Type Here to Get Search Results !

அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கு உதவாது | May this book of justice not depart from your mouth | Jesus Sam

நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன். (அப்போஸ்தலர் 24:16)

மனசாட்சி என்ற வார்த்தை தேவனுடைய வேதபுத்தகத்தின் புதிய ஏற்பாட்டில் மாத்திரம் 32 தடவைகள் வருகின்றன. அதில் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அடிகளார் மட்டுமே 21 இடங்களில் அதை பயன்படுத்துகின்றார்.

"நீ தீமை செய்யும் போது உன்னளவில் உணர்கின்ற வேதனை" என்று கிரேக்கர்கள் மனசாட்சிக்கு விளக்கம் கொடுத்தனர் எத்தனை பொருத்தமான விளக்கம் இல்லையா ?

நீ உனது மனசாட்சிக்கு தப்பி செல்ல முடியாது. உனது மனசாட்சியோடேயேதான் நீ இறுதிவரை வாழ வேண்டும். ஒரு நல்ல மனசாட்சி ஒளி வீசி பிரகாசிக்ககூடிய ஒன்றாகும். அது தேவனுடைய வசனத்தாலும், தேவ ஆவியானவரின் ஆளுகையாலும் ஒளி வீசுகின்றது

கிறிஸ்தவ பரிசுத்த வாழ்க்கைக்கு மனசாட்சி இன்றியமையாத ஒன்றாகும். அதிலும் தேவனுடைய ஊழியம் செய்வதற்கு அது இன்னும் வெகு முக்கியமானதாகும். தேவ ஊழியனாகிய தீமோத்தேவுக்கு "நீ விசுவாசமும் நல்மனசாட்சியும் உடையவனாயிரு" (தீமோ 1:18) என்று பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் எழுதினார். விசுவாசத்திற்கு சாட்சியாக ஜீவித்தார் என்று நாம் மக்களால் பாராட்டல்கள் பெற்றும் நம்மிடம் நல்மனசாட்சி இல்லை என்றால் அதனால் யாதும் பயன் கிடையாது. நமது தேவ ஊழியங்கள் ஆசீர்வாதமாய் இருப்பதற்கு நல்ல பரிசுத்த மனசாட்சி அத்தியந்த அவசியமாகும்.

உங்களுடைய மனசாட்சியில் ஏதாவது தவறுகள் இருப்பின் அதை இப்பொழுதே ஆண்டவரிடம் அறிக்கையிடுங்கள். அதை உடனே சரிபடுத்திக் கொள்ளுங்கள். கறைபட்ட துர்மனசாட்சியோடு உங்கள் நாளின் வேலைகளை தொடங்க வேண்டாம். தேவன் உங்களுக்கு மன்னித்து உங்கள் கறைபட்ட மனசாட்சியை சுத்திகரித்து உங்களுக்கு ஒரு சுத்தமானதும், பெலமுள்ளதுமான நல்மனசாட்சியை கொடுக்க வல்லவராயிருக்கிறார். இன்றே அவரண்டை வாருங்கள். தேவனுடைய பரிசுத்த நாம மகிமைக்காக வாழக்கூடிய கல்வாரியின் ரத்தம் தெளிக்கப்பட்ட நல்ல பரிசுத்தமான மனசாட்சியை பெற்றுக் கொள்ளுங்கள்.

சங்கீதக்காரன் சொன்னது போல "கர்த்தருடைய வழிகளை காத்துக் கொண்டு வந்தேன். நான் என் தேவனுக்கு துரோகம் பண்ணினதில்லை" (2 சாமு 22:22). தேவ பெலத்தாலும், ஆண்டவருடைய அளவற்ற கிருபையாலும் நான் எனது மனசாட்சியை எனது வாழ்வில் பரிசுத்தமாக காத்து வந்திருக்கிறேன். எனது உலகப்பணியிலும் நான் என் தேவனுக்கு துரோகம் செய்யவில்லை. எனது குடும்ப வாழ்விலும் எனது மனைவிக்கோ என்னை ஆட்கொண்ட தேவனுக்கோ நான் துரோகம் செய்யவில்லை. இப்படியாக எனது மனசாட்சியை பரிசுத்தமாக பாதுகாத்து வருவதால் எனது முழுமையான நேரங்களையும் காலத்தையும் தேவ ஊழியத்திலும், ஜெபத்திலும், வேதவசன தியானத்திலும், கர்த்தரை துதிப்பதிலும் செலவிட்டு வருகின்றேன்.

மனசாட்சி சுத்தமாக இருக்க வேண்டும். சின்ன தவறு வந்தாலும் மனசாட்சி பேச வேண்டும். வார்த்தையில் தவறினால் கூட மனசாட்சி பேச வேண்டும். மனசாட்சி பேசும் போது இருதயத்தை கடினபடுத்தாதே. தானியேல் குற்றமற்றவனாக காணப்பட்டான் (தானி 6:22). இருதயம் கடினப்படக்கூடாது. தினமும் மனசாட்சியை சுத்தமாக காத்துக் கொள்ள வேண்டும்.

இதை கருத்தோடு வாசிக்கும் தேவப்பிள்ளையே உனது மனசாட்சியை தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள். எந்த ஒரு நிலையிலும் உங்கள் மனசாட்சியை கறைப்படுத்தி, களங்கப்படுத்தி, தாறுமாறாக வாழ்ந்து விடாதீர்கள். வெகு துரிதமாக நமது மானிட வாழ்க்கை விருத்தாப்பியத்தை எட்டிப் பிடித்து லோக மாந்தர் யாவரும் நம்மை ஒருபுறமாக ஒதுக்கி வைத்து விடும் கொடிய காலம் வரும். லோக மாந்தர் யாவரும் நம்மை கைவிட்டு நம்மை அற்பமாக எண்ணி ஒதுக்கி வைத்தாலும் தேவன் நம்மை கைவிடாமல் நம்மோடு இருக்கும்படியாக நமது மனசாட்சியை நாம் தேவ பெலத்தால் பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள்வோமாக


நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (லூக்கா 3:9)*

சபைகளிலே ஓய்வு நாள் ஆராதனைகள் அத்தனை ஆர்ப்பரிப்போடும், ஆரவாரத்தோடும், நானாவித வாத்திய இசைக் கருவிகளின் பரவசமூட்டும் இன்னிசைகளோடும் நடைபெறுகின்றன. ஆராதனைகளில் கலந்து கொள்ளும் விசுவாச மக்கள் அல்லேலூயா, ஆரவாரம் செய்து, கரங்களைத் தட்டி, கன்று குட்டிகளைப் போலத் துள்ளிக் குதித்து, ஆவியில் நிரம்பி கர்த்தருக்கு ஆராதனை செய்கின்றனர். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. அந்தக் காட்சியைக் காணும்போது மெய்யாகவே பரலோகமே பூமிக்கு இறங்கி வந்து விட்டது என்ற அளவுக்கு நம்மை எண்ணத் தோன்றுகின்றது. ஆராதனையில் கலந்து கொள்ளும் அத்தனை பேரும் தேவ தூதர்களைப் போன்று அந்த நாளில் அத்தனை அடக்க ஒடுக்கமாக பரிசுத்தமாகக் காட்சியளிக்கின்றனர்.




ஆனால், ஆராதனையில் கலந்து கொண்ட அந்த பரிசுத்த மக்களின் நடபடிகளை அடுத்து வரும் வாராந்திர நாட்களில் நீங்கள் உற்று கவனித்துப் பாருங்கள். முழு உலகத்தான் கூட பாவத்துக்கும், பழிக்கும், மனச்சாட்சிக்கும் அஞ்சி நடுநடுங்கி வாழ்வான். ஆனால், இவர்கள் சற்றும் தெய்வ பயமின்றி, மனுஷ பயமின்றி, சாட்சியின்றி, மிகுந்த துணிச்சலோடு பாவத்தில் வாழ்வார்கள். ஒரு சகோதரனை எனக்குத் தெரியும். குடும்பஸ்தனான அவருக்கு மனைவியும், பிள்ளைகளும் உண்டு. தாங்கள் மாத்திரமே பரலோகம் செல்லும் பாக்கியம் பெற்றவர்கள் என்ற ஆவிக்குரிய மட்டற்ற பெருமைக்கார சபையைச் சேர்ந்த சகோதரன் அவர்கள். அவர்களுடைய சபை ஆராதனையில் ஆவியின் அபிஷேகம் பெற்று வானத்திற்கும், பூமிக்கும் நடுவாக துள்ளிக் குதிக்கக்கூடியவர் அவர். எப்பொழுதும் தனது கரத்தில் புதிய ஏற்பாட்டைச் சுமந்து திரிந்து, சமயம் கிடைக்கும் போது பிரசங்கிக்கத் துடிப்பவர்கள். ஒரு பெரிய பரிசுத்தவானைப் போல அவர் காணப்பட்டார்.




நாட்கள் கடந்து சென்றன. ஒரு நாள் மத்தியான நேரம் அந்த மனிதரின் மனைவி என்னைத் தேடி எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். என்னைக் கண்டதும் அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. சத்தமிட்டு அழுதார்கள். தனது கணவர் குறிப்பிட்ட ஒரு கிறிஸ்தவ குடும்பப் பெண்ணோடு வேசித்தனம் பண்ணி வருவதாகவும், அன்றைய நாளிலும் அவர் அந்தப் பெண்ணுடன் வேசித்தனம் பண்ணச் சென்றிருப்பதாகவும், அதை நானே நேரில் வந்து பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தனது ஆறாத துயரத்தில் என்னை வருந்தி அழைத்தார்கள். நான் அவர்களுடைய வார்த்தைகளை ஆரம்பத்தில் நம்பவே இல்லை. அவர்களுடைய வார்த்தைகளுக்கு எதிராக நான் மிகவும் வாதாடினேன். ஆனால், அந்த சகோதரி என்னை விட்டபாடில்லை. அந்தக் கிறிஸ்தவ வீட்டிற்கே என்னைக் கூட்டிச் சென்றார்கள். அங்கு சென்ற நான் அதிர்ச்சியடைந்தேன். அவர்களின் கணவர் நன்கு மதுபானம் அருந்திய நிலையில் கண்களை மூடி கட்டிலில் படுத்திருந்தார். அவருடைய முகம் எல்லாம் வியர்த்து வடிந்தது. அவருடைய நிலையைக் கண்டதுமே அவர் உண்மையாகவே அந்தப் பெண்ணுடன் விபச்சாரப் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதை நான் அறிந்து மிகுந்த துயரத்தோடு திரும்பி வந்தேன். விபச்சாரப் பாவத்திற்கு இடம் கொடுத்து வாழ்ந்த அந்தப் பெண்ணின் கணவர் அப்பொழுது சில மாத காலமாக வெளி நாட்டில் இருந்து வந்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்களுக்கும் பிள்ளைகள் இருந்தனர்.




அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்

அந்தக் கண்ணீரின் காட்சியைக் கண்ட நான் அந்த மனிதர் தேவ சமூகத்தில் வானத்திற்கும், பூமிக்கும் நடுவாக குதித்த காரியத்தையும், தனது கரத்தில் எப்பொழுதும் ஆண்டவருடைய வார்த்தைகளை சுமந்து திரிந்ததையும், கிறிஸ்தவ சபை நடுவே கர்த்தரைக் குறித்து வைராக்கியமாக சாட்சி கொடுத்து பிரசிங்கித்த காரியங்களையும் நான் அதிகமாக நினைத்துப் பார்த்தேன். அப்பொழுது அன்பின் ஆண்டவருடைய வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தது. "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள், முட்செடிகளில் திராட்சப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்க மாட்டாது, கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" (மத்தேயு 7 : 16 - 20)




இரட்சிக்கபட்ட ஆரம்ப நாட்களில் எங்கள் வீட்டில் இருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள ஒரு இடத்தில் ஓய்வு நாள் தோறும் நடந்து கொண்டிருந்த ஆரவாரம், ஆர்ப்பரிப்பு, அல்லேலூயா முழக்கங்கள் நிறைந்த ஆவிக்குரிய சபைக்குச் சென்று கொண்டிருந்தேன். அங்கு நடக்கும் காரியங்கள் எல்லாம் எனக்குப் பரவசமாக இருந்தது. குறிப்பாக ஒரு கிறிஸ்தவ சகோதரி தனது முழங்கால்களில் நின்றவாறே தனது இரு கரங்களையும் தனது நெஞ்சில் வைத்து கரம் கூப்பியவர்களாக ஆவியில் நிறைந்து, அந்நிய பாஷைகளைப் பேசி குதித்து குதித்துக் கொண்டே அந்த அறை முழுவதையும் சுற்றி வந்து விடுவார்கள். அவர்கள் ஆண்டவருடைய அன்புக்குள் மிகவும் நெருங்கி ஜீவிப்பவர்கள், கர்த்தர் அவர்களுக்கு விசேஷித்த கிருபை வரங்களைக் கொடுத்திருக்கின்றார் என்று நான் அவர்களைக் குறித்து ஒவ்வொரு தடவையும் உயர்வாக எண்ணிக் கொண்டு வருவேன்.




சில மாதங்கள் கடந்து சென்றிருக்கும். ஒரு நாள் நான் எனது அலுவலக வேலையை முடித்துவிட்டு நண்பகல் ஆகாரத்துக்காக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது சற்று தொலைவில் சில மனிதர்கள் ஒரு பிரேதத்தை தோளில் சுமந்து கொண்டு அமைதியாகச் செல்லுவதை திடீரென்று நான் கவனித்தேன். அதைக் குறித்து நான் மக்களிடம் விசாரித்த போது தற்கொலை செய்து கொண்ட ஒரு வாலிபனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு செல்லுவதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.




அந்த வாலிபன் யார்? அவனின் அகால மரணத்திற்கு காரணம் என்ன? என்ற விபரத்தை எல்லாம் நான் சில வாரங்களுக்குப் பின்னர் நான் வழக்கமாகச் சென்ற ஆவிக்குரிய சபை ஆராதனைக்குச் சென்றபோது கேள்விப்பட்டேன். அந்த வாலிபன் அங்குள்ள மில்லில் பெண் தொழிலாளிகளுக்கு கண்காணியாக இருந்தவன். அங்குள்ள ஒரு பெண்ணோடு எப்படியோ நட்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரின் நெருக்கமான உறவுக்கும், திருமணத்துக்கும் அந்த வாலிபனின் பெற்றோர் வன்மையாக ஆட்சேபம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் வாழ்க்கையில் வெறுப்புற்று தற்கொலை செய்ய தீர்மானித்தார்கள். அந்த வாலிபன் தனிமையாக வாழ்ந்த வீட்டின் மோட்டிலே இரண்டு பலமான கயிறுகள் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தன. இருவரும் மேஜை, அல்லது உயரமான ஒரு நாற்காலியின் உதவியால் கயிறுகளுக்கு முன்பாக வந்து நின்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் குதித்துச் சாக வேண்டும் என்று அவர்கள் நிச்சயத்திருந்தனர். இருவரும் ஒன்றாக ஒரே சமயத்தில் தங்கள் கழுத்தை தூக்கு கயிற்றுக்குள் வைத்துக் கொண்டனர். இப்பொழுது அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் குதிக்க வேண்டும். அந்தப் பெண்ணின் மேல் சற்று அவநம்பிக்கை கொண்ட அந்த வாலிபன் எந்த நிலையிலும் அவள் தப்பி விடாதபடியிருக்க அவளது தலை முடியை நன்கு பிடித்துக் கொண்டான். அவன் முதலில் குதித்தான், ஆனால், அவளோ தன்னைச் சுதாகரித்துக் கஷ்டத்துடன் தப்பிக் கொண்டாள். அந்த நிர்ப்பந்தமான வாலிபன், தான், காதலித்த அந்தப் பெண்ணின் ஒரு குத்து தலை மயிரோடு பிணமாகத் தூக்குக் கயிற்றில் தொங்கினான். அந்தப் பேதை வாலிபனின் பிணத்தைத்தான் மக்கள் சில வாரங்களுக்கு முன்னர் ரஸ்தா வழியாகத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்திருக்கின்றனர்.




தன் தலையின் ஒரு குத்து ரோமத்தை மாத்திரம் இழந்து தன் உயிரைப் பாதுகாத்துக் கொண்டு அதே நேரத்தில் ஒரு அருமையான வாலிபனின் உயிரை வேட்டையாடிவிட்ட வீராங்கனை யார் என்று கேட்கின்றீர்களா? ஆம், அவள்தான் அந்நிய பாஷை, அல்லேலூயா ஆரவாரத்துடன் தனது முழங்கால்களிலேயே இரு கரம் கூப்பி ஆவியில் நிரம்பி குதித்து, குதித்து வாரம் தோறும் ஜெப அறையைச் சுற்றி வந்தவள். அந்த வாலிபனுடைய தற்கொலைக்கு முன்னால்தான் அவள் ஜெப வீட்டில் இவ்விதமாக ஆவியில் நிறைந்தவளாக தேவ மக்களுக்கு முன்பாகப் பரிசுத்தவாட்டியாக காணப்பட்டாள். தனது வாழ்வில் அந்தரங்க பாவத்தையும், காம விகாரத்தையும், அசுத்தத்தையும் வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணால் எப்படி இவ்விதமாக ஆரவாரித்து, ஆர்ப்பரிக்க முடிந்தது? அவள் பேசிய அந்நிய பாஷைகள் அவளுக்கு எங்கிருந்து கிடைத்தது? ஆம், இவை எல்லாம் ஒளியின் தூதனுடைய கிரியைகள்! (2 கொரி 11 : 14) அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்! (வெளி 16 : 14)




ஆவிக்குரிய துதி ஆராதனைகள், வாரந்தோறும் ஓய்வு நாட்களில் நடைபெறும் ஆரவார, உணர்ச்சிப் பெருக்கான ஆராதனைகள் பலவற்றிலும் மக்கள் தங்கள் பாவங்களிலும், அசுத்தங்களிலும் வாழ்ந்து கொண்டே அதே நேரத்தில் தாங்கள் பெரிய பரிசுத்தவான்கள் என்று தாவீதைப் போல நடனமாடி தங்களைச் சபை மக்களுக்குக் காண்பிக்கின்றனர். அவைகளிலே அவர்கள் பூரணமாக திருப்தியடைந்தும் விடுகின்றனர். ஆம், தந்திர சாத்தான் அந்த ஆராதனைகளில் கலந்து கொள்ளும் மக்களை அதிலேயே திருப்தியடையப் பண்ணி விடுகின்றான். அந்த ஆராதனைகளில் கலந்து கொள்ளும் அனைத்து தேவ மக்களையும் நான் குற்றப்படுத்தி குறை சொல்லி இங்கே எழுதவில்லை. தேவனுடைய இருதயத்துக்கேற்ற அவருடைய பரிசுத்த சித்தம் ஒன்றே செய்யும் அவருடைய மெய் அடியார்கள் பலர் அங்கு இல்லாமலில்லை. எனினும், அநேகருடைய வாழ்க்கைகள் ஆண்டவராகிய இயேசுவோடு எந்த ஒரு சம்பந்தமுமில்லாமல், மறுபிறப்பின் நிச்சயமில்லாமல், தனிப்பட்ட வாழ்வில் எந்த ஒரு பரிசுத்தமுமில்லாமல், எந்த ஒரு ஜெப தியானங்களும் இல்லாமல் இருக்கும். அதே நேரத்தில் ஓய்வு நாள் ஆராதனையில் தங்களைப் பெரிய பரிசுத்தவான்களாக தங்கள் ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகள், நடனங்களின் மூலமாக நிரூபித்து விடுகின்றனர். இந்த மாய்மாலமான நடிப்பு ஆராதனைகள் எல்லாம் ஆண்டவருக்குத் தேவை இல்லை என்றும், தேவன் எதிர்பார்ப்பது எல்லாம் நமது கனி நிறைந்த, பிரகாசமான பரிசுத்த பக்தி வாழ்க்கை மாத்திரமே என்பதை இவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.




இப்படி சபைகளிலே தங்களை நீதிமான்கள் என்று காட்டிக் கொள்ளும் மக்களுடைய வாழ்க்கையின் நடபடிகளை வாராந்திர நாட்களில் நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். அநியாய வட்டி வாங்கும் கந்து வட்டிக்காரர்கள் இவர்களில் உண்டு. உடன் வேலை செய்யும் சக ஆசிரியைக்கு விரோதமாக மந்திரவாதியிடம் சென்று செய்வினை செய்து அவன் கொடுத்த கொடிய தீங்கு செய்யும் மையை "அக்கா நல்ல சுகமாக இருக்கின்றீர்களா?" என்ற பாசமுள்ள அன்பின் வார்த்தைகளுடன் தனது கரத்தாலேயே அந்த சகோதரியின் தலையில் தேய்த்துவிடும் பஞ்சமா பாதகிகளான மக்களும் துதி ஆராதனைகளில் பலத்த சத்தத்துடன் கர்த்தரைப் போற்றிப் புகழ்பவர்கள்தான். தனது சொந்த சரீரமான தாலி கட்டிய தன் அன்பு மனைவியை தெரு நாயைப் போல அடித்துக் கொல்லும் மனிதனும் ஓய்வுநாள் ஆராதனையில் சபை நடுவே நடனம்பண்ணிக் கொண்டே சபை மக்களுக்கு பிரசங்கம் பண்ணுகின்றார். கட்டின பாஸ்டர் அம்மாவும், வாலிப மகனும் மலைபோல இருக்கத்தக்க சபையிலுள்ள பெண்ணுடன் விபச்சாரம் வேசித்தனம் செய்து கொண்டே தேவ ஊழியத்தை துணிச்சலாக செய்து ஞாயிறு ஆராதனைகளை துதிகளாலும், ஸ்தோத்திரங்களாலும் நிரப்பிவிடும் பாஸ்டர்கள் உண்டே! எத்தனை எத்தனையோ உண்மை உதாரணங்களை நான் உங்களுக்கு எழுதிக் கொண்டு செல்ல முடியும். இது விசயத்தில் என்னைவிட உங்களுக்கு அதிகமான அனுபவ சம்பவங்கள் தெரியும் என்று நினைக்கின்றேன்.




ஓரிடத்தில் செத்த சபையைச் சேர்ந்த (மிஷனரிகள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி இரத்த சாட்சிகளாக மரித்து தோற்றுவித்து மெய் தேவ பக்தர்களும், பரிசுத்தவான்களும், நீதிமான்களும் நிறைந்த தென் இந்திய திருச்சபைக்குத் தங்களை பெரிய பரிசுத்தவான்களாக எண்ணிக் கொண்டு, தங்களுடைய சபைதான் பரலோகத்திற்குச் செல்லும் ஆவிக்குரிய மேலான சபை என்ற பரிசேயனின் எண்ணத்தில் வைத்திருக்கும் பெயர்) ஒரு விசுவாசி தனக்கென்று நிலம் வாங்கி வீட்டைக்கட்டினார். அந்த மனிதருடைய நிலத்துக்கருகில் ஆவிக்குரிய மேலான சபையைச் சேர்ந்தவரும், தாங்கள் மாத்திரம்தான் பரலோகம் செல்லுபவர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்ட ஒருவர் வீடு கட்ட நிலம் வாங்கினார். அந்த மனிதர் தனது வீட்டைக்கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் ஒரு பசு மாட்டைக் கொண்டு வந்து ஒரு நாள் இரவு முழுவதும் தனது நிலத்தில் அதைக் கட்டிப்போட்டு அதைச் சாணம், மூத்திரம் பெய்ய வைத்து தனது நிலத்தில் அஸ்திபாரம் போடும் முன்பாக ஒரு சேவல் கோழியை பலியிட்டு, அதின் இரத்தத்தைச் சிந்தி வீட்டைக்கட்டி முடிப்பதை செத்த சபை விசுவாசி மிகுந்த ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருக்கின்றார். இந்து மக்கள் மட்டுமே மேற்கண்ட காரியங்களைச் செய்வார்கள். ஆம், அவர்கள் பசுவை கோ மாதா என்றழைத்து அதின் சாணம், மூத்திரத்தை புனிதமாகக் கருதுகின்றார்கள். அவர்கள்தான் பலியிட்டு வீடுகளையும், கட்டிடங்களையும் கட்டுவார்கள்.




ஆனால் இங்கே ஆவிக்குரிய மேலான பரலோக சபைக்காரர் அந்தக் காரியங்களைச் செய்கின்றார். ஜீவனுள்ள தேவன் அருவெருத்து பகைக்கின்ற இந்தக் காரியங்களை அவர் மிகவும் சாவதானமாகச் செய்துவிட்டு ஓய்வு நாள் ஆராதனைக்குச் சென்று தாவீதைப் போல நடனம் பண்ணிக் கர்த்தரை ஆவியில் ஆராதிக்கின்றார். அந்த திருப்தியில் அவர் நிம்மதியாக வாழ்கின்றார்.




ஆவிக்குரிய மேலான சபையினர் தங்கள் கவர்ச்சியான ஓய்வு நாள் ஆராதனையின் மூலமாக மக்களைத் தங்களண்டை கவர்ந்திழுப்பதைக் கண்ட ஒரு குருவானவர் தனது தேவாலயத்தில் ஓய்வு நாள் ஆராதனை ஒன்றில் ஒரு வாலிபப் பெண்ணை அழைத்து வந்து சபையினர் முன்னிலையில் பரத நாட்டியம் ஆடச்செய்து தனது சபையினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றார். இந்த உண்மைச் சம்பவம் கோவை திருமண்டலத்தில் ஒரு சபையில் நடைபெற்ற காரியமாகும். எத்தனை பயங்கரம் பாருங்கள்!




இந்து கடவுளர்களுக்கு முன்னால் அவர்களைப் பிரியப்படுத்த இளம் பெண்கள் தங்கள் உடலை பற்பலவித கோணங்களில் வளைத்து அபிநயங்களுடன் ஆடும் நடனங்களை இங்கே ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக குருவானவர் ஆட வைத்திருக்கின்றார். கர்த்தர் எப்படிப்பட்ட பரிசுத்தமுள்ள தேவன் என்பதையும், பரலோகத்தில், சேராபீன்கள் இரண்டு செட்டைகளால் தங்கள் முகத்தையும், இரண்டு செட்டைகளால் தங்கள் கால்களையும் மூடி இரண்டு செட்டைகளால் பறந்து சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று மிகுந்த பயத்தோடும், நடுக்கத்தோடும் பரிசுத்தத்தில் பயங்கரமானவருக்கு துதி ஏறெடுத்துக் கொண்டிருக்கும்போது (ஏசாயா 6 : 2-3) குருவானவர் தேவனுக்குக் கொடுத்த கனத்தையும், மகிமையையும் நீங்கள் பார்த்தீர்களா! இந்த குருவானவர் மறுபடியும் பிறந்தவரா? மெய் தேவனை தன் வாழ்வில் அறிந்தவரா? இப்படிப்பட்ட அரசரடி திருமறைக் கல்லூரி பயிற்சி பெற்ற கிறிஸ்தற்ற மேய்ப்பர்களால் தேவனுடைய ஆடுகள் சிதறடிக்கப்பட்டு மிகவும் இலகுவாக சாத்தானாம் ஓநாய்களுக்கு இரையாகிவிடுகின்றன.




இந்தக் காரியங்களுக்கெல்லாம் பின்னணியத்தில் இருப்பவன் மனுஷ கொலை பாதகனான தந்திர சாத்தான் என்பதை நாம் திட்டமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தங்களைத் தமது இரத்தக் கிரயத்தால் கொண்ட தங்கள் அன்பின் இரட்சகரோடு எந்த ஒரு ஒட்டும், உறவும் இல்லாமல், செடியும் கொடியுமான ஜெப ஐக்கியமில்லாமல் எந்த ஒரு நிலையிலும் அவர்களை ஆண்டவரோடு நெருங்கவிடாமல், அவருடைய முகத்தைத் தேடவிடாமல் வாரத்தின் நாட்கள் முழுமையிலும் துரத்தி விரட்டிவிட்டு விட்டு ஓய்வு நாளில் மட்டும் ஆராதனை ஸ்தலத்துக்கு வந்து வாத்திய இசைகளின் இன்னிசையில் சில மணி நேரங்கள் கர்த்தரைப் பாடித் துதித்து ஆராதனை செய்துவிட்டு ஆராதனை முடிந்ததும் அப்படியே தனது பாவ நிலையோடு சென்று தங்கள் பழைய பாவங்களைத் தொடர்ந்து செய்து, நரகத்தின் மக்களாக வாழ்ந்து முடிவில் நரகத்துக்கே செல்ல சாத்தான் வகை செய்து வைத்திருக்கின்றான்.




தேவ ஜனமே, உங்களை அழைத்த பரிசுத்தமுள்ள தேவன் உங்களில் கனியை மாத்திரமே எதிர்பார்க்கின்றார். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் மறுபிறப்பின் நிச்சயமான அனுபவமும், தேவனுக்கேற்ற பரிசுத்தமும், அன்பும், உண்மையும், மிகுந்த மனத்தாழ்மையும் இல்லாமல் நீங்கள் எப்படிப் பாடினாலும், ஆடினாலும் அவைகளினால் உங்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


இந்த நியாயபிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டு பிரியாதிருப்பதாக (யோசுவா 1:8)

உம்முடைய வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன், நாள் முழுவதும் அது என் தியானம் - சங் 119-97 என்ற தேவவார்த்தையின்படி நாமும் ஆண்டவருடைய வேதத்தை அதிகமாக நேசித்து வாசித்து அதை நாள் முழுவதும் தியானிக்க வேண்டும். வேத வசனங்களை நாம் மனப்பாடமாக படித்து அவைகளை நமது இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்து கொள்ளல் வேண்டும். நாம் படித்த வசனங்களை அடிக்கடி நமது நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் அந்த தேவ வசனங்கள் ஒருக்காலும் நமது மனதைவிட்டு நீங்கவே நீங்காது. தேவன் அந்த வசனங்களின் மூலமாக அவ்வப்போது நம்மோடு பேசுவார்.




நமது படுக்கையிலும் தேவனுடைய வசனங்கள்தான் நமது இருதயத்தை நிரப்பியிருக்க வேண்டும். நமது இராக்கால இளைப்பாறுதலில் வேறு எந்த ஒரு உலக கவலைகளுக்கும், மன பாரங்களுக்கும் இடம் கொடாமல் நாம் மனப்பாடமாக படித்த பல்வேறு வேத வசனங்களை நமது உள்ளத்தில் நினைவு படுத்திக் கொண்டேயிருந்தால் நமது இளைப்பாறுதல் இன்பமாக இருக்கும். நாம் வழியில் நடந்து போகும் போதும், நமது யாத்திரைகளிலும் ஆண்டவருடைய வார்த்தைகளை நமது உள்ளத்தில் சொல்லிக் கொண்டே போவது ஒரு தனிப்பெரும் ஆனந்தமாகும்.




மறுபடியும் பிறந்த ஒரு தேவ பிள்ளைக்கு ஆண்டவர் அருளிய வேத புத்தகம் மாத்திரம்தான் இந்த பாழுலகத்தில் ஆறுதலும், ஆனந்தமுமாகும். நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின - சங் 119 :54

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1-2




அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கு உதவாது (நீதி 10:2)

சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சென்னையிலிருந்து "சேரன் எக்ஸ்பிரஸ்" ரயிலில் நான் கோவை வந்து கொண்டிருந்தேன். இரவில் படுக்கைக்கான இட வசதி எனக்கு கிடைக்கவில்லை. உட்கார்ந்து வருவதற்கான இடம் மட்டுமே கிடைத்தது. ரயில் அரக்கோணம் வரவும் எனது ரயில் பெட்டியின் கண்டக்டர் என்னிடம் ரூபாய் 20/- வாங்கி கொண்டு நான் படுத்துக் கொள்ளுவதற்கு இடம் ஒதுக்கிடு செய்து கொடுத்தார். வாங்கிய பணத்திற்கான ரசீது பின்னர் கொண்டு தருவதாக சொன்ன அவர் இரவு முழுவதும் தரவே இல்லை. அடுத்த நாள் காலையிலும் ரசீது தரவில்லை. நான் அந்த மனிதனை தேடி சென்றேன்.




நான் வருவதை கண்ட அந்த ரயில் பெட்டியின் கண்டக்டர் தனது சட்டை பையிலிருந்து முந்தின இரவு ருபாய் 20/- என்னிடம் பெற்றதற்கான ரசீதை எடுத்து "நீங்கள் கொடுத்த பணத்திற்கான ரசிது. நேற்றே எழுதி வைத்து விட்டேன். உங்களை தூக்கத்தில் எழுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என்ற காரணத்திற்காக அப்படியே என் வசம் வைத்துக் கொண்டேன்" என்று கூறினார்.




அவருடைய கடமைபற்று நிறைந்த நேர்மையான செயலால் உள்ளம் மகிழ்ந்த நான் அவருக்கு இரட்சகர் இயேசுவை அறிமுகபடுத்தினேன். என்னுடைய வார்த்தைகளால் கவரப்பட்ட அவர் தன்னுடைய வார்த்தைகளை தொடர்ந்தார். "ரயிலில் பயணம் செய்யும் பொது மக்களிடம் கையூட்டு பணங்களை பெற்று அவர்களுக்கு இடவசதி கொடுப்பதை அடியோடு வெறுப்பவன் நான். காரணம் முதலாவது அது அரசாங்கத்தை ஏமாற்றி அதற்கு நஷ்டத்தை கொண்டு வருவதாகும், அடுத்த முக்கியமான காரணம், அப்படி சம்பாதிக்கும் பணம் ஒன்றுக்கும் பயன்படாமல் போவதுடன் வேதனையைதான் கொண்டு வரும் என்பதை முழுக்க முழுக்க அறிந்தவன் நான். இதே சென்னை கோவை ரயில் வழித்தடத்தில் என்னோடு வேலை பார்க்கும் ஒரு நண்பன் எனக்குண்டு (அவன் கையூட்டு பணம் பெற்று வாழ்ந்தவன், அவனது பணம் எப்படி பாழாய் போனது என்பதையும் எனக்கு சொன்னார்) அவன் தன்னுடைய இரும்பு பெட்டியை (இரும்பு பெட்டிக்குள் அரசாங்க பணம் மற்றும் ரசீது புத்தகங்கள் மற்றும் ரயில்வே தஸ்தாவேசுகள் இருக்கும்) எப்பொழுதும் இரட்டை சங்கிலி போட்டு ஒரு பலமான கம்பியுடன் இணைத்து கட்டியிருப்பான். எந்த திருடனும் அதை தீண்ட இயலாது. அன்றெரு நாள் அவன் தனது கவனக் குறைவால் தனது இரும்பு பெட்டியை சங்கிலியால் இணைத்து கட்ட மறந்து விட்டான். அவ்வளவுதான், திருப்பூருக்கு ரயில் வந்தபோது அவனது பெட்டியை திருடன் தந்திரமாக எடுத்துக் கொண்டு நழுவி விட்டான். அந்த பெட்டியில் அரசாங்கத்திற்கு சேர வேண்டிய பணம் 45000 மும், அவனது சொந்த பணம் 60000 மும் இருந்தது. அனைத்தையும் பொடிப் பொழுதில் இழந்தான். அநியாயமாய் சம்பாதித்தது அநியாயமாய் போனது என்று கூறினார்.




மேலும் அவர் கூறினார் "நான் எந்த சூழ்நிலையிலும் ஒரு பைசா கூட ரயில் பயணிகளிடம் கை லஞ்சம் வாங்குவதே இல்லை. பணக் கஷ்டங்கள் எனக்கு எத்தனையோ இருந்த போதிலும் அநியாயமாய் நான் அரசாங்கத்தை வஞ்சித்து பணம் சம்பாதிப்பதை கொஞ்சமும் விரும்பவில்லை. அதை நான் மனதால் நினைத்தும் பார்க்கவில்லை" என்று சொன்னார்.




தேவ ஜனமே, மேலே நான் குறிப்பிட்ட மனிதன் ஒரு இந்து ஆவார். அவரது பெயரை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஜீவனுள்ள தேவனை அறியாத புற மதஸ்தன் அத்தனை தூய்மையாக தன் கரங்களை பரிசுத்தமாக பாதுகாக்கின்றான். ஆனால் இரட்சா பெருமானை பறைசாற்றும் மற்றும் பெரிய பொறுப்பான கிறிஸ்த பதவிகளில் இருப்போர் லட்சக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்று வேலை போட்டு கொடுப்பது, உத்தியோக உயர்வு அளிப்பது, இடமாற்றம் செய்வது எல்லாம் சற்றும் தெய்வ பயம் இல்லாமல் துணிந்து தாராளமாக செய்கின்றனர். தைரியமாக வாய் திறந்து லஞ்சம் கேட்டு பெறுகின்றனர். அநேக தேவ ஊழியர்கள் பரிசுத்தமான தேவ ஊழியத்தை லோக ஆதாயத்தை மையமாக வைத்து உலகத்தின் மற்ற தொழில்களில் ஒன்றைப் போன்று செய்கின்றனர். அதின் மூலம் சொகுசான வாழ்வைத் தேடுகின்றனர். கிறிஸ்தவ வியாபாரிகள் கள்ள தராசு, கள்ள படி, அரசாங்கத்தை ஏமாற்றும் இரட்டை கணக்கு போன்றவற்றை கையாளுகின்றனர். வியாபாரத்தினிமித்தம் பொய்களை தாராளமாக பேசுகின்றனர். அநேக உபாய தந்திரங்களை கடைபிடிக்கின்றனர். இவை எல்லாம் அநியாயத்தின் திரவியங்களாகும். இவை எல்லாம் ஒன்றுக்கும் உதவாது. கண்மூடி திறப்பதற்குள் இப்படி சம்பாதித்தவை அனைத்தும் தங்களுக்கு செட்டைகளை உண்டு பண்ணிக் கொண்டு ஆகாய மார்க்கமாக பறந்து மறைந்து விடும் (நீதி 23:5)

எப்போழுதும் நினைவில் வையுங்கள். "அநியாயத்தின் திரவியங்கள் ஒரு செல்லாக் காசுக்கும் உதவாது".


பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்
(எபேசியர் 4:27)
சாத்தானாம் பிசாசு மகா தந்திரசாலி. சற்று இடம் கொடுத்தால் போதும், அவன் தனது ஆளுகையை நமது உள்ளத்தில் நிலை நிறுத்தி விடுவான். தேவனுக்கு பிரியமற்ற ஒரு எண்ணத்தை நமது உள்ளத்திற்குள் தாராளமாக அனுமதிப்போமானால் அதிலிருந்து அவன் ஒரு கொடிய பாவ செயலையே நம்மை செய்ய வைத்து நம்மை மடங்கடித்துப் போடுவான். அரண்மனையில் படுத்திருந்த தாவீது ராஜாவை உப்பரிகையில் ஏறி உலாவச் செய்ய சாத்தானாம் பிசாசு எண்ணத்தை கொண்டு வந்ததும் அந்த எண்ணத்தை குறித்து தாவீது ராஜா ஒரு கணம் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். அரண்மனை உப்பரிகை எல்லாக் கட்டிடங்களை காட்டிலும் உயரமானது. அந்த உயரத்தில் இருந்து பார்க்கும் போது கீழாக உள்ளவைகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரியும். மக்கள் குடியிருக்கும் இல்லங்கள் அந்த இல்லங்களில் நடக்கும் பலவிதமான காரியங்கள் எல்லாம் துலாம்பரமாக தோன்றும் என்று ராஜாவுக்கு தெரியாதா ? நிச்சயமாக தெரியும். அவர் சிறுவனாக இருக்கும் போது அவரை தனக்கென்று ஆட்கொண்ட தேவனும் தான் மானிடனாக அவதாரம் எடுத்து பூமியில் இருக்கும் போது சாத்தான் எருசலேம் தேவாலயத்தின் உப்பரிகையின் மேல் ஏற்றி மாயாபரி மயக்கத்தை தனக்கு கொடுப்பான் என்பதை முன்கூட்டியே அறிந்த தேவன் தமது தாசனாகிய தாவீதை உப்பரிகையில் ஏறி உலாவ வேண்டாம் என்று அவனது ஆவிக்குள்ளாக கட்டாயம் உணர்த்தி இருப்பார். ஆனால் அரசன் தேவ வார்த்தைக்கு செவி கொடுக்கவில்லை. அதின் முடிவு எத்தனை கொடியதாக போய் விட்டது.

நமது இருதயத்தை கறைபடுத்தக் கூடிய பார்வைகள், எண்ணங்கள், சம்பாஷணைகள், பழக்கவழக்கங்கள், Mobile ல் பார்க்கும் காரியங்களை குறித்து சர்வ ஜாக்கிரதையாக நாம் இருத்தல் வேண்டும். தாவீது ராஜாவை மடங்கடித்த சாத்தான் நமது விழிப்பற்ற நிலைகளையும், ஆவிக்குரிய அனலற்ற வேளைகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம்மை நொடிப்பொழுதில் வீழ்த்திப் போடுவான். அவ்விதமான வீழ்ச்சிகளிலிருந்து நாம் திரும்பவும் எழும்ப முடியாமல் ஒருக்கால் போய்விடும். ஆ எத்தனை பரிசுத்தவான்கள் நொறுங்கி போனார்கள்.

ஒரு பரிசுத்தமான ஊழியக்கார ஐயாவை எனக்கு தெரியும். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அவர்கள் வயலின் இசைத்து தெரு பிரசங்கம் செய்வதில் சிறந்து விளங்கினார்கள். மாந்தரின் எந்த ஒரு பரிகாசத்தையும், நிந்தையையும் பொருட்படுத்தாமல் தைரியமாக தனது வாத்தியத்தை இசைத்து தெருக்களில் நின்று பாடி துதித்து தேவனுடைய சுவிஷேகத்தை பிரசங்கித்து வந்தார்கள். இந்த நிலையில் அவருடைய மனைவி இறந்து போனார்கள். தனிமையாக தானே சமைத்து சாப்பிட்டு ஆண்டவருடைய ஊழியத்தை செய்து வந்தார்கள். சிம்லா மலைகள் வரை சென்று தேவனுக்கு ஊழியம் செய்து வந்தவர்கள். வயது சென்ற நிலையில் அப்பொழுது அவர்கள் இருந்தார்கள்.

ஒரு நாள் இங்கு என்னண்டை வந்த அவர்கள் அதிகமாக கண்ணிர் சிந்தி அழுதார்கள். அதின் விபரம் நான் அவர்களிடம் கேட்டபோது "சகோதரனே, நான் தேவனுக்கு விரோதமாக ஒரு பெரிய அக்கிரமம் செய்து விட்டேன். இவ்வளவு காலம் கர்த்தருக்கு முன்பாக வாழ்ந்த பரிசுத்த வாழ்க்கையில் பெரும் பாவக்கறை விழுந்து விட்டது. என்னால் அதை தாங்க முடியவில்லை" என்று மனமடிவுடன் சொன்னார்கள். எவ்விதமாக அந்த பாவம் மேற்கொள்ள அனுமதித்து விட்டீர்கள் என்று அவர்களை நான் கேட்டபொழுது அவர்கள் கூறிய பதில் "எனது வயலின் வாத்திய கருவியை வழக்கம் போல எடுத்துக் கொண்டு கிராமம் கிராமமாக தேவனுடைய சுவிசேஷத்தை பாட்டுகள் பாடி அறிவித்து இறுதியாக சென்னை பட்டணத்தை நெருங்கி கொண்டிருந்தேன். சென்னைக்கு பக்கமாக உள்ள ஒரு கிராமத்தில் தேவனுடைய ஊழியத்தை செய்து முடித்து அங்குள்ள கிறிஸ்தவ விதவையான ஒரு ஸ்திரீயின் வீட்டில் அன்று இராத்தங்கினேன். தந்திர சாத்தான் அந்த விதவையைக் கொண்டு என்னை மேற்கொண்டு என்னை விபச்சார பாவத்தில் வீழ்த்தி பாவப்படுகுழியில் என்னை தள்ளி விட்டான்" என்று புலம்பினார்கள். இதை போன்ற சம்பவங்களை எழுதிக் கொண்டே போகலாம்.

விசுவாச ஒட்டத்தை வெற்றியோடு ஒடி முடிக்கும் வேளையில் கொடிய சாத்தான் தனது குறி தவறாத விபச்சார வேசித்தன வச்சிராயுதத்தை கர்த்தருடைய தாசனுக்கு நேராக ஏவிவிட்டு ஷணப் பொழூதில் அவர்களை அடித்து வீழ்த்தி விட்டான்.

அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
(பிலிப்பியர் 2:12)

பிசாசு எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றித் திரிகிறான் - 1 பேதுரு 5:8
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.