Type Here to Get Search Results !

Want to be the king's son-in-law? | வயிறு எரிந்தால் வாழ்க்கை எரியும் | Daily Bible Short Information Tamil | Bible Study in Tamil | Jesus Sam

உங்களுக்குள் என்ன ஆவி இருக்கிறது? | துணிந்து இறங்குங்கள்! | ராஜாவின் மருமகனாக ஆசையா? | வயிறு எரிந்தால் வாழ்க்கை எரியும் | சுய பாதுகாப்பின்மையை குறித்த பயம் 
====================
உங்களுக்குள் என்ன ஆவி இருக்கிறது?
====================
1 சாமுவேல் 16:14 – 23
சவுல் ராஜாவிடமிருந்து கர்த்தர் விலகின பின்பு, அவனை ஒரு பொல்லாத ஆவி அலைக்கழித்தது. இந்த ஆவியினால் தான் பொறாமை, பெருமை, கசப்பு எரிச்சல் உள்ளவனாய் சவுல் மாறினான். மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் சுவாபமுள்ளவனாய் காணப்பட்டான்.

இந்த பொல்லாத குழப்பத்தின் ஆவி சவுல் ராஜாவைத்தாக்கும் போது, கர்த்தருடைய ஆவியைப் பெற்ற தாவீது என்ற மனிதன், தன் சுரமண்டலம் என்ற இசைக்கருவியை வாசிப்பான். அப்போது சவுலின் குழப்பம் மாறி அமைதி உண்டாகும்.

*சவுலிடமிருந்து கற்றுக் கொள்வது:* ஒரு மனிதனுக்குள் உள்ள பொல்லாத ஆவி அவனுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தி அவனை குழப்புவதுமல்லாமல், அவனைச் சுற்றியுள்ளவர்களையும் குழப்பி, அவனைச் சார்ந்த அனைவர்களையும் அமைதியின்மைக்கு நேராய் நடத்திவிடும்.

*தாவீதிடம் கற்றுக் கொள்வது:* ஒரு மனிதனுக்குள் உள்ள ஆவியானவர் அவனுக்குள் பேரமைதி உண்டுபண்ணுவதுமல்லாமல், அவன் மூலமாக அவனைச் சுற்றியுள்ளவர்களின் மனதில் உள்ள குழப்பங்களையும் நீக்கி சமாதானத்திற்கு நேராய் நடத்தி விடும்.

சவுலின் குழப்பத்திற்கு காரணம் அவனுக்குள் இருந்த பொல்லாத ஆவி. தாவீதுக்குள் இருந்த பேரமைதிக்கு காரணம் அவனுக்குள் இருந்த கர்த்தருடைய ஆவியானவர்.

*உங்களுக்குள் என்ன ஆவி இருக்கிறது? இதை எப்படி அறியலாம்?*

உங்கள் மூலமாய் உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு அமைதி, சமாதானம் உண்டாகிறதா? அல்லது உங்கள் மூலமாய் குழப்பங்களும் சண்டைகளும் உண்டாகிறதா? யோசித்துப்பாருங்கள்.

*உங்கள் மூலமாய் உங்களைச் சுற்றி அமைதியும் சமாதானமும் உண்டானால், உங்களுக்குள் ஆவியானவர் வாசம் பண்ணுகின்றார். உங்களால் உங்களைச் சுற்றி கலகமும், குழப்பமும் உண்டானால் உங்களுக்குள்ளிருந்து பொல்லாத ஆவி கிரியை செய்கின்றது.*

*உங்களுக்குள் இருக்கும் இருக்கும் சமாதானத்தின் ஆவியானவரின் சக்தி பெரியது. ஒரு முழு குடும்பத்திற்குள் அல்லது நிறுவனத்திற்குள் இருக்கும் குழப்பத்தின் ஆவியை, உங்கள் ஒருவருக்குள் இருக்கும் ஆவியானவரால் முறியடித்து சமாதானத்தை கொண்டுவர முடியும்.*

*தெய்வீக சுவாபங்களில்லாமல் நான் அபிஷேகம் பெற்றிருக்கிறேன், ஆவியில் நிறைகிறேன் என்று சொல்வது பொய் என்றே சொல்வேன். உள்ளே பரிசுத்த ஆவியானவர் இருந்தால் ஆவியின் கனிகள் வெளியே வெளிப்படும். உள்ளே பொல்லாத ஆவி இருந்தால் பொல்லாத சுவாபங்கள் வெளிப்படும்.*

*உங்களுக்குள் என்ன ஆவி இருக்கிறது?*

*அந்த நல்ல ஆவியானவர் உங்களை நிரப்புவாராக. சுவாபங்கள் மாறுவதாக. உங்கள் மூலமாக உங்கள் குடும்பம், சபை, பள்ளி. அலுவலகம், வேலை ஸ்தலம் எல்லாம் சமாதானத்தால் நிரம்புவதாக.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


=======================
துணிந்து இறங்குங்கள்!
=======================
1சாமு 17:11,24 சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய (கோலியாத்) வார்த்தைகளைக் கேட்டு, *கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்...* இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் (கோலியாத்) காணும்போது மிகவும் பயப்பட்டு, *அவன் முகத்துக்கு விலகி ஓடிப் போவார்கள்.*

1சாமு 17:32 தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் (கோலியாத்தின் நிமித்தம்) ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய *நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே (கோலியாத்தோடே) யுத்தம்பண்ணுவேன்* என்றான்.

மேலே உள்ள இரண்டு வசனங்களையும் வாசித்துப் பாருங்கள். இங்கு இரண்டு விதமான மனிதர்களைப் பார்க்கலாம்.

ஒருவன், *இஸ்ரவேலின் ராஜாவாயிருந்த சவுல்.* நாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் உள்ள மனிதன். சகல யுத்த கலைகளையும் கற்று தேர்ந்தவன். ஆனால் தன் தேசத்திற்கு விரோதமாய் கோலியாத் என்னும் வீரன் வந்த போது, அவனை எதிர்த்து சண்டையிட்டு தேசத்தைக் காக்க முன்வரவில்லை. உயிருக்கு பயந்து ஒளிகின்றான்.

மற்றொருவன், *ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் தாவீது.* இராணுவத்தில் பணிபுரியும் தன் அண்ணன்மார்களை பார்த்துவிட்டு செல்ல வந்த சிறுவன். யுத்தங்களை முன்னே எப்போதும் பார்க்காதவன், எனவே இந்த யுத்தத்தை வேடிக்கை பார்க்க ஆவலாய் வந்துள்ளான். ஆனால் தேசத்தைக் காக்க எதிரியுடன் சண்டையிட ஆயத்தமாய் நிற்கின்றான்.

*இவ்விரண்டு பேரில் நீங்கள் யார்?*

*தேசத்தை காக்க தைரியமில்லாமல், தன் உயிரைக் காக்க பயந்து ஓடி ஒளியும் சவுலா? அல்லது தன் உயிரை துச்சமாய் மதித்து, தேசத்திற்காக துணிந்து களத்தில் இறங்கும் தாவீதா?*

*கோலியாத் பெரிய இராட்சஷன் தான்! அதற்காக, அவனுக்கு பயந்து ஓடி ஒளிவதினால் என்ன பயன்? தாவீதைப் போல எதற்கும் பயப்படாமல் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும்.*

வீரனுக்கு ஒருநாள் தான் சாவு, பயந்தவனுக்கு அனுதினமும் சாவு என்பார்கள்.

நம்மில் பலர் கூட இப்படிப்பட்ட தோல்வி பயத்தினால் நமக்கு வரும் எல்லா வாய்ப்புகளையும் தவறவிட்டுக் கொண்டே இருக்கின்றோம். நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளைக் கூட சரியாக நிறைவேற்றத் தவறுகின்றோம். இதனால் நம் வாழ்க்கை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல், ஒரு தேங்கின நிலையில் உள்ளது. இப்படி பயந்து பயந்து வாழ்வது ஒரு சாபமான வாழ்க்கை.

நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோமோ, அந்த காரியத்தில் துணிந்து செயல்பட வேண்டும்.

நம்மெல்லாரும் வெவ்வேறு துறையில் இருந்தாலும், நம்மெல்லாருக்கும் ஒரு பொதுவான ஒரு வேலை அல்லது பொறுப்பு உண்டு. அதுதான் சுவிசேஷம் அறிவித்தல்! ஆனால் தங்கள் நண்பர்களுக்கு, அக்கம்பக்கத்தாருக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதில், அநேகருக்கு தயக்கம். காரணம் பயம்! நம்மை ஏளனம் செய்வார்களோ என்ற பயம்! நம் வார்த்தைகளை கேட்க மாட்டார்கள் என்ற அச்சம்!

*தேசத்தைக் காக்க தாவீது துணிந்து கோலியாத்தை சந்தித்தது போல, ஆத்துமாக்களை நரகத்திலிருந்து காக்க, துணிந்த நற்செய்தியை அறிவியுங்கள். மற்றவைகளை கர்த்தர் பார்த்து கொள்வார்.*

*வேறு யாராவது செய்யட்டும், என்று ஓடி ஒளியும் சவுலைப் போல இல்லாமல், நான் செய்கிறேன் என்று வாலின்டயராய் வந்து ஆஜராகும் தாவீதைப் போல ஊழியத்தின் எல்லா நிலையிலும் வந்து நில்லுங்கள்.*

*நீங்கள் பயந்து கொண்டிருக்கும் வரைதான் கோலியாத் இராட்சஷன்! நீங்கள் துணிந்து விட்டால் அவன் உங்கள் கவன் கல்லுக்கு அடிபட்டு சாகும் ஒரு ஓணான்தான்!*

*யுத்தம் கர்த்தருடையது! துணிச்சல் உங்களுடையது!!*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


===============
ராஜாவின் மருமகனாக ஆசையா?
================
பழைய கால கதைகள் எல்லாவற்றிலும், ராஜா ஒரு பெரிய சிக்கலில் இருப்பார். அந்த சிக்கலில் இருந்து *ராஜாவைக் காப்பாற்றுகிறவர்களுக்கு இளவரசி மணமுடித்துக் கொடுக்கப்படுவார்* என்று அறிவிக்கப்படும். அதன் பின்னர் நாட்டில் உள்ள எல்லா இளைஞர்களும் போட்டி போட்டு முயற்சிப்பார்கள். கடைசியில் ஒரு இளைஞன் அந்த பிரச்சனையை மேற்கொண்டு, இளவரசியை மணந்து இராஜாவிற்கு மருமகனாகி சந்தோஷமாக வாழ்வான்.

*இப்படிப்பட்ட கதைகளை தாவீது அதிகம் கேட்டிருப்பார் போல. ராஜாவிற்கு மருமகனாவதற்காக மிகவும் ஆசைப்பட்டார்.*

1 சாமுவேல் 17:25ம் வசனத்தில் “அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, *அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து,* அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.”

இதை கேட்டபின்னும் இரண்டாம் முறை மறுபடியும் தாவீது 26-27ம் வசனத்தில், தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொல்பவனுக்கு என்ன செய்யப்படும் என்று கேட்டான். அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு *இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.*

இதிலும் திருப்தியடையாத தாவீது 30ம் வசனத்தில் மூன்றாம் முறையும் கேட்கின்றான். “வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; *ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்.”*

1 சாமுவேல் 18:23,26ம் வசனங்களிலும் தாவீது தன் விருப்பத்தை தெரிவிக்கின்றான். “அப்பொழுது தாவீது, *நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா?* நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.” *“ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.”*

இப்படி மீண்டும் மீண்டும் கேட்பதைப் பார்த்தால் *ராஜாவின் மருமகனாவதை தாவீது தன் வாழ்க்கையின் இலட்சியமாக நினைத்ததாக தெரிகின்றது.* அதை தனக்கு கிடைக்கும் மிகப்பெரிய மேன்மையாக நினைத்தான். *அப்படி ஆவதினால் வாழ்க்கையில் தான் உயர்ந்து விடலாம் என்றும், தன் மேல் உள்ள ராஜ அபிஷேகம் நிறைவேறும் என்றும் நினைத்திருக்கலாம்.*

ஒரு வழியாக தன் லட்சியத்தை நிறைவேற்றவும் செய்தான். தன் உயிரையும் துச்சமாக மதித்து, பல சோதனைகளை கடந்து, ராஜாவின் மகள் மீகாளை திருமணம் செய்தான் (18:27).

*ஆனால் தான் மேன்மையாய் நினைத்த அந்த “ராஜாவிற்கு மருமகன்” என்ற அந்தஸ்து வெறும் குப்பைதான் என்பது அவனுக்கு பின்னர் தான் புரிந்தது. தன் உயர்விற்கு காரணமாக அமையும் என்று நினைத்த அந்த “மருமகன்” அந்தஸ்து, அவனுக்கு உபத்திரவமாகவே அமைந்தது.*

அந்த திருமணத்திற்கு பின்னர், சவுல் ராஜாவினால் துரத்தப்பட்டு, 13 ஆண்டுகள் அவன் வனாந்திரத்தில் அலைந்து கொண்டிருந்தான். அதன் பின்னரும் கடைசிவரை இளவரசி மீகாளின் மூலமாக தாவீதுக்கு குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. அந்த திருமணம் அவன் வாழ்க்கையில் எப்போதுமே ஆசீர்வாதமாயிருக்கவில்லை.

*நாம் இதிலிருந்து ஒரு காரியத்தை கற்றுக் கொள்ள வேண்டும். நாம் மேன்மையாக நினைத்து போராடி பெற விரும்பும் பல காரியங்கள், நம் வாழ்விற்கு சற்றும் உதவாதவைகளாக இருக்கக் கூடும். பெண், பொன், மண், பதவி, சொத்து, சுகம் என பல காரியங்களை விரும்பி அடையத் துடிக்கின்றோம். இதை அடைந்துவிட்டால் வாழ்க்கையில் உயர்ந்து விடலாம், இதை பெற்று விட்டால் வாழ்க்கை பரலோகமாக மாறிவிடும் என்று சில காரியங்களை இலட்சியமாக வைத்து நாம் ஓடிக் கொண்டிருக்கின்றோம்.*

*ஆனால் அவைகள் பல நேரங்களில் அவைகள் நம் உயர்விற்கு தடைகளாகத்தான் காணப்படும். எனவே தேவையில்லாத காரியங்கள் மீது நம் கண்களை செலுத்தி, நம் வாழ்வின் பாதைகளில் நாமே தடைக்கற்களை போட்டுக் கொள்ளக்கூடாது. தேவன் தந்த தரிசனத்தை நிறைவேற்ற குறுக்கு வழிகளைத் தேடக் கூடாது. அது வேதனையில் போய் முடியும்.*

*பார்வையை நேராக்குங்கள்! தரிசனத்தை தந்த தேவன் அதை நிறைவேற்றுவார்!*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


======================
வயிறு எரிந்தால் வாழ்க்கை எரியும்
=======================
ஒரு பெரிய ராஜா இருந்தார். அவருடைய நாட்டில் ஒரு சிறிய ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவனும் இருந்தான். அந்த நாட்டிலே பெரிய யுத்தம் ஒன்று வந்தது. அந்த யுத்தத்தில் எதிரி நாட்டிலிருந்து ஒரு அரக்கண் ஒத்தைக்கு ஒத்தை சண்டையிட சவால் விட்டுக் கொண்டிருந்தான். அவனை சந்திக்க திராணியில்லாமல் அந்த நாடே நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில், இந்த ஆடு மேய்க்கும் இளைஞன் சென்று அந்த அரக்கணை வீழ்த்தினான்.

இந்த செயலால் அன்று நாடே காப்பாற்றப்பட்டது. அந்த இளைஞனுக்கு பாராட்டு மழை குவிந்தது. மக்கள் அந்த இளைஞனை போற்றி பாடினார்கள். அந்த பாட்டில் ராஜா கொன்றது ஆயிரம், ஆனால் இளைஞன் கொன்றது பத்தாயிரம் என்று அந்த இளைஞனுக்கு ராஜாவைவிட 10 மடங்கு பாராட்டை கூட்டி கொடுத்தார்கள்.

அந்த பாட்டை கேட்ட உடன் *அந்த பெரிய ராஜா அந்த சிறிய இளைஞன் மீது பொறாமை பட ஆரம்பித்தான்.* என்னை விட இந்த இளைஞன் பெரியவனா? என்ற எரிச்சல் உணர்வு அவனை பிடித்தது. அந்த பெரிய ராஜாதான் சவுல், அந்த சிறிய இளைஞன் தான் தாவீது. (1 சாமுவேல் 17, 18)

திடீரென்று ஒருவன் நாட்டிற்கு பெரிய சாதனையை செய்தான் என்றால் எல்லாரும் அவனை புகழ்வது இயற்கை. கிரிக்கெட் வேர்ல்டு கப் இறுதிப் போட்டியில் ஒருவர் 100 ரன் அடித்து நாட்டிற்கு வெற்றியை தேடித்தந்தால், அன்று தேசம் முழுவதும் அவனைத்தான் புகழும். அடுத்த போட்டியில் அவன் டக் அவுட் ஆனால் அவனை இகழும். இது தான் உலகம்.

ஆனால் தாவீது பெற்ற தற்காலிக புகழ்ச்சியை கூட தாங்க முடியாமல், எப்படியாகிலும் அவனை அழிக்க வேண்டும் என்று பொறாமை உணர்வுடன் அலைய ஆரம்பித்தான் சவுல். என்று பொறாமை உணர்வு அவனுக்குள் வந்ததோ அன்றோடு அவன் அழிய ஆரம்பித்தான். *பொறாமை நம் அழிவின் ஆரம்பமாகும்.*

*பொறாமை உணர்வு என்பது நாம் விஷத்தை சாப்பிட்டுவிட்டு அடுத்தவன் சாவான் என்று எதிர்பார்ப்பது போன்றதாகும்.* பொறாமைக் குணம் உள்ளவர்கள் மற்றவர்களின் அழிவை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் தாங்கள் தான் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

வேதம் சொல்கிறது *பொறாமையோ எலும்புருக்கி* (நீதி 14:30) ஆங்கில வேதாகமம் (NLT)ல் *பொறாமை எலும்புகளில் காணப்படும் கேன்சர் நோய்* என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது மிகவும் ஆபத்தானது, உள்ளிருந்து நம்மையே அரித்துவிடும்.

*நாம் யார் மேல் பொறாமை படுகிறோமோ அவர்களல்ல நமது எதிரி. நமக்குள்ளேயே இருந்து நம்மை அரித்து அழித்துக் கொண்டிருக்கும் பொறாமைக் குணமே நம் உண்மையான எதிரி.*

நான் பொறாமையே படுவதில்லை என்பவர்களுக்கு ஒரு பரிட்சை. *பொறாமை உங்களுக்கும் முகேஷ் அம்பானிக்கும் இடையே வராது. பொறாமை உங்களுக்கும் உங்களுக்கு சமமாக இருக்கும் உங்கள் சகோதரனுக்கும் இடையேதான் வரும். உங்களுக்கு கிடைக்காத ஒன்று அவர்களுக்கு கிடைக்கும்போது உங்கள் மனதில் ஏற்படும் சிறிய நெருடலும், உங்கள் வயிற்றில் ஏற்படும் சிறிய எரிச்சலும் தான் பொறாமை.* இதுவே பொறாமையின் முதல்படி.

நீங்கள் முதலில் வரும் இந்த சிறிய எரிச்சலை அமர்த்தவில்லையென்றால் அது பெரிய தீயாக வளர்ந்து, நீங்கள் உங்கள் சகோதரனின் சாவை விரும்பும் அளவிற்கு உங்களை கொடூரனாக்கும். மற்றவர்கள் வளர்ச்சியை விரும்பாத பொறாமை தீ கொண்டவர்கள்தான் மற்றவர்களுக்கு பில்லி சூனியம் வைத்து அவர்கள் அழிவதை சந்தோஷமாக வேடிக்கை பார்க்கிறார்கள். இது பயங்கர சாபத்தை கொண்டுவரும்.

பொறாமை உணர்ச்சி வரும் போது என்ன செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கு ஒரு நன்மை அல்லது வெற்றி கிடைக்கும் போது உங்கள் மனது வலித்தால், அவர்களை பார்க்ககூட உங்களுக்கு மனம் வராது. இந்த மனப்பான்மை ஆபத்தின் அறிகுறி. எனவே *முதலிலேயே இதை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.*

*அவர்கள் பெற்ற நன்மையை நீங்களே பெற்றால் எப்படி சந்தோஷப்படுவீர்களோ அப்படி நினைத்து அவர்களிடம் சென்று மனம் நிறைந்து வாழ்த்துங்கள்.* அவர்களுக்காக கர்த்தரிடம் நன்றி சொல்லுங்கள். உங்கள் மனதை சரி செய்யுங்கள். *உங்கள் விருப்பங்களை ஜெபத்தில் ஆண்டவரிடம் சொல்லுங்கள்*. அது உங்களுக்கு தேவையென்றால் அவர் நிச்சயம் உங்களுக்கு தருவார்.

*பொறாமை என்ற எதிர்மறை உணர்வின் ஆற்றலை, உங்கள் கடின உழைப்பிற்கு நேராக திருப்பி வெற்றிக்கு வித்திடுங்கள்.* மற்றவர்கள் வெற்றியை பறிக்கும் எண்ணத்தை கைவிட்டு, நானும் வெற்றி பெறுவேன் என்று உழையுங்கள். மற்றவர்களுடைய முன்னேற்றம் உங்களை இன்னும் உழைக்கத் துண்டட்டும்.

*மற்றவர்களின் வெற்றியை கொண்டாடப் பழகுபவர்களுக்கு வாழ்க்கையே இன்பமாகும்.* மற்றவர்களின் நன்மைகளில் வயிற்றெரிச்சல் அடைபவர்களின் வாழ்க்கை எரியும். சவுலுக்கு வந்த பொறாமை தீ, அவனை எரித்து அழித்து போட்டது. ஆனால் அவன் யார் மேல் பொறாமைப்பட்டு அவர்களுடைய அழிவை எதிர்பார்த்தானோ, அந்த தாவீது அவன் கண் முன்னாலே வளர்ந்து பெருகினான்.

*வயிறு எரிந்தால் வாழ்க்கையே எரிந்து விடும். மற்றவர்களின் ஆசீர்வாதத்தில் சந்தோஷம் கொள்வோம். நாமும் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


=======================
சுய பாதுகாப்பின்மையை குறித்த பயம்
========================
ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்ற போது, அங்கு என்னை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கண்டு கொள்ளாதது போல எனக்கு தோன்றினது. உடனே எனக்குள் ஒரு பாதுகாப்பற்ற மனநிலை உருவானது. என்னை அவர்கள் மதிக்கவில்லையோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். உடனே அங்கிருக்கும் மற்ற மக்கள் மத்தியில் என்னுடைய மதிப்பை அல்லது இமேஜை தக்கவைக்கும் முயற்சியில் இறங்கினேன். உடனே ஆவியானவர் என்னோடு இடைபட்டு, நான் செய்வது தவறு என்பதை உணர்த்தினார்.

*இது தான் சுய பாதுகாப்பின்மை (Self – insecurity) என்னும் மனநிலை.* எல்லோருடைய மனதிலும் அவர்களை குறித்த இமேஜ் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணம் ஆழமாக இருக்கும். எனவே எங்கு சென்றாலும் மற்றவர்கள் தங்களை மதிக்காமல் நடந்து கொள்வார்களோ என்ற பயம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். இந்த பயத்தினால் நம் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகின்றது. இது தான் மற்றவர்களுக்கு பல தீமையான செயல்களை செய்ய நமக்குள் வித்திடுகிறது.

சகோதரர்களுக்குள் இது அதிகமாக இருக்கும். சகோரர்களில் ஒருவர் தொழிலில் செழித்து முன்னேறுகிறார் என்றால் மற்றவர் குடும்பத்திற்கு பிடிக்காது. இது வேறு ஒன்றும் இல்லை. அவன் முன்னேறியவுடன் இந்த தன்னை அற்பமாக எண்ணிவிடுவாரோ என்ற பயம் தான். பெண்களுக்குள் இந்த பயம் அதிகமாக இருக்கும். தன் சகோதரி முன் தாழ்ந்து விடுவோமோ என்று மனதில் தத்தளிப்பார்கள். வாழ்க்கையில் அதிக இழப்புகளை சந்தித்த மக்களும் இது போன்ற பாதுகாப்பின்மையால் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.

நடுத்தர வயதிலிருந்து வயதாகிக் கொண்டிருக்கும் மக்கள் மற்றவர்கள் தங்களை கிழடு லிஸ்டில் சேர்த்துவிடக்கூடாது என்பதற்காக தங்களை அலங்கரிப்பதையே வேலையாக கொண்டிருப்பார்கள். கம்பனிகளில் தங்களை விட திறமையானவர்கள் வந்துவிட்டால், அதிகாரிகள் அவர்கள் கவுரவத்தை காப்பாற்றுவதையே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படியெல்லாம் நினைத்து பயந்து கொண்டிருப்பதால் உங்கள் கவுரவத்தை நீங்கள் காப்பாற்றிவிட முடியாது. வசனம் சொல்கின்றது, “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் *தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்* இருக்கிறீர்கள்” (1 பேதுரு 2:9)

*நாம் கிறிஸ்துவுக்குள் ராஜாக்கள் என்ற அடையாளத்தைவிட பெரிய அடையாளம் நமக்கு வேறு என்ன வேண்டும்? நம்மைக்குறித்து நமக்குள்ளே ஒரு நம்பிக்கை வேண்டும். நான் யாரை போன்றவனும் அல்ல.யாரும் கொடுத்து எனக்கு மதிப்பு வேண்டியதுமில்லை. என் மதிப்பு இயேசுவுக்குள் இருக்கின்றது.*

*யாரும் பாராட்டுவதனால், கனப்படுத்துவதனால் நான் இராஜா இல்லை. இராஜாதி இராஜா இயேசு எனக்குள் இருப்பதனால் நான் இராஜா. நான் யாருடைய அங்கிகாரத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.*

*இந்த திருப்தி, நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் யாரும் உங்களை மதிக்க வேண்டும், கனப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். நான் எனக்கு கர்த்தர் நியமித்த ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கும். உங்களை யாரும் அற்பமாய் எண்ணிவிடுவார்களோ என்று பயந்து பயந்து வாழ மாட்டீர்கள்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.