Type Here to Get Search Results !

ஒரு இஞ்ச் தூரம் | இறைவன் இருக்குமிடம் | இல்லாத திருடனைப் பிடித்த கதை | குட்டிக் கதை | Jesus Sam

ஓர் குட்டிக் கதை
ஒரு இஞ்ச் தூரம்
==========
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு பழக்கம் இருந்தது. அது என்னவெனில் ஒருவிதமான பூச்சியை பிடித்து ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள் சுவாசிப்பதற்காக இருக்கும் அந்தப் பூச்சியானது மேலே நோக்கிப் பறந்து வெளியே போக முயற்சி பண்ணும்.

அவ்வாறு முயற்சிக்கும்போது, மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, "அய்யோ, வலிக்குதே..... இனிமேல் மேலே போகக்கூடாது" என்று தீர்மானித்துக் கொள்ளும். அதேபோல இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக வெளியே செல்ல முயற்சிக்கும், அதே அடி அதே வலி அதே தீர்மானம்.

இப்படியாக எல்லா திசைகளிலும் பறந்து வெளியே செல்ல முயன்று எல்லா முயற்சிகளும் தோல்வியுற்ற பிறகு ஒரு முடிவுக்கு வரும், இதுதான் நமது விதி இந்தக் கூண்டுக்குள் தான் இனி நமது வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கிறது, இனி முயற்சி செய்து பலன் இல்லை என்று நினைத்துக் கொள்ளும்.

இந்த கூண்டுக்குள் நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதியாக வாழலாம் என்று சிந்திக்கத் தொடங்கி விடும். அதோடு மட்டுமல்லாது அந்த கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். பிரேக் போட்டது போன்று இந்த தடவை கண்ணாடியில் இருந்து ஒரு இன்ச் தொலைவில் நின்று விடும்.

அதனால் கண்ணாடியில் இடியும் இல்லை வலியும் இல்லை. அதே போல் எல்லா திசைகளிலும் சரியாக ஒரு இன்ச் இடைவெளி விட்டு நின்றுவிடும். அவ்வாறு எந்தத் திசையில் பறந்தாலும் எங்கும் இடிக்காமல் இருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளும். மேலும் அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பூச்சி, கண்ணாடியில் எந்தத் திசையிலும் இடிக்காமல் பறப்பதை பார்த்ததும் அந்தப் பூச்சியை சுற்றிலும் இருக்கிற கண்ணாடியை எடுத்து விடுவார்கள். இப்போது மேலேயோ கீழேயோ எந்தத் திசையிலும் கண்ணாடி இல்லை. ஆனாலும் அந்த பூச்சி அந்த ஒரு இன்ச் தொலைவை சரியாக கடைப்பிடித்து.

எவ்வித கலக்கமும் இன்றி கண்ணாடிப் பெட்டி இல்லாமலேயே தன்னுடைய வாழ்க்கையை இறுதிவரை வாழ்கிறது அந்த பூச்சி. ஒரு வேளை தன்னுடைய எண்ணத்தை மாற்றி ஒரு இன்ச் அதிகம் பறக்க முயற்சி செய்து இருக்குமென்றால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கலாம். ஆனால் அதற்கான எந்த ஒரு முயற்சியும் அந்த பூச்சி மேற்கொள்ளவில்லை.

என் அன்பு வாசகர்களே,
நம்மில் பலர் இந்த பூச்சியை போன்று தான் வாழ்ந்து வருகிறோம். முயற்சி செய்வதை விட்டுவிட்டு இல்லாத வேலியில் எதிலும் இடிக்காமல் எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் இது தான் விதி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

To Get Daily Story In What's App Contact +917904957814

வேதாகமத்தில் தேவனுடைய அழைப்பை பெற்ற அனைவரும் மனிதர்களின் கண்களுக்கு ஆச்சிரியமானதும், மனிதர்களால் செய்யக்கூடாததுமான அசாத்தியமான காரியங்களை செய்தார்கள். அவர்களும் முதலில் இந்த பூச்சியைப் போன்று தங்களால் இயலாது என்று தான் சிந்தித்தனர். ஆனால் தேவனுடைய கிருபை அவர்களோடு இருந்ததால் எல்லாவற்றையும் எளிதாக செய்து முடித்தார்கள்.

அதிலும் பிரதானமாக, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் இறப்பு வரை அத்தனை காரியங்களும் நடைந்தேறுமளவும் எதுவும் சாத்தியமில்லை என்று தான் எல்லோரும் சிந்தித்தனர். ஆனால் சாத்தியமில்லாதவைகளை சாத்தியமாக்கும்படி தேவன் இவற்றை செய்து முடித்தார்.

நாமும் நம்மால் முடியாது, இயலாது என்று நினைக்கிற காரியங்கள் அதாவது நமக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமுள்ளதும் யாருக்கும் தீங்கு விளைவிக்காததுமாகிய காரியங்களை செய்ய முயற்சிக்கும் போது தேவ கிருபை ஒவ்வொருவரையும் தாங்கி வழிநடத்தி மனிதர்களால் முடியாததை தேவன் முடிக்கச் செய்வார்.

*27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
மாற்கு 10:27*

எனவே மனிதர்களாகிய நம்மால் முடியாததை தேவனிடத்தில் ஒப்படைத்து ஜெபிப்போம், எல்லாவற்றையும் திறம்பட செய்து முடிக்க தேவன் உதவி செய்வார்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!



ஓர் குட்டிக் கதை
இறைவன் இருக்குமிடம்
===============
ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு பல தோட்டங்கள் இருந்தன. அவற்றில் வாழைத்தோட்டமும் அடங்கும். அந்த வாழைத்தோட்டத்தில் முதல் முதலாய் குலைத்த வாழைக்குலையை கோயிலுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதை போலவே அந்த வாழைத்தோட்டத்தில் விளைந்த முதலாவது வாழைக்குலையை தன் வேலைக்காரன் ஒருவனிடம் கொடுத்து அதை கோயிலில் ஒப்படைக்க சொன்னார். அந்த வேலைக்காரனும் தன் எஜமான் சொன்னதைப் போல அந்த வாழைக்குலையுடன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றான்.

அந்த வாழைக்குலை பெரிதாகவும், அதிக எடையுடனும் இருந்தது. அந்த வேலைக்காரன் அதை மிகுந்த சிரமத்தோடு கொண்டு சென்றுக்கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்றதும் மிகுந்த பசியும் மயக்கமும் வந்தது. எனவே ஒரு மரத்தடியில் படுத்து இளைப்பாறிவிட்டு மறுபடியும் தன் பயணத்தை தொடர்ந்தான்.

எனினும் பசி மேலோங்கியதால் சிறிது தூரத்திற்கு மேல் அவனால் அந்த வாழைக்குலையை கொண்டு நடக்க முடியவில்லை. ஆகவே தான் கோயிலுக்குச் கொண்டு சென்ற அந்த வாழைக்குலையிலிருந்து மூன்று பழங்களை எடுத்து சாப்பிட்டான். அதன் பிறகு தான் அவனுக்கு உயிர் வந்தது போல் இருந்தது. மீண்டும் அந்த வாழைக்குலையுடன் தன் பயணத்தை தொடங்கி கோயிலில் அந்த பழக்குலையை ஒப்படைத்தான்.

கோயில் நிர்வாகிகள் அந்த பழங்களை பெற்றுக்கொண்டு அந்த வேலைக்காரனை அனுப்பிவிட்டனர். அந்த வேலைக்காரனும் தன் எஜமான் வீட்டிற்கு சென்றுவிட்டார். அன்று இரவு அந்த செல்வந்தர் ஒரு கனவு கண்டார், அதில் இறைவன் தோன்றி நீ எனக்கு கொடுத்த மூன்று பழங்களையும் சாப்பிட்டேன் மிகவும் அருமையாகவும், ருசியாகவும் இருந்தது என்றார். இதை கண்டதும் விழித்த அந்த செல்வந்தர் அந்த வேலைக்காரன் மீது கோபம் கொண்டார்.

To Get Daily Story In What's App Contact +917904957814

மறுநாள் அந்த வேலைக்காரன் வந்ததும் அவனிடம் அதைக்குறித்து விசாரித்தார். முதலில் மறுத்த அவன் தன் எஜமானிடம் நடந்ததை முழுவதும் சொன்னான். அப்போது தான் அந்த எஜமானுக்கு புரிந்தது அந்த ஏழை வேலைக்காரன் சாப்பிட்ட பழங்கள் மட்டுமே இறைவனை சென்றடைந்திருக்கிறது என்று. அன்று முதல் அந்த எஜமான் தன் வேலைக்காரர்களுக்கு அநேக வெகுமதிகளை கொடுத்து அவர்களை அன்போடு நடத்தினான்.

என் அன்பு வாசகர்களே,
இந்த உலகத்தில் ஒரு சொல் உண்டு *ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்* என்று. ஆம் நாம் உளமாற ஏழைகளுக்கு கொடுப்பது தேவனுக்கே நேரடியாக கொடுப்பதற்கு சமானம். என்னத்தான் கோடி கோடியாய் நாம் காணிக்கை செலுத்தினாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள் கஷ்டப்படும் போது அதை வேடிக்கை பார்ப்பதால் எந்த பிரயோஜனமுமில்லை.

இன்றைய கதையிலும் அந்த செல்வந்தர் தன்னை சார்ந்து வாழும் அந்த ஏழை வேலைக்காரனை நோக்காது அவனுக்கு உதவாது இருந்தான். இறுதியில் அந்த வேலைக்காரன் மூலமாய் அவன் கண்கள் திறக்கப்பட்டது.

வேதம் சொல்கிறது,
17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
நீதிமொழிகள் 19:17

எனவே நம்மால் இயன்ற மட்டும் நாம் ஏழைகளுக்கு உதவுவோம் தேவனிடத்திலிருந்து பல மடங்காய் திரும்ப பெற்றுக் கொள்வோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!



ஓர் குட்டிக் கதை
இல்லாத திருடனைப் பிடித்த கதை
=================
வீண் புகழ்ச்சி - தன்னை மற்றவர்களிடம் பெரியவனாய் எல்லாவற்றிலும் நல்லவனாய் வல்லவனாய் காண்பிப்பது. அதனால் அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த ஒரு பயனுமில்லை என்பது தான் உண்மை. ஆனால் அவர்கள் அதை தான் விரும்புகின்றனர். வீண் புகழ்ச்சி இல்லையென்றால் அவர்களால் வாழ்க்கை நடத்த முடியாது ஏனெனில் அவர்கள் அவ்வாறு பழகிவிட்டதால் அது தான் வாழ்க்கை‌ என்றாகிவிட்டது.

அவ்வாறு வீண் புகழ்ச்சி மூலம் ஒரு மனிதன் என்னவெல்லாம் பெற்றுக்கொண்டான் என்பதை இக்கதையின் மூலம் காண்போம்.

முன்னொரு காலத்தில் “ஓஹோ ராமன்’ என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் தன்னைப் பற்றி “ஓஹோ’ என்று புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்ததாலும் அவ்வூரில் மேலும் பலர் ராமன் என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாலும் அவ்வூர் மக்கள் அடையாளத்துக்காக அவனை “ஓஹோ ராமன்’ என அழைத்து வந்தனர்.

ஓஹோ ராமன் அரண்மனையில் சமையல் வேலை, குதிரைலாய வேலை, பாத்திரம் கழுவுதல், துணிகளைத் துவைத்தல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமா எடுபிடி வேலைகளைச் செய்து வந்தான்.

ஆனால் தனது தெரு நண்பர்களிடம் அரண்மனை முழுவதற்கும் தானே மேற்பார்வை அலுவலர் என்றும், தனக்குக் கீழே 100 பேர் வேலை செய்கிறார்கள் என்றும் கூறிக் கொண்டிருந்தான்.

மன்னரிடம் தனக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதாகவும் முக்கிய விஷயங்களில் மன்னர் தன்னிடம் ஆலோசனை பெற்றே முடிவெடுப்பார் என்றும் கூறுவான்.

மகாராணியார் நோய்வாய்ப்பட்ட சமயத்தில் அரண்மனை வைத்தியர் கொடுத்த மருந்தில் குணமாகாத நோய் தான் வைத்துக் கொடுத்த மிளகு ரசத்தால் குணமானது என்றும் அதனால் மகாராணி, “ராமனின் கைப்பக்குவமே பக்குவம்’ என்று அவனைப் புகழ்ந்ததாகவும் பொய் கூறினான்.

ஒருசமயம் அரண்மனை உப்பரிகையில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசர் தவறிக் கீழே விழுந்துவிட்டதாகவும் தான் கையால் தாங்கிப் பிடித்து அவர் உயிரைக் காப்பாற்றியதாகவும் இதனால் மன்னர் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கூடியவிரைவில் விருந்தளிக்க இருப்பதாகவும் எல்லோரிடமும் கூறிக் கொண்டிருந்தான்.

இப்படியாக நாளொரு பொய்யும் பொழுதொரு புனைக் கதையாகவும் கூறி வந்தான்.

ஆனால் அவன் மனைவியோ அவன் பொய் கூறுவதை மிகவும் வெறுத்தாள்.

“”ஏன் இப்படித் தேவையில்லாமல் பொய் கூறுகிறீர்கள்? இதனால் நமக்கு என்ன லாபம்? உங்கள் தற்பெருமையாலும் பொய்யாலும் ஒருநாள் நமக்குத் தீங்குதான் நேரும்!” என்று கூறிக் கண்டிப்பாள். ஆனால் ராமனோ திருந்த மாட்டான். அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் உண்மை எது, பொய் எது? என்பது அவனுக்கேகூடத் தெரியாது.

மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகப் பகட்டான ஆடை அணிந்து கொண்டு வேலைக்குச் செல்வான். அரண்மனை சென்றதும் பணியாளர்களுக்கான சீருடைகளை அணிந்து கொள்வான்.

அவன் ஊரைவிட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமான தெருவில் ஒரு எளிய ஓலைக்குடிசையில் வாழ்ந்து வந்தான்.

மக்களில் சிலர், “”அரண்மனையில் உயர்ந்த பதவியில் இருக்கும் நீங்கள் இந்தக் குடிசையில் வசிப்பது ஏனோ?” என்று கேட்டனர்.

“”நான் எளிமை விரும்பி, எனக்கு ஆடம்பரமே பிடிக்காது! என் தகுதிக்கும் திறமைக்கும் மன்னரே எனக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறினார். நான்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்…” என்றெல்லாம் அளந்து கொண்டிருப்பான்.

இப்படி இருக்கையில் ராமன் ஒருநாள் இரவு தனது வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அன்று அமாவாசையாக இருந்ததால் எங்கும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. ராமன் வசித்த தெருவில் முதல் வீடு குயவர் ஒருவருடையது. அவர் மண்பானைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருந்தார். நன்கு தின்று கொழுத்த பெருச்சாளி ஒன்று அப்பானைகளுக்கிடையே ஓடியது. இதனால் அடுக்கி வைத்திருந்த பானைகளில் சில கீழே விழுந்து உடைந்தன.

திடீரென்று பானைகள் உருண்டு விழுந்ததைக் கண்ட ராமன் பயந்து ஓடத் தொடங்கினான். பானைகள் உடைந்த சத்தத்தைக் கேட்ட குயவர் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து பார்த்தார்.

பானைகளில் சில உடைந்திருப்பதையும் ராமன் வேகமாக ஓடிக் கொண்டிருப்பதையும் கண்ட, அவர் அவனருகே ஓடிச் சென்று, “”என்ன ஆச்சு?” என்று கேட்டார்.

அவரிடம் தான் பயந்திருப்பதைக் காட்டினால் அவமானம் என்று கருதியதாலும் பொய் சொல்லியே பழக்கப்பட்டதாலும், “”பல நாட்களாக இங்கு ஒரு திருட்டுப் பயல் உலவிக் கொண்டிருக்கிறான். அவன் உங்கள் வீட்டுப் பானைகளைத் திருட முயற்சிக்கும்பொழுது நான் வந்து விட்டேன். என்னைக் கண்டதும் பயந்து போய், பானைகளைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டான்…” என்று கூறினான் ராமன்.

இதைக் கேட்ட குயவரும், “”ஆமாம் ஐயா! பல நாட்களாக என் பானைகள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகின்றன. அந்தத் திருட்டுப் பயல் மட்டும் என் கையில் கிடைத்தால் தோலை உரித்து விடுவேன்” என்ற கூறினார்.

இவர்கள் பேச்சுக் குரலைக் கேட்ட அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடினர். உண்மையிலேயே அத் தெருவில் சில நாட்களாகப் பொருள்கள் திருடு போய்க் கொண்டிருந்தன. எனவே அங்கு கூடியிருந்தவர்கள் அன்று இரவே எப்படியாவது அந்தத் திருடனைப் பிடித்து விடவேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதைச் சற்றும் எதிர்பாராத ராமன் வியர்த்து வெளிறிப் போனான். இதற்கிடையில் குயவர் வீட்டைவிட்டு நகர்ந்த பெருச்சாளி, வேகமாகக் காய்ந்த சருகுகளின் மீது ஓடி அடுத்த வீட்டின் சுற்றுச் சுவர் மீது ஏறி தொப்பென்று கீழே குதித்தது.

இந்தச் சத்தத்தைக் கேட்ட, அங்கிருந்த கூட்டம், “”டேய், யாரடா அது? நீ எங்கு போனாலும் உன்னைவிடமாட்டோம்” என்று கூறிக் கொண்டே வீதிகளில் ஓட ஆரம்பித்தனர்.

இவர்களின் சத்தத்தைக் கேட்ட பெருச்சாளி பயந்து போய் இருட்டில் அங்குமிங்கும் ஓடியது.

இதனால் அந்த வீட்டின் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சவுக்குக் கம்புகள் சரிந்து விழுந்தன. கம்புகளில் ஒன்று வெளியே பானையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு மண்சட்டியின் மேல் விழுந்தது. இதனால் பானை உடைந்து தண்ணீர் தரையெங்கும் கொட்டியது. இந்த ஓசையைக் கேட்டுத் தெரு நாய்கள் குரைக்க ஆரம்பித்தன.

இதனால் அந்த வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவரும் கையில் தடியுடன் ஓடி வந்தார். இப்பொழுது இருபது பேர் கையில் தடியுடனும் தீப்பந்தங்களுடனும் இல்லாத திருடனைப் பிடிக்க வெறியோடு அங்குமிங்கும் ஓடினர்.

இவர்களுக்குப் பயந்த பெருச்சாளி இப்பொழுது ராமன் வீட்டுச் சுற்றுச் சுவரின் மீது ஏறி உள்ளே ஒரு பெரிய வைக்கோல் போரின் அருகே குதித்தது. வைக்கோல் போரின் மேல் தூங்கிக் கொண்டிருந்த பூனை விழித்தெழுந்து பெருச்சாளியைப் பிடிக்க ஓடியது. இதனால் வைக்கோல் போர் அசைய ஆரம்பித்தது.

இதைக் கண்ட அத் தெருவாசிகள் ராமன் வீட்டருகே ஓடி வந்தனர். இதற்குள் பெருச்சாளி வேகமாக ஓடி சாக்கடைக்குள் சென்று மறைந்து கொண்டது. மனிதர்களைக் கண்ட பூனை இருட்டில் எங்கோ சென்று மறைந்து விட்டது.

“”அந்தத் திருட்டுப் பயல் இந்த வைக்கோல் போருக்குள்தான் ஒளிந்து கொண்டிருக்கிறான்” என்று கூட்டத்தில் ஒருவர் கூறினார்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ராமன், “”ஐயா, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! இந்த இருட்டில் தூங்காமல் என்னுடன் நீங்களும் திருடனைப் பிடிக்க அலைந்தீர்கள். அத் திருடன் இப்பொழுது என் வீட்டில்தான் ஒளிந்து கொண்டிருக்கிறான். நான் மன்னரின் படை வீரர்களுக்கு மல்யுத்தப் பயிற்சி அளிப்பவன். எனவே நானே அவனைக் கையும் களவுமாகப் பிடித்து மன்னரிடம் ஒப்படைத்து விடுகிறேன். நீங்கள் எல்லோரும் அவரவர் வீடுகளுக்குச் செல்லுங்கள்” என்று கட்டளையிடாத குறையாகக் கூறினான்.

இதைக் கேட்ட அக்கூட்டத்தினர், “”இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுவிட்டு அவன் முகத்தைப் பார்க்காமல் போவதா? அவனை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்…” என்று கூறினர்.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது கையில் தீப்பந்தம் ஏந்திய ஒருவர், “”நீங்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தால் அவன் மறைந்து விடுவான். இந்த வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அவனை எப்படி வெளியே கொண்டு வருவது என்று எனக்குத் தெரியும்!” என்று கூறித் தன் கையிலிருந்த தீப்பந்தத்தை வைக்கோல் போரின் மீது எறிந்தார். இதனால் வைக்கோல் போர் திகுதிகுவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

வைக்கோல் போர் திடீரென்று எரியத் தொடங்கியதைக் கண்ட ராமனின் மனைவியும் மகனும் அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.

To Get Daily Story In What's App Contact +917904957814

காற்று வேகமாக அடித்ததால் வீட்டுக் கூரையின் மீதும் தீப்பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. இப்பொழுது ராமன் செய்வதறியாது திகைத்தான். தன் மனைவியின் முகத்தைப் பார்க்கத் துணிவில்லாமல் தலை குனிந்தான்!

அங்கு கூடியிருந்த மக்கள் ராமனின் மனைவியிடம், “”அம்மா, கவலைப்படாதீர்கள். இந்தப் பகுதியில் வெகுநாட்களாக அலைந்து கொண்டிருந்த திருடனைப் பிடிக்கவே நாங்கள் தீ வைத்தோம். இந்நேரம் அவன் எரிந்து சாம்பலாகி இருப்பான். மன்னரிடம் உங்கள் கணவருக்கு இருக்கும் செல்வாக்குக்கு மன்னரே உங்களுக்கு வேறு வீடு கட்டித் தருவார்” என்று கூறினர்.

ராமன் தான் கூறிய ஒரு சிறிய பொய்யின் விளைவை எண்ணி வருந்தினான். தன் மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் தவித்தான்.

என் அன்பு வாசகர்களே,
வீண் புகழ்ச்சி விபரீதத்தில் தான் முடியும் என்பதே இக்கதையின் கருத்து.

புகழ்ச்சி நம்மை குறித்து நாமே சொல்வதல்ல நம்மை குறித்து பிறர் பேசுவதே புகழ்ச்சி. மேலும் இவர்களை குறித்து வேதம் இவ்வாறு கூறுகிறது


12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
மத்தேயு 23:12

இன்றைய கதையில் தன்னை தானோ உயர்த்தி தன்னை பெரியவனாக்கி ஒன்றுமில்லாத ஒரு சிறிய எலியினிமித்தம் தான் தங்கியிருந்த அந்த குடிசை வீடும் பறிபோனது. அதுவே அவன் தன்னை ஆரம்பத்திலேயே தாழ்த்தியிருந்தால் அதாவது தன் பயத்தை சொல்லியிருந்தால் நிச்சயம் அந்த ஊரின் ஜனங்கள் அவனுக்கு ஒத்தாசையாய் இருந்திருப்பார்கள்.

எனவே இதை வாசிக்கின்ற வாசகரே வசனத்தின் பிரகாரம் நம்மை நாமே தேவனிடத்தில் தாழ்த்தி ஒப்புகொடுப்போம் தேவ கிருபைகளை பெற்றுக் கொள்வோம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.