இயேசுவின் பிரசன்னம் நம்மில் காணப்பட நாம் என்ன செய்ய வேண்டும்
எந்த ஒரு மனுஷனையும் பிரகாசிக்க செய்பவர் தேவன் ஒருவரே. "எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோ 1:9) என்றார் யோவான். நம்மை சாத்தானுடைய இருளின் அந்தகாரத்தினின்று தமது ஆச்சரியமான ஒளியினிடத்துக்கு கொண்டு வந்தவர் தேவன் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு தமது நிருப்பத்தில் எழுதுவதை நாம் பார்க்கலாம் (1 பேது 2:9). "என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்" (யோ 8:12) என்றார் நமது அருமை இரட்சகர். ஆண்டவர் இயேசுவை உத்தமத்தோடும், உண்மையோடும் பின்பற்றுகிற அவரது பரிசுத்த அடியார்கள் அவரது முகப் பிரகாசத்தை தங்களிலும் நிச்சயமாக பெற்றிருப்பார்கள்.
பேதுரு அப்போஸ்தலனை எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்டவர் இயேசுவோடு 3 1/2 ஆண்டு காலமாக சஞ்சரித்தவர் அவர். தேவ மைந்தனோடு வாழ்ந்த அவர் தேவ மைந்தனின் சாயலை தன்னில் பெற்றிருந்ததை மக்கள் எளிதாக காண முடிந்தது. பிரதான ஆசாரியனுடைய அரண்மனையில் வேலை செய்த வேலைக்காரப் பெண்கள் கூட ஆண்டவர் இயேசுவோடு பேதுரு வாழ்ந்து வந்ததை எளிதாக அடையாளம் கண்டு விட்டனர். ஆண்டவர் பேசிய அந்த பரிசுத்தமான பரலோக பேச்சும் கூட அப்போஸ்தலனுடைய நாவிலிருந்து வெளிவந்ததின் மூலம் அவரை அடையாளம் காண்பது மக்களுக்கு இன்னும் இலேசாக இருந்தது என்பதை தேவனுடைய வசனத்தில் நாம் வாசிக்கின்றோம் (மத் 26:73)
இயேசு இரட்சகரை மக்கள் நம்மில் காணவேண்டுமானால் நாம் எப்பொழுதும் ஆண்டவர் இயேசுவோடு சஞ்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். கர்த்தரோடு 40 நாட்கள் சீனாய் மலையில் இரவும் பகலும் தங்கியிருந்துவிட்டு கீழே இறங்கி வந்த மோசேயின் முகத்தில் தேவனுடைய பிரசன்னத்தின் ஒளியை இஸ்ரவேல் மக்கள் கண்டு தங்கள் முகத்தை மூடிக் கொண்டதை வேதாகமத்தில் நாம் வாசிக்கின்றோம். பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங்கின் முகத்தில் தேவ பிரசன்னத்தின் ஒளி வீசக் காரணம் அவர் எப்பொழுதும் தேவனுடைய பாதங்களண்டையில் அமர்ந்திருந்ததுதான். இரவும் பகலும் ஜெபமே தேவ மனிதனது மூச்சாக இருந்தது. இயேசு இரட்சகரை பிறர் நம்மில் காண இது ஒன்றுதான் இரகசியம். வேறென்றுமில்லை.
கழுத்தில் பெரிய மரச்சிலுவை தொங்க வைத்து கொண்டு கரத்தில் செங்கொல் பிடிப்பதால் அந்த தேவ ஒளி நம்மில் காணப்படாது. பளிச்சிடும் வெண் வேஷ்டி உடுத்தி வெள்ளை ஜிப்பா அணிந்து கரத்தில் வேதாகமத்தை எடுத்துக் கொள்ளுவதால் அந்த மகிமையின் தேவப்பிரசன்னம் நம்மில் தோன்றிவிடாது. வெண்மையான கால்சட்டை, சேட் போட்டு சட்டையில் "இயேசுவே இரட்சகர்" என்ற பாட்ஜை நாம் குத்திக் கொள்ளும் காரணத்தால் புறமதஸ்தர் நம்மில் நமது இரட்சகர் இயேவை காண இயலாது.
ஒரு குடியானவன் தான் வளர்த்து வந்த புறாக்களுக்கு நேரத்துக்கு நேரம் தானியம் கொடுப்பதை கண்ட திருட்டு காகம் ஒன்று தானும் அந்த புறாக்களில் ஒன்றாக மாற வெகுவாக ஆசைப்பட்டு ஒரு திட்டம் தீட்டத் தொடங்கியது. இறுதியாக அதற்கு ஒரு யுக்தி பிறந்தது. அது நேராக குப்பை மேட்டுக்குச் சென்று குப்பையில் நன்கு உருண்டு புரண்டு தனது உடம்பு முழுவதும் புறாவின் நிறமான சாம்பல் நிறத்தில் குடியானவனுடைய புறாக்களுடன் சேர்ந்து அவைகளுடன் மகிழ்ச்சியாக உணவை தின்றது. குடியானவன் புறாக்களைப் பார்த்த போது குறிப்பிட்ட ஒரு புறா மாத்திரம் புறாக்களைப் போல நடவாமல் காகத்தை போல கால் தென்னி தென்னி ஒழுங்கினமாக நடப்பதைக் கண்டு அந்த திருட்டு காகத்தை கல் எறிந்து துரத்தினான் என்று ஒரு கதை உண்டு. கதைக்கு எற்றாப் போல மேற்கண்ட காகத்தைப் போன்று நாம் நமது புறம்பான அலங்கரிப்பால் அல்லது மதுரமான நமது வார்த்தைகளால் இயேசுவின் அடியார்கள் என்று நம்மை காண்பித்தாலும் நமது வாழ்க்கை நடை நமது சுய உருவத்தை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக காட்டி கொடுத்து விடும். அருமை இரட்சகரும் "அவர்களுடைய கனிகளாலே அவர்களை அறிவீர்கள்" (மத் 7:20) என்று எழுதி வைத்தார்.
மோட்ச பேரின்ப வாழ்வைப் பெற பாடுகளும் பிரயாசங்களும் ஏராளம் ஏராளம் உள்ளன
அழிந்து போகும் உலக ஆஸ்திகளை, ஐஸ்வர்யங்களை சேர்க்க ஒரு மனிதன் எத்தனையாக பாடுபட வேண்டியதாக இருக்கிறது என்பதை நாம் கண்கூடாக நமது வாழ்வில் காண்கிறோம். பஸ்களின் மூலமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ நாம் பிரயாணம் செய்தோமானால் மக்கள் பணம் காசுகளை சம்பாதிக்க இராவெல்லாம் கண் விழித்து வியாபாரங்கள் செய்வதை நாம் பார்க்கின்றோம். பணம் சம்பாதிக்க மனிதன் என்னென்ன பிரயாசங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றான். ஏமாந்தவர்கள் உடைமைகளை கொள்ளையிட்டு செல்வந்தர்கள் ஆவதற்கு பிரிதொரு கும்பல் தங்கள் கண்களில் எண்ணெய் ஊற்றி பேருந்து நிலையங்களிலும், ரயில்வே ஸ்டேசன்களிலும் கண் உறக்கம் இன்றி காத்துக் கிடக்கின்றது. எல்லாம் பணத்திற்காகதான்.
அழிந்து போகும் உலக வாழ்விற்கு அதிகமான கண் விழிப்புகளும், பாடுகளும் ,பிரயாசங்களும் போராட்டங்களும், அலைச்சல்களும் தேவையானால் ஆண்டவர் இயேசுவோடு நித்திய நித்திய காலமாக யுகா யுகங்களாக வாழ நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள எத்தனையாக நாம் பாடுபட வேண்டும் ! இந்த கடுமையான பிரயாசங்களில் அனேகர் தேர்ச்சி பெற மாட்டார்கள் என்பதை அறிந்து தான் அருமை ரட்சகர் திட்டவட்டமாக "ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாருக்கிறது, அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்" (மத் 7:41) என்று கூறி வைத்து விட்டார். மெய்தான் அநேக கிறிஸ்தவர்கள் தேவனுடைய பரம இளைப்பாறுதலை கண்டு கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் ஒரு பெந்தெகொஸ்தே சபையின் பாஸ்டர் என்னை சந்தித்தபோது "சகோதரனே சபைகளில் மோட்சம் செல்லும் எண்ணிக்கை 100க்கு 2 கூட நிச்சயமாக தேறாது" என்றார்கள். அந்த எண்ணிக்கை இன்னும் கணிசமாக குறைந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. உண்மைதான் மோட்சம் செல்ல நாம் அளிக்க வேண்டிய விலை கிரயம் மிகவும் பெரிது.
பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துப் படித்து பாருங்கள். தேவனால் பயன்படுத்தப்பட்ட அவர்கள் எல்லோரும் தங்களது இராக்கால மணி நேரங்களை தங்கள் ஆண்டவரின் பாதங்களில் செலவிட்டதாக நாம் பார்க்கலாம். கர்த்தர் இயேசுவுக்காக பயனுள்ள பாத்திரங்களாக திகழ்ந்தவர்கள் யாவரும் இராக்கால மணி நேரங்களில் தங்களது தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து கிடந்தவர்கள் ஆவார்கள். அத்துடன் அவர்கள் எப்பொழுதும் ஜெப ஆவியால் நிறைந்து வாழ்ந்ததையும் நாம் காணக் கூடும்.
இவ்விதமான ஜெப ஆவி சாது சுந்தர் சிங்கை ஆட்கொண்டிருந்ததை அவருடைய புத்தகங்களில் நாம் வாசிக்கின்றோம். நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் வேளைகளிலும், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சாப்பாட்டு மேஜையில் இருந்தும் கூட அவர் தன் ஆண்டவரோடு சற்று நேரம் தனித்திருக்க நழுவிச் சென்ற சந்தர்ப்பங்கள் அந்த தேவ பக்தன் எவ்வண்ணமானதொரு ஜெப ஆவியை தன்னகத்தே கொண்டிருந்தார் என்பதை நமக்கு எடுத்துச் சொல்லுவதாக உள்ளது.
வாசிக்கும் அன்பார்ந்த தேவ பிள்ளையே, பரலோக ராஜயத்தை நீ சுதந்தரிரக்க கடுமையாக பிரயாசங்களை மேற்கொண்டாக வேண்டும். அதின் காரணமாக நீ உனது ஆனந்தமும், இன்பமுமான நள்ளிரவு தூக்கங்கள், குளிருடன் கூடிய ஆனந்தமான அதிகாலை நித்திரைளை தியாக பலியாக வார்க்க வேண்டும். இனம், ஜனம், பெண்டு, பிள்ளை ரூபத்தில் காணப்படும் உனது இருதயத்தை களிப்பூட்டும் அனேக உலக ஆசாபாசங்களை நீ பலி பீடத்தில் அர்ப்பணிக்க வேண்டிய நிச்சயமான நிலை ஏற்படும். கலங்கி பொங்கி கொந்தளித்துக் கொண்டிருக்கும் சரீரத்தின் ஆசை இச்சைகளை அப்போஸ்தலனை போல அடக்கி ஒடுக்கி கீழ்ப்படுத்தவும் நாம் நன்கு பழக்கப்பட்டு இருக்க வேண்டும் (1 கொரி 9:27)
கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும் தாழ்மையுள்ளவனை நோக்கி பார்க்கிறார் (சங்கீதம் 138:6)
தாழ்மை என்பது நமக்கு விருப்பமில்லாத காரியம். ஆனால் கர்த்தர் தாழ்மையை விரும்புகிறார். வேதமும் நாம் தாழ்ந்து போக வேண்டும் என்று கூறுகிறது.
தாழ்மை X மேட்டிமை, பெருமை, கர்வம், அகங்காரம்
தாழ்மைக்கு முன்மாதிரி கிறிஸ்து. தாழ்மை வேண்டும் என்று நினைக்கும் போது கிறிஸ்துவை மட்டும் நோக்கி பார். பெருமையாக பேசுகிற, ஜிவிக்கிற மனிதனை பார்க்காதே. சாந்தமும், மனத்தாழ்மையும் என்னிடம் உண்டு, கற்றுக் கொள்ளுங்கள் என்றார் (மத் 11:29)
சிறியவர்களிடமும், பெரியவர்கள் இடமும் உன்னை தாழ்த்து. இயேசு துன்பப்பட்டு, திட்டபட்டு, அடிபட்டு, காடி குடிக்க கொடுக்கபட்டு தனது தாழ்மையை விடவில்லை. சிலுவையின் மரணபரியந்தம் தன்னை தாழ்த்தினார் (பிலி 2:8).
மாமியார் இடம், சகோதரனிடம், சகோதரியிடம், உறவினர்கள் இடம், நண்பர்கள் இடம், வேலை பார்க்கும் இடத்தில் தாழ்ந்து போகிறோமா ? தாழ்ந்து ஜிவித்தால் கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார். தாழ்மையால் கஷ்டம், துன்பம், நஷ்டம் வரலாம், மரியாதை போகலாம். ஆனாலும் தாழ்மையை விடாதே.
மனத்தாழ்மையை உடையை போல அணி (1 பேது 5:5). மனிதர்கள் இடம் தாழ்மையுள்ளவன் போல நடிக்கலாம். ஆனால் உனது மனது மேட்டிமையானதை நினைக்கிறது, சிந்திக்கிறது. அநேகர் விழுந்து போவதற்கு காரணம் மேட்டிமை (நீதி 16:18). நமக்கு தெரியாமலேயே பெருமை, மேட்டிமை நமக்குள் வருகிறது.
வசனத்தை படிக்கும் போது உன்னை தாழ்த்து, வசனத்தை கேட்கும் போது உன்னை தாழ்த்து, ஜெபிக்கும் போது உன்னை தாழ்த்து.
குடும்பத்தில் சண்டை, பிரச்சினை வரக்காரணம் தாழ்மை இல்லாததுதான்.
அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன்
(நீதி 24-29) என்று மேட்டிமையாக பேசாதே.
என்னுடைய அப்பா அம்மாதானே, சகோதரிதானே, சகோதரன்தானே, நண்பன்தானே, உறவினர்தானே என்ற தாழ்மை வேண்டும். இப்படிப்பட்ட எண்ணம் நம்மை தாழ்மைக்கு கொண்டு செல்லும். பெருமையாக, மேட்டிமையாக நினைக்காதே.
சிலர் வாயில் நான் குப்பை, தூசி என்பார்கள். ஆனால் பிரச்சினை வரும் போதுதான் தெரியும் அவர்களது தாழ்மை.
பணம், வசதி, படிப்பு பெருகும் போது தாழ்மை குறைகிறது, மேட்டிமை, கர்வம், பெருமை பெருகுகிறது.
நீ எவ்வளவுதான் தசமபாகம் கொடுத்தாலும், ஊழியம் செய்தாலும், மணிக்கணக்காய் ஜெபித்தாலும், வேதம் வாசித்தாலும் தாழ்மை இல்லாவிட்டால் கர்த்தர் உன்னை ஆசிர்வதிக்க மாட்டார்.
இயேசுவே உம்முடைய தாழ்மையால் என்னை நிரப்பும் என்று அனுதினமும் ஜெபி.
உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு (ஆமோஸ் 4:12)
தேவ ஜனமே, பிள்ளையைப் போட்டு
பலாப்பழம் எடுத்து விடாதீர்கள்
"பிள்ளையைப் போட்டுப் பலாப் பழம் எடுத்தான் ஓடை" என்ற ஒரு ஓடை நெல்லை மாவட்டத்தில் உண்டு. தனது குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு ஓடையைக் கடக்க வந்த ஒரு பெண் அந்த ஓடை தண்ணீரில் ஒரு பலாப் பழம் மிதந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டு பலாப்பழத்தின் மேல் ஆசைப்பட்டு குழந்தையை ஓடைக்கரையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு நீரில் இறங்கிச் சென்று கஷ்டப்பட்டு பலாப்பழத்தை எடுத்துக் கொண்டு கரைக்கு வந்து பார்த்த போது தனது அருமைக் குழந்தை ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதை கண்டு சொல்லொண்ணா துயரம் அடைந்தாள் என்று கூறப்படுகின்றது. அந்த நாளிலிருந்து அந்த ஒடையின் பெயர் "பிள்ளையைப் போட்டு பலாப்பழம் எடுத்தான் ஓடை" என்று வழங்கி வருகின்றது.
மேற்கண்ட துயர சம்பவத்தைப் போன்றே இன்று தேவ ஊழியங்களிலும் காரியங்கள் நடந்து வருவதை நாம் வேதனையோடு காண்கின்றோம். கவர்ச்சியான, மனதை மயக்கும், நித்திய ஜீவனுக்கு எந்த ஒரு பயனுமற்ற தேவச் செய்திகள், ஆசிர்வாத பிரசங்கங்கள், ஜெபங்கள், ஆடல்கள், பாடல்கள், நடனங்கள் எல்லாம் ஆராதனைகளிலே இடம் பெற்று ஆராதனை வேளையே ஆனந்த பரவச வேளையாகிப் போய்விடுகின்றது. ஆனால், கொடுக்கப்பட்ட தேவச் செய்தியில் ஆழம் கிடையாது. பாவத்தைக் குறித்து கண்டிப்பு பிரசங்கம் கிடையாது, பரிசுத்தத்தின் மேன்மையைக் குறித்த செய்தி இல்லை, சரீர ஒடுக்கத்தைப் பற்றிய செய்தி இல்லை, உலக மாயையைக் குறித்து பேசினால் ஜனங்கள் முறுமுறுப்பார்கள், நினையாத நேரம் சந்திக்கும் மரணத்தைக் குறித்துப் பேசி சபை மக்களை துக்கப்படுத்த முடியாது, நரக அக்கினி குறித்து சபையில் பேச எவருக்கும் உரிமையே கிடையாது, முடிவில்லா நித்தியம், அது நமக்குத் தேவையே இல்லாத காரியம். ஆவிக்குரிய சபைகள் பலவற்றின் உண்மை நிலை இதுவேதான். காரணம், அநியாய வட்டி வாங்குவோர், அடுத்தவரின் மனைவியை வைத்திருப்போர், TV யில் சினிமா, சீரியல் பார்ப்பவர்கள், Mobile Phone ல் தேவன் விரும்பாத அருவருப்புகளை பார்ப்பவர்கள், விபச்சாரக்காரர், வேசிக்கள்ளர், வாங்கின கடனை திருப்பிக் கொடுக்காதவர்கள், கலப்படம் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் வியாபாரிகள், பொய் நாவினால் பொருளைச் சம்பாதிக்கும் தரகர்கள், இடைத்தரகர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் எல்லாம் ஆராதனையில் வந்து கலந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாரும் மாதம் பிறந்தால் ஆயிரக்கணக்கான பணத்தை சந்தா, தசமபாகம், பொருத்தனை காணிக்கை என்று பாஸ்டர் மற்றும் குருவானவர் கரங்களில் கவர்களில் போட்டுக் கொடுத்துச் செல்லும் பக்தர்களாவார்கள். இந்த பக்தர்களை கண்டித்தால் அவர்களுக்கு வரவேண்டிய காணிக்கை வரவு போய்விடுமே! சபை மக்கள் நரகம் போனாலும் பரவாயில்லை, நித்திய அக்கினி கடலில் வெந்து துடிதுடித்தாலும் கவலையில்லை, தங்களுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தை செலுத்திவிட்டு அவர்கள் தாராளமாக நரகம் செல்லலாம் என்ற நிலை உறுதியாகிவிட்டது.
இப்படிப்பட்ட சபைகளை நாடித்தான் திரளான மக்கள் இன்று ஓடிக்கொண்டிருக்கின்றனர். வாத்திய இசைகளோடு கூடிய பாடல்கள், ஆரவாரம், ஆர்ப்பரிப்பு, தாவீதைப் போன்ற நடனங்கள் எல்லாம் நிரம்பி வழியும் ஆராதனை. தங்கள் பாவங்களுக்காக மார்பில் அடித்து அழுகை, கண்ணீர், புலம்பல்கள், ஏக்கங்கள், கதறல்கள், வியாகுலங்கள் கேட்க வேண்டிய இடத்தில் நடனங்களோடு கூடிய ஆனந்தப் பாடல்கள் கேட்கின்றன. ஆனால், தங்களுடைய விலையேறப்பெற்ற ஆத்துமாவுக்கு ஆகாரமாக அவர்களுக்கு அங்கு ஒன்றுமே கிடையாது. ஆவியில் நிரம்பி ஆரவாரித்து ஆராதனை முடித்து வீடு திரும்பிய மனைவிக்கு கணவனால் தூஷண வார்த்தை வசைமாரியும், கன்னத்தில் அடிகளும் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கணவரும் தாவீதைப் போல ஆலயத்தில் நடனம் பண்ணியவர்தான். காரணம், ஜென்ம சுபாவத்தோடு ஆராதனைக்குச் சென்றவர்கள், ஜென்ம சுபாவத்தோடு வீடு திரும்பியிருக்கின்றார்கள். அவ்வளவேதான். இனி அடுத்த வாரம் தாவீதைப் போல ஆலயம் சென்று இவர்கள் நடனம் ஆடும் வரை வீட்டில் சாத்தானுடைய நடனத்தை இந்த மக்கள் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருக்கலாம். எத்தனை வேதைனையான காரியம் பாருங்கள்!
தேவ ஜனமே, உங்கள் விலையேறப்பெற்ற ஆத்துமாவை பணயம் வைத்து இப்படிப்பட்ட சபைகளுக்கோ, ஆராதனைகளுக்கோ ஒருக்காலும் போய் விடாதீர்கள். இப்படிப்பட்ட கவர்ச்சி ஆராதனைகளை நடத்தியவர்கள், தங்கள் கைகளில் மைக்கை பிடித்துக் கொண்டு, தேவ ஜனத்திற்கு முன்பாக ஆராதனை மேடையில் சினிமாவில் தோன்றும் நடிகர்களைப் போன்று அங்கும் இங்கும் பாய்ந்து ஓடி, மனதை மயக்கும் வார்த்தைகளோடும், சினிமா மெட்டுகளுடன் கூடிய கிறிஸ்தவ பாடல்களை பாடுவார்கள். பெருங்கூட்டம் செல்லுகின்ற சபை அதுவேதான் கட்டாயம் பரலோகம் செல்லும் சபை என்று பகற் கனவு கண்டு கொண்டு இருக்காதீர்கள். உங்கள் பகற் கனவு இலவு காத்த கிளியின் கதையாக ஓர் நாள் முடிவு பெறும் என்பதை இரும்பு எழுத்தாணியால் உங்கள் இருதய பலகையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
உலகத்தின் காரியங்கள் யாவும் முழுமையான மாயை ( மாயை = இல்லாமல் போகும்)
ஒரு நாள் மாலை நேரம் ஒரு இந்து கிராமத்தில் உள்ள ஒரு மனிதனுக்கு தேவனுடைய சுவிசேஷ பிரதி ஒன்றை நான் கொடுத்தேன். அதை பெற்றுக் கொண்டு சற்று நேரம் படித்த அவர் இப்படி பேச ஆரம்பித்தார் "நல்ல பயனுள்ள செய்தித்தாளை நான் படிக்கும்படியாக நீங்கள் எனக்கு கொடுத்து இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதை நான் அறிகின்றேன். நான் சிறுவனாக இருக்கும் போது ஒரு கிறிஸ்தவ மிஷன் பள்ளியில் படித்தேன். எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் எல்லாரும் நல்ல கிறிஸ்தவர்கள்தான். அநேக அருமையான கிறிஸ்தவ போதனைகளை அவர்கள் எனக்கு கற்றுத் தந்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஒரே ஒரு ஞான போதனையை கற்றுத்தர முற்றுமாகத் தவறி விட்டனர்" என்றான். நான் அவரை இடை மறித்து "எந்த போதனை ?" என்று கேட்டேன். "உனது வாழ்வில் நீ எக்காரணத்தைக் கொண்டும் கலியாணம் மட்டும் செய்து விடாதே என்ற சிறந்த ஆலோசனையை அவர்கள் எனக்கு கொடுக்க தவறிவிட்டனர்." என்று அவர் கூறினார். "கல்யாணம் செய்தால் மனைவி, மக்கள், பேரக் குழந்தைகள் சந்தோஷம், குடும்ப மகிழ்ச்சி எல்லாம் வீட்டில் இருக்கும் அல்லவா ?" என்றேன் நான். "அதுதான் கிடையாது. என் மனைவி சீக்கிரமாக இறந்து போனாள். எனக்கு ஒரே ஒரு மகன் மாத்திரம் இருக்கின்றான். அவன் கல்யாணம் செய்து மருமகள் வீட்டிற்கு வந்தாள். அவளது துர் ஆலோசனையை கேட்டு இப்பொழுது என்னை வீட்டை விட்டு போகும்படியாக நான் பெற்ற மகன் என்னை நிர்ப்பந்தம் செய்கின்றான். எனது வீட்டை விட்டு இந்த வயதான காலத்தில் நான் எங்கே போவேன் ? வெறுங்கையனாக, கிழவனாக செல்லும் என்னை யார் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார்கள் ? நான் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் எனது சம்பாத்தியத்தை நானே என் மட்டாக வைத்து அனுபவித்துக் கொண்டு வீட்டோடு ஒட்டிக்கொண்டு இருப்பேன். ஆனால் இன்று எனது வீடு வாசல் சம்பாத்தியத்தை எல்லாம் தனக்கென எடுத்துக் கொண்டு என் மகன் என்னை வெளியே துரத்தி அடிக்க போராடுகின்றான். நான் என்ன செய்வேன் ?" என்று அந்த மனிதர் உள்ளம் குமறினார்.
"உன் மனைவி உனக்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறாள்" என்று மேற்கண்ட மனிதனிடம் அன்று கூறிய போது இருந்த மட்டில்லா மகிழ்வு இப்பொழுது எப்படி தலைகீழாக திரும்பிவிட்டது பார்த்தீர்களா ? லோகத்தின் அனைத்துக் காரியங்களும் இப்படித்தான் இறுதியில் 'புஷ் வாணமாக' புகைந்து போய் விடும்.
ஒரு அருமையான தேவ பிள்ளைக்கு ஒரு பெண், இரண்டு ஆண் மக்கள். "ஆசைக்கு ஒரு ஆண், பாசத்திற்கு ஒரு பெண் என்று கூறுவார்கள். ஆனால் இங்கு ஆசைக்கு இரண்டு ஆண் மக்கள் கிடைத்து விட்டனர். உலகில் இதைவிட என்ன சந்தோசம் வேண்டும் ? நல்ல வசதியான குடும்பம். இந்த நிலையில் அருமையான கணவன் திடீரென்று இறந்து போனார்கள். பாசத்திற்குரியவளை கட்டி கொடுத்து தன் கணவனோடு போய்விட்டாள். ஆண் மக்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் இருவரும் மனைவிமாரின் பேச்சை கேட்டு பெற்ற தாயை ஒருபுறமாக தனிமைப்படுத்தி ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது அந்த அருமையான தேவனுடைய பிள்ளை எனக்கு இப்படியாக தொலைபேசியில் பேசினார்கள் "அருமை சகோதரே கணவனை இழந்து தவித்த என்னை எனது மருமக்கள் எனது பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு என்னை தனிமைப்படுத்த தொடங்கிவிட்டனர். கர்த்தர் சீக்கிரமாய் என்னை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது ஒரே ஆவல்" என்று பேசினார்கள். இப்படி உலக மாயையின் காரியங்களை பற்றி ஏராளம் உதாரணங்களை நான் எழுதிக் கொண்டு போகலாம். உங்களுக்கும் அதைப் பற்றி நிறைய தெரியும்.
மனைவி, மக்கள், குடும்பம், உற்றார், உறவினர், ஆஸ்தி, ஐஸ்வரியம், வீடு, வாசல் போன்றவைகளின் அடிப்படையில் நாம் இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் கானல் நீரின் மாயைக் காட்சியேயன்றி பிறிதொன்றுமில்லை.
தேவ ஜனமே, உலகத்தில் நாம் காண்கின்ற யாவும், நமக்கென்று நாம் சொந்தம் கொண்டாடும் அனைத்தும், நாம் அனுபவித்துக் கொண்டிருப்பவைகள் எல்லாம் ஷணப் பொழுதில் தங்களுக்கு செட்டைகளை உண்டுபண்ணிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து மறையும் காரியங்களாகும்.
அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன் - சங்கீதம் 55:17
சிற்றின்ப பாவ படுகுழியிலிருந்து நம்மை விலக்கிக் காத்துக் கொள்ள தொடர்ச்சியான ஜெபம் நமக்கு தீராத அவசியமாகும். ஒவ்வொரு நாளும் திட்டமான ஜெப வேளைகளை ஒதுக்கி வைத்து ஒழுங்கும் கிரமமுமாக நாம் அதை கைக்கொண்டு வந்தால் அத்தனை எளிதாக பாவம் நம்மை மேற்கொள்ள இயலாது. காலை, மத்தியானம், சாய்ங்காலம் முன்று வேளைகளிலும் சங்கிதக்காரர் ஜெபித்ததாக நாம் பார்க்கின்றோம் (சங் 55:17) அந்த முன்று நேரங்களும் ஒவ்வொரு மணி நேரமாக 3 மணி நேரத்தை நாம் ஒதுக்கி வைத்து ஜெபித்தால் அளவிடற்கரிய தேவ ஆசிர்வாதம் பெறுவோம். 3 மணி நேரம் ஜெபத்தில் தேவனோடு செலவிட்ட ஒரு ஆத்துமா அத்தனை துரிதமாக பாவத்தில் விழவே விழாது. அந்த நாள் முழுவதும் தேவ பிரசன்னம் நம்மை சூழ்ந்து நிற்கும். அதிகாலை நாம் தேவ சமுகத்தில் பற்றவைத்து விட்ட அந்த தேவ பிரசன்னம் மத்தியானம் வரை நீடிக்கும். மங்கலாகத் தொடங்கும் அந்த தேவ பிரசன்னத்தின் தீபத்தை மத்தியானம் ஏற்றி வைத்து விட்டால் மாலை வரை தொடர்ந்து சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும். பின்னர் மாலை அதை நாம் தீண்டி விட்டால் முன்னிரவு முழுவதும் மற்றும் பிசாசின் அக்கினியாஸ்திரங்கள் சரமாரியாக பெய்து கொண்டிருக்கும் பின்னிரவுக்கும் அந்த ஒளி போதுமானதாக இருக்கும்.
"நீங்கள் சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்" (மத் 26:41) "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" (1 தெச 5:17) "எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்" (லூக் 21:36) "ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்" (1பேது 4:7) "ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்" (ரோ 12:12) என்ற தேவ வார்த்தைகள் எல்லாம் ஒரு உறுப்புகூட விலகாமல் அப்படியே நம்மால் கடைபிடிக்க வேண்டியவைகளாகும். ஆனால் நாம் அந்த வசனங்களை எல்லாம் மேலெழுந்த வாரியாக பார்த்து ஏனோதானோவென்று விட்டு விடுகின்றோம். ஜெப தியானத்தின் மாட்சிமையை கிறிஸ்தவ பக்தர்கள் மாத்திரம் அல்ல புறமதஸ்தரும் கடுமையாக கடைபிடித்து அதிசயங்களை நடப்பித்ததாக சரித்திரம் நமக்கு சான்றுகள் தருகின்றன. அதற்காக ஜீவனுள்ள தேவனை நோக்கி நாம் ஏறெடுக்கும் ஜெபமன்றாட்டுகளும் புறமதஸ்தரின் நிஷ்டை தியானங்களும் ஒன்று என்று நான் இங்கு குறிப்பிடவில்லை. ஒரு உதாரணம் கவனியுங்கள்.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் என்பவரை மொகலாய மன்னன் பாபர் சிறையில் போட்டு விட்டார். சிறைச்சாலையில் மாவு அரைக்க வேண்டிய வேலை குருநானக்கிற்கு கொடுக்கபட்டது. ஒரு நாள் சிறை காவலர் சிறைகூட அறைகளை பார்வையிட்டு வரும் போது குருநானக் இருந்த அறைக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது குருநானக் தியான நிஷ்டையில் மூழ்கியிருந்தார். கோதுமையை மாவாக அரைக்கும் பெரிய திரிகல் கற்கள் தானாக சுழன்று மாவை அரைத்து கொட்டிக் கொண்டிருந்தன. அதைக்கண்டு ஆச்சரியமுற்ற காவலன் உடனே பாபர் சக்கரவர்த்தியிடம் வந்து சிறைக்கூடத்தில் தான் கண்டதை கூறினான். அதைத் கேட்ட பாபர் குருநானக்கை உடனே விடுதலை செய்யும்படி கட்டளையிட்டார். அதுமட்டுமல்ல குருநானக்கை அரசன் தனது அரண்மனைக்கு அழைத்து அவருக்கு தனக்கு சமமான ஆசனத்தை கொடுத்து அமரும்படி செய்து கனப்படுத்தினான்.
தேவனோடு அதிகமான நேரத்தை தினமும் ஜெபத்தில் செலவிட்டு ருசி கண்ட தேவ பக்தர்கள் என்ன வந்தாலும் அந்த பரிசுத்த பழக்கத்தை மாற்றவே மாட்டார்கள். அதன் காரணமாகத்தான் தானியேல் தீர்க்கன் சிங்கங்களின் கெபியில் தான் போடப்படுவோம் என்பதை முன்கூட்டியே நன்கு அறிந்திருந்தும் தனது வழக்கமான மூன்று வேளை ஜெபத்தை நிறுத்தவே இல்லை (தானி 6:10).
தேவ ஜனமே, சாத்தானுடைய சிற்றின்ப பாவ படுகுழியாம் கண்ணிக்கு நீ தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் நொறுங்குண்ட இருதயத்தோடு ஒவ்வொரு நாளும் அதிகமான நேரத்தை ஜெபத்தில் செலவு செய்ய கர்த்தர் விரும்புகின்றார். ஜெப வேளை குறைந்து அல்லது ஜெபத்தில் நிர்விசாரம், சோம்பல் தலைதூக்குமானால் சாத்தானுடைய அம்புக்கு நீ சரியான இலக்காவாய்
Thanks for using my website. Post your comments on this