ஓர் குட்டிக் கதை
முடியாத கதை
============
கபில நாட்டு அரசன் சித்ராங்கதனுக்குக் கதை கேட்பதில் மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் தினமும் சில அறிஞர்களை வரவழைத்து கதைகளைக் கேட்டு வந்தான். சில அறிஞர்கள் கூறிய கதைகள் ஒருநாளிலேயே முடிந்துவிட்டன. சில அறிஞர்கள் கூறிய கதைகள் இரண்டு மூன்று நாட்கள் நீடித்தன. அரசனும் அக்கதைகளைக் கேட்டு, கதை சொன்னவர்களுக்குப் பரிசுகள் வழங்கி அனுப்பி வந்தான்.
திடீரென்று அந்த அரசனின் மனதில் விபரீத ஆசை ஒன்று முளைத்தது. அதாவது, 'பலரும் வந்து கதை சொல்லிப் போகிறார்கள். இருப்பினும் அக்கதைகள் ஒன்றிரண்டு நாட்களில் முடிந்து விடுகின்றனவே! தன் வாழ்நாள் முழுவதும் முடியாத கதையை யாராவது தனக்குச் சொன்னால் தன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கதையைக் கேட்டுக்கொண்டு இருக்கலாமே!' என்று நினைத்தான் மன்னன்.
எனவே அரசன் சித்ராங்கதன் தனது அமைச்சரான யோகீந்தரரிடம், "அமைச்சரே! முடியாத கதையொன்றைக் கேட்க எனக்கு ஆசையாக உள்ளது. எனவே, யாரேனும் அரசவைக்கு வந்து முடியாத கதையை எனக்குச் சொல்ல வேண்டும் என்றும், அவ்வாறு கதை சொல்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்யுங்கள்!" என்று உத்தரவிட்டான். அமைச்சர் யோகீந்தரரும் அரசனின் உத்தரவை நாட்டு மக்களிடம் அறிவித்தார். அறிவிப்பைக் கேட்ட அறிஞர் ஒருவர் முதலில் அரசவைக்கு வந்தார். அவர், முடியாத கதையொன்றை அரசனிடம் தான் சொல்லப்போவதாகக் கூறினார்.
அரசனும் மனம் மகிழ்ந்தான். அவ்வறிஞரை அரண்மனையிலேயே தங்கும்படி செய்து, அவரை சிறந்த முறையில் உபசரித்தான். தினமும் காலையில் அரசவைக்கு வந்த அவ்வறிஞர் அரசனுக்கு கதையை கூறத் தொடங்கினார். அரசனும் மிக்க மகிழ்ச்சியோடு கதை கேட்கலானான். ஆறு மாதங்கள் கடந்தன. அந்தக் கதை முடிவுக்கு வந்தது. கதை முடிந்துவிட்டதை அறிந்த அரசனுக்குக் கோபம் வந்தது. அவன் அவ்வறிஞரிடம், ''முடியாத கதையொன்றைச் சொல்லப்போவதாகக் கூறினீர்கள். ஆனால் கதை முடிந்து விட்டதே!" என்று சொல்லி, அவ்வறிஞரைச் சிறையில் அடைத்தான்.
சில நாட்களில் வேறோர் அறிஞர் அரசவைக்கு வந்தார். அவர் அரசனிடம், "நான் உங்களுக்கு முடியாத கதையைச் சொல்கிறேன்!" என்று கூறினார். அரசனின் மனம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டது. மறு நாள் முதல் அவ்வறிஞரும் அரண்மனையிலேயே தங்கி, அரசனிடம் தான் தயாரித்த கதையை கூறத் தொடங்கினார். மன்னனும் மிகுந்த ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கதை கேட்கலானான்.
ஒர் ஆண்டு கடந்தது, அந்தக் கதையும் முடிவுக்கு வந்தது. கதை முடிந்ததும் மன்னனுக்குக் கோபம் வந்தது. அவன் அவ்வறிஞரையும் சிறையில் அடைத்தான். அரசனின் செய்கைகள் அமைச்சர் யோகீந்தரருக்கு வருத்தத்தை அளித்தது. ஆனால் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை.
யோகீந்தரருக்கு பதினைந்து வயதே நிரம்பிய சத்தியசீலன் என்ற மகன் ஒருவன் இருந்தான். அவன் தனது தந்தையின் வருத்தத்தை அறிந்தான். அவன் தன் தந்தையிடம், “தந்தையே! முடியாத முடியாத கதையை அரசனுக்கு நான் போய் சொல்லலாமா?" என்று கேட்டான். யோகீந்தரருக்கு மகனின் பேச்சு வியப்பை அளித்தது. அவர் தன் பிள்ளையிடம், “சத்தியசீலா! மிகப்பெரிய அறிஞர்களே அரசனுக்குக் கதை சொல்லப்போய் இன்று சிறையில் துன்புறு கிறார்கள். சின்னஞ்சிறு பாலகனான நீ எப்படி அரசனிடம் முடியாத கதையைச் சொல்வாய்? இந்த விபரீத சோதனை எல்லாம் வேண்டாம். நீ சிறையில் துன்புறுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது!" என்று கூறினார்.
ஆனால் சத்தியசீலனோ, “தந்தையே! அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். என்னை நம்புங்கள். அரசனிடம் அழைத்துச் செல்லுங்கள்!" என்று கூறினான். மகனின் பிடிவாதத்தைக் கண்ட அமைச்சர் யோகீந்தரரும் அரசனிடம் அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டார். அரசவைக்கு வந்த சத்தியசீலன் அரசன் சித்ராங்கதனிடம், "அரசே! இன்று முதல் நான் தங்களுக்கு முடியாத கதையொன்றைச் சொல்லப் போகிறேன்!" என்று பணிவோடு கூறினான். பாலகனான சத்தியசீலனைக் கண்ட அரசனுக்கு வியப்பாக இருந்தது.
அரசன் சத்திய சீலனை நோக்கி, "சத்தியசீலா! நீ சிறுபிள்ளை! நீ எனக்குக் கதை சொல்லப் போகிறாயா? ஒருவேளை நீ சொல்லப்போகும் கதை முடிந்து விட்டால் அமைச்சரின் பிள்ளை என்றும், நான் தயங்க மாட்டேன். உன்னை சிறையில் அடைப்பேன். சம்மதமா?" என்று கேட்டான். “அரசே! நான் சொல்லப்போகும் கதை நிச்சயம் முடியாது! எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது!" என்று உறுதியாகச் சொன்னான் சத்தியசீலன். இறுதியாக சத்தியசீலனின் கதையைக் கேட்க அரசனும் சம்மதித்தான். அன்றைய தினமே சத்திய சீலனும் கதையைச் சொல்லத் தொடங்கினான்.
“அரசே! ஒரு தோட்டத்திலுள்ள உயர்ந்த மரத்தில் குருவி ஒன்று கூடுகட்டி வசித்து வந்தது. அது தினமும் காலையில் ஒரு வீட்டிலிருந்த நெற்களஞ்சியத்திலிருந்து ஒரு நெல்மணியைக் கொத்தி எடுத்த பின் தன் கூட்டிற்குப் பறந்து போனது. அந்த நெல்மணியை அங்கு வைத்துவிட்டு பின் திரும்பி அந்த வீட்டிற்குப் பறந்து வந்தது. மீண்டும் நெற்களஞ்சியத்திலிருந்து ஒரு நெல் மணியைக் கொத்தி எடுத்து தன் கூட்டிற்குப் பறந்து போயிற்று." என்று மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான் சத்தியசீலன். “சரி, அடுத்து என்ன நடந்தது?" என்று ஆர்வத்தோடு கேட்டான் அரசன் சித்ராங்கதன். "குருவி நெல்மணிகளை எடுத்துவந்து வைத்துக் கொண்டிருக்க, இரவுப் பொழுதும் வந்துவிட்டது. இனி என்ன நடந்தது என்பதை நாளை கூறுகிறேன்!" என்று சொல்ல, அரசனும் எழுந்து சென்று விட்டான்.
மறுநாள் கதை கேட்கும் ஆவலில் அரசன் அமர்ந்தான். சத்தியசீலனும் கதையைச் சொல்லத் தொடங்கினான். “அரசே! மறுநாள் பொழுது புலர்ந்தது. குருவி மீண்டும் அந்த வீட்டிற்குப் பறந்து வந்தது...." என்று கதையை ஆரம்பித்தான். மன்னனுக்கோ சலிப்பு தோன்ற ஆரம்பித்தது. அவன் சத்தியசீலனிடம், “சரி! முந்தைய தினம் குருவி கூட்டில் கொண்டுவைத்த நெல்மணிகள் என்ன ஆயிற்று? என்று கேட்டான். “அரசே! அந்த நெல்மணிகளைத்தான் அன்றைய இரவுக்குள் குருவி தின்றுவிட்டிருக்குமே! மறுநாளுக்கான நெல்மணியைக் அந்தக் குருவி கொண்டுவர வேண்டாமா?" என்றான் சத்தியசீலன்.
“சரி! அந்த வீட்டின் நெற்களஞ்சியத்திலுள்ள நெல்மணிகள் எல்லாம் தீர்ந்துவிட்டால் குருவி என்ன செய்யும்?" என்று கேட்டான் அரசன். “அரசே! நெற்களஞ்சியத்தில் நிறைந்திருக்கும் நெல்மணிகளை குருவி தின்று தீர்த்து விட முடியுமா? ஒருவேளை ஒரு சில மாதங்களில் நெல்மணிகள் குறைந்துவிட்டாலும், அதற்குள் அடுத்த அறுவடை நடந்துவிடுமல்லவா? மீண்டும் நெற்களஞ்சியத்தில் நெல் வந்துவிடுமல்லவா?" என்றான் சத்தியசீலன்.
உடனே மன்னன், "சரி! ஒருவேளை அந்தக்குருவி முதுமையடைந்து இறந்துவிட்டால் என்ன ஆகும்?" என்று கேட்டான். “அதற்குள் அந்தக் குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வேறு குருவி வந்துவிடும் அல்லவா?" என்று பதிலளித்தான் சத்தியசீலன். மன்னனுக்கு சத்தியசீலனின் நோக்கம் புரிந்தது. சத்தியசீலன் சொல்லிக் கொண்டிருக்கும் கதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முடியப் போவதில்லை.
முடியாத கதை கேட்க வேண்டும் என்ற தனது விபரீத எண்ணத்தை முறியடிக்கும் திட்டத்தோடுதான் சத்தியசீலன் வந்திருக்கிறான் என்பதை அரசன் அறிந்து கொண்டான். அரசன் சத்தியசீலனிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டான். மேலும் தனது பிடிவாத குணத்தை உணர்த்திய சத்தியசீலனிடம், "சத்தியசீலா! சிறுவயதிலேயே நீ மிகுந்த அறிவும் புத்தி சாதுர்யமும் பெற்றிருக்கிறாய். உன்னைப் பாராட்டுகிறேன். உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்!" என்று கேட்டான் மன்னன்.
"மன்னா! நான் எந்தப்பரிசும் கேட்கப் போவதில்லை. உங்களுக்கு கதை சொன்ன அறிஞர்களை நீங்கள் சிறையிலிருந்து விடுவித்தால் போதும்! அதற்காகவே நான் இங்கு வந்தேன்!" என்று பணிவோடு கூறினான். சத்தியசீலனின் அறிவாற்றலையும் நற்குணத்தையும் பாராட்டிய அரசன் சித்ராங்கதன், தான் சிறையிலடைத்த அறிஞர்களை விடுதலை செய்தான். சத்தியசீலனையும் அந்நாட்டு அமைச்சர்களில் ஒருவராகப் பணியமர்த்தினான்.
ஓர் குட்டிக் கதை
யாா் தலைவன்
==============
ஒரு ஊரில் நான்கு ஆண்டிகள்(Beggars) இருந்தனர். அவர்கள் பகல் பொழுதுகளில் ஊருக்குள் சென்று வீடுவீடாக யாசகம்(பிச்சை) பெற்று ஊரார் கொடுக்கும் உணவுகளை உண்பர்.
இரவில் ஊருக்கு வெளியே இருக்கும் ஆலமரத்தில் உள்ள மேடையில் தமது பைகளை தலையணைகளாக்கி துண்டுகளை விரிப்புகளாக்கி வானமே கூரையாக படுத்து உறங்குவர்.
அப்படி அவர்கள் தூங்கும்போது எப்பொழுதும் திசைக்கொருவராக தலைவைத்துப்படுப்பர். அதாவது மரத்தின் மீது தலைபடுமாறு மரத்தை சுற்றி படுப்பார்கள்.
ஒருநாள் மரத்தின் அடியில் படுத்திருக்கும்போது முதல் ஆண்டி “நாம இந்த மரத்தடியில இப்படித்தான் நம்மை வாழ்க்கையைக் கழிப்பதா?” என்று கேட்டான்.
அதற்கு இரண்டாமவன் “இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு?” என்றான். முதலாமவன் “ஏதோ ஊர் மக்களின் உதவியுடன் ஒருவிதமா நம்ம வயித்துப்பாட்ட கழிச்சுட்டு வாரோம். ஆனா நாம தங்குவதற்கு ஒரு இடம்தான் இல்லாமல் போச்சு” என்றான்.
மூன்றாமவன் “இந்த இடத்துக்கு என்ன குறைச்சல்?. இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்படக்கூடாது.” என்றான். நான்காமவன் “இருங்க அவன் என்ன தான் சொல்றான்னு முழுசா கேட்போம். சரி நீ சொல்” என்றான்.
முதலாமவன் “இப்ப வெயில் காலம் நம்ம பாட்டுக்கு மரத்துல தலைய வச்சு கால நீட்டி படுத்துக்குவோம். ஆனா மழை பெஞ்சா எங்க போயும் ஒண்ட முடியாது” என்றான்.
அதற்கு இரண்டாமவன் “மழையில சிரமம்தான் அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான்.
முதலாவது ஆண்டி “அதுக்குத்தான் நாம எல்லோரும் சேர்ந்து ஒரு மடம் கட்டினா என்ன?” என்று கேட்டான். இதனைக் கேட்டதும் நான்காமவன் “ஓ! அது தான் ஒன் திட்டமா?. மடம் கட்டுறது என்ன அவ்வளவு சுலபமா?” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
அதற்கு முதலாமவன் “மடம் கட்ட நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள். நாம நாலு பேரு இருக்கோம். ஆளுக்கு ஒரு வாரத்துக்கு நாலனா சேத்தா ஒரு மாசத்துக்கு 1 ரூ. ஆகும். 100 மாசம் வந்தா 100 ரூபாய் கிடைக்குமில்ல அத வச்சு மடம் கட்டலாம்ல!.” என்றான்.
அதற்கு இரண்டாமவன் “அட. நல்ல யோசனைதான்.” என்றான். முதலாமவன் படுத்துத் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே “அதோ அங்க வாசல் வைக்கணும்.” என்றான்.
இரண்டாமவன் “இதோ இந்தப் பக்கம் ஜன்னல் வைக்கணும் காத்து நல்லாவரும்.” என்று சைகை செய்தான். நான்காமவன் “இந்தா இப்படி போயி, அப்படி வந்து இப்படி திரும்பி அங்க பாக்க சுவர வைக்கணும்.” என்று சைகையில் கூறினான்.
முதலாமவன் “ஆனாமடம் கட்டின பிறகு நாந்தான் தலைவனா இருப்பேன்” என்றான்.
இரண்டாமவன் “அதெப்படி நாந்தான் இருப்பேன்” என்றான்.
நான்காமவன் “அதெப்படி உங்களவிட வயசுல மூத்தவன் நான். அதனால நான்தான் தலைவனாக இருப்பேன்” என்றான்.
முதலாமவன் “இந்த ஐடியா சொன்னதே நான்தான். நான்தான் தலைவனாக இருப்பேன்” என்றான்.
இப்படியாக மூவரும் சண்டையிடுவதை அமைதியாக கேட்ட மூன்றாமவன்
“ ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்பாங்க. இங்க கூத்தாடியே ரெண்டுபட்டா! அவ்ளோதான்..
பேசாம இருங்கப்பா தூக்கம் வருது. நீங்களாவது மடம் கட்டுறதவாவது?” என்று சலித்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அந்த இடம் அமைதியானது. இப்படியாக ஆண்டிகளின் மடம் நிறைவேறாத கனவாகவே இருந்தது....
என் அன்புக்குாியவா்களே,
பைபிளில் இயேசு தம் சீஷா்களுக்கு, தலைவனாக ,பொியவனாக இருப்பதைக் குறித்து போதிக்கும்போது கீழ்கண்டவாறுக் கூறினார்.
உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாய் இருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:26-28)
வேலை செய்யும் இடத்தில், குடும்பத்தில், சபையில், சமுதாயத்தில், தலைவா்களாயிருக்க வேண்டுமென்று எல்லாரும் விரும்புகின்றனா்.
இயேசு கூறினதுபோல..
தலைவனாக இருக்க விரும்புகிறவர்கள் எல்லாருக்கும் பணிவிடை செய்கிறவா்களாய் இருக்க வேண்டும். எந்த இடத்தில் தலைவனாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீா்களோ அந்த இடத்திலுள்ள வேலை அனைத்தும் உங்களுக்குத் தொிந்திருக்க வேண்டும். அதை செய்கிறவா்களாயும் இருக்க வேண்டும்.
அப்போதுதான் வேலையின் நுணுக்கம் தெரியும். அதுமட்டுமல்லாமல் வேலை செய்பவர்களின் கஷ்டம் அவா்களுக்குப் புாியும், வேலைக்காரா்களை தன்னைப் போலவே நினைத்து அனுசாித்துப் போவாா்கள். குடும்ப கஷ்டத்தை அறிந்து அவர்கள் கேட்கிற பணத்தை அட்வான்ஸாக கூட கொடுக்க முன் வருவார்கள்.
இப்படிப் பட்டவர்கள் கடினமுள்ள மனுஷனாக இல்லாமல் மென்மையான, அன்பான மனுஷனாக நல்ல தலைவராக இருப்பாா்.
அதனால் வேலை செய்கிறவர்கள் கூட சம்பளத்திற்கென்று வேலை செய்யாமல் அன்புடனும், கஷ்டமென்று பாராமல் முதலாளியின் மனதறிந்து வேலை செய்வார்கள்.
அதிகாரத்திக்கென்றும், பெருமைக்காகவும், புகழுக்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் தலைவர் பதவி அல்ல என்பதையும் புாிந்து கொண்டாலே தேவசித்தபடி உங்கள் தலைவர் பதவி ஆசீா்வாதமானதாயிருக்கும்.
உதாரணமாக,
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுகொண்டாா்கள்.
To get daily story in whats app contact +917904957814
தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தாா். (அப் 13 :21 -23)
ஆடுகளின் மேய்ப்பனாக கறவலாடுகளின் பின்னால் திாிந்த தாவீதை..தேவன் தொிந்து கொண்டாா். தேவன் தாவீதைக் குறித்து இவ்விதமாகக் கூறினார்.
என் தாசனாகிய தாவீதைக்கண்டு பிடித்தேன், என் பரிசுத்த தைலத்தினால் அவனை தலைவனாக அபிஷேகம்பண்ணினேன். சங்கீதம் 89:20
தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட நல்ல மக்கள் தலைவனாக ராஜாவாகிய தாவீதை இஸ்ரவேல் ஜனங்களுக்காக ஏற்படுத்தினாா். கடைசி வரைக்கும் பேருக்காகவோ, புகழுக்காகவோ பணம் சம்பாதிப்பதற்காகவோ வாழாமல் மக்களின் நல்ல தலைவனாகவே தாவீது ராஜா வாழ்ந்தாா்.
என் அன்புக்குாியவா்களே,
நீங்கள் நல்ல தலைவனாக வேண்டும் என்ற தேவசித்தம், தேவ தீர்மானம், தேவநோக்கம் உங்கள் மேல் இருக்குமென்றால் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் ஆவியானவாின் வழிநடத்துதலில் இருக்க வேண்டும் என்பதுதான்.
ஆவியானவா் உங்கள் எதிர்கால வாழ்க்கையில் ஆண்டிகள் மடம் கட்டியது போலில்லாமல் தாவீதுராஜாவைப் போல உங்களை நடத்துவாா்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
ஓர் குட்டிக் கதை
சாத்தானின் தந்திரங்கள்
============
ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.அந்த விலங்குகளைப் பிடிக்க பலரும் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வருவது வழக்கம். ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் அந்தக் காட்டில் ஒரு கூண்டை வைத்துவிட்டுப் போய் விட்டான்.
அந்தக் கூண்டில் ஒரு புலி மாட்டிக் கொண்டது.
அந்தக் கூண்டில் அகப்பட்ட புலி உறுமிக்
கொண்டு நடைபயின்று கொண்டிருந்தது
அப்போது அந்தக் காட்டுவழியே ஒரு வழிப் போக்கன் சென்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்து அந்தப் புலி
"ஐயா, தயவு செய்து என் அருகே வாரும் "என்று அழைத்தது. புலியைக் கண்டு பயந்து தூர விலகிச் சென்றவன் அதன் அழைப்பைக் கேட்டு கூண்டின் அருகே வந்தான்.
அவனைப் பார்த்து, அந்தப் புலி பரிதாபமாகக் கூறியது. "ஐயா, எனக்கு மிகவும் வயதாகி விட்டது .கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன் என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து விட்டுப் பிறகு உங்கள் வழியே போகலாம் ஐயா."
அதன் முகத்தையும் கூர்மையான அதன் பற்களையும் பார்த்துப் பயந்த அந்த வழிப்போக்கன்,"ஹூ...ஹூம் நான் மாட்டேன்.நீ துஷ்ட மிருகம். உன்னை வெளியே விட்டால் என்னைக் கொன்று தின்று விடுவாய்."என்று மறுத்தான். தன் வழியே போகத் தொடங்கினான்.
அப்போது அந்தப் புலி," ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. இப்போதெல்லாம் நான் மனிதர்களையே தின்பதில்லை. என்னை வெளியே விட்டுப் பாருங்கள் ஐயா.அப்போதுதான் தெரியும் நான் எவ்வளவு நல்லவன் என்று." தயங்கி நின்ற வழிப்போக்கனிடம் அது கெஞ்சி மன்றாடியது. "உன்னைத் தின்னமாட்டேன்" என்று சத்தியம் செய்தது. அதன் தவிப்பைப் பார்த்த அந்த வழிப்போக்கன் பாவமாயிருக்கிறதே இந்தப் புலியைப் பார்க்க என எண்ணி அந்தக் கூண்டின் அருகே சென்று அதைத் திறந்து விட்டான்.
என்ன நடக்கும்?வெளியே வந்த புலி "என்ன நண்பரே, நலமா?" என்றா விசாரிக்கும்?
ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. அந்த மனிதன் பயந்து அலறினான்.
"ஏ புலியே, என்னைத் தின்னமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே,இப்போது கொல்ல வருகிறாயே,"
"அட அப்பாவி மனிதா,பட்டினியாய் இருப்பவர் முன் உணவு கிடைத்தால் உண்ணாமல் இருப்பது முட்டாள்தனம் அல்லவா? இது தெரியாதா உனக்கு?"
"இதோ பார், நீ செய்வது நியாயம் என்று யாராவது சொன்னால் நான் உனக்கு உணவாகிறேன்." என்றான் நடுங்கியவாறே.
அந்த சமயம் பார்த்து ஒரு நரி அந்த இடத்துக்கு வந்தது.நரியைப் பார்த்த வழிப்போக்கன்
"இந்த நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான்.
புலி "இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. எனக்கு சாதகமாகத்தான் சொல்லும் என எண்ணிக் கொண்டு நரியிடம் நியாயம் கேட்க சம்மதித்தது.
அருகே வந்த நரியைப் பார்த்து புலி அதிகாரத்துடன் பேசியது.
"நரியாரே, நீரே நியாயம் சொல்லும்.நான் கூண்டுக்குள் இருந்தேனா, இந்த மனிதன் வெளியே போய்க்கொண்டு இருந்தாரா,"என்று சொல்லும்போது நரி குறுக்கிட்டு,
"என்ன என்ன, யார் உள்ளே இருந்தது, யார் வெளியே இருந்தது?" என்று ஒன்றுமே புரியாதது போல் கேட்டது.
புலி பொறுமையாக மீண்டும் கூறத் தொடங்க, நரி "ஒ..ஹோ.. இந்த மனிதன் கூண்டுக்குள்ளும் நீங்கள் வெளியிலும் இருந்தீர்களா?" என்று வேண்டுமென்றே கூறியது.
புலி பொறுமையிழந்து,உறுமியது.அதைக்கண்டு அஞ்சியது போலப் பாசாங்கு செய்த நரி,
"புலியாரே, மன்னியுங்கள் எனக்கும் வயதாகிவிட்டதால் மறதி அதிகம். சரி தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று நின்று சொல்லுங்கள் என்றதும் புலி கூண்டுக்குள் சென்று நின்றது."
இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்..."என்று நரிக்கு விளக்கமாக சொல்வதில் கவனமாக இருக்கும்போது, நரி மெதுவாக அந்த வழிப்போக்கனிடம்,"ஓய், சீக்கிரம் கூண்டுக் கதவைச் சாத்துமய்யா, நிற்கிறீரே"என்று கூறவும்
பாய்ந்து சென்று கூண்டுக் கதவைச் சாத்தி விட்டு அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் அந்த மனிதன்.
அந்தநரி, "துஷ்டரைக் கண்டால் தூர விலகு "என்ற பழமொழியை அறியமாட்டீரா,உங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போங்கள் ஐயா"என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிட்டது.
உண்மைதான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன் என்று சொல்லியவாறே வேகமாக அங்கிருந்து நடந்தான் அந்த மனிதன்.
அறியாமையாலும் அவசரத்தாலும் ஆணவத்தாலும் மீண்டும் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதைஎண்ணி உறுமியவாறு நின்றிருந்தது அந்தப் புலி.
என் அன்புக்குாியவா்களே,
உங்கள் வாழ்வில் நீங்கள் இந்தப் பழமொழியை மறவாமல் இருந்தால் பல துன்பங்கள் உங்களை அணுகாமல் நீங்கள் பாதுகாப்பாய் இருக்கலாம்.
To Get Daily Story In What's App Contact +917904957814
இந்த புலியைப் போலவே சாத்தான் தந்திரம் உள்ளவனாய் இருக்கிறான். ஆதியிலே முதல் மனுஷியாகிய ஏவாளை சாத்தான் தந்திரமாய் சா்ப்பத்துக்குள் புகுந்து வஞ்சித்தான்.
பவுல் சொல்கிறாா்.
நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக் கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவ வைராக்கியங் கொண்டிருக்கிறேன்*.
ஆகிலும், சா்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும்கிறிஸ்துவைப் பற்றிய உண்மை யினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். - 2 கொரிந்தியர் 11:2,3
இந்த வசனங்களைப் போல
இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை அவன் வஞ்சிப்பதற்கு தீவிரமாய் இருக்கிறான். எனவே கா்த்தருடைய ஆவியினால் அவனுடைய தந்திரத்தை தொிந்து கொள்ள வேண்டும்
சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. என்று பவுல் கூறுகிறார். - 2 கொாிந்தியா் 2:11
புலி எப்படி மீண்டுமாக அடைக்கப்பட்டதோ அதைப்போலவே நீங்கள் சாத்தானின் தந்திரத்திரத்தில் சிக்கி பல கஷ்டங்களுக்குள் இருப்பீா்களென்றால் உடனடியாக நீங்கள் மனம்திரும்பி தேவனிடத்தில் உங்களை ஒப்புக் கொடுத்து ஜெபம் பண்ணுங்கள்.
அவரே, உங்களை சாத்தானின் தந்திரங்களின்று உங்களை உடனடியாக விடுவிப்பாா்.
அதற்கு பின் நீங்கள் சாத்தானின் தந்திரங்களில் சிக்காத படிக்கும் அவைகள் வரும் போது அவைகளை இனம் கண்டு கொண்டு அழித்து விடவும் உங்களுக்கு தமது வல்லமையையும் அதிகாரத்தையும் கொடுக்கிறாா்.
அவா் வல்லமையில் ஒவ்வொரு நாளும் நிறைந்து அவா் பெலத்தாலும், ,அவா் அதிகாரத்தாலும் சாத்தான் தந்திரமாய் நண்பா்கள், குடும்பத்தினா், வேலை செய்யும் இடத்தில் உள்ளோா் மூலமாக கிாியை செய்யும் சாத்தானின் கிாியைகளை அறிநது அவைகளை தேவனுடைய வாா்த்தையைக் கொண்டு அவன் தந்திரங்களையும் அவன் கிாியைகளையும் அழித்து விடுங்கள்.
பைபிள் சொல்கிறது...
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிக ளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவா் களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும் படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். - எபே. 6:11 - 13
தேவன் உங்களை இவ் வசனங்களின்படி உங்களுக்கு எதிராக வரக்கூடிய சாத்தானின் தந்திரங்களையும் கிாியைகளையும்
தேவ ஆவியானவாின் சா்வாயுத வா்க்கத்தைக் கொடுத்து அவைகளை முற்றிலுமாய் அழித்து போட செய்வார்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள்!!!!
Thanks for using my website. Post your comments on this