Type Here to Get Search Results !

ஆறுதலின் மகன் பர்னபா! | விசுவாசிகளுக்கு பகிர்ந்துகொடுத்த அப்போஸ்தலர்! | எருசலேம் சபையில் இயேசுவின் சகோதரர்! | Bible Study in Tamil | Jesus Sam

====================
எருசலேம் சபையில் இயேசுவின் சகோதரர்!
===================

    அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள். அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், *அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும்,* செலோத்தே என்னப்பட்ட சீமோனும், *யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும்* தங்கியிருந்தார்கள். அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் *இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட* ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். (அப்1:13,14)

இயேசுவின் அப்போஸ்தலராக அவருடைய சகோதரர்!
இயேசுகிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர் குழுவில் அவருடைய சகோதரராகிய யாக்கோபும் யூதாவும் [ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயுவும்] இருந்தனர். (மத்.10:3; மாற்கு 3:18 லூக்கா 6:16; அப்.1:13; 1கொரி.9:5)

இவர்கள் கிலெயோப்பா என்று சொல்லப்படுகிற அல்பேயு (லூக்கா 24:18; யோவான் 19:25) மற்றும் மரியாளின் சகோதரியாகிய கிலெயோப்பா மரியாள் (யோவான் 19:25) தம்பதிகளின் குமாரர்கள்.

இயேசுவுக்கு இவர்கள் சகோதரர் முறையாவர்.

தமது 12 அப்போஸ்தலர்களின் குழுவில் தமது சகோதரர் இருவரையும் இயேசுகிறிஸ்து இணைத்துக்கொண்டார். ஆனால் அவர் தமது சகோதரர்களை (மாற்கு 6:3) மட்டுமே தமது அப்போஸ்தலராக ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

ஒரு ஊழியர் தனது குடும்பத்தினரில் சிலரை தன்னுடன் ஊழியத்தில் வைத்துக்கொள்வது தவறில்லை. ஆனால், தனது குடும்பத்தினரை மட்டுமே தன்னுடன் ஊழியத்தில் வைத்துக்கொள்வது இயேசுகிறிஸ்துவின் ஊழியமாதிரி அல்ல!

உண்மையான அழைப்புள்ள ஒரு ஊழியருடன், அவருடைய குடும்பத்தாரல்லாத உடன் ஊழியர்களே அதிகமாய் இருப்பார்கள்! இதுவே இயேசுகிறிஸ்துவின் ஊழியமாதிரி!

முக்கிய அப்போஸ்தலர் குழுவில் இல்லாத இயேசுவின் சகோதரர்!

மிக முக்கியமானத் தருணங்களில் பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடே வைத்துக்கொண்ட ஆண்டவர் (மாற்கு 5:37; மத்.17:1; 26:37), தமது தாயாரின் சகோதரியின் மகன்களான தமது சகோதரர் யாக்கோபு மற்றும் யூதாவை உடன் வைத்துக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தலைமைபோதகரின் உடன் ஊழியர்களில் அவருடைய நெருங்கிய உறவினர் மட்டும் அவருக்கு நெருக்கமாக இருப்பது இயேசுவின் ஊழிய மாதிரியல்ல!

எவ்வளவு உண்மையும் உத்தமுமாய் உழைத்தாலும், தலைமைபோதகரின் அல்லது ஸ்தாபனத்தலைவரின் குடும்பத்தாரல்லாத உடன் ஊழியர்கள், சபையில் அல்லது ஸ்தாபனத்தில் தலைமைபோதகரின் அல்லது ஸ்தாபனத்தலைவரின் குடும்பத்தாருக்கு இணையாகவோ அல்லது மேலாகவோ வளர்ந்துவிடமுடியாது என்பது இயேசுகிறிஸ்து கற்றுக்கொடுத்த ஊழியமாக இருக்கமுடியாது!

நமது ஊழியத்தில், நாம் நடத்தும் சபையில், ஸ்தாபனத்தில், நமது குடும்பத்தினர்தான் முக்கிய இடத்தில் இருக்கவேண்டுமென்கிற நமது சட்டம், திருச்சபை ஊழியத்தைக் குறித்த வேதசட்டத்திற்கு எதிரானதாகும்!

பேதுரு மற்றும் பவுலுக்கு இணையாய் அற்புதம் செய்யாத ஆண்டவரின் சகோதரர்!

பொதுவாக, அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. (அப்.2:43; 5:12)

ஆகிலும், பேதுருவையும் பவுலையும் கொண்டு செய்தது போன்ற பெரிய அற்புதங்களை, ஆண்டவர் தமது சகோதரரான யாக்கோபு மற்றும் யூதாவைக் கொண்டு செய்ததாகக் காணமுடியவில்லை. (அப்.3:1-8; 5:15,16; 9:32-42; 13:9-11; 14:8-12; 16:16-18; 19:11,12; 20:8-10; 28:8,9)

இன்றைய ஊழியத்திலோ ஊழியருடைய குடும்பத்தாருக்கு இணையாகவோ அல்லது மேலாகவோ கிரியைசெய்ய ஒருவரும் அனுமதிக்கப்படுவதில்லை!

ஊழியரின் பிள்ளைகள் பாடத்தயாராகிவிட்டால், ஏற்கனவே பாடிக்கொண்டிருந்தவர்களிடமிருந்து மைக் பறிக்கப்படுகிறது! ஊழியரின் பிள்ளைகள் இசைக்கருவிகளை வாசிக்கப் பழகிவிட்டால், ஏற்கனவே வாசித்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது! ஊழியரின் பிள்ளைகள் ஆராதனை நடத்த ஆயத்தமாகிவிட்டால், ஏற்கனவே ஆராதனை நடத்திக்கொண்டிருந்தவர்கள் மேடையைவிட்டு இறக்கப்படுகிறார்கள்! ஊழியரின் பிள்ளைகள் பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டால், சபைக்கு உள்ளிருந்தும் சபைக்கு வெளியேயிருந்தும் வந்து பிரசங்கத்தில் உதவிசெய்தவர்கள் மறக்கப்படுகிறார்கள்! 

இது நிச்சயம் இயேசுகிறிஸ்துவினிடத்தில் கற்றுக்கொண்ட ஊழியமாக இருக்கமுடியாது. சுயநலவாதியும் பெருமைக்காரனுமான பிசாசே இப்படிப்பட்ட ஊழியங்களுக்குப் பின்னால் இருக்கமுடியும்!

இயேசுகிறிஸ்துவைப் போன்று பரந்த இருதயமுள்ளவர்களாக நாம் இருந்திருப்போமானால், இந்த பாரததேசத்தில் தேவனுடையராஜ்யம் எப்பொழுதோ பரந்துவிரிந்திருக்கும்!*


ஆதிதிருச்சபையின் தூண்களில் ஒருவனாக இயேசுவின் சகோதரன்!

தமது சகோதர் யாக்கோபு மற்றும் யூதா இருவரில் யாக்கோபுவை மட்டும் பேதுரு மற்றும் யோவானுடன் ஆதிசபையின் தூண்களில் ஒருவராக்கினார் ஆண்டவர். (கலாத்.2:9)

சில முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் யாக்கோபு திருச்சபையை வழிநடத்தினார். (அப்.12:17; 15:13; 1கொரி.9:5; 15:7; கலாத்.1:19; 2:9,12)

சரீரப்பிரகாரமான தமது குடும்பத்தில் ஒருவரையும், குடும்பத்தாரல்லாதவர்களில் இருவரையும் ஆண்டவர் திருச்சபையின் தூண்களாக்கியது கவனிக்கத்தக்கது. இன்றைய ஊழியங்களிலும் இந்த விகிதாச்சாரம் பின்பற்றப்படவேண்டியது அவசியம்!

ஒரு ஊழியரின் குடும்பத்தார் சபையில் முக்கியப் பொறுப்புகளிலிருக்கிறது தவறில்லை. ஆனால், ஊழியரின் குடும்பத்தார் மட்டுமே முக்கியப் பொறுப்புகளில் இருப்பது புதிய ஏற்பாட்டு ஊழியத்திற்கு முரணானதாகும்!

"ஊழியக்காரரின் குடும்பத்தாரால் மட்டுமே அவருடைய ஊழியத்தை தொடர்ந்து தொய்வில்லாமல் செய்யமுடியும், அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லமுடியும்" என்பது வேத அடிப்படையற்ற ஒரு வெற்றுவாதமாகும்!

இன்று பல ஊழியக்காரர்களின் குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சபைகள், ஸ்தாபனங்கள், ஊழியர்களின் குடும்பத்தை சாராத, உண்மையாகவே தேவனால் அழைக்கப்பட்டவர்களால் நடத்தப்படுமானால், இப்பொழுது இருக்கிறதைவிட பலமடங்கு வளர்ந்திருக்கக்கூடும்!

ஆதிசபையின் ஊழியங்களை சபைக்கு போதியாமலும், சபையார் வேறு எங்கும் சென்று கற்றுக்கொள்ளாமலும் பார்த்துக்கொண்டு: சத்தியத்தை அறியாத அப்பாவி மக்களை தங்கள் குடும்பத்தினரை மட்டும் கொண்டு ஆளுகைசெய்கிற ஊழியர்கள்: புதிய ஏற்பாட்டு ஊழியத்தை சரியாகப் புரிந்துகொண்டவர்களாக இருக்கமுடியாது! அல்லது உண்மையாகவே ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவர்களாக இருக்கமுடியாது!!


தங்களை இயேசுவின் சகோதரராக அறிமுகப்படுத்திக்கொள்ளாத யாக்கோபு & யூதா!

யாக்கோபையும் யூதாவையும் அப்போஸ்தலர்கள் "கர்த்தருடைய சகோதரர்" என்று சொன்னார்களேயல்லாமல் (1கொரி.9:5), யாக்கோபும் யூதாவும் தங்களை அப்படி ஒருபோதும் அழைத்துக்கொண்டதில்லை. 

இயேசுவின் சகோதரன் யாக்கோபு, தன்னை 
தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு என்றே தனது நிருபத்தில் அறிமுகப்படுத்திக்கொள்கிறார். (யாக்.1:1)

அப்படியே யூதாவும் தனது நிருபத்தில், தன்னை யாக்கோபினுடைய சகோதரனாகவும், *இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகவும்* அறிமுகப்படுத்திக்கொள்வது கவனிக்கத்தக்கது. (யூதா 1:1)

இயேசுகிறிஸ்துவின் சகோதரர் என்கிற உறவை ஊழியத்தில், திருச்சபையில் முக்கிய இடத்தைப் பிடிக்க அவர்கள் துஷ்பிரயோகம் செய்ததில்லை.

இன்றைய திருச்சபைகளில், ஊழிய ஸ்தாபனங்களில் முக்கிய இடத்தைப்பிடிக்க தலைமைபோதகரின் அல்லது ஸ்தாபனத்தலைவரின் மனைவி, மகன், மகள், மறுமகன், மறுமகள், பேரன், பேர்த்தி என்கிற உறவுமுறைகளே முக்கியமானத் தகுதிகளாகப் பார்க்கப்படுவது, ஊழியம் ஆதாயத்தொழிலாகிவிட்டதையே காண்பிக்கிறது!

யாக்கோபு, யூதா மட்டுமல்லாமல், இயேசுவின் மற்ற சகோதரரும் எருசலேம் சபையில் இருந்தனர். (அப்.1:14; மாற்கு 6:3)

அவர்கள் இயேசுவின் சகோதரர் என்பதற்காக சபையில் எந்த செல்வாக்கையும் எதிர்பாராமல், அவருடைய எளிய சீடராகவே இருந்திருக்கிறார்கள்.

நாமோ தேவனுடைய ஊழியத்தை சுயநலமும் குடும்பநலமும் சார்ந்ததாக அமைத்துகொண்டதால், இன்று தேவனுடைய சபை அதன் அசல் சாயலை இழந்துவிட்டது!

தேவனுடைய ஜனங்களின் தியாகமான காணிக்கைகளால் உண்டான திருச்சபையின் ஆஸ்திகளை, 'அழைப்பு' மற்றும் "ஆவியானவரின் நடத்ததுதல்" என்கிறப் பெயரால் ஊழியர்களின் குடும்பத்தார் மட்டும் ஆக்கிரமித்துக்கொள்வதால், தேவனுடைய சபைகள் இன்று கள்ளர்குகையாகவும் (லூக்கா 19:46) வியாபாரவீடாகவும் (யோவான் 2:16) காட்சியளிக்கின்றன!

ஊழிய அழைப்புள்ள ஊழியரின் குடும்பத்தினர், யாக்கோபு மற்றும் யூதா போன்று தங்களைத் தாழ்த்தி, சுயநலமின்றி, மற்ற ஊழியர்களுடன் இணைந்து தேவனுடைய மகிமைக்காக தங்கள் ஊழியத்தை நிறைவேற்ற முன்வரவேண்டும்!

ஊழியக்காரர்களுக்கு இயேசுவின் இருதயமும், ஊழியக்காரர்களின் குடும்பத்தினருக்கு யாக்கோபு மற்றும் யூதாவின் இருதயமும் இருக்குமானால், தேவன் விரும்புகிற திருச்சபையை நிறுவுகிறது இலகுவாகிவிடும்!!

க. காட்சன் வின்சென்ட்.
        (கோயம்பத்துார்)
              8946050920







========================================
விசுவாசிகளுக்கு பகிர்ந்துகொடுத்த அப்போஸ்தலர்!
=========================================

நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. (அப்4:34,35)

தங்கள் பாதத்தில் விசுவாசிகள் கொண்டுவந்து வைத்த நிலங்கள் மற்றும் வீடுகளின் கிரயத்தை, சபையில் தேவையிலுள்ள மக்களுக்கு தேவையான அளவு பகிர்ந்துகொடுத்து, அவர்களில் ஒருவருக்கும் ஒன்றும் குறைவாயிராதபடிக்கு பார்த்துக்கொண்டனர் ஆதிஅப்போஸ்தலர்! நமது சபைகளில், நமது தலைமுறையில் நாம் கற்பனைசெய்துகூடப் பார்த்திராத ஒரு நிகழ்வு இது!

சபையாரின் தேவையில் அதிக கவனம்!

தங்கள் தேவைகளிலும்  
சபையாரின் தேவைகளில் ஆதிசபை ஊழியர்கள் அதிக கவனம் செலுத்தினர். 12 அப்போஸ்தலர், அவர்களுடைய குடும்பங்கள் (1கொரி.9:5), அவர்களுடைய ஊழியங்கள், அவர்களுடைய குடும்ப மற்றும் ஊழியத்தேவைகள் இருந்தன. ஆகிலும், தங்கள் தேவைகளைக் குறித்து அவர்கள் அதிகம் கவலைப்பட்டதாகவோ, தங்கள் குடும்ப மற்றும் ஊழியத்தேவைகளுக்காய் சபையாரை கொடுக்கவைக்க என்னவெல்லாம் செய்யலாம், எப்படியெல்லாம் போதிக்கலாம் என்று தீவிரமாய் திட்டமிட்டதாகவோ காணமுடியவில்லை. 

காணிக்கை தசமபாகத்தை ஒருவர் எங்கே கொடுக்கவேண்டும்? யாருக்குக் கொடுக்கவேண்டும்? எப்படி கொடுக்கவேண்டும்? காணிக்கையையும் தசமபாகத்தையும் காணிக்கை பெட்டியில் போடவேண்டுமா? காணிக்கையை பெட்டியில் போட்டுவிட்டு, தசமபாக கவரை ஊழியரிடம் கொடுக்கவேண்டுமா? என்கிற போதனைகள், இன்று ஊழியர்கள் தங்கள் குடும்ப மற்றும் ஊழியத் தேவைகளைகுறித்து அதிக கவனமுள்ளவர்களாய் இருப்பதையே காட்டுகிறது!

ஊழியருக்கும் ஊழியத்திற்கும் கொடுப்பதைப் பற்றி புதிய ஏற்பாட்டில் எத்தனையோ அருமையான உபதேசங்கள் இருந்தும், நாம் பழைய ஏற்பாட்டு காணிக்கை, பொருத்தனை மற்றும் தசமபாகத்தைப் பற்றியே விசுவாசிகளுக்கு போதிக்க விரும்புகிறோம். தசமபாகம் பற்றிய பிரமாணத்தை (உபா.12:6,11,17; 14:22,23,28) போதித்தும், பழைய ஏற்பாட்டு வசனங்களால் (மல்.3:8,9) பயமுறுத்தியும், சபையாரிடம் தசமபாகம் வாங்கின ஒரு ஊழியரையும் ஆதிசபையில் காணமுடியவில்லை! 

நீதியும் இரக்கமும் செய்யவேண்டும், தசமபாகம் கொடுப்பதையும் விடாதிருக்கவேண்டும் என்று தசமபாகப் பிரமாணத்திற்கு கீழ் இருந்த வேதபாரகர் பரிசேயரிடம் ஆண்டவர் சொன்னதை (மத்.23:23), புதிய ஏற்பாட்டு சபைக்கும் சொன்னதாக ஆதிசபை ஊழியர்கள் எடுத்துக்கொண்டிருந்திருந்தால்: அவர்கள் தசமபாகத்தைக்குறித்து சபைக்கு போதித்து தசமபாகம் வாங்கியிருப்பார்கள். அவர்கள் செய்யாதவைகளை இன்று நாம் செய்கிறோம் என்றால், நமது தேவைகளைக் குறித்தக் கவலையேயல்லாமல் வேறல்ல!

தங்களிடம் தேவன் கொடுத்துள்ள அவருடைய ஜனங்களின் ஆவிக்குரிய மற்றும் சரீரத் தேவைகளை சந்திப்பதையே தங்கள் பெரியத் தேவையாக கருதினர் ஆதிசபை ஊழியர்கள்.

சபையாரின் ஆவிக்குரியத் தேவைகளை சந்திக்க: ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருந்த அவர்கள் (அப்.6:4), சரீரத் தேவைகளை சந்திக்க: விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தாரை ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாக்கி, ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லாமல், சகலமும் சபையில் உள்ள அனைவருக்கும் பொதுவானது என்று நினைக்கும்படி செய்திருந்தனர்! (அப். 4:32)

அப்போஸ்தலரின் உபதேசத்தினால் விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்து, காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவருக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். (அப். 2:42,44,45)

தாங்கள் ஏழைவிசுவாசிகளுக்காய் கொடுக்கும் பணத்தை அப்போஸ்தலர் உண்மையாய் அவர்களுக்கு பகிர்ந்துகொடுக்கக்கூடியவர்களாய் இருந்தபடியினாலே, விசுவாசிகள் லட்சங்கணக்கானப் பணத்தைக் கொண்டுவந்து, அவர்களுடைய பாதத்தில் வைத்தார்கள்! (அப்.4:34,35) தங்கள் பாதத்தில் விசுவாசிகள் லட்சங்கணக்கான பணத்தை கொண்டுவந்து வைத்த நாட்களில்தான், "வெள்ளியும் பொன்னும் (பணம்) என்னிடத்திலில்லை" என்று சொல்லக்கூடிய நிலையில் இருந்தார் பேதுரு. (அப்.3:6)

தேவஜனங்கள் கொடுத்தப் பணதில் தங்கள் தேவைக்கு மிஞ்சி எடுத்துக்கொள்ளாமல், சபையில் தேவையிலுள்ள ஏழைகளுக்கு அவர்கள் பகிர்ந்துகொடுத்திருக்கிறார்கள். தேவன் தங்கள் கரத்தில் கொடுத்துள்ள மக்களின் ஆவிக்குரிய மற்றும் சரீரத்தேவைகள் போதுமான அளவு சந்திக்கப்படுவதுதான் தங்கள் ஊழியத்தின் பெரியத்தேவையாக அவர்கள் கருதினர்!

வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருந்த விசுவாச சகோதர சகோதரிகளைக்குறித்து அவர்கள் கவலைப்படுகிறவர்களாக இருந்ததோடு, அவர்களை ஆதரிக்க விசுவாசிகளை ஏவிவிடுகிறவர்களாகவும் இருந்தனர். (யாக்.2:15,16) இவ்வுலக ஆஸ்தி உடையவராயிருந்தும், குறைச்சலுள்ள தங்கள் சகோதரருக்கு தங்கள் இருதயத்தை அடைத்துக்கொள்ளுகிறவர்களை தேவஅன்பு அற்றவர்கள் என்று அவர்களால் கடிந்துகொள்ளமுடிந்தது! (1யோவான் 3:17) "அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே, .... நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்" என்று விசுவாசிகளுக்கு நினைப்பூட்டினர். (1யோவான் 3:16)

"திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவர்கள் உபதேசிக்கிற தங்களுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கவேண்டும்"* என்பதோடு கொடுப்பதைக்குறித்த அவர்களுடைய போதனை முற்றுபெற்றுவிடவில்லை. (கலாத்.6:6) *"நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்" என்று அவர்களுடைய போதனை நீண்டது. (கலாத்.6:10) "நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை (ஊழியர்களை), விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவாகளை, இரட்டிப்பான கனத்திற்கு (பணத்திற்கு) பாத்திரராக எண்ணவேண்டும்"
(1தீமோத்.5:17,18) என்பதோடு பவுலின் போதனை முடிந்துவிடவில்லை. "இவ்வுலகத்திலே ஜசுவரியமுள்ளவர்கள் ..... நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும் ..... அவர்களுக்கு கட்டளையிடு"
(1தீமோத்.6:17-19) என்று ஏழைகளுக்குக் கொடுப்பதற்கு பணக்கார விசுவாசிகளை ஏவும்படி அவர்களுடைய கண்காணி தீமோத்தேயுவுக்கு ஆலோசனை சொல்லுவதுவரை, பவுலின் போதனை நீண்டது!

பரிசுத்தவான்களுடைய (ஊழியர் & விசுவாசிகள்) குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யவும், அந்நியரை உபசரிக்க நாடவும் (ரோமர் 12:13); பசியாயிருக்கிற சத்துருவுக்கு போஜனங்கொடுக்கவும் சபையாரை அவர்கள் ஜாக்கிரதைப்படுத்தினர். (ரோமர் 12:20) பிதாவாகிய தேவனுக்குமுன்பாக "மாசில்லாத சுத்தமான பக்தி" என்கிற நாணயத்தின் இருபக்கங்களாக:
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதையும், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதையுமே காண்பித்தார் யாக்கோபு! (யாக்.1:27)

அழைக்கப்பட்டவர்களின் அடையாளம்!

தங்கள் தேவைகளிலும் தேவன் தங்களிடத்தில் ஒப்புவித்திருக்கும் அவருடைய ஜனங்களின் ஆவிக்குரிய மற்றும் சரீரத்தேவைகள் சந்திக்கப்பட பிரயாசப்படுவதுதான் தேவனால் அழைக்கப்பட்ட ஊழியர்களுக்கு அடையாளம்! ஆவிக்குரிய ஆகாரம் நிறைவாய் கொடுத்தும், சபையாரின் சரீர ஆகாரத்தைப் பற்றிக் கவலைப்படாத; சரீர ஆகாரத்தை நிறைவாய் கொடுத்தும், போதுமான ஆவிக்குரிய ஆகாரம் கொடுப்பதில் கவனம் செலுத்தாத ஒரு ஊழியர் தேவனால் அழைக்கப்பட்டவராக இருக்கமுடியாது!

தேவஜனங்களை கிறிஸ்துவில் புத்திசாலிகளாக்க, 
ஊழியர்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரராகவும்; தேவஜனங்களை கிறிஸ்துவுக்குள் பலவான்களாக்க, ஊழியர்கள் சரீரத்தில் பலவீனராகவும்; 
தேவஜனங்களை கிறிஸ்துவுக்குள் கனவான்களாக்க ஊழியர்கள் உலகத்தில் கனவீனராகவும் ஆயத்தமாயிருக்கவேண்டும்! (1கொரிந்.4:10-13) அநேகரை ஆவிக்குரிய ஜசுவரியவான்களாக்க, உலகத்தால் ஒன்றுமில்லாத தரித்திரர் என்று என்னப்படக்கூடிய நிலையில் இருந்தனர் அப்போஸ்தலர்!
(2கொரிந்.6:10)

சபையாரின் தேவைகள் சபையாராலேயே சந்திக்கப்பட, ஊழியர்கள் தங்கள் தேவைகளை குறைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்! (1தீமோத்.6:6-10)

ஓட்டை சைக்கிளை உருட்டிக்கொண்டு வருகிற விசுவாசிகள் இருக்க, ஒன்றரை லட்சம் ரூபாய் பைக்கில் வலம்வர ஊழியர் நினைக்கிறது அப்பத்தம்! சபைக்கு வருகிற பலருக்கு சரியான வாகனவசதிகள் இல்லாதிருக்க, ஆடம்பரமான கார்களில் பவணிவர ஊழியர் விருப்புகிறது அபத்தம்! ஒழுகும் வீட்டில் குடியிருக்கும் விசுவாசிகள் சிலர் இருக்க, அழகான பங்களாக்களில் குடியிருக்க ஊழியர் விரும்புகிறது அபத்தம்! அநுதின ஆகாரத்திற்கே போராடும் விசுவாசிகள் பலர் இருக்க, விதவிதமான ஆகாரத்தை புசிக்க ஊழியர் நாடுகிறது அபத்தம்! உடுத்த நல்ல வஸ்திரம் இல்லாத விசுவாசிகள் சிலர் இருக்க, ஊழியர் விலையேறப்பெற்ற வஸ்திரங்களை உடுத்தி, அதன்மேல் கையில்லாத பளப்பளக்கும் கோட்டுகளை மாட்டிக்கொள்ள ஆசைப்படுவது அபத்தம்!
குடியிருக்க சொந்தமாக எளிய வீடு இல்லாத விசுவாசிகள் பலர் இருக்க, ஊழியர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயரில் காணிக்கை தசமபாகத்தைக்கொண்டு ஆஸ்திகளை குவிப்பது அபத்தம்!

கொரோனா காலத்தில் நான்குமாதம் வீட்டுவாடகைக் கொடுக்கமுடியாமல், தனது பிள்ளைகளை சரியாய் போஷிக்கவே போராடிக்கொண்டிருந்த விசுவாசியான ஒரு ஏழைவிதவையிடம், "நாலுமாசம் நீ தசமபாகம் கொடுக்கல, அதனாலதான் உனக்கு இவ்வளவு கஷ்டம். கடன்வாங்கியாவது நாலுமாசத்து தசமபாகத்தை நீ கொடுத்தாதான், கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று ஒரு ஊழியர் கடிந்துகொண்டதாக சென்றவருடம் ஒரு செய்தியைக் கேள்விப்பட நேர்ந்தது. தாங்கள் நடத்தும் ஏழைவிசுவாசிகளில் இரக்கமில்லாத இப்படிப்பட்டக் கொடியவர்கள், தேவனுடைய ஜனங்களை நடத்த அவரால் எப்படி அழைக்கப்பட்டிருக்கமுடியும்?

கள்ளர்கள் குற்றுயிராய் விட்டுசென்றவனை கண்டும் விலகிக்போன ஆசாரியர் லேவியர் போல, இன்றைய ஊழியர்கள், சபையிலுள்ள ஏழைமக்களை கண்டும் காணாமல் போகமுடியாது! (லூக்கா 10:30-31) ஒவ்வொரு ஊழியரும் சமாரியனைபோல செயல்படவேண்டியது அவசியம்! (லூக்கா 10:33-37)
யூதராகிய ஆசாரியர் லேவியரை பாதிக்கப்பட்ட ஒரு யூதனில் அக்கறையற்றவர்களாகவும், சமாரியனை அக்கறையுள்ளவனாகவும் காட்சிப்படுத்துகிறார் ஆண்டவர். ஏழைகிறிஸ்தவரில் உலகத்து மக்கள் இரக்கம் காண்பிக்கிற அளவுக்குக்கூட கிறிஸ்தவர், ஊழியர் காண்பியாமலிருப்போமானால், அது நமது கிறிஸ்தவ ஜீவியத்திற்கே இழுக்காகும்!

"காணிக்கை தசமபாகத்தை தவறாமல் கொடு, உன் கஷ்டம் மாறும்! நன்றாக ஜெபி, உன் தேவைகள் சந்திக்கப்படும்"* என்று பாடம் எடுக்கிறதற்கல்ல, இருக்கிறவர்களிடம் இருந்து பெற்று இல்லாதவர்களுக்கு பகிர்ந்துகொடுக்கவே ஊழியராக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஊழியர்கள் உணர்ந்துவிட்டால், சபையில் ஏழைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிடும்! விசுவாசிகள் ஏழைகளாகவும் ஊழியர்கள் பணக்காரர்களாகவும் இருப்பது ஊழியமாக இருக்கமுடியாது. ஏழைவிசுவாசிகள் பொருளாதாரத்தில் தங்களுக்கு நிகராகவோ, மேலாகவோ இருக்க ஆசிக்கிறவர்களே தேவனால் அழைக்கப்பட்ட ஊழியர்களாக இருக்கமுடியும்!!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920




=======================
ஆறுதலின் மகன் பர்னபா!
=====================
சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான் (அப்.4:36,37)

சீப்புருதீவைசேர்ந்த லேவியனான யோசே என்பவன் இயேசுகிறிஸ்துவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டு, எருசலேம் சபையின் அங்கமாக இருந்தான். யோசே என்னப்பட்ட இவனை ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் 'பர்னபா' என்று அப்போஸ்தலர் அழைத்திருக்கிறார்கள்.  

ஆறுதலின் மகன் என்று ஒருவனை அப்போஸ்தலர் அழைத்திருப்பார்களானால், அவன் அவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் செய்கிறவனாக இருந்திருப்பான் என்று யோசித்துப்பாருங்கள்! "அவன் நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்" என்று லூக்கா அவனைப்பற்றி சாட்சிகொடுக்கிறார். (அப்.11:24)

உண்மையும் உத்தமமும் சுயநலமற்ற தியாகமும் உள்ள ஊழியர்களையும் (அப்.4:34,35), நல்லவர்களும் பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவர்களுமான விசுவாசிகளையும் ஒரு சபை கொண்டிருப்பது எத்தனை ஆசீர்வாதம்!

ஊழியருக்கு ஆறுதல் செய்யுங்கள்!
உண்மையும் உத்தமுமான ஊழியர்களுக்கு ஆறுதல் செய்யவேண்டியக் கடமை நல்ல மற்றும் பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்த விசுவாசிகளுக்கு இருக்கிறது!

தங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, *கர்த்தருக்குள் தங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, தங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை* விசுவாசிகள் மதித்து, அவர்களுடைய கிரியைகளினிமித்தம் *அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளவேண்டும்.* (1தெச.5:12,13)

தங்களை (கிறிஸ்துவின் சாயலில்) தேறினவர்களாக்கவும், (கிறிஸ்துவைப்போல) எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவர்களாக்கவும், தேவ ஆவியானவர் அருளின வேதவாக்கியங்களைக்கொண்டு உபதேசித்தும், கடிந்துகொண்டும், சீர்திருத்தியும், நீதியைப் படிப்பித்தும் பிரயாசப்படுகிற தங்கள் ஆத்தும உத்தரவாதிகளான ஊழியர்களில் அன்புகூர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கவேண்டியக் கடமை விசுவாசிகளுக்கு உள்ளது. (2தீமோத்.3:16,17; எபிரே.13:17)

தங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை கட்டாயமாய் அல்லாமல் மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்லாமல் உற்சாக மனதோடும் மேய்த்து, சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்லாமல், மந்தைக்கு மாதிரிகளாக இருந்து கண்காணிப்புச் செய்கிற மூப்பருக்கு (ஊழியருக்கு) திருச்சபையில் உள்ள இளைஞர்கள் கீழ்ப்படியவேண்டும்! (1பேதுரு 5:2-5)

நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை (ஊழியர்களை), விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவாகளை, திருச்சபையார் இரட்டிப்பான கனத்திற்கு (நன்மைக்கு) பாத்திரராக எண்ணவேண்டும்!
தங்கள் வேலையை நேர்த்தியாய் செய்கிற அவர்களுக்கு கூலியை சரியாய் கொடுப்பதில் சபையார் தவறக்கூடாது! 
(1தீமோத்.5:17,18) திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிற தேவஜனங்கள் தங்களுக்கு உபதேசிக்கிற ஊழியர்களுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும். (கலாத்.6:6)

சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் பவுல் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, பிலிப்பி சபையார் கொடுக்கல் வாங்கல் காரியத்தில் அவருக்கு உடன்பட்டதோடு, அவர் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், அவருடைய குறைச்சலை நீக்கும்படி அவர்கள் இரண்டொருதரம் அனுப்பி, அவருடைய தேவைகளை சந்தித்து ஆறுதல் செய்துது கவனிக்கத்தக்கது. (பிலிப்.4:15-18)

சத்தியத்திற்கு விரோதமாக ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே எதையும் செய்யக்கூடிய ஊழியர்கள் (2கொரிந்13:8), தங்கள் ஆவிக்குரியப் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறதில்தான் அதிகமாய் சந்தோஷப்படுவார்கள். (3யோவான் 1:3,4)
இப்படியிருக்க, சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்தின்படியே உத்தம ஊழியர்களில் அன்புகூர்ந்து, சத்தியத்தின்படியே அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களுக்கு ஆறுதல்செய்ய விசுவாசிகள் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளவேண்டியது அவசியம்!

சபையாருக்கும் ஆறுதல் செய்யுங்கள்!
பர்னபா ஊழியர்களுக்கு மட்டுமல்ல, தனது ஏழை விசுவாச சகோதரருக்கு பகிந்துகொடுக்கும்படிக்கு தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்து, சகவிசுவாசிகளுக்கும் ஆறுதல்செய்தான்! (அப். 4:37)

கிறிஸ்து தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே, நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (1யோவான் 3:16) என்பதை உணர்ந்திருக்கிற 
கிறிஸ்தவரால் மட்டுமே சபையில் குறைச்சலுள்ள   
(1யோவான் 3:17), திக்கற்ற பிள்ளைகளும் மற்றும் விதவைகளுமான (யாக்1:27), வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கிற (யாக்.2:15) தங்கள் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு ஆறுதல்செய்ய முன்வரமுடியும்!

அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களான ஸ்தேவானுடைய வீட்டார் பரிசுத்தவான்களுக்கு (ஊழியர் & விசுவாசிகளுக்கு) ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருந்தார்கள். (1கொரிந்.16:15) "ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன். நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்" என்று அவர்களைப்பற்றி பவுல் கொரிந்து சபையாருக்கு சாட்சிகொடுப்பது கவனிக்கத்தக்கது! (1கொரிந்.16:17,18)

கொலோசெ சபையிலிருந்த பிலேமோன் எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலும் (ஊழியர் & விசுவாசிகளிடத்திலும்) அன்புகூர்ந்து, அவர்களுடைய உள்ளங்களை இளைப்பாறப்பண்ணினார். (பிலே.1:4,7)

இவர்கள் விருந்தோம்பல் செய்வதன் மூலமும், தேவைகளை சந்திப்பதன் மூலமும் ஏழை கிறிஸ்தவர்களுக்கும்; ஊழியத்தைத் தாங்குவதன் மூலம் ஊழியர்களுக்கும் ஆறுதல் செய்தனர்.

உத்தம ஊழியர்களுக்கும் ஏழை விசுவாச சகோதர சகோதரிகளுக்கும் ஆறுதல்செய்கிற நல்ல மற்றும் பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்த பர்னபாக்கள் இன்றைய சபைகளுக்கு அதிக தேவையாய் இருக்கிறார்கள்!

ஆதிஅப்போஸ்தலரைப் போன்ற தியாகமான உத்தம ஊழியர்களைக் பெற்றுள்ள சபைகள் ஆசீர்வதிக்கப்பட்டவை! பர்னபாவைப் போன்ற விசுவாசிகளால் நிறைந்திருக்கிற சபைகள் பாக்கியமுள்ளவை!!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920







================================
எங்கள் சபைக்கு வந்த ஒரு ஊழியக்காரர், "இந்த வருடம் கர்த்தருக்கு எத்தனை ஆயிரம் கொடுக்கப்போகிறோம் என்று நியமியுங்கள். கர்த்தருக்கு கொடுப்பதாக நியமித்துவிட்டு ஊருக்கெல்லாம் கொடுத்துகிட்டு இருக்கக்கூடாது. ஏழைகளுக்கு கொடுக்கிற தர்மபணம் கர்த்தருக்குக் கொடுப்பதல்ல. ஏழைகளுக்கு கொடுப்பது வேறு, கர்த்தருக்கு கொடுப்பது வேறு. கர்த்தருக்கென்று நியமித்ததை கர்த்தருக்குதான் கொடுக்கவேண்டும்" என்று போதித்தார். இது சரியான போதனைதானா?
============================

உங்கள் சபைக்கு வந்து பிரசங்கித்ததாக நீங்கள் குறிப்பிடும் ஊழியக்காரர், ஒரு விசுவாசி சபைக்கு கொடுப்பதாக நியமித்துக்கொண்டப் பணத்தை வேறு எங்கும், எவருக்கும் கொடுக்கக்கூடாது என்று சபையாரின் மனதில் பதியவைக்க முயன்றிருக்கிறார்.

அவருடைய போதனை சரியா? தவறா என்பதை வசனத்துடன் ஒப்பிட்டுதான் தீர்கமானிக்கமுடியும்.

"கர்த்தருக்கு (சபைக்கு) இவ்வளவு கொடுப்பேன்" என்று மனதில் நியமித்துக் கொடுக்கிறது சரியா?

புதிய ஏற்பாடு முழுவதும் அடியேன் தேடிப்பார்த்தும் ஆதிசபையில், *"இந்த வருஷம் இத்தனை ஆயிரம் ரூபாய் கர்த்தருக்குக் கொடுப்பேன் என்று மனதில் நியமித்து அல்லது பொருத்தனைசெய்து கொடுங்கள்"* என்று போதித்த ஒரு ஊழியரையும் காணமுடியவில்லை.

"இந்தவருடம் நான் கர்த்தருக்கு (சபைக்கு) இத்தனை ஆயிரம் கொடுப்பேன்" என்று மனதில் நியமித்து, அல்லது பொருத்தனை செய்து கொடுத்த ஒரு விசுவாசியையும் ஆதிசபையில் காணமுடியவில்லை!

இதிலிருந்தே மனதில் நியமித்து சபைக்கு கொடுப்பது புதிய ஏற்பாட்டு சபை வழக்கமல்ல என்பதை அறிந்துகொள்ளலாம்.

மனதில் நியமித்து யாருக்குக் கொடுக்கவேண்டும்?

"அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்கிற வசனத்தை (2கொரிந்.9:7), ஸ்தலசபைக்கு கொடுப்பதைக் குறித்து போதிக்கவே இன்று அநேக ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர். 

எருசலேமில் வறுமையில் இருந்த பரிசுத்தவான்களுக்கு செய்யவேண்டிய தர்மசகாயத்தைப் பற்றியே பவுல் இங்கு கொரிந்துசபையாருடன் பேசுகிறார். (2கொரி.8:4,5,15,20; 9:1,5,9,13)

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, *தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்.* உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்
               2கொரிந்.9:7
என்று சொல்லுகிற பவுல்:

மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். 
               2கொரிந்.9:8
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்
               2கொரிந்.9:9
என்று சொல்லுகிறதையும் நாம் கவனிக்கவேண்டும்.

அவனவன் விசனமாயுமல்லாமல், கட்டாயமாயுமல்லாமல், தன் மனதில் நியமித்தபடியே ஏழை பரிசுத்தவான்களுக்கு கொடுப்பதைப் பற்றியே பவுல் இங்கு பேசுகிறார்.

மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் *எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச்* சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்
               ரோமர் 15:26
என்று பவுல் சொல்லுகிறதும் இங்கு கவனிக்கத்தக்கது.

எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்த தீர்கதரிசிகளில் ஒருவனாகிய அகபுவினால் முன்னறிவிக்கப்பட்டு, கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டானக் கொடிய உலகபஞ்சத்தில் பாதிக்கப்பட்ட யூதேயா சகோதரருக்கு உதவியாக, அவரவர் தங்கள் திராணிக்குத்தக்கதாக பணஞ்சேகரித்து அனுப்பவேண்டுமென்று அந்தியோகியா சீஷர்கள் தீர்மானம்பண்ணி, அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடையகையில் கொடுத்து, எருசலேம் சபை மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள். (அப்.11:27-30)

இந்த தர்மசகாயதிட்டம் புறஜாதியார் நாடுகளிலிருந்த சபைகள்வரை விரிவுபடுத்தப்பட்டது. 

மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டார்கள். இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்.
எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களின் ஞானநன்மைகளில் பங்குபெற்றிருந்த இவர்கள், சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய கடனாளிகளாயிருந்தார்கள். (ரோமர் 15:26,27)

அகாயாநாட்டு கொரிந்துசபையில் தர்மசகாயத்திட்டத்தை தீத்து துவக்கிவைத்தார். (2கொரிந்.8:6)

மக்கெதோனியா நாட்டுச் சபைகளான பிலிப்பி, தெசலோனிக்கே மற்றும் பெரோயா சபையினர் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே யூதேயாவில் இருந்த ஏழை கிறிஸ்தவர்களுக்கு மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுக்க தேவன் கிருபை அளித்தார். (2கொரிந்.8:1,2)

தேவகிருபையினாலே அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்கள். (2கொரிந்.8:3)

தங்கள் உபகாரத்தையும், *பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும்* தர்மசகாயத்திற்கு பணம் சேகரித்த பவுல் குழுவினர் ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள். (2கொரிந்.8:4)

இவர்களை உதாரணமாகக் காண்பித்தே பரிசுத்தவான்களுக்கான தர்மசகாயத்திற்கு உற்சாகமாய் கொடுக்கும்படி கொரிந்து சபையாரை கேட்டுக்கொள்கிறார் பவுல். (2கொரிந்.8:1-9:15)

*"சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்"* என்கிற வசனத்தையும் (2 கொரிந்.9:6) ஊழியத்திற்கு கொடுப்தைப்பற்றிப் போதிக்கவே இன்று அநேக ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர்.

பவுல் அப்படி சொல்லுகிறதற்கு முன்பு "ஆகையால், *வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது* லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், *உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக* அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது" என்று (2கொரிந்.9:5) சொல்லுகிறதை இவர்கள் கவனிக்கத்தவறிவிடுகின்றனர்.

கொரிந்துசபையார் தாங்கள் வாக்குப்பண்ணியிருந்த தர்மசகாயத்திற்கு 
உதாரத்துவமாய்க் கொடுக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்துவதற்கே, "சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்" என்று சொல்லுகிறார் பவுல்.

மேற்காணும் வசனங்களின்படி ஒரு கிறிஸ்தவர், ஏழ்மையிலுள்ள பரிசுத்தவான்களாகிய ஊழியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குதான் தன் மனதில் நியமித்து கொடுக்க கொடுக்கவேண்டும்.

சபையார் தங்கள் மனதில் நியமித்து ஊழியத்திற்கும் கொடுப்பது தவறில்லை. ஆனால், ஊழியர்கள் மேற்காணும் வசனங்களைக் கொண்டு, விசுவாசிகள் தங்கள் மனதில் நியமித்து ஏழைகளுக்கு கொடுப்பதைப்பற்றி போதியாமல், ஊழியத்திற்கு கொடுப்பதைப் பற்றி போதிக்கிறது தவறாகும்!

ஏழைகளுக்கு கொடுப்பது வேறு, கர்த்தருக்கு கொடுப்பது வேறா?

இதைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" என்கிறது வேதம். (நீதி.19:17)

ஏழைக்குக் கொடுப்பதை தமக்குக் கொடுப்பதாகவே எடுத்துக்கொண்டு, ஏழைக்குக் கொடுப்பவர்களுக்கு திரும்பக் கொடுக்கிறார் கர்த்தர்.

"சீஷன் (கிறிஸ்தவன்)
என்னும் நாமத்தினிமித்தம் *இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும்* தன் பலனை அடையாமற் போகான்" என்று நிச்சயமாய் சொல்லுகிறார் ஆண்டவர். (மத்.10:42)

"மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்" என்று சொல்லுகிறார் ஆண்டவர். (மத்.25:40)

வாரியிறைக்கவும் ஏழைகளுக்குக் கொடுக்கவும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கவும், தேவனே தமது ஜனங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்கிறார். (2கொரிந்.9:8,9)

வாரியிறைத்து ஏழைகளுக்குக் கொடுக்கிற தமது பிள்ளைகளின் 
நீதி என்றென்றைக்கும் நிற்கவும், அவர்களின் நீதியின் விளைச்சலை வர்த்திக்கவும் செய்கிறார் தேவன். (2கொரிந்.9:9,10)

"உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு (ஏழை கிறிஸ்தவர்களுக்கு) ஊழியுஞ்செய்ததினாலும் (உதவிசெய்ததினாலும்) செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே" என்று வேதம் சொல்லுகிறதும் கவனிக்கத்தக்கது. (எபிரே.6:10)

ஏழைகளுக்கு கொடுப்பது கர்த்தருக்கே கொடுப்பதாக வேதம் இவ்வளவு நிச்சயமாய் சொல்லியிருக்க, "ஏழைகளுக்கு கொடுப்பது வேறு, கர்த்தருக்கு கொடுப்பது வேறு. ஏழைகளுக்குக் கொடுப்பது கர்த்தருக்குக் கொடுப்பதல்ல" என்று ஒரு ஊழியக்காரன் போதிக்கிறது கொடிய வஞ்சகமாகும்!

சபைக்கு கொடுப்பது மட்டுமே கர்த்தருக்கு கொடுப்பதா?
சபைக்கு, குறிப்பாய் தாங்கள் அங்கமாய் இருக்கும் சபைக்கு கொடுப்பது மட்டுமே கர்த்தருக்குக் கொடுப்பது என்று விசுவாசிகளை ஊழியர்கள் மூளைசலவை செய்கிறது அப்பட்டமான சுயநலமாகும்!

தங்களைத் தவிர காணிக்கையை, குறிப்பாக தசமபாகத்தை வேறு ஊழியருக்கு விசுவாசிகள் கொடுத்துவிடக்கூடாது என்கிறதில் சில ஊழியர்கள் மிகவும் விழிப்பாய் இருக்கிறதைக் காணமுடிகிறது.

"கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு" என்கிற வசனத்தைக் காண்பித்து (உபாக.12:13), "நீ போகும் சபையைத் தவிர, வேறு எந்த சபைக்கும் காணிக்கைக் கொடுக்காதே" என்று விசுவாசிகள் அச்சுறுத்தப்பட்டக் காலமும் உண்டு!

இதற்குக் காரணம், இன்றைய ஊழியர்களில் பலர் தங்களை பழைய ஏற்பாட்டு ஆசாரியராகவும், தாங்கள் நடத்துகிற சபையை எருசலேம் தேவாலயமாகவும், விசுவாசிகளை இஸ்ரவேல் ஜனங்களாகவும் கற்பனைசெய்துகொண்டிருப்பதுதான். 

புது உடன்படிக்கையின் ஊழியக்காரராக இவர்களின் இருதயம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை! (2கொரி.3:1-13)

ஊழியத்திற்கு கொடுப்பதைப் பற்றி புதிய ஏற்பாட்டில் எத்தனையோ அருமையான உபதேசங்கள் இருந்தும், இவர்கள் பழைய ஏற்பாட்டு காணிக்கை, பொருத்தனை, தசமபாகத்தைப் பற்றியே விசுவாசிகளுக்கு போதிக்க விரும்புகின்றனர்.

தசமபாகம் பற்றிய பிரமாணத்தை (உபா.12:6,11,17; 14:22,23,28) போதித்தும், பழைய ஏற்பாட்டு வசனங்களால் (மல்.3:8,9) பயமுறுத்தியும், சபையாரிடம் தசமபாகம் வாங்கின ஒரு ஊழியரையும், ஊழியருக்கு தசமபாகம் கொடுத்த ஒரு விசுவாசியையும் ஆதிசபையில் காணமுடியவில்லை. 

நீதியும் இரக்கமும் செய்யவேண்டும், தசமபாகம் கொடுப்பதையும் விடாதிருக்கவேண்டும் என்று தசமபாகப் பிரமாணத்திற்கு கீழ் இருந்த வேதபாரகர் பரிசேயரிடம் ஆண்டவர் சொன்னதை (மத்.23:23) தங்களுக்கும் சொன்னதாக ஆதிசபையார் எடுத்துக்கொண்டிருந்திருந்தால்: அப்போஸ்தலர் தசமபாகத்தைக்குறித்து சபைக்கு போதித்து தசமபாகம் வாங்கியிருப்பார்கள், விசுவாசிகளும் தசமபாகம் கொடுத்திருப்பார்கள்!

இப்படியிருக்க, சபைக்கு கட்டாயம் தசமபாகம் கொடுத்தல், மனதில் நியமித்து அல்லது பொருத்தனைசெய்து கொடுத்தல் பற்றிய போதனைகள், கொடுப்பதை பற்றிய புதிய ஏற்பாட்டு உபதேசங்களுக்கு முரணானவை என்பதை அறியவேண்டும்!

தங்கள் வருமானத்தில் 5 சதவீதமோ, 10 சதவீதமோ, 50 சதவீதமோ, 100 சதவீதமோ, மனதில் நியமித்தோ, விசுவாசிகள் மனமுவந்து கொடுப்பதையே ஊழியர்கள் ஊழியத்திற்கு பெற்றுக்கொள்ளவேண்டும்

சபைக்குக் கொடுப்பதுதான் கர்த்தருக்கு கொடுப்பது என்று போதிக்கக் காரணம்?
இன்று அநேகக் கிறிஸ்தவர்கள் தசமபாகத்தை பிரித்து தங்கள் ஊழியருக்கும், மற்ற ஏழை ஊழியர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுக்கிறார்கள்.

ஒருகாலத்தில் ஒரே இடத்தில் வந்து குவிந்த காணிக்கை தசமபாகம் இன்று பல இடங்களுக்கு பிரிந்துபோவதால் உண்டாகும் நஷ்டத்தை சரிசெய்யவே, "சபைக்கு வருடத்தில் இத்தனை ஆயிரம் கொடுக்கிறேன்" என்று மனதில் நியமித்து கொடுத்தல், பொருத்தனை செய்து கொடுத்தல் போன்ற பழைய ஏற்பாட்டுப் பாணியை அறிமுகம் செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள் புதிய ஏற்பாட்டு ஆண்டவரின் அடியார்கள்!

மேலும் "சபைக்குக் கொடுப்பதுதான் கர்த்தருக்குக் கொடுப்பது, சபைக்கு வெளியே கொடுப்பது கர்த்தருக்கு கொடுப்பதல்ல" என்கிற ஒரு நூதனமான போதனையின்மூலம், விசுவாசிகள் சபைக்கு கொடுப்பதைத் தவிர வேறு ஒருவருக்கும் கொடுக்காதபடிக்கு 
இவர்கள் தந்திரமாய் அணைபோட முயற்சிக்கிறார்கள்.

சபைக்கு கொடுப்பதைப் பற்றி ஒரு விசுவாசி மனதில் நியமித்துக்கொள்ளுகிறதோ, பொருத்தனை செய்கிறதோ, அதை நிறைவேற்றுகிறதோ தவறல்ல. ஆனால் ஊழியக்காரர்கள் அதற்கு விசுவாசிகளைக் கட்டாயப்படுத்தக்கூடாது!

ஆதிசபை ஊழியரில் ஒருவரும் அப்படிச் செய்ததில்லை.

இன்று சில ஊழியர்கள், சில காரியங்களுக்கு விசுவாசிகள் எவ்வளவு கொடுக்க வாக்குப்பண்ணுகிறார்கள் என்பதை ஒரு சீட்டில் எழுதி காணிக்கைப் பெட்டியில் போடச்சொல்லுகிறதாகக் கேள்விப்படுகிறோம். சிலர் படிவத்தை நிரப்பித்தர கேட்கிறதையும் பார்க்கிறோம்!

ஆதிசபை ஊழியரில் ஒருவரும் சபையாரை இப்படி நிர்பந்தத்திற்குள்ளாக்கவில்லை என்பதை நாம் அறியவேண்டும்!

இப்படியிருக்க, "பொருத்தனை செய்து அல்லது மனதில் நியமித்து சபைக்கு கொடுப்பது மட்டுமே கர்த்தருக்குக் கொடுப்பதாகும், வேறு எங்கோ, ஏழைகளுக்கோ கொடுப்பது கர்த்தருக்குக் கொடுப்தல்ல" என்கிற போதகம் தவறான உபதேசமாகும்!

ஊழியருக்கு, ஊழியத்திற்கு, ஏழைகளுக்கு கொடுப்பது எல்லாமே கர்த்தருக்கு கொடுப்பதுதான் என்பதை நாம் அறியவேண்டும்!!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920







=====================
"எங்கள் கோட்பாடு அப்போஸ்தலரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது, அவர்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல" என்று சில திருச்சபையினர் சொல்லுகிறது சரியா?
============================

அப்போஸ்தலரின் அனுபவங்கள் அவர்களுடைய போதனைகளுக்கு முரண்பட்டதாக இருக்குமானால், அவர்கள் சொல்லுகிறது சரியாக இருக்கும்.

அப்போஸ்தலரின் அனுபவங்கள் அவர்களுடைய போதனைகளுக்கு முரண்பட்டவை என்பதை வசன ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டியக் கடமை குறிப்பிட்ட திருச்சபைகளுக்கு இருக்கிறது! அப்போஸ்தலர் மற்றும் ஆதிசபையாரின் எந்தெந்த ஆவிக்குரிய அனுபவம், அப்போஸ்தலரின் எந்தெந்தெ போதனைக்கு முரணாக இருக்கிறது என்று இவர்கள் காண்பிக்கவேண்டும்!

தங்கள் ஆவிக்குரிய அனுபவங்களுக்கும் தங்கள் போதனைகளுக்கும் தொடர்பில்லை என்று ஆதிஅப்போஸ்தலர் அறிக்கையிட்டதுண்டா? *"எங்கள் போதனைகளை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள், எங்கள் ஆவிக்குரிய அனுபவங்களை உங்கள் அனுபவங்களாக்கிக்கொள்ளவேண்டாம்"* என்று ஆதிசபையாரை அப்போஸ்தலர் கேட்டுக்கொண்டதுண்டா? *"என்னுடைய வார்த்தைகளுக்கும் உங்கள் அனுபவங்களுக்கும் தொடர்பில்லை"* என்று தேவன் ஆதிஅப்போஸ்தலரையும் ஆதிசபையாரையும் கடிந்துகொண்டதுண்டா?

பெந்தெகொஸ்தேநாளில் பரசுத்தஆவியினால் நிரப்பப்பட்ட அனுபவத்திற்கு (அப்.2:1-4) யோவேல் 2 ஆம் அதிகாரம் 28முதல் 32வரை உள்ள வசனங்களைத்தானே அடிப்படையாகக் காண்பித்தார் பேதுரு! (அப்.2:16-21) சமாரிய சீஷர் (அப்.8:16,17), கொர்நேலியு வீட்டில் கூடியிருந்தோர் (அப்.10:24,44,45), எபேசு சீஷர் (அப்.19:1-6) வெளியரங்கமாய் பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்ட அனுபவத்திற்கும் யோவேல் 2:28-32தானே அடிப்படையாக இருக்கமுடியும்!

அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்ட (அப்.2:43), ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்த (அப்6:8), 
பிலிப்பு அநேகரிலிருந்த அசுத்தஆவிகளை துரத்தி, அநேகந் திமிர்வாதக்காரரையும் சப்பாணிகளையும் குணமாக்கின (அப்.8:5-7), பெந்தெகொஸ்தேநாளில் எருசலேமிலும் (அப்.2:4), செசரியாவிலும் (அப்.10:44,45) எபேசுவிலும் (அப்.19:6) சீஷர்கள் அந்நியபாஷைகளில் பேசின அனுபவங்களுக்குப் பின்னால்: "வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்"* என்றும் (மத்.10:8), "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்: நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள்: சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது: வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்றும் (மாற்கு 16:17,18) ஆண்டவர் சொன்ன வார்த்தைகள் இருக்கிறதை எவரேனும் மறுக்கமுடியுமா?

வசனங்களை மறுதலிக்கலாமா?
"வசனங்களை நாங்கள் நம்புவோம், ஆனால் வசனத்தின் அடிப்படையிலான அனுபவங்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்பது மனக்கடினத்தை அல்லவா வெளிப்படுத்துகிறது! திருவசனத்தின் அடிப்படையிலான ஆவிக்குரிய அனுபவங்களை மறுப்பது திருவசனத்திற்கு எதிராக முரட்டாட்டம் செய்வதாகாதா? .

பொதுவாக, பரிசுத்தஆவியைப் பெறுதல், ஆவியின் வரங்களைப் பயன்படுத்துதல் போன்ற அனுபவங்களை மறுக்கிற திருச்சபையினரே, தங்கள் கோட்பாடு அப்போஸ்தலரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டவை என்று சாதிக்கின்றனர். அப்போஸ்தலரின் போதனைகளுக்கும் அனுபவங்களுக்கும் தொடர்பில்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

"சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்" என்கிறவர்கள்
(2கொரிந்.13:8), சத்தியத்திற்கு தொடர்பில்லாத ஆவிக்குரிய அனுபவங்களுக்கு தங்களை எப்படி ஒப்புவித்திருப்பார்கள்? *சபை சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாக இருக்க வாஞ்சித்தவர்கள்* (1தீமோத்3:15), சத்தியத்திற்கு மாறான ஆவிக்குரிய அனுபங்களுக்குள் சபையை எப்படி நடத்தியிருப்பார்கள்?

தங்கள் ஆவிக்குரிய அனுபவங்கள் சத்தியத்தின் அடிப்படையிலானவை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

ஆதிஅப்போஸ்தலரின் அனுபவங்கள் திருவசனத்தை அடிப்படையாகக் கொண்டவைகளாயிருக்க, அந்த அனுபவங்களை மறுதலிக்கிறவர்கள் திருவசனத்தை சரியாய் விளங்கிக்கொள்ளவில்லை என்றே அர்த்தம்!

ஆவிக்குரிய அனுபவங்களில் நடத்தின அப்போஸ்தலர்!
தங்களுக்கு உண்டான ஆவிக்குரிய அனுபவங்கள் தாங்கள் நடத்தின மக்களுக்கும் உண்டாகவேண்டும் என்று வாஞ்சித்தனர் ஆதிஅப்போஸ்தலர். ஆவிக்குரிய அனுபங்களைப் பற்றின வாக்குத்தத்தங்கள் தங்களோடு முடிவடைந்துவிட்டதென்று அவர்கள் நினைக்கவில்லை.

தங்களுக்கு உண்டான ஆவிக்குரிய அனுபவங்கள் இனி கிறிஸ்தவர்களாகிறவர்களுக்கு அவசியமில்லை என்று ஆதிஅப்போஸ்தலர் நினைத்திருந்தால், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்கள்மேல் கைகளை வைத்து ஜெபித்திருப்பார்களா? (அப்.8:16,17; 19:6) மூப்பராகிய சங்கத்தார் தீமோத்தேயுவின்மேல் கைகளை வைத்துபோது தீர்கதரிசனத்தினால் அவனுக்கு வரம் அளிக்கப்பட்டதே? (1தீமோத்.4:14)

அப்போஸ்தலரை கடந்து அவர்களுக்கு உண்டான ஆவிக்குரிய அனுபவங்கள் சபையார்வரை தொடர்ந்ததே!

இயேசுகிறிஸ்து சொன்னபடி (லூக்கா 11:13) பிதாவினிடத்தில் ஜெபித்து பரிசுத்த ஆவியைப் பெறுவது பழைய ஏற்பாட்டுக் காலம் என்றும், இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போதே பரிசுத்தஆவியானவர் ஒருவருக்குள் வந்துவிடுகிறார் என்றும் எபேசியர் 1:13ஐ தவறாக வியாக்கியானம் செய்கிற பலர் உண்டு!

இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போதே பரிசுத்தஆவியானவர் ஒருவருக்குள் வந்துவிடுவாரானால், ஏற்கனவே பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள்மேல், பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி கைகளை வைத்து ஜெபிக்க பேதுருவும் யோவானும் பவுலும் பைத்தியங்களா? (அப்.8:16,17; 19:5,6)

ஒருவர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போதே அவருக்குள் பரிசுத்தஆவியானவர் வந்துவிடுகிறார் என்கிற அர்த்தத்தில் எபேசியர் 1:13ல் பவுல் பேசியிருப்பாரானால், இயேசுவை ஏற்றுக்கொண்டபோதே பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்ட எபேசு சீஷர்கள்மேல் கைகளைவைத்து, அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர் ஜெபிக்கவேண்டிய அவசியம் என்ன?

பொதுவாக ஆவிக்குரிய அனுபவங்கள் ஒன்றும் இல்லாதவர்களே, மற்றவர்களை அந்த அனுபவங்களுக்குள் நடத்த மறுப்பதோடு, அவ்வித அனுபவங்கள் தற்போது கிடையாது என்று சாதிக்கின்றனர்!

"அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கு மட்டுமே இயேசு அதிகாரங்கொடுத்தார். வேறு எவருக்கும் அந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை" (மத்.10:1) என்று சாதிக்கிறவர்கள் உண்டு. அப்படியானால், சாதாரண விசுவாசிகளாகிய ஸ்தேவானும் (அப்.6:8), பிலிப்புவும் (அப்.8:5-13), 12 சீஷர் பட்டியலில் இல்லாத பவுலும் (அப்.13:8-12; 14:8-10; 16:16-18; 19:11,12; 28:3-9) எப்படி அசுத்த ஆவிகளைத் துரத்தி, சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கியிருக்கமுடியும்?

"மத்தியாவுடன் சேர்ந்த 12 அப்போஸ்தலருக்குப் பின்பு வேறு ஒருவரும் அப்போஸ்தலராக ஏற்படுத்தப்படவில்லை" (அப்.1:15-16) என்றும் சாதிக்கிறவர்கள் உண்டு! 12 அப்போஸ்தலருக்குப் பின்பு வேறு ஒருவரும் அப்போஸ்தலராக ஏற்படுத்தப்படவில்லை என்றால், பர்னபாவும் பவுலும் எப்படி அப்போஸ்தலராகியிருக்கமுடியும்? (அப்.14:14; கலாத்.2:7-9)

வேதத்திலுள்ள மேற்காணும் காரியங்களை நன்றாக அறிந்திருந்தும் அதை மறைக்கிறவர்களே, தாங்கள் அப்போஸ்தலரின் போதனைகளை தங்கள் திருச்சபைக்கான கோட்பாடுகளாக எடுத்துக்கொண்டதாக பொய்சொல்லுகிறார்கள்!

இத்தனை தெளிவாய் காணப்படுகிற காரியங்களை திரித்தும் மறைத்தும் போதிக்கிற இவர்கள், அடுத்த சபைபிரிவினரின் வேதத்திற்கு எதிரானக் காரியங்களை வெளிச்சம்போட்டுக்காட்டப் புறப்படுகிறதில் என்ன நியாயம் இருக்கிறது?

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.