Type Here to Get Search Results !

Job 19-21 A LIVING REDEEMER | என் மீட்பர் உயிரோடிருக்கிறார் | யோபு 19-21 வேத ஆராய்ச்சி கட்டுரை | Gospel Sermon Points | Jesus Sam

யோபு 19 - 21*

💥 *என் மீட்பர் உயிரோடிருக்கிறார்* 💥




☄️ *“என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.”* (யோபு 19:25-26).


🔸 தனது வாழ்க்கை ஏன் சிதைந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதை யோபுவால் புரிந்துகொள்ள முடியவில்லை. பரலோகத்தில் நடக்கும் மோதலை அவன் அறிந்திருக்கவில்லை. அவனுக்கு ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, அவனது நண்பர்கள் அவனது நிலையை மோசமாக்கினர். *அவனது நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் வேலைக்காரர்கள் அனைவரும் அவனை பரியாசம்பண்ணி கைவிட்டனர்.* ஆனால், அவன் *உயிரோடிருக்கும் மீட்பரின்மேல்* நம்பிக்கை வைத்தான். கைவிடப்பட்ட போதிலும், *தேவன் தன்னை விடுவித்து தன்னுடைய மகிமையை மீட்டெடுப்பார்* என்று உறுதியாக நம்பினான்.




🔸 *இஸ்ரவேலை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததால் தேவன் 'மீட்பர்' என்று அறியப்பட்டார்* (ஏசாயா 41:14). தனது மீட்பர் தனது நம்பிக்கைக்கு சான்றளிப்பார் என்று யோபு நம்பினான். இதேபோல், *இன்று கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்து நமக்காக பரிந்துபேசுகிறார் என்பதை உறுதியுடன் அறிக்கை செய்ய வேண்டும்.*




🔸 யோபு தனது *தோல் முதலானவை அழுகிப்போனபின்பும், தனது மாம்சத்தில் இருந்து தேவனைக் காண்பான்* என்று அறிவித்தான். இந்த பூமியில் தன் வாழ்க்கை முடிந்த பிறகும், தேவனைத் தன் கண்களால் காண்பான் என்பது அவனது நம்பிக்கை. என்ன ஒரு நம்பிக்கை! சில ஆவிக்குரிய உண்மைகளை நாம் அறிந்துகொள்ள முடியும். நமது சரீரத்தில் வரவிருக்கும் மரணத்தையும், அதற்குப்பின் உண்டாகும் அழிவு மற்றும் சிதைவு ஆகியவற்றையும் நாம் கருத்தில் கொள்வது நல்லதே. ஆனால், *நமது சரீரத்தின் உயிர்த்தெழுதலில்* உள்ள நமது நம்பிக்கை குறையவே கூடாது. முதலில் *மனித சரீரத்தை சாதாரண மண்ணிலிருந்து படைத்த தேவவல்லமை, கல்லறையிலுள்ள தூசியிலிருந்து புதிய சரீரத்தையும் உருவாக்க முடியுமே.*




🔸 கிறிஸ்து தம்மை நேசிப்பவர்களுக்கும் நம்புகிறவர்களுக்கும் அவர் கொடுத்த அனைத்து திட்டங்களையும் வாக்குறுதிகளையும் ஒரு நாள் நிறைவேற்றுவார். அவர் *நிச்சயமாக பூமிக்குத் திரும்ப வருவார்.* சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி: *"உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார்."* (அப்போஸ்தலர் 1:11).




🔸 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில், உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களின் மறுரூபமாகுதலையும் மரித்த பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதலையும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அறிந்திருந்திருக்க வேண்டும் என்று பவுல் விசுவாசிகளுக்கு எழுதினான். *"எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்."* (1 கொரிந்தியர் 15:52). *"நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்."* (ரோமர் 8:23).




🔸 யோவான் எழுதியிருக்கிறான்: *"அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.”* (1 யோவான் 3:2-3).




🔹 *விரைவில் வரவிருக்கும் நம் உயிரோடிருக்கும் மீட்பரை சந்திக்க நாம் ஆயத்தமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *யோபு தனது மீட்பர் தனது நம்பிக்கைக்கு சான்றளிப்பார்* என்று உறுதியாக இருந்ததுபோல, *கிறிஸ்து நமக்காகப் பரிந்துபேசுகிறார்* என்பதை நாம் உறுதியுடன் அறிக்கை செய்ய வேண்டும்.

2️⃣ *முதலில் மனித சரீரத்தை சாதாரண மண்ணிலிருந்து படைத்த தேவவல்லமை, கல்லறையிலுள்ள தூசியிலிருந்து புதிய சரீரத்தையும் உருவாக்க முடியும்.*

3️⃣ *கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது, உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களின் மறுரூபமாகுதலும், மரித்த பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதலும் நிகழும்.*

4️⃣ *கிறிஸ்து வெளிப்படும்போது நாம் அவருக்கு ஒப்பாயிருப்போம்; எனவே, அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல நாமும் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை

(யோபு : 19 -21)

💐💐💐💐💐💐💐💐

*என் சகோதரரை என்னை விட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்*.

*என் பந்து ஜனங்கள் விலகிப் போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்து விட்டார்கள்*.

*என் வீட்டு ஜனங்களும் என் வேலைக்காரர்களும் என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள். அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்*.

*நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான். என் வாயினால் நான் அவனைக் கெஞ்ச வேண்டியதாயிற்று*

*என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது.என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்*.

*சிறு பிள்ளைகளும் என்னை அசட்டை பண்ணுகிறார்கள்; நான் எழுந்தால் அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்*.

*என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்*.

( யோபு : 19: 13-19)

◆ யோபு அடைந்த அவமானங்களைப் பார்த்தீர்களா.

அவரது சகோதரர், நண்பர், உறவினர், வீட்டிலிருப்போர், வேலைக்காரர்கள், மனைவி, சிறுபிள்ளைகள், நெருங்கிய நண்பர்கள், அவர் விரும்பியவர்கள் யாவரும் அவரை வெறுத்தனர்.

▪️நம்முடைய வாழ்க்கையிலும் இத்தகைய நிந்தைகள் அவமானங்கள் நேரிட்டால்

மத்தேயு : 5:4,11 ல் குறிப்பிடப்பட்டது போல

*துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்*.

*என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களா யிருப்பீர்கள்* என்ற வசனங்களை நினைத்து தைரியம் அடைய வேண்டும்.

யோபைப்போல நாம் யாரும் துன்பப்படவில்லையே?

▪️யோபைப்போல *கர்த்தரின் மேல் நம்பிக்கையா யிருப்பேன்* என்று கூறி விசுவாசத்தில் உறுதியாயிருப்போமாக.

*ஆமென்*


*யோபு 19 - 21*

*கர்த்தரை அறிகிற அறிவிலே*

*வளருவோம்*..




யோபு, கொடிய வேதனையினால்.. மரணத்தினாலாவது தனக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்காதா என்று வாஞ்சித்து நின்றான்..




இத்தகைய தன்னுடைய கொடுமையான துன்பத்திற்குக் காரணம்.. சாத்தானே என்பதை அவன் அறியாதிருந்தான்..

தனது விரக்தியினால்..

தேவனையே.. குற்றஞ் சொன்னான்..




ஆனாலும்,அப்படிப்பட்ட நிலைமையிலே.. யோபு தேவனைக் குறித்துக் கூறின நம்பிக்கையின் சாட்சிதான்..

"*என் மீட்பர் உயிரோடு* *இருக்கிறார் என்றும், அவர்* *கடைசி நாளில் பூமியின் மேல்* *நிற்பார் என்றும் நான்* *அறிந்திருக்கிறேன்*, *இந்த என் தோல்* *முதலானவைகள்* *அழுகிப்போன பின்பு.. நான் என்* *மாம்சத்தில் இருந்து தேவனைப்* *பார்ப்பேன்…அந்நிய கண்களல்ல, என் கண்களே அவரைக் காணும்*" *என்ற வார்த்தைகள்தான்*..

( யோபு 19 : 25 -27 )

*5000 ஆண்டுகளாக*.. *பாடுகளைக் கடந்துவரும்* *பல்லாயிரக்கணக்கான* *மக்களுக்கு*…*நம்பிக்கையைக்* *கொடுக்கும்* *வார்த்தைகளாக* *இருந்து* *வருகின்றன*.




யோபு, ஆபிரகாம் காலத்தில் வாழந்தவன் என்று சொல்லப்படுகிறது..

அன்று உயிர்த்தெழுதலைக் குறித்து எந்த அறிவும் கிடையாது..

ஆனால் யோபுவின் இந்த விசுவாச அறிக்கையும்..

தன் பாடுகளைக் குறித்து..புத்தகமாக எழுதவேண்டுமென்று அவன் கூறியதும்.. ஆச்சரியமான ஒரு காரியமே..




பரிசுத்த ஆவியின் ஏவுதலால்.. யோபு கூறின இந்தச் சாட்சியானது..

எதிர்காலத்தில் வரவிருந்த இயேசுகிறிஸ்துவையே சுட்டிக்

காட்டியது.




யோபுவின் இத்தகைய ஜீவனுள்ள விசுவாசத்திற்குக்

காரணம்..

யோபு, தேவனை அறிந்திருந்தான் ..

இந்த உலகப் பிரகாரமான அனைத்தையும் அவன் இழந்திருந்தபோதிலும்..

தேவனோடுள்ள உறவை..அவர் மீதிருந்த அன்பை..

நம்பிக்கையை..

அவன் இழக்கவில்லை.. தேவனும் அவனோடுள்ள உறவை விட்டுவிடவில்லை..




என்ன நேர்ந்தாலும் இறுதியில் தேவன் தன் பக்கம் நிற்பார்..பாடுகளுக்குப் பின்

தனக்கு மகிமையுண்டாகுமென்ற அசைக்கமுடியாத அவனது நம்பிக்கைதான்..இவ்விதம் அவனைச் சாட்சி கூற

வழிநடத்தியது..




உயிர்த்தெழுதலைக் குறித்து அறிக்கைபண்ணின முதல் மனிதனாக.. யோபுவை உயர்ந்து நிற்கச்செய்தது..




பிரியமானவர்களே..நம் வாழ்வின் பிரதான நோக்கம் ..

ஒவ்வொரு நாளும் நாம் கர்த்தரை

அறிகிற அறிவிலே வளரவேண்டும்..

அவரைப் போல மாறவேண்டும்..

அவரை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தவேண்டும்

என்பதே..




நாம் அவரை அறியாதிருந்தால்..

சோதனை நேரங்களில்..

விசுவாசத் தடுமாற்றங்கள் உண்டாகும்..

சிலவேளைகளில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள்.. நமக்கு மிகப் பெரியவைகளாகத்

தென்படுவதற்கு ஒரு காரணம்..

நம்முடைய தேவன் எவ்வளவு

பெரியவர் என்பதை நாம் அறியாமலிருப்பதுதான்..




*உலக அறிவு*..*இறுமாப்பைக்*

*கொண்டு வரும்*..

*ஆனால், தேவனை அறிகிற* *அறிவோ*..

*தாழ்மையைக்* *கொடுக்கும்*..

*தேவனுடைய திவ்ய* *சுபாவங்களைக் கொடுக்கும்*..

*தேவசாயலைப்* *பெற்றுக்கொள்ள* *உதவிசெய்யும்*..

*நித்தியத்திலே அவரோடு வாழ*

*வழிநடத்தும்*..




*எனவே*,“ *என் கர்த்தராகிய* *கிறிஸ்து இயேசுவை அறிகிற* *அறிவின் மேன்மைக்காக*,

*எல்லாவற்றையும் நஷ்டமென்று* *எண்ணிக்கொண்டிருக்கிறேன்*.”

*என்று பவுல் அப்போஸ்தலன்* *கூறினது போல ..நாமும்* *விசுவாச அறிக்கை* *செய்வோமா*..?

மாலா டேவிட்


யோபு.19:26.

🌺🌺🌺🌺🌺

"என் மாம்சத்தில் நான் கடவுளைக் காண்பேன்".

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺"நான் கடவுளைக் காண்பேன்" என்ற யோபுவின் பக்திமிக்க எதிர்பார்ப்பின் கருப்பொருளைக் காணலாம்.

ஆனால் நான் முத்து வாயில்களைப் பார்ப்பேன், நான் வச்சிரக்கல் சுவர்களைக் காண்பேன், நான் தங்கக் கிரீடங்களை பார்ப்பேன் என்று அவர் கூறவில்லை, ஆனால் "நான் கடவுளைக் காண்பேன்" என்றார்.

இதுவே பரலோகத்தின் மதிப்பும், பொருளும் ஆகும், இதுவே அனைத்து விசுவாசிகளின் மகிழ்ச்சியான நம்பிக்கை ஆகும்.

விசுவாசத்தின் நியமத்தில் கடவுளைக் காண்பது நமது மகிழ்ச்சி.

இராப்போஜன பந்தியிலும் , ஜெபத்திலும் அவரைப் பார்க்க விரும்புகிறோம்.

கடவுளை பார்ப்பது நம் விருப்பம்.

கிறிஸ்து நம் பார்வையின் பொருளாக இருப்பார்.

அவரைப் பார்ப்பதைக் காட்டிலும், வேறு

மகிழ்ச்சி இல்லை.

இது நமது மகிழ்ச்சியின் ஆதாரம், இது எல்லையற்றது.

அவருடைய படைப்புகள், அவருடைய பரிசுகள், அவருடைய அன்பு, அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு, அவருடைய எல்லா நோக்கங்களிலும், அவருடைய எல்லா செயல்களிலும் ,அவருடைய மகிமை, எப்போதும் புதியதாக இருக்கும் .

"நமது கண்கள் நமது அரசனை அவரது அழகில் காணும்".

பூமிக்குரிய பிரகாசம் அனைத்தும் மங்கிவிடும்.

ஆனால் பரலோகத்தின் பிரகாசம், அது ஒருபோதும் மங்க முடியாது.

என்றும் அழியாத மகிமையாக இருக்கும்.

"நான் கடவுளைக் காண்பேன்".

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺

மேபி சுந்தர்.சென்னை.இந்தியா


என் மீட்பர் உயிரோடிருக்கிறார்*

~~~~~~~~~~~~~~~~~~~~~~~




யோபு 19: 25.




1. இங்கு யோபு *என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்* என்கிறார்.




யோபு *தான் கடந்து செல்கிற பாதைகளை அறியாதவராய் திகைக்கிறார்*. தன் பிள்ளைகளை, ஆஸ்தி, ஐசுவரியங்களை, சரீர சுகத்தை இழந்து தவிக்கிறார். அவருடைய உற்றார் உறவினர் அவரை விட்டு விலகி போனார்கள். சிநேகிதர் குறை கூறினார்கள். தங்கள் வார்த்தைகளால் அவர் ஆத்துமாவை நொறுக்கி கொண்டிருந்தார்கள். அவருடைய சுவாசம் அவர் மனைவிக்கு வேறுபட்டிருந்தது. பிராண சிநேகிதரால் வெறுக்கப்பட்டார். ஆனால் ஏன் எனக்கு இந்த துயரங்கள் என காரணம் அறியாது திகைக்கிறார். அவரோ அறிந்தது ஒன்று மட்டுமே. அது *என் மீட்பர் உயிரோடிருக்கிறார். அவர் கடைசி நாளில் திரும்ப வருவார்* என்பதே.




ஆனால் *நான் அறிந்த இந்த உண்மை, ஆதாவது இந்த வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும். அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு என்றைக்கும் நிலைக்க கருங்கல்லிலே உளிவெட்டாகவும், ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்* என்கிறார். 19: 23, 24.




2. ஆம், இன்று நம்முடைய வாழ்க்கையிலும் இவ்விதமாய் பாடுகள், துக்கங்கள் நெருக்கங்கள், நஷ்டங்கள், நிந்தைகள், வியாதிகள் ஆகியவைகளின் *காரணம் என்ன என்று அறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறோமா? என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்கிற யோபு அறிந்த உண்மையை நாம் அறிந்திருக்கிறோமா? அறிந்திருந்தால் இதை நம் இருதய பலகையில் மறவாதிருக்கும் படி எழுதி வைப்போம்.*




3. இதை அறியாதபடி துக்கத்தோடு, கண்ணீரோடு நம் வாழ்க்கையை கடத்தி கொண்டிருக்கிறோமா? அப்படியானால் *நம் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்கிற நற்செய்தியை நமக்காக ஆவியானவர் யோபுவின் வார்த்தைகள் மூலம் தந்து நம்மை தேற்றுகிறார்.*




4. *இந்த மீட்பர், நம் பாவத்திலிருந்தும், நம் துயரங்களிலிருந்தும், வியாதியிலிருந்தும் நம்மை மீட்கிறவர் அதாவது விடுவிக்கிறவர். இவர் தான் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து. ஆம், யோபு கூறினது போல இவர் என் மீட்பர்* என நம்மால் உரிமை பாராட்ட முடியுமா? இந்த மீட்பர் இன்று நம்மை பார்த்து *மரித்தேன். ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன்* என்கிறார்.




5. *எதற்கு உயிரோடிருக்கிறார்? நம்மை மீட்க, இரட்சிக்க, விடுவிக்க*.




*எங்கிருக்கிறார்? அவருடைய ஆலயமாகிய நமக்குள்ளே, நம் குடும்பத்துக்குள்ளே, சபைக்குள்ளே இருக்கிறார்.*




6. இதை அறியாமல் இருக்கும் அநேகரிடம், இயேசுவின் கல்லறையில் அவர் சரீரத்தை காணாமல் கலங்கி நின்ற ஸ்தீரிகளை பார்த்து, *உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கேயில்லை, உயிர்த்தெழுந்தார்* என கூறின தேவ தூதர்களை போல, ஆவியானவர் நம்மிடமும் கூறுகிறார். கிறிஸ்துவின் ஆவியானவர் நமக்குள்ளே உலாவுகிறார். நமக்காக விண்ணப்பிக்கிறார். உயிர்த்தெழுந்த இயேசு நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.




ஆம், *என் மீட்பர் உயிரோடிருக்கிறார், என்னோடிருக்கிறார், எனக்குள்ளே இருக்கிறார் என்ற விசுவாசத்தோடு நம் வாழ்க்கையில் சமாதானத்தோடு, சந்தோஷத்தோடு, திருப்தியோடு, ஸ்தோத்திரத்தோடு நம் பாடுகளை கடக்க ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக.* ஆம், அவருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவோமாக. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*


✝️A LIVING REDEEMER✝️*

*✝️உயிரோடிருக்கும் மீட்பர்✝️*




[நாள் - 155] யோபு - 19-21




☄️கற்பனைக்கு எட்டாத துன்பங்களைத் தாங்கும் மனிதனாகிய யோபு, தன் மீட்பர் வாழ்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார்.




1️⃣ *விரக்தியின் ஆழங்கள்* (யோபு 19:1-22)




🔹யாராவது தனது அவல நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தனது ஆழ்ந்த ஏக்கத்தை வெளிப்படுத்தும் போது, ​​யோபுவின் வேதனையும் அங்கலாய்ப்பும் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

🔹யோபு தனது மீட்பர் உயிரோடிருக்கிறார் என்ற நம்பிக்கையை பற்றிக்கொண்டது, அவரது விரக்தியின் மத்தியிலும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக பணியாற்றுகிறது.




2️⃣ *நீதிக்கான அழுகை* (யோபு 19:23-29)




🔸யோபு, அவருடைய துன்பம் ஒப்புக்கொள்ளப்பட்டு நியாயப்படுத்தப்பட வேண்டும் என்று ஏங்கி, உணர்ச்சிப்பூர்வமாக கடவுளிடம் முறையிடுகிறார்.

🔸அவரது வேண்டுகோளில், யோபு தனது மீட்பர் கடைசிநாளில் பூமியின் மேல் இறுதி மீட்பிற்காக நிற்பார் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

🔸தெய்வீக நீதியின் மீது யோபுவின் அசைக்க முடியாத நம்பிக்கையும், இறுதியில் நீதியின் வெற்றியும் இங்கே காணப்படுகிறது.




3️⃣ *துன்மார்க்கரின் தற்காலிக செழுமை* (யோபு 20)




▫️யோபின் நண்பன், சோப்பார், துன்மார்க்கனின் செழுமை குறுகியது என்ற வாதத்தை முன்வைக்கிறார்.

▫️சோப்பார் அவர்களின் வெற்றி நிமிஷமாத்திரம் என்று வலியுறுத்தி, அவர்களுக்கு காத்திருக்கும் தவிர்க்க முடியாத வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகிறார்.

▫️இந்த சொற்பொழிவு மனித இயல்பைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது, உலக சாதனைகளின் தற்காலிக இயல்பையும், நிலையான மீட்பைத் தேடுவதன் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது.




4️⃣ *பொல்லாதவர்களின் தலைவிதியின் மர்மம்* (யோபு 21)




🔺 துன்மார்க்கரின் கவலையற்ற வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கி, யோபு சோப்பாரின் கூற்றுகளை எதிர்க்கிறார்.

🔺நீதிமான்கள் துன்பப்படுகையில், துன்மார்க்கர்கள் அடிக்கடி செழிப்பை அனுபவிப்பது, தெய்வீக நீதி பற்றிய மரபுக் கருத்துகளுக்கு சவால் விடுவதாக இருப்பதாக அவர் சிந்திக்கிறார்.

🔺யோபின் உரையாடல் மனித இருப்பின் சிக்கலான தன்மையை அடிக்கோடிட்டு, தேவனுடைய இறுதித் திட்டத்தில் நம்பிக்கை வைப்பதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.




♥️ *வாழ்க்கை பாடங்கள்*




💥யோபின் அசைக்க முடியாத விசுவாசத்திலும், அவருடைய மீட்பர் உயிரோடிருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையிலும், துன்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் எழுச்சியூட்டும் உதாரணத்தைக் காண்கிறோம்.

💥அவரது சோதனைகளின் மத்தியிலும், யோபு தனக்கு மீட்பு காத்திருக்கிறது என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார். அது அவரது ஆவியை நங்கூரமிட்டு, வாழ்க்கையின் இருண்ட பள்ளத்தாக்குகள் வழியாக அவரை வழிநடத்துகிறது.




*‼️நம் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்பது நமக்கு நம்பிக்கை, வலிமை மற்றும் இறுதி மீட்பின் வாக்குறுதியை வழங்குகிறது‼️*

பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை


📗 *சிறிய குறிப்பு* 📗




🍂 *சொற்களின் ஆற்றல்* 🍂




யோபு வார்த்தைகளின் வல்லமையை உணர்ந்தார். அந்தக் காலத்தில் இருந்த எழுத்து முறைகளில் தம்முடைய வார்த்தைகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது ஆதங்கம்: *“ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,” ‭‭(யோபு‬ ‭19‬:‭23‬)*




யோபுக்கு உண்மையில் தெரியாதது என்னவென்றால், அவருடைய *வார்த்தைகள் ஏற்கனவே வான மேகங்களில் பதிவாகியிருந்தன.* அவருடைய வார்த்தைகள் * ஞாபகப் புஸ்தகத்தில்* பதிவு செய்யப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளன. ஆண்டவர் நம் பேசும் வார்த்தைகளில் அக்கறை கொண்டிருக்கிறார். *நாம் பேசுவதை அவர் உன்னிப்பாகக் கேட்கிறார்* (மல் 3:16). உங்கள் வார்த்தைகள் பதிவு செய்யப்படுவதால் கவனமாக இருங்கள்.




*நம் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை* இயேசு கிறிஸ்து துல்லியமாக போதித்தார். நாம் விரும்புவதைப் பேசி விட முடியாது. நம்முடைய எல்லா வார்த்தைகளுக்கும் கணக்குக் கொடுக்க *அவருடைய நியாயத்தீர்ப்புச் சிங்காசனத்தின் முன் நிற்க வேண்டிய நாள்* வருகிறது. எனவே தேவையற்ற வார்த்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆரோக்கியமான வார்த்தைகளில் கவனம் செலுத்துவோம்.

திருமதி ஷீலா ஜெபக்குமார்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.