்டங்களில், பாக்பி கடுமையான எதிர்ப்பை சந்தித்து பல முறை சரீர பிரகாரமாக தாக்கப்பட்டார். ஆனால், துணிச்சலான இந்த மிஷனரி துன்பங்களை எதிர்கொண்டு மேலும் பெலனடைந்தார். விரைவில், இரண்டு வருடங்களுக்குள், ரியோவில் இரண்டு பாப்டிஸ்ட் தேவாலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டது.







- பாக்பி ரியோவையும் தாண்டி தனது ஊழியத்தை விரிவுபடுத்தி பிரேசில் முழுவதும் பயணம் செய்தார். அனைத்து முக்கிய நகரங்களிலும் திருச்சபைகளை நிறுவினார். பிரேசிலில் எல்லா இடங்களிலும், பாக்பியின் தாக்கம் அவர் நிறுவிய தேவாலயங்கள், அவர் கட்டிய பள்ளிகள், கிறிஸ்துவுக்கு அவர் வென்ற சிறந்த தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான விசுவாசிகளின் மூலம் காணப்பட்டது. அவருடைய மனைவி ஆன் லூதர், ஊழியத்தில் சம பங்காளியாக திகழ்ந்தார். அவர்கள் 9 குழந்தைகளைப் பெற்றனர். அவர்களில் 5 பேர் தென் அமெரிக்காவில் மிஷனரிகளாக வாழ்ந்தனர்.







58 வருட தீவிர ஊழியத்திற்குப் பிறகு, தான் ஸ்தாபித்த 694 திருச்சபைகளையும் 53,000 விசுவாசிகளையும் விட்டுவிட்டு 1939ஆம் ஆண்டு இயேசு பாதம் சென்றடைந்தார் வில்லியம் பக் பாக்பி.

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


ஐசக் மேசன் Isaac Mason

மண்ணில் : 1870

விண்ணில் : 1939

ஊர் : லீட்ஸ் நாடு

நாடு : இங்கிலாந்து

தரிசன பூமி : சீனா




ஐசக் மேசன் என்பவர் துவக்கத்தில் ஜார்ஜ் ஃபாக்ஸ் என்பவரால் தொடங்கப்பட்ட "ரிலீஜியஸ் சொசைட்டி ஆஃப் ஃப்ரண்ட்ஸ்" இல் (நண்பர்கள் மத சமுதாயம்) உறுப்பினராக இருந்தார். அவரது இளமை பருவத்தில், மேசன் ஒரு தலைக்கனம் கொண்ட நபராகவும், கையாள கடினமாக இருந்தார். ஆனால் கரோலின் சவுத்ஹால் போன்ற 'ரிலீஜியஸ் சொசைட்டி ஆஃப் ஃப்ரண்ட்ஸ்' சக உறுப்பினர்களின் நட்பின் தாக்கத்தால், மேசன் ஒரு தாழ்மையான மற்றும் விசுவாசமான நபராக மாறினார். அவர் லீட்ஸ் இல் இரும்பு கொல்லராக வேலை செய்து தன் ஓய்வு நேரத்தில் தனது கல்வியை பயின்றார். கரோலின் சவுத்ஹால் மற்றும் வேறு சிலரால் ஈர்க்கப்பட்ட மேசன், சீனாவில் ஊழியம் செய்வதற்காக ஃப்ரண்ட்ஸ் ஃபாரீன் மிஷனரி அஸோஸியேஷன் (நண்பர்கள் வெளிநாட்டு மிஷனரி சங்கம்) இடம் தனது சேவைகளை அர்பணித்தார்.




எஸ்தர் பெக்வித் என்பவருடன் அவரது திருமணத்திற்குப் பிறகு, இத்தம்பதியர் 1894ஆம் ஆண்டு சீனாவுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் ஸெஷ்வான் மாகாணத்தில் குடியேறி, ஷீ ஹாங் மற்றும் சுய்னிங் ஆகிய இடங்களில் முன்னோடி மிஷனரி பணிகளைச் செய்தனர். ஊழியம் துவங்கிய சில ஆண்டுகளுக்குள், மேசன் பாக்ஸர் கலகத்தின் கலவரத்தை எதிர்கொள்ள நேரிட்டது. இது வெளிநாட்டவர்களுக்கு எதிரான எழுச்சியாக இருந்தது. பல மிஷனரிகள் தங்கள் மிஷன் நிலையங்களை விட்டு வெளியேறி தற்காலிகமாக அருகிலுள்ள நாடுகளில் தஞ்சமடைந்தனர். ஆனால் மேசனும் அவரது மனைவியும் கொடூரமான பாக்ஸர் கலகத்தையும், சின்ஹாய் புரட்சியையும் பொறுமையுடன் சகித்து எதிர்கொண்டனர்.




மேசன் சீன மொழியில் வெகுசீக்கிரத்தில் தேர்ச்சி பெற்று நற்செய்தியைப் பிரசங்கிக்க அதிகம் பயணம் செய்தார். அவர் குறிப்பாக சீன முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஆர்வம் காட்டினார். மேலும் அவரது பயணங்களின் போது அவர்களின் வாழ்க்கையை விரிவாக ஆவணப்படுத்தினார். அவரது ஆவணங்கள் அடுத்தடுத்து வரும் மிஷனரிகளுக்கு ஒரு முக்கியமான கற்றுக்கொள்ளும் ஆயத்தப் பொருளாக அமைந்தது. அவர் கன்பூசியன் நெறிமுறை பாணியைத் பயன்படுத்தி, நிறைய கிறிஸ்தவ இலக்கியங்களை சீன மொழியில் மொழிபெயர்த்தார். அவர் ஷேக்ஸ்பியர் கதைகளில் மறைக்கப்பட்ட கிறிஸ்தவக் கருத்துக்களுடன் மீண்டும் அவற்றை எழுதி, அதிலுள்ள இரக்கம், மன்னிப்பு மற்றும் நீதி போன்ற கிறிஸ்தவ நெறிமுறைகள் தொடர்பான தலைப்புகளை முன்னிலைப்படுத்தினார். கிறிஸ்தவ எண்ணங்களை பரப்புவதற்கான இந்த மறைமுக அணுகுமுறை உண்மையிலே சீனர்களின் வாழ்க்கையில் பலனளிக்கும் ஊடுருவலை ஏற்படுத்தியது.




- மேற்கு சீனாவில் 22 வருடங்கள் ஊழியத்திற்குப் பிறகு, மேசன் ஷாங்காய் நகருக்குச் சென்று தனது மொழிபெயர்ப்புப் படைப்புகளை வெளியிடுவதில் கவனம் செலுத்தினார். அவர் ஏராளமான கிறிஸ்தவ புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். மேலும் சீன மொழியில் வேதாகமத்தின் அகராதியை தொகுக்கவும் உதவினார்.




ஒரு மிஷனரியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் ஒரு சுவாரசியமான வாழ்க்கை பயணத்திற்குப் பிறகு, 1939ஆம் ஆண்டு தேவ மகிமைக்குள் கடந்துச் சென்றார் ஐசக் மேசன்.

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


ஹண்டர் கோர்பெட் Hunter Corbett

மண்ணில் : 08.12.1835

விண்ணில் : 07.01.1920

ஊர் : பென்சில்வேனியா

நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்

தரிசன பூமி : சீனா







ஹண்டர் கோர்பெட் என்பவர் சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஊழியம் செய்த ஒரு அமெரிக்க முன்னோடி மிஷனரியாவார். பிரின்ஸ்டன் தியாலஜிகல் செமினரியில் (பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரி) பட்டம் பெற்ற பிறகு, கர்த்தருக்கு ஊழியம் செய்ய தனது மனைவியுடன் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். ஆபத்தான பயணம் மற்றும் கப்பல் விபத்துக்குப் பிறகு, அவர்கள் இறுதியாக 1865ஆம் ஆண்டு செஃபூ என்ற ஊரை சென்றடைந்தனர்.







அவர் தனது சுவிசேஷ வேலையைத் துவங்கியபோது, அவரது வாழ்க்கை , கஷ்டங்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது. ஆனால் அவர் பட்ட துன்பங்கள் கொஞ்சம்கூட வீண்போகவில்லை. நகரங்களில் மாத்திரம் செறிவூட்டப்பட்டு நடந்த ஊழியத்தை விட வடக்கு சீனாவில் உள்ள கிராமங்கள் முழுவதிலும் விரிவான பயண ஊழியத்தை அவர் ஆதரித்தார். அவருடைய முதல் பிரசங்க பயணத்தின் போது, அவர் ஒரு சீன அறிஞரான வாங் ஷைய் என்பவரை சந்தித்தார். அவர் கடுமையான மற்றும் வீராப்பான நடத்தை கொண்டிருந்தார். ஆனால், கோர்பெட் செய்த பிரசங்கம் அவருக்குள் சத்தியத்திற்கேதுவான பெரும் பசியைத் தூண்டியது. அவர் தீவிரமான வேதாகம படிப்பில் கோர்பெட்டுடன் அதிக நேரம் செலவிட்டார். விரைவில் ஞானஸ்நானம் பெற்றார். வாங் ஷைய்யின் வாழ்க்கை மற்றும் அணுகுமுறையின் மாற்றதைக் கண்டு அவரது மனைவி ஆச்சரியமடைந்து அவரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். வாங் ஷைய் தம்பதியினர் பின்னர் சீனாவில் மென்மேலும் நடந்த ஊழியத்திற்கு அடித்தளமாய் திகழ்ந்தனர்.







வெற்றிகரமான ஊழியத்துடன் பரீட்சைகளும் சோதனைகளும் வந்தன. அவர் குழந்தைகளைத் திருடிவிட்டதாகவும், கிளர்ச்சியைத் திட்டமிட்டதாகவும், கோர்பெட்டுக்கு எதிராக எப்படியோ வதந்திகள் பரவின. மக்கள் திடீரென விரோதமாகி, அவர் எங்கு சென்றாலும் அவரைக் கல்லெறியத் தொடங்கினர். அற்புதமாக அவர் அனேக தரம் மரணத்திலிருந்து தப்பினார். ஒருமுறை அவர் ஒரு நற்செய்தி பயணத்திலிருந்து திரும்பியபோது, அவருடைய வீடு சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டார். ஆயினும்கூட, அவருடைய எல்லா துன்பங்கள் மத்தியிலும், கர்த்தரே கோர்பெட்டின் பெலனாகவும் கேடயமாகவும் இருந்தார்.







கோர்பெட் வழக்கத்திற்கு மாறான முறைகளைப் பயன்படுத்தி நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பெயர் பெற்றவர். நற்செய்தியைக் கேட்பதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதை அவர் கண்டபோது, அவர் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுத்து, அதன் ஒரு பகுதியை அருங்காட்சியகமாக மாற்றினார். எனவே, அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த அனைவருக்கும் பிரதானமாய் முதல் அறையில் நற்செய்தி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் கண்காட்சிகளைக் காண அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய முறைகள் நல்ல ஈவுத்தொகையைப் பெற்றன. 1895ஆம் ஆண்டு சுமார் 63 மிஷனரிகள் மற்றும் 36 தேவாலயங்களைக் கொண்டிருந்த ஷாண்டோங் மிஷனை இவரே நிறுவினார். 1920ஆம் ஆண்டு கோர்பெட் மரித்த போது, 3,000க்கும் மேற்பட்ட சீன விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தார். மேலும் ஷாண்டோங் மாகாணம் முழுவதிலும் சுமார் 343 திருச்சபைகள் இவரால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


பீட்டர் ஜான்சன் குலிக் Peter Johnson Gulick

மண்ணில் : 12.03.1796

விண்ணில் : 08.12.1877

ஊர் : நியூ ஜெர்சி

நாடு : அமெரிக்க ஐக்கிய நாடுகள்

தரிசன பூமி : ஹவாய் தீவுகள் மற்றும் ஜப்பான்




குலிக் என்பவரின் குடும்பம் அமெரிக்க புராட்டஸ்டன்ட் வெளிநாட்டு ஊழியங்களில் நன்கு அறியப்பட்ட ஒரு குடும்பமாகும். அவர்களில் பலர் ஹவாய், ஸ்பெயின் மற்றும் ஜப்பான் போன்ற வெவ்வேறான இடங்களுக்கு பயணம் செய்தனர். பீட்டர் ஜான்சன் குலிக் மிஷனரிகளின் பெரிய பரம்பரையைத் தொடங்கிய குலிக் குடும்பத்தின் முற்பிதாவாக விளங்கினார். 20 வயதில் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் வெளிநாடுகளில் தேவனுடைய ராஜ்யத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.




1827ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் தியாலஜிகல் செமினரியில் (பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரி) பீட்டர் பட்டம் பெற்ற பிறகு, 'தி அமெரிக்கன் போர்ட் ஆஃப் கமிஷனர்ஸ் ஃபர் ஃபாரின் மிஷன்ஸ் இல் (வெளிநாட்டு பணிக்கான அமெரிக்க ஆணையர் வாரியம்) சேர்ந்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் ஒரு ஊழியராக நியமனம் செய்யப்பட்டார். அவருடைய மனைவியுடன் அவர் பாஸ்டனில் இருந்து சாண்ட்விச் தீவுகளுக்கு சாண்ட்விச் தீவுகளுக்கு பயணம் செய்தார். அடுத்த பதினைந்து வருடங்கள், அவர் கொவாய் தீவில் பணியமர்த்தப்பட்டார். அங்கு வசித்த தீவுவாசிகள் ஆவிகளில் உறுதியான நம்பிக்கையுடையவர்களாகவும் எல்லாவற்றிற்கும் ஆவிகளைச் சார்ந்து வாழ்ந்தனர். அவர்கள் இறந்துபோன ஹவாய் வீரர்களை வணங்கி, தங்கள் உதவிக்காக அந்த வீரர்களின் ஆவிகளை வரவழைத்தனர். எனவே பிரதானமாய் சமூக நிலையை மேம்படுத்த, இத்தம்பதியினர் உடனடியாக தீவுவாசிகளுக்கு கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்தினர். குலிக்கின் மனைவியான ஃபேனி தீவின் முதல் பள்ளியைத் திறந்துவைத்தார். முறையான கல்வியை வழங்குவதோடு, அவர் பெண்களுக்கு தையல் மற்றும் தொப்பிகளைத் தைக்கவும் கற்றுக்கொடுத்தார். அதே நேரத்தில் அவரது கணவர் ஆண்களுக்கு ஏர் உழுவதையும் சக்கரம் கொண்ட வாகனங்களை பயன்படுத்தவும் கற்றுக்கொடுத்தார். பின்னர் அவர்கள் மொலோகாய் மற்றும் ஓவாஹு ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அவர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் அங்கு பள்ளிகளை நிறுவி, கிறிஸ்தவ அன்பால் சமுதாயத்தை மாற்றி, கிறிஸ்துவுக்காக அநேகரை ஆதாயப்படுத்தினர்.




குலிக் மற்றும் அவரது மனைவி இருவரும் தொடர்ந்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். பிரச்சினைகள் மத்தியிலும், அவர்கள் தொடர்ந்து முன்னேறி சென்றனர். ஆகையால் 1836-37ஆம் ஆண்டுகளில் ஹவாய் தீவுகளில் நடந்த ஆவிக்குரிய எழுப்புதலில் தேவன் அவர்களை ஒரு அங்கமாக்கினார். பீட்டர் மற்றும் ஃபேனி குலிக் ஆகியோர் ஹொனலுலுவில் தங்கள் எஞ்சியுள்ள நாட்களை வாழ விரும்பியபோதும், 1874ஆம் ஆண்டு அவர்களின் உடல்நலக்குறைவின் காரணமாய் ஏற்கனவே ஜப்பானில் ஊழியம் செய்து வந்த தங்கள் மகனுடன் வாழ கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் எட்டு குழந்தைகளையும் தேவ பக்தியில் வளர்த்து, கர்த்தருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்த பிறகு, பீட்டர் 1877ஆம் ஆண்டு இயேசுபாதம் சென்றடைந்தார். வேதாகமத்தில் உள்ள யோசுவாவைப் போலவே, "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" என்ற வசனத்திற்கு ஏற்ப வாழ்ந்தார் பீட்டர் ஜான்சன் குலிக்.

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


ப்ளினி பிஸ்க் Pliny Fisk

மண்ணில் : 24.06.1792

விண்ணில் : 23.10.1825

ஊர் : மாசசூசெட்ஸ்

நாடு : அமெரிக்கா

தரிசன பூமி : பாலஸ்தீனம், ஆசியா மைனர்




ப்ளினி ஃபிஸ்க் முதல் பாலஸ்தீன மிஷனுக்கான 'அமெரிக்கன் போர்டு ஆஃப் கமிஷனர்ஸ் ஃபார் ஃபாரின் மிஷன்ஸ்' (ABCFM) சார்பாக ஒரு முன்னோடி மிஷனரியாக இருந்தார். ஃபிஸ்க் மத ரீதியாக ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், அவருடைய இருதயம் ஆண்டவரை விட்டு வெகு தொலைவில் இருந்தது. ஆனால், 16 வயதில், அவருக்கு அவருடைய எதிர்கால வாழ்க்கையின் நிலைமையை குறித்தும் பயமும் கேள்விகளும் எழத் தொடங்கின. இந்த சூழ்நிலை அவரை தேவனுக்கு முன்பாக முழங்காலிட வைத்தது. இதன் மூலம் அவர் கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்த மனிதனாக மாறினார். தம்மைப்போல் மற்றவர்களையும் கிறிஸ்துவிடம் கொண்டு வர வேண்டும் என்ற மிகபெரிய ஆவலும் விருப்பமும் அவருக்குள் இருப்பதை அவர் உணர்ந்தார், இந்த அனுபவம் அவரை மிஷனெரி பணிசெய்ய வழிநடத்தினது. எனவே அவர் “ஆண்டோவர் இறையியல் கல்லூரியில்” நுழைந்தார். அங்கிருந்துதான் அவர் பாலஸ்தீன மிஷன் நிறுவன உறுப்பினரானார். -பாலஸ்தீனம் அப்போது கத்தோலிக்கர்கள் மற்றும் முகமதியர்களின் வலுவான செல்வாக்கின் கீழ் இருந்தது. இங்கு ஊழியம் துவங்குவதும், செய்வதும் மிகவும் கடினம் என்றும், இது அதற்கு உகந்த இடம் அல்ல என்றும் கருதி பல நிறுவனங்கள் நம்பிக்கை இழந்தனர். ஆனால் ப்ளினி ஃபிஸ்க் தேவனுடைய வழிநடத்துதலுக்காக ஜெபத்திலே காத்திருந்தார். பிறகு பிளினி ஃபிஸ்க் மற்றும் லெவி பார்சன்ஸ் ஆகியோர் புனித பூமியில் ஒரு சுவிசேஷப் பணியை துவங்குவதற்காக தங்களை (ABCFM) க்கு அற்பனித்தனர். ஃபிஸ்க் 1819 இல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்தார், முதலில் ஸ்மிர்னாவில் குடியேறினார். அவர் எபிரேயம் மற்றும் கிரேக்க மொழியைக் கற்றுக்கொண்டு, அவர் ஆசியாவின் ஏழு தேவாலயங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். ஜெருசலேமில், அவர் யூதர்கள், கிரேக்கர்கள், ரபிகள் மற்றும் முகமதியர்களுடன் இயேசு கிறிஸ்துவை பற்றிய நற்செய்திக் கைபிரதிகளை வழங்கி உண்மையை எடுத்துரைத்தார். ஆனால் எதிர்பார்த்த அளவில் ஒரு மற்றம் இல்லையென்றாலும், அவர் சுவிசேஷப் பணியைத் தொடர்ந்து செய்துவந்தார்.




எகிப்தில் பார்சன்ஸ் திடீர் மரணத்திற்குப் பிறகு, ஃபிஸ்க் எகிப்து பணியை மேற்கொண்டார், பின்னர் மீண்டும் ஜெருசலேம் திரும்பினார். உடல்ரீதியான தாக்குதல்கள், கிறிஸ்தவ இலக்கியங்களை எரித்தல் மற்றும் கத்தோலிக்கர்கள் மற்றும் முகமதியர்களின் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும், பிஸ்க் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவுக்காக துன்பப்படுவது கனத்திற்குரியது என்று கருதினார். பின்னர் பிஸ்க் 1824 இல் பெய்ரூட்டுக்கு ஒரு மிஷன் நிறுவனத்தினை நிறுவினார், அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது மற்றும் அவர் 33 வயதாக இருந்தபோது இறந்தார்.




ஃபிஸ்க் தனது சுவிஷேச பணியின்மூலம் வெகுசிலரே கிறிஸ்துவின் அன்புக்குள் வந்ததை கண்டார். ஆனால் அவருடைய சுவிஷேச பனியின் மூலம் ஏற்பட்ட தீப்பொறி முழு காடுகளையும் பற்றவைக்க போதுமானதாக இருந்தது. பின்னர் பலர் ஃபிஸ்கின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்கள், இதன் விளைவாக யூதர்கள் உண்மையான மேசியாவைக் கண்டுபிடித்தனர்.

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.