=========================
திருச்சபை நிர்வாகம் பற்றி பாஸ்டர் டேவிட் & வின்சென்ட்
===========================
(பகுதி - 1)
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்!
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட்! இன்னக்கி நீங்கதான் உங்க ஆராய்ச்சிய பகிர்ந்துகுனும்.
"அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரனையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்" இன்னு
அப்போஸ்தலர் 6:1ல இருக்கிறத படிச்சிருக்கீங்களா பாஸ்டர்?
படிச்சிருக்கேன் பாஸ்டர்.
எருசலேம் சபையில முதிர்வயதுள்ள விதவைங்கள விசாரிக்கும் பொறுப்புல இருந்தவங்க எல்லாரும் எபிரெயர். அவங்கள அப்போஸ்தலரே நியமிச்சாங்களா, இல்ல அவங்க தன்னார்வத் தொண்டர்களா இருந்தாங்களான்னு சரியான தகவல் இல்ல. கிரேக்க விதவைங்கள சரியா விசாரிக்கலன்னு அவங்கமேலதான் கம்ப்ளைண்ட் வந்தது.
எருசலேம் சபையில எபிரெய விசுவாசிகள், கிரேக்க விசுவாசிகள்ன்னு ரண்டு குரூப் இருந்ததுங்களா பாஸ்டர்?
ரண்டு குரூப்புமே யூதர்கள்தான். எபிரெயர் இங்கறவங்க கிரேக்கக் கலாச்சாரத்த தழுவிக்கொள்ளாத யூதருங்க, கிரேக்கர் இங்கறவங்க கிரேக்கக் கலாச்சாரத்தையும் பின்பற்றன யூதருங்க. இவங்கள எபிரெயர்கள் கிரேக்கராவே பாத்திருக்காங்க பாஸ்டர்!
அப்ப கிரேக்கக் கலாச்சாரத்த ஏத்துக்காத யூதருங்க டாமினேஷன்தான் சபையில அதிகமா இருந்திச்சின்னு சொல்லுங்க!
அப்படித்தான் இருந்திருக்கும்னு நெனக்கிறேன் பாஸ்டர்.
நம்ம ஊரு சபையிலயும் எந்த ஜாதிக்காரங்க அதிகமா இருக்காங்களோ, அவங்கதானே டாமினேஷன் பண்றாங்க?
கிரேக்க கலாச்சாரத்த ஏத்துக்காத யூத விசுவாசிகள் எருசலேம் சபையில அதிகமா இருந்ததனால, அவங்கக் கை ஓங்கியிருந்திருக்கலாம்.
ஆதி அப்போஸ்தலர் நடத்தின சபையிலேயே விசுவாசிங்க இப்படி இருந்தாங்களா?
சபை மக்கள் எப்படி இருந்தாங்க இன்றதவிட, ஊழியக்காரங்க எப்படி இருந்தாங்க இன்றதுதான் முக்கியம் பாஸ்டர்.
எபிரெய பொறுப்பாளருங்க கிரேக்க விதவைகள சரியாக விசாரிக்கலங்கற புகாரு அப்போஸ்தலர் கவனத்துக்கு வந்தப்பெறகு, அவங்க எடுத்த நடவடிக்கை என்ன பாஸ்டர்?
"அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து; நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்"* இன்னு நீங்க
அப்போஸ்தலர் 6:2-4ல படிச்சதில்லயா?
படிச்சிருக்கிறேன், நீங்க கொஞ்சம் வௌக்கமா சொல்லுங்க பாஸ்டர்.
அப்போஸ்தலரே விதவைகள விசாரிக்கிற பொறுப்ப ஏத்துகிட்டாதான் சரிவரும்ன்னு கிரேக்கர் நெனைச்சிருக்காங்க.
அவங்கதான், *"நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்"* இன்னு சொல்லிட்டாங்களே!
அரிசி பருப்பு வாங்கறதுல இருந்து, சோறுபோட்டு கொழம்பு ஊத்தி, அப்பளம் வக்கிறவரைக்கும் ஊழியக்காரன் கவனஞ்செலுத்தினா, அப்பறம் எப்படி சரியா ஜெபம்பண்ணவும் ஒழுங்கா தேவவசனத்தப் போதிக்கவும் முடியும் பாஸ்டர்?
சபையில A to Zன்னு எல்லாக் காரியத்திலயும் தலையிட்டுகிட்டு இருக்கிற ஊழியக்காரங்க, இதனாலதான் பிரசங்கப்பீடத்துல
தேவவசனத்தப் போதிக்காம கதகதயா அளக்கறமா?
ஆரம்ப ஜெபம் மொதல்: பாடல், ஆராதனை, கீபோர்ட் & கிட்டார் வாசிப்பு, பிரசங்கம், நிதி நிர்வாகம், சபை மெயின்ட்டனென்ஸ், வீடு சந்திப்பு, பந்திவிசாரிப்புன்னு அத்தனை காரியத்தையும் ஊழியக்காரர் தங்கமேல போட்டுக்கிட்டா, அப்பறம் அவங்களோட ஜெபமும் பிரசங்கமும் எப்படியிருக்கும்?
சரியா சொன்னீங்க! சரி, அப்போஸ்தலர்கிட்ட வாங்க!
தாங்கள் பந்திவிசாரிக்கும் பொறுப்ப ஏத்துக்கலனாலும், அந்த பொறுப்புக்கு ஏற்படுத்தப்படவேண்டிய ஏழுபேருக்கான தகுதிகளா அப்போஸ்தலர் நிர்ணயிச்ச மூனு காரியங்கள் இருக்கே! அமேஸிங் பாஸ்டர்!
பரிசுத்தஆவி! ஞானம்! நற்சாட்சி! ஆதி அப்போஸ்தலர் உண்மையிலேயே கிரேட் பாஸ்டர்!
இன்னைய சபைகள்ல எந்தத் தகுதியின் அடிப்படையில பொறுப்புக் கொடுக்கப்படுதுன்னு தெரியுமா பாஸ்டர்?
நம்ம குடும்பத்த சேர்ந்தவர், நம்ம சொந்தக்காரர், நம்ம ஜாதிக்காரர், நம்ம ஊர்க்காரர், சபையில் பெரிய பணக்காரர், அதிகம் படித்தவர், இதுதானே இன்னிய சபைகள்ல பொறுப்பு கொடுக்க அடிப்படைத் தகுதிகள்!
இப்படிப் பாத்துதான் இன்னக்கி பரிசுத்தஆவியும் ஞானமும் இருந்தும் நற்சாட்சியில்லாத, பரிசுத்தஆவியும் நற்சாட்சியும் இருந்தும் ஞானமில்லாத, ஞானமும் நற்சாட்சியும் இருந்தும் பரிசுத்தஆவியில்லாத, பரிசுத்தஆவி ஞானம் நற்சாட்சி மூனுமே இல்லாதவங்களுக்கல்லாம் திருச்சபையில பொறுப்பக்கொடுத்து, சபையை பாழாக்கிக்கிட்டிருக்கிறோம் பாஸ்டர்!
பொறுப்பு கொடுக்கிற விஷயத்துல எபிரெயர் - கிரேக்கர் இன்னு வேறுபாடு பாக்காம பரிசுத்தஆவி, ஞானம், நற்சாட்சியுள்ளவங்களான்னு பார்த்த ஆதிசபை ஊழியரின் இருதயம் நமக்கும் வேணும் பாஸ்டர்!
எருசலேம் சபையில அப்போஸ்தலர் எல்லாரும் எபிரெயரா இருந்தும், கிரேக்க விதவைகள சரியா விசாரிக்காத எபிரெயருக்கு சப்போர்ட் பண்ணாம, அவங்கக்கிட்டருந்தப் பொறுப்ப மாத்த முன்வந்தது, அவங்க தேவனுடைய பட்சத்துல நிக்கறவங்களா இருந்தாங்கங்கறத காட்டுதுல்ல பாஸ்டர்?
உண்மதான், இந்த நேர்ம நம்மகிட்டருந்திருந்தா இன்னைக்கு உலகம் சபையில எப்பவே இயேசுவ பாத்திருக்கும் பாஸ்டர்!
"சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்" இன்னு, பொறுப்பாளர்களத் தேர்வு செய்யும் பொறுப்பை ஊழியக்காரங்க சபையார்கிட்டயே விட்டுட்டத கவனிச்சீங்களா பாஸ்டர்?
கவனிச்சேன் பாஸ்டர்.
தங்கள் இஷ்டப்படி தான்தோன்றித்தனமா எதையாவது செஞ்சி, அத விசுவாசிங்க அப்படியே ஏத்துக்கனும்ன்னு கட்டாயப்படுத்தற வழக்கம் அவங்கக்கிட்ட இல்ல பாஸ்டர்!
அப்போஸ்தலர் மூப்பரோடும் விசுவாச சகோதரரோடும் சேர்ந்தே தீர்மானங்கள எடுத்தத அப்போஸ்தலர் 15:23ல பாக்கமுடியுது பாஸ்டர்.
தாங்கள் நடத்தற ஜனங்களுக்கும் அறிவு, தெறம, கிருப இருக்குன்னு நம்பறவங்க, அவங்களையும் சேத்துகிட்டுதானே செயல்படுவாங்க பாஸ்டர்?
விசுவாசிங்களோட எந்த ஆலோசனையும் பண்ணாம, அவங்களோட கருத்தக் கேக்காம தாங்கள் விரும்பனவங்கள, தாங்கள் நெனைக்கிற பொறுப்புல வைக்கிற ஊழியக்காரங்க: தாங்கள் நடத்தற ஜனங்களுடைய கிருப, தெறம, அறிவுல நம்பிக்க வைக்கிறதில்லன்னு எடுத்துக்கலாமா பாஸ்டர்?
கிருப, அறிவு, தெறம இல்லாதவங்கள பல வருஷமா நடத்தறவங்க எவ்வளவு கிருப, அறிவு, தெறம உள்ளவங்களா இருப்பாங்கன்னு யோசிச்சிப்பாருங்க பாஸ்டர்.
யோசிக்கவேண்டியக் காரியந்தான் பாஸ்டர். சரி, இன்னக்கி மெய்ன்லைன் சர்ச்சஸ்ல, எலக்க்ஷன் மூலமா சபையாரே பொறுப்பாளர்கள தேர்ந்தெடுக்கிறாங்களே, இது எருசலேம் சபை மாடல்தானே?
எருசலேம் சபையில, பொறுப்புக்கு வர ஆசப்பட்டவங்கள எலக்ஷன்ல நிக்கவச்சி, சபையார் ஓட்டுப்போட்டா தேர்ந்தெடுத்தாங்க?
அப்ப அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லயா?
ஜாதிக்காரனுக்கும், சாராயம் ஊத்தறவனுக்கும், பீடிவாங்கித் தறவனுக்கும், பிரியாணி வாங்கிக் கொடுக்கிறவனுக்கும் சபையார் ஓட்டுப்போட்டு, பொறுப்புக்குக் கொண்டுவந்தத நீங்க ஆதிசபையில பாக்கமுடியுமா?
சர்ச்சி காம்பவுண்டுக்கு முன்னாலலே நின்னு சிகரட் புடிக்கிறவர் பி.சி மெம்பராவும், சபை வளாகத்துக்குள்ளேயே ஒங்காந்து வெத்தல பாக்கு பொயலப் போடறவர் சபை செயலாலளாகவும், ஒரு பிரசங்கத்தக்கூட முழுசா ஒங்காந்து கேக்காதவர் DC மெம்பராவும் தேர்ந்தெடுக்கப்படுவது இன்னைய சபைகள்ல நடக்கும் அதிசயங்கள்ல ஒன்னு இல்லயா பாஸ்டர்?
அடிதடி, மண்டை உடைப்பு, போலீஸ் பந்தபஸ்து, இதெல்லாம் கூடுதல் ஸ்பெஷல் பாஸ்டர்!
குழிபறித்தல், காலைவாறுதல், கழட்டிவிடுதல், கவிழ்த்துவிடுதல் போன்ற காரியங்கள் அரசியல்வாதிகளே நம்மகிட்ட பிச்ச எடுக்கனும் போலிருக்கே பாஸ்டர்!
நம்ம அளுங்கப் பக்கத்துல அவங்க வரவேமுடியாது பாஸ்டர்!
பணக்காரங்களுக்கும், தங்க ஜாதிக்காரங்க நெறையா இருக்கிறவங்களுக்கும், முக்கியமான அரசியல் கட்சிகளின் செல்வாக்கு உள்ளவங்களுக்குந்தான் இன்னைக்கு சபைகள்ல முக்கிய பொறுப்பு! பக்தியுள்ளவங்களுக்கு இங்கு இடமும், மரியாதையும் ரொம்பக் கொறவுதான் போலருக்கே?
திருச்சபைக்கு பெரிய எதிரிங்க வெளியில இல்ல பாஸ்டர், திருச்சபைக்கு உள்ளதான் இருக்காங்க!
ஆதிசபையில பந்திவிசாரிப்புப் பணிக்கு யார, எந்த அடிப்படையில தெரிந்தெடுத்தங்கன்னு சொன்னீங்க. மத்த பொறுப்பாளருங்கள எப்படி நியமிச்சங்கன்னு சொல்லுங்க பாஸ்டர்.
ரோமர் 12:6-8லயும் 1கொரிந்தியர் 12:8-10லயும் சொல்லப்பட்டுள்ள வரங்களை உடைய விசுவாசிகள, அவங்களோட கிருபைக்கேற்ற பொறுப்புகளக் கொடுத்து, சபையின் பக்திவிருத்திக்காக ஊழியருங்க பயன்படுத்திகிட்டாங்க. இன்னைக்கு ஒரு சபைய நடத்தற ஒரு ஊழியர் வச்சதுதான் சட்டங்கறமாதிரி அன்னக்கி இல்ல. சபை ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களின் கட்டும்பாட்டுக்குள்ள இருந்ததனால, அவங்க கூட்டாக முடிவெடுத்து விசுவாசிகளையும் தங்களோடு பயன்படுத்திக்கிட்டாங்க.
இன்னைக்கு ஒரே ஒரு ஊழியரின் குடும்பத்தின் கட்டுப்பாட்டுல இருக்கிற சபைகள்ல இது சாத்தியமாகுமா?
விசுவாசிகள் வசனத்தின்படி சிந்திக்கத் தெரியாத பேதைகளும், ஊழியர்கள் என்னசொன்னாலும் "ஆமாம்" போடுகிற அடிமைகளுமாய் இருக்கிறவரை, அவங்கக் கிருபைக்கேற்ற பொறுப்பு அவங்களுக்கு கொடுக்கப்படுவது சாத்தியமில்ல பாஸ்டர்.
நெஜ நெலவரம் இன்னான்னா, விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கிருப இன்னான்னே நெறைய ஊழியக்காரங்க அவங்களுக்கு அடையாளம் காட்டமாட்றாங்க பாஸ்டர். அதபத்தி போதிக்கிறதும் இல்ல!
தங்களுக்கு என்ன கிருப இருக்குன்னே தெரியாதவங்க, அதுக்கான எடத்த எப்படி கேப்பாங்க?
ஒன்னு கர்த்தர் ஊழியக்காரங்கக் கண்ணத் தொறக்கனும், இல்ல விசுவாசிங்கக் கண்ணத் தொறக்கனும் பாஸ்டர்.
நம்ம கண்ணத் தொறந்த கர்த்தர், அவங்கக் கண்ணையும் நிச்சயம் தொறப்பார் பாஸ்டர்!
ஒரு அவசரமான வேல, அடுத்தமொற பாக்கும்போது ஆதிசபையில ஊழியக்காரங்கள எப்படி நியமிச்சாங்கன்னு ஆராயலாம் பாஸ்டர்.
நிச்சயமா பாஸ்டர்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
=========================
திருச்சபை நிர்வாகம் பற்றி பாஸ்டர் டேவிட் & வின்சென்ட்
=======================
(பகுதி - 2)
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட்!
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்!
ஆதிசபையில் பொறுப்பாளர்கள தேர்ந்தெடுத்த விதத்துக்கும் இன்னக்கி தேர்ந்தெடுக்கும் விதத்துக்கும் சம்பத்தமில்லைன்னு போனமொற சரியா வௌக்கி சொன்னீங்க.
ஆமாம், பாரம்பரிய சபைகளின் ஜனநாயகமுறையிலானத் தேர்வு, பெந்தெகொஸ்தே சபைகளின் சர்வாதிகாரமுறையிலானத் தேர்வு, இரண்டுமே வேதத்துக்கு தொடர்பில்லாமலிருக்கறதப்பத்தி போனமுறை விவாதிச்சோம்.
திருச்சபை பேராயர், டயசிஸ் வைஸ் பிரஸிடென்ட், டயசிஸ் செக்ரட்டரி இவங்கள்லாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படுவது வேதத்தின் அடிப்படையிலானதுதானாங்கிறத இன்னக்கி சொல்லுங்க பாஸ்டர்.
பணமும், ஜாதியும், அரசியலும் திருச்சபையின் முக்கியப் பொறுப்புக்கு யார் வரணும்ன்னு தீர்மானிக்குதுனா; அது எப்படி வேதத்தின் அடிப்படையிலான தேர்வாக இருக்கக்கூடும்?
லட்சங்கள், கோடிகள செலவழிச்சி திருச்சபையின் முக்கியப் பொறுப்புகளுக்கு வரவங்க திருச்சபையின் எவ்வளவு பணத்த கொள்ளையடிப்பாங்கங்கிறதையும், பணத்தால் பதவிக்கு வர்றவங்க பணத்துக்காக திருச்சபையை எப்படியெல்லாம் பாழாக்குவாங்கங்கறதையும் நெனச்சா கஷ்டமா இருக்கு பாஸ்டர்!
திருச்சபை யாருகிட்டருந்து பாதுகாக்கப்படனும்னு இப்பப் புரியுதா பாஸ்டர்?
இந்த விஷயத்துல பெந்தெகொஸ்தே சபைகள் பெட்டர் பாஸ்டர்! எலக்ஷன் இல்லை, பணம் செலவில்லை, அரசியல் இல்லை, அடிதடியில்லை, "ஆவியானவர் சொன்னார்" இன்னு சொல்லி, ஊழியக்காரங்க சபையில, ஸ்தாபனத்துல தங்கள் குடும்பத்த சேர்ந்த எவரையும் எந்த பொறுப்புலயும் கொண்டுவந்து, பல லட்சம், கோடி மதிப்புள்ள ஆஸ்திகளை அவங்கக்கிட கொடுத்துடமுடியும்! "ஆவியானவர் சொன்னார்" இன்னு சொல்லப்படுவதால விசுவாசிகளும் உடன் ஊழியர்களும் எந்தக் கேள்வியும் இல்லாம ஏத்துக்கிறாங்க! "ஆவியானவர் சொன்னார்" இன்னு சொல்லிட்டா இங்க எந்த அப்பீலும் இல்லயே பாஸ்டர்!
அதெல்லாம் ஒரு காலம் பாஸ்டர், இப்ப ஊழியர்களின் வாரிசுகளும் உன் ஊழியர்களும் சபை யாருக்கு சொந்தம்ன்னு அடிச்சி பொரண்டு சட்டய கிழிச்சிக்கிறாங்க!
எப்ப பெந்தெகொஸ்தே சபைகள்ல பாரம்பரிய சபைகளப் போல பணம் பெருகிச்சோ; ரெவரண்ட, டாக்டர், பிஷப், மாடரேட்டர், கர்டினால் இங்கற பட்டங்கள் நொழஞ்சிச்சோ, பாஸ்டருங்களோட பேண்ட் சட்ட அங்கியா மாற ஆரம்பிச்சிச்சோ: அப்பவே அரசியலும் அடிதடியும் சேந்து நொழஞ்சிடுச்சிப் போல பாஸ்டர்!
ஆதிசபையில ஊழியக்காரங்கள எப்படி யாரு? எப்படி நியமிச்சாங்க பாஸ்டர்?
பரிசுத்தஆவிய பெறற்துக்கு முன்ன யூதாசுக்கு பதிலா ஒருத்தர அப்போஸ்தலரா, எந்த பிரச்சனையும் வந்துடாதபடிக்கு சீட்டுபோட்டு தேர்ந்தெடுத்தத அப்போஸ்தலர் 1:15-26ல பாக்கலாம் பாஸ்டர்.
பரிசுத்த ஆவியானவர பெற்றப்பெறகு?
தன்னை ஆண்டவரே நேரடியா சந்திச்சி, அழைச்சி, ஊழியத்துக்கு ஆயத்தப்படுத்தன விவரத்த பவுல் கலாத்தியர் 1:10ல இருந்து 2:10வர சொல்லியிருக்காரு.
அந்தியோகியா சபையில தீர்க்கதரிசிகளும் போதகருமாயிருந்த பர்னபாவையும் பவுலுலையும் அப்போஸ்தல ஊழியத்துக்கு பிரித்துவிடும்படி, அவங்களுடைய உடன் ஊழியர்கள்கிட்டயே ஆவியானவர் பேசினார். அப்பொழுது இவங்களப்போலவே போதகரும் தீர்க்கதரிசிகளுமாயிருந்த அவங்க உபவாசிச்சி, ஜெபம்பண்ணி, அவங்கமேல கைகள வச்சி, அனுப்பினத அப்போஸ்தலர் 13:1-4ல பாக்கறோம் பாஸ்டர்.
எபேசு சபையின் கண்காணிகள அதாவது பிஷப்புகள பவுலின் ஆலோசனையின்படி, அவருடைய உடன் ஊழியரும் போதகருமான தீமோத்தேயுவே ஏற்படுத்தினத 1தீமோத்தேயு 3:1-7லயும், அப்போஸ்தலர் 20:17,28லயும் பாக்கலாம் பாஸ்டர்.
என்னது பிஷப்புகள ஒரு போதகர் ஆர்டெய்ன் பண்ணாரா?
கண்காணிக்கான தகுதியுள்ளவங்கள கண்டுபிடிச்சி, அவங்களுக்காக ஜெபம்பண்ணி, ஊழியத்துக்கு ஏற்படுத்தறது அவ்வளவு பெரிய சாதனையா பாஸ்டர்?
ஒரே ஒரு ஊழியர், ஒரே நேரத்துல, ஒரே சபையில பல பிஷப்புகள ஏற்படுத்தமுடியுமா பாஸ்டர்?
தீமோத்தேயு ஏற்படுத்தியிருக்கிறாரே பாஸ்டர். பவுலின் ஆலோசனையின்படி கிரேத்தாத்தீவிலுள்ள பட்டணங்கள்தோறும் தீத்து பிஷப்புகள ஏற்படுத்தனதா தீத்து 1:5-9ல பாக்கறமே!
ஒரே சபையில பல பிஷப்புகள்! பட்டணந்தோறும் பிஷப்புகள்! என்ன இது பாஸ்டர்? பிஷப்பு இன்ற பதவிக்கு மரியாதையே இல்லையா?
மரியாதை இல்லைன்னு யார் சொன்னது? உங்களயும் என்னையும் யாரும் மதிக்கலயா?
அப்ப நாமளும் 'பிஷப்" இங்கறீங்களா?
ஸ்தலசபைய நடத்தினவங்களயே வேதம் பிஷப்புன்னுதான் சொல்லுது. பல சபைகள ஸ்தாபிச்ச அப்போஸ்தலர் பவுலும் பிலிப்பியர் 1:1ல தன்ன 'பிஷப்" இன்னுதான் அறிமுகப்படுத்திக்கிறார். இங்கிலீஷ் பைபிள்ல பாருங்க புரியும்.
அப்ப பாரம்பரிய சபைகள்ல நூத்துக்கும் மேற்பட்ட ஆயருங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட எக்ஸிகியூட்டிவ் மெம்பருங்களும் சேர்ந்து ஒரு பிஷப்ப தேர்ந்தெடுக்கிறதும்; பல பெந்தெகொஸ்தே பாஸ்டர்கள் சேர்ந்து ஒரு பாஸ்டர பிஷப்பாக்கிறதும் வேதத்துல இல்லாத விஷயமா?
உண்மையில சொல்லப்போனா, வசனத்தின்படி ஒவ்வொரு ஆயரும், ஒவ்வொரு பாஸ்டரும் பிஷப்பாதான் இருக்காங்க! தேவனுடைய சபையை நடத்த அவரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற அனைத்து அழைப்புள்ளவங்களும் பிஷப்புங்கதான் பாஸ்டர்!
தாங்களும் பிஷப்பா இருக்கிறது தெரியாமதான், பல பாஸ்டருங்க சேர்ந்து ஒரு பாஸ்டர பிஷப்பாக்கி, "பிஷப் ஐயா", "பிஷப் ஐயா" இன்னு அவங்களுக்கு ரொம்ப மரியாதைய கொடுக்குறாங்களா?
'பிஷப்'னா சபையின் கண்காணி அல்லது மூப்பன் இன்னு அர்த்தம் பாஸ்டர். மத்த ஊழியருங்களப் போலவே அவங்களும் சராசரி ஊழியக்கார்தான் பாஸ்டர்.
தலையில கிரீடம், கையில கோலு, கழுத்துல பெரிய சிலுவ, நீண்ட அங்கி, கலர்கலர் இடுப்புக்கட்சைன்னு இன்னைய நம்ம பெந்தெகொஸ்தே பிஷப்புகளும் பயமுறுத்தறாங்களே பாஸ்டர்?
கத்தோலிக்க மதம் கொடுத்த வேஷத்தை இவங்க இன்னும் களைக்கல பாஸ்டர். இன்னக்கி பெந்தெகொஸ்தே பிஷப்புகளும் இந்த வேஷத்த அதிகம் வாஞ்சிக்கிறாங்க!
இந்த வேஷத்தோடப் போய் வீட்டுக்கூட்டம் நடத்துவாங்களா? தெருவுல நின்னு பிரசங்கம் பண்ணுவாங்களா? அப்படி செஞ்சா வரவேற்கலாம்!
பிஷப்புன்னா ஊழியக்காரன் இன்றத மறந்து, இவங்க ஏதோ பெரிய பதவின்னு நெனைக்கிறாங்களா பாஸ்டர்?
பிஷப்புனா இன்னான்னு தெரியாமலேயே இவங்கல்லாம் பிஷப்பாயிட்டாங்களோன்னு தோனுது பாஸ்டர்!
நம்ம ஊரு பிஷப்புகள தேர்ந்தடுக்கிறதுல பண்ற அலப்பறைய தாங்கமுடியல பாஸ்டர். எவ்வளவு கேன்வாஷ்! எத்தன லட்சம், கோடி செலவு! எத்தன ஜாதி சப்போர்ட்டு!
நம்ம பெந்தெகொஸ்தே உலகத்துல 15,000 ரூவா பீஸூ, 200 பேருக்கு பிரியாணி, பிஷப்பாக்க வர நாளு சீனியர் பிஷப்புகளுக்கு காணிக்கை கொடுத்திட்டா போதும் பாஸ்டர், எந்த பாஸ்டரும் பிஷப்பாகிடலாம்!
தேவன் நம்ம இலவசமாவே பிஷப்பாக்கியிருக்க, இத்தனை செலவுகளும் விளம்பரங்களும் அவசியமா பிஷப்?
வியாபாரத்துக்கு விளம்பரம் அவசியமில்லையா பிஷப்?
ஊழியம் ஆதாயத்தொழிலாயும், சபை, ஸ்தாபனம் குடும்ப கம்ப்பெனிகளாயும் ஆகிட்டா, பட்டங்களும் பதவிகளும் வியாபார விருத்திக்காகத்கானே இருக்கமுடியும் பிஷப்!
எந்த விளம்பரமும் இல்லாம ஊழியத்தை உண்மையா செஞ்சிகிட்டுவர ஒவ்வொரு ஊழியரும் வேதத்தின்படியான பிஷப்புகளாக இருக்காங்கங்கிறத எவரும் மறுக்கமுடியாது பிஷப்.
சபையில 'உதவிக்காரர்' இன்னு ஒரு பொறுப்பு இருக்கே, அதப்பத்தி சொல்லுங்க பிஷப்.
இன்னைக்கு பாரம்பரிய சபைகள்ல கோயில்குட்டி, இல்லனா கோயில்பிள்ளைன்னு சொல்றாங்க இல்லையா? இவங்கதான் அன்னைக்கு உதவிக்காரர் பிஷப்.
ஆதிசபையில உதவிக்காங்களுக்கு கெடச்ச அங்கீகாரமும் மரியாதையும் இன்னைய சபைகள்ல கெடைக்குதுங்களா பிஷப்?
இன்னைய உதவிக்காரர்களை திருச்சபை ஊழியர்களும் நிர்வாகிகளும் ஏறைக்குறைய அடிமைகளாவும், திருச்சபையார் அவங்கள எடுப்பார் கைப்பிள்ளையாவுமே நடத்தராங்க பிஷப்!
'"உதவிக்காரருடைய ஊழியம்" இன்னுதானே 1 தீமோத்தேயு 3:13 சொல்லுது பிஷப்? அப்படினா அவங்களும் திருச்சபையின் ஊழியர்தானே?
"உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்" இன்னு அதே வசனம்தான் சொல்லுது! ஆனா இன்னைக்கு அவங்க நெலமதான் கவலையளிக்குது பிஷப்.
அநேகருக்கும் தனக்கும் ஆதரவாயிருந்த
கெங்கிரேயா ஊர் சபைக்கு (உதவி) ஊழியக்காரியாயிருந்த பெபேயாளை
"நம்முடைய சகோதரி" இன்னும்; ரோமாபுரி சபையார் அவளை கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொள்ளவேண்டும் இன்னும்; எந்தக் காரியத்தில் அவர்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே அவர்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டும் இன்னும் பவுல் கேட்டுக்கொள்றத ரோமர் 16:1,2ல பாக்கலாம் பிஷப்.
தங்கள் மதிப்பை உணர்ந்திருக்கிற ஊழியர்களாலதான், உதவி ஊழியக்காரருடைய மதிப்பையும் உணரமுடியும் பிஷப்!
உதவிக்காரருக்கான தகுதிகளா 1 தீமோத்தேயு 3;8-10,12ல சொல்லப்பட்டிருக்கிற காரியங்கள், இன்னக்கி நம்ப ஊரு பிஷப்புங்கக் கிட்டக்கூட இல்லயே பிஷப்!
ஆதிசபை ஊழியங்களுக்கும் இன்னைய சபை ஊழியங்களுக்கும், ஆதிசபை ஊழியர்களுக்கும் இன்னைய சபை ஊழியர்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தமில்லன்னு நான் சொல்றத இப்பவாவது நம்பறீங்களா பிஷப்?
இப்படில்லாம் உண்மைய சொன்னா, மல்லாக்கப்படுத்துகிட்டு துப்பறதா சிலர் சொல்றாங்களே பிஷப்?
நம்மமேல நாமளே துப்பிக்கலனா, ஊருல இருக்கறவங்கள்லாம் துப்புவாங்கங்கிறது இவங்களுக்கு வௌங்கமாட்டேங்குது பிஷப்.
நாம சொல்லும்போது வௌங்கலனா, நாளானது வௌங்கப்பண்ணும் பிஷப்.
அந்தநாளுக்கு முன்னவே நம்மவர் விழிச்சிக்கனும்னு ஜெபிப்போம் பிஷப்.
நிச்சயம்! நாமளும் தெரிஞ்சிகிட்ட சத்தியத்தின்படி சரியா ஊழியஞ்செய்ய, சபையை நிர்வகிக்க முயற்சிப்பண்ணுவோம் பிஷப்.
நிச்சயமா பிஷப்! சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்!!
ஆகட்டும் பிஷப்! ப்ரெஸ் த லார்ட்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
=======================
சபை வளர்ச்சிப்பற்றி பாஸ்டர் டேவிட் & வின்சென்ட்
========================
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்!
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட்!
இன்னைக்கு புதுசா ஏதாச்சும் விஷயம் இருக்குங்குளா?
அப்போஸ்தலர் 2:47ல, *"இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார்"* இன்னு இருக்கறத கவனிச்சிருக்கீங்களா?
ஆமாம், கவனிச்சிருக்கேன் பாஸ்டர்.
எருசலேம் சபையில இரட்சிக்கப்படுகிறவர்களை அநுதினமும் சேர்த்துக்கொண்டு வந்த கர்த்தர், இன்னைக்கு ஏன் வாரத்துக்கு, இல்ல மாசத்துக்கு, சில சபைகள்ல வருஷத்துக்கு ஒரு ஆத்துமாவக்கூடக் கொண்டுவந்து சேக்கமாட்டேங்குறார் பாஸ்டர்?
உங்க பிள்ளைங்கள ஒரு ஸ்கூல்ல சேக்கறதுக்கு முன்ன நீங்க எதையெல்லாம் கவனிப்பீங்க?
நல்ல பேரெடுத்த ஸ்கூலா? ஆசிரியருங்க தகுதியானவங்களா? ஏற்கனவே படிச்ச மாணவருங்க நல்ல நெலைக்கு வந்திருக்காங்களா? ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தருவாங்களா? பிள்ளைங்களுக்கு பாதுகாப்பா இருக்குமா? இன்னு பல காரியங்கள விசாரிச்சி, திருப்தியா இருந்தா மட்டும் அந்த ஸ்கூல்ல பிள்ளைங்கள சேப்பேன். இல்லனா சேக்கவே மாட்டேன்.
உங்க பிள்ளைங்கள ஒரு பள்ளிக்கூடத்துல சேக்கவே நீங்க இவ்ளோ காரியங்கள பாக்கும்போது, தம்முடைய ஆத்துமாக்கள ஒரு சபையில சேக்கறதுக்கு முன்ன, தேவன் அந்த சபைகிட்ட தேவன் எவ்ளோ காரியங்கள எதிர்பார்ப்பார்?
எருசலேம் சபையில கர்த்தர் அநுதினமும் ஆத்துமாக்கள சேர்த்ததுக்கும், இன்னைய சபைகள்ல சேர்க்க தயங்கறதுக்கும் காரணம் என்னன்னு இப்பதான் புரியுது பாஸ்டர்.
உங்களுக்கு புரிஞ்சது ஊருக்கே புரியனுமே பாஸ்டர்.
கர்த்தர் அநுதினமும் ஆத்துமாக்கள கொண்டுவந்து சேக்கற அளவுக்கு எருசலேம் சபை என்னன்ன தகுதியுள்ளதா இருந்துச்சின்னு
புரியறமாதிரி எடுத்து சொல்லுங்க பாஸ்டர்.
"அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்"* இன்னு அப்போஸ்தலர் 2:42ல வாசிச்சிருப்பீங்களே?
ஆமாம், வாசிச்சிருக்கேன் பாஸ்டர்.
ஒரு சபை அநுதினமும் வளருகிற சபையா இருக்கனும்னா, அந்த சபை அப்போஸ்தலருடைய உபதேசம், அந்நியோந்நியம், அப்பம் பிட்குதல், ஜெபம்பண்ணுதல் ஆகிய நாலு காரியத்துல உறுதியா தரிச்சிருக்கவேண்டியது அவசியம்!
அப்போஸ்தலருடைய உபதேசங்கறது எது பாஸ்டர்?
"அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்" இன்னு எபேசியர் 2:20ல பவுல் சொல்றபடி: ஆதிசபையின் அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிங்க மூலமா சபைக்கு இயேசுகிறிஸ்துவப்பத்தி கொடுக்கப்பட்டிருக்கிற உபதேசம் பாஸ்டர்.
"எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்" இன்னு
கொலோசெயர் 1:28ல பவுல் சொல்றாரே, அப்படித்தானே பாஸ்டர்?
ரோமர் 8:29; 1 யோவான் 3:2 சொல்றபடி, ஆண்டவர் வரும்போது சபை அவருடைய புறம்பான சாயலுக்கு ஒப்பாகனும்னா, எபேசியர் 1:4; 4:22-24 சொல்றபடி, சபையார் ஆண்டவரின் உள்ளான சாயலை உடையவங்களா மாறவேண்டியது அவசியம் பாஸ்டர்.
"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" இன்னு வேதம் நம்ம கைகள்ல கொடுக்கப்பட்டிருக்கற நோக்கத்த
2 தீமோத்தேயு 3:16,17ல பவுல் ஆணியடிச்சமாதிரி சொல்லியிருக்கார் பாஸ்டர்!
வேதவாக்கியங்களக் கொண்டு சபையாருக்கு உபதேசம்பண்ணி, அவங்கள கடிந்துகொண்டு, சீர்திருத்தி, அவங்களுக்கு நீதியைப் படிப்பிச்சி, அவங்கள கிறிஸ்துவின் குணங்களில்
தேறினவர்களாகவும், கிறிஸ்துவை போல எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும் மாற்றி,
தேவ ஆவியினவர் வேதவாக்கியங்கள அருளின நோக்கத்த நெறைவேத்தறவங்களால நடத்தப்படற சபைகள்லதான் கர்த்தர் ஆத்துமாக்கள சேர்ப்பார் பாஸ்டர்.
உபதேசம், கடிந்துகொள்ளுதல், சீர்திருத்துதல், நீதியைப் படிப்பித்தல் எதுவுமே இல்லாத சில சபைகள்லகூட கூட்டம் குவியுதே பாஸ்டர்?
கேட்டுக்குப்போற வாசல்கள்லகூட கூட்டம் குவியத்தான் செய்யும்! அது கர்த்தரால சேர்ற கூட்டம்ன்னு நெனச்சிடக்கூடாது பாஸ்டர்.
எருசலேம் சபையாரும் அப்போஸ்தலரும் அந்நியோந்தியத்தில உறுதியா தரிச்சிருந்தமாதிரி, இன்னைய ஊழியக்காரங்களுக்கும் சபையாருக்கும் எடையில அந்நியோந்தியத்த பாக்கமுடியலயே பாஸ்டர்?
ஒரு அளவுக்குமேல விசுவாசிங்க வளர்ந்துடக்கூடாது, குறிப்பா நம்ம குடும்பத்தாருக்கு இணையாகவோ, மேலாகவோ விசுவாசிங்க வளர்ந்துடக்கூடாதுங்கறதுல நாம உறுதியா தரிச்சிருந்தா, நாமுளும் விசுவாசிங்களும் எப்படி அந்நியோந்தியமா இருக்கமுடியும் பாஸ்டர்?
அப்ப நம்ம சபைகள்ல உறுதியான அந்தியோந்நியத்துக்கு வாய்ப்பே இல்ல பாஸ்டர்!
அந்நியோந்நியம் என்பது எந்நக் கபடமும் எதிர்பார்ப்பும் இல்லாம, பிறர் நலம் நாடும் ஆழமான நட்பு பாஸ்டர்!
இப்படிப்பட்ட நட்புள்ள ஊழியரும் விசுவாசிகளும் இருக்கிற சபையிலதான் தேவன் அநுதினமும் ஆத்துமாக்கள சேப்பார் இல்லையா?
"விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்" இன்னு
அப்போஸ்தலர் 2:44,45ல வாசிக்கிறோம் இல்லையா?
விசுவாசிங்க விசுவாசிங்களோடும், ஊழியருங்க
விசுவாசிங்களோடும் பாராட்டின அந்நியோந்நியம்தானே அதுக்கு காரணம் பாஸ்டர்?
அந்நியோந்நியம் இருக்கிற எடத்துலதான் அதுக்கு சாத்தியம் உண்டு பாஸ்டர். இந்தமாதிரி சபைகள்லதான் கர்த்தர் ஆத்துமாக்கள கொண்டுவந்து சேப்பார்.
அப்பம் பிட்கறதுல எருசலேம் சபையாருக்கு இருந்த உறுதிய இன்னைய சபையாருக்குள்ள பாக்கமுடியலியே பாஸ்டர்? திருவிருந்து அன்னைக்கு சிலர் சபைக்கு வர்றதில்ல? வர்றவங்கள்ல சிலர் திருவிருந்துல பங்கெடுக்கிறதில்ல?
"அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி"* இன்னு அப்போஸ்தலர் 2:46,47ல இருக்கிறதப் பாருங்க பாஸ்டர்.
கபடமில்லாத இருதயங்கதானே ஒன்னுக்கொன்னு மகிழ்ச்சியக் கொடுக்கும்! மகிழ்ச்சி இருக்கிற எடத்துலதானே ஒருமனம் இருக்கும்! ஒருமனமுள்ளவங்கதானே அப்பம் பிட்கிறதுல உறுதியா தரிச்சிருக்கமுடியும்!
"நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்" இன்னு 1 கொரிந்தியர் 10:16,17ல பவுல் ஐயா சொல்றத இன்னைய சபைகள் புரிஞ்சிக்குனும் பாஸ்டர்.
படிச்சவன் - படிக்காதவன், ஏழை - பணக்காரன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் இன்னு வித்தியாசம் பாக்காம, கிறிஸ்துவுக்குள்ள நாம ஒன்னா இருக்கிறோம் இங்கிற சிந்தையுள்ள மக்களோடதானே கர்த்தர் தம்மோட ஆத்துமாக்கள சேக்கமுடியும்?
சரியா சொன்னீங்க பாஸ்டர்!
எருசலேம் சபையாரின் ஜெப உறுதிய இன்னைய சபைகள்ல பாக்கமுடியுதா பாஸ்டர்?
12 மணிநேர திறப்பின்வாசல் ஜெபம், 72 மணிநேர கட்டுகளை உடைக்கும் ஜெபம், 100 மணிநேர சங்கிலித்தொடர் ஜெபம் இன்னு ஜெபங்கள் பெருகிவிட்டதப் பாக்கமுடியுது. ஆனா உறுதியத்தான் பாக்கமுடியல பாஸ்டர்.
விசேஷித்த ஜெபக்கூடுகைக்கு பெறகு சபைகள்ல மக்கள பாக்கவே முடியறதில்ல பாஸ்டர். 200 பேரு இருக்குற சபையில உபவாச ஜெபம் நடக்கும் அன்னைக்கு 20 பேருகூட தேறமாட்றாங்க பாஸ்டர்?
"எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது" இன்னு அப்போஸ்தலர் 2:43ல சொல்லப்பட்டிருக்குதே, இந்த அநுபவங்களுக்கு காரணம் என்ன தெரியுமா?
எருசலேம் சபையாரின் உறுதியான ஜெபமாகத்தான் இருக்கும்!
"அவர்கள் அதைக்கேட்டு, ஓருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு; கர்த்தாவே, ..... உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது" இன்னு
அப்போஸ்தலர் 4:24,30,31ல வாசிக்கிறோம் இல்லயா?
அப்போஸ்தலர் மூலம் நடந்த அற்புத அடையாளங்களுக்கு சபையாரின் உறுதியான ஜெபம்தான் காரணம் இங்கறது உறுதியாகுது பாஸ்டர்.
கொலை செய்யப்படுவதற்கு ஏரோதுவினால் பலத்தக்காவலில் வைக்கப்பட்டிருந்த பேதுருவை, எருசலேம் சபையார் தங்கள் ஊக்கமான ஜெபத்தினால விடுவிச்சத அப்போஸ்தலர் 12:1-17ல பாக்கலாம் பாஸ்டர்!
ஊழியருங்கமேல விசுவாசிகளும் விசுவாசிங்கமேல ஊழியர்களும் உண்மையான அன்பு வச்சிருக்கிற சபைகள்லதானே ஆவியானவரின் கிரியைகள பாக்கமுடியும் பாஸ்டர்?
நிச்சயம் பாஸ்டர்!
"அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து" இன்னு அப்போஸ்தலர் 2:46ல் இருக்கு. எருசலேம் சபையார் ஒருமனப்பட்டவங்களா தேவாலயத்தில அநுதினமும் ஏன் தரிச்சிருந்தாங்க பாஸ்டர்?
எருசலேம் தேவாலயத்துக்கு வர யூதர்களுக்கு இயேசுகிறிஸ்துவை அறிவிக்கத்தான்னு பல விளக்கவுரைகள் சொல்லுதுங்க பாஸ்டர்.
"சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்" இன்னு அப்போஸ்தலர் 8:4லயும் பாக்கறம் பாஸ்டர்.
உபத்திரவக் காலத்திலும் எங்கும் திரிந்து கிறிஸ்துவை பிரசங்கித்த அவங்களோட சுவிசேஷபாரமே, தேவன் அநுதினமும் ஆத்துமாக்களக் கொடுக்க முக்கியக் காரணங்கள்ல ஒன்னு பாஸ்டர்.
"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்"* இன்னு விசுவாசிகள பேதுரு ட்ரெய்ன் பண்றத 1 பேதுரு 3:15ல பாக்கறம் பாஸ்டர்.
விசுவாசிகளோட ஊழியம் இல்லாத சபைகள்ல ஆண்டவர் ஆத்துமாக்கள சேக்கறது அரிது பாஸ்டர்.
"வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து" இன்னு அப்போஸ்தலர் 2:46,47ல இருக்கிறத கொஞ்சம் வௌக்குங்க பாஸ்டர்.
மகிழ்ச்சியும் கபடமில்லாத இருதயமும் உள்ள தமது ஜனங்களின் துதிகளில் தேவன் மகிழ்ச்சியடைகிறார் பாஸ்டர்.
"நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக" இன்னு ரோமர் 15:5,6ல பவுல் ரோமாபுரி சபையார ஆசீர்வதிச்சது இதுக்காகத்தானா?
தேவனைப் பிரியப்படுத்தத்தக்க ஆராதனை செய்யும் தகுதியுள்ளவங்களா சபையாரை ஆயத்தப்படுத்தவேண்டியக் கடமை ஊழியர்களுக்கு உண்டு பாஸ்டர். தகுதியான ஆராதனை செய்யும் சபைகளே தேவன் புதிய ஆத்துமாக்களை அனுப்பத்தக்க தகுதியுள்ளவைகளா இருக்கமுடியும் பாஸ்டர்!
"சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை" இன்னு பவுல் ஆயத்தப்படுத்தறத
ரோமர் 12:1ல பாக்கலாம் பாஸ்டர்.
"அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே" இன்னு எபிரேயக் கிறிஸ்தவர்களுக்கு நிருபத்த எழுதிய ஊழியர், அவங்கள தயார்படுத்தறத
எபிரேயர் 12:28,29ல பாக்கலாம் பாஸ்டர்.
தமது நாமத்த பிரஸ்தாபப்படுத்தற எந்த ஸ்தானத்துக்கும் தாம் வருவதோடு, கர்த்தர் ஜனங்களையும் கொண்டுவருவார்னு சொல்றீங்க இல்லயா?
சரியா புரிஞ்சிகிட்டீங்க பாஸ்டர்?
"ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள்"* இன்னு அப்போஸ்தலர் 2:47ல சொல்லப்பட்டிருக்கிறதபத்தி என்ன நெனைக்கிறீங்க பாஸ்டர்?
சபைக்கு உள்ள இருக்கிறவங்க, சபைக்கு வெளியே இருக்கறவங்களோட தயவ பெற்றிருக்கவேண்டியது அவசியம் பாஸ்டர்.
சபைய சுத்திலும் இருக்கற மக்களோட பிரஷ்ஷர கூட்ற நெறைய காரியங்கள நாம செய்யறமே பாஸ்டர்?
ஒரு சபையின் வளர்ச்சிக்கு இது நல்லதல்ல பாஸ்டர்.
பல வருஷமா சபை கூடிவர்ற எடத்துக்கு பக்கத்திலேயே இருக்கிறவங்க சபைக்கு ஏன் வரறதில்லன்னு ஊழியக்காரங்க யோசிக்கனும் இல்லயா?
யோசிக்கிறதோட, தேவையில்லாம அவங்கள வெறுப்பூட்டற காரியங்கள ஏதாச்சும் செஞ்சிகிட்டு வந்தோம்னா நம்மள திருத்திக்கறது நல்லது.
நாம போட்ற சத்தத்தக் கொறைச்சாலே மக்கள் தயவ பாதி சம்பாதிச்சடலாம் பாஸ்டர்!
அப்போஸ்தலர்களை கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணின ஆலோசனை சங்கத்தார்கிட்டருந்து, அவங்கள விடுவிக்க கமாலியேல் செஞ்ச தயவை
அப்போஸ்தலர் 5:33-40லயும்; எபேசுவில் உண்டான கலகத்திலிருந்து பவுலை தப்புவிக்க ஆசியாநாட்டு தலைவர்களில் சிலரும், பட்டணத்து சம்பிரதியும் அவருக்கு செஞ்ச தயவை அப்போஸ்தலர் 19:30-41லயும்; தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லைன்னு சபதம்பண்ணிக்கிட்ட யூதர்கள்கிட்டருந்து பவுலை தப்புவிக்க சேனாபதி செஞ்ச தயவை
அப்போஸ்தலர் 23:12- 32லயும் பாக்கமுடியும் பாஸ்டர்.
நம்ம ஆட்களும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தயவ சம்பாதிக்கப் நல்லா பயிற்ச்சி எடுத்திருக்கங்க பாஸ்டர்!
ஆதிசபை ஊழியர்கள் இந்தமாதியெல்லாம் பயிற்சிபெற்றிருந்ததா பாக்கமுடியல பாஸ்டர்.
"நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்,எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்,எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள், எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்"* இன்னு ரோமர் 13:3,7ல பவுல் சொல்லுகிறபடி, நேர்மையான வாழ்வு மற்றும் நேர்மையான சபை, ஸ்தாபன நிர்வாகத்தின் மூலம்தானே நாம் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் நன்மதிப்பையும் தயவையும் பெறனும் பாஸ்டர்?
சத்தியம் காட்டும் வழியில் ஜனங்களின் தயவை பெறுகிறவர்களுடன்தான் சத்திய ஆவியானவர் இருக்கமுடியும் பாஸ்டர்!
ஒருமனமும், அன்பும், அரவணைப்பும், விசாரிப்பும், உண்மையான ஆராதனையும், ஆத்துமபாரமும், மக்கள் தயவும் உள்ள ஒரு சபையில்தான் தேவன் கிரியை நடப்பிப்பார், அவங்கள நம்பித்தான் புதிய ஆத்துமாக்கள கொண்டுவந்து சேப்பார்ன்னு வெவரமா சொன்னதுக்கு மிக்க நன்றி பாஸ்டர்!
நாம நடத்தர தேவனுடைய சபையில் இந்தக்காரியங்கள் உண்டாக, நாம மொதல்ல நம்மள ஒப்புக்கொடுப்போம் பாஸ்டர்.
நிச்சயம் ஐயா, வளருகிற ஒரு சபைக்கு ஊழியரா இருக்கிறது மகிழ்ச்சிதானே!
தேவன் அந்த சபையில்தான் மகிமைப்படுவார் பாஸ்டர்!
தேவனுக்கே மகிமை உண்டாவதாக! மீண்டும் சந்திப்போம் பாஸ்டர்.
நன்றி! சந்திப்போம் பாஸ்டர்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
===============================
ஒரு விசுவாசி ஊழியராவதுபற்றி பாஸ்டர் டேவிட் & வின்சென்ட்
==============================
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்!
ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட்!
இன்னக்கி ஒரு முக்கியமான காரியத்தப்பத்தி தெறந்த மனசோடப் பேசுவோம் பாஸ்டர்.
ஆரம்பத்திலேயே பொடி வைக்கிறீங்க! இன்னைக்கி நெடி ஜாஸ்தியா இருக்கும்போல?
எடுத்துக்குறவங்க வேத அறிவபொருத்து நெடி கூடலாம், இல்ல கொறையலாம் பாஸ்டர்.
சரி சொல்லுங்க, கூடுதா கொறையுதான்னு பாப்பபோம்!
"பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி; நீ எழுந்து, தெற்குமுகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்" இன்னு
அப்போஸ்தலர் 8:26ல நீங்க வாசிச்சிருக்கீங்களா?
"அந்தப்படி அவன் எழுந்துபோனான்" இங்கற அடுத்த வசனத்தையும் வாசிச்சிருக்கிறேன்.
"அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து, ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான்" இன்னும்
அப்போஸ்தலர் 8:27,28ல வாசிச்சிருப்பீங்களே?
"ஆவியானவர்; நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்" இன்னு அப்போஸ்தலர் 8:29ல இருக்கிறதையும் வாசிச்சிருக்கேன் பாஸ்டர்.
அப்போஸ்தலர் 8:5-13வர பாக்கறபடி ஒரு விசுவாசியா இருந்து, சுவிசேஷத்த அறிவிச்சி, அற்புத அடையாளங்களச் செஞ்சி, ஆத்துமா ஆதாயம்பண்ணி, ஞானஸ்நானம் கொடுத்த அனுபவமுள்ள பிலிப்புவ, தேவன் ஒரு முழுநேர சுவிசேஷகனா மாத்தன தருணம் இதுதான்னு நெனைக்கிறேன் பாஸ்டர்.
ஆவியானவர்; நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்" இன்னு அப்போஸ்தலர் 8:30ல பாக்கறது ஆச்சரியமா இருக்கு பாஸ்டர்!
இதுல என்ன ஆச்சரியம் உங்களுக்கு?
விசுவாசிங்க எப்போ? என்னமாதிரியான ஊழியத்த செய்யனும்? எங்கப்போகனும் வரனுங்கறத நாம இல்ல தீர்மானிக்கிறோம்?
இங்க ஆவியானவர் ஒரு விசுவாசிகிட்ட நேரடியாவே பேசறாரே?
தன்னோட காத அப்போஸ்தலர் பக்கமா வைக்காம ஆண்டவர் பக்கம் திருப்பி வச்சிருக்கிற ஒரு விசுவாசியோட ஆவியானவர் பேசத்தானே செய்வார்?
அப்போ, ஊழியக்காரங்க சொல்றத கேட்கக்கூடாது இங்கறீங்களா?
தாங்கள் சொல்ற எல்லாத்தயும் விசுவாசிங்க அப்படியே செய்யனும், தங்களமீறி அவங்க ஒன்னையும் செஞ்சிடக்கூடாதுன்னு நெனைக்கிற சைக்கோங்களா ஆதிசபை ஊழியருங்க இருந்தமாதிரி தெரியல பாஸ்டர்?
தங்கள் சொந்த விருப்பங்கள மறுத்து, ஆண்டவர் சொல்றத மட்டும் அவங்க விசுவாசிகளுக்கு சொல்றவங்களாத்தானே இருந்தாங்க பாஸ்டர்! தங்களோட சொந்தக் கருத்த சொல்லும்போது, *"மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது"* இன்னு 1 கொரிந்தியர் 7:12ல பவுல் சொல்றமாதிரி, வெளிப்படையா சொல்லிடும் பழக்கம் அவங்கக்கிட்ட இருந்திருக்கு!
நாம நம்ம சொந்த விருப்பங்கள எல்லாம் ஆவியானவர் சொல்றதா சொல்லி, விசுவாசிகள நம்மளயே சுத்திவர செக்குமாடுகளா இல்ல ஆக்கிவச்சிருக்கோம்?
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்" இன்னு 1 பேதுரு 5:5,6ல விசுவாசிகளுக்கு ஆலோசன சொல்ற பேதுரு: "உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்" இன்னு 1 பேதுரு 5:3,4ல ஊழியக்காரங்களுக்கும் ஆலோசன சொல்லியிருக்காரு பாஸ்டர்.
நமக்கு சொல்லியிருக்கறத கண்டுக்காம, விசுவாசிங்களுக்கு சொல்லியிருக்கிறத மட்டும் கெட்டியா பிடிச்சிகிட்டு, ஆண்டவரோட பேரால நம்ம சொந்த விருப்பு வெறுப்புபடியெல்லாம் அவங்கள அடிமைகளா வச்சிருக்கறது நியாயமா பாஸ்டர்?
கட்டாயமாயும், அவலட்சணமான ஆதாயத்துக்காயும் ஊழியஞ்செய்யறவங்கதான் தங்களிடத்திலுள்ள தேவனுடைய சுதந்தரத்தை (மந்தையை) இறுமாப்பா ஆள்றாங்க பாஸ்டர். மனப்பூர்வமாயும், உற்சாக மனதோடும் ஊழியஞ்செய்யறவங்க மந்தைக்கு மாதிரியாத்தான் கண்காணிப்பு செய்யறாங்க.
கட்டாயமாயும், அவலட்சணமான ஆதாயத்துக்காயும் சபைய நடத்தறவங்கக்கிட்ட சிக்கியுள்ள மக்களுக்கு ஐயோ!
தங்களுக்கு இணையா அற்புத அடையாளங்களச் செய்யவும், சுவிசேஷத்தப் பிரசங்கிக்கவும், ஆத்துமா ஆதாயம்பண்ணவும், ஞானஸ்நானம் கொடுக்கவும், சபைய நடத்தவும் தேவன் விசுவாசிகள பயன்படுத்தியதுல ஆதிசபை ஊழியருங்க வருத்தப்பட்டதும் இல்லை, அவங்களுக்கு தடையாகவும் இருந்ததில்ல. மாறாக, ஆதரவா இருந்திருக்காங்கன்னு நாம் ஏற்கனவே அப்போஸ்தலர் 2:43; 6:8-7:53; 8:4-13; 9:10-18; 10: 23,45-48; 11:19-26; 22:14-16ல பாத்தமே பாஸ்டர்.
இப்படிப்பட்ட ஊழியக்காரங்களால நடத்தப்படற விசுவாசிகள் பாக்கியவான்கள்!
உண்ம பாஸ்டர்! ஆதிசபை ஊழியர் விசுவாசிகளுக்கு கொடுத்த சுயாதீனத்த நாமளும் கொடுக்கனும்.
"என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும், எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும் அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்" இன்னு கலாத்தியர் 1:15-17வர பவுல் சொல்றத கேளுங்க.
தேவன், தம்முடைய குமாரனை பவுல் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை அவனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, அவன் தனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போயிருந்தா என்ன நடந்திருக்கும் பாஸ்டர்?
அப்போஸ்தலருங்க தங்கள் அனுபவத்தையும் அறிவையும் அவனுக்குள்ள அப்படியே எறக்கிவச்சிட்டுருப்பாங்க! அவங்களவிட அதிக வெளிப்பாடு பெற்ற ஒரு ஊழியரா பவுல் வந்திருக்கவே முடியாது!
"சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்" இன்னு
கலாத்தியர் 1:11,12ல பவுல் சொல்றாரு. மூத்த ஊழியக்காரங்கக்கிட்ட உபதேசத்த, ஊழியத்தக் கத்துக்கறது தப்பா பாஸ்டர்?
பவுல் அப்படி சொல்லல பாஸ்டர். தனது தனிப்பட்ட அனுபவத்த சொல்றார். அவர் தீமோத்தேயுவுக்கு உபதேசித்து அவர சிறந்த ஊழியராக்கியத, பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதியிருக்கிற ரெண்டு நிருபங்கள்லயும் பாக்கலாம் பாஸ்டர்!
"நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு" இன்னு
2 தீமோத்தேயு 1:13லயும்; "அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி" இன்னு 2 தீமோத்தேயு 2:2லயும் பவுல் சொல்றது அதுக்கு ஆதாரம்தானே பாஸ்டர்?
உண்மதாங்கய்யா, நாம் மக்களுக்கு சரியா உபதேசிச்சி, சரியான ஊழியரா உருவாக்கினா பிரச்சனயில்ல. அதேவேளையில, பவுலபோல சில விசுவாசிகள தேவன் வித்தியாசமா நடத்தனா, நாம அதுக்கு தடையா இருந்துடக்கூடாது!
"மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்" இன்னு கலாத்தியர் 1:1ல பவுல் தன்ன அறிமுகப்படுத்திக்கிறது ஒரு மாதிரியா இருக்கு பாஸ்டர்?
அதுல நமக்கு என்ன பிரச்சன பாஸ்டர்? நம்மக்கூட இருந்து ஒருவர் ஊழியத்துக்கு உருவானாலும், அவங்க கர்த்தரால உருவானாங்கன்னுதான் நெனக்கனும். அவங்கள உருவாக்க கர்த்தர் நம்மள பயன்படுத்தனதுக்கு அவருக்கு நன்றி சொல்லலாம். "நான்தான் அவன ஊழியக்காரனா உருவாக்கினேன்" இன்னு பெருமப்படக்கூடாது பாஸ்டர்.
பவுல் தங்களிடத்துல ஊழியத்தக் கத்துக்காவிட்டாலும், கலாத்தியர் 2:8,9ல பாக்கறபடி: விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது பவுலுக்கும் கையளிக்கப்பட்டதென்று அப்போஸ்தலர்கள் கண்டு, அவருக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்துபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், பவுலும் பர்னபாவும் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக அவங்களுக்கு வலதுகை கொடுத்து அங்கீகரிச்சது ஆச்சரியமா இருக்கு பாஸ்டர்!
ஆதிசபை ஊழியருங்கக்கிட்ட நெறைய ஆச்சரியத்தப் பாக்கலாம் பாஸ்டர்!
சரி, பிலிப்புகிட்ட வருவோம் பாஸ்டர்.
"ஆவியானவர்; நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார். அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு; நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான். அதற்கு அவன்; ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி, பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்" இன்னு
அப்போஸ்தலர் 8:29-31வர பாக்கறம் இல்லயா?
பந்திவிசாரிப்புக்காரன் இப்போது மந்திரியுடன் இரதத்தில்!
ஆவியானவருக்கு செவிகொடுக்கிறவர்களை அவர் நடத்தும் விதம் அதிசயமாகத்தானே இருக்கும்!
அப்போஸ்தலர் 8:32-35வர பாக்கறபடி: பிலிப்பு பேசத்தொடங்கி, மந்திரி வாசிச்சிகிட்டு வந்த ஏசாயா 53ஆம் அதிகாரத்திலிருக்கிற வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவக்குறிச்சி அவனுக்குப் பிரசங்கிச்சிருக்கான் பாஸ்டர்.
பிரசங்கிக்கிறது அவனுக்கின்னா புது விஷயமா? "பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தான். ஜனங்கள்.... அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள். தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்" இன்னு
அப்போஸ்தலர் 8:5,6,12ல இருக்குல்ல!
பிலிப்புவின் பிரசங்கத்தக் கேட்டு மந்திரி; "இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன?" இன்னு ஞானஸ்நானம் எடுக்க ரெடியாகிட்டான்னு
அப்போஸ்தலர் 8:36 சொல்லுது பாஸ்டர்.
பிரசங்கத்த நல்லா கவனிக்கிற விசுவாசிங்க, நல்லா பிரசங்கிப்பாங்க பாஸ்டர். 'ஆமென்' போட்ட அடுத்தநிமிஷமே அடுப்பங்கறையில இருக்கிறவங்க, ஆயுசுக்கும் அடுத்தவங்களுக்கு ஆண்டவர சொல்லமாட்டாங்க!
அப்போஸ்தலர் 8:38ல பாக்கறபடி, பிலிப்பு மந்திரிக்கு ஞானஸ்நானங்கொடுத்து, அவனை கிறிஸ்துவுக்குள் நடத்திட்டானே பாஸ்டர்?
அப்போஸ்தலர் 8:9-11,13ல பாக்கறபடி, பெரிய மந்திரவாதியையே ஆண்டவருக்குள்ள நடத்தினவனுக்கு மந்திரிய நடத்தறது பெரியக் காரியமா பாஸ்டர்?
யாரக்கொண்டும், யாரையும் தம்மிடம் நடத்த தேவனால் கூடும் இல்லயா பாஸ்டர்?
"எங்களாலதான் சுவிசேஷம் அறிவிக்கமுடியும், எங்களாலதான் சபை ஸ்தாபிக்கமுடியும், எங்களாலதான் சபைய நடத்தமுடியும்" இன்னு ஒரு பாட்ட நாம பலகாலமா பாடி, சுவிசேஷகருங்களயும் அத நம்பவச்சிருக்கிறோம் இல்லயா?
இந்தப் பாட்ட நாம் ரம்பகாலம் பாடமுடியாது பாஸ்டர். இப்ப மக்கள் நல்லா பைபிள் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க!
"அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரியும் அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்" இன்னு
அப்போஸ்தலர் 8:39 சொல்றத கவனிச்சிருக்கீங்களா பாஸ்டர்.
ஆமாம், அதுக்கு இன்னா இப்ப?
தண்ணீரிலிருந்து கரையேறினவொடனேயே மந்திரியோடக் கண்ணுக்கு பிலிப்புவ மறச்சி, கர்த்தருடைய ஆவியானவர் அவனக் கொண்டுபோய்ட்டாரே?
அப்படியேவிட்டிருந்தா பிலிப்பு மந்திரியோடயே எத்தியோப்பியாவுக்கு ரதத்துல ஏறிட்டிருப்பாரே!
இன்னக்கி நாம ஒரு மந்திரிய ஆண்டவருக்குள்ள நடத்தியிருந்திருந்தா என்னபண்ணியிருப்போம் பாஸ்டர்?
ஆவியானவர் நம்மள எங்கக் கொண்டுபோயிருந்தாலும் திரும்பிவந்து, "இந்த மந்திரி பதவியே வேணாஞ்சாமி" இன்னு பதவிய ராஜினாமா பண்ணக்கூடிய அளவுக்கு மந்திரிய டார்ச்சர்பண்ணியிருப்போம்ல்ல!
"பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்" இன்னு அப்போஸ்தலர் 8:40ல இருக்கு பாருங்க.
தீடீர்ன்னு மறையறதும் திடீர்ன்னு காணப்படறதும் சாதாரண விஷயமா? ஆவியானவருக்கு விட்டுக்கொடுத்தா அவரோட நடத்துதலே அதிசயமா இருக்கும் பாஸ்டர்!
ஆசோத்துலே ஆரம்பிச்சி செசரியாவரை சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிச்சிட்டு வந்து, செரியாவுல செட்டிலாகிட்டார் சுவிசேஷகர் பிலிப்பு.
செசரியாவுல பிலிப்பு வீட்டுல பவுல் அநேகநாள் தங்கியிருக்காரு. செசரியாவுல இருந்த கிறிஸ்தவங்க அவரோட வீட்டுக்கு கூடிவந்திருக்காங்க இங்கறத அப்போஸ்தலர் 21:8-14வர பாக்கலாம் பாஸ்டர்.
பிலிப்பு அநேகமா செசரியா சபையோட கண்காணியா இருந்திருக்கனும் பாஸ்டர். இல்லனா செசரியா வந்த பவுல் அவரு வீட்டுல தங்கியிருப்பாரா?
பேதுரு ஸ்தாபிச்ச செசரியா சபையோட தொடர்புவச்சிக்க, அப்போஸ்தலரால நேரடியா ஊழியரா பிரதிஷ்டைப்பண்ணப்படாத பிலிப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது ஆச்சரியமா இருக்கு பாஸ்டர்.
ஊழியக்காரங்க ஜெபிச்சி ஒருத்தர ஊழியதுக்கு பிரதிஷ்டைப்பண்றது நல்லதுதான். ஆனா ஒருத்தர ஊழியக்காரரா அங்கீகரிக்கிறதுக்கு பரிசுத்த ஆவியானவருடைய அபிஷகம் மற்றும் நடத்துதலுக்கு மேல பெரிய விஷயம் ஒன்னும் இல்லங்கறத ஆதி அப்போஸ்தலர் உணர்ந்திருந்ததனால, பிலிப்புவ ஊழியரா அங்கீகரிக்கிறதுல அவங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல பாஸ்டர்.
இந்தமாதிரி புரிதல் நமக்கும் வேணும்ல பாஸ்டர்?
ஊழியம்னா இன்னான்னு புரிஞ்சிகிட்டு ஊழியஞ்செய்யறதும், சபைனா இன்னான்னு புரிஞ்சிகிட்டு சபை நடத்தறதும் நல்லது பாஸ்டர்!
இம்மட்டும் புரிஞ்சிக்க தேவன் பாராட்டின கிருபைக்கு ஸ்தோத்திரம்! புரிஞ்சிகிட்டபடி சரியா ஊழியம் செய்ய நம்மள ஒப்புக்கொடுப்போம் பாஸ்டர்.
ஆமாங்கய்யா, கற்றுக்கொண்ட சத்தியங்களின்படி சபையை நடத்த தேவன் நமக்கு கிருபை பாராட்டுவாராக! சந்திப்போம்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
===========================
வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை
=========================
தங்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி தங்களை நோக்கிப்பார்த்த பிறவிசப்பணி ஒருவனிடம் பேதுரு சொன்ன வார்த்தைகளைதான் மேலே பார்க்கிறோம்!
பிறவிசப்பாணிக்கு பிச்சையிட மனதில்லாமல் பேதுரு அப்படி சொல்லியிருப்பார் என்று எண்ணத்தோன்றவில்லை.
தங்கள் பாதத்தில் சபையார் கொண்டுவந்து வைத்த நிலம் மற்றும் வீடுகளின் கிரயத்தை சபையாரில் அவரவர்க்கு தேவையானதற்குத்தக்கதாக பகிர்ந்துகொடுத்தவர்கள் ஆதிஅப்போஸ்தலர்! (அப்.4:34,35)
பிறருக்குக் கொடுப்பதைப் பற்றிய அவர்களுடைய உபதேசமே: விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவிக்கவும், காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுக்கவும் செய்தது! (அப்.2:42,44,45)
பிறவிசப்பாணிக்கு கொடுக்க பேதுருவிடம் காசு இல்லை. ஆனால், "என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்" என்று அவனுக்கு சொன்னார்.
அவரிடத்தில் காசு இல்லை, ஆனால் இயேசு இருந்தார்!
தேவாலயத்தின் அலங்கார வாசலண்டை அழுக்கடைந்தவனாய் கிடந்த பிறவிசப்பாணிக்கு
(அப்.3:2) காசைவிட இயேசுதான் அவசியத்தேவை என்பதை பேதுரு உணர்ந்திருந்தார்!
இதுவரை அவனுக்கு காசுகொடுத்த ஒருவரும் இயேசுவை கொடுத்ததில்லை. காசு கொடுக்கமுடியாத பேதுரு அவனுக்கு இயேசுவையே கொடுத்தார்!
அலங்கார வாசலண்டை கிடந்த பிச்சைக்காரனின் வாழ்வை இயேசுகிறிஸ்து அலங்காரமாக்கிவிடுவார் என்பது பேதுருவுக்குத் தெரியும். மற்றவரால் சுமக்கப்பட்ட அவனை (அப்.3:2) இயேசுகிறிஸ்து மாற்றிவிடுவார் என்கிற நிச்சயம் அவருக்கு இருந்தது!
"வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை. என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட"* என்று சொல்லி,
வலதுகையினால் அவனைப்பிடித்துத் தூக்கிவிட்டார் பேதுரு. உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது. (அப்.3:8:6,7)
பேதுரு தனக்கு கொடுத்த இயேசு யார் என்பதை பிறவிசப்பாணி விளங்கிக்கொண்டத் தருணம் இது.
"அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான், நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்". (அப்.3:8)
இறுதிவரை பிச்சையெடுத்துப் பிழைத்தே சாகவேண்டும் என்கிற தரிசனமுள்ளவனாக அவன் இருந்திருக்க வாய்ப்பில்லை.
மற்றவர்களைப்போலவே துதியோடு தேவனுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க அவன் பல ஆண்டுகள் ஆவலாய் இருந்திருக்கிறான்!
அவனுடைய ஆவலை பேதுரு அவனுக்குக் கொடுத்த இயேசு அனுபவமாக்கினார்!
"அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும்கண்டு; தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்."
(அப்.3:9-11)
பிறவிசப்பாணிக்கு நடந்த அதிசயத்தைக் கண்ட மக்களின் கவனம் இயேசுவிடம் அல்ல, இயேசுவை அவனுக்கு கொடுத்த பேதுருவினிடம் திரும்பியது. அவர்கள் பேதுருவை ஒரு பெரிய சக்தியாகப் பார்க்க ஆரம்பித்தனர்.
பேதுரு அதைக் கண்டு ஜனங்களைநோக்கி; "இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?" என்று பதறினார். (அப்.3:12)
ஆண்டவரின் நாமத்தினால் செய்த அற்புதங்களால் வரும் மகிமையை தங்களை நோக்கி மடைமாற்றம் செய்து, ஜனங்களிடம் ஆதாயம் பார்க்கும் அருவருப்பை ஆதிசபை ஊழியரில் ஒருவரும் செய்ததில்லை!
"ஆண்டவரின் அடியார்" என்று தங்களை அழைத்துக்கொண்ட போலிகள் அப்படிச்செய்திருக்கிறார்கள். (2பேதுரு 2:1-3, 10-19; யூதா 1:4,8-13)
லீஸ்திராவிலே தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாதவனை நடக்கச்செய்த பவுலையும் பர்பபாவையும் கடவுளாக்கி, யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டு வந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தபோது, பர்னபாவும் பவுலும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்; "மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப்பாடுள்ள மனுஷர்தானே, நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்" என்று அவர்களை தங்களைவிட்டு தேவனிடத்திற்குத் திருப்பினார்கள்! (அப்.14:8-15)
"நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?" என்று நேர்மையுடன் ஜனங்களை நோக்கிக்கேட்டப் பேதுரு: "அவருடைய (இயேசுவின்) நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது. அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது" என்று தங்களை மறைத்து, இயேசுகிறிஸ்துவை அவர்களுக்குக் காண்பித்தார். (அப்.3:12,16)
அற்புதங்கள் நிகழ
இயேசுகிறிஸ்துவின் நாமமேயல்லாமல்,
தங்கள் சுயசக்திபோ, தங்கள் சுயபக்தியோ காரணமல்ல என்று அறிக்கையிடுகிறதில் ஆதிஅப்போஸ்தலர் உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள்!
தங்களை அதிக சக்தியுள்ளவர்களாகவோ, பெரிய பக்திமான்களாகவோ காண்பித்துக்கொள்ளும் மாய்மாலக்காரர்களாய் அவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை!
"அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்பட்டது. பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின் மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள். அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். (அப்.5:12,15,16)
இ்த்தனைப் பெரிய அற்புத அடையாளங்கள் தங்கள் மூலம் செய்யப்பட்டபோதும் அவர்கள் எந்தவிதத்திலும் மனமேட்டிமைக்கு இடமளிக்கவே இல்லை.
"நான் ஜெபித்ததினால் இந்த அற்புதம் நடந்தது" என்று சுயவிளம்பரம் செய்துகொள்ளவோ, "ஐயா ஜெபித்ததுதான் இந்த அற்புதம் நடந்தது" என்று ஜனங்களை சொல்லவைத்து விளம்பரத்தைத் தேடிக்கொள்ளவோ, "அவசர ஜெபஉதவிக்கு 24 மணிநேரமும் எங்களை தொடர்புகொள்ளுங்கள்" என்று ஜனங்களை கேட்டுக்கொள்ளவோ இல்லை!
அற்புதம் அடையாளங்களை அவர்கள் சந்தைப்படுத்தியிருந்தால், அன்றைய இஸ்ரவேலின் பெரியபணக்காரர் பட்டியலில் அவர்களும் இடம்பிடித்திருக்கக்கூடும்!
தங்கள் சுயலாபங்களுக்காய் அற்புத அப்போஸ்தலர் மற்றவரிலும் தங்களை மேம்பட்டவர்களாகக் காண்பித்துக்கொள்ளாமல், மற்றவர்களுக்கு சமமாகவே அவர்கள் தங்களைக் கருதினார்கள்.
சக ஊழியர்களிடமும் தேவஜனங்களிடமும் அவர்கள் தங்களை தனிப்பிறவிகளைப்போலக் காண்பித்துக்கொள்ளவில்லை.
தன்னை அழைக்க தேவன் கொடுத்த வெளிப்பாட்டினால் நூற்றுக்கதிபதி கொர்நேலியு தன்னை அழைத்திருக்கிறதை நன்றாய் அறிந்திருந்தும்: தான் உள்ளே பிரவேசிக்கிறபொழுது தனுக்கு எதிர்கொண்டுவந்து, தன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்ட கொர்நேலியுவை
தூக்கியெடுத்து; "எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான்" என்று அவனிடம் அறிக்கையிட்டார் ஆதித்திருச்சபையின் தூண்களில் ஒருவரான பேதுரு! (அப்.10:25,26)
பேதுரு பிரசங்கத்தை முடித்து Alter call கொடுப்பதற்கு முன்பாகவே வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கிவிட்டார்! (அப்.10:44)
காசு இல்லாத அவர்களிடம் இயேசு இருந்ததின் இரகசியம் என்னவென்று இப்பொழுது நமக்கு விளங்குகிறதல்லவா?
தேவைக்கு மிஞ்சி நம்மிடத்தில் பணம் இருந்தும், தேடினாலும் நம்மிடத்தில் ஜனங்களுக்கு இயேசு காணப்படாததற்கு காரணம் என்னவென்று சிந்திக்கலாமே!!
க. காட்சன் வின்சென்ட்.
8946050920
Thanks for using my website. Post your comments on this